பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்

ஜியார்ஜ் முல்லர் 1805 - 1898


("தன்னை உண்டாக்கினவரையே நோக்குவான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே நோக்கிக் கொண்டிருக்கும்" (ஏசாயா 17 : 8) என்ற தேவ வாக்கின்படி இஸ்ரவேலின் பரிசுத்தர் ஒருவரையே தன் வாழ் நாள் காலம் முழுவதும் நோக்கி, நோக்கி பார்த்து தான் ஏறெடுத்த 50000 (ஐம்பதினாயிரம்) ஜெபங்களுக்கு பதிலைப் பெற்றுக்கொண்ட தேவ பக்தன் ஜியார்ஜ் முல்லர் ஆவார். அந்த 50000 ஜெபங்களில் 30000 (முப்பதாயிரம்) ஜெபங்கள் 24 மணி நேரத்தில் கர்த்தரால் விடை அளிக்கப்பட்டது என்று அவர் கூறுகின்றார். அநேக ஜெபங்கள் அவர் தனது முழங்கால்களிலிருந்து எழும்பும் முன்னரே தேவனிடமிருந்து பதிலைப் பெற்றுக்கொண்டது என்று சொல்லப்படுகின்றது. "இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் ஜியார்ஜ் முல்லர் தனது தேவைகளுக்கு என்னிடம் பணம் கேட்டார்" என்று சொல்ல இயலாது என்று அவர் கூறுகின்றார். 10000 (பத்தாயிரம்) அநாதை பிள்ளைகளை ஒரு நேர ஆகாரம் கூட அவர்களுக்கு தடையில்லாமல் தேவ ஒத்தாசையால் போஷித்து அவர்களை நித்திய ஜீவ பாதையில் வழிநடத்திய உத்தம தேவ பக்தன் அவர். கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை 100 தடவைகள் தனது முழங்கால்களில் நின்றும், 100 தடவைகள் நாற்காலியில் உட்கார்ந்தவாறும் வாசித்த தேவ பக்தன். வல்லமையான ஜெப மாந்தன். உலகம் முழுவதும் பல தடவைகளும் பிரயாணம் செய்து கர்த்தர் ஒருவரையே முழுமையாக சார்ந்து ஜெபம், விசுவாசத்தின் மூலமாக நாம் ஆண்டவருக்காக மா மாட்சியான காரியங்களை இன்றும் சாதித்து விடலாம் என்று பறைசாற்றிய சிலுவை வீரர். அவர் தோற்றுவித்த "வேத ஞான ஸ்தாபனம்" (Scriptural Knowledge Institution) மூலமாக லட்சக்கணக்கான வேதாகமங்கள், புதிய ஏற்பாடுகள், சுவிசேஷ பங்குகள், திரள் திரளான சுவிசேஷ கைப்பிரதிகள் உலகமெங்குமுள்ள தேவ ஊழியர்களுக்கு இலவசமாக அனுப்பப்பட்டதுடன், அநேக மிஷனரிகளையும் பொருளுதவியினால் தாங்கினார். அவர் ஒரு மாபெரும் கொடையாளி என்று அழைக்கப்படுகின்றார். அந்த தேவ மனிதரின் வாழ்க்கை சரித்திரத்தை அதிகமான ஜெபத்தோடும், மிகுந்த பிரயாசத்தோடும் மொழி பெயர்த்து சுருக்கமாக கீழே தந்திருக்கின்றேன். நீங்களும் அதை ஜெபத்தோடு வாசித்து அவருடைய பரிசுத்த வாழ்க்கையை தேவ பெலத்தால் உங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்)

"நீ ஆண்டவரோடு சஞ்சரித்துக் கொண்டிருப்பாயானால், அவருடைய சகாயத்தை எதிர்நோக்கி நீ காத்திருப்பாயானால் அவர் உன்னை ஒருக்காலும் கைவிடார்"

"எனது ஒவ்வொரு நாளின் பிரதான பணி எனது ஆண்டவர் இயேசுவோடு அதிகமாக உறவாடி மகிழ்வதேயாகும். எனது முதன்மையான எதிர்பார்ப்பு நான் என் ஆண்டவருக்கு எப்படியாக தொண்டு செய்யலாம் என்பதல்ல, எனது ஆவிக்குரிய உள்ளான மனுஷனை தேவனுக்கு முன்பாக எவ்விதமாக போஷித்து பிரகாசிப்பிக்கலாம் என்பதே"

"தேவனுடைய வார்த்தையை எவ்வளவு குறைவாக நாம் வாசிப்போமோ அவ்வளவு குறைவாகவே நாம் அதை வாசிக்கவும் விரும்புவோம். எவ்வளவு குறைவான நேரம் நாம் ஜெபிப்போமோ அவ்வளவு குறைவாகவே நாம் ஜெபிக்கவும் விரும்புவோம்"

"ஒரு தேவ ஊழியனுக்கு ஒரே ஒரு எஜமானன் மட்டுமே இருக்க முடியும். ஒரு தேவ ஊழியன் இந்த உலகத்தில் செல்வச்சீமானாகவும், சுகபோகியாகவும், பெரியவனாகவும், உலகத்தால் கனப்படுத்தப்படவும், மக்களால் புகழப்படவும் மனதார ஆசை கொண்டிருக்கும் அதே வேளையில் அவனது எஜமானன் ஏழையாகவும், புறக்கணிக்கப்பட்டவராகவும், அசட்டைபண்ணப்பட்டவருமாக இருப்பதில் எந்த ஒரு அர்த்தமுமில்லை. அப்படியானால் அவனது எஜமானன் ஆண்டவர் இயேசுவல்ல, உலக ராஜ்யங்களை காண்பித்து அதின் ஆளுகையை தேவ மைந்தனுக்கு வாக்களித்த தந்திர சாத்தானேதான்"

"ஒரு ஏழை மனிதன் (ஜியார்ஜ் முல்லர்) தனது எளிமையான ஜெபத்தாலும், விசுவாசத்தாலும் எந்த ஒரு தனி மனிதனையும் உதவிக்காக கெஞ்சிக் கேட்காமல் ஒரு பெரிய அநாதை இல்லத்தை தோற்றுவித்து அதைச் சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலமாக பராமரித்துக் கொண்டு செல்லுவானானால் இது ஒன்றே "தேவன் இன்றும் உண்மையுள்ளவர்" என்பதற்கும் "தேவன் இன்றும் ஜெபத்தைக் கேட்கிறவர்" என்பதற்கும் அப்பட்டமான அத்தாட்சியாகும்"

"நான் ஜெப ஆவியிலேயே ஜீவிக்கின்றேன். நான் நடந்து கொண்டே ஜெபிக்கின்றேன். நான் படுத்திருக்கும்போதும், எழும்பும்போதும் ஜெபிக்கின்றேன். எனது ஜெபங்களுக்கான பதில்கள் வந்தவண்ணமாகவே இருக்கின்றன. ஆயிரங்கள், ஆயிரம் பதினாயிரம் தடவைகள் எனது ஜெபங்களுக்கு பதில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நான் ஜெபிக்கும் காரியம் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையைக் கொண்டு வரக்கூடியது என்பதை நான் நிச்சயித்துக்கொண்ட மாத்திரத்தில் நான் அதற்கு விடை கிடைக்கும் வரை தொடர்ந்து ஜெபிக்கின்றேன்"

"நான் மரித்த ஒரு நாள் உண்டு" இந்த வார்த்தையை ஜியார்ஜ் முல்லர் சொல்லும்போதுதானே அவர் அப்படியே மெதுவாக குனிந்து குனிந்து தரையையே தொட்டுவிடுவார். அவர் தனது பேச்சைத் தொடர்ந்தவராக "ஜியார்ஜ் முல்லருக்கு நான் மரித்தேன். அவனது வாஞ்சை விருப்பங்களுக்கும், அவனது எண்ணங்களுக்கும், அவனது கருத்துக்களுக்கும், அவனது நாட்டங்களுக்கும், அவனது சுயசித்தத்துக்கும் மரித்தேன். இந்த உலகத்துக்கு மரித்தேன். இந்த உலகத்தின் நிந்தை அவமானத்துக்கு மரித்தேன். இந்த உலகத்தின் புகழ் ஆரவாரம், ஆர்ப்பரிப்புக்கு மரித்தேன். என் தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவனாக நான் என்னை அவருக்கு முன்பாக நிலைநிறுத்துவதையே கற்றுக் கொண்டேன்"

"நான் எனது அறைக்குள் பிரவேசித்து அங்கிருந்த நாற்காலியில் எனது வேதாகமத்தை வைத்துவிட்டு, எனது அறையின் கதவை பூட்டிய பின்னர் நாற்காலிக்கு அருகில் முழங்காலூன்றி சில மணி நேரம் ஆண்டவருடைய வார்த்தைகளை தியானித்தேன். நான் இந்தவிதமாக மூன்று மணி நேரங்கள் ஆண்டவருடைய பாதங்களில் கற்றுக்கொண்ட சத்தியத்தை வேறுவிதமாக பல மாதங்கள் செலவிட்டாலும் கற்றுக் கொண்டிருக்க இயலாது என்று நான் உங்களுக்கு திட்டமாகச் சொல்ல முடியும்"

"கடன் வாங்குவதைக் குறித்து நான் சொல்லும் தேவ ஆலோசனை என்னவெனில், தேவனுடைய வாசற்படியைத் தாண்டி நாம் கடன் வாங்குவதற்காக எந்த ஒரு மனிதனிடமும் செல்லத் தேவையில்லை. நம்முடைய தேவைகளை எல்லாம் சந்திக்கப் போதுமான கர்த்தர் நமக்கிருக்கும்போது நாம் எங்கும் சென்று கை ஏந்த காரணமே கிடையாது"

"எனது தேவ ஊழியங்களின் பிரதான குறிக்கோள் என்னவெனில், பல்லாயிரக்கணக்கான ஆண்டு காலங்களுக்கு முன்னர் தேவன் எப்படியிருந்தாரோ அதே வண்ணமாக இந்த 19 ஆம் நூற்றாண்டிலும் அவர் ஜீவிக்கின்ற தேவனாகவும், தமது பிள்ளைகளின் ஜெபங்களுக்கு செவிசாய்த்து அவரை நம்புகிற அந்த பிள்ளைகளுக்கு உதவி செய்யவல்ல கர்த்தராக இருக்கின்றார் என்பதை நிரூபித்து காட்டவுமேதான்"

"தேவன் எனது ஜெபங்களுக்கு ஆச்சரியமான விதங்களில் பதில் கொடுத்ததை வாசிக்கின்ற ஒரு மெய்யான விசுவாசி, மெய்யாகவே நான் ஆண்டவருடைய பரிசுத்த பிள்ளைகள் அநேகரைக் காட்டிலும் ஆவிக்குள்ளாக ஒரு மேலான நிலையில் உள்ளவன் என்றும் அதின் காரணமாகவே அவர் எனக்கு இவ்வண்ணமாக தயவு பாராட்டினார் என்றும் நிச்சயமாக நினைக்கலாம். ஆனால், நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகின்றேன், நான் தேவனுடைய சிந்தையை உணர்ந்து அவருடைய சித்தத்தின்படி காரியங்களைச் செய்தேன். இதுவேதான் தேவன் என்னை ஆசீர்வதித்ததும் அநேகருக்கு என்னை ஆசீர்வாதமாக வைத்ததின் இரகசியமுமாகும்"

இப்படி அநேக பரிசுத்த பொன் மொழிகளை உதிர்த்தவர்தான் பரிசுத்தவான் ஜியார்ஜ் முல்லர் ஆவார். ஜியார்ஜ் முல்லர் ஜெர்மன் தேசத்தைச் சேர்ந்த ஜெர்மானிய குடிமகனாவார். 1805 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் கிராப்பன்ஸ்டாட் என்ற ஜெர்மானிய கிராமத்தில் ஹெர் முல்லருக்கும், ஃபிரா முல்லருக்கும் மகனாக அவர் பிறந்தார். அவரது குழந்தை பருவ ஐந்து ஆண்டு காலத்தைக் குறித்த செய்திகள் அதிகமாக நமக்குத் தெரியவில்லை. 1810 ஆம் ஆண்டில் ஹெர் முல்லரின் குடும்பம் 4 மைல்கள் தொலைவுக்கு அப்பாலிருந்த ஹீமர்ஸ்பென் என்ற இடத்திற்கு நகர்ந்து சென்று அங்கு குடியேறியது. அந்த இடத்தில் ஹெர் முல்லர் ஜெர்மானிய அரசாங்கத்திற்கு சுங்கத் தீர்வை வசூலிக்கும் கலெக்டராக பணி ஆற்றினார். அரசாங்கத்தின் விசேஷித்த சலுகைகளைப் பெற்று அனுபவிக்கும் பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் தனி நபர்கள் அந்த வரியை செலுத்த வேண்டும். அடுத்து வந்த 11 ஆண்டு காலங்களுக்கு ஹெர் முல்லர் குடும்பத்தினர் அங்குதான் தங்கியிருந்தனர்.

 
சிறுவனாக இருந்தபோதே திருடனாக விளங்கிய முல்லர்

ஹெர் முல்லரின் கரங்களில் ஏராளமான பணம் புழக்கத்தில் இருந்ததால் அவற்றை தனது ஆண் மக்கள் இருவருக்கும் தாராளமாகக் கொடுத்து பணத்தை பற்றிய ஒரு ஆசை ஆவலையும், அதை சிக்கனமாக பாதுகாத்துக் கொள்ளும் ஒரு மனப்பக்குவத்தை எதிர்காலத்தில் அவர்கள் அடைய வேண்டும் என்ற தாகத்தில் கொடுத்தார். ஆனால் அவரது ஆவல் அவரது விருப்பத்திற்கு மாறாக பயங்கரமான எதிர் விளைவுகளை கொண்டு வந்தது. "எனது தகப்பனார் தனது பிள்ளைகளை உலகப்பிரகாரமான கண்ணோட்டத்தில் வளர்த்தார். அதின் அடிப்படையில் எங்களுக்கு அதிகமான பணங்களை தந்தார். அதின் முடிவு என்னையும் எனது அண்ணனையும் பல பாவத் தவறுகளுக்கு வழிநடத்திச் சென்றது. எனக்கு 10 வயது ஆவதற்கு முன்னரே நான் திரும்பத்திரும்ப எனது தகப்பனாரின் வசத்திலிருந்த அரசாங்க பணத்தை திருடினேன். எனது திருட்டை கண்டு கொண்ட என் தந்தை என்னை கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்காக கொஞ்சப் பணத்தை மேஜையின் மீது எண்ணி வைத்துவிட்டு தனது பணிகளை கவனித்தார். நான் அதில் கொஞ்சம் பணத்தை எடுத்து நான் அணிந்திருந்த எனது சப்பாத்துக்குள் மறைவாக வைத்துக் கொண்டேன். பின்னர் தனது பணத்தை எண்ணிய என் தந்தை என்னை முழுமையாக தேடினார். இறுதியாக அவர் தனது பணத்தை எனது சப்பாத்துக்குள் கண்டு பிடித்து எடுத்துக் கொண்டதுடன் என்னை நைய புடைக்கவும் செய்தார்" என்று ஜியார்ஜ் முல்லர் தமது நாட்குறிப்பில் பின் நாட்களில் எழுதினார்.

தந்தை எவ்வளவு அடித்தாலும் முல்லர் தனது கெட்ட திருட்டுப் பழக்கத்தை மாற்றுவதாகத் தெரியவில்லை ஒவ்வொரு தடவையும் தந்தை கண்டு பிடிக்க முடியாத புதிய தந்திர வழிகளைப் பயன்படுத்தி தந்தையிடமிருந்த அரசாங்கப் பணத்தை திருடி வந்தார். "அப்பாவிடம் நன்கு அடிகளை வாங்கிக் கொண்டு அடுத்த முறை என்ன புது யுக்தியை கையாண்டு கெட்டிக்காரத்தனமாக பணத்தை திருடலாம் என்ற நினைவேதான் எனக்கு வந்தது" என்று முல்லர் எழுதுகின்றார்.

முல்லர் 10 க்கும் 11 க்கும் இடைபட்ட வயதில் இருந்தபோது அவருடைய தகப்பனார் அவரை ஹால்பர்ஸ்டாட் என்ற இடத்திலிருந்த கலாசாலைக்கு கல்விக்காக அனுப்பி வைத்தார். வரும் நாட்களில் சர்வகலாசாலை படிப்புக்கு அந்த கல்வி பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நினைத்தார். "மகன் நன்றாக கல்வி பயின்று ஒரு லூத்தரன் திருச்சபை குருவானவராக மாறவேண்டும். அந்த குருவானவர் தொழிலின் மூலமாக மகன் நல்ல ஆடம்பரமாக வாழ்வில் எந்த ஒரு கஷ்டமின்றி வாழுவான். அத்துடன் எனது அந்திய காலத்திலும் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் மகனுக்கு திருச்சபை கொடுக்கும் வசதியான பங்களாவில் நானும் அவனுடன் அண்டிக் கொள்ளுவேன்" என்று அவர் நினைத்தார். மற்றபடி அன்பின் ஆண்டவரை மகன் தனது குருத்துவ கல்வி மூலமாக மகிமைப்படுத்துவதை அவர் சற்றும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

 
தாயாரின் மரணமும் தனயனின் பாவ அகோரமும்

ஜியார்ஜ் முல்லரின் 14 ஆம் வயதில் அவரது அருமைத் தாயார் மரணப்படுக்கையில் இருந்தபோது அவர்கள் திட்டமாக மரிக்கப் போகின்றார்கள் என்பதை அறிந்திருந்தும் விடியற்காலம் 2 மணி வரை அவர் சூதாட்டம் ஆடினார். அதின் பின்னர் தனது கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து மதுபானக்கடைக்குச் சென்று நன்றாக மது அருந்தி தெருக்களில் தள்ளாடி தள்ளாடி சுற்றித் திரிந்தார். அவர் தனது அறைக்கு திரும்பி வந்தார். அந்த நாட்களில் அவர் திடப்படுத்தல் (confirmation) பெற்று கர்த்தருடைய இராப்போஜன பத்தியில் சேர ஆயத்தமாக குருவானவருடைய பயிற்சி வகுப்புகளில் சில நாட்கள் பங்கு பெற்றுக் கொண்டு வந்தார். அந்த பயிற்சி வகுப்பு அறைக்குத்தான் முல்லரின் தந்தை ஹெர் முல்லர் வந்து மகனுடைய வருகைக்காக காத்துக் கொண்டு நின்றார். "உனது தாயார் மரித்துப் போனார்கள். அவர்களின் அடக்க ஆராதனைக்கு ஆயத்தப்படு" என்று தந்தை சொன்ன வார்த்தை முல்லருக்கு எந்த ஒரு மன துயரத்தையும், சஞ்சலத்தையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. தாயார், ஞாயிற்றுக்கிழமை மரித்தார்கள். முல்லர், திங்கட்கிழமை திடப்படுத்தல் பெற்று கர்த்தருடைய பந்தியில் பங்குபெற வேண்டும்.

 
முல்லர் எடுத்த திடப்படுத்தல் (Confirmation)

ஜியார்ஜ் முல்லர் திடப்படுத்தல் எடுப்பதற்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னர் குருவானவருக்கு திடப்படுத்தல் ஆராதனைக்காக தகப்பனார் கொடுத்த காணிக்கையில் 12 பாகத்தில் 11 பாகத்தை தனக்கென்று மறைத்து வைத்துக் கொண்டு ஒரு பாகத்தை மட்டுமே குருவானவருக்குக் கொடுத்தார். இறுதியாக தேவாலயத்தின் குருவானவர் அறையில் இராப்போஜனம் பெறுவதற்கு முன்பாக பாவங்களை அறிக்கையிடும் போது கூட தனது திருட்டை அறிக்கையிடாமல் மறைத்துக் கொண்டார். "இந்தவிதமான கறைப்பட்ட இருதயத்துடன் எந்த ஒரு ஜெப தபமுமில்லாமல், பாவங்களுக்காக பட்சாதாபமுமில்லாமல், தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை குறித்த சிறிதளவேனும் அறிவில்லாமல் நான் திடப்படுத்தல் பெற்று எனது முதலாவது இராப்போஜனத்தை 1820 ஆம் ஆண்டு கர்த்தர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினத்தன்று எடுத்தேன்" என்று முல்லர் எழுதுகின்றார்.

"எனது பாவச் செயல்களிலிருந்து விடுபட எத்தனையோ நல்ல தீர்மானங்களை நான் எடுப்பேன். தேவனைப்பற்றிய பயமோ அல்லது அவரை கனவீனப்படுத்தக் கூடாது என்ற எண்ணமோ எனக்கு இல்லாத காரணத்தால் வெகு துரிதமாகவே எனது தீர்மானங்கள் ஒன்றுமில்லாமல் போய் முன்னைவிட இன்னும் அதிகமாக பாவச் செயல்களுக்குள் இறங்கினேன்" என்று முல்லர் எழுதுகின்றார்.

 
பாவ சேற்றில் ஆழமாகச் சென்றதும்
சிறை வாசம் அனுபவித்ததும்

அடுத்து வந்த ஆண்டில் ஜியார்ஜ் முல்லரின் தகப்பனார் ஸ்கோன் பெக் என்ற இடத்திற்கு அரசாங்கத்தால் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அப்பொழுது அவர் தமது குமாரனை தமது ஊருக்கு அருகில் உள்ள மாக்டிபெர்க் என்ற இடத்திலுள்ள கதீட்ரல் பள்ளியில் கல்வி பயிலுமாறு கேட்டுக் கொண்டார். பள்ளி நவம்பர் மாதத்தில்தான் ஆரம்பிப்பதாக இருந்ததால் தங்கியிருந்த அவர்கள் வீட்டில் நடைபெற வேண்டிய சில புதுப்பித்தல் வேலைகளை ஆட்களை வைத்து செய்து வந்தார். வீட்டில் தனிமையாக இருந்ததால் தனது கரங்களில் அந்த நாட்களில் தாராளமாகக் கிடைத்த ஏராளமான பணங்களை அசுத்தமான நாவல்கள் வாங்கி வாசிப்பதிலும், சிற்றின்ப பாவ இன்பங்களிலும், சூதாட்டங்களிலும், மது அருந்துவதிலும் முல்லர் மனங்குளிர செலவிட்டார்.

1821 ஆம் ஆண்டு முல்லர் மாக்டிபெர்க் என்ற இடத்திற்கு பிரயாணப்பட்டுச் சென்றார். அங்கு தங்கியிருந்த 6 நாட்களிலும் அவர் மிகுந்த பாவ வழிகளில் செலவிட்டார். அதற்கான மிகுதியான பணத்தை அவர் பற்பலவிதமான தந்திரங்களிலும், ஏமாற்றுதல்களிலும், மாய்மால ஜாலங்களிலும் தன் கை வசப்படுத்தியிருந்தார். அதின் பின்னர் அவர் அங்கிருந்து புரூன்ஸ்விக் என்ற இடத்திற்கு பயணப்பட்டுச் சென்று ஒரு விலையுயர்ந்த ஆடம்பர ஹோட்டலில் ஒரு வார காலம் செலவிட்டார். கையிலிருந்த பணம் எல்லாம் செலவாயிற்று. அவரிடம் பணம் இல்லை என்பதை கண்டு கொண்ட அவர் தங்கியிருந்த ஹோட்டலின் முதலாளி முல்லரின் விலை மதிப்புள்ள ஆடைகளை தனது வசமாக கைவசப்படுத்திக் கொண்டான்.

அதின் பின்னர் முல்லர் 6 மைல்கள் தூரம் நடந்து உல்ஃபன்பட்டல் என்ற இடத்திற்கு வந்து அங்குள்ள ஒரு விடுதியில் தங்கினார். தன் வசம் நிறைய பணம் உண்டு என்ற ஏமாற்றுத் தோரணையில் விடுதி உரிமையாளரிடம் நடந்து கொண்டார். ஒரு நாள் விடுதியின் உயரமான ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிச் செல்ல முயன்றபோது முல்லர் பிடிபட்டார். தனது தவறை முல்லர் ஒப்புக்கொண்ட போதினும் அவருக்கு இரக்கம் காட்ட அந்த இடத்தில் எவருமே இல்லை. துரிதமாகவே அவர் கைது செய்யப்பட்டு ஒரு போலீஸ் அதிகாரி முன்னர் நிறுத்தப்பட்டார். போலீஸ் அதிகாரிக்கும் முல்லருக்கும் இடையே நடந்த சம்பாஷணையை கவனியுங்கள்.

"உன்னுடைய பெயர்?"

"ஜியார்ஜ் முல்லர்"

"வயது"

"பதினாறு"

"பிறந்த இடம், தேதி?"

"கிராப்பன்ஸ்டாட், ஜெர்மனி, செப்டம்பர் 27, 1805 ஆம் ஆண்டு"

"உல்ஃபன்பட்டல் என்ற இடத்திலுள்ள ஒரு விடுதியில் நீ பண வசதியுள்ளவன் போல நடித்து இறுதியில் விடுதிக்காரருக்கு அவருக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் போனது உண்மைதானா?"

"உண்மைதான், ஆனால்........."

"அதற்கு ஒரு வார காலத்திற்கு முன்பதாக புரூன்ஸ்விக் என்ற இடத்திலுள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் நீ தங்கியிருந்து ஹோட்டல் உரிமையாளர் பணம் கேட்டபோது அதை கொடுக்க இயலாமல் அவர் உனது வஸ்திரங்களை எடுத்துக் கொண்டது உண்மைதானா?"

ஜியார்ஜ் முல்லர் தனது நிலையை பாதுகாக்க எந்த ஒரு வார்த்தையும் வாயில் இல்லாதவராக அமைதியாக இருந்தார். அவர் இப்பொழுது முற்றும் ஓட்டாண்டி. ஒரு செப்புக்காசு கூட அவரிடம் கிடையாது. மூன்று மணி நேரம் அந்த போலீஸ் அதிகாரி முல்லரை விசாரித்த பின்னர், அவருடைய நீதிமன்ற விசாரணை எப்பொழுது என்ற எந்த ஒரு விபரமும் அறிவிக்க இயலாமல் அவரை சிறைக்கூடத்தில் அடைக்க கட்டளையிடவே 2 போர் வீரர்கள் அவரை சிறைக்கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 
நிர்ப்பந்தமான சிறைக்கூட வாழ்க்கை

1821 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஒரு சிறைக்கூடத்தின் ஒரு சிறிய அறையில் ஜியார்ஜ் முல்லர் தனது முதல் இரவை செலவிட்டார். அந்த சிறிய அறையின் குறுகலான சிறிய ஜன்னல் பலமான கம்பிகளால் தடுக்கப்பட்டிருந்தது. அந்த சிறிய ஜன்னல் வழியாகத்தான் கொஞ்ச ஒளி சிறைக்கூடத்திற்குள் வரும். ஒரு சிறைக்கூட அறைக்கும் அடுத்த சிறைக்கூட அறைக்கும் இடையே வலுவான மரக்கட்டைகளால் தடுப்பு ஏற்படத்தப்பட்டிருந்தது. அந்த நாளின் இராத்திரியில் முல்லருக்கு கொஞ்சம் இறைச்சியும், ரொட்டியும் இரவு ஆகாரமாகக் கொடுக்கப்பட்டது. அந்த இறைச்சியின் வாடை முல்லரை அருவருக்கச் செய்ததால் அவர் அந்த ஆகாரத்தை தொட்டுக்கூட பார்க்கவில்லை. இந்த செயல் அந்த ஆகாரத்தை தயாரித்த தலைமை சமையற்காரரின் மனதைப் புண்படுத்தவே அதற்கப்பால் அவன் முல்லருக்கு ஆகார விசயங்களில் கருணை காட்டாமல் நடந்து கொண்டான். அடுத்த நாளும் அதே ஆகாரம்தான் அவருக்கு பரிமாறப்பட்டது. மத்தியான ஆகாரத்திற்கு பச்சையான ரொட்டியும், குளிர்ந்த இறைச்சியும், கொஞ்சம் காய்கறியும் கிடைத்தது. பசியின் கொடுமை காரணமாக நான்காம் நாளிலிருந்து முல்லர் தனக்கு முன்பாக எதை வைத்தாலும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டார். சிறைச்சாலை வார்டர் இரவும் பகலும் அவரை அந்த சிறிய அறையிலேயே அடைத்து வைத்தான். அவருக்கு எந்தவித உடற்பயிற்சியும், வெளி வேலையும் கொடுக்கவில்லை. தான் வாசிப்பதற்கு ஒரு வேதாகமம் கேட்ட முல்லருக்கு அதுவும் மறுக்கப்பட்டது.

முல்லர் அடைபட்டுக்கிடந்த அறையின் அடுத்த அறையில் இருந்த கொலைக் குற்ற கைதி மிகவும் சப்தமாக முல்லருடன் பேசிக் கொண்டே இருப்பான். தனது பக்கத்து அறை கைதி திருட்டுக் குற்றத்தில் மாட்டினவன் என்பதை அவன் கண்டு கொண்டான். அவர்கள் இருவரும் சப்தமாக சம்பாஷிப்பதை கண்ட சிறைக்கூட கண்காணிப்பாளன் அவர்கள் இருவரையும் ஒரே அறையில் அடைக்க உத்தரவிட்டான். முல்லர் தன்னோடு வந்து சேர்ந்த தனது புதிய நண்பனுக்கு தனது கடந்த கால வாழ்க்கையில் நடந்த வீர தீர திருட்டுச் செயல்களை தனது கட்டுக்கதைகளுடன் ஒன்று சேர்த்து தனது நண்பன் மெச்சிக்கொள்ளும் வகையில் அவனுக்கு கூறி வந்தார். இந்தவிதமாக அவர்கள் இருவரும் ஒரு வார காலம் தங்கள் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் மகிழ்வித்து வந்தார்கள். அதின் பின்னர் இரண்டு கைதிகளும் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் பேசிக்கொள்ளாமல் முற்றும் அமைதியாகிவிட்டார்கள்.

இந்த அமைதியான நாட்களில் ஜியார்ஜ் முல்லர் தனது கடந்த கால தவறான பாவ வாழ்க்கையை ஒவ்வொன்றாக அலசிப்பார்க்க ஆரம்பித்தார். அப்பாவிடமிருந்த அரசாங்க பணத்தை திருடியது, அந்த திருட்டு தொழிலில் தொடர்ந்து நீடிக்க முடியாமல் தனது 10 ஆம் பிறந்த நாளில் தனது தந்தையிடம் வசமாக சிக்கிக்கொண்டு அடிபட்ட நாளை எல்லாம் கண்ணீரோடு நினைவு கூர்ந்தார்.

1822 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 12 ஆம் நாள் ஜியார்ஜ் முல்லரின் சிறைக்கூட சிறிய அறையின் கதவின் பூட்டு திறக்கப்படுவதை அவர் கவனித்தார்.

"போலீஸ் அலுவலகத்துக்கு நீ வர வேண்டும். என்னைப் பின்பற்றி வா" என்று சிறைக்கூட வார்டன் அவரை அழைத்துச் சென்றான்.

அங்கே இருந்த போலீஸ் கமிஷனர், முல்லரைப் பார்த்து "உனது தகப்பனார் உனது வழிப் பிரயாணத்துக்கான செலவுப் பணத்தையும், நீ தங்கியிருந்த விடுதிக்கு நீ செலுத்த வேண்டிய பணத்தையும், இங்கு சிறைக்கூடத்தில் உனக்கு ஆன செலவு பணத்தையும் அனுப்பி வைத்திருக்கின்றார். நீ இப்பொழுது சுதந்திரமானவன், உடனே நீ வீட்டுக்குப் புறப்பட்டுச் செல்" என்று அனுப்பி வைத்தார். அந்தச் சிறைக்கூடத்தில் முல்லர் திருடர்களோடும், கொலைக்குற்றம் புரிந்த கொலையாளிகளோடும் 24 நாட்கள் செலவிட்டிருந்தார்.

ஜியார்ஜ் முல்லரின் தந்தை ஹெர் முல்லர் மகனுடைய வரவைக் கண்டு ஆனந்தமடைந்தாலும் அவரை வீட்டுக்குள் சேர்ப்பதற்கு முன்னால் நையப்புடைத்து விட்டார்.

 
கர்த்தரை குறித்த வாஞ்சை
துளிதானும் இல்லாத வாலிபன்

1822 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நார்ட்சென் என்ற இடத்திலுள்ள பள்ளியில் சேர்ந்து இரண்டரை ஆண்டு காலம் அங்குதான் கல்வி கற்றார். அந்தக் கல்விக்கூடத்தில் லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், எபிரேயு, கிரேக்க மொழி, கணிதம் போன்றவைகளைக் கற்றார். அவர் தனது கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டினார். "குளிர் காலமோ, வெயில் காலமோ தினமும் காலை 4 மணிக்கு நான் தவறாது எழும்பி பகல் முழுவதும் படித்து இரவு 10 மணி வரை எனது பாடங்களை படித்தேன்" என்று முல்லர் எழுதுகின்றார். கல்வி மேல் உள்ள அந்தவிதமான அக்கறை அவரை சிறந்த மாணாக்கனாக நிறுத்தியது.

"தேவனை குறித்து துளிதானும் சிந்தனையின்றி நான் வாழ்ந்தேன். இரகசியமாக நான் அதிகமான பாவ வாழ்வில் இருந்தேன். அதின் காரணமாக நான் வியாதிப்பட்டு 13 வார காலம் மருத்துவமனையில் தனிமையில் படுத்திருந்தேன். எனது வியாதிப் படுக்கையில் கூட நான் எனது பாவச்செயல்களுக்காக பட்சாதாபப்பட்டு கர்த்தரண்டை திரும்ப வேண்டுமென்ற எண்ணம் கொஞ்சமும் எனக்கு இல்லாமல் போயிற்று. தேவனுடைய வார்த்தையைக் குறித்த தாகம் அறவே எனக்கு இல்லாதிருந்தது. அந்தச் சமயம் என் வசம் எனது சொந்தமாக 300 புத்தகங்கள் வைத்திருந்தேன். அந்தப் புத்தகங்களில் தேவனற்ற வால்டேர் போன்ற நாஸ்தீகர்களின் புத்தகங்கள் கூட இருந்ததே தவிர ஜீவனுள்ள ஆண்டவருடைய வேத புத்தகம் அதில் இடம் பெறவில்லை. கர்த்தருடைய இராப்போஜனத்தை எடுக்கப்போகும் நாளுக்கு முந்தைய நாள் மிகவும் பக்திவிநயமாக நான் மற்றவர்களுடன் சேர்ந்து அதற்கு ஆயத்தப்படுவேன். இராப்போஜன நாளன்று எனது பக்தியை அடக்கி பாதுகாப்பேன். அவ்வளவுதான், இராப்போஜனம் முடிந்ததும் பழைய பாவங்கள் எல்லாம் திரும்பவும் முண்டியடித்து என்னைச் சூழ்ந்து கொள்ளும்" என்று முல்லர் எழுதுகின்றார்.

பள்ளியில் படிக்கும்போது கூட ஒரு சமயம் அவருடைய தகப்பனார் அவருக்கு அனுப்பிய பணத்தை தனது நண்பர்கள் எல்லாரிடம் காண்பித்து பணம் வந்த காரியத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்திவிட்டு, அதின் பின்னர் ஓரிரு நாட்களில் தானாகவே தனது பெட்டியின் பூட்டையும், தனது கிட்டார் வாத்தியக் கருவி பெட்டியின் பூட்டையும் உடைத்து தனது பணம் முழுவதையும் யாரோ திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று தலைவிரி கோலமாக பள்ளி நிர்வாகியின் அலுவலகம் நோக்கி ஓடிச் சென்று தனது காரியத்தை கூறவே அவரது பணத்தை பார்த்தவர்கள் மற்றும் நண்பர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அவர் இழந்துபோன பணம் முழுவதையும் அவர் மேல் பரிதாபம் கொண்டு அவருக்கு சேர்த்துக் கொடுத்தார்கள். ஆனால் அவர் நடத்திய கபட நாடகத்தையும், வஞ்சக ஏமாற்றையும், அவருடைய அண்டப் புழுகையும் பள்ளியின் நிர்வாகி விரைவில் கண்டு பிடித்துவிட்டார்.

 
சுவிட்சர்லாந்து தேசத்துக்கு திருட்டு சுற்றுலா சென்றது

ஒரு நாள் ஜியார்ஜ் முல்லர், ஹாலே என்ற இடத்திலுள்ள மதுக்கடை ஒன்றில் 10 பைன்ட் அதாவது 20 கோப்பை அளவிலான பீர் என்ற மதுபானத்தை ஒரு மாலைப்பொழுதில் மட்டும் குடித்திருந்தார். அந்த நாளில் அவர் தனது நண்பன் பெற்றா என்பவனையும் மற்றும் ஒரு சிலரையும் சந்தித்தார். முல்லருக்கு பிரயாணங்கள் மற்றும் ஊர் சுற்றிப்பார்த்தல் ரொம்பவும் பிடிக்கும். முல்லர் தனது நண்பர்களை சுவிட்சர்சர்லாந்துக்கு சென்று வர அழைத்தார். அவர்கள் அதற்கான பாஸ்போர்ட் மற்றும் பண வசதி இல்லாமை குறித்து அவரிடம் கூறியபோது பாஸ்போர்ட் குறித்த காரியத்தை தான் கவனித்துக்கொள்ளுவதாக கூறி பெற்றோர்களைப்போல போலி கடிதங்கள் எழுதி தந்திரமாக அனைவருக்கும் பாஸ்போர்ட்டுகள் எடுத்துவிட்டார். தேவையான பணத்திற்கு புத்தகங்கள், பொருட்கள் போன்றவற்றை விற்கச் சொல்லி அவர் தனது நண்பர்களுக்கு திருட்டு ஆலோசனை கொடுத்து வேண்டிய பணத்தையும் சேர்த்துக் கொண்டு முல்லர் குழுவினர் சுவிட்சர்லாந்து சுற்றிப்பார்க்க கிளம்பினர். சுமார் ஒன்றரை மாதங்கள் அந்த நாட்டில் உள்ள இடங்களைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பினார்கள். அவர்களுடைய சுவிட்சர்லாந்து பிரயாணத்தின் செலவுகளில் பெரும் பகுதி செலவுகளை நண்பர்கள் தலையில் போட்டுவிட்டு மிகவும் குறைந்த ஒரு சிறிய பகுதியை மாத்திரமே முல்லர் தன்னளவில் சந்தித்திருந்தார் என்பது அவரது நண்பர்கள் எவருக்குமே தெரியாது. அத்தனை சாமர்த்தியமாக அவர் தனது நண்பர்களை ஏமாற்றிவிட்டார்.

சரளமாக பொய் பேசுதல், திருடுதல், ஏமாற்றுதல், சூதாட்டம், மதுபானம் அருந்துதல், அசுத்தமான நாவல் புத்தகங்கள் வாசித்தல், விபச்சாரம், வேசித்தனம் போன்ற பாவங்கள் எல்லாம் அவரது வாழ்வில் மலிந்து கிடந்தன. ஒரு சமயம் ஒரு ரோமன் கத்தோலிக்க இளம் பெண்ணை அழகுள்ளவளாகக் கண்டு அவளைக் கூட்டிக்கொண்டு பித்தனாக சுற்றி அலைந்தார்.

 
இரட்சகர் இயேசுவின் அன்பால் பிடிபட்ட ஜியார்ஜ் முல்லர்

1825 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் மத்தியில் முல்லரின் நண்பன் பெற்றா என்பவன் (முல்லருடன் சுவிட்சர்லாந்து தேசத்திற்கு உல்லாச பயணம் மேற்கொண்ட நண்பன்) "நான் கடந்த பல வாரங்களாக ஒவ்வொரு சனிக்கிழமை மாலை நேரமும் ஒரு கிறிஸ்தவ வீட்டில் நடைபெறும் ஜெப கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றேன்" என்று சொல்லிவிட்டு ஜியார்ஜ் முல்லர் தனது வார்த்தைகளுக்கு எப்படி பதில் கொடுக்கின்றான் என்பதை பொறுத்திருந்து கவனித்தான்.

"அந்த கூட்டத்தில் என்ன நடக்கின்றது?" என்று முல்லர் கேட்டார்.

"அவர்கள் பாடுகின்றார்கள், ஜெபிக்கின்றார்கள், வேத புத்தகத்தை வாசிக்கின்றனர், அச்சிடப்பட்ட ஒரு பிரசங்கத்தை ஒருவர் வாசிக்கின்றார்" என்று பெற்றா பதில் அளித்தான்.

"இன்று மாலை நானும் உன்னுடன் வந்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புகின்றேன்" என்றார் முல்லர்.

"நீ அந்தக் கூட்டத்தை எப்படி விரும்புவாயோ என்பது எனக்குத் தெரியவில்லை" என்றான் பெற்றா.

"நான் உன்னுடன் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிக ஆசையாக இருக்கின்றேன்" என்றார் முல்லர்.

"அப்படியானால், இன்று மாலை நான் உன்னை என்னுடன் அந்தக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லுகின்றேன்" என்று பெற்றா பதிலளித்தான்.

அந்த மாலை நேர ஜெபக்கூட்டம் ஹெர் வாக்னர் என்பவரின் வீட்டில் நடைபெற்றது. அவரது வீட்டிற்கு தான் வருவதை அவர் ஒரு வேளை விரும்பமாட்டார் என்று முல்லர் ஆரம்பத்தில் நினைத்தார். அவரது வீட்டிற்கு சென்றதும் முல்லர் தனது வருகைக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டார். அவருடைய வார்த்தையைக் கேட்டு ஹெர் வாக்னர் புன்னகை புரிந்தார்.

"உங்கள் விருப்பம்போல அடிக்கடி இந்த வீட்டிற்கு வாருங்கள். எங்கள் வீடும், எங்கள் இதயமும் உங்களுக்காக எப்பொழுதும் திறந்திருக்கின்றது. இப்பொழுது நீங்கள் வந்து எங்களுடைய ஜெபத்தில் கலந்து கொள்ளுங்கள்" என்று ஹெர் வாக்னர் முல்லரை அன்புடன் அழைத்தார்.

அவர்கள் ஒரு பாமாலைப் பாடலைப் பாடினார்கள். அதற்கப்பால் ஹெர் கெய்சர் என்பவர் (இந்த தேவ மனிதர் பின் நாட்களில் லண்டன் மிஷனரி சுவிசேஷ சங்கம் சார்பாக ஆப்பிரிக்காவுக்கு மிஷனரியாகச் சென்றவர்) முழங்காலூன்றி கூட்டத்தில் கர்த்தருடைய ஆசீர்வாதம் வேண்டி உள்ளம் உருகி ஜெபித்தார். முல்லர் இதுவரை எவரையும் முழங்காலில் நின்று ஜெபிப்பதை பார்க்காததுடன் அவரும் முழங்காலூன்றி ஜெபித்ததும் கிடையாது.

ஹெர் கெய்சர் வேதாகமத்திலிருந்து ஒரு அதிகாரத்தை வாசித்ததுடன் அச்சிடப்பட்ட ஒரு பிரசங்கத்தையும் வாசித்தார். அந்த நாட்களில் ஜெர்மானிய சட்டப்படி ஒரு குருவானவரை தவிர மற்ற சாதாரண கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை மக்களுக்கு விளங்க காண்பிப்பதோ அல்லது பிரசிங்கிப்பதோ குற்றமாகும். கூட்ட முடிவில் ஒரு ஞானப்பாடல் பாடினதும் ஹெர் வாக்னர் ஜெபித்து கூட்டத்தை முடித்தார். அவர் ஜெபிக்கும்போது முல்லர் தனது மனதுக்குள்ளாக நான் இந்த மனிதரைவிட அதிகமாகப் படித்திருக்கின்றேன் நான் கூட இவரைவிட நன்றாக ஜெபிக்கலாமே என்று நினைத்துக் கொண்டார்.

 
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு புதிய பிரகாசமான வாழ்க்கை

"நாம் சுவிட்சர்லாந்து தேசத்துக்கு உல்லாச பிரயாணம் போன சமயத்தில் கூட நாம் அங்கு கண்டு ஆனந்தித்த எல்லா சந்தோசங்களும் இந்த நாளின் மாலை வேளை ஜெபக்கூட்டத்தில் கண்டு கொண்ட சந்தோசத்திற்கு இணையாகாது" என்று வீடு திரும்பும் சமயம் தன்னை ஜெபத்திற்கு அழைத்து வந்த தனது நண்பன் பெற்றாவிடம் முல்லர் மிகுந்த பரவசத்துடன் சொன்னார்.

ஜியார்ஜ் முல்லரின் வாழ்வில் அது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அன்று இரவு அவர் தனது படுக்கையில் மிகுந்த தேவ சமாதானத்தோடும், சந்தோசத்தோடும் படுத்து இளைப்பாறினார். அடுத்து வந்த பல நாட்களாக அவர் ஹெர் வாக்னரின் வீட்டுக்குச் சென்று தேவனுடைய வார்த்தைகளை ஆழ்ந்து வாசித்து தியானித்து கற்றறிந்தார். அவருடைய வாழ்க்கை மாறிற்று. பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில் ஆசை ஆவலோடு வாசித்த நாவல்களைவிட இப்பொழுது ஆண்டவருடைய வார்த்தைகளை மனங்கொண்ட மட்டும் அள்ளிப் பருகினார். அடிக்கடி ஆண்டவருடைய சமூகத்துக்கு ஓடிச் சென்று அவருடைய பாதங்களில் முழங்காலூன்றினார். தேவ அன்பு அவரை நெருக்கும்போதெல்லாம் ஆலய ஆராதனைகளில் கலந்து கொண்டார். மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறுகளை வாசித்து பரவசம் அடைந்தார். தானும் அப்படிப்பட்டதோர் மிஷனரியாக ஆகவேண்டும் என்று தீர்மானித்தார்.

"1826 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் அதாவது நான் ஆண்டவரின் சொந்தப் பிள்ளையாக மாற்றமடைந்து ஆறு அல்லது ஏழு வார காலத்திற்கு அப்பால் அதிகமான ஜெப ஆயத்தத்துடன் ஒரு முக்கியமான தீர்மானம் மேற்கொள்ளுவதற்காக எனது தந்தையை காண்பதற்காக நான் ஊருக்குச் சென்றேன்."

"அப்பா, நான் ஒரு மிஷனரியாகச் செல்லுவதை தேவன் விரும்புகின்றார் என்பதை உணருகின்றேன். நமது தாய் நாடான ஜெர்மானிய தேசத்தின் மிஷனரி சங்கங்களின் கட்டளைப்படி நான் மிஷனரியாக ஆவதற்கு முன்பு நான் உங்களுடைய அனுமதியைப் பெற வேண்டி வந்திருக்கின்றேன்" என்றார் முல்லர். அவருடைய தகப்பனார் மிகுந்த சப்தத்துடன் தனது பதிலைக் கூறினார்.

"நான் உனது கல்விக்காக பெரும் பணத்தை செலவிட்டிருக்கின்றேன். எனது அந்திய காலத்தில் எனது கடைசி நாட்களை நீ குருவானவராக பணி செய்யும் சபையின் உனது குருமனையில் (Parsonage) நிம்மதியாக களிக்கலாம் என்று நினைத்திருந்தேன். நீ இப்பொழுது சொல்லுகின்றபடி எனது ஆசை நிறைவேறாது. இனி நான் உன்னை எனது மகனாக எண்ணப்போவதில்லை" என்றார் முல்லரின் தந்தை. சற்று நேர அமைதிக்குப் பின்னர் அவரின் தந்தை "என் அன்பான மகனே, நான் உன்னை கெஞ்சிக் கேட்கின்றேன், உனது தீர்மானத்தை மாற்றிக் கொள்" என்று அழத் தொடங்கினார்.

ஆனால் ஜியார்ஜ் முல்லர் தனது மனதை கர்த்தருக்குள் நன்கு திடப்படுத்திக் கொண்டு தனது உள்ளத்தில் எழுந்த மிஷனரியாக ஆகவேண்டுமென்ற அழைப்பில் உறுதியாக நின்றார்.

தான் படித்த ஹாலே என்ற இடத்திலுள்ள வேதசாஸ்திர கல்லூரிக்கு அவர் திரும்பினார். அவர் இன்னும் இரண்டு வருட காலம் அங்கு கல்வி கற்க வேண்டும். எனினும், தனது தகப்பனாரிடமிருந்து இனி ஒருக்காலும் தனது கல்விக்காக எந்த ஒரு பணமும் பெறக்கூடாது என்று தன் உள்ளத்தில் நிச்சயித்துக் கொண்டார். இப்படி முல்லர் செய்தது தவறாக நமக்குத் தெரியலாம். ஆனால், வரும் நாட்களில் முல்லர் ஒரு குருவானவராகாவிட்டால் தன் முகத்தில் விழிக்கவே கூடாது என்று அவரது தந்தை அவரிடம் திட்டமாகக் கூறிவிட்டார்.

தந்தையின் பண ஒத்தாசை இல்லாமல் எந்தவிதத்தில் ஹாலே வேதசாஸ்திர கல்வியை முடிக்க முடியும் என்ற சூழ்நிலையில் முல்லர் இருந்தபோது "கர்த்தருக்குப் பயந்தவர்களுக்கு குறைவில்லை" (சங் 34 : 9 ) என்ற தேவனுடைய வார்த்தை அவருடைய உள்ளத்தை ஆற்றித் தேற்றினது. இந்த நாட்களில் அநேக அமெரிக்கர்கள் ஹாலே வேத சாஸ்திர கல்லூரிக்கு கல்வி கற்க வந்தனர். அவர்களில் 3 விரிவுரையாளர்களும் இருந்தனர். இந்த அமெரிக்கர்களுக்கு ஜெர்மன் மொழி தெரியாததால் மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஹாலே கல்லூரியில் வேதசாஸ்திர பேராசிரியர் டாக்டர் தோலக் என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த தமது சக விரிவுரையாளர்களுக்கு ஒரு ஆலோசனை கூறினார்.

"எனக்கு ஒரு மாணவன் உண்டு. ஜெர்மன் மொழியை சிறப்பாகக் கற்பிக்கும் ஆற்றல் அவனுக்கு உண்டு என்று எனக்குத் திட்டமாகத் தெரியும்" என்று கூறினார். அதைக் கேட்ட அமெரிக்கர்கள் மகிழ்ச்சியடைந்தனர். "நான் சொல்லும் மாணவனின் பெயர் ஜியார்ஜ் முல்லர் என்பதாகும்" என்று டாக்டர் தோலக் கூறினார்.

அதைக்கேட்ட அந்த அமெரிக்கர்கள் முல்லருக்கு போதுமான பணம் கொடுத்து அவரை தங்களுடைய ஜெர்மன் மொழி பயிற்சியாளராக வைத்துக் கொண்டனர். அந்த அமெரிக்கர்கள் முல்லருக்கு கொடுத்த பணம் அவரது கல்லூரி கட்டணம், ஆகாரம் போன்றவைகளுக்கு போதுமானதாக இருந்ததுடன் இறுதியில் மீதமும் ஆனது. கர்த்தருக்கே மகிமை.

தேவனுடைய இந்த அதிசய நடத்துதல் முல்லருடைய ஆவிக்குரிய வாழ்வில் ஒரு பெரிய அசைவை உருவாக்கியது. தேவன்பேரில் அவர் கொண்டிருந்த அன்பின் காரணமாக அவர் தனது கால் சட்டை, சேட்டு பைகளை எல்லாம் தேவனுடைய சுவிசேஷ பிரதிகளால் நிரப்பிக்கொண்டு தெருக்களிலும், வீதிகளிலும் தான் சந்திப்போருக்கெல்லாம் அவைகளை ஆத்தும பாரத்தோடு கொடுத்தார். மனந்திரும்பாத தனது பழைய பாவ நண்பர்களுக்கெல்லாம் தங்கள் பாவ வழிகளை விட்டுவிட்டு கிறிஸ்து இரட்சகரண்டை வரும்படியாக மனதுருகி மன்றாடி கடிதங்களை எழுதினார். படுக்கையில் வியாதியாக கிடந்த ஒரு மனிதனை தொடர்ச்சியாக 13 வாரங்கள் சந்தித்து ஆண்டவரின் அன்பை அவருக்குக் கூறி அவரை இரட்சகரின் அடிமையாக்கினார்.

1828 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஹாலே பட்டணத்தில் சிறு குற்றங்கள் செய்து அதற்காக சிறைத்தண்டனை அனுபவிப்போரின் விடுதியில் சிறிய குருவானவராக பணிபுரியும் வேலைக்கு முல்லர் விண்ணப்பித்தார். அந்த வேலை கிடைக்கவே அவர் அதை கர்த்தருக்கு மகிமையாக அருமையாக செய்தார். அந்த விடுதியிலுள்ள இளம் குற்றவாளிகளுக்கு தனது கடந்த கால பாவ வாழ்வின் கசப்பான சொந்த அனுபவங்களைக் குறித்துப்பேசி அந்த குற்றவாளிகளை கர்த்தரண்டை வழிநடத்தினார். அவருடைய கடந்த கால பாவ அனுபவங்கள், அவைகளின்றி அவரை மீட்டு இரட்சித்த தேவ மைந்தனின் கல்வாரி அன்பு, கிறிஸ்துவுக்குள்ளான தேவ சமாதானம் நிறைந்த அவரது பிரகாசமான வாழ்க்கை எல்லாம் அந்த இளம் குற்றவாளிகளுக்கு ஜீவ பாதையை தெரிந்து கொள்ளும் ஒளி விளக்காக அமைந்தது.

1828 ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள ஹாலே வேதசாஸ்திர கல்லூரியில் அவர் தமது வேதாகம கல்வியை சிறப்பாக படித்து முடித்தார். 1825 ஆம் ஆண்டு மனந்திரும்பாத, தன்னிச்சையாகத்திரிகின்ற, எந்த ஒரு சந்தோசம், சமாதானமற்றவராக அந்த கல்லூரியில் சேர்ந்த அவர் இப்பொழுது வாழ்க்கையில் ஒரு திட்டமான பரலோக நோக்கம், தேவ சமாதானம், ஆவியில் மிகுந்த பூரிப்போடு காணப்பட்டார்.

 
பிறந்த ஜெர்மன் தேசத்தை விட்டு இங்கிலாந்து சென்றது

அதின் பின்னர் முல்லர் ஜெர்மனியை விட்டு விட்டு இங்கிலாந்திலுள்ள லண்டன் பட்டணத்திற்கு வந்தார். அதற்கு முன்னர் அவர் ஜெர்மனியில் தான் பிறந்த ஹீமர்ஸ்பென் என்ற கிராமத்திற்குச் சென்று அங்கு தங்கியிருந்த தனது தகப்பனாரையும் பார்த்துவிட்டு வந்தார். லண்டன் வந்த முல்லர் சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக மரணத்துக்கேதுவான வியாதியில் வீழ்ந்தார். அந்த மரண படுக்கையிலும் தேவ கரம் அவரோடிருந்து அவரை ஜீவனோடு பாதுகாத்தது. அப்பொழுது அவரது வயது 23 மாத்திரமேதான்.

அதற்கப்பால் அவர் தனது நண்பர்களின் ஆலோசனையின்படி அவரது உடல் நலத்திற்கு ஏற்ற சீதோஷ்ண நிலையுள்ள இங்கிலாந்திலுள்ள டேன்மத் என்ற இடத்திற்கு வந்து கர்த்தருடைய கிருபையால் அந்த இடத்தில் அடுத்து வந்த 2 ஆண்டு 5 மாத காலம் தங்கியிருந்து கர்த்தருடைய ஊழியத்தை செய்து வந்தார். அங்குள்ள எபநேசர் ஆலயத்தில் முல்லர் குருவானவராக பணியாற்றினார். இங்கிருந்த நாட்களில் முல்லருக்கு ஹென்றி கிரைக் என்ற தேவ மனிதரின் நெருங்கிய நட்பு கிடைத்தது. சர்வ கலாசாலையில் படித்துப் பட்டம் பெற்ற சிறந்த வேத மாணாக்கனான ஹென்றி கிரைக் தனது 21 ஆம் வயதில் ஆண்டவரை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருந்தார். அவர் மிகவும் மனத்தாழ்மையுள்ள தேவ பக்தன். தேவனுடைய வேத வசனங்களைப் போதிப்பதில் சிறந்த பண்டிதர். இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து தேசத்தை சேர்ந்த மனிதர் அவர். முல்லர் குருவானவராக பணி செய்த டேன்மத் என்ற இடத்திலிருந்த பாப்திஸ்து தேவாலயம் ஒன்றில் கிரைக் அவர்களும் குருவானவராக பணியாற்றினார். இரண்டு தேவ மனிதர்களின் பரிசுத்த குணாதிசயங்களும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருங்கி பழகி கர்த்தருக்கு ஊழியம் செய்வதில் உறு துணையாகவிருந்தது.

பிரிஸ்டோல் பட்டணத்திலிருந்த கிதியோன் தேவாலயத்தில் குருவானவராக பணி செய்ய ஹென்றி கிரைக் அவர்களுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை அவர் ஏற்று 1832 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கு புறப்பட்டுச் சென்றார். கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே தனது ஆவிக்குரிய நண்பன் முல்லருக்கு கடிதம் எழுதி தனது தேவாலய பணியில் தன்னோடு கூட கர்த்தருக்கு தொண்டு செய்ய அவரை அழைத்தார். அந்த அழைப்பை முல்லர் ஏற்றுக்கொண்டு 1832 ஆம் ஆண்டு மே மாதம் பிரிஸ்டோல் வந்து சேர்ந்தார். அப்பொழுது முல்லருக்கு வயது 26 மாத்திரமே. கிதியோன் தேவாலயத்துக்குரியவர்களுக்கு பெதஸ்தா தேவாலயமும் இருந்தது. ஹென்றி கிரைக்கும், முல்லரும் ஒன்றிணைந்து கர்த்தருடைய பணியை ஆத்தும பாரத்தோடு செய்து வந்தனர். இரண்டு தேவாலயங்களிலும் மக்கள் திரள், திரளாக வந்து தேவ மனிதர்களின் செய்திகளால் பரலோக ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர். அதின் காரணமாக இரண்டு தேவாலயங்களிலும் அநேகர் கர்த்தரண்டை மனந்திரும்பினார்கள்.

 
தேவ மனிதர் தோற்றுவித்த அநாதை இல்லங்கள்

ஜியார்ஜ் முல்லர், தமது சொந்த நாடான ஜெர்மனியிலுள்ள ஹாலே சர்வகலாசாலையில் வேதசாஸ்திர கல்வி கற்றுக் கொண்டிருந்த நாட்களில் அந்த இடத்திலிருந்த ஒரு பிரமாண்டமான அநாதை இல்லத்தில் 2 மாத காலம் இலவசமாக தங்கியிருந்தார். அந்த அநாதை இல்லத்தில் சுமார் 2000 அநாதை குழந்தைகள் இருந்தனர். அந்த பிரமாண்டமான அநாதை இல்லத்தை சுமார் 100 ஆண்டு காலங்களுக்கு முன்பாக கட்டின தேவ மனிதர் ஆகஸ்ட் ஹெர்மன் பிராங்க் என்பவர் தனது தேவைகள் அனைத்திற்கும் கர்த்தர் ஒருவரையே முற்றும் சார்ந்து தனது அநாதை இல்லத்தை நடத்திச் சென்றிருந்த காரியம் ஜியார்ஜ் முல்லரை பெரிதும் கவர்ந்து இழுத்தது. ஆகஸ்ட் ஹெர்மன் பிராங்க் என்பவரும் ஜியார்ஜ் முல்லரைப்போன்றே ஒரு ஜெர்மானிய குடிமகன்தான். "தேவனுடைய உண்மையான வழி நடத்துதலை எனது சொந்தக் கண்களால் கண்ட நான் அவருடைய மாறாத ஜீவனுள்ள வார்த்தையை அப்படியே ஏற்று அந்த வார்த்தையிலேயே நான் முழுமையாக சார்ந்திருக்கலாம் என்ற சத்தியத்துக்குள் நான் வழிநடத்தப்பட்டேன்" என்று முல்லர் பின் நாட்களில் கூறினார். அநாதை பிள்ளைகளுக்காக ஒரு அநாதை இல்லம் கட்ட வேண்டும் என்ற ஒரு தரிசனத்தை மேற்கண்ட தேவ மனிதரின் அநாதை இல்லத்தின் மூலமாகவே தான் பெற்றுக்கொண்டதாக முல்லர் சொன்னார்.

 
18 ஆம் நூற்றாண்டில் அநாதைகளின் துயர நிலை

ஜியார்ஜ் முல்லர் வாழ்ந்த அந்த 18 ஆம் நூற்றாண்டில் தாய் தந்தையரில்லாத அநாதைகள் பட்ட பாடுகள் மகா அகோரமாகும். இங்கிலாந்து தேச நகரங்களில் அநாதைகள் தெருக்களிலும் திண்ணைகளிலும் வாழ்ந்தனர். தங்கள் உடம்பை மறைக்க சரியான ஆடைகள் இல்லாததால் கடுங்குளிரில் மாண்டோர் பலராவார்கள். சரியான ஊட்டச்சத்துள்ள ஆகாரமில்லாமல் பசி பட்டினியால் இறந்தோர் அநேகர். அந்த அநாதைகளில் இளம் பாலகர்களும், சிறு பெண் பிள்ளைகளும் திரளாக இருந்தனர். சுத்தமில்லாத காரணத்தால் அவ்வப்போது கொள்ளை நோய்கள் வந்து அவர்களை வாரிக்கொண்டு சென்றது. அவர்களில் பலரும் காச நோயால் பீடிக்கப்பட்டிருந்தனர். இந்த அநாதை குழந்தைகளில் திடகார்த்தமான ஆண் பையன்களை வசதியான குடும்பத்திலுள்ளோர் தங்கள் வீட்டில் மலஜாதிகள், களிப்பறைகள் சுத்தம் செய்தல் போன்ற இழிவான வேலைகளுக்கு பயன்படுத்தினர். அநாதைப் பெண் பிள்ளைகள் தெரு திண்ணைகளில் வளர்ந்ததும் வயிற்றுப் பிழைப்புக்காக அசுத்தமான விபச்சார வாழ்க்கைகளில் ஈடுபட்டனர். அநாதைகள் தங்களின் உயிர் வாழ்க்கைக்காக திருட்டு, ஏமாற்றுதல் போன்ற பற்பலவிதமான குற்றங்களைப் புரிந்தனர்.

அநாதைகளின் மகா நிர்ப்பந்தமான நிலையைக் கண்ட முல்லர் உள்ளம் கசிந்தார். 1833 ஆம் ஆண்டு முல்லருக்கு இன்னும் 26 வயது ஆகுமுன்னரே அவர் தனது உள்ளத்தில் அநாதைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று திட்டமிட ஆரம்பித்தார். அநாதை குழந்தைகளைக் குறித்த மன உருக்கத்தால் அவர் ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கெல்லாம் தெருக்களுக்கு இறங்கிச் சென்று ஏழை குழந்தைகளை கூடி வரச்செய்து அவர்களுக்கு காலை ஆகாரமாக ரொட்டித் துண்டுகளைக் கொடுப்பார். அதற்கப்பால் ஒன்றரை மணி நேரம் அந்த பிள்ளைகளுக்கு வாசிக்கக் கற்றுக்கொடுப்பதுடன் தேவனுடைய பரிசுத்த வேதாகம பகுதிகளையும் அவர்களுக்கு வாசித்துக் காண்பிப்பார். அவர்களைத் தொடர்ந்து அநாதைகளான ஏழை வாலிபர்களுக்கும், வயோதிபர்களுக்கும் ரொட்டி கொடுத்து அவர்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளை கூறுவார். நாளுக்கு நாள் அநாதைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு கொடுக்கும் ரொட்டிக்குத் தேவையான பண வசதிகளையும் அன்பின் ஆண்டவர் முல்லருக்கு அதிசயமாக கொடுத்து உதவி வந்தார். தெருக்களிலே முல்லர் அநாதைகளுக்கு செய்து வந்த இந்தக் காரியம் தெரு வீடுகளில் வசிப்போருக்கு இடையூறாகத் தெரிந்தபடியால் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்தக் காரியத்தை முல்லர் தொடர்ந்து செய்யக் கூடாமற் போனபோதிலும் அநாதைகளை கட்டாயம் போஷிக்க வேண்டும், அவர்களுக்கு தம்மால் இயன்ற ஏதாவது செய்து அவர்களுடைய வாழ்க்கையில் ஒளி வீசச் செய்ய வேண்டும் என்று நினைத்தவராக தாம் வாழ்ந்த பிரிஸ்டோல் பட்டணத்திலேயே ஒரு அநாதை இல்லத்தை ஆரம்பிக்க மனதில் நிச்சயித்து ஒத்தாசையின் பர்வதத்தை நோக்கி ஜெபிக்க தொடங்கினார்.

 
உன் வாயை விரிவாய் திற நான் அதை நிரப்புவேன்

1836 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 16 ஆம் தேதி ஜியார்ஜ் முல்லரின் நாட் குறிப்பில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கின்றார்:- "தேவனை மட்டுமே முழுமையாக சார்ந்து தாய் தந்தையரில்லாத அநாதை பிள்ளைகளுக்காக ஒரு அநாதை இல்லத்தை நான் வாழ்கின்ற பிரிஸ்டோல் பட்டணத்தில் ஆரம்பித்து, அவர்களுக்கான உணவு உடைகளையும், ஏற்ற உலகக் கல்வியையும் கொடுப்பதுடன் அவர்களுடைய நித்திய ஜீவ வாழ்வுக்கு தேவையான வேதாகம கல்வியையும் கொடுக்க கர்த்தருக்குள் நிச்சயித்துக் கொண்டேன். மெய்யாகவே இது தேவனுடைய சித்தம்தான் என்று முழுமையாக நான் எனக்குள் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

இந்தக் காரியத்திற்காக நான் ஜெபிக்க ஆரம்பித்தபோது நான் வாசித்த வேத பகுதியான 81 ஆம் சங்கீதம் 10 ஆம் வசனத்தில் "உன் வாயை விரிவாய் திற, நான் அதை நிரப்புவேன்" என்ற வசனம் மின்னல் போல என் உள்ளத்தில் ஊடுறுவிச் சென்றது. ஒரு சில நொடிப் பொழுதிற்கு நான் அப்படியே இந்த வசனத்தை கவனித்த பின்னர், நான் ஆரம்பிக்கவிருக்கும் அநாதைகளின் இல்லத்திற்கு இந்த தேவனுடைய வசனம் முற்றும் பொருத்தமாக இருப்பதை நான் அறிந்து என் வாயை ஆண்டவருக்கு முன்பாக விரிவாக திறந்தேன்.

அதற்கப்பால் நான் முழங்கால்களில் வீழ்ந்து என் வாயைத் திறந்து அநாதை குழந்தைகளின் காப்பகமாக யாராவது ஒருவர் ஒரு பொருத்தமான வீட்டை குத்தகைக்காகவது அல்லது வாடகைக்காவது தரும்படியாகவும், அந்த வாடகையை யாராவது ஒருவர் மனமுவந்து முன் வந்து மாதந்தோறும் செலுத்தும்படியாகவும் ஜெபித்தேன். அத்துடன் பிள்ளைகளை கவனித்துப் பராமரிக்க ஏற்ற அன்பான தனி நபர்களை தரவும், அநாதை இல்லத்திற்கு தேவையான மேஜை, நாற்காலிகள், துணிகளை வைக்க மர பீரோக்கள் மற்றும் இதர மரச்சாமான்களை தரவும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகளை தரவும் கர்த்தரை நோக்கி மன்றாடினேன்" என்கின்றார் முல்லர்.

மேற்கண்ட ஜெபம் ஏறெடுத்த சில தினங்களுக்குப் பின்னர் முல்லர் தமது நாட்குறிப்பில் இவ்வாறு எழுதுகின்றார்:- "இந்த நாளின் (1835 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி) காலையில் ஒரு கடிதம் எனக்கு வந்து கிடைத்தது. அதில் ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் தங்களையே நான் ஆரம்பிக்க நினைத்திருக்கும் அநாதை இல்லத்தின் சேவைக்கு ஒப்புக்கொடுப்பதாகவும், அதற்காக எந்த ஒரு சம்பளத்தையும் தாங்கள் எதிர்பார்ப்பதில்லை என்றும், தங்களுடைய வீட்டின் மேஜை, நாற்காலி, மற்றும் இதர மரசாமான்கள் அனைத்தையும் அநாதை இல்லத்துக்கே கொடுப்பதாகவும், தேவனுடைய சித்தம் அதுவாக இருக்குமானால் அவர்களை பணியில் அமர்த்திக்கொள்ளவும் கேட்டு எழுதியிருந்தனர்" என்கின்றார் முல்லர்.

"டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி மாலை வேளையில் நான் மிகவும் சோர்புற்ற நிலையில் அநாதை இல்லத்தை ஆரம்பிப்பதா அல்லது கைவிட்டுவிடுவதா என்று நான் எனது உள்ளத்தில் கேள்வியை எழுப்பிக்கொண்டிருந்தபோது தேவன் என்னை மேலும் உற்சாகப்படுத்தும் வண்ணம் இரு சகோதரர்கள் மூலமாக சுமார் 24 கஜம் நீளமுள்ள காலிகோ மற்றும் இதர துணிகள், மூடிப்படுக்கக்கூடிய மெல்லிய 3 கம்பளி மெத்தைகள், ஒரு கம்பளிப்போர்வை, 6 கரண்டிகள், 6 கோப்பைகள் இப்படியாக சில பொருட்களை அநாதை இல்லத்துக்காக கொண்டு வந்து கொடுத்தனர். அதே சமயம் மற்றொரு மனிதர் மூலமாக 100 பவுன்களை தேவன் கிடைக்கச் செய்தார்" என்று எழுதுகின்றார் முல்லர்.

1836 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பிரிஸ்டோல் பட்டணத்திலுள்ள 6 ஆம் நம்பர் வில்சன் தெருவில் உள்ள 3 அடுக்கு உறுதியான மாடி வீடு முல்லருக்கு வாடகைக்கு கிடைத்தது. அதின் அருகிலேயே கிதியோன் சிற்றாலயமும் அமைந்திருந்தது. அது முல்லருக்கு அதிக சந்தோசத்தை அளிப்பதாக இருந்தது. காரணம், தனது அநாதைப் பிள்ளைகள் ஆண்டவருடைய ஆலய ஆராதனைகளில் தடையின்றி கலந்து கொள்ள அது ஏற்றதாக இருக்குமென்று அவர் கருதினார். வெறும் 30 அநாதைக் குழந்தைகளுடன் அந்த அநாதை இல்லம் ஆரம்பமானது. 1836 ஆம் ஆண்டு ஏப்பிரல் 11 ஆம் நாள் முதல் அநாதைகள் முல்லருடைய அநாதை இல்லத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் சரியான ஆகாரமில்லாமல் வெழுத்த நிலையில் பயத்தோடும் நடுக்கத்தோடும் காணப்பட்டனர். அவர்களைக் கூட்டிக்கொண்டு யாரோ அன்புள்ளம் கொண்ட தாற்காலிகமான போஷகர்கள் (Guardians) வந்திருந்தனர். அநாதை இல்லத்தின் மேலாளர் வயதான, தாடி வைத்த ஒரு மனிதராக இருப்பார் என்ற எண்ணத்தில் வந்திருந்த அந்த போஷகர்கள் 30 வயதான வாலிப முல்லரே அநாதை இல்லத்தின் மேலாளர் என்பதைக் கண்டதும் ஆச்சரியத்தால் பிரமிப்படைந்தனர். அந்த ஏழைப் பிள்ளைகளை விடுதியை மேற்பார்க்கும் புன்னகை பூத்த நிலையில் தனக்கருகில் நின்று கொண்டிருந்த அன்பான இல்லத் தலைவியிடம் முல்லர் ஒப்புவித்தார்.

அடுத்து வரும் நாட்களில் 30 அநாதைக் குழந்தைகளுக்கு தினமும் தவறாது 3 வேளை ஆகாரம் கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களை கவனிப்பவர்களையும் பராமரிக்க வேண்டும். 30 ஜோடி கால்களுக்கு 30 ஜோடி சப்பாத்துக்கள், பிள்ளைகளுக்கு தேவையான உடைகள் எல்லாம் அளிக்கப்பட வேண்டும். பிள்ளைகள் பசி பட்டினியாக பள்ளிக்கு சென்றாலோ அல்லது தகுந்த வஸ்திரமில்லாமல் காணப்பட்டாலோ அந்தக் காரியம் தான் ஆராதிக்கும் தனது ஜீவனுள்ள தேவனுக்கு நிந்தை, அவமானத்தைக் கொண்டு வரும் என்று முல்லர் திட்டமாக அறிந்து வைத்திருந்தார். எனினும், அவர் அதைக் குறித்து எந்த ஒரு அச்சமும் கொள்ளாமல் "ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (மத் 6 : 31, 33) என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை உறுதியாக பற்றி நின்றார்.

அநாதைப் பிள்ளைகளின் அனைத்து தேவைகளையும் தேவன் ஒரு தாழ்ச்சியுமின்றி அதிசயமாக சந்தித்து வந்தார். பிள்ளைகளுக்கு தேவையான ஆகார வகைகள், வஸ்திரங்கள், காலணிகள் எல்லாம் வந்தவண்ணமாக இருந்தது. அநாதைப் பிள்ளைகளுக்கான மருத்துவத்தை பிரிஸ்டோல் பட்டணத்திலுள்ள ஒரு டாக்டர் ஒருவர் முற்றும் இலவசமாக கவனித்துக்கொள்ளுவதாக வாக்களித்து ஏற்றுக்கொண்டார்.

நாட்கள் கடந்து செல்லச் செல்ல அநாதை குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வில்சன் தெருவிலேயே இன்னும் சில வீடுகளை வாடகைக்கு எடுத்து முல்லர் அவர்களை ஆதரித்தார். அநாதை இல்லங்களில் குழந்தைகள் எழுப்பும் தொடர்ச்சியான குரல் ஒலிகள் மற்றும் சுகாதார குறைகளை கவனித்து வில்சன் தெருவிலுள்ள மக்கள் முல்லரிடம் அநாதை குழந்தைகளால் தங்களுக்கு உண்டாகக் கூடிய கஷ்டங்களைக் கூறவே முல்லர் தனது அநாதை இல்லங்களை தனித்த ஒரு இடத்துக்கு கொண்டு போக தீர்மானித்து தேவ சமூகத்தில் இந்த காரியத்தை வைத்து ஜெபித்து வந்தார். தொடர்ச்சியாக 89 நாட்கள் ஜெபித்த பின்னர் ஆஷ்லி டவுண் என்ற இடத்தில் சொற்பமான விலையில் வசதியான இடம் இருப்பதை கேள்விப்பட்ட முல்லர் நேரிடையாகச் சென்று நிலத்தை பார்வையிட்டார். அந்த இடம் அவருடைய இருதயத்திற்கு பூரணமான திருப்தியை அளித்ததினால் நிலத்தின் சொந்தக்காரரை சந்திப்பதற்காக ஒரு சாயங்கால நேரம் அவரது வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர் இல்லாததினால் அவரது வியாபார ஸ்தலத்திற்கு அவரைக் காணச் சென்றார். அவர் செல்லுவதற்கு சற்று முன்பே அந்த மனிதர் தனது இடத்திலிருந்து சென்றுவிட்டதாக முல்லருக்கு கூறப்பட்டது. இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்குச் சென்றால் நிச்சயமாக அவரைச் சந்தித்துவிடலாம் என்று அவரது பணியாளர்கள் கூறினார்கள். அவரைச் சந்திப்பது ஆண்டவருக்கு சித்தமில்லையாதலால்தான் வீட்டிலும், அவரது வியாபார ஸ்தலத்திலும் அந்த மனிதர் தென்படவில்லை என்று முல்லர் கர்த்தருக்குள் நிச்சயித்துக்கொண்டு தேவனுடைய சித்தத்திற்கு அந்தக் காரியத்தை ஒப்புவித்துவிட்டு பொறுமையோடு காத்திருந்தார்.

மறு நாள் நிலத்திற்குச் சொந்தக்காரர் முல்லரை வந்து சந்தித்தார். "இன்று அதிகாலை மூன்று மணிக்கு நான் கண் விழித்தேன். அதற்கப்பால் 5 மணி வரை என்னால் தூங்க இயலாமல் கட்டிலில் அங்குமிங்குமாகப் புரண்டு கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் எனது நிலத்தில் நீங்கள் ஒரு அநாதை இல்லம் கட்ட அதை என்னிடம் வாங்குவதற்காக வந்த காரியமே எனது மனதில் அதிகமாக நிழலாடிக் கொண்டிருந்தது. அந்த நிலம் ஏக்கர் 200 பவுன்கள் விலை மதிப்புள்ளதாகும். நீங்கள் அதை வாங்கி ஏழைகளுக்கான அநாதை இல்லம் கட்ட நினைத்திருப்பதால் அதை நான் உங்களுக்கு ஏக்கருக்கு 120 பவுன்களுக்கு கொடுக்க ஆயத்தமாக இருக்கின்றேன்" என்று கூறினார். என்ன ஆச்சரியம், அந்த நாளிலேயேதானே முல்லர் அவரிடமிருந்து 7 ஏக்கர் நிலங்களை குறைந்த விலையில் பெற்றுக்கொண்டார்.

அதற்கப்பால் அந்த நிலத்தில் பிரமாண்டமான முதல் அநாதை இல்லத்தை கட்ட 447 நாட்களாக தேவ சமூகத்தில் அனுதினமும் காத்திருந்து ஜெபித்து, ஜெபித்து 11062 பவுன்களை தேவனிமிருந்து பெற்று 1847 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் நாள் இறுதியாக கட்டிட வேலை ஆரம்பமானது. கட்டிட வேலை எழும்ப எழும்ப மக்களிடமிருந்து காணிக்கைகள் வந்தவண்ணமிருந்தன. மொத்தம் 15787 பவுன்கள் வரவும் கட்டிட வேலைகள் அனைத்தும் பூர்த்தியாகி 776 பவுன்களும் மீதியாயிற்று. இவ்வளவு திரளான பணத்தையும் தேவ மனிதர் முல்லர் தனது முழங்கால்களில் தேவனோடு போராடி பெற்றிருந்தார். வாடகை வீடுகளில் வில்சன் தெருவில் தங்க வைக்கப்பட்டிருந்த அநாதைகள் அனைவரும் இப்பொழுது ஆஷ்லி டவுணிலுள்ள புதிய கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அதில் 400 பெண் பிள்ளைகளும் 300 ஆண்களும் இருந்தனர். புதிதாக 715 அநாதைகள் முல்லருடைய அநாதை இல்லத்தில் சேரக் காத்திருந்தனர்.

இதற்கிடையில் முல்லருடைய விசுவாச ஜெபங்களின் மூலமாக கர்த்தர் அவருக்குப் பாராட்டின ஆச்சரியமான செயல்களைக் குறித்து முல்லர் தமது டயரிகளில் கிரமமாக தேதி குறிப்பிட்டு எழுதியிருந்த சம்பவங்களை எல்லாம் வர்ணித்து புத்தகங்களாக எழுதியிருந்தார். அந்தப் புத்தகங்கள் உலகின் அநேக மொழிகளில் அச்சிடப்பட்டன. அந்தப் புத்தகங்களை உலகமெங்கிலுமுள்ள தேவ மக்கள் படித்து பரவசமுற்று முல்லருடைய ஊழியங்களுக்கு அவர்கள் அன்பளிப்புகளையும், காணிக்கைகளையும் தொடர்ச்சியாக அனுப்பிய வண்ணமாக இருந்தனர். தேவனுடைய உண்மையுள்ள ஊழியக்காரனாகிய முல்லரும் மக்கள் அனுப்பும் பணங்களை மிகவும் உண்மையோடும் உத்தமத்தோடும் செலவிட்டார். அவருடைய நாட்குறிப்பு புத்தகத்தில் 1852 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி "கந்தை துணிகளும், எலும்புகளும் விற்ற வகையில் கிடைத்த பணம் 12 ஷில்லிங் 6 பென்ஸ்" என்று குறிப்பிட்டு அந்தப் பணத்தை வரவு கணக்கில் சேர்த்திருக்கின்றார்.

முதல் அநாதை இல்லம் கட்டி 7 ஆண்டு கால இடைவிடாத ஜெபங்களுக்குப் பின்னர் பிரமாண்டமான 2 ஆம் அநாதை இல்லம் 1857 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. இப்படி ஒவ்வொன்றாக 5 பிரமாண்டமான அநாதை இல்லங்கள் 1870 ஆம் ஆண்டுக்குள் ஆஷ்லி டவுண் என்ற இடத்தில் கட்டி முடிக்கப்பட்டன. அந்தக்கட்டிடங்களைக் கட்டத் தேவையான நிலங்களையும் அவர் இடையிடையே வாங்கிக் கொண்டார். இந்த 5 அநாதை இல்லங்களிலும் 10000 அநாதை பிள்ளைகள் தங்கியிருந்தனர். இத்தனை பெரிய எண்ணிக்கையிலான அநாதை பிள்ளைகளின் அனுதின 3 வேளை ஆகாரங்கள், அவர்களின் உடைகள், பாதரட்சைகள் மற்றும் பிள்ளைகளை கவனிக்க அன்பான உதவியாட்கள், சமையல் அறைகளில் திறமையான சமையல் ஆட்கள், கல்வி கற்பிக்க தகுந்த ஆசிரியர்கள் இப்படி எத்தனை எத்தனையோ தேவைகளை எல்லாம் முல்லர் தமது தொடர்ச்சியான ஜெபங்களின் மூலமாக தன் தேவனிடமிருந்து பெற்று வந்தார்.

ஒரு நாள் பிள்ளைகள் தங்கள் சீருடைகளை உடுத்திக்கொண்டு காலையில் பள்ளிக்கு புறப்பட ஆயத்தமானார்கள். அப்பொழுது அவரது அநாதை இல்லத்தில் 300 பிள்ளைகள் இருந்தனர். காலை ஆகாரத்திற்கு பிள்ளைகளுக்கு முன்பாக வைக்க ஒன்றுமில்லை என்று சமையல் அறையின் தாயார் முல்லரிடம் வந்து கூறினார்கள். முல்லர் எந்த ஒரு பதஷ்டமும் அடையாமல் பிள்ளைகளை சாப்பாட்டு அறையில் தங்கள் சாப்பாட்டு தட்டுகளுடன் வந்து அமரச் சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்று கர்த்தர் பிள்ளைகளுக்கு அந்த நாளில் கொடுத்த ஆகாரத்திற்காக அவருக்கு நன்றி செலுத்திவிட்டு பொறுமையாக காத்திருந்தார். சில நிமிட நேரங்களுக்குள்ளாக வாசற் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்து பார்த்தபோது ரொட்டி பேக்கரி உரிமையாளர் அங்கு நின்று கொண்டிருந்தார். "கடந்த இரவில் எனக்கு ஒரு கண்ணுக்கும் தூக்கமில்லாமல் போய்விட்டது. உங்கள் அநாதை இல்லத்திற்கு காலையில் பிள்ளைகள் சாப்பிட ரொட்டி தேவைப்படும் என்ற எண்ணத்தில் அதிகாலையே எழுந்து ரொட்டிகளை மூன்று தடவைகளாக ஆயத்தம் செய்து கொண்டு வந்திருக்கின்றேன்" என்று கூறினான்.

அடுத்து சில நிமிடங்களில் கதவை யாரோ தட்டினார்கள். திறந்து பார்த்தபோது பால்கார மனிதர் வந்து நின்று கொண்டிருந்தார். தமது பால் வண்டி அநாதை இல்லத்துக்கு முன்பாகவே அச்சு முறிந்து நிற்பதாகவும், வண்டியின் சக்கரத்தை சரிசெய்வதற்கு முன்பாக பால் எல்லாம் கெட்டுப் போய்விடும் என்று கூறி வண்டியிலிருந்த பாலை எல்லாம் பிள்ளைகள் குடிப்பதற்காக உள்ளே கொண்டு வந்தான். அநாதை பிள்ளைகள் அனைவருக்கும் அந்த காலை வேளையில் அவர்கள் பள்ளி செல்லுவதற்கு முன்பாக பூர்த்தியான ஆகாரம் தேவ தயவால் கிடைத்துக் கொண்டது. இப்படியாக ஆண்டவர் எலியாவை காகங்களைக் கொண்டும், கைம்பெண்ணைக் கொண்டும் போஷித்தது போல தமது தாசனாம் முல்லரின் திரள் திரளான அநாதை பிள்ளைகளையும் மனுப்புத்திக்கு எட்டாதவிதத்தில் அற்புதமாக வழிநடத்திக் கொண்டு சென்றார்.

முல்லர் தமது அநாதை பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வி அளித்தார். உலகக் கல்வியுடன் வேதாகம கல்வியும் முதன்மையாக அவர்களுக்கு அளிக்கப்பட்டது. பிள்ளைகளின் கல்வித் தரத்தை பேணிப் பாதுகாக்க அவர் நிரந்தரமாக ஒரு பள்ளி இன்ஸ்பெக்டரை தமது இல்லங்களில் வேலையில் அமர்த்தியிருந்தார். தமது ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு அவர் அழகான சீருடைகளைக் கொடுத்திருந்தார். உலகில் நல்ல வசதியுடன் வாழ்பவர்கள் கூட முல்லரின் குழந்தைகளின் ஆடைகளைக் கண்டு ஆச்சரியமுற்றனர். ஆஷ்லி டவுணில் முல்லர் கட்டிய 5 பிரமாண்டமான அநாதை இல்லங்களை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பதுடன் ஆண், பெண் அநாதை குழந்தைகளின் ஒரு சிறிய குழுவினையும் நீங்கள் காணலாம்.

 
அநாதை இல்லங்களுக்கு வரும் பணங்களை குறித்து விழிப்பாக இருந்த முல்லர்

தமது ஏழை அநாதை பிள்ளைகளுக்கு மக்கள் அனுப்பும் காணிக்கை பணங்கள் யாவையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முல்லர் விரும்பவில்லை. தமக்கு அப்படி வரும் பணங்கள் சரியான வழியில் வருகின்றதா என்பதை அவர் அலசி ஆராய்ந்தார். எப்படிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தனக்கு பணங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றது என்பதை அவர் கண்ணும் கருத்துமாக கவனித்தார். அந்தப் பணங்கள் சரியான வழியில் அனுப்பப்படாதிருந்தால் அதை உடனே அனுப்பிய நபருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். சில உதாரணங்களை கவனியுங்கள்.

பணத்தேவைகள் மிக அதிகமாக இருந்த நாட்கள் ஒன்றில் முல்லருக்கு ஒரு பண பார்சல் வந்தது. அந்தப் பணம் யாரிடமிருந்து வந்திருக்கின்றது என்பதை முல்லர் கண்டு கொண்டார். அந்தப் பணத்தை அனுப்பிய ஸ்திரீ கடன்களில் சிக்கியிருந்த ஒரு நபர் என்பது மட்டுமல்ல, அவர்களின் கடன்காரர்கள் தாங்கள் கொடுத்த கடனை திரும்பக்கொடுக்கும்படியாக அவர்களை அனுதினமும் தொந்தரவு செய்து கொண்டிருப்பவர்கள் என்பதையும் முல்லர் கண்டு வைத்திருந்தார். எனவே அந்தப் பணமானது அவர்களுக்குச் சொந்தமான பணம் அல்ல என்பதுவும், அவை எல்லாம் கடன்காரர்களுக்குச் செல்ல வேண்டிய பணம் என்பதையும் முல்லர் அறிந்திருந்தார். அந்த பார்சலை முல்லர் திறந்து கூட பார்க்காமல் அப்படியே அதை அனுப்பிய ஸ்திரீக்கு அனுப்பிவிட்டார். உண்மையில் அப்படி அதை அனுப்பிய அந்த நாளில் முல்லரின் அநாதை இல்லத்தில் அன்றைய நாளுக்குரிய செலவுக்குக்கூட பணம் இல்லாதிருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு சமயம் தேவோன் என்ற இடத்தில் ஒரு இசைக்கச்சேரி நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து அதின் மூலம் கிடைத்த பணம் முழுவதையும் முல்லரின் அநாதை குழந்தைகளின் போஷிப்புக்காக அனுப்பியிருந்தனர். அந்தப் பணம் அனைத்தையும் முல்லர் அப்படியே அதை அனுப்பியவர்களுக்கே திரும்ப அனுப்பிவிட்டார். அந்தப் பணத்தை அனுப்பியவர்களின் அன்பு நிறைந்த நல்ல திட்டத்தை முல்லர் ஏற்றுக்கொண்டபோதினும், தேவனுடைய ஊழியங்களுக்கு இந்தவிதமான வழிகளில் பணம் சேகரித்து அனுப்புவதை அவர் விரும்பவில்லை என்றும், பணங்கள் கர்த்தர் விரும்பும் வழிகளில் மட்டும் அருளப்படவேண்டும் என்றும் சொல்லிவிட்டார்.

1853 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 60 வயதான ஒரு விதவை தனக்கு சொந்தமான சிறிய வீட்டை 90 பவுன்களுக்கு விற்று அதை முல்லரின் அநாதை இல்லம் ஒன்றிலிருந்த காணிக்கை பெட்டியில் போட்டுவிட்டாள். அவள் செய்த காரியத்தை அறிந்த அவளுக்கு அன்பானவர்கள் அந்தப்பணத்தில் கொஞ்ச பணத்தை தனது வருங்கால தேவைகளுக்கு வைத்துக்கொண்டு மீதியை முல்லருக்கு கொடுக்க வற்புறுத்தவே அவள் அநாதை இல்லம் வந்து தான் போட்ட பணத்தில் 5 பவுன்களை தனக்கென்று எடுத்துக்கொண்டு மீதி 85 பவுன்களை காணிக்கை பெட்டியில் போட்டாள். இதைக் கேள்விப்பட்ட முல்லர் அந்த விதவைக்கு போக்கு வரத்து செலவுகளுக்கு பணம் அனுப்பி அவளை தம்மண்டை வரவழைத்து காணிக்கை பெட்டியில் போட்ட பணத்தை குறித்து விபரம் கேட்டார். 10 வருடங்களுக்கு முன்பாகவே தனது வீட்டை விற்று வரும் பணத்தை அநாதை இல்லத்திற்கு கொடுப்பதாக கர்த்தருக்குள் நிச்சயித்துக்கொண்டதாக அவள் அவரிடம் சொன்னாள். அப்படி அவள் நிச்சயித்திருக்கும் பட்சத்தில் நண்பர்களின் வற்புறுத்துதலுக்கு இணங்கி பெட்டியில் போட்ட பணத்தில் 5 பவுன்களை தனது தேவைகளுக்காக திரும்ப எடுத்துக்கொள்ள மனம் வந்ததை முல்லர் கர்த்தருக்குள் ஆலோசித்து அவளுடைய பணத்தில் ஒரு சிறிய பகுதியைக்கூட தனது அநாதைகளுக்கு எடுப்பதில்லை என்று சொல்லி விட்டு முழுவதையும் அப்படியே அந்த விதவையிடம் கொடுத்துவிட்டார்.

1867 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு மனிதன் ஒரு சிறிய தொகையை முல்லருக்கு அனுப்பியிருந்தான். அந்தப் பணமானது மற்றொருவருக்கு சேர வேண்டிய பணமாகும். அந்தப் பணத்தை அவன் அந்த மனிதனிடமிருந்து ஏமாற்றியோ, அபகரித்தோ எப்படியோ பெற்றிருந்தான். அந்தப் பணத்தை முல்லருக்கு அனுப்புவதின் மூலம் தான் அபகரித்து எடுத்திருந்த ஆளுக்கு ஈடு கொடுத்து காரியத்தை தேவனுக்கு முன்பாக சரிசெய்து கொண்டதாக அவன் எண்ணியிருந்தான். அந்த தொகை எவ்வளவாக இருந்தாலும் முல்லர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். எந்த ஒரு மனிதன் அபகரிக்கப்பட்டானோ அந்த மனிதனுக்கு முதலாவது அந்தப் பணம் போய்ச் சேர வேண்டும். அந்தப் பணத்தை யார் யாருக்கு கொடுக்க வேண்டுமோ அந்த காரியம் பணத்திற்கு உரியவன் தீர்மானிக்க வேண்டிய காரியமே தவிர அந்தப் பணத்தை திருடிக்கொண்டவன் முடிவெடுக்க வேண்டிய காரியம் அல்ல என்று முல்லர் ஆணித்தரமாகக் கூறிவிட்டார்.

1846 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பத்தில் ஒரு சகோதரனிடமிருந்து முல்லருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் முல்லருடைய அநாதைகளுக்கு தேவைப்படும்பட்சத்தில் 200 பவுன்களுக்கு உட்பட்ட ஒரு தொகையை ஒரு வார கால கெடுவில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்று எழுதப்பட்டிருந்தது. முல்லருக்கு கடுமையான பணத்தேவை நிறைந்த ஒரு நேரமாக அது இருந்தது. அப்பொழுது அவர் தனது ஓய்வுக்காக பிரிஸ்டோல் பட்டணத்திலிருந்து வெளியே செல்லுவதாக இருந்தது. தனது அநாதைகளுக்கு 190 பவுன்கள் தேவை என்று கூறி தனது பணியாளை மேற்குறிப்பிட்ட நபரிடம் அனுப்பி பணத்தைப் பெற்றுக்கொள்ள அனைத்து வாய்ப்புகளும் அவருக்கு இருந்தபோதினும், அவர் அவ்விதம் செய்யாமல் தனது பிரகாசமான சாட்சியை காத்துக்கொள்ளுவதற்காகவும், தேவனுடைய உலகளாவிய திருச்சபையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்கும்படியாகவும் முல்லர் அந்த கிறிஸ்தவ சகோதரனுக்கு அநாதை குழந்தைகளின் தேவை இன்னது என்பதை கர்த்தர் ஒருவருக்கு மாத்திரமே நாங்கள் தெரிவிப்போமே தவிர இவ்வளவு தேவை என்று சொல்லி மனிதர்களிடம் கெஞ்சமாட்டோம் என்று கூறி அந்த அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

 
முல்லரின் தேவைகளை அதிசயம் அற்புதமாக
சந்தித்த தேவன்.

பல்லாயிரக்கணக்கான அநாதைகளை நாள்தோறும் 3 வேளைகள் போஷிக்க வேண்டிய முல்லருக்கு எவ்வளவோ பண தேவைகள் இருந்தன. அவைகள் அனைத்தையும் ஆண்டவர் நிறைபூரணமாக அனுதினமும் சந்தித்து அவரை வழிநடத்தினார். அடுத்த வேளை ஆகாரத்திற்கு கூட பணம் இல்லாத சூழ்நிலைகளில் முல்லர் அவசரம் அவசரமாக தனது அநாதை பிள்ளைகளை கவனிக்கும் பணியாட்களை அழைத்து அவர்களுடன் முழங்காலூன்றி ஜெபித்து முடித்து எழும்பும் பல தடவைகளிலும் அநாதை குழந்தைகளின் காப்பகங்களின் சமயலறை அண்டை வண்டிகளில் பால், ரொட்டி, பன்கள், ஆப்பிள் பழங்கள், உருளை கிழங்குகள், பட்டாணி மூட்டைகள், தொடைப் பகுதியுடன் கூடிய மான் இறைச்சி, கோழிகள், முயல்கள், என்று கர்த்தரால் ஏவப்பட்ட மக்கள் அனுப்பிய உணவு பதார்த்தங்களும், இதர ஏராளமான பொருட்களும் வந்து இறங்கிக் கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் கண்டிருக்கின்றனர்.

1842 ஆம் ஆண்டு மே மாதம் முல்லருக்கு முழுமையும் தங்கத்திலான ஒரு கைக்கடிகாரம் வந்திருந்தது. அந்தக் கடிகாரத்துடன் ஒரு சிறிய கடிதமும் இருந்தது. அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது "ஒரு மோட்ச பிரயாணிக்கு இப்படிப்பட்டதொரு தங்க கடிகாரம் ஒருக்காலும் அவசியம் கிடையாது. அவன் இந்தக் கடிகாரத்தில் சந்தோசம் கொள்ளவும் மாட்டான், அதை விரும்பவும் மாட்டான். எத்தனை துரிதமாக மனித வாழ்நாட் காலம் ஓடி மறைந்து கொண்டிருக்கின்றது என்றும் காலக்கடிகாரமற்ற பரம கானான் தேசத்துக்கு அவன் எத்தனை விரைவாக சென்று கொண்டிருக்கின்றான் என்பதைக் காண்பிக்க ஒரு சாதாரணமான கை கடிகாரம் அவனுக்குப் போதுமானது. இந்தக் கடிகாரத்தை விற்று உங்கள் அநாதைக் குழந்தைகளின் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

ஒரு சமயம் இங்கிலாந்து தேசத்திலுள்ள மாபெரும் பிரசங்க வேந்தரும், பரிசுத்தவானுமான ஸ்பர்ஜன் அவர்கள் தான் நடத்திக்கொண்டிருந்த அநாதைகளின் ஆதரவுக்காக பண சகாயம் திரட்ட முல்லர் வாழ்ந்து கொண்டிருந்த பிரிஸ்டோல் பட்டணத்திற்கு வந்து பல்வேறு இடங்களிலும் கூட்டங்களை நடத்தினார். கூட்டங்கள் எல்லாம் நடத்தி முடித்து ஊர் திரும்ப வேண்டிய இறுதி நேரத்தில் தனது ஆவிக்குரிய தனது அருமை நண்பர் ஜியார்ஜ் முல்லரை சந்தித்துவிட்டு செல்லுவதற்காக அவருடைய அநாதை இல்லத்திற்குச் சென்றார். அந்தச் சமயம் முல்லர் தனது அத்தியாவசியமான 300 பவுன் தேவைக்காக ஒத்தாசையின் பர்வதத்தை நோக்கி ஊக்கமாக மன்றாடிக் கொண்டிருந்தார். அந்தக் காரியம் ஸ்பர்ஜனுக்கு தெரியவே தெரியாது. ஸ்பர்ஜன் தமது பிரிஸ்டோல் பட்டணத்தின் கூட்டங்களில் அங்குமிங்குமாக 300 பவுன்களை சேகரித்திருந்தார். இந்த பெருந்தொகை அவருடைய அநாதை இல்லத்தின் தேவைக்குப் போதுமானதாக இருந்தது. அப்பொழுது ஆண்டவர் ஸ்பர்ஜனிடம் அவர் தன் வசம் சேர்த்து வைத்திருந்த 300 பவுன்களையும் ஜியார்ஜ் முல்லருக்குக் கொடுத்துவிடும்படியாக கூறினார். ஸ்பர்ஜன், ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்து தம் வசமிருந்த 300 பவுன்களையும் முல்லருடைய அநாதை இல்லங்களுக்கு கொடுத்துவிட்டார். தான் சரியாக 300 பவுன்களுக்காகவே ஆண்டவர் சமூகத்தில் போராடிக் கொண்டிருந்ததாக முல்லர் தன்னை சந்திக்க வந்த ஸ்பர்ஜனிடம் சொன்னார். தன்னுடைய பணம் முழுவதையும் ஆண்டவருடைய வார்த்தையின்படி முல்லருக்குக் கொடுத்துவிட்டு தன் இருப்பிடம் சென்ற ஸ்பர்ஜனுக்கு 300 பவுன்களும் 300 ஷில்லிங்குகளும் அவர் நடத்தும் அநாதைகளின் போஷிப்புக்காக வந்திருப்பதை மட்டற்ற ஆச்சரியத்துடன் கண்டார். என்னே, ஆண்டவரின் அதிசய நடத்துதல் பாருங்கள்!

முல்லரின் அநாதை இல்லங்களுக்கு உலகமெங்கிலுமிருந்து மக்கள் உதவிகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். தம்முடைய வாழ்க்கையில் ஆண்டவருடைய அதிசயமான வழிநடத்துதல்களைக் குறித்து முல்லர் எழுதிய புத்தகத்தை வாசித்திருந்த ஒரு ஆஸ்திரேலியா நாட்டு ஆட்டிடையர் தமது ஆடுகளை கவனித்துக்கொண்டிருக்கும்போது தானே ஒரு நன்கொடையை முல்லருக்கு அனுப்பி வைத்தார்.

நியூஜிலாந்து தேசத்தில் ஒரு சிறு பெண் தான் வளர்க்கும் கோழிகளில் ஒன்றை தனித்து வைத்து அது இடும் முட்டைகள் அனைத்தின் பணத்தையும் முல்லரின் அநாதைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள் முல்லருக்கு ஒரு கவர் வந்திருந்தது. அதில் 15 டாலர்களுக்கான ஒரு காணிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதினுடன் இணைக்கப்பட்டிருந்த கடிதத்தில் "நாங்கள் குடியிருக்கும் பகுதி இரவில் எவரும் இலகுவாக நுழைந்து திருடக்கூடிய இடமாக இருந்தபோதினும் அன்பின் ஆண்டவர் எங்கள் பொருட்கள் எதையும் நாங்கள் இழந்து போகாமல் பாதுகாத்துக் கொண்டார். நாங்கள் எங்கள் வீட்டை காவல் காக்க ஒரு நாயை காவலுக்கு வைப்பதாக இருந்தால் அதற்காகச் செலவிடும் பணத்தை ஏழை அநாதைகளுக்கு அனுப்புகின்றோம்" என்று எழுதப்பட்டிருந்தது.

ஒரு தகப்பனார் தனக்கு வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும் போதெல்லாம் அந்த குழந்தைக்காகும் செலவுக்கு சமமாக முல்லருடைய அநாதை குழந்தைகளில் ஒன்றுக்கு ஆகும் அனைத்து செலவுகளுக்கும் செலவிடுவார். அந்த மனிதருக்கு 7 குழந்தைகள் பிறந்தன. அதின் எண்ணிக்கையின்படி முல்லருடைய 7 அநாதை குழந்தைகளுக்காகும் முழுச் செலவுகளையும் கொடுத்து ஆதரித்து வந்தார்.

ஒரு குடியானவர் ஒரு கவரில் முல்லருக்கு 5 டாலர்களுக்கான ஒரு காணிக்கையை அனுப்பி அதினுள் ஒரு கடிதத்தில் "நம்முடைய பரலோக தந்தை எங்களுக்கு 34 கோழிகளை கொடுத்திருக்கின்றார். அவைகளில் ஒன்றைக்கூட நாங்கள் நரிக்கு இழந்து போகாதபடி அவர் அவைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொண்டார். எங்களுக்கு அருகிலுள்ள குடியானவர்கள் பலருடைய கோழிகளை நரிகள் பிடித்துக்கொண்டு போய்விட்டன" என்று எழுதியிருந்தார்.

ஒரு கால்நடை மருத்துவர் ஒரு குதிரைக்கு சிகிட்சையளித்தார். ஆனால் அந்த குதிரை சாகுந்தருவாயில் வந்துவிடவே, அதின் உயிர் பிழைப்புக்காக ஆண்டவரிடம் ஜெபித்தார். ஆச்சரியமாக குதிரை பிழைத்துக் கொண்டது. தனது நன்றியை கர்த்தருக்கு தெரிவிக்கும் முகமாக முல்லருடைய அநாதைகளுக்கு ஒரு சிறிய காணிக்கையை அனுப்பியிருந்தார்.

ஒரு ஏழை விதவை மரித்துப்போனாள். அவளுடைய உடமைகளை எல்லாம் பரிசோதித்தபோது ஒரு கவரில் ஒரு ஷில்லிங் வைத்து முல்லருடைய அநாதைகளுக்கு தனது வாழ்வின் கடைசி காணிக்கை என்று எழுதப்பட்ட வார்த்தைகளை கவனித்து அதை முல்லருக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு மீன் பிடிக்கும் செம்படவர் ஒரு நாள் இரவில் சற்றும் எதிர்பாராதவிதமாக சுவையான மீன் (Herring) நிறைய பிடித்த மகிழ்ச்சியில் உடன் தானே முல்லருக்கு 15 டாலர்களை அனுப்பியிருந்தார்.

குறிப்பிட்ட ஒரு மனிதர் தனது புகைபிடிக்கும் பழக்கத்தை ஒரு வருட காலத்திற்கு நிறுத்திவைத்து அதின் மூலம் சேமிக்கப்பட்ட 100 டாலர்களை முல்லரின் அநாதை குழந்தைகளுக்கு காணிக்கையாக அனுப்பினார்.

தனது இடது கரத்தை ஒடித்துக்கொண்ட ஒரு மனிதன் முல்லரின் அநாதை குழந்தைகளுக்கு ஒரு காணிக்கையை அனுப்பி அத்துடன் இணைக்கப்பட்டிருந்த கடிதத்தில் "நான் எனது வலது கையையோ அல்லது தலையையோ சேதப்படுத்திக் கொள்ளாதபடி ஆண்டவர் என்னை கிருபையாக பாதுகாத்தார். அவருக்கு நன்றி காணிக்கையாக இதனை அனுப்புகின்றேன்" என்று எழுதியிருந்தார்.

ஒரு சிறிய பையன் ஒரு தங்க மோதிரத்தை வழியிலே கண்டெடுத்தான். அந்த மோதிரத்திற்கு உரியவரான ஆளிடம் அதை சேர்ப்பித்தபோது அந்த மனிதர் மட்டற்ற மகிழ்ச்சியிடைந்து அந்த பையனுக்கு ஒரு சிறிய அன்பளிப்பைக் கொடுத்தார். அந்த அன்பளிப்பை அப்படியே அவன் கொண்டு போய் முல்லரிடம் அவருடைய அநாதைகளுக்காக கொடுத்துவிட்டான்.

இவ்வண்ணமாக ஆப்பிரிக்கா, துருக்கி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, அமெரிக்கா, இந்தியா, கனடா, கிழக்கு மற்றும் மேற்கு இந்திய தீவுகள், இலங்கை, ஜெர்மனி என்று உலகின் ஏராளமான நாடுகளிலிருந்து மக்கள் முல்லரின் அநாதைகளுக்கு ஆச்சரியம், அற்புதமான விதங்களில் உதவிகளை அனுப்பினர்.

 
அநாதைகளின் மனந்திரும்புதல்

ஜியார்ஜ் முல்லர் தமது அநாதை இல்லங்கள் தேவன் இன்றும் ஜீவிக்கின்றார், ஜெபங்களுக்கு தப்பாது பதில் அளிக்கின்றார் என்ற உண்மைக்கு அப்பட்டமான அடையாளங்களாக மக்களுக்கு காணப்படவேண்டுமென்ற ஆசை ஆவலில் அவைகளை நிறுவின போதினும் அநாதை இல்லங்களிலுள்ள குழந்தைகள் எல்லாரும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டுமென்பதே முல்லரின் இருதயக் கதறுதலான முழுமையான நோக்கமாக இருந்தது. குழந்தைகளின் சரீர நலனில் முல்லர் எத்தனை கண்ணும் கருத்துமாகவிருந்தோரோ அந்த அளவிற்கு அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார்.

"நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு தேவனுடைய ஒத்தாசையோடு நாங்கள் எங்கள் அநாதை இல்லங்களிலுள்ள பிள்ளைகளின் இரட்சிப்புக்காகவும் அவர்களின் ஆவிக்குரிய நன்மைக்காகவும் ஜெபித்துக் கொண்டே வந்தோம். இவ்விதமான தொடர்ச்சியான பல்லாண்டு கால ஜெபங்களுக்குப்பின்னர் தேவன் எங்கள் ஜெபங்களுக்கு அபரிதமாக பதில் அளித்தார். அடுத்து வந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அநாதை பிள்ளைகள் இரட்சிப்பின் பாத்திரங்கள் ஆனார்கள். 1859 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 120 பெண் பிள்ளைகள் இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இவைகள் எல்லாம் ஏதோ அந்தச் சமயத்திற்கு ஒரு உணர்ச்சி வசப்பட்ட பரவச நிலையில் வந்து கடந்து செல்லுவதாக இராமல் தேவனுடைய இரட்சிப்பின் சந்தோசம் மிகவும் ஆழமாக அவர்கள் உள்ளத்தில் வேரூன்றி நிலைத்து நின்றது. இந்த ஆசீர்வாதமான உயிர் மீட்சி எந்த ஒரு காரணத்திற்காகவும் இல்லாமல் நாங்கள் உருக்கமாக தேவனுக்கு நேராக ஏறெடுத்த எங்கள் ஜெபங்களுக்கான ஒரு பதிலாகவே இருந்தது. இப்படிப்பட்ட ஒரு உயிர் மீட்சி திரும்பவும் இரண்டாம் முறையாக எங்கள் அநாதை இல்லங்களில் ஏற்பட்டது. இந்த தடவை அந்த எழுப்புதலின் உயிர் மீட்சி 6, 7, 8, 9 வயதுள்ள சிறிய பெண் பிள்ளைகள் மத்தியில் ஏற்பட்டு பெரிய பெண் பிள்ளைகளுக்கும், பையன்களுக்கும் பரவினது. சுமார் 10 நாட்களுக்குள்ளாக 200 க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகள் இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொண்டனர்.

இந்தப் பிள்ளைகள் அநாதை இல்லங்களிலேயே தங்களுக்குள்ளாகக் கூடி ஜெபிக்க எங்களிடம் அனுமதி கேட்டனர். அந்த நாளில் ஆரம்பமான அவ்வித கூட்டங்கள் இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இந்தப் பிள்ளைகள் தங்களுடைய சக தோழர்கள் மற்றும் உற்றார் உறவினரின் இரட்சிப்பின் பேரில் உள்ளத்தில் பாரம் அடைந்து அது குறித்து அவர்களிடம் பேசவும், கடிதங்கள் எழுதவும் தொடங்கினர்" என்கின்றார் ஜியார்ஜ் முல்லர்.

1849 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஷ்லி டவுணில் உள்ள தனது அநாதை இல்லத்துக்கு வந்த ஒரு அநாதை சிறுவனைக்குறித்து முல்லர் இவ்வண்ணமாகக் கூறுகின்றார்-

"அந்தச் சிறுவனுக்கு அப்பொழுது 8 வயது கூட பூர்த்தியாகி இருக்காது. அவ்வளவு சிறுவனாக அவன் இருந்தபோதினும் பாவத்தில் அவன் ஊறிப்போயிருந்தான். அவன் ஒரு ஊறிப்போன பொய்யன், திருடனும் கூடத்தான். எங்கள் அநாதை இல்லத்தில் அவனைச் சேர்ப்பதற்கு முன்னர் அவன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்களிலிருந்து இரும்பு, வெண்கலம் போன்றவற்றைத் திருடி விற்றுவிடுவதாக எங்கள் இல்லத்தில் அவன் கூறியிருக்கின்றான். ஆனால் நாங்கள் அதை நம்பவில்லை. அதின் பின்னர் அவன் 2 தடவைகள் எங்கள் அநாதை இல்லத்தின் பிள்ளைகளிடமிருந்து பொருட்களைத் திருடிக்கொண்டு வெளியே கொண்டு போய் விற்றுவிட்டான். அத்துடன் அநாதை இல்லங்களின் பெரிய வெண்கலப் பூட்டுகளையும் எடுத்துக் கொண்டு போய் விற்றுவிட்டான். எங்களை விட்டு ஓடிப்போன அவனை இரண்டு தடவைகள் நாங்கள் மன்னித்து எங்களண்டை திரும்பச் சேர்த்துக் கொண்டோம். அவனை எப்படியாவது நல்வழிப்படுத்திவிட வேண்டுமென்று 5 வருடங்களும் 4 மாதங்களும் நாங்கள் எங்கள் அநாதை இல்லங்களின் முழுக்குடும்பமாக அவனுக்காக எவ்வளவோ ஜெபித்து தேவ ஆலோசனைகள் கூறினபோதினும் அவன் திருந்தாமற் போகவே அவனை எங்கள் இல்லத்திலிருந்து மிகவும் வேதனையோடு அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று.

ஒரு சமயம் முல்லருடைய அநாதை விடுதிகளில் ஒன்றிலுள்ள ஒரு மாணவனை அவனது ஒழுங்கீனங்கள், தீய நடத்தை காரணமாக விடுதியை விட்டே நீக்குவதற்காக ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. நீண்ட காலமாகவே அவன் கெட்ட நடக்கையில் நடந்து கொண்டிருந்தான். அவனை சீர்திருத்த எடுத்துக்கொண்ட எந்த ஒரு ஏற்பாட்டிற்கும் அவன் கீழ்ப்படிய மறுத்துவிட்டான். இறுதியாக முல்லர் அவனது தலையின்மேல் கை வைத்து அவனுக்காக ஜெபிக்கத் தொடங்கினார். அவன் எத்தனையான கடினமான, உறைந்து போன கல் நெஞ்சினன் என்பதைக் காண்பிக்க தனது கண்கள் இரண்டையும் அகலத் திறந்து தனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கும் முல்லரைப் பார்த்தான். அவன் சற்றும் எதிர்பாராத விதமாக முல்லருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடி அவருடைய கன்னங்களில் தாராளமாக வடிந்து கொண்டிருப்பதை அவன் கண்டு அற்புதமாக மனந்திரும்பினான். அவனது பாவ வாழ்க்கை முற்றும் மாறி இரட்சகரின் அடியானானான்.

அதே சமயம் முல்லருடைய அநாதை இல்லத்திலிருந்து விலக்கப்பட்ட மற்றொரு பையனுக்காக முல்லர் இறுதியாக கண்ணீர் வழிந்தோட ஜெபித்து "நான் உனக்காக வருந்துகின்றேன். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக" என்று சொல்லி அனுப்பினார்.

 
முல்லர் அநாதை இல்லச் சிறுவன் வில்லியம் ரெடி
புகழ் பெற்ற பிரசங்கியார் ஆனது

"என்னைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டியதும், என்னை தேவாலயத்துக்கு கூட்டிச்சென்று குழந்தைக்குரிய ஜெபத்தை எனக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியதும் என்னைப் பெற்ற என் தாயாரின் பொறுப்பு என்பதை நான் ஒருக்காலும் அறியாதிருந்தேன்" என்கின்றான் வில்லியம் ரெடி. 1860 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 23 ஆம் தேதி லண்டன் பட்டணத்திலுள்ள ஒரு ஏழை குடும்பத்தில் அவன் பிறந்தான். அவனுடைய தந்தை ஊறிப்போன ஒரு குடிகாரனாவான். அதின் காரணமாக அவன் கட்டிய மனைவியையும் பெற்ற 10 பிள்ளைகளையும் போஷித்து பராமரிக்க கூடாதவனானான். 1865 ஆம் ஆண்டில் வில்லியம் ரெடியின் தாய் தந்தையர் இருவரும் மரித்தனர்.

வில்லியம் தனது வாழ்க்கையை வீடு வாசலற்ற, தாய் தந்தையரற்ற அநாதையாக தொடங்கினான். ஒவ்வொரு நாள் இரவும் லண்டன் பட்டணத்தின் இருளான ரயில் நிலைய வளைவுகளிலும், குப்பைகள் கொட்டி வைக்கும் பெரிய இரும்பு பெட்டகங்களிலும் அவன் தூங்கினான். "அநேக தடவைகளிலும் உரித்து தெருவில் வீசப்பட்ட ஆரஞ்சு பழத்தோலை ஆசை ஆவலாக நான் எடுத்துச் சாப்பிட்டேன். என் வயிற்றில் எழுந்த கட்டுக்கடங்கா பசி உணர்வைப் போக்க தெருவில் புகைத்து வீசப்பட்ட சிகரெட் துண்டுகளை எடுத்து திரும்பவும் புகைத்து எனது பசி உணர்வைத் தணித்தேன்" என்கின்றான் வில்லியம் ரெடி. "சில வேளைகளில் நாங்கள் மதுபானக்கடைகள் போன்ற பொது ஜன விடுதிகளுக்குச் சென்று வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் டப்பா கூத்து தெருப்பாடல்களை குடிகாரர்களுக்குப் பாடி காசுகளை சம்பாதிப்போம்" என்கின்றான் அவன்.

இந்தவிதமான சோகமான வாழ்வின் சூழ்நிலையில் அவனது 12 ஆம் வயதில் அதாவது 1872 ஆம் ஆண்டு ஜேம்ஸ் வாக் என்ற லண்டன் பட்டணத்து மிஷனரி ஒருவர் வில்லியம் ரெடியை ஆஷ்லி டவுணில் உள்ள முல்லரின் அநாதை இல்லம் ஒன்றில் கொண்டு வந்து சேர்த்தார். "நான் உங்களுக்கு உறுதிபடச் சொல்லுவேன், நான் சந்தோசமுடையவனாக இருக்கவே இல்லை. அந்த அநாதை இல்லத்தில் இருந்தோரை நான் எனது நண்பர்களாக பார்க்க இயலவில்லை, மாறாக லண்டன் பட்டணத்து தெருக்களில் நான் சுதந்திரப்பறவையாக சுற்றியலைந்த என்னை கைது செய்து கொண்டு வந்து எனது ஆனந்தமான சுயாதீனத்தை பறித்துக் கொண்ட பகைஞராகவே நான் அவர்களைப் பார்த்தேன். முல்லரின் அநாதை இல்லத்தின் இரும்புக்கதவுகள் எனக்கு பின்னால் வந்து மூடிக்கொண்டன. திரும்பவும் லண்டன் பட்டணத்துக்குத் திரும்பிச் சென்று அதின் பிரகாசமான தெரு விளக்குகளைக் காண என் இருதயம் வாஞ்சித்து கதறியது. வான வீதியில் சுதந்திரமாக பறந்து திரியும் பறவையை பிடித்து சிறிய கூண்டில் அடைத்து வைத்ததுபோல என் நிலை காணப்பட்டது" என்கின்றான் வில்லியம்.

"ஆஷ்லி டவுண் முல்லர் அநாதை இல்லத்தில் இருந்தவர்கள் என்னை நன்கு ஸ்நானம் செய்வித்து அநாதை இல்லத்தில் பையன்கள் அணியக்கூடிய அழகான நீல நிற சீருடைகளை எனக்கு அணிவித்தார்கள். அதின் பின்னர் சாப்பாட்டு மேஜையில் எனக்கு ஆகாரம் வைத்தார்கள். நான் அதை சாப்பிடாமல் அமைதியாக இருந்தேன். நான் சாப்பிடாமல் சும்மா இருந்ததைப் பார்த்த என் அருகிலிருந்த மற்ற பையன்கள் எனது ஆகாரத்தை எடுத்து சாப்பிட்டு முடித்து விட்டார்கள். அன்று இரவில் நான் ஆகாரம் சாப்பிடாமல் பட்டினியாகவே எனது நித்திரைக்குச் சென்றேன். எல்லாரும் நித்திரை செய்யும் பெரிய ஹாலில் எனது படுக்கை எண் 22 என்று சொன்னார்கள். காலை 6 மணிக்கு மணி அடித்ததும் நாங்கள் எழுந்திருந்து 8 மணிக்கெல்லாம் எங்கள் சாப்பாட்டு அறைக்குச் சென்று அமர்ந்தோம். முந்தின நாள் இரவில் நடந்ததுபோல எனது ஆகாரத்தை அருகிலுள்ள மாணவர்கள் எடுத்து சாப்பிட்டுவிடக்கூடாது என்ற பயத்தில் எனக்கு முன்னாலிருந்த ஆகாரத்தை கண்ணும் கருத்துமாக ஒன்று விடாமல் சாப்பிட்டு முடித்தேன்" என்கின்றான் வில்லியம் ரெடி.

அந்த நாளின் காலை ஆகாரத்தின் போதுதான் முதன் முறையாக வில்லியம் ரெடி கர்த்தருடைய வேத புத்தகத்திலிருந்து தேவனுடைய வார்த்தைகள் வாசிக்கப்படுவதை ஆச்சரியத்துடன் கவனித்தான். வில்லியம் ரெடிக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பதை அவனது கண்காணிப்பாளர் கவனித்தார். அடுத்து வந்த மாதங்களில் அவர் அவனுக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுத்ததுடன் ஆண்டவர் இயேசுவைக் குறித்தும், அவரது மகத்தான கல்வாரி அன்பு, பாவ மன்னிப்பு, இரட்சிப்பு போன்ற காரியங்களையும் திட்டமும் தெளிவுமாக அவனுக்கு விளக்கி கூறினார். வில்லியம் ரெடி அநேக தேவனுடைய வசனங்களை மனப்பாடமாகக் கற்றுக் கொண்டான். எனினும், அவனது ஆவிக்குரிய வாழ்வில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவன் தன்னுடன் இருந்த மற்ற பையன்களுக்கு லண்டன் தெருக்களில் தான் கற்றுக் கொண்டிருந்த கழைக்கூத்தாடி விளையாட்டுகளை இரகசியமாகக் கற்றுக் கொடுத்து அவர்கள் ஒவ்வொருவரிடமுமிருந்து வாரந்தோறும் ஒரு பென்னிபெருமானமுள்ள தபால் தலை வசூலித்ததாக விடுதி கண்காளிப்பாளர் கண்டு பிடித்தார். ஒரு நாள் வில்லியம் ரெடி ஒரு கூட்டம் பையன்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு இருளான நேரம் சென்று கண்காளிப்பாளர் சாப்பாட்டு அறைக்குள் புகுந்து அவரது இராச்சாப்பாட்டுக்கான ஆகாரங்கள் யாவையும் தின்று முடித்துவிட்டனர். நடந்ததைக் கண்ட கண்காளிப்பாளர் கடும் கோபம் கொண்டு வில்லியம் ரெடியை பிரம்பால் நன்கு அடித்த பின்னர், அவனது ஆத்துமாவுக்கான ஒரு பெரிய பிரசங்கத்தையும் செய்தார். அத்துடன் அவன் மேல் அவர் பரிதாபம் கொண்டு கொஞ்சம் இனிப்பு பதார்த்தங்களும் வழங்கினார்.

"பிரம்படிகளாலும், பிரசங்கத்தாலும் என்னிலிருந்த பிசாசை துரத்த முடியாத எங்கள் விடுதி கண்காளிப்பாளர் கடைசியாக என் மேல் பரிதாபம் கொண்டு எனக்கு அன்பொழுகக் கொடுத்த இனிப்பு மிட்டாய்களால் துரத்தி ஓட்டிவிட்டார்" என்று கூறினான் வில்லியம் ரெடி.

1876 ஆம் ஆண்டின் ஒரு நாள் காலை வேளையில் வில்லியம் ரெடி அநாதை இல்லப் பள்ளியிலிருந்து வெளியே அழைக்கப்பட்டு அநாதை இல்லத்தின் பையன்களை வேலைகளில் அமர்த்தும் பணிக்கு தெரிவு செய்யும் பிரஞ்சு என்பவருக்கு முன்பாக நிறுத்தப்பட்டான்.

"வில்லியம் ரெடி, ஒரு மாவு மில்லில் வேலை செய்வதை நீ விரும்புவாயா?" என்று அவர் அவனைக் கேட்டார்.

"ஆம் ஐயா, நான் அந்த தொழிலை விரும்புகின்றேன்" என்று அந்த தொழிலைக் குறித்து எந்த ஒரு முன்பின் அனுபவமில்லாத வில்லியம் மகிழ்ச்சியோடு பதில் அளித்தான்.

அதின் பின்னர் அதிகமான கால தாமதம் இல்லாமல் அநாதை இல்லத்தின் வழக்கத்தின்படி வில்லியம் ரெடியின் சட்டை அளவுகள் எடுக்கப்பட்டு 3 ஜோடி பேன்ட் சேட்டுகள் இல்லத்தின் செலவிலேயே தைத்து அவனுக்குக் கொடுக்கப்பட்டது. இறுதியாக ஜியார்ஜ் முல்லருக்கு முன்பாக வில்லியம் நிறுத்தப்பட்டான். அவர் அவனை தமது 3 ஆம் எண் அநாதை இல்லத்தில் சந்தித்தார். அவனது வலது கரத்தில் ஒரு வேதாகமத்தையும், அவனது இடது கரத்தில் 5 ஷில்லிங் மதிப்புள்ள ஒரு க்ரௌன் (Crown) நாணயத்தையும் கொடுத்து "உனது இடது கை பிடிப்பைவிட உனது வலது கை பிடிப்பை உறுதியாக பற்றிக் கொள்ளுவாயா?" என்று ஜியார்ஜ் முல்லர் தனது கண்களை இமைத்தவராக வில்லியம் ரெடியைக் கேட்டார்.

"அப்படியே பிடித்துக் கொள்ளுகின்றேன் ஐயா" என்று வில்லியம் அமைதியாகப் பதில் அளித்தான்.

"நல்லது, உனது வலது கரத்திலுள்ள தேவனுடைய புத்தகத்தின் போதனைகளுக்கு கவனமாக செவிசாய்த்து அதின்படி தப்பாமல் நடப்பாயானால் தேவன் உனது இடது கரத்திலும் நீ எப்பொழுதும் பிடித்துக் கொள்ளுவதற்கு ஏதுவாக அங்கே செல்வம் வைத்துக் கொண்டே இருப்பார் என்பதை திட்டமாக நீ உன் மனதில் வைத்துக் கொள். இப்பொழுதும், என் இளைஞனே, நீ முழங்கால்படியிடு" என்றார் முல்லர்.

வில்லியம் ரெடியின் தலையின்மேல் முல்லர் தனது கரத்தை வைத்தவராக அவனை ஆண்டவருடைய கிருபையுள்ள பராமரிப்புக்கு ஒப்புவித்து உள்ளம் உருகி ஜெபித்து, அவனை எழுந்து நிற்கச் செய்து "கர்த்தரை நம்பி நன்மை செய், தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்" (சங் 37 : 3 ) என்ற தேவ வசனத்தை அவனுக்குக் கூறி "என் மகனே, ஆண்டவரின் கிருபை உன்னோடிருப்பதாக, போய் வா" என்று அனுப்பி வைத்தார்.

"நான் தங்கியிருந்த ஆஷ்லி டவுண் அநாதை இல்லத்தை விட்டதும் எனது முழுமையான பூலோக உடமைகள் எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட தேவனுடைய வேதாகமம், எனது வஸ்திரங்கள், ஒரு க்ரௌன் நாணயம், யாவுக்கும் மேலாக பரிசுத்தவான் ஜியார்ஜ் முல்லர் அவர்களின் விலைமதிப்பிட முடியாத ஆசீர்வாதமான ஜெபங்கள் மாத்திரமே" என்று வில்லியம் ரெடி நினைவு கூறுகின்றான். தேவான் ஷைர் என்ற இடத்திலுள்ள நியூட்டன் அப்பாட் என்ற இடத்திற்குச் சென்ற ரயிலில் டிக்கெட் எடுத்து வில்லியம் ரெடி அனுப்பி வைக்கப்பட்டான். நியூட்டன் அப்பாட் ரயில் நிலையத்தில் அவனது வரவுக்காக நீண்ட தாடியுடன் தலையில் வைக்கோல் தொப்பி வைத்த ஒரு கலகலப்பான அன்பான மனிதர் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்.

"நீதான் வில்லியம் ரெடியா?" என்றார் அந்த அன்பான மனிதர்.

"ஆம் ஐயா" என்று அவன் பதிலளித்தான்.

"நல்லது, இனிமேல் நான் உனது எஜமானன் அல்லது உனது தந்தை. நீ எந்த விதத்திலும் என்னைத் தெரிந்து கொள்ளலாம். வா, நமக்காக காத்து நின்று கொண்டிருக்கும் குதிரை வண்டியினுள் ஏறிக்கொள்" என்றார் அந்த மனிதர்.

ரயில் நிலையத்திலிருந்து 17 மைல்கள் தொலைவிலுள்ள ஜாக்ஃபோர்ட் என்ற இடத்தில்தான் அவனை அழைத்துச் சென்ற அன்பான பெரிமான் என்பவருடைய வீடு இருந்தது. தேவான் ஷைர் என்ற அழகான கிராமப்புறங்களின் வழியாக அவர்களின் குதிரை வண்டி சென்று கொண்டிருந்தது. அந்த அழகு காட்சிகளை எல்லாம் வில்லியம் ரெடி பரவசத்துடன் அனுபவித்து ஆனந்தித்துக் கொண்டே சென்றான். பெரிமான் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட கிறிஸ்தவ மனிதர். அவர் தனது அன்பான நடத்தையாலும் பாசமுள்ள வார்த்தைகளாலும் வில்லியம் ரெடியை அவனது மாவு மில் பணியின்போதே நீண்ட நாட்கள் ஆவதற்கு முன்னரே கர்த்தருக்காக ஆதாயம் செய்து கொண்டார். ஆம், வில்லியம் ரெடி இரட்சிப்பின் பாத்திரமானான். சில ஆண்டுகளில் வில்லியம் ரெடி ஜாக்ஃபோர்ட் என்ற அவனிருந்த இடத்திலேயே ஒரு குருவானவர் அந்தஸ்த்துக்கு உயர்ந்தான். அதின் பின்னர் அவர் நியூஜிலாந்து தேசத்துக்குச் சென்று நாளடைவில் தேசத்தின் மிகவும் புகழ்பெற்ற சுவிசேஷகர்களில் ஒருவராக விளங்கினார். ஜியார்ஜ் முல்லர் தோற்றுவித்த அநாதை இல்லத்திலிருந்து வந்த ஒரு அநாதை சிறுவன் ஆண்டவருக்காக எரிந்து பிரகாசித்தான். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

முல்லரின் அநாதை இல்லங்களில் வளர்ந்த 2 அநாதைகள் ஒருவருக்கொருவர் திருமணமாகி கணவன் மனைவி ஆனார்கள். அவர்களுக்கு 8 பிள்ளைகள் பிறந்தனர். அந்தப் பிள்ளைகள் அனைவரும் அன்பின் ஆண்டவருடைய உண்மையான சாட்சிகளாகத் திகழ்ந்தனர். அவர்களில் ஒருவர் ஆப்பிரிக்கா தேசத்திற்கு மிஷனரியாக புறப்பட்டுச் சென்றார். இவ்வண்ணமாக முல்லர் வளர்த்த அநாதை குழந்தைகளில் பலரும் பின் நாட்களில் கர்த்தருக்கு மகிமையான சாட்சிகளாக விளங்கினார்கள். அவர்களைக் குறித்து சாட்சிகள் எழுத வேண்டுமானால் அதைப்பற்றிய விபரம் ஒரு பெரிய பிரபந்தமாகிவிடும். கர்த்தர் ஒருவருக்கே அனைத்து மகிமையும் உண்டாவதாக.

முல்லரின் ஆஷ்லி டவுண் அநாதை இல்லத்தில் வளர்ந்த ஒரு அநாதை முல்லருக்கு 1876 ஆம் ஆண்டு இவ்வாறு ஒரு கடிதம் எழுதியிருந்தது "எனது கிறிஸ்தவ வாழ்வில் அவிசுவாசம், சந்தேகம், சோர்பு, பயம் போன்றவைகளை பிசாசானவன் கொண்டு வந்து தேவனுடைய அன்பை விட்டு என்னைப் பிரிக்க முயற்சிக்கும் போதெல்லாம் 6 ஆண்டு காலம் நான் வளர்ந்த நமது அநாதை இல்லத்தின் வாழ்க்கையின் கடந்த கால நினைவுதான் பிரகாசமான மின்னல் ஒளி பிரகாசம்போல என் உள்ளத்தில் பிரகாசிக்கின்றது. நான் உடுத்தியிருந்த அழகான ஆடைகள், நான் புசித்த சுவையான ஆகாரங்கள், நான் படுத்து நித்திரை செய்த மென்மையான படுக்கை, என்னைச் சுற்றியிருந்த அநாதை இல்லத்தின் பாதுகாப்பான கருங்கற் சுவர்கள் எல்லாம் ஜெபத்தை கேட்கும் ஜீவனுள்ள தேவன் ஒருவர் இன்றும் உண்டு என்பதற்கு வெளியரங்கமான சாட்சிகளாக இருப்பதை என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிவதுடன், சாத்தான் என்னைத் தனது சந்தேக கணைகளால் சோதிக்கும்போதெல்லாம் அநாதை இல்லத்தில் நான் கண்கூடாக கண்ட மேற்கண்ட காட்சிகளை எல்லாம் பிசாசானவனுக்கு நான் காண்பித்து அவனை விரட்டி அடிப்பது எனக்கு இலகுவாக இருக்கின்றது" என்று எழுதியிருந்தது.

 
முந்நாளைய அநாதை சிறுமி ஒருத்தியிடமிருந்து முல்லருக்கு வந்த கடிதம்:

கனமும், கண்ணியமும் பொருந்திய என் அருமை முல்லர் ஐயா அவர்களே, உங்கள் அன்பான அநாதை இல்லத்தில் நான் இருந்த காலங்களில் பெற்று அனுபவித்த அன்பும் பாசமுமான பெற்ற தந்தைக்கொப்பான அரவணைப்புக்கு நான் எந்தவிதத்தில் நன்றி சொல்லுவது என்று அறியாமல் திகைக்கின்றேன். நான் உங்கள் அநாதை இல்லத்தில் செலவிட்ட ஆண்டுகள் எனது வாழ்க்கையில் மிகவும் மனமகிழ்ச்சியான ஆண்டு காலங்களாகும். எங்கள் சரீரப் பிரகாரமான நலன்களில் நீங்கள் அக்கறை காட்டியதைப்போல எங்கள் எங்கள் ஆவிக்குரிய வாழ்விலும் நீங்கள் மிகவும் கண்ணும் கருத்துமாகவிருந்தீர்கள். உங்கள் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட கிருபை புரிந்த என் ஆண்டவர் இயேசுவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கின்றேன். உங்கள் இல்லத்தில்தான் நான் ஆண்டவர் இயேசுவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவருடைய அன்பில் ஆழமாக வேர் ஊன்றினேன். அங்குதான் நான் அவரை அதிகமாக அறிந்து கொண்டேன். சாரோனின் ரோஜாவாகவும், பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமாகவும், எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்தாகவும், பதினாயிரம் பேர்களில் சிறந்தவராகவும் உங்கள் அநாதை இல்லத்தில்தான் நான் அவரை கண்டறிந்தேன். நான் தற்சமயம் பணி செய்யும் எனது எஜமானி என்னை மிகவும் பட்சமாக வைத்துக்கொள்ளுகின்றார்கள். நமது அநாதை இல்லத்தில் இன்னும் மனந்திரும்பாமல் இருக்கும் அன்பான அநாதை குழந்தைகளுக்காக நான் ஜெபிக்கின்றேன். இன்னும் அநேக ஆண்டு காலங்கள் நீங்கள் சுகபெலனோடிருந்து அநேக அநாதைகளுக்கு சிநேகிதனாகவும், அவர்களின் பாதுகாவலனாகவும் இருப்பீர்களாக" என்று எழுதியிருந்தாள்.

 
வேத ஞான ஸ்தாபனம்
(SCRIPTURAL KNOWLEDGE INSTITUTION)

ஜியார்ஜ் முல்லர் என்றதும் உலகம் முழுமைக்குமுள்ள கிறிஸ்தவ மக்களின் மனக்கண்கள் முன்னர் உடனே ஓடோடி வருவது அவர் அநாதைகளுக்குச் செய்த மகத்தான தொண்டுதான். இந்த மாபெரும் தேவ ஊழியம் அவர் செய்த மற்றொரு மாபெரும் ஊழியத்தை நிழலிட்டு மறைத்து நிற்கின்றது என்று நாம் சொல்லாம். அவர் மேற்கொண்ட 17 உலக மிஷனரி பயணங்களிலும் உலகம் முழுமையிலும் உள்ள மக்கள் அவரை அநாதைகளின் உத்தம நண்பனாகவே மாத்திரம்தான் பார்த்தனர். முல்லரும் தனது மிஷனரி பயணங்களில் தான் அநாதை குழந்தைகளின் போஷிப்புக்காக இக்கட்டான நேரங்களில் ஏறெடுத்த அவரது ஜெபங்களுக்கு கர்த்தர் எத்தனை அற்புதம் அதிசயமாக பதில் அளித்தார் என்ற தேவச் செயல்களை மாத்திரமே அவர் அதிகமாக எடுத்துப்பேசினார்.

ஆனால், முல்லர் தமது அன்பின் ஆண்டவருக்குச் செய்த மாமாட்சியான மற்றொரு ஊழியம் அவர் 1834 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் தேதி தேவனின் நிச்சயமான வழிநடத்துதலோடு தோற்றுவித்த "வேத ஞான ஸ்தாபனம்" ஆகும். இந்த ஸ்தாபனத்தை முல்லர் தனது ஆண்டவராம் கர்த்தரை போஷகராக கொண்டு ஆரம்பித்தார். இதின் பிரதான நோக்கம் ஏழை குழந்தைகளுக்கு கல்வி அறிவு அளிப்பது, தேவனுடைய வார்த்தைகளை உலகமெங்கும் பரவச் செய்வது, மிஷனரிகளுக்கு ஆதரவு அளிப்பது போன்றவையாகும். "வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" (ஆகாய் 2 : 8 ) என்ற தேவ வசனத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு தனது ஆண்டவரை "வேத ஞான ஸ்தாபனத்தின்" தேவைகளை சந்திக்கும் பரலோக வங்கி உரிமையாளராக வைத்துக்கொண்டு முல்லர் இந்த நிறுவனத்தை தொடங்கினார்.

ஆண்டுக்கு ஆண்டு கர்த்தர் ஒருவரையே சார்ந்து அவர் ஒருவரிடம் மாத்திரமே உதவி கேட்டு, கேட்டு 63 ஆண்டுகள் தொடர்ச்சியான ஊழியத்திற்குப் பின்னர் உலகின் பல்வேறு மொழிகளில் 281,652 வேதாகமங்கள், 21,343 சங்கீத புத்தகங்கள், 1,448,662 புதிய ஏற்பாடுகள், 111,489,067 சுவிசேஷ துண்டு பிரதிகள், ஆவிக்குரிய புத்தகங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நீண்ட ஆண்டு கால சேவையில் ஆப்பிரிக்கா, எகிப்து, சீனா, இந்தியா, மலாக்கா, பலஸ்தீனா, கனடா, ஆஸ்திரியா, பெல்ஜியம், அர்மீனியா, அயர்லாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற அநேக நாடுகளில் நடைபெற்றுக்கொண்டிருந்த மிஷனரி பணிகளுக்கு பண உதவிகள் அனுப்பப்பட்டன. அநேக நூற்றுக்கணக்கான மிஷனரிகளுக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ 259,777 பவுன்கள் அனுப்பப் பட்டிருந்தது. 121,683 ஏழை மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இலவசமாக அளிக்கப்பட்டது. இந்த மாணவர்களில் அநேகர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதாகமக் கல்வி காரணமாக ஆண்டவரண்டை வழிநடத்தப்பட்டனர். இரட்சிப்பின் பாத்திரங்களாயினர்.

கத்தோலிக்க ஆதிக்கம் நிறைந்த இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் முல்லர் தோற்றுவித்த வேத ஞான ஸ்தாபனத்தின் மூலமாக இரகசியமாக அனுப்பப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான வேதாகமங்கள், வேதாகம பங்குகள் தேவ நாமத்திற்கு மகிமையாக மகத்தான காரியங்களை செய்தது. அந்த நாட்களில் மேற்கண்ட கத்தோலிக்க நாடுகளுக்கு வரும் பயணிகளின் சட்டைப் பைகள் கூட தேவனுடைய வார்த்தைகளடங்கிய வேதாகம பிரதிகள் இருக்கின்றதா என்று கடுமையாக பரிசோதிக்கப் பட்டதாக கூறப்படுகின்றது. அந்தவிதமான சூழ்நிலையில் தேவனுடைய வார்த்தைகள் இரகசியமாக அந்த பாப்பரசர்களின் நாடுகளுக்குள் கடத்தப்பட்டது.

 
ஜியார்ஜ் முல்லரின் 90 ஆம் பிறந்த நாள்

ஜியார்ஜ் முல்லரின் 90 ஆம் பிறந்த நாளன்று பிரிஸ்டோலில் உள்ள பெதஸ்தா தேவாலயத்தில் அவருடைய உலகளாவிய சுவிசேஷ பிரயாணங்கள் மற்றும் கர்த்தர் தமது வாழ்வில் பாராட்டிய தயவு, இரக்கம் குறித்து ஜியார்ஜ் முல்லர் பகிர்ந்து கொண்ட அவரது அனுபவங்களை குறித்து பிரிஸ்டோல் பட்டணத்திலிருந்து வெளியாகும் "பிரிஸ்டோல் டெய்லி பிரஸ்" என்ற தினசரி செய்தி தாள் கீழ்க்கண்டவாறு செய்தி எழுதியிருந்தது:-

"ஜியார்ஜ் முல்லர் தமது காலம் சென்ற மனைவியோடு நிலத்திலும், நீரிலுமாக ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆஸ்திரேலியாவின் 6 காலனி நாடுகளுக்குமாக மொத்தம் 42 நாடுகளில் 200000 மைல்கள் தூரம் பிரயாணம் செய்திருந்தார். முன்பெல்லாம் சமுத்திர பிரயாணங்களில் அவர் கடல் நோய் (Seasickness) காரணமாக பெரிதும் கஷ்டப்படுவதுண்டு. பின்னர், இந்தக் காரியத்தை ஆண்டவருடைய கரத்தில் ஒப்புவித்து தனது கடற்பயணங்களில் தனக்கு எந்த ஒரு கஷ்டமும் இருக்கக்கூடாது என்று ஜெபித்து அற்புதமானதொரு விடுதலையைப் பெற்றுக் கொண்டார். அதின் பின்னர் அந்த சமுத்திர வியாதி அவரை அணுகவே இல்லை. அவரது கடற் பயணங்கள் கர்த்தருக்குள் ஆனந்தமாக அமைந்தன. அவர் அட்லாண்டிக் மகா சமுத்திரத்தை 7 தடவைகளும், சிவந்த சமுத்திரத்தை 5 தடவைகளும், மத்தியதரைக் கடலை 16 தடவைகளும் கடந்திருந்தார். பசிபிக் சமுத்திரத்தையும், இந்து மகா சமுத்திரத்தையும் அவர் கடந்திருந்த போதினும் அந்த பழைய சமுத்திர நோய் அவரை நெருங்கவே இல்லை.

முல்லரின் மனநிலை வயது முதிர்ச்சியின் காரணமாக எந்த ஒரு பாதிப்புக்கும் உள்ளாகாமல் அப்படியே இருந்தது. 70 வருடங்கள் 6 மாத காலத்திற்கு முன்னர் வாலிபனாக இருந்து தேர்வுகள் எழுதி வெற்றிபெற்ற நாட்களிலும், லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் கட்டுரைகள் எழுதியபோதும், எபிரேயு, கிரேக்க மொழிகளில் பரீட்ஷைகள் எழுதி தேர்ச்சிபெற்ற நாட்களிலும் இருந்த அதே மன வலிமை இன்றும் அப்படியே அவரில் காணப்பட்டது. ஆண்டவரின் அன்பின் மகத்துவத்தை என்னவென்று சொல்லுவது? தேவபக்தியானது 90 வயதான முதிர்ந்த வயதிலும் முல்லருக்கு ஆசீர்வாதமாக அமைந்தது.

தன் அன்பின் கருணை வெள்ளமாகிய கர்த்தர் தன்மேல் பொழிந்தருளிய அளவில்லா ஆவிக்குரிய நன்மைகளை தமக்கு முன்பாக கூடிவந்த திரள் திரளான தேவ ஜனத்திற்கு எடுத்துப் பேசும் காரியத்தில் அதை எப்படி ஆரம்பிப்பது? அதை எப்படி முடிப்பது என்பதறியாமல் அவர் பிரமித்து திகைத்துப்போய் நின்றார். கர்த்தர் தமது வாழ்வில் பாராட்டிய அதிசயமான நடத்துதல்களைக்குறித்து முல்லர் எழுதிய புத்தகங்கள் அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படியாக கர்த்தர் அவைகளை ஆசீர்வதித்தார். அதின் காரணமாக அவரது புத்தகங்களின் மூலமாக ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட தேவ மக்களை அவர் தமது 42 நாடுகள் தேவ ஊழியத்தின் பாதையில் நேருக்கு நேர் முகத்திற்கு முகம் சந்தித்தபோது அவர்கள் கர்த்தரில் களிகூர்ந்தனர். பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் ஆனந்த சந்தோசத்தையும் முதன் முதலில் கண்டடையும் போது சிதறுண்டு சின்னாபின்னமாக நொறுங்கிக் கிடந்த ஒரு நீசப் பூச்சியாம் நிர்ப்பந்தமான வாலிபனை அவனது 90 ஆம் வயதின் முதிர்ந்த முதுமையில் கர்த்தர் தமது பரிசுத்த நாமத்திற்கு மகிமையாக உலகமெங்கும் பரிமளிக்கும் ஒரு நற்கந்த பாத்திரமாக தூக்கி நிறுத்திவிட்டாரே!

69 வருடங்களும் 10 மாதங்களும் முல்லர் ஒரு சந்தோசமான மனிதர். உண்மையில் அவர் ஒரு மிகுந்த சந்தோசமான தேவ மனிதர். இந்த அளவற்ற ஆனந்த சந்தோச நிலைக்கு அவரைக் கொண்டு சென்றது அவரில் காணப்பட்ட 2 பரிசுத்த குணாதிசயங்களாகும். முதலாவது, முல்லர் எப்பொழுதும் ஒரு நல்ல சுத்தமான பரிசுத்த மனச்சாட்சியை தன்னகத்தே கொண்டிருந்தார். அந்த பரிசுத்த மனச்சாட்சியை தேவ பெலத்தால் அவர் எப்பொழுதும் கண்ணின் மணி போல பேணிப்பாதுகாத்து வந்தார். எந்த ஒரு நிலையிலும் முல்லர் தேவனுடைய திருவுளச்சித்தத்துக்கு விருப்பமில்லாத எந்த ஒரு காரியத்தையும் செய்யாமல், தனது சுய விருப்பம், தனது சுயமான மாம்ச தூண்டுதல்களுக்கு இணங்கிப்போகாமல் எப்பொழுதும் ஆண்டவருடைய சித்தத்தை செய்து அதின் மூலம் அவர் அந்த பரிசுத்த மனச்சாட்சியை தன்னகத்தே கொண்டிருந்தார். இரண்டாவது அவரில் காணப்பட்ட ஒரு மாட்சியான பரிசுத்த குணாதிசயம் அவர் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளின் மேல் அளவற்ற அன்பும், தாகமும் கொண்டிருந்தார். முல்லர் தமது வாழ்வின் பிந்திய பகுதியில் பரிசுத்த வேதாகமத்தை ஆண்டுக்கு நான்கு தடவைகள் முழுமையாக வாசித்து தியானித்து மகிழ்ந்து வந்தார். 66 ஆண்டு காலங்களுக்கு முன்பாக தேவனுடைய வார்த்தைகளை வாசித்து தியானிப்பதில் அவருக்கு இருந்த ஆனந்தத்தைக் காட்டிலும் வாழ்வின் அஸ்தமன நாட்களில் அவைகளை தியானிப்பது அவருக்கு இன்னும் அளவற்ற தேவ சமாதானத்தை அளிப்பதாக இருந்தது. தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளோடு ஒன்றரக்கலந்த ஒரு பரிசுத்த வாழ்க்கையை முல்லர் எப்பொழுதும் கொண்டிருந்தபடியால் ஒரு அருமையான பரிசுத்த மனச்சாட்சியையும் அவரால் கொண்டிருக்க முடிந்தது" என்று அந்த பத்திரிக்கை எழுதியிருந்தது.

 
ஆவிக்குரிய நண்பர் சார்லஸ் பார்சன்ஸ்
அவர்களோடு நடைபெற்ற சம்பாஷணை

1897 ஆம் ஆண்டின் கோடை கால ஆரம்ப நாட்களில் முல்லர் தமது அநாதை இல்லங்கள் ஒன்றின் படிப்பறையில் இருந்தபோது அவரது நெருங்கிய ஆவிக்குரிய நண்பர்களில் ஒருவரான சார்லஸ் பார்சன்ஸ் என்பவர் அவரை நேரில் வந்து சந்தித்தார். முல்லர் அவரை மிகுந்த தேவ அன்புடன் பலமாகக் கைகுலுக்கி வரவேற்றார்.

"நீங்கள் எங்கள் இல்லங்களுக்கு அதிக அன்புடன் வரவேற்கப் படுகின்றீர்கள்" என்றார் முல்லர்.

"தேவன் தமது வாக்குத்தத்தங்களில் மிகவும் உண்மையுள்ளவர் என்பதை நீங்கள் எப்பொழுதும் கண்டு பிடித்து வந்திருக்கின்றீர்கள், அப்படித்தானே?" என்று முல்லரைப் பார்த்து சார்லஸ் பார்சன்ஸ் கேட்டார்.

"எப்பொழுதும், எல்லா காலங்களிலும் தேவன் உண்மையுள்ளவர் என்பதை நான் பூரணமாக கண்டு பிடித்திருக்கின்றேன். அவர் என்னை ஒருக்காலும் கைவிட்டதில்லை. தேவ ஊழியத்தின் பாதையில் எனது அனைத்து தேவைகளும் கடந்த 70 ஆண்டு காலமாக சந்திக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆரம்ப காலத்திலிருந்த கொஞ்ச எண்ணிக்கையான அநாதை குழந்தைகளிலிருந்து இன்று இருக்கக்கூடிய 9500 அநாதைக் குழந்தைகள் வரைக்கும் அவர்கள் நாளின் எந்த ஒரு ஆகாரத்தையும் இழந்து போனது கிடையாது. ஒருக்காலும் அவர்கள் பட்டினியாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்படவே இல்லை. நூற்றுக்கணக்கான தடவைகள் நாங்கள் எங்கள் அநாதை இல்லங்களை அந்த நாளில் எங்கள் கைகளில் ஒரு பென்னி நாணயம் கூட இல்லாமல் ஆரம்பித்திருக்கின்றோம். ஆனால் எங்கள் பரலோக தந்தை எங்களுடைய தேவைகள் அத்தியாவசியமாக சந்திக்கப்பட வேண்டிய சரியான தருணத்தில் ஒரு நொடி பொழுது கூட தேவையற்ற கால தாமதமில்லாமல் அற்புதமாக சந்தித்து வழிநடத்தி வந்திருக்கின்றார். இந்த ஆண்டு காலங்களில் எல்லாம் தேவன் பேரில், ஜீவனுள்ள தேவன் பேரில், ஆம், அவர் ஒருவரையே சார்ந்து கொள்ள நான் கிருபை பெற்றேன். ஜெபத்தைக் கேட்கும் ஜீவனுள்ள தேவன் எங்கள் ஜெபங்களுக்கு விடைகொடுத்து 1004000 பவுன்களை அனுப்பியிருக்கின்றார். அநாதை இல்லங்களை நடத்த ஆண்டுதோறும் 50000 பவுன்கள் எங்களுக்கு வேண்டும். அவை அனைத்தும் தேவைப்படும் அந்தந்த சரியான சமயங்களில் எங்கள் கரங்களுக்கு வந்து கிடைத்துக் கொள்ளும்படியாக கர்த்தர் உதவி செய்து வந்திருக்கின்றார்.

பூமியில் எந்த ஒரு மனிதனும் நான் அவனிடம் எப்பொழுதாகிலும் எனது தேவைக்காக ஒரு பென்னி (Penny) காசு கேட்டேன் என்று சொல்ல முடியாது. எங்கள் அநாதை இல்லங்களை மேற்பார்வையிட்டு நடத்த எங்களுக்கு கமிட்டிகள் கிடையாது, எங்களுக்குள் ஓட்டெடுப்பு கிடையாது, பணம் வசூலித்து கொண்டு வர பண வசூலிப்பாளர்களை நாங்கள் ஏற்படுத்தவில்லை, நிரந்தரமான வருமானங்களை மாதந்தோறும் எங்களுக்கு ஒழுங்காகக் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய வழிகளில் பெரும் பணங்களை நாங்கள் எதிலும் முதலீடு செய்யவில்லை. எனது முழுமையான நம்பிக்கை ஆண்டவர் ஒருவர் பேரில் மாத்திரமேதான் உள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் உள்ளங்களில் எங்களுக்கு உதவி செய்யும்படியாக கர்த்தர் வித்தியாசமான வழிகளில் அவர்களின் உள்ளங்களை ஏவி விடுகின்றார். நான் ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே ஐரோப்பா கண்டத்திலுள்ள அல்லது ஆஸ்திரேலியா கண்டத்திலுள்ள அல்லது உலக நாடுகள் ஏதோ ஒன்றிலுள்ள ஒரு மனிதர் உள்ளத்தில் கர்த்தர் பேசி எங்களுக்கு உதவிகள் அனுப்ப ஏவுகின்றார். சமீபத்தில் ஒரு சாயங்காலம் நான் ஒரு கூட்டத்தில் பேசி முடித்ததும் கூட்டத்திலிருந்த ஒரு தனவான் எங்கள் அநாதைக் குழந்தைகளின் நலனுக்காக ஒரு பெரிய செக்கை எழுதி கூட்ட முடிவில் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

"நான் உங்கள் வாழ்க்கை சரித்திரத்தை வாசித்திருக்கின்றேன். வேளாவேளைகளில் உங்கள் விசுவாச வாழ்க்கை எத்தனை அதிகமாகப் புடமிடப்பட்டிருக்கின்றது என்பதை நான் கவனித்திருக்கின்றேன். கடந்த நாட்களில் நீங்கள் கடந்து வந்த அதே விசுவாச பரீட்ஷைகள் இன்றும் உங்கள் வாழ்வில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனவா?" என்று கேட்டார் பார்சன்ஸ்.

"என் விசுவாச வாழ்க்கை முன்பைவிட அதிகமாக இப்பொழுது பரீட்சிக்கப்படுவதுடன், எனது கஷ்டங்கள் கடந்த நாட்களைக் காட்டிலும் இந்நாட்களில் இன்னும் கூடுதலாகவே எனக்கு இருக்கின்றது. எங்களுடைய பிரமாண்டமான பணத் தேவைகள் ஒரு புறமிருக்க, அநாதை இல்லங்களிலுள்ள பிள்ளைகளை பாதுகாத்து அவர்களை உலகக் கல்வியிலும், ஆவிக்குரிய காரியங்களிலும் சீராக கவனித்து வழிநடத்திச் செல்ல தகுந்த கல்வி ஞானமுள்ள பணியாளர்களை கண்டு பிடிப்பதிலும் எங்களுக்கு கஷ்டங்கள் உண்டு. அத்துடன், அநாதை இல்லங்களிலிருந்து தங்கள் கல்விகளை முடித்து ஆண்டுதோறும் வெளியேறிச்செல்லும் நுற்றுக்கணக்கான அநாதைகளை தகுந்த இடங்களில் அவர்களுடைய பிற்கால வாழ்வுக்கு ஆசீர்வாதமாக குடி அமர்த்துவதிலும் எங்களுக்கு போராட்டங்கள் உண்டு. அடிக்கடி எங்கள் பண கை இருப்பு மிகவும் தாழ்வு நிலைக்கு வந்து விடும். முற்றும் வெறுமை நிலைக்கு கூட வந்துவிடும் அந்த நேரங்களில் நான் எனது அருமையான சக பணியார்கள் யாவரையும் ஒன்று கூடி வரச்செய்து "சகோதரரே, ஜெபியுங்கள், ஜெபியுங்கள்" என்று அவசர வேண்டுகோள் விடுப்பேன். உடன்தானே 100 பவுன்கள் வரும். அதைத் தொடர்ந்து 200 பவுன்கள், இன்னும் சில நாட்களுக்குப் பின்னர் 1500 பவுன்கள் வந்து சேரும். நாம் எப்பொழுதும் ஜெபித்துக்கொண்டும், ஜெபத்தின் மூலமாக நாம் கேட்பவைகளை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று விசுவாசித்துக்கொண்டுமிருக்க வேண்டும். ஜீவனுள்ள தேவன் பேரில் நம்பிக்கையாயிருப்பது ஒரு அருமையான காரியம். ஏனெனில், "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, நான் உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று அவர் வாக்களித்திருக்கின்றார். தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள், அவர் அவைகளை உங்களுக்குத் தந்தருள்வார். தேவன் எவ்வளவுதான் நமக்குச் செய்யக்கூடியவர் என்பதற்கு எந்த ஒரு எல்கையுமே கிடையாது. அவருடைய மாட்சிமையான பரிசுத்த நாமத்திற்கு எப்போதும் துதி உண்டாவதாக. யாவுக்காகவும் ஆண்டவரை துதியுங்கள், ஒவ்வொரு காரியத்திற்காகவும் அவரை துதியுங்கள். வெறும் 6 பென்னிகள் மாத்திரம் தேவன் அனுப்பியிருப்பதற்காக நான் அவரை பல தடவைகளிலும் துதித்திருக்கின்றேன். அதே சமயம் 12000 பவுன்கள் அவர் அனுப்பிய போதும் நான் அவரை துதித்திருக்கின்றேன்" என்று கூறினார் முல்லர்.

"நீங்கள் உங்கள் அநாதை இல்லங்களின் பராமரிப்புக்காக ஒரு நிரந்தரமான காப்பீட்டுத் தொகையை (Fixed Deposit) தனிமைப்படுத்தி ஒதுக்கி வைப்பதை குறித்து எப்பொழுதாவது ஆழ்ந்து சிந்தித்திருக்கின்றீர்களா?" என்று பார்சன் முல்லரைப் பார்த்துக் கேட்டார்.

"நான் அப்படிச் செய்வேனானால் அதைப்போலொத்த மதியீனமான செயல் வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்று ஜியார்ஜ் முல்லர் மிகுந்த ஆணித்தரமாக அடித்துக் கூறினார். அநாதை இல்லங்களுக்கான போதுமான பராமரிப்பு தொகையை நான் கைவசம் வைத்துக் கொண்டு நான் என் தேவனை நோக்கி எப்படி ஜெபிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? நான் ஆண்டவரிடம் துணிந்து போய் ஜெபிக்க தொடங்கினால் அவர் என்னைப் பார்த்து "ஜியார்ஜ் முல்லர், முதலாவது உனது பாதுகாப்பு தொகைகள் யாவையும் உன்னைவிட்டு அப்புறப்படுத்திவிட்டு இங்கே எனது சமூகத்துக்கு வா" என்று நிச்சயமாக ஆண்டவர் சொல்லுவார். ஓ, நான் ஒருக்காலும் அந்த மதிகேடான காரியத்தைச் செய்யத் துணியமாட்டேன். நீங்கள் நினைப்பதுபோல நான் அந்தக் காரியத்தை நான் ஒருக்காலும் என் சிந்தைக்கு கொண்டு வந்து யோசிக்கவே இல்லை. நமது பாதுகாப்புத் தொகைகள் அனைத்தும் பரலோகத்தில் இருக்கின்றது. ஜீவனுள்ள தேவன் நமக்குப் போதுமான கர்த்தர். நான் என் ஆண்டவரை ஒரு பவுனுக்காக நம்பினதைப்போன்று பல்லாயிரம் பவுன்களுக்காகவும் அவரை நான் நம்பியிருக்கின்றேன். நான் நம்பின அந்த நம்பிக்கைகள் எதுவும் ஒருக்காலும் விருதாவாகப் போகவில்லை. "கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" என்றார் முல்லர்.

"அப்படியானால், நிச்சயமாக நீங்கள் உங்களுக்கென்று எதையும் சேர்த்து வைக்க வேண்டுமென்ற எண்ணமே இல்லாதிருந்திருக்கின்றீர்கள்?" என்றார் பார்சன்ஸ்.

இந்த கேள்விக்கு முல்லர் பதில் அளித்த விதத்தை பார்சன்ஸ் தனது வாழ்வில் ஒருக்காலும் மறந்திருக்கவே மாட்டார். இது வரை பார்சனுக்கு எதிர் திசையில் அமர்ந்தவராக, தனது கரங்கள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து தனது முழங்கால்களில் வைத்த நிலையில் மிகுந்த அமைதியுடன் தரையைப் பார்த்த நிலையில் மிகவும் சாவதானமாக பதில் அளித்து வந்த முல்லர் இந்த கேள்வியை தனது ஆவிக்குரிய நண்பர் கேட்டதும் திடுக்கிட்டவரைப்போன்று விழித்துக்கொண்டு பார்சன்ஸ் என்பவரின் முகத்தையே கொஞ்ச நேரம் உற்று நோக்கினார். அவரது முகம் ஒரு பிரசங்கத்தையே பிரதிபலிப்பதாகவும், அவரது கண்கள் கோவைப்பழம் போன்ற ஒரு காட்சியை அளிப்பதாகவும் பார்சன்ஸ் கவனித்தார். அதின் பின்னர் முல்லர் தாம் அணிந்திருந்த தனது கோட்டின் பொத்தான்களை திறந்து உள் சட்டையிலிருந்து ஒரு பழைய காலத்து மணிபர்சை (Money Purse) எடுத்து அதை பார்சன்ஸ் அவர்களின் கரத்தில் கொடுத்தார். ஆங்கில நாணயங்களை தனித்தனியே வைத்துக்கொள்ள வசதியாக அந்த மணி பர்சானது மத்தியில் வளையங்களைக் கொண்டதாக இருந்தது. "எனக்குள்ள என் சம்பத்தெல்லாம் அதற்குள்ளேயே அடங்கியிருக்கின்றது. ஒவ்வொரு பென்னியையும் எனக்கென்று சேமித்து வைப்பது என்ற காரியத்துக்கு என்னிடம் ஒருக்காலும் இடமே கிடையாது. எனது சொந்த செலவுக்காக பணம் எனக்கு அனுப்பப்படும்போது அதையும் கூட நான் அப்படியே ஆண்டவர் பக்கமாக கடத்திவிடுகின்றேன். எனக்கென்று ஓராயிரம் பவுன்கள் அனுப்பப்பட்டாலும் அதை நான் எனக்கு சொந்தமானதாகக் கருதாமல் அது என் ஆண்டவருக்குச் சொந்தமானது என்று நினைக்கின்றேன். அவருக்குச் சொந்தமான நான் அவருக்கே தொண்டு செய்கின்றேன். எனக்கென்று இந்த உலகத்தில் ஒரு சேமிப்பா? நான் அப்படி ஒருக்காலும் செய்யத் துணியமாட்டேன். அப்படிச் செய்வேனானால் அந்தக் காரியம் எனது அன்பான, கிருபை நிறைந்த, எல்லா தேவ ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றும் உறைவிடமுமான என் பரலோகத் தந்தையை நான் அவமதிப்பதற்குச் சமமாகும்" என்றார் முல்லர். பார்சன்ஸ், முல்லர் கொடுத்த மணிப்பர்சை அவரிடமே திரும்பக்கொடுத்தபோது அதில் எவ்வளவு பணம் இருக்கின்றது என்ற விபரத்தை முல்லர் அவரிடம் சொன்னார்.

"தினமும் எவ்வளவு நேரம் நீங்கள் உங்கள் முழங்கால்களில் ஜெபத்தில் செலவிடுகின்றீர்கள்?" என்றார் பார்சன்ஸ்.

"கூடுதலாகவோ, குறைவாகவோ நான் என் நேரங்களை தினமும் ஜெபத்திலேயே செலவிடுகின்றேன்" என்றார் முல்லர். "ஜெப ஆவியிலேயே நான் ஜீவிக்கின்றேன். நான் நடந்து கொண்டிருக்கும்போது ஜெபிக்கின்றேன். நான் படுக்கையிலிருக்கும்போதும், படுக்கையிலிருந்து கண் விழிக்கும்போதும் ஜெபிக்கின்றேன். எனது ஜெபங்களுக்கான பதில்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. ஆயிரக்கணக்கான தடவைகள், பதினாயிரக்கணக்கான தடவைகள் எனது ஜெபங்களுக்கு பரத்திலிருந்து எனக்கு பதில் கிடைத்துள்ளது. தேவனுடைய மகிமைக்காகவும், அவருடைய சித்தத்தின்படியும் எனது ஜெபங்கள் அமைந்துள்ளது என்பதை நான் திட்டமாக கண்டுகொண்ட மாத்திரத்தில் நான் அந்த ஜெபங்களுக்கு பதில் கிடைக்கும் வரை நான் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருக்கின்றேன். ஜெபங்களை நான் ஒருபோதும் சோர்படைந்து கைவிடுவதே கிடையாது" என்றார் முல்லர்.

முல்லர் தனது இருக்கையிலிருந்து எழுந்து தனக்கு அருகாமையில் கிடந்த மேஜையைச் சுற்றி நடந்துவிட்டு மீண்டும் தனது இருக்கையில் வந்து அமர்ந்தார்.

"ஜியார்ஜ் முல்லரின் ஜெபங்களைக் கர்த்தர் கேட்டு ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் மனந்திரும்பியிருக்கின்றனர். அந்த ஆயிரம் பதினாயிரம் ஆத்துமாக்களை முல்லர் பரலோகத்தில் ஒரு நாள் சந்திப்பார்!" என்றார் பார்சன்ஸ்.

"ஜெபத்தில் மகா முக்கியமானதொரு காரியம் என்னவெனில், தேவனிடமிருந்து நமக்கு விடை கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். எனது வாலிபத்தின் நண்பனான ஒருவனுடைய இரண்டு குமாரர்களுக்காக நான் தினமும் கடந்த 52 ஆண்டு காலங்களாக ஜெபித்து வந்து கொண்டிருக்கின்றேன். அவர்கள் இதுவரை மனந்திரும்பவில்லை. எனினும், அவர்கள் மனந்திரும்புவார்கள். அவர்கள் மனந்திரும்பமாட்டார்கள் என்று நாம் நினைக்கத்தேவையே இல்லை. காரணம், அவர்கள் மனந்திரும்புவார்கள் என்ற தேவனுடைய மாறாத வாக்குத்தத்தின் மேல் நான் எனது நம்பிக்கையை வைத்திருக்கின்றேன். கர்த்தருடைய பிள்ளைகளிடத்தில் உள்ள ஒரு பெரிய தவறு என்னவென்றால், அவர்கள் தொடர்ந்து ஜெபிக்கமாட்டார்கள். தாங்கள் ஜெபிக்க ஆரம்பித்த காரியத்திற்காக அவர்கள் விடாப்பிடியாக தொடர்ச்சியாக மன்றாடமாட்டார்கள். தேவனுடைய நாம மகிமைக்காக ஒரு காரியத்தை அவர்கள் சாதிக்க வேண்டுமானால் அவர்கள் அதைப் பெற்றுக்கொள்ளும்வரை கட்டாயம் ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் நமது ஜெபங்களை ஏறெடுக்கும் நமது பரம தகப்பன் எத்தனை நல்லவரும், இரக்கமுள்ளவரும், தயவுள்ளவரும், மன உருக்கம் நிறைந்த கர்த்தர் என்பதை நாம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். சற்றும் தகுதியற்றவனாகிய எனக்கு நான் நினைத்ததற்கும், வேண்டிக் கொண்டதற்கும் மிகவும் அபரிதமாக அவர் எனக்கு அள்ளிப் பொருந்தருளியிருக்கின்றார். நான் ஒரு பெலவீனமான பாவியான மனிதன். ஆனால், அந்த அன்பின் ஆண்டவர் எனது ஆயிரம் பதினாயிரம் ஜெபங்களைக் கேட்டு உத்தரவு அருளியிருக்கின்றார். இந்த இங்கிலாந்து தேசத்திலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் என் மூலமாக தேவனுடைய இரட்சிப்பின் வழியை கண்டுகொள்ள என்னை அவர் அற்புதமாக பயன்படுத்தியிருக்கின்றார். இந்த தகுதியற்ற உதடுகளின் மூலமாக பறைசாற்றப்பட்ட இரட்சிப்பின் நற்செய்தியை திரள் கூட்டம் மாந்தர் கேட்டு நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள தேவன் கிருபை செய்திருக்கின்றார்" என்றார் ஜியார்ஜ் முல்லர்.

"உங்களை நீங்களே புகழ்கின்றீர்களோ என்பது போல எனக்கு நினைக்கத் தோன்றுகின்றதே" என்று தயக்கத்துடன் கூறினார் பார்சன்ஸ்.

"ஜியார்ஜ் முல்லருக்கு தகுதியான ஒன்றே ஒன்று இருக்குமானால் அது எரி நரகம் மட்டுமேதான். என் அன்பான சகோதரனே, அந்த நரகம் மட்டுமேதான் எனக்குத் தகுதியான இடமாகும். எரிநரகத்துக்குப் பாத்திரவானான பயங்கர பாவியாம் என்னை அன்பின் ஆண்டவர் தமது கிருபை புண்ணியத்தால் மீட்டு இரட்சித்துக்கொண்டார். சுபாவப்படி நான் பாவியாக இருந்தபோதினும் நான் பாவத்தில் ஜீவிக்கவில்லை. பாவத்தை நான் வெறுக்கின்றேன். அந்த பாவத்தை நான் அதிகம் அதிகமாக பகைத்து வெறுக்கின்றேன். நான் பரிசுத்தத்தை நேசிக்கின்றேன். ஆம், அந்த பரிசுத்தத்தை நான் இன்னும் அதிகம் அதிகமாக வாஞ்சித்துக் கதறுகின்றேன்" என்று சொன்னார் முல்லர்.

"ஆண்டவருக்கான உங்கள் நீண்ட கால ஊழியத்தில் நீங்கள் மனம் சோர்ந்து போகத்தக்கதான பல காரியங்களையும் நீங்கள் கட்டாயம் சந்தித்திருப்பீர்கள் என்று நான் நினைக்கின்றேன்" என்றார் பார்சன்ஸ்.

"உண்மைதான், எனது நீண்ட கால தேவ ஊழியத்தின் பாதையில் நான் மனமடிவாகிப்போகக்கூடிய அநேக நிகழ்வுகளை நான் சந்தித்து வந்திருக்கின்றேன். ஆயினும், அனைத்துத் தடவைகளிலும் எனது நம்பிக்கையையும், விசுவாசத்தையும் ஆண்டவர் பேரில் பலமாக உறுதிப்படுத்திக்கொண்டேன். யேகோவா தேவனாம் கர்த்தரின் ஜீவனுள்ள வார்த்தைகளின் மேல் என் ஆத்துமா அடைக்கலம் புகுந்து கொண்டது. ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கையாயிருப்பது நல்லது. அவருடைய வார்த்தைகள் ஒருக்காலும் வெறுமையாக திரும்பாது. சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். 62 ஆண்டு காலங்களுக்கு முன்பாக எனது பிரசங்கங்கள் வறட்சியானதாகவும், கனியற்றதாகவும் இருந்ததுண்டு. ஆனால், வரவர அவைகள் அநேக ஆயிரம் ஆயிரங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாக அமைந்தன. கர்த்தர் ஒருவருக்கே மகிமை" என்றார் முல்லர்.

இந்த நேரம் முல்லர் எழுந்து அடுத்த ஒரு அறைக்குச் சென்று தனது வாழ்க்கைச் சரித்திரம் அடங்கிய ஒரு புத்தகத்தை எடுத்து அதிலே தனது கையெழுத்தைப் போட்டு தன்னிடம் வந்திருக்கும் தனது ஆவிக்குரிய நண்பனான சார்லஸ் பார்சன்ஸ் என்பவருக்கு அன்பளிப்பாக கொடுக்க ஆயத்தமானார். முல்லர் தன்னைவிட்டு எழுந்து சென்றிருந்த இந்த வேளையில் பார்சன்ஸ் அப்படியே ஜியார்ஜ் முல்லரின் அறையை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினார். அவரது அறையிலுள்ள மரச்சாமான்கள் மிகவும் எளிமையானவைகள். அதே சமயம் பயனுள்ளவைகளும் கூடத்தான். அவரது மேஜையின் மீது ஒரு வேதாகமம் திறந்திருந்தது. தெளிவான எழுத்துக்களையுடைய அந்த வேதாகமத்தில் எந்த ஒரு குறிப்புகளும், அடிக்கோடுகளும், சம வசனங்களும் எழுதப்படவில்லை. அந்த அறையைப் பார்த்ததும் பார்சன்ஸ் தனக்குள்ளாக இவ்விதமாக கர்த்தருக்குள் சிந்திக்க ஆரம்பித்தார் "இந்த அறை வல்லமையுள்ள ஒரு தேவ ஊழியனின் இருப்பிடம். ஆவியில் அனலற்ற, குளிர்ந்துபோன, மாம்ச பெலத்தால் தேவையில்லாமல் திட்டமிடும் ஒரு சுயநல சந்ததியில் இந்த மனிதனை தேவன் தமது நாம மகிமைக்காக எழுப்பி சர்வவல்லவராகிய ஆண்டவரின் வல்லமையில் மாத்திரம் சார்ந்து கொள்ளும் ஒரு மனிதனைக்கொண்டு எத்தனை மாட்சியான காரியங்களை தேவனுடைய சபை சாதித்துவிடும் என்பதை நிரூபித்து காண்பித்துவிட்டாரே" என்று பரவசமாக இதயபூரிப்புடன் பார்சன்ஸ் எண்ணினார். முல்லருடைய ஜெப அறையை நீங்கள் இந்த செய்தியில் காணலாம்.

 
தேவ மனிதரின் பூவுலக வாழ்வின் இறுதி நாட்கள்

அந்த கோடை காலத்தில் முல்லருக்கு 92 ஆம் வயது பிறந்திருந்தது. அந்த ஆண்டில்தான் இங்கிலாந்து தேசத்தை அரசாண்ட விக்டோரியா மகாராணியார் தமது ஆட்சி காலத்தில் 60 ஆண்டு நீண்ட காலங்களை பூர்த்தி செய்து மணி விழா (டயமண்ட் சூபிலி) கொண்டாடினார்கள். அவர்களின் மணி விழா சார்பாக முல்லரின் அநாதை குழந்தைகளுக்கு இனிப்புகள் வாங்கிக் கொடுக்கும்படியாக 50 பவுண்டுகளை பிரிஸ்டோல் பட்டணத்து மேயர் முல்லருக்கு அனுப்பியிருந்தார். முல்லர் அந்தப் பணத்தை தனது அநாதை குழந்தைகள் யாவரும் கிளிஃப்டன் என்ற இடத்திலுள்ள மிருகக்காட்சி சாலையை காணும்படியாக ஒழுங்கு செய்திருந்ததுடன் வேண்டியமட்டும் அந்த நாளில் பிள்ளைகளுக்கு இனிப்பு பண்டங்களும், தேநீரும் கொடுத்து மகிழ்ந்தார்.

விக்டோரியா மகாராணியாரின் மணி விழா ஞாயிறன்று மாலை ஜியார்ஜ் முல்லர் தமது பெதஸ்தா தேவாலயத்தில் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்து கொண்டார். மாலைக்கூட்டங்களில் பேசாமல் கொஞ்ச நாட்கள் விலகியிருந்த அவர் அன்றைய நாளின் மாலையில் தேவச்செய்தியைக் கொடுப்பதற்காக பெதஸ்தா தேவாலயத்தின் பிரசங்க பீடத்தில் ஏறி நின்றார். ஒடிசலான, மிகவும் ஒல்லியான அந்த 6 அடி உயரமுள்ள தேவ மனிதர் தமக்கு முன்னாலுள்ள ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்பாக நின்று கொண்டிருந்தார். அந்த தேவ ஜனம் அவருடைய செய்தியை கேட்பதற்காக மிகுந்த ஆவலுடன் கூடி வந்திருந்தனர். விக்டோரியா மகாராணி அம்மையார் வாலிப பெண்ணாக இருந்து அரச சிங்காசனத்தில் இன்னும் ராணியாக முடிசூட்டும் முன்பே அதாவது 3 ஆண்டு காலங்களுக்கு முன்னர் ஜியார்ஜ் முல்லர் தனது உலகப் புகழ்பெற்ற "வேத ஞான ஸ்தாபனம்" (Scriptural Knowledge Institution) என்ற ஸ்தாபனத்தை ஆரம்பித்திருந்தார். அந்த நாட்களில் வில்சன் தெருவிலுள்ள வாடகை வீட்டில் இருந்த அவரது அநாதை இல்லம் வெறும் 30 அநாதை குழந்தைகளை மட்டும் கொண்டிருந்தது. ஆனால் அடுத்து வந்த 60 ஆண்டு கால இடைவெளியில் "ஜியார்ஜ் முல்லர் விசுவாச ஜெப வேந்தர்" என்ற வார்த்தை முழு உலகத்திலுமுள்ள தேவ மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்து போய்விட்டது. தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தை மிகவும் கருத்தோடு 100 தடவைகள் வாசித்து முடித்திருப்பதாக அவர் ஒரு சமயம் உலகளாவிய வேதாகம சங்கத்திற்கு எழுதி தெரிவித்திருந்தார். அந்த நாளில் அவர் பெதஸ்தா தேவாலயத்தில் செய்த பிரசங்கத்தை கவனியுங்கள்:-

 
பெதஸ்தா தேவாலயத்தில் முல்லர் கொடுத்த
இறுதி தேவச்செய்தி

"இந்த நாளின் மாலை நேரத்திற்குரிய தேவச்செய்தி சிறியதும் மிகவும் அருமையானதுமான 23 ஆம் சங்கீதத்திலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆம், "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்" என்பதே அந்த வாசகம்.

முல்லர் 23 ஆம் சங்கீதத்தின் ஒவ்வொரு வசனமாக தமக்கு முன்பாக கூடி வந்திருந்த கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விளக்கி பேசிக்கொண்டு வந்தார். "இப்பொழுது சங்கீதத்தின் கடைசி வார்த்தைக்கு நாம் வருகின்றோம். "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்" என்பதே அந்த தேவ வசனம். ஏழை மனிதன் ஒருவன் ஐசுவரியவானான ஒரு மனிதனுடைய வீட்டுக்கு விருந்தாளியாக அழைக்கப்பட்டிருக்கின்றான். அழைக்கப்பட்டிருந்த ஏழை தான் அழைக்கப்பட்ட இடத்தில் மிகவும் சந்தோசமாகவும், எல்லா பாக்கியங்களையும் அனுபவித்து ஆனந்திக்கும் நிலையில் தான் இருப்பதைக் காண்கின்றான். அவன் மனம் வாஞ்சித்த பாக்கியங்கள் எல்லாம் அங்கே இருப்பதை அவன் பரவசத்துடன் பார்க்கின்றான். கடைசியாக அவன் ஒரு முடிவுக்கு வருகின்றான். இந்த இடத்தில் இருப்பது எனக்கு மகா சந்தோசமாக இருக்கின்றது. ஆகவே, நான் இந்த இடத்திலேயே இனி கடைசி வரை இருப்பேன். இந்த இடத்தைவிட்டு நான் வேறெங்கும் ஒருக்காலும் செல்லவே மாட்டேன்" என்ற முடிவான தீர்மானத்துக்கு வருகின்றான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்கின்ற ஒரு பரிசுத்த தேவ பிள்ளை "என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது, நான் நிறைவான சந்தோசத்தோடு இருக்கின்றேன்" என்று மட்டும் சொல்லாமல் "நான் சுமக்க முடியாத அளவுக்கு பரலோக பாக்கிய மகிழ்ச்சியை சுமந்து நிற்கின்றேன். இந்த பேரானந்த நிலையை நான் விட்டு விட்டு மற்றொரு ஸ்தானத்தைப் பெற்றுக் கொள்ளும்படியாக நான் ஒருபோதும் செல்லவே மாட்டேன். நான் என் பரலோக தந்தையின் வீட்டில் என்றும் நித்தியமாக தங்கியிருப்பேன்" என்று கூறுகின்றது.

"அந்தவிதமானதொரு பாக்கிய சிலாக்கியத்துக்குள் விசுவாசிகளாகிய நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றோம். கர்த்தருடைய பரிசுத்த வழிகளில் நாம் நடந்து நமது இருதயத்தை உண்மையாகவே கர்த்தருக்கு அர்ப்பணித்திருப்போமானால் மேற்கண்ட மாட்சிமையான பரலோக அனுபவமே நமக்குச் சொந்தமானதாகும். இந்த உலக வாழ்க்கையிலேயே நாம் அப்படிப் பட்டதொரு உன்னத அனுபவத்துக்குள் ஜீவிப்போம். அதின் காரணமாக நாம் கர்த்தருடைய வழிகளைவிட்டு ஒருக்காலும் விலகிச்செல்லவே மாட்டோம். உலகப்பிரகாரமாக வீணான மாய சந்தோசங்களை நாம் நாடி ஓடுகின்றோம். ஆனால் அவைகளை நாம் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. முடிவில் ஏமாற்றமேதான் நமது பங்காகத் தீருகின்றது. ஒரு சில மணி நேரங்களில் இந்த உலகத்தின் சந்தோசங்கள் எல்லாம் மறைந்து போய்விடுகின்றது. ஆனால் நாம் விசுவாசத்தின் மூலமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றுக்கொண்ட நமது சொல்லி முடியாததும், மகிமையால் நிறைந்ததுமான இரட்சிப்பின் சந்தோசம் ஒரு சில மணி நேரங்களுக்கோ, அல்லது ஒரு சில நாட்களுக்கோ, அல்லது ஒரு சில மாதங்களுக்கோ, அல்லது ஒரு சில ஆண்டுகளுக்கான சந்தோசமாக இல்லாமல் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களுக்குமாக இருக்கின்றது. ஆகையால், நமது இருதயம் "நான் இந்த பரலோக வழியில்தான் நிலைத்திருப்பேன், இந்த வழியிலேயே நித்திய மகிழ்ச்சி உள்ளது, நான் ஒருக்காலும் இந்தப் பாதையை தவறவிடேன். நான் எனது பரலோக தந்தையின் வீட்டில், அவர் சமூகத்தில் என்றுமாக நிலைத்திருப்பேன். அவரது வீட்டை நான் ஒருக்காலும் விட்டு நீங்கிப்போகமாட்டேன். காரணம், நான் ஆண்டவருடைய நேசப்பிள்ளையாக அவரது பிரசன்னத்தின் ஒளியில் வாசம் செய்வதே எனக்குச் சொல்லொண்ணா பேரானந்தம்.

பூமியிலுள்ள காரியங்கள் எல்லாம் மாறிப்போகும். ஆனால், நம் அருமை நேச இரட்சகர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராக இருக்கின்றார். லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அவர் எப்படி இருந்தாரோ அப்படியே அவர் இன்றும் எந்த ஒரு மாற்றமுமின்றி அப்படியே இருக்கின்றார். பலஸ்தீனா தேசத்தில் யூதேயா, சமாரியா, கலிலேயாவில் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல சிதறுண்டலைந்த மக்களின்பால் அவர் கொண்டிருந்த அதே மனதுருக்கம், பரிதாபம், அன்பு அப்படியே இன்றும் அவரிடம் உள்ளது.

நீங்கள் கடினப்பட்ட எத்தனை பொல்லாத, நீண்ட கால பாவியாக இருந்தபோதினும், திரும்ப திரும்ப நீங்கள் பாவம் செய்து வந்திருந்தாலும் நீங்கள் நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடு கிறிஸ்து இரட்சகரண்டை வரும்போது அவர் சிலுவையில் சிந்திய அவருடைய வல்லமையுள்ள இரத்தம் உங்கள் அனைத்து கொடிய பாவங்களையும் மன்னிக்கப் போதுமானதாக இருக்கின்றது.

உலகக் கல்வி எந்த ஒரு மனிதனுக்கும் மெய்யான சந்தோசத்தைக் கொடுக்க இயலாது. கிறிஸ்து இரட்சகர் ஒருவரே நிலையான, மெய்ச்சமாதானத்தையும், ஆனந்த சந்தோசத்தையும் கொடுக்க வல்லவர். எனக்கு 7 பாஷைகள் தெரியும். அன்பின் ஆண்டவர் இயேசு இரட்சகரை நான் என் சொந்த பரலோக தகப்பனாக ஏற்றுக்கொள்ளாமல் இருப்பேன் ஆனால் நான் கற்றுக்கொண்ட இந்த 7 பாஷைகளுடன் நான் நித்திய எரி நரகத்துக்குத்தான் செல்ல வேண்டும். இயேசு இரட்சகர், ஓ, இயேசு இரட்சகர் அந்த அன்பின் இரட்சகருக்கு சீடனாக இந்த உலகத்தில் வாழ்வது எத்தனை பாக்கியமான காரியம்!

நான் ஒரு மனமகிழ்ச்சியான விருத்தாப்பியன், மெய்யாகவே நான் ஒரு சந்தோசம் பொங்கிப்பூரிக்கும் விருத்தாப்பியன். நான் என் அறைக்குள் அங்கும் இங்கும் உலாவிக்கொண்டே "அன்பின் இரட்சா பெருமானே, நான் ஒண்டியான தனித்தவன் அல்லன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர். நான் எனது இரண்டு மனைவிமார்களையும், எனது பிள்ளைகளையும் அடக்கம் செய்தேன். ஆனால், நீர் இன்னும் என்னோடு கூட வாழ்கின்றீர். நீர் என்னோடு கூட இருக்கும் வரை நான் ஒருக்காலும் தனித்தவனோ அல்லது ஏதுமற்ற நாதியோ அல்லன். நீர் என்மேல் பூக்கும் புன்முறுவல் ஜீவனைப்பார்க்கிலும் மேலானது" என்றார் முல்லர்.

முல்லர் தம்முடைய வார்த்தையைத் தொடர்ந்து "தேவன் எத்தனை இரக்கம் தயவுடன், எத்தனை மென்மையாக, எத்தனை கிருபையுடன் அவர் நம்மை கிறிஸ்து இயேசுவுக்குள் வழிநடத்தி வந்திருக்கின்றார் என்பதைக் கவனித்தீர்களா? நமது உலக வாழ்வின் பிரயாணம் முடியும் காலம் வரை அவர் நம்மை தொடர்ந்து நடத்தி வருவார். அவர் நம்மை ஒருக்காலும் கைவிடவும் மாட்டார், அவர் நம்மை விட்டு விலகிச் செல்லவும் மாட்டார். இன்னும் கொஞ்ச காலத்திற்குள்ளாக அவர் நம்மைத் தம்முடன் என்றும் மோட்ச இன்ப வீட்டில் இருக்கும்படியாக அழைத்துக் கொள்ளுவார். அந்தவிதமான சொல்லி முடியாத மகிமையின் பாக்கிய சிலாக்கியம் பாவிகளும், நிர்ப்பந்தருமாகிய நமக்கு கிறிஸ்து இரட்சகர் மேல் நாம் கொண்ட விசுவாசத்தின் மூலமாக இரக்கமாகக் கிடைத்தது. கடைசியாக அன்பின் ஆண்டவர் இயேசுவோடு என்றுமுள்ள சதா காலங்களிலும், ஆம், நமக்காக தமது ஜீவனையே ஈந்தளித்த நேசரோடு அவருடைய பொற் பாதங்களை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் பேரானந்த பாக்கியம் நமக்குக் கிடைத்தது" என்று கூறி முடித்தார் முல்லர்.

 
முல்லரின் மோட்சானந்த பிரவேசம்

செவ்வாய் கிழமை முல்லர் வழக்கம்போல தமது அலுவல்களை கவனித்தார். புதன் கிழமை காலை அவர் தமது மருமகன் ஜேம்ஸ் ரைட் என்பவரிடம் "இந்த நாளின் காலையில் நான் எனது உடைகளை உடுத்தும்போது என்றுமில்லாதவிதத்தில் மிகவும் பெலனிழந்து மூன்று தடவைகள் ஓய்வு எடுத்து எடுத்து உடைகளை உடுத்தினேன்" என்று கூறினார்.

"அப்படியானால் உங்களுக்கு உதவி செய்ய உங்கள் அறையில் ஒரு ஆளை நியமிப்பது உங்களுக்கு விருப்பம்தானா?" என்று ஜேம்ஸ் ரைட் தனது மாமா முல்லரைக் கேட்டார்.

"அதை நாளை மறு நாள் பார்த்துக் கொள்ளலாம்" என்று முல்லர் பதில் அளித்தார்.

அந்த நாளின் மாலையில் அநாதை இல்லம் மூன்றில் நடைபெற்ற வாராந்திர ஜெபக்கூட்டத்தில் முல்லர் கலந்து கொண்டார். அவர் விருப்பப்படி மோட்சானந்த பாக்கியங்களை நினைப்பூட்டும் பாடல் ஒன்று பாடப்பட்டது. பாடல், ஜெபத்திற்குப்பின்னர் முல்லர் தனது மருமகன் ஜேம்ஸ் ரைட் என்பவரிடம் இரவு வந்தனம் கூறிவிட்டு தனது படுக்கை அறையுள்ள மேல் மாடிக்கு மெத்தைப் படிகளில் ஏறினார். அவர் படிக்கட்டுகள் ஏறி உச்சிக்கு வரவும் அநாதை இல்லத்தில் இருக்கும் 2 பெண் பிள்ளைகள் "எனக்கு முன்னாலுள்ள மோட்சானந்த பாக்கியம் நான் அறியேன், தேவன் அன்பாக நான் அவைகளை காணக்கூடாதபடி என் கண்களை மறைத்திருக்கின்றார்" என்ற பாட்டைப் பாடிக்கொண்டு விரைந்து ஓடி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஓடி வந்து தங்களுக்கு முன்னர் முல்லர் அமைதியாக நின்று கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

"பிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்குள் இத்தனை மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு ஆனந்த சந்தோசமாக இருக்கின்றது. ஆனால், நீங்கள் இந்த இரவு வேளையில் மெத்தையில் இப்படி விரைந்து ஓடுவீர்களானால் விழுந்து உங்களுக்கு காயம் உண்டாக்கிக் கொள்ளுவீர்கள். உங்களுக்கு என் இரவு வந்தனம்" என்று கூறிவிட்டு முல்லர் தனது படுக்கை அறைக்குள் சென்றார். முல்லரின் அறையின் மேஜையில் இரவில் அவர் அருந்துவதற்காக ஒரு கிளாஸ் பாலும், பிஸ்க்கட்டும் வழக்கம் போல வைக்கப்பட்டிருந்தது. அடுத்த நாள் காலை 5 க்கும் 6 க்கும் இடைப்பட்ட நேரத்தில் எழுந்து அவர் தனது மேஜை அருகில் சென்றிருக்கின்றார். அவ்வளவுதான் அப்படியே சாய்ந்து தரையில் விழுந்து தாம் அதிகமாக நேசித்த தம் அன்பின் ஆண்டவர் இயேசுவண்டை பறந்துசென்றுவிட்டார்.

வியாழன் காலை 7 மணி அளவில் முல்லரைக் கவனிக்கும் பணிப்பெண் தனது கரங்களில் தேயிலை பானத்துடன் அவருடைய அறையின் கதவைத் தட்டினாள். கதவை முல்லர் திறக்கவில்லை, அறையில் என்றுமில்லாத அமைதி காணப்பட்டது. பணிப்பெண் அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து பார்த்தபோது முல்லர் தனது படுக்கை அருகில் தரையில் மரித்தவராக இருப்பதைக் கண்டாள். உடனே, மருத்துவர் அழைக்கப்பட்டார். ஒரு மணி நேரத்திற்கு முன்பதாக அவர் மரணமடைந்திருக்கலாம் என்று மருத்துவர் கூறினார். அவருடைய மரணச் செய்தி கிடைத்ததும் ஒரு அன்பான தேவ மனிதர் "பரலோக வீட்டின் அன்பின் ஆண்டவராம் எஜமானர் தனது வீட்டைத் திறந்து "முல்லர் உள்ளே வா" என்று அன்பொழுக காதோடு காது சேர்த்துப் பேசி தமது உத்தம தாசனை தம்மண்டை அழைத்துக்கொண்டார்" என்று கூறினார். அவர் மரணமடைந்த செய்தி உடனடியாக உலகமெங்கும் பரவியது. அநாதைகளின் ஆப்த நண்பன், மாபெரும் ஜெப மாந்தன், விசுவாச வீரன், சுத்த சத்திய நேசன், புகழ்பெற்ற பிரசங்கியார், மாபெரும் கொடையாளி என்ற புகழ் வார்த்தைகளுடன் அவருடைய மரணச்செய்தி காட்டுத் தீ போல பரவியது. ஞாயிற்றுக் கிழமை உலகமெங்கும் நடைபெற்ற ஆராதனைகளில் அவரது பரலோக அழைப்பின் செய்தி ஒவ்வொரு தேவாலயத்தின் பிரசங்க பீடத்திலிருந்தும் கூறப்பட்டது. அவர் இறுதியாக வாழ்ந்த 3 ஆம் எண் அநாதை இல்லத்தில் உள்ள விசாலமான சாப்பாட்டு அறையில் முல்லரின் சரீரம் மிக எளிமையான எல்ம் மரப் பலகைகளால் செய்யப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அவரின் சரீரம் வைக்கப்பட்டிருந்த 3 ஆம் எண் அநாதை இல்லத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

பிரேதப் பெட்டியை எந்த ஒரு பூ அலங்காரமின்றி வெறுமையாகவே வைத்திருந்தனர். காரணம், முல்லர் பொதுவாக ஆடம்பரம், அலங்காரம் போன்றவைகளை ஒருக்காலும் விரும்பாதவர் என்பதை அவர்கள் நன்கு கண்டு வைத்திருந்தனர். பிரேத பெட்டியின் மேல் முல்லரின் இறந்த நாள் மற்றும் அவரது வயது எழுதப்பட்ட ஒரு பித்தளை தகடு மட்டும் வைக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற சிறிய ஆராதனையில் முல்லரின் மருமகன் ஜேம்ஸ் ரைட் என்பவர் முல்லரின் பரிசுத்தமான வாழ்க்கை மற்றும் அவருடைய தேவ ஊழியங்கள் குறித்து பேசினார். அந்த இடத்தில் ஓராயிரம் அநாதைக் குழந்தைகள் தாங்கள் இரண்டாம் தடவை இழந்து போன தங்கள் அன்புத் தந்தையின் முகத்தைக் காண கூடி வந்திருந்தனர். ஏற்கெனவே அவர்கள் தாங்கள் பெற்ற தந்தையை இழந்த பிள்ளைகள். அநாதை இல்லத்தின் ஒரு சிறிய ஆராதனைக்குப் பின்னர் அவருடைய சரீரம் பெதஸ்தா தேவாலயத்தில் நடைபெற்ற பிரதான அடக்க ஆராதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பெதஸ்தா தேவாலயத்தில் அனைவருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஆங்கிலேய திருச்சபை குருவானவர்களாலும், இதர சபைகளின் தேவ ஊழியர்களாலும் பெதஸ்தா தேவாலயத்தின் காலரிகள் யாவும் நிரம்பி வழிந்தன. தேவாலயத்தில் காலூன்றி நிற்க கூட இடம் கிடைப்பது அரிதாக இருந்தது.

 
பெதஸ்தா தேவாலயத்தில் நடைபெற்ற அடக்க ஆராதனை

ஜியார்ஜ் முல்லர், பெதஸ்தா தேவாலயத்தில் கடைசியாக கலந்து கொண்டு அந்த நாளில் அவர் தெரிந்து கொண்ட பாமாலைப் பாடலே அவரது அடக்க ஆராதனைப் பாடலாக அந்த நாளில் பாடப்பட்டது. முல்லரின் மருமகன் ஜேம்ஸ் ரைட் என்பவர் எபிரேயர் 13 ஆம் அதிகாரம் 7 ஆம் 8 ஆம் வசனங்களின் பேரில் தேவச் செய்தியை கொடுத்தார். அவருடைய செய்தியின் சுருக்கம் இதுவேதான்:-

"தேவன் தம்முடைய ஜனத்தின் மேல் ஆவிக்குரிய தலைவர்களையும், நீதியின் வழிகாட்டிகளையும் கிருபையாக ஏற்படுத்தியிருக்கின்றார். அந்த ஆவிக்குரிய தேவ மக்களின் வாழ்க்கையானது நாம் பின்பற்றிச் செல்லக்கூடிய பிரகாசமான விடிவெள்ளி நட்சந்திரங்களாக உள்ளன. காலஞ்சென்ற எனது நேசபாசத்திற்குரிய எனது மாமனாரின் இரண்டு பரிசுத்த குணாதிசங்களை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அவர்களின் விசுவாசம் அசைவில்லாத பிளவுண்ட கன்மலையாம் தேவனின் ஜீவனுள்ள வார்த்தைகளை ஆதாரமாகக் கொண்டிருந்தது. அந்த ஜீவ வார்த்தைகளின் போதனைகளும், வாக்குத்தத்தங்களும் அவர்களது அன்றாடக வாழ்வில் பரிமளிப்பதாக இருந்தது. தேவனுடைய வார்த்தைகள் முழுவதையும் முல்லர் அப்படியே பரத்திலிருந்து அருளப்பட்ட தேவ வாக்காக எடுத்துக் கொண்டார். "தேவனுடைய வார்த்தைகளின் மேல் உங்கள் விரலை வைத்துக்கொண்டு அந்த வார்த்தைகளில் உங்கள் விசுவாசத்தை பூரணமாக நங்கூரமிட்டு அசைவின்றி நிற்கலாம்" என்று அவர் வாலிப விசுவாசிகளைப் பார்த்து சவால் விட்டுக் கூறுவார். அவர் வோதாகமத்தை 200 தடவைகள் முதலிலிருந்து கடைசி வரை ஜெபத்துடன் வாசித்து முடித்திருந்தார். ஒவ்வொரு வருடமும் முல்லர் வேதாகமத்தை நான்கு தடவைகள் ஒழுங்காக வாசித்து முடித்துவிடுவார். தினமும் தேவனுடைய வார்த்தைகளால் போஷிக்கப்பட்ட அந்த தேவ மனிதர் ஆவியில் பெலவானாக விளங்கினார். தான் ஒரு பெலவீனன், நிர்ப்பந்தன், துரோகி, அபாத்திரன், எந்த ஒரு அற்பமான ஆசீர்வாதத்திற்கும் கூட தகுதியற்றவன் என்பதை அவர் எப்பொழுதும் தமது கண்களுக்கு முன்பாகக் கொண்டிருந்தாலும் தனது ஆழமான விசுவாசத்தை மகா பிரதான ஆசாரியராம் அன்பின் தேவன் மேல் முழுமையாக வைத்துவிட்டு அதின் மேல் சுகித்து லயித்திருந்தார்.

அவர் தமது உதவியாளர்களிடம் "உங்கள் உள்ளங்களில் தேவனுடைய அன்பைக் குறித்தும், அவருடைய புயத்தின் வல்லமையைக் குறித்தும் ஒரு சிறிய சந்தேக கார்மேகம் கூட நிழலிடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறுவார். முல்லருடைய வாழ்வின் பிரதான நோக்கம் கர்த்தர் ஒருவரையே மகிமைப்படுத்துவதாக இருந்தது. "ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக தேவன் தமது பிள்ளைகளின் ஜெபங்களைக் கேட்டு அவரை நம்பும் அவரது பிள்ளைகளுக்கு உதவி செய்தது போல இன்றைக்கும் செய்ய அவர் அப்படியே மாற்றமின்றி இருக்கின்றார்" என்று முல்லர் கூறுவார். தனது மாமனாரின் மனத்தாழ்மையைக் குறித்து ஜேம்ஸ் ரைட் குறிப்பிடும்போது "தேவனுக்காக மாபெரும் காரியங்களை சாதித்துவிட்ட முல்லர் அதைக் குறித்து எந்த ஒரு தற்பெருமையின் எண்ணமும் சிந்தையுமின்றி சுய நினைவே இல்லாதவர்போல காணப்பட்டார். அத்துடன் யார் யார் தாங்கள் தங்கள் ஆண்டவரின் வெறும் கரத்தின் கருவிகள் மட்டுமே என்று நினைப்போரை அவர் வல்லமையாக பயன்படுத்துவார்" என்று கூறுவார் என்று ரைட் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பெஞ்சமீன் பெரி என்பவர் பேசும்போது "முல்லர் பிரிஸ்டோல் பட்டணத்தின் மாபெரும் தேவ மனிதராக விளங்கிய போதினும் அவர் தம்மை ஒரு சாதாரணமான குடிமகனாகவே எண்ணி அந்தவிதமாகவே எளிமையாக நடந்து கொண்டார். தேவனுடைய வார்த்தைகளை மக்களுக்கு விளங்கக்காட்டுவதில் அவர் வல்லவராக விளங்கினார். அசுத்தமான பாவ வாழ்விலிருந்து தன்னை மீட்டு இரட்சித்து தமது ராஜரீக ஊழியத்திற்கு கிருபையாக அழைத்த ஆண்டவரை எல்லாரையும் விட, எல்லா பொருட்களையும் விட அதிகமாக அவர் நேசித்து அன்புகூர்ந்தார். அவருடைய இன்பங்களில் எல்லாம் மேலான இன்பம் தன் ஆண்டவரை பிரியப்படுத்துவதும், அவருக்கு ஊழியம் செய்வதுமேதான். அவருடைய மனத்தாழ்மை அளவிடற்கரியது. ஒரு சமயம் ஒரு தேவ பிள்ளை அவரைப் பார்த்து "அன்பின் ஆண்டவர் உங்களை தமது நித்திய விண் வீட்டிற்கு அழைக்கும்போது "ஒரு கப்பலானது தனது பாய்மரங்களை எல்லாம் முழுமையாக காற்றில் பறக்கவிட்ட வண்ணமாக ராஜ தோரணையில் ஜெய கெம்பீரமாக துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதைப் போலிருக்கும்" என்று கூறினார். அதைக் கேட்ட முல்லர் "ஐயகோ! அப்படியல்ல அது முற்றிலும் தவறானது. இந்த ஏழை முல்லர் அனுதினமும் "ஆண்டவரே, எனது போக்குவரத்துகளில் எல்லாம் என் பாதங்கள் உமது ஜீவ பாதையிலிருந்து வழி விலகி விடாதபடி நீர் என்னை அனுதினமும் என் கரம் பிடித்து கிருபையாக பாதுகாக்க வேண்டும் என்று ஜெபித்தாக வேண்டும்" என்று கூறினார். வேதாகமத்தில் நாம் காண்கின்ற ஆசா, சாலொமோன் போன்ற அரசர்கள் தங்கள் விருத்தாப்பிய நாட்களில் தேவனிடமிருந்து பாதை விலகிச் சென்றதை முல்லர் தனது மனதில் கொண்டு அந்தவிதமான பதிலைக் கொடுத்திருப்பார் என்று நாம் யூகிக்கலாம்" என்றார் பெஞ்சமீன் பெரி.

அவருடைய செய்திக்குப் பின்னர் ஸ்டான்லி என்பவர் ஜெபித்தார். மோல்ஸ்ஒர்த் என்பவர் கீழ்க்கண்ட அடிகளைக் கொண்ட பாமாலையை பாடும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்:-

ராஜாவாம் இயேசுவில் இளைப்பாறுவோரை
நினைக்கையில் நெஞ்சம் கசியுதே
தேவ வார்த்தையின்படி அவரில்
தாபரித்துக்கொண்டிருப்போர் பாக்கிய சீலர் தாமே!
இயேசுவில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் அந்த மோட்சவாசிகள்
ஓர் நாள் நம்முடன் பூலோக யாத்ரீகர்களாக சஞ்சரித்தவர்கள்தானே!
இளைப்பாறுதலிலிருக்கும் அந்த அன்பரை எண்ணி
வீணாக நாம் கண்ணீரை சிந்துதல் எத்தனை வியர்த்தமல்லோ!

மேற்கண்ட பாடலை அடுத்து ஸ்டான்லி ஆர்நட் என்பவர் ஜெபிக்கவும் முல்லரின் சரீரம் அதின் இளைப்பாறும் ஸ்தலமான ஆர்னோ வேல் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரிஸ்டோல் பட்டணத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகவும் பக்தி வினயமாகவும், சோகம் தோய்ந்தவர்களாகவும் அடக்க ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அந்த நாளில் பட்டணத்தின் அனைத்து தொழிற்கூடங்களின் வேலையாட்களும், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் அனைத்து மக்களும், ஸ்திரீகள் தங்கள் அழகான வீடுகளையும், வீட்டின் சமையல்களையும் முற்றுமாக விட்டுவிட்டு வீதிக்கு வந்து தேவ மனிதருக்கு தங்கள் இறுதி அன்பைத் தெரிவித்தனர். பிரிஸ்டோல் பட்டணத்தின் வரலாற்றில் இத்தனை துயரம் தோய்ந்த ஒரு அடக்க ஊர்வலம் என்றுமே நடந்ததில்லை. அமைதியான அந்த ஊர்வலத்தில் முல்லரின் ஆயிரக்கணக்கான அநாதை குழந்தைகள் தங்கள் கண்ணீரை வடித்துக்கொண்டே நடந்து சென்றனர். முல்லரின் 5 அநாதை இல்லங்களில் பணிபுரியும் அநேக பணியாட்கள், ஆசிரியர்கள், வேலையாட்கள் யாவரும் அங்கு சென்றனர். குதிரைகள் இழுத்துச் செல்லும் 80 வண்டிகள் பட்டணத்தின் மேன்மக்களை ஏற்றிக்கொண்டுச் சென்றன. அதில் பிரிஸ்டோல் பட்டணத்து மேன்மை தங்கிய மேயரின் வண்டியும் சென்று கொண்டிருந்தது. தேவ மனிதரின் அடக்க ஊர்வலத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

கல்லறைத் தோட்டத்தில் ஜெபம் ஏறெடுத்த பின்னர் கீழே கண்ட பாடல் அடிகளைக்கொண்ட பாமாலைப்பாடல் பாடப்பட்டது:-

மந்தையின் ஆடுகளுக்காக மரித்த
மேய்ப்பனை குறித்துப் பாடுவோம்,
அவரின் அன்பு கடைசி வரை சோதிக்கப்பட்டும்,
ஆடுகளுக்காக நேசம் இறுதிவரை காண்பித்தாரே!

ஆடுகளுக்காய் இம்மா நேசம் காண்பித்த
அந்த மா ஆட்டிடையர்க்கே எங்கள் துதி ஏறுமே
அனவரத காலமும், எங்களைக் கவர்ந்த
அவர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.

திரும்பவும் ஒரு ஜெபம் ஏறெடுக்கப்பட்ட பின்னர் முல்லரின் சரீரம் அவருக்கு முன்பாக மரித்து அடக்கம் பண்ணப்பட்ட அவரது இரண்டு மனைவிமார்களின் கல்லறைகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. ஆரம்பம் முதல் கடைசி வரை அடக்க ஆராதனைக்கடுத்த காரியங்கள் யாவும் ஜியார்ஜ் முல்லருடைய எளிமை, மனத்தாழ்மையை கருத்தில் கொண்டு மிகவும் எளிமையாக எந்த ஒரு ஆடம்பரமுமின்றிசெய்து முடிக்கப்பட்டது. முல்லர் வளர்த்த அநாதை குழந்தைகள் அளித்த நன்கொடைகளைக்கொண்டு ஒரு நினைவுக் கற்பலகை அவருடைய கல்லறையில் நாட்டப்பட்டுள்ளது. முல்லரின் கல்லறையை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

 
இதோ தேவன் தெரிந்து கொண்ட அதிசய பாத்திரம்

பரிசுத்தவான் அகஸ்டினின் பரிசுத்த தாயார் மோனிக்கா அம்மையார் தனது பாவ மைந்தன் அகஸ்டினை எந்த ஒரு சூழ்நிலையிலும் ரோமாபுரிக்கு அனுப்பிவிடாதபடி ஆண்டவரிடம் கெஞ்சி கதறி மனதுருகி மன்றாடினார்கள். ரோமாபுரிக்கு தனது குமாரன் செல்லுவதாக இருந்தால் அவன் தனது பாவ வாழ்வில் இன்னும் ஆழமாகச் சென்று தன்னை முழுமையாக அழித்துக் கொள்ளுவான் என்று அவர்கள் பெரிதும் திகிலடைந்தார்கள். ஆனால், ஞானமுள்ள தேவன் மோனிக்காவின் ஜெபத்தை கேட்கவில்லை. அகஸ்டினை ரோமாபுரிக்கு அனுப்புவது அவருடைய திருவுள சித்தத்துக்கு ஏற்றதாக இருந்தது. காரணம், அகஸ்டின் அங்குதான் மிலான் பட்டணத்து பரிசுத்தவான் பிஷப் அம்புரோஸ் அவர்களை சந்தித்து தேவனண்டை மனந்திரும்புவதற்கு ஏதுவாக அது இருந்தது. மகன் மனந்திரும்ப வேண்டுமென்ற மோனிக்கா அம்மையாரின் இதய வாஞ்சையை நிறைவுசெய்து, அவன் ரோமாபுரிக்கு செல்லக்கூடாது என்ற அவர்களின் வேண்டுகோளுக்கு தேவன் மறுப்பு தெரிவித்தார்.

ஜியார்ஜ் முல்லர், தனது மனந்திரும்புதலுக்குப் பின்னர் வந்த 8 ஆண்டு காலங்களில் தன்னை ஒரு மிஷனரியாக தேவன் அங்கீகரிக்க வேண்டுமென்று 5 தடவைகள் ஆண்டவரிடம் கெஞ்சினார். அதற்காக அவர் எவ்வளவோ பிரயாசங்களை எடுத்தார். ஆனால், ஆண்டவர் அவரது ஆவலை நிறைவு செய்யவே இல்லை. இப்பொழுது முல்லருக்கு வயது 65 ஆகியிருந்தது. முல்லர் தனது வாழ்விலும், கனவிலும் கிஞ்சித்தும் நினைத்தே பார்த்திராத விதத்தில் உலகம் முழுமைக்கும் அவரை மிஷனரியாக அனுப்பினார். ஆரம்ப காலம் முதல் இங்கிலாந்து தேசத்திற்குள்ளாகவே சுற்றித்திரிந்து சுவிசேஷம் அறிவித்துக் கொண்டிருந்த முல்லரை இப்பொழுது ஆண்டவர் உலகமெங்கும் தமக்கு சாட்சியாக சுமார் 17 ஆண்டு காலம் அதாவது 1875 முதல் 1892 ஆம் ஆண்டு வரை எடுத்துப் பயன்படுத்தினார். ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு எல்லாம் முல்லர் சென்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தேவன் எப்படி இருந்தாரோ அப்படியே எந்த ஒரு மாற்றமும், வேற்றுமையின் நிழலுமின்றி இன்றும் அப்படியே ஜீவிக்கின்றார் என்ற தமது சொந்த அனுபவ சாட்சியை கூறி மக்களை களிகூர்ந்து ஆரவாரிக்கச் செய்தார்.

1878 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 10ஆம் நாள் அமெரிக்கா தேசத்தின் ஜனாதிபதி ஹேய்ஸ் அவர்களும் அவரது மனைவியும் முல்லரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சென்று மிகுந்த அன்புடன் அவரை உபசரித்து முல்லரின் அநாதை இல்லங்களை குறித்த தேவனுடைய அதிசய நடத்துதல்களை குறித்து கேட்டு விசாரித்து அகமகிழ்ந்தனர்.

ஜெர்மன் தேசத்தில் ஸ்டட்கார்ட் என்ற இடத்தில் ஜெர்மன் ராணியார் தமது அரண்மனைக்கு முல்லரை வரவழைத்து இங்கிலாந்து தேசத்தில் பிரிஸ்டோலில் அவர் தேவன் ஒருவரை மட்டும் சார்ந்து அவர் நடத்திக் கொண்டிருக்கும் அநாதை இல்லங்களைக் குறித்து அநேக கேள்விகளை அவரிடம் கேட்டு கர்த்தருக்குள் ஆச்சரியமுற்றார்கள். அரண்மனையின் தர்பார் ஹாலில் இளவரசர்களும், இளவரசிகளும் ஒன்றுகூடிச் சேர்ந்து முல்லரிடம் கர்த்தரின் ஆச்சரிய வழிநடத்துதல்களைக் குறித்த சம்பவங்களை கேட்டு ஆனந்த பரவசமுற்றனர்.

ஜெர்மன் தேசத்தின் ஹாலே என்ற இடத்தில் இருந்தபோது அங்குள்ள ஆகஸ்ட் ஹெர்மன் பிராங் என்பவர் தோற்றுவித்த அநாதை இல்லத்தில் உள்ளவர்களுக்கு இரண்டு தேவச்செய்திகளை முல்லர் கொடுத்தார். ஒரு காலத்தில் அந்த அநாதை இல்லத்தில் முல்லர் 2 மாத காலம் தங்கியிருந்தபோதுதான் அதை தோற்றுவித்த தேவ மனிதர் ஆகஸ்ட் ஹெர்மன் பிராங் எந்த ஒரு மனித ஒத்தாசையையும் எதிர்பாராமல் கர்த்தர் ஒருவரை மாத்திரம் சார்ந்து தனது அநாதைகளை போஷித்து வழிநடத்திச் சென்ற காரியம் முல்லரை பெரிதும் கவர்ச்சிக்கவே அவரைப்போல பிரிஸ்டோலில் அநாதைகளுக்கான இல்லத்தை முல்லர் தொடங்கினார். ஹாலந்து தேசத்தில் நிமன்கன் என்ற இடத்தில் ஒரு சுவிசேஷகர் நடத்திக் கொண்டிருந்த 450 அநாதைகள் உள்ள இல்லத்தையும் தேவ மனிதர் முல்லர் பார்வையிட்டு அகமகிழ்ந்தார். காரணம், அந்த சுவிசேஷகர் முல்லர் தோற்றுவித்து நடத்திய அநாதை இல்லங்களைக் குறித்த ஆச்சரிய செய்திகளை வாசித்து அவருடைய மாதிரியைப் பின்பற்றி தனது அநாதை இல்லத்தை கர்த்தர் ஒருவரையே சார்ந்து சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தார்.

அந்தவிதமாகவே, உலகின் பல்வேறு இடங்களில் அநேக அநாதை இல்லங்கள் தேவமனிதர் ஜியார்ஜ் முல்லரின் மாதிரியைப் பின்பற்றி, அவருடைய அனுபவசாட்சிகளை வாசித்து எந்த ஒரு மனித ஒத்தாசையையும் எதிர்பாராமல் தேவனை மட்டும் நம்பி ஆண்டவருடைய நாமத்திற்கு மகிமையாக நடந்து கொண்டிருப்பதை முல்லர் கேள்விப்பட்டு தனது ஆண்டவரை புகழ்ந்து போற்றினார்.

தேவ மனிதர் ஜியார்ஜ் முல்லர் மரிக்கும்போது அவர் விட்டுச்சென்ற லோக ஆஸ்தி எல்லாம் வெறும் 169 பவுன்கள், 9 ஷில்லிங், 4 பென்ஸ் மாத்திரமேதான். இதில் அவருடைய வீட்டு உபயோகப் பொருட்கள், புத்தகங்கள், மேஜை, நாற்காலி போன்ற மர சாமான்களும் அடங்கும். பணமாக அவர் வசம் இருந்ததெல்லாம் வெறும் 350 டாலர்கள் மாத்திரமேதான். ஆனால், தேவன் அவரது கரங்களின் மூலமாக 200 ஆண்டு காலங்களுக்கு முன்பாக உள்ள பண மதிப்பின்படி 40 கோடி ரூபாய்களை கடந்து செல்லப்பண்ணியிருந்தார். தனது பரம எஜமானரைப் போல முல்லரும் ஏழைக்கு ஏழையாக வாழ்ந்து ஏழையாகவே அவர் மரித்தார். முல்லரின் ஆழ்ந்த ஜெப ஜீவியம், அளவிடற்கரிய அவரது வேத வசன தாகம், மிகுந்த மனத்தாழ்மை, ஏழை அநாதைகள்பால் அவர் கொண்ட மட்டில்லா மனதுருக்கம், அவர்களுடைய இரட்சிப்பின் காரியத்தில் அவர் காண்பித்த வைராக்கியம், உலகில் எந்த ஒரு மனுஷனையும் சாராமல் கர்த்தர் ஒருவரையே துணை கொண்டு அவருக்காக நாம் எதையும் சாதித்துவிடலாம் என்ற அவருடைய அசைக்க முடியாத விசுவாசம் போன்ற பரிசுத்த குணாதிசயங்கள் உலகம் உள்ளவரை தேவ ஜனத்திற்கு என்றும் ஒளி வீசி நிற்கும். அல்லேலூயா.


 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM