பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்

ஜேம்ஸ் ஜில்மோர்
மங்கோலியர்களின் அப்போஸ்தலன்
(1843-1891)


n#«Þ ÍšnkhÇ‹ gÇR¤j ó®åf«

ஜேம்ஸ் ஜில்மோர் 1843 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி ஸ்காட்லாந்து தேசத்திலுள்ள காத்கின் என்ற இடத்தில் ஜேம்ஸ் மற்றும் எலிசபெத் பெற்றிகுரு ஜில்மோர் தம்பதியினருக்குப் பிறந்த 6 ஆண் மக்களில் மூன்றாவது மகனாகப் பிறந்தார். ஸ்காட்லாந்து தேசத்திலுள்ள கிளாஸ்கோ பட்டணத்திலிருந்து 5 மைல்கள் தொலைவிலுள்ள கார்முனாக் திருச்சபையின் எல்லைக்குள்ளிருந்த 6 பண்ணை வளாகங்களுக்கு சொந்தக்காரரான மேற்கண்ட தம்பதியினரின் காத்கின் பண்ணை வளாகத்தில் ஜேம்ஸ் ஜில்மோர் பிறந்தார். அவருடைய பூர்வீகத்தார் பலரும் இரட்சிப்பைக் கண்டடைந்த இயேசு இரட்சகரின் மெய்யடியார் ஆவார்கள். ஜேம்ஸ் ஜில்மோரின் தாத்தா ஜில்மோரும் அவருடைய மனைவியும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கர்த்தருடைய ஆராதனையில் பங்குபெறுவதற்காக தங்கள் இடத்திலிருந்து 5 மைல்கள் தொலைவிலுள்ள கிளாஸ்கோ பட்டணத்திலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு நடந்தே செல்லுவார்கள். பனிப்பொழிவுள்ள குளிர் கால நாட்களில் கைகளினால் செய்யப் பட்ட அரிக்கன் லாந்தரை ஏந்தியவர்களாக கணவனும், மனைவியும் இருளான இரவுகளில் தேவாலயத்திலிருந்து வளைவான தங்கள் பாதைகளில் கஷ்டத்தோடு வீடு திரும்பும் காட்சி அவர்கள் வாழ்ந்த பகுதியிலுள்ள மக்களின் உள்ளங்களில் ஒரு ஆழமான பக்தி உணர்வை தோற்றுவித்தது. ஜேம்ஸ் ஜில்மோரின் பெற்றோர் தங்கள் குடும்பத்திலும் அதே பக்தி வாழ்வை மிகவும் பரிசுத்த வைராக்கியத்தோடு கடைப்பிடித்து வந்தார்கள். அவருடைய தாயார் தனது 6 புதல்வர்களையும் மாலை நேரங்களில் தன்னண்டை அழைத்து அமரச் செய்து பரிசுத்த மிஷனரிகளின் வாழ்க்கை வலாறுகளையும், இதர பக்தி பரவசமான வரலாறுகளையும், தேவ பக்தர்களின் வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளையும் தனது பிள்ளைகளுக்கு வாசித்து காண்பித்து அவைகளில் தனது கருத்துக்களையும் பரவசம் பொங்கச் சேர்த்துச் சொல்லி தம் பிள்ளைகளை பக்தி வாழ்வில் திளைக்கச் செய்வார்கள்.

குடும்ப ஆராதனை நேரம் மிகவும் பக்திவினயமாக கடைபிடிக்கப்பட்டது. தங்களுடைய காரியங்களுக்காக ஆலோசனை கேட்டு வரும் அண்டை அயலகத்தார் அந்த ஜெப மணி நேரங்களில் அவர்களை குறுக்கிட்டுத் தொந்தரவு செய்யாமல் அந்த ஆராதனை நேரம் முடியும் வரை மிகுந்த பொறுமையோடு வெளியில் காத்திருப்பார்கள். ஜேம்ஸ் ஜில்மோரின் தந்தை செல்வச் செழுமையான நிலையில் இருந்தமையால் மிஷனரிகளில் பலர் கடந்து சென்ற வறுமை, தரித்திரம் போன்ற கசப்பான அனுபவம் அவருக்கு இல்லாதிருந்தது. தந்தையின் செல்வம் காரணமாக ஜேம்ஸ்க்கு நல்ல சிறப்பான கல்வி வசதிகள் கிடைத்தன. அதின் காரணமாக முதலில் காம்ஸ்லாங் என்ற இடத்திலும் பின்னர் கிளாஸ்கோ பட்டணத்திலும் அவர் கல்வி கற்கும் கலாசாலைகள் கிடைத்தன. கல்வி கற்க வேண்டும் என்ற கல்வியின் மேல் உள்ள ஆசை ஆவலின் காரணமாக அல்ல, கல்வி கற்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் மேற்கொண்ட கடின உழைப்பின் நிமித்தமாக அவர் அநேக பரிசுகளைப் பெற்றார். அவர் படித்துக் கொண்டிருந்த மாணவப் பருவத்தில் வேடிக்கையும், விளையாட்டும் குறிப்பாக மற்றவர்களை கிண்டல் செய்யும் வாலிபனாக இருந்தார். இருப்பினும் தேவனுடைய படைப்பின் மாட்சியில் அவர் மயக்கமுற்றிருந்தார். அவர் இயற்கையை நேசித்தார். அதின் காரணமாக தன்னந்தனியனாக மலைகளிலும், கானகங்களிலும், பள்ளத்தாக்குகளிலும் சுற்றியலைந்து அவைகளின் அழகில் மகிழ்ந்தார். அந்த ஆரம்ப கால அனுபவம் பின் வந்த ஆண்டுகளில் அவருடைய மங்கோலிய மிஷனரிப் பணியில் அவருக்கு அளவுக்கடந்த நன்மை அளிப்பதாக இருந்தது.

 

சர்வகலாசாலை வாழ்க்கை

ஜேம்ஸ் ஜில்மோர் ஆரம்பத்தில் தனது சர்வகலாசாலை படிப்பை வீட்டிலிருந்தே மேற்கொண்டார். அதின் பின்னர் தனது படிப்பு நேரத்திற்கு ஏற்றபடி அதிகாலையில் ரயில் வசதி இல்லாத காரணத்தால் தினமும் 5 மைல்கள் தூரம் கிளாஸ்கோ பட்டணத்திற்கு அவர் நடந்து சென்றே படித்தார். நாட்கள் செல்லச் செல்ல அவருடைய தந்தை தனக்கு கிளாஸ்கோ பட்டணத்திலிருந்த தனது சிறிய வீடு ஒன்றை நன்கு செப்பனிட்டு தனது மகன் பட்டணத்தில் தங்கிக் கொண்டே அங்கிருந்து கலாசாலை செல்ல ஒழுங்கு செய்து கொடுத்தார். அந்த வீட்டில் ஜேம்ஸ் ஜில்மோர் தங்கியிருந்து படித்த நாட்களில் தனது காலை ஆகாரத்தையும் தன்னுடைய மற்ற ஆகாரங்களையும் தானே சமையல் செய்து சாப்பிட்டார். அப்படிச் செய்து சாப்பிடுவதே தனக்கு அருமையானது என்பதை அவர் கண்டு கொண்டார். கிரேக்கு, லத்தீன் மொழிகளில் அவர் சிறப்புற்று விளங்கினார். அதற்கான ஒரே இரகசியம் என்னவெனில் விரைந்து கடந்து மறையும் காலத்திற்கு அவர் "சொல்லி முடியாத விலைமதிப்பு" கொடுத்து வைத்திருந்ததுதான். அவர் தனது மனதார ஒரு மணி நேரத்தைக் கூட வீண் விரயம் செய்ததில்லை. தான் பண வசதி படைத்த செல்வந்தனின் குமாரனாக இருந்த போதினும் தனது பணத்தை மிகவும் சிக்கனமாகக் கையாண்டார். வெறியூட்டும் மதுபானங்களைக் குறித்து அவர் திகில் கொண்டிருந்தார். அதின் அருகில் கூட அவர் செல்ல மாட்டார். ஒரு தடவை அவர் தமது வகுப்புத் தோழன் ஒருவனின் அறைக்குச் சென்றிருந்தார். அவன் தனது அறையில் குடிப்பதற்காக பீர் என்ற மதுபானத்தை வாங்கி வைத்திருந்தான். அதைக் கண்ணுற்ற நமது வாலிப ஜேம்ஸ் ஜில்மோர் அந்த மதுப்பாட்டலை அப்படியே எடுத்து அறையின் ஜன்னலைத் திறந்து "தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட அவருடைய சிருஷ்டிக்கு அல்ல, அவர் படைத்த பூமிக்கே அது போய்ச் சேரட்டும்" என்று சொல்லிக் கொண்டே அந்த பீர் பாட்டல் முழுவதையும் மேலிருந்து கீழே ஊற்றிவிட்டார். ஜேம்ஸ் ஜில்மோர் தனது பி.ஏ., பட்டத்தை 1867 ஆம் ஆண்டிலும், எம்.ஏ., பட்டத்தை அடுத்து வந்த ஆண்டிலும் பெற்றுக் கொண்டார். அவர் தனது சர்வகலாசாலை படிப்பின் போதே இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்று அதற்குரிய திரண்ட ஆவிக்குரிய கனி வாழ்க்கையை தனது வாழ்விலும் காண்பிக்க ஆரம்பித்தார்.

ஜேம்ஸ் ஜில்மோர் விரும்பிய வண்ணமாக அவர் மிஷனரி பணிக்காக தெரிவு செய்யப்பட்டார். "ஒரு ஆங்கிலேயனின் ஆத்துமா எத்தனை அருமையானதோ அதே அளவிற்கு ஒரு இந்தியனின் ஆத்துமாவும் அருமையானது" "ஒரு ஐரோப்பியனுக்கு சுவிசேஷம் எத்தனை அவசியமானதோ அந்த அளவிற்கு ஒரு சீனாகார மனிதனுக்கும் அது அவசியமானது" என்று அவர் கூறுவார். "நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" (மாற் 16 : 15) என்ற ஆண்டவருடைய கட்டளையை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டார். "சுவிசேஷத்தை பிரசிங்கிக்கும்படியான கட்டளையை ஆண்டவர் நமக்குக் கொடுத்ததுடன் நின்றுவிடாமல் உலகம் எங்கும் போகும்படியாகவும் அவர் நமக்குக் கூறிவிட்டார். அவர் ஒன்றாக இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்" என்று அவர் கூறினார். "நான் வீட்டிலேயே தங்கியிருக்க தேவன் விரும்பவில்லை. நான் அவருக்கு கீழ்ப்படிபவனாக இருந்தால் நான் வீட்டைவிட்டுப் புறப்பட்டாக வேண்டும்" என்று அவர் சொன்னார். அதின் காரணமாக அவர் தன்னை லண்டன் மிஷனரி ஸ்தாபனத்துக்கு கையளித்தார். அந்த ஸ்தாபனம் அவரை லண்டன் நகரத்துக்கு 14 மைல்கள் தொலைவிலுள்ள செஷ்ஹண்ட் என்ற இடத்திலுள்ள வேதாகம கல்லூரிக்கு அனுப்பி வைத்தது. அங்கிருந்த நாட்களில் ஜேம்ஸ் கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை மிகுந்த ஆர்வத்தோடும், தாகத்தோடும் வாசித்து தியானித்தார். அப்படி அவர் அதை வாசித்ததின் நிமித்தமாக அவருடைய ஆத்துமா அழிந்து போகும் புறஜாதிகளின் ஆத்துமாக்களைக் குறித்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அவருடைய ஆர்வம் தாய் நாட்டிலும் பிரகாசமாக தெரிய ஆரம்பித்தது. அவர் தன்னந்தனியனாகப் போய் திறந்த வெளி பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். ரஸ்தாக்களில் செல்லும் தொழிலாளர்களுக்கும், வயல்களில் வேலை செய்வோருக்கும் அவர் கிறிஸ்துவைப் பிரசங்கித்தார்.

 

மங்கோலிய மிஷனரியாக நியமனம் பெற்றது

1867 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஜேம்ஸ் ஜில்மோர், லண்டன் மிஷனரி ஸ்தாபனத்தில் தன்னை சேர்த்துக் கொள்ளும்படியாக விண்ணப்பம் செய்தார். அந்த ஸ்தாபனம் அவரை அங்கீகரித்ததும் லண்டனிலிருந்து 14 மைல்கள் தொலைவிலுள்ள செஷ்ஹண்ட் என்ற இடத்திலுள்ள கல்லூரியில் அவருக்கு மிஷனரிக்கான பயிற்சி அளித்தது. தனிமையில் சுயாதீனமாக நல்ல வசதிகள் வாய்ப்புகளோடு வாழ்ந்த ஜேம்ஸ் ஜில்மோருக்கு யாவரும் ஒன்றாக ஒரே அறையில் படுத்து நித்திரை செய்து வாழ்கின்ற வாழ்க்கை ஆரம்பத்தில் மிகவும் கடினமானதாகவே காணப்பட்டது. எனினும், அந்த செஷ்ஹண்ட் கல்லூரி அவருடைய ஆவிக்குரிய பரிசுத்த வாழ்க்கைக்கு மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தது. அங்கு இருந்த நாட்களில் அவர் வாசித்த புத்தகங்கள் குறிப்பாக புகழ்பெற்ற பரிசுத்தவான் ரிச்சர்ட் பாக்ஸ்டர் என்பவர் எழுதிய "ஜூவாலிக்கப்பட்ட குருவானவர்" மற்றும் ஜேம்ஸ் என்பவர் எழுதிய "உண்மையுள்ள தேவ ஊழியம்" மற்றும் ஜாண் பன்னியன் என்ற ராட்சத பரிசுத்தவானுடைய புத்தகங்கள் அவரை அவருடைய ஆவிக்குரிய வாழ்வின் உன்னத நிலைக்கு அழைத்துச் சென்றது. இங்கிருந்த நாட்களில்தான் தனது படிப்புகளில் வெகுமதிகளை வாங்கிக் குவிக்கவேண்டும் என்ற அவருடைய மாம்ச பிரகாரமான ஆவல்களின் மேல் அவர் ஒரு விடுதலையைப் பெற்றுக் கொண்டார். ஜேம்ஸ் ஜில்மோர் தனது அனுபவத்தை இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

"எனது கடந்த கால மாம்ச பிரகாரமான ஆவல்களான படிப்புகளில் வெகுமதிகளைப் பெறவேண்டும் என்ற என் ஆசைகளை எல்லாம் முழுமையாக நான் காற்றில் பறக்கவிட்டேன். கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை மிகுந்த கருத்தோடும், ஆசை ஆவலோடும் படித்து தியானிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதின்படி கடந்த 3 மாத காலங்களாக நான் தங்கியிருந்த செஷ்ஹண்ட் என்ற இடத்தில் ஆண்டவருடைய வார்த்தைகளை ஆம், அந்த களங்கமில்லாத ஞானப் பாலையே அள்ளிப் பருகி ஆண்டவரில் களிகூர்ந்தேன். அந்த மூன்று மாத காலம் நான் அங்கு பெற்றுக் கொண்ட ஆசீர்வாதமானது மிகவும் மேன்மையான ஒன்றாகும்"

1869 ஆம் ஆண்டு அவர் ஹைகேட் என்ற இடத்திலுள்ள மிஷனரிகளுக்கான வேதசாஸ்திர கல்லூரியில் சேர்ந்து படித்ததுடன் பேராசிரியர் சம்மர்ஸ் என்பவருடன் சேர்ந்து லண்டனில் சீன மொழியையும் கற்றார். மிஷனரி பணிக்கான அவருடைய ஆயத்தமானது நடை முறையில் அவருடைய அன்றாடக தேவப் பணிகளையும் உள்ளடக்கியதாகவிருந்தது. ஜில்மோர் மாலைதோறும் தனியனாக இரயில் நிலையத்துக்குச் சென்று அங்கு அவர் திறந்த வெளி பிரசங்கம் செய்தார். அதைச் செய்ய முடியாத நாட்களில் தெருக்களில் நின்று கொண்டிருப்போரை அன்புடன் அழைத்து விசேஷித்த கூட்டங்களை நடத்தி அவர்களைக் கேட்கச் செய்தார். அப்படி அழைக்கப்பட்டவர்கள் அவருடய தேவச் செய்தியால் அனல் மூட்டப்பட்டார்கள். அதே சமயம் அவரைப் பரியாசம் செய்தோர்களும் அவர்களில் இருந்தனர். அவருடைய நண்பன் ஒருவன் இவ்வாறாக எழுதுகின்றார் "தன்னுடைய கல்லூரிப் படிப்பு முடிந்ததும் தனது பணிக்களம் எது? எங்கே தான் தனது பரம எஜமானருக்காக ஊழியம் செய்ய வேண்டும்? என்பதை அவர் உறுதியாக முடிவெடுத்ததும் அவர் தன்னை முழுமையாக ஆவிக்குள் ஆயத்தப்படுத்திக் கொண்டார். அழிந்து போகும் திரளான ஆத்துமாக்களைக் குறித்த அவருடைய ஆத்தும பாரமானது அவரை தரையோடு தரையாக நசுக்கிப்போடுவதைப் போல அவர் தனக்குள்ளாக உணர்ந்து அந்த உன்னத பணிக்காக தனது சக கல்லூரி மாணவ தோழர்களையும் தூண்டிவிட்டார். அழிந்து போகும் கோடிக்கணக்கான ஆத்துமாக்களுக்காக அவர் எவ்விதமாக ஜெபித்தார், எந்தவித ஆவலோடு அவர்கள் மத்தியில் உழைக்கும் நாளை எதிர்நோக்கினார் என்பதை அவருடைய ஆப்த நண்பர்கள் பலர் அறிந்திருந்தனர்" என்று எழுதுகின்றார்.

எடின்பரோ பட்டணத்திலுள்ள அகஸ்டின் சிற்றாலயத்தில் அவர் மங்கோலிய மிஷனரியாக நியமனம்பெற்று 1870 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் தேதி "டயோமெட்" என்ற நீராவிக் கப்பலில் லிவர்பூல் பட்டணத்திலிருந்து மங்கோலியாவுக்கு பயணப்பட்டார். அவர் பயணித்த நீராவிக் கப்பலின் குருவானவராக அவர் நியமிக்கப்பட்டார். அந்தக் கப்பலின் அனைத்து மாலுமிகளுக்கும், பணியாளர்களுக்கும் அவர்கள் தங்கள் கப்பலைப் பாதுகாக்கும் இராக்கால பணி வேளைகளில் அவர்களுடைய ஆத்தும மீட்பின் அருமையை மிகவும் தெளிவாக அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை இரட்சிப்பைக் கண்டு கொள்ள துரிதப்படுத்தினார். "கப்பலில் இருந்த அனைத்து மக்களுக்கும் சுவிசேஷம் கேட்கும்படியான வாய்ப்பு திரும்பத் திரும்பக் கிடைத்தது. இரட்சிப்பின் காரியத்தை என்னால் முடிந்தவரை மிகவும் தெளிவாக நான் அவர்களுக்குக் கூறினேன்" என்று ஜில்மோர் பின்னர் கூறினார்.

 

எரிமலையின் விழிம்பில்

1870 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் ஜில்மோர் சீனாவின் தலை நகரம் பீக்கிங் பட்டணம் வந்து சேர்ந்தார். திரும்பவும் சீன மொழியை அவர் கற்கத் தொடங்கினார். ஒரு மாத காலம் கடந்து சென்றபோது சீனாவின் கடற்கரைப் பட்டணமான டீன்ஸ்டின் என்ற இடத்தில் 13 கத்தோலிக்க மிஷனரிகள் படு கொலை செய்யப்பட்ட துயரச் செய்தி அவரது காதுகளுக்கு வந்து சேர்ந்தது. பெய்ய வேண்டிய மழைகள் சரியான காலத்தில் பெய்யாமல் அந்தப் பகுதியில் கடும் வறட்சி ஏற்படவே, அங்குள்ள சீனர்கள் அந்த வறட்சியானது வெளி நாட்டு மிஷனரிகளால் ஏற்பட்டது என்று கூறி அவர்களைக் கொன்றார்கள். "நாங்கள் எல்லாரும் எரி மலையின் விழிம்பில் இருந்து கொண்டிருக்கின்றோம். தூங்கிக் கொண்டிருக்கும் எரி மலை எந்த நேரம் தனது தீக் குழம்புகளை கொட்டப் போகின்றது என்று எங்களுக்குத் தெரியாது" என்று ஜில்மோர் துயரத்தோடு எழுதினார். ஜில்மோர், சிங்கத்தைப் போன்ற தைரிய நெஞ்சினனும் தான் தனது தேவ ஊழியத்துக்காக வந்த தனது பணித்தளத்திலிருந்து எந்த ஒரு சூழ்நிலையிலும் திரும்பிச் செல்லாதவராயினும் அப்பொழுது அங்கு நிலவிய கொந்தளிப்பான நிலையை மனதில் கொண்டு திரும்பவுமாக அவர் "எங்கள் ஊழியத்தின் மூலமாக நாங்கள் நிறைவேற்றப் போகாததை எங்கள் இரத்த சாட்சி மரணம் சாதிக்குமானால் அதையே நாங்கள் ஆவலோடு எதிர் நோக்குகின்றோம்" என்று அவர் எழுதினார். அங்குள்ள எல்லா வெளி நாட்டு மிஷனரிகளையும் படு கொலை செய்ய வேண்டுமென்று சீனர்கள் திட்டமிட்டிருந்தனர். தெய்வாதீனமாக அந்தக் குறிப்பிட்ட நாளின் முந்தின நாள் இரவு முழுவதும் பெரு மழை பெய்ததின் காரணமாக ஒருவராவது மறு நாள் வீட்டைவிட்டு வெளி வராமல் வீட்டோடேயே அடைபட்டு போய்விட்டபடியால் மிஷனரிகளை கொன்று குவிக்க வேண்டும் என்ற எண்ணம் அடியோடு அந்த சீனர்களிடமிருந்து மறைந்து போயிற்று. அதற்கப்பால், மிஷனரிகளுக்கு எந்த ஒரு தொந்தரவுகளும் ஏற்படவில்லை.

 

மங்கோலியா

ஜில்மோர், மங்கோலியா பணித்தளத்திற்குச் சென்றபோது மங்கோலியாவானது சீனாவுக்கும், சைபீரியாவுக்கும் இடைப்பட்ட பகுதியான கிழக்கே ஜப்பானியக் கடற்கரையிலிருந்து மேற்கே துர்க்கிஸ்தான் வரைக்கும், அங்கிருந்து 3000 மைல்கள் ஆசியாட்டிக் ரஷ்யாவிலிருந்து வடக்கே சீனப் பெருஞ் சுவர் வரைக்கும், 900 மைல்கள் வரை நீடிக்கும் மாபெரும் கோபி பாலைவனத்தின் மையப் பகுதி வரைக்கும் அதின் எல்லை விரிந்து வியாபித்துக் கிடந்தது. 900 மைல்கள் அப்பால் கியாட்டா என்ற நகரம் இருந்தது. இந்த நகரத்தின் வழியாகச் செல்லும் வழித்தடத்தின் மூலமாக சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் பெரும் வாணிபம் நடந்து கொண்டிருந்தது. சீனா தனது தேயிலைக்கு பண்ட மாற்றாக உப்பு, சோடா, மரப் பலகை, தோற் பொருட்களை பெற்றுக் கொண்டிருந்தது. ஒட்டகக்கூட்டங்கள் மற்றும் மாட்டு வண்டிகள் இந்தப் பெரும் பாதையில் சென்று கொண்டிருந்தன. இந்தப் பெரும் பாதையின் மேற்குத் திசையில் எந்த ஒரு அரசாங்கத்தையும் அறியாத, எந்த ஒரு ஆளுகைக்கும் அஞ்சாத தைரியசாலிகளான நாடோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

கடுங்குளிரான பனிப் பொழிவின் காலத்தில் அந்த நாடோடிகள் கரடுமுரடான குடிசைகள் அல்லது கூடாரங்களில் வாழ்ந்தனர். வெப்பம் வீசும் கோடை கால நாட்களில் தங்களுடைய ஆடு மாடுகளுக்குத் தேவையான மிகுந்த புற்தரைகளை தேடிக் கொண்டு பிரயாணப்படுபவர்களாக இருந்தார்கள். பயங்கரமான புழுதிப் புயற் காற்றுகள் இந்தப் பூமியில் வீசிக்கொண்டேயிருந்தது. இந்த மங்கோலியாவின் தென் கிழக்குப் பகுதியில் புத்த மார்க்கம் தனது கால்களை ஊன்றியிருந்தது. ஆண்களில் பாதிப் பேர் புத்த லாமாக்களாக இருந்தனர். பொன்னாலும், இதர விலையுயர்ந்த பொருட்களாலும் கட்டப்பட்ட விந்தையான வர்ணங்கள் பூசப்பட்ட புத்தமதக் கோயில்கள் எடுப்பான விதத்தில் மக்களால் மிகுந்த கனத்தையும் மரியாதையையும் பெற்றவைகளாக நின்று கொண்டிருந்தன. இந்த புத்த மார்க்க கோயில்கள் நமது மங்கோலிய மிஷனரியான ஜேம்ஸ் ஜில்மோருடைய கவனத்தை அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கவருவதாக காணப்பட்டன. நாடோடி கூட்டங்களான மங்கோலியர்களுக்கு தேவனுடைய சுவிசேஷத்தை சுமந்து செல்லுவதற்கு அவருடைய அன்றாடக வாழ்க்கையையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அநேக கஷ்டங்களின் வழியாக கடத்திச் செல்ல வேண்டியது அவருக்கு அவசியமாகக் காணப்பட்டது.

 

நீண்ட தனிமை

மங்கோலியாவில் ஜில்மோர் எந்த இடத்தை தனது பணித்தளமாக தெரிந்தெடுத்திருந்தாரோ அந்த இடத்திலேயே மங்கோலிய மொழியைக் கற்றுத் தேர்ச்சியடைய வாஞ்சித்து ஒரு ரஷ்ய நாட்டின் போஸ்ட் மாஸ்ட்டரோடு 1870 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் நாள் கல்கான் என்ற இடத்தை விட்டுப் புறப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக பிரயாணம் செய்து அந்த கல்கான் என்ற இடத்திற்கு அப்பொழுதுதான் அவர் வந்து சேர்ந்திருந்தார். கியாக்தா என்ற மங்கோலிய பெருஞ் சமவெளியை ஜில்மோரும் அந்த போஸ்ட்மாஸ்டரும் கடக்க ஒரு மாத காலம் ஆனது. அங்கிருந்த நாட்களில் ஜில்மோருடைய பாஸ்போர்ட் சரியான ஒன்று என்று ரஷ்ய அரசாங்கமோ அல்லது சீன அரசாங்கமோ ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. பின்னர் சீன அரசாங்கம் அவருக்கு ஒரு புதிய பாஸ்போர்ட்டைக் கொடுக்கும் வரை அவர் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்தச் சமயம் ஒரு ஸ்காட்லாந்து தேச வியாபாரியோடு நட்பு கொண்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். மங்கோலிய மக்களண்டை சென்று வீட்டுத் தட்டுமுட்டுச் சாமான்கள் மற்றும் அன்றாடகப் பழக்க வழக்கங்களிலுள்ள பொருட்களின் மங்கோலிய பெயர்களை கேட்டறிந்து ஒரு அரிச்சுவடியே தயாரித்துக் கொண்டார். ஒரு மங்கோலிய ஆசிரியரையும் தனக்கு பயிற்சிக்காக வைத்திருந்தார். ஆனால், அவர் ஒரு பயனற்ற மனிதராக இருந்தபடியால், மங்கோலிய மொழியை விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மிகவும் ஆர்வமுள்ள ஜில்மோருக்கு அவரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியாமற் போயிற்று. 1870 ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாகவே ஜில்மோர் தான் வாழ்ந்து கொண்டிருந்த கியாக்தா என்ற இடத்தை விட்டுவிட்டு ஒரு மங்கோலிய மனிதனுடைய கூடாரத்தில் அவனுடன் வாழத் தொடங்கினார். அந்த மனிதன் ஒரு புத்த மத பக்தனாகவும், தனது நேரங்களை புத்தமத பிரார்த்தனைகளில் செலவிடுபவனாகவும் இருந்தான். ஜில்மோரின் பக்தி, மற்றும் தியாக வாழ்க்கை அந்த புத்த மதத்தினனுக்கு பிடித்தமாக இருந்தபடியால் அவன் ஜில்மோரை தன் கூடாரத்தில் வைத்து வெகுவாக அன்பு பாராட்டி உபசரித்து வந்தான். அந்த மங்கோலிய மனிதனுக்கு உதவி செய்ய 2 புத்தமத லாமாக்கள் தனித்தனியே கூடாரங்களில் அந்த மங்கோலிய கனவானுடைய கூடாரத்துக்கு அருகாமையிலேயே தங்கியிருந்தனர்.

ஜில்மோர் 3 மாத காலங்கள் அந்த புத்தமார்க்க மங்கோலியனுடைய கூடாரத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடு தங்கியிருந்தார். இந்த நாட்களில் அவர் மங்கோலிய மொழியை மிக விரைவாகவும், செம்மையாகவும் கற்றுக்கொண்டதுடன் அந்த மொழியின் உதவியால் அங்கு வாழ்ந்த மங்கோலிய நாடோடிகளின் இருதயங்களையும், உள்ளங்களையும் ஊடுறுவிச்செல்லும் அளவிற்கு சுவிசேஷ சத்தியத்தை பிரசிங்கிக்கும் கிருபையின் ஆற்றலும் பெற்றுக்கொண்டிருந்தார். அந்த மங்கோலிய மக்கள் எண்ணத்தில் எத்தனையான பேதமையான மக்கள் என்பதையும் அவர் கண்டு வைத்திருந்தார். "தேவன் அரூபியாக எங்கும் இருக்கின்றார்" என்று அந்த மங்கோலிய மனிதனுக்கு ஜில்மோர் சொன்னார். அதற்கு முன்பாக ஒரு தடவை ஜில்மோர் அவனிடத்தில் "ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்" என்று சொல்லியிருந்தார். அதைக்கேட்ட அவன் மனக்குழப்பமடைந்தவனாக "தேவன் அரூபியாக இருந்தால் அவருடைய வலது பாரிசத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்படி வீற்றிருக்க முடியும்?" என்று கேட்டதுடன் "தேவன் அரூபியாக எல்லாவிடங்களிலும் வாசம் செய்பவராக இருந்தால் நாம் அவர் மீது மிதித்துக்கொண்டு தானே நடக்க முடியும்" என்றும் ஆச்சரியம் பொங்கக் கேட்டுவிட்டான். ஒரு வருடத்துக்குள்ளாக ஜில்மோர் தனது அயராத முயற்சியாலும், தேவ கடாட்சத்தாலும் மங்கோலிய வேதாகமத்தை வாசிக்கவும், மங்கோலிய மொழியை அரை குறைவோடு எழுதவும் கற்றுக் கொண்டார்.

