தலையங்கம்


"நான் சர்வ வல்லமையுள்ள தேவன், நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு" (ஆதியாகமம் 17 : 1)

"உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு" (2 தீமோ 2 : 15)

கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.

நம் நேச கர்த்தாவின் அளவற்ற அன்பின் கிருபையாலும், தேவப் பிள்ளைகளாகிய உங்கள் யாவரின் உருக்கமான ஜெபங்கள், மனதுருக்கம் நிறைந்த அன்பின் வேண்டுதல்கள், விண்ணப்பங்களின் காரணமாக உங்கள் சகோதரனாகிய நான் வடக்கே இமயமலைகளில் தேவ ஊழியங்களை ஒரு மாத காலம் கர்த்தருக்கு மகிமையாக செய்து முடித்து சுகமாக நீலகிரி மலைகளுக்கு திரும்பி வந்து சேர்ந்தேன். செப்டம்பர் மாத கடைசி வாரம் வடக்கே சென்றுவிட்டு நவம்பர் முதல் வாரத்தில் இங்கு வந்து சேர்ந்தேன்.

வடக்கே தேவ ஊழியத்தின் பாதையில் இருந்த நாட்களில் அநேகமாக ஒவ்வொரு நாளும் எங்கள் பயணத்தின் பாதைகள் மரண நிழலின் பள்ளத்தாக்காகவே இருந்தது. ரஸ்தாவில் செல்லும் வாகனம் வலது பக்கமா அல்லது இடது பக்கமா எந்தப் பக்கம் திரும்பிச் செல்ல வேண்டும்? முன்னாலுள்ள பாதை மேடா அல்லது பள்ளமா என்ற எந்த ஒரு அறிவிப்பு பலகைகளும் அங்கில்லாதிருந்தது. காரணம், அந்த எச்சரிக்கைப் பலகைகளை அங்கு நிறுத்த ரஸ்தாவில் சற்றும் இடமே இல்லாதிருந்தது. பெரும்பாலான இடங்களில் செங்குத்து மலைகளைக் குடைந்து வாகனங்களின் 4 டயர்கள் மட்டும் தொட்டுச் செல்லும் அளவிற்கு பாதைகளை அமைத்திருக்கின்றனர். அநேகமாக ரஸ்தாவின் வலது அல்லது இடது கைப்பக்கம் எப்பொழுதுமே தலையைச் சுழலச் செய்யும் அளவிற்கு கெடு பாதாள பள்ளத்தாக்காகவே இருப்பதை நாங்கள் காண முடிந்தது. கொஞ்ச தூரம் வலது இடது கைப்பக்கங்களில் பாதுகாப்பான பாதை தெரிந்தாலும் திரும்பவும் தலையைச் சுழலச் செய்யும் அதலபாதாள பள்ளத்தாக்குகள் நம்மை வந்து சந்தித்து விடுகின்றன. அந்தரத்தில் களை கூத்தாடி தனது கரங்களில் கம்பை வைத்து தன்னை சுதாகரித்துக் கொண்டு பயத்தோடு கயிற்றில் நடந்து செல்லுவது போல எங்கள் பயணப்பாதைகள் இருந்தன. ஒவ்வொரு நாளும் நான் வாகனத்துக்குள்ளாக இருந்து கொண்டு "ஆண்டவரே, உம்முடைய பிள்ளைகளின் ஜீவனும், பாவியாகிய என்னுடைய ஜீவனும் உமது பார்வைக்கு அருமையானதாக இருப்பதாக" என்ற ஜெபத்தை என் உள்ளத்திலிருந்து அவ்வப்போது தொடர்ந்து ஏறெடுத்துக் கொண்டே இருந்தேன்.

ஒரு நாள் மாலை நேரம் ஓரிடத்தில் உள்ள மலை நதியின் கரையில் ஒரு புதிய கார் நின்று கொண்டிருப்பதை நாங்கள் ஆச்சரியத்துடன் கவனித்தோம். காரை கழுவுவதற்கு இந்த ஏகாந்தமான இடத்திற்கு டிரைவர் ஏன் வாகனத்தைக் கொண்டு வர வேண்டும்? எப்படி சாமர்த்தியமாக டிரைவர் இந்த இடத்திற்கு வாகனத்தைக் கொண்டு வந்து சேர்த்து விட்டார்? என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கையில் "அது மலை உச்சியிலிருந்து நிலை தடுமாறி உருண்டு, உருண்டு வந்து இப்படி நதியோரம் விழுந்து நின்று கொண்டிருந்திருக்கின்றது. அந்த வாகனத்தில் பயணித்த முழு குடும்பமே அந்த விபத்தில் மாண்டு போனார்கள்" என்று சொல்லக் கேட்டோம். சற்று நேரம் நாங்கள் எங்கள் வாகனங்களை அந்த இடத்தில் நிறுத்தி துயரத்துடன் அதைப் பார்த்துவிட்டுச் சென்றோம். அன்பின் பரம தகப்பனின் அநாதி கிருபை எங்களையும், எங்கள் வாகனங்களையும் ஒரு மாத காலம் கிருபையாகப் பாதுகாத்தது. தேவப்பிள்ளைகளாகிய உங்களின் உருக்கமான ஜெபங்களே எங்களுக்கு இந்த அற்புதத்தை நடப்பித்தது.

வழக்கம்போல இந்த ஆண்டிலும் நாங்கள் 9 பேர்கள் கொண்ட ஒரு குழுவாக 2 வாகனங்களை ஒரு முழுமையான மாதத்திற்கு வாடகைக்கு அமர்த்தி கடந்து சென்ற எல்லா ஆண்டுகளைக் காட்டிலும் ஏராளமான தேவனுடைய பிரசுரங்களை பனி மூடிய இமயமலைகளின் கடையாந்திர கிராமங்கள் வரை தேவ பெலத்தால் சென்று கொடுத்து வந்தோம். அது குறித்த தெளிவான விபரங்களை இந்த இதழின் அடுத்ததோர் பக்கத்தில் நீங்கள் காணலாம்.

1977 ஆம் ஆண்டு ஜனுவரி மாதத்தின் ஒரு குளிரான நாளின் அதிகாலையில் எனது ஜெப வேளையின்போது என்னை எனது தாயின் கர்ப்பத்தில் நான் உருவாகு முன்னே அறிந்த நம் அன்பின் கர்த்தர் முகப்பில் நான் குறிப்பிட்டுள்ள "நான் சர்வ வல்லமையுள்ள தேவன், நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு" (ஆதி 17 : 1) என்ற தேவ வசனத்தை என் இருதயத்தில் தந்து அதின் மூலமாகப் பேசினார். நான் படுப்பதற்கு ஒரு கட்டில் கூட இல்லாத நிலையில் மிகவும் குளிரான சிமெண்ட் தரையில் கோரம் பாய் ஒன்றை விரித்து அதில் நான் படுத்திருந்தேன். எனது மனைவியும் சிறுவர்களான எனது பிள்ளைகள் இருவரும் நாங்கள் குடியிருந்த வாடகை வீட்டின் பாஸ்டர் அவர்கள் அன்பாக இரவலாக தந்த பழைய இரும்பு ஸ்பிரிங் கட்டிலில் (Spring Cot) ஒன்றாகப் படுத்திருந்தனர். மூவரின் பாரத்தை தாங்க இயலாத அந்தக்கட்டிலில் அவர்கள் தொட்டிலில் படுப்பது போல கஷ்டத்துடன் படுத்திருந்தனர். 19 வருடங்கள் 8 மாத காலம் நான் செய்து வந்திருந்த உலப்பிரகாரமான எனது அலுவலை கர்த்தருடைய திட்டமான அழைப்பின் பேரில் விட்டுவிட்டு 5 மாத காலம்தான் அப்பொழுது ஆகியிருந்தது. சுமார் 20 ஆண்டு கால உலக அலுவலுக்காக மார்வாடி முதலாளியிடமிருந்து எனக்கு கிடைத்த பணம் எல்லாம் எனது கரங்களை விட்டுக்கடந்து சென்று பல நாட்களாகியிருந்தது. ஒவ்வொரு நாளின் குடும்பச் செலவுகளுக்கும் ஒத்தாசையின் பர்வதத்தை நோக்கி நான் கெஞ்ச வேண்டியதாகவிருந்தது. ஒவ்வொரு நாளின் மாலைச் சூரியன் அஸ்தமிக்க, அஸ்தமிக்க நான் எங்கள் வாடகை வீட்டுக்கு மேலாக இருந்த மலை உச்சியில் முழங்கால்களில் நின்றேன். பல நாட்களிலும் நான் முழங்கால்களில் நின்ற கருங்கல் பாறையில் எனக்கு முன்பாக ஒரு நயா பைசா சிறிய செம்பு நாணயத்தை தேவன் பார்க்கும்படியாக நான் அவருக்கு முன்பாக வைத்தேன். வீட்டிலிருந்து நான் மலைக்கு ஜெபிக்கும்படியாக புறப்படும் ஒவ்வொரு நாளிலும் அநேகமாக அந்த நயா பைசா நாணயத்தை நான் எனது சட்டைப் பையில் கவனமாகப் போட்டு எடுத்து வந்து அதை எனக்கு முன்பாக உள்ள மலைப்பாறையில் வைப்பேன். அந்த நாட்களில் ஒரு நயா பைசாவுக்கு கூட ஒரு சிறிய மதிப்பு இருந்தது. தமது தீர்க்கனை காகங்களைக் கொண்டும், கைம்பெண்ணைக்கொண்டும் போஷித்த கன்மலையாம் கர்த்தர் எங்களை ஒரு குறைவுமில்லாமல் ஆச்சரியமாக, மனுப்புத்திக்கு அப்பாற்பட்டவிதத்தில் அடுத்து வந்த நாட்களில் அற்புதமாக வழிநடத்தினார். கர்த்தர் எங்களை ஆச்சரியமாக வழிநடத்திக் கொண்டு செல்லும் விதத்தைக் கண்டு தேவ மக்கள் பிரமித்தனர். "கர்த்தர் உங்களை உங்கள் உலக அலுவலிலிருந்து வெளியே வரும்படியாக அழைத்தார் என்று நீங்கள் கூறுவது உண்மை. இப்பொழுது அவர் உங்களை ஆச்சரியமாக வழிநடத்திச் சென்று கொண்டிருப்பதுவும் திட்டமான உண்மை" என்று அவர்கள் எனக்கு முன்பாக சாட்சி பகர்ந்தார்கள். எல்லா துதிக்கும் பாத்திரர் நாம் இரவும் பகலும் ஆராதிக்கும் நம் தேவன் ஒருவரே.

சர்வ வல்ல தேவன் என்னோடு அந்த அதிகாலை வேளை பேசிய பின்னர் என்னுடைய வாழ்வில் எனக்கு நேரிட்ட பல கொடிய பாவச் சோதனைகளை விசேஷமாக என்னை மேற்கொள்ள வந்த விபச்சார பாவங்களை நான் தேவ பெலத்தால் மேற்கொண்டேன். நாளில் பல மணி நேரங்களை ஆண்டவரோடு ஜெபத்தில் உறவாடுவது, நீண்ட நாட்கள் உபவாசிப்பது எல்லாம் அதின் பின்னர் எனக்கு தேவ கிருபையால் எளிதானது.

தேவன் எதை எதை எல்லாம் என் வாழ்வில் தமக்காக விட்டு விடும்படியாகக் கேட்டுக்கொண்டாரோ அதை எல்லாம் நான் இலகுவாக விடமுடிந்தது. இறைச்சி, மீன் போன்ற கவிச்சை வஸ்துக்களை ஆசை ஆவலாக புசித்த என்னை அவைகளை விடும்படியாக கேட்ட உடனே விட்டுவிட்டேன். ஒரு காலத்தில் பித்தனாக, பேயனாக நான் அவைகளைப்புசித்த நாட்கள் இருந்தன. இவைகளை எல்லாம் புசிப்பது தவறு என்று நான் இங்கு எழுத வரவில்லை. என்னுடைய காரியத்தில் தேவன் அவைகளை எனக்கு விலக்கி வைத்தார். நான் ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தேன். அது எனக்கு ஆசீர்வாதமாக அமைந்தது.

கடந்த பல்லாண்டு காலமாக நம் அன்பின் தேவன் வடமாநில ஊழியங்களில் பாவியாகிய என்னைக் கொண்டு தமது பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தி வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். 2011 ஆம் ஆண்டு எனது அதிகமான சுகயீனம் காரணமாக நான் தேவ ஊழியத்தின் பாதையில் வடக்கே செல்ல இயலவில்லை. இந்த ஆண்டிலும் (2012) வடக்கே செல்லுவதற்கான பூரணமான உடல் நலம் எனக்கு இல்லாதபோதினும் அன்பின் பரம தகப்பன் என்னைத் தமது உன்னத பெலத்தால் இடைகட்டி அழைத்துச் சென்றார். அந்த அன்பின் ஆண்டவர் ஒருவரே ஊழியத்தின் தேவைகளை எல்லாம் மனப்புத்திக்கு எட்டாதவிதத்தில் ஆச்சரியம் அற்புதமாகச் சந்தித்தார்.

பொதுவாக எனது ஒவ்வொரு தடவை வடமாநில தேவ ஊழியத்திலும் மாறுபட்ட சீதோஷ்ண நிலை மற்றும் குடி தண்ணீர் மாற்றம் காரணமாக வடக்கே கால் வைத்ததும் கொஞ்ச நாட்கள் நான் கடுமையான இருமல், நாசியிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வடிதல் மற்றும் தூக்கமின்மை காரணமாக அதிகமாகக் கஷ்டப்படுவேன். அந்த நாட்களில் நான் படும் பாடுகளை ஆண்டவர் ஒருவரே அறிவார். ஆனால், இந்த தடவை நான் அந்த தொந்தரவை தேவ கிருபையால் சந்திக்கவே இல்லை. அநேகமாக ஒவ்வொரு நாள் ஊழியத்திற்குப் பின்னரும் தேவ கிருபையால் அந்த நாளில் செய்யப்பட்ட தேவ ஊழியங்கள், கொடுக்கப்பட்ட தேவனுடைய பிரசுரங்களின் ஆசீர்வாதத்திற்காக சில மணி நேரங்கள் முழங்கால்களில் நின்று நான் ஜெபித்த பின்னர் எனது இரவு இளைப்பாறுதலுக்குச் சென்றேன். எனது இரவு இளைப்பாறுதல் தேவ சமாதானத்தோடிருந்தது. அந்தக் கொடிய இருமல் என்னைத் தாக்கவே இல்லை. கர்த்தருக்கு துதி செலுத்துகின்றேன்.

 
ரயில் பயணங்களில் நான் அனுபவித்த இன்னல்கள்

இத்தனை நீண்ட ஆண்டு காலங்களும் நான் எனது வட மாநில சுவிசேஷ பிரயாணங்களை ரயிலில்தான் செய்திருந்தேன். ரயிலில் எப்பொழுதும் 3 ஆம் வகுப்பு சாதாரண பெட்டியிலேயே (Ordinary 3rd Class Sleeper Coach) நான் பிரயாணம் செய்து வந்திருந்தேன். ரயில் பிரயாணங்களில் கடந்த நாட்களில் ரிசர்வேஷன் வசதி கிடைக்காமல் ரயில் பெட்டியின் தரையில் நான் இரவில் படுத்துச் சென்ற நாட்கள் உண்டு. சென்னையிலிருந்து டில்லிக்கு 2 இரவுகள் ஒரு பகல் மற்றும் முன் நாட்களில் 2 பகல், 2 இரவுகள் கூட தொடர்ச்சியாக ரயிலில் நான் பிரயாணம் செய்து சரியான ஆகாரங்கள், இளைப்பாறுதல்கள் இல்லாமல் நான் பட்ட பாடுகளும், கஷ்டங்களும் அநேகமாக இருந்தன. கடந்து சென்ற காலங்களில் இண்டர்நெட் வசதிகள் (Internet online booking) போன்றவை இல்லாததால் ரயில் புறப்படும் இடங்களிலிருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக, டில்லியிலிருந்து சென்னைக்கு வரவேண்டுமானால் புது டில்லி ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்கூட்டியே எடுக்க வேண்டும். ஒரு சமயம் ஒரு சகோதரனிடம் நான் பணத்தைக் கொடுத்துவிட்டு முன்கூட்டியே டில்லியிலிருந்து சென்னைக்கு ரயில் டிக்கெட் எடுத்து வைக்கும்படியாகக் கூறிவிட்டு நான் வடக்கே தேவ ஊழியத்திற்காகச் சென்றுவிட்டேன். ஊழியம் முடித்து டில்லி ரயில் நிலையம் வந்து சேர்ந்தபோது அந்த மனிதர் டிக்கெட்டுடன் ரயில் நிலையம் வரவில்லை. பணத்தை அவர் தனது தேவைகளுக்காக செலவுபண்ணிவிட்டார். அதின் காரணமாக 2 முழுமையான நாட்கள் இரவும், பகலும் புது டில்லி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நான் தங்க வேண்டிய ஒரு துயர நிலை எனக்கு ஏற்பட்டது. அந்த நாட்களில் நான் கடந்து சென்ற கஷ்டங்களையும், பாடுகளையும் கர்த்தர் ஒருவரே அறிகின்றவராக இருக்கின்றார். நேப்பாளம், சிக்கிம், பூட்டான் போன்ற இடங்களுக்குச் செல்லும் நாட்களில் ரயில் பிரயாணங்களில் சந்தித்த பாடுகளும், துயரங்களும் கணக்கிலடங்காது. வட இந்திய மக்கள் நமது ரிசர்வேசன் பெட்டியிலேயே தைரியமாக ஏறி வந்து அமர்ந்து கொள்ளுவார்கள். பொதுவாக ரயில் பீஹார் மாநிலத்தை கடந்து செல்லும்போது மக்கள் நமது இருக்கைகளில் பலவந்தமாக ஏறி வந்து அமர்ந்து கொள்ளுவதுடன் களிப்பறைக்குள் கூட நாம் செல்லக்கூடாதவாறு தங்களுடைய சாக்கு மூட்டைகளால் அதை நிரப்பி விடுவார்கள். அவர்களை கேட்க யாராலும் கூடாது. டிக்கெட் பரிசோதகர் நமது பெட்டி பக்கமே வராமல் மறைந்து கொள்ளுவார். கடந்த கால வடமாநில ரயில் பிரயாணங்களின் கஷ்டங்களைக் குறித்து ஒரு துயரமான புத்தகமே நான் எழுத முடியும். சமீப நாட்களில் சற்று வசதியாக 2 ஆம் வகுப்பு குளிர்பதன ரயில் பெட்டியில் பிரயாணம் செய்ய கர்த்தர் கிருபை செய்திருந்தாலும் அதுவும் எனக்கு கஷ்டமாகவே இருந்தது. காரணம், அந்த பெட்டியில் பிரயாணம் செய்யும் படித்தவர்கள் தங்கள் வசதிக்கேற்ப பெட்டியின் குளிரைக் கூட்டியோ அல்லது குறைத்தோ வைத்துக்கொள்ளுவதால் அதிலும் ஒரு சமாதானமான இளைப்பாறுதல் இல்லாமற் போயிற்று. ஒன்று பெட்டியின் குளிர் நடுநடுங்க கூடிய அளவிற்கு கடுமையாக இருக்கும் அல்லது அதிக வெப்ப நிலையில் காற்றாடி ஓடிக்கொண்டிருக்கும். இந்த தடவை ஒரு நீண்ட ரயில் பிரயாணம் எனது உடல் நலனுக்கு சற்றும் ஏற்றதாக அமையாது என்பதை திட்டமாக உணர்ந்த நம் அனந்த ஞானமுள்ள பரம தகப்பன் ஒரு ஆச்சரிய அற்புதத்தை நமக்கு நிகழ்த்தினார்.

 
எனது வாழ்வின் முதல் விமான பிரயாணம்

இந்த தடவை நான் தேவ ஊழியத்திற்காக வடக்கே செல்லுகின்றேன் என்பதை அறிந்ததும் இரண்டு கர்த்தருடைய பிள்ளைகளின் உள்ளங்களில் கர்த்தர் ஒரே நேரத்தில் பேசி இந்த தடவை நான் என் சுக நிலை காரணமாக கட்டாயம் விமானத்தில்தான் செல்ல வேண்டும் என்ற வற்புறுத்துதலோடு அதற்கான பணம் முழுமையையும் கொடுத்துவிட்டார்கள். விமானத்தில் ஒருக்காலும் பிரயாணம் செய்யவே மாட்டேன், அனுப்பப்பட்ட பணத்தை அதை அனுப்பிய தேவ பிள்ளைகளுக்கே திருப்பி அனுப்ப நான் உறுதியான யோசனையாக இருந்தபோது எனது பிள்ளைகள் என்னை சமாதானப்படுத்தி இம்முறை கட்டாயம் இந்த ஒழுங்கையே கர்த்தர் உங்களுக்கு நிச்சயித்திருக்கின்றார், அதை அல்லத்தட்டாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விடாப்பிடியான வற்புறுத்துதல்களுக்கு இணங்கி இறுதியில் நான் சம்மதம் தெரிவித்தேன். நமது தேவ எக்காள ஊழியங்களை அதிகமாக நேசிக்கும், அதிகமாக அதற்கு உதவி செய்யும் சென்னையிலுள்ள ஒரு அன்பான கர்த்தருடைய பிள்ளை விமான சர்வீசுகளில் பணி புரியும் தனது பிள்ளைகளோடு பேசி விமானத்தில் சற்று குறைந்த கட்டணத்தில் பயணிக்கக் கூடிய இருக்கைகளை (Economy Class) நீண்ட நாட்களுக்கு முன்னரே எங்களுக்கு ஒழுங்கு செய்து அந்த நாளுக்கான போக்குவரத்து விமான டிக்கெட்டுகளை எங்களுக்கு எடுத்துக் கொடுத்துவிட்டார்கள். அவர்களுடைய அன்பின் பிரயாசங்கள் காரணமாக நாங்கள் ஒரு பெரிய தொகையை பாதுகாக்க முடிந்தது. அத்துடன் சென்னையிலிருந்து உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் பட்டணத்திற்கு அதி விரைவு ரயிலில் நாம் பயணிப்பதானால் 2487 கி.மீ. தொலைவைக் கடக்க அது சுமார் 43 மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும். ஆனால், விமானப் பயணம் ஆனதால் சென்னையிலிருந்து டில்லிக்கும், டில்லியிலிருந்து உத்தராஞ்சல் மாநிலத்தின் தலை நகர் டேராடூனுக்கும் வெறும் 3 மணி நேரத்திற்குள்ளாக நாங்கள் சுலபமாகச் போய்ச் சேர்ந்துவிட முடிந்தது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக. இதில் பிரயாசம் எடுத்த தேவ மக்கள் யாவரையும் அன்பின் தேவன் ஆசீர்வதிப்பாராக. எனது வாழ்வின் முதல் விமான பயணம் எனக்குப் பரவசமான ஒரு அனுபவமாக இருந்தது. விமானத்தின் இறக்கையை ஒட்டிய ஜன்னல் பகுதியில் எனது இருக்கை இருந்ததால் கீழே பூமியை நான் நன்கு பார்க்க முடிந்தது. அத்துடன் விமானமானது பறக்கும் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அது ஆகாயத்தில் அப்படியே அசைவற்று நின்று கொண்டிருப்பது போலவே தெரிந்தது. சகோதரன் நார்ட்டன் அவர்களையும், என்னையும் அழைத்துச் செல்ல உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து சென்னை வந்திருந்த பாஸ்டர் என்.சாமுவேல் அவர்களிடம் இது குறித்து நான் கேட்டபோது விமானம் மிக வேகமாகப் பறந்து சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் அது டில்லியில் தரை இறங்கிவிடும் என்றும் சொன்னார்கள். அவர்கள் ஏற்கெனவே சில காலத்திற்கு முன்னர் விமானத்தில் பயணித்தவர்கள் ஆவார்கள். நாங்கள் சென்னையிலிருந்து டில்லி சென்ற விமானம் தரையிலிருந்து ஆகாயத்தில் எழும்பும் சமயம் "உங்கள் விமானத்தை பாதுகாப்பாக ஓட்டிக்கொண்டு செல்லும் விமானி அஹ்மது அவர்கள்" என்று விமானத்தில் அறிவிப்பு கொடுத்த போது நாங்கள் ஒருவரையொருவர் ஆச்சரியத்துடன் பார்க்க வேண்டியதானது. எங்களைப்போலவே விமானத்தில் இருந்த பலரும் அருகிலிருப்போரை ஒரு கணம் ஆச்சரியத்துடன் பார்த்து அமைதியாகிக் கொண்டனர். எனினும், கர்த்தருடைய கிருபையால் சரியான நேரத்தில் டில்லி விமான நிலையத்தில் எங்களை விமானி பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்த்துவிட்டார். பின்னர் அங்கிருந்து அடுத்த விமானத்தில் நாங்கள் டேராடூன் பட்டணம் புறப்பட்டோம். இந்த விமானம் சற்று சிறியதாக இருந்ததுடன் தரைக்கு மேல் 50000 அடி உயரத்தில் அது பறந்து கொண்டிருப்பதாக விமானத்தில் அறிவிப்பு கொடுத்தார்கள். பெரும்பாலும் அடர்ந்த காடுகளின் மேலாகப் பறந்து சென்று டேராடூன் பட்டணத்திலிருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள கானகத்திலுள்ள விமான நிலையத்தில் வெறும் 30 நிமிடங்களில் பறந்து வந்து தரை இறங்கிற்று. ரயிலில் நாம் டில்லியிலிருந்து வருவதானால் ஒரு முழு இரவையும் ரயிலில் செலவிட்டு காலையிலேயே தான் நாம் டேராடூன் பட்டணம் வந்து சேருவோம். இந்த தடவை நம் அன்பின் பரம தகப்பன் பாவிகளாகிய எங்கள் மேல் கருணை கொண்டு இந்த தயவை எங்களுக்குப் பாராட்டினார். அவருக்கு நாம் என்ன ஈட்டை செலுத்த முடியும்? அன்பின் ஆண்டவர் எங்களுக்குப் பாராட்டிய இந்த தயவினிமித்தமாக சரியாக ஒரு மாத காலத்திற்குள்ளாக பெருந்திரளான தேவனுடைய பிரசுரங்களை விநியோகிக்க முடிந்தது. இல்லையெனில், பிரயாணத்திலேயே சில நாட்கள் விரயமாகிவிடும்.

 
தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தமது வல்லமையை விளங்கப்பண்ணும் தேவன்
(2 நாளா 16 : 9)

யார் யார் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைகளை தேவனுக்கு முன்பாகப் பரிசுத்தமாகப் பாதுகாத்துக்கொள்ளுவார்களோ, யார் யார் தங்களை முற்றுமாக கர்த்தருக்கு ஒப்புவித்து அவரை மாத்திரம் உலகோர்க்கு உயர்த்தி காண்பிக்க வைராக்கியம் கொள்ளுவார்களோ, யார் யார் பண ஆசை இல்லாதவர்களாகவும், மக்களுடைய புகழ் ஆரவாரம் ஆர்ப்பரிப்புகளை சற்றும் கண்டு கொள்ளாமலும், தங்களைக் கர்த்தருக்குள் மறைத்து தேவ மைந்தனின் சிலுவையை மட்டும் யாவுக்கும் மேலாக உயர்த்திக் காண்பிப்பார்களோ அந்த மக்களை அவர் இன்றும் தமது கரத்தின் கருவியாக எடுத்து ஆச்சரியவிதமாக பயன்படுத்த வல்ல தேவனாக இருக்கின்றார்.

அந்த தேவ ஊழியன் தனது ஊழியத்தின் தேவைகளை நாசியில் சுவாசமுள்ள எந்த ஒரு மனுஷனுக்கும் மறைமுகமாகவோ, அல்லது நேரிடையாகவோ கூறி அறிவித்து தனது தேவைகளை பூர்த்தி செய்கிறவனாக இராமல் கடந்த கால ராட்சத தேவ மனிதர் ஜியார்ஜ் முல்லரைப் போன்று கர்த்தர் ஒருவருக்கே மட்டும் தனது தேவைகளைக் கூறி வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடமிருந்து அற்புதமாக ஒத்தாசையைப் பெற்றுக் கொள்ளுகின்றான். அதற்காக அவன் செய்ய வேண்டியதெல்லாம் ஆண்டவருடைய பாதங்களில் எப்பொழுதும் ஜெபத்தில் தரித்திருந்து ஒத்தாசையின் பர்வதத்தை நோக்கிக் கொண்டிருப்பதுதான். ஆம் "அவன் தன்னை உண்டாக்கினவரையே நோக்குவான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே நோக்கிக் கொண்டிருக்கும்" (ஏசாயா 17 : 8)

இதைக் கருத்தோடு வாசிக்கும் தேவப்பிள்ளையே, தேவன் உன்னை இந்த உலகத்தில் மானிடனாக கொண்டு வந்து உன் பாவங்களை உனக்கு மன்னித்து, உலகம் தரக்கூடாத இரட்சிப்பின் சந்தோசத்தையும், தேவ சமாதானத்தையும் உனக்குத் தந்து, உன்னைத் தமது மார்போடு அரவணைத்து இந்த உலக மாயாபுரி சந்தை வழியாக பாதுகாப்பாக உச்சிதப்பட்டணத்திற்கு வழிநடத்திக் கொண்டிருப்பதின் ஒரே நோக்கம் அந்த உலக இரட்சகரை அறியாத பாவ மனுக்குலத்திற்கு அவரின் கல்வாரி சிலுவை அன்பை கூறி அறிவித்து அக்கினியும், கந்தகமும் கலந்து எரியும் அக்கினி கடலுக்குத் தீவிரிக்கும் நஷ்டப்பட்ட பாவ மாந்தரை நித்திய பேரானந்த மோட்ச வீட்டிற்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான். இந்த மேலான பரலோக நோக்கத்திலிருந்து உன்னைத் திசை திருப்பி உலக மாயாபுரி சந்தைச் சரக்குகளின் மேல் உன்னை மயக்கம் கொள்ளச் செய்து தேவனுடைய நித்தியானந்த பரிசுத்த பாதையிலிருந்து உன்னை வழி விலகச் செய்யும் சாத்தானுடைய எந்த ஒரு தந்திர ஆலோசனைக்கும் ஒருக்காலும் நீ இடம் கொடுத்துவிடாதே.

நஷ்டப்பட்ட ஒரு ஆத்துமா நரக பாதாள தீச்சூழையில் முடிவே இல்லாத யுகாயுகங்களாக பட்டு அனுபவிக்கப் போகின்ற பாடுகளையும், துயரங்களையும், கண்ணீர்களையும், கதறல்களையும், அலறுதல்களையும், சொல்லொண்ணா வேதனைகளையும் யாரே விவரிக்க முடியும்? கெத்சமனே பூங்காவில் தேவ மைந்தன் "மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார், அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது" (லூக்கா 22 : 44) என்று நாம் வாசிக்கின்றோம். எதற்காக இந்த மன வியாகுலத்தின் மன்றாட்டு? ஆம், நரக அக்கினியில் நஷ்டப்பட்ட ஒரு ஆத்துமா அனுபவிக்கப் போகும் கொடிய கஸ்தியின் வியாகுலப் புலம்பலை அவர் நன்கு அறிந்திருந்தார். நஷ்டப்பட்ட நிலையில் நித்திய நரக அக்கினிக் கடலுக்குள் பிரவேசித்துவிட்ட ஒரு ஆத்துமாவுக்கு இனி ஒருக்காலும் மீட்பே இல்லை என்ற பயங்கரமான காரியத்தை யோசித்துப் பாருங்கள். அதற்கு ஒரு வாய்ப்பு கூட இனி கிடையவே கிடையாது. இரவும் பகலும், அல்லும் பகலும், ஊழி ஊழி காலங்களாக, நித்திய நித்தியமாக அனுதினமும் அது அக்கினியும் கந்தகமும் கலந்து எரியும் கொதிக்கும் நரக அக்கினி கடலில் துடிதுடித்துக் கொண்டு கிடக்க வேண்டிய ஒரு கொடிய நிலை.

"வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும் நான் கர்த்தரைச் சேவித்தேன்" (அப் 20 : 19) என்ற அழிந்து போகும் ஆத்துமாக்களைக் குறித்த பவுல் அப்போஸ்தலனின் கண்ணீரின் அனுபவத்தை இதை வாசிக்கின்ற நம் ஒவ்வொருவருக்கும் தேவன் தாமே கிருபையாக தந்து தேவன் நமக்கு ஈவும் இலவசமுமாக கொடுத்த நமது சிறிய வாழ்நாட் காலத்தை நரக அக்கினியை நோக்கி தீவிரித்துக் கொண்டிருக்கும் ஆத்துமாக்களின் மீட்புக்காக ஜாக்கிரதையோடு செலவிடும் ஞான இருதயத்தை நமக்குத் தந்து நம்மை வழிநடத்துவாராக.

இந்த எளிய தேவ ஊழியத்தை தங்கள் உருக்கமான அனுதின ஜெபங்களாலும், வேண்டுதல்களாலும் தாங்கி நிற்கும் மக்களையும், தங்களது ஒழுங்கான தியாக அன்பின் உதாரத்துவமான காணிக்கைகளினால் இந்த ஊழியத்தை அன்புடன் ஆதரித்து அரவணைத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கும் அன்பு தேவ மக்களையும் வானத்தையும், பூமியையும் படைத்த நம் சர்வ வல்ல தேவன் தாமே நிறைபூரணமாக பரத்திலிருந்து ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


 

தேவப்பிள்ளையே உங்கள் அன்பின் கவனத்திற்கு

தேவ எக்காளம் பத்திரிக்கை உங்களில் சிலருக்கு இதுவரை "கூரியர் தபால் மூலமாகவோ" அல்லது "விரைவுத் தபால் மூலமாகவோ" (Speed Post) அனுப்பப்பட்டு வந்தது. இந்த நாட்களில் தபால்துறை நிர்வாகமும், கூரியர் சேவையும் மிகவும் மோசமாக செயல்பட்டு வருவதால் சாதாரண தபாலை விட மிகவும் கால தாமதத்துடன் தேவ எக்காளம் பட்டுவாடா செய்யப்படுவதை அறிகின்றோம். கூரியர் தபால் பட்டுவாடாவுக்கு 5 நாட்கள் எடுத்துக்கொள்ளுவதைப்போல விரைவுத்தபால் பட்டுவாடாவுக்கும் தபால் துறை நிர்வாகம் 5 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளுகின்றனர். அது குறித்து நாம் தபால் துறைக்கு எழுதினாலும் எந்த ஒரு நடபடிக்கையும் எடுப்பதில்லை. தபால் துறையினர் விரைவுத்தபால் சேவைக்கட்டணம் இந்த நாட்களில் குறைந்த பட்சம் 45 ரூபாய் வசூலிக்கின்றனர். அதிகமான தூரத்திற்கு மிகவும் கூடுதலான பணம் வசூலிக்கின்றனர். ஆனால், சாதாரண தபாலைவிட மிகவும் காலந்தாழ்த்தி அதை பட்டுவாடா செய்கின்றனர். தேவையில்லாமல் அதிகமான பணத்தை விரைவுத் தபாலுக்கும், கூரியருக்கும் செலவிடாமல் சாதாரண தபாலிலேயே உங்களுக்கு பத்திரிக்கை அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒருக்கால் உங்களுக்கு தேவ எக்காளம் கிடைக்காதபட்சத்தில் அன்புகூர்ந்து ஒரு கார்டு எழுதி திரும்பவும் ஒரு தேவ எக்காள இதழைப் பெற்றுக் கொள்ளுங்கள். சிரமத்தை கர்த்தருக்காக அன்பாகப் பொறுத்துக்கொள்ளுங்கள்.


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM