கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,
நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருக உண்டாவதாக.
ஆமென்.
நாம் இரவும் பகலும் ஆராதிக்கின்ற நம் அநாதி தேவனின் அளவற்ற அன்பின்
கிருபையால் தேவ எக்காளம் தனது 45 ஆண்டு காலத்தை கர்த்தருடைய பரிசுத்த
நாமத்திற்கு மகிமையாக முடித்து தனது 46 ஆம் ஆண்டுக்குள் பிரவேசிக்கின்றது.
கடந்து சென்ற 45 ஆண்டு காலமாக அது தேவனுடைய ஜனத்தின் ஆவிக்குரிய
ஆசீர்வாதத்திற்கு அனுகூலமாக செய்து வந்திருக்கும் எல்லா நடபடிகளும்
தேவனுடைய ஞாபக புத்தகத்தில் உள்ளது.
இந்த எளிய தேவ ஊழியத்தை ஆரம்பித்த 1968 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அதை
ஆதரித்து மாதந்தோறும் உதவும் அன்பான தேவ மக்கள் உங்களில் உண்டு. உங்களில்
பலர் கர்த்தருடைய கிருபையால் 10, 20, 30, 40 ஆண்டுகள் வரை இந்த ஊழியத்தை
தாங்கி வந்திருக்கின்றீர்கள். கர்த்தரில் நான் உங்களுக்கு பெரிதும் நன்றி
கடன்பட்டுள்ளேன். எனது ஆகாரம் எனக்கு முன்பாக இருக்கும்போதும், எனது ஜெப
நேரங்களிலும், உபவாச நாட்களிலும் தேவன் உங்கள் குறைவுகளை எல்லாம் கிறிஸ்து
இயேசுவுக்குள் மகிமையில் நிறைவாக்கவும், உங்கள் இருதயத்தின்
வேண்டுதல்களையும், விருப்பங்களையும் அவர் உங்களுக்கு அருளிச் செய்யவும்,
உங்கள் முகங்களிலுள்ள கண்ணீர் யாவையும் துடைக்கவும், தேவன் தம்மில்
அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணிய மோட்சானந்த பாக்கியத்தை
சுதந்தரிக்கும் கிருபையின் சிலாக்கியம் தரவும் உள்ளத்தின் பாரத்தோடு தேவ
சமூகத்தில் தொடர்ந்து ஜெபித்து வருகின்றேன்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நாம் நமது தேவ எக்காளத்தை இணையதளத்திலும் (Internet
Edition) வெளியிட்டு வருகின்றோம். பல்லாயிரக்கணக்கான தமிழ்
கிறிஸ்தவ மக்கள் உலகம் முழுவதிலுமுள்ள நாடுகளிலிருந்து நமது தேவ எக்காளத்தை
இணையதளத்தின் மூலமாகப்பார்த்து மிகுந்த தேவாசீர்வாதம் பெற்று வருவதை
அவர்களிடமிருந்து வரும் இ-மெயில் செய்திகள் நமக்கு தெரிவிக்கின்றன. எல்லா
துதி ஸ்தோத்திரங்களுக்கும் பாத்திரமானவர் நம் தேவன் ஒருவரே. பொதுவாக,
இணையதளத்தின் மூலமாக (Website) தங்கள் வெளியீடுகளை கிறிஸ்தவ உலகுக்கு
அறிமுகப்படுத்துகின்றவர்கள் அதின் மூலமாக நிறைய காணிக்கைகளை
உலகமெங்கிலுமிருந்தும் எதிர்பார்ப்பார்கள். அப்படியே அவர்களுக்கு அந்த
இணையதளத்தின் மூலமாக உலகத்தின் நானா தேசங்களில் வாழ்கின்ற தேவ மக்கள் நிறைய
காணிக்கைகளை அனுப்பி வைப்பார்கள். அதற்கு வசதியாக அந்த ஊழியர்கள் தங்கள்
வங்கிகளின் பெயர்களையும், அந்த வங்கிகளில் உள்ள தங்கள் கணக்கு எண்களையும்
கவனமாக கோடிட்டுக் காண்பித்து விடுவார்கள். அதைத் தவறு என்று நான்
எழுதவில்லை. ஆனால், நமது அன்பின் ஆண்டவருக்கு நமது எளிய தேவ ஊழியங்கள்
கனத்தையும், மகிமையையும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடும், ஜீவனுள்ள
ஆண்டவர் ஒருவரையே முழுமையாக சார்ந்து அவருடைய ஊழியத்திற்கான அனைத்து
தேவைகளையும் பரத்திலிருந்து நாம் தப்பாது அதிசய அற்புதமாக
பெற்றுக்கொள்ளலாம் என்பதை விளங்கப்பண்ணுவதற்காகவும், நமது தேவ எக்காள
ஊழியங்கள் மற்ற கிறிஸ்தவ ஊழியங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கவேண்டும்
என்பதற்காகவும் நமது தேவ எக்காள இணையதளத்தில் (devaekkalam.com) "அன்புகூர்ந்து இந்த ஊழியத்திற்கு காணிக்கைகளோ, அல்லது பத்திரிக்கைக்கு
சந்தாவோ எதுவும் அனுப்ப வேண்டாம்" என்ற வார்த்தைகள் "தொடர்புக்கு" என்ற
தலைப்பின் கீழ் தடித்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம்.
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. "என்னை கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்
பண்ணுவேன்" (1 சாமுவேல் 2 : 30) என்ற தேவ வாக்கின்படி சர்வ வல்ல தேவனும்
நமது ஊழியத்தின் தேவைகளை மனுப்புத்திக்கு எட்டாதவிதத்தில் சந்தித்து தமது
பரிசுத்த நாமத்தை நமது எளிமையான ஊழியங்களின் மூலமாக மகிமைப்படுத்தி
வருகின்றார்.
கடந்த தேவ எக்காளத்தை மிகவும் கருத்தோடு வாசித்த தேவ பிள்ளைகளில் சிலர்
இந்த எளிய தேவ ஊழியத்தை தேவ பெலத்தால் நடத்துகின்ற பாவியாகிய எனது அற்பமான
உண்மையையும், உத்தமத்தையும் குறிப்பிட்டு கடிதங்கள் எழுதியிருந்தீர்கள்.
இந்த தடவை நமது வட இந்திய இமயமலை தேவ ஊழியங்களுக்கு நாம் அச்சிட்ட மற்றும்
விலைக்கு வாங்கிய திரளான தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களுக்காக நாம்
செலவிடப்பட்ட பணங்களை எல்லாம் நீங்கள் கவனமாக கணக்கிட்டு இவ்வளவு பணத்தை
ஆண்டவர் உங்களுக்கு தமது ஊழியத்தின் பாதையில் தந்திருப்பாரானால் உண்மையாகவே
நீங்கள் தேவனுடைய உத்தமமான தேவப்பிள்ளைதான். அவர் உங்கள் உண்மையையும்
உத்தமத்தையும் கனம்பண்ணியிருக்கின்றார். அதில் துளிதானும் சந்தேகமே
கிடையாது என்று எழுதியிருக்கின்றீர்கள். எல்லா துதி கனம் புகழ்ச்சிக்கும்
பாத்திரர் நம் தேவன் ஒருவரே. எனக்கு வந்த கடிதங்களில் இரண்டை மட்டும்
கவனியுங்கள்:-
"கிறிஸ்துவுக்குள் அருமையான சகோதரருக்கு இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
தங்களது தேவ எக்காளம் பத்திரிக்கை கிடைக்கப்பெற்றோம். கடந்த ஆண்டு
ஊழியத்தின் பாதையில் கர்த்தர் உங்களை நடத்திச் சென்றதை வாசித்து
மகிழ்ந்தோம். கர்த்தரைத் துதித்தோம். மெய்யாகவே கர்த்தருடைய வழிகள்
ஆராய்ந்து அறிய முடியாதவைகள். அதிசயமாய் நடத்திய கர்த்தாதி கர்த்தருக்கே
எல்லா துதி, கனம் மகிமையை செலுத்துகின்றோம்.
இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களையும் ஊழியத்திற்குத் தேவையான இலட்ச
இலட்ச ரூபாய்களையும் ஒரு தனி மனிதனுக்கு கொடுக்க கர்த்தர் சித்தமுள்ளவராய்
இருப்பாரானால் நூற்றுக்கு நூறு உங்கள் உண்மையும், உத்தமுமான இருதயம்தான்
காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. இமயமலையின் கடையாந்திர கிராமங்களில்
நீங்கள் விதைத்த சுவிசேஷ விதைகள் 30-60-100 மாக பலன் தர ஆவியானவர்
தொடர்ந்து கிரியை செய்ய தொடர்ந்து ஜெபிக்கின்றோம்"
"உத்தமமும், உண்மையும் உள்ள கர்த்தரின் தாசர் சாமுவேல் ஐயா அவர்களுக்கு,
கர்த்தருக்குள் பணிவன்புடன் சகோதரி........................... எழுதுவது:-
தேவ எக்காளம் கிடைக்கப்பெற்று முதல் அட்டையிலிருந்து பின் அட்டை வரை
கர்த்தர் தயவால் படித்துப் பயனடைந்தேன், பெலனடைந்தேன், எச்சரிக்கப்பட்டேன்
மற்றும் கர்த்தருக்குள் களிகூர்ந்தேன்.
ஐயா, நீங்கள் தேவ கிருபையால் ஆகாய மார்க்கத்தில் பயணித்து ஊழியம் செய்ததை
அறிந்து கர்த்தருக்குள் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தேன். என்னே கர்த்தரின்
அன்பு! உண்மையும், உத்தமமுமுள்ள தேவ ஊழியக்காரனைக் கர்த்தர் நேசிக்கிறார்,
மகிமைப்படுத்துகிறார், வசதிகளை வாய்க்கப்பண்ணுகிறார். பெரு
மகிழ்ச்சியடைந்தேன் ஐயா.
இந்த தேவ எக்காளம் மிக மிக ஆசீர்வாதமாக இருந்தது. உங்கள் பிரயாசத்தைக்
கர்த்தர் வெகுவாக ஆசீர்வதித்திருக்கிறார். உங்கள் மூலம்
பல்லாயிரக்கணக்கானவரை இரட்சித்திருக்கிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நன்றி.
கர்த்தர் தொடர்ந்து உங்களைப் பலப்படுத்தி லட்சோபலட்சங்களை இரட்சிப்பார்
என்று விசுவாசித்து இக்கடிதத்தை முடிக்கின்றேன். கிறிஸ்துவுக்குள் உங்கள்
அன்பிற்கும், ஜெபங்களுக்கும் நான் எப்படி நன்றி சொல்வேன்! கர்த்தருக்குக்
கோடா கோடி ஸ்தோத்திரம்"
இந்த அற்பமான உண்மையும், உத்தமுமம்தான் தனித்த பாவியாகிய என்னை கடந்த 45
ஆண்டு காலமாக தேவன் தமது பரிசுத்த ஊழியத்தின் பாதையில் ஆசீர்வாதமாக
எடுத்துப் பயன்படுத்த வகை செய்தது. தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் கர்த்தருடைய
பரிசுத்த ஊழியத்திற்காக உங்களை ஒடுக்கி, உங்களை வெறுத்து, தியாக அன்போடு
அனுப்பும் உங்கள் கஷ்ட சம்பாத்தியத்தின் காணிக்கைகளை எல்லாம் நான் சிறுக
சிறுக சேமித்து வைத்து அவை முழுவதையும் தேவனுடைய பரிசுத்த நாமத்திற்கு
மகிமையாக ஜெபத்தோடு செலவிடுகின்றேன். பல தடவைகளிலும் எனது வட மாநில தேவ
ஊழியங்களை முடித்துவிட்டு வெறுங்கையனாக வீடு திரும்பியிருக்கின்றேன்.
உங்களுடைய தியாக அன்பின் காணிக்கை பணங்களை நான் தந்திரமாக பதுக்கி என் பின்
சந்ததிக்கு சேர்த்து வைக்கவில்லை. ஒருக்கால் பெற்ற பிள்ளைகள் என்ற
பாசத்தில் நான் உங்கள் பணங்களை மதியீனமாக என் பிள்ளைகளிடம் எடுத்துக்
கொடுத்தால் தேவனுடைய மெய்யான இரட்சிப்பின் பரிசுத்த பாத்திரங்களான அவர்கள்
என்னைப் பார்த்து "அப்பா, தேவப்பிள்ளைகள் ஆண்டவருடைய ஊழியங்களுக்காகத்
தங்களை ஒடுக்கி கொடுத்த பணங்களை கர்த்தருடைய ஊழியங்களுக்காகவே முழுமையாக
செலவிட்டு விடுங்கள். அந்தப் பணத்தை எங்களுக்குத் தந்து தேவ
கோபாக்கினையையும், சாபத்தையும் எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும்
தயவுசெய்து கொண்டு வந்துவிடாதீர்கள். அந்தப் பணம் எங்களுக்கு தேவனுடைய
ஆசீர்வாதத்தையல்ல அவருடைய கோபத்தையும், எரிச்சலையையும், சாபத்தையும்
மாத்திரமே எங்கள் மேல் வரப்பண்ணும்" என்று சொல்லி என்னை தங்களண்டை
நெருங்கவே விடமாட்டார்கள். கர்த்தர் எனக்கு கிருபையாக கொடுத்த எனது
பரிசுத்த புதல்வர்கள் இருவரும் அவர்கள் மனைவியரும் ஆசிரியர்களாக மேல் நிலை
பள்ளிகளில் பணி செய்வதால் அவர்கள் வருமானமே அவர்களுக்குப் போதுமானதாக
இருப்பதுடன் நமது தேவ ஊழியங்களுக்கும் மாதந்தோறும் சில ஆயிரங்களை அவர்கள்
காணிக்கையாக நமக்குத் தருகின்றனர். அத்துடன் மற்ற மிஷனரி ஊழியங்களுக்கும்
அவர்கள் தாராளமாகக் கொடுத்து மிஷனரிகளை தாங்குகின்றனர்.
எனது பிள்ளைகளுக்கு நான் பின் வைத்துச் செல்லுவதெல்லாம்
கிறிஸ்துவுக்குள்ளான எனது எளிய பக்தி வாழ்க்கை மட்டுமேதான். நாங்கள் எங்கள்
மூன்றாவது வாடகை வீட்டில் குடியிருந்தபோது எனது இளைய மகன் சார்லஸ் ஃபின்னி
அவர்கள் ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு "அப்பா, இந்த சிமென்ட் தரையைப்
பாருங்கள்" என்று என்னிடம் சுட்டிக் காண்பித்தார்கள். "வீட்டிலுள்ள மற்ற
தரையைவிட இந்த இடம் மட்டும் ஏன் இத்தனை பளபளப்பாக இருக்கின்றது?" என்று
நான் மகனிடம் திருப்பிக் கேட்டேன். "அப்பா, நீங்கள் ஒவ்வொரு நாளும்
ஜெபிக்கும் இடம் அதுதானே, உங்கள் முழங்கால்கள் பட்டு பட்டுத்தான் அந்த இடம்
அத்தனை பளபளப்பாக இருக்கின்றது" என்று மகன் எனக்கு நினைப்பூட்டினார்கள்.
கர்த்தருக்கே மகிமை. அந்த ஜெப வாழ்க்கையைத்தான் நான் பெரும் பொக்கிஷமாக என்
பிள்ளைகளுக்கு பின் வைத்துச் செல்லுகின்றேன். அவர்களின் காலஞ்சென்ற
தாயாரின் தங்க நகைகளைக் கூட நான் அவர்களுக்கு என்று பின் வைக்காமல்
அவர்களின் சம்மதத்தின் பேரில் எங்களுடன் கடந்த நாட்களில் இமயமலை தேவ
ஊழியங்களில் கலந்து கொண்ட ஏழை தேவ ஊழியர் பாஸ்டர் ஜேம்ஸ் அவர்களின் மூத்த
மகள் ரமாபாய் உடைய திருமணத்திற்காக முழுவதையும் எடுத்து அப்படியே
அவர்களிடம் கொடுத்துவிட்டேன். காரியங்கள் இந்த அளவில் இருந்தபோதினும்
தேவப்பகைஞரான பொல்லாத கிறிஸ்தவ மக்கள் நமது ஊழியங்களைக் குறித்து உண்மைக்கு
புறம்பான வார்த்தைகளைப் பேசுகின்றனர். அதைக் குறித்து நான் சற்றும் மனம்
கலங்கவில்லை. சங்கீதக்காரர் தாவீது இராஜா சொன்னது போல "தேவரீர் உமது
அடியானை அறிவீர்" (1 நாளா 17: 18) என்ற வார்த்தையின்படி ஆண்டவருக்கு
முன்பாக நான் உண்மையுள்ளவனாக இருக்கின்றேன் என்பதை அந்த அன்பின் கர்த்தர்
அறிகின்றவராக இருக்கின்றார். அந்த பரிசுத்தமுள்ள தேவனுக்கு முன்பாக இன்னும்
அதிகமாக என்னைத் தரைமட்டாகத் தாழ்த்தி அவருடைய பெலத்தால் இன்னும் அதிகமான
உத்தமத்தோடும், இன்னும் அதிகமான உண்மையோடும், இன்னும் அதிகமான
பரிசுத்தத்தோடும் என்னை என் தாயின் கர்ப்பத்தில் தமக்கென்று தெரிந்து கொண்ட
என் அன்பின் தேவனுக்கு ஊழியம் செய்து அநேகரை நீதிக்குட்படுத்த தேவ
சமூகத்தில் இராப்பகலாகப் போராடி ஜெபித்து வருகின்றேன்.
எனது வாழ்வில் காணப்பட்ட இந்த அற்பமான உண்மையும், உத்தமமும் காரணமாக தேவன்
எனது பிள்ளைகளுக்கும் அவர்கள் மனைவியருக்கும் நான் இருக்கின்ற
கோத்தகிரிக்குச் சமீபமான ஊட்டியிலும், அதற்குச் சமீபமான இடங்களிலும் ஆசிரிய
வேலை வாய்ப்புகளை கிருபையாகக் கொடுத்து பரதேசியாகிய என்னை அவர்கள்
வாரந்தோறும் வந்து பார்த்து எனக்கு பணிவிடை செய்யவும், அவர்கள் செய்து
தரும் ஆகாரங்களை நான் பிள்ளைகளோடு அமர்ந்து புசிக்கவும் தயை
புரிந்திருக்கின்றார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தமிழ்நாட்டின்
ஒவ்வொரு மாவட்டத்தில் வேலை கிடைத்திருந்தால் அவர்களின் நிலை என்ன?
பாவியாகிய எனது நிலை என்னவாகும் என்று நீங்கள் சற்று யோசித்துப் பாருங்கள்.
நாங்கள் ஒருவரையொருவர் ஒருக்கால் 6 மாத கால இடை வெளிக்குப் பின்னரோ அல்லது
ஆண்டுக்கு ஒரு முறையோ குடும்பமாக சந்திப்போம். எத்தனை துயரமான காரியம்
பாருங்கள்! ஆனால், அன்பின் கருணைக்கடல் ஒரு மணி நேர பிரயாண தூரத்திலேயே
பிள்ளைகளை எனக்கு அருகில் வைத்திருக்கின்றார். சொல்லப்போனால் வெறும் 45
நிமிடங்களிலேயே அவர்கள் 8000 அடிகள் உயரமுள்ள ஊட்டியிலிருந்து நான்
வசிக்கின்ற 6000 அடி உயரமுள்ள கோத்தகிரி பட்டணத்திற்கு இறங்கி வந்து
சேர்ந்து விடலாம். யாவுக்கும் மேலாக பிள்ளைகள் அனைவருக்கும் அன்பின்
ஆண்டவர் ஆசிரிய பணிகளைக் கிருபையாகக் கொடுத்திருக்கின்றார். ஆண்டவரின் அந்த
அதிசய நடத்துதல்கள் எல்லாம் மகா ஆச்சரியமானவைகள்! அந்த அன்பருக்கு நான்
என்ன ஈட்டைச் செலுத்த முடியும்!
இந்த தலையங்கத்தை நான் எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் தேவ எக்காளத்தின்
வெகு நீண்ட கால தேவப்பிள்ளைகளில் ஒரு ஐயாவிடமிருந்து நமக்கு வந்த கடிதம்
ஒன்றில் "தேவ எக்காளத்தை வாசிப்பதின் மூலமாக எங்கள் மரண பயம் நீங்கி,
நாங்கள் கர்த்தரைச் சந்திக்க எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டிய தைரியம்
பெற்று வருகின்றோம்" என்று எழுதப்பட்டுள்ள வரிகளை வாசித்து ஆண்டவருக்கு
துதி ஏறெடுக்கின்றேன். இப்படியாக தேவ எக்காளம் உங்களை இம்மை வாழ்வுக்குப்
பின்னர் தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணிய பரலோக பாக்கிய
வாழ்வுக்கு ஆயத்தப்படுத்தும் ஒரு பத்திரிக்கையாக இருந்து வருகின்றது. இது
குறித்து தேவப்பிள்ளைகளிடமிருந்து எனக்கு வரும் கடிதங்கள் கர்த்தருக்குள்
என்னைப் பரவசப்படுத்தவதாக இருக்கின்றது. எல்லா துதியும் நம் நேசர்
ஒருவருக்கே உண்டாவதாக.
இந்த எளிய பத்திரிக்கையை அதிகமான ஜெபத்தோடும், ஆத்தும பாரத்தோடும்,
தேவனுடைய ஆலோசனையையும், அவரது ஒத்தாசையையும் அதிகமாகத் தேடி அவரது
கிருபையைக் கொண்டு எழுதுகின்றேன். "ஆண்டவரே, உம்முடைய வாயிலிருந்து
கிருபையுள்ள வார்த்தைகள் புறப்பட்டதே (லூக்கா 4 : 22) அதே போல இந்த எளிய
பத்திரிக்கையிலிருந்தும் இதைப்படிக்கின்ற உம்முடைய ஜனத்திற்கு உமது
கிருபையுள்ள வார்த்தைகள் கிடைக்கட்டும்" என்ற ஜெபத்தோடும், உள்ளத்தின்
பாரத்தோடும் எழுதுகின்றேன்.
|