 

சுவிசேஷ ஊழியமும், வைத்தியமும்

1872 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் ஜில்மோர், ஜோசப் எட்கின்ஸ் என்ற ஒருமிஷனரியுடன் சேர்ந்து மங்கோலியர்களின் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ஊ-தாய்-ஷான் என்ற புனித பட்டணத்தை பார்வையிட்டனர். இந்தப்பட்டணத்திலுள்ள மக்கள் நமது வைராக்கியமான மிஷனரி ஜில்மோருக்கு மிகவும் சோர்பை கொடுக்கக்கூடியவர்களாக இருந்தனர். குடிவெறி, மிகுதியாக கடன்களை வாங்குவது போன்ற கெட்ட குணங்கள் இவர்களிடம் காணப்பட்டன. கடன்கள் இந்த மக்களின் மனச்சாட்சியை வாதிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, இன்னும் கூடுதலாக நம்மால் கடன்களை வாங்க முடியவில்லையே என்று இந்த மக்கள் மனம் நொந்து கொண்டனர். இந்த மக்களுக்காக மேற்கொண்ட தியாக அர்ப்பணிப்புகள் வீண் போய் விடக்கூடாது என்று ஜில்மோர் மனம் கலங்கினார். இந்த இடத்தில் ஜில்மோர் அநேக கஷ்டங்களை கடந்து செல்ல வேண்டியதாக இருந்தது. ஒரு ஒட்டகத்துக்காகும் பெருஞ் செலவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளுவதற்காக அவர் கால் நடையாகவே சென்றார். இந்தப்பட்டணத்தில் அவர் போட்டிருந்த கூடாரமானது அவருடைய குடியிருப்பாகவும், சிற்றாலயமாகவும், மருத்துவமனையாகவும் விளங்கினது. ஜில்மோர் வியாதியஸ்தர்களை சுகப்படுத்துவதில் முடிந்தவரை தமது அருமை இரட்சகரைப் பின்பற்றினார். மக்களுக்கு அவர் கொடுத்த மிகவும் எளிமையான மருந்துகள் நல்ல சுகத்தை அவர்களுக்கு கொண்டு வந்ததால் ஆண்டவருடைய சுவிசேஷத்தை அவர்களுக்கு பிரசங்கிக்க அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

உடலில் ஏற்படும் சொறிகள், வாத நோய்கள், கண் வியாதிகள், விஸ்கி என்ற மதுபானம் அருந்துவதால் குடலில் ஏற்படும் அரிப்புகள், குளிர் காய்ச்சல்கள், பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் உபத்திரவங்கள் போன்ற அநேகம் பிணிகளுக்கு அவர் கொடுத்த மருந்துகள் பரம ஒளஷதமாக இருந்தது. மக்கள் சரீரப் பிரகாரமான சுகத்தைப் பெற்றபோதினும் தங்கள் இருதயத்தை பரம வைத்தியராம் ஆண்டவர் இயேசுவுக்கு ஒப்புவித்து அவருடைய பிள்ளைகளாக மாற்றமடைய கொஞ்சமும் மனமற்றவர்களாக இருந்தனர்.

1874 ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியில், ஆம் அவருடைய 4 ஆண்டுகளின் மிகக்கடினமான மிஷனரிப் பணியில் ஒரு ஆத்துமாவைக் கூட அவரால் இரட்சகரண்டை வழி நடத்த இயலாமல் போய்விட்டது. ஏன்? ஒரு ஆத்துமா கூட கிறிஸ்தவத்தில் விருப்பம் காட்டுவதாகத் தெரியவில்லை. சுவிசேஷத்தின் தேவையைக் குறித்த ஒரு சிறிய உணர்ச்சியைக் கூட அவர்கள் வெளிக்காண்பிக்கவில்லை. அந்த நிலை ஜில்மோரை வேதனைக் குள்ளாக்குவதாக இருந்தது.

 

மிஷனரிக்கேற்றதோர் வாழ்க்கைத் துணை

1872 ஆம் ஆண்டில் சீனத்தலை நகர் பீஜிங்கைச் சேர்ந்த சாமுவேல் மீக் என்பவர் லண்டனைச் சேர்ந்த பிராங்கார்ட் என்ற அம்மையாரை மணம் புரிந்தார். நமது மிஷனரி ஜில்மோர் அவர்களுடைய வீட்டிற்கு அவ்வப்போது செல்லுவது வழக்கம். அவர்களின் வீட்டுச் சுவரில் பிராங்கார்ட் அம்மையாரின் இளைய சகோதரி எமிலி பிராங்கார்ட் அவர்களின் படம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அவர்களைக் குறித்து சாமுவேல் மீக் குடும்பத்தினர் அடிக்கடி பேசிக்கொள்ளுவதை ஜில்மோர் கேட்டிருக்கின்றார்.

பாலைவனத்தின் தனது தனிமையான மணி நேரங்களில் ஜில்மோர் தனது தேவ ஊழியத்திற்கு ஏற்றதொரு வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுக்க தனது கர்த்தாவை நோக்கி மன்றாடினார். ஜில்மோர் தான் இதுவரை பார்க்காத போதினும், இதற்கு முன்பாக ஒரு கடிதம் கூட எழுதாதபோதினும் தனது மனதை திடப்படுத்திக் கொண்டு மேற்கண்ட பிராங்கார்ட் அம்மையாரின் இளைய சகோதரி எமிலி பிராங்கார்ட் அவர்களுக்கு தனது மண வாழ்வின் விருப்பத்தை அவர்களுக்குத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். 6 மாத கால இடை வெளிக்குப் பின்னர் அந்த அம்மையார் ஜில்மோரை மணந்து கொள்ள தனது சம்மதம் தெரிவித்து பதில் கடிதம் எழுதியிருந்தார்கள். இந்த விபரத்தை ஜில்மோர், லண்டன் பட்டணத்திலுள்ள தனது பெற்றோருக்கு அறிவித்து லட்டர் எழுதினார். மணப்பெண் தனது மகனுக்கேற்ற பொருத்தமானவள்தான் என்று கண்டு அவர்களும் விருப்பம் தெரிவிக்கவே அவர்களின் திருமணம் 1874 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நடைபெற்றது. "எமிலி பிராங்கார்ட் ஒரு மகிழ்ச்சியான பெண். மிகவும் தேவதா பக்தி கொண்ட கிறிஸ்தவள். யாவிலும் மேலாக என்னைவிட சிறந்த மிஷனரி" என்று ஜில்மோர் தனது மனைவியைக் குறித்துப் பின்னர் எழுதினார்.

திருமணமான ஒரு ஆண்டு காலம் முழுவதும் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அவர்கள் இருவரும் சீனாவின் பீஜிங் பட்டணத்திலேயேதான் இருந்தார்கள். ஜில்மோர் அவ்வப்போது பெரிய திருவிழா கூட்டங்களுக்குச் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்தார். ஆனால், 1876 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7 ஆம் தேதி ஜில்மோரும் அவரது மனைவி எமிலி பிராங்கார்ட் அம்மையாரும் மங்கோலியாவுக்கே பிரயாணமானார்கள். 156 நாட்கள் அவர்கள் மங்கோலியாவில் இருந்தார்கள். எமிலி பிராங்கார்ட் அம்மையார் மங்கோலிய மொழியை விரைவாகவும் பிழையின்றியும் கற்றுக் கொண்டார்கள். எனினும் பாலை வனத்தில் எழும்பும் புழுதிக் காற்றும் எந்த ஒரு மாற்றமில்லாத சோளம், தினை, மாமிசம் போன்ற ஆகாரங்கள் அம்மையாரை வாட்டி வதைத்து விட்டது. எனினும் தனது மிஷனரி பணியின் காரணமாக அதை எல்லாம் அவர்கள் சந்தோசமாக ஏற்றுக் கொண்டார்கள். சொல்லி முடியாத அளவில் அம்மையாரை வாட்டி வதைத்த ஒரு காரியம் அவர்கள் எந்த ஒரு நிலையிலும் மற்றவர்கள் தன்னைக் காணக்கூடாதபடி இரகசியமாக (Privacy) இருக்க முடியவில்லை என்பதுதான். வருடத்தின் மே மாதத்தில் கூட அந்த இடத்தில் கடும் பனிப் பொழிவு இருக்கும். குடியிருக்கும் கூடாரங்களையும், அதில் குடியிருப்பவர்களையும் அப்படியே தூக்கிக் கொண்டு போவது போல தொடர்ச்சியாக கொடிய புயற் காற்று 36 மணி நேரம் வரை கூட தொடர்ச்சியாக வீசும். கோடை கால மழை பெரும் பெரும் துளிகளாக கூடாரத்தின் துணியில் மிளகை ஒரு தகர டப்பாவில் போட்டு தொடர்ந்து குலுக்கிக் கொண்டிருந்தால் எழும்பும் சப்தத்தைப் போல சப்தமிட்டுக் கொண்டிருக்கும். கோடை காலத்தின் மங்கோலிய உஷ்ணம் சகிக்க முடியாத ஒன்றாகும். இத்தனை துயரங்களின் மத்தியிலும் அவர்கள் தங்களைச் சுற்றி வாழம் மக்களோடு இணைந்திருந்து தங்களது கிரியைகளின் மூலமாக தங்கள் அன்பின் ஆண்டவர் இயேசுவின் அன்பை அவர்களுக்கு பகிர்ந்தளிக்க கிடைத்த நல்ல வாய்ப்புக்காக மிகுந்த சந்தோசம் அடைந்தார்கள். கர்த்தருக்குத் துதி செலுத்தினார்கள். பின் வந்த நாட்களில் ஒரு தடவை எதிர்பாராத பெரு மழை, வெள்ளம் காரணமாக ஜில்மோர் தம்பதியினர் மரணத்தின் விழிம்பிலிருந்து நூலளவில் தப்பிப் பிழைத்தார்கள்.

திடீரென அவர்கள் வாழ்கின்ற கூடாரத்திற்கு ஆட்டசாட்டமான ஒரு சீன அதிகாரி எதிர்பாராதவிதமாக வந்து விடுவார். அவர் வந்ததும் அவரைப் பார்ப்பதற்கும், நடக்கும் சம்பாஷணையைக் கேட்பதற்கும் அக்கம் பக்கத்திலுள்ள கூடாரங்களிலிருந்து ஒரு கூட்டம் மக்கள் வந்து கூடி விடுவார்கள். கூடாரத்திற்கு வந்த புத்த மார்க்கத்தைச் சேர்ந்த சீன அதிகாரி ஆண்டவருடைய சிருஷ்டிப்பின் காரியம் முதல் கடைசி வரை கேட்டுத் தெரிந்து கொள்ளுவார். ஆண்டவர் இயேசுவைக் குறித்து தங்கள் புத்தமத புத்தகங்களில் எழுதாமல் விடப்பட்டதற்காக அவர் மிகவும் வேதனை அடைவார். கடவுள் ஏன் துன்ப துயரத்தை உலகத்தில் அனுமதித்தார்? தங்களுடைய உணர்வை மற்றவர்களிடம் தெரிவிக்க இயலாமல் பசியோடு சுற்றியலையும் நாய் போன்ற மிருகங்கள் உலகில் துன்பப்பட ஏன் அனுமதித்தார்? ஆண்டவர் இயேசு உலகை ரட்சிப்பதற்காக பூமிக்கு வருமுன்னர் தங்கள் பாவங்களில் மரித்த மக்கள் எங்கு சென்றிருப்பார்கள்? தனது கொடிய பாவச் செயல்களுக்காக தண்டனை பெறக்கூடிய மனிதன் இயேசுவிடம் பிராத்தனை செய்து தனது தண்டனையிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்ள இயலும்? .என்பது போன்ற ஏராளமான கேள்விகளை அந்த அதிகாரி அவர்களிடம் கேட்டு விடைபெற்றுக் கொண்டு செல்லுவார்.

அம்மையார் 156 நாட்கள் மங்கோலியாவில் இருந்து விட்டு திரும்பவுமாக அவர்கள் பீஜிங் பட்டணம் வந்தது அவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. இந்தச் சமயத்தில் ஜில்மோர் தனது கவனத்தை "தேவனுடைய இரட்சிப்பின் திட்டம்" மற்றும் "தானியேலின் வாழ்வில் பிரகாசமான நிகழ்வுகள்" என்ற மங்கோலிய மொழி வெளியீடுகளுக்கு திருப்பினார். அவைகளை லண்டனிலுள்ள சுவிசேஷ கைப்பிரதி கழகம் அவருக்கு அச்சிட்டுக் கொடுத்தது.

ஜேம்ஸ் ஜில்மோர், எமிலி பிராங்கார்ட் தம்பதியினருக்கு தேவன் 3 ஆண் மக்கள் செல்வங்களைக் கொடுத்தார். அவர்கள் ஜேம்ஸ் (ஜிம்மி), வில்லியம் (வில்லி), அலெக்ஸாண்டர் (அலெக், அலிக்) என்று பெற்றோரால் அன்பொழுக அழைக்கப்பட்டனர். அவர்களில் அலெக்ஸாண்டர் நடக்கப்பழக ஆரம்பித்த குழந்தை பருவத்திலேயே மரணமடைந்து விட்டான்.

 

ஊழியத்தில் கிடைத்த உற்சாகங்கள்

ஒரு தடவை குருவானவர் தாமஸ் லீவிஸ் அவர்களும் தாமஸ் ஜில்மோரும் டியான்ஜின் என்ற இடத்திலிருந்து 5 நாட்கள் பிரயாண தூரத்திலுள்ள சியா ஜாங் என்ற இடத்திற்குச் சென்றார்கள். அந்த இடம் அந்தச் சமயம் பஞ்சத்தால் தாக்குண்டிருந்தது. அவர்கள் இருவரும் 130 முதல் 300 பேர்கள் கொண்ட கூட்டத்தினருக்கு தேவனுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள். அவர்கள் பிரசங்கித்த கூட்டத்தினர் பெரும்பாலும் சுவிசேஷ பாடல்களைப் பெரிதும் விரும்பினபடியால் நமது ஊழியர்கள் பாடல்களையே பாடி அவர்களை மகிழ்வித்தார்கள். பாடல்கள் மூலம் கிறிஸ்துவை அவர்களுக்கு பகிர்ந்தளிப்பது மிகவும் வல்லமையான ஒரு ஏது என்று அவர்கள் கண்டார்கள். ஜில்மோர் தனது பாடல்களின் நடுவில் தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியை மிகவும் எளிமையாக, நெஞ்சைத் தொடும் அழகான எடுத்துக்காட்டுகளோடு தனது தனிப்பட்ட வாழ்வின் அனுபவத்திலிருந்தே மிகவும் உருக்கமாகவும், மன்றாடுதலோடும் தங்களுக்கு முன்பாகக் கூடியிருந்த மக்களுக்குக் கூறினார்.

குளிர்கால நாட்களில் அவர் பீஜிங் பட்டணத்தில் இருந்த நாட்களில் மங்கோலிய மக்கள் குடியிருக்கும் வீடுகளை நாடிச் சென்று அவர்களுக்கு ஆண்டவர் இயேசுவைக் குறித்துப் பிரசங்கித்தார். அவர்கள் மங்கோலியாவின் பற்பல இடங்களிலிருந்து அங்கு வந்து குடியேறியவர்களாவார்கள். தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தை அவர் அடிக்கடி தம்மைச் சுற்றி குழுமியிருக்கும் மங்கோலிய மக்களுக்கு பக்திவினயமாக வாசித்தார். இவை யாவற்றிலும் அவரது எளிமையான மருத்துவ சிகிட்சையின் மூலமாக அவர் தனது அன்பின் இரட்சகர் இயேசுவை அந்த மங்கோலிய மக்களுக்கு பிரசங்கிக்க முடிந்தது. இப்படியாக 10 ஆண்டு காலம் மருத்துவம் மூலமாக ஜில்மோர் தன் அன்பின் ஆண்டவருக்கு மங்கோலிய மக்கள் மத்தியில் ஒரு அருமையான தேவப் பணியை செய்ய முடிந்தது.

 

விடுமுறையில் இங்கிலாந்து சென்றது

1882 ஆம் ஆண்டு ஜில்மோரும் அவரது மனைவி பிள்ளைகளும் விடுமுறையில் தங்கள் தாய்நாடான இங்கிலாந்துக்குச் சென்றனர். கர்த்தருக்காக மேற்கொண்ட அவர்களது கடினமான பணியின் மத்தியில் அந்த விடுமுறை அவர்களுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டது. ஜில்மோர் இங்கிலாந்திலிருந்த நாட்களில் அவர் தனது "மங்கோலியர்களின் மத்தியில்" என்ற தனது புகழ்பெற்ற புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார். அந்த நூல் இந்நாள் வரை ஒரு அருமையான புத்தகமாக மதிக்கப்பட்டு அதிக அளவில் விற்பனையாகி வருகின்றது. "அவாந்தரமான கடல் சூழ்ந்த தீவில் ராபின்சன் குருசோ என்ற மனிதர் தன்னந்தனியனாக வாழ்ந்து எப்படி சாதனை படைத்தாரோ அதே போல ஜேம்ஸ் ஜில்மோர் என்ற ராபின்சன் குருசோ மிஷனரியாக மாறி மங்கோலியர்கள் மத்தியில் பல்லாண்டு காலம் வாழ்ந்து தனது ஊழியத்தைக் குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார்" என்று ஒரு மனிதர் அந்தப் புத்தகத்தை குறித்து எழுதியிருக்கின்றார். அவர் மேலும் "பூமியிலே ஒரு மனிதன் கிறிஸ்து இரட்சகரின் கட்டளையைக் கைக்கொண்டு அந்த சாட்சியை உலகோருக்கு அறிவிப்பதில் தன்னையே முழுமையாக மறந்து வாழ்ந்தவராக இருப்பாரானால் "எங்கள் ஜில்மோர்" என்று மங்கோலிய மக்களால் அன்பொழுக அழைக்கப்படும் ஜேம்ஸ் ஜில்மோர் ஒருவர் மட்டுமே" என்று எழுதியிருக்கின்றார்.

ஜில்மோர் இங்கிலாந்தில் இருந்த நாட்களில் தேவன் மங்கோலியாவுக்கு அதிகமான மிஷனரிகளை அனுப்பும்படியாக ஜெபியுங்கள் என்றே தேவாலயங்களில் பிரசங்கித்தார். "ஜெபியாத ஒருவன் நதியின் ஆழத்திற்குள் அனுப்பப்பட்ட மனிதன் ஒருவன் தான் சுவாசிப்பதற்கு தனது பிராண வாயு பெட்டகத்தில் பிராண வாயு இல்லாமல் சென்றால் எப்படியிருக்குமோ, ஜூவாலித்து எரியும் தீயை அணைக்க மேல்மாடிக்கு அனுப்பப்பட்ட ஒரு மனிதன் தன் கரங்களில் பீச்சியடிக்கும் தண்ணீரில்லாமல் காலியான குழாயைப் பிடித்துக் கொண்டு நிற்பவனைப்போலவும், சத்துருவுக்கு எதிராகப் போராடும் போர் வீரன் காலியான வெற்று தோட்டாக்களைத் தனது துப்பாக்கியில் போட்டு தனது சத்துருவைச் சுடுபவனைப்போலவும் இருக்கின்றான்" என்று அவர் சொன்னார். அவர் விடுமுறையில் இருந்த நாட்கள் ஒன்றில் புகழ்பெற்ற பரிசுத்தவான் ஸ்பர்ஜன் அவர்களுடைய பிரசங்கத்தைக் கேட்பதற்காக 12 மைல்கள் தூரம் கால் நடையாக நடந்து சென்று கேட்டுவிட்டு பாதங்களில் கொப்புழங்கள் கண்டவாறாக கஷ்டத்துடன் வீடு வந்து சேர்ந்தார். எனினும், அதற்காக அவர் சற்றும் மனம் வருந்தவில்லை. பரிசுத்தவானின் தேவச் செய்தி அவரை ஆவிக்குள்ளாக அனல் மூட்டி எழுப்பி விட்டது.

 

மனைவி எமிலி பிராங்கார்ட் அம்மையாரின் மரணம்

இங்கிலாந்து தேசத்தில் தங்கள் விடுமுறை நாட்களை மன மகிழ்ச்சியோடு களித்துவிட்டு ஜில்மோர் குடும்பத்தினர் சீனாவுக்கு திரும்பின போதினும் 2 ஆண்டுகளுக்கும் சற்றும் கூடுதலான காலமே எமிலி பிராங்கார்ட் அம்மையார் உயிர் வாழ்ந்திருக்க முடிந்தது. தனது வியாதியின் உக்கிரகத்தை அவர்கள் கடுமையாக உணர்ந்தார்கள். எந்த ஒரு நிலையிலும் தனது வியாதியிலிருந்து உயிர் பிழைப்பு என்பது கூடாத காரியம் என்பதை அறிந்த அவர்கள் 6 வாரங்களுக்கு முன்னதாகவே ஆவிக்குரிய காரியங்கள் யாவையும் குறித்து தனது கணவருடன் சம்பாஷித்து ஒரு பூரண தெளிவைப் பெற்றுக் கொண்டார்கள். நாட்கள் கடந்துவிட்டால் அதைக் குறித்துப் பேசவும் தீர்மானங்களை எடுக்கவும் கூடாது போய்விடும் என்று நிதானித்து அப்படிச் செய்தார்கள். அது அப்படியே சரியாக இருந்தது. 1885 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் நாள் ஒரு குழந்தையைப்போன்ற எளிமையான விசுவாசத்தோடு மிகுந்த தேவ சமாதானத்துடன் 11 ஆண்டு கால மனமகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்குப் பின்னர் தன் அருமை இரட்சகரில் நித்திரை அடைந்தார்கள்.

 

ஜில்மோரின் ஆத்தும ஆதாயத்தின் முதற் கனி

1883 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜில்மோர் திரும்பவும் பீஜிங் வந்து சேர்ந்தார். 1884 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் அவர் தமது குறிப்பிடத்தக்க மங்கோலியப் பயணங்களில் ஒன்றை ஆரம்பித்தார். முற்றும் கால் நடையாக மேற்கொண்ட அந்தப் பயணத்தில் அவர் எந்த ஒரு மருந்தையும் தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை. தனது பொருட்கள் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி தனது முதுகின் மேல் போட்டுக் கொண்டு அவர் தனது பயணத்தை தொடங்கினார். அவரைக் கண்ட மங்கோலியர்கள் மேல் நாட்டுக்காரராகிய அவர் தங்களுடைய பிச்சைக்கார லாமாக்களில் ஒருவரைப்போல தன்னுடைய பொருட்களை எல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டி தன் முதுகில் சுமந்து செல்லுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்கள். அவர் தனது முதுகில் தனது பொருட்களைப் போட்டுக் கொண்டு செல்லும் காட்சியை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். ஜில்மோர் மேற்கொண்ட இந்தப் பிரயாணத்தில்தான் அவர் தனது ஆத்தும ஆதாயத்தின் முதல் கனியைக் கண்டு பிடித்தார். அவர் ஒரு நாள் ஒரு களிமண் குடிசையின் உள்ளே அமர்ந்து அங்கிருந்த புத்தமத லாமாவுக்கு கிறிஸ்து இரட்சகரின் மூலமாக உள்ள ரட்சிப்பையும், நித்திய ஜீவனையும் குறித்து மிகவும் அழுத்தமாகக் கூறிக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் பார்த்து ஒரு மங்கோலிய மனிதன் அவர்கள் இருந்த குடிசைக்குள் வந்து நுழைந்தான். குடிசையின் நடுவில் மங்கலாக எரிந்து கொண்டிருந்த நெருப்பு அவிந்து விடாமல் இருக்க அவன் அந்த நெருப்பை கிண்டிக் கிளறி அனல் மூட்டிக்கொண்டிருந்தபோது அதின் புகை அந்த மண் குடிசை முழுவதையும் அப்படியே நிறைத்து விட்டது. புகை குடிசை முழுவதையும் நிரப்பிவிட்டபடியால் அந்த மனிதன் தனக்கு முன்பாக 2 அடிகள் தூரத்தில் உட்கார்ந்திருந்த ஜில்மோரைக் கூட பார்க்கக் கூடாதவனாக இருந்தான். இறுதியாக அந்த மனிதன் "பல மாதங்களாக நான் ஆண்டவர் இயேசுவைக்குறித்து அறிந்து கொள்ள ஆர்வம்கொண்டு அந்த அறிவின் ஆரம்ப கட்டத்திலேயே இருந்து வந்தேன். ஆனால் இப்பொழுது நான் அவரை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன்" என்று கூறினான். மண்குடிசையின் அடர்த்தியான புகை முழுவதும் அப்படியே அடங்கிவிட்டது. "அந்த இடம் மோட்ச வீட்டின் முன் கதவுக்கு முன்பாக நான் நின்று கொண்டிருந்தால் எத்தனை அழகாக இருக்குமோ அத்தனை அழகாக அது எனக்கு இருந்தது. கிறிஸ்து இரட்சகரைக் குறித்து அந்த மங்கோலிய மனிதன் வெளியிட்ட அறிக்கையானது மகிமையின் மேகத்துக்குள்ளிருந்து ஒரு தேவ தூதன் பேசுவது போன்று அத்தனை ஆனந்தப் பரவசமாக இருந்தது" என்று ஜில்மோர் கூறினார். அவரும் அந்த மங்கோலிய மனிதரும் 23 மைல்கள் தூரம் ஒன்றாக நடந்து சென்றனர். அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தேவனுடைய காரியங்களைப் பேசிக்கொண்டே சென்றனர். அவர்கள் இருவரும் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் முழங்காலூன்றி ஜெபித்து ஒருவரைவிட்டு ஒருவர் கண்கலங்க பிரிந்து சென்றனர்.

அந்த மங்கோலிய வாலிபனின் பெயர் பாயின்றோ என்பதாகும். இந்த வாலிபன் பின் வந்த நாட்களில் கிறிஸ்து இரட்சகரின் அன்பில் இன்னும் வளர்ச்சியடைந்து அமெரிக்க மிஷனரி ஒருவருடைய கரத்தால் திருமுழுக்குப் பெற்று அன்பின் ஆண்டவருக்கு ஒரு உண்மையான சாட்சியாக விளங்கினான். இந்த எதிர்பாராத நிகழ்ச்சியிலிருந்து தனித்தாள் ஊழியமானது மகா முக்கியமானதும் மற்ற எல்லா தேவ ஊழியங்களையும் விட சாலச் சிறந்தது என்றும் ஜில்மோர் கண்டு கொண்டார். ஆவிக்குரிய புத்தகங்கள், பரிசுத்தவான்களின் சிறந்த தேவச் செய்திகள், ஏன்? மிகவும் சுகயீனமாக படுக்கையில் இருந்த மனைவியண்டை அமர்வதைக் காட்டிலும் தவனமுள்ள ஆத்துமாக்கள் காலை முதல் இரவின் பிந்திய மணி நேரங்கள் வரை தனது கூடாரத்திற்கு வந்து மங்கோலிய மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதையே மிகவும் சிரேஷ்டமானது என்று அவர் கண்டார்.

 

மங்கோலியர்களின் மத வைராக்கியம்

ஜப்பானியர்கள், மற்றும் இந்து மக்களைப்போன்று மங்கோலியர்களும் தங்கள் மதத்தின் பேரில் மிகுந்த பற்றும் வைராக்கியமும் கொண்டவர்களாவார்கள். அவர்களுடைய மதப்பற்றைக் குறித்து ஜில்மோர் அழகாக எழுதி வைத்திருக்கின்றார். "மங்கோலியர்களை எதிர்கொள்ளும் ஒரு மிஷனரி முதன் முதல் அவர்களிடம் கண்டு கொள்ளும் காரியம் என்னவெனில் அவர்களுடைய முழுமையான மார்க்கப் பற்றாகும். தனது சுய வாகனமாகிய ஏதாவது ஒன்றில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் ஒரு மங்கோலியனை நீங்கள் ரஸ்தாவில் சந்தித்தால் அவன் வாய் அவனுடைய புத்த மார்க்க ஜெபத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும், அவனது கரத்தின் விரல்கள் ஜெபமாலை மணிகளை விரைவாக நகர்த்திக் கொண்டிருக்கும். அவன் எங்கே போய்க் கொண்டிருக்கின்றான் என்று நீங்கள் அவனைக் கேட்டால் ஏதாவது ஒரு புத்த மடாலயத்திற்குத் தொழுகைக்காக சென்று கொண்டிருப்பதாக அவன் உங்களிடம் கூறுவான். அவன் செல்லுகின்ற புத்த மத கோயிலுக்கு நீங்களும் அவனுடன் செல்லுங்கள். சற்று நேரத்திற்கெல்லாம் தங்கள் நெற்றியை ஜெபத்திற்காக தரையில் மோதிக் கொண்ட ஒரு கூட்டத்தினருடன் அவன் வருவதை நீங்கள் காண்பீர்கள். அவனுடைய உதடுகள் புத்தமார்க்க மந்திரங்களை உச்சரித்துக்கொண்டு இருப்பதையும், எந்த ஒரு நிலையிலும் அவனது ஜெபமாலை அவனது கரத்திலிருந்து நகராமல் அவனோடு ஒட்டிக்கொண்டிருப்பதையும், அவன் காண்கின்ற ஒவ்வொரு விக்கிரகத்தையும், ஒவ்வொரு கோயிலையும் அவன் தெண்டனிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்து எழும்புவதையும் நீங்கள் காணலாம். பட்டணத்தில் மங்கோலியர்கள் வாழும் பகுதிகளை நீங்கள் கவனியுங்கள். அவைகள் எல்லாம் விக்கிரகங்களாலும், படங்களாலும், இதர பூஜைப் பொருட்களாலும் நிரம்பி வழிவதை உங்கள் கண்கள் காணும்.

மங்கோலியர்கள் வாழ்கின்ற கூடாரங்களுக்குச் சென்று பாருங்கள். அவர்கள் கூடாரத்தின் உச்சியில் புத்த மார்க்க ஜெப மந்திரங்கள் எழுதப்பட்ட கொடிகள் காற்றில் பட்டொளி வீசிப் பறப்பதை நீங்கள் காண்பீர்கள். அவர்களுடைய கூடாரம் ஒன்றுக்குள் நீங்கள் பிரவேசியுங்கள். உங்கள் தலை கூடார வாசலுக்குள் நுழைந்ததும் நீங்கள் காணக்கூடியது அவர்களுடைய குடும்ப பலிபீடம்தான். அங்கே அவர்களுடைய கடவுளர்களையும், அதின் தொங்கு திரைகளையும், அங்கு வைக்கப்பட்டிருக்கும் பூஜைப் பொருட்களையும், நிறைய சிறிய வெண்கல கிண்ணங்களையும் நீங்கள் காணலாம்.

அவர்கள் உங்களுக்கு தேயிலைப் பானம் குடிப்பதற்காக ஆயத்தம் செய்வார்களானால் நீங்கள் குடிப்பதற்கு முன்பாக அவர்கள் வழிபடும் கடவுளர்கள் குடிக்கும்படியாக அதில் கொஞ்சத்தை எடுத்து கூடாரத்தின் உச்சியில் ஓரிடத்தில் அதை ஊற்றுவார்கள். சாப்பிடுவதற்கு உங்களுக்கு ஆகாரம் சமைப்பார்களானால் நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பாக ஆகாரத்தில் கொஞ்சம் எடுத்து எரியும் அக்கினியில் போட்டு அதை தங்கள் அக்கினி கடவுளுக்கு படைத்த பின்னரே உங்களை சாப்பிடச் சொல்லுவார்கள். மாலைப் பொழுது வந்ததும் வெண்ணெய் விளக்கேற்றி அதை தங்களது சுத்தமான அர்ப்பணிப்பாக தங்கள் தெய்வங்களுக்கு பலிபீடத்தில் வைப்பார்கள்.

இரவு வந்ததும், தாங்கள் வழிபடும் சிறிதும் பெரிதுமான கடவுளர்கள் அனைவருடைய ஆடைகளையும் அகற்றிவிட்டு அவைகள் எல்லாவற்றையும், சுவற்றில் தொங்கின படங்கள் எல்லாவற்றையும் பத்திரமாக ஒரு கண்ணாடிப் பெட்டகத்தில் வைப்பார்கள். அந்தக் காரியத்தை மிகவும் பக்தி வினயத்தோடு விசேஷித்த பூஜைகள் நடுவில் அவர்கள் செய்வார்கள். அப்படியே காலை விடிந்ததும் முதற் காரியமாக விக்கிரகங்களை அவைகளின் பழைய நிலைகளில் ஆடைகளை அணிவித்து நிலை நிறுத்துவார்கள். நீங்கள் அவர்களை விட்டுப் பிரியும்போது தங்களுடைய பெரிய அன்பளிப்பாக ஒரு தரமான கல்லை உங்களுக்குத் தருவார்கள். அந்தக் கல்லானது பல்லாண்டு காலமாக புத்த ஜெப மந்திரங்கள் எழுதப்பட்ட கொடிக்கம்பங்களின் கீழாக அந்தக் காற்றை சுவாசித்த புனிதமான கல் என்றும் அந்தக் கல்லே உங்கள் வாழ்க்கையை வளமாக்கக்கூடிய தெய்வம் என்றும் கூறி உங்களிடம் நீட்டுவார்கள்.

தங்கள் மார்க்கத்தில் இத்தனை அசாதாரணமான பக்தி கொண்ட மங்கோலிய புத்தர்கள் மற்ற மதங்களையும், மார்க்கங்களையும் உக்கிரக பகையாகப் பகைத்தனர், அவைகளை வெறுத்து ஒதுக்கினர். ஒரு புத்த மார்க்கத்தவன் தனது புத்த மார்க்கத்தை விட்டு விட்டுக் கிறிஸ்தவன் ஆகின்றான் என்றால் அவனை ஒரு கீழ் ஜாதிக்காரனாகவும், வேண்டாதவனாகவும் அவனை அவர்கள் ஒதுக்கித் தாழ்விடத்துக்குத் தள்ளிவிடுவதால் மிஷனரி ஜில்மோர் தனது தேவப் பணியில் முன்னேற்றம் காண்பிப்பது என்பது கருங்கல்லில் நார் உரிப்பது போன்ற மகா கடினமான ஒரு காரியமாகவே இருந்தது. எனினும், தேவ ஒத்தாசையைக் கொண்டும், தனது அயராத உழைப்பு, ஆத்தும பாரம், இடைவிடாத ஜெபங்களால் அந்தக் கடினமான வைராக்கிய புத்த மார்க்க மங்கோலியர்களையும் தன் கர்த்தரண்டை வழிநடத்த முடியும் என்று கண்டறிந்தார்.

 

தேவனுடைய கரங்களில் பெற்ற ஊழியத்தை
உண்மையோடு நிறைவேற்ற துடித்தவர்

தேவ மனிதர் மிஷனரி ஜேம்ஸ் ஜில்மோர் அவர்களின் பார்வையில் புகையிலை போடுவது, கஞ்சா குடிப்பது, விஸ்கி போன்ற மதுபானம் அருந்துவது மங்கோலியர்களின் மூன்று மாபெரும் கொடிய தீங்குகள் என்று கண்டு அந்த கொடிய தீங்குகளுக்கு எதிராக கிறிஸ்து பெருமானின் சுவிசேஷ சத்தியத்தைப் பிரசங்கித்தார். இந்த மூன்று தீமைகளுக்கு அடிமைப்படாத மங்கோலிய கிறிஸ்தவனே தேவனுடைய திருச்சபையில் அங்கத்தினனாக இருப்பதற்கு தகுதியுள்ளவன் என்றும் அவர் குரல் கொடுத்தார். இதற்கு எதிராக வலுமையான எதிர்ப்பு எழும்பவே செய்தது. ஆனால், ஜில்மோர் தனது நிலையில் உறுதியாக நின்றார். புகையிலை, கஞ்சா, விஸ்கி போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்படாத கிறிஸ்தவன் மட்டுமே தேவனுடைய மனந்திரும்புதலின் செய்தியை மக்களுக்குக் கூற தகுதி உடையவன் என்று ஜில்மோர் அடித்துப் பேசினார்.

இந்தச் சமயத்தில் ஜில்மோருக்கு ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது கிறிஸ்தவ மார்க்க சத்தியத்திற்கு மிகவும் இணக்கம் காண்பிக்கும் சில மங்கோலியர்கள் ஜில்மோரிடம் வந்து "பீஜிங் பட்டணத்தில் மிஷனரி ஒருவர் தனது பிரசங்கத்திற்குப் பின்னர் புகைப் பிடித்தார் என்ற செயலை நாங்கள் நிச்சயமாக கேள்விப்படுகின்றோம். புகையிலை போடக்கூடாது என்ற உங்களுடைய திட்டமான வார்த்தைகளுக்கும், உங்களுடைய மிஷனரியுடைய செயல்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளதே" என்று அவரிடம் கோபதாபமாகக் கூறிச் சென்ற அந்த கிறிஸ்துவின் மேல் தவனமுள்ள மங்கோலியர்கள் திரும்பவும் ஜில்மோரிடம் வரவே இல்லை. அந்தக் காரியத்தைக் கண்ட ஜில்மோர் அதைரியமும், மனச்சோர்பும் கொள்ளாமல் தனது அன்பின் ஆண்டவரை மாத்திரம் பிரசங்கித்துக் கொண்டு அதினுடைய பலாபலன்களை தன் கர்த்தரிடமே விட்டுவிட்டு முன்னேறிச் சென்று கொண்டிருந்தார். கால் நடையாகவே நடந்து கொண்டு தனது ஆண்டவரை மங்கோலியர்களுக்கு பிரசங்கித்துச் சென்று கொண்டிருந்தார். தனது வழிப்பாதையில் வசதியான சத்திரங்களில் நிறைய பணம் கொடுத்து சௌகரியமாக தங்கி இளைப்பாறாமல் அவைகளை தன் ஆண்டவருக்காக ஒதுக்கி வந்தார். தன்னுடைய பொருட்களை சுமந்து கொண்டு வரும்படியாக ஒரு கழுதையை வாடகைக்கு அமர்த்தி அதைத் தன்னுடன் கூட்டிச் சென்றார். இதற்கிடையில் வேதாகம சங்கத்தின் பிரதிநிதி ஒருவரும் சுதேசியான ஒரு மங்கோலியரும் ஒருவருக்கொருவர் எதோ ஒரு காரணத்திற்காக பலத்த சண்டையிட்டுக்கொண்ட செயல் எங்கும் பரவலாயிற்று. அதின் காரணமாக ஜில்மோர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் தங்களுடைய மார்க்கத்தைக் காட்டிலும் எந்த ஒரு நிலையிலும் மேலானதாக இல்லாமல் இருக்கும் கிறிஸ்தவ மார்க்கம் தங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். அதை எல்லாம் அவர் கண்டு கொள்ளாமல் முன்னானவைகளை நாடி தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அவர் தனது ஊழியத்தில் சோர்ந்து போகும் வேளைகள் வந்த போது தன்னை மிஷனரியாக மங்கோலியாவிற்கு அனுப்பிய லண்டன் மிஷனரி ஸ்தாபனத்தினரிடம் தனக்காக ஊக்கமாக ஜெபிக்கவும் தன்மேல் பரிதாப உணர்வு கொள்ளவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். "சிலுவைக்காக கொஞ்சம் ஆத்துமாக்களை வெற்றி கொள்ளுவதற்காக" அவர் எந்த ஒரு நிலையிலும் இருக்க மனதார விரும்பினார். உயர்வான வாழ்க்கை நெறிகளில் உள்ள மங்கோலியர்களின் உள்ளங்களை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்திக் கொள்ளும் பொருட்டு எந்த ஒரு மாமிச பதார்த்தங்களும் சாப்பிடாமல் தன்னை மரக்கறி உணவு மட்டும் அருந்துவோனாக மாற்றிக் கொண்டார். எளிமையான வஸ்திரங்களையே அவர் உடுத்தார். எளிமையான மக்கள் அருந்தும் கூழையே அவர் அருந்தினார். அந்நாட்களில் நாளொன்றுக்கு அவரது வாழ்க்கைக்கு ஆன செலவு வெறும் 6 சென்டுகள் மாத்திரமே. ஜில்மோர் தனது பயனுள்ள வாழ்க்கையை தான் மேற்கொண்ட இந்தவிதமான வாழ்வின் எளிய நடை முறைகளால் வெகுவாகச் சுருக்கிக்கொண்டு விட்டார் என்று மக்கள் அவர் மேல் வேதனைப்பட்டுக் கொண்டது உண்டு. ஆனால், அந்த தீர்ப்பை அளிக்க எவருக்கும் அறுகதை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், களம் இறங்கி அந்தப் போர்க்களத்தில் இருக்கும் ஜில்மோரைத் தவிர வேறு எவருக்கும் அங்குள்ள சூழ்நிலைகளும், கஷ்டங்களும், எதிர்பார்ப்புகளும், பரிசுத்த ஏக்கங்களும் தெரியாது.

ஒரு புதிய பட்டணத்திற்கு ஜில்மோர் வந்து சேரும் பொழுது அந்தப் பட்டணத்தின் பிரதான வீதியில் தமது கூடாரத்தை முளையடித்து நிலை நிறுத்தி மிகவும் அதிகாலை முதல் இரவின் வெகு பிந்திய நேரம் வரை வியாதியஸ்தர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து அவர்களை கவனித்தும், சுவிசேஷத்தைப் பிரசங்கித்தும், சத்தியத்தின் மேல் தவனமுள்ள ஆத்துமாக்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் கொடுத்தும் அவர் நாளின் முழுமையான நேரத்தையும் தன் ஆண்டவருக்காக செலவிடுவார்.

எட்டு மாத காலம் தொடர்ச்சியாக மேற்கொண்ட அவரது ஒரு சுவிசேஷ பிரயாணத்தில் 6000 நோயாளிகளுக்கு அவர் சிகிட்சை அளித்ததுடன், 24000 மக்களுக்கு அவர் சுவிசேஷத்தை பிரசங்கித்திருந்ததுடன் 3000 தேவனுடைய புத்தகங்களையும், 4500 சுவிசேஷ துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தும் இருந்தார். இந்த எட்டு மாத காலத்தில் அவர் 1860 மைல்கள் பிரயாணம் செய்திருந்தார். 200 டாலர்கள் அவர் செலவிட்டிருந்தார். இத்தனையான முயற்சிகளின் நடுவில் 2 பேர்கள் மாத்திரமே தாங்கள் கர்த்தராகிய இயேசு இரட்சகரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுவதாக யாவருக்கும் முன்பாக வந்து அறிக்கை செய்தனர்.

தனது பணியில் தனக்கு உதவி புரியும்படியாக ஒரு வேலையாளை அனுப்பி வைக்கும்படியாக அவர் இங்கிலாந்திலுள்ள தனது மிஷனரி சங்கத்திடம் கேட்டுக் கொண்ட முயற்சிகள் ஒன்றும் வெற்றி பெறவில்லை. இறுதியாக மிஷனரி சங்கம் ஒரு உதவியாளை அவருக்கு அனுப்பிக் கொடுத்தது. அந்த மனிதர் வந்ததும் முதல் வேலையாக ஜில்மோரை நீண்ட விடுமுறையில் இங்கிலாந்து தேசத்திற்கு அனுப்பி வைத்தார். உண்மையுள்ள மிஷனரியான ஜேம்ஸ் ஜில்மோர் இங்கிலாந்து வந்து சேர்ந்தபொழுது அவர் மிகவும் மெலிந்து ஒடிசலாகக் காணப்பட்டார். அன்பின் ஆண்டவர் இயேசுவுக்காக மங்கோலியாவில் அவர் பட்ட பாடுகளையும், போராட்டங்களையும், கஷ்டங்களையும் அவருடைய முகத்தில் மிகவும் தெளிவாகக் காண முடிந்தது. அவருடைய சரீரத்தில் காணப்பட்ட பிரத்தியட்சமான மாற்றங்களின் காரணமாக அவருடைய நெருங்கிய நண்பர்கள் கூட அவரை அடையாளம் காண முடியாமல் போய்விட்டது. ஜில்மோர் தன்னுடைய தாயற்ற இரு குமாரர்களான ஜிம்மியையும், வில்லியையும் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் கண்டது அவருக்கு மட்டற்ற சந்தோசமாக இருந்தது. தன்னுடைய மனைவி எமிலி பிராங்கார்ட் அம்மையார் இறந்ததும் அவர்களுடைய கல்விக்காக அவர்களை இங்கிலாந்து தேசத்திற்கு அனுப்பி விட்டிருந்தார். "ஜில்மோரும் அவருடைய பையன்களும்" என்ற அவருடைய புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் துயரமான நடபடிகளை வாசிப்போர் எவருடைய உள்ளங்களையும் தொடக்கூடியதாகவும், கண்களில் கண்ணீரை வருவிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

 

ஜில்மோரின் இறுதி நாட்களும் அவரது
அருமையான மரணமும்.

இங்கிலாந்துக்கு வந்து தன்னை நன்கு பெலப்படுத்திக் கொண்ட பின்னர் ஜில்மோர் ஏற்ற சமயத்தில் திரும்பவுமாக மங்கோலியாவிற்கு வந்து சேர்ந்தார். தான் முன்பு மங்கோலியாவில் தமது சுவிசேஷ பணிகளை எவ்விதமாக செய்தாரோ அதையே திரும்பவுமாகத் தொடர்ந்தார். கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையால் அவரது பிரயாசங்களின் காரணமாக அவ்வப்போது மங்கோலிய மக்கள் மனந்திரும்பி கிறிஸ்துவண்டை வந்தனர். 3 புதிய மங்கோலிய திருச்சபைகள் தோற்றுவிக்கப் பட்டன. இந்த சந்தோசமான ஆவிக்குரிய அறுவடையின் கனிகள் ஒரு பக்கம் காணப்பட்ட போதினும் தனது ஜீவனையே கொடுத்து உழைத்த மங்கோலிய மக்களின் அடுத்த பிரிவினர் அவருக்கு விரோதமாக எழும்பவே செய்தனர். திருடுதலும், கொள்ளையிடுதலுமே அவர்களுடைய வாழ்வாக இருந்தது.

1891 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் தென் சீனாவின் ட்டியான்ஜின் என்ற இடத்தில் நடைபெற்ற லண்டன் மிஷினரி ஸ்தாபனத்தின் முக்கியமான கூட்டம் ஒன்றுக்கு ஜில்மோர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு அந்தக் கூட்டங்களை நடத்தும் பொறுப்பு அவரது கரத்தில் விடப்பட்டது. மிஷன் ஸ்தாபனத்தின் மிஷனரி ஊழியர்களுக்காகவே ஒழுங்கு செய்யப்பட்ட அந்தக் கூட்டங்களில் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஜில்மோர் ஆவிக்குரிய ஆழமான சத்தியங்களை கூடி வந்தோருக்கு மிகுந்த ஜெபத்தோடும் ஆத்தும பாரத்தோடும் பகிர்ந்து கொண்டார். அந்த நாட்களில் அவர் தனது ஆவிக்குரிய வாழ்வின் உச்ச நிலையில் பிரகாசித்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த ஆவிக்குரிய கூட்டங்களில் பாடப்படுவதற்காக அவர் தெரிந்து கொண்ட பாடல்களான "அவருடைய செட்டைகளின் நிழலில் உள்ள இளைப்பாறுதல், ஆம், அந்த இன்பமான இளைப்பாறுதல்" "இரட்சா பெருமானே நான் உம்மில் கண்டடைந்த ஆறுதல்" "சிலுவையை இறுதியில் இறக்கி வைக்கும் ஓர் சிலுவை வீரன்" போன்ற பாடல்கள் அவருடைய பூவுலக வாழ்வின் நிச்சயமான அஸ்தமனத்தைக் கோடிட்டுக் காண்பிப்பதாக இருந்ததாக அந்த கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் பின்னர் கூறி மிகவும் ஆச்சரியமடைந்தனர்.

மேற்கண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு தனது பரிசுத்த செய்திகளால் கூடி வந்திருந்த மிஷனரிகளையும், தேவ ஊழியர்களையும் பரவசப்படுத்திய தேவ மனிதர் ஜில்மோர் 15 நாட்களுக்குள்ளாக கல்கான் என்ற இடத்திலுள்ள மிஷனரி ஒருவருக்கு தனது கடைசி கடிதத்தை எழுதியிருக்கின்றார். அந்தக் கடிதத்தில் காணப்படும் வரிகள் இதுவேதான்:-

"சமீப கால நாட்களில் நான் அதிகமதிகமாக என் உள்ளத்தில் உணர்த்தப்பட்டு வரும் ஒரு காரியம் என்னவெனில், நாம் சீனாவில் தேவனுக்காகச் செய்யக்கூடிய காரியம் "மின்னலைப் போன்ற புரட்சிகரமான மாற்று முறைகள்அல்ல" பூர்வப் பாதைகளான நல்ல வழியாம் மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு, மறு பிறப்பு, சிலுவைப் பாதை, மனத்தாழ்மை, பரிசுத்தம், தேவ அன்பு, உண்மை உத்தமம், அமைதி போன்றவைகளே" என்று எழுதினார்.

இதன் பின்னர் அவரது இருதயத்தை பெலவீனம் தாக்கியது. அதைத் தொடர்ந்து 11 நாட்கள் ஒரு வித பயங்கர காய்ச்சல் அவரைப் பற்றிப் பிடித்தது. இவைகளிலிருந்து சற்று விடுதலை கிடைத்ததும் ஜில்மோர் திரும்பவும் தனது சாதனைகளைக் கர்த்தருக்காகத் தொடர மங்கோலிய பீட பூமியில் கால் ஊன்றினார். தனது காரியங்களைச் செய்தார். தான் சந்திக்கும் தேவ ஊழியர்களை கர்த்தருடைய சித்தம் அறிந்து தொடர்ச்சியாக அவரில் அமர்ந்து காத்திருந்து அவருக்கு ஊழியம் செய்ய வேண்டிக் கொண்டார். அதுவே தேவ ஊழியத்தில் அதிக பலனைக் கொடுக்கும் என்று அவர்களிடம் சொன்னார்.

இந்தக் காரியங்களின் நடுவே சற்றும் எதிர்பாராத விதமாக 1891 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் மங்கோலிய முன்னோடி மிஷனரியான ஜேம்ஸ் ஜில்மோர் அவர்கள், கிறிஸ்து இரட்சகரின் மங்கோலிய சிலுவை வீரர் தனது பிரயாசங்களிலிருந்து திடீரென ஓய்வுபெற்று வாசல்களைக் கடந்து மோட்சானந்த மகிமையின் கதவுகளைக் கடந்து நித்திய இளைப் பாறுதலுக்குள் பிரவேசித்து விட்டார். மோட்சம் அவருக்கு ஒரு பெரிய ஆச்சரிய அற்புதமாக இருந்திருக்க முடியாது. காரணம் என்னவெனில், தனது மனைவியின் மரணத்திலிருந்தே அந்த மோட்சானந்த பேரின்ப வாழ்வை மிகவும் ஆவலோடு எதிர் நோக்கியவராக அவர் காத்துக் கொண்டிருந்ததுடன் அந்த மோட்சானந்த வெளிச்சத்தில்தான் அவர் அனுதினமும் வாழ்ந்து கொண்டிருந்தார். அல்லேலூயா.

மங்கோலிய மிஷனரியான ஜேம்ஸ் ஜில்மோரின் பிரிவு யாவரும் புலம்பி அழக்கூடிய ஒரு நிகழ்வாகவே இருந்தது. மங்கோலிய மக்கள் அவரை "எங்கள் ஜில்மோர்" என்று அழைத்து ஆனந்தித்தனர். அது ஒரு அழகான நண்பகற் பொழுது. அடக்க ஆராதனையில் பாடப்படக்கூடிய பாடல் தாளின் முகப்பு அட்டையில் ஜாண் பன்னியன் என்ற பரிசுத்த தேவ பக்தனின் மோட்ச பிரயாண புத்தகத்தின் "மேல் வீட்டறையில் தங்கிய மோட்ச பிரயாணி கிறிஸ்தியானின் அறையின் ஜன்னல் சூரியன் உதிக்கும் திசையில் இருந்தது" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. பிரேதப் பெட்டியை மேல்நாட்டு மிஷனரிகளும், சுதேச மிஷனரிகளும், விசுவாசிகளும் முறை வைத்து தூக்கிச் சென்றனர். "கிறிஸ்தவர்களின் மகிமையின் வாசஸ்தலத்திற்கு" என்ற ஆங்கில பாடலின் சீன மொழி பெயர்ப்பினை அவர்கள் பாடிக்கொண்டு சென்றனர். ஜில்மோருக்கு மிகவும் பிடித்தமான மலர்கள் தூவப்பட்ட திறந்த வெளிக் கல்லறையில் அவரது பிரேதப் பெட்டியை சீன கிறிஸ்தவ வாலிபர்கள் இறக்கி வைத்தனர். இவைகளெல்லாம் அவரது அடக்க ஆராதனையில் இடம்பெற்ற சில சிறப்பான காட்சிகளாகும். இவை யாவிலும் முக்கியமானது ஒரு தனி மனிதன் தன் அன்பின் ஆண்டவர் இயேசுவுக்காக கிட்டவே நெருங்க முடியாத ஒரு முரட்டாட்டமான ஜனத்தண்டை நெருங்கிச் சென்று அவர்களுடன் கூடி வாழ்ந்து தனது வாயின் வார்த்தைகளாலும், பிரகாசமான தனது பரிசுத்த முன் மாதிரியான வாழ்க்கையாலும் கர்த்தராகிய இயேசு இரட்சகரை அவர்களுக்கு முன்பாக வைத்து, தனது அருமையான மருத்துவப் பணிவிடைகளாலும், சுவிசேஷ ஊழியத்தாலும், சொல்லொண்ணாப் பாடு துயரங்களை மங்கோலிய நாட்டில் அனுபவித்து அந்த வைராக்கியமான மங்கோலியர்களில் ஒரு கூட்டம் மக்களை தன் ஆண்டவருக்காக ஆதாயம் செய்து, தனது பரிசுத்த அடிச்சுவடுகளை பிற்கால சந்ததியினரும் பின் தொடர்ந்து சிலுவைக் கொடியை அந்த புத்த மார்க்க மங்கோலியாவில் ஏற்றி ஜீவனுள்ள தேவனை உயர்த்திக் காண்பிக்க வேண்டுமென்ற பரிசுத்த முன் மாதிரியை பரிசுத்த பக்தன் ஜேம்ஸ் ஜில்மோர் மிஷனரி அவர்கள் பின் வைத்துச் சென்றிருக்கின்றார். கர்த்தர் இயேசுவுக்கே எல்லா துதி, கனம், மகிமை உண்டாவதாக.

 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM