தலையங்கம்


"மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத்தேயு 5 : 16)

கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.

இந்த தேவ எக்காள இதழ் உங்கள் கரங்களை வந்தடைந்த சில தினங்களில் கர்த்தருக்குச் சித்தமானால் நாங்கள் தேவனுடைய ஊழியத்தின் பாதையில் வடக்கே கடந்து செல்லுவோம். கர்த்தருடைய ஊழியத்தின் ஆசீர்வாதங்களுக்காகவும், ஊழியத்தில் கலந்து கொள்ளும் தேவ ஊழியர்கள் மற்றும் வாகனங்களின் 2 டிரைவர்களின் நல்ல உடல் நலனுக்காகவும் தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் அக்டோபர் 2012 மாதம் முழுமையிலும் தேவ அன்பின் பாரத்தோடு உங்கள் ஜெபங்களில் நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஜெபிக்க வேண்டிய குறிப்புகளுக்காக "தேவப்பிள்ளையே, உங்கள் உருக்கமான ஜெபங்களை ஆவலோடு எதிர் நோக்குகின்றோம்" என்ற தலைப்பில் இந்த இதழின் மற்றொரு பக்கத்திலுள்ள செய்தியை அன்புகூர்ந்து ஒரு முறை வாசித்து மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஜெபம், ஆம் ஜெபம் ஒன்றே, ஊழியத்தின் பாதையிலும், நமது தனிப்பட்ட வாழ்விலும் அதிசயங்களைச் செய்ய வல்லது.

தேவ மனிதர் "ஜியார்ஜ் முல்லருடைய வாழ்க்கை வரலாற்றை" தாங்கி வந்த கடந்த தேவ எக்காள இதழ் உங்களில் பலருக்கும் மிகுந்த தேவாசீர்வாதம் நிறைந்த பத்திரிக்கையாக இருந்ததை எண்ணி கர்த்தருக்குள் மிகவும் சந்தோசம் அடைகின்றேன். அந்த இதழை முழுமையும் ஜெப நிலையில் முழங்கால்களில் நின்று வாசித்ததாக கூறிய ஒரு தேவப்பிள்ளையின் வார்த்தைகள் என் உள்ளத்தை கர்த்தருக்குள் பரவசப்படுத்திவிட்டது. எல்லா துதி, கனம், மகிமை நம் ஆண்டவர் இயேசு ராஜா ஒருவருக்கே உண்டாவதாக.

தேவ எக்காளம் பத்திரிக்கையின் இதழ்களை ஒரு இதழ் கூட தவறிப்போகாமல் பத்திரப்படுத்தி அவைகளைத் திரும்பத் திரும்ப வாசித்து தேவாசீர்வாதம் பெற்று வரும் தேவ மக்கள் பலர் உங்களில் இருக்கின்றீர்கள். அத்துடன் பெற்ற பிள்ளைகளையும் அவைகளைப் படித்து அதில் காணப்படும் பக்த சிரோன்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளை வாசித்து அவர்களைப்போல ஜீவிக்க நீங்கள் அவர்களை உற்சாகப்படுத்துகின்றீர்கள். நிச்சயமாக நாம் இராப்பகலாக ஆராதிக்கும் நமது ஜீவனுள்ள ஆண்டவர் பிள்ளைகளை ஏற்ற காலங்களில் சந்திப்பார். அவர்கள் மூலமாக பெரிய காரியங்களை தமது நாமத்திற்கு மகிமையாக நிறைவேற்றுவார்.

பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்களால் சின்னஞ் சிறுவனாக உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் வகுப்பு மாணவர்கள் யாவருக்கும் இரு கரம் கூப்பி ஒரு வணக்கம் தெரிவித்த அந்தப் பரிசுத்த காட்சியால் ஆண்டவருடைய இரட்சிப்பின் பாத்திரமாக மாற்றம் அடைந்த எனது பரிசுத்த தந்தை சாது சுந்தர்சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுவிசேஷத்தினிமித்தம் அவர் தீபெத்திலும் இதர இடங்களிலும் அனுபவித்த பாடு துயரங்களை தன்னுடைய பிள்ளைகளாகிய எங்களுக்கு நாங்கள் சின்னஞ் சிறுவர்களாக இருந்த நாட்களில் கதை கதையாக கூறுவார்கள். அவர்கள் அந்த நாட்களில் சொன்ன சாது சுந்தரின் வாழ்க்கை அனுபவங்கள் என் வாழ்க்கையை அதிகமாகத் தொட்டது. பின் வந்த நாட்களில் நான் இரட்சிப்பின் பாத்திரமானதும் நம் அன்பின் தேவன் அந்த பக்த சிரோன்மணியைப் போல நேப்பாளம், சிக்கிம், பூட்டான், மேற்கு தீபெத் (லடாக்), ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கு போன்ற பல இடங்களுக்கும் என்னை எடுத்துச் சென்று தமது நாமத்திற்கு மகிமையாகப் பயன்படுத்தினார். அது குறித்த விபரங்களை எல்லாம் நமது தேவ எக்காளத்தில் நான் விபரமாக எழுதி வந்ததை தேவப் பிள்ளைகளாகிய நீங்கள் நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றீர்கள்.

குறிப்பாக, சாதுசுந்தர்சிங் வாழ்ந்த சிம்லா மலைகளிலுள்ள சுபத்து என்ற இடத்தின் கானக பங்களாவில் ஒரு நாள் காலை வேளை நான் முகங்குப்புற விழுந்து என் கண்ணீரை தேவ சமூகத்தில் தரையில் வடித்து "பக்த சிரோன்மணி சாது சுந்தரைப்போல என்னை பயன்படுத்தும்" என்று நான் ஜெபித்த ஜெபத்தை தேவன் உடனடியாக அங்கீகரித்து என்னையும் தமது நாமத்திற்கு மகிமையாகப் பயன்படுத்தினார். அந்த பரிசுத்த மகாத்துமாவைப்போல அரும்பெரும் காரியங்களை உலகமெங்கும் சுற்றித்திரிந்து பாவியாகிய நான் செய்ய இயலாதபோதினும் அந்த பக்த சிரோன்மணியின் கால் பாதங்களிலிலிருந்து புறப்பட்ட தூசி அளவிற்காவது நான் தேவபெலத்தால் அன்பின் ஆண்டவருக்கு நான் தொண்டு செய்தேன் என்ற மகிழ்ச்சி எனக்கு உண்டு. நேப்பாள தேசத்திற்கு மட்டும் 7 தடவைகள் ஆண்டவர் என்னை தமது காரியமாக அழைத்துச் சென்றார். 2 தடவைகள் பூட்டான் தேசத்திற்குச் சென்றேன். நான் கண்ணீர் விட்டு ஜெபித்த சாதுசுந்தர் சிங்கின் கானக பங்களா படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

சாதுசுந்தர்சிங்கின் பரிசுத்த வாழ்க்கையால் தொடப்பட்ட எனது பரிசுத்த தந்தை அவரைப்போல ஜெபிக்க வாஞ்சித்துக் கதறினார்கள். அவர்களது முழு வாழ்க்கையுமே ஜெபமாக அமைந்தது. இரவும் பகலும் அவர்கள் ஜெபித்துக் கொண்டே இருந்தார்கள்.

அவர்களின் ஆழ்ந்த ஜெப வாழ்க்கை அவர்களுக்கு திட்டமாக சம்பவிக்க வேண்டியதாகவிருந்த கொடிய மரண ஆபத்துக்களுக்கெல்லாம் அவர்களை கண்ணின் மணி போல விலக்கிக் காத்துக் கொண்டது.

 
கொலைகாரனின் கூர் அரிவாளுக்கு தப்பிப் பிழைத்தது

எனது தகப்பனார் தனது பிழைப்புக்காக ஒரு சிறிய மளிகைக்கடை வைத்திருந்தார்கள். கடைக்கு வேண்டிய பொருட்களை வாங்கிப்போடுவது எனது தகப்பனார். கடையை கவனித்துக் கொள்ளுவது எனது தாயார். வாரத்தில் செவ்வாய்க் கிழமை தோறும் எங்கள் ஊருக்கு சில மைல்கள் தொலைவிலுள்ள நாசரேத் என்ற பெரிய ஊருக்கு தனது சைக்கிளில் சென்று கடைக்குத் தேவையான மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்து கொண்டு வருவார்கள். அவர்கள் சைக்கிளுக்குப் பின்னால் ஒரு பெரிய மூட்டை அரிசி இருக்கும். அவர்களின் சட்டை வியர்வையால் சொட்ட சொட்ட நனைந்து ஈரமாகவிருக்கும்.

அந்தக் குறிப்பிட்ட நாளின் செவ்வாய்க் கிழமை தனது கடையின் கொள் முதலுக்காக தன் வசம் உள்ள சொற்பமான பணத்தை சேர்த்து எடுத்துக்கொண்டு நாசரேத்திற்கு தனது சைக்கிளில் புறப்பட்டார்கள். பிரயாணத்திற்கு முன்பாக தேவ சமூகத்தில் கணிசமான நேரம் முழங்கால்களில் நின்று தனது இருதயத்தை தேவ சமூகத்தில் உடைத்து ஊற்றிவிட்டுப் புறப்பட்டார்கள்.

தனது சைக்கிளில் எங்கள் வீட்டுக்கு வடபக்கமாக அமைந்துள்ள தேரிக்காட்டு பேருந்து ரஸ்தாவில் எனது தந்தை சென்று கொண்டிருந்த வேளை ரஸ்தா ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு பனை மரத்தின் உச்சியிலிருந்து ஒரு வாலிபன் துரிதம் துரிதமாக விரைந்து இறங்கி வந்து தனது கரத்தில் மின்னும் அரிவாளுடன் ரஸ்தாவின் மையத்தில் இறங்கிவந்து நின்றான். எனது தகப்பனாருக்கு ஒன்றும் ஓடவில்லை, உடனே அவர்கள் தனது சைக்கிளிலிருந்து கீழே இறங்கி ரஸ்தாவில் நின்று கொண்டிருந்த தனக்கு அறிமுகமான அந்த வாலிபனின் பெயரைச் சொல்லி "பாண்டி எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கின்றாய்?" என்று கேட்டிருக்கின்றார்கள். அவனால் ஒரு பதிலும் சொல்ல இயலவில்லை. அவனது முகம் பேய் அறைந்த முகம் போல இருளடர்ந்து கருமையாக காணப்பட்டிருக்கின்றது. அப்படியே ஒன்றும் பேசாமல் தனது கரத்தை அசைத்து எனது தந்தையை போகச் சொல்லியிருக்கின்றான். எனது தந்தையின் வசம் கொஞ்சம் பணம் இருக்கும். அவர்களை வெட்டிக் கொன்று அந்த பணத்தை எடுப்பதற்காக அவன் அந்த நேரம் அங்கு வந்திருந்தான். இரவும் பகலும் ஆராதிக்கும் எனது தகப்பனின் தேவன் அந்த இடத்தில் அவர்களை அதி அற்புதமாகக் காப்பாற்றினார். இல்லை என்றால் அவன் அவர்களை அந்த இடத்தில் வெட்டி சாய்த்திருப்பான்.

இந்த சம்பவம் நடந்து ஓரிரு தினங்களில் எங்கள் ஊருக்கு தென் பக்கமாக உள்ள நொச்சிக்காட்டு வழியாக பக்கத்து ஊரான கல்விளையிலிருந்து பால் மற்றும் மோர் விற்கும்படியாக எங்கள் ஊருக்கு வந்த ஒரு கர்ப்பிணியான ஒரு வாலிப இடைச்சிப் பெண்ணை ஒரு நாள் காலையில் இரண்டு மூன்று இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொன்று அந்தப் பெண்ணின் கழுத்தில் கிடந்த நகைகளை எல்லாம் மேற்கண்ட பாண்டியன் என்பவன் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். கொலை செய்யுமுன்பு அந்தப் பஞ்சமா பாதகன் முதலில் அந்தப் பெண்ணிடம் வயிராற மோரும் வாங்கிக் குடித்திருக்கின்றான்.

இறுதியில் அவன் பிடிபட்டு நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் மதுரையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டான்.

 
கழுத்தில் மாட்டு வண்டி சக்கரம் ஏற இருந்த இறுதி வேளையில் காத்த கருணை வெள்ளம்

ஒரு நாள் எனது தந்தை தனது சைக்கிளில் ஒரு மூட்டை அரிசியை ஏற்றிக் கொண்டு நாசரேத்திலிருந்து எங்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்த சமயம் அந்த நேரம் அதே ரஸ்தாவில் வந்து கொண்டிருந்த ஒரு மாட்டு வண்டியைக் கடந்து செல்லும் சமயம் நிலை தடுமாறி கீழே விழுந்து சரியாக மாட்டு வண்டிக்கு அடியிலேயே மாட்டிக் கொண்டார்கள். மாட்டு வண்டியின் கனமான மரச் சக்கரம் நகர்ந்து நகர்ந்து ரஸ்தாவில் விழுந்து கிடந்த எனது தந்தையின் கழுத்துப்பக்கம் நெருங்கி வந்து இறுதியில் நின்று கொண்டது. இன்னும் ஒரு அடி தூரம் மாத்திரம் அந்தச் சக்கரம் நகர்ந்து வந்திருக்குமானால் எனது தந்தையின் கழுத்தின் மேல் ஏறி அவர்களைக் கொன்றிருக்கும். அந்த சாநிழலின் பள்ளத்தாக்கிலும் அவர்களை ஆட்கொண்ட அன்பின் கருணை வெள்ளம் அவர்களைக் கண்ணின்மணி போல பாதுகாத்துக் கொண்டார்.

 
கள்ளர்களைக் கவர்ந்த எனது தந்தையின் ஜெபம்

வாரந்தோறும் செய்வாய்க் கிழமை எங்கள் ஊருக்குப் பக்கத்திலுள்ள நாசரேத் என்ற பெரிய கிறிஸ்தவ கிராமத்தில் சந்தை கூடும். தன் வசம் சைக்கிள் இல்லாத நாட்கள் ஒன்றில் எனது தந்தை நாசரேத் சந்தைக்குச் சென்று சந்தையில் ஜாமான்கள் எல்லாம் வாங்கி ஒரு ஓலைப்பெட்டியில் வைத்து தனது தலையின் மேல் தூக்கிக் கொண்டு காட்டுப் பாதையான செம்மண் தேரிப்பாதை வழியாக தன்னந்தனியனாக எங்கள் ஊருக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். பொழுது சாய்ந்து சூரியன் அஸ்தமித்து விட்டபடியால் தேரிப்பாதையாக வந்து கொண்டிருந்த எனது தந்தை பாதையை விட்டு இறங்கி ஒரு பள்ளமான பகுதியில் தனது ஓலைப்பெட்டியை ஒரு பக்கமாக வைத்துவிட்டு முழங்காலூன்றி தேவனுடைய பாதுகாவலுக்காக சற்று நேரம் ஜெபித்திருக்கின்றார்கள். ஜெபித்து முடிந்ததும் திரும்பவும் தனது பெட்டியை தலைமேல் வைத்து ஏறி வரும் வேளையில் தங்கள் கரங்களில் அரிவாளுடன் 2 பேர்கள் தனக்கு முன்பாக மேட்டில் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் இருவரும் எனது தந்தையிடம் கீழே பள்ளத்தில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேட்டிருக்கின்றனர். நேரம் இருட்டிவிட்டதால் தனிமையாகச் செல்லும் தன்னை ஆண்டவர் பாதுகாத்துக் கொள்ளும்படியாக ஜெபம் செய்து கொண்டிருந்தேன் என்று பதில் கூறியிருக்கின்றார்கள். "ஆ அப்படியா, நீங்கள் அங்கே ஜெபித்துக் கொண்டா இருந்தீர்கள்?" என்று ஆச்சரியத்துடன் அவர்கள் கேட்டிருக்கின்றனர். தனக்கு முன்பாக நின்று கொண்டிருக்கும் இருவரும் வழிப்பறி கள்ளர்கள் என்று அறியாத எனது தகப்பனார் அவர்களைப் பார்த்து அன்பாக "ஐயா, நீங்கள் இருவரும் இந்த இருள் சூழும் நேரம் இந்த இடத்தில் ஏன் நின்று கொண்டிருக்கின்றீர்கள்?" என்று கேட்கவும் "கஞ்சிக்கு வழியில்லாமல்தான் நாங்கள் இங்கு நின்று கொண்டிருக்கின்றோம்" என்று பதில் சொல்லியிருக்கின்றார்கள்.

ஒரு வேளை எனது தகப்பனார் அந்த நேரம் அந்த இடத்தில் முழங்காலூன்றி ஜெபிக்காமல் வந்து கொண்டிருந்தால் நிச்சயமாக அந்த கள்ளர்கள் அவர்களின் சாமான்களை பிடுங்கிக் கொண்டு வெறுமையாக அனுப்பி வைத்திருப்பார்கள். ஜெபத்தின் மாட்சியைக் கவனித்தீர்களா?

எனது பரிசுத்த தகப்பனார் இரட்சிப்பின் பாத்திரமானதும் ஜெபம் ஒன்றே அவர்களின் ஜீவ சுவாசமானது. எப்பொழுது பார்த்தாலும் எங்கள் வீட்டின் ஜெப அறையில் தனித்து முழங்கால்களில் தேவ சமூகத்தில் நின்று கொண்டே இருப்பார்கள். அல்லது, எங்கள் வீட்டை ஒட்டி எங்கள் தோட்டத்தில் ஜெபத்திற்காக தான் கட்டி உள்ள தனது எளிமையான ஜெப வீட்டில் முழங்கால்களில் இருப்பார்கள். அந்த ஜெப வீட்டை நீங்கள் இந்தச் செய்தியில் நீங்கள் காணலாம்.

தனது கண் பார்வை மங்கி பெலனிழந்த விருத்தாப்பிய நாட்களில் தனது தனி ஜெபங்களுக்காக எனது தந்தை தோட்டத்திலிருந்த தனது ஜெப அறைக்குச் சென்று அங்கு ஒரு மூலையில் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ஓலைப்பாயை எடுத்து ஜெபத்திற்காக விரிக்க முயற்சிக்கும் ஒவ்வொரு சமயமும் அதற்குள்ளிருந்து ஒரு ஓணான் திடீரென்று வெளி வந்து எனது தந்தையின் கரத்தில் ஏறி அவர்களை பெரும் அச்சமடையப்பண்ணிக் கொண்டு வந்திருக்கின்றது. எனது தந்தைக்கு என்ன செய்வதென்றே ஒன்றும் தெரியவில்லை. தனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக கண்களை ஏறெடுத்து தனது துயரத்தை சில நாட்களாக தனது பரம தந்தையிடம் தெரிவித்து வந்திருக்கின்றார்கள். என்ன ஆச்சரியம், ஒரு நாள் எனது தந்தை வழக்கம் போல தனது ஜெபத்திற்காக தோட்டத்திலுள்ள ஜெப அறைக்கு வந்த பொழுது தனக்கு தொல்லை கொடுத்து வந்த அந்த ஓணானை ஒரு கொம்பேறிமூக்கன் பாம்பு கடித்து துண்டித்துப் போட்டிருந்ததை ஆச்சரியத்துடன் கவனித்தார்கள். அந்த நாளிலிருந்து ஓணானின் தொல்லை ஓய்ந்தது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் உற்றார் உறவினர் வீடுகளுக்கோ அல்லது மற்ற எந்த ஒரு வீட்டிற்கோ அவர்கள் சென்று மக்களிடம் வீண் கதைகள் பேசியதை நான் காணவே இல்லை. ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தது போல (ஆதி 5 : 24) எனது தந்தை கர்த்தருடைய கிருபையால் ஆண்டவரோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

 
தேவனுக்கு முன்பாக எனது தகப்பனாரின்
உத்தம வாழ்க்கை

எனது தகப்பனார் இரட்சிப்பின் பாத்திரமானதும் தேவனுக்கு முன்பாக தன்னால் முடிந்த அளவு மிகவும் பரிசுத்தமாக ஜீவித்தார்கள். தனது மளிகைக்கடையில் இதற்கு முன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பீடி, சிகரெட், சுருட்டு, புகையிலை, வெற்றிலை பாக்கு போன்ற லாகிரி வஸ்துக்கள், கள்ளச்சாராயம் வடிக்க தேவைப்படும் பொருட்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டது. கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாள் மிகவும் பரிசுத்தமாக ஆசரிக்கப்பட்டது. சனிக்கிழமை மாலை கடை மூடப்பட்டால் திங்கட்கிழமை காலைதான் கடை மீண்டும் திறக்கும். கடையின் தராசுகள், படிக்கற்கள், முகத்தல் அளவு நாளி, அரைப்படி, கால்படி, மாகாணி எல்லாம் திருச்செந்தூர் என்ற இடத்திலுள்ள தாலுக்கா அலுவலகத்திற்கு ஆண்டு தோறும் ஒழுங்காக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அரசாங்க முத்திரை குத்தப்பட்டு எடுத்து வரப்படும். வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அமுக்கி, குலக்கி சரிந்து விழும்படியாக எனது பெற்றோர் அளந்து போட்டனர். பொருட்களில் எந்த ஒரு கலப்படமோ, ஏமோற்றுதலோ இருக்காது.

எங்கள் ஊர் கிராம வீடுகளில் பனை மரங்களிலிருந்து கிடைக்கும் கருப்புகட்டி கொள் முதலுக்காக எனது தந்தை செல்லும் போது சிறுவனான என்னையும் அவ்வப்போது தன்னுடன் அழைத்துச் செல்லுவார்கள். அவர்கள் பயன்படுத்தும் தராசை (Spring Balance) ஒருக்காலும் கையில் பிடித்து கருப்புகட்டியை எடை போடாமல் ஓரிடத்தில் தராசை கட்டித் தொங்கவிட்டு எடை போடுவார்கள். மற்ற வியாபாரிகள் அந்த தராசை கையில் பிடித்து எடைபோடும் போது அவர்கள் பிடிக்கும் பிடியிலேயே நிறுவையில் தந்திரமாக மோசடி செய்து விடுவார்கள். அதை எனது தந்தை என்னிடம் நேரில் சொல்லியிருக்கின்றார்கள். தேவனுக்கு முன்பாக தனது காரியங்களில் எல்லாம் மிகவும் உத்தமமாகக் காணப்பட்டார்கள். எனது தந்தையின் உண்மையை கவனித்த எங்கள் ஊர் மற்றும் அடுத்த ஊர் மக்கள் தங்கள் பனைகளிலிருந்து கிடைக்கும் கருப்புகட்டியை எனது தந்தைக்கே விற்பனை செய்தனர். கர்த்தர் எனது தந்தையின் கையின் பிரயாசங்களை ஆசீர்வதித்தார்.

 
உண்மையும் உத்தமுமான தேவ ஊழியன்

வாரந்தோறும் அநேகமாக எங்கள் ஊரைச் சுற்றியிருக்கும் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் எனது தகப்பனார் தேவனுடைய செய்தியை பகிர்ந்து கொள்ளுவார்கள். போகிற நாளில் தண்ணீர் முதல் குடியாமல் உபவாசத்துடன் சென்று தேவனுடைய செய்தியை கொடுத்துவிட்டு அப்படியே வீட்டிற்குத் திரும்பி வந்து வீட்டில்தான் ஆகாரம் புசிப்பார்கள். ஆலயத்திலோ, அல்லது தனிப்பட்ட வீடுகளிலோ மக்கள் கொடுக்கும் காணிக்கைகளை ஒருக்காலும் வாங்கவேமாட்டார்கள். அவர்கள் கொடுக்கும் ஆகாரங்களையும் வாங்கிப் புசிக்கமாட்டார்கள்.

மக்கள் எனது தந்தையின் ஜெபங்களை நாடி எங்கள் வீட்டிற்கு வந்தவண்ணமாக இருப்பார்கள். அவர்களுடைய ஜெபங்களால் அநேகர் சுகம் பெற்றிருக்கின்றனர். அநேகர் இரட்சண்யத்தைக் கண்டடைந்தனர். ஜெபத்திற்காக எனது தந்தையின் முன் முழங்காலூன்றியிருக்கும் ஆளின் தலைமேல் கை வைத்துவிட்டால் பரிசுத்த ஆவியானவர் முழங்காலூன்றியிருக்கும் ஆளின் காரியங்களை எல்லாம் எனது தந்தையின் மூலம் வெளிப்படுத்திவிடுவார்.

ஒரு நாள் எங்கள் சொந்தக்கார மனிதர் ஒருவர் எனது தந்தையிடம் ஜெபம் செய்ய வந்திருந்தார். கடந்த நாட்களில் அவர் அப்படி வந்து ஜெபித்துச் செல்லுவது வழக்கம். அந்த குறிப்பிட்ட மனிதர் திருநெல்வேலி ஜங்ஷனில் சாராயக்கடை ஏலம் பிடித்து அங்கு சாராயத் தொழில் செய்து வருவதை எனது தகப்பனார் எப்படியோ கேள்விப்பட்டிருக்கின்றார்கள். வழக்கம்போல ஜெபத்திற்காக வந்திருந்த அந்த மனிதரிடம் அவருடைய பெயரைச் சொல்லி "ஐயாத்துரை, நீ நெல்லை ஜங்ஷனில் சாராயக்கடை ஏலம் பிடித்து மதுபான கடை நடத்துவது உண்மைதானா?" என்று கேட்டிருக்கின்றார்கள். "சின்னையா, அது உண்மைதான்" என்று அவர் பதில் கொடுத்திருக்கின்றார். "நீ சாராயக்கடை தொழில் நடத்தும் பட்சத்தில் நான் இனி உனக்காக ஜெபிக்கமாட்டேன். எனது ஜெபம் உனக்குத் தேவையானால் முதலில் நீ சாராயக்கடையை மூடிவிட்டு வா" என்று திட்டமாகக் கூறிவிட்டார்கள். அன்று போன அந்த மனிதர் திரும்பவும் என் தந்தையண்டை வரவே இல்லை. பக்கத்து ஊரிலுள்ள ஆசீர்வாத பிரசங்கியாரண்டை சென்ற அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சாராயக்கடை தசமபாகம் எல்லாம் ஆசீர்வாதப் பிரசங்கியாரின் பணப்பெட்டிக்கு சென்றது. அந்தோ, ஒரு நாள் அந்த நடுத்தர வயதான திடகாத்திர மனிதர் சடுதியாக மாரடைப்பில் காலமானார். அவருடைய அடக்க ஆராதனையில் கலந்து கொள்ள வந்த ஆசீர்வாதப் பிரசங்கியாரின் ஆட்களை மரித்த வீட்டின் மக்கள் துரத்தியடித்தாக பின்னர் நாங்கள் கேள்விப்பட்டோம். எனது பரிசுத்த தந்தைக்கும் அந்தச் செய்தி எட்டினது. அவர்கள் அந்த நஷ்டப்பட்ட ஆத்துமாவுக்காக வேதனையடைந்தார்கள்.

 
களங்கமில்லாத திருவசனமாகிய ஞானப்பாலின் மேல் வாஞ்சை கொண்ட தேவ பக்தன்

"உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி" (சங் 119 : 174) என்றார் சங்கீதக்காரர். என் பரிசுத்த தகப்பனார் கர்த்தருடைய வேதத்தை அதிகமாக வாசித்து தியானித்தார்கள். வேதபுத்தகத்தை பல தடவைகள் வாசித்து முடித்திருந்தார்கள். சங்கீதம் 38, 63, 84, 90, 91, 103, 121, ஏசாயா 53 ஆம் அதிகாரம், புலம்பல் 3 ஆம் அதிகாரம் போன்றவைகள் அவர்களுக்கு மிகவும் விருப்பமான பகுதிகளாகும். வேதாகமத்தின் குறிப்பிட்ட பகுதிகளை அவர்கள் மனப்பாடமாகப் படித்திருந்தார்கள். வேதாகமத்தை மிகவும் பக்தி விநயமாக கரத்தில் எடுத்து ஜெபித்து வாசிக்க அமர்ந்தால் அப்படியே அதின் சத்தியங்களில் மூழ்கிவிடுவார்கள். அப்படி ஆசை ஆவலாக வாசிக்கும் இரண்டு காட்சிகளை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

வயது சென்றுபோய் கண்பார்வை இழக்கப்போகின்றோம் என்பதை அறிந்த என் தகப்பனார் வேத புத்தகத்தை துரிதம் துரிதமாக வாசித்து முடித்தார்கள். கடைசியாக கண் பார்வை வேத புத்தகத்தை வாசிக்க இயலாத வகையில் தடைபட்டுப் போயிற்று. அந்த நாட்களில் வேத புத்தகத்தை அவர்கள் எடுத்து வைத்து தான் மனப்பாடமாக படித்த பகுதிகளை சொல்லி கர்த்தருக்குள் மகிழ்ந்தார்கள். வேத புத்தகத்தை கரத்தில் எடுத்து ஜெபித்த பின்னர் அதை முத்தமிட்டே வாசிக்கத் தொடங்கி அதை முத்தமிட்டே மூடி வைப்பார்கள். அப்படி முத்தமிட்டுப் படித்ததின் காரணமாக கறைபடிந்த அவர்களின் பரிசுத்த வேதாகமம் இறுதியில் எனக்குக் கிடைத்தது. வேதத்தின் எந்தெந்த பகுதி எங்கே உள்ளது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். கண் பார்வை குன்றியிருந்த நாட்களில் தான் படித்த பகுதிகள் மறந்து போகக்கூடாது என்பதற்காக அவ்வப்போது மற்றவர்களைக்கொண்டு அந்த வேத பகுதிகளை வாசிக்கச் சொல்லி திரும்பவும் அவற்றை தன் நினைவில் பசுமையாக்கிக் கொண்டார்கள்.

கண் பார்வை இழந்திருந்த அவர்களுக்கு தேவன் திரும்பவும் கண் ஒளியை கிருபையாக அளித்தார். கண் ஒளி கிடைக்கப்பெற்ற அவர்கள் அடைந்த சந்தோசத்திற்கு அளவே கிடையாது. காரணம், தேவனுடைய ஜீவ வார்த்தைகளை வாசிக்கும்படியானதோர் சந்தர்ப்பம் தனக்கு மறுபடியும் கிடைத்துக்கொண்டது என்பதுதான். தனக்குக் கிடைத்த பாக்கிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு வேதாகமத்தை துரிதம் துரிதமாக வாசிக்கத் தொடங்கி முதலாவது அவர்கள் இருதயத்திற்குப் பிடித்தமான ஏசாயா தீர்க்கத்தரிசனப் புத்தகம், பின்னர் சங்கீதப் புத்தகம் இப்படியாக வாசித்து வாசித்து வேதாகமத்தை முற்றுமாக வாசித்து முடித்துவிட்டார்கள். மரண கட்டிலில் பெலன் இழந்து படுப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே அவர்களுக்கு வேதம் வாசிக்க இயலாது போய்விட்டது. தான் படுத்திருந்த கட்டிலிலிருந்து வீட்டின் சுவரை பிடித்துக்கொண்டே போய் தான் நேசித்து வாசித்த வேதாகமம் இருக்கும் மேஜைக்கு வந்து வேதாகமத்தின் மேல் தன் கையை வைத்து ஜெபித்த பின்னர் அதை தன் கரத்தில் எடுத்து பாசத்தோடு திறந்து முத்தமிட்டு அப்படியே மூடி மேஜை மீது வைத்துவிட்டு திரும்பவும் சுவரைத் தடவிப் பிடித்தவாறே தன் மரணக்கட்டிலின் படுக்கைக்குச் சென்று படுத்ததை நான் கண்டு கண் கலங்கினேன். தேவனுடைய வார்த்தைகள் மேல் என் பரிசுத்த தகப்பனாருக்கு அத்தனையானதொரு வாஞ்சையும், தவனமும், தாகமும் இருந்தது.

 
கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் என் தகப்பனோடிருந்து அவர்களைக் கொண்டு பேசினார்.

பரிசுத்த ஆவியானவர் என் தந்தையின் மேல் தங்கியிருந்து காரியங்களை வெளிப்படுத்திப் பேசினார். அவர்கள் ஆவிக்குள்ளாக நிரம்பியிருக்கும் சமயம் தலைமேல் கைவைத்து ஜெபித்தால் ஜெபிக்க முழங்காலூன்றியிருக்கும் நபரின் இருதயத்திற்குள்ளிருக்கும் காரியங்களை அப்படியே சொல்லிவிடுவார்கள். என் தலைமேல் கை வைத்து என் இருதயத்தின் நிலவரத்தை அப்படியே பல தடவைகள் சொல்லியிருப்பதை நான் ஆச்சரியத்துடன் கேட்டிருக்கின்றேன்.

எங்கள் ஊருக்கு மேற்கு திசையில் திருவரங்கநேரி என்றதோர் கிராமம் உண்டு. கர்த்தருடைய செய்தியைக் கொடுப்பதற்காக என் தகப்பனார் அந்த ஊருக்கு ஒரு சமயம் சென்றிருந்தார்கள். அந்த ஊரின் தேவாலயத்திற்கு முன்பாக திறந்த வளாகத்தில் அன்றைக்கு இரவு ஜெபக்கூட்டம் நடந்தது. ஜெப நேரத்தில் என் தகப்பனார் ஆவியில் நிறைந்தவர்களாக இந்த ஆலய வளாகத்திலேயே சீக்கிரம் ஒரு கொலை விழப்போகின்றது என்று கூறினார்கள். அதைக் கேட்ட மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் ஒருவரையொருவர் பார்த்தார்கள். அவர்களால் அப்பொழுது அந்த வார்த்தையை நம்ப இயலவில்லை. ஜெபக்கூட்டம் முடிந்ததும் ஒரு மனிதன் என் தகப்பனாரிடம் தனித்து வந்து "ஐயா, இந்த இடத்தில் கொலை விழப்போகின்றது என்று யார் உங்களிடம் சொன்னார்கள்" என்று கேட்டிருக்கின்றான். என் தகப்பனார் அவனுக்குப் பிரதியுத்தரமாக "எனக்கு எவரும் சொல்லவில்லை. பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினதைதான் நான் சொன்னேன்" என்று பதில் கொடுத்திருக்கின்றார்கள். இப்படி என் தகப்பனாரிடம் வந்து கேட்டவன் சரியாக ஒரு வாரத்தில் அதே ஆலய வளாகத்தில் இரவு ஜெபக்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்திருந்த ஒரு கிறிஸ்தவ வாலிபனை வெட்டிக் கொன்று போட்டான். கொல்லப்பட்ட வாலிபனின் தாயார் அதின் பின்னர் தன் மரணபரியந்தம் என் பரிசுத்த தகப்பனாரின் ஜெபத்திற்காக தங்கள் ஊரிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார்கள்.

ஒரு சமயம் துக்கசாகரத்தில் மூழ்கியிருந்த ஒரு இளம் விதவைப் பெண்ணுக்கு ஆறுதல் கூறி என் தகப்பனார் ஜெபிக்கும்படியாக அவளுடைய வீட்டிற்குச் சென்றார்கள். அவளுடைய கணவனை சமீபத்தில்தான் சில மனிதர் வன்கொலையாகக் கொன்றிருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறி அவளுக்காக ஜெபித்த பின்னர் என் தகப்பனார் அவள் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே வரவும் கர்த்தருடைய ஆவியானவர் என் தந்தையின் உள்ளத்தில் துயரத்தில் மூழ்கியிருக்கும் அந்தப் பெண்ணுக்குச் சொல்லும்படியாக ஒரு வேத வசனத்தைக் கொடுத்துவிட்டார். வீட்டைவிட்டு சில அடிகள் தூரம் சென்றுவிட்ட என் தகப்பனார் திரும்பவும் வந்து அந்தப் பெண்ணைப் பெயர் சொல்லிக்கூப்பிட்டு "பாக்கியம், எரேமியா தீர்க்கத்தரிசியின் புத்தகம் 5 ஆம் அதிகாரம் 8 ஆம் வசனத்தை நீ எடுத்து வாசிக்கும்படியாக கர்த்தர் சொல்லுகிறார்" என்று கூறவே அவள் உடனே வேதாகமத்தை எடுத்து வந்து அந்த வசனத்தை வாசித்தாள். அதில் இவ்விதமாக எழுதப்பட்டிருந்தது. "அவர்கள் கொழுத்த குதிரைகளைப் போல் காலமே எழும்பி, அவனவன் தன் தன் அயலானுடைய பெண் ஜாதியின் பின்னால் கனைக்கிறான்"

இந்த வசனத்தை அவள் வாசித்ததும் "உன் புருஷனிடத்தில் தவறு இருந்திருக்கின்றது. மற்றவனுடைய மனைவியினிடத்தில் விபச்சாரப் பாவத்தில் அவன் ஈடுபட்ட காரணத்தால் அவன் வன் கொலையாக மரிக்க நேர்ந்திருக்கின்றது. ஆவியானவர் அதை உனக்கு தெளிவுபடுத்திவிட்டார்" என்று கூறி என் தந்தை கடந்து வந்திருக்கின்றார்கள்.

 
பண ஆசையின் வாசனையே அறியாத தேவ பக்தன்

உலகப் பிரகாரமான மக்களைப்போல பணம் காசுகளை சம்பாதிக்க வேண்டும், நிலபுலங்களை வாங்க வேண்டும், ஆஸ்தி ஐசுவரியங்களை சேர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் என் தகப்பனாருக்கு கிஞ்சித்தும் கிடையாது. அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு முன்புகூட அந்த நாட்டம் அவர்களுக்கு இல்லை.

ஆசிரியராகப் பணி புரிந்த அவர்களுடைய தகப்பனார் (என்னுடைய பாட்டனார்) அவர்களுக்கு விட்டுச் சென்ற சொற்ப நிலபுலங்களைக்கூட குடும்பச் செலவுகளுக்காக கொஞ்சம் கொஞ்சமாக முழுவதையும் விற்றுவிட்டார்கள். ஆஸ்தி, ஐசுவரியம், வீடு, வாசல் போன்ற மாய லோக காரியங்களை யாரும் அவர்களிடம் பேசுவதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை. யாரும் அப்படிப் பேசினாலும் அந்த வார்த்தைகளைக் கேளாமல், அதில் எந்த ஒரு நாட்டமும் காண்பியாமல் மௌனமாக இருந்துவிடுவார்கள். தன்னுடைய பிள்ளைகளாகிய எங்களிடமும் அந்த மாயாபுரி சந்தைச் சரக்குகளின் மாய ஆசை இருக்கக்கூடாது என்று அவர்கள் மனதார விரும்பினார்கள். ஒரு சிறிய உதாரணத்தைக் கவனியுங்கள்.

எங்கள் வீட்டிற்குத் தென் பக்கமாக ஒரு பெரிய தரிசு நிலம் பயிரிடப்படாமல் நெடுங்காலமாக சும்மா கிடந்தது. அதை ஒரு மனிதர் விலைக்கு வாங்கி அதைப் பண்படுத்தி முதன் முதலாவதாக அந்தப் பூமியில் வாழைக் கன்றுகளை நட்டினார். அவருடைய நல்ல பிரயாசங்களின் காரணமாக வாழைகள் மடமடவென்று செழிப்பாக வளர்ந்து யாவரும் வியக்கும் வகையில் அது ஒரு பசுமை குலுங்கும் தோட்டமாகக் காட்சி அளித்தது.

அநேக மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் நான் என் பெற்றோரைக் காண்பதற்காக ஊருக்குச் சென்றிருந்தேன். வறண்ட தரிசு நிலமாகக் கிடந்த அந்த பூமி வாழைகள் நிரம்பிய பசுமையும் செழிப்புமான தோட்டமாக மாறிவிட்டிருப்பதை நான் கண்டு ஆச்சரியமுற்று அதை என் உள்ளத்துக்குள் வைத்துக் கொண்டேன். என் தகப்பனாரிடம் நான் அதுபற்றி எதுவும் பேசவில்லை. என் பெற்றோரிடம் சில தினங்கள் நான் தங்கிவிட்டு மலைகளுக்குப் புறப்படும் சமயம் என் தகப்பனார் என்னிடம் "மகனுக்கு நான் ஒரு பரீட்ஷை வைத்திருந்தேன். அதில் நீ வெற்றி பெற்றுவிட்டாய்" என்று கூறினார்கள். நான் அவர்களிடம் அதின் விபரம் கேட்ட போது "நம் வீட்டிற்கு தென் பக்கத்தில் தரிசாகக் கிடந்த நிலத்தில் வாழைகள் பயிரிட்டு அந்த இடமே பசுமையாக மாறியிருந்தபோதினும் மகனுடைய உள்ளத்தில் அதைப் பற்றிய எந்த ஒரு கண்ணோட்டமும் செல்லவே இல்லை. உன் உள்ளம் அதில் ஈடுபாடு கொண்டு அதில் நீ கவர்ச்சிக்கப்பட்டு நீ வந்ததும் அதைக் குறித்து பரவசத்துடன் என்னிடம் பேசுவாய் என்று நான் பெரிதும் எதிர் நோக்கினேன். அதிலிருந்து உன் ஆவிக்குரிய பரிசுத்த வளர்ச்சியை நான் கணக்கிட விரும்பினேன். ஆனால், நீ அதைக் குறித்து ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை. மெய்யாகவே உனக்கு உலகக் காரியங்களில் எந்த ஒரு நாட்டமுமில்லை" என்று மிகுந்த மகிழ்ச்சியோடு சொன்னார்கள்.

 
பூவுலக வாழ்வின் இறுதி நாட்களும், பரம கானான் பிரவேசமும்

எனது தகப்பனார் மிகுந்த ஆயத்தத்தோடு கர்த்தருடைய பரம இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்கள். மரணக் கட்டிலில் ஏறுவதற்கு முன்னான நாட்கள் யாவும் ஜெபத்திலேயேதான் கழிந்தன. எப்பொழுது பார்த்தாலும் தேவ சமூகத்தில் முழங்கால்களிலேயே அவர்கள் காணப்பட்டார்கள். அந்த நாட்களில் நான் எடுத்த இரண்டு புகைப்படங்களை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

மரிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் எங்களிடம் "வான வீதியிலே ஒரு ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. அதில் நானும், எனது நண்பனும் ஓடினோம். இறுதியில் நானே வெற்றிபெற்றதாகக் கனவு கண்டேன்" என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன அந்த நண்பர் விபச்சாரப் பாவத்தில் வீழ்ந்து பின் நாட்களில் தனது பந்தயப் பொருளை இழந்துவிட்டார்கள். மரணமடைவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் என் தகப்பனார் பரலோகத்திற்குச் செல்லுவதற்கான டிக்கெட் தனது கரத்தில் வந்து கிடைத்துவிட்டதாக ஆனந்த பரவசத்தோடு எங்களிடம் சொன்னார்கள்.

ஒரு நாள் என்னிடம் "நான் மரித்துவிட்டேன். என்னை ஏழு வெண்கல செப்புக்குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து குளிப்பாட்டி எனக்கு மாலை அணிவித்து பிரேதப் பெட்டியில் வைத்து நம்முடைய வீட்டின் முற்றத்தில் வைத்திருக்கின்றார்கள். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெட்டியிலிருந்து கொண்டு:-

பாடித் துதி மனமே,
பரனைக் கொண்டாடித் துதி தினமே
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்
பாடித் துதி மனமே.

என்று பாடிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்கள். அவர்கள் என்னிடம் சொன்ன வார்த்தைகளின்படி அவர்கள் மரித்ததும் 7 வெண்கலச் செப்புக்குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து அவர்களைக் குளிப்பாட்டினதாக என் தாயார் என்னிடம் சொன்னார்கள். என் தகப்பனார் அடக்க தினத்தன்று தமிழ் நாட்டில் பந்த் இருந்தபடியால் போக்குவரத்து வாகனங்கள் எதுவும் ஓடாதபடியால் நான் எனது பரிசுத்த தகப்பனாரின் அடக்க ஆராதனையில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால் என் தகப்பனார் மரணக்கட்டிலில் இருந்த நாட்களில் பிள்ளையாகிய நான் அவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் என் மனம் குளிர செய்து மட்டற்ற சந்தோசம் அடைந்தேன். ஒரு நாள் நானும், எனது தாயாரும் அவர்களை ஸ்நானம் பண்ணுவித்து நான் அவர்களை துவாலையால் நன்கு துடைத்து அவர்களைத் தூக்கி ஒரு குழந்தையைப் போல என் முதுகின் மேல் எடுத்துச் சென்று அவர்களைக் கட்டிலில் கிடத்தினேன். கட்டிலில் கிடத்துவதற்கு முன்பாக எங்கள் வீட்டிற்கு முன்னால் ஒரு நாற்காலியில் உட்கார வைத்திருந்தோம். அந்த நாளில் எடுத்த அந்தப் படத்தையும் கூட நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.

என் தகப்பனார் மரணமடைவதற்கு முன்பு அதாவது ஒரு மாதத்திற்கு முன்னரே அவர்கள் அடக்கத்திற்குத் தேவையான வேஷ்டி, சட்டை எல்லாம் ஆயத்தமாக முன்கூட்டியே தைத்துவிட தேவன் என் உள்ளத்தில் ஏவினபடியால் நான் அப்படியே செய்தேன். அவர்களுடைய அடக்க நாளில் கடைகள் எல்லாம் பந்த் காரணமாக முற்றும் அடைக்கப் பட்டிருந்தபடியால் தேவனுக்கு நான் கீழ்ப்படிந்து செய்த அந்தக் காரியம் பயனுள்ளதாக இருந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆ தேவன், தமது உத்தம அடிமையாகிய எனது தந்தைக்கு பாராட்டின அன்பைப் பாருங்கள்.

மரணப் படுக்கையில் என் தகப்பனார் சுமார் ஒரு மாத காலம் இருந்தார்கள். எந்த ஒரு வியாதியும் அவர்களுக்கு இல்லை. ஆகாரம் உட்கொள்ள மனமற்றுப்போய்விட்டார்கள். கடினமான எந்த உணவும் அவர்கள் சாப்பிடவில்லை. கஞ்சித் தண்ணீரும், வெறும் தண்ணீரும்தான் அவர்கள் உட்கொண்ட ஆகாரம். அதையும் கூட நாங்கள் கட்டாயப் படுத்தித்தான் கொடுக்க வேண்டியதாகவிருந்தது. மரண நேரம் வரை நல்ல தன்னறிவு அவர்களுக்கிருந்தது. எனது பரிசுத்த தந்தை மரணக்கட்டிலில் இருப்பதை அறிந்த எனது ஊர் இனஜனபெந்துக்களும், அவர்களால் சரீர, ஆவிக்குரிய நன்மைகளைப்பெற்ற மற்ற மக்களும் அவர்களண்டை வந்து உட்கார்ந்து அழுவதை நான் கண்டேன். "என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாக இருந்தவரே" என்று எலிசா தீர்க்கன் புலம்பல் பாடினதையே அவர்களுடைய அழுகை எனக்கு நினைப்பூட்டினது. கர்த்தருக்கே மகிமை. மரணப்படுக்கையின் போது ஒரு நாள் நான் எனது தகப்பனாரிடம் "அப்பா மரணத்தைக் குறித்து உங்களுக்கு பயம் ஒன்றுமில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பிரதியுத்தரமாக "மரணத்தைக் குறித்து நான் ஏன் பயப்படவேண்டும்? கடந்த வாரம் தானே பரிசுத்தவான்களின் சங்கத்தை நான் கண்டேன்" என்று கூறினார்கள். "அப்பா, ஆகாரம் ஒன்றும் புசிக்காமல் அப்படியே படுத்துக் கொண்டீர்களே" என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் "பிரசங்கி 12 ஆம் அதிகாரத்தில் பசி தீபனம் அற்றுப்போகும் என்று எழுதப்பட்டுள்ளதல்லவா?" என்று பதில் சொன்னார்கள்.

1991 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 30 ஆம் நாள் இரவில் தனது தனித்த கட்டிலில் ஜீவன் போய் மரித்திருந்தார்கள். அவர்கள் ஜீவன் பிரியும் போது அவர்களருகில் யாருமில்லாத போதினும் அவர்கள் தனது ஜீவ காலம் முழுமையிலும் நேசித்துக் கனப்படுத்தின அன்பின் இரட்சா பெருமானும் அவரது பரம சேனையும் அவர்களை அழைத்துச் செல்ல அங்கு வந்திருந்தார்கள் என்று தைரியமாகச் சொல்லலாம்.

31-1-1991 ஆம் தேதி எனது தகப்பனாரின் அடக்கம் இருந்தது. தேவ பக்தனாகிய அவர்கள் அடக்க ஆராதனையில் உள்ளூர்வாசிகளும், அக்கம் பக்கத்திலுள்ள கிராமவாசிகளும், தேவப்பிள்ளைகளும் கலந்து கொண்டார்கள். அவர்கள் விருப்பப்படி அவர்களது சரீரம் எங்கள் வீட்டு பின் வளவிலே அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இரு பனை மரங்கள் உண்டு. அந்த பனை மரங்களுக்கு இடைப்பட்ட பூமியிலே என் தகப்பனாரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இரு பனை மரங்களையும், அந்தப் பனை மரங்களுக்கு முன்பாக நடந்து வந்து கொண்டிருக்கும் என் தகப்பனாரையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

காலமெல்லாம் தன் கர்த்தரை அதிகமாக நேசித்து அவருக்கு ஊழியம் செய்த என் அருமைத் தந்தை வாழ்வின் மொத்தமான தேவச்செய்தி என்னவெனில் "கர்த்தர் பரிசுத்தர், அவரை பரிசுத்த அலங்காரத்தோடு தொழுது கொள்ள வேண்டும். மாயலோக வாழ்வை வெறுத்து அந்த உலக இரட்சகரில் முழு பெலத்தோடும் முழு ஆத்துமாவோடும் அன்புகூரவேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்தக் காருண்ய காந்தனின் உள்ளத்தை நமது கறைப்பட்ட செயல்களால் புண்படுத்திவிடக்கூடாது. இந்த உலகம் வடித்தெடுத்த மாயாபுரி மாயா ஜால கண்காட்சிக்கூடம். அதை நம்பி நமது விலை மதிப்பிட முடியாத நமது நித்திய பேரின்ப வாழ்வை கை நழுவ விட்டுவிடக்கூடாது" என்பதுதான். என் பரிசுத்த தகப்பனாருக்கு ஏக புதல்வனாகிய நான் அவர்கள் வாழ்வில் முழுக்க முழுக்க கற்றுக்கொண்ட பரலோக இரகசியம் இது ஒன்றுதான். இயேசு அப்பாவுக்கு எல்லா மகிமையும், கனமும், துதியும் உண்டாவதாக. அல்லேலூயா.

 
தேவபிள்ளையே, உங்கள் பிரகாசமான ஆவிக்குரிய வாழ்க்கையை உங்கள் பிள்ளைகளுக்குப்
பின் வைத்துச் செல்லுங்கள்.

இந்த தேவ எக்காள தலையங்கச் செய்தியில் காலஞ்சென்ற எனது பரிசுத்த தகப்பனாரைக் குறித்து சில செய்திகளை நான் எழுதியிருக்கின்றேன். கடந்த கால நாட்களிலும் நான் அவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தை சில தடவைகள் எழுதி வந்திருக்கின்றதை நீங்கள் தேவ எக்காளத்தில் வாசித்திருக்கின்றீர்கள். பெற்றோரின் பக்தி வாழ்க்கை பிள்ளைகளின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதுடன் அவர்களை அநேக தேவ ஆசீர்வாதங்களுக்குள் வழிநடத்திச் செல்லும். காலஞ்சென்ற எனது பரிசுத்த தாயார் நான் சிறுவனாக இருந்தபோது என்னை தனக்கு முன்பாக நிறுத்தி கண்ணீர் சிந்தி எனக்காக அழுது ஜெபித்ததை நான் இன்றும் பசுமையாக என் நினைவில் வைத்திருக்கின்றேன். எனது தாயார் எங்கள் வீட்டின் எந்த இடத்தில் என்னை நிறுத்தி வைத்து ஜெபித்தார்கள் என்று அந்த இடத்தைக்கூட நான் உங்களுக்கு இன்றும் காண்பிக்க முடியும். எனது தாய் தந்தையரின் ஜெபங்கள், அவர்களின் பரிசுத்த ஜீவியம் அவர்களுடைய பிள்ளைகளாகிய எங்களை கர்த்தருடைய இரட்சிப்பின் பாத்திரங்களாக எடுத்து நிறுத்தியது. எனது பரிசுத்த தந்தையைத் தொடர்ந்து பாவியாகிய என்னை தேவன் சந்தித்து அவருடைய அடிமையாக்கி என் மூலமாக தமது பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தினார். என்னைத் தொடர்ந்து கர்த்தர் எனக்குக் கொடுத்த எனது இரு புதல்வர்களையும் கிருபையாக சந்தித்து அவர்களை இரட்சிப்பின் பாத்திரங்களாக்கினார். அவர்களைத் தொடர்ந்து அவர்களின் பிள்ளைகளையும் இரட்சிப்பின் பாத்திரங்களாக்கியிருக்கின்றார். பேரக்குழந்தைகள் தனிமையில் தங்கள் முழங்கால்களை தேவ சமூகத்தில் முடக்கி காலை, மாலை வேளைகளில் ஆண்டவரைப் பாடித் துதித்து அவரோடு உறவாடி மகிழ்வதைப் பார்க்கும் போது நமது உள்ளம் கர்த்தரில் களிகூருகின்றது. ஆ, ஒரு தனிப்பட்ட மனிதனின் பூரணமான அர்ப்பணிப்பும், அவனது பரிசுத்த ஜீவியமும் அவனது பின் சந்ததிகளை எத்தனையான தேவ ஆசீர்வாதங்களுக்குள் வழிநடத்திச் சென்று விடுகின்றது என்பதைப் பாருங்கள்.

இதைக் கருத்தோடு வாசிக்கும் அன்பான தேவப்பிள்ளையே, உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக நீங்கள் உங்களை உத்தமமான தேவ மக்களாக எடுத்து நிறுத்துங்கள். நீங்கள் பெற்ற உங்கள் அன்பு பிள்ளைகளை மெய்யான இரட்சிப்பின் பாத்திரங்களாக்கிவிடுங்கள். அவர்களுக்கு உயர்வான உலகக் கல்விகளை கொடுப்பதற்கு நீங்கள் எத்தனையான பிரயாசங்களை எடுப்பீர்களோ அதைவிட கூடுதலான அளவில் அவர்களின் இரட்சிப்பின் காரியங்களில் தீவிர கவனம் செலுத்துங்கள். அவர்கள் இரட்சிப்பின் நிச்சயத்தை திட்டமாகப் பெற்றுக் கொள்ளும் வரை அவர்களுக்காக தேவ சமூகத்தில் போராடி ஜெபித்துக் கொண்டே இருங்கள். எனது இளைய குமாரன் தனது 12 ஆம் வயதில் ஆண்டவரை தனது சொந்த இரட்சகராகக் கண்டுகொண்டார்கள். ஆனால், எனது மூத்த மகனுடைய இரட்சிப்புக்காக நான் இன்னும் கூடுதலாக 10 ஆண்டு காலம் தேவனை நோக்கி உள்ளமுருகிக் கெஞ்ச வேண்டியதாகவிருந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு அருகாமையிலிருந்த மலை உச்சிக்கு ஒவ்வொரு நாள் மாலையிலும் நான் சென்று வானில் நட்சத்திரங்கள் தோன்றி இருள் நன்றாக சூழும் வரை அங்கேயே ஜெபத்தில் தரித்திருக்க வேண்டியதானது. இறுதியில் தேவகிருபை மூத்த மகனை சந்தித்தது. அவர்கள் தனது 22 ஆம் வயதில் இரட்சிப்பின் பாத்திரமானார்கள். எல்லா துதி ஸ்தோத்திரங்களுக்கும் பாத்திரமானவர் நம் தேவன் ஒருவரே.

பிள்ளைகளை இரட்சிப்புக்கு நேராக வழி நடத்தாமல், அவர்களுடைய இரட்சிப்பின் காரியத்தில் நீங்கள் நிர்விசாரம் காண்பித்து, அவர்களுக்கு உயர்வான உலகக் கல்வி அளித்து, அவர்கள் நல்ல சம்பளங்களில் உத்தியோகங்களில் அமருவதை நீங்கள் காணத் துடி துடிப்பீர்களானால் அதின் எதிர் விளைவுகள் காலப்போக்கில் உங்களை இரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துவிடும்.

"உனக்கு 12 ஆண் மக்கள் இருக்கின்றனர் என்று பெருமைப்படாதே. நினைவில் வைத்துக்கொள், தின்பதற்கு பின் நாட்களில் தவிடு கூட உனக்கு கிடையாமற் போகலாம்" என்று காஷ்மீரி பண்டிதர்கள் மத்தியில் ஒரு பழமொழி இருப்பதாக நான் வாசித்தேன். உண்மையான வரிகள், சமீபத்தில் ஒரு தேவப்பிள்ளை தான் பெற்ற தனது மகனின் மனைவி வீட்டில் வளர்க்கும் நாய்க்கு இட்லி கொடுக்கும் அதே வேளையில் தனக்கு இட்லி கொடுக்க மறுப்பதால் ஹோட்டலில் விலைக்கு இட்லி வாங்கி சாப்பிடுவதாக வேதனையுடன் எழுதியிருந்தார்கள். எத்தனை துயரமான காரியம் பாருங்கள்! அந்த மகனைப் பெற்ற பொழுது அந்த தாயார் எவ்வளவாய் சந்தோசப்பட்டிருப்பார்கள்! எத்தனையான வருங்கால மனக்கோட்டைகளை எல்லாம் கட்டியிருப்பார்கள்! ஆனால், இப்பொழுது அந்த தாயாருக்கு அதே மகன் வீட்டில் இருக்கும் ஒரு நாய்க்கு கொடுக்கப்படும் கனம், மரியாதை கிடையாது. அநேக குடும்பங்களில் ஆண் மக்களைப் பெற்ற பெற்றோர் மருமகள்கள் மூலமாக அனுபவிக்கும் கொடுமைகளை சொல்லி மாளாது. இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதின் ஒரே காரணம், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இரட்சிப்பு, மறுபிறப்பு, பரிசுத்த ஜீவியத்தில் இளம் பருவ நாட்களில் கவனம் செலுத்தாமல் அவர்களின் உலகக் கல்வி, உத்தியோகம் போன்றவைகளில் முழுக்கவனம் செலுத்தி பிள்ளைகளை அவர்களின் சிருஷ்டிகரின் உறவிலிருந்து துண்டித்து விட்டதுதான். பிள்ளைகள் ஜெபிக்கின்றார்களா? தேவனுடைய வார்த்தைகளை வாசித்து தியானிக்கின்றார்களா? கர்த்தருடைய அன்பில் வளருகின்றார்களா? என்பதைக் குறித்தெல்லாம் அவர்களுக்கு அக்கறையே கிடையாது. அரசு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பட்டம் பதவிகளை அடைந்து, உலகத்தரம் வாய்ந்த கம்பியூட்டர் கம்பெனிகளில் திரண்ட சம்பளங்களில் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற்று இந்த உலக வாழ்வில் அவர்கள் எல்லா சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்ற ஒரே ஏக்கமும், தாகமும்தான். அதின் ஒரே எதிர்விளைவுதான் வீட்டுக்கு வரும் மருமகள் அவர்களை வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கொடுக்கும் கனத்தைக் கூட கொடுக்காமல் அவர்களை அற்பமாக எண்ணி நடத்துகின்றாள். அதுமட்டுமல்ல, அவர்களின் துரிதமான சாவுக்காக ஆசை ஆவலாக அவள் காத்துக் கொண்டிருக்கின்றாள். எத்தனை பயங்கரம் பாருங்கள்!

இதை கருத்தோடு வாசிக்கும் அன்பான தேவபிள்ளையே, உங்கள் அருமைப் பிள்ளைகளை கர்த்தருக்குப் பயப்படும் பயத்திலும், நித்திய ஜீவப்பாதையிலும் மிகுந்த ஜெபத்தோடு வழிநடத்துங்கள். பிள்ளைகளின் ஓய்வு நேரங்கள் கர்த்தருடைய வேத வசன தியானத்திலும், ஜெபத்திலும், கர்த்தரைப் பாடித் துதிப்பதிலும் செலவிடப்படுகின்றதா என்பதை கவனியுங்கள். உங்கள் வீட்டில் கரும் பெட்டி இருந்தால் அதில் பிள்ளைகள் பார்க்கும் நிகழ்ச்சிகளை கவனியுங்கள். அதில் செலவிடும் நேரத்தை ஆண்டவரின் பாதங்களில் ஜெபத்தில் செலவிட அவர்களுக்கு தேவ ஆலோசனை கொடுங்கள். மிகவும் சுருக்கமான வாழ்நாட் காலம். அதுவும் சீக்கிரமாக பறந்தே மறைந்துவிடும் (சங்கீதம் 90 : 10 ) பிள்ளைகளின் இரட்சிப்பின் காரியத்தில் தீவிர கவனம் செலுத்துங்கள். அவர்களின் இரட்சிப்புக்காக கண்ணீர் சிந்தி அழுது ஜெபியுங்கள். ஒரு குறிப்பிட்ட வயதை பிள்ளைகள் கடந்துவிடும்போது இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுவது கடினமாகிவிடும். கிருபையின் காலத்தில் பிள்ளைகளை உன்னதமானவரின் செட்டைகளின் மறைவில் அடைக்கலம் புகுந்து கொள்ளச் சொல்லுங்கள். பிள்ளைகள் இரட்சிப்பின் பாத்திரங்களாகி ஆண்டவருடைய அடியார்களாக மாறும்போது அவர்களுக்கு வரும் வாழ்க்கைத் துணைகள் உங்களைப் பெற்ற தாய் தந்தையர்களைப் போல நேசித்துக் கனப்படுத்தும் அன்பின் இருதயத்தை தேவன் அவர்களுக்கு கொடுப்பார். உண்மைதான், "என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்" (1 சாமுவேல் 2 : 30) என்ற தேவ வாக்கு உங்களில் பலிக்கும். அதற்கான கிருபைகளை தேவன் தாமே உங்களுக்குத் தந்தருள்வாராக.


 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM