பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்

பண்டிட் தர்ம் பிரகாஷ் சர்மா


"என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதவர்களாலே தேடப்பட்டேன், என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன், என் நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்" (ஏசாயா 65 : 1)

(மகாத்துமா காந்தி அடிகள், பண்டிதர் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி அம்மையார் போன்றவர்களுடன் நேரடி தொடர்புகள் கொண்டிருந்தவரும், சிறு பிராயத்தில் காந்தி அடிகளாரின் சபர்மதி ஆச்சிரமத்தில் வளர்ந்தவரும், சிறந்த சினிமா நட்சத்திரமாக ஜொலித்தவரும், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் மகனாகவும், கோடீஸ்வரனும் தலைமை பூஜாரியுமானவரின் ஏக புதல்வனாகவும் பிறந்த தர்ம் பிரகாஷ் ஷர்மா அவர்கள் உலக இரட்சகர் இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஆச்சரிய அற்புத வரலாறு. ராஜஸ்தான் மாநிலத்தின் முதன் மந்திரியாக வரக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தபோதினும் அதை எல்லாம் தன் ஆண்டவர் இயேசுவுக்காக நஷ்டமும் குப்பையுமாக உதறித் தள்ளினார். தர்ம் பிரகாஷ் இப்பொழுது ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புஷ்கர் என்ற பட்டணத்தில் வசிக்கின்றார்)

 

இருவரின் ஜெபங்கள்

"கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்" (மத்தேயு 7 : 7)

புஷ்கர் பட்டணத்தில் சூரிய அஸ்தமனத்தின் அந்திக் கருக்கல் நேரம். பட்டணம் முழுவதையும் புகையைப் போன்ற மூடுபனி மூடியிருந்தது. புஷ்கர் பட்டணத்தின் ஏரி ஒரு கருப்பு கம்பளம் போல் காணப்பட்டது. ஏரியைச் சுற்றியிருந்த வீடுகள் கரிய நிழல் உருவங்களாகக் காணப்பட்டன. அந்த வீடுகளின் சில ஜன்னல்களிலுருந்து மின் மினி போன்ற வெளிச்சம் ஏரியில் பட்டு பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஏரியைச் சுற்றியிருந்த அநேக இந்துக் கோயில்களிலிருந்து வித விதமான மணி ஓசை எழும்பிக் கொண்டிருந்தது. ஆம், அது மாலை வேளை பூஜைக்கான நேரம்.

புஷ்கர் ஏரியின் பிரதான படித்துறை அல்லது ஸ்நான கட்டிடம் கோகாட் என்று அழைக்கப்படுகின்றது. அதற்கு முன்பாக புஷ்கர் பட்டணத்திலுள்ள எல்லா கட்டிடங்களைக் காட்டிலும் உயரமான ஒரு கட்டிடம் உள்ளது. அந்தப் பட்டிணத்திலுள்ள யாவரையும் விட மிக முக்கியமானதொரு மனிதரின் வீடு அது. ஆம், அந்தவீடு பண்டிதர் சோகன்லால் ஷர்மா என்ற மிக முக்கிய தலைமை பூஜாரியின் வீடாகும்.

அந்தக் கட்டிடத்தின் மேல் மாடியில் பனி மூட்டம் சூழ்ந்த அந்த வேளையில் ஒரு இளம் பெண் தென் திசையில் இருந்த புஷ்கர் ஏரியைப் பார்த்து நின்று கொண்டிருக்கின்றாள். ஒரு கூட்டம் மக்கள் பிரதான ஏரிக்கரையிலுள்ள கோகாட் என்ற இடத்தில் தீபங்கள் ஏற்றி தீர்த்த பூஜைகள் செய்து ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பதை அந்தப் பெண் ஆர்வமாகக் கவனிக்கின்றாள். ஆரத்தி என்பது மனிதன் தெய்வத்தை தேடும் அவனது ஆன்மீக ஆவலைக் குறிப்பதாகும். முடிவற்ற காலாகாலங்களாக மனிதன் தேடிக் கொண்டிருக்கும் அவனது தேடுதலில் அவளுடைய உள்ளமும் முழுமையாக ஒன்றரக் கலந்திருந்தது. அவள் அந்தக் கூட்டத்தினருடன் புஷ்கர் ஏரிக்கரையில் அப்பொழுது நின்று கொண்டிராவிட்டாலும் அவளது ஆவி அந்தக் கூட்டத்தினருடன்தான் நிச்சயமாக இருந்தது. ஆரத்தி தீப ஒளி ஆராதனை முடிந்ததும் மக்கள் படிக்கட்டுகளில் ஏறி அப்படியே தங்கள் தங்கள் வீடுகளுக்குக் கலைந்து சென்றனர்.

இப்பொழுது அந்தப் பெண் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒரு பெரு மூச்சு விட்டாள். அந்த பெருமூச்சானது அவளது இருதயத்தின் அடித்தளத்திலிருந்து துயரத்தோடு எழுந்த பெருமூச்சாக இருந்தது. பின்னர் அவள் தரையிலே சம்மணம் போட்டு உட்கார்ந்து தனது நெற்றியை தாழ்த்தி தனது கரங்களில் வைத்துக் கொண்டாள். இந்த நிலையில் அவள் சற்று நீண்ட நேரம் இருந்தாள். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. தனது கண்ணீரை தனது பருத்தி ஆடையான சேலையில் துடைத்து விட்டு வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.

கொஞ்ச நேரத்திற்கு முன்பாக இருந்த மூடு பனி இப்பொழுது கொஞ்சம் கலைந்து சில நட்சத்திரங்கள் காணப்பட்டன. அந்தப் பெண் திரும்பவும் ஒரு பெரு மூச்சு விட்டதன் பின்னர் ஒருவருக்கொருவர் மெதுவாக காதுக்குள் பேசும் குரலில் "தகப்பனாகிய கடவுளே, நீர் எனது அருமை மகளை எடுத்துக் கொண்டீர். அதற்கப்பால் நீர் எனக்கு மற்றொரு குழந்தையைக் கொடுக்கவில்லை. நீர் நல்லவரும் நன்மை செய்கிறவருமாகிய கடவுள் என்பதை நான் அறிவேன். நீர் யாவையும் செய்யக்கூடிய சர்வ சக்திமான். நீர் எனக்கு ஒரு குமாரனைக் கொடுக்க மாட்டீரா? ஓ, கடவுளே நீர் எனக்கு ஒரு குமாரனைக் கொடுக்க மாட்டீரா" அந்தப் பெண் அத்துடன் நிறுத்திக் கொண்டு, தனது கண்ணீரைத் துடைத்துவிட்டு திரும்பவுமாக "ஓ கடவுளே, நீர் எனக்கு ஒரு மகனைக் கொடுக்கும் பட்சத்தில், அவனை நான் உமக்கே திரும்பவும் தந்துவிடுகின்றேன் என்று உறுதி அளிக்கின்றேன். எனது மகன் உமக்கும் இந்த தேசத்திற்கும் பணி செய்வான்.கடவுளே, தயவுசெய்து, தயவு செய்து நீர் எனக்கு ஒரு குமாரனைத் தாரும்" என்றாள்.

மேற்கண்ட ஜெபத்தை அந்தப் பெண் ஏறெடுத்துவிட்டு எந்த ஒரு சந்தடியும் செய்யாமல் அப்படியே அமைதலாக கொஞ்சம் நிமிடங்கள் வானத்தை அண்ணாந்து பார்த்த நிலையில் அமர்ந்திருந்தாள். வருடத்தின் இந்த நாட்களில் மேகங்கள் நிறைய இருக்கும். ஆண்டின் வறட்சியான பெப்ரவரி மாதம் அது. அதற்கப்பால் அவள் எழுந்து தனது வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டாள்.

 

ஒரு தேவ மனிதர் ஏறெடுத்த மற்றொரு ஜெபம்

மேற்கண்ட பெண் மாத்திரம் தனிமையில் தனது ஜெபத்தை ஏறெடுக்கவில்லை. அந்தப் பெண் அறியாத விதத்தில் மற்றொரு சமயத்தில், மற்றொரு மனிதர் அவள் ஜெபித்த இடத்திற்கு அருகாமையில் அவள் ஏறெடுத்த ஜெபத்திற்கு ஒப்பானதொரு ஜெபத்தை ஏறெடுத்தார். ஒருவரையொருவர் முன்பின் அறியாத அந்த இரண்டு மக்களின் ஜெபங்களும் ஒரே ஒரு காரியத்துக்காக என்பது நமக்கு மிகவும் ஆச்சரியமானதாக இருக்கின்றது.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆஜ்மீர் பட்டணம் வருடத்தின் நவம்பர் மாதம் குளிருக்கான அறிகுறி நன்றாகவே தென்படும். காலையிலும், மாலையிலும் இருக்கக்கூடிய குளிர் கொடிய பனிக் காலத்தின் வரவை முன் கூட்டியே தெரிவிக்கும் வகையில் அமைந்திருக்கும். எனினும், பகற் காலத்தில் சூரிய வெப்பம் கோடை காலத்தின் மத்திப நாட்களின் சுட்டெரிக்கும் வெப்பம் போலவே தகித்துக் கொண்டிருக்கும்.

அந்த நாட்கள் ஒன்றில் நடு மத்தியான நேரம் ஒன்றில் ஒரு டோங்கா வண்டி (ஒற்றைக் குதிரை இழுத்துச் செல்லும் வண்டி) ஆஜ்மீர் பட்டணத்திலிருந்து புஷ்கர் பட்டணத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. எந்த ஒரு மேக மூட்டமில்லாத ஆகாயத்தில் சூரியன் கடுமையாக எரித்துக் கொண்டிருந்தது. தாவரங்கள் எதுவும் இல்லாத வழுக்குப் பாறைகளும் பாலைவன மணற் பாதையும் சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. குதிரை தனது வழக்கமான நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்தபோதினும் வேளாவேளைகளில் கொடிய வெயிலின் கடுமை காரணமாக சற்றே களைத்து மெதுவாக நடந்து செல்லும். குதிரை வண்டிக்காரர் தனது சரீரம் முழுவதையும் வெயிலின் வெப்பத்திற்கு காண்பித்தவராக தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். அந்த வெயிலின் வெப்பத்தால் அவர் எந்த ஒரு கஷ்டமும் அனுபவிப்பவராகத் தெரியவில்லை. அவருடைய தலை சூரிய கதிர் வீச்சுகளைத் தாங்கிக் கொள்ளும் விதத்தில் மிகவும் பெரிய ராஜஸ்தானி கலர் தலைப்பாகையை தாங்கிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட கொடிய வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் விதத்திலேயே அது உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த டோங்காவில் அப்பொழுது சவாரி செய்து வந்து கொண்டிருந்த ஒரே ஒரு தனித்த பிரயாணி இளம் வாலிபன் என்றோ அல்லது நடுத்தர வயதுடையவன் என்றோ நாம் சொல்லுவதற்கில்லை. அந்த மனிதர் தனது தாடியை முழுமையாக சவரம் செய்திருந்தார். அவரது தாடையின் தோற்றம் அவர் நல்ல குணாதிசயங்கள் அல்லது வெறுமனே பிடிவாதம் செய்யும் குணமுடையவராக இருப்பவராக எடுத்துக் காண்பித்தது. அவரது தலை முடி கருமையாகவும், சுருள் சுருளாகவும் படர்ந்து கிடந்ததால் அவரது நெற்றி முழுமையாகத் தெரிந்தது. பால் போன்ற வெண்மையான சேட்டும், பேண்டும் Pants அவர் உடுத்திருந்தார். தனது கரங்கள் இரண்டையும் தனது முழங்கால்களில் வைத்தவராக தனக்கு முன்பாக மேலே பார்த்துக் கொண்டிருப்பவராக அவர் காணப்பட்டார். வெளி உலகின் காரியங்கள் எதையும் அவர் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டு வருபவராக காணப்படாமல் மிகவும் ஆழமான தியானத்தில் மூழ்கியிருப்பவராக இருந்தார். அவ்வப்போது அவர் ஏறி வந்த குதிரை வண்டி ரஸ்தாவின் மேடு பள்ளம் காரணமாக மேலும் கீழுமாக ஏறி இறங்கிச் செல்லும் போது குதிரை வண்டிக்காரர் தனக்குள்ளாக சப்தமாக முணுமுணுத்துக் கொண்டும் அவ்வப்போது தனது குதிரையோடு பேசிக்கொண்டு வருபவராகவும் இருந்தார். ஆனால், தன்னளவில் எந்த ஒரு சம்பாஷணையையும் விரும்பாமல் தன் மட்டாக மிகவும் ஆழ்ந்த தியான நிலையில் வந்து கொண்டிருந்த தனது பிரயாணியிடம் எந்த ஒரு பேச்சும் கொடுப்பதை வண்டிக்காரர் விரும்பவில்லை.

ரஸ்தாவில் போக்குவரத்து மிகவும் குறைவு. ஏதோ சமயாசமயம் ஒரு குதிரை வண்டி நமது வண்டியை எதிர் திசையிலிருந்து கடந்து செல்லும் அல்லது விரைவாக வரும் ஒரு வண்டி இந்த வண்டியை பின்னாலிருந்து வந்து முந்திக் கொண்டுச் செல்லும். மெதுவாகச் சென்று கொண்டிருக்கும் எருமை மாட்டு வண்டிகளை அவ்வப்போது நமது குதிரை வண்டி கடந்து சென்று கொண்டிருந்தது. பொதுவாக ஜனங்கள் வருடத்தின் அந்த நாட்களில் அதிகமாக பிரயாணப்படமாட்டார்கள்.

சில வாரங்களுக்கு முன்பாக இந்த ரஸ்தாவானது எக்காலத்தும் இல்லாத விதத்தில் மக்கள் கூட்டத்தாலும் வாகனங்களின் போக்குவரத்தாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஆம் அந்தச் சமயத்தில் புஷ்கர் பட்டணத்தில் உலகப்பிரசித்தி பெற்ற ஒட்டகச் சந்தை நடந்தது. பெருந்திரளான இந்து யாத்ரீகர்களும், சுற்றுலா பயணிகளும், ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ளும் விதத்தில் இரவும் பகலும் கால் நடையாகவும், குதிரை வண்டிகள், எருது வண்டிகளும் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போதைக்கு அங்கு யாரும் இல்லை.

உண்மையில் குதிரை வண்டியில் தனித்த பயணியாக புஷ்கர் பட்டணத்திற்கு வந்து கொண்டிருந்த மனிதர் எந்த ஒரு முன் ஒழுங்கின்படி இந்தப் பிரயாணத்தை மேற்கொள்ளவில்லை. தான் கலந்து கொள்ள வந்த ஒரு கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டபடியால் எதிர்பாராதவிதமாக அவர் இந்த பயணத்தை திடீரென எடுத்திருந்தார். அப்படி நடக்கும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அது ஒரு அசாதாரணமான நிகழ்வாகும். வட இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து "இராஜஸ்தான் கிறிஸ்தவ கன்வென்ஷன்" என்ற ஒரு புகழ்பெற்ற கூட்டத்தை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். வட இந்தியாவிலுள்ள ஆறு திருமண்டலங்களிலுள்ள 6 பிஷப்மார்கள் அந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடி வரக்கூடிய கூட்டம் அது. 1936 ஆம் ஆண்டு அது. அந்த பிஷப்மார்கள் எல்லாரும் அந்த ஆண்டில் வைராக்கியமான சீக்கிய மார்க்கத்திலிருந்து இரட்சகர் இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட சகோதரன் பக்தசிங் அவர்களை தங்கள் கன்வென்ஷன் கூட்டங்களில் பேசும்படியாக அழைத்திருந்தனர்.

சகோதரன் பக்தசிங் அவர்களின் முதலாவது பிரசங்கமே அந்த பிஷப்மார்களுக்கு பிடித்தமானதாக இல்லை. இடிமுழக்கமாக பேசும் அந்தப் பிரசங்கியார் கிறிஸ்தவர்களின் மாய்மாலத்தை மேடையில் கடுமையாகச் சாடினார். "அவர்கள் தங்களை கிறிஸ்து இரட்சகரின் சீடர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அவருடைய கட்டளைகளின்படி அவர்கள் வாழ்வதில்லை. இந்தவிதமான கிறிஸ்தவ வாழ்க்கையை தேவன் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளுவதில்லை" என்றார்.

சகோதரன் பக்தசிங் அவர்களின் இப்படிப்பட்ட பகீரங்கமான குற்றச்சாட்டுகளை பொறுத்துக்கொள்ள இயலாத பிஷப்மார்கள் கொந்தளித்து எழுந்து திரும்பவும் ஒரு தடவை அவருக்கு பேச சந்தர்ப்பம் கொடாதவிதத்தில் அவரை தடுத்து நிறுத்திவிட்டனர். இப்படியாக தனது அடுத்த பேச்சுக்கான சந்தர்ப்பம் பறிக்கப்பட்டுவிட்டதை அவர் கண்டுகொண்டார். அவர் சத்தியத்தைத்தான் பிரசங்கித்தார். எனினும் அவர் தொடர்ந்து சத்தியத்தை பேசவிடாமல் தடுக்கப்பட்டுவிட்டதைக் குறித்து மன வேதனையடைந்தார். இவ்விதமாக எதிர்பாராதவிதமாக அவருக்கு நல்லதொரு சுதந்திரமான வேளை கிடைத்தது. தனது மனதை நன்கு திடப்படுத்திக் கொண்டு ஆஜ்மீர் பட்டணத்துக்கு அருகிலுள்ள புஷ்கர் பட்டணத்தை பார்வையிட தீர்மானித்தார். இந்த புகழ்பெற்ற இந்து மக்களின் புண்ணிய ஸ்தலத்தைக் குறித்து அவர் அதிகமாகக் கேள்விப்பட்டிருந்தார்.

அவர் கடைசியாக புஷ்கர் பட்டணத்தை வந்து சேர்ந்ததும் பட்டணத்தின் சந்தைப் பகுதி பக்கம் குதிரை வண்டி வந்து நின்றது. குதிரை வண்டிக்காரருக்குக் கொடுக்க வேண்டிய வாடகையைக் கொடுத்தார். அது புறப்பட்டுச் சென்று விட்டது. முதன் முறையாக அந்த இடத்திற்கு வந்த அவர் தன்னைச் சுற்றியிருந்த வீடுகளையும், கடைகளையும் பார்த்துக் கொண்டு சென்றார். கடைகள் திறந்திருந்த போதினும் ஆள் அரவமில்லாமல் அவைகள் வெறிச்சோடி கிடந்தன. இங்கும் அங்குமாக சில ஒட்டகங்கள் படுத்துக் கிடந்தன. சில ஒட்டகங்கள் தங்களுடன் இணைத்துக் கட்டப்பட்டிருந்த வண்டியுடன் நிழலில் நின்று கொண்டு அசைபோட்டுக் கொண்டிருந்தன. சில சமயங்களில் ஒரு காளை மாடு ஒரு முழு தெருவுக்குமே தான்தான் ராஜா என்பதுபோன்ற பாணியில் கெம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தது.

வெள்ளை ஆடைகளை அணிந்திருந்த அந்த மனிதர் நடந்து கொண்டிருந்தார். காவி உடை அணிந்து அந்த இடத்தில் வாழ்ந்த சாதுக்களின் தோற்றத்திற்கும் இந்த மனிதரின் வெண் வஸ்திரத்திற்கும் பெருத்த வித்தியாசம் தென்பட்டது. அவர் நடக்க நடக்க அவருடைய கண்கள் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்களை கூர்மையாகக் கவனித்துக் கொண்டு வந்தது. அந்தக்காட்சிகளால் அவர் உள்ளம் மிகவும் துயரம் அடைவதாக இருந்தபோதினும் தனது பார்வையை விலக்காமல் அப்படியே சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு திருப்பத்திற்கு வந்ததற்கப்பால் கீழே இருந்த புஷ்கர் ஏரிக்கு இறங்கிச் சென்றார். "கவ்காட்" என்ற இடத்தை அவர் வந்து சேர்ந்ததும் அப்படியே கொஞ்ச நேரம் அங்கு நின்று கொண்டிருந்தார். இந்த கவ்காட் என்ற இடம் புஷ்கர் ஏரியின் மிகவும் பெரியதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றுமாகும். அநேக சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்து இங்கு ஸ்நானம் செய்வார்கள். புஷ்கர் ஏரியின் நடுவில் பிரம்ம தேவனின் ஒரு சிறிய கோயில் இருக்கின்றது. பூர்வ காலத்தில் அவர் அந்த இடத்தில்தான் யாகம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

அந்த பிரயாணி ஏரியை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து பின்னர் சில படிக்கட்டுகள் கீழே இறங்கிச் சென்று நன்றாகக் குனிந்து தண்ணீரை அள்ளி தனது கரங்களையும் முகத்தையும் கழுவிய பின்னர் தனது கால்சட்டைப் பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து கரங்களையும் முகத்தையும் துடைத்துக் கொண்டார்.

அதற்கப்பால், அவர் ஒரு ஆச்சரியமான காரியத்தைச் செய்தார். பொதுவாக, இந்து யாத்ரீகர்கள் யாவரும் அந்த இடத்திற்குச் சென்றதும் ஒரு புனித நீராடுவார்கள். ஆனால் இந்த மனிதர் ஏரி நீருக்கு சற்று மேலுள்ள காய்ந்த படிக்கட்டில் நெடு முழங்காலூன்றி நின்று தனது கரங்களை புஷ்கர் பட்டணத்திற்கு நேராக ஏறெடுத்து சப்தமாக "ஓ என் பரலோகத் தந்தையே, எனது ஜெபத்தைக் கேட்டருளும்" என்றார் அவர். "தேவனே இந்த இடத்தை நோக்கிப் பாரும். இந்தப்பட்டணத்திலே 400 கோயில்கள் இருக்கின்றன. ஓ என் சர்வ வல்ல தேவனே, இந்த கோயில்களின் நடுவிலிருந்து உமக்கென்று ஒரு மனிதரை நீர் எழுப்பமாட்டீரா? தேவனே, தயவாக இந்தப் பட்டணத்திலிருந்து உமக்கென்று ஒரு மனிதனை எழுப்பும். புஷ்கர் பட்டணத்திலிருந்து உமக்கு ஊழியம் செய்யும் ஒரு மகனை நீர் எழுப்பும்"

அந்த மனிதர் அந்த இடத்தில் இன்னும் தனது முழங்கால்களிலேயே நின்று தனது தலையை தாழ்த்தி தனது உள்ளமுருகிய மன்றாட்டிற்கு கர்த்தரிடமிருந்து ஒரு பதிலை பெற்றுக்கொள்ளும் விதமாக காத்துக் கொண்டிருந்தார். பின்னர் அவர் தனது முழங்கால்களிலிருந்து மெதுவாக எழுந்து தனது கால்களில் செருப்புகளை போட்டுக் கொண்டு புஷ்கர் ஏரியிலிருந்து ஏரி தெருவை நோக்கி வந்தார்.

மேலே கண்ட இருவர் ஏறெடுத்த ஜெபங்களுக்கு சுமார் ஒரு வருடம் சென்ற பின்னர் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி 1937 ஆம் ஆண்டு பண்டிதர் சோகன்லால் சர்மா அவர்களுக்கும் கியானேஷ்வரி தேவி அம்மையாருக்கும் ஒரு மகன் பிறந்தான். அந்தப் பாலகன் பிறக்கும்போது கணவனும், மனைவியும் சிறைச்சாலையிலேயே இருந்தனர். பிள்ளையின் தாய் நிறை கர்ப்பிணியாக இருந்தபோதினும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இந்திய அரசாங்க அதிகாரிகள் அந்தப் பெண் தனது குழந்தையை வெளியில் பெற்றுக் கொள்ளக் கூட அனுமதி மறுத்துவிட்டனர். காரணம், அவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீவிரமான விடுதலைப் போராட்ட வீரர். அதுமட்டுமல்ல, அரசாங்கம் விலக்கி வைத்திருந்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டவர்கள். இவ்விதமாக அந்தப் பெண்ணின் ஒரே ஏக மைந்தனின் பிறப்பு உத்திர பிரதேசத்திலுள்ள ஃபத்தேபூர் சிறைக்கூடமாக அமைந்தது. அவர்கள் அந்தப் பாலகனுக்கு தர்ம் பிரகாஷ் என்று பெயரிட்டனர்.

 

மானிட வாழ்வின் நிச்சயமான உண்மைகளை சந்தித்தல்

தர்ம் பிரகாஷ் சிறுவனாக இருந்த நாட்களில் ஒரு நாள் இருவர் அவனது வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் டாக்டர் மற்றொருவர் மருத்துவ நர்ஸ் பெண். அவர்களைக் கண்டதும் தர்ம் பயத்தால் அலறி அடித்துக் கொண்டு தனது தாயினிடத்தில் ஓடினான். மருத்துவர்கள், நர்ஸ்கள் என்றால் தர்ம் பிரகாஷ்க்கு மிகவும் நடுக்கமாகும். காரணம், ஒரு தடவை அவர்கள் அவனுக்கு வைசூரி நோய்க்காக பலமான தடுப்பு ஊசி போட்டிருக்கின்றனர். ஊசி குத்தின இடம் விரைவாக குணமடையாமல் நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டபடியால் அவன் அதிகமாக கஷ்டமடைந்ததுண்டு. அதிலிருந்து மருத்துவத்தின் மேல் நம்பிக்கை போனதுடன் அவர்களைக் கண்டால் அதிகமாக பயமும் அடைவான்.

மகனின் அலறும் குரலைக் கேட்டு அவனது தாயார் வெளியே வந்தார்கள். அவர்கள் வரவும் டாக்டரும், நர்சும் வாசல் கதவண்டை வந்து சேர்ந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் அவன் அலறிக்கொண்டு தாயின் முதுகுப்பக்கம் சென்று சேலையால் தன்னை மூடி மறைத்துக் கொண்டான். "அம்மா, அம்மா அவர்கள் என்னைப் பிடித்துக் கொள்ள விட்டுவிடாதேயுங்கள். அவர்கள் என் கையை அறுத்து மருந்து வைத்துவிடுவார்கள்" என்றான். அவனுடைய தாய் சிரித்துக் கொண்டே "அவர்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள்" என்று கூறிக்கொண்டே ஒரு நாணயத்தை எடுத்து அவர்களுக்கு கொடுக்கவும் அவர்கள் அம்மையாருக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். அப்பொழுதுதான் தர்ம் பிரகாஷ்க்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

அவர்கள் கடந்து சென்றதும் தாயார் தனது மகனிடம் காரியத்தை விளக்கிக்கூற ஆரம்பித்தார்கள். "மகனே, அவர்கள் உண்மையில் டாக்டரும், நர்சும் அல்ல. மற்றவர்கள் அவர்களை அந்தக் கோலத்தில் பார்க்கும் பொருட்டாக அவர்கள் தங்களை அலங்கரித்திருக்கின்றனர். அவர்கள் நாடோடிகள், பாசாங்கு செய்து நடிக்கின்றனர்"

"எதற்காக?" தர்ம் தாயாரைக் கேட்டான்.

"வேடிக்கைக்காவும், நம்மை சிரிக்க வைப்பதற்காகவும், அத்துடன் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவும் அப்படிச் செய்கின்றனர்" என்று பதிலளித்தார்கள்.

"ஆனால் அவர்கள் என்னை சிரிக்க வைப்பதற்குப் பதிலாக என்னை பயந்து நடுங்க அல்லவா வைத்து விட்டார்கள்"

"அவர்கள் பாசாங்கு செய்து நடிக்கின்றார்கள் என்பது உனக்குத் தெரியாததால் நீ பயந்தாய். உண்மை உனக்குத் தெரிந்திருந்தால் நீயும் என்னுடன் சேர்ந்து சிரித்திருப்பாய்" என்று அழகாக பதிலளித்தார்கள்.

."இந்த உலகத்திலுள்ள மக்கள் எல்லாரும் இப்படித்தான் நடிப்பார்களா அம்மா?" என்றான் தர்ம்.

இந்த வேளையில் தாயார் தனக்குள்ளாக மிகவும் உஷாராகிக் கொண்டார்கள். பளிங்குத் தரையில் கிடந்த பஞ்சு தலையணையில் உட்கார்ந்தவர்களாக தனது சின்ன மகனை தன்னண்டை இழுத்துக் கொண்டு "மகனே எல்லாரும் அல்ல, ஆனால், நிறைய பேர்கள் ஏமாற்றவே செய்கின்றனர். அவர்கள் வேடிக்கை விளையாட்டுக்காக பாசாங்கு செய்யாமல் உண்மையில் மற்றவர்களை அபகரிப்பதற்காகச் செய்கின்றனர். இந்த பாசாங்குக்காரர்கள் மற்றவர்கள் தங்களது உண்மை நிலை என்ன என்பதை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அவ்விதமாக வேஷம் போட்டு நடந்து கொள்ளுகின்றனர். இந்த ஏமாற்றுக்காரர்கள் சில சமயங்களில் மற்றவர்களுக்கு பெருந் தீங்கு செய்கின்றவர்களாக இருக்கின்றனர்" என்று சொல்லிக் கொண்டே "உண்மை என்று ஒன்று எப்படி இருக்கின்றதோ அதேபோல பொய் என்றும் ஒன்று இருக்கவே இருக்கின்றது. முழுமையான உண்மைகளும் முழுமையான போலிகளும் கட்டாயம் இருக்கின்றது" என்றார்கள் தர்ம் பிரகாஷின் தாயார்.

தர்ம் பிரகாஷ் சுமார் 5 வயது பாலகனாக இருக்கும்போது அவனுடைய தந்தை சிறைக்கூடத்திலிருந்து விடுதலைபெற்று வீடு திரும்பினார்கள். அவன் வளர வளர பல காரியங்களைக் குறித்து குறிப்பாக மனோ தத்துவ ரீதியாக கேள்விகள் கேட்கும் அவனுடைய ஆர்வம் விடவே இல்லை. அவனுடைய வயதில் இருக்கும் எந்த ஒரு குழந்தையும் கேட்க இயலாத ஆச்சரியமான கேள்விகளை அவன் கேட்பான். தனது புதல்வனின் மார்க்க சம்பந்தமான தாகத்தைக் கண்ட அவனது தந்தை சோகன்லால் தனது மகன் 7 வயது சிறுவனாக இருந்த நாட்களிலிருந்து மத சம்பந்தமான பாடங்களை அவனுக்குக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.

மார்க்க சம்பந்தமாக தர்ம் பிரகாஷ் தனது தந்தையிடமிருந்து கற்றுக் கொண்ட முதல் பாடம் எல்லா மதங்களும் ஒன்றுதான் என்பதே. மதங்களின் நம்பிக்கைகளும், அவைகளின் சடங்குகளும் வித்தியாசமாக இருந்தபோதினும் அவைகள் எல்லாம் ஜீவனுள்ள கடவுளின் வல்லமையை தேடிக்கொண்டிருப்பதுதான். பண்டிதர் சோகன்லால் எல்லா மதங்களையும் ஒன்றாக எண்ணினார். அந்த மதங்களின் கடவுளர்கள் யாராக இருந்தாலும் கடைசியில் அனைத்து மார்க்கங்களும் ஒன்றாகச் சேர்ந்துவிடும் என்ற கொள்கையை அவர் கடைப்பிடித்தார்.

இந்த வழியில் எல்லா மக்களும் மத வழிபாட்டில் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் தாங்கள் விரும்புகின்ற தெய்வங்களை சுயாதீனமாக வணங்கலாம் என்றும் பகவத்கீதையும் எல்லா மதங்களின் ஒருமைப்பாட்டையே வலியுறுத்துகின்றது என்றும் விளக்கினார். அதின் காரணமாக அவர் எந்த ஒரு ஜாதி பாகுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் நடந்து கொண்டார். அதின் காரணமாக கீழ் ஜாதிக்காரர்களுடனும், தோட்டிகளுடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார். தன்னுடைய தந்தையின் நடபடிகளை கவனித்த தர்ம் பின் நாட்களில் அவரைப் போல மக்களுக்கு சேவை செய்யும் ஆசையைக் கொண்டான்.

தான் பெரியவனாக வளரும் போது மக்களுக்கு தனது தந்தைiயைப் போல தொண்டு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துக் கொண்டு தர்ம் அந்தப் பட்டணத்திலுள்ள கோபிநாத்ஜி என்ற வாலிபனைப் போல யாவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் மனிதனாகவும் மாறவேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டான்.

கோபிநாத்ஜி நல்ல உயரமான, அழகான, புத்திசாலியான வாலிபனாவான். வேஷ்டி, நீண்ட சட்டை மற்றும் தலைப்பாகையை அவன் அணிந்திருப்பான். அவன் நன்றாகப் பாடுவதுடன் நடனமும் ஆடுவான். அவன் ஒரு நடிகனும் கூடத்தான். சின்னஞ் சிறார்களைக் கவர நன்றாக பாடி நடனம் பண்ணுவான். அவர்களை தனது மடியின் மீதும் அமரச் செய்வான். புஷ்கர் பட்டணத்தில் ஏதாவது நாடகம் அரங்கேற்கப்பட்டால் கோபிநாத்ஜிதான் அதின் பிரதானமான கதா பாத்திரமாக நடிப்பான். யாவரும் அவனது நடிப்பைப் பார்த்து பிரமிப்படைவார்கள். பட்டணத்திலுள்ள குழந்தைகள் யாவரும் அவனை நேசிப்பார்கள். அவன்தான் நமது தர்ம் பிராகாஷின் தலைவன். அதுமட்டுமல்ல அவனுடைய வாழ்வின் இலட்சியமுமாக இருந்து வந்தான். தான் பெரியவனாக வளர்ந்து வரும்போது அவனைப்போல மாற வேண்டும் என்ற தணியாத தாகமும் கொண்டிருந்தான்.

ஒரு நாள் பிற்பகலில் தர்ம் தனது வீட்டின் மூன்றாம் மாடியிலிருந்து புஷ்கர் ஏரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே நதியின் படிக்கட்டுத் துறையில் ஒரு வாலிபன் படுத்துக்கிடந்து இரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி கொஞ்சம் பேர்கள் நின்று கொண்டிருந்தனர். அதைப்பார்த்த தர்ம் "அம்மா, அதோ அங்கு என்ன நடக்கின்றது என்று பாருங்கள், கோபிநாத்ஜி இரத்தமாக வாந்தி பண்ணிக் கொண்டிருக்கின்றார்" என்று கூப்பிட்டான். அதைப் பார்த்த அவனது தாயார் வீட்டை விட்டு தெருவுக்குச் சென்றார்கள். தர்ம் தொடர்ந்து தெருவில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அநேகர் தெருவில் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். பலர் அங்கும் இங்கும் சிதறி ஓடிக் கொண்டிருந்தனர். இறுதியில், சற்று அதிகமான நேரத்திற்குப் பின்னர் கோபிநாத்ஜியை அவர்கள் தூக்கிக் கொண்டு சென்றனர்.

தர்மின் தாயார் வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள். "கோபிநாத்ஜி மரித்துப் போனார்" என்று சின்ன மகனிடம் சொன்னார்கள். மரணத்தைக் குறித்த காரியத்தை தர்ம் வாழ்வின் முதன் முறையாக இப்பொழுதுதான் கேள்விப்படுகின்றான். மரணம் என்பது பயங்கரமானது. அது வாழ்வின் நிச்சயமான முடிவானது என்பதை அவன் திட்டமாக உணர்ந்து கொண்டான். "மரணம் என்றால் என்ன? இனி அவருக்கு என்ன நடக்கும்?" என்று தர்ம் தாயாரைக் கேட்டான்.

"அவர்கள் அவரை நெருப்பில் வைத்து எரிப்பதற்காக கொண்டு சென்று அவரை அப்படியே எரித்துச் சாம்பலாக்கிவிடுவார்கள்"

அந்த வார்த்தைகளைக் கேட்ட தர்ம் பயத்தால் நடுநடுங்கிப் போனான். "ஐயோ அவருக்கு கடுமையான வேதனையாக அல்லவா இருக்கும்!" என்று அவன் அழுதான்.

"அவருக்கு எந்த ஒரு வலி உணர்வே இருக்காது, காரணம் அவர் உயிரோடு இருக்கவில்லையே" என்று தாயார் பொறுமையாகச் சொன்னார்கள்.

"அப்படியானால் இனி யார் நமக்காக வந்து பாடல்கள் பாடி நடனம் பண்ண வருவார்கள். நாடகத்தில் வந்து இனி யார் நடிப்பார்கள்?" என்று அவன் திரும்பவும் தாயைக் கேட்டான்.

"அவர் அந்தக் காரியங்களை எல்லாம் இனி செய்ய முடியாது, அவர் இனிமேல் திரும்பி வரப்போவதுமில்லை" என்று மிகுந்த துக்கத்துடன் தலையைத் தாழ்த்திக் கூறினார்கள்.

அந்தச் சின்னஞ் சிறிய பாலகன் மரணத்தைக் குறித்த எண்ணத்தால் முழுமையாக இழுக்கப்பட்டான். "செத்துவிட்டார்! அவரால் இனி பாடவோ, நடனம் பண்ணவோ கூடாது. அவர் இனி திரும்பி வர மாட்டார். அவர்கள் அவரை நெருப்பில் வைத்து எரிப்பார்கள். ஆ, எத்தனை பயங்கரமான காரியம்! கோபிநாத்ஜி ஏன் சாக வேண்டும்? அப்படியானால் மற்றவர்களும் அவரைப் போல சாவார்களோ?!" என்று தர்ம் தனக்குள்ளாக எண்ணிக் கொண்டான்.

அதற்கப்பால் ஒரு திகிலூட்டும் எண்ணம் அவனது உள்ளத்தைக் கடந்து சென்றது. அந்த திடகாத்திரமான கோபிநாத்ஜி மரணம் அடைவாரானால் தர்ம் பிரகாசும் கூட மரித்தே ஆக வேண்டும். அந்த எண்ணம் அவனை நடுநடுங்கப் பண்ணியது. ஆனால், அவன் மரிக்க விரும்பவில்லை.

"அம்மா, அப்படியானால் நானும் கூட சாக வேண்டுமா?" என்று அவன் தனது தாயைப்பார்த்து துக்கம் நிறைந்தவனாகக் கேட்டான்.

தர்ம் பிரகாஷின் தாயார் தனது கரத்தை அவனது வாயில் வைத்து மறைத்து "இந்தவித வார்த்தைகளை நீ இனி பேசக்கூடாது" என்று கட்டளை கொடுத்து கடிந்து கொண்டார்கள். எனினும் அந்தக் கேள்விகள் தொடர்ந்து அவனுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தன. மரணம் என்றால் என்ன? மரணத்திற்குப் பின்னால் சம்பவிப்பது என்ன? மக்கள் ஏன் மரிக்க வேண்டும்?

மரணம் தர்ம் பிரகாசையும் கூட பின் தொடர்ந்து சென்று அநேக தடவைகளில் அவனை அநேகமாக எட்டிப் பிடித்துக் கொள்ளும் அளவிற்கு நெருங்கி வந்த நேரங்கள் இருந்தன. ஆனால், தேவனுடைய பாதுகாக்கும் அன்பின் கரங்கள் அதி அற்புதமாக அவரை பாதுகாத்துக் கொண்டன.

அவன் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த வேளை சரியான மருந்து, சரியான நேரத்தில் சென்னையிலிருந்து விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு அவன் அற்புதமாகப் பாதுகாக்கப்பட்டான்.

 

முதலையின் வாயிலிருந்து தர்ம் பிரகாசை பிடுங்கி
தூக்கி வீசிய தேவ கரங்கள்

தர்ம் 9 வயது பையனாக இருக்கும் போது அவனுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு புஷ்கர் ஏரியில் நீந்தி விளையாடச் சென்றான். அந்த ஏரியில் குளிப்பதை அநேகர் விட்டுவிட்டனர். காரணம், அந்த ஏரியில் முதலைகள் ஏராளமாக உள்ளன. அந்த ஏரியில் மொத்தம் 200 முதலைகள் கிடப்பதாகச் சொல்லப்படுகின்றது. அந்த முதலைகள் எல்லாம் நதிக் கரையில் வெயில் காய்ந்து கொண்டிருப்பதை தர்ம் உடைய நண்பர்கள் பார்த்தனர். அதுமட்டுமல்ல, முதலைகள் 200 ம் வெளியிலேயே இருப்பதை அவர்கள் எண்ணித் தொகையிட்டு நிச்சயப்படுத்திக் கொண்டனர். அதின் காரணமாக அவர்கள் நதியில் நீந்திக் குளிப்பது பாதுகாப்பானது என்று முழுமையாக நம்பினார்கள். அதைத் தொடர்ந்து தைரியமாக நீரில் குதித்தார்கள். ஆனால், அவர்களுடைய கணக்கு முற்றுமாக தப்பாக இருந்தது. ஒரு முதலை திடீரென தர்ம் உடைய காலை தனது கூரிய பற்களால் கடித்து தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டு சென்றது. தர்ம் தன்னாலானமட்டும் எவ்வளவோ போராடிப் பார்த்தாலும் முதலை தன்னுடைய பிடியைத் தளர்த்தாமல் தண்ணீரின் ஆழத்துக்குள் இழுத்துக் கொண்டு சென்றது. உண்மையில் அது ஒரு முழுமையாக முடிந்த கதைதான். இந்த மரண வேளையில் தர்ம் பிரகாஷ் பார்க்கக்கூடாத கரங்களால் தான் திடீரென முதலையின் வாயிலிருந்து பிடுங்கப்பட்டுத் தூக்கிச் சுமந்து கொண்டு செல்லப்படுவதை ஆச்சரியத்துடன் தனக்குள் உணர்ந்தான்.

அவன் தனது கண்களை திறந்து பார்த்தபோது நதியின் படித்துறையில் மிகுதியாக இரத்தம் வடிந்து கொண்டிருந்த நிலையில் கிடப்பதைக் கண்டான். அவனுடைய நண்பர்கள் அவனைச் சுற்றிலும் துயரத்தோடு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் விரைந்தோடி அவனது பெற்றோரிடம் சொல்லவே அவர்கள் அவனை மருத்தவமனைக்கு உடனடியாக எடுத்துக் கொண்டு சென்றனர். முதலையின் கோரப் பற்கள் கடித்த இடம் இன்றும் வலுவான தழும்புகளாக அவருடைய காலில் உள்ளன. தர்ம் பிரகாஷ் ஏரியிலிருந்து கரைக்கு தூக்கி வீசப்பட்டதை அவனுடைய உடன் நண்பர்கள் தங்கள் கண்களால் பார்த்ததாக மக்களிடம் கூறினார்கள். உண்மையோ உண்மைதான், தேவனுடைய கரங்கள் அவனை முதலையின் வாயிலிருந்து பிடுங்கி எடுத்து கரையில் கொண்டு போட்டிருந்தது.

 

சிங்கங்களின் வாயிலிருந்து காப்பாற்றப்பட்டது

தர்ம் பிரகாஷ் உயர்நிலை பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் விளையாட்டுகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் மிகவும் விரும்புவான். அவன் ஒரு நல்ல ஓட்டக்காரன். தனது விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளும் பொருட்டாக அவன் அதிகாலை எழுந்து பயிற்சி செய்வது வழக்கம். தனது ஓட்ட தூரத்தை அவன் நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு வந்தான். இப்படியாக அவன் ஒரே தடவையில் 4 கி.மீ. தொலைவு ஓடித் திரும்பி விடுவான்.

ஒரு நாள் அவன் தனது வழக்கமான ஓட்டத்தை ஓடினான். ஆஜ்மீர் பட்டணத்திற்கும் புஷ்கர் பட்டணத்திற்கும் இடையிலான ஜனசஞ்சாரமற்ற காட்டுக்குள் அவன் வந்து சேர்ந்தான். அதிகாலையின் இருள் இன்னும் முழுமையாக மூடியிருந்தது. அவன் சென்ற வழியில் இருந்த பெரிய மரங்கள் அந்த இருளை இன்னும் இருளாக மாற்றிக் கொண்டிருந்தது. அந்த வேளையில் அவன் தான் ஓடிக் கொண்டிருந்த ரஸ்தாவின் இரண்டு பக்கங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு சிங்கங்கள் படுத்திருப்பதை மிகுந்த நடுக்கத்துடன் கண்டான். அவன் ஓடி வருவதை அந்தச் சிங்கங்கள் தங்கள் முகத்தைத் திருப்பிப் பார்த்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வது என்று அவனுக்கு ஒன்றும் ஓடவில்லை. சிங்கங்களைக் கண்டு பயந்து பின்னால் ஓடினால் நொடிப் பொழுதில் அவைகள் துரத்தி ஓடி வந்து அவனைக் கவ்விப் பிடித்தக் கொள்ளும்.

எனவே அவன் சிங்கங்களுக்கு நேராக ஓடுவது என்று தீர்மானித்தான். ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? ஆனால் அவன் அஞ்சவில்லை. சிங்கங்கள் பயங்கரமானவைகள் என்பது அவனுக்குத் தெரியும். எனினும் அவன் பயமின்றிச் சென்றான். அவன் அவைகளைக் கடந்து ஓடுகையில் பாதையின் இரு பக்கங்களிலும் அவைகள் படுத்தவண்ணமாகவே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் அவைகள் சற்றும் அசையவே இல்லை. அவன் பாதுகாக்கப்பட்டான்.

 

விமான விபத்திலிருந்து தப்பினது

மிகவும் பிந்திய நாட்களில் தர்ம் பிரகாஷ் பம்பாயிலிருந்து கல்க்கத்தாவுக்கு விமானத்தில் பிரயாணம் செய்த சமயம் ஒன்றில் அவர் ஏறிச் சென்ற விமானத்தின் ஒரு என்ஜின் முற்றுமாக செயலிழந்தது. அதை அறிந்த விமான ஓட்டி பயணிகள் தங்களைக் காத்துக் கொள்ளும்படியாக பாதுகாப்பு பெல்ட்டுகளை மாட்டிக் கொள்ளும்படியாக கட்டளை கொடுத்தார். சற்று நேரத்தில் இரண்டாவது என்ஜினும் நின்று விட்டது. விமானத்திலிருந்த அனைத்துப் பயணிகளும் பயத்தால் அலறினார்கள். ஆனால், தர்ம் அமைதியாக இருந்தார். தன்னுடைய உள்ளத்தில் விவரிக்க முடியாத ஒரு நம்பிக்கை இருந்ததால் தான் பாதுகாப்பாகப் போய் தரை இறங்குவோம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதின் காரணமாக அவர் தன்னோடிருந்த மற்ற பயணிகளும் பயமில்லாமல் இருக்கும்படியாக அவர்களைக் கேட்டுக் கொண்டார். அதையடுத்து திடீரென அந்த விமானத்தின் இரண்டு என்ஜின்களும் வழக்கம்போல நன்கு வேலை செய்ய ஆரம்பித்து பாதுகாப்பாக தரை இறங்கியது.

 

எரிந்து கொண்டிருந்த காரில் திறந்து கொண்ட கதவு

ஒரு சமயம் தர்ம் பிரகாஷ் கல்க்கத்தா பட்டணத்திலிருந்து ரவீந்திரநாத் தாகூர் நிறுவிய சாந்தி நிகேதன் என்ற இடத்திற்கு காரை தானே ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு மலைப்பாதையான வழியில் சென்று கொண்டிருந்த சமயம் சில எருமை மாடுகள் சற்றும் எதிர்பாராதவிதமாக ரோட்டின் மையப் பகுதிக்கு திடீரென வந்துவிட்டன. அதைக்கண்ட அவர் தனது காரை உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தவே அது நிலை தடுமாறி சில குட்டிகரணங்கள் போட்டு கெடு பள்ளத்தில் விழுந்தது. காரின் பெட்ரோல் டாங்கு வெடித்து கார் முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. காரின் கதவுகள் எல்லாம் நன்றாக சிதைந்து ஒட்டிக்கொண்டது. தர்ம் நன்றாக மாட்டிக் கொண்டார். அவர் எந்த ஒரு உதவியும் அற்றவராக இருந்த அந்த மரண நேரத்தில் திடீரென காரின் ஒரு கதவு திறந்து அவர் தூக்கி வீசப்பட்டார். எந்த ஒரு பலத்த காயமும் இல்லாமல் அவர் அதிசயமாகத் தப்பிக் கொண்டார்.

தான் வாழ்ந்த புஷ்கர் பட்டணத்திலேயே அவர் ஒரு சமயம் ஒரு விபத்துக்குள்ளானார். அவர் பிரயாணம் செய்து கொண்டிருந்த வாடகைக்கார் விபத்துக்குள்ளாகி தர்ம் பிரகாஷ் ஒருவரைத் தவிர அதில் பயணம் செய்த மற்றவர்கள் எல்லாரும் மாண்டு போனார்கள்.

மற்றொரு சமயம் அமெரிக்க தேசத்தில் அவர் கர்த்தருடைய ஊழியத்தின் பாதையில் சென்றிருந்த போது டென்வர் என்ற இடத்திலிருந்து கொலோரொடோ ஸ்பிரிங்ஸ் என்ற இடத்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த வேளையில் விமானம் பலத்த சுழல் காற்றில் சிக்கிக் கொண்டது. விமானத்தில் பயணம் செய்த மக்கள் எல்லாரும் தங்களுடைய வாழ்வின் நம்பிக்கை அற்றுப் போயிற்று என்று எண்ணி கதறி அழுதார்கள். ஆனால், அவர்கள் யாவரும் தப்பிப் பிழைத்து பாதுகாப்பாக தரை இறங்கினார்கள்.

நிச்சயமான இந்த மரண ஆபத்துக்களை எல்லாம் தர்ம் பிரகாஷ் பின்னாகத் திரும்பிப் பார்க்கும் வேளையில் இவைகள் எல்லாம் ஏதோ நல்ல அதிர்ஷ்டவசத்தால் மட்டும் தான் தப்பிப் பிழைத்தேன் என்று கொஞ்சமும் எண்ணாமல் ஆண்டவருடைய பாதுகாவலின் கரங்கள் மாத்திரமே இந்த நிச்சயமான மரணங்களில் எல்லாம் தன்னை அற்புதமாக பாதுகாத்தது என்பதை நன்றி நிறைந்த உள்ளத்தோடு நினைவுகூர்ந்து அவரைத் துதிக்கின்றார்.

 

"உனது குழந்தைப் பருவத்திலிருந்து
நீ தேடுகின்றவர் நான்தான்"

தர்ம் பிரகாஷ் 7 வயது பாலகனாக இருந்த நாட்களிலிருந்தே தனது தகப்பனாரை ஆசிரியராகக் கொண்டு இந்து மதபோதனைகளைக் கற்றான். அவன் பகவத் கீதையையும், வேதாந்தத்தையும் கற்றான். இவைகள் பஞ்சம் வேதத்தின் அதாவது ஐந்தாம் வேதத்தின் சுருக்கம் என்று அழைக்கப்படுவதுடன் மிகவும் செழுமையான தத்துவமும் இதில் அடங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. தர்ம் பிரகாசின் வாஞ்சையுள்ள உள்ளம் வேதாந்தத்தின் மூலக்கருப்பொருளைப் பற்றியதாக இருந்தது. அவன் தனது உள்ளத்தில் எழுந்த அநேக கேள்விகளுக்கு விடையைத் தேடிக் கொண்டிருந்தான். அவன் வளர வளர அந்தக் கேள்விகளும் அவனுடன் கூட வளர்ந்து கொண்டே இருந்தது. கடவுள் யார்? மனிதர்கள் ஏன் படைக்கப்பட்டனர்? நாம் ஏன் சாகவேண்டும்? மரணத்திற்குப் பின்னர் சம்பவிப்பது என்ன? வாழ்வின் நோக்கம் யாது? உண்மையான கடவுளை அறிந்து கொள்ள வேண்டியதன் இரகசியம் என்ன? என்பது போன்ற அநேக கேள்விகள் அவன் மனதில் எழுந்தன.

புஷ்கர் பட்டணத்தில் தனது பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு பக்கத்திலுள்ள ஆஜ்மீர் பட்டணத்தில் உள்ள கல்லூரியில் சேர்ந்து அங்குள்ள விடுதியிலேயே அவன் தங்கிப் படித்தான். பொழுது போக்குக்கான மனமகிழ்ச்சியான நிகழ்ச்சிகளில் அவன் பங்கெடுத்துக் கொண்டபோதினும் தனது படிப்பை மிகவும் கண்ணும் கருத்துமாகப் படித்தான்.

எல்லாவற்றிற்கும் மேலாக அவன் கடவுளைத் தேடிக் கொண்டிருந்தான். அந்தக் கடவுளைக் காண வேண்டும் என்றுதான் அவன் சிறுவனாக இருந்தபோது அவனுடைய தாயார் அழுவதை அவன் கண்டிருக்கின்றான். கடவுள் அன்பின் வடிவாக இருக்கின்றார் என்று அவர்கள் தனது பாலகனிடம் சொல்லுவார்கள். எப்படியாவது அந்தக் கடவுளை கண்டுவிட வேண்டும் என்பதே அவனது வாழ்வின் பிரதான தேடுதலாக இருந்தது. பணம், செல்வம், பேர், புகழ் போன்ற காரியங்களிலெல்லாம் அவனுக்கு எந்த ஒரு ஆசையும் இல்லாமற் போயிற்று. அவனுடைய ஆசை எல்லாம் அன்பின் உருவமாக இருக்கும் ஆண்டவரைப் பற்றியதாகவே இருந்தது.

அந்த அன்புத் தெய்வத்தை தனது இந்து வேதங்களில் கண்டு கொள்ள முடியாமற் போனபடியால் மற்ற மத புத்தகங்களான குரான், புத்த மத நூல்கள் போன்றவற்றில் அவன் தேடி இறுதியில் கம்மியூனிச கடவுளர்களான கார்ல் மார்க்ஸ், லெனின் போன்றவர்களின் நூல்களுக்குத் திரும்பினான். எதை எதை படித்தாலும் அவனுடைய தாகம் தணிந்தபாடில்லை. வாழ்க்கையின் நோக்கத்தையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஒரு நான் சாயங்காலம் அவன் தனது கல்லூரி வகுப்பில் அடுத்த நாள் தான் படிக்கப்போகும் ஆங்கில பாடத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தான். அது பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்ட "மலைப் பிரசங்கமாகும்". இரட்சகர் இயேசு தமது சீடர்களுக்கு கொடுத்த போதனைதான் மலைப் பிரசங்கமாகும். அவன் அந்த போதனையை ஒரு மலையின் மேல் இருந்து கொடுத்தபடியால் அது மலைப்பிரசங்கம் என்று அழைக்கப்படுகின்றது.

தர்ம் பிரகாஷ், அந்தப் பகுதி பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டதும் அவன் அதைப் படிக்கத் தயங்கினான். காரணம், வேத புத்தகம் கிறிஸ்தவ மார்க்கத்தின் புத்தகமாகும். அதுவேதான் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் வெள்ளைய ஆட்சி வெறியர்களின் மார்க்கமுமாகும். இந்தக் கொடூரமான ஆட்சியாளர்கள் சுதந்திரப் போராட்ட தொண்டர்களை எத்தனை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த காரியங்கள் எல்லாம் தர்ம் பிராகாஷ்க்கு நன்றாகவே தெரியும். அந்த மலைப் பிரசங்கப் பகுதியைப்படித்து எதுவுமே செய்ய அவருடைய மனம் ஒத்துக் கொள்ளவில்லை.

எனினும், அந்த மலைப் பிரசங்கம்தான் மகாத்துமா காந்தி அடிகள் இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிரான சத்தியாக்கிரக போராட்ட இயக்கத்தை ஆரம்பித்து நடத்த அனுகூலமாக இருந்தது என்பதையும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் ஆயுதங்கள் ஏந்தி யுத்தம் செய்து அவர்களை மேற்கொள்ளாமல் அன்பினாலும் எளிமையான சாத்வீக போராட்டங்களினாலும் வெற்றி கொள்ள இரட்சர் இயேசுவின் மலைப் பிரசங்கம் ஒன்றே கைகொடுத்து உதவியது என்பதையும் தர்ம் நன்கு தெரிந்து வைத்திருந்தான்.

தர்ம் பிகாஷ் சிறுவனாக இருந்தபோது மகாத்துமா காந்தி அடிகளுடன் அவருடைய ஆச்சிரமத்தில் சில மாதங்கள் இருந்திருக்கின்றான். அந்தச் சமயம் அவனுடைய பெற்றோர்களை ஆங்கில அரசாங்கம் சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற காரணத்திற்காக சிறையில் அடைத்து வைத்திருந்தனர். அவருடைய ஆச்சிரமத்தில் இருந்த நாட்களில் தர்ம் பிரகாஷ் மகாத்துமா காந்தி அடிகளின் வாழ்வை மிகவும் நெருக்கமாக கவனித்து வந்திருக்கின்றான். அகிம்சை சம்பந்தமாக அவர் கொடுத்த செய்திகளை அவன் கேட்டி.ருக்கின்றான். ஒரு தடவை காந்தி அடிகள் யாரோ ஒருவரிடமிருந்து மிகவும் கேவலமாக அவரைத் திட்டி எழுதிய கடிதம் ஒன்றைப் பெற்றார். அந்தக் கடிதத்தை வாசித்த அவர் அதை முத்தமிட்டார். அந்தக் கடிதத்திற்காக பதிலை அவரே சொல்ல ஆச்சிரமத்திலிள்ள மற்றொருவர் எழுதினார். அந்தப் பதிற் கடிதத்தின் ஆரம்ப வரிகள் "அருமையான சிநேகிதனே, உனது அன்பான காதல் கடிதத்திற்காக நான் உனக்கு மிகவும் நன்றி தெரிவிக்கின்றேன்" என்பதாக இருந்தது.

உண்மைதான், மகாத்துமா ஆண்டவருடைய மலைப்பிரசங்கத்தை கடைப் பிடித்து வாழ்ந்தார். மலைப் பிரசங்கத்தின் சத்தியங்களை தனது அன்றாடக வாழ்வில் அப்பியாசப்படுத்தினார். நான் எனது வாழ்வில் சந்தித்த மிகவும் நற்குணமுடைய மேன் மக்களில் காந்தியும் ஒருவர் என்று தர்ம் கூறுகின்றார். அவர் பூரண பரிசுத்தன் என்று நான் இங்கு கூற வரவில்லை. ஆனால் அவர் தேவனுடைய சத்தியத்தை உண்மை என்று பரிசோதித்து அறிந்திருந்தார்.

மலைப்பிரசங்கத்தில் குறிப்பிட்ட கட்டளைகளின்படி நடப்பது முற்றும் கூடாத காரியமாகும். இந்தவித கட்டளைகளைக் கொடுக்கக் கூடிய மனிதர் எப்படிப்பட்டவராக இருக்க முடியும்? மலைப் பிரசங்கத்தைக் கொடுத்த இயேசு யார்? அதைச் சொன்ன அவரே அவைகளைக் கைக்கொண்டு நடந்திருக்க முடியுமா? அப்படி அவர் அதைக் கைக்கொண்டிருந்தால் அவர் தேவனுடைய வெளிப்பாடாக இருப்பாரோ?

மலைப்பிரசங்கத்தில் அவர் எத்தனை அதிகாரத்தோடு அந்த கட்டளைகளை எல்லாம் கொடுத்திருக்கின்றார். "விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்று உரைக்கப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று திரும்பத் திரும்பச் சொல்லுவது ஏற்கெனவே சொல்லப்பட்ட கட்டளைகளை மாற்றுவதற்கு தனக்கு அதிகாரம் உண்டு என்று கூறுவதுபோல இருப்பதுடன் அவரைக் கேள்வி கேட்க எவரும் கூடாத நிலையில் உள்ள ஒரு நியாயப் பிரமாணிகன் போல அல்லவா இருக்கின்றார். தர்ம் பிரகாஷ் அந்த மலைப் பிரசங்கத்தை குறித்து எவ்வளவு அதிகமாக சிந்தனை செய்தானோ அந்த அளவுக்கு ஆச்சரியத்தால் பிரமை கொண்டான்.

தர்ம் பிரகாஷ், இயேசுவை கிறிஸ்தவ மார்க்கத்தை தோற்றுவித்த ஒரு பெரிய குருவாகக் கேள்விப்பட்டிருக்கின்றான். அவருடைய காலத்தில் வாழ்ந்த மதக் குருக்கள் அவரை விரும்பாத காரணத்தால் அவர்கள் அவரை சிலுவையில் அறைந்து கொல்லப்பண்ணினார்கள். அவருடைய போதனைகள் எத்தனை ஆச்சரியமானவைகள்! அப்படியிருக்க அவர்கள் ஏன் அவரைப் பகைத்தார்கள்? இத்தனை ஆச்சரியமான போதனைகளை கொடுத்த ஒரு மனிதர் ஒருக்காலும் கெட்ட மனிதனாக இருக்க முடியாதே? அவர் யார்? ஒருக்கால் அவர் கடவுளாகவே இருப்பாரோ?

இந்தச் சமயம் திடீரென, தர்ம் பிரகாஷ் யாரோ ஒருவர் "உனது குழந்தை பருவத்திலிருந்து நீ தேடுகின்றவர் நான்தான்" தர்ம் அந்தக் குரலைக் கேட்டு அதைப் பேசியவர் யார் என்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஆனால் அந்த அறையில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே அந்தக் குரல் தனது அறைக்கு வெளியே இருந்து வந்திருக்க வேண்டும் என்று அவன் எண்ணிக் கொண்டான். ஆனால், அந்தக் குரல் திரும்பவும் ஒலித்தது. "உனது குழந்தைப் பருவத்திலிருந்து நீ தேடுகின்றவர் நான்தான்"

அதற்கப்பால் அந்த ஹாஸ்டல் அறை முழுவதும் ஒளிப் பிரளயத்தால் நிரம்பினது. அது உலகத்தில் நாம் காணும் சாதாரண ஒளியல்ல. அது மிகவும் பிரகாசமான ஒளியாக இருந்தபோதினும் அது மென்மையாகவும், சமாதானம் நிறைந்ததாகவும் இருந்தது. தர்ம் அதை ஒரு புனிதமான ஒளியாக எண்ணிக் கொண்டான். அவன் கேட்ட குரல் மூன்றாம் முறையாக "தர்ம் பிரகாஷ், உனது குழந்தைப் பருவத்திலிருந்து நீ தேடிக்கொண்டிருக்கும் அவரேதான் நான்" என்று ஒலித்தது. அப்பொழுது தர்ம் பிரகாஷ் அது கடவுளுடைய குரலேதான் என்று நிச்சயப்படுத்திக் கொண்டான். அவன் இருதயம் பரிசுத்த பயத்தால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் காணப்பட்டது. அவன் நடுநடுங்கினான். அவனுடைய இதயத் துடிப்பு பலமாக இருந்தது. தான் கேட்ட குரல் மிகவும் விசேஷமானது, அதைத் தொடர்ந்து ஏதாவது தெய்வீக வெளிப்பாடுகள் அவனுக்குக் கிடைக்கும் என்று அவன் எதிர் நோக்கினான். அவனால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை, அவனுடைய மனம் அதை அறிந்து கொள்ள இயலாததாக இருந்தது.

தர்ம் பிரகாஷ் பேசும் குரலைக் கேட்டு ஒளியையும் கண்டான். "உனது குழந்தைப் பருவத்திலிருந்து நீ தேடுகின்றவர் நான்தான்" என்று அந்தக் குரல் அவனிடம் பேசிற்று. ஆனால் அதைப் பேசியவரை அவனால் கண்டு கொள்ள முடியவில்லை. கலங்கலான தண்ணீரில் ஓரு நிழலைப் பார்ப்பது போன்றும், அதினை தனது கரம் நீட்டிப் பிடிக்கப்போகும்போது அது நழுவிச் சென்றுவிடுவது போன்ற நிலை அவனுக்கு ஏற்பட்டது.

அவன் மிகவும் அமைதியற்றவனாகக் காணப்பட்டான். இந்த அனுபவத்திற்குப் பின்னர் தர்ம் தனது அறையில் அமைதியாக தங்கியிருக்க அவனால் கூடாது போயிற்று. அந்த அனுபவம் மிகுந்த ஆச்சரியமானதொன்றாகவிருந்தபோதினும், அது தன்னை ஆசைகாட்டி ஏமாற்றிவிட்டதான ஒரு அனுபவத்தையும் அவன் அடைந்தான். அந்தக் குரலை பேசியவர் எங்கிருந்தோ தன்னை சைகை காட்டி அழைப்பதைப் போலவும் கூட அவன் உணர்ந்தான். ஆனால் அவர் இருக்கும் இடத்தை தர்ம் பிரகாசால் கண்டு பிடிக்க இயலவில்லை. தனது அனுபவத்தை விளங்கிக் கொள்ள அவனுக்கு உதவி தேவைப்பட்டது. ஆம், அவனுக்கு உதவி செய்யக்கூடிய ஒரு குரு தேவைப்பட்டார். அவருடைய மனதிற்கு உடனே வந்த நபர் அவருடைய ஆங்கில பேராசிரியர் வி.வி.ஜாண் என்பவர்தான். உடனே தர்ம் தனது மிதி வண்டி சைக்கிளை எடுத்து ஓட்டிக்கொண்டு பிரின்சிபால் வீட்டிற்குச் சென்றான். பேராசிரியர் ஜாண்தான் அவனுடைய ஆங்கில ஆசிரியரும் ஒரு நல்ல மனிதரும் கூடத்தான். அவர் தனது மாணவர்கள் யாவருடன் நல்ல நட்பு வைத்திருந்ததுடன் அவர்களில் அநேகரின் பெயர்களையும் கூட அறிந்து வைத்திருந்தார்.

இரவின் அந்த நேரத்தில் தர்ம் தன்னைப் பார்க்க வந்திருப்பதைக் குறித்து ஜாண் மிகவும் ஆச்சரியப்பட்டதுடன் தனது மாணவன் தனது இயல்பான நிலையில் இல்லை என்பதையும் மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் இருப்பதையும் துரிதமாகக் கண்டு கொண்டார்.

"நல்லது தர்ம், தயவு செய்து உட்காரு. நீ எப்படியிருக்கின்றாய்?" என்று மகிழ்ச்சியுடன் கேட்டார்.

"நன்றி ஐயா" என்று கூறிக்கொண்டே அருகில் கிடந்த நாற்காலியின் ஒரு ஓரத்தில் தனது முதுகு படாத வண்ணம் தர்ம் அமர்ந்தான். "ஹாஸ்டலில் எல்லாக் காரியங்களும் செம்மையாகப் போய்க் கொண்டிருக்கின்றதா?" என்று ஜாண் கேட்டார். தர்ம் அந்த இரவில் வந்த காரணம் ஒருக்கால் ஹாஸ்டலில் ஏதாவது பிரச்சினைகளா என்பதைக் கண்டு கொள்ள அப்படி வினவினார். "உனது பாடங்களில் உனக்கு ஏதாவது கஷ்டங்கள் உள்ளனவா?" என்று ஜாண் கேட்கவும் அந்தக் கேள்வி தர்ம் பிரகாஷ்க்கு தனது உள்ளத்தை திறந்து ஊற்ற வசதியாக இருந்தது.

"ஐயா, நாளைக்கு நாம் நமது ஆங்கில வகுப்பில் படிக்கக் கூடிய "மலையின் மேல் இயேசு கிறிஸ்து செய்த பிரசங்கம்" பகுதியை நான் வாசித்துக் கொண்டிருந்தேன். இயேசு கிறிஸ்து கடவுளா என்பதை தயவுசெய்து நீங்கள் சொல்லுங்கள்" என்று எடுத்த எடுப்பில் அவன் கேட்டுவிட்டான்.

தர்ம் பிரகாசின் இந்தக் கேள்வி அந்த ஆங்கில பேராசிரியரை தூக்கி வாரிப் போட்டது. தான் எடுக்கப்போகும் பாடத்திலிருந்து தனது மாணவன் இப்படிப்பட்ட ஒரு சிக்கலான கேள்வியைக் கேட்பான் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆவிக்குரிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கேள்வியை சந்திக்க அவர் ஆயத்தமற்ற நிலையில் இருந்தார். "நீ அந்தக் கேள்வியை ஏன் கேட்கின்றாய்?" என்று ஜாண் திருப்பிக் கேட்டார்.

"ஐயா, நான் அதை அறிய ஆசைப்படுகின்றேன்"

"நாளைய தினம் அந்தப் பாடத்தைக் குறித்து நாம் நம்முடைய வகுப்பு அறையில் வைத்து படிக்கலாம் அப்பொழுது நான் அந்தப் பாடப் பகுதியிலுள்ள தத்துவ ரீதியான பொருளை உங்களுக்கு விளக்கிச் சொல்லுவேன்" என்று பேராசிரியர் பதிலளித்தார்.

தர்ம் மிகவும் ஆத்திர அவசரமான நிலையில் "ஐயா, நான் அந்தப் பாடத்திலுள்ள தத்துவார்த்த விளக்கத்தை அறிந்து கொள்ள ஆசைப்படவில்லை. நான் அறிந்து கொள்ள விரும்புவதெல்லாம் இயேசு கிறிஸ்து கடவுளா?" என்பது மட்டும்தான்.

"தர்ம் பிரகாஷ், இந்த இரவில் இந்தக் காரியத்தைக் குறித்து உனக்கு வந்தது என்ன? உனது உண்மையான நிலையில் நீ இப்பொழுது இல்லை" என்றார் பேராசிரியர்.

அந்த இரவில் தனக்கு நடந்த காரியங்களை தர்ம் தனது ஆசிரியருக்கு விளக்கத் தொடங்கினான். தான் எப்படியாக இயேசு இரட்சகரின் மலைப் பிரசங்கத்தை ஒரு வித்தியாசமான விதத்தில் சிந்தித்ததையும் அந்த வேளையில் தான் கேட்ட குரலையும், தான் கண்ட ஆச்சரியமான ஒளியையும் குறித்து தர்ம் சொன்னான். தான் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே இந்து மார்க்க வேதாந்தங்களையும், ராம்சரித் மானாஸையும் பின் வந்த நாட்களில் குரானையும், புத்த மார்க்க வேதமான தம்ம பாதத்தையும் படித்திருப்பதாகவும் அவைகளிலிருந்து தான் அதிக ஞானத்தைக் கற்றிருப்பதாகவும் சொன்னதுடன், அந்தப் புத்தகங்கள் எதுவும் மலைப் பிரசங்கத்தின் முன் நிற்க இயலாது என்றும் கூறினான். இயேசு இரட்சகரின் மலைப் பிரசங்கத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது தான் கேட்ட குரல் இயேசுவினுடைய குரல் என்று தான் விசுவாசிப்பதாகச் சொன்னான். தனக்கு அதை யாராவது நிச்சயப்படுத்த வேண்டும் என்றான்.

"நான் குழந்தைப் பருவத்திலிருந்தே கடவுளைத் தேடி வந்திருக்கின்றேன். எனவே, இயேசு கிறிஸ்து கடவுளா அல்லது கடவுள் இல்லையா? என்பதை மட்டும் நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டும்" என்று தர்ம் திரும்பவும் கேட்டான்.

பேராசிரியர் ஜாண், தர்ம் பிரகாசின் கண்களைப் பார்த்தார். அவன் துயரத்தினால் நிறைந்திருப்பதைக் கவனித்தார். தான் கேட்ட குரலும், தான் கண்ட ஒளியும் அவனை எப்படி பாதித்திருக்க முடியும்? இந்தக் காரியங்கள் எல்லாம் ஒரு வேளை அவனது மனதின் கற்பனையா? அல்லது உண்மையாகவே கடவுளின் பிரத்தியட்சமான வெளிப்பாடுதானா? அவனுடைய கேள்விக்குப் பதில் அளிக்கக்கூடிய திறமை அதற்காகப் பயிற்சி பெற்ற ஒரு குருவானவருக்கே முடியும் என்று எண்ணிக் கொண்டு அவனை ஒரு குருவானவரிடத்தில் அனுப்புவதே நல்லது என்று எண்ணி தனது உதவியாளரிடம் தனது காரைக் கொடுத்து அவனை ஒரு கத்தோலிக்க தந்தையிடம் அனுப்பினார். அவர் ஒரு வயதான இத்தாலிய மனிதனாவார். அந்த கத்தோலிக்க தந்தை தர்ம் பிரகாஷை வரவேற்று ஒரு ஆசனத்தில் அமரச்செய்து அவன் வந்த காரணத்தைக் கேட்டார்.

"இயேசு கடவுளா என்பதை நீங்கள் தயவுசெய்து எனக்குச் சொல்ல வேண்டும்?" என்று தர்ம் தனது பழைய கேள்வியையே அவரிடம் கேட்டான். அந்த கத்தோலிக்க சாமியார் அவனது கேள்விக்கு உடனே விடை அளிக்காமல் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த அவனது ஏக்கம் நிறைந்த முகத்தை கவனித்தார். எடுத்த எடுப்பில் அதற்கான விடையை நேரடியாகக் கொடுத்தால் அது சரியாக இருக்காது என்று நினைத்துக் கொண்டு ஒரு கேள்விக்குப் பின்னர் தனது பதிலைச் சொல்ல நினைத்துக் கொண்டு "நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டியதன் அவசியம் என்ன?" என்று கேட்டார்.

"நான் எனது குழந்தைப் பருவத்திலிருந்தே கடவுளைத் தேடி வந்திருக்கின்றேன். ஆனால், நான் அவரைக் காண முடியவில்லை. நான் தேடுகின்ற கடவுள் இயேசுதானா? என்பதை அறிய ஆசைப்படுகின்றேன்" என்று தர்ம் பதிலளித்தான்.

"நீங்கள் ஒரு கிறிஸ்தவனா?" என்று சாமியார் கேட்டார்.

"இல்லை ஐயா, நான் ஒரு வைராக்கியமான இந்து பிராமணன். எனது தகப்பனார் புஷ்கர் பட்டணத்தில் பிரதான இந்து பூஜாரியாக இருக்கின்றார்"

"அப்படியானால் இயேசு கிறிஸ்துவைக் குறித்து என்னிடம் வந்து கேட்க உங்களுக்கு என்ன வந்தது?"

அந்த இரவில் இரண்டாவது தடவையாக தனது ஹாஸ்டல் அறையில் நடந்த சம்பவத்தை தர்ம் அந்த சாமியாரிடம் விவரமாக எடுத்துக் கூறினான். அதைக் கவனமாகக் கேட்ட அவர் கொஞ்ச நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்துவிட்டு, பின்னர் "நிச்சயமாக உங்களிடம் பேசியவர் இயேசு கிறிஸ்துவேதான். எனவே நீங்கள் ஏன் கிறிஸ்தவனாக மாறக்கூடாது?" என்று கேட்டார்.

"கிறிஸ்தவனாக மாறுவதா?" தர்ம் பிரகாஷ் அதிர்ச்சியடைந்தான். "நான் ஒரு கிறிஸ்தவனாக மாற முடியாது. நான் ஒரு பக்தி வைராக்கியமான வேதாந்த இந்துக் குடும்பத்தில் பிறந்தவன், எனது முற்பிதாக்களின் மார்க்கத்தை நான் எந்த ஒரு நிலையிலும் விட்டு விடுவதாக இல்லை" என்று திட்டமாகச் சொன்னான்.

ஆனால், அந்த கத்தோலிக்க சாமியார் தனது வார்த்தைகளைத் தொடர்ந்தார் "நீங்கள் கவனிக்க வேண்டும். இயேசுவைப் பற்றி அதிகமாக நீங்கள் அறிய விரும்பினால் நீங்கள் கிறிஸ்தவனாக மாறியே ஆக வேண்டும். ஒரு தடவை நீங்கள் ஞானஸ்நானம் பெற்று திருச்சபையில் சேர்ந்துவிட்டால் நீங்கள் இந்தக் காரியங்களை எல்லாம் இலகுவாக புரிந்து கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள். நீங்கள் கிறிஸ்தவனாக ஆகாவிட்டால் அந்தக் காரியங்களை எல்லாம் புரிந்து கொள்ள முடியாது" என்றார் கத்தோலிக்க சாமியார்.

"ஒருக்காலும் நான் ஒரு கிறிஸ்தவனாக மாறுவதை விரும்பவில்லை" இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு தர்ம் பிரகாஷ் அமைதியாக அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

முன்பு எக்காலத்திலும் இல்லாத விதத்தில் சோர்புற்றவனாக தர்ம் தனது ஹாஸ்டல் அறைக்கு திரும்பவும் வந்து சேர்ந்தான். அவன் மிகவும் கலக்கமுற்றவனாகவும், ஒரு பெரிய பாரம் அவனது இருதயத்தை அழுத்துவதாகவும் உணர்ந்தான். தான் தேடியதை எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவன் மிகவும் உறுதியாக இருந்தான். ஆனால், அவன் தரையிலே விழ தள்ளி விடப்பட்டான். கடவுளிடத்திற்குச் செல்லும் வழியைக் காட்டுவார்கள் என்று அவன் நம்பி நின்றவர்கள் அவனை ஏமாற்றத்திற்கு தள்ளிவிட்டார்கள். எனினும் அவன் இன்னும் தனது தேடுதலைக் கைவிடவில்லை.

அவன் தனது ஆங்கில புத்தகத்தைத் திறந்து அடுத்த நாள் படிக்கப் போகின்ற பகுதியை திரும்பவும் வாசித்தான். அதை தனது உள்ளத்தில் வைத்து அலசி அலசி ஆராய்ந்தான். மலைப்பிரங்கத்தின் மூலமாக கடவுள் தன்னுடன் பேசுவதை அவன் திட்டமும் தெளிவுமாக உணர்ந்தான். எனினும், அந்தப் பகுதியை அவனால் பூரணமாக புரிந்து கொள்ள முடியவில்லை. கர்த்தராகிய இயேசு தனது மலைப் பிரசங்கத்தின்படி வாழும்படியாக தமது சீடர்களுக்குக் கூறுகின்றார். அதை எப்படி வாழ முடியும்? யாரால் இப்படிப்பட்டதொரு பூரண பரிசுத்த வாழ்க்கையை வாழ முடியும்? அது மனுஷீக ஆற்றலுக்கும், திறமைக்கும் அப்பாற்பட்டதாகும். அதற்கு கீழ்ப்படிதல் முற்றும் இயலாத காரியமாகும். அப்படியானால் இயேசு அதைச் செய்ய ஏன் கட்டளையிட்டார்? கேள்விகளுக்கு மேல் கேள்விகள், விடை காண முடியாத கேள்விகள் அவன் உள்ளத்தில் எழுந்தன. அவனால் என்ன செய்ய முடியும்? எந்த வழிக்கு அவனால் திரும்ப முடியும்?

அந்தச் சமயம் அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் இயேசு கிறிஸ்துவின் அடியார்கள், அப்படித்தானே? அவர்கள் கட்டாயம் அவருடைய போதனைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். ஒருக்கால் அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் ஆண்டவருடைய போதனைகளைப் பின்பற்றி நடந்தால், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அதின் அர்த்தம் இயேசு கிறிஸ்துவே மெய்யான கடவுள் என்பதை நாம் கண்டு கொள்ளலாம் என்று அவன் தனக்குள்ளாக எண்ணினான்.

அடுத்த நாள் கல்லூரி வகுப்பு ஆரம்பமாகும் நேரம். தர்ம் பிரகாஷ் தனது வகுப்புக்கு நேராகச் சென்று கொண்டிருந்தான். முதலாம் பீரியட் ஆரம்பிக்க இன்னும் 20 நிமிடங்கள் மட்டும் இருந்தன. அவனுடன் படிக்கின்ற மாணவ மாணவியர்கள் வகுப்பைச் சுற்றிலும் அங்கும் இங்குமாகக் கூடியிருந்தனர். அவர்களில் 7 பெண்கள் ஒரு வட்ட வடிவமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். தர்ம் அவர்களை நெருங்கினான். மாணவ மாணவியர்களின் நடுவில் அவனுக்கு நல்லதொரு மதிப்பு இருந்தது. அவன் தங்களண்டை வருவதைக் கவனித்த அவர்கள் அவனுக்கு வந்தனம் செய்து வரவேற்றனர்.

அவன் அந்தப் பெண்களுடன் சேர்ந்து கொண்டு "இன்று இரவு 9 மணி சினிமா காட்சிக்கு நான் போகப் போகின்றேன், உங்களில் யாராவது என்னுடன் வருவீர்களா?" என்று கேட்டான், "நான் வருகின்றேன், நான் வருகின்றேன்" என்று உடனடியாக அவர்களில் ஒரு பெண் கூறினாள். "நானும் கூட வருகின்றேன்" என்று மற்றொரு பெண்ணும் அவளுடன் சேர்ந்து கொண்டாள். கூட்டத்தில் மற்றவர்கள் யாவரும் அமைதியாகிவிட்டனர். மற்றவர்களைப்பற்றிய காரியம் என்ன? தர்ம் தனது காரியத்தை தொடர்ந்தான். "காமினி உனது காரியம் என்ன?" என்று கூட்டத்திலுள்ள மற்றொரு பெண்ணை அவன் கேட்டான். "எனது பெற்றோர் என்னை அனுமதிக்கமாட்டார்கள். அதிலும் இரவுக் காட்சிக்கு என்றால் அவர்களை நெருங்கவே முடியாது?" என்றாள்.

"ரீனா, உன்னைப்பற்றிய காரியம் என்ன?" என்று தர்ம் அடுத்த ஒரு பெண்ணைக் கேட்டான். "எனது பெற்றோர் அப்படிப்பட்ட காரியங்களுக்கு என்னை ஒருக்காலும் அனுமதிக்கவே மாட்டார்கள்" என்று அவள் தலை அசைத்து மறுத்து விட்டாள்.

இந்தக் காரியத்தை ஒரு சோதனைக்காகவே தர்ம் மேற்கொண்டான். தர்ம் பிரகாஷ் உடன் சினிமாவுக்கு வர சம்மதித்த ரீட்டாவும், பெற்றியும் கிறிஸ்தவர்கள் என்பதையும், வர மறுத்த மற்ற ஐந்து பெண்களும் இந்துக்கள் என்பதையும் அவன் கண்டு கொண்டு விட்டான்.

அங்கிருந்து அவன் போய்க் கொண்டிருந்த போது 5 பையன்கள் தங்களுக்குள்ளாக வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதை தர்ம் பார்த்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தம்போட்டுக் கொண்டு தூஷண வார்த்தைகளினால் ஏசிக் கொண்டிருப்பதைக் கண்ட அவன் அங்கு நின்றான். அவனைப் பார்த்ததும் யாவரும் அமைதியாகிவிட்டனர். ஆனால் சார்லி என்ற ஒரு கிறிஸ்தவ பையன் மட்டும் தொடர்ந்து மற்றவர்கள் மேல் தூஷணங்களைப் பொழிந்து கொண்டிருந்தான். சார்லியின் துஷ்ட நடத்தை தர்ம்க்கு கடுமையான கோபத்தைக் கொண்டு வந்தது. அவன் சார்லியின் அருகில் நெருங்கிச் சென்று அவனது கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான்.

அதைக் கண்ட சார்லி ஒரு கணம் அதிர்ச்சியடைந்ததுடன் மறு பக்கம் வீராவேசமான கோபம் கொண்டு "என்னை அடிக்க உனக்கு என்ன துணிச்சல் வந்தது" என்று உறுமிக்கொண்டே பதிலுக்கு தர்ம் பிரகாசையும் கன்னத்தில் அறைந்தான். அதற்கப்பால் மேலும் கோபத்தில் அவனை தனது காலால் உதைத்தான். சார்லி ஒரு கிறிஸ்தவன் என்பதை தர்ம் அடிக்கோடிட்டு கவனித்துக் கொண்டான்.

"நீ ஒரு கிறிஸ்தவன் அல்லவா?" தர்ம் அவனை சுருக்கென்று கேட்டான். "பைபிளை நீ படிப்பதில்லையா? மலைப் பிரசங்கம் என்னவானது?" என்றான் தர்ம்.

"எதைப் பற்றியும் எனக்கு அக்கரை கிடையாது" என்று சார்லி பதில் மொழிந்தான். கிறிஸ்தவர்களைக் குறித்த கெட்ட அனுபவங்கள் தனக்கு கிடைத்த போதினும் அவைகளை அவன் கண்டு கொள்ளவில்லை. இள வயதினர் ஒருக்கால் தவறுகள் செய்யலாம், ஆனால் முதிர்ச்சியான கிறிஸ்தவர்கள் ஒரு வேளை இயேசுவின் போதனைகளைப் பின்பற்றி நடந்து சான்றோர்களாக இருக்கலாம். கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் ஆண்டவருடைய போதனைகளை மதிக்காதபோதினும், அவர்களுடைய பெற்றோர் வித்தியாசமாக இருக்கலாம் என்று தர்ம் யதார்த்தமாக எண்ணிக் b காண்டான்.

அதைத் தொடர்ந்து அவன் சில கிறிஸ்தவ நண்பர்களின் வீடுகளுக்குச் சென்றான். அந்தக் கிறிஸ்தவ குடும்பங்களில் தேவ பயமுள்ள வாழ்க்கையை அவனால் காண முடியவில்லை. அதற்கப்பால் கிறிஸ்தவ தேவாலயத்தின் காரியங்களை அறிந்து கொள்ளும்படியாக அவன் விரும்பினான். அதின் காரணமாக அநேக ஞாயிற்றுக் கிழமைகளில் தனது ஹாஸ்டலுக்கு அருகிலுள்ள தேவ ஆலயத்தின் ஆராதனைகளில் உண்மையான மனதோடு பங்கு பெற்றான். ஆனால் ஒவ்வொரு தடவையும் அங்கு நடக்கின்ற ஆராதனைகள் முற்றும் உற்சாகமிழந்து, ஏதோ சடங்காச்சாரமாக நடக்கின்ற அர்த்தமற்ற காரியங்களாக அவனுக்கு தெரிந்தன. தர்ம் பிரகாஷ் மிகவும் பக்தி வினயமாக பயத்துடன் ஆலயத்திற்கு சென்றிருக்க ஆலயத்துக்கு வந்திருப்பவர்கள் எந்த ஒரு தெய்வ பயமின்றி நிர்விசாரமாக ஏனோதானோவென்று வந்திருப்பதை அவன் துக்கத்துடன் கவனித்தான். கிறிஸ்தவ மக்களிடத்தில், ஏன்? ஆராதனைகளை நடத்தும் குருவானவர்களிடம் கூட கடவுள் பயம் என்ற அடிச்சுவடே இல்லாதிருப்பதை அவன் மிகுந்த துயரத்துடன் கண்டான். ஆலயத்துக்கு வந்திருந்த கிறிஸ்தவ வாலிபர்களின் செயல்பாடுகள் துன்மார்க்கமாகவும், அவலட்சணமுமாகக் காணப்பட்டன.

தர்ம், இந்து மத வேதாந்தங்களைப் படிக்கின்ற போது கடவுளைக் காண வேண்டுமென்ற ஆவல் அதிகரிப்பதாக இருந்தது. இரட்சகரின் மலைப் பிரசங்கத்தை படித்தபோது அந்த தாகம் இன்னும் கொழுந்துவிட்டு எரிவதாக காணப்பட்டது. எனவே, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றும் அவருடைய சீடர்கள் என்றும் சொல்லிக் கொண்ட கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் கடவுளின் குணாதிசயங்களை காணலாம் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், கிறிஸ்தவர்கள் அவனை முழுக்க முழுக்க ஏமாற்றிவிட்டனர்.

இறுதியாக தர்ம் கடவுளைத் தேடும் காரியத்தை கைவிட யோசித்தான். "கிறிஸ்தவ மார்க்கத்தில் உண்மையில்லை" என்று அவன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். அந்த கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசு கிறிஸ்துவும் கூட ஒரு ஏமாற்றுக்காரராகத்தான் இருக்க வேண்டும். மற்ற மதங்களில் உள்ள புராணக்கதைகளில் காணப்படுகின்ற நபர்களைப்போன்று அவரும் ஒரு திரித்துவிடப்பட்ட கற்பனைக் கதையின் கதாநாயகர் மட்டுமே என்ற இறுதி முடிவுக்கு வந்தான்.

 

வேதாகமங்களை தீ வைத்துக் கொழுத்தியது

தர்ம் பிரகாஷ் தனக்குள்ளாகக் கொந்தளித்துக் கொண்டிருந்தான். இத்தனை காலமும் கடவுளைத் தேடியும் கடவுள் தன்னை அவனுக்கு வெளிப்படுத்தவில்லை. இப்பொழுது அவனுடைய கோபம் இயேசு கிறிஸ்துவுக்கு நேராகத் திரும்பியது. "இயேசுவின் போதனைகள் எத்தனை அழகானவைகள், எத்தனை ஆச்சரியமானவைகள்! ஆனால் அவருடைய அடியார்கள், ஆம் அவருடைய சீடர்கள் எனப்படுகிறவர்களின் வாழ்க்கையில் அந்தப் போதனைகளின் வாசனை என்பது துளி கூட இல்லையே. உண்மைதான், அந்த இயேசு கிறிஸ்து ஒரு மாய்மாலக்காரன், சாதாரணமான மாய்மாலக்காரன் அல்ல, மாபெரும் மாய்மாலக்காரன். அல்லது, உண்மையில் அவன் இந்த உலகத்தில் வாழவில்லை. யாரோ மற்றொருவன் அவனுடைய பெயரை வைத்து எழுதியிருக்க வேண்டும்" தர்ம் பிரகாஷ் தனக்குள்ளாக குமுறி எண்ணிக் கொண்டான்.

இதுவரைக்கும் தர்முடைய உள்ளம் தொடர்ச்சியாக கடவுளைக் குறித்த ஆவிக்குரிய காரியங்களுக்கு நேராகவே சென்று கொண்டிருந்தது. தன்னுடைய தாயார் சொல்லும் தந்தையர்களுக்கெல்லாம் தந்தை (பித்தரங்தம் பிதா) வாகிய தந்தையைத்தான் காண வேண்டும் என்ற ஆவல் அவனுடைய உள்ளத்தில் மேலோங்கி நின்றது. ஆனால் அவைகள் எல்லாம் இப்பொழுது நொறுங்கி சின்னாபின்னமாயிற்று. அவன் தன்னுடைய கல்லூரி ஹாஸ்டல் அறையில் கேட்ட குரல் தனக்கு நிச்சயமாக கைகொடுத்து உதவும் என்று எண்ணினான். ஆனால், அதுவும் அவனை ஏமாற்றிவிட்டது. கடவுளைத் தேடுவது எல்லாம் வீணும் வியர்த்தமுமாகும் என்று அவன் தனக்குள் எண்ணிக் கொண்டான்.

இப்பொழுது தர்ம் அந்த கடவுளைப்பற்றிய காரியங்களை எல்லாம் விட்டுவிட்டு கடவுள் இல்லை என்ற நாஸ்தீக கொள்கைக்குத் திரும்பினான். இனி என்ன? அவன் தனது ஆசை ஆர்வங்களை, கலை, இலக்கியம், மனோதத்துவம், டிராமா, சினிமா போன்ற காரியங்களுக்கு நேராகத் திருப்பினான். அவன் படித்த கல்லூரி மாணவர்களின் யூனியனுக்கு அவன்தான் தலைவன். அவன் தனக்குள்ள திறமைகள், அறிவாற்றல்களைக் கொண்டு தனக்கென ஒரு புகழை சம்பாதிக்க விரும்பினான். இந்த நாளிலிருந்து கிறிஸ்துவையும், கிறிஸ்தவர்களையும் அவன் ஓரம் கட்ட நிச்சயித்தான். உலகத்திலேலேயே மாபெரும் ஏமாற்றுக்காரர்கள் கிறிஸ்தவர்கள்தான் என்ற முடிவுக்கு அவன் வந்தான்.

அவன் கல்லூரி வாசகசாலைக்குச் சென்று தனக்கு படிக்கும்படியாக ஒரு வேதாகமத்தைக் கேட்டான்.

"வேதாகமங்கள் இங்கிருந்தே படிப்பதற்காகத்தானே தவிர வெளியில் எடுத்துச் சென்று படிப்பதற்காக அல்ல" என்று வாசகசாலை பொறுப்பாளர் திட்டமாகச் சொல்லிவிட்டார்.

"ஆனால், நான் அதை எனது அறைக்கு எடுத்துச் சென்று படிகக விரும்புகின்றேன். எப்படி நான் அதை இங்கேயே இருந்து கொண்டு படிக்க முடியும்?" என்று தர்ம் சொன்னான்.

"நான் வருந்துகின்றேன், நான் எனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும்"

தர்ம் நேராக கல்லூரி பிரின்சிபாலிடம் சென்று அதை எடுத்துச் சென்று ஹாஸ்டலில் வைத்துப் படிக்க அனுமதி கேட்டான். அவன் கல்லூரி வாசகசாலைக்கு வந்து பிரின்சிபால் அவனுக்குக் கொடுத்த அனுமதி சீட்டைக் காண்பித்து அங்கிருந்த ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் எழுதப்பட்ட மூன்று வேதாகமங்களையும் வாங்கினான். அவைகள் எல்லாம் நல்ல கடினமான கருப்பு அட்டையால் பைண்ட் பண்ணப்பட்டிருந்தது.

தர்ம் பிரகாஷின் நண்பர்கள் சிலர் கல்லூரி சிற்றுண்டிச்சாலை அருகில் நின்று கொண்டிருந்தனர். "எல்லாரும் இங்கே வாருங்கள், மற்றவர்களையும் இங்கு வரும்படிச் சொல்லுங்கள்" என்று தர்ம் குரல் கொடுக்கவே சுமார் 300 கல்லூரி மாணவர்கள் ஒன்றாகக்கூடினார்கள். தர்ம் வேதாகமங்களில் ஒன்றை எடுத்து அவர்களுக்கு உயர்த்திக் காண்பித்து "இந்தப் புத்தகத்தைக் குறித்து உங்களுக்குத் தெரியுமா? இதுதான் பைபிள், கிறிஸ்தவத்தின் புத்தகம். இது கிறிஸ்தவர்களின் புத்தகம். கிறிஸ்தவர்கள் செய்த காரியம் நமக்கு நன்கு தெரியும். கிறிஸ்தவர்களும், போர்த்துகீசியர்களும் நமது பாரத தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அவர்கள் நம்மை அரசாண்டார்கள். அவர்கள் நம்மை அடிமைகளாக்கிக் கொண்டார்கள். இது அவர்களின் புத்தகம். பாரதவாசிகளை அடிமைகொள்ளப்பண்ணிய புத்தகம் இதுவேதான். இந்தப் புத்தகம் நமது மதத்தையும், கலாச்சாரங்களையும் கறைப்படுத்தி அழியப்பண்ணிய புத்தகம் இது. கிறிஸ்தவ மார்க்கத்தைத் தோற்றுவித்த இயேசு கிறிஸ்து என்ற மாய்மாலக்காரனை நாம் என்ன செய்யலாம்?" என்று கேட்டான். தர்ம் சற்றும் எதிர்பாராதவகையில் ஆச்சரியம் கொள்ளும் விதமாக அந்த பெரிய மாணவ சமுதாயம் முழுவதும் "முர்தாபாத், முர்தாபாத்" (அவனுக்கு மரண தண்டனை, அவனுக்கு மரண தண்டனை) என்று ஆரவாரம் செய்தனர்.

அதற்கப்பால் தர்ம் பிரகாஷ் அந்த மூன்று வேதாகமங்களையும், துண்டு துண்டாக கிழித்து தனது கால்களின் கீழ்ப்போட்டு மிதித்தான். அதற்கப்பால் அவன் தனக்கு அருகாமையிலிருந்த ஒருவனைப் பார்த்து "நமக்கு கொஞ்சம் மண்ணெண்ணெய் தேவை" என்றான். அவன் அருகிலிருந்த சிற்றுண்டிச்சாலையிலிருந்து ஒரு பாட்டல் மண்ணெண்ணெய் கொண்டு வந்தான். அது கிழிக்கப்பட்ட வேதாகமங்களின் மேல் ஊற்றப்பட்டது. பக்கத்தில் இருந்த ஒருவன் சிகரெட் ஊதிக்கொண்டிருந்தான். அந்த நெருப்பு கிழித்துப்போடப்பட்ட வேதாகமங்களை சாம்பலாக்குவதற்கு போதுமானதாக இருந்தது.

 

தர்ம் பிரகாசுக்கு தேவன் முன் குறித்த அதிசய மணவாட்டி

அந்தப் பெண் எந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள் என்பதை அறிவதற்கு வெகு முன்னரே தர்ம் பிரகாஷ் அவளை பல தடவைகளிலும் தனது சொப்பனங்களிலே பார்த்திருக்கின்றார். அவர் மிகவும் இளைஞனாக இருந்த காலத்திலிருந்தே அந்தச் சொப்பனம் திரும்பத் திரும்ப அவரது கனாவிலே தோன்றும். ஒவ்வொரு தடவையும் அந்தச் சொப்பனம் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும். அந்தச் சொப்பனம் இதுவேதான்:- ஒரு பாலைவனத்தின் மத்தியில் ஒரு கோட்டை பெரிய, பெரிய சிகப்பு காவி கற்களால் கட்டப்பட்டிருக்கும். அதற்கு இரண்டு தங்கக் கதவுகள் இருக்கும். அந்தக் கோட்டையைச் சுற்றிலும் அடர்த்தியான பாலைவனப் புதர்கள் மண்டிக்கிடக்கும். அவர் அந்தக் கோட்டையைப் பார்த்துக் கொண்டிருக்கவே அதின் தங்கக் கதவுகள் தானாக மெதுவாக திறக்கும். அந்தக் கோட்டைக்குள்ளிருந்து மிகவும் ஒடிசலான உருவத்தையுடைய ஒரு கருப்பான பெண் வெள்ளைப் புடவையைக் கட்டினவளாக வெளியே வருவாள். பாலைவனப் புதர்கள் மத்தியில் நின்று கொண்டிருக்கும் அவளுடைய புடவை காற்றில் பறந்த வண்ணமாக இருக்கும். அவள் எங்கோ தொலை தூரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுடைய கண்கள் தூரத்திலுள்ள எதையோ தேடிக்கொண்டிருப்பவைகளாகத் தெரியும். சற்று நேரத்தில் அந்தப் பெண் மெதுவாக கோட்டையை நோக்கி நகர்ந்து செல்லுவாள். அவளுடைய வெண் புடவை காற்றில் பறந்தவண்ணமாகவே அவள் கோட்டைக்குள் செல்லவும், கோட்டைக் கதவுகள் அவளுக்குப் பின்னாக மெதுவாக வந்து தானாக மூடிக் கொள்ளும். அத்துடன் கனவு முற்றுப் பெறும்.

தர்ம் பிரகாஷ் அந்தச் சொப்பனத்தின் தார்ப்பரியம் என்னவென்று தனக்குள்ளாக எண்ணி அடிக்கடி ஆச்சரியமடைவார். அவர் கல்லூரியில் இருக்கும் நாட்களில் தனது கல்லூரியிலுள்ள மனோதத்துவ பேராசிரியரிடம் அந்தச் சொப்பனத்தின் விளக்கத்தைக் கேட்பார். அதற்கு அந்தப் பேராசிரியர் அது ஒருவித எண்ணத்தின் ஆவேசமான பிடிப்பின் காரணமாக உண்டாகிறது என்றும், அந்தவித பைத்தியமான எண்ணம் வாழ்வில் முதிர்ச்சி நிலையை அடையும்போது தானாக விலகி விடும் என்றும் கூறுவார்.

தர்ம் பிரகாஷ் இப்பொழுது 20 வயதினாக இருந்தபடியால் தான் முதிர்ச்சி நிலையில் இருப்பதாக அவர் கருதினார். ஆனால், அந்த சொப்பனம் அவரை விட்டபாடில்லை. ரஷ்யாவிலுள்ள கீவ் என்ற இடத்திலிருந்து அப்பொழுதுதான் திரும்பியிருந்த அவர் ஒரு நாள் அதிகாலையில் அதே சொப்பனத்தை திரும்பவும் கண்டார். அதே பெண் பாலைவனக் கோட்டையிலிருந்து மெதுவாக வெளி வந்தாள். வெளி வந்த அவள் வெகு தொலைவில் எதையோ பார்ப்பவளாக காணப்பட்டாள். பின்னர், கோட்டைக்குள் போய்விடவும், கோட்டைக் கதவுகள் தானாக அவளுக்குப் பின்னாக வந்து மூடிக் கொண்டது. கண் விழித்த தர்ம் பிரகாஷ் தனது அன்றாடக பணிகளை கவனிக்கலானார். காலை ஆகாரத்திற்கு முன்னர் வழக்கம்போல குளித்துவிட்டு அதிகாலையில் கண்ட தனது சொப்பனத்தைக் குறித்து சிந்திக்கலானார்.

அதற்கப்பால் அவர் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆஜ்மீர் பட்டணத்திலுள்ள மருத்துவமனைக்குச் சென்று படுக்கையிலிருக்கும் அவரது தாயாருடன் இருப்பதற்காக ஆயத்தமானார். அங்குதான் அவரது தாயார் மருத்துவ சிகிட்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்கள். அன்று பிற்பகல் அவர் தனது தாயாரைப் பார்க்க வந்திருந்த தனது இரண்டு நண்பர்களை தாயாரின் அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து கொண்டிருந்தார். தீடீரென அந்த மருத்துவமனையின் வராந்தாவில் அந்தப் பெண்ணைக் கண்டார். ஆம், தனது சொப்பனங்களில் அடிக்கடி வந்த பெண் அவளேதான். அதே ஒடிசலான உருவம், அதே வெண் புடவை. தர்ம் பிரகாஷ், ஒழுங்கு, சம்பிரதாயம் எதையும் அப்பொழுது எண்ணிப் பார்க்கவில்லை. அதற்கு நேரமும் இருக்கவில்லை. அந்தப் பெண்ணின் உருவத்தைக் கண்டதும் அவர் ஆச்சரியத்தால் அதிர்ச்சியடைந்தார். அத்துடன், உடன்தானே அந்த சந்தர்ப்பத்தை எந்தவிதத்திலும் நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்ள அவரது உள்ளுணர்வு அவரை பலமாகத் தூண்டியது. தன்னுடன் வந்து கொண்டிருந்த தனது இரண்டு நண்பர்களும் ஆச்சரியத்தால் அதிர்ச்சியடையும் விதமாக அந்தப் பெண்ணிடம் அவர் விரைந்து சென்று அவளை நிறுத்தினார். எந்த ஒரு அறிமுகமும் இல்லாத எதிர்பாலான (Opposite Sex) ஒரு அந்நிய பெண்ணிடம் பேசுவது என்பது உயர்ந்த குலத்தில் பிறந்த அவருடைய சமுதாயத்தில் என்றும் செய்யப்படாத ஒரு காரியமாகும்.

"தயவுசெய்து....................... உங்கள் பெயர் என்ன?" என்று அவர் அந்தப் பெண்ணிடம் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டவராகக் கேட்டார்.

"என்னுடைய பெயரைக் கொண்டு உங்களுக்கு என்ன வேண்டியதாக இருக்கின்றது?" என்று அந்தப் பெண் சுருக்கென்று கடுமையாகப் பதிலளித்தாள்.

"என்னை மன்னித்துவிடுங்கள். ஆனால், நீங்கள் யார் என்று தயவுசெய்து சொல்லுங்கள்"

"இந்தப் பட்டணத்திலுள்ள ஒரு எளிமையான கிறிஸ்தவ குடும்பத்திலுள்ள பெண். என்னுடைய தகப்பனார் ஒரு தேவ ஊழியர்"

"தயவுசெய்து உங்கள் சொந்தப் பெயர்"

"ஹோப் கிறிஸ்டினா" (Hope Christina)

அடுத்தபடியாக தர்ம் பிரகாஷ் அந்தப் பெண்ணிடம் கேட்கப் போகும் தனது அடுத்த கேள்வியைக் குறித்து அவரே தனக்குள் பெரிதும் ஆச்சரியம் அடைந்து கொண்டார்.

"நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ளுவீர்களா" என்ற கேள்வியை தனது உள்ளத்தின் மிகப் பலமான தூண்டுதலின் காரணமாகக் கேட்டார்.

அந்தப் பெண் திகிலடைந்ததுடன் கடுங்கோபம் கொண்டாள். "அத்துடன் நிறுத்துங்கள், அபத்தமான, குப்பை பேச்சை என்னிடம் பேச வேண்டாம். என்னிடம் இப்படி ஏன் பேசவேண்டும்? ஒரு பெண்ணிடம் இப்படிப் பேசுவது ஒழுக்கமான, நாகரீக வார்த்தை அல்ல"

"என்னை மன்னியுங்கள். நான் சொல்லுவதை மிக மன உறுதியுடன் சொல்லுகின்றேன். நீங்கள் ஒரு அந்நிய பெண்ணல்ல. உங்களை நான் எனது சொப்பனங்களில் அநேக தடவைகள் பார்த்திருக்கின்றேன்"

"என்னிடத்தில் இந்தவிதமாக பேச வேண்டாம், நான் சொன்னது புரிந்ததா?" என்ற வார்த்தையுடன் பயத்தில் திகிலுற்றவளாக அந்தப் பெண் விரைந்து நடந்து மறைந்தாள்.

தர்ம் பிரகாஷ், தனக்குள்ளே பிரமிப்படைந்தவராக அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு நின்றார். "இது நிஜம்தானா அல்லது இதுவும் ஒரு சொப்பனமா?" என்று அவர் தனக்குள்ளே எண்ணிக் கொண்டார். அந்தப் பெண் தனது மனைவி என்று முன் குறிக்கப்பட்டிராத பட்சத்தில் தனது குழந்தைப் பருவ நாட்களிலிருந்தே அநேக தடவைகளும் அவளை ஏன் தனது சொப்பனத்தில் கண்டு வந்திருக்க வேண்டும்? என்று நினைத்துக் கொண்டார்.

இப்பொழுது தர்ம் தான் தனது சொப்பனங்களில் பல தடவைகளும் பார்த்த பெண்ணை நேருக்கு நேராகச் சந்தித்தாயிற்று. இந்த சந்தர்ப்பத்தை எந்த ஒரு நிலையிலும் அவர் தன்னைவிட்டு கை நழுவ விட்டுவிட மனமில்லாதவராக இருந்தார். தான் சந்தித்த அந்தப் பெண் ஒருவளே தனது வாழ்க்கைத் துணைவி என்பதை அவருடைய உள்ளமானது எந்த ஒரு சந்தேகமும், கலக்கமுமின்றி உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது. தனது ஆத்திரமான நடவடிக்கையே அந்தப் பெண்ணை அதிர்ச்சியடையச் செய்ததே ஒழிய நிச்சயமாகவே அவளே தனது வருங்கால மனைவி என்று திட்டமாக நிச்சயித்துக் கொண்டு அந்தப் பெண்ணைச் திரும்பவும் சந்திக்க அவர் முயற்சித்தார். தர்ம் பிரகாஷ் அந்தப் பெண்ணின் வீடு எங்குள்ளது என்று விசாரித்துக் கண்டு பிடித்து விட்டார். தனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து அவர் அவளுடைய வீட்டிற்குச் சென்றார். அந்தப் பெண்ணின் தகப்பனார் நெல்சன் டேவிட் என்பவரைச் சந்தித்து அவருடைய மகளை தனக்கு கலியாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.

அந்தப் பெண்ணின் தகப்பனார் மிகவும் பொறுமையோடு இருந்ததுடன் தனது மறுப்பின் காரியத்திலும் மிகவும் திடமாக இருந்தார். "உலகத்தில் நீங்கள் ஒரு பெரிய மனிதர். அதுமட்டுமல்ல, நீங்கள் ஒரு புகழ்பெற்ற சினிமா நட்சத்திரமும் கூடத்தான். உங்களுடைய வம்சாவழியான உங்கள் மேன்மையான குலத்திலேயே நீங்கள் மிகவும் சிறந்த ஒரு பெண்ணை தெரிந்து கொள்ளலாம். எந்த தகப்பனானாலும் தங்களது குமாரத்திகளை உங்களுக்குத் தருவதில் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். தயவுசெய்து உங்கள் ஜாதியிலேயே உங்களுக்கு சமமான அந்தஸ்தில் உள்ள ஒருவரை தெரிவு செய்து கொள்ளுங்கள். நாங்கள் ஒரு ஏழை கிறிஸ்தவ குடும்பம். எங்களை சமாதானத்தோடு வாழவிடுங்கள்" என்றார் அந்தப் பெண்ணின் தந்தை.

ஆனால், தர்ம் பிரகாஷ் அவருடைய வார்த்தைக்கு இணக்கம் தெரிவிப்பது போல தெரியவில்லை. அடுத்து வந்த வாரங்களில் எல்லாம் நெல்சன் டேவிட் அவர்களின் வீட்டுக்கு நடையாக நடந்து கொண்டிருந்தார். அவர் 7 (ஏழு) தடவைகள் தனது வேண்டுகோளை திருப்பத் திரும்ப அந்தப் பெண்ணின் தந்தையின் முன் வைத்தார். ஆனால் ஒவ்வொரு தடவையும் அந்த தந்தையின் பதில் ஒரேவிதமாகவே இருந்தது.

தர்ம் பிரகாஷ் இந்தப் பெண் ஒருவளின் மீதே ஏன் இத்தனை பிரியம் கொண்டிருந்தார்? அவர் அழகு அழகு பெண்களுடன் அதிகமான நாட்களை செலவிட்டது உண்டு. அந்தப் பெண்களில் சிலர் அவர் மேல் தணியாத காதல் மோகமும் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் அவரை கலியாணம் செய்து கொள்ள விரும்புவதாக வெளிப்படையாகவே சம்மதம் தெரிவித்தார்கள். ஆனால் அவர் அந்த சோதனைகளை எல்லாம் போராட்டங்களின்றி எளிதாக கடந்து வந்துவிட்டார். அவர்களின் அழகுகள் எந்த ஒரு நிலையிலும் அவரை மேற்கொள்ள இயலாது போயிற்று. சினிமா உலகின் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதய தெய்வமான அழகு ராணி மீனா குமாரி கூட தனது அழகால் அவரைத் தனக்கென்று கவர்ந்து கொள்ள முயன்றும் இயலாது போயிற்று.

ஆனால், இந்தப் பெண், தன்னை எந்த ஒரு நிலையிலும் அழகு சாதனங்களால் அலங்கரித்துக் கொள்ளாத இந்த ஏழைப் பெண், மேலே கண்ட அழகுப் பெண்களைப்போன்ற உடல் வனப்பு அற்றவளாகவும், எந்த ஒரு நிலையிலும் அவர்களோடு ஒப்பிட முடியாதவளாக இருந்தபோதினும் அவள் தனக்கென்று ஒரு அழகைக் கொண்டிருந்தாள். அவள் தன்னை அலங்கரிக்க நினைத்திருந்தால் தனது முயற்சியில் அவள் வெற்றியும் பெற்றிருக்கலாம். ஆனால், அந்த எண்ணமே அவளுடைய இருதயத்தில் தோன்றவில்லை. அவளுடைய எண்ணங்கள் எல்லாம் பரலோகத்தைப் பற்றியதாக இருந்தது. அவளுடைய எண்ணங்கள் எல்லாம் மேலானவைகளைக் குறித்தாக இருந்தது.

இந்த சிறப்பான குணாதிசயமே தர்ம் பிரகாசை மிகவும் வலுவாகக் கவர்ந்திருந்தது. அவர் கல்லூரியில் படிக்கின்ற நாட்களில் சந்தித்த பெண்களானாலும் சரி, சினிமா உலகத்தில் அவர் சந்தித்த பெண்களானாலும் சரி அந்தப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையைக் குறித்தும், தங்களது நட உடைகளைக் குறித்தும், தங்களுடைய தொழில்களைக் குறித்து மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் எல்லாரையும் விட அவள் வித்தியாசமாகக் காணப்பட்டாள். தர்ம் பிரகாஷ், ஹோப் கிறிஸ்டினாவிடம் சரியான ஒழுங்கற்ற விதத்தில் பேசிய காரணத்தால் மட்டுமே அவள் கோபம் அடைந்தாளே தவிர அவள் தன்னளவில் எந்த ஒரு மேட்டிமையான எண்ணம், தான் ஒரு மேலானவள் என்ற நினைவு எல்லாம் அவளிடம் கிஞ்சித்தும் இல்லாதிருந்தது.

தர்ம் பிரகாஷ் அதைக் குறித்து ஆழமாக தன் உள்ளத்தில் ஆராய்ந்து பார்த்த போது மற்ற பெண்களிடத்தில் இல்லாத ஒரு மேன்மையான குண நலம் அவளிடத்தில் இருப்பதை அவர் கண்டார். தன்னுடைய தாயாரிடத்தில் மட்டுமே அப்படிப்பட்ட சிறப்பான குணநலன்கள் இருப்பதை அவர் கண்டிருக்கின்றார். தனது தாயின் குணநலன்களும் இந்தப் பெண்ணின் நடபடிகளும் ஒன்றாக இருப்பதை அவர் ஆச்சரியத்துடன் கவனித்தார். அப்படிப்பட்ட குணாதிசயம் முழு உலகமே ஒரு பக்கம் இருந்தாலும் இப்படிப்பட்ட பெண்கள் தனித்து நின்று காரியத்தைச் சாதிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

இதற்கிடையில் தர்ம் பிரகாஷ் வாழ்ந்த புஷ்கர் பட்டணத்தில் ஒரு நெருக்கமான சூழ்நிலை காணப்பட்டது. எல்லா செல்வமும், மிக உயர்ந்த சமுதாய செல்வாக்கும், உயர் குல ஜாதிக்காரனும், நல்ல அழகேந்திரனுமான புஷ்கர் பட்டணத்தின் பிரதான பூஜாரியின் மகன் தனக்கு சரி சமமான பிராமண அந்தஸ்தில் உள்ள ஒரு அழகான பெண்ணைத் தனக்கென்று தெரிந்து கொள்ளாமல் சாதாரண குடும்பத்தில் உள்ள மிகவும் எளிமையான ஒரு பெண்ணை நாடி ஓடிக்கொண்டிருக்கின்றான் என்ற பேச்சு எங்கும் அடிபட்டது. அந்தச் செயலுக்காக மக்கள் அவனை வெறுத்துத் தள்ளினார்கள்.

ஒரு நாள் பிற்பகல் தர்ம் பிரகாஷ் தனது அதிர்ஷ்டத்தை கடைசியாக ஒரு தடவை சோதித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் நெல்சன் டேவிட் அவர்களின் வீட்டை நோக்கிச் சென்றார். அவர் சென்ற சமயம் ஹோப் மாத்திரம் தனிமையாக வீட்டிலிருந்தாள். தங்களது வீட்டிற்கு அநேக தடவைகள் வந்து தனது தந்தையிடம் நீண்ட நேரம் சம்பாஷித்திருந்தபடியால் ஹோப் அவரை வீட்டிற்குள் வருவதற்கு அனுமதித்தாள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது "நான் எதற்காக தொடர்ந்து உங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றேன்? என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று தர்ம் பிரகாஷ் கேட்டார்.

"எங்கள் அப்பாவிடம் பேசுவதற்காக வருகின்றீர்கள், அப்படித்தானே?"

"ஆம், எதைக் குறித்து பேச வருகின்றேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?"

"அது எனக்குத் தெரியாது"

"உங்கள் தந்தையிடம் உங்களை எனக்குக் கேட்பதற்காக வந்து கொண்டிருக்கின்றேன். நான் உங்களை அதிகமாக விரும்புகின்றேன், உங்களை கலியாணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றேன். அதைச் செய்யும்படியாக எனக்குள் ஏதோ ஒன்று மிகவும் அழுத்திக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல, நாம் சந்தித்த முதல் சந்திப்பில் நான் உங்களிடத்தில் முதல் தடவையாக சொன்னது போல நான் உங்களை நூற்றுக்கணக்கான தடவைகள் எனது சொப்பனங்களில் பார்த்திருக்கின்றேன்."

அதற்கப்பால் தர்ம் பிரகாஷ் தான் கண்ட சொப்பனங்களை விபரமாகக் கூறிவிட்டு "நாம் இருவரும் வாழ்க்கைத் துணைகளாக இருக்க வேண்டும் என்பதை நான் நிச்சயமாக நம்புகின்றேன். அப்படி இல்லாவிட்டால் நான் உங்களைச் சந்திப்பதற்கு முன்னதாகவே எனது சொப்பனங்களில் பல தடவைகளும் நான் ஏன் பார்த்திருக்க வேண்டும்? நிச்சயமாகவே இது கடவுளுடைய வழிகாட்டுதல்தான்" என்று சொன்னார்.

"நான் உங்களை கலியாணம் செய்து கொள்ள முடியாது" என்று ஹோப் மறுத்துவிட்டாள்.

தர்ம் பிரகாஷ் சென்ற பின்னர் அவர் சொன்ன காரியங்களை ஹோப் தன் மனதில் வைத்து அதிகமாக சிந்தனை செய்தாள். அவர் சொன்னது சரியாக இருக்குமா? அப்படி இல்லாவிட்டால் உலகின் எல்லா பாக்கியங்களையும் கொண்ட அவரைப்போன்ற மனிதர் தன்னைப்போன்ற ஏழைப் பெண்ணை விரும்ப வேண்டியதன் அவசியம் எதற்கு? தன்னுடைய பெற்றோர் இந்தவிதமான திருமணத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிப்பதுடன் எந்த ஒரு சூழ்நிலையிலும் சம்மதம் தெரிவிக்கவே மாட்டார்கள் என்பதை அவள் நன்கறிந்திருந்தாள். அடுத்த பக்கத்தில் தர்ம் பிரகாசின் வார்த்தைகள் எந்த ஒரு சந்தேகத்திற்கு இடமின்றி முற்றும் உண்மையானவைகளாக இருந்தன. அவருடைய பார்வைகள், அவருடைய பழக்க வழக்கங்கள், நடை உடை பாவனைகள், அவருடைய புத்திக்கூர்மை அனைத்தும் அவளை பிரமிக்கப் பண்ணுவதாக இருந்தது. "ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?" என்று ஹோப் கிறிஸ்டினா தனக்குள்ளாக புலம்பிக் கொண்டிருந்தாள்.

தர்ம் பிரகாசின் உருக்கமான வேண்டுதல்களை எல்லாம் அவளுடைய பெற்றோர் திரும்பத் திரும்ப புறம்பாகத் தள்ளிவிட்டபடியால் அவர் தனது மனதை கடைசியாக திடப்படுத்திக் கொண்டு ஆண்டவர் தனக்கு காண்பித்த பெண் ஒருக்கால் இந்தக் கிறிஸ்டினாள் இல்லை போலும், தான் முட்டாள்தனமாக நடந்து கொண்டதாக நினைத்துக் கொண்டார்.

காரியங்கள் இப்படியிருக்கையில் ஒரு ஆச்சரியமான காரியம் நடந்தது. ஒரு நாள் தர்ம் பிரகாஷ் தனது வீட்டில் தனிமையாக இருக்கும்போது அதே பெண் அவருடைய வீட்டிற்கு வந்து "நான் உங்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என் ஆண்டவர் என்னிடம் சொல்லுகின்றார்" என்று சொன்னாள்.

"நீங்கள் சொல்லுவது என்ன?" நான் உங்கள் வார்த்தையை சரியாக கவனிக்கவில்லையே என்றார் தர்ம்.

"உங்களைத் திருமணம் செய்து கொள்ளும்படியாக என் ஆண்டவர் என்னிடம் சொன்னார்" என்று அந்த வார்த்தையை திரும்பவுமாக கூறினாள்.

"மிகவும் நல்லது, அப்படியானால் நாம் இருவரும் மிகவும் சீக்கிரமாக கலியாணம் செய்து கொள்ளலாம்" என்று அவர் கூறிவிட்டு "நான் உடனடியாக அதற்கான லைசென்ஸ்க்காக அரசாங்கத்திடம் விண்ணப்ப மனுச் செய்கின்றேன். அது தயாரானதும் நான் உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்" என்று சொன்னார். திரும்பவும் தர்ம் பிரகாசை சந்திப்பதாக கூறிவிட்டு ஹோப் தனது வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

இதற்கிடையில் அவருடைய தாயார் மருத்துவமனையிலிருந்து சுகத்துடன் வீட்டிற்கு அனுப்பிவிடப்பட்டார்கள். அவர்கள் வீட்டின் மேல் மாடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் முக்கியமான காரியமாக வெளியே செல்லுவதாக தனது அம்மாவிடம் கூறிவிட்டு தர்ம் பிரகாஷ், ஆஜ்மீர் பட்டணம் சென்று தனது நண்பனாகிய ஒரு நீதிபதியை அங்கு சந்தித்து தனக்கு ஒரு திருமண லைசென்ஸ் உடனடியாக வேண்டும் என்று கேட்டார். சில தினங்களில் அது தயாரானது. அதின்படி தர்ம் பிரகாஷ் ஷர்மாவும், ஹோப் கிறிஸ்டினாவும் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் திருமணம் செய்து கொண்டார்கள். தர்ம் பிரகாசின் சில ஆப்த நண்பர்கள் அதற்கு சாட்சியாக அதில் கலந்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பின்னர் இருவரும் தங்களுடைய இருப்பிடமான புஷ்கர் பட்டணத்திற்குச் சென்றார்கள்.

தர்ம் தனது புதிய மணவாட்டியுடன் தாயாருடைய அறைக்குச் சென்று "அம்மா, இவள் உங்கள் புதிய மருமகள் ஹோப் கிறிஸ்டினா" என்று அறிமுகப்படுத்தினார். அதைக் கேட்ட அந்த தாயார் திடீரென பிரமிப்பு அடைந்து சற்று நேரம் எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக நின்றார்கள். கண்ணீர் துளிகள் அவர்களின் கண்களிலிருந்து தாராளமாக வடிந்தது. "சினிமாவில் நடிக்க பம்பாய்க்குச் செல்ல வேண்டாம் என்று நான் உன்னைத் தடுத்ததற்கான தண்டனைதான் இதுவா?" என்று அவர்கள் அழுதார்கள். அப்பொழுது, ஹோப் தரைமட்டும் தாழ்ந்து தனது மாமியாரின் பாதங்களைத் தொட்டு "அம்மா, நீங்கள் என்னை உங்கள் சொந்த மகளாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் எனது மன விருப்பத்தின்படி இங்கு வரவில்லை. உங்களுக்கும், உங்களுடைய குமாரனுக்கும் சேவை செய்யும் பொருட்டாக என் தேவன் என்னை இங்கு அனுப்பினார்" என்று மிகவும் பணிவான குரலில் கூறினாள்.

அதைக் கண்ட தர்ம் பிரகாசின் தாயார் தனது மகன் கலியாணம் செய்து கொண்ட பெண் சாதாரணமான ஒரு பெண் அல்லவென்று உடனே கண்டு கொண்டார்கள். எனினும், உயர்ந்த குலம், சமுதாய அந்தஸ்து போன்ற சகல காரியங்களையும் மனதில் எண்ணி மிகுந்த வேதனையடைந்து தனது கணவனுக்கு சம்பவத்தைச் சொன்னார்கள். அதைக் கண்ட தர்ம் பிரகாசின் தந்தை சோகன்லால் மிகுந்த கோபம் அடைந்து தனது மகனை மிகவும் கடூரமாக திட்டித் தீர்த்து உடனடியாக வீட்டை விட்டு போய்விடும்படியாக கட்டளையிட்டார். அவருடைய கடும் கோபம் காரணமாக ஹோப் கிறிஸ்டினாவையும் தனது காலால் உதைத்து தள்ளினார். அவருடைய பலத்த கால் உதையால் அவள் தரையிலே உருள வேண்டியதானது. திரும்பவும் அவளை உதைத்து கதவிற்கு அப்பால் வெளியே தள்ளிவிட முயன்ற போது தர்ம் தனது மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியே போய்விடத் தயாரானார். இதற்கிடையில் ஹோப் தன்னை சுதாகரித்துக் கொண்டு எழுந்து பெற்றோர்களின் பாதங்களைப் பற்றிப் பிடித்தாள். தர்ம் பிரகாசின் தந்தை அவளை திரும்பவும் உதைக்கும்படியாக தனது காலை உயர்த்தின போது அவருடைய தாயார் தனது கணவனை சத்தமிட்டுத் தடுத்து "நிறுத்துங்கள், நீங்கள் உதைத்த உதை போதுமானமானது" என்று கூறினார்கள். அதற்கப்பால், ஹோப் கிறிஸ்டினாவுக்கு வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு அறை கொடுக்கப்பட்டது.

ஹோப் உடனடியாக வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டாள். வீட்டில் வேலை செய்ய மற்றவர்கள் இருந்தபோதினும் சுகயீனமான தனது மாமியாருக்கு சமையல் அறை சென்று சூப் தயாரித்துக் கொடுத்ததுடன் வீட்டாருக்கு வேண்டிய மத்தியான ஆகாரத்தையும் சமைக்கத் தொடங்கி விட்டாள். தர்ம் பிரகாசின் பெற்றோர் இள வயதிலிருந்தே காந்தீயவாதிகளானபடியால் ஜாதி, சமயம் பாராமல் கிறிஸ்தவளான ஹோப் கிறிஸ்டினா சமைத்த ஆகாரத்தை சாப்பிட்டார்கள். ஹோப் ஒரு கைதேர்ந்த சமையற்காரி ஆனதால் தர்ம்மின் பெற்றோர் அவளுடைய ஆகாரங்களை விரும்பிச் சாட்டார்கள். குடும்பத்தினருக்கு ஆகாரம் கொடுத்த பின்னர், வேலைக்காரர்களுக்கு ஆகாரம் கொடுத்து அவள் இறுதியில் தனது ஆகாரத்தைச் சாப்பிட்டாள்.

அடுத்த நாள் காலை விடிந்தபோது தர்ம் படுக்கையிலிருந்து எழுந்து தனது புதிய மனைவியை தேடியபோது அவள் அறையில் இல்லை. அவருடைய மனதில் சந்தேகங்கள் எழுந்தன. வீட்டை கொள்ளையிட அந்த கிறிஸ்தவ பெண் வந்தாளா? கலியாணத்திற்குச் சம்மதித்தது தந்திரமாக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுவதற்காகத்தானோ? என்று யோசித்துக் கொண்டு அறையை ஒட்டிய தாழ்வாரத்தைப் பார்த்தபோது ஹோப் முழங்கால்களில் நின்று கொண்டிருந்தாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேதாகமம் அவளுக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஹோப் ஏறெடுத்த ஜெபம் தர்ம் பிரகாசின் காதுகளில் விழுந்தது "அன்பின் ஆண்டவரே, இந்தக் குடும்பத்தினருடன் என்னை இணைத்த உம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும். இந்த வீட்டை நீர் ஆசீர்வதியும். தகப்பனே உம்முடைய நோக்கம் நிறைவேறுவதாக"

ஆரம்பத்தில் தர்ம் பிரகாசின் தாயும் தந்தையும் ஹோப்பை அங்கீகரிக்கவில்லை. ஆனால், நாளுக்கு நாள் மிகுந்த தியாக அன்போடும், பூரண அர்ப்பணிப்போடும் அவர்களுக்கு அவள் பணிவிடை செய்த காரணத்தால் அவர்கள் இருவரின் இருதயத்தையும் ஒரு மாத காலம் முடிவதற்குள்ளாக தன்னண்டை கவர்ந்து கொண்டு விட்டாள். அவள் குடிபுகுந்த புதிய வீட்டில் ஹோப் கிறிஸ்டினா என்ற பெயரை மாற்றி ஆஷா (ஆசை) என்ற ஹிந்தி பெயரை அவளுக்குக் கொடுத்தார்கள்.

மூன்று மாதங்கள் கடந்து சென்ற பின்னர் குடும்பத்தினர் மறைவாக நடந்த தர்ம் பிரகாசின் திருமணத்திற்கு வெளிப்படையான விருந்துபச்சாரம் ஒன்று வைத்து நாடு முழுவதிலுமுள்ள நண்பர்களையும், தங்களுக்கு அருமையானவர்களையும் அதற்கு அழைத்தார்கள். அப்படி அழைக்கப்பட்டவர்களில் தர்ம் பிரகாசின் நண்பனான ஒரு புகழ்பெற்ற சினிமா நடிகரும் ஒருவராவார். இந்தவிதமான மக்கள் நிரம்பிய விருந்துகளிலும், கொண்டாட்டங்களிலும் ஆஷா பொதுவாக கலந்து கொள்ளுவதில்லை. அவள் மிகவும் வெட்க சுபாவமுடைய எளிமையான பெண். தனது வழக்கமான எளிமையான புடவையைக் கட்டிக் கொண்டு தனது மாமியாரின் அருகிலேயே அவள் நின்று கொண்டு விட்டாள். அவளின் மாமியாரும் தனது மருமகளின் நிலை உணர்ந்து தான் முற்றிலும் சுகமடையாத காரணத்தால் மருமகள் தனது அருகிலிருந்து தன்னைக் கட்டாயம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவளுக்கு பாதுகாப்புக் கொடுத்து தன்னண்டை வைத்துக் கொண்டார்கள்.

இருப்பினும், தர்ம் பிரகாசின் மிகவும் நெருங்கிய சினிமா நட்சத்திரமான ஒரு நண்பன் மணமகளை தான் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தபடியால் ஆஷா விருந்தாட்கள் கூடியிருந்த அறைக்கு வரவழைக்கப்பட்டாள். ஆஷா வர வர அந்த நண்பன் வாய்விட்டுச் சிரித்து "தர்ம், நிலக்கரி சுரங்கத்திலிருந்து வைரம் வருவதாக நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால், இங்கு நான் வைரச் சுரங்கத்திலிருந்து ஒரு கருமையான நிலக்கரி கட்டி மாத்திரம் தான் வருவதை நான் காண்கின்றேன்" என்று அதிக சப்தமான குரலில் சிரித்தான். அந்த மனிதர் அந்த வார்த்தைகளைக் கூறி சிரிப்பதை ஆஷா நன்கு கேட்டுவிட்டாள். தனது முகத்தை தாழ்த்தியவளாக "ஆனால் சகோதரனே, நிலக்கரியும், வைரமும் கடவுளால் உண்டாக்கப்பட்டவைகள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நிலக்கரிதான் வைரமாக மாற்றமடையும்" என்று பதில் கொடுத்தாள். அந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த பிரபல்யமான மனிதர் அசந்து போய்விட்டார். அத்துடன் ஆஷாவிடம் மன்னிப்பும் கேட்டார்.

இப்பொழுது தர்ம் பிரகாசின் தாயார் தனது மருமகள் ஆஷாவிற்கு பக்க பலமாக இருந்தார்கள். பின் வந்த நாட்களில் ஆஷா தன்னுடைய குடும்பத்தின் மக்களுடைய இருதயங்களை மாத்திரம் அல்ல, அண்டை அயலகத்தாரின் உள்ளங்களையும் கவர்ந்து கொண்டு விட்டாள். தனது கணவரின் பெற்றோரை அவள் நேசிக்கின்ற அன்பும், அவளுடைய கற்புள்ள நடக்கையும், பெரிய குடும்பத்தை நடத்துகின்ற அவளுடைய திறமையும், அவள் குடி புகுந்த புதிய சமுதாயத்தின் ஒழுங்கு முறைகளுக்குத் தக்கதாக நடந்து கொண்ட விதமும் மிகவும் பெருமையாக யாவராலும் புகழ்ந்து பேசிக் கொள்ளப்பட்டது. ஆஷா, அந்த வைராக்கியமான இந்து ராஜஸ்தானி மக்களைப் போலவே ஆடை அணிந்ததுடன் அவர்களைப் போலவே எப்பொழுதும் தனது புடவையால் தனது தலையை மூடிக் கொண்டாள். புஷ்கர் பட்டணத்தின் சமுதாய ஒழுங்குகளுக்கு தன்னை முற்றும் கையளித்து நடந்து கொண்டாள். அவளுடைய மிகச் சிறப்பான குணநலன்களைக் கண்ட புஷ்கர் வாசிகளான பெற்றோர்கள் தங்கள் குமாரத்திகளையும் ஆஷாவிடமிருந்து குணநலன்களைக் கற்று அவளைப் போல நடக்கும்படியாக கேட்டுக் கொண்டார்கள்.

தர்ம் பிரகாசுக்கு, ஆஷா ஒரு முன்மாதிரியான மனைவியாக இருந்தாள். அவருடைய எல்லா காரியங்களையும் அவள் பொறுப்பெடுத்து செய்தாள். ஒவ்வொரு நாளும் அவர் போட வேண்டிய துணிகளை துவைத்து சுத்தம் செய்து அவைகளை அயர்ன் செய்து, காலை ஆகாரம் கொடுத்து அருமையாக வேலைக்கு அனுப்பி வைப்பாள்.

அவர்கள் கலியாணம் முடிந்ததும், தர்ம் தனது மனைவி ஆஷாவிடம் அவள் தனது கிறிஸ்தவ மார்க்கத்திலேயே நீடித்திருக்கலாம் என்றும், அது சம்பந்தமாக அவள் செய்யும் ஜெபங்கள், வேத வாசிப்பு எதற்கும் தான் தடை செய்வதில்லை என்றும் கூறிவிட்டார். அதற்கு ஒரு நிபந்தனை மட்டும் விதித்திருந்தார். எந்த ஒரு நிலையிலும் கிறிஸ்தவ மார்க்கத்திற்கு அவள் தன்னை மாற்ற முயற்சிக்க கூடாது என்றும், கிறிஸ்தவ மார்க்கத்தைப் அவர் பின்பற்ற எந்த ஒரு நடபடிகளும் மேற்கொள்ளக்கூடாது என்றும் கண்டிப்பாக கட்டளை கொடுத்திருந்தார்.

தர்ம் பிரகாஷ் சினிமாவில் வாலிபனாக நடித்துக் கொண்டிருந்தபோது எடுத்த படத்தையும், ஆஷா வாலிப பெண்ணாக இருந்தபோது எடுத்த படத்தையும் நீங்கள் காண்பதுடன் ஆஷா அம்மையார் இப்பொழுது விருத்தாப்பியத்தில் இருக்கும் படத்தையும் காணலாம்.

 

அன்பினால் கணவனை ஆதாயப்படுத்திக் கொண்ட
அதிசய பெண்மணி

"அன்பு நீடிய சாந்தமும் தயவும் உள்ளது" (1 கொரி 13 : 4)

தனது தாயாரின் வேண்டுகோளின்படி சினிமா படங்களில் நடிப்பதை விட்டுவிட்ட தர்ம் தனது அடுத்த கட்ட காரியங்களை உடனே கவனிக்காமல் சிறுநீரக அறுவை சிகிட்சை செய்து கொண்ட தனது தாயாரைக் கவனிக்கும் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாகவிருந்தார். தாயார் ஓரளவு சுகநிலைக்கு திரும்பியதும் அவருடைய கலியாணம் வந்தது. தாயார் தனது சாதாரண சுகநிலைக்குத் திரும்பியதும் திரும்பவும் வேலை செய்யும் காரியத்துக்குத் தர்ம் தனது கவனத்தைத் திருப்பினார்.

இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரும் தனது நெருங்கிய நண்பனுமான ஜி.டி.பிர்லாவின் குமாரன் கே.கே.பிர்லாவுக்கு இது விஷயமாக அவர் கடிதம் எழுதினார். ஜி.டி.பிர்லா தர்ம் பிரகாசின் தந்தையான சோகன்லாலுக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதனாவார். அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து மகாத்துமா காந்தி அடிகளுடன் கூட சுதந்திரப் போராட்டத்தில் போராடியவர்களாவார்கள். சுதந்திரப் போராட்டத்தில் காந்தி அடிகளுக்கு தேவையான பண உதவிகளை பிர்லா மறை முகமாகச் செய்து கொண்டிருந்தார். அதே பிர்லா என்பவர் 1920 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக 3 மாத காலங்கள் புஷ்கரிலுள்ள தர்ம் பிரகாசின் தந்தை சோகன்லாலின் அரண்மனை போன்ற வீட்டில் ஒளித்துத் தங்கியிருந்தார்.

தர்ம் பிரகாசின் கடிதம் கிடைத்ததும், கே.கே.பிர்லா அவரை உடனே கல்க்கத்தாவுக்கு வரும்படியாக தந்தி கொடுத்தார். அவர் வந்ததும் அவர் ஒரு வார காலம் முழுவதும் கல்க்கத்தா பட்டணத்தைச் சுற்றிக் காண்பித்தார். அதற்கப்பால் அவருக்கு அரண்மனை போன்ற ஒரு பெரிய அலுவலகத்தைக் கொடுத்து பிர்லா கம்பெனிகளுக்கெல்லாம் ஒன்றிணைந்த ஒரு உயரிய பதவியைக் கொடுத்து அவரைக் கல்க்கத்தாவிலேயே வைத்துக் கொண்டார். அவருடைய சிறப்பான சேவைகளைப் பாராட்டி பின் நாட்களில் அவருக்கு மிகவும் பெரிய சம்பளம் கொடுத்து தர்மை கனப்படுத்தினார். தர்ம் தனது மனைவி, பிள்ளைகளுடன் கல்க்கத்தாவிலேயே நீண்ட நாட்கள் இருந்தார்.

ஒரு நாள் காலை, ஆஷா காலை ஆகாரத்திற்கான காரியங்களை மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் தர்ம் பிரகாஷ் சமயலறைக்குள் வந்தார். ஆஷா தனது குடும்பத்தினர் யாவருக்குமான ஆகாரத்தை அவர்களாகவே சமைத்து விடுவார்கள். வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து சமைத்து விடுவார்கள். அந்த நேரம் அவர்கள் காய்கறிகளை வெட்டிக்கொண்டு வேலையின் மும்முரத்தில் இருந்தபடியால் வேத புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை அவர்களுக்கு வாசிக்கும்படியாக தர்ம் பிரகாசை அன்பாகக் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் வார்த்தையின்படியே அவர் வாசித்துக் காட்டினார்.

ஆனால், வாசித்து முடிந்ததும் அவருக்கு கடுங்கோபம் உண்டாயிற்று. "உன்னுடைய மார்க்கத்தில் என்னை ஈடுபடுத்தக்கூடாது என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?" என்று பலத்த சத்தம் போட்டுக்கொண்டு தனது கரத்திலிருந்த கடின அட்டை போட்ட அந்த வேதாகமத்தை அம்மையாரின் முகத்தில் வீசி எறிந்துவிட்டார். அது அவர்களின் வலது கண்ணின் மேல் பகுதியில் வெட்டி கீழே விழுந்தது. அதைக்குறித்த எந்த ஒரு கோபத்தின் அறிகுறியையும் காண்பிக்காமல் தரையில் விழுந்த வேதாகமத்தை எடுத்து அதின் அழுக்கான தாட்களை துடைத்து அது இருக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டார்கள். "என் அன்பே, கர்த்தர் உங்களை நேசிக்கின்றார். அவர் உங்களை ஒரு நாள் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுவார்" என்று சாந்தமாகக் ஆஷா கூறினார்கள்.

சில ஆண்டு காலங்களுக்குப் பின்னர் மற்றொரு சந்தர்ப்பத்தில் தர்ம் பிரகாஷ் தனது அன்றைய நாளின் கடினமான பணிகளை முடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார். அவருடைய இளைய குமாரத்தி "ஆண்டவரே, தயவுசெய்து என்னுடைய பாபுவுக்கு (அப்பாவுக்கு) உம்மைப் புரிந்து கொள்ள உதவி செய்யும். அவர்களுக்கு உம்முடைய காட்சியை கொடுத்தருளும்" என்று ஜெபித்துக் கொண்டிருந்தாள்.

தர்ம் பிரகாஷ் நாற்காலியில் வந்து அமர்ந்து பொறுமையோடு காத்திருந்தார். அவர் மிகுந்த களைப்போடும், பசியோடும் இருந்தார். அவர் வீட்டிற்குள் வந்ததை கவனிக்காமல் மனைவியும் பிள்ளைகளும் ஜெபத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய அரை மணி நேரம் காத்திருந்த அவருக்கு பொறுமை எல்லை தாண்டிப் போய்விட்டது. உடனே அவர் கோபத்தால் அறைக்குள் பாய்ந்தார். "நீ உனது ஜெபங்களில்தான் கருத்தாக இருக்கின்றாய். பசியோடிருக்கும் உனது கணவனைக் குறித்து உனக்கு எந்த ஒரு அக்கறையும் கிடையாது" என்று அவர் கூச்சலிட்டார். "வீட்டைவிட்டு வெளியே போ" என்று சத்தமிட்டார்.

"நீங்கள் வீட்டிற்குள் வந்தது எனக்குத் தெரியாது. நீங்கள் இப்படி தயவுசெய்து கோபம் கொள்ள வேண்டாம்" என்று கண்களில் கண்ணீர் வடிய ஆஷா அவருக்கு முன்பாக நின்று கெஞ்சிக் கொண்டிருந்தாள். ஆனால் தர்ம் பிரகாசின் கோபம் தணியவில்லை. "வீட்டைவிட்டு விட்டு உனக்கு விருப்பமான எங்கு வேண்டுமானாலும் போ" என்று கூறிக் கொண்டே ஆஷாவை கையைப் பிடித்துக் கட கடவென்று இழுத்துக் கொண்டு சென்று தலை வாசல் கதவுக்கப்பால் தள்ளி கதவை தாழ்ப்பாளிட்டுவிட்டார். அப்பாவின் கடும் கோபத்தைக் கண்ட பிள்ளைகள் சத்தமாக அழ அஞ்சியவர்களாக தங்கள் வாயை மூடிக்கொண்டனர். இரவின் பிந்திய நேரமாக இருந்தபடியால் தர்ம் அவர்களை படுக்கைக்கு அனுப்பிவிட்டார். அவர்களும் அழுது கொண்டே தூங்கிவிட்டனர்.

தர்ம் இராச்சாப்பாடு எதுவுமின்றி சோபாவில் படுத்து அப்படியே தூங்கிவிட்டார். அவர் கண் விழித்தபோது தான் எங்கே இருக்கின்றோம் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தார். அப்பொழுது இரவில் நடந்த சம்பவம் அவர் நினைவுக்கு வந்தது. அவர் தனது கடிகாரத்தைப் பார்த்தபோது அதிகாலை மணி 4 ஆகியிருந்தது. வெளியே இருள் அப்படியே இருந்தது. தனது மனைவி ஆஷாவை நினைத்துப் பார்த்தார். அவளுக்கு தான் செய்ததையும் நினைவுபடுத்தினார். அவள் இப்பொழுது எங்கேயிருப்பாள்? ஒருக்கால் அவள் தனது பெற்றோர்களின் வீட்டிற்கோ அல்லது குடும்ப நண்பர்கள் யாருடைய வீட்டிற்காவது சென்றிருப்பாள் என்று எண்ணிக் கொண்டார்.

அவர் படுக்கையிலிருந்து எழுந்து வீட்டின் தலைவாசல் கதவைத் திறந்தார். அப்பொழுது ஆஷா அவருடைய கால்களில் விழுந்தாள். தலைவாசல் கதவில் சாய்ந்தவண்ணமாக ஆஷா இரா முழுவதும் ஜெபித்துக் கொண்டிருந்திருக்கின்றாள். இப்பொழுது அவருடைய கோபம் தணிந்துவிட்டது. அவர் அவளை வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

இந்தவிதமான மூர்க்கமானதும், கீ.ழத்தரமானதுமான நடத்துதல்களின் மத்தியிலும் ஆஷா தனது பொறுமையை சற்றும் இழக்காமல் தொடர்ந்து ஒரு பாசமும் அன்புமுள்ள மனைவியாக அவரை மிகுந்த பாசத்தோடும், அன்போடும் கவனித்துக் கொண்டாள். ஆண்டவரைக் குறித்த அவளது ஜெப தியானங்களைக் குறித்தேயல்லாமல் வேறெந்த காரியத்திலும் தர்ம் அவளைக் குறித்து குற்றப்படுத்த இயலாததாகவிருந்தது.

ஒரு நாள் காலையில் தர்ம் தனது அலுவலகத்துக்குப் போக தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். உண்மையில், ஆஷாதான் அவரை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் என்று நாம் சொல்ல வேண்டும். அவருடைய கால் சட்டை, சேட், கைகுட்டையை எல்லாம் அயர்ன் பண்ணி கோட்டுப் பையில் கைக்குட்டையை வைத்து, சப்பாத்து, காலுறைகள் யாவையும் அவருக்குப்போட்டுக் கொள்ள உதவி செய்து, சப்பாத்தின் நூற் கயிறுகளை குனிந்து கட்டிக்கொண்டிருக்கும் வேளையில் "இன்று நீங்கள் மாலையில் நேரத்தோடு வீட்டிற்கு வாருங்கள்" என்று கூறினாள்.

"எதற்காக?" என்று தர்ம் கேட்டார்.

"ஒரு தேவனுடைய மனிதன் இந்தப் பட்டணத்தில் இருக்கின்றார். நீங்கள் அவரைச் சந்திக்க நான் விரும்புகின்றேன்"

"நான் உனக்குச் சொல்லுகின்றேன். இந்த நாளில் நான் உலக வங்கி அதிகாரிகளோடு மிகவும் பரபரப்பாக இருப்பேன். வேலை முடிந்ததும் அவர்களுடன் இராச்சாப்பாடு உள்ளது. இரவின் வெகு பிந்திய நேரம்தான் நான் வீடு திரும்ப முடியும்"

"நீங்கள் நேரத்திலேயே வந்தாக வேண்டும். என் ஆண்டவர் அதற்கு உங்களுக்கு உதவி செய்வார்"

"உனது கிறிஸ்தவ கடவுள், உலக வங்கி கூட்டத்திலிருந்து என்னை இங்கு கொண்டு வருவார் போலும்" என்று தர்ம் பிரகாஷ் ஆஷாவைப் பார்த்து கேலி செய்தார்.

"உண்மைதான்" மிகுந்த நம்பிக்கையோடு அவள் பதிலளித்தாள். "என் ஆண்டவர் எதையும் செய்ய வல்லவர். உங்களையும் இங்கு கொண்டு வர வல்லவர்"

"எத்தனை அறிவற்ற, மதவெறி பிடித்தவள்" என்று தர்ம் தனக்குள்ளாக எண்ணிக் கொண்டார். அவர் தனது கட்டுப்பாட்டை இழந்தவராக "உனது ஆண்டவரை குறித்து என்னிடம் பேச வேண்டாம் என்று எத்தனை தடவைகள் நான் உனக்குச் சொல்லுவது?" என்று கடும் கோபத்தில் கர்ச்சனை செய்தார்.

அவர் பேசிக் கொண்டிருக்கவே, திடீரென தனது காலால் ஆஷாவின் முகத்தில் ஒரு கடினமான உதை கொடுத்தார். அவரது சப்பாத்தின் இரும்பு லாடம் அவளது முகவாய்க்கட்டையில் பட்டது. அவள் பின் நோக்கி விழுந்து புரண்டாள். இரத்தம் அவளது புடவையிலும், தரையிலும் கொட்டியது. தனது புடவையால் இரத்தத்தை துடைத்தவளாக தொடர்ந்து அவரது சப்பாத்துக் கண்ணியை கட்டினாள்.

தனக்கு ஒன்றுமே நடக்காதது போல "நான் உங்களுக்குச் சொன்னது போல இன்று முன்கூட்டியே வாருங்கள். இப்படி கோபம் கொள்ளுவது நல்லதல்ல" என்று ஆஷா கூறினாள். தர்ம் பிரகாசின் கோபம் பகலவனைக்கண்ட பனி போல உருகி மறைந்தது. இப்படியாக உதைபட்ட எவராகிலும் இத்தனை அமைதியாக இருக்க முடியுமா? அவர் திரும்பவும் "என்னால் இன்று நேரத்தில் வர இயலாது. உலக வங்கி அதிகாரிகளை தொழிற்சாலையைச் சுற்றிக் காண்பிக்க வேண்டும். அதற்கப்பால் இரா விருந்து உள்ளது. எனவே நான் எல்லா நாட்களையும்விட இன்று இரவில் பிந்தியே வருவேன்"

திரும்பவும் ஆஷா மிகவும் அமைதியாக "அதைக் குறித்து கவலைப்படாதேயுங்கள், என் ஆண்டவர் உங்களை இன்று முன்கூட்டியே கொண்டு வருவார்" என்றாள்.

அவருடைய பையைத் தூக்கிக் கொண்டு காரைத் திறந்து அதற்குள் வைத்துவிட்டு அவரையும் அமரச் செய்தாள். தர்ம் காலால் உதைத்த நாடியிலிருந்து இன்னும் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. காரின் டிரைவர் ஓடோடி வந்து ஆஷாவின் நாடியில் இரத்தம் வடிவதைக் கண்டு "அம்மா உங்களுக்கு நாடியில் வெட்டுக் காயம் ஏற்பட்டிருக்கின்றதே, என்ன நடந்தது?" என்று கேட்டான்.

"ஆண்டவரின் அன்புதான் அது" என்று ஆஷா பதிலளித்துக் கொண்டே தனது கணவரின் முகம் நோக்கி "ஆண்டவர் இன்னும் உங்களை அதிகமாக நேசிக்கின்றார், அதைப்போல நானும் உங்களை நேசிக்கின்றேன்" என்று கூறி விடை பெற்றாள்.

காரின் கதவை தானே மூடி "நீங்கள் ஒரு நல்ல மனிதர். கோபம் மட்டும் படாதேயுங்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மாலையில் நேரத்திலேயே வாருங்கள்" என்று சொன்னாள். தர்ம் பிரகாஷ் ஆச்சரியத்தால் பிரமித்துப் போனார். "இத்தனை அவமரியாதையாகவும், கொடூரமாகவும் நடத்திய பின்பும் எப்படி ஒருவரால் கோபப்படாமல் இருக்க முடிகின்றது?" என்று ஆச்சரியமடைந்ததுடன். தனது செயலைக் குறித்து தானே வெட்கமும், வேதனையும் அடைந்தார். அந்தச் சமயத்தில்தானே ஒரு கணப் பொழுதில் அவர் வாசித்த மலைப் பிரசங்கங்கள் அவருடைய நினைவுக்கு வந்தது. ஆம், இதுதானே ஆண்டவருடைய வாழ்க்கை. "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்". இங்கே ஒரு பெண் கிறிஸ்து பெருமான் போதித்ததை சாதித்துக் காட்டுகின்றாளே! அந்த சாதனை ஒரு நாள் இரண்டு நாட்கள் சாதனை அல்ல கலியாணம் கட்டிய நாட்களிலிருந்து (11) பதினோறு நீண்ட ஆண்டுகள் சாதனை அல்லவா அது. அந்த மாறாத அன்பை அவள் எப்பொழுதும் அல்லவா காண்பித்துக் கொண்டிருக்கின்றாள்!

கார் கிளம்பியது. நீண்ட ஆண்டு காலங்களுக்கு முன்பாக அவர் கேட்ட "குழந்தைப் பருவத்திலிருந்து நீ தேடிக் கொண்டிருப்பவர் நானேதான்" என்ற குரல் அவர் காதுகளில் விழுந்தது. அந்த வார்த்தைகளைப் பேசியவர் ஆஷாவின் வாழ்க்கையின் மூலமாக தம்மை வெளிப்படுத்துகிறவராக இப்பொழுது காணப்பட்டார். கார் விரைந்து ஓடிக்கொண்டிருந்தது. அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அவர் அழுதார். "ஓ ஆண்டவரே, நீரும் இப்படிப்பட்ட ஒரு அன்பராகவேதான் இருப்பீரா? ஒரு பெண் இத்தனையாக என்னை நேசிப்பாளானால் உம்முடைய அன்பு எத்தனை பெரிதாக இருக்க வேண்டும்! இந்த அன்பைவிட வேறே பெரிய அன்பு இல்லையே" என்று அவர் தனக்குள் கண்ணீரின் ஏக்கத்துடன் முணங்கிக் கொண்டார்.

இந்தச் சமயத்தில் யாரோ ஒருவர் தன்னருகில் வந்து உட்கார்ந்து இருப்பதைப் போல அவர் உணர்ந்தார். "எத்தனை காலத்திற்கு நீ என்னை துன்பப்படுத்துவாய்? எவ்வளவு காலம் நீ என்னை விட்டு தூரமாக ஓடிக்கொண்டிருப்பாய்?" என்று அவர் கூறினார். வெகு நாட்களுக்கு முன்பாக கல்லூரியின் ஹாஸ்டல் அறையில் ஒரு நாள் இரவில் கேட்ட அதே குரல்தான் அது.

அதைக் கேட்டதும் அவரது பாவங்கள் எல்லாம், அவர் செய்து மறைந்த பாவங்கள் அனைத்தும் அவருக்கு முன்பாக வெளியரங்கமும், நிர்வாணமுமாகக் காணப்பட்டன. தான் ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது தனது தாயிடத்தில் சொன்ன பொய், அப்பாவிடமிருந்து திருடிய 5 ரூபாய், டிராயிங்க் ஆசிரியை தன்னுடன் படித்த தன்னுடைய வகுப்பு மாணவனுக்கு அதிக மதிப்பெண்கள் போட்ட காரணத்திற்காக அவர்களைக் கோபித்துக் கொண்ட காரியம் போன்ற அனைத்து பாவங்களும் அவருடைய கண்களுக்கு முன்பாக வந்து நிழலாடியது. இதுவரை தர்ம் தன்னை மிகவும் நல்ல மனிதன் என்று எண்ணிக்கொண்டிருந்த அவருடைய பெருமையான எண்ணங்களை எல்லாம் அவருடைய பாவங்கள் வந்து மறைத்து அதை கறைப்படுத்திவிட்டது. அவர் தன்னளவில் மிகுந்த வெட்கம் அடைந்தவராக ஆண்டவரைப் பார்த்து "ஐயா, நான் ஒரு மா பாவி, நான் உம்மண்டை வருவதற்கு அபாத்திரன்" என்று கூறினார்.

"இருப்பினும், நான் உன்னை நேசிக்கின்றேன். அநாதி சிநேகத்தால் நான் உன்னை சிநேகிக்கின்றேன், ஆதலால் நான் உன்னை என்னண்டை இழுத்துக் கொள்ளுகின்றேன்" என்று அந்தக் குரல் பதில் அளித்தது. அதற்கப்பால் இரண்டு கரங்கள் அவருக்கு முன்பாக தோன்றியது. அதிலே ஆணி கடாவுண்ட தழும்புகள் இருப்பதை தர்ம் கவனித்தார். ஆணி கடாவுண்ட அந்தக் கரங்கள் அவருடைய இருதயத்திற்கு நேராக வருவதை அவர் ஆச்சரியத்துடன் கவனித்தார். தான் இதுவரை துன்புறுத்தி வந்த தன் அருமை இரட்சகரின் கரங்கள்தான் அவை என்பதை அவர் கண்டார்.

அவருடைய வாழ்வில் முதன் முறையாக ஆண்டவருடைய அன்பையும், அவருடைய பிரசன்னத்தையும் அதிகமாக உணர்ந்தார். அந்த நாளில் நடந்த அவரது உலகப் பிரகாரமான அலுவல்கள் விரைவாகவே நல்லவிதமாக முடிவு பெற்றது. அந்த நாளின் காரியங்களை தேவன் தமது கரங்களில் பொறுப்பெடுத்து நடத்துவது போல காணப்பட்டது. மத்தியானத்துக்குள்ளாக அனைத்து காரியங்களும் முடிவுபெற்றதுடன் அந்த நாளில் நடைபெறுவதாக விருந்துபசாரம் உலக வங்கி சேர்மனுடைய திடீர் சுகயீனம் காரணமாக மறு நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தர்ம் பிரகாஷ், இப்பொழுது வீட்டிற்குப் போக அனுமதிக்கப்பட்டார். அந்தச் சமயம் "என் ஆண்டவர் உங்களை இன்று முன்கூட்டியே கூட்டிக்கொண்டு வருவார்" என்ற தனது பக்தியுள்ள மனைவியின் வார்த்தைகளை தர்ம் நன்றி நிறைந்த உள்ளத்துடன் நினைவுகூர்ந்தார்.

தர்ம் பிரகாஷ், ஆஷாவின் அன்பையும், உறுதியான விசுவாசத்தையும் கண்டு அடிக்கடி ஆச்சரியப்படுவார். ஆண்டவரைக் குறித்து அவள் அதிகமாக அவரிடம் பேசமாட்டாள். ஆனால், அவ்வப்போது இரட்சகர் இயேசு உங்களை நேசிக்கின்றார் என்று மட்டும் சொல்லுவாள்.

ஆனால், ஆஷா தனக்காக தொடர்ந்து இருதய பாரத்தோடு ஜெபித்துக் கொண்டிருக்கின்றாள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவளுடைய பெயர் ஹோப் கிறிஸ்டினா என்பதாகும். அந்தப் பெயரை தேவனுடைய பரிசுத்த மனிதர் பக்தசிங் அவர்கள் அவளுக்கு வைத்தார். அந்த மனிதனை அவர் சந்திக்கும்படியாகவே அவள் விரும்பிக் காத்துக் கொண்டிருந்தாள்.

தர்ம், வீட்டிற்கு வரவும் ஆஷா துணிகள் எல்லாம் மாற்றி புறப்படுவதற்கு ஆயத்தமாக இருந்தாள். நிச்சயமாகவே அவர் சந்தேகத்துக்கு இடமின்றி ஏற்ற நேரத்தில் வந்து சேருவார் என்பதை அவள் அறிந்திருந்தாள். "கர்த்தர் உங்களை வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டார்" என்று அவர் வீடு வந்ததும் ஆஷா கூறி மகிழ்ந்தாள்.

"ஆம், அந்த ஆண்டவர் என்னை இன்று காரில் சந்தித்தார்" என்று அவர் கூறினார். அதற்கப்பால் காரில் அலுவலகத்துக்குப் போகும் வழியில் நடந்த மற்ற காரியங்கள் அனைத்தையும் ஆஷாவுக்கு விபரமாக அவர் எடுத்துச் சொன்னார்.

 

தர்ம் பிரகாஷ் ஆண்டவர் இயேசுவின் அடிமையானது

"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்" (யோவான் 8 : 12)

காங்கிரஸ் கட்சியின் மிகுந்த ஆர்வமுள்ள தலைவனான தர்ம் தனது கட்சியின் வளர்ச்சிப்பணிகளுக்காக ஓய்வின்றி மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவதிலும், கூட்டங்கள் நடத்தி தங்கள் கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு அறிவிப்பதிலும் தீவிரமாக இருந்தார்.

1972 ஆம் வருடம் ராஜஸ்தான் மாநிலத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க தர்ம் பிரகாஷ் தனது காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் மூழ்கியிருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அவர் சென்று தனது கட்சிக்காகப் பேசினார். தர்ம் தனது கல்லூரி நாட்களிலிருந்தே ஒரு சிறந்த பேச்சாளனாகவும், தனது பேச்சாற்றலின் மூலமாக பெரிய கூட்டத்தை தன்னண்டை கூடிவரச் செய்யக்கூடியவருமாக இருந்தார். அதின் காரணமாக அவர் பேசும் கூட்டங்களுக்கெல்லாம் மக்கள் திரண்டு வந்தனர். தனது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமான பேச்சாளராக அவர் திகழ்ந்தார்.

ஒரு நாள் இவ்விதமான கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிவிட்டு வீட்டிற்கு வந்தார். மத்தியான ஆகாரத்திற்குப் பின்னர் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு திரும்பவும் சாயங்கால கூட்டங்களில் பேசுவதற்காக அவர் போவதாக இருந்தது. பொதுவாக அவர் தனது படுக்கைக்குச் செல்லுவதற்கு முன்பு ஏதாவது ஒரு புத்தகத்தை கொஞ்ச நேரம் வாசித்துவிட்டு அப்படியே தூங்குவது வழக்கமாக இருந்தது. அந்த நாளிலும் அவருடைய கட்டிலின் அருகில் கிடந்த மேஜையில் ஒரு சிறிய புத்தகத்தை அவர் கண்டார். அந்தப் புத்தகம் "கிறிஸ்துவுடனும், கிறிஸ்து இல்லாமலும்" (WITH and WITHOUT CHRIST) என்ற சாதுசுந்தர்சிங் எழுதிய புத்தகமாக இருந்தது. அந்தச் சமயம் அவர் படிப்பதற்கு வேறு எந்த ஒரு புத்தகங்களும் இல்லாதபடியால் அந்தப் புத்தகத்தை எடுத்து அவர் வாசித்தார்.

அந்தப் புத்தகத்தில் சாது சுந்தர்சிங், தான் எப்படியாக ஆண்டவர் இயேசுவின் சீடனாக ஆனார் என்பதைக் குறித்த ஒரு விபரம் அதில் எழுதியிருந்தார். வைராக்கியமான சீக்கிய குலத்தில் பிறந்த சுந்தர் ஒரு ஆழமான ஆவிக்குரிய தாகம் கொண்டிருந்தார். பரிசுத்த வேதாகமத்தைக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு கிறிஸ்தவ மிஷன் பாடசாலையில் அவர் கல்வி பயின்றார். சுந்தர்சிங், தேவனுடைய வோதாகமத்தையும், கிறிஸ்தவ மார்க்கத்தையும் பகைத்தார். இருப்பினும், மெய்யான கடவுளைத் தேடிக் கொண்டிருந்தார்.

அவருடைய தாயாரும், சகோதரனும் மரணமடைந்த பின்னர் கடவுளைக் குறித்த அவருடைய ஆசை மிகவும் அதிகரித்தது. ஒரு நாள் இரவில் அவருடைய தேவதா வாஞ்சை மிகவும் அதிகமாக இருந்ததால் அவர் கடவுள் தன்னையும், இரட்சிப்பின் வழியையும் தனக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும், தனது ஜெபத்தை அங்கீகரியாத பட்சத்தில் அடுத்த நாள் காலை அவர் தன் உயிரை ஓடும் இரயிலின் முன் விழுந்து மாய்த்துக் கொள்ளுவதாகச் சொன்னார்.

சுந்தர்சிங் தனது ஜெபத்தை ஏறெடுத்து முடித்துக் காத்துக் கொண்டிருந்தபோது அவர் ஒரு அற்புத ஒளியைக் கண்டார். அந்த ஒளியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருக்குத் தரிசனமானார். அன்பு நிறைந்த இரட்சகரின் மகிமையின் முகத்தைக் கண்டதும் அவர் தாக்குண்டார். "நான் உனக்காகவும், முழு உலகத்திற்காகவும் சிலுவையில் தொங்கி மரித்தேன்" என்று அவர் சொன்னார். சுந்தர்சிங் இரட்சகர் இயேசுவுக்கு முன்பாக கீழே விழுந்தார். அந்த நிமிடத்திலிருந்து சுந்தர் சிங் ஒரு புதிய மனிதனாக மாற்றம் பெற்று தனக்கு தரிசனமளித்த தன் அன்பின் இரட்சகருக்கு ஊழியம் செய்யலானார்.

தர்ம் பிரகாஷ் அந்தப் புத்தகத்தை வாசித்து அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கையில் அவருடன் ஒரு குரல் பேசுவதைக் கவனித்தார். அந்தக் குரலை அவர் அடையாளம் கண்டு கொண்டுவிட்டார். பல்லாண்டு காலங்களுக்கு முன்னால் அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் இரவு ஹாஸ்டலில் அந்தக் குரலை அவர் கேட்டார். ஒரு நாள் தனது மனைவி ஆஷாவை காலால் உதைத்து இரத்தம் வடியப்பண்ணிவிட்டு காரில் போய்க் கொண்டிருந்த வேளையில் அதே குரலை அவர் திரும்பவும் கேட்டதுண்டு. அந்தக் குரல் இனிமையானதும், அன்பு நிறைந்ததும் அதே சமயம் மிகுந்த வலுவானதுமாக இருந்தது. அந்தக் குரல் அவருடைய உள்ளத்திற்குள்ளிருந்தும், அவரைச் சுற்றியும் வந்து கொண்டிருந்தது. "தர்ம் பிரகாஷ், என் மகனே, என்னைவிட்டு எத்தனை காலம் விலகி ஓடிக்கொண்டிருப்பாய்?. எத்தனை காலம் நீ என்னை புறம்பாக்கி என்னைத் துன்பப்படுத்திக் கொண்டிருப்பாய்? நான் உன்னை நேசிக்கின்றேன். நீ என்னுடையவன்" என்று அந்தக் குரல் பேசியது.

"ஆண்டவரே, நீர் என்னை நேசிப்பதை நான் அறிவேன். கடந்த பல ஆண்டு காலங்களாக நான் உமது அன்பை ருசித்து வந்திருக்கின்றேன்"

"அப்படியானால், நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகின்றாய்? நீ ஏன் என்னைவிட்டு தூரமாக ஓடிக்கொண்டிருக்கின்றாய்?"

"ஆண்டவரே, நான் உம்மண்டை வருவதற்கு அபாத்திரன். நான் என்னைப் பார்க்கும்போது நான் முற்றும் தகுதியற்றவன் என்று அறிகின்றேன். நான் ஒரு பாவி, நான் ஒரு தொலைந்த பாதகன். உமக்கு அது தெரியும். கடந்த 20 ஆண்டு காலமாக நான் உம்மை எத்தனையாக துன்பப்படுத்தின பாவி என்பதை நீர் நன்றாக அறிகின்றவராக இருக்கின்றீர். நான் உமது பரிசுத்த நாமத்தை தூஷித்தவன். உமது வேத புத்தகங்களை எரித்து உமது வார்த்தைகளை என்னைவிட்டுத் தள்ளிப்போட்டவன்"

"இவை யாவற்றின் மத்தியிலும் நான் உன்னை நேசிக்கின்றேன், இப்பொழுதும் நேசித்துக் கொண்டிருக்கின்றேன்"

தர்ம் ஆண்டவரின் மகத்தான வல்லமையின் அன்பால் மேற்கொள்ளப்பட்டார். அந்த வல்லமை அவரை ஆட்கொண்டது. அது அவரைச் சுற்றிலும் வளைத்துப்பிடித்து மேற்கொண்டது. அவர் இருந்த அறை தேவனுடைய வல்லமையால் நிறைந்தது. அந்த வல்லமை அவரை எங்கேயோ ஒரு மகிமைக்குள் கொண்டு சென்றது. வர்ணிக்க இயலாத ஒரு ஆச்சரிய அற்புதம் அவருக்குள் நிகழ்ந்திருந்தது. "ஆண்டவரே, என் தேவனே, நான் பாவியான மனிதன். இந்த உலகம் முழுமையிலும் நானே மிகவும் மோசமான பாவி. நான் உமக்கு கீழ்ப்படியாதவனாக இருந்துவிட்டேன். நீர் என்னை இன்னும் நேசிப்பீரா?"

"ஆம், நான் உன்னை நேசிக்கின்றேன். நான் உன்னை நேசித்தபடியால் தானே எனது ஜீவனையே உனக்காகக் கொடுத்தேன்"

அடுத்து சம்பவித்த காரியம் விவரிக்க முடியாத ஒன்றாகும். தேவ வல்லமை அவரை தனது ஆளுகைக்குள் வைத்திருந்தது. அவருடைய இருதயம் தேவனுடைய ஒளி பிரவாகத்தால் நிரம்பியிருந்தது. அந்த ஒளியால் அவர் சூழப்பட்டிருந்தார். அவர் தனது முழங்கால்களில் தன்னறிவிழந்த நிலையில் தரையில் வீழ்ந்தார்.

அவர் கண் விழித்தபோது தரையில் அவர் முகம் குப்புற விழுந்து கிடப்பதை பார்த்தார். அவர் அழுது கொண்டிருந்தார். அவருடைய மனைவி ஆஷா அவருக்கருகில் நெடும் முழங்கால்களில் நின்று ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். தர்ம் எழுந்து உட்கார்ந்து தனது மனைவியிடத்தில் "நான் ஆண்டவரைச் சந்தித்தேன். நான் அவருடைய சமூகத்தில் இருந்தேன். அது முழுமையும் ஒளிப் பிரளயம்தான்" என்றார்.

ஆஷா, அவருடைய வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்படவில்லை. "அது எனக்கும் தெரியும்" என்று அவர்கள் நிதானமாக சொன்னதுடன் "நானும் கூட ஆண்டவருடைய பிரசன்னத்தை அந்த நேரம் என்னளவில் உணர்ந்தேன்" என்று பதில் கூறினார்கள்.

தனது கணவரைப்போல அவர்கள் தேவன் பேசிய வார்த்தைகளைக் கேட்காதபோதினும், அந்த பரலோக ஒளியை அவர்கள் பார்க்காதபோதினும் தேவனுடைய விசேஷித்த பிரசன்னத்தை அவர்கள் நிச்சயமாக உணர்ந்து கொண்டிருந்தார்கள். தனது கணவர் தரையிலே சுய நினைவு இழந்த நிலையில் விழுந்து கிடந்த போதினும் அதைக் குறித்து அவர்கள் கலக்கமடையவில்லை. இறுதியாக தனது கணவர் தன்னைப் பூரணமாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டார் என்பதை மட்டும் திட்டமாக அறிந்து அவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தார்கள். அதின் காரணமாக அவர்களும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள்.

அந்தச் சமயத்தில் தர்ம் பலத்த காற்றினால் அடியுண்டோடுகிற ஒரு காய்ந்த சறுகான இலையைப்போன்று அல்லது ஒரு பறவையின் சின்னஞ் சிறு இறகு போன்று ஆகாயத்தில் படிப்படியாக மேலே மேலே தேவனுடைய அன்பின் வல்லமையால் கொண்டு செல்லப்பட்டார். மெய் தேவனைத் தேடும் அவரது தேடல் பணி முற்றுப் பெற்று விட்டது. அவர் அன்பே உருவான தனது பரம தந்தையின் வீட்டிற்கு வந்து விட்டார். அவருடைய தாயார் அழுது தேடிய கடவுளைக் கண்டு கொண்டு விட்டார். அவர் சின்னஞ்சிறிய பாலகனாக இருந்தபோது "நீ எப்பொழுது அவருடைய அன்பை அறிந்து கொள்ளுவாயோ அப்பொழுது நீ அவரை கண்டு கொள்ளுவாய்" என்று கூறிய அவரது தாயாரின் அதே கடவுளிடத்தில் தர்ம் இப்பொழுது வந்து அடைக்கலம் புகுந்துவிட்டார். நீண்ட, நீண்ட கால தேடுதலுக்குப் பின்னர் இறுதியாக அவர் கடவுளைக் கண்டு கொண்டார். உண்மையில், நீண்ட காலமாக காணாமற் போன மகன் கண்டு கொள்ளப்பட்டான்.

நல்ல வேளை, அந்த நாளின் பிற்பகல் தர்ம் பிரகாசும், ஆஷாவும் மாத்திரம் அவர்கள் வீட்டின் அந்த அறையில் தனித்து இருந்தார்கள். அறையில் நடந்து முடிந்த காரியங்களை யாராவது வெளியாட்கள் ஜன்னல் வழியாக பார்த்திருப்பார்களானால் உண்மையில் அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றுதான் நினைத்திருப்பார்கள். தர்ம், ஆஷா இருவரும் தங்கள் கண்களிலிருந்து வடிந்த கண்ணீர்களால் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள். அவர்கள் அழுதார்கள், சிரித்தும் கொண்டார்கள். அவர்கள் இருவரும் ஜெபித்து ஆண்டவருக்கு துதி ஏறெடுத்தார்கள்.

"ஓ, நான் அவரை எத்தனையாக நேசிக்கின்றேன்" என்று ஏக்கங்கள் சிரிப்புகளின் ஊடாக தர்ம் கூறினார்.

"நீங்கள் அவரை நேசிப்பதை விட அவர் உங்களை அதிகமாக நேசிக்கின்றார்" என்று ஆஷா பதில் சொன்னார்கள்.

"நாம் ஆண்டவர் இயேசுவுக்குச் சொந்தமாக இருப்பது எத்தனை ஆச்சரியமானது" என்றார் தர்ம்.

"ஆம், நாம் நமது இரட்சகருக்கு என்றும் என்றுமுள்ள சதா காலங்களிலும் சொந்தமாக இருக்கின்றோம். உலகத்தில் ஒருவராலும், உலகத்தின் எந்த ஒரு பொருளாலும் நம்மை அவருடைய கரத்திலிருந்து பிரிக்க முடியாது" என்று ஆஷா சொன்னார்கள்.

"ஆண்டவரின் அன்பு இந்த உலகத்தில் யாவற்றைக் காட்டிலும் மா பெரிது. அவர் மிகவும் அருமையானவர். நமது ஜீவனைக் காட்டிலும் அவரது அன்பு மகா அருமையானது" என்று தர்ம் வலியுறுத்திக் கூறினார்.

அந்த நாளிலிருந்து தர்ம் பிரகாசின் வாழ்க்கை முழுமையாக மாற்றம் அடைந்தது. அன்பின் ஆண்டவர் இயேசுவின் உண்மைச் சீடனாக அவர் தன்னைப் பதிவு செய்து கொண்டார். ஆண்டவரைச் சந்தித்தற்கப்பால் உலகம் தரக்கூடாததும், உலகம் எடுத்துக் கொள்ளக்கூடாததுமான தேவ சமாதானம் அவருடைய இருதயத்தை நிரப்பிற்று.

அதற்கப்பால் தர்ம் தனது வாழ்க்கையை ஆண்டவர் இயேசுவுக்கு ஒப்புவித்தார். அவருடைய வாழ்க்கை ஒரு புதிய திருப்பத்தைக் கண்டது. தனது மனைவியோடு சேர்ந்து ஆண்டவருடைய வார்த்தைகளை வாசித்து தியானித்தார். படிப்படியாக மற்ற தேவனுடைய பிள்ளைகளுடன் தொடர்பு கொண்டு கர்த்தரில் வளர்ந்தார். ஆண்டவருடைய வார்த்தைகளை வாசிக்க வாசிக்க அவருடைய உள்ளான மனிதன் அவரில் வல்லமையாக பெலன் கொண்டது.

 

தேவ வசனத்தின் வல்லமை

தர்ம் பிரகாஷ் மனந்திரும்பிய இந்த நாட்கள் ஒன்றில் பண்டிதர் ஓம்கார்நாத் பட்நாய்க் என்ற ஒரு பிரபல ஜோதிடர் தர்ம் பிரகாஷ் வீட்டிற்கு அவரைச் சந்திப்பதற்காக ஒரிசாவிலுள்ள புவனேஷ்வரத்திலிருந்து வந்திருந்தார். தந்தையின் வேண்டுகோளின்படி தர்ம் பிரகாசை சந்திப்பதற்காக அவர் வந்திருந்தார். புவனேஷ்வரத்திலுள்ள ஜெகநாத் பூரி கோயிலைச் சேர்ந்தவர் அவர். அவர் மிகவும் ஞானமும், நம்பிக்கையுமுள்ள மனிதராவார். அவர் நட்சத்திரங்களைப் பார்த்து கூறும் ஜாதக கணிப்புகள் மிகவும் துல்லிபமான அளவில் சரியாக இருக்கும். எதிர்காலத்தைக் குறித்துக் அவர் கூறும் ஜாதகங்கள் அப்படியே வந்து சம்பவிக்கும்.

அவர் தர்ம் பிரகாசுடன் அவருடைய வீட்டின் பொது அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய உடம்பு திடீரென அளவுக்கு அதிகமாக வியர்த்து வடியத் தொடங்கியது. அதைக் கண்ட தர்ம் கவலைப்பட்டு அதின் காரணத்தை அவரிடம் கேட்டார். "எனக்கு உள்ளாக ஏதோ ஒன்று என்னை பலமாக அழுத்துவதை நான் உணருகின்றேன்" என்று ஜோதிடர் ஓம்கார்நாத் கூறிக்கொண்டே "ஏதோ ஒரு புதுமையான வல்லமை, ஏதோ சக்தி என்னை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது" என்று சொன்னார்.

"ஆனால் இங்கு எந்த சக்தியுமே இல்லையே" என்று தர்ம் பதிலளித்தார்.

தர்ம் பிரகாசின் வீட்டில் உள்ள ஒரு கீழ் அறையில் அவருடைய முற்பிதாக்கள் சக்தியை வழிபட்டு வந்தனர். அங்கே ஒரு பூஜை அறையும் உண்டு. ஆச்சரியமான காரியங்கள் அங்கு நடைபெறுவதுண்டாம். கடவுளுக்கு பிரசாதம் வைத்திருக்கும் கூடையில் பிரசாதத்திற்குக் கீழாக ஒரு அழகிய ரோஜா பூ இருக்குமாம். இப்படிப்பட்ட விநோதமான காரியங்கள் எல்லாம் அங்கு நடப்பதுண்டாம். ஆனால், இப்பொழுது தர்ம் பிரகாசும் அவருடைய தந்தையும் அந்த அறையில் பூஜை செய்வதை விட்டுவிட்டதுடன் தர்ம் இப்பொழுது தனியாக வேறொரு வீட்டில் வசிக்கின்றார். ஜோதிடர் தன்னை ஒரு சக்தி ஆட்கொண்டிருக்கின்றது என்ற காரியத்தைக் குறித்து தர்ம் பிரகாஷ் ஆச்சரியப்பட்டு "ஒருக்கால் நீங்கள் உடல் நலம் சரி இல்லாமல் இருக்கலாம், இங்கே எந்த ஒரு சக்தியும் கிடையாது" என்று சொன்னார்.

ஜோதிடர் ஓம்கார்நாத் பட்நாய்க் விட்டபாடில்லை. "இந்த வீட்டில் கட்டாயம் சக்தி இருக்கவே இருக்கின்றது" என்று கூறிக் கொண்டே இருக்கையிலிருந்து எழுந்து அவருடைய ஜெப அறைக்கு நேராக காந்தமானது இரும்பைத் தன்னண்டை இழுப்பது போல அவர் ஜெப அறை சுவரின் அலமாரியில் இருந்த வேதாகமத்திற்கு நேராக விரைந்து சென்றார். அங்கே சென்றதும் அவர் தனது தலைப்பாகையை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, தலை குனிந்த நிலையில் வேதாகமத்திற்கு முன்பாக அப்படியே சற்று நேரம் நின்று கொண்டிருந்தார். "இந்த சக்திதான் உங்கள் வீட்டில் இருக்கின்றது" என்று அவர் சொன்னார். "இந்த சக்தி உங்களுக்கு இருக்கும்போது வேறு என்ன உங்களுக்கு வேண்டும்? இது உங்களோடிருக்கும் போது உங்களுக்காக கூறப்படும் எல்லா ஜோதிடங்களும் வீணும் வியர்த்தமுமாகப் போய்விடும்" என்று சொன்னார். இந்த சம்பவம் தர்ம் பிரகாசின் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையின் வல்லமை எப்படிப்பட்டது என்பதையும் அதை தான் இன்னும் எத்தனை மேன்மையாக ஏற்று கனப்படுத்தி ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதையும் விளங்கப்பண்ணிற்று.

 

தேவ மனிதர் பக்தசிங்கை சந்தித்தது

1976 ஆம் ஆண்டு மே மாதம் தர்ம் பிரகாஷ் குஜராத் மாநில முதலமைச்சர் ஹித்தேந்திரபாய் தேசாய் அவர்களை சந்திக்கச் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக ஒரு குழுவுக்கு தலைமை ஏற்று அவர் போய்க் கொண்டிருந்தார். அவர் ஆமதபாத் பட்டணம் வந்து சேர்ந்தபோது அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழிப் பாதையில் "பரிசுத்த சபை கூடுகை" (HOLY CONVOCATION) "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" போன்ற கொடிகள் பட்டணத்து வீதிகளில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அவர் ஆச்சரியம் அடைந்து காரின் டிரைவரை அது குறித்துக் கேட்டார். அந்த மனிதனுக்கு ஒன்றும் தெரியாததால் காரை ஓரிடத்தில் நிறுத்தி அங்குள்ள ஒரு டீ கடைக்கார மனிதனிடம் அது குறித்து கேட்டபோது அவன் "கிறிஸ்தவர்கள் ஏதோ கூட்டங்கள் நடத்தப் போகின்றார்கள். சீக்கிய மதத்திலிருந்து கிறிஸ்தவனாக மாறிய ஒரு சர்தார்ஜி அந்தக் கூட்டங்களில் பேசுகின்றார். அவருடைய பெயர் பக்தசிங் என்பதாகும்" என்றான்.

பக்தசிங் கல்க்கத்தாவுக்கு ஒரு தடவை வந்திருந்தபோது தனது கணவர் தர்ம் பிரகாசை அவரைச் சந்திக்கும்படியாக கேட்ட போதுதான் அவர் கோபம் அடைந்து தனது சப்பாத்துக்காலால் அவர்களை மிதித்து காயப்படுத்தி இரத்தம் வடியப்பண்ணிய போதினும் ஆசா அம்மையார் அதினிமித்தம் கோபம் கொள்ளாமல் தனது சாந்தமான அன்பின் நடத்தையை அங்கு விளங்கப்பண்ணினார்கள். அந்த நிகழ்ச்சியும் அவருடைய கண்களுக்கு முன்பாக ஓடோடி வந்தது.

அதுமட்டுமல்ல ஆசா மூன்று நாட்கள் குழந்தையாக இருந்தபோது அவளுக்கு ஹோப் கிறிஸ்டினா என்ற பெயரைச் சூட்டியதும் இந்த பக்தசிங்தான். அவளுடைய தகப்பனார் நெல்சன் டேவிட் அவர்களும், பக்தசிங்கும் இரட்சகர் இயேசுவின் நற்செய்தியை எங்கும் சுற்றித் திரிந்து பிரசிங்கித்திருக்கின்றார்கள்.

தர்ம் பிரகாசுக்கு பக்தசிங்கை காண மிகவும் ஆசையாக இருந்தபடியால் பக்தசிங் தங்கியிருந்த கட்டிடத்திற்குச் சென்றார். அங்கே நூற்றுக்கணக்கானோர் வரவேற்பு அறையில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். அங்கு பெயர்களை பதிவுசெய்து கொண்டிருந்த மனிதரிடம் "அங்கிள் பக்தசிங் அவர்களை நான் சந்திக்கக் கூடுமா?" என்று அவர் கேட்டார். அவருடைய மனைவி அவரை அப்படி அழைப்பதனால் தர்ம் பிரகாசும் அப்படியே அழைத்தார்.

"நான் வருந்துகின்றேன், சகோதரனை நீங்கள் இப்பொழுது சந்திக்க இயலாது. மாலையில் அவர் கூட்டங்களில் பேசுகின்றார். அந்தச் சமயத்தில் நீங்கள் அவரை சந்திக்கலாம்" என்று கூறினார்.

"நான் திரும்பவும் மாலையில் வந்து பார்ப்பது என்பது முற்றும் கூடாத காரியமாகும். கூட்டத்தில் அல்ல, அவரை நான் ஒரு கணம் மட்டும் சந்தித்தால் போதுமானது. எனது மனைவியும், மாமனாரும் அவரை நன்கு அறிவார்கள். நான் அவருடைய புத்தகங்களை வாசித்திருக்கின்றேன். தயவுசெய்து நான் அவரை இப்பொழுதே சந்திக்க உதவி செய்வீர்களா?" என்று அந்த மனிதரை வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

"அது முடியாத காரியம், தயவுசெய்து மாலைக்கூட்டங்களுக்கு வாருங்கள்" என்று அவர் மறுபடியும் சொன்னார்.

அந்த நேரத்தில் அங்கு ஒரு வயதான மனிதர் வந்தார். அவர் தர்ம் பிரகாசைப் பார்த்து அவர் யார் என்றும், அவருடைய தேவை என்னவென்றும் கேட்டார்.

"நான் காங்கிரஸ் கட்சியின் பொதுக் காரியதரிசி. நான் அங்கிள் பக்தசிங்கைப் பார்க்க வேண்டும். அவர்களுடைய புத்தகங்களை எல்லாம் நான் வாசித்திருக்கின்றேன். ஆனால், நான் அவர்களை இப்பொழுது பார்க்க முடியாது என்று சொல்லுகின்றார்கள். நான் சாயங்காலம் திரும்பவும் இங்கு வர இயலாது. எனவே அவர்களுடைய தரிசனம் இப்பொழுதே எனக்கு வேண்டும்" என்று தர்ம் பிரகாஷ் கூறினார்.

"அது சாத்தியமாகுமா என்று நான் பார்த்துவிட்டு வருகின்றேன்" என்று கூறிக்கொண்டே அந்த வயதான மனிதர் மேல் மாடிக்குச் சென்றார்.

சற்று நேரத்தில் நல்ல தேகக் கட்டோடு கூடிய வயதான ஒரு மனிதர் கீழே படிக்கட்டுகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார். அவர் தூய வெள்ளை சட்டையும், வெள்ளை லுங்கியும் உடுத்திருந்தார். அவர் வந்த பொழுது அறையிலிருந்த மக்கள் எல்லாரும் அமைதியாக எழுந்து நின்றார்கள். அதைக் கொண்டு அவர்தான் பக்தசிங் என்பதை தர்ம்பிரகாஷ் திட்டமாக அறிந்து கொண்டார். அவர் படிக்கட்டுகளில் இறங்கி வரும்போதே தர்ம் பிரகாசை இதற்கு முன்பாக நன்கு பார்த்து பழகியது போல தனது பார்வையை அவர் மேலேயே பதித்தவராக இறங்கி வந்து கொண்டிருந்தார். அவர் கீழே இறங்கி வந்து "சகோதரனே வாருங்கள்" என்று கட்டித் தழுவி வெகு காலத்திற்கு முன்பு காணாமற் போன தனது சகோதரனை திரும்பவும் காண்பதுபோல அணைத்துக் கொண்டார். அதற்கப்பால் அவர் எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் அவரை மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார். தர்ம் பிரகாஷ் தன்னை பக்தசிங்கிற்கு அறிமுகப்படுத்த விரும்பினார். ஆனால் பக்தசிங் "நான் உங்களை அறிவேன், தேவன் உங்களை இங்கு அனுப்பியிருக்கின்றார்" என்று கூறினார்.

அவர்கள் மேல் வீட்டறைக்குள் பிரவேசித்தபோது "சகோதரனே, நாம் ஜெபிக்கலாம்" என்று பக்தசிங் முழங்காலூன்றினார். தர்ம் பிரகாசுக்கு முழங்காலூன்றிப் பழக்கமில்லை. ஜெபித்தால், சம்மணம் போட்டு அல்லது நின்றுகொண்டு ஜெபிப்பதே அவரது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுது அவர் பக்தசிங் அருகிலேயே முழங்காலூன்றி நின்றார். "ஆண்டவரே, உம்மைக் குறித்து அதிகமாக அறிந்து கொள்ள வசதியாக நீர் இந்த வாலிப சகோதரனை இங்கு கொண்டு வந்ததற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகின்றேன். நீர் உமது சித்தத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும்" என்று ஜெபித்தார். ஜெபித்து முடிந்ததும் "உங்களுடைய பொருட்கள் எங்கே இருக்கின்றது?" என்று பக்தசிங் தர்ம் பிரகாசிடம் கேட்டார்.

"எனது பொருட்கள் காரில் இருக்கின்றது. காங்கிரஸ் கட்சி விவகாரங்கள் சம்பந்தமாக முதல் அமைச்சரைக் காண வந்தேன். உங்களுடைய தரிசனம் எனக்கு கிடைத்துவிட்டது. இப்பொழுது நான் உங்களிடம் விடைபெற்றுக் கொள்ளுகின்றேன்" என்றார் தர்ம்.

"இல்லை சகோதரனே, ஆண்டவர் உங்களை இங்கு அனுப்பியிருக்கின்றார்" அதற்கப்பால் பக்தசிங் ஒரு ஆளை அனுப்பி "அவர்களுடைய சாமான்கள் காரில் இருக்கின்றது. அவைளை இங்கு எடுத்துக் கொண்டு வாருங்கள்" என்று ஆள் அனுப்பினார். ஆச்சரியவசமாக தர்ம் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அரசியல் காரணமாக வந்த காரியம் சற்று தாமதித்தாலும் பரவாயில்லை என்று தர்ம் சும்மா இருந்துவிட்டார்.

அந்த நாளின் மாலைக்கூட்டத்தில் சகோதரன் பக்தசிங் வேதாகமத்திலிருந்து ஒரு வல்லமையான தேவச் செய்தியைக் கொடுத்தார்.

அந்த தேவச் செய்தியின் வெளிச்சத்தில் தர்ம் தனது அந்தரங்க வாழ்வின் காரியங்களை பரிசோதிக்கலானார். அவர் தன்னுடைய பாவங்களை கண்டார். அப்பொழுது அவர் மனங்கசந்து அழுதார். வார்த்தைகளினாலும், கிரியைகளினாலும் செய்த பாவங்கள் மாத்திரம் அல்ல, வெளிக்குச் சொல்லாத பாவ எண்ணங்கள். அரசியல் எதிரிகள் மேல் கொண்ட கசப்புணர்ச்சி, இங்குமங்குமான வெள்ளைப் பொய்கள், பதவி மோகம், ஆடம்பர வாழ்க்கை, பெருமை, உண்மைதான், தர்ம் பிரகாஷ் பெருமை கொள்ள எத்தனையோ காரியங்கள் இருந்தன. மிகமிக உயர்ந்த பிராமண குல பிறப்பு. உலகப் புகழ்பெற்ற ராமாயாணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை எழுதிய வேதவியாசருடைய நேரடி பரம்பரையில் பிறந்தவர், புஷ்கர் சமஸ்தானத்தை அநேக நூற்றாண்டுகள் அரசாண்ட ராஜகுல வம்சாவாளியில் பிறந்த மகன், ஐசுவரியம், அந்தஸ்து அனைத்தும் அவருடையது. சமுதாயத்தில் உயர்ந்த இடம், தாலந்துகள் எல்லாம் அவருக்கிருந்தது. தர்ம் மாபெரும் வெற்றியாளனாக விளங்கினார். அடுத்த ராஜஸ்தான் மாநில முதலமைச்சராகக் கூடிய அனைத்து வாய்ப்புகளும் அவருக்கு இருந்தன. பிறப்பிலே அவர் ஒரு சாதனையாளன். நல்ல அழகுள்ளவர், அறிவாளி, தத்துவ ஞானி, இந்து வேதங்களை ஆராய்ந்து அறிந்த மேதை, சமுதாயப் பண்பாடுகள் நிறைந்தவர். அதே சமயம் அன்பும் இரக்கமும் கொண்டவர். அவரைப் போல அத்தனை சிறப்புகளாலும் அலங்கரிக்கப்பட்டவர் இந்த உலகத்தில் வெகு சிலர் மட்டுமே என்று கூட நாம் சொல்லலாம்.

எத்தனை புகழ்ச்சிகளும், உலக அந்தஸ்துகளும் அவருக்கு இருந்தபோதினும் தேவனுடைய பரிசுத்த வார்த்தைகளுக்கு முன்னால் அவர் தன்னை ஆராய்ந்தபோது "தேவனே நான் ஒரு மகா பாவி, நான் உம்மண்டை வர எந்த ஒரு தகுதியும் அற்றவன், நான் ஒரு நீசன்" என்று கதறி அழுவதைவிட வேறெதையும் அவரால் செய்யக்கூடாததாக இருந்தது.

"மகனே, நான் உன் பாவங்களை மன்னித்தேன். நான் உன்னை முற்றுமாகக் கழுவினேன். உனது இரட்சண்யத்தை என் ஜீவனையே உனக்காகக் கொடுத்து சம்பாதித்தேன். நான் உன்னை நேசிக்கின்றேன். நீ என்னுடையவன்" என்று தேவன் அவருக்கு திரும்பவும் நினைப்பூட்டினார். தர்ம் பிரகாஷ் தரையிலிருந்து எழுந்து பக்தசிங்கிடம் சென்று உடனே தனக்கு திருமுழுக்கு கொடுக்கும்படியாகக் கேட்டார்.

அவருடைய விருப்பப்படியே மறு நாள் காலையில் அவருக்கு திருமுழுக்கு கொடுக்கப்பட்டது. யாருக்கும் அப்படி கொடுப்பதில்லையானாலும் அன்று அந்த ஞானஸ்நான ஆராதனை தேவ பிரசன்னத்தோடு நடந்தது. கூடி வந்திருந்த பெருங்கூட்டத்திற்கு முன்னர் இயேசு இரட்சகரை தான் விசுவாசித்த காரியத்தையும், அவர் தனது வாழ்வில் இடைபட்ட ஆச்சரியமான அனுபவங்களையும் மிகவும் விபரமாக தர்ம் பிரகாஷ் தேவ ஜனத்துக்கு முன்பாக எடுத்துரைத்தார்.

தர்ம் பிரகாஷ் 10 நாட்களாக எல்லாவற்றையும் மறந்து தேவ பிள்ளைகளின் அன்பிலும், ஐக்கியத்திலும், தேவ சமூகத்தின் ஒளியிலும், மற்ற விசுவாச தேவ பிள்ளைகளுடன் தேவனுடைய வார்த்தைகளை வாசித்து தியானிப்பதிலும் செலவிட்டார். மனந்திரும்பாத கிறிஸ்தவ மக்கள் எந்த சபைகளில் இருந்தாலும் அவர்களையும் நேசித்து அவர்களுக்கு இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டுமென்ற தேவ அன்பின் பாரம் அந்தக் கூட்டங்களில் அவருக்கு இன்னும் அதிகமாக உண்டாயிற்று.

சகோதரன் பக்தசிங் அவர்களின் வழிகாட்டுதலின்படி தர்ம் கர்த்தருடைய வசனங்களை வாசித்து ஆச்சரியமான சத்தியங்களைக் கற்றுக் கொண்டார். தர்ம் பிரகாஷ் அந்தக் கூட்டங்களிலிருந்து பிரியும் வேளை வந்த போது தனது சொந்தக் குடும்பத்தையே என்றென்றுமாக விட்டுப் பிரிவது போல இருந்தது. அவரும் அழுதார். அனைவரும் அழுதார்கள். பக்தசிங் தர்ம் பிரகாசை கட்டிப் பிடித்தவராக "ஆண்டவரே, உம்முடைய பிள்ளையை நீர் உமது ஆளுகைக்குள் வைத்துக் கொள்ளும். உம்மை அறிகிற அறிவில் அவர்கள் உயர்ந்தோங்கி வளருவார்களாக" என்று உள்ளம் உருகி ஜெபித்தார்.

தர்ம் வீட்டிற்கு வந்ததும் அவரை அவருடைய மனைவி ஆஷா ஆனந்த கண்ணீர் வடித்த நிலையில் வரவேற்றார்கள். அவர் தன்னுடைய பெற்றோர்களையும், குடும்பத்தின் மக்களையும் கூடி வரச் செய்து அவர்களிடத்தில் ஏதோ ஒரு முக்கியமான காரியத்தைச் சொல்லப் போவதாகக் கூறினார். அரசியல் காரியங்கள் சம்பந்தமாக குஜராத்துக்குச் சென்ற மகன் தனது அரசியலில் ஏற்பட்ட வெற்றி நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவான் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்க அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு அவருக்கு ஏற்பட்ட புதிய ஐக்கிய உறவைக் குறித்தும், அதற்கு அடையாளமாக அவர் எடுத்துக் கொண்ட திருமுழுக்கு குறித்தும் விபரமாகப் பேசினார்.

"என் மகனே நீ ஒரு கிறிஸ்தவனாக ஆகிவிட்டாயோ?" என்று அவரின் தாயார் கேட்டுக்கொண்டே அழுதார்கள்.

"அம்மா, நான் ஒரு கிறிஸ்தவனாக ஆகவில்லை. நான் இயேசு கிறிஸ்துவின் சீடனாகிவிட்டேன்" என்றார் தர்ம். "இயேசுவுடைய சீடனாக மாறிவிட்டாலும், அதுவும் கிறிஸ்தவனாக ஆகிவிடுவதன் அர்த்தம்தான்" என்றார்கள் அவருடைய தாயார்.

"நீ கிறிஸ்துவின் சீடனாகிவிட்டாயா?" அவருடைய தந்தை தர்மை கேட்டார்கள். "இயேசு கிறிஸ்துவின் சீடனாகிவிடுவதன் அர்த்தம் உனக்குத் தெரியுமா?"

"ஆம் அப்பா"

"உனது வேதாகமத்தை என்னிடம் கொண்டு வா"

தர்ம் பிரகாஷ் தனது சூட்கேசை திறந்து நடுங்கும் கரங்களுடன் அதே சமயம் ஆச்சரியத்துடன் தனது வேதாகமத்தை எடுத்துக் கொண்டு சென்று பயத்துடன் தந்தையிடம் கொடுத்தார்.

"இப்பொழுது நீயாகவே லூக்கா சுவிசேஷம் 14 ஆம் அதிகாரம் 26 ஆம் வசனத்திலிருந்து வாசி" என்றார்.

"யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும் தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாக இருக்கமாட்டான்"

"நிறுத்து, இங்கே உனது தாயார். அவர்கள் உன்னை மிக அதிகமாக நேசிப்பவர்கள். இங்கே உனது மனைவி ஆஷா. அவள் உன்னை எத்தனை பாசத்தின் அன்போடு நேசிப்பவர்கள் என்பதை நீ அறிவாய். உனது பிள்ளைகள் இருவரும் இங்கே இருக்கின்றனர். அவர்களை நீ எத்தனை அன்பாக நேசிக்கின்றாய் என்பது உனக்குத் தெரியும். இவர்கள் எல்லாரையும் உன்னால் வெறுக்க முடியுமா?" அவருடைய தந்தை அவரிடம் சவால் விட்டுக் கேட்டார்.

மிகவும் நீண்ட அமைதிக்குப் பின்னர் தர்ம் "ஆம் அப்பா, நான் என் ஆண்டவர் இயேசுவுக்குத்தான் என் வாழ்வில் முதலிடம் கொடுப்பேன். மற்ற எல்லாம் இரண்டாம் இடத்தில்தான் உள்ளது" என்றார்.

"அரசியலில், நீ இராஜஸ்தான் மாநில முதலமைச்சராகக்கூடிய அனைத்து வாய்ப்புகளும் மிகவும் பிரகாசமாக உனக்கு இருக்கின்றன. அதை எல்லாம் விட்டுவிட ஆயத்தம்தானா?"

"ஆம். எனது ஆண்டவருக்காக நான் எதையும் செய்ய ஆயத்தமாக இருக்கின்றேன்"

"சொல்லுதல், இனிப்பான மிட்டாயை சாப்பிடுவதைப் போன்றது. ஆனால் காரியத்தைச் செய்வது அக்கினியில் உருக்கப்பட்ட இரும்பு திரவத்தை குடிப்பதற்குச் சமமானது ஆகும். அதைச் செய்ய உன்னால் முடியுமா?"

"நான் என் ஆண்டவருக்காக மரிக்கவும் ஆயத்தமாக இருக்கின்றேன். அவருடைய அன்புக்காக நான் எதையும் சகித்துக் கொள்ள ஆயத்தமாக இருக்கின்றேன்" என்றார் தர்ம்.

தர்ம் பிரகாசின் தந்தை சோகன்லால் தனது இருக்கையிலிருந்து எழுந்து தனது மகனைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டு மிகவும் சப்தமாக "மகனே, நீ அந்தக் காரியத்தைச் செய்வதை நான் பார்க்கும்போது நானும் உன்னைப் பின்பற்றி வருவேன்" என்று கதறியவராகச் சொன்னார்.

தனது தந்தையின் வார்த்தைகளால் தர்ம் தொடப்பட்டார். தனது தந்தை தனது குடும்பத்திலிருந்தும், தனது இந்து சமுதாயத்திலிருந்தும் தன்னை தூக்கி வீசி எறிந்துவிடுவார் என்பதை அவர் நிச்சயமாக எதிர்பார்த்தார். அவருடைய தகப்பனார் வேதாகமத்தை அத்தனை பூரணமாக படித்து வைத்திருப்பதைக் குறித்து ஆச்சரியமடைந்து "வேதாகமத்தை இத்தனை நன்றாக நீங்கள் எப்படி படித்துக் கொண்டீர்கள்?" என்று கேட்டார்.

"நான் வேதாகமத்தை பல தடவைகள் படித்து முடித்திருக்கின்றேன். விசேஷமாக நான் சிறைச்சாலையில் இருந்த நாட்களில் அதை அதிகமாக படித்திருக்கிறேன். காந்தி அடிகளும் வேத புத்தகத்தால் போதனை அடைந்து அதை ஒழுங்காகப் படித்ததுடன் அதின் போதனைகளை சுதந்திரப் போராட்ட காலத்தில் சத்தியாகிரகத்தில் நடைமுறைப் படுத்தியிருக்கின்றார்" என்றார்.

கொஞ்ச காலத்திற்குப் பின்னர் தர்ம் பிரகாஷ் தம்முடைய சொந்த புஷ்கர் பட்டணத்தின் புஷ்கர் தீர்த்தத்திலுள்ள கவ்காட் என்ற இடத்தில் அங்கு கூடி வந்த ஏராளமான இந்து ஆச்சாரியர்களுக்கு பிரசங்கித்தார். இந்து வேதாந்தங்களிலிருந்து உதாரணங்கள் எடுத்து ஒவ்வொரு மனிதனும் கடவுளை காண வாஞ்சிப்பதையும், அதற்கு தடையாக உள்ள மனிதனின் பாவத்தையும், அந்தப் பாவங்களைப் போக்கக்கூடிய தேவாட்டுக் குட்டியான இயேசு இரட்சகர் மேல் விசுவாசம் வைப்பதைக் குறித்தும், அவருடைய சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும், அவரது ஜீவித்தலையும் குறித்து இந்து வேதங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி யாரும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்க முடியாத விதத்தில் வெகு அருமையாகப் பேசினார்.

அந்த பிரசங்கத்திற்குப் பின்னர் கொஞ்ச நேரம் எங்கும் அமைதி நிலவினது. பின்னர் அந்தக்கூட்டத்திலிருந்த சிலர் "அவன் புத்தி கோளாறு ஆகிவிட்டான்" என்று சொன்னார்கள். அதிலிருந்த நல்ல படிப்பாளிகள் அவரிடம் வந்து கேள்விகள் கேட்டனர். அவர்களுக்கு அவர் இந்து வேதங்களிலிருந்தே பதில் கொடுத்து அவர்களே தங்கள் மட்டாக அதை எடுத்துப் படிக்கும்படியாக கேட்டுக் கொண்டார்.

தர்ம் பிரகாஷ் கர்த்தரைப் பற்றிய அறிவிலும், அன்பிலும் அதிகமதிகமாக வளர வளர இனி தன்னால் தனது அரசியல் மூலமாக தேசத்துக்கு சேவை செய்ய முடியாது என்பதை வெகு திட்டமாக உணர்ந்தார். "அரசியல் எனது வழி அல்ல. எனது வழி ஜீவனுள்ள தேவன் ஒருவரேதான்" என்பதை அவர் நிச்சயப்படுத்திக் கொண்டார்.

1976 ஆம் ஆண்டு இந்தியாவின் கிழக்குப்பகுதியிலுள்ள காலிம்பாங் என்ற இடத்தில் "பரிசுத்த சபை கூடுகை" கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. ஒரு நாள் மாலை நேர கூட்டங்களில் கலந்து கொண்டுவிட்டு தர்ம் அங்குள்ள இரண்டு மலைகளுக்கு நடுவாக உள்ள ரஸ்தாவில் கீழும் மேலுமாக நடந்து கொண்டிருந்தார். அந்த வேளை அவர் தேவனுடைய பிரசன்னத்தை உணர்ந்தவராக தனக்குள்ளாக பேசும் தேவனுடைய குரலைக் கேட்டார். "என் மகனே, இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய உன்னால் கூடாது. நீ என்னிடத்தில் வந்திருக்கின்றாய், நீ எனக்குச் சொந்தமானவன். நீ அதிக மேன்மைகளை எதிர்பார்க்கும் அரசியலுக்கா அல்லது எனக்கா சேவை செய்யப்போகின்றாய் என்பதை உன் மட்டாக தீர்மானித்து விடு. உலகத்துக்குப் பின்னாகவா அல்லது எனக்குப் பின்னாகவா நீ செல்லப் போவதை இப்பொழுதே, இந்த இடத்திலேயே முடிவு செய்து விடு" என்று கர்த்தர் அவரோடு பேசினார்.

"ஆண்டவரே, நான் உமக்குச் சொந்தமானவன், உமக்கு மட்டுமே நான் இனி ஊழியம் செய்வேன்" என்று ஆண்டவரிடம் கூறினார். அந்தச் சமயமே அவருடைய இருதயத்திலிருந்து மன பாரங்கள் எல்லாம் மறைந்தோடிப் போயிற்று.

 

பாரத பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரைச் சந்தித்தது

அவர் டில்லிக்குச் சென்று யாரையும் ஆலோசனை கலக்காமல் காங்கிரஸ் கட்சியிலிருந்து தன்னை விடுவிக்கும்படியாக ஒரு ராஜிநாமா கடிதம் எழுதினார். அதை எடுத்துக் கொண்டு டில்லி ரயில் நிலையத்திலிருந்து நம்பர் ஒன்றிலுள்ள சஃடார்ஜங் சாலையிலுள்ள இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரைச் சந்திக்கச் சென்றார். அது 1977 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் முதல் தேதி ஆகும். காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னை விடுவிக்கும்படியாக எனது ராஜிநாமா கடிதத்தை உங்களிடம் கொடுக்க வந்திருக்கின்றேன்.

"இத்தனை நாட்களும் நீ எங்கே இருந்தாய்?" என்று பிரதமர் அவரை கேட்டார்.

"காலிம்பாங் என்ற இடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த கிறிஸ்தவ கூட்டங்களில் ஆண்டவருடைய பிள்ளைகளோடு இருந்தேன்"

"சோகன்லால்ஜியின் மகனுக்கு கிறிஸ்தவ கூட்டங்களில் பங்கு பெற என்ன வந்தது?" என்று அம்மையார் திருப்பிக் கேட்டார்கள்.

"நீ ஒரு கிறிஸ்தவனாகிவிட்டாயா?" என்று பிரதமர் வினவினார்கள்.

"ஆம், நான் இயேசு கிறிஸ்துவின் சீடனாகிவிட்டேன்" என்று தர்ம் பிரகாஷ் பதிலளித்தார்.

"பைபுள் புத்தகத்தை நீ எத்தனை தடவைகள் வாசித்திருக்கின்றாய்?"

"நான் இதுவரை ஒரு தடவை கூட அதை வாசிக்கவில்லை" என்றார் தர்ம்.

"நான் பைபுளை எத்தனை தடவைகள் வாசித்திருக்கின்றேன் தெரியுமா? நான் அதை மூன்று தடவைகள் வாசித்திருக்கின்றேன். நான் ஸ்விட்சர்லாந்து தேசத்தில் மாணவியாக படித்துக் கொண்டிருக்கும்போது அதைப் படித்திருக்கின்றேன்" என்று சொன்னார்கள்.

"அம்மா, நான் அதை ஒரு தடவை கூட முழுமையாக வாசிக்காமல் என் இருதயம் நிறைந்த தேவ சமாதானத்தைப் பெற்றிருக்கின்றேன். மூன்று தடவைகள் அதை வாசித்த நீங்கள் மூன்று மடங்கு அதிகமான தேவ சமாதானத்தை உங்கள் இருதயத்தில் பெற்றிருக்க வேண்டுமே" என்றார் தர்ம்.

"நீ என்னை தமாஷ் பண்ணுகின்றாயா?"

"இல்லை அம்மா, நான் உங்களுக்காக கவலைப்படுகின்றேன். இந்த உலகத்தில் உங்கள் பாதுகாப்பையும், இந்த உலக வாழ்வுக்குப் பின்னால் உள்ள மறுமை வாழ்வின் பாதுகாப்பைக் குறித்தும் நான் கவலைப்படுகின்றேன்."

"நீ எனக்கு பாடம் கற்பிக்கின்றாயா? நீ என்னை நல்வழிப்படுத்த முயற்சிக்கின்றாயா? உன்னைப் போன்ற இளைஞன் இப்படியாக பேச துணிகரம் கொண்டிருப்பதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை" என்றார்கள் இந்திரா காந்தி அம்மையார்.

"அம்மா, நான் உங்களை நேசிக்கின்றேன். உங்களுடைய நலனில் நான் உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கின்றேன். நான் உங்களிடம் மனத்தாழ்மையுடன் சொல்லுகின்றேன் "இந்த உலகத்தில் நாம் அடைந்து கொண்ட ஆட்சியும், அதிகாரமும், அரசியல் புகழ், மேன்மைகள்அனைத்தும் நீண்ட காலம் நீடித்திருக்காது. ஆண்டவர் இயேசுவோடுள்ள நமது ஐக்கிய வாழ்க்கை மட்டுமே என்றும் நிலைத்திருக்கும்" என்றார் தர்ம்.

"நீ என்னை ஒரு கிறிஸ்தவனாக மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றாயா?"

"இல்லை அம்மா, நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள நான் விரும்புகின்றேன்"

"புத்தியீனமான வார்த்தைகளைப் பேசாதே. நீ போய் நமது காங்கிரஸ் கட்சிக்கான காரியங்களை கவனி"

தர்ம் தனது ராஜிநாமா கடிதத்தை அம்மையாருக்கு முன்னால் வைத்தபோது அவர்கள் அதை கடுங்கோபத்தில் வீசி எறிந்துவிட்டார்கள். "நீ போய் உனது தந்தையிடம் பேசு. வாலிபர்களான நீங்கள் என்னை சோர்ந்து போகப்பண்ணுகின்றீர்கள்" என்றார் இந்திரா அம்மையார்.

தூக்கி வீசப்பட்ட ராஜிநாமா கடிதத்தை தரையிலிருந்து தர்ம் எடுத்து தபால் நிலையம் சென்று ஒரு கவர் வாங்கி அதை தபால் மூலம் அனுப்பிவிட்டு மிகுந்த தேவ சமாதானத்தோடு புஷ்கர் பட்டணத்திலுள்ள தமது வீட்டிற்குச் சென்றார்.

 

என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்து போகிறவன்
அதை இரட்சித்துக் கொள்ளுவான்

தர்ம் பிரகாசின் தந்தை பண்டிதர் சோகன்லால் "இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது கூர்மையான வாளின் நுனியில் வெறுங்காலால் நடப்பதற்கு சமம்" என்று விவேகானந்தர் சொல்லியிருப்பதாகச் சொல்லுவார்.

தர்ம பிரகாஷ், ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றிச் செல்லும் தனது புதிய பாதையில் நடக்க தொடங்கியதும் அவருடைய பாதங்கள் விரைவிலேயே காயப்பட ஆரம்பித்தன. அதின் முதல் காயம் அவர் தனது சரீரத்தில் மேற்கொண்ட துர்ப்பழக்கங்களாகும்.

அவர் டால்மியா கம்பெனிகளின் பொது மேலாளராக இருந்த சமயம் யாரோ ஒருவர் கொடுத்த பான் (வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, சில மணமான பொருட்கள், மற்றும் வாசனையூட்டப்பட்ட புகையிலை சேர்ந்தது) ஒன்று சாப்பிட்டார். அதைச் சாப்பிட்டதும் அது நல்ல ருசியாகவும், மணமாகவும் இருந்தபடியால் பின்னர் நாளொன்றுக்கு ஒவ்வொன்று வீதம் சாப்பிட்டு அது வளர்ந்து வளர்ந்து ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பின்னரும் அவர் 10 பான் சாப்பிட்டார். அதின் அடிப்படையில் ஒரு நாளுக்கு 50 பான் எடுத்து வந்தார்.

தர்ம் ஒரு நாள் காலையில் ரோமர் 6 ஆம் அதிகாரத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது பாவத்துக்கு மரிப்பதைக் குறித்து (ஆம், எல்லா பாவ வழிகளையும் விட்டுவிடுவதைப் பற்றி) அங்கு எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையை அவர் கவனித்தார். "தர்ம் பிரகாஷ், பான் சாப்பிடும் கெட்ட பழக்கத்திலிருந்து நீ இன்னும் விடுதலையாகவில்லை" என்று கர்த்தர் அவரோடு பேசுகின்ற ஒரு உணர்வு அவருக்கு வந்தது.

மறு நாள் காலையில் காலை சாப்பாட்டுக்குப் பின் அவர் அருந்துவதற்காக அவருடைய வேலைக்காரன் வழக்கம்போல சில பான்களை அவருக்குக் கொண்டு வந்து கொடுத்தான். அவன் பெயர் மோகன்லால் என்பதாகும். "மோகன்லால், தர்ம் பிரகாஷ் செத்துப் போனான். செத்த பிணத்திற்கு நீ எப்படி பான் கொடுத்து அதை சாப்பிடச் செய்ய முடியும்?" என்றார் அவர். மோகன்லாலுக்கு ஒன்றுமே ஓடவில்லை. சற்று நேரம் அவன் குழப்பத்தில் இருந்தான். பின்னர் தர்ம் அதை தொடக்கூட மறுத்துவிட்டதால் அதை அப்படியே அவன் எடுத்துச் சென்றுவிட்டான்.

அவர் சினிமா படங்களில் நடித்த நாட்களிலும், வர்த்தக துறையின் நிர்வாக பொறுப்புகளிருந்த நாட்களிலும், மதுபானம் மற்றும் சிகரெட் புகைக்கும் பழக்கம் அவரை ஆட்கொண்டிருந்தது. பீர் என்ற மது வகையை அவர் ஒழுங்காகக் குடிப்பதுடன் அதிக அளவிற்கு சிகரெட்டும் புகைத்துவிடுவார். அந்தக் கொடிய கெட்ட பழக்கங்கள் அவரை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அதிலிருந்து விடுதலை என்பதை அவரால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. கர்த்தருக்குள் வந்த பின்னர் அந்தக் கொடிய பழக்கங்களையும் தேவ கிருபையால் போராடி மேற்கொண்டார்.

கிறிஸ்து இரட்சகரை சந்திப்பதற்கு முன்னரே தேவன் அவரை விபச்சாரம், வேசித்தனம், மோக இச்சைகளுக்கு தயவாக விலக்கிக் காத்துக் கொண்டார். சினிமா உலகின் அழகு அழகுப் பெண்கள் அவருடைய தோளைத் தட்டிக் கொண்டு சென்ற போதும் அவர் அந்த பாவப்படுகுழியில் விழவில்லை. பணத்தைக் குறித்த பேராசையிலிருந்தும் அவர் தப்பிக் கொண்டார். தேவன் அவருடைய தாயாரின் மூலமாகவும், தேசத் தந்தை மகாத்துமா காந்தி அடிகளின் மூலமாகவும் இந்த கொடிய பாவங்களுக்கு விலகி வாழ ஆலோசனை கொடுத்தார்.

இன்னும் சில காரியங்களும் உள்ளன. "நம்புவது இலகுவான காரியம், ஆனால் செய்வது மகா கடினம்". செய்வது என்பது உருகிக் குழம்பான கொதிக்கும் இரும்பு திரவத்தை குடிப்பதற்கு சமமாகும். நம்புவதும் ஏற்றுக்கொள்ளுவதும் சுலபம். ஆனால், செய்வதில்தான் உண்மையான சோதனை உள்ளது. "கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கும், அவருடைய சித்தம் செய்வதற்கும் பெரிய விலைக் கிரயம் கொடுத்தாக வேண்டும்" என்று தர்ம் பிரகாசின் தந்தை சொல்லுவார். அதின்படி தர்ம் அந்த கிரயத்தைக் கொடுக்கவே செய்தார்.

ஒரு பூர்வீக சொத்து, அத்துடன் பண்டிதர் சோகன்லாலுக்கும் அநேக ஏக்கர் நிலங்களும், சில கில்லோகிராம் எடையுள்ள பொன்னும், வெள்ளியும் இருந்தது. அவைகளுக்கு பூரண சொந்தக்காரர் தர்ம் பிரகாஷ் மாத்திரமேதான். தர்ம் தனது தந்தையைப் பார்த்து அவருடைய ஜீவ காலத்திலேயே அவருடைய ஆஸ்தி ஐசுவரியங்கள் அனைத்தையும் தான தருமம் செய்துவிடும்படியாகக் கேட்டுக் கொண்டார். ஆஷாவும் தனது மாமனார் அப்படியே செய்து விடும்படியாகக் கேட்டுக் கொண்டார்கள். "எனக்கு இந்த தங்கம் வெள்ளி நகைகள் எதுவுமே வேண்டாம். எனக்கு என் தேவனுடைய அன்பும், கணவனாகிய உங்களுடைய அன்பு மட்டும் கிடைத்தால் போதும்" என்று கூறிவிட்டார்கள்.

தர்ம் பிரகாசின் தாயார் கவலைப்பட்டார்கள். அவருடைய தகப்பனாருக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால், தர்ம், தான் சொன்னது சொன்னதே என்று தனது நிலையில் நின்று சாதித்துவிட்டார். எனவே அனைத்து சொத்து சுகங்களும் அவருடைய சொந்தக்காரர்கள் மற்றும் இந்தியா முழுவதிலுமுள்ள பற்பல தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டன. புஷ்கர் பட்டணத்தின் கடைசி எல்லையில் இருந்த ஒரு பழைய ஆச்சிரமத்தை மட்டும் தர்ம் பிரகாஷ் தனக்கு வீடாக வைத்துக் கொண்டார்.

அவருடைய அரசியல் எதிரிகள் அவருடைய புதிய வாழ்வுக்கு எதிராக குற்றம் கண்டு பிடிக்கும் முகமாக "அவரைப்போன்ற ஒரு மனிதர் கிறிஸ்தவனாக மாற வேண்டியதன் காரணம் என்ன? அப்படி மாறியதன் மூலமாக அவருக்கு ஏராளமான வெளிநாட்டுப் பணம் கிடைப்பதாக இருக்கும். ஒரு வேளை அதின் மூலமாக அரசாட்சியை கவிழ்க்க அவர் சதி செய்து கொண்டிருப்பார். அவருடைய நடபடிகளை அரசாங்கம் உடனடியாக கண்காணிக்க வேண்டும்" என்று அவர்கள் அரசாங்கத்துக்கு செய்தி அனுப்பினார்கள். ஒரு நாள் ஒரு உயர்மட்ட போலீஸ் அதிகாரி அவரண்டை வந்து "நீங்கள் உங்கள் வாழ்வின் அனைத்து வசதிகளையும் விட்டு விட்டு கிறிஸ்தவனாகியிருக்கின்றீர்கள்" அதற்கப்பால் அவர் தர்ம் பிரகாசிடம் "உங்கள் கடிதங்கள் அனைத்தும் இனிமேல் பிரித்துப் பார்க்கப்படவிருக்கின்றன. கிறிஸ்தவன் என்ற போர்வையில் நீங்கள் வெளி நாட்டு ஏஜன்ட்டாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றார்கள்" என்று கூறினார். அந்த நாளிலிருந்து தர்ம் தனது கடிதங்கள் அனைத்தையும் வெறும் 50 பைசா போஸ்ட் கார்ட்டில் மட்டுமே எழுதி அரசாங்கத்திற்கான வேலையை மிகவும் இலகுவாக்கிக் கொடுத்தார்.

சில திருச்சபைகளின் பேராயர்கள் கூட அவரை சந்தேகப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் பெயர் குறிப்பிடாமல் ஒரு பிராதை அவருக்கு விரோதமாக எழுதி இந்திய அரசாங்கம் அவரை விசாரிக்கும்படியாகக் கேட்டுக் கொண்டனர். "எப்படி ஒரு தலைமை பூஜாரியின் மகன் கிறிஸ்தவனாக முடியும்? நாங்கள் அதை நம்புவதாக இல்லை. அந்த மனிதன் அநேகமாக கிறிஸ்தவத்தின் பெயரில் தேசத்தை வேவு பார்க்கின்றார்" என்பதாக எழுதி அனுப்பினார்கள். அத்துடன் அந்தப் பேராயர்கள் அவருடைய இந்து மார்க்கத்தை கிறிஸ்தவர்கள் மத்தியில் கிறிஸ்தவ பெயரில் பரப்புகின்றார் என்றும் எண்ணினார்கள். இந்தக் குற்றச்சாட்டையும் ஒரு உயர் போலீஸ் அதிகாரி வந்து விசாரணை பண்ணினார். தர்ம்க்கு விரோதமாக எதையும் அவரால் கண்டு பிடிக்க இயலவில்லை.

மேற்கண்ட பேராயர்களில் ஒருவர் தர்ம் பிரகாசை தனது வீட்டிற்கு மதிய ஆகாரத்திற்காக அழைத்தார். தர்ம் தனது ஆகாரத்தைப் புசிப்பதற்கு முன்னர் தனது கரங்களைக் கழுவியதைக் கண்ட அவர் தர்ம் பிரகாசுடைய கரத்தைப் பிடித்து "நான் இப்பொழுது எனது கரத்தை கழுவ அவசியமில்லை. நான் உங்களுடைய கரங்களைத் தொட்டதும் எனது கரங்கள் சுத்தமாகிவிட்டது" என்று சொன்னார். அதற்கப்பால் தனது மறைவான இரகசிய பாவங்களை அந்தப் பேராயர் அவரிடம் அறிக்கையிட்டதுடன் அவர்தான் தர்ம்க்கு எதிராக அரசாங்கத்துக்கு மனு எழுதியவர் என்றும் சொல்லி தன்னை அவர் மன்னிக்கும்படியாக மன்றாடினார்.

அவருடைய சக விசுவாசிகளின் மூலமாகவும் அவருக்கு உபத்திரவங்கள் வந்தன. ஒரு நாள் காலையில் அவர் ஆண்டவருடைய வசனங்களைத் தியானித்துக் கொண்டிருக்கும்போது "நான் பாவிகளைத் தேடி வந்தேன்" என்ற ஆண்டவருடைய வார்த்தையால் அவர் பெரிதும் தொடப்பட்டார். "நீ என்னை விசுவாசிக்கின்றாய். விசுவாசிகளின் மத்தியிலேயே நீ ஊழியம் செய்கின்றாய். நீ பெரிய இடத்து விசுவாசி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பெரிய திருச்சபைகளில் இருளில் வாழ்கின்ற அவிசுவாசிகளின் காரியம் என்ன? அவர்களிடம் சென்று எனது வார்த்தைகளைக் கொடுப்பது யார்?" என்று கர்த்தர் பேசினார்.

தர்ம் பிரகாஷ் கர்த்தரை ஆராதித்து வந்த சபையின் விசுவாசிகள் எல்லாரும் பெயர் கிறிஸ்தவ சபைகளின் மக்களோடுள்ள தங்கள் நட்புகளைத் துண்டித்துக் கொண்டார்கள். காரணம், அந்த பெயர் கிறிஸ்தவ சபை மக்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்கும், ஆண்டவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதவர்களாக இருந்தார்கள். இந்த விசுவாசிகள் அவர்களை செத்த மனிதர்கள் என்றே அழைத்து வந்தனர்.

ஆனால் தர்ம் வேத வசனங்களின் மூலமாக ஆண்டவருடைய அழைப்பை உணர்ந்த போது "ஆண்டவரே, நான் அவர்களிடம் செல்லுவேன்" என்று கூறினார்.

அந்த நாளின் பிந்திய பகுதியில் தர்ம் ஆஜ்மீர் பட்டணத்தின் பஜாருக்குச் சென்றிருந்தார். அங்கு அவர் ஒரு சபையின் போதகரைச் சந்தித்தார். "சகோதரனே, ஈஸ்டர் நாட்களில் நீங்கள் எங்கள் சபைக்கு வந்து கர்த்தருடைய செய்தியை எங்களுக்கு தரமாட்டீர்களா?" என்று கேட்டார். தர்ம் பிரகாசும் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

செத்த சபையில் தர்ம் பிரகாஷ் தேவச் செய்தியைக் கொடுக்கப் போகின்றார் என்பதை அறிந்த அவருடைய சபையின் விசுவாசிகள் அதை வெகுவாக எதிர்த்தார்கள். அவர்களில் ஒருவர் தர்முக்கு "அன்பான சகோதரனே, நீங்கள் உங்கள் படுக்கையை செத்தவர்களோடு போட்டுக் கொள்ள முடிவு செய்திருப்பது அறிந்து மிகவும் வேதனை அடைகின்றோம்" என்று கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தை அப்படியே தர்ம் பிரகாஷ், சகோதரன் பக்தசிங்கிற்கு அனுப்பி வைத்து அந்தக் கடிதத்திற்கான தேவ ஆலோசனையை தெரிவிக்கும்படியாக கேட்டு எழுதினார். "தர்ம் பிரகாஷ், கர்த்தர் உங்களை வழிநடத்தும் பாதையில் நீங்கள் சென்று ஊழியம் செய்யுங்கள்" என்று சகோதரன் பக்தசிங் அவருக்குப் பதில் எழுதினார். அவருடைய பதில் சக விசுவாசிகளுக்கு இன்னும் கோபத்தை மூட்டுவதாக இருந்தது. அவர்கள் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததுடன் அவருடைய கிறிஸ்தவ வாழ்க்கையை கஷ்டத்துக்குள்ளாக்கிக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் தர்ம் பிரகாஷ் தேவனுக்கு முன்பாக அழுது "ஆண்டவரே, நான் உமது வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டு வந்த போதினும் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படாமல் இருப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டார். தேவ சமூகத்தில் அவர் கண்ணீர்விட்டுக் கதறினார்.

"நீ இன்னும் உன்னுடைய சொந்த ஆதாரத்தையே நம்பிக் கொண்டிருக்கின்றாய்" என்று கர்த்தர் பதிலளித்தார்.

உண்மையில், இப்பொழுதும் தர்ம் மிகவும் ஐசுவரிவானாவார். தன்னுடைய தந்தை வழி வந்த பெருஞ் செல்வத்தை அவர் தனக்கென்று எடுக்காதபோதினும் அவருடைய சொந்த சம்பாத்தியத்திலேயே அவருக்கு ஏராளமான பணம் இருந்தது. அந்தப் பெரும் பணத்தையும் கொடுத்து விடும்படியாக ஆண்டவர் அவர் உள்ளத்தில் பேசினார். "ஆண்டவரே, அந்தப் பணம் உம்முடையது. நான் உம்முடைய ராஜ்ய மேன்மைக்காகவும், அதின் பரவுதலுக்காகவும் நான் அதை பயன்படுத்தி வருகின்றேன்" என்று அவர் ஆண்டவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

"எனக்கு உன்னுடைய பணம் தேவையில்லை. எனக்கு வேண்டுவதெல்லாம் நீ மாத்திரமே. உன்னுடைய ஆஸ்தி, ஐசுவரியம், உனது தாலந்துகள், உனது ஞானம், உனது கல்வி எதுவுமே எனக்கு அவசியமில்லை. எனக்கு வேண்டுவதெல்லாம் நீ, ஆம், நீ மாத்திரமேதான்" என்று கர்த்தர் பதில் கொடுத்தார். அதின்படி தர்ம் தன் வசமிருந்த எல்லா பணங்களையும் கர்த்தருடைய வழிநடத்துதலின்படி யார் யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுத்துவிட்டார்.

தர்ம் பிரகாசின் மூத்த குமாரத்தி துகினா அப்பொழுது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் அவர் அவளுக்கு பேருந்து கட்டணமாகவும், பாக்கெட் செலவுக்காகவும் இருபது ரூபாய் கொடுப்பது வழக்கமாகும். குறிப்பிட்ட நாளின் காலையிலும் அவள் தனது தந்தையிடம் வந்து "பாபு, நான் இப்பொழுது எனது கல்லூரிக்கு புறப்படலாமா?" என்று கேட்டாள். தனது தகப்பனார் ஒவ்வொரு நாள் காலையிலும் தனக்கு கொடுக்கும் பணத்திற்கு அவள் கொடுக்கும் ஒரு சைகையாக அது இருந்தது. அந்த நாளின் காலையில் அவருடைய கரங்கள் முழுமையாக வெறுமையாக இருந்தது. தனது மகளுக்குக் கொடுக்க அவரிடம் பணம் இல்லை.

"கல்லூரிக்குப் புறப்பட இன்னும் கொஞ்சம் நேரம் உண்டு என்று நினைக்கின்றேன். இன்னும் சற்று நேரம் பொறுத்திரு" என்று தர்ம் மகளிடம் சொன்னார். அவர் அமைதியாக தனது ஆண்டவரண்டை திரும்பி "ஆண்டவரே, எனது தேவைகள் உமக்குத் தெரியும்" என்று சொன்னார்.

அப்பொழுதுதானே அவருடைய இளைய குமாரத்தி அவரிடம் வந்து "அப்பா, ஒரு அங்கிள் உங்களை பார்க்க வந்திருக்கின்றார்கள்" என்று சொன்னாள். தர்ம் தன்னிடம் வந்த மனிதரை சந்திக்கச் சென்றார். பிர்லா கம்பெனியில் தர்ம் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்களில் அந்த மனிதர் அவருக்கு பழக்கமானவராக இருந்தார். "நான் உங்களிடம் அந்த நாட்களில் 5000 ரூபாய் கடன் வாங்கினேன்" அவர் தனது வார்த்தைகளைத் தொடர்ந்தார். "அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு மதராஸ் பட்டணம் சென்றேன். அங்கு நான் எனது தொழிலைத் தொடங்கினேன். நான் இப்பொழுது ஒரு வைர வியாபாரி. இத்தனை ஆண்டுகளும் நான் உங்களிடம் வாங்கின கடனை திருப்பித் தர மறந்து போனேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அதை நான் நினைத்துப் பார்த்தேன். எனக்குள்ளே ஒரு குரல் அந்தப் பணத்தை உடனடியாக உங்களுக்குக் கொண்டு கொடுக்கும்படியாக தூண்டியது. பிர்லா கம்பெனிக்குச் சென்று நான் உங்களைத் தேடினேன். அதை நீங்கள் விட்டுவிட்டதாக என்னிடம் சொன்னார்கள். உங்களை இங்கு சந்திக்கும் வரை நான் ஒவ்வொரு இடமாக தேடி வந்திருக்கின்றேன்" என்று அவர் சொன்னார்.

அவர் ஒரு பெரிய பொட்டணத்தை எடுத்து தர்ம் பிரகாசின் கரங்களில் கொடுத்தார்.

"இது என்ன?" என்று தர்ம் அவரிடம் கேட்டார்.

"நான் உங்களிடம் வாங்கின பணமும், அதற்கான இத்தனை ஆண்டுகள் வட்டியும் அதில் உள்ளது" என்று அந்த மனிதர் கூறினார்.

"முடியவே முடியாது நான் அதனை வாங்க மாட்டேன்" என்றார் தர்ம்.

"நீங்கள் அதைக் கட்டாயம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இல்லையேல் எனது தொழில் வீழ்ச்சியடையும்" என்றார் அந்த வைர வியாபாரி.

தர்ம் பிரகாஷ் இறுதியில் அந்த 5000 ரூபாயை மாத்திரம் பெற்றுக் கொண்டார். ஆனால், அதற்கான வட்டியை வாங்க மறுத்துவிட்டார். தனக்குக் கிடைத்த அந்தப் பணத்திலிருந்து ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து அதை தனது மகள் துகினாவிடம் கொடுத்தார். அவளது உடனடித் தேவையான பஸ் கட்டணமும், பாக்கெட் செலவு பணமும் கிடைத்துக் கொண்டது. அந்த விதமாகவே தேவன் அவருடைய அனைத்துத் தேவைகளையும் அந்த அந்த நேரத்தில் அற்புதமாக சந்தித்து அவரை வழிநடத்திச் சென்றார்.

"நான் உனது பாத்திரத்தின் பங்காக இருக்கின்றேன்" என்று தர்ம் பிரகாஷின் ஆண்டவர் அவரிடம் சொன்னதை அவர் நினைவு கூர்ந்தார். தன்னுடைய வாழ்வின் எல்லா தேவைகளுக்கும் அவர் தன் அருமை ஆண்டவரை அழகாக நம்பியிருக்கலாம் என்றும் திட்டமாக அறிந்து கொண்டார்.

 

மோட்ச லோகம் சென்று திரும்பியது

தர்ம் பிரகாஷ் தேவனுடைய வார்த்தையை மக்களுக்குக் கொடுக்கும் காரியத்தில் தனக்குக் கிடைக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் கை நழுவ விட்டுவிடக்கூடாது என்ற திட்டமான குறிக்கோளை மேற்கொண்டார். இயேசு இரட்சகரையும், அவரது கல்வாரி அன்பையும் மற்ற மக்களுக்கு சொல்லும் வேளைக்காக அவர் தொடர்ச்சியாக எதிர்நோக்கிக் காத்திருந்தார்.

தர்ம் எப்பொழுதுமே ஒரு கடினமான உழைப்பாளி. அவர் எதைச் செய்தாலும் அதைத் தம்முடைய முழு பெலத்தோடு செய்வார். தனது உலகப்பிரகாரமான வேலைகளைச் செய்து கொண்டிருந்த நாட்களிலும் கூட அவர் கொஞ்ச ஓய்வும், கொஞ்ச தூக்கமுமே தூங்குவார். ஆனால், இப்பொழுது தன்னை ஆட்கொண்ட தன் கர்த்தருடைய ராஜ்ய மேன்மையின் பரவுதலுக்காக இன்னும் கடினமாக உழைக்கத் தொடங்கினார். ஆனால் அவரது சரீரம் இப்பொழுது இளமையானது அல்ல. உடலை வறுத்துவதற்கும் ஒரு அளவும், இடைவேளையும் தேவையாக இருந்தது.

தன் தேவனுடைய ஊழியத்தில் அப்படியே அவர் முழுமையாக மூழ்கிவிட்டபடியால் தனது சரீரத்தை தக்கவிதமாக பேணுவதில் அவர் தவறிவிட்டார். அவர் எப்பொழுதும் தேவனுடைய செய்திகளைக் கூட்டங்களில் கொடுப்பதிலும், உலகம் முழுமையிலும் பிரயாணம் செய்வதிலும் சில சமயங்களில் வாரக்கணக்கில் எந்த ஒரு ஓய்வும் எடுத்துக் கொள்ளாமல் தனது தேவ பணியில் மூழ்கியிருந்தார். அவருக்காக ஜெபிக்கும் கர்த்தருடைய பிள்ளைகள் அவர் போதிய ஓய்வை எடுத்துக் கொள்ளும்படியாக அவருக்கு ஆலோசனை கூறினார்கள். ஆனால், அவர் அதற்கு இணங்காமல் அநேக வருடங்கள் தனது ஊழியங்களை ஓய்வின்றித் தொடர்ந்தார்.

அதற்கப்பால் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி அவருடைய பிறந்த நாள் வந்தது. அன்று அதிகாலை அவர் படுக்கையிலிருந்து மயக்கமான தலை சுற்றலுடன் எழும்பினார். அவர் எழும்பி படுக்கையில் உட்கார்ந்தபோது தான் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டதுபோன்ற ஒரு உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அவருடைய மயக்கமும், தலை சுற்றலும் தொடர்ந்து இருந்ததால் உடனே மருத்துவர் அழைக்கப்பட்டார். மருத்துவர் அவரை நன்கு பரிசோதித்துவிட்டு ஆஜ்மீர் பட்டணத்திலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சேர்க்கச் சொன்னார். அப்படியே தர்ம் அங்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் பரிசோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அவருடைய மயக்கம் அதிகரித்து இரத்த வாந்தி எடுத்தார். அதைத் தொடர்ந்து முற்றும் தன்னறிவற்ற கோமா நிலைக்கு அவர் சென்றார். இந்த கோமா நிலையில் இருக்கும்போது அவருக்கு ஒரு ஆச்சரியமான அனுபவம் ஏற்பட்டது. அதாவது, அவர் ஒரு காரிருளான சுரங்கப் பாதை வழியாகச் சென்று அடுத்த பக்கத்திலுள்ள பிரளயமான ஒளிக்குள் வந்தார். அந்த ஆச்சரியமான ஒளியை இதற்கு முன்பாக அவர் தனது கல்லூரியிலுள்ள ஹாஸ்டல் அறையில் கண்டிருக்கின்றார். இந்த உலகத்தில் நாம் பார்க்கும் ஒளிகளைப் போல அந்த ஒளி இல்லாமல் விவரிக்க முடியாத ஒரு ஆச்சரிய ஒளியாக அது இருந்தது. தர்ம் தன்னை ஒரு புது உலகத்தில், ஆம், ஒரு அழகான உலகத்தில் கண்டார். அந்த இடம்தான் மோட்ச ராஜ்யம். அங்கு அவர் தனது அன்பின் இரட்சகர் இயேசுவைக் கண்டார். தனது சொந்த வீட்டில் இருப்பதைப் போன்ற ஆனந்த உணர்வு அவருக்கு ஏற்பட்டது. நான் இருக்கக்கூடிய சரியான இடம் இதுவே என்று அவர் தனக்குள் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் அன்பின் ஆண்டவர் "தர்ம் பிரகாஷ் நீ எனக்கு வேண்டும்" என்ற ஆண்டவரின் குரலைக் கேட்டார்.

"ஆண்டவரே, நான் உமக்கு முன்பாகவே இருந்து கொண்டிருக்கின்றேன்" என்று அவர் பதிலளித்தார்.

"நீ திரும்பிச் செல்ல வேண்டும்"

"நான் எங்கே செல்லுவேன் ஆண்டவரே? நான் உம்முடனே இருக்கின்றேன். உம்முடைய பாதங்களண்டையே தொடர்ந்து இருக்க விரும்புகின்றேன்"

"நீ திரும்பிச் செல், கீழே நீ தேவைப்படுகின்றாய்"

இப்பொழுது தர்ம் பிரகாஷ் தனது கண்களைத் திறந்தார். இப்பொழுது அவர் திரும்பவும் இந்த உலகத்தில் இருந்தார். ஆம், மருத்துவமனையின் அவசர சிகிட்சைப் பிரிவில்தான். அவரைச் சுற்றிலும் அவரது உயிர் காக்கும் யந்திரங்கள் வேலை செய்து கொண்டிருந்தன. பிராணவாயு சென்று கொண்டிருக்கும் குழாய் இன்னும் அவரது சரீரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. எனினும், மருத்துவர்கள் தங்கள் முயற்சிகளை எல்லாம் கைவிட்டுவிட்டு சும்மாதான் நின்று கொண்டிருந்தனர். அவருடைய மகள் தகப்பனார் அண்டை நின்று கொண்டு அழுது கொண்டிருந்தாள். இப்பொழுது, தர்ம் பிரகாஷ் தனது கண்களைத் திறந்ததும் மருத்துவர்கள் மிகுந்த சந்தோசம் அடைந்தனர். 30 நிமிடங்களுக்கு அவர் முற்றும் ஜீவனற்றவராக கிடந்தார். மருத்துவர்கள் அவரை செத்துப்போனார் என்று உறுதிப்படுத்திவிட்டார்கள். தர்ம் பிரகாசின் மகள் அழுதுகொண்டும், ஜெபித்துக் கொண்டும் இருந்தாள். "அவர் மரித்துப் போனார், எதுவரைக்கும் அவரது சரீரத்தை இப்படி வைத்துக் கொண்டிருக்கப்போகின்றீர்கள்?" என்று மருத்துவக் கல்லூரியின் தலைவர் டாக்டர் மதூர் அவருடைய மகளிடம் கேட்டார்.

"எனது தகப்பனார் எங்களை இப்படி விட்டு விட்டு செல்லமாட்டார்கள். அவர்கள் கட்டாயம் திரும்ப வருவார்கள்" என்று அவள் பதில் சொன்னாள்.

இந்தவிதமாக தேவனுடைய அன்பின் கிருபையாலும், அந்த மகளின் ஜெபத்தாலும் தர்ம் பிரகாஷ் திரும்பவும் பூலோகத்திற்கு வந்தார்.

மருத்துவர்கள் அவரை நன்கு கவனித்து சிகிட்சை கொடுத்து கொஞ்ச நாட்கள் வைத்திருந்து பின்னர் மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைத்தனர். தர்ம் மிகவும் பெலவீனமாக இருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்து வந்த 5 வருட காலத்திற்கு அனைத்து ஊழிய பணிகள் யாவையும் நிறுத்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தனிமையில் சமாதானத்துடன் இருந்தார். தேவன் அவரை உலகத்திலிருந்து தனிமைப்படுத்தி வாழ்வின் காரியங்களைக் குறித்து விசேஷமாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து அவருக்கு போதனை கொடுத்தார். இந்தச் சமயம் தர்ம் தேவனுடைய வார்த்தைகளை மிகவும் அதிகமாக வாசித்து தியானம் செய்தார். அவரது ஆவிக்குரிய வாழ்க்கை மிகவும் ஆழமாக வேரூன்றி வளர்ந்தது.

ஆனால் அவருடைய சரீரம் மிகவும் பெலவீனப்பட்டிருந்தது. அவருடைய எடை 97 கில்லோவிலிருந்து 57 கில்லோவாக குறைந்திருந்தது. அவரைக் கண்ட மக்கள் அவர் மரிக்கப் போகின்றார் என்று நினைத்துக் கொண்டார்கள். அவருக்கு ஏற்கெனவே மருத்துவ சிகிட்சை அளித்த டாக்டர்கள் கூட அவர் நீண்ட காலம் உயிர் வாழ்வார் என்று கிஞ்சித்தும் நினைக்கவில்லை. உடன் விசுவாசிகள் கூட அவருக்காக ஜெபித்ததுடன் அவர் எந்த நேரத்திலும் உலகத்தை விட்டு கடந்து சென்றுவிடுவார் என்று எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் ஆச்சரிய பிரகாரமாக 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நாள் காலை குடும்ப ஜெபத்திற்குப் பின்னர் தேவன் தன்னுடன் பேசுவதை தெளிவாக உணர்ந்தார் "தர்ம் பிரகாஷ், இப்பொழுது எழுந்திரு, நான் உன்னை அனுப்பப் போகின்றேன். நான் உனக்கு பெலனாயிருக்கின்றேன்" அந்த வாக்குத்தத்தம் ஏசாயா 43 ஆம் அதிகாரம் முதல் ஆறு வசனங்களில் அவருக்குக் கிடைத்தது.

அந்த நாளின் குடும்ப ஜெபத்தை முடித்து அவர் எழும்பவும் டில்லியில் ஒரு கூட்டத்தில் தேவச் செய்தி கொடுக்க வரும்படியாக அவருக்கு தொலை பேசி அழைப்பு வந்தது. அவரை அழைத்தவர் டில்லியிலிருந்து காரை அனுப்பி அவரை அழைத்துக் கொண்டு வருவதாகக் கூறினார். ஆனால் தர்ம் ரயிலிலேயே தான் வருவதாக அவருக்கு பதில் கொடுத்தார். அவருடைய மூத்த குமாரத்தி அவருடன் வருவதாக சொன்ன போது அதையும் ஏற்றுக்கொள்ளாமல் "தேவன் என்னோடிருக்கின்றார்" என்று கூறி தான் தனியனாகவே போகத் தீர்மானித்தார்.

தேவன் அவருக்குப் புது பெலனைக் கொடுத்தார். "மோட்சத்தின் வழி" யாகிய தேவனுடைய செய்தியை உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அவர் கொடுத்து வருகின்றார்.

 

பெற்றோரின் மாட்சியான நல் மரணங்கள்

"என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின் செல்லுகிறது" (யோ 10 : 27)

தர்ம் பிரகாஷ் தனது பரம அழைப்பினைக்குறித்து இதற்கு முன்பாக அவர் எப்பொழுதாவது சந்தேகப்பட்டிருந்தாரானால் அந்த சந்தேகம் இப்பொழுது பகலவனைக் கண்ட பனி போல முற்றுமாக உருகி மறைந்து போயிற்று. தான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும், இனி தனது முழுமையான வேலை என்ன என்பதை அவர் அறிந்து கொண்டார். தனது மீதியுள்ள வாழ்நாட்காலத்தை தனது இரட்சகர் இயேசு கிறிஸ்துவை மற்ற மக்களுக்கு அறிமுகப்படுத்துவது மாத்திரமே என்பதை அவர் நிச்சயப்படுத்திக் கொண்டார். கிறிஸ்து இரட்சகரின் இரட்சிப்பின் நற்செய்தியை பரவலாக எல்லா மக்களுக்கும் கட்டாயம் அறிவித்தே ஆக வேண்டும் என்று அவர் தனக்குள் பூரணமாக உறுதிப்படுத்திக் கொண்டார்.

இந்தியாவின் பற்பல இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில் வந்து பேசும்படியாக தர்ம் பிரகாசுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. இந்தியா முழுவதும் அவர் பிரயாணம் செய்து தேவனுடைய அன்பின் நற்செய்தியையும், இரட்சகர் இயேசுவின் மூலமாக உள்ள இரட்சிப்பைக் குறித்தும் பிரசங்கித்தார்.

இந்தச் சமயம் அவர் பிறந்த அவருடைய சொந்த வீட்டில் அதிசய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. தர்ம் பிரகாசுடைய தாயார் தனது இந்து மார்க்க வழிபாட்டில் இன்னும் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். முன்பு எப்பொழுதும் போல அவர்கள் ஒழுங்காக இந்துப் புராணங்களை வாசித்துக் கொண்டிருந்தார்கள். 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு காலை வேளையில் வழக்கம்போல அவர்கள் உட்கார்ந்து ராமாயாணத்தை வாசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அதை வாசித்து முடித்து விட்டு அது இருக்கக்கூடிய புனிதமான புத்தக அலமாரியில் வைத்தார்கள்.

தியானம்பண்ண விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் அவர்கள் அமர்ந்து ஆழமாக யோசித்தார்கள். அவர்களை கவனித்துப் பார்க்கும் நபர் யாராயிருந்தாலும் அவர்கள் மன நிலையில் ஏதோ போராட்டத்தில் இருக்கின்றார்கள் என்பதை தெளிவாகக் காணக்கூடும். அவர்கள் தனது கரங்களை இறுக மூடினார்கள், அவைகளைத் திறந்தார்கள். தனது தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஆட்டி அசைத்தார்கள். ஒரு கரத்தால் தனது நெற்றியை பலமாக அழுத்தினார்கள். அதற்கப்பால், தனது போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போன்ற நிலையில் அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அதற்கப்பால் தனது மருமகளை "ஆஷா மகளே, ஒரு நிமிடத்திற்கு இங்கு வந்து செல்" என்று அழைத்தார்கள்.

ஆஷா தியான அறைக்கு விரைந்தோடிச் சென்று "அம்மா என்ன காரியம்?" என்று தனது மாமியாரைக் கேட்டாள். "நான் உன்னிடம் சில காரியங்களைப் பேச வேண்டும், இப்படி என் அருகில் உட்காரு" என்றார்கள். ஆஷா தரையில் அமைதியாக உட்கார்ந்து தனது மாமியையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். வயதான அந்த அம்மாள் பேசக்கூடிய சரியான வார்த்தையைத் தெரிந்தெடுத்து அமைதியாக பேச ஆரம்பித்தார்கள். "இத்தனை ஆண்டு காலமும் நீ எனக்கு ஒரு நல்ல அன்பான மகளாக இருந்தாய்"

அந்த வார்த்தைகளால் சற்று பூரிப்படைந்தவளாக ஆஷா தனது தலையை தாழ்த்திக் கொண்டாள். அந்த தாயார் தனது வார்த்தைகளைத் தொடர்ந்தார்கள் "யாராக இருந்தாலும் இந்தவிதமான ஒரு மகத்தான அன்பை பொழிய வேண்டுமானால் அந்த மக்களின் உள்ளத்தில் ஜீவனுள்ள கடவுள் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும். அந்த ஜீவனுள்ள கடவுளுக்கு முன்பாக நான் இப்பொழுது எனது தலையை தாழ்த்தி நிற்கின்றேன். இப்பொழுதும் மகளே, என் இருதயம் இயேசு இரட்சகருக்கு ஆயத்தமாக இருக்கின்றது. நான் அவருடைய பிள்ளையாக மாறுவது எப்படி என்ற விபரத்தை நீ இப்பொழுது எனக்குச் சொல்ல வேண்டும்"

ஆஷா மிகுந்த ஆச்சரியத்தால் பிரமிப்படைந்தாள். சில வார்த்தைகளிலேயே அவள் தனது மாமியாருக்கு சுவிசேஷத்தைக் கூறினாள். அந்த தாயார் தனது மகன் தர்ம் பிரகாஷ் மூலமாகவும் இந்த சுவிசேஷ நற்செய்தியை ஓரளவு நன்கு கேள்விப்பட்டிருக்கின்றார்கள். "அம்மா, இரட்சகர் இயேசு உங்கள் இருதயத்தின் கதவண்டை நின்று அதைத் தட்டிக் கொண்டே இருக்கின்றார். நீங்கள் அவரை அன்பாக வருந்தி அழைப்பீர்களானால் அவர் உடனே உள்ளத்தினுள் வந்து வாசம் செய்வார்" என்று ஆஷா தனது வார்த்தைகளைத் தொடர்ந்தாள்.

அந்த நிமிஷமே கியானேஷ்வரி தேவி அம்மையார் அமைதியாக, மிகவும் பக்திவினயமாக அன்பின் ஆண்டவர் இயேசு தனது வாழ்வாக மாறும்படியாக அவரைத் தனது இருதயத்துக்குள்ளாக அழைத்தார்கள்.

இந்த ஆச்சரிய நிகழ்ச்சி நடந்து சரியாக 3 மாத காலங்களுக்குப் பின்னர் ஒரு நாள் அவர்கள் உடல் நலமில்லாமல் படுக்கையிலானார்கள். உடனே மருத்துவர் அழைக்கப்பட்டார். அவர் வந்து அம்மையாரைப் பரிசோதித்துவிட்டு உடல் மிகவும் பெலவீனமாக இருக்கின்றது என்று கூறி சில டானிக்குகளை எழுதிக் கொடுத்து படுக்கையில் நன்கு இளைப்பாறிக் கொள்ள ஆலோசனை கூறிவிட்டுச் சென்றார்.

சில தினங்கள் சென்றதன் பின்னர் ஜூன் மாதம் 16 ஆம் நாள் அவர்கள் படுக்கையில் படுத்திருக்கும்போது தர்ம் பிரகாசும் தாயாரின் அருகில்தான் அமர்ந்திருந்தார். அம்மையார் தனது மகனின் கரத்தைப் பற்றிப் பிடித்து "பாபுவா (மகனை தாயார் அழைக்கும் செல்லப் பெயர்) நான் ஆண்டவர் இயேசுவோடு இருக்கச் செல்லப் போகின்றேன். இந்த உலகத்தில் எனது யாத்திரை ஒரு முடிவுக்கு வருகின்றது. ஆனால், நாம் திரும்பவும் மோட்சத்தில் சந்திக்கலாம்" என்று கூறினார்கள். அப்படியே அவர்கள் ஜீவன் மிகுந்த தேவ சமாதானத்துடன் பிரிந்து சென்றது. அதற்கப்பால் அம்மையார் திரும்பவும் கண் திறக்கவே இல்லை.

தர்ம் பிரகாசின் தகப்பனாரும் சரீரப் பிரகாரமாக மிகவும் பெலவீனமாக இருந்தார்கள். தனது அருமை மனைவியின் மரணத்தின் துயரம் அவரது சரீர சுகத்தை கடுமையாகப் பாதித்திருந்தது. ஆகாரம் சாப்பிட அவருக்கு மனதில்லாமற் போயிற்று. அவர் தனது நேரம் முழுமையையும் தனது அறையில் தனிமையாக அமர்ந்து மார்க்க சம்பந்தமான புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தார். அவருடைய ஆத்துமா அவற்றைத் தேடிப் படிக்கும்படியாக அவரைத் தூண்டுவதைப் போலக் காணப்பட்டது. குடும்பத்தினர் அனைவரும் அவரை மகிழ்ச்சிப்படுத்தும்படியாக மேற்கொண்ட முயற்சிகள் ஒன்றும் வெற்றிபெறவில்லை.

டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தர்ம் பிரகாசின் பிறந்த நாள். குடும்பத்தினர் அவரது பிறந்த நாளுக்காக ஆண்டவருக்கு நன்றி தெரிவித்து ஒரு சிறிய ஜெபத்தை ஒழுங்கு செய்திருந்தபோதினும் பிறந்த நாளை முன்னிட்டு எந்த ஒரு கொண்டாட்டமும் வீட்டில் இடம்பெறவில்லை. அன்று பிற்பகல் தர்ம் பிரகாசின் தந்தை தனது மைந்தனை தனது அறைக்கு வரும்படியாக அழைத்தார். தனது தகப்பனாரின் கடுமையான துக்கமும், கிலேசமும் மறைந்து அவர் நல்ல மகிழ்ச்சியுடன், அமரிக்கையாக இருப்பதை தர்ம் பிரகாஷ் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டார். மனைவியைக் குறித்த வியாகுலத்தின் திரை விலகி அவர் தனது வாலிப நாட்களின் சந்தோசத்துடன் இருப்பவரைப் போலக் காணப்பட்டார்.

"மகனே, உனது பிறந்த நாளை நீ ஏன் கொண்டாடவில்லை? ஆம், உனது தாயார் நம்மோடு இல்லாததால் தானே?" என்று அவர் கேட்டார்.

அதற்கப்பால் அவர் தனது பேச்சைத் தொடர்ந்து "பாபுவா, நானும் கூட இப்பொழுது இயேசு இரட்சகரின் சீஷனாகிவிட்டேன். அவர் இப்பொழுது எனது ஆண்டவர், எனது தேவன். அதை நான் என்னளவில் நன்கு உறுதிப்படுத்திக் கொண்டேன். உனது ஆண்டவர், என்னுடைய ஆண்டவரும் கூடத்தான், அப்படித்தானே தர்ம் பிரகாஷ்? "

அந்த தகப்பனார் பின் பக்கமாக தனது நாற்காலியில் சாய்ந்தவண்ணமாக தனது பேச்சைத் தொடர்ந்தார் "மகனே, நீ எனக்கு வழியைக் காண்பித்தாய், எனவே நான் வழியைக் கண்டு கொண்டேன். கடந்த 10 ஆண்டு காலமாக நான் உனது மாறுதலடைந்த பரிசுத்தமான வாழ்க்கையைக் கவனித்து வருகின்றேன். அதுவே உண்மை வாழ்க்கை. ஆண்டவரை நானும் மெய்யான கர்த்தராகக் கண்டு கொண்டு விட்டேன். என் மகனே எனக்காக ஜெபம் செய். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நான் சமாதானத்தைக் கண்டு கொண்டேன். அவர் இப்பொழுது எனது ஆண்டவர்"

தர்ம் பிரகாஷ் தனது இரு கரங்களால் தனது தந்தையின் கரத்தை தூக்கி தன்னை முன்னால் தாழ்த்தியவராக தனது நெற்றிமேல் அந்தக் கரத்தை வைத்துக் கொண்டார். அவர் தனது கண்களை மூடியவராக மிகவும் அமர்ந்து குரலில் "நன்றி ஆண்டவரே, உமக்கு நன்றி அப்பா" என்று கூறினார். அப்பாவின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரும், மகனின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரும் அங்கே ஒன்றரக் கலந்து அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

புஷ்கர் பட்டணத்தின் தலைமை பூஜாரியின் வாழ்க்கையை மூடி மறைத்திருந்த இருளின் திரை மறைந்து போய்விட்டது.

பண்டிதர் சோகன்லாலின் உடல் நலத்தை அவ்வப்போது ஒழுங்காக பரிசோதிக்கும் மருத்துவர் அகர்லால் சில நிமிடங்களுக்குப் பின்னர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் தனது ஸ்டெதஸ்கோப் கருவியை சோகன்லாலின் உடம்மைத் தொடுவதற்காக குனிந்தபோது "டாக்டர் எனது சுகத்தைப் பரிசோதிக்க வந்திருக்கின்றீர்கள். உங்களுடைய சொந்த ஜீவனைக் குறித்த காரியம் என்ன? புறம்பான மனிதனா? அல்லது ஆவிக்குரிய உள்ளான மனிதனா யார் மிகவும் முக்கியம்?" என்று கேட்டார்.

டாக்டர் அகர்லால் பேராச்சரியம் அடைந்தார். "தாதாஜி, நீங்கள் சொல்லுவது சரியே. ஆவிக்குரிய உள்ளான மனிதனே மிகவும் முக்கியமானவன்"

அப்படியானால், உங்களை நீங்களே பரிசோதித்துப் பாருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் மட்டுமே நீங்கள் உங்கள் ஆத்துமாவைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இன்றைய தினம் நான் என்னை முழுமையாக அவருக்கு ஒப்புவித்தேன்.

அந்த நாளின் மாலை வேளையில் அவர் தமது குடும்பத்தின் உற்றார், உறவினர் அனைவரையும் தம்மண்டை வரவழைத்து கர்த்தராகிய இயேசு இரட்சகரில் தான் கண்டு கொண்ட தனது புதிய விசுவாசத்தைக் குறித்து அவர்களுக்குக் கூறினார். அதற்கப்பால் தம்மைச் சந்திக்க வந்த எல்லாருக்கும் தொடர்ந்து கிறிஸ்து இரட்சகரைக் குறித்துச் சொல்லிக் கொண்டே இருந்தார்.

பத்து நாட்களுக்குப் பின்னர் அவரது குடும்பத்தின் பிள்ளைகள் எல்லாரும் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். 23 ஆம் சங்கீதமாகிய பாட்டைப் பாடும்படியாக அவர்களை அவர் கேட்டுக் கொண்டார். தர்ம் பிரகாசின் பெண்மக்களும், தம்முடைய பேத்திகளுமான அவர்கள் அந்தப் பாடலை மதுரமான குரலில் பாடினார்கள்.

பாடல் முடியவும் அவர் தனது குமாரன் தர்ம் பிரகாசை தமது பக்கமாக அழைத்து "என் அருமை மகனே, நான் பிரிந்து செல்லுகின்றேன்" என்று அமைதியாகக் கூறினார். அதற்கப்பால் அவர் தனது முகத்தை உயர்த்தியவராக "ஓ என் அருமை ஆண்டவரே, என்னை ஏற்றுக் கொள்ளும்" என்று கூறியவராக மிகுந்த தேவ சமாதானத்தோடு தனது தலையை தன்னுடைய குமாரன் தர்ம் பிரகாசின் தோளில் வைத்தவராக தேவனுடைய நித்திய மகிமைக்குக் கடந்து சென்றார். அது ஒரு மகிமையான ஆனந்த விடைபெறும் வேளையாக இருந்தது. தர்ம் பிரகாசின் தந்தை சோகன்லாலும், தாயார் கியானேஷ்வரி தேவியும் ஒன்றாக இருக்கும் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.

தர்ம் பிரகாசின் ஊழியப் பாதைகள் விரிவடைவதாக இருந்தன. சமுத்திரங்களுக்கு அப்பாலுள்ள மக்கள் தங்கள் கூட்டங்களில் வந்து தேவ செய்தியைக் கொடுக்கும்படியாக அவரைக் கேட்டுக் கொண்டார்கள். எப்பொழுதானாலும், எங்கிருந்தானாலும் யார் யார் அவருடைய வார்த்தைகளைக் கேட்க ஆசை ஆவலாக இருக்கின்றார்களோ அவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள தர்ம் பிரகாஷ் தயாராக இருந்தார்.

1994 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அவர் ஒரு பிரசங்க பிரயாணத்தை மேற்கொண்டிருந்தார். ஒரு கூட்டம் தேவ பிள்ளைகள் தங்களுடைய கூட்டங்களில் அவரைப் பேசும்படியாக அமெரிக்காவுக்கு அழைத்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் பட்டணத்திலுள்ள இந்து மார்க்க விவேகானந்தா மிஷனைச் சார்ந்தவர்களும் தங்களுடைய கூட்டங்களை ஒழுங்குபடுத்தி நடத்திக் கொண்டிருந்தார்கள். மிகவும் புகழ்பெற்ற இந்து பண்டிதர்கள் இந்து வேதாந்தங்கள் சம்பந்தமாக அந்தக் கூட்டங்களில் உபன்னியாசம் செய்தார்கள். ஏராளமான இந்து பக்தர்கள் அந்தக் கூட்டங்களில் வந்து கலந்து கொண்டிருந்தார்கள். விவேகானந்தா மற்றும் ராமகிருஷ்ணா மிஷன்கனின் பிரதிநிதிகளும், மற்ற இந்து மார்க்க பிரிவுகளின் பக்தர்களும் திரளாகக் கூடியிருந்தனர்.

அந்தக்கூட்டங்களில் பேசும்படியாக தர்ம் பிரகாசையும் அவர்கள் அழைத்திருந்தனர். தர்ம் பிரகாஷ் தமக்கு மிகவும் விருப்பமான பகுதியான இயேசு இரட்சகரின் அன்பைக் குறித்து அந்தக் கூட்டங்களில் பேசினார். அவருடைய செய்தியை கூட்டத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற இருதய அறுவை சிகிட்சை நிபுணர் டாக்டர் ஷர்மாவும் ஒருவராவார். தர்ம் பிரகாசின் சிலுவை அன்பின் செய்தி ஷர்மாவை மிகவும் கவர்ந்திருந்தது. அதுமட்டுமல்ல, அவர்கள் இருவரும் ராஜஸ்தானிகளுமாகவுமிருந்தனர். அதின் காரணமாக அவர் தமது வீட்டிற்கு தர்ம் பிரகாசை அழைத்து திரும்பவும் அந்தச் செய்திகளைப் பேசும்படியாகக் கேட்டுக் கொண்டார். அவருடைய செய்தியை கேட்கும்படியாக மற்றும் பலரையும் டாக்டர் ஷர்மா தனது வீட்டிற்கு அழைத்திருந்தார்.

டாக்டர் ஷர்மா வீட்டில் தர்ம் பிரகாஷ் கொடுத்த செய்தியை பதிவுபண்ணிக் கொண்டார்கள். தர்ம் பிரகாஷ் இந்தியா போன பின்னரும் டாக்டர் வீட்டில் பதிவுபண்ணப்பட்ட அவருடைய செய்தியை திரும்பத் திரும்ப போட்டுக் கேட்டு ஆனந்தம் அடைந்தார்கள். அவர்களில் மொராரி பாபு என்ற புகழ்பெற்ற இந்து மத வேதாந்தியும் உண்டு. இந்து மக்களின் இராமாயணத்தைக் குறித்து வியாக்கியானங்கள் கொடுப்பதில் அவர் மிகுந்த பாண்டித்தியம் பெற்றிருந்தார். இராமாயண பிரச்சாரம் செய்வதற்காக அவர் அந்தச் சமயம் அமெரிக்காவுக்கு வந்திருந்தார். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து ஒரு சுவையான நிகழ்ச்சி நடந்தது.

சில வருடங்கள் சென்ற பின்னர் தர்ம் பிரகாஷ் புஷ்கரிலுள்ள தமது வீட்டில் இருந்தார். குடும்பத்தினர் தங்கள் காலை ஆகாரத்தை முடித்துவிட்டு அந்த நாளின் வேலைகளைச் செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். தற்செயலாக அவரது இளைய மகள் வீட்டின் ஜன்னல் வழியாகப் வெளியே பார்த்த போது ஒரு அதிரடிப்படை ஜீப் வீட்டின் முன்னால் வந்து நிற்பதைக் கண்டாள். அதிரடிப்படை வீரர்களும், மற்றும் சிலரும் அதிலிருந்து இறங்குவதைக் கண்டு ஆச்சரியமடைந்த அவள் தனது தகப்பனாரண்டை ஓடி தான் பார்த்ததைக் கூறினாள். அதற்குள்ளாக கதவின் மணி ஒலித்தது. மகள் ஓடிப்போய் கதவைத் திறந்தாள். "பண்டிதர் தர்ம் பிரகாஷ் ஷர்மாவை நான் தரிசிக்கலாமா?" என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார்.

வீட்டிற்குள்ளிருந்த தர்ம் பிரகாஷ் உடனே முன்னால் நடந்து வந்தார். தன்னைக் காண வந்த விருந்தாளியை அவரால் நம்பவே இயலவில்லை. அவர் வேறு யாரும் இல்லை, அவர்தான் சற்று முன்பாகக் குறிப்பிட்ட இந்து மார்க்க வேதாந்தி மொராரி பாபு ஆவார். தர்ம் பிரகாஷ் உடைய வயதில்தான் அவரும் இருந்தார். பளிச்சிடும் வெண் வேஷ்டி, வெண் சட்டை போட்டு ஒரு சால்வையால் தன்னை மூடியிருந்தார். இரண்டு அதிரடிப்டைவீரர்கள் அவரைக் கவனித்தார்கள். மொராரி பாபு தரை மட்டாகக் குனிந்து தர்ம் பிரகாசின் பாதங்களை தனது கரங்களால் தொட்டு மரியாதை செலுத்தியது அவரை ஆச்சரியப்படுத்துவதாக இருந்தது. தர்ம் பிரகாஷ், மிகுந்த மரியாதையுடன் அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் பட்டணத்தில் டாக்டர் ஷர்மா அவர்களின் வீட்டில் பதிவுசெய்யப்பட்ட தர்ம் பிரகாஷின் செய்தியைக் கேட்டு அதினால் மிகவும் பரவசமடைந்தவர் மொராரி பாபு என்பதை சற்று மேலே நாம் பார்த்தோம். அதின் காரணமாக அவர் புஷ்கர் பட்டணத்திற்கு வந்து "ராம்சரித்திரா மானாஸ் யக்யா" என்ற புஷ்கரில் நடக்கும் 10 நாட்கள் கூட்டத்தில் வந்து பேசும்படியாக தர்ம் பிரகாசை அழைப்பதற்காக அவர் வந்திருந்தார். அந்தக் கூட்டங்களில் ராமாயண பக்தகோடிகளும், மார்க்க விற்பன்னர்களுமாக 5 இலட்சம் மக்கள் கூடி வருவார்கள். "நான் தேடி அலைந்து கொண்டிருக்கும் கடவுளுடைய அன்பை நீங்கள் உங்கள் வாழ்வில் கண்டு கொண்டு விட்டீர்கள்" என்று மொராரி பாபு கூறினார்.

தர்ம் பிரகாஷ், மொராரி பாபு அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். முதல் நாள் ஆரம்பக் கூட்டத்திலேயே தர்ம் பிரகாஷ் பேசும்படியாகக் கேட்டுக் கொள்ளப்பட்டார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய அன்பைக் குறித்து அவர் பேசினார். அவர்கள் எல்லாரும் அந்தச் செய்தியை மிகவும் பரவசத்துடன் கேட்டதுடன் அந்தச் செய்தியை மனதார ஏற்றுக் கொள்ளவும் செய்தார்கள்.

"இந்தியாவிலுள்ள ஆரியர்கள் நிஷ்களங்க அவதாரத்தை (குற்றமில்லாத, பூரண பரிசுத்த அவதாரத்தை) பள்ளத்தாக்குகளிலும், இமயமலை உச்சிகளிலும் தொன்று தொட்டு பண்டைய கால முதல் தேடி வந்து கொண்டிருப்பது போல பண்டைய இஸ்ரவேல் மக்களும் எகிப்தைச் சுற்றியுள்ள வனாந்திரங்களில் அலைந்து திரிந்து மனுக்குலத்திற்கு மீட்பை அருளப் போகும் இரட்சகர் உலகில் தோன்றப்போவதை வெளிப்பாடாகப் பெற்றுக் கொண்டார்கள். இப்படித் தேடும் ஆத்துமாக்கள் அனைத்தும் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் ஆழம் காண முடியாத அன்பின் சமுத்திரத்தில் வந்து சந்திக்கின்றார்கள்" என்பதாக பேசினார். நான்கு வேதங்கள், இதிகாசங்கள், இந்து ரிஷிகள், ஞானியர்கள் போன்றோரின் வாசகங்களிலிருந்தே மனுக்குலத்தின் பாவங்களுக்காக சிலுவையில் தொங்கிய இயேசு இரட்சகரின் அன்பை தர்ம் பிரகாஷ் விவரித்துப் பேசினார்.

 

நீங்களே அந்த மனிதர், தர்ம் பிரகாஷ்
நீங்களேதான் அந்த மனிதர்

கீழ்ப்படிதல்! அநேகருக்குப் பிரியமில்லாத வார்த்தை அது. ஏதேச்சாதிகாரம், குரூரம், நியாயமற்ற மிரட்டல், போன்ற காரியங்கள் எல்லாம் அதற்குப் பின்னணியில் பதுங்கி உள்ளது போல நமக்குத் தெரிகின்றது. ஆனால், அந்தக் கீழ்ப்படிதலே நம்மை ஆண்டவர் இயேசுவோடு ஒன்றாக இணைக்கும் என்பதையும் அது ஒன்றே நம்மை பாதுகாப்பாக பரலோக பாக்கியத்திற்கு நேராக நம்மை வழி நடத்திச் செல்லும் என்பதையும் மெய் தேவ மக்கள் அறிவார்கள்.

தர்ம் பிரகாஷ் ஞானஸ்நானம் பெற்றதன் பின்னர் சகோதரன் பக்தசிங் அவர்களின் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக கவனிக்கக்கூடிய அநேக சந்தர்ப்பங்கள் அவருக்குக் கிடைத்தது. எவ்வளவு நெருக்கமாக அவருடைய வாழ்க்கையை கவனித்தாரோ அந்த அளவிற்கு தர்ம் பிரகாஷ் ஆச்சரியத்தால் நிரம்பினார். எல்லா மனிதரையும் போல மாம்சத்தினாலும், இரத்தத்தினாலும் அவர் உருவாக்கப்பட்டிருந்த போதினும் அவரைச் சுற்றி தேவ மகிமை பிரகாசித்ததை தர்ம் பிரகாஷ் கண்டு கொண்டார். பரிசுத்தத்தின் ஒளி, தேவ வல்லமை, சமாதானம் எல்லாம் அவரிலிருந்து பரவியது.

சகோதரன் பக்தசிங் அப்பழுக்கற்ற பூரண பரிசுத்த புருஷன் அல்ல. ஒருக்காலும் இல்லவே இல்லை. அவருடைய குறைபாடுகள் மிகவும் துலாம்பரமாக தெரிந்தன. எவரும் வாசிக்கக்கூடிய திறந்த ஒரு புத்தகமாக அவர் இருந்தார். அவரை ஆராய்ந்தறிய விரும்பும் எவரும் அவருடைய குற்றங்களை காண முடிந்தபோதினும் அவரிலிருந்து தேவ வல்லமை வெடித்துச் சிதறியது. அது எங்கிருந்து வந்தது?

பக்தசிங், தர்ம் பிரகாஷ் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். பக்தசிங் சாப்பாட்டு மேஜையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அதே மேஜையில் தர்ம் பிரகாசையும் வந்து தன்னுடன் அமர்ந்து சாப்பிடச் சொல்லுவார். ஒரு நாள் காலையில் அவர்கள் இருவரும் தங்கள் காலை ஆகாரத்தை முடித்ததும் "சகோதரனே, நான் உங்களிடத்தில் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன்" என்று தர்ம் பிரகாஷ், சகோதரன் பக்தசிங்கிடம் கூறினார்.

"நல்லது, அது என்ன?" என்று பக்தசிங் கேட்டார்.

"உங்களுக்கு சம்மதமானால் நான் அந்தக் கேள்வியை உங்களிடம் தனிமையில் கேட்க விரும்புகின்றேன்" என்றார் தர்ம்.

உடனே பக்தசிங் மேஜையிலிருந்து எழுந்து சாப்பாட்டு அறையின் தாழ்வாரத்தின் மூலைக்கு தர்ம் பிரகாசை அழைத்துச் சென்று "நாம் பேசுவதை ஒருவரும் கேட்க முடியாத ஒரு தனிமையான இடத்திற்கு இப்பொழுது நாம் வந்திருக்கின்றோம் அல்லவா?" என்று அரைப் புன்முறுவலோடு அவரைக் கேட்டார்.

மாதக் கணக்கில் தர்ம் பிரகாசின் உள்ளத்தை வாட்டிக் கொண்டிருந்த கேள்வி அவருடைய வாயிலிருந்து புறப்பட்டது. "நான் உங்களைக் கவனிக்கின்ற போதெல்லாம் தேவனுடைய பிரசன்னம் எப்பொழுதும் உங்களோடிருக்கிறதைப் பார்க்கின்றேன். உங்களுடைய அந்த ஆவிக்குரிய தேவ வல்லமையின் இரகசியம் என்ன?"

பக்தசிங் புன்னகை பூத்தார். அவருடைய கேள்விக்கான விடை பக்தசிங் வாயிலிருந்து ஒரு வார்த்தையில் வெளி வந்தது. "கீழ்ப்படிதல்"

அவருடைய பதில் தர்ம் பிரகாஷை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 1991 ஆம் ஆண்டு ஆமதபாத் பட்டணத்தில் பரிசுத்த சபை கூடுதல் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்பு 15 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு நடந்த கூட்டத்தில் தர்ம் பிரகாஷ் முதன் முறையாக கலந்து கொண்டார். இதற்கு இடைப்பட்ட நாட்களிலும் பக்தசிங் தேவச் செய்தி கொடுத்த அநேகக் கூட்டங்களில் தர்ம் கலந்து கொண்டு அளவற்ற ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கின்றார்.

பக்தசிங் இப்பொழுது மிகவும் வயதானவரும், மிகவும் பெலவீனருமாகிவிட்டார். அவருடைய சுகம் விரைவாக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. அவருடன் எப்பொழுதும் இருந்து அவரைக் கவனித்துக் கொள்ள ஒரு ஆள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

1991 ஆம் ஆண்டு ஒரு நாள் காலையில் தர்ம் பிரகாஷ் குளிப்பதற்காக தன்னை ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது டேனியேல் என்ற ஒரு சகோதரன் தர்ம் பிரகாசிடம் ஓடோடி வந்து "அங்கிள் உங்களை அழைக்கின்றார்" என்று சொன்னான். "நான் குளித்து துணி மாற்றிக் கொண்டு வருகின்றேன்" என்று சொல்லுங்கள் என்று கூறினார். சில நிமிடங்களில் அந்த சகோதரன் திரும்பவும் வந்து "தயவுசெய்து உடனே வாருங்கள், தாமதிக்க வேண்டாம்" என்று வருந்தி அழைத்தான்.

எனவே தர்ம் பிரகாஷ் பக்தசிங் அறைக்கு விரைந்து சென்றார். அவருடைய அறைக்குள் பிரவேசிக்கவும் பக்தசிங் எந்த ஒரு வேறு பேச்சும் இல்லாமல் "நாம் ஜெபிப்போம்" என்று கூறி முழங்காலூன்றினார். பின்னர் அவருடைய கரத்தில் ஒரு வேதாகமத்தைக் கொடுத்து ஏசாயா 43 ஆம் அதிகாரத்தை எடுத்து முதல் நான்கு வசனங்களை வாசியுங்கள் என்றார். இந்த வசனங்கள் ஆண்டவர் உங்களுக்குத் தரும் நிச்சயமான வாக்குத்தத்தங்களாகும். இவைகளை உங்களுக்கு பொக்கிஷமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.

அதற்கப்பால் அவர் மிகவும் மென்மையான குரலில் "தர்ம் பிரகாஷ் நான் உங்களுடைய புஷ்கருக்கு வந்திருக்கின்றேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

"எப்பொழுது சகோதரனே? அது எனக்குத் தெரியாதே" என்றார் தர்ம்.

நீண்ட நாட்களுக்கு முன்பாக அதாவது 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில். நான் பேசும்படியாக அழைக்கப்பட்டிருந்த "ராஜபுதானா கிறிஸ்தவ கன்வென்ஷன்" கூட்டத்தில் என்னை பேச அனுமதிக்காத காரணத்தால் எனக்கிருந்த ஓய்வு நேரத்தில் புஷ்கர் பட்டணத்தை பார்க்க வந்தேன். நான் அந்த பட்டணத்தை சுற்றிப் பார்த்துவிட்டு புஷ்கர் தீர்த்தத்திலுள்ள கவ்காட் என்ற இடத்திற்கு இறங்கினேன். அங்கிருந்து நான் பார்த்தபோது புஷ்கர் பட்டணத்தின் தலைமை பூஜாரி அவர்களின் உயர்ந்த வீடு எனக்குத் தெரிந்தது. நான் அந்த கவ்காட்டில் முழங்காலூன்றி ஜெபித்தேன்"

தர்ம் பிரகாஷ் அவருடைய வார்த்தைளை மிகவும் உன்னிப்பாக கவனித்தார்.

"நான் புஷ்கரைப் பார்த்தபோது அந்தப்பட்டணம் முழுவதும் கோயில்களாலும், அந்தக் கோயில்களில் வேறுபட்ட மதத்தினரின் விதவிதமான கொடிகள் காற்றில் பறப்பதையும் கண்டேன். "இந்த வித்தியாசமான மார்க்கங்களின் நடுவில் உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த நீர் ஒரு மனிதனை எழுப்பமாட்டீரா?" என்று உள்ளம் உருகி ஜெபித்தேன்."

பக்தசிங் இப்பொழுது தர்ம் பிரகாசை ஆழ்ந்து பார்த்தார். "என்னுடைய ஜெபம் தேவ சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டது. கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டார்"

தர்ம் பிரகாஷ், பக்தசிங் முகத்தைப் பார்க்க தயங்கினார். அவருடைய முகம் ஆழமாக உணர்ச்சி வசப்பட்டிருந்தது. அவருடைய முகம் அசாதாரணமாக பளிச்சிட்டது. கண்ணீர் துளிகள் கீழே உருண்டு வருவதற்கு ஆயத்தமாக இருந்தன.

ஒரு நீண்ட அமைதி.

அதற்கப்பால் மிகவும் மெதுவாக, மென்மையாக, கொஞ்சங்குறைய ஒரு இரகசியத்தைப் பேசுவது போல "நீங்களே அந்த மனிதர், தர்ம் பிரகாஷ் நீங்களேதான் அந்த மனிதர்" என்று சொன்னார். தர்ம் பிரகாசால் எதுவும் பேச முடியவில்லை. அவர் பக்தசிங் அருகில் இரு கரம் கூப்பி முழங்காலில் நின்று கொண்டிருந்தார். பக்தசிங்கின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து முகத்தின் வழியாக உருண்டோடிக் கொண்டிருந்தது. அவருடைய இருதயமும், உதடுகளும் அசைந்தன. ஆனால் எந்த ஒரு சப்தமும் கேட்கவில்லை. இறுதியாக, "நன்றி ஆண்டவரே, உமக்கு நன்றி ஐயா" என்று சொன்னார்.

அதற்கப்பால் பக்தசிங் நிரந்தரமாக அமைதியாகிவிட்டார். அந்த நாளின் மாலை வேளையிலேயே அவரது பேச்சாற்றல் அவரைவிட்டுப் போய்விட்டது. அதற்கப்பால் மக்கள் கேட்கும் விதத்தில் அவரால் சப்தமாக பேசவே முடியவில்லை. தர்ம் பிரகாஷ் ஒருவர் மட்டுமே பக்தசிங் பேசிய கடைசி வார்த்தையை கேட்டவராவார். அதற்கப்பால் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் பக்தசிங் என்ற அந்த மாபெரும் பரிசுத்த தேவ மனிதர் தன் ஆண்டவரோடு கூட பரலோகில் வாழ்வதற்காக கடந்து சென்றுவிட்டார்.

***************************

This true life story has been translated from the book "A PUSHKAR PANDIT'S TRYST with GOD" By Malsawmi Jacob. It is published by Gospel Literature Service, Mumbai. Those who are interested to get and read this amazing Life Journey of Pandit Dharm Prakash Sharma please contact at the following address:-

GLS Publishing,
Udyog Bhavan,
250-D, Worli Colony,
MUMBAI 400 030

Phone No: (022) 2493 0116 & 6662 7243


 
 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM