|
பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள் |
 |
ஜாண் சார்லஸ் ரைல் (1816 - 1900) |
பிறப்பும் இளமைக்கால நினைவுகளும் |
மாக்லஸ்ஃபீல்ட் என்ற இடமானது மத்திய இங்கிலாந்து தேசத்தின் உயர்ந்ததும் அழகான மேட்டு நிலப் பரப்பின் நிழலில் அமைந்ததுமான ஒரு இடமாகும். அதின் மேற்கு திசையில் செஷையர் பிராந்திய மேய்ச்சல் பூமிகள் நீண்ட தொலைவுக்கு வியாபித்துக் கிடந்தது. அதின் கிழக்குத் திசையில் மலைகள் பக்ஸ்டோன் பட்டணத்துக்கு நேராக எழுந்து நின்றது. மாக்லஸ்ஃபீல்ட் என்ற இடம் 16 ஆம் நுற்றாண்டிலிருந்தே பட்டு வர்த்தகத்தில் சிறந்து விளங்கிக் கொண்டிருந்தது. பட்டணத்தின் 21000 மக்கள் கொண்ட ஜனத்தொகையில் 10000 பேர்கள் பட்டுத் தொழிலில்தான் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நீண்ட மணி நேரங்கள் தொழிற்கூடங்களில் உழைத்தனர். சிறுவர்கள் 7 வயதிலிருந்தே பட்டுத் தொழிற்கூடங்களுக்கு அனுப்பப்பட்டனர். பட்டுத் தொழில் செய்யும் தொழிலாளர்களைவிட அவர்களை வேலை வாங்கிய முதலாளிகளே செல்வந்தர்களாக விளங்கினர். இறக்குமதி செய்யப்படும் பட்டுக்கு அதிகமான அளவில் அரசாங்கம் வரி வசூலித்ததால் பட்டுத் தொழில் அந்த நாட்களில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது.
இங்கிலாந்திலுள்ள செஷையர் என்ற இடத்தில் நீண்ட காலமாக நடுத்தரமான நிலச்சுவான்தாரர்களாக வாழ்ந்து கொண்டிருந்த ரைல் குடும்பத்தினர் 18 ஆம் நூற்றாண்டில் பட்டுத் தொழில் மற்றும் பஞ்சுத் தொழில் செய்வதற்காக மாக்லஸ்பீல்ட் என்ற இடத்திற்குச் சென்றனர். அவர்கள் சென்ற சமயத்தில் அங்குள்ள விளை நிலங்கள் பலவும் விற்பனைக்கு வந்தபடியால் ஜாண் ரைல் என்பவர் அவைகளில் அதிகமானவற்றை வாங்கி அவைகளில் பருத்தி பயிரிட்டும், பட்டுப் பூச்சிகளுக்கு உணவான மல்பரி செடிகளை பயிரிட்டும் பெருஞ்செல்வந்தரானார்.
இந்தச் செழிப்பின் சரித்திரத்தைக் காட்டிலும் ஜாண் ரைல் அந்த நாட்களில் சமுதாயத்தில் இழிவாகக் கருதப்பட்ட வெஸ்லியர்களுடன் கூட்டுவைத்திருந்தார் என்பதே அதிகமாகப் பேசப்பட்ட ஒரு காரியமாகும். இந்த வெஸ்லியர்கள்தான் பின் நாட்களில் மெதடிஸ்ட்டுகள் என்று அழைக்கப்பட்டனர். பரிசுத்தவான் ஜாண் வெஸ்லி என்பவர் மெதடிஸ்ட் திருச்சபையைத் தோற்றுவித்தார் என்பதை நாம் அறிவோம். இந்த ஜாண் வெஸ்லி என்ற தேவ மனிதர் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி 1745 ஆம் ஆண்டு முதல் முதலாக மாக்லஸ்ஃபீல்ட் என்ற இடத்திற்கு வந்தார். அந்த ஆண்டிலிருந்து ஒழுங்காக அடுத்து வந்த 45 ஆண்டுகள், ஆம், 1790 ஆம் ஆண்டு வரை அவர் அந்த இடத்திற்கு வந்து சென்றார். இந்த மெதடிஸ்டுகளின் உள்ளூர் தலைவராக ஜியார்ஜ் பியர்சன் என்பவர் இருந்தார். அவர் ஒரு டெயிலர். தனது 28 ஆம் வயதில் மனந்திரும்பி ஆண்டவரை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். 1807 ஆம் ஆண்டு மரணமடைந்த அவரது கல்லறையில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் "உலகம் அளிக்கக்கூடிய எந்த ஒன்றையும் சுதந்தரித்துக் கொள்ளாத பரிசுத்த மனிதர். தனது 87 ஆண்டு கால உலக வாழ்வில் பெரும்பாலான காலத்தை தனது சக மாந்தரின் ஆத்தும நன்மைக்கும், தனது பக்தி வாழ்விற்கும், தனது சிருஷ்டிகரை தியானிப்பதற்கும் செலவிட்ட மெய் தேவ பக்தன்" என்ற வார்த்தைகள் பொரிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட் ஜியார்ஜ் பியர்சன் தான் பரிசுத்தவான் ஜாண் வெஸ்லியை மாக்லஸ்பீல்ட் என்ற இடத்திற்கு வரவழைத்து கூட்டங்கள் நடத்தினார். ஒரு பண்ணை வீட்டின் ரொட்டி தயாரிக்கின்ற அறையில் கூட்டங்கள் நடைபெற்றன. அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட பலரும் கர்த்தருக்குத் தங்களை ஒப்புவித்து மனந்திரும்பினார்கள். அவர்களில் ரொட்டி வேகவைக்கும் கற்கள் ஒன்றில் அமர்ந்து தேவனுடைய செய்தியை கேட்ட ஒரு அம்மையாரும் இருந்தார்கள். அவர்கள்தான் ஜாண் ரைல் என்பவரின் தாயார் ஆவார்கள். அவர்கள் தனது குமாரன் ஜாண் ரைலை ஆண்டவருக்குள் வழிநடத்தினார்கள்.
ஜாண் ரைல் ஆண்டவருடைய ஊழியத்தில் பரிசுத்தவான் ஜாண் வெஸ்லிக்கு ஆதரவாக இருந்து அவர் மாக்லஸ்பீல்ட் என்ற அவருடைய இடத்திற்கு வரும்போதெல்லாம் வேண்டிய ஒத்தாசைகள் செய்ததுடன் மெதடிஸ்டுகள் ஆண்டவரை ஆராதிக்க ஒரு ஆலயம் கட்டிக்கொள்ள வசதியாக தனது நிலத்தையே இலவசமாகக் கொடுத்ததுடன் கட்டுமானப்பணிகளுக்காகவும் போதுமான பண உதவி செய்தார். ஜாண் ரைல் 1808 ஆம் ஆண்டு இறந்ததும் அவருடைய முழு ஆஸ்தியும் அவருடைய மூத்த குமாரன் ஜாண் ரைல் என்பவருக்குச் சேர்ந்தது. அவர் தன்னுடைய மூத்த மகனுக்கும் தனது பெயரையே வைத்திருந்தார். அவருக்கு மொத்தம் 8 பிள்ளைகள் இருந்தபோதினும் ஒரு குமாரன் மரித்துப் போனான், மற்றொரு குமாரன் தனது விருப்பப்படி ஒரு பெண்ணை மணந்து கொண்டு தொலை தூரமான இடத்திற்கு வீட்டை விட்டு என்றுமாகப் போய்விட்டான். எனவே, வீட்டின் முழு சுதந்திரமும் ஜாண் ரைலுக்கே வந்து சேர்ந்தது. தகப்பனார் இறந்த வருஷத்துக்கு அடுத்து வந்த இரண்டாம் வருடமே ஜாண் ரைல் மாக்லஸ்பீல்ட் பட்டணத்தின் மேயர் ஆனார். பெருஞ் செல்வந்தரான சர்.ரிச்சர்ட் ஆர்க்ரைட் என்பவரின் குமாரத்தியான சூசன்னா அம்மையாரை அவர் மணந்து கொண்டார். அவர்கள் அரண்மனை போன்ற ஒரு அழகான பெரிய வீடான ரைல் பார்க் என்ற வீட்டில் வாழ்ந்தனர்.
அந்த செல்வச் சீமானுடைய வீட்டில் தான் நமது பரிசுத்த தேவ மனிதர் ஜாண் சார்ல்ஸ் ரைல் என்பவர் அவரின் மூத்த குமாரனாக 1816 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் நாள் அதிகாலை நான்கு மணிக்குப் பிறந்தார். அவர் 8 வயதாகும் வரை அவருடைய பெற்றோர் அந்தப் பெரிய வீட்டிலேயே வாழ்ந்தனர். ஜாண் சார்லஸ் ரைலும், அவரது 3 சகோதரிகளும் அவர்களுடைய தகப்பனார் ஜாண் ரைலை வீட்டில் அதிகமாகப் பார்த்திருக்கமாட்டார்கள். காரணம், அவர் தனது பட்டுத் தொழில், வங்கித் தொழில் மற்றும் பிற அலுவல்களின் காரணமாக எப்பொழுதும் வெளியிலேயேதான் இருப்பார். அவர்களுடைய தாயார்தான் எல்லா அன்பையும், பாசத்தையும், அரவணைப்பையும் கொட்டி பிள்ளைகளை வளர்த்தார்கள். பெற்றோரும், பிள்ளைகளும் அபூர்வமாக வெளியே எங்கேயாவது உல்லாசப் பயணம் செல்லுவார்கள். அப்படிச் செல்லுவதானால் அவர்கள் பெரும்பாலும் பிரிட்லிங்டன் என்ற இடத்திற்குத்தான் செல்லுவார்கள். அங்கே ஜாண் ரைலுக்கு "கடல் மலர்" என்ற ஒரு உல்லாசப் படகு இருந்தது. படகு சவாரி செல்லும்போது தனது மகன் தண்ணீரில் விழுந்துவிடாமல் இருக்க வசதியாக அவரை பாய்மரத்துடன் பாதுகாப்பாக கயிற்றினால் கட்டி வைத்து விடுவார்.
ஜாண் ரைல் குடும்பத்தினர் காலை ஆகாரத்திற்கு முன்னர் கடற்கரை வரை உலாவச் சென்று வருவார்கள். சார்லஸ் 4 வயதினனாக இருக்கும்போது அவரது தந்தை அவரை கோவேறு கழுதையில் வைத்து ஒரு சமயம் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். கழுதையின் முதுகிலிருந்த சார்லஸ் எப்படியோ நழுவி கீழே விழுந்துவிட்டான். குழந்தை விழுந்ததை அறியாமல் தந்தை கழுதையை முன்னின்று நடத்திச் சென்று கொஞ்ச தூரம் வந்ததும் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து திரும்பவும் பின்நோக்கி ஓடிச் சென்று சார்லசை கொண்டு வந்தார். தெய்வாதீனமாக பலத்த அடிகள் ஒன்றும் படாமல் கர்த்தர் குழந்தையைப் பாதுகாத்தார்.
அவரது குழந்தைப் பருவ நினைவுகளில் மறக்க முடியாத ஒன்று அவர் ஒவ்வொரு வாரம் சனிக் கிழமை இரவிலும் ஒரு மரத் தொட்டியில் வைத்து குளிப்பாட்டப்பட்டு ஒரு நல்ல அழகான சீப்பினால் தலை சீவப்பட்டதுதான்.
கிறிஸ்தவ மார்க்கம் என்பது ஒரு சமுதாய நடை முறைப் பழக்கம் மட்டுமே என்று சார்லஸ் ரைலின் பெற்றோர் நினைத்திருந்தபடியால் வீட்டில் எந்த ஒரு குடும்ப ஜெபமோ, வேத வாசிப்போ, கர்த்தரைக் குறித்த பேச்சுக்களோ எதுவுமே இல்லாதிருந்தது. தேவாலயத்தில் பிரசங்கிக்கப்படும் பிரசங்கங்களை சார்லஸ் ரைல் ஒருக்காலும் விளங்கிக்கொள்ள முடியாதவராக இருந்தார். மார்க்க சம்பந்தமான கல்வியில் "மோட்ச பிரயாணம்" புத்தகத்தை வாசித்தல் மற்றும் கிறிஸ்தவ ஞானோபதேச வினாவிடைகளை பாராமல் படித்து தாயாரிடத்தில் ஒப்புவிப்பதும் அடங்கியிருந்தது. அதுவும் ஒரு கடமைக்காக நடந்து வந்தது. ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் அவரது தகப்பனார் தூக்க மயக்கமற்ற நிலையில் இருந்தால் அவர்கள் வீட்டிலிருந்த பழமையான ஒரு வேதாகமத்திலிருந்து சில எடுத்துக்காட்டுகளை அவர் எடுத்துச் சொல்லுவார். அவர் அப்படிச் சொன்ன விளக்கங்களில் யோபு பக்தன் தனக்குள்ள யாவையும் இழந்து ஓட்டாண்டியாக இருந்த சமயம் சாத்தான் அவரது நிலையைக் கண்டு மகிழ்ந்து அவருக்கு முன்பாக நின்று ஆனந்த நடனமாடின காட்சியை அவரது தந்தை விளக்கிச் சொன்னதை அவர் மறவாமல் நினைவில் வைத்திருந்தார்.
சார்லஸ் ரைலின் பக்தியுள்ள பாட்டியார் அவரது தந்தையான ஜாண் ரைல் மிகவும் சிறுவனாக இருந்தபோதே இறந்துவிட்டபடியால் தனது குடும்பத்தினருக்கு ஒரு பிரகாசமான வழிகாட்டும் கிறிஸ்தவ சாட்சியை விட்டுச் செல்ல முடியாமற் போய்விட்டது.
குறிப்பிட்ட காலத்தில் அவர் கல்வி கற்க ஈட்டன் என்ற கல்லூரிக்கும், பின்னர் ஆக்ஸ்போர்ட் சர்வ கலாசாலைக்கும் அனுப்பப்பட்டார். சிறந்த ஞானவானான அவர் அனைத்து மாணவர்களிலும் சிறப்பான விதத்தில் தேர்ச்சியடைந்தார். படிப்பில் எத்தனை ஞானவானாக திகழ்ந்தாரோ அவ்வண்ணமே கிரிக்கெட் விளையாட்டிலும் சிறந்த வீரனாக விளங்கி அநேக பரிசுகளைத் தட்டிக் கொண்டு வந்தார்.
|
ஜாண் சார்லஸ் ரைலின் மனந்திரும்புதல் |
ஜாண் சார்லஸ் ரைலின் மனந்திரும்புதலுக்கு 2 வருடங்களுக்கு முன்னர் அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அவரது மனந்திரும்புதலுக்கு அஸ்திபாரமாக அமைந்தது. ரைலும், அவரது ஈட்டன் கலாசாலை நண்பன் அல்கர்நன்கூட் என்பவரும் துப்பாக்கியுடன் வேட்டையாடுவதற்காக ஒரு குழுவுடன் கானகம் சென்றனர். சென்ற இடத்தில் ரைல் ஏதோ ஒரு காரியத்திற்காக சத்தியம் செய்துவிட்டார். அந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்களுடன் வேட்டைக்குச் சென்ற அல்கர்நன் கூட் என்பவரின் தந்தை நமது சார்லஸ் ரைலை மிகவும் கடிந்து கொண்டார். அந்த பக்திமானின் கடிந்து கொள்ளுதலின் வார்த்தை ரைலுடைய உள்ளத்தை மிகவும் ஆழமாகத் தொட்டது. அவருடைய இரட்சிப்பைக் குறித்து ரைல் பின் நாட்களில் எழுதும்போது "அந்த முதல் மனிதர் தான் என் வாழ்வில் நான் எனது ஆத்துமாவின் காரியமாக சிந்திப்பதற்கும், மனந்திரும்புவதற்கும், ஜெபிப்பதற்கும் என்னைத் தூண்டிவிட்டார்" என்று எழுதினார். அந்த நிகழ்ச்சியின் மூலமாக ரைல் உடனே மனந்திரும்பாத போதினும் தனது ஆத்துமத்தின் நிலை என்ன என்றும், மெய்யான தேவ மக்களின் பக்தி வாழ்வுக்கும் தனது வாழ்க்கைக்கும் எத்தனை பெரிய இடைவெளி உள்ளது என்பதை கண்ணீரோடு உணர்ந்து கொண்டார்.
அவர் ஆக்ஸ்போர்ட் சர்வகலாசாலையில் தனது கடைசித் தேர்வுகளை எழுதும் சமயம் எதிர்பாராதவிதமாக அவர் மிகவும் சுகயீனமானார். மார்பு சளியின் தொல்லையால் அவர் மிகவும் அவதிப்பட்டார். அவருடைய தேர்வுகளைக் கண்காணித்த தேர்வாளர்கள் "வியாதி" என்று அவரது பதிவேட்டில் குறிப்பிட்டுவிட்டனர். ஆனால், மிகவும் தெய்வாதீனமாக தனது கடினமான சுகயீனத்தின் மத்தியிலும் அவர் எழுந்து போய் தனது தேர்வுகளை நல்லவிதமாக எழுதி முடித்து யாவரும் வியக்கும்வண்ணம் சிறப்பான தேர்ச்சி பெற்றுவிட்டார். தன்னுடைய வாழ்வில் நடந்த இந்த அதிசயத்தைக் குறித்து அவர் சொல்லும்போது "அந்த சுகயீனமான நாட்களில் தான் அதிகமாக ஜெபித்ததுடன் தேவனுடைய வார்த்தைகளையும் ஆழ்ந்து வாசித்து தியானம் செய்ததாகவும் சொன்னார்". அவருடைய சுகயீனம் அன்பின் ஆண்டவர் இயேசுவைக்குறித்து அவர் அதிகமாக சிந்தித்து தியானிக்கவும், தனக்கும் தன் கர்த்தருக்குமுள்ள இடைவெளி எத்தனை தூரமானது என்பதையும் அவர் தன்னுடைய இருதயத்தில் துக்கத்துடன் கண்டு கொள்ளவும் அவருக்கு வகை செய்தது.
இந்தச் சமயம் ஒரு ஓய்வு நாள் நண்பகற் பொழுது ஒரு கிராமப்புற தேவாலய ஆராதனையில் கலந்து கொள்ளுவதற்காக அவர் சென்றார். அந்த தேவாலயம் எங்கிருக்கின்றது என்றோ அல்லது அன்று அங்கு பிரசங்கிக்கப்பட்ட பிரசங்கம் என்ன என்றோ அவருக்குத் தெரியாது. ஆனால், அந்த தேவாலயத்தில் இரண்டாம் பாடம் வாசித்தது யார் என்று அவருக்குத் தெரியாதபோதினும் அன்று அங்கு வாசிக்கப்பட்ட வேதபகுதி எபேசியர் 2 ஆம் அதிகாரமாகும். அதை வாசித்தவர் 8 ஆம் வசனத்துக்கு வந்தபோது "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, தேவனுடைய ஈவு" என்று ஒவ்வொரு பகுதியையும் போதுமான நேரம் கொடுத்து அழுத்தமாக வாசித்த அந்த வாசிப்பிலேயே அந்த தேவ வசனம் ரைலுடைய உள்ளத்தை வெகு ஆழமாகத் தொட்டது. கர்த்தர் அந்த வசனத்தின் மூலமாக தம்முடைய அடியானோடு பேசினார். "தேவனுடைய சுத்தக் கிருபையினாலே நான் ஆண்டவருடைய பிள்ளையாகிவிட்டேன்" என்ற வெகு வலுவான நம்பிக்கை அவரை அப்படியே பிடித்துக் கொண்டது. அந்த தேவகிருபையில் தானே அந்த நாளிலிருந்து அவர் நாள்தோறும் வளரத்தொடங்கினார்.
அவரது இரட்சிப்பிக்குப் பின்னர் அவர் பக்த சிரோன்மணிகளின் புத்தகங்களை ஏராளமாக வாங்கி ஒரு பெரிய புத்தகசாலையையே தனக்கென்று வைத்திருந்தார். 16 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டு பியூரிட்டான்கள் (Puritans) மற்றும் இரத்தசாட்சிகளின் வாழ்க்கை வரலாறுகள், அவர்களது தேவச்செய்திகள் அவருக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தன. தனது எழுத்துக்களில் அந்த பக்தசிரோன்மணிகளின் எழுத்துக்களை அவர் திரும்பத் திரும்ப எடுத்தாண்டார். இந்த பரிசுத்தவான்களின் புத்தகங்கள் தான் நமது ஜாண் சார்லஸ் ரைலை ஒரு மெய் தேவ பக்தனாக உருவாக்கிவிட்டது.
தான் எழுதிய அநேக அருமையான புத்தகங்களில் "18 ஆம் நூற்றாண்டு பரிசுத்தவான்கள்" என்ற தலைப்பில் குறிப்பிட்ட கொஞ்சம் தேவ பக்தர்களைக் குறித்து நமது இருதயம் பொங்கி பூரிக்கும் வண்ணம் ஒரு அருமையான புத்தகம் எழுதியிருக்கின்றார். |
குடும்பத்தை தாக்கிய பேரிடி |
செல்வச் சீமானாக எல்லா சுகபோகங்களுடனும் வாழ்ந்த ஜாண் சார்லஸ் ரைலின் தந்தை ஜாண் ரைல் சற்றும் எதிர்பாராதவிதமாக தனது வங்கித் தொழிலில் வீழ்ச்சியடைந்து தனக்குள்ள எல்லாவற்றையும் மிகவும் துரிதமாக இழந்து போக நேரிட்டது. 1841 ஆம் ஆண்டு நடந்த இந்த சோக சம்பவத்தில் ஜாண் ரைலின் நண்பர் சார்லஸ் உட் என்பவர் வங்கி ஒன்றில் வாங்கிய 200,000 பவுண்டுகள் கடனை ஜாண் ரைலே அடைக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு அவர் தனக்குள்ள எல்லாவற்றையும் ஒரே இரவுக்குள்ளே இழந்து ஓட்டாண்டியானார். அந்த மாபெரும் கடனை அடைக்க எல்லா நிலபுலங்களும் விற்கப்பட்டது. அந்த ஐசுவரியமுள்ள குடும்பம் தங்களுக்குள்ள துணிமணிகள் மற்றும் தாயாரின் சீதனம் தவிர மற்ற யாவற்றையும் இழந்தது. ஜாண் ரைல் தன்னுடைய 2 குதிரைகளையும் தன் வசமிருந்த அழகான சீருடைகளையும் ஒரு மனிதனுக்கு விற்றார். அந்த மனிதன் ஜாண் ரைலின் மேல் இரக்கம் கொண்டு அவைகளை 100 பவுண்டுகளுக்கு வாங்கினான். ஹென்பரி என்ற இடம் விற்கப்பட்டு வீட்டில் வேலைகளுக்கு வைத்திருந்த வேலைக்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய பணங்கள் கொடுக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஜாண் ரைலின் மனைவி வீட்டைவிட்டு லண்டன் சென்று அங்குள்ள தனது சிநேகிதிகளுடன் தங்கச் சென்றுவிட்டார்கள். ஜாண் சார்லஸ் ரைலும் அவரது சகோதரி மேரி ஆன் அவர்களும் சுமார் 6 வார காலம் தங்கள் தந்தையுடன் இருந்து தங்கள் தந்தை தனது காரியங்களை முடிக்கும் வரை அவருக்கு ஒத்தாசையாக இருந்தார்கள்.
"அந்த கோடை கால மனோகரமான காலை வேளையில் நாங்கள் வழக்கம்போல உலகமே எங்கள் காலடியில் இருப்பது போன்ற பூரிப்புடன் எழுந்து, அந்த நாளின் இரவில் எங்களுக்குள்ள அனைத்தையும் இழந்து ஓட்டாண்டிகளும், நிர்வாணிகளுமாக எங்கள் படுக்கைக்குச் சென்றோம்" என்று சார்லஸ் ரைல் கூறுகின்றார்.
"நாங்கள் வாழ்ந்த அந்த ஹென்பரி என்ற இடம் கோடைகால அழகினால் நிறைந்து காணப்பட்டது. ஆனால் எனக்கு அது அமைதியான பாழடைந்த கல்லறைத் தோட்டத்தின் பயங்கரத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஆண்டவரை எனது சொந்த இரட்சகராக ஏற்ற மறுபடியும் பிறந்த ஒரு கிறிஸ்தவனாக மாத்திரம் நான் இல்லாமல் இருந்திருந்தால் நான் நிச்சயமாக அந்நாட்களில் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்கின்றார் ஜாண் சார்லஸ் ரைல்.
தான் வாழ்ந்த ஹென்பரி என்ற இடத்திலுள்ள மரங்கள் 25 ஆண்டு கால வயதுடையவைகளாக இருந்தபடியால் அவைகளை மற்றொரு இடத்தில் பிடுங்கி நடுவது எத்தனை பயனற்றதோ அதே வண்ணமாக தானும் தனது 25 வயதுக்குப் பின்னர் நாட்டின் எந்த ஒரு இடத்திலும் நாட்டப்பட்டு மகிழ்ச்சியோடு வாழ்க்கையில் வேர் ஊன்றுதல் கூடாத காரியம் என்று ஜாண் சார்லஸ் ரைல் தனது அறியாமையால் எண்ணிக் கொண்டார்.
இறுதியாக 1841 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரைல் குடும்பத்தினர் ஹென்பரியை விட்டுப் புறப்பட்டனர். தாங்கள் அன்பாக வளர்த்த சீசர் என்ற நாயை விட்டுப் பிரிவது கூட நமது ஜாண் சார்லஸ் ரைலுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. "சீசர் என்னை துயரத்தோடு உற்றுப் பார்த்தது. பாவம், எங்கள் வீட்டில் நடந்த துயர காரியங்கள் ஒன்றும் அதற்கு தெரியாதே! ஏன் தன்னை தனது அளவற்ற அன்பின் குடும்பத்தினர் தங்களுடன் கொண்டு செல்லவில்லை என்பதை அது அதிகமாக யோசித்திருக்கும். அதற்கப்பால், அடுத்து வந்த ஒரு மாத காலமும் அந்த ஏழை நாய் ஒவ்வொரு நாள் காலையிலும் ஹென்பரியிலுள்ள எங்கள் வீட்டை நோக்கிச் சென்று வீட்டின் கதவுகள் திறந்ததும் எனது அறைக்குச் சென்று எனது அறையின் கதவண்டை படுத்துக் கொள்ளுமாம். காலையிலிருந்து சூரியன் அஸ்தமனமாகி இருள் சூழும் வரை அங்கேயேதான் அது படுத்திருக்குமாம். அதற்கப்பால் எழுந்து கதவை ஒரு தடவை மோந்து பார்த்துவிட்டு மிகவும் துயரக்குரலில் பரிதாபகரமாக முனங்கி ஓலமிடுமாம். அந்தக் காட்சியை வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்த சிலரால் தாங்கிக்கொள்ள முடியாத வேதனையாக இருந்ததால் சீசரை யாருக்கோ கொடுத்தார்களாம். ஆனால், அது துரிதமாக செத்துப் போனதாம்" என்று ரைல் கூறுகின்றார்.
அடுத்து வந்த 20 ஆண்டு காலங்களாக ஜாண் ரைல் அங்கும் இங்குமாக இருந்த தனது அனைத்துக் கடன்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டித் தீர்த்தார். தனது தந்தைக்கு கைகொடுக்குமாப்போல சார்லஸ் ரைல், ஹெல்மிங்காம் திருச்சபையில் குருவானவராக இருந்த காலம் வரை நைந்து போன குருத்துவ அங்கிகளைக் கூட அணிந்து தனக்குக் கிடைத்த பணங்களை சேகரித்து தந்தையின் கடன்களை அடைக்க உதவி செய்தார்.
தனது தந்தையின் மூலமாக தனது வாழ்வில் நேரிட்ட பெருந்துயரங்களைக் கண்ட ஜாண் சார்லஸ் ரைல் தன்னை ஆட்கொண்ட தன் அன்பின் ஆண்டவருடைய பூரண சித்தத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுப்பதே தனது வாழ்வுக்கான ஒரே வழி என்று கண்டு தன்னை முற்றுமாக கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு ஒப்புவித்தார்.
அந்த இலையுதிர் காலத்தில் நியூஃபாரஸ்ட் என்ற இடத்திலிருந்த அவர் தனது வருங்காலத்துக்கு எந்த ஒரு வேலையை தெரிந்து கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த இடத்திலுள்ள கிளாட்ஸ்டன் என்ற அரசியல்வாதிக்கு அந்தரங்க காரியதரிசியாகும் ஒரு பணி கிடைத்தது. அதை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து தான் ஒரு குருவானவராக ஆனால் என்ன என்ற ஒரு ஆச்சரியமான முடிவுக்கு வந்தார். கர்த்தருக்குள்ளான அந்த தேவ ஆலோசனையே பின் வந்த நாட்களில் இங்கிலாந்து தேச விக்டோரியா மகாராணியே அவரை லிவர்பூல் பட்டணத்தின் பிஷப்பாக தெரிவு செய்யும் நிலைக்குக் கொண்டு சென்றது. கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. |
எக்ஸ்பரியில் நடைபெற்ற தேவ ஊழியங்கள் |
ஜாண் சார்லஸ் ரைல் 1841 ஆம் ஆண்டு வின்செஷ்டர் என்ற இடத்திலுள்ள பிஷப் சார்லஸ் சம்மர் என்பவரால் அவரது வீடான ஃபார்ன்ஹாம் கோட்டையிலேயே உதவி குருவானவராக நியமனம் செய்யப்பட்டார். எக்ஸ்பரி என்ற அந்த சின்ன சபை "ஃபாலி" என்ற பெரிய சபையின் கீழ் உள்ள ஒன்றாகும். அதின் குருவானவர் கிப்சன் ஆவார். எக்ஸ்பரி என்ற இடம் 7 சதுர மைல்கள் பரப்பளவுள்ள முக்கோண வடிவமான ஒரு பகுதியாகும். அது ஒரு கடற்கரை கிராமமாகும். "அந்த இடம் பாழானதும், இருண்டதும், மிகவும் தனித்த ஏகாந்தமான இடம்" என்று ரைல் அதைக் குறித்து சொல்லுவார். அதின் ஜனத்தொகை மொத்தம் 400 பேர் ஆகும். அவர்கள் பெரும்பாலும் ஏழைகள். அவர்கள் ஏழு சதுர மைல்கள் தொலைவுகளில் சிதறியிருந்தனர். அது ஒரு தாழ்வான நிலப்பரப்பில் இருந்தமையால் தண்ணீர் வடிந்து செல்ல வழியில்லாமல் தேக்க நிலையில் இருந்ததால் சுகத்துக்கு ஏற்ற இடமாக அது இல்லாதிருந்தது. அவர்களைப் பிடித்திருந்த ஒரு கொடிய நோய் ஸ்கார்லட் காய்ச்சலாகும், ஜனத்தொகையில் 10 சதவீதமானவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் இந்த விஷக்காய்ச்சலுக்கு பலியானார்கள். இந்த இடத்தில் மிகுதியான பாம்புகளும் இருந்தன. பாம்பு கடியால் இறக்கும் மக்களும் அநேகர் இருந்தனர். நூற்றுக்கணக்கான பாம்புகள் அந்த இடங்களில் காணப்பட்டன. அவைகள் அப்படியே ஊர்ந்து மக்களுடைய வீடுகளுக்குள்ளும், அறைகளுக்குள்ளும் வந்து விடும். காய்ச்சல், பாம்பு கடி போன்றவைகளுக்கு சார்லஸ் ரைல் கொயினா மாத்திரை மற்றும் ஒலிவ எண்ணெய் போன்றவைகளைக் கொடுத்து தனது குருவானவர் பணியுடன் டாக்டர் பணியையும் செய்து வந்தார். பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே ஒரு பாம்பைக் கொல்லுவோருக்கு 2 பென்ஸ் கொடுக்கப்படும் என்ற உத்தரவு மேலிடத்திலிருந்து வந்தது. அதைத் தொடர்ந்து பாம்புகளைக் கொன்று அதற்கான பணத்தை வாங்குவதற்காக செத்த பாம்புகளுடன் மக்கள் குருவானவரின் அலுவலக குமஸ்தாவின் கதவண்டை காத்திருப்பது சாதாரண காட்சியாக இருந்தது.
சார்லஸ் ரைல் எக்ஸ்பரி திருச்சபைக்கு வந்ததும் தனது அயராத உழைப்பால் அந்த சிறிய தேவாலயத்தை நிரம்பி வழியச் செய்தார். அந்தக் கிராமத்திலுள்ள சிறியோர், பெரியோர், குழந்தைகள் எல்லாரும் அவருக்கு அத்துபடியான பழக்கமுடையவர்களாக இருந்தனர். தனது மிகுந்த மனத்தாழ்மையால், சிறந்த தேவபக்தியால் அந்தக் கிறிஸ்தவ மக்கள் அனைவரையும் தன் வசமாக்கியிருந்தார். தனது வாராந்திர ஞாயிறு ஆராதனைகளுடன் ஓய்வுநாள் பள்ளியும் ஒழுங்காக நடத்தி வந்தார். வாரத்தில் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் அவர் வீட்டு ஜெபக்கூட்டங்கள் நடத்தினார். அவர் சென்று ஜெபக்கூட்டங்கள் நடத்திய அந்த ஏழை மக்களின் வீடுகள் நாற்றமெடுத்த புகையால் மண்டிக்கிடக்கும். அந்த புகை மூட்டத்துக்குள் நமது குருவானவர் ரைல் பொறுமையோடு அமர்ந்து ஜெபக்கூட்டம் நடத்துவார். வேளாவேளைகளில் கடற்கரையிலுள்ள எல்லைப் பாதுகாவல் நிலையத்தில் அதிகாலை 5 மணிக்குச் சென்று தேவனுடைய செய்தியைக் கொடுப்பார். அந்த இடம் அவருடைய வீட்டிலிருந்து ஒன்றரை மைல் தூரத்திலிருந்தது. கடலுக்குள் கட்டுமரங்களில் சென்று இரா முழுவதும் தண்டு வலித்து கடல் எல்லைகளைப் பாதுகாத்துவிட்டு பகல் முழுவதும் தூங்குவதற்காக அந்த நேரத்தில்தான் அவர்கள் கரை இறங்குவார்கள். அந்த வேளையை அவர் பயன்படுத்திக்கொண்டு அந்த மக்களுக்கு தேவச்செய்தி கொடுப்பார். தனது திருச்சபையிலுள்ள ஒவ்வொரு வீடுகளையும் மாதத்தில் ஒரு நாள் கட்டாயம் சந்தித்து விடுவார். ஒரு வாரத்திற்கு 30 அல்லது 40 வீடுகள் என்ற கணக்கின் அடிப்படையில் வைத்துக் கொண்டு அந்தப் பணியை அவர் கருத்தாகச் செய்தார். சௌதாம்டன் என்ற இடத்திலுள்ள ஒரு கிறிஸ்தவ கைப்பிரதி கழகத்திலிருந்து நல்ல பயனுள்ள சுவிசேஷ துண்டுப்பிரதிகளை கைம்மாற்றுக்காக வாங்கி அவைகளை கட்டியான தாட்களில் பாதுகாப்புக்காக சுற்றி தான் செல்லும் தனது சபை வீடுகளில் அவைகளைப் படிக்க சுற்றுக்குக் கொடுத்து வாங்குவார்.
ஜாண் சார்லஸ் ரைல் வந்ததிலிருந்து எக்ஸ்பரி தேவாலயம் சபை மக்களுக்கு ஒரு களிகூருதலின் இடமாக விளங்கியது. இது வரை மக்கள் நல்ல ஆவிக்குரிய ஆகாரம் வேண்டுமானால் எப்பொழுதாவது எங்கோ ஓரிடத்தில் நடக்கும் பாப்திஸ்து அல்லது மெதடிஸ்ட்டு கூட்டங்களில் கலந்து கொள்ளுவதாக இருந்தது. ஆனால் இப்பொழுது நல்ல எழுப்புதலான சுவிசேஷ சத்தியம் தங்கள் தேவாலயத்திலேயே கிடைத்துக் கொண்டது. அது மட்டுமல்ல, அரசாங்கத்திற்கு மறைவாக திருட்டுத்தனமாக வனவிலங்குகளை வேட்டையாடுதல், கடல் வழியாக கள்ளக்கடத்தல் செய்தல் போன்ற காரியங்களில் மும்முரமாக ஈடுபட்டிருந்த தனது சபையின் மக்களை தேவனுக்குப் பிரியமாக பரிசுத்தமான வழியில் வாழ நல்ல ஆவிக்குரிய போதனைகளை அவர்களுக்கு கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்துவது அவரது பிரதான குறிக்கோளாக இருந்தது. ஜாண் சார்லஸ் ரைல் தேவாலயத்தில் தேவ செய்தி கொடுக்கும்போது நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் அவருடைய பிரசங்கத்தை ஆசை ஆவலாக உட்கார்ந்து கேட்டு ஆனந்திப்பார்கள். அந்த திருச்சபையில் மிகவும் ஐசுவரியமுள்ள ஜாண் டால்மாக் என்ற ஒரு மனிதர் இருந்தார். ஜாண் ரைலின் பிரசங்கம் நீண்டு செல்லுகின்றது என்று அவர் கண்டால் உடனே தேவாலயத்தின் கடைசி இருக்கையில் எப்பொழுதும் அமரும் பழக்கமுடைய அவர் தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்று கொண்டு எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கவே தனது கரத்தை தனக்கு முன்பாக பெருமையாக நீட்டிக் கொண்டு தனது கடிகாரத்தில் டைம் பார்த்துக் கொண்டிருப்பார். நமது ரைல் அதற்கெல்லாம் அஞ்சாமல் தனது பிரசங்கத்தை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்.
எக்ஸ்பரி திருச்சபையில் ரைல் தொடர்ந்து ஊழியம் செய்ய இயலவில்லை. காரணம், அவருக்கு அங்கு கொடுக்கப்பட்ட வருடாந்திர சம்பளம் வெறும் 100 பவுண்டுகள் மட்டுமே. அதில் 16 பவுண்டுகளை அவர் குடியிருந்த வீட்டிற்கு வாடகைக்காக கொடுக்க வேண்டும். அங்கிருந்த சில ஐசுவரியவான்களின் கோபமும் அவர் மேல் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து நமது குருவானவர் சீட்டாட்டம், நடனம் போன்ற பாவ காரியங்களுக்கு ஒத்துப் போகாததால் அவர்களுடைய வெறுப்பையும் அவர் சம்பாதித்தார். அவர் வாழ்ந்த வீடும் தேவாலயத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் ஒரு பாழடைந்த வீடாக இருந்தது. யாவுக்கும் மேலாக, அவர் அங்கிருந்து புறப்பட வேண்டியதன் காரணம், அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததுதான். தொடர்ச்சியான தலைவலியும், அஜீரண கோளாறுகளும், இருதய பெலவீனங்களும் அவரைத் தாக்கினது. எனினும், தேவ மனிதர், தான் எக்ஸ்பரியில் இருந்த நாட்களில் தன் அன்பின் ஆண்டவருக்கு தன்னால் இயன்ற ஒரு அருமையான தேவ ஊழியத்தை ஆத்தும பாரத்தோடு அங்கு நிறைவேற்றி முடித்திருந்தார். கர்த்தருக்கே மகிமை. |
ஹெல்மிங்காம் திருச்சபையில் நடைபெற்ற தேவ ஊழியங்கள் |
ஜாண் சார்லஸ் ரைல் 1844 ஆம் ஆண்டு சஃபோக் என் இடத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற ஹெல்மிங்காம் தேவாலயத்தின் குருவானவராக நியமிக்கப்பட்டார். ஹெல்மிங்காம் என்றதும் அதைச் சார்ந்த ஹெல்மிங்காம் ஹால் என்ற கீர்த்திபெற்ற கட்டடமும் இணைந்திருக்கின்றது. இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி அரசரின் காலத்தில் இந்த அழகும், வனப்புமான கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக அகழி தோண்டப்பட்டிருந்தது. அகழியில் நிறைய மீன்கள் கிடந்தன. அகழியில் ஒரு இழுவைப்பாலம் இருந்தது. ஒவ்வொரு நாள் இரவிலும் அந்தப் பாலம் மேலே இழுக்கப்பட்டு இரவில் அகழியைத்தாண்டி எவரும் வராதவண்ணமாக தடைசெய்யப்படும். இந்தவண்ணமாக அந்த இழுவைப்பாலம் அநேக நூற்றாண்டு காலமாக இயங்கி வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த ஹெல்மிங்காம் ஹால் என்ற பெரிய குடியிருப்பு வீடு சோலை மரங்களின் நடுவில், சாரை சாரையாக நிழல் மரங்களின் ஊடாக அமைந்திருந்தது. அங்கு மான்கள் கூட்டமாகக் காணப்படும். இந்த பெரிய வீட்டிற்கு சுமார் 600 அடி தூரத்தில்தான் ஹெல்மிங்காம் தேவாலயம் இருந்தது. சோலை மரங்களின் ஓரமாக அமைந்திருந்த அந்த தேவாலயம் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். அந்த அழகிய தேவாலயத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

தேவாலயத்தின் குருவானவரின் வீடு அதற்கு அருகிலேயேதான் இருந்தது. ஜாண் சார்லஸ் ரைல் அங்கு சென்ற சமயம் அந்த வீடு பழுது பார்க்கப்பட வேண்டியதாக இருந்தமையால் அடுத்து வந்த 15 மாத காலம் அவர் ஹெல்மிங்காம் ஹால் என்ற அங்கிருந்த பெரிய வீட்டில்தான் தங்க வேண்டியதாக இருந்தது. அந்த 15 மாத காலங்களை அவர் அந்த திருச்சபையில் நிறைவேற்றப்போகும் தேவ ஊழியங்களுக்காக ஜெபிப்பதிலும், தேவனுடைய வசனங்களை அதிகமதிகமாக வாசித்து தியானிப்பதிலும், தேவனுடைய ஊழியங்களை எவ்வண்ணமாக நிறைவேற்றவேண்டும் என்ற கர்த்தரின் வழிகாட்டுதலுக்கு காத்திருப்பதிலும் செலவிட்டார். அத்துடன் அந்த நாட்களில் அவர் பல மெய்யான இரட்சிப்பின் பாத்திரங்களான தேவ ஊழியர்களோடும் நட்பு கொண்டு அவர்களின் ஆவிக்குரிய அனுபவங்களையும் கேட்டறிந்து ஆசீர்வாதம் பெற்றார்.
1845 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் கிரேட் யார்மவுத் என்ற இடத்தில் ஒரு பயங்கரமான விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் நூறு பேர்கள் கொஞ்ச நேரத்தில் நதியில் விழுந்து மாண்டு போனார்கள். அந்த விபத்து எப்படி நேர்ந்ததென்றால் அங்குள்ள நதியில் புதிதாக கட்டப்பட்ட தொங்கு பாலம் ஜனக்கூட்டத்தின் காரணமாக இடிந்து விழுந்தது. நெல்சன் என்ற பெயரையுடைய ஒரு பிரசித்தி பெற்ற கோமாளி ஒரு சர்க்கஸ் கம்பெனியிலிருந்து வந்து தான் ஒரு மரப்பெட்டகத்தில் அமர்ந்து கொள்ளப் போவதாகவும் 4 வாத்துக்கள் தனது மரப்பெட்டகத்தை புதிதாக கட்டப்பட்டுள்ள தொங்கு பாலத்தின் வழியாக இழுத்துச் செல்லப்போவதாகவும் விளம்பரம் கொடுக்கவே அந்தக் காட்சியைக் காண ஜனக்கூட்டம் பாலத்தில் முண்டியடித்து திரளவே பாலம் இடிந்து விழுந்தது. இந்த சோக சம்பவம் அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களில் எல்லாம் பெரும் பரபரப்பை உண்டாக்கிற்று.
இந்த சம்பவத்தை பின்னணியமாக வைத்து நமது பிஷப் ஜாண் சார்லஸ் ரைல் அவர்கள் மனிதனின் அநித்தியமான வாழ்க்கையையும், தேவனைச் சந்திக்க நாம் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டியதன் அத்தியந்த அவசியத்தையும் மிகச் சிறப்பாகக் கோர்வைப்படுத்தி முதன் முதலாக ஒரு துண்டுப்பிரதியை தனது பெயர் மற்றும் இருப்பிடம் தெரிவிக்காமல் எழுதி அச்சிட்டு விநியோகித்தார். அது மக்களின் நடுவில் ஒரு எழுப்புதலை உருவாக்கிவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் சுமார் 200 கைப்பிரதிகள் விவிதமான தலைப்பில் மக்களுடைய உள்ளங்களில் பேசத்தக்கவிதத்தில் தனது புதிய ஹெல்மிங்காம் திருச்சபையில் இருந்தபோது எழுதி அச்சிட்டு வெளியிட்டார். "நீங்கள் மனந்திரும்பியிருக்கின்றீர்களா?" "உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றனவா?" "நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?" "நீங்கள் கோதுமையா அல்லது பதரா?" "விழித்திருங்கள்" "நம்முடைய நித்திய வீடு" "நான் வருமளவும் உங்களுக்குள்ளதைப் பற்றிக் கொள்ளுங்கள்" "லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்" "கர்த்தரைப்பற்றிக் கொள்ளுங்கள்" "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்" "உயிருள்ளவனா அல்லது செத்தவனா" என்பது போன்ற கைப்பிரதிகளை அவர் எழுதி வெளியிட்டார். அவருடைய கைப்பிரதிகள் கிறிஸ்தவ மக்களை எச்சரிப்பதாகவும், இரட்சண்யத்திற்கும், பரிசுத்த வாழ்விற்கும் அவர்களை சவால் விட்டு அழைப்பதாகவும், வேத வசனங்களின் வெளிச்சத்தில் தங்களை தற்பரிசோதனை செய்யத் தூண்டுவதாகவும் இருந்தன. அவருடைய கைப்பிரதிகள் மக்களிடையே ஒரு பெரிய எழுப்புதலை கொண்டு வந்தது என்று நாம் சொல்லலாம். 1876 ஆம் ஆண்டு வரையும் சுமார் ஒரு கோடி சுவிசேஷ பிரதிகள் அச்சிடப்பட்டிருந்தன. அந்தக் கைப்பிரதிகள் "பசும் பொன்" (PURE GOLD) என்று அழைக்கப்படுகின்றன. உலகத்தின் பல்வேறு மொழிகளிலும் அவைகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.
இந்த ஹெல்மிங்காம் திருச்சபையில் அவர் இருந்தபோதுதான் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்கள் பேரில் "வியாக்கியான விளக்கங்கள்" (Expository Thoughts) எழுதினார். லூக்கா, யோவான் ஆகிய இரண்டு சுவிசேஷங்கள் பேரில் அவர் வியாக்கியான விளக்கங்கள் எழுதுவதற்கு முன்பாக லத்தீன் மொழியிலும் ஆங்கில மொழியிலும் எழுதப்பட்ட மொத்தம் 80 வேதாகம விரிவிரை வியாக்கியானங்களை வாசித்திருந்தார். நான்கு சுவிசேஷங்கள் பேரில் அவர் எழுதிய வியாக்கியான விளக்கங்கள் மிகவும் அருமையானவைகள் ஆகும். அவைகள் மொத்தம் 7 பெரிய புத்தகங்களாகும். 1987 ஆம் ஆண்டு வரை அவைகள் 7 தடவைகள் திரும்பத் திரும்ப அச்சிடப்பட்டிருக்கின்றன. கடந்த 23 ஆண்டு காலமாக அவைகள் எத்தனை எத்தனையோ அச்சுப்பதிப்புகள் ஏறியிருக்கும் என்று நாம் நிச்சயமாக நம்பலாம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
ஜாண் சார்லஸ் ரைல் ஏராளமான பக்தி பரவசம் நிறைந்த கிறிஸ்தவ நூல்களை எழுதியிருக்கின்றார். அவர் எழுதிய "பரிசுத்தம்" "மறு பிறப்பு" "பூர்வப் பாதைகள்" "மேல் வீடு" "உண்மை கிறிஸ்தவன்" "நடைமுறைக் கிறிஸ்தவம்" "ஜெபிக்க அழைப்பு" போன்றவைகள் மாசிறந்தவைகளாக போற்றப்படுகின்றன.
ஹெல்மிங்காம் திருச்சபையிலிருந்து ஜாண் சார்லஸ் ரைல் அவர்கள் வின்செஷ்டர், ஈஸ்ட் ஆன்க்லியா, ஸ்டாட்புரூக் போன்ற திருச்சபைகளில் எல்லாம் பணிமாற்றங்களில் சென்று கர்த்தருக்காக அந்தந்த இடங்களில் பரிசுத்தமான ஊழியங்களைச் செய்து அநேக ஆத்துமாக்களை ஆதாயம் செய்தார். |
லிவர்பூல் பட்டணத்தின் முதல் பிஷப் ஆனார் |
1880 ஆம் ஆண்டு ஜாண் சார்லஸ் ரைல் லண்டனுக்கு அடுத்தபடியாக உள்ள லிவர்பூல் என்ற மாபெரும் கடற்கரை பட்டணத்தின் முதல் பிஷப்பாக விக்டோரியா மகாராணி அம்மையார் அவர்களால் நியமனம் செய்யப்பட்டு வந்து இறங்கினார். உருவத்தில் தேவ மனிதர் 6 அடி 3 1/2 அங்குலம் உயரமுள்ளவர். அவரது எடை 220 பவுண்டுகளாகும் (இராத்தல்கள்). கருங்கல்லைப் போன்ற தோற்றமாக இருந்தாலும் அவரது உள்ளம் குழந்தை உள்ளமாகும். சிறந்த நாவன்மை படைத்த பொது ஜன பேச்சாளி. மாபெரும் கிறிஸ்தவ பக்தி நூல் எழுத்தாளன். திருச்சபையில் நடைபெறும் வெளி வேஷமான சடாங்காச்சாரங்களுக்கும், கத்தோலிக்கத்துக்கும் பரம எதிரி. தேவனுடைய திருச்சபையில் இரட்சிப்பின் சுத்த சுவிசேஷத்தை பிரசங்கித்து ஆத்துமாக்களை இரட்சிப்புக்குள் வழிநடத்திய உத்தம தேவ ஊழியன்.
சூரிய அஸ்தமனமே இல்லாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை (Sun never sets in British Empire) அப்பொழுது அரசாண்டு கொண்டிருந்த விக்டோரியா மகாராணி அம்மையாரிடமிருந்து அந்நாட்களில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்த பென்ஞ்சமீன் டிஷ்ரேலி என்பவரை ஜாண் சார்லஸ் ரைல் உடனடியாக சென்று பார்க்கும்படியாக அவருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. அதின்படி அவர் தந்தியை எடுத்துக் கொண்டு பிரதமரிடம் சென்றார். "நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுத்ததின் ஒரே காரணம் நீங்கள் லிவர்பூல் பட்டணத்தின் பிஷப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதை கேட்டு அறியத்தான்" என்றார் பிரதமர் டிஷ்ரேலி. அந்தச் செய்தியைக் கேட்டு பெரிதும் ஆச்சரிய அதிர்ச்சியடைந்த சார்லஸ் ரைல் "எனக்கு வயது 64 ஆகிவிட்டது. பிஷப் பதவியில் இருக்கக் கூடிய அளவிற்கு என்னிடம் பண வசதி கிடையாது. நான் ஒரு ஏழை" என்றார் தேவ மனிதர். "அது எல்லாம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்களுடைய சூழ்நிலைகளை எல்லாம் நாங்கள் நன்கு புரிந்து அவைகளை அப்படியே எங்களுக்குள்ளாக ஏற்றுக் கொண்டுள்ளோம். இப்பொழுது உங்களுக்கு முன்னாலுள்ள ஒரே கேள்வி லிவர்பூல் பட்டணத்தின் பிஷப் பதவியை ஏற்றுக்கொள்ளுவீர்களா? இல்லையா? என்பதுதான்" என்றார் இங்கிலாந்து பிரதமருக்கு அருகில் நின்று கொண்டிருந்த லார்ட் சாண்டன் என்ற ஒரு பொறுப்பான மனிதர். "என் பிரபுவே, நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன்" என்று பதில் அளித்த ரைலின் பதிலைக் கேட்டதும் சாண்டன் பிரபு மட்டற்ற மகிழ்ச்சியால் சந்தோசத்தில் ஆகாயத்தில் துள்ளிக் குதித்தார். "நீங்கள் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். வீட்டிற்குச் சென்று ஆலோசனை கலக்க வேண்டும் என்று கூறி காரியத்தை தட்டிக் களித்து சென்று விடுவீர்கள் என்று நாங்கள் பெரிதும் அஞ்சினோம்" என்றார் சாண்டன் பிரபு. |
பாலும் தண்ணீருமான பிஷப் நானல்ல |
ஜாண் சார்லஸ் ரைல் தனது பிஷப் பதவியை ஏற்றுக்கொள்ளும் முன்னர் 1880 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 26 ஆம் தேதி கூடிய அதற்கான கமிட்டியில் கலந்து கொள்ள வேண்டியதாக இருந்தது. லிவர்பூல் பட்டணத்தின் பிஷப்பாக தான் தெரிவு செய்யப்பட்டிருப்பது தனக்கு நிறைவான சந்தோசத்தை தருவதாக இருக்கின்றது. லிவர்பூல் பட்டணத்திற்கு பிராட்டஸ்டண்ட் இரட்சிப்பின் சுவிசேஷக பிஷப்பாக நான் வருகின்றேன். தேவனுடைய சுத்த சுவிசேஷ சத்தியத்திற்கு உண்மையாக இருக்கக்கூடிய அனைத்து திருச்சபை மக்களுடனும் நான் கரம் கோத்து நிற்க ஆயத்தமாக இருக்கின்றேன். எனினும், எனது நெஞ்சார கிறிஸ்துவுக்குள் நான் எடுக்கும் தீர்மானங்களில் நான் உறுதியாக நிலைத்திருப்பேன். "பாலும் தண்ணீருமாக" மக்களின் கருத்துகளுக்கு அங்கும் இங்குமாக வளைந்து கொடுத்து ஒரு சந்தர்ப்பவாதியாக நான் ஒருக்காலும் கர்த்தருடைய பரிசுத்த ஊழியத்தை செய்யமாட்டேன்.
|
1880 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் நாள் ஜாண் சார்லஸ் ரைல் அவர்கள் லிவர்பூல் பட்டணத்தின் முதல் பிஷப்பாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டார். அந்த நாளில் லிவர்பூல் பட்டணத்தின் அனைத்து தேவாலயங்களின் மணிகளும் மகிழ்ச்சியால் முழங்கின. திருச்சபை மக்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து தங்கள் சந்தோசத்தை தெரிவித்துக் கொண்டனர்.
லிவர்பூல் பட்டணத்தின் பரிசுத்த பேதுரு தேவாலயம் சிறியதாக இருந்தமையால் யார்க் மின்ஸ்டர் என்ற இடத்திலுள்ள தேவாலயத்தில் ஆர்ச் பிஷப் தாம்சன் அவர்களால் ஜாண் ரைல் கர்த்தருடைய சேவைக்கு தத்தம் செய்யப்பட்டார். ஆர்ச் பிஷப் தாம்சன் அவர்களுக்கு உதவியாக துர்ஹாம், செஷ்டர், மான்செஷ்டர் என்ற இடங்களின் பிஷப்கள் உதவி செய்தனர். அந்த பட்டாபிஷேக ஆராதனையில் தேவ செய்தி கொடுத்தவர் ஜாண் சார்லஸ் ரைலின் பழைய நண்பர் கனோன் எட்வர்ட் கார்பட் ஆவார். "அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்" (அப் 11 : 24) என்ற தேவ வசனத்தின் பேரில் அவர் பிரசங்கித்தார். உயர்ந்த உருவமும், விசாலமான நெற்றியும், வெள்ளைத் தாடியுமுடையவருமாகிய ஜாண் சார்லஸ் ரைலின் தோற்றம் ஒரு பரிசுத்த குருவானவருக்கேற்றவிதமாக பக்திவினயமாக அமைந்திருந்தது. தங்கள் அன்பின் ஆண்டவர் இயேசுவின் சுத்த சத்தியத்திற்காக தங்களை அக்கினிக்கும், தலைகளை துண்டிக்கும் பட்டயங்களுக்கும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொடுத்த இரத்தசாட்சிகளான சீர்திருத்த பக்த சிரோன்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளை வாசித்து வாசித்து அவர்களின் வாழ்வின் அடிப்படையில் தன் கிறிஸ்தவ வாழ்க்கையையும் மிகுந்த மனத்தாழ்மையுடன் உருவாக்கிக் கொண்ட ஜாண் சார்லஸ் ரைல் விலையுயர்ந்த சரிகைகள், சித்திரப் பின்னலாடைகளால் உருவாக்கப்பட்ட பகட்டான பிஷப்புக்குரிய அலங்கார ஆடைகள், காப்பு நாடாக்கள் எதையும் உடுத்திக் கொள்ள மறுத்துவிட்டார்.

அவரைக் குறித்து பேசப்பட்ட புகழ் ஆரங்களை எல்லாம் அவர் ஏற்றுக்கொள்ள மனமற்றவராக "என்னைக் குறித்து நீங்கள் பேசிய புகழான வார்த்தைகள் யாவுக்காகவும் நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். எனினும் அவைகள் எதையும் நான் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. கடந்த 35 ஆண்டுகளாக நான் தேவ பெலத்தால் கிறிஸ்து இரட்சகரின் அரணைக் காத்து வந்திருக்கின்றேன். நான் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் வெகு ஜனத்தொகை கொண்ட மிகப்பெரிய பட்டணமான லிவர்பூலிலும் ராஜாவின் அரணை நான் அவர் கிருபையால் பாதுகாத்துக் கொள்ளுவேன் என்ற தாழ்மையான நம்பிக்கை எனக்குண்டு" என்றார்.
லிவர்பூல் பட்டணத்தில் அவர் பிஷப்பாக பதவி ஏற்ற பின்னர் அநேக தேவாலயங்களை அவர் அங்கு கட்டினார். அநேக குருவானவர்கள், உதவி குருவானவர்களை அவர் சபைகளில் நியமனம் செய்தார். வேதாகம ஸ்திரீகள் பலரை அவர் ஊழியத்தில் ஈடுபடுத்தினார். சுமார் ஒரு இலட்சம் ஓய்வு நாள் பள்ளிக் குழந்தைகள் வருகைப் பட்டியலில் காணப்பட்டனர். பிஷப் என்ற ஸ்தானத்தில் தனக்குக் கிடைத்த நல்ல வருமானத்தை குறைவாக சம்பளம் பெறும் குருவானவர்கள், உதவி குருவானவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கெல்லாம் தாராளமாகக் கொடுத்தார். அவர் மிகுந்த இரக்கமும், ஈகையும், அன்பும் உடைய தயாளன் ஆவார்.
ஆத்துமாக்கள் பேரில் மிகுந்த வாஞ்சையுடைய பிஷப் ரைல் அமெரிக்காவிலிருந்த புகழ்பெற்ற சுவிசேஷகர் டி.எல்.மூடி பிரசங்கியாரை தம்முடைய லிவர்பூல் பட்டணத்திற்கு வரவழைத்து பல இடங்களிலும் உயிர் மீட்சி கூட்டங்களை நடத்தினார். அந்தக் கூட்டங்களின் மூலமாக ஆண்டவரண்டை வழிநடத்தப்பட்டோர் பலராவார்கள். அவர் லிவர்பூல் பட்டணத்தின் பிஷப்பாக இருந்தபோது திருச்சபை மக்களின் எண்ணிக்கை 11 இலட்சங்களாகும். அவருடைய நாட்களில் ஆலய ஆராதனைகளில் ஒழுங்காக கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 165000 ஆகும். லிவர்பூல் பட்டணத்தில் பிஷப்பாக அவர் மிகுந்த உண்மையோடும், உத்தமத்தோடும், ஆத்தும பாரத்தோடும் 20 ஆண்டு காலங்கள் தேவ ஊழியம் செய்தார். கர்த்தருக்காக அவர் செய்த சிறப்பான ஊழியங்களைப் பாராட்டி லிவர்பூல் பட்டணத்தின் புகழ்பெற்ற பத்திரிக்கை "டெய்லி போஸ்ட்" வெகுவாக எழுதியது. கர்த்தருக்கே மகிமை. |
இறுதி விடை பெற்றுக் கொண்ட தேவ மனிதர் |
லிவர்பூல் பட்டணத்தில் ஜாண் சார்லஸ் ரைல் தனது 20 ஆண்டு கால பிஷப் பணியை கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையாக முடித்துக் கொண்டார். அதின் பின்னர் முதிர்ந்த விருத்தாப்பியனாகிய அந்த தேவ மனிதர் தனது சரீர பெலவீனங்கள் காரணமாக தனது நேரத்தின் பெரும் பகுதியை படுக்கையிலேதான் செலவிட்டார். எனினும் 1899 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினத்தன்று விண்ட்சர் என்ற இடத்திலுள்ள பரிசுத்த நத்தான்வேல் தேவாலயத்திற்குச் சென்று பரிசுத்த நற்கருணையைப் பெற்றுக் கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்தார். அதற்கப்பால் நடந்த விபரத்தை கனோன் ஹாப்சன் அவர்கள் இவ்விதமாகச் சொல்லுகின்றார்கள்:-
"இரவு 11 மணிக்கு நாங்கள் கிறிஸ்மஸ் ஆராதனையை ஆரம்பிக்க இருந்த நேரத்தில் தேவாலயத்தின் குருவானவர் அறையின் கதவு தட்டப்படுவதை நாங்கள் கவனித்தோம். கதவை நாங்கள் திறந்தபொழுது நாங்கள் எல்லாரும் ஆச்சரியத்தால் பிரமிப்படையும் வண்ணமாக பிஷப் சார்லஸ் ரைல் அவர்கள் விருத்தாப்பியத்தின் காரணமாக குனிந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் நின்று கொண்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். அவர்கள் எல்லாரும் வந்து குருவானவரின் அறையில் கிடந்த நீண்ட இருக்கையில் அமர்ந்தார்கள். கர்த்தருடைய பந்தி ஆலயத்தில் பரிமாறப்படும் சமயம் பிஷப் நற்கருணை பீடத்திற்கு முன்பாக வந்து முழங்காற்படியிட அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் அவரது இரு கைப்பக்கங்களிலும் அருகில் முழங்காலூன்றியிருந்தார்கள். அடுத்து நான் என்ன செய்வதென்று அறியாமல் எனது உள்ள உணர்ச்சியின் காரணமாக ஒரு கண நேரம் திகைத்து நின்றேன். எனது நிலையைப் புரிந்து கொண்ட பிஷப் சார்லஸ் ரைல் அவர்கள் என்னை உற்று நோக்கியவர்களாக மிகவும் பணிவான குரலில் "தொடர்ந்து செல்லுங்கள்" என்று கூறவே அவர்கள் யாவருக்கும் கர்த்தருடைய ராப்போஜனத்தை நான் பரிமாறினேன். ஆலயத்துக்கு வந்திருந்தோர் அனைவரும் வெளியே போன பின்னரும் பிஷப் குடும்பத்தினர் ஆலயத்திலேயே தரித்திருந்தனர். நான் அவர் அருகில் சென்றபோது அவர் தனது பெலவீனமான கரத்தை நீட்டி என்னைத் தன்னண்டை இழுத்து "இதுவே கடைசி வேளை, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் இனி மோட்சத்தில் ஒருவரையொருவர் சந்திக்கலாம்" என்று சொன்ன பொழுது அவரது கண்களிலிருந்து பெரிய கண்ணீர் துளிகள் சுருக்குகள் நிறைந்த அவரது கன்னங்கள் வழியாக உருண்டு வடிவதை நான் கண்டேன். அவர் தேவாலயத்திலிருந்து வெளியே வரும்போது 82 வயதுடைய விருத்தாப்பிய தேவாலயப் பணிவிடைக்காரரைக் கண்டு (Sexton) "நல்லது, எனது வயது முதிர்ந்த சிநேகிதனே, நீங்கள் இன்னும் மோட்சம் செல்லாமல் இங்குதான் இருந்து கொண்டிருக்கின்றீர்களா?" என்று கேட்டார். "இல்லை, என் பிரபுவே" என்ற பதில் பணிவிடைக்காரரிடமிருந்து வந்தது. "நாம் கர்த்தருக்காக செய்ய வேண்டிய பணிவிடைகள் இன்னும் இருக்கும்பட்சத்தில் அதை நாம் செய்து முடிக்கும் வரை அவர் நம்மை இங்கேயே கட்டாயம் விட்டு வைத்திருப்பார்" என்று கூறினார்.
கனோன் ஹாப்சன் அவர்கள் பிஷப் சார்லஸ் ரைலை இறுதியாக சந்தித்தது 1900 ஆம் ஆண்டு ஜனுவரி மாதமாகும். அந்த தருணத்தில் அவர் கடந்த 50 ஆண்டு காலமாக பயன்படுத்திய தனது ஆராய்ச்சி வேதாகமத்தை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு "நாம் இப்பொழுது ஒருவருக்கொருவர் ஜெபத்துடன் பிரிந்து செல்லுவோம்" என்று கூறி ஜெபித்துவிட்டுப் பிரிந்தனர். அதே மாதத்தில்தான் சார்லஸ் காரட் என்ற மெதடிஸ்ட் குருவானவரிடமும் பிஷப் ரைல் விடைபெற்றுக் கொண்டார். குருவானவர் சார்லஸ் காரட்டைப் பார்த்து "மெதடிஸ்ட் திருச்சபையைத் தோற்றுவித்த ஜாண் வெஸ்லியை நான் சிறுவனாக இருக்கும்போதே நான் நேசித்து கனப்படுத்தியிருக்கின்றேன். எனக்கு இப்பொழுது 83 வயதாகிவிட்டது. இந்த வயதிலும் அவர் மேலுள்ள எனது ஆதி அன்பு சற்றும் மாறாமல் அப்படியே நிலைத்திருக்கின்றது" என்று சொன்னார்.
1900 ஆம் வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் தேதி பிஷப் ஜாண் சார்லஸ் ரைல் தனது லிவர்பூல் அத்தியட்சாதீன திருச்சபையினரிடம் இறுதி விடை பெற்றுக் கொண்டார். அப்பொழுது அவர் கொடுத்த தேவ செய்தி "பக்திக்கும் அன்புக்கும் பாத்திரமான என் அருமையான சகோதரரே, புறஜாதிகளுக்கு மாபெரும் அப்போஸ்தலராக இருந்த அந்த பரிசுத்த பக்தனின் (பரிசுத்த பவுலின்) வாழ்வின் கடைசி வார்த்தைகளே ஏறத்தாழ இன்றைய தினம் எனது மனதின் முன்பாக நின்று கொண்டு இருக்கின்றது. "எனது ஓட்டத்தை முடித்தேன், நான் என் தேகத்தைவிட்டுப் பிரியும் காலம் வந்தது" சற்றும் எதிர்பாராத விதத்தில் உங்கள் பிஷப்பாக கடந்த 20 ஆண்டு காலங்களாக நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்தேன். எனது உடல் நலக் குறைவு மற்றும் 83 வயதான எனது முதிர்ந்த விருத்தாப்பிய நிலை போன்றவை நான் தொடர்ந்து உங்களுக்கு நன்மையுண்டாக உழைக்க முடியும் என்பதை மறுத்து நிற்பதாக இருக்கின்றது.
நான் எனது பிஷப் பணியை அநேக வேதனையின் எண்ணங்களோடு ராஜநாமா செய்கின்றேன். காரணம், நான் எனது கடந்த கால ஊழிய ஆண்டுகளை திரும்பிப் பார்க்கும்போது நான் பிஷப்பாக லிவர்பூல் பட்டணத்தில் முதல் முதல் பொறுப்பேற்கும்போது நான் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்திருந்த அநேக காரியங்களை செய்து முடிக்கவில்லை என்பதை வேதனையோடு உணருகின்றேன். நான் நிறைவேற்றிய காரியங்களிலும் குறைபாடுகள் அதிக அளவில் இருந்தன என்பதை நினைத்துப் பார்க்கின்றேன். நான் உங்கள் பிஷப்பாக பொறுப்பேற்கும்போது நான் ஒரு ஆட்டசாட்டான இளைஞனாக இல்லாமல் 64 வயதிய கிழவனாகவே பொறுப்பேற்றேன் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். நான் முதன் முறையாக இங்கு வந்தபோது அநேக கஷ்டங்களின் நடுவில் எனது கடமைகளை நிறைவேற்றினேன். தேவனுக்கு முன்பாக உத்தமமாக எனது பணிகளை செய்து முடித்தேன். அதற்காக நான் எனது இரக்கம் நிறைந்த ஆண்டவருக்கு நன்றியுடையவனாக இருக்கின்றேன்.
நான் துரிதமாக நமது லிவர்பூல் பட்டணத்தையும், உங்களையும் விட்டுப் பிரிந்து செல்லப்போகும் வேளை வருவதை அறிந்து மிகுந்த துக்கம் அடைகின்றேன். நான் உங்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் உங்களை விட்டுப் பிரியும் முன்னால் உங்களுக்கு சில பிரிவு வார்த்தைகளைக் கூற விரும்புகின்றேன். அவைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். காரணம், நான் உங்கள் குருவானவராக 58 ஆண்டு காலங்கள் அனுபவத்தில் அவைகளை உங்களுடன் பேசுகின்றேன். யோபு பக்தன் சொன்னது போல "முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும்" (யோபு 32 : 7)
அதினால், நான் எனக்குப் பின்னால் விட்டுச் செல்லப்போகின்ற எனது எல்லா குருவானவர்களையும் பார்த்துச் சொல்லுவது என்னவென்றால் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதை ஒருக்காலும் அசட்டைபண்ணாதிருங்கள். நீங்கள் பிரசங்கிக்கும் ஜனத்தொகை குறைவானதாகவோ அல்லது அதிகமானதாகவோ இருக்கலாம். ஆனால் அதைக் கேட்கும் மக்கள் மிகுந்த விழிப்போடு உங்களை கவனிக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மந்தமான, சாதுரியமான, கடமைக்கான பிரசங்கங்களில் அவர்கள் ஒருக்காலும் திருப்தியடைய மாட்டார்கள். உங்கள் பிரசங்கங்கள் ஜீவனுள்ளதாகவும், ஒளி நிறைந்ததாகவும், அக்கினியும் அன்பும் நிறைந்ததாகவும் இருக்கட்டும். அந்தப் பிரசங்கங்களை அவர்கள் வேண்டியமட்டும் தங்களுடையதாக்கிக் கொள்ளட்டும். உங்கள் பிரசங்கங்கள் பிரசங்க பீடத்திலும், சபையினர் வீடுகளிலும் தொனிக்கட்டும். ஜீவனுள்ள, கிறிஸ்துவை மாத்திரம் உயர்த்துகின்ற ஒரு பரிசுத்த குருவானவர் தனது தேவாலயத்திற்கு வருகின்ற ஒரு கூட்டம் மக்களை தன்னகத்தே எப்பொழுதும் வைத்திருப்பார்.
கடைசியாக, என்றதும் கனவீனமானது என்று எண்ணிவிட வேண்டாம். உங்கள் எல்லா சக குருவானவர்களோடும் சமாதானமாக இருங்கள். உங்களுக்குள் பிரிவினை வேண்டாம். உங்களுக்குள் சமாதானமாக இருங்கள். அனைத்து சபை மக்களுக்கும் எனது அன்பையும், ஆசீயையும் ஜெபத்தையும் கூறிக்கொள்ளுகின்றேன். இந்த லிவர்பூல் அத்தியட்சாதீனம் உலகப்பிரகாரமானதும், ஆவிக்குரியதுமான அனைத்து ஆசீர்வாதங்களாலும் நிறைந்து பொங்குவதாக. மிஷனரிகள், இரத்தச்சாட்சிகள் தோற்றுவித்த இந்த பூர்வீக திருச்சபையை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தை மார்போடணைத்து அரவணைத்துப் பற்றிக் கொள்ளுங்கள். ஏழைகளையும், எளியவர்களையும் உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இன்னும் சில காலத்திற்குள்ளாக நாம் அனைவரும் திரும்பவும் ஒன்றாக சந்திப்போம். அநேகர் ராஜாவின் வலது பக்கத்திலும், சிலர் அவரது இடது பக்கத்திலும் நிற்போம். அந்த நாள் வரும் வரை நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்கு சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புவிக்கின்றேன். |
பரிசுத்தரின் ஒளியில் பிரவேசித்த தேவ பக்தன் |
பரிசுத்தவான் ஜாண் சார்லஸ் ரைல் தனது ஓய்வு கால ஆண்டுகளை தனது மகள் ஜெசி இசபெல்லாவுடன் செலவிடுவதற்காக லோவ்ஸ்டாப்ட் என்ற இடத்தை தெரிவு செய்தார். அவருடைய ஊழிய கால நாட்களில் கடற்கரை பட்டணமான ஸஃப்போக் என்ற இடத்தில் அவர் தங்கியிருந்தபடியால் கடற்கரை அவருக்கு நன்கு பிடித்திருந்தது. தான் தங்கியிருக்கப்போகும் புது வீட்டிற்கு "ஹெல்மிங்ஹாம் ஹவுஸ்" என்ற பெயரையும் அவர் சூட்டினார். ஜாண் ரைலும், அவருடைய மகள் ஜெசி இசபெல்லாவும் 1900 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி லோவ்ஸ்டாப்ட் என்ற இடத்திற்கு வந்து சேருவதாக இருந்தது. ஆனால், ஜாண் ரைலின் சுகயீனம் அவர் வந்து சேரும் தேதியை மார்ச் மாத மத்திப நாட்களுக்கு கொண்டு வந்து சேர்த்தது. அவருடைய வீடு வடக்கு சமுத்திரத்தை நோக்கியதாகவும், அழகானதாகவும் இருந்தது. ஆனால் பரிசுத்தவானுக்கு அந்த அழகை அனுபவிக்க மனமில்லாமல் இருந்தது. அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்ததிலிருந்து அவர் அதிகமான உறக்க நிலையிலேயே இருந்தார். அவரால் அதிகமாக பேச முடியவில்லை. அவருடைய இறுதி வேளை மிகவும் துரிதமாகவே வந்து சேர்ந்தது. அது ஜூன் மாதம் 9 ஆம் நாள் ஒரு சனிக் கிழமை மாலை நேரம். அவரது சுகயீனத்தின் காரணமாக ஒரு மருத்துவர் அழைக்கப்பட்டார். அவர் வந்து தேவ மனிதரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு சரீரத்தின் ஒரு பகுதி தன்னறிவு இழந்த நிலையில் இருப்பதைக் கண்டறிந்தார். ஜாண் ரைலின் மகன்களுக்கு உடனடியாக வந்து சேரும்படியாக தந்திகள் அனுப்பப்பட்டன. அவர்களில் அதிகமான தொலைவில் இல்லாமல் சமீபமாக கேம்பிரிட்ஜ் பட்டணத்தில் இருந்த ஹெர்பர்ட் என்பவரே தக்க சமயத்திற்கு வந்து சேர்ந்தார். 1900 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளான ஞாயிறு பிற்பகல் 2:15 க்கு பரிசுத்த தேவ மனிதர் ஜாண் ரைல் தான் அதிகமாக நேசித்த தனது ஆண்டவருடன் என்றுமாக பரலோகில் வாழ்வதற்காக அமைதியாக, மிகுந்த தேவ சமாதானத்துடன் கடந்து சென்றுவிட்டார்.
அடுத்து வந்த புதன் கிழமை காலை லோவ்ஸ்டாப்ட் ரயில்வே ஸ்டேஷனில் தங்கள் பரிசுத்த பிஷப் அவர்களுக்கு தங்கள் இறுதி அன்பையும், வழி அனுப்புதலையும் தெரிவிக்க ஒரு சிறு கூட்டம் மக்கள் கூடினார்கள். அந்த ரயில் நிலையத்திலிருந்து காலை 7:57 மணிக்கு லிவர்பூல் பட்டணத்துக்குப் புறப்படும் ரயில் வண்டித் தொடருடன் ஒரு விசேஷித்த மரணப் பெட்டி சேர்க்கப்பட்டது. ஓக் மரத்தால் அழகாக செய்யப்பட்ட பிரேதப்பெட்டியில் பரிசுத்தவானுடைய சடலம் வைக்கப்பட்டு அந்தப் பெட்டியில் ஏற்றப்பட்டது. அந்த பிரதேப் பெட்டியுடன் தேவ மனிதர் அநேக பிரசங்களைச் செய்ய பயன்படுத்திய அவரது பரிசுத்த வேதாகமும் வைக்கப்பட்டிருந்தது. ரயில் லிவர்பூல் பட்டணம் வந்து சேர்ந்ததும் அவரது பிரேதப் பெட்டி ஜைல்ட்வால் என்ற இடத்திலுள்ள சகல பரிசுத்தவான்களின் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த வேளை அங்கு எந்த ஒரு கூட்டமும் இல்லாதிருந்தது. பெட்டியை ஏற்றுக் கொள்ள பிஷப் ராய்ஸ்டன் அவர்களும், ஒரு குருவானவரும் வந்திருந்தனர். யானைத் தந்தம் போன்ற வெண்மை நிறத்தில் பளிச்சிட்டு நின்ற தேவாலயம் மலையின் சரிவில் தென் திசையில் இருந்த மர்சி மற்றும் செஷையர் பட்டணங்களை நோக்கியிருப்பதாக இருந்தது. அந்த இடம் காலம் சென்ற பரிசுத்தவான் ஜாண் சார்லஸ் ரைலுக்கு மிகவும் தெரிந்ததான ஒரு இடமாகும். காரணம், அநேகமாக ஒவ்வொரு வாரமும் அந்தக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் பண்ணப்பட்டிருந்த அவருடைய மனைவியின் கல்லறையை அவர் அங்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றிருந்தார். அந்த அம்மையார் மரித்த நாளிலிருந்தே அவர் அப்படி அங்கு வந்து பார்த்துச் செல்லுவது அவருக்கு வழக்கமாக இருந்தது.
அடக்க நாளின் காலை வேளை சூரிய ஒளியின்றி காணப்பட்டது. அத்துடன் லேசான மழைத் தூறலும் இருந்தது. ஆனால், மத்தியான வேளை வரவர காலநிலை மிகவும் பிரகாசமடையத் தொடங்கியதும் மக்கள் கூட்டம் தங்கள் ஆயிரக்கணக்கில் லிவர்பூல் பட்டணத்தின் மத்திய பகுதிகளிலிருந்தெல்லாம் சிறப்பு ரயில்களில் பயணித்து வந்து கல்லறைத் தோட்டத்தில் கூடினார்கள். கல்லறைத் தோட்டம் அநேக ஏழை மக்களால் நிரம்பியிருந்தது. அவர்கள் வண்டிகளிலும், வேன்களிலும், பேருந்துகளிலும் வந்திருந்தனர். தங்களுடைய இருதயத்தை தனது அன்பினால் கவர்ந்து கொண்ட விருத்தாப்பிய பரிசுத்த மனிதருக்கு தங்கள் இறுதி மரியாதையையும், அன்பையும் தெரிவிக்க அவர்கள் வந்திருந்தனர்.
அடக்க ஆராதனை மிகவும் எளிமையாக இருந்தது. குருவானவர் டெயிலர் கர்த்தருடைய தாசனாகிய மோசேயின் 90 ஆம் சங்கீதத்தை வாசித்தார். அதைத் தொடர்ந்து ஜாண் ரைலின் உள்ளம் கவர்ந்த பாடல் "பிளவுண்ட மலையே, புகலிடம் தாருமே" என்ற பாடல் பாடப்பட்டது. அதின் பின்னர் இரண்டாவது பாடமாக 1 கொரிந்தியர் 15 ஆம் அதிகாரத்தை குருவானவர் மாட்டன் வாசித்தார். கல்லறைக்கு அருகாமையில் வைத்தே அடக்க ஆராதனையை நடத்தி முடித்துவிட வேண்டுமென்பதே ஆரம்ப யோசனையாக இருந்தது. ஆனால் மழை திடீரென வந்துவிடவே அடக்க ஆராதனை தேவாலயத்திலும், சரீரத்தை மண்ணுக்கு மண்ணாக ஒப்புக் கொடுக்கும் பகுதி பிஷப் சவ்வாசி அவர்களாலும் இறுதி ஆசீர்வாதம் கூறுதல் பிஷப் ராய்ஸ்டன் அவர்களாலும் கல்லறைக்கு அருகாமையில் நடந்தது. பரிசுத்தவான் ஜாண் ரைலின் சரீரம் அவருடைய மனைவிக்கு அருகாமையிலேயே வைக்கப்பட்டது. அவர் நேசித்த, அவர் பயன்படுத்திய அவரது வேதாகமம் அவருடைய கரங்களில் வைக்கப்பட்டவண்ணமே பிரேதப் பெட்டியினுள் வைத்து கல்லறையில் வைக்கப்பட்டது.
அவருடைய கல்லறையில் 2 வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முதலாம் தேவனுடைய வசனம் "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" (எபே 2 : 8) என்பதாகும். இந்த வசனத்தின் மூலமாகத்தான் அவர் தனது இரட்சிப்பைக் கண்டடைந்து கர்த்தருக்குள் புது சிருஷ்டியாகி மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்துக்குள் கடந்து வந்து தன் அன்பின் ஆண்டவருக்காக எரிந்து பிரகாசித்தார். இரண்டாவது தேவ வசனம் தனது கிறிஸ்தவ விசுவாச ஓட்டத்தை வெகு சிறப்பாக ஓடி முடித்து பந்தயப் பொருளை பெற்றுக் கொண்டதாகும். "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்" (2 தீமோ 4 : 7) என்பதே அது. பரிசுத்தவானின் ஞாபகார்த்த பிரசங்கத்தை கனோன் ஹாப்சன் நடத்தினார். அவர் தனது தேவச் செய்தியில் "பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜீவனுள்ள தேவனுக்காகவும், அவருடைய சத்தியத்துக்காகவும், அவரது நீதிக்காவும் இத்தனை அதிகமாக ஆங்கிலேய சமுதாயத்தின் மத்தியிலும் உலகம் முழுமைக்கும் மகத்தான தேவ ஊழியத்தை காலஞ் சென்ற பரிசுத்த பிஷப் ஜாண் சார்லஸ் ரைல் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே செய்து முடித்துள்ளனர்" என்று சொன்னார். ஜாண் ரைலுக்கு பதிலாகத் தெரிவு செய்யப்பட்ட புதிய பிஷப் சவ்வாசி தனது இரத்தினச் சுருக்கமான செய்தியில் "தன் அருமை இரட்சகருக்காக உலகில் இத்தனை மாபெரும் தேவ ஊழியத்தை நிறைவேற்றிச் செல்லுகின்ற தேவ மனிதர் ஜாண் சார்லஸ் ரைல் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், இந்த உலகத்தில் வாழாதவர் போலவே கிறிஸ்துவுக்குள் மறைவாக வாழ்ந்து கடந்து சென்றுவிட்டார்" என்று கூறினார்.


ஒரு படத்தில் தனது கரத்தில் தனது வேதாகமத்தோடு மரித்த நிலையில் படுத்திருக்கும் பரிசுத்த பக்தன் ஜாண் சார்லஸ் ரைலின் படத்தையும், அடுத்த படத்தில், மரித்த அவரது சடலத்தண்டை ஒரு தேவ தூதன் நின்று தனது பரிசுத்த ஓட்டத்தை வெற்றியோடு முடித்து பரிசுத்தவான்களின் சங்கத்தோடு பரலோகில் சேர்ந்து கொண்ட பக்தனை ஆச்சரியத்தோடு பார்த்த நிலையில் அவருடைய மாட்சியான பரிசுத்த வாழ்க்கைக்காக தேவனுக்கு நன்றி துதி ஏறெடுக்கும் பாவனையில் காணப்படும் பரவச காட்சியையும் நாம் இந்தச் செய்தியில் காண்கின்றோம். இப்படிப்பட்ட பரிசுத்த பக்தர்களைப் போல நாம் வாழ்ந்து ஆண்டவருக்காக உண்மையும், உத்தமமுமாக ஊழியம் செய்து நமது ஓட்டத்தை மிகுந்த மனத்தாழ்மையோடு முடிப்பது எத்தனை பாக்கியமான காரியமாகும். |
|
"ஓ, அப்படியானால் நரகம்
எப்படிப்பட்டதாக இருக்கும்!"
ஸ்காட்லாந்து தேசத்திய ஒரு மெய்யான பரிசுத்த தேவ ஊழியன் ஒரு சமயம் பீங்கான் தொழிற்கூடம் (Glass Factory) ஒன்றைக் கடந்து சென்று கொண்டிருந்தார். தொழிற்கூடத்தின் கதவு திறந்திருப்பதைக் கண்ணுற்ற அவர் உள்ளே சென்று அதனைப் பார்வையிட்டார். சீக்கிரமாகவே, அதின் கொதித்துக் குமுறிக்கொண்டிருக்கும் பயங்கர உலைக்களத்தை அவர் கண்டார். அதைக் கண்ட அவர் தன்னை மறந்தவராக ஆச்சரியத்தில் "ஓ, அப்படியானால் நரகம் எப்படிப்பட்டதாயிருக்கும்" என்று சத்தமிட்டு கூச்சலிடத் தொடங்கினார்.
தான் இப்படிச் சத்தமிடுவதைத் தனக்கருகாமையில் அந்த அடுப்பைக் கவனிப்போன் (Stoker) நின்று கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதை அந்த தேவ ஊழியர் கவனிக்கவே இல்லை. அநேக வாரங்கள் கடந்து சென்றன. ஒரு நாள் இரவில் மேற்கண்ட மனிதன் தேவ ஊழியரை அவருடைய வீட்டிற்கு வந்து சந்தித்து பீங்கான் தொழிற்சாலையில் நடந்த சம்பவத்தை அவருக்கு நினைப்பூட்டி அந்த உலைக்கள அடுப்பைத் தான் திறக்கும்போதெல்லாம் "ஓ, அப்படியானால் நரகம் எப்படிப்பட்டதாக இருக்கும்" என்று அவர் கூறின வார்த்தைகளே தன் செவிகளில் பயங்கரமாகத் தொனித்துக் கொண்டிருப்பதாகவும், தான் நரகத்திற்குச் சென்று அதின் அகோர பயங்கர அக்கினியை முடிவில்லாத யுகாயுகமாக தன்னளவில் அனுபவிக்கக் கூடாது என்றும் கண்ணீரோடு கூறி அந்த இராக்காலத்திலேயே அன்பின் இயேசுவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு மனந்திரும்பினான். |
|
|