பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்

ஜாண் பிராட்போர்ட் (1510 - 1555)


புதிய ஏற்பாட்டின் காலத்திய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்குப் பிறகு ஜாண் பிராட்போர்ட் மிகவும் பரிசுத்தனாக விவரிக்கப்படுகின்றார். தேவனுடைய திருச்சபை சீர்திருத்தவாதிகளின் நடுவில் மிகவும் பிரகாசமானதொரு ஆச்சரிய அற்புதராக அவர் கருதப்படுகின்றார். திருச்சபை சீர்திருத்தவாதிகள் எத்தனை பரிசுத்த பக்தர்களாக விளங்கினார்கள் என்பதை நாம் ஆச்சரியத்துடன் கவனிக்கும்போது அவர்கள் நடுவே அவர் உண்மையான ராட்சத தேவ பக்தனாகக் காணப்பட்டார்.

ஜாண் பிராட்போர்ட் 1510 ஆம் ஆண்டு வாக்கில் இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் அத்தியட்சாதீனத்தின் பிளாக்லி என்ற இடத்தில் பிறந்தார். அந்த இடத்தின் ஒரு பழைய வரலாறு இப்படி கூறுகின்றது. அதாவது, ஜாண் பிராட்போர்ட் இரத்தசாட்சியாக மரிப்பதற்கு முன்னான அவரது கடைசி பயணத்தின் போது அவர் தான் பிறந்த இடத்தில் முழங்காலூன்றி "ஆண்டவரே, உமது மாட்சிமை பொருந்திய மகத்தான இரட்சிப்பின் நித்திய சுவிசேஷத்தை வானத்திலிருந்து உமது ஊழியர்களை இங்கு அனுப்பி அதை பிரசங்கிக்கப்பண்ணும்" என்று அவர் உள்ளம் உருகி முழங்காலூன்றி ஜெபித்தாராம். ஜாண் பிராட்போர்ட்டைக் குறித்த ஒரு ஞாபகார்த்த நினைவு கல்வெட்டுப் பலகை மான்செஸ்டர் பேராலயத்தில் இன்றும் காணப்படுகின்றதாம்.

ஜாண் பிராட்போர்ட்டின் தேவதா பக்தியுள்ள பெற்றோர் அவரை சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே பரிசுத்த பக்தி வாழ்வில் வழிநடத்துவதிலும், சிறப்பான கல்வியை அவருக்கு அளிப்பதிலும் கண்ணும் கருத்துமாகவிருந்தார்கள். லத்தீன், கிரேக்க மொழிகளைக் கற்றுக் கொடுக்கும் மான்செஸ்டர் கிராமர் பள்ளியில் அவரை படிக்க வைத்தனர். லத்தீன் மொழியிலும், கணிதத்திலும் அவர் சிறந்து விளங்கினார். "ஆண்டவரே, நீர் எனக்குத் தந்த பக்தியுள்ள பெற்றோருக்காகவும், எனது ஆசிரியர்களுக்காகவும், அவர்கள் மூலமாக நான் பெற்றுக் கொண்ட சிறப்பான கல்விக்காகவும் நான் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகின்றேன்" என்று பிராட்போர்ட் பின் நாட்களில் உள்ளமுருகி ஜெபித்தார்.

லண்டனிலுள்ள டெம்பிள் என்ற இடத்திலுள்ள சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வி மாணவனாகச் சேருமுன்னர் பிராட்போர்ட், எக்ஸ்டோன் என்ற இடத்திலிருந்த சர் ஜாண் ஹாரிங்டன் என்பவரிடம் காரியதரிசியாகப் பணியாற்றினார். அந்த மனிதர் இங்கிலாந்து தேசத்தின் ஆறாம் எட்வர்ட் மன்னரின் பணத்திற்கெல்லாம் பாதுகாலராக இருந்தார். ஜாண் பிராட்போர்ட் தனது பொறுப்பில் 1544 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளுக்கெல்லாம் பணம் பட்டுவாடா செய்யும் உதவி பண பொறுப்பாளனாகப் பணி புரிந்து நல்லதொரு பண உதவித் தொகையுடன் தனது பதிவியிலிருந்து விலகினார்.

வாலிப வயதினனாக இருந்த இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்ட் அரசர் முன்பாக லண்டன் பட்டணத்தில் பிரசித்திபெற்ற சீர்திருத்த பரிசுத்தவான் (பின் நாட்களில் இரத்தசாட்சியாக மரித்தவர்) ஹக் லாட்டிமர் என்பவர் பிரசங்கித்த மனதுருக்கம் நிறைந்த நெஞ்சைத் தொடும் பிரசங்கத்தைக் கேட்டதன் மூலம் பிராட்போர்ட் தேவனுடைய வார்த்தைகளை முழுமையாக தனது இருதயத்தில் ஏற்றுக் கொண்டார். அந்த பிரசங்கத்தைக் கேட்டதன் மூலம் கர்த்தர் அவருடைய உள்ளத்தில் அவர் சில காலத்திற்கு முன்பாக செய்த தவறான ஒரு ஆதாயத்தை திரும்பச் செலுத்தும்படியாக உணர்த்தினார். உண்மையில் பிராட்போர்ட் அந்த தவறான ஆதாயத்தை தனக்கென வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த தவறை அவர் தன்னளவில் மறைத்து வைத்திருந்தார். அதின் உண்மை விபரம் இதுவேதான். சற்று மேலே நாம் பார்த்தது போல எட்வர்ட் மன்னரின் அரசாங்கத் துறையில் பணி புரிந்த ஜாண் ஹாரிங்டன் என்பவர் மன்னருக்குச் சேர வேண்டிய ஒரு பெரிய பணத் தொகையை தனக்கென தந்திரமாக எடுத்துக் கொண்டதை அவருக்கு உதவியாக வேலை செய்த ஜாண் பிராட்போர்ட் கவனித்தார். ஆனால், அவர் அதை மன்னருக்கு தெரிவிக்காமல் தன்னளவில் மூடி மறைத்து வைத்துக் கொண்டார். அவர் அந்தப் பணத்தில் ஒரு பைசாவைக் கூட தனக்கென ஜாண் ஹாரிங்டனிடமிருந்து பெறவில்லை. கர்த்தர் தனக்கு உணர்த்தியவாறு அவர் அதை தனது முந்தைய எஜமானரிடம் அறிவித்து அரசருக்கு சேர வேண்டிய பணம் முழுவதையும் அவருக்கு உடனே செலுத்தும்படியாகச் சொல்லி இறுதியாக மன்னருக்குச் சேர வேண்டிய பணம் அவருக்குப்போய்ச் சேர்ந்தது.

ஜாண் பிராட்போர்ட் எப்பொழுது மனந்திரும்பி ஆண்டவரின் அடியானானார் என்பதை நாம் மிகவும் துல்லிபமாக கூற முடியாத போதினும், தேவன் அவருடைய உள்ளத்தைத் தொட்டதும் அவருக்கு இருந்த பொன் மோதிரங்கள், தங்கச் சங்கிலிகள் மற்றும் விலையேறப்பெற்ற ஆபரணங்கள் மேலிருந்த ஆசை ஆவல்கள் எல்லாம் மாறி தனது அன்பின் ஆண்டவரை சதா தியானிப்பதிலும், அவரது பரிசுத்த நாமத்தை பூமியிலே மகிமைப்படுத்துவதிலும் செலவிடத் தொடங்கினார். ஆண்டவர் அவரைத் தொட்டு தமது அடியானாக்கிவிட்டார் என்பதை மிகவும் நிச்சயமாகக் காண முடிந்த ஒரு காரியம் என்னவெனில் அவர் தமது சட்டக் கல்வியை தூக்கி எறிந்துவிட்டு 1548 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலையில் தேவனுடைய வார்த்தைகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளும்படியாக வேதாகமக் கல்லூரியில் சேர்ந்து கொண்டதுதான்.

சில ஆண்டுகள் படிப்புக்குப் பின்னர் கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலை அவருக்கு இறையியல் பட்டம் அளித்தது. அவர் தனது இறையியல் படிப்பை முடித்ததும் முதன் முதலாவதாக அவரை மக்களுக்குப் பிரசங்கம் பண்ணும்படியாகக் கேட்டுக் கொண்டவர் மார்ட்டின் பூசர் என்பவராவார். ஜாண் பிராட்போர்ட் அவருடைய அன்பான வேண்டுகோளை சாந்தமான விதத்தில் நிராகரித்து நின்றார். ஆனால், மார்ட்டின் பூசர் அவரை விட்டபாடில்லை. "மக்களுக்கு நீங்கள் நயமான கோதுமை ரொட்டியைக் கொடுக்க முடியாவிட்டால் ஏழை மக்கள் சாப்பிடக்கூடிய வாற்கோதுமை ரொட்டியையாவது கொடுங்கள். கர்த்தர் உங்கள் உள்ளத்தில் தமது ஜனத்திற்கு எதைப் பேச வேண்டுமென்று உணர்த்துகின்றாரோ அதைப் பேசுங்கள்" என்று கூறி பிராட்போர்ட்டை அவருடைய முதற் பிரசங்கத்தை செய்ய வைத்தவர் மார்ட்டின் பூசர்தான்.

ஜாண் பிராட்போர்ட் ரோஜா நிற மேனியுடையவராக ஒடிசலான உருவத்தில் உயரமாக இருந்தார் என்று வர்ணிக்கப்படுகின்றது. அவரது தாடி பொன் நிறமாக இருக்குமாம். அவர் ஒரு நாளில் இரவில் 4 மணி நேரம் மட்டுமே தூங்குவாராம். அவரது ஆகாரம் மிகவும் குறைவானது. தனது காலத்தின் ஒவ்வொரு மணி நேரத்தையும் அவர் வேத வசன தியானம், வாசிப்பு, எழுதுதல், மற்றவர்களுக்கு கர்த்தரைப் பற்றிக்கூறுதல், நன்மை செய்தல் போன்றவற்றில் செலவிட்டார். பாவத்தைக் குறித்து மக்களை அவர் இனிமையான விதத்தில் அதே சமயம் திட்டமாக கடிந்து எச்சரித்தார். தங்களை ஜீவனுள்ள தேவனோடு நெருக்கி இணைத்து ஒன்று சேர்க்க பிராட்போர்ட் அப்படிச் செய்கின்றார் என்று அவரால் கடிந்து கொள்ளப்பட்டவர்களும் அவருடைய ஞான போதனைகளை அன்பாக ஏற்றுக் கொண்டனர்.

ஜாண் பிராட்போர்ட்டின் தனிப்பட்ட தேவ உறவின் வாழ்க்கை மிகவும் ஆழமான ஒன்றாகும். தனது அன்றாடக பாவக் குற்றங்களை எல்லாம் அவர் ஒரு தாளில் எழுதி தனது தனி ஜெபத்திற்காக தேவ சமூகத்தில் முழங்காலூன்றுகையில் அவை ஒவ்வொன்றையும் தனது ஆண்டவரிடம் அறிக்கையிட்டு அவைகளுக்காக தனது மார்பில் அடித்து அழுது பிரலாபித்து மன்னிப்புக்காக கெஞ்சும் ஒரு பரிசுத்த பழக்கத்தை அவர் தன்னகத்தே கொண்டிருந்தார். அப்படிச் செய்ததின் மூலம் தனது இரட்சிப்பின் சந்தோசத்தை ஆண்டவருக்குள் ஒவ்வொரு நாளும் அவர் புதுப்பித்துக் கொண்டதுடன் தேவன் பேரிலுள்ள தனது அன்பையும், விசுவாசத்தையும் அவர் நன்கு வளர்த்துக் கொண்டார். மற்ற தேவ மக்களிடம் தான் காண்கின்ற நல்ல பரிசுத்த ஒழுங்குகளையும் குறித்துக் கொண்டு தனது வாழ்வில் அது காணப்படவில்லையே என்று அழுது புலம்புவார். சுருக்கமாகச் சொல்லப் போனால் அவரது வாழ்க்கை அனுதின மனந்திரும்புதலும் இருதயம் நிறைந்த ஒரு ஜெபமுமாகவே இருந்தது.

புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியின் மேற்கோள்கள் (Quotations) புத்தகம் "தேவனுடைய சுத்தக் கிருபையினாலேயே நான் செல்லுகின்றேன்" என்ற மேற்கோள் பரிசுத்தவான் ஜாண் பிராட்போர்ட் என்பவரால் மட்டுமே எழுதப்பட்டது என்று கூறுகின்றது. ஒரு சமயம் ஜாண் பிராட்போர்ட் ஒரு சிறிய கூட்டம் குற்றவாளிகள் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக கொலைக் களம் அழைத்துச் செல்லப்படுவதை தனது சொந்தக் கண்களால் பார்த்தபோது அவரை அறியாமலேயே அவரது உதடுகள் "தேவனுடைய சுத்தக் கிருபையினாலேயே நான் செல்லுகின்றேன்" என்ற வார்த்தைகளை உச்சரித்ததாம்.

ஜாண் பிராட்போர்ட் லண்டன் பட்டணத்திலுள்ள டெம்பிள் என்ற இடத்தில் சட்டக் கல்வி பயின்று கொண்டிருந்த நாட்களில் அவரோடு சட்டம் பயின்று கொண்டிருந்த சாம்சன் என்ற அவருடைய நண்பன் இவ்வாறு சொல்லுகின்றார் "ஜாண் பிராட்போர்ட்டுடன் நெருக்கமாக பழகிய அவரது நண்பர்களுக்கு ஒரு காரியம் நன்கு தெரியும், அதாவது அவர் வேளா வேளைகளில் திடீரென ஆழ்ந்த தியானத்தில் அப்படியே மூழ்கி விடுவார். அந்தச் சமயத்தில் அவர் உட்கார்ந்த வண்ணமே எதையோ கூர்ந்து பார்த்த நிலையில் தனது முகத்தை ஏதோ ஒரு திசையில் வைத்துக் கொண்டு எந்த ஒரு சலனமுமின்றி எவரிடமும் பேசாமல் கணிசமான நேரத்திற்கு அப்படியே உட்கார்ந்து விடுவார். அப்படி அவர் உட்காருகின்ற வேளைகளில் சில சமயங்களில் அதிகமான கண்ணீர் அவரது கண்களிலிருந்து வடிந்து கன்னங்களின் வழியாக உருண்டோடும். அடிக்கடி நான் அவரோடு அமர்ந்து மத்தியான ஆகாரத்தையோ அல்லது இராச்சாப்பாட்டையோ சாப்பிட்டிருக்கின்றேன். ஏதாவது பேச்சுவாக்கிலோ அல்லது ஏதாவது சந்தர்ப்பங்களிலோ அல்லது அப்பொழுது காணப்படும் ஏதாவது தேவனுடைய நன்மையை அவர் காண்கின்ற போதோ அல்லது அவரது இருதயத்தில் தேவனைப்பற்றி எழும்புகின்ற ஏதாவது பரவசத்தினாலோ அவர் ஆழ்ந்த பரவச நிலையில் முழ்கிவிடுவார். இந்த பரவசமான அமைதி நிலைக்குப்பின்னர் அவர் சுய நினைவுக்கு வரும்போது தனது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்ததை தானும் கூட கவனித்ததாகவும், அந்தக் கண்ணீர் மகிழ்ச்சியினாலேயா அல்லது துக்கத்தினாலேயா எதினால் வந்தது என்று தனக்கே தெரியவில்லை" என்று சொல்லுவார்.

கேம்ரிட்ஜ் பட்டணத்தில் ஜாண் பிராட்போர்ட் இருந்த சமயத்தில் புகழ்பெற்ற பரிசுத்தவான் நிக்கோலஸ் ரிட்லி (பின் நாட்களில் இரத்த சாட்சியாக மரித்தவர்) என்பவருடைய நட்பு அவருக்குக் கிடைத்தது. இந்த பரிசுத்த பிஷப் நிக்கோலஸ் ரிட்லி என்பவர்தான் பிராட்போர்ட்டை தான் பணி செய்த பரிசுத்த பவுலின் கத்தீட்ரல் தேவாலயத்துக்கு 1550 ஆம் ஆண்டு அழைத்து வந்து அவரை உதவி குருவானவராக அபிஷேகம் செய்ததுடன் இங்கிலாந்தின் பக்தியுள்ள இள வயது மன்னர் ஆறாம் எட்வர்ட் அரசருக்கு அறிமுகமும் செய்து வைத்தார். எட்வர்ட் மன்னர் பின் நாட்களில் பிராட்போர்டை தனது அரச குடும்பத்தின் குருவானவராக நியமித்தார். எட்வர்ட் அரசரின் கடைசி வருட அரசாட்சியின்போது ஜாண் பிராட்போர்ட் தேவ பக்தியின் மிகுந்த குமுறலோடும், தீர்க்கத்தரிசனத்தின் ஆவியோடும் தேவனையும், தேவனுடைய வார்த்தைகளையும் அவமதிக்கும் இங்கிலாந்து தேசத்தை கண்டித்துப் பேசினார். அதற்கு அடையாளமாக தேவ கோபமும் காணப்படுவதை குறிப்பிட்டு இங்கிலாந்தின் லுட்கேட் என்ற இடத்தில் ஒரு நாய் ஒரு மரித்த குழந்தையின் அவயவத்தை தனது வாயில் கடித்துக் கொண்டு செல்லுவதை தான் தனது கண்களால் கண்டதாகக் குறிப்பிட்டு பேசினார். தேவ கோபாக்கினை இங்கிலாந்தின் வாசற்படியிலேயே வந்து நிற்பதை பிராட்போர்ட் குறிப்பிட்டார். ஜாண் பிராட்போர்ட்டின் தீர்க்கத்தரிசன வார்த்தையின்படியே இள வயதான ஆறாம் எட்வர்ட் மன்னரின் மரணமும் விரைவில் வந்து சம்பவித்தது என்று சொல்லப்படுகின்றது.

ஜாண் பிராட்போர்ட், எட்வர்ட் அரச சபையின் உதார குணம், பெருந்தன்மை போன்றவற்றைப் பற்றிப் பேசின அதே சமயம் அவர்களின் திருப்தி செய்ய முடியாத பேராசை, அருவருப்பான உலகப்பற்று, தேவன் அருவெறுக்கும் மோக இச்சைகள், மட்டுக்கு மிஞ்சிய பெருமை மற்றும் தேவனுடைய வார்த்தைகளுக்கு செவிசாய்க்க மனமற்ற முரட்டாட்டம், கல் நெஞ்சம் போன்றவற்றைக் குறித்து கடுமையாக எச்சரித்தார். அதின் காரணமாக பிராட்போர்ட் அநேகரால் பகைக்கப்பட்டார். எனினும், அவர் தனது தேவப் பணியை தொடர்ச்சியாக மூன்று ஆண்டு காலங்களுக்கு செய்து வந்தார். மக்களின் பாவத்தை அவர் கண்டித்து உணர்த்தினார். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து இரட்சகரை இனிமையாகப் பிரசங்கித்தார். கிறிஸ்தவர்கள் தங்கள் அவபக்தியான வாழ்க்கையையும், மாய்மாலத்தையும், உலக நேசத்தையும் விட்டுவிட்டு தேவனைப்பிரியப்படுத்துகின்ற பக்தியின் பாதையில் செல்ல வேண்டும் என்று மன்றாடினார்.

எதிர்பாராதவிதமாக இள வயதினான ஆறாம் எட்வர்ட் அரசர் மரிக்கவே அவருடைய சிங்காசனத்திற்கு "இரத்த மேரி" என்று அழைக்கப்பட்ட கொடிய மேரி ராணி வந்தாள். அவள் ரோமான் கத்தோலிக்க மார்க்கத்தை சேர்ந்த தீவிரவாதி. அவள் வந்ததும் முதல் வேலையாக ஜாண் பிராட்போர்ட்டை வேதப்புரட்டன் என்று கைது செய்து சிறைக்குள் வைத்தாள். அவரைத் தொடர்ந்து பக்த சிரோன்மணிகளான லாட்டிமர், ரிட்லி, ஆர்ச் பிஷப் கிரன்மர் என்ற மூவரையும் கைது செய்து மேற்கண்ட நால்வரையும் லண்டனிலுள்ள டவர் என்ற இடத்திலுள்ள சிறைக்கூடத்தின் ஒரே அறையில் அடைத்து வைத்தாள். அதற்கப்பால் பிராட்போர்ட் பல சிறைக்கூடங்களிலும் சிறை வைக்கப்பட்டார். தான் செல்லும் இடங்களில் எல்லாம் பரிசுத்தவான் பிராட்போர்ட் தனது கடிதங்களாலும், எழுத்துக்களாலும் மிகுந்த தேவாசீர்வாதத்தை தேவ ஜனத்திற்குக் கொண்டு வந்தார்.

"மற்ற எந்த ஒரு சுத்த சத்திய சீர்திருத்த வீரரைக் (Reformer) காட்டிலும் விசேஷித்த பரிசுத்த அலங்காரமும், தெய்வீக கவர்ச்சியும் பிராட்போர்ட்டின் பரிசுத்த குணநலனில் காணப்பட்டது. மெய்யாகவே அவர் ஒரு சிறந்த பரிசுத்தவான். தன் ஆண்டவரை அறிகின்ற மேலான அறிவிற்காக தன்னை முழுமையாக தத்தம் செய்து கொண்டவர். அவர் தனிமையில் தனது பாவங்களுக்காக மனங்கசந்து அழுது கண்ணீர் சிந்துவார். அந்த நேரம் அவரைப் பார்க்கின்றவர்கள் இனிமேல் அவர் ஒருக்காலும் புன்னகை செய்யவே மாட்டார் என்றே நினைக்கத் தோன்றும். ஆனால், அவர் மக்கள் மத்தியில் இனிமையாகக் காணப்படும் போது இந்த மனிதர் தனது வாழ்வில் ஒருக்காலும் அழுதிருக்கவே முடியாது என்றுதான் நினைக்கத் தோன்றும். பிராட்போர்ட் தனது குருவானவர் பணியில் 5 ஆண்டு காலம்தான் இருந்தார். அதில் இரண்டு வருட காலத்தை அவர் சிறைக்கூடத்தில் செலவிட்டார். எட்வர்ட் அரசர் உயிரோடு இருந்திருக்கும் பட்சத்தில் எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி அவர் இரத்தசாட்சிகளான லாட்டிமர், ரிட்லி, கிரன்மர் போன்றவர்களைப் போன்று அவர்களுக்கு இணையாக பிஷப்பாக ஆகியிருப்பார்.

பிராட்போர்ட்டின் எழுத்துக்கள் ஆழ்ந்த தேவ ஞானமும், தேவனுடைய வார்த்தைகளால் பின்னிப் பிணைக்கப்பட்ட பூச்சரமாகவும், அவைகளை வாசிப்போர் யாராயினும் அவர்கள் உள்ளத்தை கர்த்தருக்குள் கொழுந்துவிட்டு எரியப்பண்ணுவதாகவும், கர்த்தரே அந்த உள்ளங்களில் நேரடியாக பேசுவதைப்போலவும் இருக்கும் கிறிஸ்தவ தெய்வீக எழுத்தாளர்களில் அவர் மிகவும் மேலானதொரு இடத்தைத் தனக்கெனக் கொண்டிருந்தார்" என்று பரிசுத்த பிஷப் ஜாண் சார்லஸ் ரைல் எழுதுகின்றார்.

ஜாண் பிராட்போர்ட்டின் மரணத் தீர்ப்பு சடுதியாக வந்தது. அப்பொழுது அவர் காம்ப்டர் சிறைக்கூடத்தில் இருந்தார். அந்தச் சிறைச்சாலைக் காப்போனின் பக்தியுள்ள மனைவி மேரி தனது கவலையின் காரணமாக அவளது மூச்சே நின்று போய்விடும் அளவுக்கு மிகவும் மனக்கிலேசத்தில் பிராட்போர்ட் அண்டை வந்து நின்று "ஓ பிராட்போர்ட் கனவானரே, நான் உங்களுக்கு மிகவும் துயரமிக்க செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றேன். நாளைக்கு நீங்கள் தீ வைத்துக் கொழுத்தப்படப் போகின்றீர்கள். உங்களைக் கட்டிக் கொழுத்தப்படப்போகும் இரும்புச் சங்கிலி இப்பொழுது கடையில் வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீங்கள் வெகு விரைவில் லண்டனிலுள்ள நியூகேட் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள்" என்று கூறினாள்.

மேரியின் வார்த்தைகளைக் கேட்டதும் பிராட்போர்ட் தமது தலையிலுள்ள தொப்பியை கரத்தில் எடுத்து வானத்திற்கு நேராக தனது கண்களை ஏறெடுத்து "நான் அதற்காக என் தேவனுக்கு நன்றி செலுத்துகின்றேன். இந்த வேளைக்காகத்தான் நான் நீண்ட நாட்களாகக் காத்திருக்கின்றேன். இந்த வேளையை நான் எதிர்நோக்கி ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மணி நேரமும் தேவ சமூகத்தில் காத்திருந்தேன். நான் இந்தவிதமான மரணத்திற்கு தகுதியானவன் என்று என்னைத் தெரிந்து கொண்ட கர்த்தருக்குத் துதி ஏறெடுக்கின்றேன்" என்று சொன்னார். அதின் பின்னர் தனக்கு அந்தச் செய்தியைக் கொண்டு வந்த சிறைக்கூட காப்போனின் மனைவி மேரிக்கு நன்றி தெரிவித்து விட்டு தனது நண்பன் ஒருவனை தன்னுடன் அழைத்துக் கொண்டு தனது சிறைக்கூட அறைக்குச் சென்று வெகு நேரமாக அவர் ஜெபித்துக் கொண்டிருந்தார்.

ஜாண் பிராட்போர்ட் பிரசித்தி பெற்ற பிரசங்கியார் மற்றும் அசாதாரணமான பரிசுத்த மனிதர் என்ற புகழ் நன்கு பரவி இருந்தது. இங்கிலாந்திலுள்ள லங்காஷயர் பட்டணத்தில் அவர் நன்கு அறியப்பட்டிருந்ததுடன் லண்டன் மாநகரில் அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டார். அந்தப் பட்டணத்தில்தான் அவர் மிகவும் அடிக்கடி வந்து தேவ ஊழியம் செய்தார். அவருடைய புகழைக் குறித்துக் கேள்விப்பட்ட கத்தோலிக்கர்கள் பிராட்போர்ட்டை எப்படியாயினும் புராட்டஸ்டண்ட் மார்க்கத்திலிருந்து பிரித்து எடுத்து கத்தோலிக்க மார்க்கத்திற்கு இழுத்துவிட வேண்டும் என்று மகா பெரிய முயற்சிகளை எல்லாம் எடுத்தனர். போப் ஆண்டவரிடமும் அவருடைய கூட்டுத் தொழுகைக்கும் (Mass) எப்படியாவது அவரை கொண்டு வந்துவிட வேண்டும் என்று அவர்கள் தங்களாலானமட்டும் அனைத்து யுக்திகளையும் மேற்கொண்டனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. கத்தோலிக்கர்கள் இந்தவண்ணமாக வேறு எந்த ஒரு சுத்த சத்திய சீர்திருத்த வீரரையும் (Reformers) தங்கள் மார்க்கத்திற்கு இழுக்க பிரயாசப்பட்டதே இல்லை.

இப்படியாக ஜாண் பிராட்போர்ட் ஒரு சிறந்த தேவ மனிதராக அனைவராலும் அறியப்பட்டிருந்தபடியால் அவர் தீக்கிரையாக்கப்பட்ட 1555 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் தேதி காலை யாரும் எதிர்பாராத அளவில் அத்தனையானதொரு மாபெரும் ஜனத்திரள் கூடிற்று. கூட்டத்தினரைக் கட்டுப் படுத்த ஆயுதம் தாங்கிய ஒரு பெரிய ராணுவ பரிவாரமே வந்திருந்தது. பொது இடத்தில் தீக்கிரையாக்கப்பட்ட எந்த ஒரு மனிதனையும் காண இத்தனையானதொரு கூட்டம் எக்காலத்தும் வரவில்லை என்று சொல்லப்படுகின்றது. காலை 9 மணிக்கு தேவ மனிதர் தீ வைத்துக் கொழுத்தப்பட்டபோதினும் அதற்கு வெகு முன்னதாகவே மக்கள் வெள்ளம் அவரை இறுதியாகக் காணவும், அவருக்காக ஜெபிக்கவும் வந்து கூடத் தொடங்கிவிட்டனர்.

தீக்கிரையாக்கப்படுவதற்கு முன்னர் தான் கட்டி வைத்துக் கொளுத்தப்படப்போகும் கம்பத்திற்கு முன்பாக நின்று கொண்டு ஜாண் பிராட்போர்ட் தனது கண்களை பரலோகத்திற்கு நேராக ஏறெடுத்துக் கடைசியாகக் கூறின வார்த்தைகள் "ஓ இங்கிலாந்தே, இங்கிலாந்தே, உன் பாவங்களிலிருந்து மனந்திரும்பு. விக்கிரக ஆராதனையைக் குறித்து எச்சரிக்கையாயிரு. கள்ள அந்திக் கிறிஸ்துகளுக்கு எச்சரிக்கையாயிரு. அவர்கள் உன்னை வஞ்சிக்க இடம் கொடுத்து விடாதே" என்பதாகும். தன்னோடு கூட அக்கினியால் தகனிக்கப்படப்போகும் தனது உடன் கூட்டாளியான 20 வயது இளைஞன் ஜாண் லீஃப் என்பவரைப் பார்த்து "சகோதரனே, மிகுந்த மன உற்சாகமுடையவராக இருங்கள். இன்று இரவில் நாம் நமது அருமை இரட்சகருடன் பரலோகில் மிகவும் ஆனந்தக் களிகூருதலான இரவு போஜனத்தை புசிக்கப்போகின்றோம்" என்று சொன்னார். அதற்கப்பால், தன்னை எரித்துச் சாம்பலாக்க தனக்கு முன்பாகப் போடப்பட்டிருந்த விறகுக் கட்டுகளை மார்போடணைத்துக் கொண்டவராக தமது அருமை இரட்சகர் சொன்ன "ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்" (மத் 7 : 14) என்ற தேவனுடைய வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். தன்னுடைய வஸ்திரங்களைக் கழற்றிச் சுற்றி அதை அப்படியே தனக்குப் பணிவிடைகள் செய்த தனது பணியாளுக்குக் கொடுத்து விட்டார்.

ஜாண் பிராட்போர்ட்டை தீக்கம்பத்திற்கு நேராக கைத்தாங்கலாக அந்த இறுதி நேரம் அழைத்து வந்த அவருடைய மைத்துனன் ரோஜர் போஸ்விக் என்ற அன்பான மனிதரை இங்கிலாந்து அரசாங்கத்தின் பிரதான அதிகாரியாக மரண தண்டனையை பார்வையிட நேரில் வந்திருந்த ஜெரிஃப் உட்ரோஃப் என்ற கொடியவன் அந்த இடத்தில் கண்டு கோபத்தில் தனது கையிலிருந்த தடியால் அடித்து அவரது மண்டையைப் பிளந்து விட்டான்.

அவன் செய்த கொடிய தீச்செயலைக் கண்ணுற்ற தேவன் அவனுக்கு பதிலளித்தார். சரியாக 6 மாத காலத்தில் அந்தக் கொடியவன் முடக்குவாதத்தால் தாக்குண்டு 8 நீண்ட ஆண்டு காலங்களாக கட்டில் கிடையானான். அவனது வலது பக்கத்தை தாக்கியிருந்த அந்த நோயின் காரணமாக அவன் சாகும் வரை அவனால் இடது பக்கத்திற்கு திரும்பிப் படுக்க இயலாதவனாக மகா நிர்ப்பந்தனாக துடி துடித்துச் செத்தான்.

 

ஓ அன்பானவரே, பக்த சிரோன்மணி ஜாண் பிராட்போர்ட் வாழ்க்கை உன்னைத் தொட்டதா?

கிறிஸ்தவ மார்க்கம் கேலிக்கூத்தான ஒரு போலி மார்க்கமாக நம்மைச் சுற்றியுள்ள புறமதஸ்தரால் இந்தக் கடைசி கால நாட்களில் வெகு திட்டமாக நிச்சயிக்கப்பட்டிருக்கும் வேளையில் பரிசுத்த பக்த சிரோன்மணி ஜாண் பிராட்போர்ட்டை குறித்து வாசித்த உனக்கு அதினால் உன் வாழ்வில் ஏற்பட்ட பயன் என்ன என்பதை நீ தேவ சமூகத்தில் சற்றே யோசித்துப் பார்த்தாயா? உன்னைக் குறித்த காரியத்தை நான் அறிய ஆசை கொள்ள விரும்பாத போதினும் என்னுடைய காரியத்தை நான் உனக்குச் சொல்ல ஆசைப்படுகின்றேன். அநேக ஆண்டு காலங்களுக்கு முன்பாக நான் பரிசுத்தவான் ஜாண் பிராட்போர்ட் அவர்களின் தேவச் செய்திகள் அடங்கிய புத்தகம் ஒன்றை விலை கொடுத்து வாங்கினேன். நான் அதை வாங்கிய நாளிலிருந்து அதை நான் எனது படுக்கைக்குச் செல்லு முன்னர் வாசித்து விட்டே படுக்கைக்குச் செல்லுகின்றேன். ஒவ்வொரு நாள் இரவிலும் நான் அதைக் கட்டாயம் வாசிக்கின்றேன் என்று நான் உங்களுக்குச் சொல்லக்கூடாதவனாயினும் அந்தப் புத்தகம் எனது படுக்கைக்கு அருகிலேயே எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கின்றது. போலி கிறிஸ்தவம் அதாவது கள்ளக் கிறிஸ்தவம் உண்மைக் கிறிஸ்தவம் போல மாறு வேடம் அணிந்து நம் நடுவே உலா வந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் உண்மையான அப்போஸ்தல கிறிஸ்தவம் என்ன என்பதை பிராட்போர்ட்டின் புத்தகம் எனக்குத் தொடர்ச்சியாக நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது. ஜாண் பிராட்போர்ட்டின் எழுத்துக்களை நான் வாசிக்கும் போது புதிய ஏற்பாட்டு பரிசுத்த காலத்தையே நான் தொடுவது போன்ற பரிசுத்த உணர்வு என்னில் அலை அலையாகப் பாய்ந்து செல்லுகின்றது. அந்த பரிசுத்த பக்தனின் புத்தகத்தை நான் ஏமாந்து எனது புத்தகசாலையில் வைத்துவிட்டால் நான் என்னளவில் இருக்க வேண்டிய, நான் வாஞ்சித்து கதறுகின்ற பரிசுத்த அப்போஸ்தலரின் பக்தியின் தரத்தை நான் ஒருக்கால் மறந்து விடுவேனோ என்ற பயம் என்னைப் பற்றிப் பிடிக்கின்றது.

ஜாண் பிராட்போர்ட் அக்கினியில் தகனிக்கப்படப் போகும் கடைசி நிமிட நேரங்களில் ஜீவனுக்குப் போகின்ற இடுக்கமான வாசலைக் குறித்துக் தம்மைச் சுற்றி நின்ற மக்களுக்குப் பேசினார். அன்பின் இரட்சகர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றியதினால் தான் செலுத்தப் போகும் தனது விலைக் கிரயத்தையும், அவரைப் பின்பற்றிச் செல்லும் மற்றவர்களுக்குள்ள விலைக் கிரயத்தையும் அப்பொழுது அவர் நன்கு ஞாபகப்படுத்தினார்.

பிராட்போர்டின் நாட்களில் இடுக்கமான வாசல் என்பது எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி அவருக்கும் அவரைப்போன்று ஆண்டவரைப் பின்பற்றிச் சென்றோருக்கும் மிகவும் இடுக்கமும் குறுகலுமாகவே இருந்தது. அந்த இடுக்கமான வழி இன்று நமக்கு சற்று விசாலமாகி இருக்கின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? கிறிஸ்து இரட்சகர் நமக்கு நியமித்திருக்கின்ற இடுக்கமான பாதையை நமது வசதிக்குத் தக்கதாக நாம் சற்று விசாலமாக்கிக் கொள்ளாதபடி அவர் நம்மைக் கிருபையாகப் பாதுகாப்பாராக.

இந்த பரிசுத்த பக்தர்களைக் குறித்து "மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல்" (வெளி 12 : 11) என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தேவனுடைய சித்தம் மாத்திரமே செய்யவும், அதற்காகப் பாடு அனுபவிக்கவும் தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த கர்த்தரின் அடிமைகள் அவர்கள். அப்போஸ்தலனாகிய பவுலைப் போல தங்களில் அன்புகூர்ந்து, தங்களுக்காக தம்முடைய ஜீவனையே கொடுத்த தங்கள் ஆண்டவருக்காக செலவு பண்ணவும், செலவுபண்ணப்படவும் ஆயத்தமாக இருப்பவர்கள். இன்றைக்கு நாம் ஆண்டவரை நமது அடிமையாக்கி வைத்திருக்கின்றோம். இப்படிச் சொல்லுவதினால் நான் தவறாக பேசுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், நாம் கேட்கும் காரியங்களை எல்லாம் ஆண்டவர் நமக்குச் செய்ய அவர் கடமைப்பட்டவர் என்று நாம் பெருமையாக எண்ணிக் கொள்ளுகின்றோம். ஆண்டவருக்கு முன்பாக வைக்கும் நமது ஜெபத் தேவைகள் முடிவே இல்லாத மளிகைக்கடை பொருட்களின் பட்டியல் போல நீண்டு கொண்டே செல்லுகின்றது. அன்பின் ஆண்டவர் தமது ஜீவனையே நமக்காகக் கொடுத்து, பாவ அடிமைத்தனத்திலிருந்து நம்மைத் தமக்கென மீட்டு இரட்சித்து நம்மில் அன்புகூர்ந்த அந்த மகத்தான எல்லையற்ற அன்புக்கு நாம் செலுத்த வேண்டிய மாபெரும் நன்றி கடன் குறித்து நாம் சிந்திக்காமல் ஏதோ ஆண்டவர்தான் நமக்கு இன்னும் அதிகமாக கடன்பட்டவர்போல நாம் பேசிக் கொள்ளுகின்றோம்.

இறுதியாக, பிராட்போர்டும் அவரைச் சேர்ந்த சுத்த சத்திய சீர்திருத்த வீரர்களும் (Reformers) ஒருக்காலும் திருச்சபையின் நிர்வாக நடபடிகளில் பங்கேற்கவே இல்லை. அவர்கள் தேவனுடைய சுவிசேஷ சுத்த சத்தியத்தின் மேலேயே மிகவும் வைராக்கியமாக இருந்தார்கள். ஆதி திருச்சபை எவ்வண்ணமாக வேதாகம கிறிஸ்தவத்தை பற்றி நின்றதோ அதே போன்று அவர்களும் விடாப்பிடியாக அதைப் பற்றிக்கொண்டார்கள். அதின் காரணமாக அவர்கள் தங்கள் அருமையான ஜீவனையும் இழக்க வேண்டியதாகவிருந்தது. இன்றைய காலத்தைப்போன்று உலக கல்வி ஞானங்கள் எதுவும் அவர்களுடைய தலைகளுக்குச் செல்லவில்லை. அவர்களின் பாதங்கள் மரண பயமுறுத்தல்களின் பூமியிலேயே எப்பொழுதும் உறுதியாக நின்று கொண்டிருந்தது. நமக்கும் அவர்களுக்குமுள்ள வித்தியாசம் எத்தனை பெரிதென்று நீங்கள் கவனித்தீர்களா? நாம் எந்த ஒரு தனிப்பட்ட விலைக்கிரயமும் செலுத்தாமலேயே மிகவும் இலகுவாக சுத்த சத்திய சீர்திருத்த வீரர்களாக விளங்கலாம் என்று சகிப்புத் தன்மை கொண்ட நமது தற்போதைய நவ நாகரீக சமுதாயம் நமக்கு உறுதியளிக்கின்றது. நமது தலை அறிவின் பெருமையினால் வேத சத்தியத்தைப் புரிந்து கொண்டு, சமுதாயம் அளிக்கும் தற்பெருமைக்கு நம்மை கையளிப்போமானால் நாம் இந்த பரிசுத்த பக்த சிரோன்மணிகளின் பரிசுத்தம், தியாகம் போன்ற அர்ப்பணிக்கப்பட்ட பாதையில் நாம் ஒருக்காலும் செல்லவே இல்லை. ஆம், ஜாண் பிராட்போர்ட் மற்றும் உண்மையான சுத்த சத்திய சீர்திருத்த வீரர்களின் வழியில் நாம் ஒருக்காலும் இல்லவே இல்லை என்பதை நிச்சயித்துக் கொள்ளலாம்.

(மொழி பெயர்ப்பு செய்தி)
(Richard A.Mayhew)


 
 

"இந்தப் புத்தகம் செர்மோ குருசிஸ் அதாவது "சிலுவையின் வார்த்தை" என்று அழைக்கப்படுகின்றது. ஏனெனில், சிலுவை இந்த வார்த்தையுடன் எப்பொழுதும் கரம் கோத்து இணைந்து செல்லுகின்றது. எனவே, இந்த வார்த்தையின் மாணாக்கனாக ஆக வேண்டும் என்று நீ விரும்புவாயானால் இதின் அரிச்சுவடியை கற்பதற்கு முன்னர் நீ நிச்சயமாக சிலுவைக்கு உன்னை ஆயத்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். கிறிஸ்து இரட்சகர் தமது சீடர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு இருக்கக் கேட்டிருக்கின்றார். அதின் மூலம் உலகப்பிரகாரமான அழைப்புகள், உத்தியோகங்களைப் போன்று சுவிசேஷ ஊழியமும் ஒன்றரக் கலந்து திசை மாறிவிடாதபடி இருக்க அப்படிச் செய்திருக்கின்றார். உலகப்பிரகாரமான எந்த உத்தியோகத்துக்கும் சிலுவை தேவையில்லை. அதினால், நாம் நம்மை வெறுத்து நமது சிலுவையை எடுத்துக் கொண்டு இரட்சகரைப் பின்செல்ல தேவன் நமக்கு கிருபை செய்ய நாம் அவரை நோக்கி ஜெபிப்போம்"

(பரிசுத்தவான் ஜாண் பிராட்போர்ட் தனது நினையா மரணத்தை எதிர்நோக்கி சிறைக்கூடத்தில் இருந்த நாட்களில் அவர் அக்கினிக்கு இரையாக்கப்பட இன்னும் சுமார் 5 மாத காலம் இருக்கையில் 18/2/1555 ஆம் நாள் தனது பரிசுத்த நண்பன் ஒருவனுடைய புதிய ஏற்பாட்டில் மேற்கண்ட வாசகத்தை எழுதினார்)


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM