பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்

ஹட்சன் டெய்லர் (1832-1905)


"ஜீவனுள்ள மெய்யான தேவன் ஒருவர் உண்டு. அவருடைய குரலை நாம் பரிசுத்த வேதாகமத்தில் கேட்கின்றோம். அந்த தேவன் என்ன மொழிந்தாரோ அதுவேதான் அவர். தாம் வாக்களித்த எல்லா வாக்குறுதிகளையும் அவர் தப்பாது நிறைவேற்றி முடிப்பார்"

"தேவனுடைய அனைத்து ராட்சத தேவ பக்தர்களும் மிகவும் பெலவீனமான பாண்டங்கள் மாத்திரமேதான். எனினும், ஜீவனுள்ள தேவன் தங்களோடிருக்கின்றார் என்ற அசைக்க முடியாத விசுவாசத்தை தாங்கள் கொண்டிருந்ததின் காரணமாக அவர்கள் தங்கள் ஆண்டவருக்காக மகத்தான காரியங்களை சாதித்து முடித்துவிட்டனர்"

"உனது சங்கீதக் கச்சேரியை ஆரம்பித்த பின்னர் உனது வாத்தியக் கருவிகளுக்கு சுரூதி கொடுக்க ஒருக்காலும் பிரயாசப்படாதே. ஒவ்வொரு நாளையும் நல்ல ஜெபத்தோடும், தேவ வசன தியானத்தோடும், உன் அன்பின் ஆண்டவருடனான உன் பரலோக நேசம் உறுதியாகவும், தடுமாற்றமின்றியும் இருக்கின்றதா என்பதை பூரணமாக நிச்சயப்படுத்திக் கொள்"

"திராட்ச செடியில் நிலைத்திருக்கும் கொடியானது எதைக் குறித்தும் கவலைப்படவேண்டிய அவசியமே அதற்குக் கிடையாது. அது உழைக்க வேண்டிய அவசியமில்லை. சூரிய ஒளியானது தன்னில் படுகின்றதா என்று அது பதஷ்டத்துடன் அங்குமிங்கும் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை அதற்குக் கிடையாது. தன்னில் மழை பெய்கின்றதா என்ற கவலை அதற்கு வேண்டியதில்லை. திராட்ச கொடியின் ஒரே வேலை தன்னைத் திராட்ச செடியுடன் இன்னும் இன்னும் ஒன்றிணைத்து நெருக்கி செடியுடன் ஆழமாக தன்னைப் பதித்துக் கொள்ள வேண்டியது மாத்திரமேதான். கொடியானது அப்படி தன்னை செடியுடன் ஒன்றாக்கிக் கொள்ளும்போது ஏற்ற சமயத்தில் ஏற்ற நற்கனி தன்னில் பழுத்துக் குலுங்குவதை அது கண்டு ஆனந்தம் கொள்ளும். அந்தவிதமாக நாமும் ஆண்டவர் இயேசுவில் ஆழமாக வேர் ஊன்றி நிலைத்திருப்போம்"

"தேவனுடைய ஊழியம், தேவன் விரும்பும் விதத்தில் தேவனுடைய சித்தத்தின்படி செய்யப்படும் போது தேவனுடைய ஒத்தாசை அதற்கு தடையின்றி தப்பாது வந்து கொண்டே இருக்கும். பணத் தேவைகளின் காரணமாக தேவன் தமது மேலான திட்டங்களை சிதறடித்து நாசமாக்குவதற்கு அவர் அத்தனை ஞானமற்ற கர்த்தர் அல்ல. தமது திட்டங்களுக்கான பணத்தை ஆரம்பத்திலேயே கொடுத்து விடுவதைப் போன்று திட்டங்கள் பூர்த்தியான பின்னரும் அவரால் அற்புதமாக கொடுக்க இயலும்"

"வெள்ளி, பொன், விலையேறப்பெற்ற பொக்கிஷங்களை நீ உனக்கென கொண்டிருக்க வேண்டுமென்ற உன் மனதில் உள்ள ஆசை ஆவலைப் பார்க்கிலும் ஆண்டவராகிய தம்மை மாத்திரம் முழுமையாக நீ சார்ந்து அவர் ஒருவரையே தஞ்சமாகக் கொண்டு நீ வாழ அவர் பெரிதும் விரும்புகின்றார்"

"நீ தேவன் ஒருவருக்கே மனமகிழ்வோடு கீழ்ப்படிந்து நடப்பாயானால் உனது வாழ்வின் அனைத்துப் பொறுப்புகளும் உனக்கல்ல, அவர் ஒருவரை மாத்திரம்தான் சாரும். எத்தனை ஆறுதலான காரியம் பாருங்கள்! தேவனே, எனக்கு அருமையானவர்கள் யாவரின் ஆத்தும உத்தரவாதமும், ஏன்? என்னுடைய ஆத்தும உத்தரவாதமும் உம்மை மட்டுமே சாரும் என்பதை நீர் உம்முடைய நினைவில் வைத்துக் கொள்ளும் என்று நான் ஆண்டவரிடம் கதறி அழுதிருக்கின்றேன்"

"தேவனுக்கு நிறைவேற்ற வேண்டிய மாபெரும் தேவ ஊழியங்கள் ஒவ்வொன்றின் ஆரம்பத்திலும் நான் மூன்று கட்ட நிகழ்வுகளை ஆச்சரியத்துடன் சந்தித்திருக்கின்றேன். முதலாவது, இந்த ஊழியத்தை நம்மால் எந்த ஒரு நிலையிலும் எடுத்துச் செய்யவே முடியாது என்ற எனது அவிசுவாசத்தின் மன உழைச்சலாகும். இரண்டாவது, இந்த ஊழியம் மிகவும் கடினமானதாகும் என்ற எனது அவ நம்பிக்கையின் எண்ணமாகும். மூன்றாவது, தேவனுடைய ஒத்தாசையால் அது நேர்த்தியாக செய்து முடிக்கப்பட்டு, ஜெயக்கொடியானது கம்பத்தின் உச்சியில் பட்டொளி வீசிப்பறப்பதை நான் பரவசத்துடன் பார்த்து கர்த்தருக்குள் ஆனந்திப்பதுதான்"

"நீ முன் செல்ல வேண்டுமானால் உன் முழங்கால்களிலேயேதான் ஜெப நிலையில் முன்னேற வேண்டும். வேறு குறுக்கு வழி எதுவும் கிடையாது"

 
ஹட்சனின் பிறப்பும் இளமைக் கால நினைவுகளும்

ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் 1832 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் இங்கிலாந்து தேசத்திலுள்ள பார்ன்ஸ்லே என்ற இடத்தில் பிறந்தார். இந்த இடம் யார்க்ஷைர் என்ற மாநிலத்திலுள்ள நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் சுரங்கங்கள் நிறைந்த பகுதியாகும். மெய்யான கிறிஸ்தவ தேவதா பக்தி நிரம்பி வழியும் ஒரு பரிசுத்த குடும்பத்தில் பிறக்கும் பாக்கியத்தை தேவன் அவருக்குக் கொடுத்திருந்தார். அவர் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது மோட்சம் அவரைச் சூழ்ந்திருந்தது. அதை அவர் தமது தகப்பனாரின் விசுவாசத்திலும், தாயாரின் ஜெபங்களிலும் காண முடிந்தது. அவர் பிறப்பதற்கு முன்னரே அவருடைய பெற்றோர் அவரை கர்த்தருக்கு ஒப்புவித்து சீன தேசத்தில் அவரை ஒரு மிஷனரியாக பயன்படுத்த வேண்டும் என்று உள்ளம் உருகி பிரார்த்தனை செய்து வந்தனர். ஹட்சன் டெய்லர் சீன தேசத்துக்கு மிஷனரியாகச் சென்று அந்த நாட்டில் தரை இறங்கும் காலம் வரை இந்தச் செய்தியை அவருடைய பெற்றோர் அவருக்கு அறிவிக்கவே இல்லை.

ஹட்சன் குழந்தையாக இருந்தபோது அழகாகவும், இனிமையாகவும் இருந்தபோதினும் அவர் அத்தனையான உறுதியான உடல் நலம் அற்றவராகவே காணப்பட்டார். கண் பார்வையிலும் சற்று பெலவீனங்கள் இருந்தன. அவர் இரண்டு அல்லது மூன்று வயது குழந்தையாக இருந்தபோது தனது தாய் தந்தையருடன் தேவாலயத்துக்குச் செல்லுவார். ஆலயத்தின் நீண்ட ஆராதனை முழுமையிலும் அவர் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காமல் இருந்தால் ஆராதனையின் ஆசீர்வாத ஜெபம் ஏறெடுத்த பின்னர் அவரை தங்களுக்குப் பின்னாக ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அவருடைய தாத்தாவின் கரங்களில் கொடுப்பார்கள். இந்த நிகழ்ச்சியை ஹட்சன் தனது ஆயுட்காலம் முழுமையிலும் தனது நினைவில் வைத்திருந்தார்.

தாத்தாவின் புன்சிரிப்பு, அவருடைய அன்பான வார்த்தைகள், அவருடைய உற்சாகமூட்டும் பரவச பேச்சு எல்லாம் ஹட்சனை மிகவும் கவர்ந்திருந்தது. அவைகள் அவரை எப்பொழுதும் மயிர் கூச்செரியச் செய்வதாக இருக்கும். ஆனால், ஒரு நாள் வந்தது. அன்று அவருடைய தாத்தா டெய்லர் மரித்துப் போனார். அவருடைய பெற்றோர் அவரை தாத்தாவின் மரித்த உடல் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். தாத்தாவின் மரித்த சடலத்தை தொட்டுப் பார்க்கும்படியாக அவருடைய பெற்றோர் ஹட்சனைக் கேட்டுக் கொண்டார்கள். அதின்படியே அதைத் தொட்டு அந்த சரீரம் மிகவும் குளிர்ச்சியாகவும், அசைவற்றும் இருந்ததை அவர் கண்டு மனம் கலங்கினார்.

ஹட்சனின் வீட்டில் எல்லாப் பொருட்களும் அதினதின் இடத்தில் நேர்த்தியாக தூசி தட்டப்பட்டு ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தது. வீட்டின் படிப்பு அறையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு படிக்க நீண்ட நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அங்குதான் ஹட்சன் தனது தகப்பனாரின் முழங்கால்களில் உட்கார்ந்து எபிரேய மொழியின் அரிச்சுவடியை கற்றுக்கொண்டார். அவர் 4 வயது சிறுவனாக இருக்கும்போது அவர் தனது முதலாவது எபிரேய கட்டுரையை எழுதினார். அது மனந்திரும்பாத ஒரு 80 வயதான பாவக் கிழவனாரைக் குறித்த செய்தியாகும். அந்தக் கிழவர் தனது மரணபரியந்தம் மனந்திரும்பவே இல்லை என்பதுதான் அந்தக் கட்டுரையின் சோக முடிவாகும்.

அவர் சிறுவனாக இருந்தபோது தனது உடன் பிறந்த சின்னத் தம்பியோடு விளையாடி மகிழ்வார். அவருடைய சின்னத் தங்கை அமலியா தவழ்ந்து ஊர்ந்து அதின் பின்னர் எழுந்து நின்று நடக்க முயற்சிக்கும்போது ஹட்சன்தான் முதல் அடிகளை எப்படி எடுத்து வைக்க வேண்டும் என்று அமலியாவுக்குக் கற்றுக் கொடுத்தார். நாளடைவில் அவருடன் பிறந்த அவருடைய இரண்டு சின்ன தம்பிமார்கள் மரித்துப் போனார்கள். அவர்களின் மரணம் அவருக்கு தாங்கொண்ணா துயரமாக இருந்தது. எனினும், துயரமும் சந்தோசமும் இந்த உலக வாழ்வில் ஒன்றரக் கலந்த ஒன்றுதான் என்பதை அவர் சொல்லொண்ணா வேதனையுடன் கற்றுக் கொண்டார்.

 
கானக விலங்குக் கண்காட்சியை கண்டு மகிழ்ந்தார்

ஒரு நாள் தங்கள் ஊரில் ஒரு கண்காட்சி நடைபெற்றது. அதில் பறவைகள் மற்றும் கானக விலங்குகளை காட்சிப் பொருட்களாக வைத்திருந்தனர். விலங்குகள் பறவைகள் ஆகியவற்றின் வயிற்றுப் பகுதிகளிலுள்ளவைகளை அகற்றிவிட்டு பஞ்சால் அவைகளை நிரப்பியிருந்தனர். இயற்கையை அதிகமாக நேசிக்கும் ஹட்சனுக்கு அந்தப் பறவைகளையும், மிருகங்களையும் பார்க்க அதிக ஆசையாக இருந்தது. அவருடைய கரத்தில் இருந்தது அவர் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த ஒரு பென்னி நாணயம் மாத்திரமேதான். அந்தக் காட்சி கூடத்திற்குப் பொறுப்பான மனிதன் நமது ஹட்சனை பறவைகளையும், விலங்குகளையும் உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கவில்லை. காரணம், அவைகளைப் பார்க்க 2 பென்னி நாணயம் வேண்டும் என்று அவன் ஹட்சனிடம் கூறி அவரை தடுத்து நிறுத்திவிட்டான். "எனக்கு அடுத்த ஒரு பென்னி நாணயம் பெற்றுக்கொள்ள முடியாது. நான் முற்றும் வெறுமையாக வந்து உங்களிடம் அனுமதி கேட்கவில்லை. எனது கரத்தில் உள்ள ஒரு பென்னியை அன்பாக ஏற்றுக் கொண்டு என்னை உள்ளே அனுமதியுங்கள்" என்று எவ்வளவோ கெஞ்சி வாதாடியும் ஹட்சனுக்கு பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

அவரது மனதில் இருந்த துயரத்திற்கு அளவில்லை. வீட்டிற்கு வந்த அவர் தனது தாயாரிடம் நடந்தவற்றைக்கூறி கண்ணீருடன் நின்றார். தாயார் அவரை தேற்றி கடந்த கால நாட்களில் அவர் வீட்டில் நடந்து கொண்ட பணிவான நடத்தைக்காக ஒரு பென்னி நாணயத்தை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து அந்தப் பறவை கண்காட்சியை கண்டு வரும்படியாக திரும்ப அனுப்பி வைத்தார்கள். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

 
ஹட்சன் டெய்லரின் முற்பிதாக்களின்
ஆழ்ந்த தேவதா பக்தி

ஹட்சன் டெய்லரின் முற்பிதாக்கள் ஆண்டவர் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அதின் காரணமாக அவர்கள் பட்ட பாடுகள் அநேகமாகும். அந்த நாட்களில் அவர்கள் பின்பற்றிச் சென்ற இங்கிலாந்து தேச திருச்சபை ஆவிக்குள்ளாக முழுமையாக செத்துக்கிடந்த நாட்கள் அவை. அதின் காரணமாக அவர்கள் இரட்சிப்பின் சுவிசேஷத்தைக் கூறி அறிவிக்கின்ற மெதடிஸ்ட் திருச்சபை மக்களுடன் ஒன்றிணைந்தனர். ஜேம்ஸ் அவருடைய மனைவி பெற்றி என்ற ஹட்சன் டெய்லரின் தாத்தாவின் தகப்பனாரின் வீட்டில் சுவிசேஷக்கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறத்தொடங்கின. மக்கள் அநேகர் இந்தக்கூட்டங்களில் வந்து கலந்து கொண்டனர். இந்தக்கூட்டங்களுக்கு ஜேம்ஸ் தலை ஏற்று நடத்தத் தொடங்கினார். இந்தக் கூட்டங்களுக்கு சாத்தான் பலத்த எதிர்ப்பு கொடுக்க ஆரம்பித்தான். உள்ளூரிலுள்ள பொல்லாத மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து வீட்டினுள் கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது வெண்கலப் பானை சட்டிகள், மற்றும் ஓசையிடக்கூடிய பாத்திரங்களை பலமாக அடித்து ஓசை எழுப்பி வீட்டினுள் பாடப்படும் பாடல்கள், துதி சத்தத்தங்கள், தேவச் செய்திகள் வெளியே கேட்காதபடி செய்தனர். வீட்டின் முன் கதவை காற்று உள்ளே வரும்படியாக சற்று திறந்து வைத்தால் போதும், துஷ்டர்கள் துர்நாற்றம் வீசும் அசுத்தங்களை வீட்டினுள் வீசி எறிந்தனர்.

அடுத்த ஒரு கொடிய பழக்கம் என்னவெனில், அந்த துஷ்டர் கூட்டம், புகைபோகும் புகைக்கூண்டை கத்தை கத்தையான செதுக்கப்பட்ட பச்சை புல் பத்தைகளை நாற்றம் வீசும் அசுத்தங்களுடன் சேர்த்து ஜேம்ஸ் அவர்களின் புகைபோக்கியை அடைக்கவே வீட்டின் புகை வெளியே போக வழியில்லாமல் நாற்றப்புகையாக மாற்றம் பெற்று வீட்டிலுள்ளோர் சுவாசிக்க முடியாமல் திணறச்செய்தது. இவை யாவற்றின் மத்தியிலும் ஜேம்ஸ் என்ற ஹட்சனின் தாத்தாவின் தந்தை தனது கர்த்தருக்காக பாடுகளை ஏற்று சந்தோசமாக முன் சென்றார். தாம் வாழ்ந்த ஊரின் தெருக்களிலே நின்று தேவனுடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை தைரியமாகப் பிரசிங்கித்தார். அதின் காரணமாக பொல்லாத மக்கள் அவரை கல்லால் அடித்ததுடன் நாற்றம் வீசும் சாக்கடை அசுத்தங்களை எல்லாம் அவர் மேல் வீசி எறிந்தனர். சில சமயங்களில் அவரை அவர் பேசின இடத்திலிருந்து இழுத்துச் சென்று நாற்றம் வீசும் சேற்றினுள் அவரைப் புரட்டி எடுத்தனர்.

ஜேம்ஸ் தனது பாடுகளின் மத்தியிலும் தனது பரிசுத்த கர்த்தரின் வார்த்தைகளால் தேற்றப்பட்டு தனது விசுவாசத்தில் தைரியமாக நிலைத்திருந்தார். "என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாச் சொல்லுவார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோசப்பட்டு களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கத்தரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே" (மத் 5 : 11, 12) என்ற தேவனுடைய வார்த்தைகளை அவர் அதிகமாக நினைவுகூர்ந்தார்.

தனது ஊரின் சந்தை வெளியில் தேவனுடைய சுவிசேஷம் அறிவித்த காரணத்திற்காக தான் அடித்து வீழ்த்தப்பட்டு தெரு வழியாக இழுத்துச்செல்லப்பட்டு துர்நாற்றம் வீசும் சாக்கடையில் புரட்டி எடுக்கப்படுவதை தன் அன்பின் ஆண்டவர் தனக்கு கொடுத்த ஒரு மேன்மையான சிலாக்கியமாக ஜேம்ஸ் எண்ணினார். தனது நிலையை நன்கு சுதாகரித்துக் கொண்டு அவர் திரும்பவும் தான் பிரசிங்கித்த இடத்தில் வந்து நின்று தைரியமாகப் பிரசிங்கித்தார்.

தேவனுடைய சுவிசேஷத்தினிமித்தம் சில சமயங்களில் அவர் மகா கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதாகவிருந்தது. ஒரு சமயம் ஒரு கூட்டம் மக்கள் நண்பர்கள் போல நடித்து அவரண்டை நெருங்கி வந்தனர். அவர்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்த வேளையில்தானே கூட்டத்தில் ஒருவன் ஏற்கெனவே ஆயத்தம் செய்து வைத்திருந்த களிமண்ணுடன் கலந்த உடைத்து நொறுக்கப்பட்ட கூர்மையான கண்ணாடி துண்டுகளை அவருடைய முகத்தில் நன்கு அழுத்திப் பூசிவிட்டான். தெய்வாதீனமாக அந்தச் சமயம் அவர் வேலை செய்த சணல் நூல் மில்லின் சொந்தக்காரர் ஜோசப் பிக்கெட் என்ற உள்ளூர் நீதிபதி ஒருவர் அங்கு வரவே அவர் அற்புதமாகப் பாதுகாக்கப்பட்டார்.

தனக்கு தீங்கு செய்த அந்த கொடியவர்களுக்கு விரோதமாக எந்த ஒரு நடபடிக்கையும் எடுக்க ஜேம்ஸ் விடாப்பிடியாக மறுத்துவிட்டார். "தனது இரட்சகர் இயேசுவுக்காக எந்த ஒரு பாடுகளை சகிக்க தான் ஆயத்தமாக இருப்பதாகவும், தனது ஆண்டவர் தனக்காக வழக்காடி தனது பகைஞர்களுக்கு ஏற்ற பாடம் கற்பிப்பார் என்றும் அவரது தீர்ப்புக்கே தனது காரியத்தை சாட்டிவிட்டதாகவும் தனது எஜமானர் ஜோசப் பிக்கெட்டிடம் கூறிவிட்டார். அவருடைய முகத்தில் ஏற்பட்ட பலத்த காயங்களின் காரணமாக ஏழு வார காலம் அவரால் வேலைக்குச் செல்ல இயலவில்லை.

ஆனால், அவரது முதலாளியும், நீதிபதியுமான ஜோசப் பிக்கெட் காரியத்தை சும்மாவிடவில்லை. அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஜேம்ஸ் முகத்தில் பீங்கான் துண்டுகள் கலந்த களிமண்ணைப் பூசி கொடிய காயங்களை உண்டு பண்ணிய மனிதனுக்கு விரோதமாக குற்றப்பிராது வாசிக்கப்பட்டபோது அவன் அதை முழுமையாக மறுத்து தான் அந்தக் காரியத்தை ஒருக்காலும் செய்யவில்லை என்றும், அப்படி தான் அதைச் செய்திருந்தால் கடவுள் தன்னை அடித்து தன்னைப் பார்வையற்ற குருடனாக்கிப்போடுவார் என்றும் நீதிமன்றத்தில் துணிந்து பொய் கூறினான்.

அவனுடைய வார்த்தையின்படியே வெகு விரைவிலேயே அவன் குருடனாகி தனது மீதியான வாழ்நாட்காலம் முழுமையிலும் பார்வையற்றவனாக ஒரு நாயின் உதவியினால் காலம் களிக்க வேண்டிய மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டான். அத்துடன் கர்த்தருடைய கோபம் அவன் மேல் இருந்ததினால் அவன் தனது வாழ்வில் ஒருக்காலும் முன்னேற்றமே அடைய முடியாமலும் போய்விட்டது.

பார்ன்ஸ்லே ஊரின் ஈஸ்ட்கேட் என்ற இடத்தில் ஒரு சமயம் ஒரு தேவனற்ற பொல்லாத ஸ்திரீ ஜேம்ஸ் என்ற அந்த தேவ மனிதர் நல்ல அழகான கோட்டைப் போட்டுக்கொண்டு செல்லுவதைக் கண்டு பொறாமை கொண்டு தனது கரத்திலிருந்த கரி படர்ந்த அழுக்கான பாத்திரத்தை அவர்மேல் மோதி அடித்து அவரது கோட்டின் பின் பகுதி முழுவதையும் நாசமாக்கிவிட்டாள். அந்தப் பொல்லாத பெண்ணின்மேல் கோபம் கொண்டு ஜேம்ஸ் எதுவும் பேசாமல், தனது கோட்டின் பின் பகுதியை அவள் எவ்விதமாக அலங்கோலமாக்கினாளோ அவ்வண்ணமே தனது கோட்டின் முன் பகுதியையும் தனது கரத்திலுள்ள கரியான பாத்திரத்தால் அசுத்தப்படுத்தும்படியாக அன்புடன் வேண்டிக் கொண்டார்.

ஜேம்சும் அவருடைய மனைவி பெற்றியும் தங்கள் அன்பின் ஆண்டவர் இயேசுவுக்காவும் அவருடைய சுவிசேஷ நற்செய்தியை மக்களுக்கு கூறி அறிவித்த காரணத்திற்காகவும் மிக அதிகமாக பாடுபட்டார்கள். காலப்போக்கில் அவர்களின் தேவதா பக்தி, சாந்தம், தயவு, நற்குணங்கள் பார்ன்ஸ்லே ஊரிலுள்ள மக்களை அசைக்க ஆரம்பிக்கவே, ஆரம்பத்திலிருந்த கடுமையான எதிர்ப்பு மறைந்து ஒரு சமாதானமான சூழ்நிலை உருவாயிற்று. இந்தச் மயத்தில்தான் மெதடிஸ்ட் திருச்சபையைத் தோற்றுவித்த மாபெரும் தேவ மனிதர் ஜாண் வெஸ்லி என்ற பரிசுத்தவான் ஜேம்ஸ் மற்றும் பெற்றி அவர்களின் வீட்டிற்கு வருகை தந்து அவர்களுடைய போஜன பந்தியில் வந்து அமர்ந்தார்.

ஜாண் வெஸ்லி பார்ன்ஸ்லே ஊருக்கு வந்த விபரம் குறித்து ஜாண் வெஸ்லி தமது டயரியில் இவ்விதமாக எழுதியிருக்கின்றார். "1786 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 30 ஆம் நாள் வெள்ளிக்கிழமை. எல்லாவித ஆகாமியங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய பார்ன்ஸ்லே கிராமத்திற்கு நான் வந்து சேர்ந்தேன். அந்த நாட்களில் எந்த ஒரு மெதடிஸ்ட் பிரசங்கியாராவது இந்த ஊருக்கு வந்துவிட்டால் அவரை துண்டு துண்டாக கிழித்து எறியக்கூடிய குரூர குணம் இந்த மக்களிடம் இருந்தது. ஆனால் இந்த நாட்களில் தேவகிருபையால் ஒரு நாய் கூட தனது நாவை எங்களுக்கு எதிராக அசைப்பதாக இல்லை. இந்த ஊரின் சந்தை வெளிப்பகுதியில் ஒரு பெரிய கூட்டத்தினருக்கு நான் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தேன். நிச்சயமாக செய்தியைக்கேட்ட அநேகர் ஆழமாகத் தொடப்பட்டனர்"

ஜாண் வெஸ்லி பார்ன்ஸ்லே கிராமத்திற்கு ஜேம்ஸ் என்பவருடைய வீட்டிற்கு வரும்போது ஜேம்சின் வயது 37 ஆகும். அதின் பிறகு 9 வருடங்களுக்குப் பின்னர் அவர் இறந்து போனார். தந்தையின் தேவ ஊழிய சால்வை இப்பொழுது அவருடைய மகன் ஜாண் அவர்கள் மேல் விழுந்தது. தந்தையின் சிறு கூட்டம் மெதடிஸ்ட் திருச்சபையை ஜாண் ஏற்று வழிநடத்திச் சென்று கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் ஜாண் சில மணி நேரங்களை சுவிசேஷ துண்டுப்பிரதிகள் மற்றும் சுவிசேஷ பங்குகள் போன்றவற்றை மக்களுக்குக் கொடுப்பதில் செலவிட்டு ஒவ்வொரு இரவிலும் மக்களுக்கு சுவிசேஷ நற்செய்தியை கூறி அறிவித்தார். மெதடிஸ்ட் திருச்பைக்கு எதிரான எதிர்ப்பு நாளடைவில் குறைவுபடத் தொடங்கியது. எனினும், ஒரு நாள் ஜாண் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் துஷ்ட மனிதன் ஒருவன் கோபத்தில் அவர் முகத்தில் ஒரு பலமான குத்து கொடுத்துவிட்டு "இயேசு கிறஸ்துவுக்காக அதை ஏற்றுக்கொள்" என்று சத்தமிட்டான். ஜாண் அந்த அடியை சாந்தமாக ஏற்றுக்கொண்டு "ஆண்டவர் இயேசுவுக்காக நான் அதை ஏற்றுக்கொள்ளுகின்றேன்" என்று அன்பாகச் சொல்லிக் கடந்து சென்றார்.

இந்த ஜாண் என்பவர் மேரி ஷீப்பார்ட் என்ற அம்மையாரை மணம் புரிந்தார். இவர்கள்தான் நமது ஜேம்ஸ் ஹட்சன் டெய்லரின் தாத்தா, பாட்டி ஆவார்கள்.

 
என் மகனே உன் இருதயத்தை எனக்குத்தா

1844 ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசத்திலுள்ள லீட்ஸ் என்ற இடத்தில் பெரியவர்களுக்கான ஒரு சுவிசேஷ உயிர் மீட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஹட்சன் டெய்லர் கலந்து கொண்டார். அப்பொழுது அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. கூட்டத்திலே சிறப்பு செய்தியாளராக ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஹென்றி ரீட் என்பவர் தேவ செய்தி கொடுத்தார். அவர் தமது தேவ செய்தியின்போது சோகமான ஒரு உண்மை சம்பவத்தைக் கூறினார். அது தனது சிநேகிதனான ஒருவனை பணத்திற்காக ஆசைப்பட்டுக் கொன்று அதினிமித்தம் தூக்கில் தொங்கிய கார்டனர் என்ற மனிதனைக் குறித்த செய்தியாகும். கார்டனரும் அவனுடைய நண்பனும் ஒன்றாகவே ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் தனது நண்பன் தான் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்த பணத்தை எண்ணிக்கொண்டிருப்பதைப் பார்த்து பேராசை கொண்ட அவன் ஒரு நொடிப்பொழுதில் உள்ளத்தில் தோன்றிய ஒரு துர் ஆசை எண்ணம் காரணமாக தனது நண்பனைக் கொன்று அவனுடைய பணத்தை தனது உடமையாக்கிக் கொண்டான். ஆனால், அந்தோ அவன் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டான்.

கார்டனர் இளமைக் காலத்தில் இருந்தபோது மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டுமென்ற ஆசை ஆவல் எதுவும் இல்லாமலிருந்தான். அந்த நாட்கள் ஒன்றில் "கார்டனர், உன் இருதயத்தை எனக்குத்தா" என்று கர்த்தர் பேசும் குரலை அவன் தெளிவாகக் கேட்டான்.

ஆனால் ஆவியானவரின் குரலுக்கு கீழ்ப்படியாமல் இந்த உலகில் பணம் சம்பாதிக்கும் லோக ஆசைகளுக்கு இடம் கொடுத்தான். கிறிஸ்தவ பக்தி வாழ்க்கை அவனது வாழ்வின் ஆசைகளை எல்லாம் சிதறடித்துவிடும் என்று அஞ்சி இரட்சிக்கப்பட்டு மனந்திரும்பும் ஆசையை தனது வாழ்வின் பின் நாட்களில் வசதியாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று அவன் தள்ளி வைத்தான்.

தேவ செய்தியை பகிர்ந்து கொண்ட தேவ மனிதர் ஹென்றி ரீட் என்பவர் தனது செய்தியின்போது தனது நண்பனை அவனது சொற்ப பணத்திற்காக கொலை செய்யப்போகும் அந்தக் கடைசி நிமிஷத்தில் கார்டனரின் உள்ளத்தில் ஆண்டவர் தாம் அவனின் இளமைக் காலத்தில் "கார்டனர் உன் இருதயத்தை எனக்குத்தா" என்று அழைத்த அழைப்பை திரும்பவும் ஒரு தடவை கட்டாயம் நினைப்பூட்டி அவனை அழைத்திருக்கலாம் என்று பேசினார்.

கார்டனரையும் அவருடன் சேர்த்து மற்ற கொலைக் குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஐந்து கொலையாளிகளையும் அவர்கள் தூக்கு கயிற்றில் தொங்கு முன்னர் மேலே குறிப்பிட்ட தேவ மனிதர் ஹென்றி ரீட் என்பவர் சில மணி நேரங்கள் அவர்கள் ஆத்தும மீட்பு சம்பந்தமாக உள்ளம் உருகி பேசினதாக குறிப்பிட்டார். இறுதியாக கொலையாளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். இந்த உண்மைச் சம்பவம் ஹட்சன் டெய்லர் உள்ளத்தில் ஒரு ஆழ்ந்த பக்தி உணர்வை உண்டாக்கிற்று. குறிப்பாக "என் மகனே உன் இருதயத்தை எனக்குத்தா" என்ற தேவ வார்த்தை அவருடைய நெஞ்சில் ஆழமாகப் பதிந்து கொண்டது.

 
கர்த்தரை விட்டு தூரமாகச் சென்ற நாட்கள்

ஹட்சன் 13 வயதானபோது அவரது மாமூலான அவரது உலகக் கல்வி ஒரு முடிவுக்கு வந்தது. தனது மார்பில் ஒரு வெண்மையான துப்பட்டி வஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு தனது தந்தையின் மருந்துகள் தயாரிக்கும் கடையில் வேலையில் அமர்ந்தார். ரசாயான பொருட்களை அரைப்பது, இடிப்பது, மருந்துகளை கலப்பது போன்ற செயல்களில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

ஆண்டவருக்குள்ளாக வளர வேண்டுமென்று எவ்வளவோ விரும்பினபோதிலும் அவரது முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்தன. தனது பக்தியுள்ள தகப்பனார் பொக்கிஷமாக சேர்த்து வைத்திருந்த பக்திக்குரிய அநேக புஸ்தகங்களை அவர் எடுத்து வாசித்தபோதினும் அவைகள் அவருக்கு கைகொடுப்பதாகத் தெரியவில்லை. மெதடிஸ்ட் திருச்சபையின் பக்தியுள்ள பிரசங்கியாரான அவரது தந்தையோடு பக்தியாக ஜீவிப்பது என்பது அவருக்குக் கடினமாகத் தெரிந்தது. அவருக்கு 15 வயதானபோது அவருடைய தந்தை அவரை உள்ளூரிலுள்ள ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்த்து விட்டார். அங்கு அவர் கணக்குகளை எப்படி வைப்பது, எப்படி கடிதங்கள் எழுதுவது போன்ற அநேக காரியங்களை அவர் கற்றுக் கொண்டார். தனது தகப்பனார் செய்த இந்த செயலுக்காக அவருக்கு அவர் மிகவும் நன்றியறிதலுள்ளவராக இருந்தார். காரணம், பின்னால் அவர் சீனாவில் தனது சொந்தமாக பெரிய மிஷன் ஸ்தாபனத்தை ஸ்தாபித்தபோது அவருடைய ஆரம்ப கால வங்கிப் பணியின் அனுபவங்கள் அவருக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது.

வங்கியில் அவரோடு பணிசெய்த வேலையாட்கள் கிறிஸ்தவர்களாக இருந்தபோதினும் அவர்கள் சபிப்பவர்களும், சத்தியம் பண்ணுகிறவர்களும், உண்மையற்றவர்களுமாயிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். கிறிஸ்தவர்களாக இருந்தபோதினும் வங்கியில் திரண்ட செல்வத்தை குவித்து வைத்திருப்போரையும், தாங்கள் வாங்கிய கடன்களை கட்டாமல் வங்கியை ஏமாற்றுவோரையும், தேவனுடைய சுவிசேஷ ஊழியங்கள் ஆதரிக்க ஆளில்லாமல் வாடும்போது தங்களுக்கென்று ஏராளமான பணத்தை வங்கியில் சேர்த்து வைத்திருக்கும் கிறிஸ்தவர்களையும் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இவைகளை எல்லாம் பார்த்தபோது அவரது கிறிஸ்தவ வாழ்க்கை தேய்பிறையாக இன்னும் தேய ஆரம்பித்தது. ஜெபிப்பதையும், வேத வசன வாசிப்பையும் அவர் கைவிட்டார். அதற்கப்பால் அவர் தனக்கென்று பணம் சேமிக்க வேண்டும் என்றும், ஒரு அழகான குதிரையும், வசதியான வீடும் வாங்கிக்கொள்ள வேண்டுமென்றும் ஆசைப்பட்டார். உலகப்பிரகாரமான இன்பங்களை அனுபவிக்க வேண்டும், மற்ற மக்களைப் போல வேட்டைக்குச் செல்ல வேண்டும் என்றும் விரும்பினார். இந்த உலகத்தின் ஆசாபாசங்கள் அவருடைய உள்ளத்தை நிரப்பவே, கர்த்தரைக் குறித்த காரியங்களை அவர் உதாசீனப்படுத்த ஆரம்பித்தார். எனினும், அவரை தமக்கென்று தெரிந்து கொண்ட அன்பின் ஆண்டவர் அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை அற்புதமாகக் கட்டளையிட்டார்.

வங்கியில் 9 மாதங்கள் பணி செய்த ஹட்சன் அங்குள்ள வெளிச்சம் போதாமை காரணமாக கண் ஒளியில் பாதிப்படையவே கண்ணாடி போட்டுக்கொள்ள வேண்டியதானது. அதைத் தொடர்ந்து அவர் வங்கியிலிருந்து வெளியேறி திரும்பவும் தந்தையின் மருந்துக் கடைப் பணிக்கே திரும்பினார். "கர்த்தர் என் கண் பார்வையை தொட்டிராத பட்சத்தில் நான் அந்த பாவ வங்கிச் சேற்றிலேயே புதையுண்டு அமிழ்ந்து போயிருப்பேன்" என்று ஹட்சன் பின்னர் கூறினார். தனது மகனின் இரட்சிப்பின் காரியமாக தந்தை எவ்வளவோ பிரயாசப்பட்டபோதினும் அவை எதுவும் ஹட்சனை தூக்கி நிறுத்த இயலாது போயிற்று. எனினும் அவரது தாயார் தனது மகனுக்காக அதிக பாரத்தோடு அவரது இரட்சிப்பின் காரியமாக மன்றாடினார்கள். அவருடைய உடன் பிறந்த தங்கை அமலியா ஏற்கெனவே ஆண்டவருடைய இரட்சிப்பின் பாத்திரமான அவள் தனது அண்ணனின் இரட்சிப்புக்காக நாள் ஒன்றுக்கு 3 தடவைகள் ஜெபிப்பதாக ஆண்டவரிடம் பொருத்தனை பண்ணிக் கொண்டாள். அப்பொழுது அவள் வயது 13 மாத்திரமே.

 
ஹட்சன் டெய்லர் இரட்சிப்பைக்கண்டடைந்தது

1849 ஆம் வருடம் ஜூன் மாதம் ஹட்சனுக்கு வயது 17 ஆகியிருந்தது. ஆவிக்குரிய நிலையில் மிகவும் பரிதாபகரமாக இருந்த அவருக்காக அவரது தாயார், தகப்பனார், அன்புத் தங்கை அமலியா மற்றும் குடும்பத்தினரும் ஜெபித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. அப்பொழுது அவருடைய தாயார் 70 அல்லது 80 மைல்கள் தொலைவில் உள்ள தங்கள் இனத்தவர் ஒருவரின் வீட்டில் இருந்தார்கள். வீட்டில் தனிமையாக இருந்த ஹட்சன் தனது தகப்பனாரின் சுவிசேஷ கைப்பிரதிகள் நிறைந்த பெட்டியை எடுத்து அதில் ஏதாவது ஒரு கைப்பிரதியை எடுத்து வாசிக்க விரும்பினார். பொதுவாக ஒரு கைப்பிரதி என்றால் அதின் ஆரம்பத்தில் ஏதாவது ஒரு பரவசமான நிகழ்ச்சி அமைந்திருக்கும். அதைத் தொடர்ந்து ஒரு ஆவிக்குரிய சத்தியம் ஆரம்ப நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு எழுதி முடிக்கப்பட்டிருக்கும்.

ஆரம்பத்தில் எழுதப்பட்டிருக்கும் சம்பவத்தை மட்டும் வாசித்து முடித்துவிட்டு கைப்பிரதியை போட்டுவிட வேண்டுமென்ற ஆசையில் ஒரு கைப்பிரதியை அவர் எடுத்து வாசிக்கலானார். அவர் எடுத்த அந்தக் கைப்பிரதியின் ஆரம்பத்தில் வர்ணிக்கப்பட்டிருந்த சம்பவம் இதுவேதான்:-

(இங்கிலாந்தின் சோமர்செட் பட்டணத்தின் வெளிப்புற எல்லையில் ஒரு தேவனற்ற சுரங்கத் தொழிலாளியும், அவனது மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பரம ஏழைகள். மனைவி தள்ளு வண்டியில் நிலக்கரியை ஏற்றி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து பிழைப்பை நடத்தி வந்தார்கள். வீட்டில் கணவன் கொடிய காச நோய் காரணமாக படுத்த படுக்கையாக மரித்த நிலையில் கிடந்தான். அவர்களுடைய வீடு நாற்றம் வீசுவதாக இருந்தது. அதின் காரணமாக எந்த ஒரு டாக்டரும் அவர்கள் வீட்டுக்கு வந்து அந்த மனிதனுக்கு மருத்துவம் அளிக்க மறுத்துவிட்டனர்.

அந்த இடத்திலுள்ள சில உண்மையான ஆத்தும பாரம் கொண்ட கிறிஸ்தவ மக்கள் அந்த ஏழை கிறிஸ்தவ தம்பதியினரை வந்து சந்தித்து அவர்களுக்காக ஜெபித்து வந்தனர். அப்படி அவர்களைக் காண வந்த அந்த கிறிஸ்தவ மக்கள் வேதாகமத்தில் காணப்படும் இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தை தொட்ட பெரும்பாடுள்ள ஸ்திரீயின் சரித்திரத்தை கட்டில் கிடையாகக் கிடந்த காச நோயாளிக்கு ஒரு நாள் வாசித்துக் காண்பித்தபோது அந்த மனிதன் பிரமிப்படைந்து "ஓ, நானும் அவ்வாறே ஆண்டவரின் வஸ்திரத்தை தொட்டு சுகம் பெற்றுக் கொள்ளுவேன்" என்று சத்தமாக குரல் கொடுத்தான். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புளால் குணமாகிறோம்" என்ற வசனம் வாசிக்கப்படுவதை அவன் கேட்டபோது "அப்படியானால் அது (இரட்சிப்பின் காரியம்) செய்து முடிக்கப்பட்டுவிட்டது" என்று அவன் ஆனந்தமாகக் கூறினான்.)

ஹட்சனுக்கு கைப்பிரதியின் ஆரம்ப சம்பவத்தை மட்டுமே வாசிக்க விரும்பியதால் அத்துடன் அந்தக் கைப்பிரதியை மூடி கைப்பிரதி பெட்டியில் வைக்க விரும்பினார். ஆனால், அவர் அறியாத விதத்தில் அவருடைய பக்தியுள்ள தாயார் அந்த நாளில் அநேக மைல்கள் தொலைவுக்கு அப்பால் தேவ சமூகத்தில் முழங்காலூன்றி எப்படியும் தனது குமாரனை இன்று இரட்சிப்பின் பாத்திரமாக்கியே தீர வேண்டும் என்று ஆண்டவரை நோக்கி மன்றாடி நின்றார்கள். தனது மகன் மறுபடியும் பிறந்த அனுபவத்தை கண்டடைந்துவிட்டான் என்ற பூரண நிச்சயத்தை தேவன் தனக்கு தரும் வரை தனது முழங்கால்களிலிருந்து தான் எழும்பப் போவதில்லை என்ற வைராக்கியத்தோடு ஆண்டவரோடு தனிமையில் அவர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். தான் தங்கியிருந்த அறையின் கதவை சில மணி நேரங்களுக்குப் பூட்டி அதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஹட்சனுக்கு இரட்சிப்பின் நிச்சயம் கிடைத்துவிட்டது என்ற ஆச்சரியமான ஒரு உந்துதல் அவர்களுக்குக் கிடைக்கவே அதற்கப்பால் கர்த்தர் மகனுக்குக் கொடுத்த இரட்சிப்புக்காக ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க ஆரம்பித்தார்கள். அதின் பின்னர் மகனுடைய இரட்சிப்புக்காக அவர்களால் ஜெபிக்க முடியவே இல்லை. மகன் மறுபடியும் பிறந்துவிட்டான் என்ற முழு நிச்சயத்தோடு அவர்கள் தனது முழங்கால்களிலிருந்து எழும்பினார்கள்.

இதற்கிடையில் ஹட்சன் தான் வாசித்த கைப்பிரதியில் "மனிதனின் இரட்சிப்புக்காக கிறிஸ்துவானவர் நிறைவேற்றி முடித்த கிரியை" என்ற வார்த்தையை கவனித்தார். பாவத்தைப் போக்க கிறிஸ்துவானவரின் சமாதானப்படுத்தும் அல்லது திருப்திப்படுத்தும் கிரியை என்று குறிப்பிடாமல் அவரால் முழுமையாக நிறைவேற்றி முடிக்கப்பட்ட ஒரு செயல் என்பதை அவர் கவனித்தார். பாவத்திற்கான ஒரு பூரணமான, முழுமையான பரிகாரம் தேவ மைந்தனால் நிறைவேற்றி முடிக்கப்பட்டு விட்டது என்பதை ஹட்சன் ஆச்சரியத்துடன் கண்டு கொண்டார். முழு உலகத்திற்கான பாவப்பரிகாரமே இரட்சகரின் சிலுவை மரணத்தின் மூலமாக ஈடு செலுத்தப்பட்டுவிட்டது. அப்படியானால், நான் அதற்காக செய்ய வேண்டிய காரியம் அதை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளுவது மாத்திரமே என்பதை உணர்ந்த ஹட்சன் பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலால் அந்த க்ஷணமே முழங்கால்களில் விழுந்து அதை அப்படியே கண்ணீரோடு அங்கீகரித்து இரட்சகர் இயேசுவை தனது சொந்த இரட்சகராக தனது உள்ளத்தில் ஏற்றுக்கொண்டார். அந்நிமிஷமே சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமான இரட்சிப்பின் சந்தோசத்தையும், தேவ சமாதானத்தையும் அவர் பெற்று தனது அன்பின் இரட்சகரை துதித்து ஸ்தோத்திரித்தார்.

தான் இரட்சிப்பை கண்டடைந்த ஆனந்த சந்தோச செய்தியை தனது தங்கை அமலியாவிடம் ஓடோடிச் சென்று ஹட்சன் அறிவித்தார். அதைக் கேட்ட அமலியா கர்த்தருக்குள் ஆனந்த சந்தோசம் அடைந்தாள். அந்த ஆனந்த நற்செய்தியை அமலியா தன் மட்டாக இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதை அவருடைய தாயாருக்கு அறிவிக்கக்கூடாது என்றும் ஹட்சன் அவளிடம் உறுதி மொழி பெற்றுக் கொண்டார். 1849 ஆம் வருடம் ஜூன் மாதம் கர்த்தருக்குள் தான் மறுபடியும் பிறந்த நாள் என்று அவர் தனது வாழ்நாட் காலம் முழுவதும் கூறி வந்தார்.

அதற்கப்பால் அவருடைய தாயார் சில நாட்கள் சென்ற பின்னர் வீடு திரும்பவே கர்த்தருக்குள் தான் புது சிருஷ்டியான களிகூருதலின் செய்தியை தனது தாயாருக்கு கூறிவிடவேண்டுமென்ற மட்டற்ற ஆவலில் வீட்டின் தலை வாசலண்டை வந்து கொண்டிருந்த தாயாருக்கு சொல்ல ஓடோடிச் சென்றார். அவர் தமது தாயாரை சந்திக்கவும் அந்த பரிசுத்தவாட்டி தனது கரங்களை தனது மகனின் கழுத்தில் போட்டவர்களாக அவரைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டு "மகனே, எனக்குத் தெரியும். நீ எனக்குச் சொல்லப் போகும் நற்செய்தியை என் மட்டாக ஆவிக்குள் உணர்ந்து கடந்த 15 நாட்களாக நான் அந்தச் செய்தியால் உள்ளம் பூரித்துக் கொண்டிருக்கின்றேன்" என்று அவர்கள் கூறினார்கள். தனது தங்கை அமலியா அதை அவர்களிடம் சொன்னாளோ என்று ஹட்சன் தனது தாயாரிடம் கேட்டபோது அந்த குறிப்பிட்ட நாளில் நடந்த காரியத்தையும் அவருடைய இரட்சிப்புக்காக அந்த நாளில் அவர்கள் உள்ளம் உருகி தேவனிடத்தில் மன்றாடியதையும் பரவசத்துடன் சொன்னார்கள்.

பின்னர் ஹட்சன் தனது இரட்சிப்பின் பாத்திரமான தங்கை அமலியாவின் நாட்குறிப்பு நோட்டைப் பார்த்த போது தனது அண்ணனுடைய மனந்திரும்புதலுக்காக தான் ஒழுங்காக ஜெபிக்கப் போவதாக ஆண்டவரிடம் பொருத்தனை பண்ணிக்கொண்ட குறிப்பைக் கண்டார். அந்தக் குறிப்பை எழுதிய ஒரு மாத கால இடைவெளியில் அவருடைய இரட்சிப்பின் காரியம் நடந்திருப்பதை அவர் ஆச்சரியத்துடன் கவனித்தார். அதற்கப்பால் அமலியாவும், அவளுடைய அண்ணன் ஹட்சனும் மிக நெருக்கமான ஆவிக்குரிய நண்பர்களானார்கள்.

 
எனக்காக சீன தேசத்திற்குப் போ

தனது பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு ஆண்டவர் இயேசு இரட்சகரோடு தான் ஒன்றரக் கலந்துவிட்டதை எண்ணி ஹட்சன் பேரானந்தம் கொண்டார். ஆம், அவர் இரட்சிப்பைக் கண்டடைந்து விட்டார். அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகள் எல்லாம் அவர் தாம் அதிகமாக நேசித்த ஆண்டவரோடு அவருடைய ஐக்கியத்தில் வளரும் காலமாக இருந்தது. அவர் பரிசுத்தத்தை வாஞ்சித்து தனது ஆண்டவருடைய சாயலுக்கு ஒப்பாக மாற்றமடைய வேண்டுமென்று விரும்பினார். மெதடிஸ்ட் திருச்சபையை தோற்றுவித்த மாபெரும் பரிசுத்த தேவ மனிதர் ஜாண் வெஸ்லி 1849 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் நாள் ஹட்சனின் தங்கை அமலியாவிற்கு எழுதின கடிதத்தின் வரிகள் இவ்வாறு இருந்தன "அன்புள்ள அமலியா எனக்காக ஜெபி. நான் முழுமையான பரிசுத்தம் அடையும்படியாக எனக்காக ஜெபி. எனது இருதயம் இந்த பூரண பரிசுத்தத்தை நாடுகின்றது. அது எத்தனையான ஒரு ஆனந்த பாக்கியம் தெரியுமா?" என்று எழுதியிருந்தார்.

இப்பொழுது ஹட்சன் தாம் ஒரு மிஷனரியாக ஆக வேண்டு மென்றும் குறிப்பாக சீன தேசத்திற்கு மிஷனரியாக போகவேண்டு மென்றும் ஒரு ஆழ்ந்த ஆவல் அவருக்கு இருந்தது. தொடர்ந்து அவர் தனது தந்தையின் மருந்துக்கடையில் அவருக்கு உதவியாக வேலை செய்தார். அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் எல்லாம் அவர் தனது ஆண்டவருக்கு ஊழியம் செய்து வந்தார். சீக்கிரமாக அவர் ஒரு ஓய்வு நாள் பள்ளி ஆசிரியராகி பிள்ளைகளுக்கு ஆண்டவருடய அன்பைப் பிரசிங்கித்தார்.

தான் இரட்சிப்பின் பாக்கிய அனுபவத்தைப் பெற்று அதிக நாட்கள் ஆவதற்கு முன்னரே தேவ சமூகத்தில் அதிக நேரம் செலவிட்டு தனது வருங்கால தேவ ஊழியத்தைக் குறித்த திட்டமான வெளிப்பாட்டை கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படியாக ஒரு நாளை அவர் ஒதுக்கி வைத்து ஜெபிக்க ஆரம்பித்தார். அப்படி செலவிட்ட அந்த நாளின் மத்தியானத்தைக் குறித்து ஹட்சன் இவ்வாறு எழுதுகின்றார்:-

"அந்த நாளில் நடந்த காரியங்களை நான் இன்றும் துலாம்பரமாக நினைவுகூர முடியும். பாவியாகிய எனக்காக யாவையும் செய்து முடித்த ஆண்டவரின் எல்லையற்ற அன்பை மீண்டும் மீண்டும் நான் நினைவுகூர்ந்து என் இருதயத்தை அவருடைய சமூகத்தில் பேரானந்தக் களிப்புடன் ஊற்றிக் கொண்டிருந்தேன். மனந்திரும்பி இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்ற எனது எல்லா நம்பிக்கைகளையும் இழந்து நிர்ப்பந்தனாக நின்று கொண்டிருந்த வேளை என்னை தமது சொந்தமாக்கிக் கொண்ட அன்பின் ஆண்டவருக்கு கைம்மாறாக நான் ஏதாவது செய்கின்றேன் என்று நான் அவரை நோக்கிக் கெஞ்சினேன். அந்த நேரத்தில் நான் எதையும் எனக்கென்று தனிமைப்படுத்தி வைத்துக் கொள்ளாமல் எனது வாழ்க்கை, எனது நண்பர்கள், எனக்குள்ள யாவையும் ஆண்டவரின் பலிபீடத்தில் முழுமையாக அர்ப்பணித்துவிட்டேன். எனது அர்ப்பணிப்பை அடுத்து தேவனுடைய சமூகப்பிரசன்னம் சொல்லி முடியாத அளவில் எனக்கு மெய்யானதாகவும், என்னை ஆட்கொண்டிருப்பதையும் நான் நன்கு உணர்ந்தேன். எனக்கு நன்கு நினைவு இருக்கின்றது, அப்பொழுது நான் தரையிலே தேவனுக்கு முன்பாக சொல்லி முடியாத சந்தோசத்திலும், தேவனைக் குறித்த ஆச்சரியமான பிரமிப்பிலும் அப்படியே கால்கள், கைகளை நீட்டி விரித்து வைத்த நிலையில் படுத்திருந்தேன். அந்த வேளையில்தானே நான் செய்ய வேண்டிய வேலை என்னவென்று தேவன் எனக்கு வெளிப்படுத்தாத போதினும், இனி நானல்ல கிறிஸ்துவே என்ற ஒரு ஆழமான பரிசுத்த உணர்வு என்னை மேற்கொண்டிருந்ததை நான் கண்டு கொண்டேன்.

தேவன் தனக்காக ஒரு விசேஷித்த ஊழியத்தை மனதில் கொண்டிருக்கின்றார் என்பதை ஹட்சன் தன்னளவில் நிச்சயித்துக் கொண்டபோதினும் அது என்ன என்பதை அவரால் கண்டு கொள்ளக் கூடாதிருந்தது.

வழக்கம்போல ஒவ்வொரு நாளின் மாலை வேளையிலும் ஹட்சன் தனது பார்ன்ஸ்லே பட்டணத்தை ஒட்டிக்கிடந்த ஏழை எளிய மக்கள் மற்றும் தேவ பயமற்ற ஜனங்கள் வாழ்ந்த சேரிப்பகுதிகளுக்குள் சென்று சுவிசேஷ ஊழியம் செய்வதுடன், அத்தியந்த தேவைகளில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தன்னாலியின்ற உதவிகளையும் செய்தார். மக்களின் மத்தியில் காணப்படும் அசாத்தியமான ஆவிக்குரிய இருளைக்கண்டு அவர் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். தேவன் அவர்கள் மத்தியில் எழுப்புதலைக் கொண்டு வர வேண்டுமென்று அவர் உள்ளம் உருகி மன்றாடி வந்தார். அத்துடன் அவரும் தனது ஆண்டவர் இயேசுவைப்போல மாற்றமடைய வேண்டும் என்று பெரிதும் ஆவல் கொண்டார். அதின் காரணமாக ஆண்டவருடைய வார்த்தைகளை அவர் ஆசை ஆவலோடு இடைவிடாமல் வாசித்து தியானித்தார். அதில் எழுதப்பட்டவைகள் எல்லாம் தனிப்பட்ட விதத்தில் தான் செய்யும்படியாக தனக்காக கர்த்தரால் எழுதப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொண்டார். தசமபாகத்தை குறித்து எழுதப்பட்ட பகுதியை வாசித்த போது தனக்கு கிடைத்த மிகச் சொற்பமான வருமானத்திலும் அவர் தசமபாகம் எடுத்து வைத்தார்.

கர்த்தரில் புது சிருஷ்டியாக மாற்றமடைந்த ஹட்சன் தான் ஒரு விசேஷித்த நோக்கத்திற்காக கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டதை உணர்ந்தவராக ஆண்டவர் தம்மைக் குறித்துக் கொண்ட நோக்கத்தை தனக்கு வெளிப்படுத்திக் கொடுக்கும்படியாக முழங்கால்களில் நின்று ஜெபத்தில் போராடினார். தேவன் தனக்கு உத்தரவு அளிக்கும்வரை தான் அவரை விடப்போவதில்லை என்று உறுதியாக சாதித்து நின்றார். கர்த்தரிடமிருந்து இறுதியாக பதில் வந்தது. "அப்படியானால் எனக்காக சீனாவுக்குப் போ" என்ற வார்த்தை பரத்திலிருந்து வந்தது. அது கர்த்தரே தமது மாட்சிமையான குரலால் தம்மோடு நேருக்கு நேர் பேசுவதாக காணப்பட்டது.

"எனது உள்ளான ஆவிக்குள் "உனது ஜெபம் கேட்கப்பட்டது, உனது மன்றாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது" என்ற வார்த்தை எழுந்தது. அந்த நிமிஷத்திலிருந்து நான் சீன தேசத்திற்கு மிஷனரியாக செல்ல வேண்டுமென்ற அந்த பரலோக ஆவல் ஒருக்காலும் என்னிலிருந்து அகலவே இல்லை"

 
சீன தேச மிஷனரி பணிக்காக தன்னை
ஆயத்தப்படுத்திக் கொண்ட ஹட்சன்

சீன தேசத்திற்கு மிஷனரியாக செல்ல விரும்பிய ஹட்சன், முதலாவது சீன தேசத்தைக் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள விரும்பினார். தனது தந்தையின் புத்தகங்களில் சீன தேசத்தைப்பற்றி எழுதப்பட்ட சில புத்தகங்களை அவர் எடுத்து வாசிக்கலானார். இன்னும் அதிகமாக சீன தேசத்தைக் குறித்த தகவல்களை அறிய வேண்டுமானால் பார்ன்ஸ்லே திருச்சபையின் போதகரிடம் உள்ள புத்தகசாலையில் அதிக புத்தகங்கள் இருப்பதாக கேள்விப்பட்ட அவர் பார்ன்ஸ்லே போதகரை அணுகினார். சீன தேசத்தைக் குறித்து மெட்ஹர்ஸ்ட் என்பவர் எழுதிய விரிவான பெரிய புத்தகத்தை தனக்கு வாசிக்கத்தரும்படியாக ஹட்சன் அவரைக் கேட்டபோது, அதைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை போதகர் அறிய விரும்பியபோது தான் சீனாவில் தனது வாழ்நாட்காலத்தை ஒரு மிஷனரியாக செலவிடப்போவதாக ஹட்சன் அவரிடம் கூறினார். "நீங்கள் சீன தேசத்திற்கு போக எப்படி தீர்மானம் எடுத்துக் கொண்டீர்கள்?" என்று போதகர் அவரை ஆச்சரியத்துடன் கேட்டார். "அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் ஆண்டவர் இயேசு தமது அடியார்களான சீடர்களை பணப்பையும், சாமான் பையும் இல்லாமல் சுவிசேஷத்தை அறிவிக்க அனுப்பியபோது அவர்கள் தேவைகளை எல்லாம் அவர் சந்தித்தது போல தனது தேவைகளையும் கர்த்தர் சந்திப்பார்" என்று சொன்னார்.

அந்த பதிலைக் கேட்ட போதகர் ஆச்சரியமடைந்து ஹட்சனின் தோளில் தனது கையைப்போட்டு "ஆ, என் அன்பான குழந்தாய், நீ பெரியவனாக வளர்ந்து வரும்போது ஞானமுள்ளவனாக விளங்குவாய். உன்னில் தோன்றிய அந்த எண்ணம் கிறிஸ்துவானவர் உலகில் மானிடனாக இருந்த நாட்களில் நடந்தவையாகும். அது இப்பொழுது நடந்தது அல்ல" என்று கூறி அமைதிப்படுத்தினார். எனினும், ஹட்சன் விரும்பியது போல அந்தப் பெரிய புத்தகத்தை போதகர் அவரது வாசிப்புக்குக் கொடுத்தார்.

சீனாவில் தனது மிஷனரி பணியை ஆரம்பிப்பதற்கு வசதியாக அவர் கடினமான சீன மொழியை முதலில் கற்க ஆரம்பித்தார். அவருக்கு சீன மொழியைக் கற்றுக் கொடுக்க எந்த ஒரு ஆசிரியரும் இருக்கவில்லை. ஒரு ஆசிரியரை தனக்கென்று பயிற்சி கொடுக்க வைத்துக் கொள்ளுவது என்பதுவும் அவரால் கூடாத காரியமாக இருந்தது. விலையுயர்ந்த சீன மொழி பாடப்புத்தகங்களை வாங்குவது என்பதும் அவரது பெலத்துக்கு மிஞ்சினதாக காணப்பட்டது. சீன மொழியை கற்பது என்பது அத்தனை இலகுவான காரியம் அல்லவென்றும், அதைக் கற்கும் மனிதனுக்கு இரும்பு சரீரமும், வெண்கலத் தொண்டையும், ஓக் மரத்தைப்போன்ற கடினமான தலையும், தேவ தூதர்களின் ஞாபக சக்தியும், கழுகைப்போன்ற கண்களும், வேதாகமத்தின் மெத்தூசலாவின் நீண்ட ஆயுட் காலமும் தேவை என்றும் சொல்லப்பட்ட மனமடிவான வார்த்தைகளை ஹட்சன் கவனித்தார். எனினும், அந்த வார்த்தைகளினால் அவர் சோர்படையாமல் சீன மொழியில் எழுதப்பட்ட மாற்கு சுவிசேஷம், அப்போஸ்தலர் நடபடிகள் என்ற இரு புத்தகங்களையும் ஆங்கில வேதாகமத்துடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு மிகவும் குறுகிய நாட்களில் சுமார் 500 சீன வார்த்தைகளுக்கு பொருள் கண்டு பிடித்துக் கொண்டார். அப்படியே ஆங்கில வேதாகமத்தின் வார்த்தைகளை சீன மொழி வேதாகமத்துடன் ஒப்பிட்டுப் படித்து அவைகளை தாட்களில் எழுதி எழுதி சீன மொழி எழுத்துக்களை தேவ பெலத்தால் நேர்த்தியாக கற்றுக் கொண்டார். அந்த நாட்களின் நிகழ்ச்சிகளை ஹட்சன் இவ்வாறு எழுதுகின்றார்:-

"ஒவ்வொரு நாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் நான் எனது படுக்கையிலிருந்து எழுந்து சீன மொழியைக் கற்றுக்கொள்ளப் பிரயாசப்பட்டேன். நான் சீன தேசத்திற்கு மிஷனரியாகச் செல்ல வேண்டுமானால் சீன மெழியை நான் கட்டாயம் படித்தே தீரவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். அதின் காரணமாக நான் கற்றுக் கொண்டிருந்த லத்தீன், கிரேக்கு, எபிரேய மொழிகளை கூட அப்பால் தள்ளி வைத்தேன்" என்கின்றார்.

 
சீன தேச மிஷனரிப் பணிக்கு
மருத்துவம் பயின்ற தேவ மனிதர்

1851 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் ஹட்சனுக்கு 19 வயதாகியிருந்தது. அப்பொழுது அவர் புகழ்பெற்ற ராபர்ட் ஹார்டி என்ற மருத்துவரிடம் மருத்துவம் கற்பதற்காக அவரிடம் போய்ச் சேர்ந்தார். அந்த மருத்துவர் ஹல் என்ற பகுதியில் தனது மருத்துவ பணியைச் செய்து கொண்டிருந்தார். நல்ல பண வசதியான நோயாளிகளுக்கு அவர் தனது வீட்டில் வைத்து மருத்துவ சிகிட்சை அளித்தார். அதே சமயம் ஏழை எளிய மக்களுக்கு தனது வீட்டின் அடித்தட்டில் பின் பக்க கொல்லைப்புற பகுதியில் இருந்த அறையில் வைத்தியம் செய்து வந்தார். அந்த மக்கள் எல்லாரும் அயர்லாந்து தேசத்தவரான வறுமைப்பட்ட ஏழை மக்களாவார்கள். அந்த இடம் குற்றங்களுக்கும், பாவங்களுக்கும் பெயர்போன இடமாக இருந்தது. அதின் காரணமாக அந்த இடத்திற்கு வருவதற்கு போலீசார் கூட அஞ்சுவதுண்டு.

மருத்துவர் ராபர்ட் ஹார்டியின் உதவி மருத்துவர் என்ற பெயர் எடுத்திருந்த ஹட்சன் டெய்லர் அந்த ஏழை மற்றும் வசதியற்ற மக்களை எந்த ஒரு பயமுமில்லாமல் அடிக்கடி வந்து சந்திப்பவராக இருந்தார். அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு சுவிசேஷ துண்டு பிரதிகளை அவர்களுக்குக் கொடுத்து தேவனுடைய நற்செய்தியையும் அறிவித்து வந்தார். தொழிற்கூடங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக அது இருந்தபடியால் அதிகமாக விபத்துக்கள் நடக்கும் இடமாகவும் அது இருந்தது. காயம்பட்டோருக்கு காயங்களைக்கட்டி ஹட்சன் மருந்துகளைப் போட்டார். பிரசவிக்கும் பெண்களுக்கும் குழந்தைப் பேற்றில் தனது மருத்துவர் ஹார்டியுடன் சேர்ந்து உதவி செய்தார். இந்தவித அனுபவங்கள் ஹட்சனை நல்லதொரு மருத்துவராக மாற்றியதுடன் மக்களுக்கு அனைத்து நிலைகளிலும் தொண்டு செய்ய சிறப்பான வழிவாசல்களையும் அவருக்கு திறந்து கொடுத்தது.

டாக்டர் ஹார்டியின் வீட்டில் ஹட்சனுக்கு எந்தவித குறைவுமில்லாமல் அனைத்து வசதிகளும் கிடைத்து வந்தன. அந்தவித வசதிகளோடு கஷ்டமில்லாமல் வாழ்ந்தால் சீன தேசத்தின் ஏழை எளிய மக்களோடு வாழ்ந்து அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பது கஷ்டமாகிவிடும் என்று பெரிதும் அஞ்சிய ஹட்சன் ஏழைக்கு ஏழையான வாழ்க்கையை தெரிந்து கொண்டவராக தான் வாழ்ந்த இடத்திற்கு அருகாமையிலுள்ள "சாக்கடை பள்ளம்" என்ற பொருள்படும்படியான "டிரைன்ஸைட்" (Drainside) என்ற இடத்திலுள்ள ஒரு சிறிய வீட்டில் போய்க் குடியேறினார். அந்த இடம் சேறும் சகதியுமான ஒரு நீர்ப்பரப்பு பகுதியாகும். அந்த இடத்திற்கு நிறைய நீர்ப்பறவைகள் மீன் பிடிப்பதற்காக வரும். குடியானவர்கள் தங்கள் மாடுகளில் கறந்த பாலை சற்று கூடுதலான நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருப்பதற்காக தகர பீப்பாய்களில் பாலை நிரப்பி அந்த சேற்றுப் பகுதிகளில் அமிழ்த்தி வைப்பார்கள்.

ஹட்சன் வாழ்ந்த டிரைன்ஸைட் என்ற இடத்தில் ஒன்றையொன்று எதிர்நோக்கிய இரண்டு நீண்ட தெருக்கள் மட்டுமே இருந்தன. அங்குள்ள ஒரு வசதியற்ற சின்னஞ்சிறிய வீட்டில் வாரத்திற்கு 3 ஷில்லிங்குகள் கொடுத்து அவர் வாடகைக்கு இருந்தார். அங்கு வாழ்ந்தோர் எல்லாரும் பரம ஏழைகளாக இருந்தனர். 11 மாத காலத்திற்கு அவர் அங்குதான் வாழ்ந்தார். அங்கிருந்த நாட்களில்தான் அவர் நன்கு பக்குவமடைந்தார். தனது ஓய்வு நேரங்களை எப்படி செலவிட வேண்டும், எதை சாப்பிட வேண்டும் என்பதை எல்லாம் அவராகவே தீர்மானிக்க வேண்டியதாகவிருந்தது. அந்த இடத்தில் அவர் மிக எளிமையான உணவுகளையே அருந்தினார். அடிக்கடி தனிமையில் அவர் அந்த சேற்றுப் பகுதியில் உலாவிக் கொண்டிருக்கும்போது சீன தேசத்தில் அவர் செய்யப்போகும் வருங்கால மிஷனரி பணியை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படியாக ஆண்டவரிடம் உள்ளம் உருகி மன்றாடி கெஞ்சி வந்தார். அவர் வாழ்ந்த அந்த இடத்தில் அவருடைய செலவுகள் மிகவும் குறைவாகவே இருந்தன. தனது மருத்துவர் ஹார்டி தனக்கு சம்பளமாகக் கொடுத்த பணத்தில் மூன்றில் இரண்டு பகுதி மீதியாயிற்று. அந்தப் பணத்தை எல்லாம் அவர் தன்னைச் சுற்றி வாழ்ந்த ஏழை எளியோருக்கு கொடுத்துவிட்டு கர்த்தருக்குள் களிகூர்ந்தார்.

அவருடைய மருத்துவ படிப்புகள் எல்லாம் நல்லவிதமாக முன்னேறின. மனிதனுடைய உடற்கூறு சம்பந்தமான கல்வியுடன் இரத்தத்தை ஆராயும் பரிசோதனைகளையும் தனது மருத்துவர் ஹார்டியுடன் இணைந்து மேற்கொண்டார். அதற்காக ஒரு பூனையையும் அறுத்து பரிசோதனை செய்தனர். மருத்துவர் ஹார்டியுடன் இணைந்து மக்களுக்கு நிறைவேற்றும் அறுவை பரிசோதனைகளை எல்லாம் ஹட்சன் தேதி வாரியாக குறிப்பெடுத்து நோட்டுகளில் பதிவு செய்து வைத்துக் கொண்டார். பின் நாட்களில் சீன மக்களுக்கு மேற்கொள்ளும் மருத்துவ பணிகளில் அவை தனக்குப் பெரிதும் பயன்படும் என்று அவர் நிச்சயித்துக் கொண்டார்.

தன்னுடைய எல்லா முயற்சிகளிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் அபரிதமாக இருக்க வேண்டுமென்ற தாகத்துடன் அவர் தமது ஜெபங்களை பரத்துக்கு நேராக ஏறெடுத்துக் கொண்டே இருந்தார். உலகப்பிரகாரமாக தனக்கு எந்த ஒரு பட்டமோ படிப்போ இல்லாதபோதினும் ஆண்டவருடைய ஊழியத்திற்காக தான் எந்த ஒரு குருத்துவ பயிற்சியையும் வேதாகம கல்லூரிகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளாத போதினும் அவர் அதைக் குறித்து சோர்ந்து போகாமல் தேவன் தமது பரிசுத்த மக்களைக் கடந்த கால நாட்களில் அந்தவித தகுதிகள் எதுவுமில்லாமல் தமது பரிசுத்த நாம மகிமைக்காக மாமாட்சியாக எடுத்தாண்டு அவர்களை பயன்படுத்திய சாட்சிகளை வாசித்து தனது விசுவாசத்தை நன்கு பெலப்படுத்திக் கொண்டார்.

 
கர்த்தர் ஒருவரையே சார்ந்து கொள்ள
கற்றுக்கொண்ட தேவ மனிதர்

வேதாகமத்தில் தேவனுடைய இரண்டு வசனங்கள் ஹட்சன் டெய்லர் உள்ளத்தில் ஆழமாக வேர் ஊன்றியிருந்தது. "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவை எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலி 4 : 19) அடுத்த தேவ வசனமும் அதே பிலிப்பியர் நிருபத்தின் 3 ஆம் அதிகாரம் 7 ஆம் வசனம் முதல் 12 ஆம் வசனம் வரை அடங்கியுள்ளதாகும்.

ஹட்சன் தன்னை நேசித்த தனது அன்பின் ஆண்டவருக்காக வாழ்க்கையில் எதையும் ஏன்? தனது ஜீவனையே அவருக்காக தியாகம் செய்யவும் ஆயத்தமாக இருந்தார். தனது ஆண்டவர் தனது தேவைகள் எல்லாவற்றையும் சந்தித்து வருகின்றார் என்பதை அவர் நன்கறிந்திருந்தார். தனது வாழ்வின் பல சந்தர்ப்பங்களிலும் தனது விசுவாசமுள்ள ஜெபங்களுக்கு தேவனிடமிருந்து கிடைத்த ஆச்சரிய அற்புத பதில்களால் அவர் உள்ளம் பூரித்துப் போயிருந்தார். எனினும், ஆண்டவருடைய வெகு திட்டவட்டமான வழிநடத்துதல்களை தான் இன்னும் இங்கிலாந்து தேசத்தில் இருக்கும்போதே தனது அனுபவத்தில் பிரத்தியட்சமாகக் காண வேண்டுமென்ற தாகம் அவருக்கு அதிகமாக இருந்தது.

இங்கிலாந்து தேசத்தைவிட்டு சீன தேசத்திற்கு தான் மிஷனரியாகச் சென்றதும் தனது நண்பர்கள், உற்றார் உறவினர்கள் எவருடைய ஒத்தாசையும் தனக்கு கிடைக்காது என்பதையும் தனது ஆண்டவர் ஒருவர் மாத்திரமே தனது அன்றாடக தேவைகளை சந்திக்கக்கூடியவர் என்பதையும் அவர் திட்டமாக அறிந்திருந்தார். தேவன் தன்னை ஒருக்காலும் கைவிடமாட்டார் என்பதை அவருடைய மாறாத ஜீவ வார்த்தைகள் மூலமாக அவர் நன்கு அறிந்திருந்த போதினும் அதை இங்கிலாந்து தேச கடற்கரைகளை தாண்டிச் செல்லு முன்னர் தன்னளவில் நன்கு அனுபவத்தின் மூலம் கண்டறிந்து கொண்டு விடவேண்டுமென்று அவர் உறுதி எடுத்துக் கொண்டார்.

மருத்துவ பணியில் தான் உதவி செய்த மருத்துவர் ராபர்ட் ஹார்டி என்பவர் 3 மாதங்களுக்கு ஒரு தடவைதான் மொத்தமாக ஹட்சனுக்கு சம்பளம் கொடுப்பார். சரியாக மூன்று மாதங்கள் முடிந்ததும் சம்பளத்திற்கு தன்னை நினைப்பூட்டி விடும்படியாக ஹார்டி அவரைக் கேட்டிருந்தார். எனினும், ஹட்சன் தனது சம்பளத்திற்காக மருத்துவரை நினைப்பூட்டக்கூடாதென்றும், தனது நினைப்பூட்டுதலை கர்த்தர் ஒருவருக்கே தெரிவித்து அவரை மருத்துவர் உள்ளத்தில் பேசி தனது சம்பளத்தை கொடுக்கும்படியாக ஏவிவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு விசுவாசத்துடன் ஜெபித்து வந்தார். இதின் மூலம் தேவன் தனது விசுவாச ஜெபத்திற்கு பதில் அளிக்கின்றார் என்பதை கண்டு கொள்ள அவர் விரும்பினார்.

 
400 சதவீத வட்டியுடன் தனது கடனை
கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொண்ட ஹட்சன்

ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமை ஆராதனைக்குப்பின்னர் அவர் பட்டணத்தின் மிகவும் வறுமைப்பட்ட ஏழை எளிய மக்கள் வாழ்கின்ற சேரிப்குதிக்குச் சென்று அவர்களுடன் கலந்து உறவாடி சுவிசேஷ ஊழியமும் செய்து வந்தார். அது அவருக்கு மட்டில்லாத சந்தோசத்தை அளித்ததுடன் ஏழை சீன தேசத்தில் தனது வரவிருக்கும் மிஷனரி ஊழியப்பணிக்குத் தன்னை ஆயத்தப்படுத்துவதாகவும் இருந்தது.

அந்த நாட்கள் ஒன்றின் இரவு 10 மணிக்கு ஒரு ஏழை மனிதன் ஹட்சன் டெய்லரிடம் வந்து மரித்துக் கொண்டிருக்கும் தனது மனைவியை உடனே காண வரும்படியாக சேரிப்பகுதிக்கு அவரை வருந்தி அழைத்தான். அந்த மனிதன் ஒரு அயர்லாந்து தேச குடிமகன் என்பதைக் கண்ட ஹட்சன் தனது சபை குருவானவரை ஏன் அழைத்து ஜெபிக்கவில்லை என்று அவனிடம் கேட்டபோது, தான் அவரை அழைத்ததாகவும், ஆனால் அவர் தான் வந்து ஜெபிப்பதற்கு ஒரு ஷில்லிங்கும் ஆறு பென்சுகளும் தரும்படியாக வற்புறுத்திக் கேட்பதாகவும் கூறினான். அவனது குடும்பமே வறுமையின் காரணமாக பட்டினியில் வாடிக்கொண்டிருந்ததால் அந்தப் பணத்தை குருவானவருக்கு தன்னால் கொடுக்க முடியவில்லை என்றும் சொன்னான். பொருளாதார நிலையில் அந்த ஏழைக் குடும்பத்திற்கு எப்படியும் உதவி செய்தே ஆக வேண்டும் என்று ஹட்சன் தன்னளவில் மனதார உணர்ந்தார். ஆனால் அவரது சட்டைப் பையில் 5 ஷில்லிங் மதிப்புள்ள ஒரு கிரவுண் நாணயம் மாத்திரமே அவரது கடைசிப் பணமாக இருந்தது. அன்றைய நாளின் இரவு சாப்பாட்டுக்கும், அடுத்த நாள் காலைக்கும் தனக்கு வீட்டில் போதுமான ஆகாரம் இருந்தது. ஆனால் அதற்கு மேல் அவரிடம் ஒன்றுமில்லை. ஏதாவது சில்லரையாக பணம் இருந்தாலும் ஒரு ஷில்லிங்கை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை தனக்கென்று வைத்துக் கொள்ளலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் அப்படி சில்லரையும் அவரிடம் இல்லை. ஹட்சன் அந்த மனிதனிடம் அடுத்த நாள் அவர்கள் வீட்டிற்கு வருவதாக கூறினார். ஆனால், அந்த மனிதன் அதற்குள்ளாக தனது மனைவி இறந்துவிடுவார்கள் என்று கூறவே ஹட்சன் உடனே அந்த மனிதனுடன் அவனுடைய வீட்டிற்குச் சென்றார். அந்த மனிதன் வாழ்கின்ற இடத்திற்கு கடந்த முறை சுவிசேஷம் அறிவிக்கச் சென்றபோது ஹட்சன் அங்குள்ள பொல்லாத மக்களால் அடிபட்டதுடன் இனிமேல் அந்தப் பகுதிக்கு வரக்கூடாதென்று அவர்களால் எச்சரித்தும் அனுப்பப்பட்டிருந்தார்.

சீக்கிரமாக ஹட்சன் அந்த மனிதனுடைய குடிசை வீட்டிற்கு வந்து சேர்ந்தார். பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் அவனுடைய 4 அல்லது 5 குழந்தைகள் அங்கிருந்தனர். அந்த மனிதனின் மனைவி அழுக்கான கந்தைப் படுக்கையில் தனது பச்சிளம் குழந்தையோடு படுத்திருந்தாள். அந்த ஏழைப்பெண் தனது மரணத்தை எதிர்நோக்கினவளாக முணங்கிக் கொண்டே படுத்திருந்தாள். அந்த மனிதனுக்கு தான் சொன்ன ஆறுதலான வார்த்தைகள் எதுவும் அந்தச் சூழ்நிலையில் தேவையில்லை என்பதை ஹட்சன் கண்டு கொண்டார். மரித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்காக முழங்காலூன்றி ஜெபித்துவிட்டு அவர் எழும்பியபோது அந்த ஏழை மனிதன் தங்களுக்கு ஏதாவது உதவி செய்ய மனதுருகி மன்றாடினான். "எங்களுடைய நிர்ப்பந்தமான நிலையைப் பார்த்து கர்த்தருக்காக எங்களுக்கு உதவி செய்யுங்கள்" என்ற வார்த்தைகளை ஆண்டவரிடமிருந்து தனக்கு வந்த நேரடி வார்த்தைகளாக ஹட்சன் எடுத்துக் கொண்டு உடனே தனது பாக்கெட்டில் கைபோட்டு தன் வசமிருந்த 5 ஷில்லிங் நாணயத்தை எடுத்து அந்த ஏழை மனிதனுக்குக் கொடுத்துவிட்டார். தன் வசமுள்ள கடைசிப் பணம் அதுவே என்பதை அவர் அந்த ஏழை மனிதனுக்குக் கூறினதுடன் கர்த்தர் தன்னை போஷித்து நடத்துவார் என்றும் சொன்னார். அந்தப் பணம் முழுவதையும் அந்த ஏழை மனிதருக்கு கொடுத்ததின் பின்னர் ஹட்சனுடைய இருதயம் பரலோக ஆனந்த மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்தது. அந்த நாளின் இரவில் அவர் தனது வாயில் கர்த்தருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தவராக தனது வீடு திரும்பினார். தனது இராச்சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு தனது படுக்கையண்டை முழங்காலூன்றி "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கின்றான், அவன் கொடுத்ததை அவர் அவனுக்குத் திரும்பக் கொடுப்பார்" என்ற வேத வசனத்தை ஆண்டவருக்கு நினைப்பூட்டி அடுத்த நாள் மத்தியானத்துக்கு அவருக்கு சாப்பாடு இல்லையாதலால் தனது கடனை விரைவாக செலுத்திவிடும்படியாக ஆண்டவரிடம் கூறிவிட்டு மிகவும் தேவ சமாதானத்தோடு படுத்துக் கொண்டு நித்திரை செய்தார்.

அடுத்த நாள் காலை தனது கடைசி ஆகாரத்தைப் புசிக்கும்படியாக தனது ஆகாரத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த அவர் தனது அறையின் கதவு தட்டப்படுவதை கவனித்தார். அவர் குடியிருந்த வீட்டின் சொந்தக்கார அம்மா திருமதி ஃபிஞ்ச் அவர்கள் அந்த நாளில் அவருக்கு தபாலில் வந்த ஒரு பார்சலை அவருக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். பொதுவாக திங்கட் கிழமை அவருக்கு எந்த ஒரு தபாலுமே வராது. ஆனால் அன்று அந்த பார்சல் வந்திருந்தது. அதில் குழந்தைகள் கரத்திற்குப் போடும் ஒரு ஜோடி கையுறை இருந்தது. அந்தக் கையுறைகளின் ஒன்றிலிருந்து 10 ஷில்லிங் மதிப்புள்ள அரை தங்க நாணயம் கீழே விழுந்தது.

"கர்த்தருக்கே துதி உண்டாவதாக. 12 மணி நேர முதலீட்டுக்கு 400 சதவீத வட்டியா? மிகவும் நல்லதொரு வட்டிதான்" என்று ஹட்சன் தன்னையறியாமல் கர்த்தரை துதித்து மகிழ்ந்தார். இந்தச் சம்பவம் ஹட்சனின் விசுவாச வாழ்க்கையை பெரிதும் பெலப்படுத்துவதாக அமைந்தது. தனக்கு இப்பொழுது கிடைத்த இந்த 10 ஷில்லிங்குகளும் இன்னும் நீண்ட நாட்கள் ஆகாரத்திற்கு போதுமானதாக இருந்தது.

இப்பொழுது அவருடய சம்பளம் தனது மருத்துவர் டாக்டர் ராபர்ட் ஹார்டியிடமிருந்து வரவேண்டிய நாளாயிற்று. சொல்லப் போனால், அவரது சம்பளம் வந்து கிடைக்க வேண்டிய நாட்களுக்கும் மிகவும் அதிகமாகப் பிந்திவிட்டது. ஹட்சன் தனது முழங்கால்களில் நின்று டாக்டர் ஹார்டியை தன்னுடைய சம்பளத்தை உடனே அவருக்குக் கொடுக்கும்படியாக அவரிடம் பேசவேண்டுமென்று கர்த்தரை நோக்கிக் கெஞ்சினார். ஹட்சன் தனது வாடகை வீட்டிற்கு வாடகைப்பணம் செலுத்த வேண்டிய நாளாயிற்று. தான் குடியிருந்த வீட்டின் சொந்தக்கார கிறிஸ்தவ அம்மையார் தனக்கு வர வேண்டிய வீட்டு வாடகைப்பணம் சரியான வேளைக்கு தனக்கு வந்து கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் கண்டிப்பான நபராவார்கள். ஏறக்குறைய ஒரு வார கால தொடர்ச்சியான ஜெபத்திற்குப் பின்னும் டாக்டர் ஹார்டியின் மனதில் ஹட்சனுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமென்ற நினைவு ஏற்படவில்லை. எனினும், ஹட்சன் மனம் சோர்ந்து போகாமல் தேவ சமூகத்தில் காத்திருந்து ஜெபித்துக் கொண்டேயிருந்தார்.

ஒரு சனிக்கிழமை மாலை டாக்டர் ஹார்டி நோயாளிக்கு ஒரு மருந்து சீட்டை எழுதிக் கொடுத்துவிட்டு ஹட்சனைப் பார்த்து "உங்கள் சம்பள பாக்கியை நான் தரவேண்டுமல்லவா? திரும்பவும் அது கால தாமதமாகிவிட்டதே" என்று கேட்டார். அந்த வார்த்தைகளைக் கேட்ட ஹட்சன் ஆச்சரியப்பட்டு மனதில் ஆண்டவருக்கு நன்றி செலுத்திவிட்டு அமைதியாக "தனது சம்பள பாக்கி மிகவும் கால தாமதமாகிவிட்டது" என்று சொன்னார். "நான் எத்தனை வேலை பழுவுள்ளவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னை நீங்கள் முன்பே நினைப்பூட்டியிருக்கலாம் அல்லவா? என் வசமிருந்த பணத்தை எல்லாம் வங்கியில் போட்டுவிட்டேன். இப்பொழுது உங்களுக்குக் கொடுக்க என் வசம் பணமில்லை. பணம் இருக்கும் பட்சத்தில் இந்த நிமிஷமே உங்களுக்குக் கொடுத்துவிடுவேன்" என்று டாக்டர் அவரைப் பார்த்துச் சொன்னார்.

ஹட்சன் சற்று மனம் சோர்படைந்த நிலையில் தனது அறைக்கு வந்தார். எனினும், டாக்டர் ஹார்டியுடன் ஆண்டவர் சம்பள பாக்கி விஷயமாக அவரை நினைப்பூட்டியதற்காக அவருக்கு முழங்காலூன்றி நன்றி தெரிவித்துவிட்டு அடுத்த நாள் ஓய்வு நாளில் தேவாலயத்திலும், சேரிப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் மத்தியில் செய்யவிருக்கும் தனது தேவ ஊழியத்திற்காக தேவனுடைய வார்த்தைகளை வாசித்து தன்னை ஆயத்தம் செய்துவிட்டு தனது மேல் கோட்டை எடுத்துப்போட்டுக் கொண்டு தனது அறையிலிருந்த காஸ் அடுப்பை மூடிவிட்டு வெளியே புறப்படும் நேரம் தனது மருத்துவர் ஹார்டி சிரித்துக் கொண்டே தனது அறைக்கு நேராக கீழே பின் வளவில் இரவின் அந்த நேரம் வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். ஹட்சனின் அறைக்கு வந்த அவர் தனது பணக்கார நோயாளி ஒருவர் தான் கொடுக்க வேண்டிய கடன் பாக்கியை அந்த இரவு நேரத்தில் வந்து அப்பொழுதுதான் கொடுத்துவிட்டுப் போனதாகவும், அதிலிருந்து ஹட்சனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை தான் கொடுப்பதாகவும் கூறி சில்லரை இல்லாத காரணத்தால் வழக்கத்திற்கு மாறாக கூடுதலான பண நோட்டுகளை அப்படியே அவருடைய கரங்களில் அன்பாக கொடுத்துவிட்டுச் சென்றார். ஹட்சன் தனது அன்பின் ஆண்டவரின் தயவையும், உண்மையையும் எண்ணி அவரைப் போற்றித் துதித்தார். "இந்த நிகழ்ச்சியானது குறிப்பிடத்தக்க ஒரு பெரிய சம்பவமாக இல்லாதபோதினும், பின் நாட்களில் சீனாவிலும், இதர பகுதிகளிலும் தேவ ஊழியத்தின் பாதையில் எனக்கு நேரிட்ட மாபெரும் கஷ்டமான சூழ்நிலைகளில் எல்லாம் அவைகளை நான் தைரியத்துடன் கடந்து வர இந்தச் சம்பவம் எனக்கு அளித்த ஆறுதலும், பெலனும் அத்தனை பெரியதொன்றாகும்" என்று கூறினார்.

"டிரெயின்ஸைட்" என்ற இடத்தில் இருந்த நாட்களில் எல்லாம் ஹட்சன் தனது ஆண்டவருடனான நெருக்கமான உறவில் ஆழமாக வளர்ந்தார். கர்த்தர் தன்னை இரட்சித்ததையும், தமது பணிக்காக சீன தேசத்திற்கு அழைத்ததையும் அவர் தன்னளவில் முழுமையாக நிச்சயித்துக் கொண்டார். அதுமட்டுமல்ல, அந்த அன்பின் ஆண்டவரை எக்காலத்திலும் நம்பி அவரை பூரணமாக சார்ந்து கொள்ளலாம் என்ற நிச்சயத்தையும் அவர் பெற்றுக் கொண்டார். தன்னுடைய இங்கிலாந்து தேசத்தை விட்டு விட்டு கிறிஸ்து இயேசுவுக்குள்ளான ஆராய்ந்து முடியாத அளவிடற்கரிய கிருபையின் ஐசுவரியத்தை பாவ இருளில் மூழ்கிக்கிடக்கும் சீன மக்களுக்கு என்றைக்குச் சென்று பிரசங்கிக்கலாம் என்ற அந்த நாளுக்காக ஆசை ஆவலாக காத்துக் கொண்டிருந்தார். தினமும் சில மணி நேரங்களை வேத வசன தியானத்திலும், ஜெபத்திலும் அவர் செலவிட்டு தேவனுடைய வார்த்தையில் அவர் கண்டு பிடிக்கும் வாக்குத்தத்தங்களில் அவர் களிகூர்ந்தார். தனது இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் சாயல் தன்னிலும் காணப்பட வேண்டும் என்ற பரலோக வாஞ்சை அவருக்கு இருந்ததுடன் தேவன் தன்னை தாழ்மையுள்ள மனிதனாக கடைசி வரை காத்துக்கொள்ளும்படியாக தேவ மக்கள் தனக்காக ஜெபிக்கும்படியாக அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

 
சீன தேச நீண்ட கப்பல் யாத்திரை

ஹட்சன் தனது நீண்ட கப்பல் யாத்திரையை ஆரம்பிப்பதற்கு முன்பாக அநேக காரியங்களை ஒழுங்கு செய்ய வேண்டியதாக இருந்தது. லண்டனில் சில காலம் ஹட்சன் பணிசெய்த டாக்டர் பிரவுண் என்பவருடைய சேவையிலிருந்து தனது மிஷனரி பணி காரணமாக ராஜிநாமா செய்து கொண்டபோதினும் அந்த அன்பான மனிதர் அதைப் பொருட்படுத்தாமல் தனது வீட்டிலேயே தங்கியிருந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொள்ள ஹட்சனுக்கு அனுமதி கொடுத்தார்.

அதின்படி அவர் பிரவுண் வீட்டில் தங்கியிருந்து தனது மருத்துவ பணிக்கான உபகரணங்கள், மருந்துகள் போன்வற்றை வாங்கினார். அறுவை சிகிட்சையில் அவயங்களை நீக்குவதற்கான கூர்மையான கருவிகள், பல் வைத்தியத்திற்கான சாதனங்கள், பெண்கள் பிரசவத்தின்போது பயன்படுத்தும் உபகரணங்கள் போன்றவற்றை எல்லாம் அவர் வாங்கினார்.

அடுத்து அவர் தனக்கு அன்பானவர்களிடம் பிரியா விடை கொடுக்க பல இடங்களுக்கும் போக வேண்டியதாக இருந்தது. ஹட்சன் தான் பிறந்த பார்ன்ஸ்லே ஊருக்குச் சென்று தனது குடும்பத்தினருடனும், உற்றார் உறவினர்களுடனும் கொஞ்ச நாட்கள் செலவிட்டார். அந்த நாட்களில் தாம் செல்லமாக வீட்டில் வளர்த்து வந்த தனது 2 அணில் பிள்ளைகளை அவர் தனது தங்கைகள் அமலியாவிற்கும், லூயிசாவுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார்.

லண்டனுக்கு திரும்பி வந்த ஹட்சன் டாட்டன்ஹாம் என்ற இடத்தில் உள்ள தேவ மக்கள் மத்தியில் பேச ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திலுள்ள தேவ மக்கள் தங்கள் ஜெபங்களாலும், பொருள் உதவியினாலும் அவரை ஆதரிக்க முன் வந்தனர். ஹட்சன் சீனாவுக்கு பயணப்படும் நாட்கள் நெருங்கி வரவே அவருடைய தாய் தந்தையர் சொந்த ஊரான பார்ன்ஸ்லே என்ற இடத்திலிருந்து லிவர்பூல் பட்டணத்தில் வந்து தங்கியிருந்தனர். ஹட்சன் சீனாவுக்குச் செல்லும் கப்பலானது பழுது பார்க்கும் வேலையால் தாமதித்த போது அவரை வழி அனுப்ப வந்த அவரது தகப்பனார் தனக்குள்ள அதிக வேலைகளின் காரணமாக உடனடியாக ஊர் திரும்ப வேண்டியதானது. ஹட்சனும், அவருடைய தாயாரும் ஹட்சனின் தந்தையை ரயில் நிலையம் வரை வழி அனுப்பச் சென்றனர். அங்கே மனதுருக்கம் நிறைந்த இறுதி விடைபெறுதல் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடந்தது. தந்தை ஏறியிருந்த ரயிலானது விரைந்து ஓட்டம் பிடிக்கும் நேரம் வரை ஹட்சன் தனது அன்புத் தந்தையின் கரத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டே பிளாட்பாரத்தில் விரைந்து ஓடினார். அந்தக் காட்சி கண்களை கண்ணீரால் குளமாக்கும் காட்சியாக இருந்தது. ரயில் வேகமாக தண்டவாளத்தில் ஓடி மறைந்தது. ரயிலின் காட்சி மறையவும் தனது அன்புத் தந்தையை இனி நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் பூலோகத்தில் சந்திக்க முடியுமா என்ற சொல்லொண்ணா துயரத்துடன் ஹட்சன் ஒருகணம் சிந்தித்துப் பார்த்தார்.

லண்டனிலிருந்த சொற்பமான நாட்களில் இங்கிலாந்திலிருந்த தனக்கு அருமையானவர்களுக்கு அவர் கடிதங்களை எழுதினார். ஆண்டவருடைய இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொள்ளாத தனது அன்புத் தங்கை லூயிசாவிற்கு "தான் எங்கிருந்தாலும் அவளுடைய இரட்சிப்புக்காக தவறாது பாரத்தோடு ஜெபிப்பதாக வாக்குறுதி கொடுத்து" கடிதம் எழுதினார். தனது அன்புத் தந்தைக்கு எழுதின கடிதத்தில் "பாசமுள்ள அன்புத்தந்தையே, நான் நமது இங்கிலாந்து தேசத்தையும் உங்களையும் சரீரப் பிரகாரமாக ஒரு வேளை இனிமேல் சந்திக்கக் கூடாது போனாலும், நாம் ஒருவரைவிட்டு ஒருவர் இனி ஒருபோதும் பிரியாத நிலையில் நாம் எல்லாரும் ஒன்றாக பரலோகில் கூடப்போகும் ஆனந்த நாளை எண்ணி ஆனந்தக் களிகூருகின்றேன். தேவ சமாதானம் உங்களை ஆண்டு கொள்ளுவதாக. அன்பின் ஆண்டவர் உங்களை அநேகம் பாவ மாந்தரை இயேசு இரட்சகரண்டை வழிநடத்தப் பயன்படுத்துவாராக. நான் உங்களுடைய மனம் புண்படும் விதத்தில் நடந்து கொண்ட எனது எல்லா பாவத் தவறுகளையும் தயவாக எனக்கு மன்னியுங்கள் என்ற அன்பின் வேண்டுகோளோடு எனது கடிதத்தை முடிக்கின்றேன்" என்று எழுதினார்.

 
பெற்ற தாயாரிடம் விடை பெற்றுக் கொண்டது.

சீன தேச கப்பல் யாத்திரையை ஆரம்பிப்பதற்கு முந்தைய நாள் இரவில் ஹட்சன் டெய்லரும் அவருடைய தாயாரும் ஒரு ஹோட்டல் அறையில் இறுதியாகச் சந்தித்தனர். "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக" என்று அன்பின் ஆண்டவர் தமது அடியார்களாம் சீடர்களுக்கு கடைசியாக கூறின ஆறுதல் வார்த்தைகளடங்கிய யோவான் 14 ஆம் அதிகாரத்தை ஹட்சன் வாசித்தபோது அவரின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. சீனா தேசத்திலுள்ள நஷ்டப்பட்ட சீனர்கள் இரட்சகர் இயேசுவை காணவேண்டுமென்று அவர் அந்த வேளை மன்றாடினார். தனது அன்பான குடும்பத்தினர், உற்றார் உறவினர், நண்பர்களுக்காக அவர் ஜெபித்தபோது அவர் கண்களிலிருந்து திரும்பவும் கண்ணீர் வடிந்தது. தாங்கள் அன்பாக நேசிக்கும் தங்கள் அன்பின் ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து தனது அருமைக் குமாரன் சீன தேசத்திற்கு பயணப்படுகின்றார்கள் என்ற ஆனந்தத்தில் ஹட்சனின் தாயார் கர்த்தரில் களிகூர்ந்தார்கள். எனினும் தாயன்பின் பாசம் அவர்களை பொங்கி பொங்கி அழ வைத்தது. "அம்மா அழவேண்டாம். நம்முடைய பிரிவு மிகவும் சொற்ப காலத்திற்குரியது. நாம் திரும்பவும் ஒன்று கூடுவோம். நான் உங்களைவிட்டு பிரிந்து செல்லுகின்ற நோக்கம் மாமகிமையானது. செல்வம் தேடவோ அல்லது பெயர் புகழை சம்பாதிக்கவோ நான் சீன தேசத்திற்குச் செல்லவில்லை. ஏழை சீன மக்கள் ஆண்டவர் இயேசுவைக் குறித்த அறிவை எப்படியாவது கண்டடைந்து நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டுமே என்ற தாகத்தில் நான் செல்லுகின்றேன்" என்று கூறி ஹட்சன் தனது தாயை ஆறுதல்படுத்தினார்.

ஹட்சன் சீன தேசத்திற்கு புறப்படும் நாளான திங்கள் கிழமை வந்து சேர்ந்தது. அவருடைய தாயாரும், அவரை சீன தேசத்திற்கு மிஷனரியாக அனுப்பும் "சீன சுவிசேஷ நற்செய்தி ஸ்தாபனத்தின்" அங்கத்தினர் ஜியார்ஜ் பியர்ஸ் மற்றும் தேவ பக்தியுள்ள நண்பர்கள் சிலரும் அவரை அவர் பயணிக்கும் டம்ஃபிரைஸ் கப்பலின் அவருடைய தனி அறைக்கு அழைத்துச் சென்றனர். கப்பலின் அந்த தனித்த அறைக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது பரிசுத்த ஆவியானவர் அந்த அறையை தமது பிரசன்னத்தால் நிரப்பியிருப்பதை அவர்களால் நன்கு கண்டு கொள்ள முடிந்தது. "நல் மீட்பர் இயேசு நாமமே என் காதுக்கின்பமாம்" என்ற பாடலையும் இன்னும் சில பாடல்களை சங்கீதத்திலிருந்து அவர்கள் பாடினார்கள். ஆறுதலான வேத பகுதிகள் வாசிக்கப்பட்டன. உள்ளம் உருகிய ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன. கப்பல் புறப்படுவதற்கான மணி அடிக்கப்பட்டபோது எல்லாரும் தாங்கள் பிரிவதற்கான வேளை வந்துவிட்டதை உணர்ந்தார்கள். ஹட்சனின் தாயார் அதிகமாக அழுதபடியால் அவர்களை கைத்தாங்கலாக கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர். ஆண்டுகள் பல கடந்த பின்னர் ஹட்சன் டெய்லர் அந்த கடைசி மணி நேரங்களை குறிப்பிட்டு கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கின்றார்:-

"என்னுடைய பரிசுத்தவாட்டியான தாயார் என்னைக் காண்பதற்காக லிவர்பூல் பட்டணத்திலிருந்து வந்திருந்தார்கள். அடுத்து வரும் 6 மாத காலங்களுக்கு நான் தங்கிப் பிரயாணம் செய்யப்போகும் எனது வீடான கப்பலின் சிறிய அறைக்கு வந்திருந்த அந்த நாளை என்னால் ஒருக்காலும் மறக்கவே முடியாது. எனது தாயாரின் அன்புக் கரங்கள் நான் நித்திரை செய்யப்போகும் படுக்கையை அப்படியே தடவிப்பார்த்து உள்ளம் கசிந்தது. என்னைவிட்டு நீண்ட பிரியாவிடை பெறு முன்னர் எனது தாயார் என் அருகில் அமர்ந்து கடைசியாக கர்த்தருக்கு துதி ஸ்தோத்திர பாடலைப் பாடினார்கள். அவர்களுடன் வந்திருந்த மற்ற தேவ பிள்ளைகளும் அதைச் சேர்ந்து பாடினார்கள். அதற்கப்பால் நாங்கள் எல்லாரும் கப்பலின் அந்த சிறிய அறையில் முழங்காலூன்ற எனது தாயார் தனது கடைசி ஜெபத்தை எனக்காக ஏறெடுத்தார்கள். அதின் பின்னர் நாங்கள் எல்லாரும் பிரிந்து செல்லும்படியாக கப்பலில் அறிவிப்பு கொடுக்கவே பூலோகத்தில் நாங்கள் இனி ஒன்றாகக் கூடுவோம் என்ற துளிதானும் நம்பிக்கையில்லா நிலையில் நாங்கள் பிரிந்து செல்ல வேண்டியதாகவிருந்தது.

என்னிமித்தமாக என் அருமைத்தாயார் தனது உணர்வுகளை முடிந்தவரை அடக்கி அமர்த்திக் கொண்டார்கள். நாங்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தோம். தனது ஆசீர்வாதத்தை தாயார் எனக்குக்கூறிவிட்டு கடற்கரைக்குச் சென்றுவிட்டார்கள். நான் கப்பலின் மேல் தட்டில் தனிமையாக நின்று கொண்டிருந்தேன். கப்பல் கடற்கரையை ஒட்டி நகர்ந்து சென்று கொண்டிருந்த வேளையில் அம்மாவும் கப்பலை ஒட்டியே விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். அதின் பின்னர் நான் கப்பலின் மேல் தளத்தில் கிடந்த பெருங்குவியலான கயிறுகள் மற்றும் பாய்மரப் பாய்கள் மேல் ஏறி நின்று இன்னும் கூடுதலான நேரம் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் என் கரத்திலிருந்த தொப்பியை அசைத்துக் காண்பித்தேன். அம்மாவும் அவர்களோடிருந்தவர்களும் தங்கள் கைகுட்டைகளை உயர்த்தி அசைத்தார்கள். கப்பல் கடற்கரை எல்லையைக் கடந்து ஆழ் கடல் எல்லைக்குள் நுழையவே எங்களுடைய உண்மையான பிரிவு ஆரம்பமானது. அந்த நேரத்தில் எனது தாயாரின் உள்ளத்தில் பொங்கி எழுந்த வியாகுலப் புலம்பலை என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது. அது ஒரு கூர்மையான கத்தியைப்போல என் இருதயத்தைக் கடந்து சென்றது. "தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனைத் தந்தருளி நம்மில் இவ்வளவாய் அன்புகூர்ந்தார்" என்ற ஆச்சரிய அன்பின் பதத்தின் பொருளை அந்த நேரம்தான் என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அழிந்து போகும் மனுக்குலத்துக்காக தேவன் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பை எனது அருமைத்தாயார் தனது வாழ் நாள் காலம் முழுமையிலும் அறிந்திருந்ததைவிட என்னைவிட்டு பிரியா விடை பெற்றுக் கொண்ட அந்த இறுதி மணி நேரத்தில்தான் மிகவும் அதிகமாக கண்டறிந்து கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்"

 
உயிர் மோசம் நிறைந்த கப்பல் பயணம்

அந்த நாட்களில் சமுத்திரத்தில் கப்பல் யாத்திரை செய்வது என்பது இந்த நாளின் யாத்திரைக்கு முற்றும் வித்தியாசமானது, மிகவும் உயிர் மோசம் நிறைந்தது. இங்கிலாந்தின் லிவர்பூல் பட்டணத்தில் கப்பல்கள் செப்பனிடும் கடல் துறையில் நங்கூரமிட்டு நின்ற மூன்றடுக்கு பாய்மரக்கப்பல் டம்ஃபிரைஸ் 468 டன்கள் எடை மட்டும் கொண்டதாகும். கப்பலின் தலைவன் ஒருவர். அவருக்கு உதவியாக 2 சக உதவியாளர்கள், 11 மாலுமிகள், ஒரு தச்சர், 2 உதவிப் பையன்கள், கப்பலில் வேலை கற்றுக்கொள்ள வந்த 2 பேர்கள், ஒரு சமையற்காரர், இவர்கள் யாவரையும் கப்பலின் பொருட்களையும் பாதுகாத்து நிற்கும் அதிகாரி ஒருவரும் இருந்தார். கப்பலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு உணவாக 36 கோழிகள், 24 வாத்துக்கள், 3 பன்றிகள், ஏற்றப்பட்டன. அத்துடன் கப்பலில் உள்ளவர்களுக்கு பொழுது போக்கு மனமகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்காக 2 பூனைகள், 2 நாய்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

ஹட்சன் அடுத்து வரும் 6 மாத கால கடல் பயண யாத்திரைக்காக தான் தங்கியிருக்கப்போகும் தனது அறையை நன்கு ஒழுங்குபடுத்திக் கொண்டார். தனது ஜீவனின் முழுமையான பாதுகாவல் இனி ஆண்டவருடைய கரங்களில் மட்டுமே உள்ளது என்பதை அவர் பூரணமாக நிச்சயப்படுத்திக் கொண்டார். அவர் லிவர்பூல் பட்டணத்திலிருந்து சீனா தேசத்திற்கு யாத்திரை செய்ய புறப்பட்ட 1853 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 19 ஆம் நாளானது அவரது வாழ்வில் எப்படி மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்ததோ அதேபோல அந்த நாளானது மற்றொரு முக்கியமான நிகழ்ச்சியையும் தன் வசம் கொண்டிருந்தது. இங்கிலாந்திலுள்ள வேதாகம சங்கம் 50 ஆயிரம் பவுண்டுகளை திரட்டி 10 லட்சம் சீன மொழி புதிய ஏற்பாடுகளை அச்சிட்டு சீன மக்களுக்கு கொடுப்பது என்ற தீர்மானத்தை அன்றைய தினம்தான் எடுத்திருந்தது.

கப்பல் யாத்திரை என்பது ஓய்வு எடுத்துக் கொள்ள இயலாத ஒன்று என்பதை ஹட்சன் வெகு விரைவிலேயே கண்டு கொண்டார். அடுத்து வந்த நீண்ட ஐந்தரை மாத காலங்களில் அவர் தனது அதிகமான நேரத்தை ஜெபத்தில் செலவிடவும், தேவனுடைய வார்த்தைகளை நன்கு வாசித்து தியானிக்கவும் முடிந்தது. ஆனால், கப்பல் புறப்பட்ட ஆரம்ப 12 நாட்களானது கடும் ஆபத்தான காலமாக அமைந்தது. கடற் புயல் மற்றும் ஆபத்தான பருவகால நிலை ஹட்சன் பயணித்த டம்ஃபிரைஸ் கப்பலைச் சந்தித்தது. பல தடவைகளிலும் கப்பல் உடைந்துவிடுமோ என்ற பீதி ஏற்பட்டது. அந்த இக்கட்டான துயர நாட்களைக் குறித்து ஹட்சன் இவ்வாறு எழுதுகின்றார்:-

 
கொடிய கடற் சூறாவழியில் சிக்கித் தவித்த
அங்கலாய்ப்பின் நாட்கள்

"எங்களுடைய கடற்பயணம் ஆரம்பத்திலேயே ஆபத்தான நிலையில் ஆரம்பித்தது. நாங்கள் மெர்சே என்ற இடத்தை விடவும் ஒரு கொடிய சூறாவழி காற்று எங்கள் கப்பலைத் தாக்கிற்று. அடுத்து வந்த 12 நாட்களுக்கு கப்பலானது சூறாவழியின் காரணமாக முன்னும் பின்னும் பலமாக ஆட்டி அசைத்து மோதி அடிக்கப்பட்டது. எந்த ஒரு நிலையிலும் நாங்கள் பிரதான சமுத்திரத்தினுள் செல்ல முடியாமல் அயர்லாந்து கால்வாயின் முகத்துவாரத்திலேயே அலைசடிப்பட்டுக் கொண்டு கிடந்தோம். காற்றழுத்தத்தைக் காண்பிக்கும் முள்ளானது இறங்கு திசையில் இறங்கி இறுதியில் ஒரு நிச்சயமான சூறாவழிப் புயலாக மாற்றமடைந்தது. கப்பலின் கேப்டன் தனது வாழ்வில் கடல் இத்தனை கோரமாக கொந்தளித்ததை என்றுமே காணவில்லை என்று கூறினார். மத்தியானம் 2 மணி சுமாருக்கு நான் கஷ்டத்துடன் கப்பலின் மேல் தளத்திற்கு ஏறிச் சென்றேன். அந்தக் காட்சியை என்னால் என்றுமே மறக்கவியலாது. கடல் அலைகளானது கப்பலை மோதி அடித்துக் கொண்டிருந்தது. கப்பலின் மேல் தளம் முழுவதும் அதின் காரணமாக வெண் நுரையால் நிறைந்து கிடந்தது. மலைபோல் கடல் அலைகள் கப்பலின் இரு பக்கங்களிலும் எழுந்து நின்று கப்பலை அப்படியே எடுத்து விழுங்கிவிடலாமா என்று காத்திருப்பதைப் போலக் காணப்பட்டது. மேற்கு திசையிலிருந்து வீசிய அந்த புயற்காற்றைக் கடந்து நாங்கள் கொஞ்சம் கூட முன்னேற முடியால் இருந்தோம். "அண்டவர் நமக்கு கை கொடுக்காத பட்சத்தில் நாம் தப்பிப் பிழைப்பது முற்றும் கடினம்" என்று கேப்டன் கூறினார்.

அது ஒரு பயங்கரமான நேரம். ஒரு தடவை சூறாவழி கப்பலை மோதும்போது அது பயங்கரமாக ஆகாயம் வரை கடலில் உயர்ந்து எழுந்து நிற்கும். அடுத்த முறை சூறாவழியில் கப்பலானது கடலின் அடிமட்டத்துக்கே சென்றுவிடும். இந்தவிதமான பயங்கரமான காட்சிகளோடு சூரியன் அஸ்தமனமானது"

இரவின் குளிர் ஒரு பக்கமிருக்க, கப்பலின் மேல் தட்டில் வீசிய அலைகளின் நுரைகள் அனைவரையும் நன்கு நனைத்து ஈரமாக்கிவிட்டது. தானும் தன்னுடன் கப்பலில் உள்ள அனைவரும் எந்த நேரத்திலும் கடலில் மூழ்கிவிடுவோம் என்பதை நன்குணர்ந்த ஹட்சன் தனது நேரத்தை எல்லாம் ஜெபத்திலேயே செலவிட்டுக் கொண்டிருந்தார். கண் விழிக்கும் போதெல்லாம் அவர் ஜெபத்திலே தரித்திருந்தார். ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத கப்பலின் மாலுமிகள் மற்றும் வேலையாட்கள் கடலில் மூழ்கி மாளப்போவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய மரணம் மற்றும் தன்னுடைய நித்திய பாதுகாப்பு குறித்து அவர் பயங்கொள்ளவில்லை. எனினும் கொந்தளிக்கும் சமுத்திரத்தில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி மடிவதை எண்ணி அவருக்கு அச்சமாகத்தான் இருந்தது. அவர் தம்முடைய நாட்குறிப்பில் அந்த திகிலூட்டும் மணி நேரங்களை குறித்து இவ்வாறு எழுதியிருக்கின்றார்:-

"நான் கப்பலினுள் எனது அறைக்கு இறங்கிச் சென்று ஒன்று அல்லது இரண்டு ஞானப்பாட்டுகளையும், சங்கீதங்களையும், யோவான் சுவிசேஷம் 13 முதல் 15 ஆம் அதிகாரங்களையும் வாசித்து அப்படியே ஒரு மணி நேரம் தூங்கிவிட்டேன். கண் விழித்துக் காற்றழுத்தமானியைப் பார்த்தபோது அது உயர்வதாக தெரிந்தது. கப்பலின் முன்னேற்றம் குறித்து கேப்டனை நான் அப்பொழுது கேட்டபோது "கப்பல் முன்னேற முடியாமல் இன்னும் சூறாவழியோடு போராடிக் கொண்டிருப்பதாகவும் உயிர் பிழைப்புக்கு வழியில்லாமல் கப்பல் கடலில் மிதந்து கொண்டிருப்பதாகவும்" சொன்னார். எங்களுடைய முடிவு இப்பொழுது முத்திரையிடப்பட்டுவிட்டது. அடுத்து வரும் 2 மணி நேரங்களுக்காவது நாம் உயிர் பிழைத்திருக்க கூடுமா என்று நான் அவரைக் கேட்டபோது அதுவும் கூட சொல்ல முடியாது என்று அவர் பதிலளித்தார். நான் எனது தாய் தந்தையர், உடன் பிறந்த சகோதரிகள், அன்பான நண்பர்களை நினைத்தபோது கண்ணீர் தானாக எனது கண்களிலிருந்து வடிய ஆரம்பித்தது. கப்பலின் கேப்டன் அமைதியாகவும், தைரியமாகவும் இருந்தார். தனது ஆத்தும இரட்சிப்பை குறித்து அவர் கர்த்தரில் உறுதியாக இருந்தார். அவரைப்போல கப்பலின் பணியாள் ஒருவரும் மரண பயமில்லாமல் கிறிஸ்து இரட்சகர் மேல் விசுவாசமுடையவராக காணப்பட்டார். அவர்களுக்காக நான் ஆண்டவருக்கு நன்றி துதி ஏறெடுத்தேன். அதே சமயம் மனந்திரும்பாத மற்ற கப்பல் பணியாளர்கள், மாலுமிகளுக்காக நான் ஆண்டவரிடம் உள்ளமுருகி ஜெபித்தேன். அந்த வேளை "ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்" (சங் 50 : 15) என்ற கர்த்தருடைய வார்த்தை எனது நினைவுக்கு வந்தது. அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும்படியாக தேவனிடத்தில் பரிந்து மன்றாடினேன்.

அது மிகவும் தெளிவான, மேகமூட்டமில்லாத ஒரு நிலவு காலமாக இருந்தது. கப்பல் பயணிகள் யாவருக்கும் முன்பாகவுள்ள பயங்கரமான ஆபத்தை உணர்ந்த ஹட்சன் தனது அறைக்குள் போய் ஒரு பாக்கெட் நோட்டுப் புத்தகத்தை எடுத்து அதில் அவருடைய பெயர், முகவரி யாவையும் தெளிவாக எழுதினார். கப்பல் மூழ்கிவிட்டாலும் தனது நாட்குறிப்பு பாக்கெட் நோட்டைக் கொண்டு தன்னை அடையாளம் கண்டு கொள்ள உதவும் என்று அவர் அப்படிச் செய்தார். அதற்கப்பால் அவர் தனது பொருட்களை எல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டி கப்பல் மூழ்கினாலும் தனது பொருட்கள் மிதந்து செல்லட்டும் என்று மூட்டை கட்டிவிட்டு கப்பலின் மேல் தளத்திற்கு வந்து நிலவரத்தை கேப்டனிடம் கேட்டபோது "நாம் அடுத்து வரும் 30 நிமிட நேரத்திற்கு மேலாக உயிர் வாழ இயலாது. தேவனுக்காக சீனாவில் மிஷனரியாக ஊழியம் செய்ய கர்த்தர் உங்களை அழைத்ததாக நீங்கள் சொன்னீர்களே, உங்கள் தேவ அழைப்பின் காரியம் என்னவானது?" என்று கேப்டன் ஹட்சனைப் பார்த்துக் கேட்டார். அதற்கு மாறுத்தரமாக அவர் "நான் சீனாவிற்குச் சென்றுவிடுவேன் என்று திட்டமாக விசுவாசிக்கின்றேன். ஒருக்கால் சமுத்திரத்தில் மூழ்க வேண்டியதாக இருந்தாலும் எனது இரட்சகரின் அழைப்புக்கு கீழ்ப்படிந்தவனாக அவருக்காக மரிப்பதை பாக்கியமாக கருதுகின்றேன்" என்று சொன்னார்.

இறுதியாக கப்பலின் கேப்டன் கப்பலை கடைசியாக ஒரு தடவை நுரை பொங்கிக் கொண்டிருந்த கொந்தழிக்கும் கடலில் அதின் ஓடு பாதையை கஷ்டத்தோடு மாற்ற முயற்சித்தார். அப்படி சில தடவைகள் செய்தபோது கர்த்தருடைய கிருபையால் கப்பல் அந்த இடத்திலிருந்து திடீரென வெளியேறி பிரதான பாதுகாப்பான சமுத்திரத்தினுள் வந்துவிட்டது. அதை அடுத்து கப்பலின் கேப்டனும், ஹட்சனும், மாலுமிகளும் இதர சிப்பந்திகளும் அளவில்லா ஆனந்தம் அடைந்து கர்த்தரின் அதிசயமான பாதுகாப்பை எண்ணி அவருக்கு துதி கீதம் பாடினார்கள்.

ஒரே ஒரு மாலுமிக்கு மாத்திரம் கையில் பலமான காயம் ஏற்பட்டிருந்ததே தவிர மற்றவர்கள் எல்லாரும் கர்த்தருடைய தயவால் காக்கப்பட்டிருந்தார்கள். கப்பலின் கேப்டனும், மேற்பார்வையாளரும், நல்ல தேவபக்தியுள்ள மெதடிஸ்ட்டுகள் என்பதை ஹட்சன் கண்டு பிடித்ததுடன் கப்பலின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தச்சாசாரியும் மெய்யான இரட்சிப்பின் பாத்திரம் என்பதை அவர் கண்டபோது அவரது சந்தோசத்துக்கு அளவே இல்லை. அவர்கள் எல்லாரும் ஒழுங்காக கப்பலில் ஒன்றாகக் கூடி கர்த்தரைப் பாடித் துதித்து ஆராதித்தார்கள். கப்பலில் வாரந்தோறும் கப்பல் சிப்பந்திகளுடன் ஆராதனை நடத்தும்படியாக கப்பலின் கேப்டன் ஹட்சனைக் கேட்டுக் கொண்டார். அந்தக் கூட்டங்களில் ஹட்சன் மோட்ச பிரயாணம் புத்தகத்தை வாசித்துக் காண்பித்தார். தனது அறையில் இராக்கூட்டங்கள் கூட நடத்தும்படியாக கேப்டன், ஹட்சனைக் கேட்டுக் கொண்டதுடன், விருப்பமுள்ளவர்கள் அதில் கலந்து கொள்ளும்படியாக கேட்டிருந்தார்.

தாம் பயணித்துக் கொண்டிருக்கும் கப்பலை கர்த்தர் கண்ணோக்கினவராக இருக்கின்றார் என்ற ஆனந்த பரவச எண்ணம் ஹட்சனை தன் அன்பின் கர்த்தரை வாழ்த்திப் போற்ற வகை செய்தது. உலகத்தின் ஒரு புதிய பகுதியில் தான் பிரயாணம் செய்து கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். வானில் திரளான நட்சத்திரங்கள் பிரகாசித்துக் கொண்டிருப்பதை அவர் கண்டு பிரமிப்படைந்தார். காரணம், இங்கிலாந்தில் வாழ்கின்ற மக்கள் நட்சத்திரங்களை காணவே இயலாது. தேவனுடைய படைப்பைப் பார்த்து அவர் உள்ளம் தன் கர்த்தாவை மகிமைப்படுத்தினது. பூமத்தியரேகைக்கு சமீபமாக உள்ள வெப்ப மண்டல பிராந்தியங்களின் பற்பல வண்ணமான அழகிய சூரிய அஸ்தமனக் காட்சிகள் அவருக்கு பரவசமாக இருந்தது. வெப்பமண்டலப் பிராந்தியங்களின் அமைதியான இராக்காலங்கள் ஹட்சனுக்கு வெகு பிரியமாக இருந்தது.

கப்பலிலுள்ள அனைவருக்கும் ஹட்சன் மிகவும் தேவையான நல்ல நண்பனாக விளங்கினார். கப்பலின் கேப்டனுக்கு அவருடய கணித பாடத்தை கற்றுக் கொள்ள உதவி செய்ததுடன் அறுகோண வடிவமுள்ள அவருடைய அக்கார்டியன் வாத்தியக் கருவியை வாசிக்கவும் அவருக்கு பயிற்சி கொடுத்தார். கேப்டனுக்கு அடுத்த ஸ்தானத்திலிருந்த பணியாளுக்கு புல்லாங்குழல் வாசிக்கப் பயிற்சி அளித்தார். மற்ற அனைத்து வேலையாட்களுக்கும் அவரவருடைய பணிகளில் அவர்களுக்கு கை கொடுத்து உதவினார். கப்பலில் மருத்துவ உதவிகள் தேவைப்பட்டோருக்கு அவர் மருத்துவ சிகிட்சைகள் செய்தார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மனந்திரும்பிய தச்சாசாரியருக்கு அவருடைய கண் இமையில் ஒரு ஆப்பரேஷன் செய்து அவருடைய பார்வையை தெளிவாக்கினார். கப்பலின் மேற்பார்வையாளருக்கு சொத்தைப் பல்லை நீக்கி அவருக்கு இருந்த அதிகமான பல் வலியை மாற்றிக் கொடுத்தார். கப்பல் மாலுமிகள் பலருக்கும் உடம்பில் காணப்பட்ட கொப்புளங்களுக்கு மருந்து போட்டு அவைகளை குணமாக்கினார்.

கர்த்தருடைய கிருபையால் கப்பல் இப்பொழுது சமுத்திரத்தில் நன்கு ஓட ஆரம்பித்தது. சில நாட்களில் அது நாள் ஒன்றுக்கு 200 மைல்கள் தூரம் வரை கூட தாராளமாக கடந்து சென்றது. கர்த்தரால் தான் சுவிசேஷம் அறிவிக்க அழைக்கப்பட்ட சீன தேசத்தை விரைவில் சென்று அடைந்துவிடுவோம் என்ற பூரணமான நிச்சயம் ஹட்சனுக்கு இப்பொழுது கிடைத்துவிட்டது. கப்பல் இந்து மகா சமுத்திரத்தில் ஓடிக்கொண்டிருந்த நாட்களில் கிறிஸ்மஸ் கால நாட்கள் வந்துவிட்டபடியால் பண்டிகை தினத்தன்று ஒரு பன்றி அடிக்கப்பட்டு அனைவருக்கும் மத்தியான சிறப்பு ஆகாரம் பரிமாறப்பட்டது. அவருடைய கப்பல் தென் கிழக்கு ஆசியா கடற்கரையில் சென்று கொண்டிருந்தபோது கப்பலின் பீரங்கிகளுக்குத் தேவையான வெடி குண்டுகள் ஏற்றப்பட்டன. கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்த அந்த கடற்பகுதியில் அவர்கள் தங்களை அப்படி ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டியதாக இருந்தது.

அவ்வப்போது கப்பலானது போதுமான காற்று இல்லாத காரணத்தாலும், சமுத்திர நீரோட்டங்கள் வலுமையாக இருந்தமையாலும் மிகவும் மெதுவாக நகர வேண்டியதாக இருந்தது. கப்பலிலுள்ள சில மாலுமிகள் கடலில் வீசிய புயலுக்கும், கப்பல் ஓட்டம் கடல் நீரோட்டத்தால் தாமதிப்பதற்கும் ஏழை தேவ மனிதர் ஹட்சனையே சில சமயம் பழியாக குற்றம் சாட்டினார்கள். எனினும், ஹட்சனின் ஆப்த நண்பன் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மனந்திரும்பிய தச்சாசாரியார் முறுமுறுத்த மாலுமிகள் யாவரையும் ஒன்றிணைத்து ஹட்சனின் ஆராதனை கூட்டங்களுக்கு ஒழுங்காக கொண்டு வந்து சேர்த்தார். அடிக்கடி நள்ளிரவு நேரங்களில் பிரகாசமான நிலவு வெளிச்சத்தில் அவர்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து கர்த்தரைப் பாடித் துதித்து அவருடைய மகிமையையும், ராஜரீகத்தையும் புகழ்ந்து பாடினார்கள். கப்பலானது சமுத்திரத்திலுள்ள அநேக தீவுகளுக்கு சமீபமாக அவைகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது அந்த தீவுகளில் வாழ்கின்ற தேவனற்ற நரமாமிச பட்சிணிகளான காட்டுமிராண்டி மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க ஆண்டவர் சுவிசேஷகர்களை எழுப்பி அனுப்ப வேண்டும் என்று ஹட்சன் உள்ளம் உருகி ஜெபித்தார். ஹட்சனின் அசைக்க முடியாத விசுவாசமும், வல்லமையான ஜெபங்களும் வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல கர்த்தர் அவருடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கின்றார் என்ற காரியத்தை திரும்பத் திரும்ப பலமாக நிரூபிப்பதாக இருந்தது.

 
நரமாமிசபட்சிணிகளின் கரங்களுக்கு விலக்கிக்
காத்த ஆச்சரிய கர்த்தர்

எந்த ஒரு காற்றும் இல்லாமல் கப்பல் முற்றும் கடல் அலைகளில் மிதந்து கடற்கரைக்கு நேராக நரமாமிசபட்சிணிகள் வாழ்கின்ற தீவை நோக்கி போய்க்கொண்டிருந்த ஒரு சமயம் நடந்த ஆச்சரிய சம்பவத்தை ஹட்சனே இவ்வாறு விவரிக்கின்றார்:-

"எங்கள் கப்பல் நியூகினியா கடற்கரைக்கு சமீபமாக சென்று கொண்டிருந்தது. அது ஒரு இராக்கால வேளை. எங்கள் கப்பலின் கேப்டன் மிகவும் கவலை நிறைந்த முகத்தினனாக சமுத்திரத்தையே ஆழ்ந்து உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவரது கவலைக்கான காரணத்தை நான் கேட்டபோது "நான்கு கடல் மைல்கள் வேகத்தில் கடல் நீரோட்டம் ஒன்று நமது கப்பலை கடலுக்கடியில் மறைந்திருக்கும் பவழப்பாறைகளுக்கு நேராக சமுத்திரக் கரைக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. நமது முடிவு உறுதி செய்யப்பட்டுவிட்டது. நமது கப்பலின் எதிர்பாராத வரவைக் கண்ட தீவில் வாழ்கின்ற நரமாமிச பட்சிணிகள் கடற்கரைக்கு விரைந்து வந்து மிகுந்த ஆனந்த சந்தோசத்தில் நெருப்பை மூட்டி நம்மைக் கொன்று அதில் போட்டு சாப்பிட ஆயத்தமாகக் காத்திருக்கின்றார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாவற்றையும் செய்துவிட்டோம்" என்று கேப்டன் கூறினார்.

அந்த நேரம் என் மனதில் உதித்த எண்ணத்தின்படி "அப்படியல்ல, நாம் செய்ய வேண்டிய காரியம் இன்னும் ஒன்றுண்டு" என்று சொன்னேன். "அது என்ன?" என்று அவர் என்னைத் திருப்பிக்கேட்டார். கப்பலில் நாங்கள் நான்கு பேர் ஆண்டவருடைய இரட்சிப்பின் பாத்திரங்களான கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் அறைகளுக்குச் சென்று காற்றை உடனே வீசச் செய்யும்படியாக கர்த்தரை நோக்கி ஜெபிக்கப்போகின்றோம்" என்று நான் கூறினேன். இந்த தேவ ஆலோசனை அவருக்குப் பிரியமானதாக இருந்ததால் அவர் சம்மதம் தெரிவிக்கவே ஸ்வீடன் நாட்டு தச்சாசாரியார் உட்பட நாங்கள் நான்கு பேர் தேவ சமூகத்தில் முழங்காலூன்றி அவரது இரக்கத்துக்காக கெஞ்சினோம். ஜெபித்த சற்று நேரத்திற்கெல்லாம் தேவ ஏவுதலின்படி நான் கப்பலின் மேல் தளத்திற்கு ஏறினேன். கப்பலின் பிரதான பாயை உடனே இறக்கும்படியாக தேவனற்ற மனிதனான முதல் அதிகாரியை நான் கேட்டேன். "காற்றே இல்லாமல் இருக்கும்போது காற்றுப் பாயை இறக்கி என்ன பிரயோஜனம்?" என்று அவன் என்னைக் கேட்டான். "காற்றை உடனே வீசச்செய்யும்படியாக நாங்கள் ஆண்டவரை கேட்டிருக்கின்றோம். காற்று விரைந்து வந்து கொண்டிருக்கின்றது" என்று நான் பதில் அளித்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் கப்பலின் பிரதான பாயின் ஓரத்தில் காற்றின் அசைவு கொடுத்தது. "காற்றானது பாயை மோதுகின்றது, உடனே அதை இறக்குங்கள்" என்று நான் சத்தமிட்டேன். என்னைத் தொடர்ந்து கப்பலின் மேல் தட்டில் நின்றவர்கள் எல்லாரும் குரல் கொடுத்தார்கள். எங்கள் சத்தம் கேட்டு கப்பலின் கேப்டன் கப்பலின் மேல் தளத்திற்கு வந்தார். சில நிடங்களுக்குள்ளாக காற்றின் வேகம் அதிகரிக்கவே கப்பலானது தான் அடித்துச் செல்லப்பட்ட கடல் நீரோட்டத்தினின்று தப்பித்து 7 கடல் மைல்கள் வேகத்தில் பாதுகாப்பான வழியில் செல்ல ஆரம்பித்தது. கப்பலின் கேப்டனும் கப்பலானது ஆபத்தைக் கடந்து விட்டது என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

அந்தக் கொடிய ஆபத்தான வேளையில் நாங்கள் ஏறெடுத்த ஜெபங்களுக்கு தேவன் அளித்த பதிலானது "நான் சீன தேசத்தின் கடற்கரைகளில் தரை இறங்கு முன்னர் அந்த நாட்டில் நான் நிறைவேற்றப்போகும் அனைத்து மிஷனரிப் பணிகளுக்கும் கர்த்தர் கட்டாயம் கரம் கொடுத்து அற்புதமாக உதவி செய்வார் என்பதையும், சூழ்நிலைகள் எத்தனை மோசமாகவும், நம்பிக்கையற்ற நிலைகளில் இருந்தாலும் ஆண்டவரின் பாதுகாவலும், உதவிகளும் திட்டமும் தெளிவுமாக கிடைத்தே தீரும்" என்பதை ஆணித்தரமாக நான் என் மனதிலே பதித்துக்கொண்டேன்."

 
இறுதியில் சீன தேசம் வந்து இறங்கியது

சீன தேசத்தின் கடற்கரைகள் நெருங்கி வர வர ஹட்சன் தனது மிஷனரிப்பணிக்காக கொண்டு வந்த மருத்துவ கருவிகள், மருந்துகள், பிற பொருட்கள் யாவையும் தனித்தனியாக பிரித்து வைத்து மூட்டைகளாகக் கட்டிக் கொண்டார். அவரது கப்பல் பிரயாணத்தின் கடைசி கட்டத்தில் கடலானது கொந்தளிப்பாகவும், காலநிலையானது உறைபனியாகவும் இருந்தது. தனது கப்பலுக்கு அருகாமையில் சீன தேசத்தின் சிறு சிறு அழகான படகுகள் சென்று கொண்டிருப்பதைக் கண்ட ஹட்சன், தனது நீண்ட கப்பல் யாத்திரை விரைந்து ஒரு முடிவுக்கு வரப்போவதைக் கண்டு மிகவும் சந்தோசம் அடைந்தார். 1854 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி புதன் கிழமை ஹட்சன் சீன தேசத்தின் ஷாங்காய் நகரத்தையும், சீன தேசத்தின் பெரிய நதியான யாங்சூ நதியின் கிளை நதியான ஹங்க்பூ நதியையும் கண்டார். அந்த நாளின் மாலை வேளை சுமார் 5 மணிக்கு அவர் சீன மண்ணில் மிஷனரியாக கால் எடுத்து வைத்தார். அந்த சீன நாட்டில் வித்தியாசமான குரல் ஒலிகளும், அவர்களின் சரீரத்திலிருந்து எழுந்த வாசனைகளும் (மணமான வாசனைகள் அல்ல) சீன மக்களின் சிங்கார கைவேலைப்பாடான கிழக்கத்திய வீடுகளும் இளம் ஆங்கில வாலிபனான ஹட்சனுக்கு பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது. ஆனால் அவருடைய அந்தராத்துமா அந்த ஷாங்காய் பட்டணத்தில் வாழ்கின்ற ஜீவனுள்ள தேவனை அறியாத சீன மக்களுக்காக அழுது அங்கலாய்த்தது. கடந்த சுமார் 6 மாத காலங்களாக தனது நீண்ட கடற்பயணத்தில் தன்னை அதி அற்புதமாக பாதுகாத்த தன் அன்பின் ஆண்டவருக்கு அனந்தம் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்த பின்னர் தனது மிஷனரிப் பணிகளைத் தொடங்கினார்.

சீன தேசத்தின் ஷாங்காய் பட்டணத்தில் கப்பலிலிருந்து தரையிறங்கிய ஹட்சன் தன்னை முற்றும் தனித்தவராகவும், எந்த ஒரு ஆதரவுமற்றவராகவும் கண்டார். ஷாங்காய் பட்டணத்தில் ஏற்கெனவே தங்கியிருந்த லண்டன் மிஷனரி சங்க மிஷனரி டாக்டர் லாக்கார்ட் என்பவர் அவருக்கு ஒரு தனி அறையைக் கொடுத்து தங்கவைத்தார். அடுத்து வந்த நாட்களில் ஹட்சன் டெய்லரை ஷாங்காய் பட்டணத்திலிருந்த அநேக மிஷனரிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். ஷாங்காய் பட்டணத்தில் மருத்துவமனை வைத்து நடத்தும் டாக்டர் மெட்ஹர்ஸ்ட் என்பவருடைய ஆஸ்பத்திரிக்குச் ஹட்சன் சென்று நோயாளிகளுக்கு சிகிட்சை அளிக்கும் அந்த டாக்டர் தனது மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளுக்கும், அங்கு குழுமியிருக்கும் இதர பொது மக்களுக்கும் ஆர்வத்தோடு சுவிசேஷம் அறிவிப்பதைக் கண்டு பரவசம் அடைந்தார்.

ஹட்சன் ஷாங்காய் பட்டணத்திற்கு வந்து சேர்ந்த நாளின் அடுத்த தினத்தில் அந்தப் பட்டணத்திலுள்ள தங்களது பிரிட்டிஷ் தூதரகத்திற்குச் சென்று தனக்கு வந்திருக்கும் கடிதங்களை எடுக்கச் சென்றார். அவரை மிஷனரியாக சீன தேசத்திற்கு அனுப்பியிருந்த சீன சுவிசேஷ சங்கம் அவருடைய செலவுகளுக்கு எந்த ஒரு பணமும் அனுப்பாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். எப்படியோ சமாளித்து சில சீன கூலிக்காரர்களை கூலி பொருத்தி தான் இங்கிலாந்திலிருந்து பயணப்பட்டு வந்த டம்ஃபிரைஸ் கப்பலிலிருந்த தனது உடமைகளை எடுத்து வந்து தனது சிறிய அறைக்கு வந்து சேர்ந்தார். கடற்பணத்தின் போது ஏற்பட்ட சூறாவழிக்காற்று, கடல் கொந்தழிப்பு காரணமாக அவரது பொருட்களில் பலவும் கடல் நீரால் சேதமடைந்து விட்டதை ஹட்சன் துயரத்தோடு கண்டார்.

ஷாங்காயிலுள்ள மிஷனரிகள் ஹட்சனை உடனடியாக சீன மொழியை நன்கு கற்றுக்கொள்ள வற்புறுத்தவே அவர் ஒரு சீன ஆசிரியரை ஒழுங்கு செய்து தினமும் 5 அல்லது 6 மணி நேரங்கள் சீன மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். ஹட்சன் வெகு துரிதமாகவே தான் தங்கியிருக்கும் ஷாங்காய் பட்டணம் சீன கலகக்காரர்களால் முற்றுகையிடப்பட்டிருப்பதைக் கவனித்தார். கலகக்காரர்களுக்கு உள்ளூர்வாசிகள் ஒபியம், கஞ்சா போன்றவைகளைக் கொடுத்து பணம் சம்பாதித்தனர். திடீரென சீனாவின் மன்னர் படைகள் வந்து கலகக்காரர்களுக்கு ஆதரவாக இருந்த உள்ளூர்வாசிகளைப் பிடித்து அவர்களின் காதுகளைத் துண்டிக்கவும், தலைகளை வெட்டவும் ஆரம்பித்தனர். அது குறித்து ஹட்சன் தனது தங்கை அமலியாவிற்கு இவ்வாறு எழுதினார்:-

"அமலியா, முற்றுகையிடப்பட்ட ஒரு பட்டணத்தை நீ பார்த்திருக்கமாட்டாய். உனது வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு பட்டணத்தை நீ காணாதிருக்க ஆண்டவர் உனக்குத் தயைபுரிவாராக. நாங்கள் பட்டணத்தின் மதிற் சுவரைச் சுற்றிப்பார்த்து வந்தோம். தெருத் தெருவாக வீடுகள் குண்டுகள் வைத்து தகர்க்கப்பட்டிருப்பதையும், எரித்துச் சாம்பலாக்கப்பட்டிருப்பதையும், நொறுங்குண்டு கிடப்பதையும் நாங்கள் காண முடிந்தது. அவைகளில் குடியிருந்த மக்கள் என்ன என்ன அவல நிலைகளுக்கு உள்ளானார்களோ என்பதை நாங்கள் நினைத்த போது உள்ளம் கலங்கினோம். நாங்கள் கொஞ்ச தூரம் சென்றபோது மன்னர் படையினர் தாங்கள் பிடித்த கலகக்காரர்களை தங்களது பீரங்கி வண்டியில் ஏற்றிக்கொண்டு வருவதையும், அவர்களைத் தொடர்ந்து சுமார் 5 பேர்களை தலை முடியைப்பிடித்து ரோட்டின் வழியாக இழுத்துக் கொண்டு வருவதையும் நாங்கள் கண்டு அதிர்ந்து போனோம். அந்த நிர்ப்பந்தமான ஐவரும் தங்களைக் காப்பாற்றும்படியாக எங்களை நோக்கி கதறினார்கள். அந்த துயரம் தோய்ந்த மக்களைக் காப்பாற்றவோ அல்லது இரட்சகரின் அன்பை அவர்களுக்குச் சொல்லவோ எங்களுக்குக் கூடாது போயிற்று. நான் அவர்களுக்காக ஜெபிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை"

ஹட்சன் தமது சிறிய அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது சண்டையின் காரணமாக காயம் அடைந்தோரையும், கொல்லப் பட்டோரின் சடலங்களையும் காண முடிந்தது.

டாக்டர் மெட்ஹர்ஸ்ட் அடிக்கடி சுவிசேஷ ஊழியத்திற்குச் செல்லும்போதெல்லாம் ஹட்சனும் அவருடன் சேர்ந்து கொண்டார். அவரைப்போல தான் தனித்து ஊழியம் செய்யும் நாளை அவர் ஆவலோடு எதிர் நோக்கினார். பின்னர் லண்டன் மிஷனரி சங்கத்தை சேர்ந்த வைல் என்பவருடன் சேர்ந்து பட்டணம் முழுவதையும் சுற்றி நடந்து தேவனுடைய பிரசுரங்களை விநியோகித்தார்.

சீனாவின் மன்னர் படைகள் நாளுக்கு நாள் ஆங்கிலேய குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் நெருங்கி வந்தனர். ஒரு சமயம் அவர்கள் பிரிட்டிஷ் சேமிப்பு கிடங்குகளின் அருகில் வந்து அதை உடைத்து அதிலிருந்து பொருட்களைத் திருடிச் சென்றனர். இந்த நாட்களின் சம்பவங்களை குறித்து ஹட்சன் தமது பெற்றோருக்கு கீழ்க்கண்டவாறு எழுதினார்:-

"ஒரு நாள் அதிகாலை இங்குள்ள மிஷனரிகள் ஒருவருடன் சேர்ந்து எங்கள் அறையின் வராந்தாவில் நின்று கொண்டு சண்டை நடபடிகளை கவனித்துக்கொண்டிருந்தோம். அந்தச் சமயம் சுமார் முக்கால் மைல் தொலைவில் வெடித்த ஒரு குண்டின் மேற்பகுதி விரைந்து எங்களை நோக்கி ஓடி வந்து எங்களைக்கடந்து எங்கள் வராந்தா அறையின் சுவரில் ஆழமாகப்பதிந்து கொண்டது. மற்றொரு நாள் எனது மிஷனரி நண்பர் அலெக்ஸாண்டர் வைல் அவர்கள் தனது புத்தகத்தை மேஜையில் வைத்துவிட்டு வீட்டிற்குள் போய் 5 நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்தபோது அவர் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியின் கைப்பிடி அதை தாக்கிய ஒரு சக்தி வாய்ந்த குண்டினால் முற்றுமாக தூள் தூளாக நொறுக்கப்பட்டு துடைத்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதை அதிர்ச்சியுடன் கவனித்தோம். இந்த ஆபத்துக்கள் அனைத்திலும் கர்த்தர் ஒருவரே எங்களைப் பாதுகாத்து வருகின்றார்"

இந்த சீன மக்கள் நடுவில் நடக்கும் கொடூர பயங்கரங்களைக் கண்ட ஹட்சன் அவர்கள் நடுவில் இருந்து அவர்களுடைய துயரத்தில் அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை அரவணைத்து அவர்களுக்கு இரட்சகர் இயேசுவைப் பகிர்ந்து கொள்ள ஆசை கொண்டபோதினும் அவரால் அதைச் செய்ய முடியாத ஒரு காரியமாக இருந்தது.

 
அத்திமரம் துளிர்விடாமற் போனாலும்...........
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்

தன்னை சீனா தேசத்திற்கு மிஷனரியாக அனுப்பிய சீன சுவிசேஷ சங்கத்தின் தலைவர் பியர்ஸ் என்பவருக்கு ஹட்சன் தனது முழுமையான ஏமாற்றத்தை தெரிவித்தார். அதற்கப்பால் ஹட்சன் தனக்குள்ளாகவே தான் ஒரு பட்டதாரியாக இல்லாததாலும், தான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட குருவானவராக இல்லாத காரணத்தாலும் தம்மை அனுப்பிய சங்கத்தினர் தனக்கு கடிதங்கள் எழுதுவதில்லை என்றும் உணர்ந்து கொண்டார். அதை முன்னிட்டு அவர் மிகவும் தனிமையையும், கைவிடப்பட்டதோர் நிலையையும் உணர்ந்தார். எனினும், தேவன் அவரை அந்த இக்கட்டான சமயத்தில் லண்டன் மிஷனரி சங்கத்தினரைக் கொண்டு உதவினார்.

சீன தேசத்திற்கு மிஷனரிகளாக வந்த மிஷனரிகள் பலரும் சுவிசேஷம் அறிவிக்காமல் தங்களின் அதிகமான நேரத்தை சமுதாய பணிகளில் செலவிடுவதை ஹட்சன் துயரத்துடன் கவனித்தார். அதை அவர் விரும்பவில்லை. சீன மொழியை துரிதமாக கற்றுக்கொண்டு தேவன் தன்னை அழைத்த அழைப்பில் உத்தமமாக இருக்க அவர் விரும்பினார். பாவிகள் மனந்திரும்பி தேவனுடைய ராஜ்யத்தில் அவர்கள் சேர்க்கப்படுவதை காண அவர் துதுடித்தார்.

வெயில் கால நாட்களில் ஹட்சன் அனலாகப் பறக்கும் வெப்பம் காரணமாக தலைவலி, வயிற்றோட்டம், சிறுநீரக கற்களால் கஷ்டப்பட்டார். அநேக மாலை நேரங்களை அவர் தனிமையில் செலவிட்டார். மற்ற மிஷனரிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் கொடுக்கக்கூடாது என்று அவர் நினைத்தார். தனது வசமுள்ள மிகவும் சொற்பமான சிறிய பணம், எந்த ஒரு கடிதங்களும் தனக்கு வராத நிலைகளை எண்ணி அவர் தனது தனிமையை இன்னும் ஆழமாக நினைத்து மனம் வெதும்பினார்.

ஒரு சமயம் ஹட்சன் ஒன்றரை மைல் தூரம் நடந்து பிரிட்டிஷ் தூதரகத்திற்குச் சென்று அநேக மணி நேரங்கள் அங்கு காத்திருந்து தனக்கு ஏதாவது கடிதங்கள் வந்திருக்கின்றதா என்று பார்த்தார். அவர் குடியிருந்த பகுதிகளிலுள்ள மிஷனரிகள் யாவருக்கும் ஏராளமான கடிதங்கள் வந்திருந்தன. ஆனால் ஹட்சனுக்கு ஒரு கடிதம் கூட வரவில்லை. இந்தக்காரியம் அவரை பலமாக ஆட்டி அசைத்துவிட்டது. இனி கடிதத்தை அவர் 6 வாரங்கள் சென்ற பின்னர்தான் எதிர்பார்க்க முடியும்.

கால நிலை மிகவும் குளிராகிக் கொண்டே இருந்தது. ஹட்சனுக்கு குளிர் தாங்க முடியாததாக இருந்தது. அவருடைய ஆடைகள் உடுத்து உடுத்து மிகவும் மெல்லியதாகிவிட்டது. உலகப்பிரகாரமாக நன்கு உடுத்தி உலகத்தோடு ஒட்டி வாழ்கின்ற நவ நாகரீக மிஷனரிகளோடு தனது ஏழ்மைக்கோலத்தோடு வாழ்வது என்பது ஹட்சனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அவருடைய மெல்லிய போர்வை இரவின் குளிரிலிருந்து அவரைப் பாதுகாக்க இயலவில்லை. அவரது வீட்டின் கீறலான பல சுவர்களின் சந்துக்களிலிருந்து காற்று மோதி அடித்துக்கொண்டிருந்தது. எந்த ஒரு பணமும் கையில் இல்லாத காரணத்தால் புதிய கம்பளி ஆடைகள் வாங்கிக்கொள்ள அவரால் இயலவில்லை. அத்துடன் தினமும் மன்னர் படைகளுக்கும், கலகக்காரருக்கும் சண்டைகள் தொடர்ந்து நடந்தவண்ணமிருந்தன. அதைக்குறித்து ஹட்சன் தனது வீட்டிற்கு இவ்வாறு எழுதினார்:-

"என்னுடைய நிலைமை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது. சமீபத்தில் தொடர்ச்சியாக இரண்டு இரவுகள் எனது தலைக்கு மேலாக உள்ள கூரையில் குண்டுகள் வந்து விழுந்தது. எனது உயிருக்கு ஆபத்து விளைவிக்க அவைகள் போதுமானதாக இருந்தது. எனினும் "பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்" என்ற தேவ வசனத்தின்படி தேவன் எனது ஒவ்வொரு பக்கத்திலும் எனக்கு பாதுகாவலராக இருந்து என்னைக் காத்து வருகின்றார். எனது தேவைகள் யாவையும் சந்தித்தும் வருகின்றார். எனது நம்பிக்கை ஆண்டவர் பேரிலேயே உள்ளது என்று நான் நிச்சயமாகச் சொல்லக்கூடும். பீரங்கி வேட்டுச் சத்தங்கள் எனக்கு அருகில் கேட்கின்றபோதும், குண்டுகள் வீஷ் என்ற ஒலியுடன் எனது வீட்டைத்தாண்டி பாய்ந்து செல்லுகின்றபோதும் நான் எச்சரிக்கப்படுவதுடன் ஒரு இனிமையான அமர்ந்த குரலோசை என் உள்ளத்தில் "அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?" என்று தொனிப்பதை நான் கேட்க முடிந்தது"

ஹட்சன் பல மிஷனரி பயணங்களை சீனாவில் மேற்கொண்டு, திரளான தேவனுடைய பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்து, இரட்சிப்பின் நற்செய்தியை அவர்களுக்கு அளித்திருக்கின்றார். அவை அனைத்தையும், அதற்காக அவர் பட்ட பாடுகள், தியாகங்கள் யாவையும் இங்கே சொற்ப பக்கங்களில் விவரிப்பது என்பது கூடாத காரியமாகும். ஒரு சிலவற்றை மட்டும் கவனிப்போம்.

 
ஹட்சனின் முதலாம் மிஷனரிப் பயணம்

கடும் உறைபனி குளிரான 1855 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 25 ஆம் நாள் ஹட்சன் தேவ ஊழியத்திற்காக 12 பவுண்டுகளுக்கு விலைக்கு வாங்கியிருந்த ஒரு பழைய படகில் ஒரு சீன படகோட்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு சௌஹன்ஸா, நான்குயி, ஷாபு ஆகிய இடங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப் புறப்பட்டார். மேற்கண்ட இடங்களில் சுவிசேஷ பிரதிகளை விநியோகித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். ஒரு தனித்த ஐரோப்பியன் தனது மேல் நாட்டு ஆடையில் காணப்படுவதை சீனர்கள் எப்படி அங்கீகரிக்கின்றார்கள் என்பதை அறிய அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

சௌஹன்ஸா என்ற இடத்தில் சீன மொழி தெரிந்த மக்களுக்கு பிரதிகளை அவர் கொடுத்தார். படிப்பறிவில்லாத மக்களுக்கு புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களைக் கொடுக்க அவர் மறுத்துவிட்டார். காரணம், அவர்கள் அந்தப் புத்தகங்களின் தாட்களை கிழித்து அழுக்கான தங்கள் செருப்புகளைத் துடைக்கப் பயன்படுத்துவார்கள் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார். அந்த இடத்தில் அவர் 12 நோயாளிகளுக்கு வைத்திய சிகிட்சை அளித்தார். நான்குயி என்ற பட்டணத்தை ஹட்சன் நெருங்கவே அந்தப்பட்டணத்தின் அதிகாரிகள் அவர் வரக்கூடிய கிழக்கு வாசற் கதவை அடைத்துவிட உத்தரவிட்டனர். ஆனால், தேவ மனிதர் மேற்கு வாயில் கதவு வழியாக பட்டணத்துக்குள் பிரவேசித்து உடனே சுவிசேஷப் பிரசுரங்களைக் கொடுத்து பிரசங்கிக்கவும் தொடங்கினார். பட்டணத்தின் கிழக்கு வாசற் கதவை அடைக்க உத்தரவிட்ட அதிகாரி ஹட்சனை சந்தித்தார். பிரசிங்கிக்கவும், பிரதிகளைக் கொடுக்கவுமே ஹட்சன் வந்திருக்கின்றார் என்பதை அறிந்த அந்த அதிகாரி அவர் கொடுத்த சீன மொழி புதிய ஏற்பாட்டை அன்பொழுகப் பெற்றுக் கொண்டார். நான்குயி பட்டணத்தின் புத்தமத கோயில் பகுதியில் சுமார் 500 பேர்கள் கூடியிருந்த இடத்தில் ஹட்சன் பிரசிங்கித்தார். அந்த இடத்தில் அதிக சுகயீனமாக இருந்த ஒரு மனிதனின் மனைவிக்கும் சிகிட்சை அளித்து உடனடியாக அந்த நோயாளியை மருத்துவமனையில் சேர்க்கக் கூறினார். மக்களுடைய கவனத்தைக் கவருவதில் மருந்துக்கு உள்ள பங்கை அவர் உணர்ந்தார்.

ஷாபு என்ற இடத்தில் அவர் பிரசங்கித்து தேவனுடைய பிரசுரங்களை விநியோகித்தார். அந்த இடத்தில் உணவுப் பொருட்கள் சற்று மலிவாக இருந்தபடியால் வரும் நாட்களில் தனது தேவைகளுக்கு வாங்கிக்கொண்டு ஷாங்காய் நகருக்குத் திரம்பினார். தனது தனித்த சுவிசேஷ பயண யாத்திரை வெற்றியோடு முடிந்ததை எண்ணி கர்த்தருக்கு துதி ஏறெடுத்தார்.

ஷாங்காய் பட்டணத்தில் பீரங்கிக் குண்டுகள் பறந்தவண்ணமாக இருப்பதை அவர் கவனித்தார். சீனர்கள் தங்களை மன்னர் படைகள் தாக்கி அழிப்பார்கள் என்ற அச்சத்தில் இருந்தனர். பட்டணத்தில் பஞ்சம் தலைவிரித்தாடினது. பஞ்சத்தில் நலிந்த மக்கள் தங்கள் கண்களுக்கு தென்பட்ட ஒவ்வொரு மிருகத்தையும் கொன்று தின்றனர். பூனைகள், நாய்கள், குதிரைகள், தவளைகள், எலிகள், சுண்டெலிகள் மற்றும் பூச்சிப்புழுக்களை எல்லாம் அவர்கள் கொன்று தின்றனர். பசித்த மக்கள் தளைகளையும், தாவரங்களையும், புற்களையும், பூண்டுகளையும் கூட பிடுங்கி தின்று பசியாற்றிக் கொண்டனர். ஹட்சனும், அவரது நண்பர் டாக்டர் பார்க்கரும் சீன பகுதிக்குள் துணிந்து சென்று சுவிசேஷம் அறிவித்ததுடன் தங்களால் முடிந்த அனைத்து மனிதாபிமான உதவிகளையும் அந்த ஏழை ஆதரவற்ற மக்களுக்குச் செய்தனர்.

 
ஹட்சனின் இரண்டாம் மிஷனரிப் பயணம்

1855 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 17 ஆம் நாள் ஹட்சனும், ஜாண் பர்டனும் தங்களுக்கு சீன மொழி கற்றுக் கொடுக்கும் 2 சீன ஆசிரியர்களுடன் சீனாவின் யாங்டீஷ் நதியிலுள்ள அநேக தீவுகளில் வாழும் சீன மக்களைச் சந்திக்க 2 சீன படகுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு பிராயணப்பட்டனர். புத்தமத கோயில்கள் இருக்கும் இடங்கள் தேவனுடைய சுவிசேஷத்தை அறிவிக்க ஏற்ற இடங்கள் என்பதை மிஷனரிகள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். அவர்கள் படகுகள் சோங்மிங் என்ற பட்டணத்திற்கு வந்தபோது ஹட்சன் ஒரு புத்தமத பகோடாவின் முன்பாக இருந்த ஒரு பெரிய பாத்திரம் வடிவில் காணப்பட்ட ஒரு அமைப்பில் ஏறி அதற்கு முன்பாகக் காணப்பட்ட சுமார் 500 அல்லது 600 மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார். அங்கிருந்து ஹட்சனும், ஜாண் பர்டனும் டோங்ஷோ என்ற இடத்திற்குச் செல்ல விரும்பினர். அவர்களுடன் வந்த சீன ஆசிரியர்கள் அந்த இடத்திலுள்ளோர் பொல்லாதவர்கள் என்றும் அங்குள்ள ராணுவ வீரர்கள் இரக்கமற்றவர்கள் என்று சொல்லியும் கேட்காமல் ஜெபத்துடன் புறப்பட்டனர். மிஷனரிகள் இருவரும் பட்டணத்தின் பிரதான வாசலுக்கு வரவும் ஒரு உறுதியான உடற்கட்டுடைய குடிகார மனிதன் ஒருவன் ஜாண் பர்டனைப் பிடித்துக்கொண்டான். நடந்ததை அறிய ஹட்சன் திரும்பியபோது அவரையும் குடிகாரனின் நண்பர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு அவர்கள் இருவரையும் பலமாகத் தள்ளிக் கொண்டு முன் சென்றனர். ஷாங்காய் பட்டணத்திலிருந்து வந்த கலகக்காரர்கள் என்று அவர்களை தவறாக எண்ணிக்கொண்டு அந்தப் பட்டணத்திலிருந்த பிரதான சீன நீதிபதியிடம் அவர்களைக் கொண்டு சென்றனர். ஹட்சன் தன் வசம் வைத்திருந்த தேவனுடைய புத்தகங்கள் நிறைந்த கனமான பெரிய பையைத் தூக்கிக்கொண்டு கஷ்டத்துடன் தள்ளாடிக்கொண்டு சென்றார். திடீரென்று கூட்டத்திலிருந்த ஒருவன் அவருடைய தலை முடியைப் பற்றிப் பிடித்து கீழே தள்ளி தரையில் போட்டு இழுக்கத் தொடங்கினான். மற்றொருவன் அவரது சட்டையின் குரல்வளை பாகத்தை அழுத்திப் பிடிக்கவே அவருக்கு மூச்சு திணறல் உண்டாயிற்று. அவருடைய கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டது. தாங்கள் இருவரும் இன்னும் சற்று நேரத்திற்குள்ளாக இரத்தசாட்சிகளாக மரிக்கப்போவதை ஹட்சன் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தார். அந்த நேரத்தில் அவர் படித்த ஒரு இனிமையான பாமாலைப் பாடலின் அடி ஒன்று அவருடைய நினைவுக்கு வந்தது.

அந்த இக்கட்டான மரண நேரத்திலும் ஜாண் பர்டன் தன்னை சுதாகரித்துக் கொண்டு தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களை அந்த இடத்தில் கொடுக்கத் தொடங்கினார். ஒரு ராணுவ வீரன் உடனே அவரை கையில் விலங்கிட கைவிலங்கை கொண்டு வரும்படியாக குரல் எழுப்பினான். ஆனால் விலங்குகள் கிடைக்கவில்லை. நிலைமையைப்புரிந்து கொண்டு பர்டன் அத்துடன் நிறுத்திக்கொண்டு தங்களைப் பிடித்தவர்களுக்கு தன்னை ஒப்புவித்தார். அவர்களைப் பிடித்தவர்கள் முதலாவது அவர்களை அங்குள்ள ஸ்தல நீதிபதியிடம் கொண்டு சென்றார்கள். அந்த மனிதன் அந்த ஐரோப்பியர்களின் அடையாளக் கார்டுகளைப் பார்த்தபோது தனக்கு மேலாக உள்ள சீன அதிகாரியிடம் அவர்களை அனுப்பி வைத்தான். அதுமட்டுமல்ல, ஹட்சனையும், ஜாண் பர்டனையும் கண்ணியமாக நடத்தும்படியாக ஆணையிடவே அவர்களைப் பிடித்தவர்கள் அவர்களுக்கு வேண்டிய எல்லா அன்பும் செய்து பிரதான நீதிபதியின் முன் நிறுத்தினார்கள். அந்த நீதிபதி அவர்களை தனது அலுவலகத்தின் அந்தரங்க அறைக்கு அழைத்துச் சென்று அவர்கள் வந்த நோக்கம் குறித்து விபரமாகக் கேட்டறிந்தார். அவர் அவர்களை மிகவும் கண்ணியமாக நடத்தினார். ஹட்சன், தாங்கள் கொண்டு சென்றிருந்த சுவிசேஷ பிரசுரங்களை குறித்து அந்த பிரதான நீதிபதிக்கு விபரமாகப் பேசி அந்த மனிதருக்கு ஒரு சீன மொழி புதிய ஏற்பாடும், ஆதியாகமத்திலிருந்து ரூத்தின் புத்தகம் வரை அச்சிடப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டு பிரதி ஒன்றையும் கொடுத்தார். அதை அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு அவரது கரங்களிலிருந்து பெற்றுக்கொண்டார். அத்துடன் ஹட்சன் தேவனுடைய இரட்சிப்பைக் குறித்து மிகவும் இரத்தினச் சுரக்கமாக அந்த நீதிபதிக்கு விளக்கிக்கூறினார். அதை அந்த மனிதர் மிகவும் கருத்தாக கவனித்தார். அவரைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்த பிற சீன அதிகாரிகளும் அதைக் கேட்டனர்.

நீண்ட நேரம் பிரதான நீதிபதியின் அறையில் இருந்த பின்னர் ஹட்சனும், பர்டனும் பட்டணத்திலுள்ள மக்களுக்கு தாங்கள் கொண்டு வந்திருந்த சுவிசேஷப் பிரசுரங்களைக் கொடுக்க அவர் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், ஆரம்பத்தில் பொல்லாதோர் தங்களுக்குச் செய்த துன்பங்களையும், கஷ்டங்களையும் அவரிடம் எடுத்துக்கூறவே, அவர் அவர்களுக்கு பாதுகாவலாக அநேக சீன காவலர்களை அனுப்பியதுடன் எந்த ஒரு துன்ப துயரமும் அவர்களுக்கு ஏற்படாமல் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு அனுப்பினார். அவர்களை அழைத்துக்கொண்டு வந்த சீன காவலர்கள் கூட்டமாக மக்கள் அவர்களை நெருங்கும்போது தங்கள் கரங்களிலுள்ள சவுக்கைகளால் அவர்களை பயமுறுத்தி வழி ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை வழிநடத்திச் சென்றனர்.

சீன காவலர்களின் பாதுகாப்புடன் தாங்கள் கொண்டு சென்ற அனைத்து தேவனுடைய பிரசுரங்களையும் ஜெபத்துடன் கொடுத்து முடித்துவிட்டு தாங்கள் விட்டுவந்த படகுகளுக்கு பாதுகாப்பாக திரும்பி வந்து சேர்ந்தனர். தான் சுவிசேஷம் அறிவிக்க விரும்பிய சீன மக்களிடமிருந்து முதல் தடவையாக இப்படிப்பட்ட ஒரு மரண ஆபத்தை ஹட்சன் கடந்து செல்ல வேண்டியதாக இருந்தது.

ஹட்சன் டெய்லரின் அருமையான மிஷனரிப் பணியைக் குறித்து கேள்விப்பட்ட பிரிட்டிஷ் வேதாகம சங்கம் தன்னில் மகிழ்ந்ததுடன் அவருடைய ஊழியத்திற்குத் தேவையான அனைத்து சுவிசேஷ பங்குகளையும் இலவசமாக அனுப்பிக் கொடுப்பதுடன் அவருடைய செலவுகளுக்கும் பண உதவி செய்வதாக வாக்கு கொடுத்தனர். மிஷனரிகள் இருவரும் தேவ தயவால் பாதுகாப்பாக ஷாங்காய் பட்டணம் வந்து சேர்ந்தனர்.

 
ஹட்சனின் மூன்றாம் மிஷனரி பயணம்

1855 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் ஹட்சன் தனது மூன்றாம் மிஷனரி பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணம் செய்து முடிக்க அவருக்கு 24 நாட்கள் ஆனது. இந்த தடவை அவர் நாங்கிங் வரை செல்லவேண்டுமென்று விரும்பினார். ஒரு சீன படகை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு செஞ்சியாங் வரை அவர் சென்றார். அந்த இடம் ஷாங்காய் பட்டணத்திலிருந்து 200 மைல்கள் தொலைவில் இருந்தது. அந்தப் பிரயாணத்தின் போது அவர் 2700 சுவிசேஷ பங்குகளையும் இதர கிறிஸ்தவ பிரசுரங்களையும் கொடுத்திருந்தார். ஓரிடத்தில் 80 வயதான ஒரு சீன அதிகாரியை சந்தித்து தேவனுடைய பிரசுரங்களை அவருக்குக் கொடுத்தார். "ஒரு மனிதன் சன்மார்க்கமாக பாவங்களுக்கு விலகி வாழ்ந்தால் அவனது வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்" என்று அந்த மனிதன் வாதித்தான். "மெய்யான தேவ சமாதானம் கர்த்தராகிய இயேசு இரட்சகர் ஒருவர் மூலமாகவே உள்ளது என்றும், அதை அடைய அவர் மூலமாக உள்ள இரட்சிப்பை அவன் பெற்றே தீர வேண்டும், அதைவிட்டால் வேறு மாற்று வழி கிடையாது" என்று ஹட்சன் திட்டமாக அவனிடம் கூறினார். அதை அவன் ஆழ்ந்து கவனித்தான்.

ஓரிடத்தில் குடிகாரர்கள் அவர்மேல் சேற்றை வீசி எறிந்தார்கள். எனினும், பட்டணத்து சீன அதிகாரிகளும், மக்களும் அவரை வரவேற்றார்கள். அநேக இடங்களில் சீன குடிமக்கள் அவரைக் கண்டதும் பயந்து ஓட்டம் பிடித்தார்கள். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் நோயாளிகளுக்கு தனது மருந்தினால் சிகிட்சை அளித்து தேவனுடைய வார்த்தையையும் அவர்களுக்குப் பிரசங்கித்தார். சீன மக்களின் வாழ்க்கையை தனது வாழ்க்கையாக்கி அவர்களைப்போல வாழக் கற்றுக்கொண்டார். அதின் காரணமாக ஓரிடத்தில் அவருக்கு முன்பாக வைக்கப்பட்ட பாம்பு பொரியலையும் மனங்கோணாமல் வாங்கிப் புசித்தார். அந்த சீன மக்களைப்போல ஒரு ஜோடி சிறிய குச்சிகளை (ஜோப் ஸ்டிக்ஸ்) பயன்படுத்தி நன்கு ஆகாரம் புசிக்கவும் பழகிக் கொண்டார்.

எல்லா நேரங்களிலும் தேவனுடைய வார்த்தையை வாசித்து தியானித்து எப்பொழுதும் ஆண்டவரோடு நடந்து கொண்டதுடன் கிறிஸ்து இரட்சகரை பிரசிங்கிக்கும் தனது அனைத்து பிரயாசங்களிலும் தேவனுடைய அளவில்லாத ஆசீர்வாதங்கள் பொழியப்பட வேண்டுமென்றும் அவர் உள்ளம் உருகி ஜெபித்துக் கொண்டே இருந்தார். தேவனுடைய சுவிசேஷம் அறிவிக்க மருத்துவ சிகிட்சை எத்தனை முக்கியமானது என்பதையும் அவர் மிகவும் தெளிவாகக் கண்டு கொண்டார். ஜூன் மாதம் முதலாம் தேதி அவர் தனது பிரயாணத்தை முடித்து வீடு திரும்பியபோது தனது அறையானது சுண்டெலிகளாலும், பெரிய எலிகளாலும் சூழப்பட்டிருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தார். எந்த ஒரு நிலையிலும் தன்னால் அவைகளை துரத்த முடியாது என்பதை உணர்ந்த ஹட்சன் கடைசியாக ஒரு பூனையை அதின் இரண்டு சிறிய குட்டிகளோடு விலைக்கு வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து அதின் மூலமாக தனது தொல்லையை தீர்த்துக் கொண்டார்.

 
தேவ மனிதருக்கு தேவன் தெரிந்து கொண்ட
வாழ்க்கைத் துணை

ஹட்சன் தனது திருமணத்திற்காக இரட்சிப்பின் பாத்திரமான தனது உடன் பிறந்த தங்கை அமலியா மூலமாக ஒன்றிரண்டு பக்தியுள்ள பெண்களை தனது பிறந்த ஊர்ப்பகுதிகளிலிருந்து தெரிந்து கொள்ள எவ்வளவோ முயற்சித்தார். அதற்காக அவர் எவ்வளவோ கடிதப் போக்குவரத்தையும் மேற்கொண்டார். அவை எல்லாம் கைகூடி வருவதுபோல தெரிந்தாலும் கடைசி நேரத்தில் அவை நின்று போகும். ஒன்று பெண் பிள்ளைகள் மறுப்பார்கள் அல்லது அவர்களைப் பெற்ற பெற்றோர் மறுப்பார்கள். ஆனால் அன்பின் பரம தகப்பன் தமது பரிசுத்த அடிமைக்கு அவருடைய பரிசுத்த குணாதிசயங்களுக்கு ஏற்ற ஒரு பரிசுத்தமான இரட்சிப்பின் பாத்திரத்தை சீனாவின் நிங்போ பட்டணத்தில் ஆயத்தம் செய்து வைத்திருந்தார். அந்தப் பெண்ணின் பெயர் மரியா டையர் என்பதாகும். அவளுக்கு இன்னும் 20 வயது கூட ஆகவில்லை. அவளுடைய தகப்பனார் சங்கை சாமுவேல் டையர் என்பவர் இங்கிலாந்திலிருந்து மிஷனரியாக சிறிது காலத்திற்கு முன்பாக சீன தேசத்திற்கு வந்திருந்தார். மரியா டையர் தனது குருவானவர் தந்தையின் சாயலை அறியாதிருக்கு முன்பே அவர் மரித்துப் போனார். அவளுக்கு 10 வயதாக இருந்தபோது பெற்ற அன்புத்தாயும் இறந்துவிட்டார்கள். மரியா டையருக்கு, புலேரா டையர் என்ற பெயருடைய ஒரு அக்காளும், சாமுவேல் என்ற ஒரு தம்பியும் உண்டு. அவர்கள் மூவரும் அநாதைகளானார்கள்.

தகப்பனார் மரிக்கும்போது தனது இரு குமாரத்திகளையும் செல்வி மேரி ஆன் ஆல்டர்சி என்ற அம்மையாரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். அந்த அம்மையார் நிங்போ பட்டணத்தில் சீனப் பெண்களுக்கான ஒரு புகழ்பெற்ற பாடசாலையை நிறுவி சிறப்பான கல்வியை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பள்ளியில்தான் புலேராவும், அவளுடைய தங்கை மரியா டையரும் ஆசிரியைகளாக பணி ஆற்றிக்கொண்டிருந்தனர்.

மரியா டையர் மிகவும் புத்திக் கூர்மையானவளும், சீன மொழியைப் பேசுவதில் புலமை படைத்தவளுமாகவும் இருந்ததுடன் தனது மாணவிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் திறமைசாலியாகவுமிருந்தாள். கர்த்தர் கொடுத்த தாலந்துகளால் அவள் நிறைந்து காணப்பட்டதுடன் உண்மையான ஒரு ஆத்தும ஆதாயம் செய்பவளாகவும் காணப்பட்டாள். பிள்ளைகளுக்கு உலகப்பாடங்கள் மட்டும் சொல்லிக் கொடுப்பது தனது வேலையல்லவென்றும், உண்மையாக அவர்களை இரட்சகர் இயேசுவண்டை வழிநடத்துவதே இந்த உலகில் தனது தலையாய பணி என்பதையும் அவள் கண்டு வைத்திருந்தாள்.

இந்த அற்புத குணாதிசயங்கள்தான் ஹட்சன் டெய்லருக்கு மரியா டையரை மிகவும் நன்றாகப் பிடித்திருந்தது. அந்த நாட்களில் அவர் மரியா டையர் வேலை பார்த்த பெண்கள் பள்ளிக்கு அருகில் உள்ள ஜோன்ஸ் மிஷனரி தம்பதியினரின் வீட்டில் தங்கியிருந்துதான் தனது மிஷனரிப்பணிகளை கவனித்து வந்தார். வெளியிடங்களுக்குச் சென்று தேவப்பணி செய்ய இயலாதவாறு சீனர்களுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் அந்த நாட்களில் சண்டைகள் நடந்ததால் மிஷனரிகள் நிங்போ பட்டணத்திலேயே தாமதிக்க வேண்டியதாகவிருந்தது. இதுவும் ஆண்டவருடைய ஒரு அற்புத வழிநடத்துதலாகவே இருந்தது. காரணம் ஹட்சனும், மரியா டையரும் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசி தங்கள் காரியங்களை நன்கு பகிர்ந்து கொள்ள முடிந்தது. அதற்கு மேற்கண்ட ஜோன்ஸ் தம்பதியினர் மிகவும் உதவி செய்தனர்.

ஹட்சனும், மரியா டையரும் நெருங்கிப் பழகுவதை செல்வி ஆல்டர்சி உக்கிரமாக பகைத்து வெறுத்தார்கள். ஹட்சன் எந்த ஒரு படிப்பறிவும் அற்றவன், பரம ஏழை, தேவ ஊழியத்திற்கான எந்த ஒரு தகுதியும் அற்றவன், உலகத்தில் எந்த ஒட்டுறவு அற்றவன் என்று அவரைக் குறித்து பழிசாட்டிக்கொண்டிருந்தார்கள். ஹட்சன் தனது முகத்தில் விழிக்கவே கூடாது என்றும் மரியா டையரை மணம்புரிய அவனுக்கு எந்த ஒரு சிறிய தகுதியும் கிடையாது என்றும் அவரை வெறுத்து ஒதுக்கினார்கள்.

ஆனால் மரியா டையருக்கு ஹட்சன் நன்கு பிடித்துப்போயிருந்தது. தனது இருதயம் வாஞ்சிப்பதுபோல அந்த இளம் மிஷனரி வாஞ்சிக்கும் பரிசுத்த தாகம், ஆண்டவரோடுள்ள அவரது நெருக்கமான உறவு, மற்றவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற மேலான தியாக அன்பு, அவர் தனது மெய் தேவனாம் மாபெரும் யேகோவாவுடன் வாழ்கின்ற மெய்யான வாழ்வு எல்லாம் அவளுடைய உள்ளத்தை கொள்ளை கொள்ளுவதாக இருந்தது. உண்மைதான், அவர் மற்றவர்களைவிட சற்று வித்தியாசமானவர்தான். கவர்ச்சி இல்லாதவரும், அதிகமான தாலந்துகள் அற்றவராகவும் இருப்பது உண்மையாயினும், அவர் ஆவிக்குள் பிரகாசமானவராகவும், பரிசுத்த நகைச்சுவை நிறைந்தவராகவும் காணப்பட்டார். அவள் அவரின் பரிசுத்த விலை மதிப்பை நன்கு கணித்து அளவிட்டு அவரை நன்கு புரிந்து கொண்டு விட்டாள்.

ஹட்சன் சீன உடைகள் அணிந்து சீன மனிதராக மாறிவிட்டதை மற்ற ஆங்கில மிஷனரிகள் பலர் அருவெறுத்தனர். அவரை எள்ளி நகையாடினர். ஆனால், மரியா டையருக்கு அந்த சீன உடை உள்ளத்துக்கு உகந்ததாக இருந்தது. அதை அவள் நேசித்தாள். அந்த சீன உடை ஹட்சனின் ஆவியின் எளிமையை காண்பிப்பதாகவும், அவருடைய தரித்திரத்தையும், ஏழை எளியோருக்கு இரங்கும் அவருடைய தயாள குணத்தை பிரதிபலிப்பதாக இருப்பதையும் அவள் முழுமையாகப் புரிந்து கொண்டாள். ஏழை எளியோர், சமுதாயத்தால் தீண்டப்படாத புறம்பாக்கப்பட்ட மக்களுக்காக அவர் தன்னை வெறுமையாக்கி அவர்களை சந்தித்து அவர்களை நீதிக்குள் வழிநடத்த இந்த ஏழைக்கோலம் பூண்டார் என்பதை அவள் புரிந்து கொண்டபோது ஹட்சனுக்காக பரிதாபப்படவும் அவருக்காக ஜெபிக்கவும் ஆரம்பித்தாள்.

ஹட்சனை எந்த ஒரு நிலையிலும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று மரியா டையரை ஆல்டர்சி அம்மையார் தடுத்து நிறுத்தியபோதினும் மரியா தனது தெரிந்து கொள்ளுதலில் உறுதியாக இருந்து தேவன் தனக்கு ஒத்தாசையாக எழுந்து நிற்கவேண்டும் என்று ஜெபித்து வந்தார்கள்.

இறுதியாக, அநேகரின் பலமான தூண்டுதலின் காரணமாக செல்வி ஆல்டர்சி அம்மையார் இந்தக் காரியத்தை லண்டனிலுள்ள புலேரா மற்றும் மரியா டையரின் பாதுகாப்பாளருக்கு (Guardian) கடிதத்தின் மூலமாக எழுதி விளக்கி அவருடைய ஆலோசனையை நாடினார்கள். ஆல்டர்சி அம்மையாரின் வலுவான ஆள் பலம், சமயோசித அறிவாற்றல் காரணமாக இந்த திருமணத்தை நிச்சயமாக அவர்கள் தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்று ஹட்சனும், மரியா டையரும், மற்ற யாவரும் திட்டமாக நினைத்தார்கள். எனினும் அவர்கள் இருவரும் இந்தக் காரியத்தை தேவனுடைய திருவுளச்சித்தமாக ஏற்றுக்கொண்டு லண்டனிலிருந்து பாதுகாப்பாளரின் கடிதம் மறுப்பு தெரிவித்து வரும்பட்சத்தில் அதை தேவ தீர்மானமாக ஏற்றுக்கொண்டு தாங்கள் திருமணமின்றி விலகிவிட வேண்டுமென்று கர்த்தருக்குள் தீர்மானித்து முடிவெடுத்து அதற்குப்பின்னர் எந்த ஒரு நட்புமின்றி முற்றுமாகப் பிரிந்து விட்டார்கள். ஆனால், இருவரும் ஊக்கமாக ஜெபித்து வந்தனர்.

நான்கு மாதங்களுக்குப்பின்னர் நவம்பர் மாத கடைசியில் ஆல்டர்சி அம்மையாரின் கடிதத்திற்கு பிள்ளைகளின் பாதுகாப்பாளரிடமிருந்து கடிதம் வந்தது. ஆல்டர்சி அம்மையாரின் கடிதத்தை மிகவும் கருத்தோடு வாசித்த அந்த மனிதர் முதலாவது ஹட்சனை மிஷனரியாக சீனாவுக்கு அனுப்பிய சீன சுவிசேஷ ஸ்தாபனத்தாரிடம் அவரைக் குறித்து கேட்டபோது "தேவனிடமிருந்து அசாதாரணமான வாக்குத்தத்தத்தைப் பெற்று சீனாவிற்குச் சென்ற உத்தம மிஷனரி" என்ற பதில் அவருக்குக் கிடைத்தது. அந்த ஸ்தாபனத்தின் காரியதரிசிகள் யாவரும் அவரைக் குறித்து முற்றும் நலமான செய்திகளையே அன்றி ஒருவரும் ஒரு தீதான வார்த்தை கூட சொல்லவில்லை. ஹட்சனைக் குறித்து அவர் விசாரித்த மற்ற இடங்களில் எல்லாம் அவரைக் குறித்து உயர்வான புகழ் மாலைகளையே சூட்டினர். அதைத் தொடர்ந்து அவர் ஆல்டர்சி அம்மையாருக்கு கீழ்க்கண்டவாறு பதில் கொடுத்தார்:-

"ஹட்சன் டெய்லர், மரியா டையரின் திருமணத்திற்கு நான் எனது இருதயம் நிறைந்த பூரண சம்மதத்தை தெரிவிக்கின்றேன். ஹட்சனுக்கு விரோதமாகப் பேசப்பட்ட எல்லா அவதூறுகளும், பொய் வதந்திகளும் ஒழிவதாக. ஹட்சன், மரியா டையரின் திருமணத்தை முன் நின்று சந்தோசமாக நடத்துங்கள்" என்று பாதுகாப்பாளர் ஆல்டர்சி அம்மையாருக்கு பதில் எழுதிவிட்டார். அதின்படி 1858 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 20 ஆம் நாள் அவர்களின் திருமணம் நடைபெற்றது. மணமகன் ஹட்சன் சீன உடை அணிந்திருந்தார், மரியா டையர் அம்மையார் சாம்பல் நிறமான ஆடை அணிந்து மிக மெல்லிய வெண் வலையால் மூடப்பட்டிருந்தார்கள். அவர்களின் திருமணத்திற்கு ஆல்டர்சி அம்மையார் வரவே இல்லை. புது மணத் தம்பதியினர் அவர்களின் அனைத்து செயல்களையும் மனப்பூர்வமாக மன்னித்து தேவ அன்பின் பாசத்தோடு பின் நாட்களில் அவர்களுடன் நடந்து கொண்டார்கள். ஹட்சனின் மனைவி மரியா டையர் அம்மையார் அவர்களின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

 
தன்னை சீனராக்கிக் கொண்ட ஹட்சன்

பெரிய சீன பட்டணங்களைக் கடந்து அப்பாலுள்ள இடங்களுக்குச் செல்லும்போது சீன மக்கள் தனது மேல் நாட்டு ஆடைகளிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்களேயல்லாமல் தான் கொடுக்கும் சுவிசேஷ நற்செய்தியில் கவனம் செலுத்துவதில்லை என்பதை அறிந்த ஹட்சன் தனது மேல் நாட்டு உடைகளைக் களைந்து சீன வஸ்திரங்களை தெரிந்து கொண்டார். அத்துடன் ஒரு சீன பார்பரை வரவழைத்து தனது தலை முடி முழுவதையும் சிரைத்து எடுத்துவிட்டு தலையின் பின் பக்கம் மட்டும் கொஞ்சம் முடியை ஒதுக்கி வைத்து அதில் பன்றி வால் போன்று பின்னப்பட்ட ஒன்றை இணைத்து சடைபோல அதை தொங்க வைத்து அதைச் சுற்றிலும் ஒரு கருப்பு ரிப்பனை கட்டிக்கொண்டார். இவை யாவும் சீன பார்பருடைய மேற்பார்வையில் அருமையாக நடந்தது.

தேவனுடைய மகிமையின் சுவிசேஷம் சீனர்களுக்குச் செல்ல வேண்டுமானால் நாமும் அவர்களைப்போல உடைகள் உடுத்தி அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என்று ஹட்சன் உறுதியாக நம்பினார். அவர் தனது ஹட்சன் என்ற ஆங்கிலப் பெயரைக் கூட "தாய் டெஷங்" என்ற சீனப் பெயருக்கு மாற்றிக் கொண்டார். சீன மொழியில் அந்தப் பெயரின் பொருள் "உத்தம வாழ்க்கை" என்பதாகும்.

எந்த ஒரு கல்வியில்லாத தரித்திரனான ஹட்சன் தன்னை ஒரு சீனனாக மாற்றி ஐரோப்பிய வெள்ளைக்கார சமுதாயத்தை இழிவுபடுத்தி அவர்களை சீனர்களுக்கு முன்னர் தலை குனிய வைத்துவிட்டான் என்று அவரைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருந்த ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகளும், மிஷனரிகளும் அவர்மேல் வசைமாறி பொழிந்து கைகொட்டி சிரித்தபோதினும் அவர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தனது ஜீவனுள்ள ஆண்டவருடைய நாமம் தனது நற்செய்கையால் வரும் நாட்களில் நன்கு மகிமைப்படும் என்ற சந்தோசத்தில் மிகுந்த பொறுமையோடு நடந்து கொண்டார். தான் தோற்றுவித்த சீன உள் நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தின் மிஷனரிகளுடன் ஹட்சன் அவர்களும் ஒரு சீனரைப் போல கூட்டத்தின் நடுவில் காட்சியளிப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.

 
சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தை
(China Inland Mission) தோற்றுவித்தது

தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியை சீன தேசம் முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற தாகத்தில் சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தை 1865 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஹட்சன் ஆரம்பித்தார். அதை ஆரம்பிக்க வேண்டுமென்ற திட்டமான தரிசனம் ஹட்சனுக்கு இருந்தது. ஸ்தாபனத்தை ஆரம்பிக்கவும் அது செயல்பட தேவையான இடம் 2 ஏக்கர் நிலத்தில் உள்ள ஒரு கட்டிடமும், அழகான தோட்டமும் ஷாங்காய் நகரத்தில் வாங்கத் தேவையான பணத்தை தேவ மக்கள் விரைந்து கொடுத்து அந்த இடம் கைவசமாக்கப்பட்டது. இந்த ஆச்சரிய தேவ செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

சீனாவின் 11 மாநிலங்களுக்கும், மங்கோலியாவுக்கும் சேர்த்து 24 மிஷனரிகளை உடனே அனுப்ப ஹட்சன் விரும்பினார். அதுவும் கைகூடிற்று. சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தின் மிஷனரிகளுக்கு அந்த ஸ்தாபனம் சில வழிகாட்டும் ஒழுங்குகளை விதித்திருந்தது. சபை பாகுபாடின்றி எந்த ஒரு சபை பிரிவிலிருந்தும் மிஷனரிகள் சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். மிஷனரிகளுக்கு மாதாந்திர ஊதியம் கட்டாயம் கிடைக்குமென்று உறுதி கிடையாது. அவர்கள் தங்கள் தேவைகளுக்கு கர்த்தரையே விசுவாசித்து அவரைச் சார்ந்திருக்க வேண்டும். ஸ்தாபனத்துக்கு வரும் காணிக்கைகள் மிஷனரிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். எந்த ஒரு நிலையிலும் மிஷனரிகள் கடனுக்குள் சிக்கக்கூடாது. தங்களுடைய பொருளாதார தேவைகளுக்கு மிஷனரிகள் எந்த ஒரு விண்ணப்பமும், வேண்டுகோளும் மக்களுக்குத் தெரிவிக்கக்கூடாது. "தேவனுடைய ஊழியம், தேவன் விரும்பும் விதத்தில் செய்யப்படும்போது அதற்கு தேவனுடைய ஆதரவுகள் ஒருக்காலும் தடைபடாது" (இது ஹட்சன் அடிக்கடி கூறும் ஒரு வார்த்தை) ஸ்தாபனத்தின் மிஷனரிகள் தேவனுடைய சுவிசேஷம் எட்டப்படாத சீனத்தின் கடையாந்திர பகுதிகளுக்கு அதை எடுத்துச் செல்லுவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அவர்களுடைய முன்மாதிரியை மற்ற மிஷனரி ஸ்தாபனங்களும் பின்பற்றுவதாக இருந்து சீனப் பெரும் நாடு விரைவில் கிறிஸ்துவை அறிகிற அறிவில் பெருக வேண்டும். சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தின் மிஷனரிகள் அனைவரும் சீன ஆடைகளையே கட்டாயம் அணிந்து சீன பாணியில் கட்டப்பட்டிருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களில் கர்த்தரை ஆராதிக்க வேண்டும்.

சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தில் இணைந்து பணியாற்றுவதற்காக ஹட்சன் ஐரோப்பிய நாடுகளில் பிரயாணம் செய்து, சீனாவின் சுவிசேஷ தேவையை அவர்களுக்கு எடுத்துக்கூறி அநேக மக்களை மிஷனரிகளாக சீனாவுக்கு அனுப்பி வைத்தார். சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனம் தோற்றுவிக்கப்பட்ட ஆரம்ப கால நாட்களில் அதற்கு போதுமான பண வசதிகள் கிடையாமல் இருந்ததுண்டு. எனினும், இங்கிலாந்தின் பிரிஸ்டோல் பட்டணத்தில் அநாதை குழந்தைகளுக்கான இல்லங்களை தோற்றுவித்து நடத்திக் கொண்டிருந்த மாபெரும் தேவ மனிதர் ஜியார்ஜ் முல்லர் அவர்கள் ஆண்டு ஒன்றுக்கு 2000 பவுண்டுகள் வீதம் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு பணம் அனுப்பி ஹட்சனின் ஊழியங்களைத் தாங்கினார். அந்த நாட்களில் அந்தப் பணத்தின் விலைமதிப்பு மிகவும் அதிகமாகும்.

ஜியார்ஜ் முல்லர் சில ஆயிரம் எண்ணிக்கையிலான தனது அநாதைக் குழந்தைகளின் போஷிப்புக்கு கர்த்தர் ஒருவரின் முகத்தையே நோக்கிப் பார்த்து தனது தேவைகளை கர்த்தரிடமிருந்து எவ்வண்ணமாகப் பெற்றுக்கொண்டாரோ அதே வண்ணமாக ஹட்சன் டெய்லரும் தனது மிஷனரி ஸ்தாபனத்தின் அனைத்து தேவைகளுக்கும் ஆண்டவர் ஒருவரையே சார்ந்திருந்தார். ஹட்சனுக்கும், முல்லருக்கும் ஆழ்ந்த தேவ அன்பின் நட்புண்டு. ஹட்சன் ஒரு சமயம் பிரிஸ்டோல் பட்டணம் சென்று ஜியார்ஜ் முல்லரை நேரில் சந்தித்து அவருடைய அநாதை குழந்தைகளின் இல்லங்களைப் பார்வையிட்டு அங்குள்ள தேவாலயத்தில் பிரசிங்கிக்கவும் செய்தார். ஜியார்ஜ் முல்லரின் விசுவாச வாழ்விலிருந்து ஹட்சன் ஆழ்ந்த தேவ இரகசியங்களைக் கற்றுக்கொண்டார் என்று சொல்லப்படுகின்றது. "மிஷனரி ஸ்தாபனங்களுக்கெல்லாம் தந்தை ஹட்சன் டெய்லர் என்றால் அவர்கள் அனைவருக்கும் தாத்தா ஜியார்ஜ் முல்லர்" என்று அன்பொழுக அழைக்கின்றனர்.

சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனம் தனது கணவரால் தோற்றுவிக்கப்பட்டதன் மேலான நோக்கத்தை மனைவி மரியா டையர் திட்டமாகக் கண்டு கொண்டார்கள். மாபெரும் சீன தேசத்தை தேவனுடைய மாட்சிமையான சுவிசேஷ நறுமணத்தால் நிரப்புவதே அவருடைய கொழுந்துவிட்டு எரியும் ஆவல் என்பதை அம்மையார் புரிந்து கொண்டார்கள். அதின் காரணமாக அவர்கள் தனது கணவருடன் தோளோடு தோள் கொடுத்து மிகுந்த ஆத்தும பாரத்துடன் அந்த மிஷனரி ஸ்தாபனம் வளர அரும்பாடுபட்டார்கள். ஸ்தாபனத்திற்கு புதிய பெண் மிஷனரிகள் தெரிவு செய்யப்பட்டதும் மரியா டையர் அம்மையார்தான் அவர்களுக்கு சீன மொழி பயிற்சி அளித்து, சீன மக்களின் கலாச்சாரத்தை அவர்களுக்குப் போதித்து அவர்களை ஆண்டவர் பணிக்கு ஜெபத்துடன் ஆயத்தப்படுத்தி அனுப்புவது அவர்களின் மகிழ்ச்சியான பணியாக இருந்தது. ஹட்சன் தம்பதியினருக்கு 8 பிள்ளைகள் இருந்தனர். 4 பிள்ளைகள் மிகவும் பாலிய வயதிலேயே மரித்துவிட்டனர். மீதமுள்ள 4 பிள்ளைகளும் சீன தேசத்தின் மிஷனரிகளாக கர்த்தருக்குப் பணியாற்றினார்கள். அவர்கள் உலகப்பணிகளுக்குச் செல்லவே இல்லை.

ஹட்சன் தோற்றுவித்த சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனம் 1899 முதல் 1901 ஆம் ஆண்டுவரை சீனாவில் நடைபெற்ற கொடிய பாக்சர் கலவரத்தின் காரணமாக 58 மிஷனரிகளையும், 21 குழந்தைகளையும் இழந்தது. மிஷனரி ஸ்தாபனத்தின் உடமைகள் பலவும் அழித்து நாசமாக்கப்பட்டன. இந்த எதிர்பாராத பயங்கர சம்பவம் ஹட்சனை ஆறாத் துயரத்தில் ஆழ்த்தியது. அவரது இழப்பு முழுவதையும் சீன அரசாங்கத்திடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெற்றுத்தர ஐரோப்பிய நேச படைகள் முன் வந்தபோதினும் ஹட்சன் தனது ஆண்டவர் இயேசுவின் சிலுவை அன்பின் காரணமாக அதை மன்னித்து அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

ஹட்சனின் சுமார் 51 ஆண்டு கால ஆத்தும அங்கலாய்ப்பின் ஊழியம் காரணமாக அவர் தோற்றுவித்த சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனம் அவர் மரிப்பதற்கு முன்பே 750 மிஷனரிகளைக் கொண்டிருந்தது. இன்றைய நாளில் சுமார் 1200 மிஷனரிகள் அந்த ஸ்தாபனத்தில் பணி ஆற்றுவதாக கூறப்படுகின்றது. எத்தனையோ லட்சாதி லட்சம் டாலர்கள் இந்த ஊழியத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த தேவ ஊழியங்களின் மூலமாக கர்த்தரண்டை வழிநடத்தப்பட்ட சீன மக்களின் எண்ணிக்கை எத்தனையோ லட்சங்களாகும். முடிவில்லாத நித்தியம் மட்டுமே அதை வெளிப்படுத்தும். 1951 ஆம் ஆண்டு சீன கம்மியூனிஸ்ட்டுகள் சீன நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியபோது சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தையும் கலைத்துவிட்டார்கள். எனினும் அதின் மிஷனரிகள் எல்லாரும் உலகத்தின் கிழக்கு ஆசிய 25 நாடுகளுக்குப் பரவிச் சென்று "அயல்நாடுகளின் மிஷனரி ஐக்கியம்" (Overseas Missionary Fellwoship) என்ற பெயரில் அதை மாற்றி அமைத்து தேவ மனிதர் ஹட்சன் டெய்லர் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக ஆத்தும பாரத்தோடு தோற்றுவித்த அதே அற்புத ஊழியத்தை இன்றுவரை கர்த்தருக்கு மகிமையாக தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். அல்லேலூயா.

 
தேவ மனிதர் ஹட்சனின் பூலோக
வாழ்வின் இறுதி நாட்கள்

ஹட்சன் டெய்லரின் தேக சுகத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தமையாலும் அவரது பெற்ற புதல்வன் டாக்டர் ஹோவர்ட் டெய்லர் அவர்களின் முழுமையான சம்மதத்தின் பேரிலும் தனது தகப்பனாரோடு அவரும் அவரது மனைவி ஜெரால்டின் ஹோவர்டும் சீன தேசத்திற்கு செல்லுவதாக உறுதி அளித்ததின் காரணமாக 1905 ஆம் வருடம் பெப்ரவரி மாதம் 15 ஆம் நாள் சீனாவிற்கு பயணமானார். சீன தேசத்தின் அரசியல் கொந்தளிப்பின் காரணமாக பெரும் இன்னல்களுக்கு ஆளான சீன கிறிஸ்தவர்களைக் காண ஹட்சன் பெரிதும் விரும்பினார். 1905 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 17 ஆம் தேதி அவர் சீனாவின் ஷாங்காய் பட்டணத்திற்கு வந்து சேர்ந்தார். வரும் வழியில் அவர் வட அமெரிக்காவில் தனது சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தை ஆதரித்துக்கொண்டிருந்த தேவ மக்களையும் சந்தித்துவிட்டு ஜப்பான் தேசத்தின் வழியாக பசிபிக் சமுத்திரத்தைக் கடந்து சீன தேசம் வந்தார்.

ஷாங்காய் பட்டணத்தின் எல்லைப்புறங்களில் வந்த போது அந்த விருத்தாப்பிய மனிதரின் இருதயம் பழைய நினைவுகளால் நிறைந்தது. அவரது படகானது கப்பல் செப்பனிடும் துறைக்குள் நுழைந்தபோது அவர் கண்ட பழைய பல காட்சிகள் அவர் நினைவுக்கு வந்ததுடன் தான் அநேக ஆண்டு காலங்களுக்கு முன்பாக விட்டுச் சென்ற பட்டணத்தின் சூழ்நிலை வாசனையை அவரால் நன்கு முகரவும் முடிந்தது.

படகு துறைமுகத்துக்குள் வரவும் ஹட்சனின் அநேக நெருக்கமான ஆவிக்குரிய நண்பர்கள் அவரை வாழ்த்தி வரவேற்றனர். அவரை வரவேற்பதற்கு டிக்சன் வந்திருந்தார். அவர் மேல் நாடுகளுக்கு செல்லுவதற்கு முன்பாக ஹட்சனை சந்தித்துவிடவேண்டும் என்ற ஆவலில் அதற்குத்தக்கதாக தனது பிரயாணத்தை ஒழுங்கு செய்து வந்திருந்தார். அவரை வரவேற்க ஜாண் ஸ்டீவன்சன் என்பவரும் வந்திருந்தார். சீனாவில் ஏற்பட்ட கொடிய பாக்சர் கலகத்தின் போது ஹட்சன் டெய்லர் தோற்றுவித்த சீன உள் நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தின் கிறிஸ்தவர்களையும், மிஷனரிகளையும் பாதுகாத்து வழிநடத்தியவர்களில் அவர் பெரும் பங்காற்றியவராவார். அந்தக்கூட்டத்தில் அவரது அன்பு நண்பர் ஜேம்ஸ் மெடோஸ் அவர்களும் வந்திருந்தார்.

ஹட்சன் ஷாங்காய் பட்டணத்தின் ஊசாங் வீதிக்கு வரவும் அவரை வரவேற்க வந்திருந்த ஏராளமான மக்கள் அவருக்கு ஆரவார வரவேற்பு அளித்தனர். ஹட்சன் டெய்லர் என்ற அந்த முதிய சிலுவை வீரர் தனது தேவனுடைய கரத்தின் துணையோடு சாதித்து முடித்திருந்த அநேக வெற்றியின் நினைவிடங்களுக்கு வந்து சேர்ந்திருந்தார். அவருடைய வருகையை முன்னிட்டு அவருடைய சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தின் தேசிய கூட்டம் கூடிற்று. ஹட்சன், அந்த சீன தேச ராட்சத ஆவிக்குரிய தலைவர்களோடு திரும்பவும் ஒன்றாக கலந்து கொள்ள கர்த்தர் கொடுத்த பாக்கிய சந்தர்ப்பத்திற்காக ஆவியில் களிகூர்ந்தார். அந்த மகிழ்ச்சியான சந்திப்பையும், அவரால் ஆண்டவரண்டை வழி நடத்தப்பட்ட சீன மக்களின் கூட்டங்களோடு அந்த நாளில் எடுத்துக் கொண்ட அநேக புகைப்படங்களை குறித்தும் அவர் முழுமையாக சந்தோசப்பட்டார். அவர் இருந்த அறையானது அழகான பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவருடைய வருகையை வாழ்த்தி வரவேற்று அவர் சீன தேசத்திற்கு சுவிசேஷத்தை அறிவித்து, திரளான சீன மக்களை ஆண்டவருடைய மந்தையின் ஆடுகளாக்கிய அவருக்கு தங்களின் இருதயம் நிறைந்த அன்பைத் தெரிவித்து தேவ மக்கள் அநேக கடிதங்களும், அழகான வாழ்த்து அட்டைகளும் அந்த அறையில் வைத்திருந்தனர்.

விரைவாகவே அவருடைய முன்னோக்கிய பணம் ஆரம்பமானது. அவர் செஞ்சியாங் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார். அந்த இடம் அவரது வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு அருமையான இடம். காரணம், அந்த இடத்தில்தான் அவரது அருமை மனைவி மரியா டையரும் அவர்களுடைய குழந்தைகளும் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். பல தடவைகளும் ஹட்சன் அந்த இடத்தில் தனது மனைவி பிள்ளைகளுடன் தனது சரீரம் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்றும், மகிமையின் உயிர்த்தெழுதலின் நம்பிக்கைக்காக அவர்களோடு சேர்ந்து தானும் காத்திருக்க வேண்டுமென்றும் கூறியிருக்கின்றார். ஆனால் அவருடைய ஆவல் இதுவரை நிறைவேறவே இல்லை. அந்த செஞ்சியாங் என்ற இடத்தில் தனது சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தின் இளம் மிஷனரிகளின் மத்தியில் பேசும் ஒரு சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. அந்த மிஷனரிகள் துரிதமாக சீன தேசத்தின் கடையாந்தர பணியிடங்களுக்கு செல்லுவதற்காக ஆயத்தமாக இருந்தனர். அவர்களுக்கு அவர் அளித்த சுருக்கமான செய்தியில் இவ்வாறு கூறினார்:-

"உங்களுக்கு முன்பாக என்ன இருக்கின்றது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. நான் உங்களுக்கு சுருக்கமான வார்த்தைகளில் தேவ ஆலோசனை கொடுக்க விரும்புகின்றேன். தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருங்கள். அவரை உங்களுக்குச் சொந்தமாக்கி அவரை அனுபவித்து ஆனந்தியுங்கள். அவர் உங்களை ஒருக்காலும் ஏமாற்ற மாட்டார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் கூடுதலான காலமாக நான் எனது வாழ்க்கையின் பிரதான பணியாக ஆண்டவருடன் எனது உறவை நெருக்கமாக வைத்து அவருடன் உறவாடி ஆனந்தித்து வந்திருக்கின்றேன். எனது மாமிச நேசத்தின் காரணமாகவோ அல்லது எனது பாவத்தின் காரணமாகவோ நான் அந்த தேவ உறவை ஒருக்காலும் உதாசீனப் படுத்தவில்லை. அந்த உறவிலிருந்து வழிவிலகிச் செல்லவுமில்லை. உங்களை இளம் மிஷனரிகளாக இங்கு சந்திப்பதை நான் ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன். எனது அருமை மனைவி இந்த இடத்தில் என் அண்டையில் மரித்தார்கள். நம்மைவிட்டுப் பிரிந்து சென்ற நமக்கு அருமையானவர்கள் நாம் நினைப்பதற்கும் அதிகமாக ஆவிக்குள்ளாக நம் அருகிலேயே அவர்கள் இருக்கின்றனர். ஆனால் நமது ஆண்டவர் அவர்கள் அனைவரையும் விட நமக்கு இன்னும் மிகவும் அருகில் இருக்கின்றார். அன்பின் ஆண்டவர் நம்மை ஒருக்காலும் கைவிடவுமாட்டார், விட்டு விலகவும் மாட்டார். என் அருமை சகோதரர்களே, தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வார்த்தைகளுக்கும் எப்பொழுதும் கீழ்ப்படிந்து உண்மையுள்ளவர்களாக இருங்கள்"

செஞ்சியாங் என்ற இடத்திலிருந்து ஹட்சன் டெய்லர், ஹங்கோவ் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார். அந்த இடத்தில் ஹட்சன் கடந்த நாட்களில் அவருடன் ஊழியம் செய்த 74 வயதினரான கிரிஃபித் ஜாண் என்பவரை சந்தித்தார். அவர்கள் இருவரும் அன்பின் ஆண்டவர் அவர்களின் ஊழியத்தின் பாதையில் கடந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் பாராட்டிய நன்மைகளையும், வழிநடத்துதல்களையும் அதிகமாக நினைவுகூர்ந்து ஆனந்தித்தனர். அந்தப் பண்டைய நாட்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அழகான ஞானப்பாடல்களைப் பாடி மகிழ்ந்து தம்மையே அவர்களுக்காக ஈந்தளித்த கர்த்தாவின் கிருபைகளைப் போற்றிப் புகழ்ந்தனர். சில தினங்களில் 78 வயதினரான வில்லியம் மார்ட்டின் என்ற தேவ மனிதரும் அவர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து கொண்டார். அந்த மூன்று ஆவிக்குரிய சிலுவைப் போர் வீரர்களும் ஒன்றாக இருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஹட்சன் அங்கிருந்து குனான் என்ற இடத்திற்குச் செல்லுவதற்கான வேளை வந்தது. வழி நெடுகிலும் அவரை அறிந்த அநேக மக்களும், பொதுவாக "மகா ஹட்சன் டெய்லர்" என்ற பெயருடன் கேள்விப்பட்டு வைத்திருந்த மக்களும் அவரை வாழ்த்தி வரவேற்றனர். அவர் குனான் என்ற இடத்திற்கு ரயில் மார்க்கமாகவே சென்றார். அந்த ரயில் பிரயாணம் அவருக்கு ஆனந்தம் அளிப்பதாக அமைந்தது. ஒரு காலத்தில் அதே ரயில் பிரயாணம் 2 வார காலம் எடுத்ததுடன் அந்தப் பிரயாணம் ஆபத்தானதும், பாடுகள் நிறைந்ததுமாகவிருந்தது. ஆனால் இப்பொழுது 24 மணி நேரத்தில் எந்த ஒரு கஷ்டமுமின்றி செல்ல முடிந்தது. அடிக்கடி ஹட்சன் ரயிலின் ஜன்னல் ஓரமாக அமர்ந்து தன்னை வழிநெடுகிலும் சந்திக்க வந்திருந்த மக்களை கை அசைத்து தனது அன்பைத் தெரிவித்தார். ரயில் நிற்கும் ஸ்டேஷன்களில் இறங்கி நின்று தன்னை வாழ்த்த வந்திருந்த மக்களின் அன்பான வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். ஹட்சன் பிரயாணம் செய்த ரயில் வண்டியின் சொந்தக்காரர்கள் அவரை தங்கள் ரயிலிலேயே இரவில் படுத்து இளைப்பாற அனுமதித்தார்கள். இல்லாவிட்டால் அவர் பட்டணத்துக்குள் நீண்ட தூரம் நடந்து சென்று அங்குள்ள ஏதாவது ஒரு சத்திரத்தில் இராத்தங்கி மறுநாள் ரயிலுக்கு திரும்பி வரவேண்டும்.

ஒரு இடத்தில் அங்குள்ள கிறிஸ்தவர்களின் வற்புறுத்துதலின் காரணமாக அவர்களைச் சந்தித்துவிட்டு அந்த மக்களின் விருப்பத்திற்கிணங்க அங்குள்ள சத்திரம் ஒன்றில் அவர் படுத்துக் கொண்டார். எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவு வேளையில் அவருடைய அறையின் கதவு தட்டப்பட்டது. ஹட்சனுக்குத் துணையாகச் சென்ற ஜாய்ஸ் என்பவர் கதவைத் திறந்து பார்த்தபோது ஒரு மனிதன் தனது கரத்தில் ஒரு கவருடன் வெளியே நின்று கொண்டிருந்தான். அந்த மனிதன் ஹட்சன் தோற்றுவித்த சீன உள் நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தின் சபை ஒன்றின் அங்கத்தினனாவான். தனது தலைமை பாஸ்டர் தனது ஊரைத்தாண்டிச் செல்லுவதைக் குறித்து அவன் கேள்விப்பட்டு தனது கரத்தில் ஒரு பெரிய காணிக்கையை எடுத்துக்கொண்டு ஹட்சனிடம் கொடுப்பதற்காக தனது ஊரிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டு நள்ளிரவு நேரத்தில் அவர் தங்கியிருந்த சத்திரத்திற்கு வந்து சேர்ந்திருந்தான். ஹட்சன் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக அவனுக்கு அறிவித்தபோது தனது கரத்திலிருந்த காணிக்கை கவரை ஜன்னல் வழியாக அறைக்குள் தள்ளிவிட்டு அவன் கடந்து சென்றான். "இது என்ன? எதற்காக?" என்று அந்த மனிதனிடம் கேட்டபோது "ஓ அது ஒன்றுமில்லை, எனது கிராமத்தை கடந்து செல்லும் மேன்மை தங்கிய பாஸ்டருக்கு எனது சிறியதோர் அன்பு மட்டுமே" என்று சொல்லிவிட்டு இரவின் இருளுக்குள் கடந்து சென்றுவிட்டான். எனினும் அடுத்து வந்த ஓய்வு நாள் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த அந்த மனிதனை ஹட்சன் அடையாளம் கண்டு அவனுக்கு தமது நன்றியைத் தெரிவிக்க மறக்கவில்லை.

ஹட்சன் தனது பிரயாணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தார். அவரைச் சந்தித்த மக்கள் யாவரும் சீன தேசம் முழுவதும் சுவிசேஷத்தைப் பரப்பிய அந்தப் பரிசுத்த பக்தனுக்கு கிருபை நிறைந்த வரவேற்பை பொழிந்தவர்களாக இருந்தனர். ஒவ்வொரு இடமாக அவர் பிரயாணம் செய்து கொண்டிருந்தது அவருக்கு கஷ்டமாகக் காணப்பட்டபோதினும் தன்னை தங்கள் முழு இருதயத்தோடு நேசித்த அந்தக் கிறிஸ்தவ மக்களைச் சந்திப்பதில் அவருக்கு அலாதி மகிழ்ச்சி காணப்பட்டது. ஓரிடத்தில் இரத்தாம்பரமான சிகப்பான பளபளப்பான பெரிய கொடியில் "சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தின் கொடை வள்ளலே, நாங்கள் உங்களை மிக அதிகமாக நேசிக்கின்றோம்" என்று எழுதப்பட்ட கொடியை அசைத்து அவரை மக்கள் வாழ்த்தி வரவேற்றார்கள்.

 
சங்ஷா பட்டணத்தில் தேவ மனிதர் ஹட்சன்

1905 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி ஹட்சன் சங்ஷா என்ற இடத்திற்கு வந்தார். அந்த இடத்தின் இயற்கை காட்சிகள் அவரை குதூகலமடையப்பண்ணுவதாக இருந்தது. பட்டணத்தின் பெரிய மதிற் சுவரிலிருந்து கிராமப்புறங்களை அவர் கண்ணோக்கினார். தனது நண்பர் டாக்டர் ஃபிராங்க் கெல்லர் என்பவருக்கு புதிய மருத்துவமனை கட்டும்படியாக கொடுத்த இடத்தையும் அவர் பார்த்தார்.

சனிக்கிழமை சாயங்காலம் ஹட்சனுக்கு சங்ஷாவிலுள்ள மிஷனரிகள் அளித்த விருந்தில் கலந்து கொண்டு அவர்களோடு கர்த்தரின் அன்பை பகிர்ந்தவராக அளவளாவி மகிழ்ந்தார். அது ஒரு இனிமையான மாலை நேரம். அவர் இருந்த அறையின் கதவு முன்னாலுள்ள புல்வெளி மைதானத்துக்கு நேராக திறந்து வைக்கப்பட்டிருந்தது. அந்த மைதானம் பூச்செடிகளாலும், மரங்களாலும் சூழப்பட்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக ஹட்சன் அந்தக்கூட்டத்தில்தான் அமர்ந்திருந்தார்.

வந்திருந்த தேவ மக்கள் அநேகமாக எல்லாரும் சென்றதன் பின்னர் அவருடைய குமாரன் டாக்டர் ஹோவர்ட் டெய்லர் தனது தந்தையை வீட்டின் மாடி அறைக்கு வரும்படியாக வற்புறுத்தவே தனது இருக்கையிலிருந்து எழுந்து அங்கிருந்த இரண்டு மின் விசிறிகளை தனது கரங்களில் எடுத்துக்கொண்டு மாடிக்குப் புறப்பட்டார். விசிறிகளில் ஒன்றை அங்கிருந்த டாக்டர் பெரி என்பவரிடம் கொடுத்தார். "நானே அவைகள் இரண்டையும் உங்களுக்காக கொண்டு வருவேனே" என்று சொன்னபோது "ஒரு மின்விசிறியை நீங்களேதான் கட்டாயம் கொண்டு வரவேண்டும்" என்ற அவருடைய பதில் அவருடைய நண்பரின் உள்ளத்தை ஆழமாகத் தொடுவதாக இருந்தது.

"ஒவ்வொரு காரியத்தையும் நாம் தேவனண்டை ஜெபத்தின் மூலமாக எடுத்துச் செல்லுவதற்கு பாக்கியம் பெற்றிருக்கின்றோம். எனினும், சில காரியங்கள் தேவனண்டை கொண்டு செல்லப்படுவதற்கு அத்தனை முக்கியத்துவம் இல்லாத மிகச் சிறிய காரியங்களாக ஆகிவிடுகின்றது" என்று டாக்டர் பெரி சொன்னதைக் கேட்ட ஹட்சன் "சிறிய காரியங்கள், பெரிய காரியங்கள் என்ற எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. தேவன் ஒருவர் மாத்திரமே பெரியவர், நாம் அவரை முழு மனதோடு நம்பிச் சார்ந்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

 
நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த
தேவ பக்தன்

ஹட்சன் மிகவும் சோர்பாகக் காணப்பட்டபடியால் தனது இரவு ஆகாரத்திற்காக கீழே செல்ல விரும்பவில்லை என்றும் தான் கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புவதாகவும் கூறினார். எனினும், இரவில் அவருடைய மகன் ஹோவர்ட் இராச்சாப்பாட்டுடன் தகப்பனார் படுத்திருந்த மாடிக்கு ஏறி வந்த அவர் எதையோ மறந்துவிட்டு வந்ததைப் போல திரும்பவும் கீழே இறங்கிச் சென்றார். அவருடன் மெத்தைக்கு ஏறி வந்த அவருடைய மனைவி ஜெரால்டின் மெத்தையின் திறந்த பால்கனி வழியாக பட்டணத்தின் அழகை இரவில் கண்டு மகிழ்ந்தார்கள். அந்த வேளை ஹட்சன் மூச்சுவிடும் சப்தமானது சற்று பலமாக கேட்டது. தும்மல் எடுப்பதற்காக அவர் பிரயத்தனம் செய்கின்றார் என்று அந்த அம்மையார் முதலில் நினைத்துக் கொண்டார்கள். அடுத்தும் அவர் ஒரு பலமான மூச்சு விடவும் காரியங்கள் வழக்கமாக இல்லை என்று கண்ட ஜெரால்டின் தனது கணவரை சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அடுத்த கணமே அவரும் அங்கு வந்திருந்த டாக்டர் கெல்லரும் ஒன்றாக மெத்தைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் போய்ப் பார்த்தபோது ஹட்சன் தனது கடைசி மூச்சை தேவ சமாதானத்தோடு ஆண்டவருடைய கரங்களில் ஒப்புவித்துக் கொண்டிருந்தார். எந்த ஒரு மூச்சுத் திணறலும், திக்குமுக்காடும் இல்லாமல் அமைதியாக அவருடைய ஜீவன் பிரிந்து சென்றது.

அந்த நாளின் இரவில் ஹட்சன் தனது இராக்காலத்தில் வாசித்த அனுதின மாலைத் தியானத்தில் "ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான், தேவன் அவனை எடுத்துக்கொண்டார்" (ஆதி 5 : 24) என்ற வேத பகுதியை வாசித்திருந்தார். டாக்டர் ஹோவர்ட் தனது தகப்பனாரின் மரித்த சடலத்தண்டை நின்று கொண்டிருந்தபோது "என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாக இருந்தவரே" என்ற ஆச்சரிய தேவ வார்த்தையே அவருடைய நினைவுக்கு வந்ததாகக் கூறினார். அவருடைய மனைவி ஜெரால்டின் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள் "ஓ, அந்த அன்பான முகத்தில் இளைப்பாறுதலும், சமாதானமும் அத்தனை ஆச்சரியமாக பரிமளித்தது. கடந்த பல்லாண்டு காலமாக தன் அன்பின் ஆண்டவரை சீன மக்களுக்கு வழங்குவதற்காக அவர் பட்ட பாடுகள், துயரங்கள், சொல்லொண்ணா கஷ்டங்கள் அனைத்தும் இமைப்பொழுதில் மறைந்து ஒரு சிறு குழந்தை தனது தாயிடம் பால் குடித்துவிட்டு இனிமையாக தூங்குவது போல இப்பொழுது அவர் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அவருடைய அறையானது சொல்ல முடியாத தேவ சமாதானத்தின் ஒளியால் நிறைந்திருந்தது"

சங்ஷா என்ற அந்த இடத்திலுள்ள சீன கிறிஸ்தவர்கள் தங்கள் பாஸ்டருக்கு தாங்கள்தான் பிரேதப் பெட்டி செய்து கொடுப்போம் என்று வற்புறுத்தி அந்தப் பொறுப்பை தங்கள் வசம் ஏற்றுக்கொண்டார்கள். ஹோவர்ட்டின் மனைவி ஜெரால்டின் தொடர்ந்து இவ்விதமாக விளக்குகின்றார்கள். "அறை முழுவதும் அமைதியாகவும், பூலோகத்தில் காணக்கூடாத தனக்கே உரித்தான தேவ மகிமையின் இனிமை பரவியிருப்பதாகவும் காணப்பட்டது. ஹட்சன் அவர்கள் இந்த உலகத்தை விட்டு கடந்து சென்றுவிட்டபோதினும் ஒரு ஆச்சரியமான அன்பும், அவரின் இளகிய மனதும் மக்களை இன்னும் தன் பக்கமாக இழுப்பதாகக் காணப்பட்டது. அவருடைய பிரகாசிக்கின்ற முகத்தைப் பார்த்தாலே அமைதி தவழ்வதாக இருந்தது. அன்பான, பேரன்பான எங்கள் தந்தையே, தேவனுடைய ராஜ்யத்திற்காக நீங்கள் மேற்கொண்ட அனைத்துப் பிரயாணங்களும் முற்றுப்பெற்றுவிட்டது. உங்கள் களைப்பு நீங்கிற்று. இறுதியாக வீட்டிற்கு, ஆம் பாதுகாப்பான விண் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டீர்கள்"

முதிர்ந்த தேவ மனிதரை இறுதியாக காணும்படியாக சிறு சிறு கூட்டமாக மக்கள் அந்த விசேஷித்த அறைக்கு இரவில் வந்தவண்ணமிருந்தனர். ஒரு அன்பான அம்மையார் அவரைப் பார்த்துவிட்டுச் செல்லுகின்ற வேளையில் மற்றொரு பெண்ணின் காதிற்குள் ஜெயகெம்பீர தொனியில் "ஆயிரம் பதினாயிரம் தேவ தூதர்கள் பரலோகில் அவரை வாழ்த்தி வரவேற்று அழைத்துச் சென்றிருப்பார்கள்" என்று சொன்னார்கள்.

 
மோட்சம் செல்லுவதற்கான ரஸ்தாவை
திறந்து கொடுத்த ஹட்சன்

ஒரு இளம் சீன சுவிசேஷகரும் அவரது மனைவியும் ஹட்சனை மறு நாளில் சந்திப்பதாக இருந்தது. ஆனால், அவர் இறந்து போனார் என்று கேள்விப்பட்டதும் இருவரும் உடனே அந்த இரவிலேயே அவரைக் காண வந்திருந்தனர். தங்கள் அன்பான பாஸ்டரின் அருகில் நெருங்கி அவரது முகத்தை காண அனுமதி கேட்டு அவர் அருகில் வந்தார்கள். அவரது படுக்கையண்டை வந்து நின்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அந்த சீன சுவிசேஷகர் "பாஸ்டரின் கரத்தை நான் தொடலாமா?" என்று கேட்டுக் கொண்டே ஹட்சனின் கரத்தை அன்பொழுகத் தூக்கி அதை தடவிக் கொடுத்த வண்ணமாகவே அவர் இன்னும் உயிரேடிருக்கின்றார் என்ற பாவனையில்:-

"அன்பும், பரிசுத்தமுமான பாஸ்டர் தகப்பனே, நாங்கள் உங்களை உண்மையில் மனதார நேசிக்கின்றோம். நாங்கள் உங்களைப் பார்ப்பதற்காக இன்று வந்தோம். நாங்கள் உங்கள் முகத்தைக் கண்டு களிக்க விரும்பினோம். நாங்கள் உங்களின் சிறு குழந்தைகள். நீங்கள் எங்களுக்கு ரஸ்தா திறந்து கொடுத்தீர்கள், ஆம் மோட்சம் செல்லுவதற்கான ரஸ்தாவை திறந்து கொடுத்தீர்கள். நீங்கள் எங்களை நேசித்தீர்கள், எங்களுக்காக நீண்ட ஆண்டுகளாக ஜெபித்தீர்கள். நாங்கள் இன்று உங்கள் முகத்தை கண்டு ஆனந்திக்க வந்தோம். நீங்கள் மிகுந்த சந்தோசத்தோடும், சமாதானத்தோடும் காணப்படுகின்றீர்கள். நீங்கள் புன்முறுவல் செய்கின்றீர்கள். உங்கள் முகம் அமைதியாகவும், பூரண திருப்தி நிறைந்ததாகவும் தெரிகின்றது. இந்த இராக் காலத்தில் நீங்கள் எங்களுடன் பேச முடியாது. நாங்கள் உங்களை பரலோகத்திலிருந்து இங்கு கொண்டு வரவும் விரும்பவில்லை. ஆனால், நாங்கள் உங்களண்டை வருவோம். அப்பொழுது எங்கள் அன்பும் பரிசுத்தமுமான பாஸ்டர் தகப்பனே நீங்கள் எங்களை ஒவ்வொருவராக மகிழ்ச்சி பொங்க வரவேற்றுக் கொண்டிருப்பீர்கள்"

 
செஞ்சியாங்கிற்கு கொண்டு செல்லப்பட்ட
தேவ மனிதரின் சடலம்

பிரேதப்பெட்டி செய்து ஆயத்தமாக்கப்பட்டு ஹட்சனின் சரீரம் அதில் வைக்கப்பட்ட பொழுது சங்ஷா என்ற அந்த இடத்திலுள்ள அன்பான சீன கிறிஸ்தவ மக்கள் அவரை தங்களிடத்திலேயே அடக்கம் செய்யும்படியாக வற்புறுத்தினார்கள். ஆனால், ஹட்சனின் குமாரன் டாக்டர் ஹோவர்ட் டெய்லர் தனது தகப்பனார் தனது சரீரத்தை தனது மனைவி, பிள்ளைகளின் அருகில் செஞ்சியாங் என்ற இடத்தில் அடக்கம் செய்யும்படியாக பல தடவைகளும் விரும்பியதால் அங்கேயேதான் அவர்களை அடக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னார்.

சங்ஷா என்ற இடத்திலிருந்து செஞ்சியாங் என்ற இடம் வரை ஹட்சனின் சரீரம் கப்பல் மூலமாக கொண்டு செல்லப்பட்டது. சீனா தேசத்திலுள்ள தேவனுடைய திருச்சபைக்கு ஹட்சன் ஆற்றிய மாபெரும் தேவப் பணியை மனதில் கொண்டவராக கப்பலின் பக்தியுள்ள கேப்டன் தேசீய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்ட நிலையில் கப்பலை ஓட்டிச் சென்றார்.

 
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷன்
(2 கொரிந்தியர் 12 : 2)

ஜாண் ஸ்டீவன்சனும், டிக்சனும் அடக்க ஆராதனையில் கலந்து கொள்ளுவதற்காக செஞ்சியாங்கிற்கு வந்து சேர்ந்திருந்தனர். அடக்க ஆராதனையை டிக்சன் அவர்கள்தான் நடத்தினார். அந்த அடக்க ஆராதனை கர்த்தருக்குள் ஒரு வெற்றியின் ஆராதனையாக நடந்தது.

ஹட்சனின் மரணச் செய்தி பரவவே சீனாவிலுள்ள ஷாங்காய் பட்டணத்திலும், இதர சீனப்பட்டணங்களிலும், லண்டனிலும், உலகத்தின் பல்வேறு நாடுகளிலுள்ள தேவனுடைய திருச்சபைகளிலும் ஞாபகார்த்த ஆராதனைகள் நடைபெற்றன. ஹட்சனின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் சீன கிறிஸ்தவ குழந்தைகள் திரண்டு வந்து இனிமையான துதிப்பாடல்களைப் பாடி தங்கள் அன்புக்கரங்களில் கொண்டு வந்திருந்த மலர்ப் பூங்கொத்துக்களை தேவ மனிதரின் கல்லறையில் வைத்தனர். அவரது கல்லறை வாசகம் மிகவும் எளிமையான ஓரிரு வார்த்தைகளில் கீழ்க்கண்டவாறு இருந்தது:-

"சீன உள்நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தை தோற்றுவித்த குருவானவர் ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் அவர்களின் பரிசுத்த நினைவை கர்த்தருக்குள் போற்றி மகிழும் வகையில்:- அவரது பிறப்பு 1832 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள்: அவரது நித்திய விண் வீட்டு அழைப்பின் நாள் 1905 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் நாள்: கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷன் (2 கொரிந்தியர் 12 : 2)

சீன தேசத்திற்கு ஹட்சன் டெய்லர் ஆற்றிய அரும்பெரும் தேவப்பணிகள் குறித்து கர்த்தரை மகிமைப்படுத்தி தேவ மக்கள் பலரும் பேசினார்கள். ஹட்சனின் நண்பர் கிரிஃபித் ஜாண் என்பவர் "விசுவாசமும், ஜெபமும் ஹட்சன் டெய்லருக்கு தேவனுடனான மிகுந்த வல்லமையைக் கொடுத்தது. அவருடைய தேவ அன்பு மனுமக்களின் இருதயங்களை தேவனண்டை சுண்டி இழுத்துவிட்டது" என்று கூறினார். ஒரு பத்திரிக்கை செய்தியாளர் தனது பத்திரிக்கையில் "ஹட்சன் டெய்லர், கிறிஸ்து இரட்சகரை சீன மக்களுக்கு எந்தவிதத்திலாகிலும் பிரசிங்கிக்க வேண்டுமென்ற ஒரே ஒரு நோக்கத்தைத்தான் தனது வாழ்க்கையில் கொண்டிருந்தார். அதைத் தவிர வேறே எதுவும் அந்த தனித்த உள்ளத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு சீன மனிதனும் கிறிஸ்து இரட்சகர் மூலமாக உள்ள தேவனுடைய இரட்சண்யத்தை கண்டு கொண்டுவிடவேண்டும் என்று அவர் துடி துடித்து நின்றார்" என்று எழுதினார்.

தேவ மனிதர் ஹட்சன் டெய்லரின் சரித்திரம் முற்றுப்பெற்றது. ஆனால், அவர் மூலமாக தேவன் செய்ய ஆரம்பித்த அவருடைய மகத்தான தேவ பணி இன்றும் உலகில் தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டே இருக்கின்றது. நாம் எல்லாரும் அந்த மகா நாளில் தேவனும், ஆட்டுக்குட்டியானவருமான நம் ராஜாவாம் இயேசு இரட்சகரின் சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கும்போது தேவன் அந்த பரிசுத்த மனிதரின் மூலமாகச் செய்த யாவும் கர்த்தருக்கு மகிமையாக வெளியரங்க மாக்கப்படும். அல்லேலூயா.


 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM