பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்

ஆண்ட்ரு போனர்
1810 - 1892


"உன்னுடைய பரிசுத்தத்திற்குத் தக்கதாக உனது வெற்றி அமைந் திருக்கும்"

"தேவனுடைய மோட்ச பிரயாணிகளில் எவரும் நாதியற்ற நீசர்களாக தெரு ஓரம் விழுந்து கிடக்க மாட்டார்கள்"

"ஒரு சந்தோசமற்ற, இருளடர்ந்த விசுவாசி நிச்சயமாகவே தேவனுடைய ராஜ்யத்தின் ஒழுங்கு முறைகளுக்கு முற்றும் அப்பாற்பட்டவன். அவனுக்கும் தேவனுடைய ராஜ்யத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது"

"ஜெபமும், விழித்திருந்து வாழ்வை பரிசுத்தமாகக் காத்துக் கொள்ளுவதும் இரயிலின் தண்டவாளம் போல இணை கோடுகளில் இரட்டையாகச் செல்லுகின்றன"

"வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரம கானானுக்கு செல்ல தேவன் நமக்கு ஒரு இலகுவான பயணத்தை ஒருக்காலும் தரமாட்டார். ஆனால் ஒரு பத்திரமான பயணத்தை அவர் நமக்குத் தந்தருள்வார்"

"நமக்கு புதிய ஈட்டிகளோ அல்லது புதிய பட்டயங்களோ அல்லது புதிய ஆயுதவர்க்கங்களோ தேவை இல்லை. நமது பட்சத்தில் நமக்கு ஒத்தாசையாக எழுந்து நிற்பவர் யார் என்பதை நாம் கண்ணாரக் கண்டு கொள்ளும்படியாக நமது கண்களுக்கு போடும்படியாக அதிக அளவிலான கண் கலிக்கம் மாத்திரமே நமக்குத் தேவை"

"உனக்கு இரண்டு மோட்சம் இல்லையேல் ஒரு மோட்சமும் இல்லை. உனக்கு பூவுலகத்தில் மோட்சம் இல்லையேல் அப்பாலுள்ள பரலோகத்திலும் மோட்சம் கிடையாது"

இப்படிப்பட்ட எத்தனை எத்தனையோ அருமையான மணி மொழிகளை உதிர்த்தவர்தான் ஆண்ட்ரு போனர் என்ற ஸ்காட்லாந்து தேசத்து பரிசுத்தவானாவார். ஜேம்ஸ் போனர், மார்ஜரி போனர் என்ற தம்முடைய பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாக அவர் பிறந்தார். ஸ்காட்லாந்து தேசத்திலுள்ள பேட்டர்ஸன் கோர்ட் என்ற இடத்திலுள்ள பண்டைய கால வீடு ஒன்றில் அவருடைய பிறப்பு இருந்தது. அவர் 11 வயதாக இருந்தபோது அவருடைய தகப்பனார் ஜேம்ஸ் போனர் இறந்து போனார். ஆண்ட்ரு போனரும் அவருடைய சகோதர சகோதரிகளும் அவருடைய பக்தியுள்ள தாயாராலும் மூத்த சகோதரன் ஜேம்ஸ் என்பவராலும் வளர்க்கப்பட்டனர். ஆண்ட்ரு போனர் 1821 ஆம் ஆண்டு தனது கல்விக்காக உயர்நிலை பள்ளிக்குச் சென்றார். படிப்பில் அவர் வெகு சமர்த்தனாக விளங்கினார். "தான் படித்துக் கொடுத்த அனைத்து மாணவர்களிலும் லத்தீன் மொழியில் பாண்டித்தியம் பெற்று விளங்கிய ஆண்ட்ருவைப் போல யாரும் இருந்ததில்லை" என்று அந்தக் கலாசாலையின் தலைவரே கூறினார். ஆண்ட்ரு போனருடைய பெற்றோர் மற்றும் அவருடைய குடும்பத்தின் முந்தைய தலை முறையினர் பலரும் ஸ்காட்லாந்து தேசத்தின் மகத்தான எழுப்புதல்களுக்கும் ஆவிக்குரிய உயிர் மீட்சிகளுக்கும் காரணமாக விளங்கின போதினும் அந்தப் பரம்பரையில் வந்த ஆண்ட்ரு போனர் இளம் பிரயாயத்தில் கிறிஸ்தவ மதத்தின்பால் எந்த ஒரு பற்றும் பாசமும் அற்றவராகவே காணப்பட்டார். ஆனால், தேவனுடைய மகத்தான கிருபையால் அவர் 20 வயது வாலிபனாக இருந்தபோது 1830 ஆம் ஆண்டு ஆண்டவர் இயேசுவை தம்முடைய சொந்த இரட்சகராக ஏற்று அவருடைய மெய் அடியானாக மாறினார். அவருடன் படித்த சில மாணவர்களும் அவரைப் போலவே ஆண்டவருடைய இரட்சிப்பின் பாத்திரங்களாக தங்களுடைய பள்ளி நாட்களிலேயே மாறிவிட்டனர். அவர்கள் எல்லாரும் தங்கள் ஆண்டவருக்காக பற்பலவிதமான தேவ ஊழியப் பணிகளை தெரிந்து கொண்டனர். நம்முடைய ஆண்ட்ரு போனர், காலேஸ் என்ற ஸ்காட்லாந்து தேசத்தின் கிராமம் ஒன்றில் அங்குள்ள திருச்சபையின் குருவானவராக 1838 ஆம் ஆண்டு பணி செய்யத் தொடங்கினார்.

 

தேவனுடைய இருதயத்திற்கேற்ற உத்தம குருவானவர்

காட்லாந்து தேசத்தின் பசுமை குலுங்கும் அழகிய கிராமம் காலேஸ் ஆகும். டன்சினான் காட்டின் எல்லைப் புறத்திற்குச் சற்று அப்பால் கூரை வேயப்பட்ட வீடுகளுக்குச் சற்று தொலைவில் ஒரு கல் கட்டிட வீடு உள்ளது. தூரத்திலிருந்து அதை பார்க்க முடியாதவாறு மரங்களும், புதர்களும் அதை மறைத்து நிற்கின்றன. அந்த வீட்டின் படிப்பு அறையை ஒரு பக்கத்தில் ஒரு திராட்சையும் மறுபக்கம் ஒரு அத்தி மரத்தின் கிளைகளும் மறைத்து நிற்கின்றன. அந்த வீட்டின் இரண்டு ஜன்னல்களில் எபிரேய பாஷையில் "ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்" (நீதி 11 : 30) "வருகிறவர் இன்னும் கொஞ்ச காலத்தில் வருவார், தாமதம் பண்ணார்" (எபி 10 : 37) என்று எழுதப்பட்டிருக்கின்றது. ஆம், அதுவேதான் ஆண்ட்ரு போனர் வசித்து வந்த காலேஸ் திருச்சபையின் குருவானவருக்கான இல்லம். டன்சினான் என்ற இடத்திலுள்ள சிறிய காட்டிற்குப் போகும் பாதையில் ஒரு இடம் தாழ்வாக குழி விழுந்த நிலையில் காணப்படுகின்றது. உண்மைதான், அங்கேதான் ஆண்ட்ரு போனர் தேவனோடு ஜெபத்தில் மணிக்கணக்கான நேரங்களை செலவிட்டு செலவிட்டு அந்த இடம் பள்ளமாகப் போயிற்று.

ஒரு நாள் ஒரு மனிதன் டன்சினான் காட்டிற்குச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு குரலைக் கேட்டு குரல் வந்த திசை வழியாக அங்கு சென்று பார்த்தபோது ஆண்ட்ரு போனரும் மற்றும் இரண்டு வாலிபர்களும் ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். ஆண்ட்ரு போனர் சிறந்த ஜெப வீரனான குருவானவர்.

ஒரு வாரத்தில் அவர் 9 பிரசங்கங்கள் வரை கூடச் செய்திருக்கின்றார். ஒவ்வொரு ஓய்வு நாள் காலை 10 மணிக்கும் வாலிப பையன்களுக்கும், வாலிப பெண் மக்களுக்கும் அவர் வேதாகம வகுப்புகள் நடத்தினார். அந்த வேதாகம வகுப்புகள் அந்த வாலிப மக்களுக்கு பெரிய ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்தது. அவர்களில் பலர் தேவனுடைய வசனங்களை இன்னும் ஆழமாகத் தியானம் செய்யத் தொடங்கினர். அவர்களில் ஒரு பெண் ஒரு சமயம் அவரைப் பார்த்து "தேவனுடைய ஜனம் வேத வசனங்களை எவ்விதமாக தியானிக்கின்றனர் என்பதை சிந்திக்கவே எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. ஏனெனில், நான் சில சமயங்களில் ஒரே ஒரு வசனத்தை வைத்து ஒரு நாள் முழுவதும் தியானித்தாலும் அதின் மகத்துவத்தை என்னால் பூரணமாக விளங்கிக் கொள்ள இயலவில்லை" என்று கூறினாள்.

அந்தக் காலத்தில் இங்கிலாந்து தேசத்தில் குருவானவர் ஆலயத்தில் பிரசங்கிக்கும் சமயம் ஆலயத்தில் இருப்போர் யாருக்காகிலும் தூக்கம் மற்றும் சோம்பேறித்தனமான அசதி காணப்பட்டால் அப்படிப்பட்டவர்கள் உடனே ஆலயத்தில் ஒன்றோ இரண்டோ அல்லது அதிகமாக ஆங்காங்கு தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து எழுந்து நின்று பிரசங்கம் கேட்பது வழக்கம். ஆண்ட்ரு போனர் பிரசங்கிக்கும் சமயங்களில் தேவ கிருபையால் அப்படிப்பட்ட காரியங்கள் நடப்பதில்லை. ஆனால், ஆண்ட்ரு போனர் காலேஸ் கிராமத்தில் இல்லாத நாட்களில் ஆலய ஆராதனையை நடத்த நதிக்கு அப்பாலிருந்து ஒரு குருவானவர் வருவது வழக்கம். அவர் பிரசிங்கித்தால் அன்று ஆலயத்தில் நிறைய பேர் எழுந்து நிற்பார்கள். ஒரு வயதான கிறிஸ்தவ தாயார் அந்தக் குருவானவரைக் குறித்து "அவர் ஒரு பயனற்ற குருவானவர். அவர் நதியிலிருந்து கொண்டு வரும் தண்ணீரும் (தேவச் செய்தி) ஒரு பிரயோஜனமில்லாதது" என்பார்கள். அந்த அம்மாவிடம்தான் ஒரு நாள் ஆண்ட்ரு போனர் தாம் சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ளப் போகும் காரியத்தைச் சொன்னார். உடனே அந்த துடுக்கான அம்மாள் அவரைப் பார்த்து "நீங்கள் கலியாணம் செய்து கொள்ளப் போவது சந்தோசமான காரியம்தான். அது சரியானதே என்று நானும் கருதுகின்றேன். ஆனால், பெண்களாகிய நாங்கள் பயங்கரமான ஏமாற்றுக்காரிகள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்கள்.

ஆண்ட்ரு போனரின் முழு வாழ்க்கையும் கிறிஸ்து இரட்சகரை தன்னளவில் முழுமையாக அறிந்து ஆனந்திக்க வேண்டும் என்பதாக மாத்திரம் இருந்தது. ஆண்டவருக்காக அவர் ஒவ்வொரு சிறிய காரியத்திலும், பெரிய காரியத்திலும் கீழ்ப்படிவதான அவரது கீழ்ப்படிதல் பரவசமூட்டுவதாகக் காணப்பட்டது. தனது ஒவ்வொரு காரியத்திலும் அவர் தவறு செய்யாதவராக காணப்பட்டார் என்று சொல்லுவதை விட தனது தேவனைப் பிரியப்படுத்தும் காரியங்களையே அவர் எப்பொழுதும் செய்து கொண்டிருந்தார் என்று இரத்தினச் சுருக்கமாக கூறிவிடலாம். அவரோடு பழகியவர்கள் மற்றும் அவரோடு வாழ்ந்தவர்கள் தகுதியற்ற, கனவீனமான செயல் ஒன்றை அவர் செய்தார் என்று கூற இடமே இல்லாத வகையில் அவரது வாழ்வு இருந்தது. வாழ்வின் ஒவ்வொரு காரியத்தையும் அவர் படிப்படியாக தேவ சமூகத்தில் செய்கின்றோம் என்ற தேவ பயத்தின் உணர்வில் பயபக்தியோடு செய்தார். "நீ மிகுந்த கருணையுள்ளம் கொண்டவனாயிருக்காதபட்சத்தில் நீ சிறந்த பரிசுத்தவானாக இருக்க முடியாது" என்று அவர் சொல்லுவார். அந்த அன்பின் அடிப்படையிலேதான் அவரது கிறிஸ்தவ பரிசுத்த வாழ்வும் தேவ ஊழியமும் அமைந்திருந்தது.

தன்னுடைய அருமை ஆண்டவர் இயேசுவுக்காக அல்லும் பகலுமாக அயராது உழைத்தவர் குருவானவர் ஆண்ட்ரு போனராவார். அவருடைய எழுத்தின் மூலமாகவும் அவர் அநேகரை நீதியின் சூரியனான கிறிஸ்துவண்டை வழிநடத்தினார். அவர் எழுதின புத்தகங்களில் "ராபர்ட் மர்ரே மச்செயின் வாழ்க்கை சரித்திரம்" மிகவும் ஆசீர்வாதமாக விளங்குகின்றது. அந்தப் புத்தகத்தின் மூலமாக உலகம் முழுவதிலும் பயனடைந்த தேவ மக்களின் எண்ணிக்கை பெரியதொன்றாகும். உலகத்தின் பல மொழிகளிலும் அது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. "ஒவ்வொரு தேவ ஊழியனுடைய கரத்திலும் கட்டாயமாக எப்பொழுதும் எடுத்துப் பார்த்துக் கொள்ளக் கூடிய விதத்தில் கையேடாக இருக்க வேண்டிய முதல்தரமான புத்தகம் அது" என்று தேவ மனிதர் ஸ்பர்ஜன் அந்தப் புத்தகத்தைக் குறித்து எழுதியிருக்கின்றார். ஆண்ட்ரு போனர் வெளியிட்ட மற்றொரு மாசிறந்த நூல் "சாமுவேல் ரூத்தர்போர்டின் கடிதங்கள்". அந்தப் புத்தகமும் படித்து ஆனந்திக்க வேண்டிய பயனுள்ள புத்தகமாகும். மேற்கண்ட புத்தகங்கள் ஆங்கில மொழியில் மாத்திரமே நமக்கு இந்தியாவில் உள்ளன. ஆண்ட்ரு போனர் இன்னும் சில பயனுள்ள பொன், இரத்தினம் போன்ற விலை மதிப்புள்ள பக்தி விருத்திக்கான நூல்களை எழுதி வெளியிட்டிருக்கின்றார்.

 

திருச்சபையின் அன்பொழுகும் குருவானவர்

ஆண்ட்ரு போனர் குருவானவராக இருந்தபோது அவர் செய்த அன்பின் சேவைகள் கணக்கில் அடங்காத ஒன்றாகும். துன்புறும் மனுக்குலத்திற்கு நன்மை செய்யும் பணியில் அவர் இரவு பகலாக ஈடுபட்டிருந்தார். அதை நாம் அவரது பற்பல நடபடிக்கைகளில் காணலாம். தனது சட்டைப் பையினுள் ஒரு பாட்டல் தேயிலைப் பானத்தை வைத்து சுகயீனமாக இருக்கும் ஒரு ஆத்துமாவைக் காண விரைந்து சென்று கொண்டிருக்கும் அவரை சில சமயங்களில் ஒரு பாடப் புத்தகத்துடன் சுகயீனமாகப் படுக்கையில் படுத்திருக்கும் குழந்தை தன் நேரத்தை படம் பார்த்துப் போக்குவதற்காக எடுத்துச் செல்லுவதை நாம் காண முடியும். சில சமயம் புதிதாக பட்டணத்திற்கு வந்த ஒரு அந்நிய கிறிஸ்தவ மனிதனுக்கு தங்கியிருக்கத்தக்கதான ஒரு வீட்டைக் கண்டு பிடிப்பதற்காக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பார். உயரமான கட்டிடத்தின் மாடியில் ஒரு சிறிய அறையில் வியாதியாகத் தனித்து படுத்திருக்கும் ஒரு ஆத்துமாவை சந்தித்து அதற்கு ஆறுதல் கூறுவதற்காக அந்தக் கட்டிடத்தின் மாடிப்படிகளில் பல தடவைகள் கீழும் மேலும் ஏறி இறங்கிக் கொண்டிருப்பவராகவும் நாம் அவரை பல சமயங்களிலும் காணக்கூடும். திருச்சபையின் தேவ ஊழியர் ஒருவர் தனது அன்பான மனைவியை ஏதோ ஒரு காரணத்திற்காக தெற்கு இங்கிலாந்தில் விட்டுவிட்டுச் சென்று விட்டார். அந்த தனித்து விடப்பட்ட ஆத்துமாவுக்கு அவளது சிறையிருப்பின் காலமான 15 வருட காலமும் ஒழுங்காக கடிதங்கள் எழுதி ஆண்ட்ரு போனர் அவளை ஆறுதல்படுத்தி வந்தார். அதோடு தாம் எழுதி வெளியிடும் புத்தகங்களையும் அவளுக்கு ஒழுங்காக இலவசமாக அனுப்பிக் கொண்டிருந்தார். அவரின் பிரகாசமான அன்பு நிறைந்த முகமானது அவர் சந்திக்கச் சென்ற அநேக வியாதியஸ்தர்களுக்கு சுகத்தைக் கொண்டு வருவதாக இருந்தது. துன்ப துயரத்தோடு இருந்த அவரது நண்பர்களில் சிலரைக் கண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர் புறப்பட்டு வரும்போது "அடுத்த முறை நான் உங்களை துக்கம், கிலேசமான முகத்தினராக காணும் பட்சத்தில் உங்கள் வேதாகமத்திலிருந்து சங்கீத புத்தகத்தை எப்பொழுது வெட்டி எடுத்து அப்பால் எறிந்து போட்டீர்கள் என்று நான் உங்களிடம் கேட்பேன்" என்று கூறினார்.

 

குழந்தைப் பிரியன் ஆண்ட்ரு போனர்

ஆண்ட்ரு போனருக்கு சிறு குழந்தைகள் என்றால் அலாதி பிரியமாகும். அந்த குழந்தைப் பாசம் வருஷத்திற்கு வருஷம் வளர்ந்து கொண்டே இருந்தது. தம்முடைய சபையிலுள்ள ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் அவருக்கு தெரிந்த குழந்தைகளையும் அவர் தமது ஜெபக்குறிப்பில் வைத்து ஜெபித்து வந்தார். ஓய்வு நாள் ஆராதனை முடிந்து ஆண்ட்ரு போனர் ஆலயத்திலிருந்து தம்முடைய அறைக்குப் போகும் நேரத்தை குழந்தைகள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். காரணம், அவர் அந்தச் சமயம் சில குழந்தைகளை அன்போடு பெயர் சொல்லிக் கூப்பிடுவார். மாத்திரமல்ல, எல்லாக் குழந்தைகளின் சிரசின் மேலும் தமது கரத்தை வைத்து ஜெபித்து அவர்களை ஆசீர்வதிப்பார். அந்த அன்புக் குழந்தைகளில் ஒன்று ஒரு நாள் ஆண்ட்ரு போனருக்கு "இன் முகம் காட்டும் இன்பப் பாதிரி" என்ற செல்லப் பெயர் சூட்டிவிட்டது. காலேஸ் கிராம திருச்சபையின் குழந்தைகள் சிறு சிறு கூட்டமாக ஆண்ட்ரு போனருடைய குதிரைக்குப் பின்னால் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்லுவதுண்டு. அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட அன்று காலேஸ் கிராம சிறு பிள்ளைகள் அவருடைய கல்லறையைச் சுற்றிலும் மிகுந்த துக்கத்தோடு கண்ணீர் வடிய வடிய அழுது கொண்டே நின்று கொண்டிருந்தனர். அந்தக் காட்சி எல்லாருடைய உள்ளங்களையும் உடைத்து நொறுக்குவதாக இருந்தது. அவர் மரித்துக் கொஞ்ச காலத்திற்குப் பின்னர் காலேஸ் கிராம குழந்தை ஒன்று "ஆண்டவரே, எங்கள் ஆண்ட்ரு போனர் குருவானவரை திரும்பவுமாக எங்களுக்கு அனுப்பித்தாரும். அவர் வரவுக்காக நாங்கள் காத்திருந்து, காத்திருந்து அலுத்துப் போனோம்" என்று ஜெபித்ததாம்.

குழந்தைகளை கர்த்தரண்டை வழிநடத்தும் காரியத்தைக் குறித்தும் அவர் மிகவும் கருத்தாக இருந்தார். ஓய்வு நாள் பள்ளி ஆசிரியர்களைப் பார்த்து "குழந்தைகளின் மனந்திரும்புதலில் பிரத்தியேகமான கவனம் செலுத்த தவறாதிருங்கள். அவர்கள் ஆண்டவரண்டை மிக எளிதாக வந்து விடக்கூடியவர்கள். மிகவும் சின்ன வயதினர் என்று அவர்களை ஒருபோதும் ஒதுக்கி வைத்து விடாதிருங்கள். உங்கள் ஓய்வு நாள் பள்ளிக்கு வருவதற்கு முன்பாக முதலாவது ஜெபத்தில் உங்களை நன்கு ஆயத்தம் செய்து வாருங்கள். அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றிற்காவும் நீங்கள் ஜெபிக்கும் போது ஒரு ஆச்சரியமான மாறுதல் அவர்களில் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள் " என்று கூறினார்.

ஒரு திருச்சபைக்கு ஆண்ட்ரு போனர் சென்றிருந்தபோது அங்குள்ள ஓய்வு நாள் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளைப் பற்றி அவரிடம் புகார் சொன்னார்கள். "எங்கள் ஓய்வு நாள் பள்ளிக் குழந்தைகள் நல்லவர்கள்தான். ஆனால் கிராமத்திற்கு ஏதாவது வண்டிகள் வந்து விட்டால் போதும் அந்த வண்டிக்குப் பின்னால் ஓட்டம் பிடித்துவிடுகின்றனர் " என்றனர். உடனே அவர் அந்த ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளை தம்மண்டை அழைத்து "குழந்தைகளே, வேத புத்தகத்தில் வண்டிக்குப் பின்னால் ஓடின ஒருவனைப் பற்றிச் சொல்லி இருக்கிறது. அவன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அதில் ஒரு ஞானமுள்ள குழந்தை "கேயாசி" என்று பதில் கூறிற்று. உடனே அவர் அந்தக் குழந்தைகளைப் பார்த்து "அன்புள்ள பிள்ளைகளே, அந்தக் கேயாசியின் வழியிலே நாம் செல்லக்கூடாது. அவனது தீய நடத்தை நாம் பின் பற்றி செல்லக் கூடிய ஒன்றல்ல" என்று கூறவே அந்தக் குழந்தைகள் அன்று முதல் தங்கள் ஓய்வு நாள் பள்ளியை விட்டுவிட்டு வண்டிகளுக்குப் பின்னால் ஓடும் கெட்ட பழக்கத்தை விட்டுவிட்டனர்.

 

மிகுந்த மனத்தாழ்மையுள்ள தேவ பக்தன்

ஆண்ட்ரு போனர் மிகவும் மனத்தாழ்மையுள்ள, பெருமையற்ற தேவ பக்தன். இந்த மனத்தாழ்மை அவருடைய சிறு பிராயத்திலிருந்தே அவரிடம் காணப்பட்டது. அவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. நன்றாக கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு தங்க மெடல் கொடுப்பது அந்த உயர்நிலைப் பள்ளியின் வழக்கமாக இருந்து வந்தது. அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் நம்முடைய ஆண்ட்ரு போனருக்கு அவருடைய சிறப்பான கல்வி தேர்ச்சிக்காக "டக்ஸ் தங்க மெடல்" கிடைத்தது. தங்க மெடலைப் பெற்ற அவர் வீட்டிற்கு ஓடோடி வந்து அந்த மகிழ்ச்சியான செய்தியை தன் பெற்றோரிடமும் மற்ற அனைவரிடமும் சொல்லி ஆனந்தித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அந்த சந்தோச நிகழ்ச்சியை அவர் தன்னளவில் மனதில் வைத்துக் கொண்டார். தங்க மெடல் தன் மகனுக்குக் கிடைத்த விபரம் அவருடைய தாயாருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. அன்றைய தினம் இரவு, இராச் சாப்பாட்டு மேஜையில் ஆண்ட்ரு போனர் அமர்ந்திருந்தார். அவருடைய தாயாருக்கு தங்க மெடலைப் பற்றிய நினைவு வந்தது. "மகனே, இன்று பள்ளியில் தங்க மெடல் யாருக்குக் கிடைத்தது?" என்று கேட்டார்கள். அந்தக் கேள்வியால் எந்த ஒரு வெற்றி பெருமிதத்தின் பூரிப்புமில்லாமல் மிகவும் சாதாரணமாக தன்னுடைய சட்டைப் பையில் கை போட்டு தனக்குக் கிடைத்த தங்க மெடலை தன்னுடைய தாயாரிடம் எடுத்துக் காண்பித்தார்.

அவருடைய ஜீவியத்தில் காணப்பட்ட அதே தாழ்மையின் சிந்தை அவருடைய மகத்தான தேவ ஊழியத்தின் பாதையிலும் காணப்பட்டது. அவரைப் பற்றியோ அல்லது அவருடைய ஊழியத்தைக் குறித்தோ மக்கள் புகழ்ந்து பேசுவதை அவர் கொஞ்சமும் விரும்புவதே இல்லை. தன் வாழ் நாள் காலம் முழுமையிலும் தன் ஆண்டவர் ஒருவரை மாத்திரம் உயர்த்திக் காண்பிப்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். பெரும்பாலும் மக்கள் குறிப்பாக தேவ மக்களும் கூட தங்களைக் குறித்து மற்றவர்கள் உயர்வாகப் பேசுவதை அதிகமாக விரும்புவதுண்டு. ஆனால். ஆண்ட்ருவின் காரியம் முற்றிலும் வித்தியாசமானதாகும்.

1888 ஆம் ஆண்டு அவருடைய ஊழியத்தின் 50 ஆம் ஆண்டு தேவ ஊழிய நிறைவு விழாவை சிறப்பிக்கும் வகையில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்து அதில் ஆண்ட்ரு போனரின் பரிசுத்தமான தேவப் பணியைக் குறித்து திருச்சபையின் தலைவர்கள் மேன்மையாகப் பேசினார்கள். கூட்டத்தில் யாவரும் பேசிய பின்னர் காலேஸ் கிராமத்தில் அவருடைய வயதான நண்பர் ஒருவர் எழுந்து நின்று "இன்றைய நாளில் நாம் நமது சகோதரன் ஆண்ட்ரு போனருக்கு ஒரு மிகச் சிறப்பான கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அவரை சிறந்த விதத்தில் நாம் கௌரவப்படுத்தினோம்" என்று சொல்லி அமர்ந்தார். அப்பொழுது ஆண்ட்ரு போனர் எழுந்து நின்று "மெய்தான், நானும் கூட அப்படித்தான் நினைக்கின்றேன். ஒரு மண்ணான மனிதனுக்கு எல்லா புகழ்ச்சியையும் அளித்துவிட்டு தேவனுக்கு ஒரு சிறிய புகழ்ச்சியையும் அளிக்காமல் அவரை அப்படியே வெறுமையாக அனுப்பி வைத்துவிட்டீர்கள். நீங்கள் யாவரும் என்னைக் குறித்து புகழ் பாடியபடி நான் அப்படி பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. ஜீவ ஊற்றிலிருந்து தண்ணீர் மொண்டு என் மந்தையின் ஆடுகளுக்குக் குடிக்கும்படியாக நான் வார்த்து வைத்தேன். இதைவிட நான் வேறொன்றையும் செய்ததாக நினைக்கவில்லை" என்று ஆண்ட்ரு பதில் அளித்துவிட்டு ஒரு தேவ ஊழியனுக்கு இருக்க வேண்டிய மனத்தாழ்மையையும் அவன் தனது ஊழியத்தில் ஒரு போதும் சுய திருப்தி அடையக்கூடாது என்பதையும் அதைச் சித்தரிக்கும் விதத்தில் அவ்வப்போது அவர் கூறும் ஒரு வழக்கமான அழகான கதையையும் சொல்லி முடித்தார். பரிசுத்தவான் சொன்ன கதை இதுவேதான்:-

புகழ்பெற்ற கிரேக்க நாட்டு ஓவியன் ஒருவன் தன் தலைமேல் திராட்சை பழங்கள் நிரம்பிய கூடை ஒன்றை ஒரு பையன் சுமந்து செல்லும் விதத்தில் மிகவும் தத்ரூபமாக ஒரு காட்சியை வரைந்து விட்டான். அவன் தன் தலைமேல் சுமந்து சென்ற திராட்சை பழக்கூடை மிக மிக தத்ரூபமாகக் காணப்பட்டதால் அந்தப் பழங்களைக் கொத்தித் தின்ன பறவைகள் வந்து அந்த சித்திரம் வரையப்பட்ட சுவரை தங்களுடைய அலகுகளால் கொத்தித் துளைக்க ஆரம்பித்தன. அதைக் கண்ணுற்ற மக்கள் யாவரும் ஆச்சரியத்தால் பிரமிப்படைந்து அதை வரைந்த கிரேக்க நாட்டு ஓவியனை வாயாரப் புகழ்ந்து போன்றினார்கள். ஆனால், அந்த கிரேக்க நாட்டு ஓவியனோ அந்த மக்களின் புகழ்ச்சியை சற்றும் மனதில் ஏற்றுக் கொள்ளாமல் மிகுந்த கவலையோடு காணப்பட்டான். அந்த சித்திரத்தை தீட்டியதைக் குறித்து கொஞ்சம் கூட அவன் திருப்தி அடைந்தவனாகக் காணப்படவில்லை. மாறாக கவலைதான் அவன் முகத்தில் படர்ந்திருந்தது. அந்த ஓவியனின் சிநேகிதர்கள் அவனை அணுகி "பறவைகளே வந்து தங்கள் அலகுகளால் திராட்சைப் பழங்களை கொத்தித் தின்ன முயற்சிக்கும் வகையில் அத்தனை சிறப்பாக சித்திரம் வரைந்துள்ள தாங்கள் அதைக் குறித்துச் சந்தோசம் அடையாமல் கவலை தோய்ந்த முகத்தினனாக காணப் படுகின்றீர்களே" என்று வினவியபோது "நான் அந்தச் சித்திரத்தை இன்னும் அதிகமான முயற்சி எடுத்து வரையத் தவறிவிட்டேன். அந்தப் பையனின் தலையிலுள்ள திராட்சைப் பழக்கூடையை எத்தனை நிஜரூபமாக வரைந்தேனோ அந்த அளவில் அந்தப் பையனை நான் நிஜமான ரூபமாக வரையத் தவறிவிட்டேன். அப்படி நான் கவனம் எடுத்து அந்தப் பையனையும் வரைந்திருந்தால் அந்தப் பறவைகள் அந்தப் பையனுக்குப் பயந்து அவன் தலையிலுள்ள திராட்சைப் பழங்களை கொத்த அவன் அருகில் வராமல் விலகிச் சென்றிருக்க வாய்ப்பு இருந்தது" என்று அவனது நண்பர்கள் வியப்படையும் வண்ணம் பதில் அளித்தானாம். நம்முடைய ஆண்ட்ரு போனரும் அப்படிப்பட்ட சுய திருப்தியடையாத மிகுந்த மனத்தாழ்மையுள்ள தேவ பக்தன்தான்.

 

ஆண்ட்ரு போனரின் சிறந்த தேவ சீலங்கள்

ஆண்ட்ரு போனர் சிறந்த ஜெப வீரனாக இருந்தார். தம்முடைய திருச்சபையின் குருத்துவ ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் அவர் தமது கடிதங்கள் ஒன்றில் "பிரசங்கிப்பதைவிட ஜெபிப்பதே இந்த நாட்களில் அத்தியந்த அவசியம் என்பதை நான் அதிகமாக உணருகின்றேன். நாளுக்கு நாள் போராட்டத்தையும் பரிந்து மன்றாடுதலையும் அடிப்படையாகக் கொண்டு ஓர் முகத்தோடு நான் ஜெபிப்பதால் பிரசிங்கிப்பதை விட ஜெபிப்பதே என் மாம்சத்திற்கு கடினமானதாகக் காணப்படுகின்றது" என்று எழுதினார்.

ஆண்டுகள் கடந்து செல்லச் செல்ல அவருடைய ஒவ்வொரு நாளின் முக்கியமான பணி அவருடைய ஜெபமாகவே இருந்தது. பின் வந்த நாட்களில் அவருடைய கடிதத் தொடர்புகள் மற்றும் அவரைச் சந்திக்க வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற தடங்கல்கள் அவருக்கு ஏற்பட்ட போதிலும் தினமும் 2 முழுமையான மணி நேரங்களை தன்னுடைய அன்பின் ஆண்டவரோடு தனி ஜெபத்திலும் வேத வசன தியானத்திலும் செலவிடாமல் அவர் வெளியே செல்லுவதில்லை. அது அவருடைய பரிசுத்த ஜீவியத்தின் சட்ட ஒழுங்காக இருந்தது. ஓய்வு நாட்களின் மாலை வேளைகள் எல்லாம் அவருடைய ஜெப வேளைகளாக இருந்தன. ஆண்ட்ரு போனரின் படிப்பு அறையின் உள்ளே அமைந்திருந்த கணப்பு அடுப்பின் மரச் சட்டத்தில் "எவன் ஒருவன் உண்மையாகவே ஜெபித்தானோ அவன் தனது படிப்பில் பாதியை படித்து முடித்தாயிற்று" என்று எழுதப்பட்ட வாசகம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

அவருடைய நாட் குறிப்பு புத்தகத்தில் அவருடைய ஜெப வேளைகளை குறித்து அவர் எழுதி வைத்திருந்த வாசகங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. சிலவற்றைக் கவனியுங்கள்:-

புதன் 26 ஆம் நாள்:- நான் மிகவும் குறைவான நேரம் தேவனோடு இன்று தனித்திருந்தமைக்காக பெரிதும் மனம் கலங்குகின்றேன். நான் என் ஜீவியத்தில் பயனுள்ள விதத்தில் இருந்த சந்தர்ப்பங்களுக்காக சந்தோசம் கொள்ளாமல் தேவனை விசுவாசத்தோடு பற்றிப்பிடித்து அவரை என் விசுவாசக் கண்களால் கண்டு களிகூர்ந்த ஜெப மணி நேரங்கள் நிரம்பிய என் நாட்களுக்காக ஆனந்தம் கொள்ளுகின்றேன்.

சனிக்கிழமை முதலாம் நாள்:- "நேற்றையத் தினத்தை முற்றுமாக எனது தனி ஜெபத்திற்காக நான் அப்பால் ஒதுக்கி வைத்து ஜெபித்தேன். ஓ, நான் அதிகமாக ஜெபியாதிருப்பது எத்தனை மடமையான முட்டாள்தனம்"

மார்ச் மாதம் 22 ஆம் நாள்:- "டன்சினான் ஊர் காட்டுப் பகுதியை நான் நினைவுகூறுகின்றேன். ஆ, ஒரு நாள் நான் அந்தக் காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது ஜெபிக்க வேண்டுமென்ற மிகுந்த உள்ளுணர்வு எனக்குள் உண்டாயிற்று. உடனே நான் அந்தக் காட்டிலுள்ள புல் மைதானத்தில் முழங்கால் ஊன்றினேன். என் தலைக்கு மேலாக நீல நிற வானம் வியாபித்துக் கிடந்தது. நட்சத்திரங்கள் வானில் கண் சிமிட்டிக் கொண்டிருந்த இரவு நேரம் அது. அப்பொழுது நான் என் உள்ளம் திறந்து இவ்விதமாக ஜெபித்தேன். "ஓ, என் அனந்த ஞான சொரூபியே, என் தலைக்கு மேலாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரக் கூட்டங்களின் ஓடு பாதையை உம்மால் மாற்றி அமைப்பது கடினம் அல்லவே! அதைப் போல அந்தக் குறிப்பிட்ட கிறிஸ்தவ குடும்பத்தின் (இந்தக் குடும்பத்தின் இரட்சிப்புக்காக ஆண்ட்ரு போனர் ஜெபித்து வந்து கொண்டிருந்தார்) உலக ஆடம்பரப் போக்கையும் மாற்றி அவர்களை உம் வழிப்படுத்துவது உமக்கு ஒன்றும் பெரிய காரியம் அல்லவே" என்று ஜெபித்தேன். அந்த என் தாழ்மையான ஜெபத்தை தேவரீர் அங்கீகரித்தீர்.

வியாழன் 29 ஆம் நாள்:- "இந்த நாளின் மாலை 3 மணி நேரங்களை நான் தேவனோடு ஜெபத்தில் செலவிட்டேன். அதைத் தொடர்ந்து மீதியான மணி நேரங்களை உபவாச ஜெபத்தில் கழித்தேன். இவ்விதமான உபவாச ஜெபம் தேவனுடைய சமூகத்தினின்று என் பார்வையை திருப்பச் செய்யும் என்னுடைய உலகப்பிரகாரமான சிந்தையை முற்றுமாக சிறைப்பிடித்து நிர்மூலமாக்க எனக்கு உதவி செய்ததற்காக கர்த்தரைத் துதிக்கின்றேன்"

நவம்பர் 10 ஆம் நாள்:- "ஆண்டவரோடுள்ள எனது தனிப்பட்ட அன்பின் உறவில் நான் மிகவும் குறைவுபட்டு காணப்படுவதை என்னளவில் அதிகமாக உணருகின்றேன். என் ஆண்டவரை இனிமேல் நான் இன்னும் அதிகமாக நேசிப்பேன் என்று இன்று அதிகாலை பொருத்தனை செய்து கொண்டேன். ஆவிக்குரிய புத்தகங்களை வாசித்தல், பிரசங்கங்கள் செய்தல் போன்றவற்றால் உண்டாகும் சந்தோசத்தைவிட தேவனோடு ஜெபத்தில் தனித்திருப்பதில் கிடைக்கக்கூடிய பரலோக சந்தோசத்தை மாத்திரமே நான் இனி அதிகமாக வாஞ்சிப்பேன்"

செவ்வாய் 18 ஆம் நாள்:- "இன்று அதிகாலை நான் கண் விழித்து வெளியே உற்று நோக்கினேன். அப்பொழுது காலை சுமார் 4 மணி. எனது ஜன்னலுக்கு நேராக மேலே விடிவெள்ளி நட்சத்திரம் பால் போன்ற தெளிந்த ஆகாயத்தில் தனித்து வெட்டிப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஜன்னல் கண்ணாடியின் ஒரு பகுதி காலை நேரத்தின் மூடு பனியால் மங்கலாகவும் அடுத்த பகுதி நல்ல தெளிவாகவும் இருந்தது. அந்த தெளிவான ஜன்னல் பகுதி வழியாக விடிவெள்ளி நட்சத்திரத்தை நான் துலாம்பரமாகக் காண முடிந்தது. "நான் பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாக இருக்கிறேன்" (வெளி 22 : 16) என்ற இரட்சா பெருமானின் வார்த்தை என் நினைவுக்கு வந்தது. கிறிஸ்துவே எனக்கு எல்லாவற்றிலும் எல்லாமாக பொழுது விடியுமட்டும் இந்த உலகத்தில் எனக்கு இருக்கின்றார். நான் எழுந்து ஜெபித்த பின்னர் அப்படியே தூங்கிவிட்டேன். நான் கண் விழித்துப் பார்த்தபோது காலைச் சூரியன் என் ஜன்னல் கண்ணாடிகளில் பிரகாசித்து என் அறை முழுவதையும் தன் ஒளியால் நிரப்பிக் கொண்டிருந்தது. சரீர உயிர்த்தெழுதல் இப்படித்தானே இருக்கும் என்று நான் எனக்குள் பூரிப்புடன் எண்ணிக் கொண்டேன்"

ஆண்ட்ரு போனர் தம்முடைய ஞாயிறு ஆராதனைகளுக்காக தம்முடைய பிரசங்கங்களை தேவ சமூகத்தில் ஆயத்தம் செய்வதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார். வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்களும் அவர் தம்மைச் சந்திக்க மக்களை அனுமதிப்பதே இல்லை. மிக மிக ஆத்திர அவசரமான காரியங்களாக இருந்தால் அன்றி அவர் எவரையும் தம்முடைய அறைக்குள் மேற் குறிப்பிட்ட தினங்களில் வரவொட்டார். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் ஆண்ட்ரு போனர் தம்முடைய பிரசங்கத்தை தேவனுடைய பாதபடிகளில் மிகுந்த ஜெபத்தோடு ஆயத்தம் செய்தார். அந்த நாட்களில் அவரைப் பார்த்தால் தேவனுடைய முழுமையான பிரசன்னத்துக்குள் மூழ்கி தம்மையே மறந்த நிலையில் பரலோகத்தை நோக்குபவரைப் போலக் காணப்பட்டார். ஏதோ ஒன்றை இழந்தவனைப் போல அவர் தம்முடைய பரம எஜமானரின் சேவையில் பிரசங்கங்களுக்கான குறிப்புகளை தயாரிப்பதில் மிகுந்த அங்கலாய்ப்புடன் காணப்படுவார். மோட்சப் பிரயாணப் புத்தகத்தில் "தனது கரத்தில் வேத புத்தகத்தை ஏந்தியவனாக, உலகம் தனது முதுகுக்கு பின்னால் இருப்பதாகவும், அவனது கண்கள் பரலோகத்தை நோக்கிய நிலையில் இருக்கும் மனிதனை" நாம் காண்பது போல ஆண்ட்ரு போனரும் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் காணப்படுவார். மற்ற வாராந்திர நாட்களில் மக்கள் அவரைச் சந்தித்து ஆவிக்குரிய ஆலோசனைகள் மற்றும் ஜெப உதவிகளை கேட்டுச் சென்றவண்ணமாகவே இருப்பார்கள். அதின் காரணமாக அவருக்கு நேரத்திற்கு நேரம் ஆகாரம் அருந்தக்கூட நேரம் இருப்பதில்லை. எனினும் அவர் தமது பிரசங்கங்களை தகுந்த விதத்தில் தேவ சமூகத்தில் ஆயத்தம் செய்யாமல் பிரசங்க பீடம் ஏறினதே கிடையாது. வாராந்திர நாட்களிலும் அவர் பல கூட்டங்களில் பேசுவது உண்டு. தன்னை அடிக்கடி சந்திக்க வரும் மக்களுக்கு பதில் கூறிக் கொண்டு அதற்கு மத்தியில் தனது வாராந்திர கூட்டங்களுக்கெல்லாம் எப்படி செய்திகள் ஆயத்தம் செய்வார் என்பது மிகவும் ஆச்சரியமான காரியமாகும். "தேவன் உனக்கு கற்பிக்கும் காரியங்களை மற்றவர்களுக்கு நீ போதிக்கும் முன்னர் முதலில் நீயே அதை உன் அளவில் அப்பியாசித்துக் கொள்" என்று அவர் கூறுவார்.

அவருடைய சரீர கட்டமைப்பு மிகவும் கம்பீரமாக அப்பழுக்கற்ற விதத்தில் இருந்தது. அவருடைய மனமானது அமர்ந்த தண்ணீர் தடாகம் போன்று தெளிந்த நிலையில் சலனமற்றதாகக் காணப்பட்டது. தேவன் தனக்கு ஒவ்வொரு நாள் இரவும் அருளும் மிக இன்பமான தூக்கத்திற்காக அவர் தம்முடைய ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தவராக இருந்தார். அவருடைய படிப்பு அறையின் பொருட்கள் எல்லாம் வெகு நேர்த்தியாக அதினதின் இடத்தில் பாங்குற வைக்கப்பட்டிருக்கும். ஒரு புத்தகமோ அல்லது ஒரு காகிதமோ அதின் இடத்தைவிட்டு விலகி இருப்பதைக்கூட அவர் காண சகிக்க மாட்டார். "ஒழுங்கற்ற நிலை ஒழுங்கற்ற கிறிஸ்தவத்தையே குறிப்பதாகும்" என்று அவர் கூறுவார். அவருடைய மேஜையில் அவருடைய வேதாகமம் மாத்திரமே இருக்கும். அவருடைய எபிரேய மொழி வேதாகமமும், கிரேக்க மொழி புதிய ஏற்பாடும் சின்ன மேஜையில் இருக்கும். அந்த மேஜை கனல் அடுப்பின் அருகில் இருக்கும். ஆண்ட்ரு போனரின் கண் பார்வை சற்று குறையும் வரை அவர் தனது தகப்பனாரின் மிகுந்த பழமையான வேதாகமத்தையே பயன்படுத்தி வந்தார். அவர் அதை பெரும் பொக்கிஷம் போல தம்முடன் வைத்துக் காத்துக் கொண்டிருந்தார். அந்த வேதாகமத்தின் உள் பக்க முகப்பு அட்டையில் கீழ்க்கண்டவாறு அவர் எழுதி வைத்திருந்தார்:-

தாட்கள் நிரம்பிய மாட்சிமையான புத்தகம் பாராய்
வழி, சத்தியம், ஜீவன், இயேசு ஒருவரே என்று
அது கூறுவதை கேளாய்.
கருத்தோடும் பயத்தோடும் நீ அதை வாசித்து
கவனமாகத் தேடிவிட்டால் அங்கு
இயேசுவையே கண்டிடுவாய்"!

ஆண்ட்ரு போனரின் படிப்பு அறையில் "நீரோ மாறாதவராயிருக்கிறீர்" என்ற வேத வசன வாக்கு அட்டை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அது அவருக்கு பிடித்தமான அவரே அச்சிட்ட தேவ வார்த்தையாகும். ஒரு சமயம் ஒரு கிறிஸ்தவ அம்மையார் வாழ்வின் பிரச்சினைகளால் மிகவும் மனம் சோர்ந்து உள்ளத்தின் குமுறல்களோடு அவரைச் சந்தித்து ஆறுதல் பெறுவதற்காக அவரை நாடி வந்தார்கள். அந்த அம்மையார் ஆண்ட்ரு போனருடைய முகத்தைப் பார்த்ததும் சந்தோஷித்து மனம் மகிழ்ந்த நிலையில் "நீங்கள் எனக்கு இப்பொழுது எதுவும் சொல்லத் தேவையில்லை. எனக்குத் தேவையானதை நானே கண்டு கொண்டேன்" என்று கூறினார்கள். "அதோ பாருங்கள், நீங்கள் சுவரில் மாட்டி வைத்திருக்கும் "நீரோ மாறாதவராயிருக்கிறீர்" என்ற தேவ வசனம் எனக்குத் தேவையான அனைத்து ஆறுதல்களையும், அரவணைப்பையும் தந்துவிட்டது" என்று சொன்னார்கள்.

அவருடைய அறையின் கனல் அடுப்பு அலமாரியில் புகழ்பெற்ற தேவ பக்தன் சாமுவேல் ரூத்தர்போர்ட் என்பவருடைய பிரசங்க பீடத்தின் ஒரு மரத் துண்டு வைக்கப்பட்டிருந்தது. அதை அவர் ஒரு அரிய பொக்கிஷமாக வைத்திருந்தார். இந்த உலகத்தை விட்டுக் கடந்து சென்ற தேவ பக்தர்களின் கல்லறைகளைப் பார்ப்பது, அவர்கள் பயன்படுத்தின பொருட்களைக் காண்பது, அவர்கள் வாழ்ந்த பண்டைய காலத்து வீடுகளுக்குச் சென்று வருவது எல்லாம் ஆண்ட்ரு போனருக்கு மிகுந்த விருப்பமாகும். 1881 ஆம் ஆண்டு கோடை காலம் அமெரிக்கா சென்றிருந்த போது அவர் அமெரிக்கா தேசத்தின் சிறந்த பரிசுத்தவான்களான யோனத்தான் எட்வர்ட்ஸ் மற்றும் டேவிட் பிரைய்னார்ட் என்பவர்களுடைய கல்லறைகளைப் பார்த்துவிட்டு தம்முடைய மகளுக்கு கீழ்க்கண்டவாறு கடிதம் எழுதினார்:-

"கடந்த சனிக்கிழமை நார்த்தம்டன் பட்டணத்துக்குச் சென்று யோனத்தான் எட்வர்ட்ஸ் என்ற மாபெரும் தேவ மனிதரின் கல்லறையைக் காணச் சென்றிருந்தேன். ஆ, நான் அதைக் காண எத்தனையாக வாஞ்சை கொண்டிருந்தேன் என்று நீ நினைக்கின்றாய்? அவருடைய வீட்டிற்கு முன்னால் உள்ள இரண்டு பழைய எல்ம் மரங்களுக்குக் கீழாக நான் சற்று நேரம் அமர்ந்திருந்தேன். எனக்குள்ளிருந்த ஆவலால் நான் அந்த மரங்களில் ஒன்றில் சற்று உயரம் ஏறியும் விட்டேன். அந்த மரங்களின் பட்டையில் கொஞ்சம் ஞாபகத்திற்காக நான் எடுத்துக் கொண்டு வருகின்றேன்"

 

காலேஸ் திருச்சபையில் ஏற்பட்ட பெரும் உயிர் மீட்சி

ஆண்ட்ரு போனர் சிறந்த ஜெபவீரனாகவும் மட்டற்ற ஆத்தும பாரம் கொண்டோனுமாக இருந்தபடியால் அவருடைய திருச்சபை எப்பொழுதும் வளரும் திருச்சபையாக இருந்தது. 1859 ஆம் ஆண்டுக்கும் 1873 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அவருடைய சபையில் பெரியதொரு ஆவிக்குரிய எழுப்புதல் உருவாயிற்று. 1892 ஆம் ஆண்டு அவர் மரிக்கும் சமயம் அவரது சபையில் 1100 மக்கள் அங்கத்தினராக இருந்தனர். ஆண்ட்ரு போனரின் சபை வளர்ச்சிக்கும், உயிர் மீட்சிக்கும் காரணம் அவரது பரிசுத்தமும் ஆழமுமான ஜெப வாழ்க்கையுமேயாகும். அவருடைய நாட்குறிப்பு புத்தகங்கள் எல்லாம் அவரது ஜெபங்களைக் குறித்தே எழுதப்பட்டிருப்பதை நாம் காண முடியும். அவருடைய நினைவுகளும், பிரசங்கங்களும் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து ஒருவரையே மையமாக கொண்டதாக இருந்தன. பரிசுத்தத்தின் பாதையை அடையவும் தேவனுக்கு ஒரு பயனுள்ள ஊழியம் செய்யவும் எந்த ஒரு குறுக்கு வழியையும் அவர் நம்பக்கூடியவராக இல்லை. பிதாவாகிய தேவனோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் தினந்தோறும் மணிக்கணக்கான நேரங்களை ஜெபத்தில் செலவிட்டு மாத்திரமே தேவ கிருபையில் வளர்ந்து இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவில் விருத்தியடைந்து ஆண்டவருக்கு பயனுள்ள விதத்தில் சிறந்து விளங்க முடியும் என்ற ஒரே ஒரு வழியைத்தான் அவர் அறிந்து வைத்திருந்தார்.

"தேவன் தம்முடைய வல்லமையை பெரும்பாலும் பரிசுத்தமான பாத்திரங்களின் மூலமாகவே விளங்கப்பண்ணுகின்றார்" என்று தமது நாட் குறிப்பில் ஒரு தடவை எழுதி வைத்தார். "நம்முடைய தேவ ஊழியத்தின் பாதையில் வெற்றியின்மைக்கு ஆணி வேரான காரணம் நம்முடைய பரிசுத்தமின்மை ஒன்றேதான் என்பதை திட்டமும் தெளிவுமாக நான் காண்கின்றேன்" என்று மற்றொரு இடத்தில் ஆண்ட்ரு போனர் குறிப்பிட்டுள்ளார். 1842 ஆம் ஆண்டு அவர் "எனது அனுபவத்தின் வாயிலாக நான் கண்டு கொண்ட ஒரு காரியம் என்னவெனில் கிறிஸ்தவ தேவ ஊழியத்தின் வெற்றிக்கு அடிப்படையான காரணம் அதிகமான பிரசங்கங்கள் அல்ல, அதிகமான ஜெபங்களே" என்று அவர் கூறினார். "வாய்ப் பேச்சின் திரட்சியினால் ஆத்துமாக்கள் ஆதாயம் பண்ணப்பட மாட்டார்கள்" என்றார் அந்த தேவ மனிதன். "தேவனுடைய ஊழியங் களுக்கான பணிகளில் அதிகமான நேரம் செலவிடப்படுகிறது. ஆனால் அதற்காக ஜெபிப்பதற்கோ மிகவும் குறைவான மணி நேரங்கள் மாத்திரம் ஒதுக்கப்படுகின்றன. பரிசுத்த ஆவியின் வல்லமையோடு பேசவும், பிரசங்கிக்கவும் அதினால் பெரிய ஆசீர்வாதங்களை அடைய விரும்பும் தேவ மக்கள் தொடர்ந்து தேவ சமூகத்தில் ஜெபத்தில் தரித்திருத்தல் மிகவும் அத்தியாவசியம் ஆகும்" என்றார் அவர்.

தேவ ஊழியர்கள் நிறைந்த கூட்டம் ஒன்றில் அமெரிக்க தேசத்தின் மாபெரும் எழுப்புதல் பிரசங்கியார் டி.எல். மூடி என்பவர் ஆண்ட்ரு போனரைப் பார்த்து "உங்களுடைய பயனுள்ள அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் இரகசியத்தை இந்த ஊழியர்களுக்கு கூற முடியுமா?" என்று கேட்டபோது, உடனே அவர் "எனக்கு முன்பாக குழுமியிருக்கும் எனது இளம் ஊழிய சகோதரருக்கு நான் கூறிக் கொள்ளுவது என்னவென்றால் கடந்த 40 வருட காலத்தில் ஒரு நாளைக்கூட நான் என் தேவனுடைய கிருபாசனத்திற்கு முன்பாக மண்டியிடாமல் தவறவிட்டதே கிடையாது. அந்த தனி ஜெப வேளையே என் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வின் இரகசியம்" என்று கூறினார்.

ஒரு தேவப் பிள்ளையின் வீட்டில் சில நாட்கள் அவர் தங்கிவிட்டு புறப்பட்டுச் செல்லும் நேரம் அந்த வீட்டிலுள்ளோர் அவரைப் பார்த்து "நீங்கள் தேவனுடைய பிரகாரங்களில் நாட்டப்பட்டு செழிப்புற்று வளரும் கேதுரு மரம்" என்று சொன்னபோது ஆண்ட்ரு போனர் அப்படிச் சொன்னவரின் தோளின் மேல் தன் கையைப் போட்டு மலர்ந்த முகத்தினனாக "அப்படி நாம் தேவனுடைய பிரகாரங்களில் நாட்டப்பட்ட செழிப்பான கேதுரு மரங்களானால் நம்முடைய வேர் எங்கிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்தானே! ஆம், அந்த வேர்கள் பலி பீடத்தின் அடியில் இருக்க வேண்டும் அல்லவா?" என்றார்!

 

மனந்திரும்பாத பாவிக்கும் தேவனுடைய பிள்ளைக்கும்
மரணத்தின் பின் உள்ள இடைப்பட்ட நிலைபற்றி
ஆண்ட்ரு போனர் சொன்ன உதாரணம்

ஒரு பாவி மரிக்கின்றான், அதே சமயம் ஒரு நீதிமானும் மரிக்கின்றான். அவர்கள் இருவரும் எங்கே இருப்பார்கள் என்பதைப் பற்றி ஆண்ட்ரு போனர் சொன்ன உதாரணத்தைக் கவனியுங்கள்:-

"ஒரு மனிதன் ஒரு கொலை பாதகத்தை செய்கின்றான். அவனை கைது செய்து சிறைக்கூடத்தில் போடுகின்றனர். அவனுக்கு அந்தச் சிறைக்கூடத்தில் சிறைக்கூடத்தின் ஒழுங்கின்படி ஆகாரம், உடை, படுக்கை போன்றவைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவில் கொடுக்கப்பட்டு அவன் அங்கே வைக்கப்படுகின்றான். அவன் தனது வீட்டில் தனது விருப்பம் போல அனுபவித்தவைகள் எல்லாம் சிறைக்கூடத்தில் கொடுக்கப் படுவதில்லை. குற்றவாளி என்ற அந்தஸ்தில் அவன் அங்கே நடத்தப் படுகின்றான். அந்தச் சிறைக் கைதி ஒவ்வொரு நாளும் நியாதிபதியின் நியாயத் தீர்ப்பின் உத்தரவை பயத்தோடும் நடுக்கத்தோடும் எதிர்பார்த்தவனாக மிகவும் கலக்கத்தோடு அங்கு காத்து இருக்கின்றான். ஒரு நாள் அவன் நியாதிபதியண்டை அழைத்து வரப்பட்டு நியாயம் விசாரிக்கப்பட்டு அவருடைய தீர்ப்பின்படி அவன் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றான். இதுவே மனந்திரும்பாத பாவியின் மரணத்தின் போது நிகழும் காரியமாகும்.

ஆனால், தேவனுடைய பிள்ளையின் காரியம் அதுவல்ல. ஒரு ஐசுவரியமுள்ள மனிதன் தனது சிநேகிதனை தன்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கின்றான். அழைக்கப்பட்ட அவன் ஐசுவரியவானுடைய வீட்டின் முன் அறையில் அமர்த்தப்படுகின்றான். ஐசுவரியவானால் அழைக்கப்பட்ட மற்ற சிநேகிதர்களும் வந்து சேர்ந்து யாவரும் முன் அறையில் குழுமியிருக்கின்றனர். சற்று நேரத்திற்குள்ளாக சாப்பாட்டு அறையின் மணி அடிக்கப்படுகின்றது. உடனே முன் அறையில் குழுமியிருந்த அழைக்கப்பட்ட சிநேகிதர்கள் யாவரும் மூக்கைத் துளைக்கும் வாசனை நிரம்பிய ஆகாரங்களால் பரப்பப்பட்டிருந்த சாப்பாட்டு மேஜையின் முன் அமர்ந்து தங்கள் ஐசுவரியமுள்ள கனவானோடு ஆனந்தம் பேசி தங்கள் உணவைப் புசித்து மகிழ்கின்றனர். இதுவே கர்த்தருக்குள் மரிக்கின்ற தேவப் பிள்ளையின் மரணத்திற்கு பின்னர் உள்ள இடை நிலை என்று ஆண்ட்ரு போனர் விளக்கினார்.

 

போனரைப் பற்றிய சில மகிழ்ச்சியான நினைவுகள்

மெய் தேவ பக்தர்கள் பலரும் தேவனுடைய படைப்பின் மாட்சிகளில் நன்கு மயங்கிப் போனவர்கள்தான். அதற்கு நம்முடைய ஆண்ட்ரு போனரும் விதி விலக்கானவர் அல்ல. அவர் தம்முடைய கோடை கால விடுமுறை நாட்களை எப்பொழுதும் தம்முடைய குடும்பத்தினருடன் இயற்கை காட்சிகள் நிரம்பிய கிராமப் புறங்களிலோ அல்லது சமுத்திர கரையோரமாகவோ செலவிட்டார். அவர் தமது விடுமுறை நாட்களை பெரும்பாலும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் செலவிடவே பெரிதும் வாஞ்சித்தார். மேற்கு பீட பூமி பிரதேசத்தின் கானகப்பகுதிகளில் இயற்கை வனப்பு மற்றும் காட்டு மிருகங்கள், பறவைகளிலும் அவர் மிகுந்த ஈடுபாடு காண்பித்தார். அங்கு தம்முடைய நாட்களை செலவிடும் சமயத்திலும் தேவனுடைய ஊழியத்தையும் கூடவே செய்துகொள்ளுவார்.

ஒரு சமயம் இங்கிலாந்து தேசத்து ராணி, எடின்பர்க் நகரத்திற்கு வருவதாக அறிந்த ஆண்ட்ரு போனர் தம்முடைய 2 இளைய பெண் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ராணியைப் பார்ப்பதற்காக சென்றார். ராணியைப் பார்த்துவிட்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது அவருடைய பழைய நண்பர் உவாக்கர் என்பவரைச் சந்தித்தார். "ராணியைப் பார்ப்பதற்காக என் குழந்தைகளையும் என்னுடன் கூட அழைத்து வந்தேன்" என்று கூறினார் ஆண்ட்ரு போனர். "ஓ அது மிகவும் சந்தோசத்திற்குரிய காரியமே" என்று மறுமொழி கொடுத்தார் உவாக்கர். "மெய்தான், நாங்கள் ராணியைப் பார்த்து எந்த ஒரு மாற்றமுமில்லாமல் வந்த வண்ணமாகவே திரும்பிச் செல்லுகின்றோம். ஆனால், நம்முடைய பரலோகத்தின் ராஜா இயேசு கிறிஸ்துவை சந்திக்கும் நாளில் அவரைப் போலவே நாம் மாற்றம் பெறுவோம் அல்லவா!" என்றார் ஆண்ட்ரு போனர்.

ஒரு தாயார் ஒரு சமயம் ஆண்ட்ரு போனரைப் பார்த்து "ஐயா, நான் என் குமாரனுடைய மனந்திரும்புதலுக்காக கடந்த 24 ஆண்டு காலமாக பற்பலவிதமான முயற்சிகளைச் செய்தும் அவனுக்காக ஜெபித்தும் வருகின்றேன். ஆனால் இன்னும் அவன் மனம் திரும்பினதைக் காணோம்" என்று மிகுந்த மலைப்புடன் சொன்னாள். அப்பொழுது ஆண்ட்ரு போனர் "உங்கள் மகனிடம் மிகவும் குறைவாகப் பேசுங்கள். ஆனால் தேவனிடம் உங்கள் மகனைக் குறித்து அதிகமாகப் பேசுங்கள்" என்றார். இந்த வார்த்தைகளை அந்த வாலிபன் சில தடவைகள் மற்றவர்கள் அவனிடம் சொல்லக் கேட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டு துரிதமாகவே மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டான்.

ஆண்ட்ரு போனர் தம்முடைய எபிரேய மற்றும் கிரேக்க மொழி புதிய ஏற்பாடுகளை தொடர்ந்து வாசித்து தியானித்து வந்தார். அவை இரண்டும் அவருடைய இணை பிரியாத தோழர்களாக இருந்தன. தம்மைச் சந்திக்க வரும் இளம் குருவானவர்களிடம் எபிரேய, கிரேக்க மொழிகளில் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கின்றீர்களா என்று கேட்பார். அவர்கள் அதற்குப் பதில் சொல்ல தாமதம் செய்தாலோ அல்லது "இல்லை" என்று பதில் கூறினாலோ அவர் அவர்களைப் பார்த்து "தினமும் ஒரு தேவ வசனத்தை எபிரேய, கிரேக்க மொழிகளில் வாசித்து வாருங்கள். அவைகள் உங்களுக்குச் செய்துள்ள காரியத்தைக் கண்டு பின்னர் ஆச்சரியம் அடைவீர்கள்" என்று அவர் சொல்லுவார். அவருக்கு மொழி அறிவு அசாதாரணமாக இருந்தது. எபிரேய கிரேக்க மொழிகளில் அவர் சிறந்த பாண்டியத்துவம் பெற்றிருந்தார். அவருக்கு சமமாக மொழிகளைக் கற்கக் கூடிய ஞானம் அவருடன் கல்வி பயின்ற எவருக்கும் இல்லாதிருந்தது. நல்ல புத்திக்கூர்மையுடையவராகவும், காலத்தை நல்ல விதத்தில் பிரயோஜனப்படுத்திக் கொள்ளக்கூடியவராகவும் அவர் இருந்தார். அவர் எதை எதைத் தொட்டாரோ அவற்றில் எல்லாம் மேம்பாடு பெற்று விளங்கினார். ஆனால், ஆச்சரியமான காரியம் அவர் பாடல்களை எவ்வளவோ விரும்பியும் ஒரு பாடலைக்கூட அவரால் பாட இயலவில்லை. ஒரு நோயாளியின் அருகில் நின்று அவருக்காக பாடப்படும் பாட்டுடன் சேர்ந்து ஒரு அடியைக்கூட அவருக்கு பாட முடியாமல் போய்விட்டது.

ஒரு குறிப்பிட்ட ஸ்திரீ மனந்திரும்பி ஆண்டவருடைய அடியாளாக மாறியிருப்பதாக ஆண்ட்ரு போனருக்குச் சொல்லப்பட்டது. உடனே அவர் நேரில் போய் அவளைக் காணச் சென்றார். அவளைப் பார்த்த அவர் "அவள் மனந்திரும்பியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படி அவள் இரட்சிப்பைக் கண்டடைந்திருக்கும் பட்சத்தில் அவளுடைய வீடு சுத்தமாக இருக்கும்" என்றார். ஆண்ட்ரு போனர் சொன்னது சரியாகத்தான் இருந்தது. அந்தப் பெண்ணுடைய உள்ளான மனமாற்றம் அவளுடைய வெளியரங்கமான வாழ்க்கையையும் மாற்றியிருக்கும். ஆனால் அவள் மெய்யான மாற்றம் பெறாததால் அவளுடைய வெளிப்படையான காரியங்களும் ஒழுங்கீனமானதாகவே இருந்தது.

ஒரு கனம் பொருந்திய மனிதனை ஆண்ட்ரு போனர் நன்கு அறிந்திருந்தார். கொஞ்ச நாட்கள் வியாதிப் படுக்கையில் இருந்திருந்த அவன் ஆண்ட்ரு போனரைக் கண்டு "நான் படுக்கையில் வியாதியாக இருந்த சமயம் தேவனுடைய பிரசன்னத்தை அதிகமாக உணர்ந்தேன். சில சமயங்களில் தேவ தூதர்களின் பறக்கும் காட்சியையும் கண்டேன். அவர்களில் ஒருவர் என்னைத் தொட்டது போன்ற உணர்வையும் ஒரு நாள் நான் திட்டமாகப் பெற்றேன்" என்று கூறி நின்றான். இதைக் கேட்ட தேவ மனிதனுக்கு தூக்கிவாரிப் போட்டது போலிருந்தது. அவன் பெரிய மாய்மாலக் கிறிஸ்தவன் என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார். உடனே அவர் தனக்கே உரித்தான நகைச் சுவை ததும்பும் விதத்தில் "உங்கள் வீட்டில் பூனை ஏதாகிலும் உண்டுமோ? ஒரு வேளை அந்தப் பூனை அந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம்" என்று கூறினார்.

 

தேவ பக்தனின் அந்திம நாட்களும் பரம அழைப்பும்

தேவ பக்தன் ஆண்ட்ரு போனரின் உடன் பிறந்த சகோதரர்கள் எல்லாரும் மரித்து, இறுதியாக அவரது கடைசி சகோதரனும் கர்த்தருடைய பரம இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தபோது அவரின் துயரம் அதிகமாக இருந்தது. கல்லறைத் தோட்டத்தில் அவரது கல்லறைக்கு முன்னால் வந்து நின்று சகோதரனுக்குரிய கவலையை வெளியே அழுகையின் மூலமாகக் காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்சிரிப்பை தன் முகத்தில் வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டவராக அவர் காணப்பட்டார். கல்லறையின் மேல் மண் குவியலைக் கண்ட அவர் "என் சகோதரன் கட்டாயம் திரும்பவும் உயிர்த்தெழுவான்" என்று கூறினார்.

ஒரு தடவைக்கும் மேலாக அவர் தமது வயதைக் குறித்து "நான் இன்னும் கிழவனாகிவிடவில்லை. எனினும், நான் வயது சென்று போனவன் என்பதை என்னளவில் நன்றாகவே உணருகின்றேன். 80 வயதான பர்சிலாவை வேதாகமம் மிகுந்த விருத்தாப்பியனாகக் காண்பிக்கும்போது (2 சாமுவேல் 19 : 32) 82 வயதான நான் எத்தனையான கிழவன்" என்று அவர் சொல்லிக் கொள்ளுவார். ஒரு சமயம் அவருடைய நண்பர் மேஜர் விற்றல் அவரைப் பார்த்து "விருத்தாப்பியனாக இருக்கும் நீங்கள் கிறிஸ்தவனாக இருப்பது உங்களுக்குக் கடினமாக இருக்கின்றதா? அல்லது நீங்கள் வாலிபனாக இருந்தபோது கிறிஸ்தவனாக ஆண்டவருடைய வழிகளில் நடந்தது கஷ்டமாக இருந்ததா?" என்று கேட்டதற்கு ஆண்ட்ரு போனர் மிகுந்த பிரகாசமான முகத்தினனாக தன் நண்பனைப் பார்த்து "நண்பரே, எனக்கு வயது சென்று கொண்டிருப்பதால் எந்த ஒரு மாறுதலும் என்னில் நிகழ்ந்துவிட்டதை நான் காணவில்லை. ஒவ்வொரு நாள் கிறிஸ்தவ பக்தி வாழ்வின் காரியத்தையும் தேவன் எனக்கு அனுதினம் அருளும் அவரது அனந்தமான கிருபையால் நான் நடத்திக் கொண்டு செல்லுகின்றேன். அதினால் நான் என்னளவில் கிறிஸ்துவுக்குள் கிழவனாக அல்ல பூர்வத்தில் இருந்த வாலிபனாகவே நான் என்னைக் கண்டு கர்த்தருக்குள் களிகூருகின்றேன்" என்று கூறினார்.

வயது செல்லச் செல்ல அவருடைய பெலன் படிப்படியாக குறையத் தொடங்கியது. அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள் அதைக் கவனிக்க முடிந்ததே தவிர அவரால் கண்டு கொள்ள இயலவில்லை. அவருடைய கையெழுத்தும் சற்று தடுமாறத் தொடங்கியது. சிறு சிறு காரியங்களில் அவரது ஞாபகசக்தியும் குறைவுபட ஆரம்பித்தது. அவர் மரிப்பதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்பாக ஒரு மனிதன் அவரை ஹோவர்ட் தெருவில் கண்டு சந்தித்தான். தான் எந்த தெருவில் இருக்கின்றோம் என்பதை அவர் தன்னளவில் அறியாமல் குழப்பத்துடன் காணப்பட்டதால் அந்த மனிதன் அவர் செல்ல வேண்டிய சரியான தெருவுக்கு அவர் செல்ல உதவி செய்தான். அவர்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரியும் சமயம் ஆண்ட்ரு போனர் அந்த அன்புள்ளம் கொண்ட மனிதனுக்கு நன்றி தெரிவித்து "நீங்கள் எனக்குச் செய்த அன்பின் உதவி அந்தப் பேதுருவுக்கு தேவ தூதன் சிறைச்சாலையிலிருந்து வெளியே வழி நடத்திக் கொண்டு வந்த அன்பையே எனக்கு நினைவுபடுத்தி நிற்கின்றது. ஏழை பேதுரு, தான் எங்கே இருக்கின்றோம் என்பதைக்கூட அறிந்து கொள்ள இயலாமல் முற்றும் தடுமாறிப் போய்விட்டார்" என்று கூறினார்.

தனது மரணம் எப்படி இருக்கும் என்பதையும் மரணத்திற்கு பின்னால் உள்ள தனது நடபடிகள் எந்தவிதமாக அமைந்திருக்கும் என்ற விதத்தையும் ஆண்ட்ரு போனர் ஒரு சமயம் கீழ்க்கண்டவாறு வர்ணித்தார்:-

"தேவனுடைய ஊழியத்தின் பாதையில் ஒரு கூட்டத்தில் நான் கர்த்தருடைய செய்தியைக் கொடுத்துவிட்டு ஒரு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றேன். அப்பொழுது என் சரீரத்திற்கு என்னவோ செய்தது போன்ற உணர்வை நான் அறிகின்றேன். எனக்கு நல்ல சுகம் இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரிகின்றது. அதற்கப்பால் என் சுகயீனம் இன்னும் அதிகக் கேடாகச் சென்று இறுதியாக முற்றும் சுய நினைவு இழந்தவனாகப் போய்விடுகின்றேன். அதின் பின்னர் என்ன நடந்தது என்று எனக்கே ஒன்றும் தெரியாது. ஆனால், நான் கண் விழித்துப் பார்க்கின்றபோது தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக என்னைக் காண்கின்றேன். அந்த சிங்காசனத்திற்கு அருகாமையில் காலியாகக் கிடந்த ஒரு ஆசனத்தை ஒரு கரம் எனக்குச் சுட்டிக் காண்பித்து அதில் போய் அமர்ந்து கொள்ளும்படியாக எனக்குச் சொல்லுகின்றது. அப்படி எனக்குச் சுட்டிக் காண்பித்த கரத்தை நான் உற்றுப் பார்த்த போது அந்த அன்பின் கரம் ஆணியால் துளைக்கப்பட்டிருப்பதை நான் கண்டு மெய் சிலிர்த்துப் போனேன். அந்த அன்புக் கரம்தானே திரும்பவுமாக ஒரு கிரீடத்தை எடுத்து என் தலையின் மேல் சூட்டிற்று. தேவ மகிமையால் அந்த கிரீடம் நிறைந்திருந்தமையால் என்னால் அந்தக் கிரீடத்தின் பழுவை தாங்கிக் கொள்ள இயலாமற்போகவே நான் அந்தக் கிரீடத்தை அப்படியே என் தலையிலிருந்து எடுத்து அதை அந்த அன்பின் சொரூபியின் பொற் பாதங்களில் வைத்து "உம்முடைய பரிசுத்தமான இரத்தத்தால் என்னை தேவனுக்கென்று மீட்டுக் கொண்ட அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக் குட்டியே, நீரே எல்லா மகிமை, கனம், புகழ்ச்சிக்குப் பாத்திரமானவர்" என்று அந்த அன்பரை வாயார வாழ்த்தி நிற்கின்றேன்.

ஆண்ட்ரு போனர் மேலே எப்படி வர்ணித்துள்ளாரோ அப்படியே தான் அவரது உன்னத வீட்டு அழைப்பு எல்லாம் இருந்தது. 1892 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்மஸ் தினத்தன்று (அது ஒரு ஞாயிற்றுக் கிழமை) லூக்கா 2 ஆம் அதிகாரத்தில் அவர் தன் சபை மக்களுக்கு தன் கிறிஸ்மஸ் பிரசங்கத்தை நிகழ்த்தினார். பிரசங்கம் முடிந்ததும் தம்முடைய சபை மக்களைப் பார்த்து அடுத்த வாரம் புத்தாண்டு பிறக்கின்றது. நீங்கள் யாவரும் வருகிற புத்தாண்டு தினமான ஞாயிறன்று கர்த்தருக்காகப் புதிய தீர்மானங்களோடு கட்டாயம் ஆலயத்திற்கு வந்து சேர வேண்டும் என்றார்.

கிறிஸ்மஸ் தினமும் அதற்குப் பின் வந்த நாட்களும் மேக மூட்டம் நிறைந்த அதிகக் குளிரான நாட்களாக இருந்தன. புத்தாண்டு தினத்தின் விழிப்பு ஆராதனைக்காக அவர் தன்னை கர்த்தருக்குள் ஆயத்தப்படுத்தி வந்தார். அந்த வாரத்தின் புதன் கிழமை இரவு அவருடைய ஆலயத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆண்ட்ரு போனர் கர்த்தருடைய செய்தியைக் கொடுத்தார். கூட்டம் முடிந்து வெளியே வரும் போது ஆலயத்தின் மேற்பார்வையாளரைப் பார்த்து "நாளைக்கு நீங்கள் என்னைப் பார்க்க வரவேண்டாம். நாளைக்கு நான் உங்களுக்கு விடுமுறை அளிக்கின்றேன்" என்று சொன்னார். அந்த மேற்பார்வையாளர் தினமும் ஆண்ட்ரு போனரை வந்து காண வேண்டும் என்பது ஆலயத்தின் ஒழுங்காகும். அன்று இரவு படுக்கைக்குச் சென்ற தேவ பக்தன் அடுத்த நாள் காலையில் குளிர் காய்ச்சலோடுதான் எழும்பினார். அவரது சுகயீனம் வர வர அதிகரித்தது. தனது சுகயீனம் அதிகரிக்கவே வருகிற புத்தாண்டு தினமான ஞாயிறன்று கவனிக்கப்பட வேண்டிய ஆலய ஆராதனைகள் மற்றும் ஆவிக்குரிய கூட்டங்களைக் குறித்து மாற்று ஏற்பாடுகளை அவர் செய்யத் தொடங்கினார். 1892 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தம்முடைய குடும்பத்தினரை தமது படுக்கையின் அருகில் வரவழைத்து 23 ஆம் சங்கீதத்தைப் பாடச் சொன்னார். பாடல் பாடி முடிந்ததும் ஓட்ஸ் என்ற அவருடைய நண்பர் 62 ஆம் சங்கீதத்தை வாசித்தார். அதற்கப்பால் ஆண்ட்ரு போனர் தனது கரங்களைக்கூப்பி மிகவும் பக்தி வினயமாக "ஓ கர்த்தாவே, எங்கள் கன்மலையும் எங்கள் அரணான அடைக்கலமுமானவரே, நீரே எங்கள் சூரியனும், கேடகமுமானவர்" என்றவரிகளுடன் தனது ஜெபத்தை அருமையாக முடித்தார்.

அதற்கப்பால் அவரது காய்ச்சலும், பெலவீனமும் அதிகரிக்கத் தொடங்கி கொஞ்ச நேரம் அவர் அதிக கஷ்டம் அனுபவிப்பவராக காணப்பட்டார். அதின் பின்னர் அவரது எல்லா பாடுகளும் அடங்கி ஓய்ந்து மிகவும் அமைதியாக அவர் இருந்தார். அந்த வேளையில்தானே அவரது ஜீவன் அவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டது. அப்பொழுது இரவு சரியாக 10 மணி 10 நிமிடம். தான் தன் வாழ் நாளில் அதிகமதிகமாக நேசித்து தேவப் பணி செய்து, அல்லும் பகலுமாகப் பாடுபட்ட தன் அருமை ஆண்டவர் இயேசு இரட்சகரிடம் அவர் விரும்பிய வண்ணமாகத் திடீரென சென்றுவிட்டார்.

ஆண்ட்ரு போனரின் அடக்க ஆராதனை 1893 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 4 ஆம் நாள் புதன் கிழமை அதாவது 5 நாட்களுக்குப் பின்னர் நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் விசேஷமாக சின்ன பிள்ளைகள் சூழ்ந்து வர அவருடைய சரீரத்தை பனி நிறைந்த பாதை வழியாக "சைட்ஹில்" என்ற கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்று மிகுந்த ஆரவாரத்தோடும், மோட்சத்தைப் பற்றிய பாடல்களோடும் அடக்கம் செய்தனர். அவருடைய மனைவி மற்றும் அவரது சின்ன மகளின் கல்லறைகளுக்கு அருகிலேயே அவருடைய உடலையும் வைத்தார்கள். ஆண்ட்ரு போனர் தன் ஆண்டவருக்காக பணிசெய்த காலேஸ் என்ற இடம் அவரது கல்லறையிலிருந்து பார்க்கக்கூடிய தொலைவில்தான் இருந்தது.

ஆண்ட்ரு போனர் என்ற அந்த அருமையான பரிசுத்த தேவ பக்தன் தனது பேரப்பிள்ளைக்கு (பேத்திக்கு) கடைசியாக எழுதின கடிதத்தில் அவரே எழுதின சிறிய பாடல் அடிகளுடன் இந்த அற்புதமான வாழ்க்கைச் சரித்திரத்தை நான் முடிக்க விரும்புகின்றேன்:-

அன்பர் இயேசுவை அறிந்து, அவருக்குப் பயந்து வாழ்ந்திடு
உன் வாழ்நாள் எல்லாம் அவரை நேசிப்பதிலும்
அவருக்காக உழைப்பதிலும் கழிந்து செல்லட்டும்.
அதற்கப்பால் நீ அவரண்டை நெருங்கி எப்பொழுதும்
அவர் சிங்காசனத்தண்டை நிற்கலாம்
என்றும் நீ அவர் முகம் நோக்கி
அவர் புகழும் பாடலாம்.

 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM