ஆர்தர் பிங்க் 66 வயதை அடைந்தபோது அவருடைய சரீர சுகம் பாதிப்பு நிலையை அடையத் தொடங்கியது. அவர் ஒருவித சோகை நோயினால் பாதிக்கப்பட்டார். திடீரென்று அவருடைய எடை குறைந்தது. அவருடைய பரிசுத்த வாழ்க்கையையும், தன் அன்பின் ஆண்டவருக்கு அவர் செய்த உண்மையும், உத்தமமுமான தேவ ஊழியத்தையும் கண்டு வந்திருந்த தேவப் பிள்ளைகள் அவருடைய அந்த வயதின் நாட்களில் ஏராளமான ஆறுதல் கடிதங்களை எழுதி அவரை உற்சாகப்படுத்தினார்கள். அந்தக் கடிதங்கள் எல்லாவற்றிற்கும் பதில் எழுத அவரால் கூடாமற் போயிற்று. அதைக் குறித்து அவர் தம்முடைய நண்பர் ஒருவருக்கு "முதுமைப் பருவத்தின் பெலவீனங்களை அதிகமாக உணருகின்றேன். அதினுடைய நெருக்குதலின் காரணமாக என்னுடைய கடிதப் போக்குவரத்தைக் கணிசமாகக் குறைக்க வேண்டியதாகிறது" என்று எழுதினார்.
அவருடைய இரத்த சோகை நோய் அவருக்கு அதிக வேதனையைக் கொடுத்த போதினும் கிட்டத்தட்ட தம்முடைய கடைசி நாட்கள் வரை அவர் மருந்தை உட்கொள்ளவே இல்லை. ஆஸ்பத்திரி மருந்துகள் தன்னுடைய மனதை மந்தப்படுத்தி தன் அருமை இரட்சகருக்கான தன்னுடைய பணியை செய்து முடிக்கவிடாமல் தடைசெய்து விடும் என்று அவர் அஞ்சினார்.
மாபெரும் தேவ மனிதன் ஜாண் கால்வினைப் போன்று ஆர்தர் பிங்க் தம்முடைய வாழ்வின் கடைசி நாட்களில் வேதாகம புருஷனான "யோசுவா"வைக் குறித்து தம்முடைய பத்திரிக்கையில் விளக்கம் எழுதி வந்தார். அநேக ஆண்டுகளுக்கு முன்பாக அவர் எழுதிய தாவீதின் ஜீவிய விருத்தாந்தம் என்ற செய்தியில் அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:-
"தாவீது தன்னுடைய மரணத்திற்கான எல்லா ஆயத்தங்களையும் எந்த ஒரு மனக்குழப்பமுமின்றி மிகவும் சிறப்பாக முன் கூட்டியே ஒழுங்கு செய்து வைத்திருந்தார். தன்னுடைய மரணம் எல்லாவற்றிற்கும் முடிவு உண்டாக்கப் போவதில்லை என்பதை அவர் நன்கறிந்திருந்தார்" என்று எழுதினார்.
தாவீதைக் குறித்து தான் எழுதினவாறே ஆர்தர் தம்முடைய மரணத்தைக் குறித்தும் எல்லா ஆயத்தங்களையும் முன்கூட்டியே செய்து கொண்டார். அதைக் குறித்து ஜேம்ஸ் மாக்ளின் என்பவர் இவ்வாறு எழுதுகிறார்:-
"ஆர்தர் பிங்க் தன்னுடைய காரியங்கள் எல்லாவற்றையும் மரணத்திற்கு முன்னர் ஒழுங்குபடுத்திக் கொண்டார். தன்னுடைய மனைவி வீரா பிங்க் அம்மையாரிடம் தன்னுடைய அடக்க ஆராதனையைக் குறித்தும், அதில் பங்கு பெற வேண்டிய மக்களைக் குறித்தும் அவர் விபரமாகப் பேசினார். ஆர்தர் தம்முடைய வீட்டைவிட்டுக் கடைசியாக வெளியே சென்றது 1952 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதியாகும். கடை வீதிக்குச் சென்ற அவர் திரும்பி வரும்போது ஒரு விமானத் தபால் கவரையும் வாங்கி வந்தார். அதை அவர் தன்னுடைய மனைவியின் கரங்களில் கொடுத்து " நான் ஆண்டவருடைய பரம இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்ததும் என்னுடைய மரணச் செய்தியை எல்சிக்கும், ஸ்டான் பிரசல்லுக்கும் எழுதி இந்தக் கவரில் வைத்து அனுப்பி விடு" என்று கூறினார். 1952 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள் ஆர்தர் பிங்க் தம்முடைய எழுத்துக்களில் குறிப்பிட்ட மிகவும் பரவசத்துடன் வாஞ்சித்த கீழ்க்கண்ட வரிகளில் குறிப்பிட்ட மோட்சானந்த மகிமைக்குள் பிரவேசித்தார்:-
"நானும் என் நேசர் இயேசுவும்
பேரானந்த மகிமை ஒளிப் பிரளயத்தில்
முடிவற்ற மோட்சானந்தம் பகிர்ந்திடுவோம்.
அன்பர் வாழும் வீட்டில் நானும் சதா வாழ்வேன்
அவரும் என்னுடனே என்றுமாய்த் தங்கிடுவார்" |
அவருடைய சரீர அடக்கம் ஜூலை மாதம் 17 ஆம் தேதி இருந்தது. "அது மிகவும் ஒரு எளிமையான நிகழ்ச்சி" என்கின்றார் ஜேம்ஸ் மாக்ளின். "ஆர்தர் பிங்க் வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டி விலையுயர்ந்த ஒன்றல்ல, அதே சமயம் அடிமட்டமான ஒரு பெட்டியுமல்ல. வேதாகமத்தில் அப்போஸ்தலர் 8 ஆம் அதிகாரத்தில் 2 ஆம் வசனத்தில் "தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம் பண்ணினார்கள்" என்று குறிப்பிட்டவாறு ஆர்தர் பிங்க் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருடைய பக்தியுள்ள பரிசுத்த நண்பர்களில் 8 பேர் அவருடைய சரீரத்தை பட்டணத்திற்கு வெளியே உள்ள சாண்ட்விக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்தார்கள். வேத வாக்கியங்களை மற்றவர்களுக்குப் போதித்த அந்த தேவ பக்தனின் அடக்கம் வேத வசனங்களின் ஒழுங்கில் அமைந்திருந்தது. "அவருடைய அடக்கத்திற்குச் சென்று திரும்பிய நாங்கள் அவருடைய வீட்டிற்கு வந்து 23 ஆம் சங்கீதத்தைப் பாடினோம். அதின் பின்னர் ஒரு வேத பகுதி வாசிக்கப்பட்டது. அதையடுத்து ஜெபம் ஏறெடுத்த பின்னர் ஆர்தர் பிங்க் குடியிருந்த வாடகை வீட்டின் சொந்தக்கார தேவ பக்தியுள்ள அம்மையார் அளித்த தேநீர் பானத்துடன் நாங்கள் ஸ்தோத்திரத்துடன் கலைந்து சென்றோம்" என்கின்றார் முதலில் குறிப்பிட்ட மாக்ளின்.
ஆர்தர் பிங்க் தம்முடைய பத்திரிக்கைக்கான பல மாதங்களுக்குத் தேவையான தேவச் செய்திகளை முன் கூட்டியே எழுதி வைத்துவிடுவார். எனவே, அவர் மரித்தவுடன் அவருடைய அருமையான பத்திரிக்கையும் நின்றுவிடவில்லை. அவருடைய தேவ பக்தியுள்ள மனைவி வீரா பிங்க் அம்மையார் பிங்க் மரிப்பதற்கு முன்பு எழுதி வைத்த அவருடைய செய்திகள் முடியும்வரை பத்திரிக்கையைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்கள். அவர் மரித்து 3 மாதங்களுக்குப் பின்னர் அதாவது செப்டம்பர் மாதப் பத்திரிக்கையில் "மகிமைக்குட்பட்ட ஆர்தர் பிங்க்கின் கடைசி நாட்கள்" என்ற தலைப்பில் வீரா பிங்க் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்கள்.
"என் கணவர் மரிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே அவருடைய தேக சுகம் குன்றிப் போனதை எண்ணி நான் மிகவும் சஞ்சலமுற்றேன். ஒவ்வொரு தடவையும் நான் அதை அவருக்குச் சுட்டிக்காட்டும் பொழுதெல்லாம் அவர் என்னைப் பார்த்து "என் அன்பே, அது விருத்தாப்பியத்திற்குரியது. அப்படி இருப்பதற்காகத் தேவனுக்குத் துதி செலுத்துவோம். பூலோக வாழ்வின் ஆரம்பத்திலல்ல, அதின் கடைசி விழிம்பில் இருப்பதற்காக நான் கர்த்தருக்குத் துதி செலுத்துகின்றேன். வாழ்வை இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிற தேவனற்ற வாலிபர்களுக்காக நான் மனதார துக்கிக்கின்றேன். தேவ மக்களுக்கு இது ஒரு பயங்கரமான காலமாகும். வருகிற நாட்கள் அவர்களுக்கு இன்னும் இருள் சூழ்ந்த காலமாகவே இருக்கும். எனினும், தேவன் தம்முடையவர்களை அறிவார். அவர் அவர்களை காத்துக் கொள்ளுவார்" என்று கூறினார். அநேக சமயங்களில் அவர் மட்டுக்கு மிஞ்சி களைப்புடன் காணப்பட்டார். அந்தச் சமயங்களில் நான் அவரைத் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளும்படியாகவும், அப்படியானால் ஆண்டவருக்குப் புதுப் பெலத்தோடும், நல்ல உற்சாகத்தோடும் வேலை செய்ய முடியும் என்று கூறுவேன். அதற்கு என் கணவர் "பகற் காலம் இன்னும் இருக்கும் போதே நாம் வேலை செய்து விட வேண்டும். ஏனெனில், ஒருவரும் கிரியை செய்யக் கூடாத இராக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. என்னுடைய பரலோக அழைப்பு தேவனிடமிருந்து வரும்போது நான் தேவப் பணியில் இருப்பதையே தேவன் கண்டு கொள்ள நான் விரும்புகிறேன்" என்பார். ஒவ்வொரு நாள் காலையிலும் நடப்பதற்காக வெளியே செல்லுவார். அந்த ஒரு நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் எல்லாம் அவர் ஆண்டவருடைய பணியில் மூழ்கியிருப்பார்.
நாங்கள் கடைசியாகத் தங்கியிருந்த ஸ்டானோவே என்ற தீவுக்கு கர்த்தர் கொண்டு வந்தமைக்காக அவர் எப்பொழுதும் ஆண்டவரை ஸ்தோத்திரித்தார். அந்த இடத்தில் நாங்கள் தொடர்ச்சியாக 12 ஆண்டு காலம் ஒரு வீட்டில் வாடகை கொடுத்து தங்கியிருந்தோம். கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளைக் கனப்படுத்தி அதை நேசிக்கின்ற மக்கள் மத்தியில் வாழ்வதை என் கணவர் பெரிதும் விரும்பினார். அவர் ஓய்வு நாளை நேசித்தார். அது அவருக்கு பரிசுத்தமும், பக்தி வினயமுமான நாளாகும். அந்த கர்த்தருடைய நாளை நேசிக்கும் தேவ மக்களை எல்லாம் அவர் கனம் பண்ணினார்.
நாங்கள் கடைசியாகத் தங்கியிருந்த ஸ்டானோவே தீவு என் கணவருக்கு மிகவும் பிடித்தமான அமைதியான இடம். அங்கு அவர் தன்னுடைய ஆண்டவரின் பணிகளையும், வேத வசன தியானத்தையும் தீவிரமாகச் செய்தார். எந்த நிலையிலும் தான் அந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை என்றும், கர்த்தர் தன்னை மகிமையில் எடுக்கும் நாள் வரை அந்த இட,த்திலேயே மாத்திரம் இருக்கப் போவதாக ஒரு தடவைக்கும் அதிகமாக அவர் என்னிடம் கூறியிருக்கின்றார்.
ஒரு நாள் இரவு என் கணவருக்கு திடீரென்று வாத ஜன்னி வந்து விட்டது. சில நிமிட நேரத்திற்கு அது நீடித்தது. அதின் தாக்குதலுக்குப் பின்னர் அவர் என்னை நோக்கி "நான் வெகு சீக்கிரமாகவே கர்த்தருடைய மகிமையில் இருப்பேன். என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. அந்த 103 ஆம் சங்கீதத்தில் நான் மிதப்பது போன்ற அத்தனை மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டிருக்கின்றது" என்று கூறினார். அவருடைய மரணத்துக் கேதுவான சுகயீனத்தை எண்ணி நான் அழுவதை ஒரு நாள் அவர் கவனித்து விட்டார். "என் அன்பே, நீ ஏன் அழுகிறாய்? வெகு சீக்கிரமாக நான் மேலோக இன்ப வீட்டைச் சென்றடையப் போவதை எண்ணி நீ கர்த்தருக்குள் ஆனந்தம் அல்லவா கொள்ள வேண்டும்?" என்றார். "நான் எனக்குள்ளேயே என் நிலை எண்ணி அழுகின்றேன். நீங்கள் மரித்த பின்பு நான் தனிமையில் அல்லவா விடப்படுவேன். நீங்கள் மரித்து, பாழுலகத்தின் பாடுகளிலிருந்து விடுதலை பெற்றுச் செல்லுவது உங்களுக்கு நல்லது என்பதை நான் மனதார உணருகின்றேன். ஆனால், என் தனிமையை நான் எண்ணுகையில் தான் திகில் அடைகின்றேன்" என்றேன். அதற்கு அவர் மிகுந்த பொறுமையுடன் "அன்பின் இரட்சா பெருமான் இதுகால பரியந்தம் ஆச்சரியமான விதத்திலே நமக்கு நல்லவராக இருந்து இத்தனை நீண்ட ஆண்டு காலங்களும் நம்மைப் பாதுகாப்பாக வழி நடத்தி வந்திருக்கின்றார். உன்னுடைய மகா தேவை மணி நேரத்தில் அவர் உன்னை ஒருபோதும் கைவிடார்" என்று கூறினார்.
வாத ஜன்னி வந்த இரவிலிருந்து என் கணவர் தன்னுடைய காரியங்களை எல்லாம் வெகு நீண்ட பிரயாணம் செல்லும் ஒரு மனிதன் தன்னுடைய காரியங்கள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவது போல ஒழுங்குபடுத்தத் தொடங்கினார். எந்த எந்த காரியங்களை எப்படி எப்படி செய்ய வேண்டும், எந்த எந்த காரியங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எல்லா விபரங்களையும் அவர் எனக்குத் தெளிவாகக் கூறினார். முக்கியமாக அவர் எழுதி வந்த "வேத வசனங்களில் போதனைகள்" என்ற பத்திரிக்கையில் தான் எழுதி வைத்த எல்லா குறிப்புகளையும், செய்திகளையும் வெளியிட்ட பின்னர் அந்தப் பத்திரிக்கையை நிறுத்து விடும்படிக் கேட்டுக் கொண்டார். தன்னுடைய மரணத்தின் மணி நேரம் நெருங்கி வருவதை அறிந்த அவர் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அதிகமாகத் தேவச் செய்திகளை எழுதினார். "கர்த்தர் நல்லவர், அவர் எப்பொழுதும் நலமே செய்வார்" என்பதே சதா அவருடைய உதடுகளில் காணப்பட்ட வார்த்தைகளாகும். அந்த இறுதி நாட்களில் அவர் தன்னை முற்றுமாக ஆண்டவரின் திருவுளச் சித்தத்திற்கே ஒப்புவித்தார். அநேக தடவைகள் அவர் "கர்த்தர் தம்முடைய பார்வைக்கு நலமானதை எனக்குச் செய்வாராக" என்று கூறினார்.
அந்நாட்களில் ஒரு நாள் நாங்கள் இருவரும் கர்த்தர் எங்களுக்குக் கடந்த காலங்களிலும் தற்போதும் செய்து வந்த செய்து வருகின்ற காரியங்களை நினைவு கூர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கர்த்தர் எங்கள் மோட்ச பிரயாண பரதேசி வாழ்க்கையில் செய்த காரியங்களை மீண்டும் நினைவுபடுத்தியபோது எங்கள் உள்ளங்கள் களிகூர்ந்தன. என் கணவர் என்னைப் பார்த்து "அன்பே, தேவன் நமக்கு எல்லாக் காரியங்களையும் நேர்த்தியாகச் செய்தார்" "ஆம் என் நேச மனைவியே, எல்லாக் காரியங்களையும் அவர் நமக்குச் சிறப்பாகச் செய்தார். கொஞ்ச காரியங்களை மாத்திரமல்ல" என்றார் அவர்.
புதன் கிழமை காலையில் என் கணவர் மரித்தார். அதற்கு முந்திய நாள் செவ்வாய் கிழமை காலையில் அவர் கட்டிலில் படுத்திருந்தார். நான் இதர வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து "இருள் கடந்து சென்று விட்டது. மெய்யான ஒளி பிரகாசிக்கின்றது. அந்த ஒளி அதிகமதிகமாகப் பிரகாசித்து பூரணமான நிலையை நோக்கிக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது" என்றார். பின்னர் அவர் தன்னுடைய கரத்தை மேலே தூக்கி "எனக்கு முன்பாக எல்லாம் மகிமை நிறைந்ததாக இருக்கின்றது. இம்மானுவேலரின் நாட்டில் மகிமை வாசம் பண்ணுகின்றது" என்று கூறினார். "உங்களுக்கு எல்லாம் அதிக மாட்சியாக இருக்கின்றதா?" என்று நான் அவர்களிடம் கேட்ட போது அவர் என்னைப் பார்த்து "உன்னுடைய சந்தேகங்களையும், பயங்களையும் அப்பால் வைத்துவிட்டு ஆண்டவர் இயேசுவில் உன் பூரண நம்பிக்கையை வைக்கும் பட்சத்தில் நான் அனுபவிக்கும் பாக்கியங்கள் உனக்கும் கூடத்தான் கட்டாயம் இருக்கின்றன" என்று துரிதமாகப் பதில் அளித்தார்கள்.
பின்னர் படுக்கையிலிருந்து எழுந்து நாற்காலியில் உட்கார்ந்து பத்திரிக்கையில் அச்சிடப்பட வேண்டிய தேவ செய்திகளை அவர் தன்னுடைய வாயினால் சொல்ல நான் அவற்றை தாளிலே எழுதினேன். அந்த நாளின் பெரும்பாலான நேரம் அவ்வண்ணமாகவே அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். கடைசியாகத் திடீரென்று தன்னை எடுத்துப் படுக்கையில் கிடத்தும்படியாகக் கூறினார். எப்படி நான் அவரை தூக்கிக் கிடத்தினேனோ எனக்குத் தெரியாது. கொஞ்ச நேர இளைப்பாறுதலுக்குப் பின்னர் அவர் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பேப்பரையும், பென்சிலையும் கொண்டு வரச் சொன்னார். "நான் சொல்லாமல் விட்டுவிட்ட கடைசி நான்கு வரிகளையும் கூறி விடுகின்றேன். நான் பூலோகத்தை விட்டுக் கடந்த பின்னர் அவற்றை டைப் செய்து அச்சுக்கு அனுப்பிவிடு" என்று சொல்லிவிட்டு "என் வேலை முடிந்தது. என் ஓட்டம் முற்றுப் பெற்றது. இரட்சகரண்டை செல்ல நான் ஆயத்தமாக இருக்கின்றேன்" என்ற வார்த்தைகளுடன் படுக்கையில் படுத்த அவர் திரும்பவுமாக கட்டிலிலிருந்து எழும்பவே இல்லை. ஆனால், கட்டிலில் மிகுந்த மனமகிழ்ச்சியோடு எப்பொழுதும் தேவனைத் துதித்துக் கொண்டிருந்தார். அவருடைய வாய் அடிக்கடி 23 ஆம் சங்கீதத்தைக் கூறிக்கொண்டே இருந்தது.
அவர் தன் படுக்கையில் படுத்தவாறே ஒரு தடவை "தேவன் வாக்குத்தத்தம்பண்ணின எல்லா நன்மையான காரியங்களும் நிறைவேறின. ஒரு நன்மையான காரியம் கூட நிறைவேறாமல் தடைப்படவில்லை" என்றார். மற்றொரு தடவை "தேவன் என் பாவங்களுக்குத் தக்கதாக எனக்குச் செய்யாமலும் என் அக்கிரமங்களுக்குத் தக்கதாக எனக்குச் சரிக்கட்டாமலும் என்னை விட்டுவிட்டார்" என்று சொன்னார். பிறிதொரு தடவை தன்னுடைய சரீரத்தின் கொடிய உபாதையில் "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" என்றார். என் கணவரின் முகம் அடிக்கடி தேவப் பிரசன்னத்தின் ஒளியால் பிரகாசிப்பதை நானும் எனக்கு உதவியாக அருகிலிருந்த மற்றொரு அன்பான சகோதரனும் கவனித்தோம். பரலோக மகிமையின் காட்சிகளை அவர் கண்டு கொண்டிருக்கின்றார் என்று நாங்கள் இருவரும் எங்களுக்குள்ளாக நிச்சயப்படுத்திக் கொண்டோம். நாங்கள் கடைசியாக அவருடைய வாயிலிருந்து கேட்ட வார்த்தைகள் "வேத வாக்கியங்கள் எல்லாம் தாமாகவே விளக்கம் சொல்லி புரிய வைத்துவிடும்" என்பதே. அதற்கப்பால் அவருடைய வாயிலிருந்து எந்த ஒரு வார்த்தையும் புறப்படவில்லை. அப்படியே அவருடைய ஜீவன் மிகவும் அமைதியாகப் பிரிந்து சென்று விட்டது. இப்படியாக என் பரிசுத்தவானாகிய கணவர் தான் அத்தனை அருமையாக நேசித்தவரும், அந்தப் பரம எஜமானனுக்காகத் தன் ஜீவ காலம் முழுவதிலும் தொண்டு செய்த அருமை ஆண்டவரிடம் சதா காலமும் சுகித்து வாழ்ந்து இருக்கும்படியாகக் கடந்து சென்று விட்டார். அல்லேலூயா.
|