தலையங்கம்


"பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான், ஏனெனில் பிசாசானவன் ஆதி முதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்" (1யோவான் 3 : 8, 9)

கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இந்த தேவ எக்காள இதழை தேவப்பிள்ளைகளாகிய உங்கள் அன்பின் கரங்களில் தந்து மகிழ கிருபை கூர்ந்த நம் அன்பின் ஆண்டவருடைய பொற் பாதங்களை முத்தமிட்டு வாழ்த்துகின்றேன். பரிசுத்த கர்த்தரின் கிருபைக்காக கெஞ்சி மன்றாடி, மன்றாடி இந்த தேவ எக்காள இதழை மிகவும் கஷ்டத்துடன் கம்பியூட்டரில் டைப் செய்தேன் என்பதை அவர் அறிகின்றவராக இருக்கின்றார்.

சற்றும் எதிர்பாராதவிதமாக எனக்கு ஏற்பட்ட அதிகமான வியாதி பெலவீனங்களின் காரணமாக நான் மருத்துவமனையில் சிகிட்சை பெற வேண்டியதாகிவிட்டது. மருத்துவமனையில் நான் படுத்திருந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் "இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களை குணமாக்கி, அவர்களுக்கு பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்" (எரேமியா 33 : 6) என்ற ஒரே தேவ வார்த்தையை கர்த்தர் எனக்குத் தந்து அந்த வசனத்தின்படியே எனக்கு சுகம் அளித்தார். அந்த அன்பருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்? எனது வியாதியின் கடுமை காரணமாக வழக்கமாக ஆண்டுதோறும் நான் மேற்கொள்ளும் இமயமலை தேவ ஊழியங்களை இந்த 2011 ஆம் ஆண்டு எடுத்துச் செய்ய இயலவில்லை. அதின் காரணமாக மனதுக்கு சொல்லொண்ணா வருத்தமும், வியாகுலமும் உண்டு. எனது அருமை மனைவி காலஞ் சென்ற 1996 ஆம் ஆண்டைத் தவிர அநேகமாக எல்லா ஆண்டுகளிலும் தேவனுடைய ஊழியத்தை நான் வடக்கே சென்று செய்து வருவதை தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த ஆண்டில் எத்தனையோ ஆயிரங்களின் கரங்களில் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளை கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்ற கண்ணீரின் பாரம் என் மனதை வாட்டி வதைப்பதாக இருந்தாலும், அதிலும் தேவனுடைய ஒரு மாட்சியான நோக்கம் இருக்கின்றது என்பதை அறிந்து அவருடைய சித்தத்துக்கு என்னை முற்றுமாகக் கையளிக்கின்றேன். இந்த ஆண்டு எனக்கு ஒரு நல்ல ஓய்வு தேவை என்பதை நம் அன்பின் ஆண்டவர் அறிந்திருந்தார். அதின்படியே நான் நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டதுடன் எனக்கு கிடைத்த நேரத்தின் பெரும் பகுதியை ஜெபத்தில் செலவிடும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. அந்த ஜெப வேளைகளில் என் இருதயத்தையும் நான் சோதித்து அறிய கர்த்தர் எனக்கு உதவி செய்தார். அந்த சமயத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு பாவத்தை தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்றதுடன் அதை சீராக்கிக் கொள்ளவும் கர்த்தர் எனக்கு உதவி செய்தார். கர்த்தருக்கே துதி உண்டாவதாக. சம்பவத்தை கவனியுங்கள்:-

சுமார் 45 ஆண்டு காலங்களுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவம் அது. அப்பொழுது நான் உலகப்பிரகாரமாக நீலகிரி மலைகளிலுள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் கடைநிலை குமஸ்தாவாக வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த நாட்களில் நடந்த ஒரு தவறை தேவன் இப்பொழுது எனது நினைவுக்கு கொண்டு வந்தார். அப்பொழுது நான் "ஆங்கில வருகையின் தூதன்" வெளியிடும் "இரட்சிப்பின் தூதன்" என்ற ஆங்கில பிரசுரங்களை அமெரிக்காவிலிருந்து இலவசமாக வரவழைத்து ஆங்கிலம் தெரிந்தோருக்கு இலவசமாகக் கொடுத்து வந்தேன். எதிர்பாராதவிதமாக அவைகள் எல்லாவற்றையும் கொடுக்க முடியாத காரணத்தால் அவைகள் வீட்டில் சேர்ந்து விட்டன. இறுதியில் வீட்டில் தேங்கிக்கிடந்த அந்த பேப்பர்களை எல்லாம் அப்படியே மளிகைக் கடையில் கொடுக்க வேண்டியதாயிற்று. கடைக்காரர் அதற்கு கொஞ்சம் பணமும் கொடுத்தார். அதை நான் வாங்கி செலவழித்தேன். சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்குப்பின்னர் பரிசுத்த ஆவியானவர் இந்தக்காரியத்தை எனக்கு நினைப்பூட்டி அதற்கான பணத்தை ஆங்கில வருகையின் தூதனுக்கு கொடுத்துவிடும்படியாக பலமாக தூண்டவே நான் அமெரிக்காவில் வேலை செய்யும் ஒரு தேவப்பிள்ளையிடம் இந்திய பணம் கொடுத்து 50 அமெரிக்க டாலர்கள் வாங்கி அதை அமெரிக்காவிலுள்ள ஆங்கில வருகையின் தூதன் அலுவலகத்துக்கு சமீபத்தில் அனுப்பி நான் செய்த பாவத் தவறை அதில் விபரமாக சுட்டிக்காண்பித்திருந்தேன். மளிகைக் கடைக்காரர் நான் கொடுத்த ஆங்கில பேப்பருக்கு அந்த நாட்களில் எனக்கு சுமார் ஒன்று அல்லது இரண்டு டாலர்களுக்குச் சமமான இந்திய பணம் மாத்திரம் கொடுத்திருந்தாலும் நான் பல மடங்குகள் அதை அனுப்பிய ஆங்கில தூதனுக்கு திரும்பச் செலுத்தி காரியத்தை சரி செய்தேன். அமெரிக்காவிற்கு நான் எழுதிய கடிதத்தின் தலைப்பில் "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்" (நீதி 28 : 13) என்ற தேவ வசனத்தையே நான் குறிப்பிட்டிருந்தேன். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.

நாம் ஆராதிக்கின்ற ஜீவனுள்ள தேவன் பாவத்தைக் குறித்த விஷயத்தில் எத்தனை விழிப்புள்ளவராக இருக்கின்றார் என்பதை கவனித்தீர்களா? பல்லாண்டு காலங்களுக்கு முன்னர் காசிப்பட்டணத்தில் என்னை எதிர் எதிராக சந்தித்த கொடிய பாவ சூழ்நிலையிலும் நான் வெகு அற்புதமாக கர்த்தரால் பாதுகாக்கப்பட்டேன். இந்தச் சம்பவத்தை நான் நமது தேவ எக்காளத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சமயங்களில் தேவப்பிள்ளைகளாகிய உங்களுக்கு எழுதியிருக்கின்றேன்.

காசிப்பட்டணத்தில் எனக்கு நேரிடப் போகும் அந்த பலத்த பாவச் சோதனையை முன்னறிந்த கர்த்தர் நான் எந்த ஒரு நிலையிலும் அந்த வேசிப்பெண்ணிடம் விழுந்து எனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை நித்தியமாக அழித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக ஒரு மாத காலம் என்னை புசியாமலும், குடியாமலும் இருந்து உபவாசிக்க பலமாக ஏவினார். அவருடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து ஒரு மாத காலம் முழுவதும் இரவில்மட்டும் ஒரு ஆகாரத்தை சாப்பிட்டு பகலில் தண்ணீர் கூட குடியாமல் உபவாசித்தேன். அந்த ஆண்டு நான் தேவ ஊழியத்திற்காக வடக்கே புறப்பட்டபோது மிகவும் பெலவீனனாக இருந்தேன். ஆனால் ஆவிக்குள்ளாக மிகவும் அனலாக காணப்பட்டேன். குறிப்பிட்ட அந்த நாளின் மாலை மயங்கும் நேரத்தில் அந்த காசிப்பட்டணத்தில் அந்த வேசிப் பெண் நான் தனித்து தங்கியிருந்த மேல் மாடியின் அறைக்கு ஏறி வந்து என் அருகில் வந்து அமர்ந்தாள். சற்று நேர அமைதிக்குப்பின்னர் நான் அவளை ஹிந்தியில் "சகோதரியே" என்று அழைத்தேன். அதற்கு அவள் மறுமொழியாக "நான் உங்கள் சகோதரியல்ல, நான் பணத்திற்காக உங்களண்டை வந்திருக்கின்றேன்" என்றாள். "சரீரத்தை அழித்து நாசப்படுத்தி பணம் சம்பாதிப்பது சரியான வழி அல்லவே. நீங்கள் இயேசு இரட்சகரை குறித்து கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?" என்று நான் அவளைக் கேட்டேன். அதற்கு அவள் மாறுத்தரமாக "நீங்கள் இயேசு இரட்சகரின் ஊழியனா? என்னை தாலி கட்டினவன் என்னைக் கைவிட்டுவிட்டான். எனக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு. எங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக நான் இந்தக் காரியத்தைச் செய்கின்றேன்" என்று கூறவும் அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. என் வசமிருந்த தேவனுடைய பிரசுரம் ஒன்றை அவளுக்குக் கொடுத்தேன். அந்தப் பிரசுரத்தின் முகப்பு படம் உயிர்த்தெழுந்த கர்த்தர் பாவியான மரியாளுக்கு தன்னை வெளிப்படுத்தும் படமாக இருந்தது. நிச்சயமாக ஆண்டவர் அந்த கைப்பிரதி மூலமாக அந்தப்பெண்ணுடன் பேசியிருப்பார் என்று நாம் நம்பலாம். தனது கண்களில் கண்ணீரை வடித்தவாறே எனது அறையிலிருந்து அந்தப் பெண் உடனே புறப்பட்டு இரவின் இருளுக்குள் சென்று மறைந்தாள். அவளுடைய சிவந்த கன்னங்களின் வழியாக கண்ணீர் வடிந்து கொண்டிருப்பதை என்னால் நன்கு காண முடிந்தது. இந்து விக்கிரகங்களால் நிரம்பி வழியும் பல்லாயிரக்கணக்கான இந்துக் கோயில்கள் நிறைந்த அந்த காசிப்பட்டணத்தில் வாழ்ந்த அந்தப் பெண் எப்படியோ ஆண்டவர் இயேசுவை குறித்து கேள்விப்பட்டிருந்த காரியம் எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்ததுடன், அந்த இயேசு இரட்சகர் பரிசுத்தமானவர் என்றும், பாவத்தை அவர் வெறுப்பவர் என்பதையும் அவள் திட்டமாகக் கண்டு வைத்திருந்த காரியம் என்னை இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நான் ஆண்டவர் இயேசுவின் பெயரை உச்சரித்ததும் அதற்கு மேல் அவளால் என்னுடன் ஒரு நொடிப்பொழுது நேரம் கூட இருக்கவோ அல்லது என்னைப் பாவம் செய்ய தொடர்ந்து வற்புறுத்தவோ அவளால் இயலாமல் போய்விட்டதை நீங்கள் கவனித்தீர்களா?

என்னை ஒரு மாத காலம் உபவாசிக்க சொல்லி பாவச் சோதனையை வெற்றியோடு சந்திக்க ஆயத்தப்படுத்திவிட்ட கர்த்தர் அத்துடன் என்னை விட்டு விட்டு விலகிச் சென்றுவிடவில்லை. காசிப்பட்டணத்தில் அந்தப் பெண் இருள் சூழும் நேரம் என் அருகில் வந்து அமரவும் அந்த அற்புத கர்த்தரும் என் அருகில் வந்து அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த கிராமபோன் பெட்டியில் கோடு மறைந்து போன ஒரு இசைத்தட்டை சுழலவிட்டார். (இந்த வரியை நான் தமாஷாக இங்கு குறிப்பிடுகின்றேன்) அந்த இசைத்தட்டு திரும்ப திரும்ப "தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?" (ஆதி 39 : 9) என்ற ஒரே வார்த்தையை அந்தப் பெண் என் அறையை விட்டு கண்ணீருடன் அழுது கொண்டு வெளியே செல்லும் வரை என் இருதயத்தில் மீண்டும், மீண்டும் பாடிக் கொண்டிருந்தது. கர்த்தர் என்னோடு நேருக்கு நேர் பேசிய பொன் நாட்களில் அதுவும் ஒரு நாள். எல்லா துதி கனம் மகிமை நம் ஆண்டவர் ஒருவருக்கே உண்டாவதாக. எனது வாழ்வில் என்னைச் சந்தித்த அனைத்து விபச்சார பாவ சோதனைகளிலும் சர்வ வல்ல தேவன் எனக்கு அனுகூலமான துணையாக எனக்கு அருகில் இருந்து என் ஆத்துமாவை பாதாள வல்லடிக்கு விலக்கி காத்துக் கொண்டார். போத்திப்பாரின் மனைவி யோசேப்பின் மேல் கைபோட்டது போல என் மேல் ஒரு மாலை வேளை கைபோட்ட ஒரு குடும்ப கிறிஸ்தவ சகோதரியும் உண்டு. அந்த நேரத்தில் எல்லாம் பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையால் நான் என்னை கருங்கல்லாக்கிக் கொண்டேன். உயிரற்ற கருங்கல்லுக்கு உணர்ச்சி ஏது?

மெய் தேவ மக்கள் யாவரும் இந்தவிதமாகவே தங்களுக்கு வரும் பாவச் சோதனைகள் யாவிலுமிருந்து தங்களை ஆட்கொண்ட, தங்களில் வாசமாயிருக்கின்ற கர்த்தரால் அதிசயமாக விடுவித்துக் காப்பாற்றப்படுகின்றனர். விபச்சார, வேசித்தன பாவங்களில் மட்டுமல்ல, பண ஆசை, பெருமை, மாய்மாலம், தேவ ஜனத்திற்கு மனந்திரும்புதலையும், பாவமன்னிப்பையும் பிரசங்கிப்பதற்குப் பதிலாக (லூக்கா 24 : 47-48, அப் 5 : 31-32) அழிந்து போகும் உலக மாயைகளை தங்கள் உலக ஆதாயத்துக்காக பிரசிங்கித்து அவர்களை நித்திய அக்கினி கடலுக்கு நேராக வழிநடத்துவது போன்றவைகளிலிருந்தெல்லாம் அவர்கள் காப்பாற்றப்படுகின்றனர்.

இந்தக் கடைசி கால நாட்களில் தேவ ஊழியர்கள் பணத்திற்காகச் செய்யும் செப்படி வித்தைகளை எல்லாம் நாம் கண்கூடாக காண்கின்றோம். உலக மக்கள் தங்கள் வியாபாரங்களிலும், இதர தொழிற் துறைகளிலும், பணத்திற்கடுத்த காரியங்களிலும் பொய்களை கடல் மடை திறந்தாற்போல் திறந்துவிட்டு பணம் சம்பாதிப்பதை நாம் பார்க்கின்றோம். அவர்களுடைய பொய்களில் நாமும் ஏமாந்து சிக்கி கடந்த கால நாட்களில் எத்தனை எத்தனையோ கஷ்டங்களுக்கு ஆளானோம். அதேபோல தங்களை தேவ ஊழியர்கள் என்று சொல்லிக்கொள்ளுவோர் கர்த்தருடைய ஜனத்திடமிருந்து பணங்களைப் பறிப்பதற்காக இந்தக் கடைசி நாட்களில் எப்படியாக பொய்களை எடுத்துவிடுகின்றார்கள் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? இந்தப் பொய்யர்கள் தங்களை ஆண்டவருடைய அந்தரங்க காரியதரிசி போல நம்மிடம் காண்பிப்பார்கள். நாளொன்றுக்கு பல மணி நேரங்கள் ஆண்டவரோடு அப்படியே முகமுகமாக தாங்கள் உறவாடி மகிழ்வதாகவும், அடிக்கடி பரலோகம், பாதாள லோகம் சென்று வருவதாகவும், நம்முடைய முற்பிதாக்கள், தீர்க்கர்கள், அப்போஸ்தலரோடு பேசி மகிழ்வதாகவும் பொய்களைக் கூறி கர்த்தருடைய ஜனத்தை வெகு எளிதில் வஞ்சித்து அவர்களின் பணம் காசுகளை அப்படியே சுருட்டி எடுத்து இந்த உலக வாழ்வுக்கடுத்த காரியங்களில் செல்வச் சீமான்களாக செழிப்புடன் வாழ்கின்றனர். "நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால், இவைகளை எல்லாம் உமக்குத் தருவேன்" (மத் 4 : 9) என்று நம் ஆண்டவரை நயங்காட்டின அதே சாத்தான் இந்த ஊழியர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுடைய காரியங்களை எல்லாம் ஜெயமோ ஜெயமாக முடியப்பண்ணுகின்றான்.

இந்த ஏமாற்றுக்கார தேவ ஊழியர்கள் மற்றவர்களைவிடத் தாங்கள் மிகவும் புத்திசாலிகள் என்று எண்ணி இந்த உலக வாழ்க்கையை முழுமையாக ருசித்துப் புசித்து அனுபவித்து வருகின்றனர். அப்பாவியான, தேவ ஜனத்தை ஏமாற்ற தங்கள் கவர்ச்சியான மனதை மயக்கும் பொய்யான வெளிப்பாடுகளையும், ஏமாற்றுக்கார தீர்க்கத்தரிசனைகளையும் தங்கள் பண்டகசாலைகளிலிருந்து எடுத்துவிடுகின்றனர். அதற்கு வசதியாக அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள தங்கள் சொந்த தொலைக்காட்சிகளையும், இதர மீடியாக்களையும் கன கச்சிதமாக பயன்படுத்துகின்றனர். இவர்களின் பச்சைப் பொய்களில் ஏமாந்த கிறிஸ்தவ மக்கள் இந்த ஊழியர்களுக்கு பணங்களை வாரி வழங்குகின்றனர்.

 
அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது

"அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது" (நீதி 10 : 2) என்று கர்த்தருடைய வார்த்தை திட்டமும் தெளிவுமாகக் கூறுகின்றது. ஒரு வியாபாரி தான் விற்கும் பொருட்களில் கலப்படம் செய்து, கள்ளப்படிகள், கள்ள தராசுகளை பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு நியாயமாக செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல் ஏமாற்றி பணம் சம்பாத்தியம் பண்ணுகின்றான். ஒரு அரசாங்க அதிகாரி தனது அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்சம் வாங்கி திரண்ட பணம் காசுகளை தனது குடும்பத்திற்காக சேர்த்து விடுகின்றான். ஒரு அரசியல்வாதி தனது ஆட்சி காலத்தில் பற்பல ஊழல்கள் செய்து பொது ஜனத்தின் வரிப்பணத்தை கோடி கோடியாக சுருட்டி தனது வருங்கால சந்ததி வாழ்விற்காக மறைத்து வைத்துக் கொள்ளுகின்றான். இவைகள் அனைத்தும் அநியாயத்தின் திரவியங்களாகும். இவைகள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாது என்று வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவன் திட்டமும் தெளிவுமாகக் கூறிவிட்டார்.

அடுத்த கோணத்தில் தங்களை தேவ ஊழியர்கள் என்று சொல்லிக் கொண்டு, தேவனுடைய ஜனங்களை தங்களுடைய தந்திரமான மனதை மயக்கும் இம்மை வாழ்வுக்குரிய செழிப்பு உபதேச செய்திகளாலும், ஜெபங்களாலும், பாடல்களாலும், கள்ள தீர்க்கத்தரிசனங்கள், பொய்யான வெளிப்பாடுகள், பக்தியான நடிப்புகள் மூலமாக ஏமாற்றி தேவ ஜனங்கள் தங்களை ஒடுக்கி, தங்களை வெறுத்து தேவனுடைய சுவிசேஷ பிரபல்லியத்திற்காகவும், சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்காகவும் கண்ணீரோடும், அழிந்து போகும் ஆத்துமாக்களைக் குறித்த மனதின் பாரத்தோடும் கொடுத்த திரளான பணங்களை தங்கள் சொந்த சம்பத்தாக தங்களுக்கென்றும், தங்கள் சந்ததிக்கென்றும் தந்திரமாக பல்வேறு இடங்களில் மறைவாக முதலீடு செய்து கொண்டு இந்த உலகத்தில் தங்களுக்கு ஜெய ஸ்தம்பங்களை நாட்டிக் கொண்டனர்.

இந்த ஊழியக்காரர்கள் தேவ ஜனத்திடமிருந்து அவர்களுடைய பணங்களை அபகரிக்க தங்கள் பத்திரிக்கைகளில் எத்தனையான கண்கவர் கவர்ச்சி வாசகங்களை எழுதி வெளியிடுகின்றனர் என்பதை நீங்கள் வாசித்திருக்கின்றீர்களா? "எங்களுடைய தேவ ஊழியங்களுக்கு ரூபாய் 1000 காணிக்கை கொடுத்ததின் பலனாக தேவன் குறிப்பிட்ட அந்த குடும்பத்தினருக்கு ஒரு அழகான புதிய வீட்டை வாங்க உதவி செய்தார்" "எங்களுடைய தொலைக்காட்சி ஊழியத்திற்கு ஒரு தடவை ஒளி பரப்ப தேவையான ரூபாய் 10000 த்தை கொடுத்த குறிப்பிட்ட அந்த சகோதரனுக்கு 10 ஆண்டு காலமாக குழந்தையில்லாமலிருந்த அவர்களுக்கு அழகான ஆண் மகவைக் கொடுத்து கர்த்தர் ஆசீர்வதித்தார்" "எங்களுடைய ஆலய கட்டுமான பணிக்கு பொருத்தனை காணிக்கை ரூபாய் 5000 அனுப்பிக் கொடுத்த அந்த குடும்பத்தினரின் மகளுக்கு மருத்துவ படிப்புக்கு அரசாங்க கோட்டாவில் அற்புதமாக இடம் கிடைக்க கர்த்தர் உதவி செய்தார்". இப்படியாக ஊழியக்காரர்கள் தங்கள் பத்திரிக்கைகளில் சுண்டி இழுக்கும் கவர்ச்சி சாட்சிகளை பூச்சரமாக எழுதி அதை வாசிக்கும் அப்பாவி தேவ ஜனத்தின் மத்தியில் ஒரு வித போதையை உருவாக்கி அவர்களிடமிருந்து பணங்களை மிக எளிதாகப் பறித்துவிடுகின்றனர். வானத்தையும், பூமியையும், அண்டசராசரங்களையும் படைத்த சர்வவல்ல கர்த்தர் தமது மாட்சிமையான பரிசுத்த ஊழியத்தை இப்படியாக மக்களை ஏமாற்றி எழுதி தந்திரமாகச் செய்ய இந்த ஊழியர்களை தெரிந்து கொண்டிருப்பார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? எனினும், இந்த வேஷாதாரிகளின் பின்னணியத்தில் இவர்களுக்கு தோளோடு தோள் கொடுத்து உதவ பேதையான ஒரு பெருங்கூட்டம் மக்கள் நின்று கொண்டிருக்கின்றனர் என்பதுதான் துயரமான காரியமாகும். கர்த்தர்தான் தமது ஜனத்திற்கு இரங்க வேண்டும்.

தலை சாய்க்க இடமில்லை என்று சொன்ன அன்பின் ஆண்டவரை உலகோருக்கு பறைசாற்ற தங்கள் கரங்களில் வேதாகமத்துடன் களம் இறங்கிய கர்த்தருடைய ஊழியர்கள் எத்தனை திரண்ட கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? சாதராணமான பேன்ட், சேட்டோடு, எளிமையான செருப்போடு தேவனுடைய ராஜ்யத்தைக் கட்ட களம் இறங்கிய இந்த ஊழியக்காரர் எத்தனை துரிதமாக யாரும் நெருங்க முடியாத அளவிற்கு செல்வந்தர்களாகி ராஜபோகமாக அந்தரங்கத்தில் குளிர் பதன அறையில் வாழ்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அன்று அப்போஸ்தலர்கள் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் இருந்ததாக அறிக்கையிடுவதை (1 கொரி 4 : 13) நாம் வேதத்தில் பார்க்கின்றோம். ஆனால், நம் நடுவே உள்ள இன்றைய ஊழியர்கள் உலக மக்களின் பார்வையில் உலக கோடீஸ்வரர்களான பில்கேட்ஸ்களின் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கப்படுகின்றனர். உலக மக்கள் இந்த ஊழியர்களை உலகத்தை கலக்குகிறவர்களாகப் பார்க்காமல் (அப் 17 : 6) உலகத்தை ஆளப் பிறந்த, உலகத்தை முழுமையாக அனுபவிக்கப்பிறந்த அரசிளம் குமாரர்களாகக் காண்கின்றனர்.

இந்த ஊழியர்கள், சற்று முன்பு நான் குறிப்பிட்ட வியாபாரி, அரசாங்க அதிகாரி, அரசியல்வாதி போன்றவர்களின் பட்டியலில்தான் உள்ளனர். அவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது. தேவ ஜனத்தை தந்திரமாக ஏமாற்றி, பொய்களை கட்டவிழ்த்துவிட்டு சம்பாதித்த இவர்களின் திரவியங்களும் அநியாயத்தின் திரவியங்களே ஆகும். அவைகள் ஒன்றுக்கும் உதவாது. ஒருக்கால் இந்த ஊழியக்காரர்கள் மற்றவர்களைவிட தங்களை புத்திசாலிகள் என்றும், உலகத்தில் தங்கள் காரியங்கள் ஜெயமாக முடிந்தது என்றும் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால், தேவனுடைய வார்த்தை இவர்களை அடிமட்ட நிர் மூடர்கள் என்று கோடிட்டுக் காண்பிக்கின்றது. இவர்கள் இந்தவிதமாக அநியாயமாக சம்பாதித்த ஆஸ்தி ஐசுவரியங்களை தங்களின் பாதி வயதிலேயே இழந்து முடிவிலே மூடர்களாக இருப்பார்கள் என்று கர்த்தருடைய வார்த்தை அடித்துக்கூறுகின்றது. தேவனுடைய வசனத்தை கவனியுங்கள் "அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும் குஞ்சு பொரிக்காமற் போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான், அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான்" (எரேமியா 17 : 11)

மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் மக்களுக்குப் பிரசங்கித்து உத்தமமான ஜனத்தை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இந்த ஊழியக்காரர் திசைமாறிச் சென்றதன் ஒரே காரணம் தேவன் இவர்களை அழைத்த பரிசுத்த அழைப்பிலிருந்து வழிவிலகி உலக மாயைக்குத் தங்களை ஒப்புக் கொடுத்ததுதான். இந்த மக்கள் தங்கள் வாழ்வில் தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தங்களை ஆட்கொண்ட தங்கள் ஆண்டவர் பாதங்களில் தங்களைத் தாழ்த்தி உள்ளமுருகி ஜெபத்தில் தரித்திருந்தால் அவர்களை அவர் ஒருக்காலும் ஜீவ பாதையினின்று வழி விலக அனுமதித்திருக்கவே மாட்டார். ஆனால், பெருமைக்கார இந்த ஊழியர்களை உலக மாயையின் கவர்ச்சியானது ஆண்டவரின் பாதங்களுக்கு நெருங்க ஒட்டாமல் தடுத்து நிறுத்திவிட்டது.

 
தேவ ஜனமே நீங்கள் எச்சரிக்கப்படுகின்றீர்கள்

இந்தக் கடைசி கால நாட்களில் தேவனுடைய மாட்சிமையான சுவிசேஷ ஊழியம் தேவப்பகைஞரான பொல்லாத ஊழியர்களால் பணங்காசுகளுக்காக பண்டமாற்று செய்யப்பட்டு மனுஷ கொலை பாதகனான சாத்தானாம் பிசாசானவனின் முழு ஒத்துழைப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த சாத்தானாம் பிசாசின் கைக்கூலிகளின் மனதை மயக்கும் பேச்சிலும், பிரசங்கத்திலும், தீர்க்கத்தரிசனங்களிலும், வெளிப்பாடுகளிலும் மயங்கி உங்கள் விலையேறப்பெற்ற ஆத்துமாவை எந்த ஒரு நிலையிலும் நஷ்டப்படுத்திவிடாதேயுங்கள். இந்தப் பொல்லாத ஊழியர்களின் கூட்டங்களை நாடி அங்கும் இங்கும் ஓடாதேயுங்கள். "பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயர்செபாவுக்கும் போகாதேயுங்கள். ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும். கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுதுபிழைப்பீர்கள்" (ஆமோஸ் 5:5,6) உங்கள் முழங்கால்களில் நின்று உங்கள் கரத்திலுள்ள தேவனுடைய வார்த்தைகளை வாசித்து, தியானித்து வேத வசனத்தின் வெளிச்சத்தில் நடவுங்கள். பாவத்திற்கு எதிராக போர்க் கொடி உயர்த்துங்கள். பாவங்களை அத்தனை எளிதாக எண்ணிவிடாதேயுங்கள். "பாவங்களும், கடன்களும் நாம் நினைப்பதற்கும் மேலான எதிர் விளைவுகளை கொண்டு வரக்கூடியவைகள்" (Sins and debts are more than we think them to be) என்று சொல்லப்படுகின்றது. மற்றவர்களிடம் வாங்கின கடன்களை எல்லாம் செலுத்துங்கள். அப்படியே அவர்களிடமிருந்து வாங்கிய பொருட்களையும் கொடுத்துவிடுங்கள். பத்திரிக்கை சந்தா விரைவில் அனுப்பி வைக்கின்றேன் உங்கள் பத்திரிக்கையை அனுப்பி வையுங்கள் என்று போஸ்ட்கார்ட் எழுதிப்போட்டு கிறிஸ்தவ பத்திரிக்கைகளை இலவசமாக பல்லாண்டு காலமாக வாங்கிப் படித்து வரும் நீங்கள் அதற்கான சந்தா பாக்கி யாவையும் உடனே செலுத்துங்கள். பெரிய பக்திமான் போல சபையினருக்கு முன்பாக நடித்து திருச்சபையைக் கொள்ளையடித்த நீங்கள் அந்தப்பணத்தை எல்லாம் திரும்ப ஆலயத்துக்கு கொடுத்துவிடுங்கள். ஒரு சமயம் தேவாலயத்தின் அங்கத்தினர் ஒருவர் சபைப்பணம் ரூபாய் ஒரு லட்சம் வரை தான் திருடியதாக என்னிடம் வந்து கண்களில் கண்ணீர் வடிய வடிய அழுது கொண்டே கூறினார்கள். அந்த தொகை முழுவதையும் ஒரே தடவையில் சபைக்கு திருப்பிக் கொடுக்க முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாகவாவது முழுவதையும் திருப்பிக் கொடுத்து கர்த்தரோடு ஒப்புரவாகிக் கொள்ள நான் அவர்களுக்கு தேவ ஆலோசனை கொடுத்தேன்.

ஆகானுடைய கூடாரத்தில் சாபத்தீடானது இருந்தது வரை இஸ்ரவேலருக்கு தோல்வியே ஏற்பட்டது போல (யோசுவா 7 : 13) நமது வாழ்விலும் தேவனுக்கு விருப்பமில்லாத அறிக்கை செய்து விட்டுவிடப்படாத மறைவான பாவங்கள், செலுத்தப்படாமலிருக்கும் கடன்கள் போன்றவைகளிருக்கும் காலம் வரை நமது ஆவிக்குரிய வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்காது.

உங்கள் அன்றாடக ஜெப வாழ்க்கையை கண்ணும் கருத்துமாக பேணிப்பாதுகாத்துக் கொள்ளுங்கள். படுக்கையிலிருந்து எழும்பி உங்கள் அன்றாடக அலுவல்களை ஆரம்பிக்கு முன்னர் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது தேவ சமூகத்தில் உங்களைத் தாழ்த்தி ஜெபத்தில் தரித்திருங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்த ஜெப வேளையை அல்லத்தட்டி விடாதீர்கள். அந்த ஜெப நேரத்தின் வெற்றியைப் பொறுத்தே அந்த நாளில் உங்கள் காரியங்கள் எல்லாம் ஜெயமாக அமையும். நாளின் இடைப்பட்ட நேரங்களிலும் சமயம் கிடைக்கும்போது பரம தகப்பனை முழங்கால்களில் சந்தித்து வாழ்வின் காரியங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். காலை மாலை ஜெப நேரங்களில் கர்த்தரைப் பாடித் துதியுங்கள். கீர்த்தனை, பாமாலைப்பாடல்கள், மெய் தேவ பக்தர்கள் தங்கள் அனுபவங்களிலிருந்து பாடிய பாடல்களைப் பாடுங்கள். "நீதிமானோ பாடி மகிழுகிறான்" (நீதி 29 : 6) "நீதிமானுடைய கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு" (சங் 118 : 15) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது.

நீங்கள் எந்த சபையைச் சார்ந்தவர்களாக இருந்தபோதினும் உங்கள் பாவங்களுக்காக உங்கள் மார்பில் அடித்துப் புலம்பி பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்றவர்களாக இருத்தல் அவசியமாகும். இந்த மறுபடியும் பிறந்த பரலோக அனுபவமில்லாமல் நீங்கள் ஒருக்காலும் தேவன் தம்முடைய ஜனத்திற்காக ஆயத்தம் செய்து வைத்துள்ள நித்திய இளைப்பாறுதலில் (எபி 4 : 9) பிரவேசித்தல் கூடாத காரியமாகும். இந்த சத்தியத்தை நீங்கள் உங்கள் இருதய பலகையில் இரும்பு எழுத்தாணியால் எழுதிக் கொள்ளுங்கள். ஆலயத்திற்கு ஒழுங்காகச் செல்லுவது, ஆலய கமிட்டிகளில் அங்கத்தினர்களாக இருந்து சபையை அருமையாக நிர்வகித்துச் செல்லுவது, தசமபாகம், பொருத்தனை காணிக்கைகளை கொடுப்பது, வட இந்தியாவில் மிஷனரிகளை தாங்குவது, ஆலயம் இல்லாத இடங்களில் ஆலயங்கள் கட்டிக் கொடுப்பது போன்ற ஆயிரமாயிரம் காரியங்களைச் செய்தாலும் நீங்கள் மறுபடியும் பிறந்த பரலோக அனுபவமில்லாமல், உங்களுக்கும் உங்கள் ஆண்டவருக்கும் இடையிலான உங்கள் பரலோக உறவு "என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்" (உன் 2 : 16) என்ற கன்மலை அஸ்திபாரம் இல்லாமல் இந்தக் காரியங்களை எல்லாம் செய்வீர்களானால் இவைகளால் எந்த ஒரு பயனும் உங்களுக்குக் கிடையாது என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்.

ஒருவருடைய மரணத்திற்கு பின்னர்தான் அவர் மோட்சத்திற்குச் செல்லுகின்றாரா அல்லது நரகத்திற்குச் செல்லுகின்றாரா என்பது அவருக்குத் தெரியும் என்று சொல்வதெல்லாம் அபத்தமான பேச்சாகும். "உனக்கு இரண்டு மோட்சம் இல்லையேல் ஒரு மோட்சமும் கிடையாது. இந்த உலகத்தில் உனக்கு மோட்சம் இல்லையேல் பரலோகத்திலும் மோட்சம் இல்லை" என்று பரிசுத்தவான் ஆண்ட்ரூ போனர் எழுதியிருக்கின்றார். ஒரு மெய்யான தேவப்பிள்ளைக்கு இந்த உலகத்திலேயே மோட்சம் ஆரம்பமாகிவிடுகின்றது. அதின் ஒரே காரணமாகத்தான் அந்த தேவ பிள்ளை அடிக்கடி ஆண்டவருடைய சமூகத்தை வாஞ்சித்து கதறுகின்றது.

பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை நாம் எடுத்து வாசிக்கும்போதெல்லாம் நாம் பரவசமாக கவனிக்கும் ஒரு காரியம் அவர் எப்பொழுதும் ஜெபித்துக் கொண்டேயிருந்தார் என்பதுதான். தனது ஊழியத்தின் நாட்களிலும் இரவில் அதிகமான நேரத்தை அவர் ஜெபத்தில் செலவிட்டதுடன் ஆண்டில் பல மாதங்கள் உலகம் முழுவதும் சுற்றித்திரிந்து ஊழியம் செய்தாலும் தனித்திருந்து தேவ சமூகத்தில் நீண்ட நாட்கள் ஜெபிப்பதற்காக தான் வாழ்ந்து கொண்டிருந்த இந்தியாவிலுள்ள சிம்லா மலைகளிலுள்ள சுபத்து என்ற இடத்திலுள்ள தனது பங்களாவிற்கு ஓடோடி வந்து தேவ சமூகத்தில் முழங்காலூன்றினார். அதின் ஒரே காரணம், மோட்சம் அவரது உள்ளத்தில் இருந்ததுதான். மோட்சமாகிய அவரை ஆட்கொண்ட அன்பின் இயேசு இரட்சகர் நீங்காத நேசராக அவரது உள்ளத்தில் வாசம்பண்ணிக் கொண்டிருந்தார். "அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ" (யோபு 27 : 10) என்று யோபு பக்தன் இருதயத்தில் தேவனில்லாத மனிதனை (யோபு 27 : 8 மாயக்காரன் - தேவனற்றவன்) பார்த்துக் கேட்கின்றார். உங்கள் இருதயத்தில் உங்கள் மறுபிறப்பின் மூலமாக ஆண்டவர் வாசம் செய்வாரானால் நீங்கள் எப்பொழுதும் தேவனைத் தொழுது கொண்டிருக்கவும், அவரில் மனமகிழ்ச்சியாயிருக்கவும் கற்றுக் கொண்டிருப்பீர்கள். சங்கீதக்காரரைப் போல மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல நீங்களும் தேவனை வாஞ்சித்துக் கதறுவீர்கள். அவரைத் தேடாமல் உங்களால் ஒருக்காலும் இருக்கவே முடியாது. சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவருடைய பாதங்களை நாடி ஓடுவீர்கள். அதைத்தான் காலம் சென்ற தேவ மனிதர் பரமானந்தம் ஐயர் அவர்கள் தனது பாடலில் "திருப்பதம் சேராமல் இருப்பேனோ - நான், தெய்வத்தை தேடாமல் பிழைப்பேனோ?" என்று பாடினார்கள். உண்மைதான், தெய்வத்தின் பாதங்கள் அதற்கு இல்லையேல் அதற்கு உயிர் வாழ்வு கிடையாது. அல்லேலூயா.

முடிவில்லாத யுகா யுகங்களாக ஆண்டவருடைய மோட்ச இன்ப வீட்டில் அவரோடு கூட வாழ்வதற்கு இந்தக் கிருபையின் காலத்தில் நீங்கள் உங்களை தேவ பெலத்தால் நன்கு ஆயத்தம் செய்து கொள்ளுங்கள். பொல்லாத ஊழியக்காரர்கள், பணங்காசுகளுக்காக மாய்மாலம் செய்யும் கபடஸ்தரான அந்த வஞ்சகர்களை நம்பி உங்கள் விலை மதிப்பிட முடியாத ஆத்துமாக்களை பணயம் வைத்து விடாதீர்கள். உங்கள் வாழ்வின் கடைசி நேரத்தில் நீங்கள் நம்பிய அந்த கூலியாட்கள் எல்லாரும் உங்களை விட்டு விட்டு ஓட்டம் பிடித்து விடுவார்கள் (யோவான் 10: 12) நீங்கள் உங்கள் அன்றாடக கிறிஸ்தவ வாழ்வில் அன்பின் ஆண்டவரோடு செடியும், கொடியுமாக ஒவ்வொரு நாளும் அவரில் நிலைத்திருந்து அவரோடு கூட முழங்கால்களில் வளர்ந்த அந்த பரலோக நேச உறவு மாத்திரமே உங்கள் மரணத்தை நீங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று மோட்சானந்த மகிமைகளை சுதந்தரிக்க உங்களுக்கு கை கொடுத்து உதவும். அதற்கான கிருபைகளை தேவன்தாமே உங்களுக்கும், பாவியாகிய எனக்கும் தந்தருள்வாராக.

இந்த தேவ எக்காளத்தின் முகப்பு செய்தியாக மாபெரும் சீன தேச மிஷனரி ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை நான் உங்களுக்கு அதிகமான ஜெபத்தோடும், மிகுந்த பிரயாசத்தோடும் மொழி பெயர்த்து அளித்திருக்கின்றேன். அதிகமான ஜெபத்தோடும், தேவ ஒத்தாசையோடும் மொழி பெயர்த்து எழுதப்பட்டுள்ள இந்த பரிசுத்த வாழ்க்கைச் சரித்திரத்தை நீங்களும் ஜெபத்தோடும், மனத்தாழ்மையின் சிந்தையோடும் முழுமையாக வாசித்து பரிசுத்தவான் ஹட்சனின் பரிசுத்த வாழ்க்கையை உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆசீர்வாதத்திற்கு நடைமுறைப்படுத்த தேவ பெலத்தால் பிரயாசப்படுங்கள். தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை அதை அறியாத ஏழை சீன மக்களுக்கு அறிவித்து அவர்களை நித்திய ஜீவனுக்கு சுதந்திரவாளிகளாக்க அவர் எடுத்துக் கொண்ட பிரயாசங்கள், பாடுகள், கஷ்டங்கள், அங்கலாய்ப்புகள், இழப்புகள், தவிப்புகள், ஏமாற்றங்கள், சோர்புகள் போன்றவை மனித அறிவிற்கு அப்பாற்பட்டவையாகும். அவரை சீன தேசத்திற்கு மிஷனரியாக அனுப்பிய இங்கிலாந்திலுள்ள சீன சுவிசேஷ சங்கம் அவருக்கு எந்த ஒரு உதவி ஒத்தாசையும் செய்யாமல் அவரை நடு ஆற்றில் முழுமையாக கைவிட்ட போதினும், அதைப் பொருட்படுத்தாமல் தனது அன்பின் ஆண்டவர் ஒருவரையே தனது ஒத்தாசையாகக் கொண்டு மாபெரும் சீன உள் நாட்டு மிஷனரி ஸ்தாபனத்தை (China Inland Mission) தோற்றுவித்து அதின் மூலமாக லட்சாதி லட்சம் சீன மாந்தரை ஆண்டவரின் அன்பின் அடிமைகளாக்கி சீன தேசத்தில் நேச இரட்சகரின் சிலுவைக் கொடியை பட்டொளி வீசி பறக்கச்செய்து விட்டாரே அந்த தேவ மனிதர்! அந்த உத்தம பரிசுத்தவானின் வாழ்க்கைச் சரித்திரத்தை நீங்கள் நீண்ட பொறுமையுடன் வாசித்து பக்கத்திற்கு பக்கம் காணப்படும் அவருடைய வாழ்வின் பரிசுத்த அனுபவங்களை அப்படியே உங்களுக்குச் சொந்தமாக சுதந்தரித்துக் கொள்ளுங்கள். அன்பின் ஆண்டவர் அதற்கு ஒத்தாசையாக உங்களுக்கு கரம் கொடுத்து உதவுவாராக. ஆமென்.


 

மோரேவிய கிறிஸ்தவ மிஷன் ஸ்தாபனத்தை தோற்றுவித்த மாபெரும் தேவ பக்தனான கவுண்ட் நிக்கோலஸ் ஸின்ஸென்டார்ஃப் 4 வயது பாலகனாக இருக்கும் போதே மனந்திரும்பினார். அந்தப் பாலிய வயதிலேயே "அன்பான இரட்சகரே, நீர் என்னுடையவராகவும், நான் உம்முடையவனாகவும் இருக்கத் தயைபுரியும்" என்பதாக எழுதி வைத்தார். அவரது வாழ்வின் பொன் மொழி வாசகம் இதுதான்:-

"எனக்கு ஒரே ஒரு வாஞ்சையுண்டு. அது இயேசு ஒருவரே. ஆம், இயேசு ஒருவர் மாத்திரமே"

அவர் ஒரு சமயம் இவ்வாறு கூறினார்:-

"நான் ஒரு ஏழைப் பாவி. தேவனின் வெற்றிச் சாரட்டு வண்டியின் பக்கவாட்டிலேயே எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும் நித்திய அன்பின் அடிமை. நான் இவ்வுலகில் ஜீவிக்கும் காலபரியந்தம் இவ்விதமாக இருப்பதையே வாஞ்சிக்கின்றேன்" என்று கூறினார்.


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM