முன்னுரை


இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது,
அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர். (மத் 7 : 13 - 14)


கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.

இந்த ஆண்டு கடைசி தேவ எக்காள இதழின் மூலமாக தேவபிள்ளைகளாகிய உங்களைச் சந்திக்க கிருபை செய்த நம் அன்பின் ஆண்டவரை நன்றி நிறைந்த உள்ளத்தோடு துதித்து ஸ்தோத்திரிக்கின்றேன். கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையாலும், தேவ பிள்ளைகளாகிய உங்களது உருக்கமான ஜெபங்களாலும் வழக்கம் போல இந்த ஆண்டிலும் நாங்கள் 9 பேர்கள் கொண்ட ஒரு குழுவாக 2 வாகனங்களை முழுமையான ஒரு மாதத்திற்கு வாடகைக்கு அமர்த்தி இமயமலைகளின் கடையாந்திர கிராமங்களுக்கெல்லாம் சென்று தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளை பல்லாயிரக்கணக்கான மக்களுடைய கரங்களில் ஜெபத்துடன் கொடுத்து மகிழ்ச்சியோடு திரும்பக் கர்த்தர் கிருபை செய்தார். இந்த தடவை தேவ ஊழியத்திற்கு நான் செல்ல முடியுமா என்பது ஊழியத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு வடக்கே புறப்படுவதற்கு சுமார் 3 வாரங்களுக்கு முன்பாக ஏற்பட்டது. எதிர்பாராத எனது சுகயீனம் அந்த நிலைக்கு என்னைக் கொண்டு வந்தது. எனினும், நமது அநாதி தேவனின் அன்பால் சாத்தானுடைய எல்லா இடையூறுகளும் அகன்று ஊழியத்தை கர்த்தருக்கு மகிமையாக முடித்து தேவ பிள்ளைகளாகிய உங்களண்டை திரும்பி வந்து சேர நேசர் தயை புரிந்தார். அது குறித்த தெளிவான விபரத்தை இந்த இதழின் மற்றொரு பக்கத்தில் நான் உங்களுக்கு எழுதியிருக்கின்றேன். தவறாது வாசியுங்கள்.

உங்களுடைய கரங்களில் இருப்பது தேவ எக்காளத்தின் 43 ஆம் ஆண்டின் இறுதி இதழாகும். இந்த எளிய பத்திரிக்கையை கர்த்தருடைய திட்டமான தேவ ஆலோசனையின்படி 1968 ஆம் ஆண்டு நான் ஆரம்பித்தபோது இதை ஒரு சில மாதங்களாவது நம்மால் அச்சிட்டு வெளியிட முடியுமா என்று நான் அதிகமாக யோசித்ததுண்டு. ஆனால், சர்வ வல்லவர் என்னோடு கூட இருந்து என்னைக் கரம் பிடித்து வழி நடத்தியதால் இத்தனை நீண்ட ஆண்டு காலங்களாக இந்த பத்திரிக்கையை தேவ நாம மகிமைக்காக அச்சிட்டு என்னால் வெளியிட முடிந்தது. அந்த அன்பருக்கு நாம் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்?

இந்த எளிய பத்திரிக்கையால் கர்த்தருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டோர் அநேகராவார்கள். தேவ எக்காளம் பத்திரிக்கையை வாசித்து ஆண்டவரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று மறுபிறப்பின் அனுபவத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், தேவ சமாதானத்தையும் பெற்றவர்கள் பலருண்டு. தங்கள் ஜெப மற்றும் உபவாச வாழ்க்கைகளில் பொருத்தனை பண்ணி நல்ல ஜெப, உபவாச மாந்தர்களாக இருக்கும் தேவ பிள்ளைகள் உண்டு. தேவ எக்காளத்தில் நான் எழுதுவதை கருத்தில் கொண்டு தங்கள் வீடுகளிலிருந்த தொலைக் காட்சி என்ற கரும் பெட்டிக்கு முடிவு கட்டிய கர்த்தருடைய பிள்ளைகள் பலராவார்கள். அப்படியே தினசரி செய்தித்தாட்களுக்கு ஒரு காலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் அவைகளை வாசிப்பதைவிட்டு முற்றும் விலகி ஆண்டவருடைய வார்த்தைகளை வாசிப்பதற்கு தங்களை ஒப்புவித்திருக்கின்றனர். கர்த்தருக்கே மகிமை. தேவ எக்காளத்தில் எழுதப்படும் மிஷனரி செய்திகளை வாசித்து தங்கள் வாழ்க்கையை கர்த்தருக்கு ஒப்புவித்து மிஷனரிகளாக வட மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றவர்கள் உண்டு. இப்படி இந்த எளிய பத்திரிக்கையால் எத்தனை எத்தனையோ ஆசீர்வாதங்களைப் பெற்றோர் உண்டு. கர்த்தர் ஒருவருக்கே துதி, கனம், மகிமை உண்டாவதாக.

தங்களுக்கு வரும் தேவ எக்காள பத்திரிக்கைகளை புத்தக ரூபமாக பைண்ட் செய்து வைத்து படிப்போர் அநேகர் உண்டு. கிறிஸ்தவ வீடுகளில் தேவ எக்காளம் வந்ததும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பதும், முதலில் அதை தபால்காரரிடமிருந்து பெற்றவர்கள் முதலில் அதைப் படித்து முடிக்க தகுதி பெற்றவர்கள் என்ற அன்புச் சண்டைகளும் வீட்டில் எழும்புவது சகஜம். தேவ எக்காள பத்திரிக்கையை தாங்கள் தங்கள் கண்களில் கண்ணீரை வடித்துக் கொண்டே வாசித்ததாக எனக்கு வந்த கடிதங்கள் பல உண்டு. பத்திரிக்கை வந்ததும் அதை ஒரு தடவைக்கு மேலும் சிலர் அதை மூன்று தடவைகள் கூட படித்ததாக கூறியிருக்கின்றனர். தேவ எக்காளம் வீட்டிற்கு வந்த உடன்தானே வீட்டிற்கு வருவோர் யாருடைய கண்களில் பட்டு அவர்கள் அதை எடுத்துச் சென்றுவிடாதபடி மறைவாக வைப்போரும் உண்டு. தாங்கள் படித்த பின்னர் மற்றவர்களுக்குப் படிக்கக் கொடுத்தாலும் அதை கவனமாக திரும்ப வாங்கி பொக்கிஷமாக தங்களண்டை வைத்துக் கொள்ளும் தேவ பிள்ளைகள் உண்டு. தேவனுடைய வேத புத்தகத்திற்கு அடுத்தபடியாக நான் நேசித்து படிக்கும் பத்திரிக்கை "தேவ எக்காளம்" என்று அநேக தேவ மக்கள் எனக்கு எழுதியிருக்கின்றனர். இதுபற்றிய பரவசமான செய்திகளை இன்னும் எவ்வளவோ எழுதிக் கொண்டு செல்லலாம். எல்லா துதி, ஸ்தோத்திரம், கனம், மகிமை, புகழ்ச்சி அனைத்தும் அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குடியானவர் ஒருவருக்கே உண்டாவதாக.

இந்த எளிய பத்திரிக்கையை நான் தேவ ஜனத்திற்கு எழுதி வெளியிட வேண்டுமென்பது தேவனின் அநாதி நோக்கமாக இருந்து வந்தது என்பதை நாம் எந்த ஒரு சந்தேகத்திற்கு இடமின்றி கண்டு கொள்ள முடியும். சிறுவனாக நான் படிக்கும் ஆரம்ப காலத்திலிருந்தே தேவன் எனக்கு நல்ல எழுதும் தாலந்தைக் கொடுத்து இந்த ஊழியத்திற்காக என்னைப் பயிற்றுவித்தார். நான் சிறுவனாகப் பள்ளியில் படிக்கும் போதே "சாமுவேலைப் போல எழுதுங்கள்" என்ற வார்த்தைகளைக் கூறிக் கொண்டே என்னுடன் படிக்கும் மற்ற மாணவர்களை ஆசிரியர் அடிப்பதை நான் பார்த்திருக்கின்றேன். நான் நடுநிலைப்பள்ளியில் படிக்கும்போது எனது கட்டுரை நோட்டை மாத்திரம் எனது வகுப்பு ஆசிரியை மார்த்தாள் டீச்சர் அவர்கள் ஆண்டின் கடைசியில் தனக்கென எடுத்துச் செல்லுவதை நான் கண்டிருக்கின்றேன். மற்ற மாணவர்களின் கட்டுரை நோட்டுகளை எல்லாம் அவரவருக்கு அவர்கள் கொடுத்து விடுவார்கள். "கட்டுரை எழுத்துப் போட்டி வைத்தால் அதின் முதல் பரிசை சாமுவேலே நிச்சயமாக தட்டிச் செல்லுவான்" என்று எனது உயர்நிலைப்பள்ளி வகுப்பு ஆசிரியர் வில்லியம்ஸ் அவர்கள் (ஏழாயிரம்பண்ணை ஊரைச் சேர்ந்தவர்கள்) சொல்லுமளவிற்கு தேவன் எனக்கு நல்ல ஞானத்தைக் கொடுத்திருந்தார். தமது ஊழியத்திற்குத் தேவையான ஆங்கில அறிவையும் நான் பெற்றுக் கொள்ள வசதியாக இந்த நீலகிரி மலைகளிலுள்ள ஒரு தேயிலை கம்பெனியில் சுமார் 20 ஆண்டு காலமாக ஒரு கடை நிலை குமாஸ்தாவாக பணியாற்றவும், அந்த அலுவலகத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளில் முக்கியமான தொன்று என்னவெனில் கம்பெனிக்கு வருகின்ற தமிழ் மற்றும் ஆங்கில கடிதங்கள் யாவற்றையும் நான் கவனமாகப் படித்துப் பார்த்து அவைகளை சுமார் 90 பைல்களில் சம்பந்தப்பட்ட அந்தந்த பைல்களில் பத்திரமாகப் போட்டு வைத்து அவைகளை மேலாளர் கேட்கும் போது நான் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான். அப்படி வரும் ஆங்கில கடிதங்களை வாசித்து, வாசித்து எனது ஆங்கில அறிவை நான் நன்கு பெருக்கிக் கொள்ள ஆண்டவர் வகை செய்தார். அத்துடன் ஆங்கிலம், தமிழ் வேதாகமங்களை ஒப்பிட்டுப் படித்தும் நான் எனது ஆங்கில அறிவை கணிசமாக வளர்த்துக் கொண்டேன். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.

தேவ எக்காளத்தில் வெளி வந்த பரவசமான மேல் நாட்டுப் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்று சரித்திரங்கள் அனைத்தும் நான் இங்கிலாந்திலுள்ள லண்டனிலிருந்து பெற்றுக்கொண்ட ஆங்கில கிறிஸ்தவ புத்தகங்களிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவைகளாகும். நீலகிரி மலைகளிலிருந்து கொண்டு லண்டனிலுள்ள ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்திலிருந்து நான் எப்படி புத்தகங்களை விலை கொடுத்துப் பெற்றுக்கொள்ள முடியும்? புத்தகங்களுக்கான பணத்தை நான் எப்படி இங்கிருந்து அங்கு அனுப்ப இயலும்? இவை எல்லாம் கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியாத காரியங்களாகும். ஆனால், அதற்கும் "என் நாமம் அதிசயமானவர்" என்ற நம் அதிசய தேவன் ஒரு ஆச்சரியமான வாசலைத் திறந்தார். இங்கிலாந்திலுள்ள மிஸ்.கோல் (Miss.Colle) என்ற ஒரு ஆங்கில மிஷனரி அம்மையார் இங்கு கோத்தகிரியில் நாங்கள் இருந்த வீட்டிற்கு சற்றுத் தொலைவில் இருந்தார்கள். கர்த்தருக்குள் என்னை அதிகமாக நேசித்த அவர்கள் லண்டனிலுள்ள தனது வங்கிக் கணக்கில் உடனே பணம் எடுத்துக் கொள்ள வசதியாக செக் (காசோலை) எனக்கு தருவார்கள். நான் அதற்கு சமமான இந்திய பணத்தை அவர்களுக்கு உடனே கொடுத்து விடுவேன். அவர்கள் கொடுத்த செக்குடன் நான் எனக்குத் தேவையான புத்தகங்களின் பெயர்களை எழுதி அந்த கிறிஸ்தவ புத்தக ஸ்தாபனத்தினருக்கு (The Banner of Truth Trust, Edinburgh) அனுப்பி அநேக அருமையான புத்தகங்களை நான் லண்டனிலிருந்து தபால் மூலமாகப் பெற்றுக் கொண்டேன். கர்த்தருக்கே மகிமை.

தேவ எக்காளத்திற்கான செய்திகளை நான் ஒரு தடவை மேலெழுந்தவாரியாக எழுதிவிட்டு பின்னர் அதை அச்சுக்கோர்ப்புக்கு வசதியாக இரண்டாம் தடவை எழுதுவேன். இப்படி நான் பல்லாண்டு காலமாக செய்து வந்தேன். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்ததால் ஒரு தமிழ் டைப் ரைட்டருக்காக ஆண்டவரிடம் ஜெபிக்க ஆரம்பித்து ஒரு நாள் பகற் காலத்தில் அதற்காக நான் மிகவும் போராடி ஜெபித்து அன்றைய தினம் எனக்கு வந்த தபாலில் ஒரு சாதாரண தபால் கவரில் எந்த ஒரு லட்டரும், அனுப்புகிறவரின் முகவரியும் இல்லாமல் ஒரு வெள்ளைத்தாளில் ரூபாய் 10000 (பத்தாயிரம்) க்கான டிராப்ட் சுற்றி வைக்கப்பட்டு அதில் அனுப்புகிறவர் "இருக்கிறவராகவே இருக்கிறேன்" என்ற எழுத்து மட்டும் காணப்பட்டது. தேவனுக்கே மகிமை. அதைக் கொண்டு உடனே புதியதொரு தமிழ் டைப் ரைட்டரை நான் வாங்கிக் கொண்டேன். தமிழில் டைப் செய்ய தெரியாத நான் ஒரே வாரத்தில் தமிழில் டைப் செய்யக் கற்றுக்கொண்டு அதின் பின்னர் தேவ எக்காள செய்திகளை டைப் ரைட்டரின் உதவியால் தயாரித்து அச்சிட்டு வெளியிட்டேன். நாட்கள் செல்லச் செல்ல டைப்ரைட்டரும் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. பின்னர், தேவனுடைய கிருபையாலும், எனது பிள்ளைகளின் பலமான தூண்டுதலாலும் ஒரு கம்பியூட்டர் வாங்கி அதைப் பயன்படுத்தத் தொடங்கி கடந்த பல ஆண்டுகளாக கம்பியூட்டரிலேயேதான் தேவ எக்காளத்திற்கான செய்திகளை நான் டைப் செய்து அச்சுக்குக் கொடுத்து வருகின்றேன். கம்பியூட்டரில் எனக்கு முன்னாலுள்ள கீபோர்ட் (Key Board) முழுமையாக ஆங்கிலத்தில் இருந்தபோதினும் அதைக் கொண்டு தமிழ் எழுத்துக்களை அச்சுப் பதிப்பது எனக்கு மிகவும் இலகுவாக உள்ளது. அனைத்தும் அன்பரின் அதிசய நடத்துதல்களாகும். நமது தேவ எக்காளத்தை அச்சிட்டுத் தரும் குன்னூர் பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் திரு.ஆறுமுகம் (வைராக்கியமான இந்து பக்தன்) அவர்கள் ஒரு நாள் "உண்மையாகவே, உங்கள்ஆண்டவர் உங்களோடு கூட இருப்பதால் நீங்கள் இந்த வயதிலும் இத்தனை சிறப்பாக கம்பியூட்டரில் வேலை செய்ய முடிவதை நான் காண்கின்றேன். இளவயதினான என்னால் கூட இதை ஒருக்காலும் செய்ய இயலாது" என்று சொன்னார்கள். கர்த்தருக்கே மகிமை.

"தேவ எக்காளம் தேவனுடைய பத்திரிக்கை" என்று ஒரு தேவ பிள்ளை ஒரு சமயம் எனக்கு எழுதியதைப் போல அது தேவனுடைய பத்திரிக்கையாகவே இருந்து வருகின்றது. ஒரு தனி மனிதனின் சுய விருப்பம், சுய சித்தம், சுய பெலத்தின்படி தேவ எக்காளம் ஆரம்பிக்கப்பட்டு உலக ஆதாயம், மனிதப் புகழ்ச்சி, மனிதனின் புகழ் ஆரவாரம் போன்றவைகளுக்கு அது இரையாகாமல் அன்பின் ஆண்டவரை மட்டும் உயர்த்திக் காண்பித்து, எந்த ஒரு மனித பயமுமில்லாமல் (கலா 1 : 10) தேவனுடைய ஜனத்துக்கு சத்தியத்தை திட்டமாக எடுத்துக்கூறி முன் சென்று கொண்டிருக்கின்றது. அது ஆண்டவரால் ஆரம்பிக்கப்பட்டபடியால் இத்தனை நீண்ட ஆண்டு காலங்களாக அது தேவ நாம மகிமைக்காக வெளியிடப்பட்டு வருகின்றது. அல்லேலூயா.

இந்த எளிய தேவ எக்காள பத்திரிக்கை மெய் தேவ மக்களுக்கு இத்தனை ஆசீர்வாதமாக இருந்து வருவதன் ஒரே காரணம் அதை எழுதுகின்ற உங்கள் சகோதரனாகிய நான் எனது மனதும், மாம்சமும் விரும்புகின்ற வழியில் எனது சுய பெலத்தால், எனது சுய ஞானத்தைக் கொண்டு, எனது மண்டை அறிவின் உதவியால் நான் அதை எழுதாமல் அன்பின் ஆண்டவரையே அவருடைய சுய இரத்தத்தால் சம்பாதித்துக் கொண்ட தமது ஜனத்துக்கு எழுதும்படியாக அவரைக் கேட்டு அவருடைய முழுமையான ஒத்தாசையோடு எழுதுவதுதான். தேவ எக்காளத்தில் ஊழியத்தின் பணத்தேவைகளுக்காகவோ, அல்லது தேவ எக்காளத்திற்குக் காணிக்கைக் கொடுத்தவர்கள் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதங்களைப் பற்றியோ ஒரு வரியும் எழுதப்படுவதில்லை என்பதை நீங்கள் நன்கு கவனிப்பதுடன் உங்கள் சகோதரனாகிய பாவியாகிய எனது படமும் அதில் வருவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அநேக தேவ பிள்ளைகள் எனது படத்தைப் பார்க்க ஆசைப்பட்டு எனது போட்டோ ஒன்றை தங்களுக்கு அனுப்பும்படியாக விரும்பிக் கேட்டுக்கொண்ட அவர்களின் விருப்பத்தை மொத்தத்தில் நிறைவேற்ற ஆசைப்பட்டு 2007 ஆம் ஆண்டு நாம் வெளியிட்ட "தேவ எக்காளம் 40 ஆம் ஆண்டு ஸ்தோத்திர மலரில்" எனது படத்தை நான் வெளியிட்டேன். அது முற்றும் தவறு, மாமிசத்தின்படி எடுத்த ஞானமற்ற முடிவு என்பதை பின்பு நான் உளமார உணர்ந்து ஆண்டவரிடம் உள்ளம் கசிந்து மன்னிப்பு கேட்டதுடன் இனிமேல் நான் அந்த தவறைச் செய்ய மாட்டேன் என்று எனக்குள் தீர்மானமும் எடுத்துக் கொண்டேன்.

புத்தகங்களிலிருந்து ஆங்கிலச் செய்திகளை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யும்போது அந்தப் புத்தகத்தை தேவ சமூகத்தில் வைத்து புத்தகத்திற்கு முன்பாக என்னைத் தாழ்த்தி முகம் குப்புற விழுந்து அன்பின் ஆண்டவரே, மொழி பெயர்ப்பு வேலையைச் செய்து தரும்படியாக அவரிடம் கெஞ்சிக் கேட்கின்றேன். தலையங்கச் செய்திகள் எழுதும்போதும் மற்ற செய்திகள் தயாரிப்பிற்கும் கர்த்தரையே துணையாகக் கொள்ளுகின்றேன். ஆண்டவரிடமிருந்து எழுதுவதற்கான கிருபைகள் கிடைக்காத பட்சத்தில் அவர் இரக்கம் செய்யும்படியாக அவருடைய சமூகத்தில் சில நாட்கள் கூட எந்த ஒரு எழுத்தும் எழுதாமல் ஜெபத்தில் பொறுமையாகக் கர்த்தருக்குக் காத்திருக்கின்றேன்.

"ஆண்டவரே, உம்முடைய வாயிலிருந்து கிருபையுள்ள வார்த்தைகள் புறப்பட்டன (லூக்கா 4 : 22) என்று நாங்கள் உம்முடைய வேதத்தில் வாசிக்கின்றோமே, அந்த கிருபையுள்ள வார்த்தைகளே தேவ எக்காளத்திலிருந்தும் புறப்பட்டுச் செல்லட்டும்" என்று நான் ஆண்டவரிடம் அடிக்கடி ஜெபிக்கின்றேன். "நான் வீணாக ஓடினதும், வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு (பிலி 2 : 15) இந்த எளிய பத்திரிக்கையின் மூலமாக சந்திக்கப்பட்ட உமது அடியார்களான ஒரு கூட்டம் மக்களை நான் பரலோகில் சந்திக்க எனக்கு கிருபை செய்யும்" என்றும் நான் உள்ளத்தின் பாரத்தோடு மன்றாடுகின்றேன். அன்பின் ஆண்டவர் தம்முடைய மகிமையின் சுவிசேஷத்தை பாவியாகிய எனது கரங்களில் தருவதற்கு நான் தகுதியுள்ளவன் என்று எண்ணி (1 தெச 2 : 4) என்னை கனப்படுத்தியதால் நானும் அந்த அன்பருக்கு எத்தனையான ஜெபத்தோடும், உபவாசங்களோடும் அவருடைய ஊழியத்தை இதுவரை நிறைவேற்றினேன் என்ற உண்மை அவருடைய ஞாபக புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதற்காக அவருடைய ஆணி கடாவுண்ட பொற் பாதங்களை முத்தமிடுகின்றேன்.

தேவ எக்காளத்தின் 43 ஆம் ஆண்டின் முடிவில் மேற்கண்ட சில காரியங்களை உங்களுக்கு எழுதி ஞாபகப்படுத்தி தேவ எக்காளம் தேவனால், தேவனுடைய நாம மகிமைக்காக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிக்கை என்பதை தாழ்மையோடு நினைவுபடுத்துகின்றேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

கடந்த தேவ எக்காள இதழ் உங்களில் அநேகருக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்ததை எண்ணி ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றேன். செய்திகளை வாசிப்பதுடன் நின்றுவிடாமல் உங்கள் அனுதின ஜீவியத்தில் அவைகளை உங்கள் நடை முறை வாழ்க்கைக்கு தேவ பெலத்தால் கட்டாயம் கொண்டு வாருங்கள். அந்த இதழில் தேவ மனிதர் ஜாண் சார்லஸ் ரைல் அவர்கள் எழுதிய "நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?" என்ற தேவ செய்தியை மீண்டும் ஒரு தடவை ஜெபத்துடன் வாசித்து உங்கள் தனிப்பட்ட ஜெப வாழ்க்கையை ஊன்றக் கட்டிக் கொள்ளுங்கள். தினமும் சில மணி நேரங்களை தேவனோடு தனிமையில் செலவிட்டு அவரது அமர்ந்த மெல்லிய குரலை கேட்க தேவ பெலத்தால் பிரயாசப்படுங்கள்.

இந்த தேவ எக்காள இதழ் உங்கள் கரங்களை வந்து சேரும்போது நீங்கள் புத்தாண்டான 2011 ஆம் ஆண்டுக்குள் நன்கு கடந்து சென்றிருப்பீர்கள் என்று எண்ணி உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். இந்த 2011 ஆம் ஆண்டானது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இம்மை மறுமைக்குரிய சகல தேவ ஆசீர்வாதங்களும் நிறைந்த பாக்கிய ஆண்டாக இருக்க அன்பின் பரம தகப்பன் கிருபை செய்வாராக. எல்லா ஆண்டுகளையும் விட இந்த ஆண்டில் நீங்கள் உங்கள் அன்பின் ஆண்டவரோடு பரலோகில் வாழப்போகும் நித்திய ஜீவ வாழ்வை ஆணித்தரமாக உறுதிப்படுத்திக் கொண்டு நிச்சயத்தோடு இலக்கை நோக்கித் தொடருங்கள். ஆகாயத்தை அடிக்கிறவர்களாக ஒருக்காலும் சிலம்பம் பண்ணி விடாதீர்கள்.

இந்த புத்தாண்டில் உங்களுடைய ஆவிக்குரிய பரிசுத்த வாழ்க்கைக்கு ஆசீர்வாதமான மூன்று தேவ ஆலோசனைகளை நான் உங்களுக்கு முன்னர் வைக்க ஆசைப்படுகின்றேன். அவைகளை ஜெபத்தோடு வாசித்து உங்கள் ஆவிக்குரிய பரிசுத்த வாழ்வுக்கு பயன் உள்ளதாக்கிக் கொள்ளுங்கள்.

 

உங்கள் இரட்சிப்பின் நிச்சயத்தை
உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

"ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (யோவான் 3 : 3) என்று நிக்கோதேமுவிடத்தில் ஆண்டவர் திட்டமும் தெளிவுமாகக் கூறினார். "ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான், பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரி 5 : 17) என்று அப்போஸ்தலன் தனது நிருபத்தில் எழுதுவதை நாம் பார்க்கின்றோம்.

கிறிஸ்தவ குடும்பங்களில் பிறப்பதாலோ, அல்லது எந்த ஒரு கிறிஸ்தவ சபைகளில் நாம் அங்கத்தினராக இருப்பதாலோ, ஒழுங்காக ஆலய ஆராதனைகளில் பங்கு எடுத்து கர்த்தருடைய பந்திகளில் தவறாது கலந்து கொள்ளுவதாலோ, கர்த்தருக்கு அதிகமாகக் காணிக்கை, தசமபாகம் கொடுப்பதினாலோ, ஆலயங்கள் இல்லாத இடங்களில் ஆலயங்கள் கட்டிக் கொடுப்பதினாலோ, வட இந்திய மிஷனரிகளை மாதாந்திர பண ஆதாரங்களைக் கொடுத்து தாங்குவதினாலோ, சபைக் கமிட்டிகளில் முக்கியமான அங்கம் வகித்து திருச்சபையை செம்மையாக நிர்வகித்துச் செல்லுவதினாலோ மற்றும் இப்படி ஓராயிரம் காரியங்களைச் செய்வதினாலோ ஆண்டவருடைய ராஜ்யத்தில் நாம் ஒருக்காலும் பிரவேசிக்க இயலாது. இவை அனைத்தும் நிச்சயமாக அவசியமான காரியங்கள்தான். ஆனால், நமது தனிப்பட்ட வாழ்வில் நாம் செய்த நமது பாவ அக்கிரமங்களுக்காக தேவ சமூகத்தில் மனங்கசந்து அழுது, நமது மார்பில் அடித்துப் பிரலாபித்துப் புலம்பி, கண்ணீர் சிந்தி, பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்றுக் கொள்ளாத பட்சத்தில் மேற்கண்ட பக்திக்கடுத்தக் காரியங்கள் அனைத்தும் வீணும், வியர்த்தமுமாக முடியும் என்பதில் துளிதானும் சந்தேகம் கிடையாது. என்று நாம் இந்த மறுபிறப்பின் நிச்சயத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றோமோ அப்பொழுது ஆண்டவர் நமது உள்ளத்தில் பிரவேசித்து அங்கே தமது ஆளுகையை ஆரம்பிக்கின்றார்.

சாமுவேல் தீர்க்கன் தைலக் கொம்பினால் தாவீதை அபிஷேகம் பண்ணின நாள் முதற் கொண்டு கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின் மேல் வந்து இறங்கியிருந்தார் என்று நாம் வாசிக்கின்ற வண்ணமாக என்று நாம் இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றோமோ அந்த நாளிலிருந்து கர்த்தர் நம் இருதயத்தில் வாசம் செய்கின்றவராக இருக்கின்றார்.

"நான் உங்களுக்குள் இருக்கிறதை அந்நாளிலே அறிவீர்கள்" (யோவான் 14 : 20) என்றும் "அவர் உங்களுக்குள் வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள்" (யோ 14 : 17) என்றும் அன்பின் ஆண்டவர் நமது இருதயத்தில் வாசம் செய்கின்ற காரியத்தைத் திட்டமாகக் கூறுகின்றார்.

"நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கிறார்" (ரோமர் 8 : 16) என்றும் "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்" (கொலோ 1 : 27) என்றும் "இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்" (கலா 2 : 20) என்றும் "தேவன் தமது குமாரனை எனக்குள் வெளிப்படுத்த பிரியமாயிருந்தார்" (கலா 1 : 16) என்றும் அப்போஸ்தலன் நிருபங்களில் நமது இருதயத்தில் கர்த்தர் வாசஞ் செய்கின்ற ஆச்சரிய காட்சியை விவரித்துப் பேசுகின்றார்.

உங்கள் சகோதரனாகிய நான் எனது பாவங்கள் எழுதப்பட்ட தாட்களுடனும், வேதாகமத்துடனும் எங்கள் வீட்டிற்கு தென் பக்கத்தில் இருந்த வயல் வெளிகளுக்குச் சென்று எனது ஒவ்வொரு பாவத்தையும் தேவனுக்கு அறிக்கையிட்டு 51 ஆம் சங்கீதத்தையும் வாசித்து வாசித்து அழுது கண்ணீர் சிந்தி பாவ மன்னிப்பிற்காகக் கெஞ்சின எனது 18 ஆம் வயதில் எனது பாவங்களை மன்னித்து, பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், மறுபடியும் பிறந்த பரலோக பாக்கிய அனுபவத்தையும் தந்து எனது உள்ளத்திற்குள் வாசம் செய்ய வந்த அன்பின் நேசர் இன்று வரை என்னைவிட்டு நீங்காத நேச கர்த்தராக என்னைக் கரம் பிடித்து வழி நடத்திக் கொண்டு செல்லுவதை நான் ஆச்சரியத்துடன் காண்கின்றேன்.

காலஞ்சென்ற, மறுபடியும் பிறந்து இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொண்ட என் பரிசுத்த தந்தை தனது அன்பின் ஆண்டவரை தனது பரிசுத்த தாயாராக வைத்து அவரை நேசித்துக் கனப்படுத்தினார்கள். தனது மரணத்திற்கு முன்பாக தான் தனது கைப்பட விருத்தாப்பியம் காரணமாக கோணல் மாணலாக எனக்கு எழுதிய தனது கடைசி கடிதத்தில் "மகனே, நமது ஆண்டவராகிய அந்த பரலோகத் தாயை உனது எந்த ஒரு செயலாலும் துக்கப்படுத்தி விடாதே" என்று எழுதியிருந்தார்கள். எனது தந்தையின் வார்த்தைப்படி இன்று நான் நமது அன்பின் ஆண்டவரை முற்றுமான எனது தனிமை வாழ்வில் பெற்ற தாயாக வைத்து அவரை நேசித்துக் கனப்படுத்தி வருகின்றேன். நான் செய்கின்ற எனது ஒவ்வொரு காரியத்திற்கும் அந்த பரம தாயின் கிருபைக்காக கெஞ்சி, கெஞ்சி வழி நடந்து வருகின்றேன்.

எப்பொழுது நாம் இந்த இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொண்டோமோ அப்பொழுது ஆண்டவருடைய பாதங்களை நாம் வாஞ்சித்துக் கதறுவோம். சங்கீதக்காரரின் அனுபவமும் அதுவேதான். "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங் 42 : 1) என்று அவர் கூறினதுடன் "எனக்கோ தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம்" (சங் 73 : 28) என்று அவர் சொன்னதுடன் உமது பாதார விந்தங்களைத் தவிர இந்த உலகத்தில் எனக்கு வேறு ஒரு ஆசையோ, பாசமோ, பற்றோ இல்லை என்ற விதத்தில் "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர வேறே விருப்பமில்லை" (சங் 73 : 25) என்று கூறினார்.

தங்களின் மறுபிறப்பின் காரியம் தவறானதாகையால் நாளொன்றுக்கு கொஞ்சமான நிமிட நேரத்தை தினமும் ஜெபத்தில் செலவிட்டுவிட்டு மற்ற மீதியான நீண்ட மணி நேரங்களை எல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதிலும், செய்தி தாட்கள் படிப்பதிலும், உற்றார் உறவினர், பிள்ளைகள், நண்பர்களுடன் சம்பாஷித்து நேரங்களை வீணடிப்பதிலும் மக்கள் செலவிடுகின்றனர். ஆண்டவருடைய பாதங்களில் அமர்வது என்பது அவர்களுக்கு கூடாத காரியமாக இருக்கின்றது. ஜெபத்தில் முழங்கால்களை முடக்குவதைத் தவிர்த்து வேறு எது வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். அதின் ஒரே காரணம் அவர்களின் மறுபிறப்பு முற்றும் தவறானது.

உலகம் சுற்றும் தேவ ஊழியர்களை எடுத்துக் கொள்ளுங்கள், வருடத்தின் 365 நாட்களிலும் தங்கள் தாய் நாட்டு ஊழியங்களுடன் உலக நாடுகள் முழுவதிலும் ஊழியம், ஊழியம் என்று பம்பரமாக சுற்றி ஓடிக் கொண்டிருப்பார்கள். கர்த்தருக்காக அந்த வண்ணமாக ஓய்வில்லாமல் ஓடி ஓடி உழைத்து ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுவதாக அவர்கள் மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்ளுகின்றனர். ஆனால், அவர்கள் தினமும் ஆண்டவரோடு போதுமான அளவு நேரத்தை ஜெபத்தில் செலவிடமாட்டார்கள். ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் நேரத்தை வீணாக்குவதைவிட ஜனங்களுக்கு பிரசங்கிப்பதை மேல் என்று அவர்கள் பெருமையாக எண்ணிக் கொள்ளுவார்கள். இப்படிப்பட்ட ஆத்திர அவசரமான ஜெபமற்ற ஊழியங்கள் இறுதியில் வீணும் வியர்த்தமுமாக முடிவடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது. தமக்கு பணிவிடை செய்வதில் முழு மூச்சாக இருந்த மார்த்தாளை ஆண்டவர் அங்கீகரிக்கவில்லை என்றும் தமது பாதங்களில் அமர்ந்து ஆண்டவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளை கவனித்த மரியாளே அவருடைய திருவுளத்துக்கு ஏற்றவளானாள் என்றும் நாம் பார்க்கின்றோம்.

உலகமெங்கும் சென்று தேவனுடைய சுவிசேஷத்தைப் பிரசிங்கித்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங் அவர்கள் தனக்கு எத்தனை ஊழியங்கள் இருந்தபோதினும் அவை எல்லாவற்றையும் சில காலத்திற்கு விட்டுவிட்டு அங்கிருந்து சிம்லா மலைகளுக்கு வந்து அங்கே சுபத்து என்ற இடத்திலிருந்த தமது பங்களாவில் சில மாதங்கள் தங்கி ஆண்டவரோடு அந்த மாதங்களை ஜெபத்தில் தனிமையில் செலவிட்டுத் தன்னைத் தனது இரட்சகரில் நன்கு புதுப்பித்துக் கொண்டு ஆண்டவரிடம் தான் பெற்ற தனது புது பெலத்தோடு ஊழியத்தைத் தொடர்வதற்காக திரும்பிச் சென்றதை நாம் அவருடைய புத்தகங்களில் வாசித்துப் பரவசமடைகின்றோம்.

உங்களுடைய மறுபிறப்பு, உங்கள் இரட்சிப்பின் காரியம் சரியாக இருக்கின்றதா? ஆண்டவருடைய பாதங்களை நீங்கள் அதிகமாக வாஞ்சிக்கின்றீர்களா? ஆண்டவருடைய பாதங்களில் நீங்கள் ஜெபத்தில் அமரும் நேரங்கள் இனிமையானதாக இருக்கின்றதா? அன்பின் ஆண்டவரால் தினமும் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் உணர முடிகின்றதா? நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடது புறமாய்ச் சாயும் போதும் வழி இதுவே இதிலே நடவுங்கள் என்று உங்களுடைய உள்ளத்திலிருந்து பேசும் கர்த்தாவின் குரலை கேட்க முடிகின்றதா?

அந்த இரட்சிப்பின் சந்தோசத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இதுவரை பெற்றுக்கொள்ளாதபட்சத்தில் காலதாமதம் செய்யாமல் இன்றே தேவ சமூகத்தில் முழங்காலூன்றி நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடு, அழுகையோடும், கண்ணீரோடும் உங்கள் கடந்த கால பாவங்களை ஆண்டவருக்கு அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்துக்காகவும், இரட்சிப்பின் சந்தோசத்துக்காகவும் அவரிடம் கதறி அழுங்கள். ஒரே நாளில் அந்த இரட்சிப்பின் சந்தோசத்தை ஆண்டவரிடமிருந்து பெற்றுக் கொள்ளாவிட்டால், தொடர்ந்து அவரிடம் அழுது விடாப்பிடியாக அவரை நோக்கிக் கெஞ்சிக் கொண்டிருங்கள். உங்கள் சகோதரனாகிய நானும் அப்படித்தான் சில நாட்கள் கெஞ்சினேன். இறுதியில், தேவன் எனக்கு இரங்கினார். உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும், இரட்சிப்பின் நிச்சயத்தையும் எனக்குத் தந்தார். இந்த மறுபிறப்பின் நிச்சயம், இரட்சிப்பின் சந்தோசம் இல்லாமல் நாம் ஒருக்காலும் தேவனுடைய நித்திய இளைப்பாறுதலுக்குள் (எபி 4 : 9) பிரவேசிக்க முடியாது என்பதை உறுதியாக உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

"வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்" (ஏசாயா 1 : 18)

"நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1 : 8 - 9)

 

என் பாவம் தீர்ந்த நாளையே அன்போடு எண்ணி ஜீவிப்பேன்,
அந்நாளில் பெற்ற ஈவையே சந்தோசமாய்க் கொண்டாடுவேன்.
இன்ப நாள், இன்ப நாள் என் பாவம் தீர்ந்து போன நாள்,
பேரன்பர் என்னை இரட்சித்தார், சீராக்கி இன்பம் நல்கினார்,
என் உள்ளமே, உன் மீட்பரை என்றைக்கும் சார்ந்து வாழுவாய்.

 

தேவ ஜனமே, சிலுவைப் பாதையை தெரிந்து கொள்ளுங்கள்

"நான் போன பின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்" (அப் 20 : 29) என்று அப்போஸ்தலன் சொன்னது போல இந்தக் கடைசி கால நாட்களில் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், நீதியின் ஊழியக்காரருடைய வேஷைத்தைத் தரித்துக் கொண்ட சாத்தானின் கைக்கூலிகள் தேவனுடைய ஜனத்துக்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும், சிலுவையையும், சிலுவை சுமப்போருக்குள்ள பாடு துயரங்களையும், இடுக்கமான வாசல் வழியாக ஜீவனுக்குப் போகிற பாதையையும் பிரசங்கிப்பதற்குப் பதிலாக சரீர சுகத்தையும், செழிப்பையும், செல்வத்தையும், இம்மைக்குரிய நிலையற்ற ஆசீர்வாதங்களையும் குறித்துக் கவர்ச்சியாகப் பேசி அந்த அப்பாவி மக்களை தங்கள் பக்கமாக சுண்டி இழுக்கின்றனர்.

"மோட்ச பிரயாணம்" என்ற அருமையான புத்தகத்தை நீங்கள் வாசிப்பீர்களானால் உச்சிதப்பட்டணம் சென்ற கிறிஸ்தியானையும், உண்மையையும் அவர்கள் சென்ற பாதையில் தேமாஸ் என்ற ஒரு மனிதன் மேட்டிலிருந்து கைதட்டிக் கூப்பிட்டு "ஐயாமாரே, வாங்கோ, வாங்கோ இங்கே வந்து இங்குள்ள வெள்ளிச் சுரங்கத்தில் வெள்ளிப் புதையலைத் தோண்டுங்கோ, கொஞ்சம் தோண்டினால் போதும், சீக்கிரமாக அது உங்களுக்கு கிடைத்துவிடும். அநேகர் அப்படி தோண்டி எடுத்து கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள். நீங்களும் கோடீஸ்வரர்களாகி நிம்மதியாக எல்லா பாக்கியங்களோடும் இந்த உலகத்தில் வாழலாம்" என்று அறைகூவி அழைத்ததுபோல இந்த சிலுவைப் பகைஞரான ஊழியர்கள் தங்களண்டை வந்து உலக ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும்படியாக இந்த தேவ மக்களை அறைகூவி அழைக்கின்றனர். தொழிலில் ஆசீர்வாதம், வியாபாரத்தில் ஆசீர்வாதம், விவசாயத்தில் ஆசீர்வாதம், உத்தியோகத்தில் ஆசீர்வாதம், குடும்பத்தில் ஆசீர்வாதம், தொட்டதெல்லாம் பொன்னாகும் ஆசீர்வாதம் என்று உலக ஆசீர்வாதங்களை அள்ளிப் பொழிகின்றனர்.

"நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்" (1 கொரி 1 : 23) என்றும், "இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்க தீர்மானித்திருந்தேன்" (1 கொரி 2 : 2) என்றும் அப்போஸ்தலன் சொல்லுவதை நாம் பார்க்கின்றோம். சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவையும், அவர் மூலமாக உள்ள இரட்சிப்பையும், நித்திய ஜீவனையும் மட்டுமே பேச வேண்டிய ஊழியன் உலக வாழ்வின் செழிப்பையும், செல்வத்தையும், ஐசுவரியத்தையும் பேசுகின்றான். மனந்திரும்பி, தேவனுடைய வருங்கோபத்திற்குத் தப்பிக் கொள்ளவும், முடிவில்லாத நித்தியஅக்கினி கடலின் சொல்லொண்ணா வேதனைகளுக்கு தங்களை விலக்கிக் காத்து ஆண்டவரை உடனே அண்டிக் கொள்ளும்படியாகவும், தேவ ஜனத்தை கண்ணீரோடும், துயரத்தோடும், வியாகுலத்தோடும் எச்சரிக்க வேண்டிய ஊழியக்காரன் கண் மூடி திறப்பதற்குள்ளாக தங்களுக்கு செட்டைகளை உண்டுபண்ணிக் கொண்டு ஆகாய மார்க்கமாக பறந்து மறையும் நிலையற்ற உலக செல்வத்தையும், ஆஸ்தி ஐசுவரியங்களான உலக மாயாபுரி சந்தைச் சரக்குகளையும் பெற்றுக் கொள்ளும் விதம் எப்படி என்று பேசி மக்களை திசை திருப்புகின்றான்.

இந்த பொல்லாத ஊழியர்களின் தலைவன்தான் அன்று தேவ மைந்தனை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டு போய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து தன்னைப் பணிந்து கொண்டால் அவைகள் எல்லாம் அவருக்குக் கிடைக்கும் என்று வாக்குப் பண்ணியவன் (மத் 4 : 8-9) என்பதை நாம் மறப்பதற்கில்லை. அந்த தேவ மைந்தன் நினைத்திருந்தால் அரண்மனையில் பிறந்து தங்கத் தொட்டிலில் தாலாட்டப்பட்டிருக்கலாம் அல்லவா! எனது தேவ ஊழியத்தின் பாதையில் நான் ஒரு சமயம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிக்கானீர் பட்டணம் சென்றிருந்த போது அரசர்கள் வாழ்ந்த அங்குள்ள பெரிய கோட்டையை பார்த்து வந்தேன். அரச குமாரர்கள் தாலாட்டப்பட்ட தங்க தொட்டில்களை எல்லாம் இன்றும் அங்கு பத்திரமாக வைத்துப் பாதுகாத்துகாத்து வருவதை நான் ஆச்சரியத்துடன் கவனித்தேன். அப்படிப்பட்ட தங்கத் தொட்டிலில் படுத்திருக்க வேண்டிய தேவ மைந்தன் "நரிகளுக்குக் குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை" (மத் 8 : 20) என்றல்லவா தனது பாடுகளைச் சொன்னார்.

அதுமட்டுமல்ல, "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத் தாமே தாழ்த்தினார்" (பிலி 2 : 6 - 8) என்று அந்த தேவனாம் கர்த்தர் தன்னை ஒன்றுமில்லா சுத்த சூன்யமாக மாற்றிக் கொண்டதைப் பார்க்கின்றோமே!

"ஐசுவரியத்தை எனக்குக் கொடாதிருப்பீராக, என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்" (நீதி 30 : 8 - 9) என்று தேவனை நோக்கிக் கதறிய ஞானியைவிட நம்மிடையே உள்ள ஆசீர்வாதப் பிரசங்கிகள் புத்திசாலிகள். "உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும், உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்" (1 தீமோ 6 : 7 - 8) என்று தேவ ஜனங்களுக்கு பரலோக ஆலோசனை சொன்ன மகா பெரிய அப்போஸ்தலனும், மூன்றாம் வானம் வரைச் சென்று வந்தவரும், தனது இரட்சகருக்காக தனது சிரசை துண்டிக்கக் கொடுத்தவருமான பரிசுத்த பவுல் அடிகளாரை விட நம்மிடையே உள்ள செழிப்பு உபதேச பிரசங்கிகள் அதிக ஞானவான்கள்.

பெரிய பெரிய ஐசுவரியவான்கள் எல்லாரும் தங்களை ஆட்கொண்ட தங்கள் அருமை இரட்சகர் இயேசுவுக்காக தங்களைத் தரித்திரராக்கிக் கொண்டார்கள். பக்தசிரோன்மணி சாதுசுந்தர்சிங்கின் தந்தை பெரிய ஐசுவரியவான். அவருடைய வீடுவாசல் எல்லாம் இன்றும் பஞ்சாப்பிலுள்ள ராம்பூரில் பெரியவைகளாகக் காணப்படுவதை நீங்கள் காண முடியும். உங்கள் சகோதரனாகிய நான் அவைகளை எல்லாம் பார்த்ததுடன் ஆண்டவர் அவருக்கு ஜீவனுள்ள தேவனாக ஒரு இரவில் தன்னை வெளிப்படுத்திக் காட்சி கொடுத்த அதே அறையில் முழங்காலூன்றி ஜெபித்து வந்த ஏழைப் பாவி நான். ஒரு தெரு முழுவதுமே அவரது வீடாக இருப்பதை இன்றும் நாம் ஆச்சரியத்துடன் காணலாம்.

தனது தந்தை வழியாக வந்த பெருஞ் செல்வம் யாவற்றையும் சுந்தர் துறந்து கடைசியாக தன்னை ஒரு எளிய பிச்சைக்காரனாக்கிக் கொண்டாரே! ஒரு இரவு சமயம் ஒரு மலையின் மேல் அவர் ஜெபித்துக் கொண்டிருந்தபோது தன்னண்டை பிச்சைக்காக கையில் பிச்சை பாத்திரத்துடன் வந்து நின்ற ஒரு பிச்சைக்காரனிடம் "அப்பா, நானும் உன்னைப் போன்ற ஒரு பிச்சைக்காரன்தான், உனக்குத் தர என்னிடம் ஒன்றுமில்லை. அதோ நமக்கு முன்பாகத் தெரிகின்ற அந்தப் பட்டணத்திற்குச் சென்று அங்குள்ள மக்களிடம் பிச்சை கேள். கண்டிப்பாகக் கிடைக்கும்" என்று அவர் சொல்லுகின்ற வார்த்கைள் நம்மைப் புல்லரிக்கப்பண்ணுவதாக இருக்கின்றது. யாவையும் விட புதுமை, அப்படி அவரிடம் பிச்சை கேட்க வந்த அந்த பிச்சைக்கார மனிதர் சுந்தரை ஆட்கொண்ட அவரது அன்பின் ஆண்டவர் என்பதுதான் நம்மைத் தூக்கிவாரிப் போடும் ஒரு ஆச்சரியமான காரியமாகும்.

சாது சுந்தர் சிங்கைப்போல, சகோதரன் பக்தசிங் அவர்களும் சீக்கிய குலத்தில் செல்வச் சீமானான தகப்பனுக்குப் பிறந்து திரண்ட செல்வத்துக்கு சுதந்திரவாளியாக இருந்த அவர் ஆண்டவர் இயேசுவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்று அவரது அடியானானபோது தனது உலகச் செல்வம் அனைத்தையும் அற்பமும் குப்பையுமாக உதறித் தள்ளிவிட்டாரே! அதில் தனக்கு எந்த ஒரு உரிமைப் பாத்தியதையும் கொண்டாடவே இல்லையே! அவரை ஆட்கொண்ட ஆண்டவரும் அந்த ஐசுவரியத்தில் ஒன்றும் கேட்கக்கூடாது என்றும், அவருடைய தேவைகளைச் சந்தித்து அவரை ஆண்டவராகிய தாமே வழிநடத்தப் போவதாகவும் தன்னிடம் கூறியதாக தமது புத்தகத்தில் பக்தசிங் எழுதியிருக்கின்றாரே!

இங்கிலாந்து தேசத்தவரும், இருண்ட கண்டம் என்றழைக்கப்பட்ட, மனிதரைக் கொன்று தின்ற காட்டுவாசிகள் வாழ்ந்த ஆப்பிரிக்காவின் மையப்பகுதியில் தனது மிஷனரிப் பணித்தளத்தை அமைத்து தன் அருமை இரட்சகருக்காக அநேக நரமாமிச பட்சிகளான காட்டுமிராண்டிகளை ஆண்டவருடைய அடியார்களாக்கின மாபெரும் கிரிக்கட் வீரர் சார்லஸ் டி.ஸ்டட் என்ற இங்கிலாந்து தேச பரிசுத்தவான் தனக்கு வரவேண்டிய தனது குடும்ப பங்காகிய 25000 பவுண்டுகளை (கி.பி. 1880 ஆம் ஆண்டில் அதின் மதிப்பு ரூபாய் 6,25,000 ஆகும்) தன் ஆண்டவருக்காக பல தேவப் பணிகளுக்கும் பிரித்தனுப்பிக் கொடுத்துவிட்டுத் தன்னை முற்றும் வெறுமையாக்கி ஓட்டாண்டியாக்கிக் கொண்டார் அல்லவா? இப்படி எத்தனை எத்தனையோ வரலாறுகளை எழுதிக் கொண்டே செல்லலாம்.

மெய் தேவ மக்களின் காரியங்கள் எல்லாம் அப்படியிருக்க நம்மிடைnயுள்ள ஆசீர்வாதப் பிரசங்கிகள் மேலே நாம் பார்த்த மோட்ச பிரயாண தேமாசைப் போல தங்களிடம் நாம் போய் வெள்ளிப் புதையல்களைத் தோண்ட நம்மை அறை கூவி அழைக்கின்றனர். அவர்களின் குரல் கேட்டு ஒரு பெரும் கூட்டம் மக்கள் ஆசீர்வாதப் புதையல் தோண்ட இந்த நாட்களில் தலை தெறிக்க ஓடுவதுதான், மா பரிதாபகரமான காரியமாகும். ஓ, இந்த அப்பாவி மக்கள் இந்த செழிப்பு உபதேச பிரசங்கிமார்களை எத்தனையாக கனப்படுத்துகின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்து மக்கள் உலக செல்வத்துக்குக் கடவுளான தங்கள் தேவதை ஒருவருடைய படத்தை தங்களது தொழிற்சாலையிலும், வியாபார ஸ்தலங்களிலும், மளிகைக் கடைகளிலும் தொங்க வைத்துப் பூமாலை போட்டிருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். அந்த தேவதையின் இரு கரங்களிலிருந்தும் பணங்கள் பூமியில் கொட்டிக் கொண்டிருப்பதைப் போல அந்தப் படம் அமைந்திருக்கும். அதைப் போலவே இம்மையில் ஐசுவரியத்தையும், செல்வத்தையும், குறைவற்ற வளமான வாழ்க்கையையும், நூறாண்டு கால நோயற்ற திட வாழ்வையும் ஆசீர்வாத பிரசங்கிகள் மூலமாக, அவர்கள் ஏறெடுக்கும் ஜெபங்கள் மூலமாக பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற தணியாத வாஞ்சையோடு அந்த அளவுகடந்த ஆவலில் அவர்களுடைய படங்களை தங்களுடைய வியாபார ஸ்தலத்தின் பணப்பெட்டி இருக்கும் கருவறைக்கு அருகிலும், தொழிற்கூடங்களிலும் தெய்வங்களாக தொங்க வைத்திருக்கின்றனர். இதின் மூலமாக இந்த மக்கள் இந்த ஊழியர்களிடமிருந்து தங்கள் கிறிஸ்தவ வாழ்வில் எதைக் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது அல்லவா? எத்தனை வேதனையான காரியம் பாருங்கள்! "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்" (1 கொரி 11 : 1) என்று அப்போஸ்தலர்கள் தேவ ஜனத்தை தங்களைப் பின்பற்றும்படியாக அன்று அறைகூவி அழைத்தார்களே!

ஒரு சமயம் ஒரு கிறிஸ்தவ காவல் துறை அதிகாரி என்னிடம் இவ்வாறு சொன்னார்கள் "என்னுடைய மனைவிக்கு இயேசுநாதர் தெய்வம் அல்ல, அவளுடைய தெய்வம் எல்லாம் இந்த பிரசங்கியார்தான்" என்று சொல்லிவிட்டு அந்த ஆசீர்வாத பிரசங்கியார் பெயரையும் என்னிடம் சொன்னார்கள். இந்த துர்உபதேச ஊழியர்கள் தேவனுடைய கோபக் கனல் பறக்கும் கீழ்க்கண்ட அவருடைய வார்த்தைகளை கவனித்து உடனே தங்களை திருத்திக் கொண்டால் அவர்களுக்கு நலமாகும்.

"இடறல்கள் வராமல்போவது கூடாத காரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் எந்திரக் கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்" (லூக்கா 17 : 1-2) என்று கர்த்தருடைய வார்த்தை எச்சரிக்கின்றது.

இதைக் கருத்தோடு வாசிக்கும் தேவ பிள்ளையே, உங்கள் கிறிஸ்தவ வாழ்வில் சிலுவைப் பாதையைத் தெரிந்து கொள்ளுங்கள். "ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்" (லூக் 9 : 23) என்று ஆண்டவர் சொன்னதுடன் "இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்" (மத்தேயு 7 : 13 - 14) என்று கூறினார்.

ஒரு மெய் கிறிஸ்தவனுக்கு, அன்பின் ஆண்டவரை தன் முழு இருதயத்தோடு பின்பற்றிச் செல்லுகிற ஒரு தேவப்பிள்ளைக்கு இந்த உலகத்தில் துன்பமும், துயரமும், பாடுகளும், கண்ணீர்களும்தான் பங்காகும். அதை மனதில் கொண்டுதான் அப்போஸ்தலனாகிய பவுல் "நாம் அநேக உபத்திரவங்களின் வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்" (அப் 14 : 22) என்று சொன்னார். நமது அருமை ஆண்டவரும் அதை மனதில் வைத்துத்தான் "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" (யோவான் 16 : 33) என்று சொன்னதுடன் அந்த ஆண்டவரே, தமது வாழ்வில் "அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாக....." (ஏசாயா 53 : 3) இந்த உலகத்தைக் கடந்து சென்றார் என்று நாம் பார்க்கின்றோம். தேவ மைந்தன் உலகில் இருந்த நாட்களில் அவர் அழுததை மக்கள் பார்த்தார்களே தவிர அவர் சிரித்ததை எவரும் எக்காலத்தும் பார்க்கவில்லை என்று திருச் சபை சரித்திரம் சொல்லுகின்றது.

இந்த உலகம் அளிக்கக்கூடிய ஆஸ்தி, ஐசுவரியம், உலக சுகபோகங்களை நாம் நமது மனங்கொண்ட மட்டும் இந்த உலகத்தில் அனுபவித்து இறுதியில் மிருகங்களைப் போல செத்து அழிந்து போகும்படியாக தேவன் நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வரவில்லை. "இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்" (1 கொரி 15 : 19) என்று அப்போஸ்தலன் தமது நிருபத்தில் எழுதினார்.

இந்த உலக வாழ்க்கையில் நாம் அனுபவிப்பதற்கு எல்லா பாக்கியங்களையும் ஆண்டவர் நமக்குத் தந்திருந்தாலும் அவைகளை நாம் அளவோடு அனுபவித்து தேவ நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். அதைத்தான் அப்போஸ்தலன் தமது நிருபத்தில் "எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது, எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது" (1 கொரி 10 : 23) என்று சொன்னதுடன் "இனி வரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள் போலவும், அழுகிறவர்கள் அழாதவர்களைப் போலவும், சந்தோசப்படுகிறவர்கள் சந்தோசப் படாதவர்கள் போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள் போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாக அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும்" (1 கொரி 7 : 29 - 30) என்று சொன்னார்.

"கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாணிகளில் தொங்குகின்ற" (கலா 2 : 20) ஒரு மெய்யான தேவப் பிள்ளைக்கு இந்த உலகத்தில் அனுபவித்து மகிழ என்ன உண்டு? சிலுவையில் துடி துடித்து வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் அதினால் உலகத்தை எப்படி அனுபவித்து ஆனந்திக்க முடியும்? ஒரு பரிசுத்த பக்தன் கீழ்க்கண்டவாறு பாடினார்:-

வெறுத்திடுவேன் எந்தன் ஜீவனை லோகத்தில்
செல்லுவேன் கஷ்டத்தின் பாதையில்
மாயை, மாயையே லோகத்தின் இன்பமே
வாடா முடி சூட ஏகுவேன்.

எந்த ஒரு தேவ ஊழியன் உங்களை இந்த உலகத்தில் எந்த ஒரு கஷ்டமும், பாடுகளும், துயரங்களும், கண்ணீரும், சிலுவையும் இல்லாத சொகுசு வாழ்விற்கு நேராக வழிநடத்துகிறவனானால் அவனைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி அவன் விசாலமான நித்திய நாச வழிக்கு அதிபதியான சாத்தானின் ஊழியக்காரன். அந்த மனுஷ கொலை பாதகன் ஏதேன் பூங்காவில் நமது ஆதி தாய் தந்தையரிடத்தில் அவர்களை தேவ சமூகத்திலிருந்து என்றுமாக நிர்மூலமாகப் போகப்பண்ண அவர்கள் முன்னிலையில் அன்று பாடிய அதே ஆசீர்வாதப் பாடல் பல்லவியைத்தான் (ஆதி 3 : 4 - 5) இன்றும் தேவ ஜனத்திடம் பாடி அவர்களை மகிழ்வித்து வருகின்றான். அவனுடைய தந்திரம் அறியாத தேவ ஜனங்களும் கழுத்தை அறுத்துக் கொல்லும்படியாக தனது கசாப்புக் கடைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும் கசாப்புக் கடைக்காரனை நம்பி அவன் பின்னால் அங்குமிங்குமாக துள்ளிக் குதித்துச் சென்று கொண்டிருக்கும் அப்பாவி ஆட்டுக் குட்டியைப் போல பேதை மாந்தர் மந்தை மந்தையாக மிகுந்த ஆரவாரத்துடன் தங்களுடைய விலையேறப்பெற்ற ஆத்துமாவில் நித்தியமாக விழப்போகும் சத்துருவின் கூரான கத்தியை சற்றும் நினைத்துப் பார்க்காமல் நித்திய அக்கினிக்கடல் என்ற கசாப்புக்கடையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். கர்த்தர்தான் கிருபையாக இந்த மக்களுக்கு மனதிரங்கி இவர்களை அழிவினின்று பாதுகாக்க வேண்டும்.

நம்மைச் சுற்றியுள்ள பெயர்க்கிறிஸ்தவர்கள், புற மதஸ்தர், அஞ்ஞானிகளைப்போன்று பட்டுடுத்தி பகட்டாக வாழ வேண்டுமென்று ஒருக்காலும் நினையாதேயுங்கள். அவர்களைப் போன்று வாழ உங்களுக்கு எல்லா பண வசதிகளும், வாய்ப்புகளும் இருந்தாலும் அப்போஸ்தலனைப் போல "இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்கு தகுதியாகும்படிக்கும் அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன், குப்பையுமாக எண்ணுகிறேன்" (பிலி 3 : 10 - 11) என்று ஆண்டவர் இயேசுவுக்காக எல்லாவற்றையும் நஷ்டமும் குப்பையுமாக எண்ணுங்கள்.

உங்கள் நினைவில் என்றும் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் பாதுகாப்பாக மோட்சம் போய்ச் சேர நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாதை சிலுவைப் பாதை மட்டுமே. உண்மைதான், அது பாடுகளின் பாதை, அது கண்ணீரின் பாதை, அது நெருக்கத்தின் பாதை, அது உபத்திரவங்களின் பாதை, அது வேதனையின் பாதைதான். எனினும், அதுவே பரலோகத்தின் பாதை. நம்மைப் பாதுகாப்பாக உச்சிதப்பட்டணம் வரை வழிநடத்திச் செல்லும் ராஜ பாதை அந்த சிலுவைப் பாதை மட்டுமே. "இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள், இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்" (வெளி 7 : 14) என்று பரலோகில் காணப்படும் தேவ ஜனத்தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. சிலுவையே மோட்சம் (Cross is Heaven).

 

சிலுவை சுமந்தோனாக,
இயேசு, உம்மைப் பற்றுவேன்,
ஏழைப் பரதேசியாக
மோட்ச வீடு நாடுவேன்,
உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி,
ஞானம், லோகம் அனைத்தும்
அற்ப குப்பை என்று எண்ணி,
வெறுப்பேனே முற்றிலும்.

நித்திய ஜீவ வாழ்வை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

இந்த உலக வாழ்க்கைக்குப் பின்னர் நாம் நிச்சயமாக ஆண்டவருடைய பரம ராஜ்யத்திற்கு சுதந்திரவாளிகளாவோம் என்பதை மறுபடியும் பிறந்து பரிசுத்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மெய்யான தேவ மக்கள் யாவரும் திட்டமாக அறிவார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் முடிந்த அளவு அதிகமான நேரத்தை ஆண்டவருடைய பரிசுத்த பாதங்களில் ஜெபத்தில் செலவிட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு குழந்தைக்கு அதைப் பெற்ற தாய் எத்தனை அத்தியந்த அவசியமோ அதைப் போன்று மெய்யான தேவ பிள்ளைகளுக்கும் ஆண்டவருடைய சமூகமும், அவருடைய பரிசுத்த பாதங்களும் எவரும் பிரிக்க முடியாத அவசியமாகிவிடுகின்றது. குடும்பப் பாசப்பிணைப்புகளோ, உற்றார் உறவினரின் அன்போ, தொலைக்காட்சிகளோ, செய்தித்தாட்களோ எதுவும் அவர்களை ஆண்டவருடைய அன்பிலிருந்து தடுத்து நிறுத்த முடிவதில்லை. "திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது" (உன் 8 : 7) என்று கர்த்தருடைய வார்த்தை அதை உறுதிப்படுத்துகின்றது.

அந்த தேவ மக்களின் இருதயம் எப்பொழுதும் தேவ சமாதானம் நிறைந்ததாக இருக்கும். "உம்மை உறுதியாக பற்றிக் கொண்ட மனதையுடைவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்ளுவீர்" (ஏசாயா 26 : 3) என்ற தேவ வாக்கின்படி அவர்கள் எப்பொழுதும் தங்கள் ஆண்டவரை அண்டி ஜீவித்து வருவதால் அவர்களின் இருதயம் கர்த்தருடைய சமாதானத்தால் நிரம்பி வழிகின்றது. தங்களைச் சுற்றிலும் உலகத்தில் என்ன நடந்தாலும் அதைக் குறித்து எந்த ஒரு சலனமும் அடையாமல் அவர்களின் இருதயம் கர்த்தரை நம்பி திடனாக இருக்கின்றது.

அவர்களின் இராக்கால இளைப்பாறுதல்கள் மிகுந்த தேவ சமாதானம் நிறைந்ததாகவிருப்பதுடன், தங்கள் படுக்கையின் தலையணையில் தலையை வைத்துவிட்டால் குழந்தையைப்போல அவர்கள் தங்கள் நேசரின் மார்பில் நித்திரை கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர். தங்களைச் சுற்றிலும் தங்கள் வாழ்க்கையில் துயரப்படுவதற்கும், பதஷ்டமடைவதற்கும், கவலையின் காரணமாக தலையைப் பிய்த்துக் கொள்ளுவதற்கும் எத்தனை எத்தனையோ காரியங்கள் இருந்தபோதினும் அவர்கள் நித்திரைக்குச் சென்று விட்டால் சங்கீதக்காரரைப்போல "சமாதானத்தோடே படுத்துக் கொண்டு நித்திரை செய்யத் தொடங்கிவிடுகின்றனர்" (சங் 4 : 8) அவர்களுடைய தூக்கத்திலும் அவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்காக ஆயத்தம் செய்து வைத்துள்ள மோட்சானந்த பாக்கியங்களைக் குறித்தும், நமது முற்பிதாக்கள், நியாயாதிபதிகள், தீர்க்கத்தரிசிகள், அப்போஸ்தலர்கள், இரத்த சாட்சிகளாகிய தைரிய சேனை, பரிசுத்த பக்த சிரோன்மணிகள், தேவனுடைய ஜனத்துக்கு கலப்பில்லாத சுத்த இரட்சிப்பின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்த உத்தம சுவிசேஷகர்கள், முடிவுபரியந்தம் தங்கள் அழைப்பின் பாதையில் உண்மையாயிருந்து ஜீவ கிரீடத்தைப் பெற்றுக் கொண்ட மோட்சவாசிகளின் திரள் கூட்டத்தினர் போன்றவர்கள் எல்லாரும் பரலோகத்தில் எவ்வண்ணமாக அவரவர்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்து தங்களுக்காக உலகத் தோற்றத்திற்கு முன்பாக அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக் குட்டியாகிய தங்கள் அன்பின் இரட்சகரைப் பாடித் துதித்துக் கொண்டிருப்பார்கள்? வெண்ணங்கி தரித்து, கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து அந்த திரள் கூட்டத்தினர் எப்படி இலங்கி ஜொலித்துக் கொண்டிருப்பார்கள்? என்பது போன்ற பரலோக எண்ணங்களால் அந்த மக்களின் இருதயம் நிரம்பி விடும். அந்த மோட்சானந்த மகிமையின் காட்சிகளின் நடுவே அவர்களும் ஒன்றரக் கலந்து விடுகின்றனர்.

அவர்கள் தங்கள் நித்திரையிலிருந்து எழும்பும்போது அவர்களை அறியாமல் ஒரு ஆனந்த பாடலின் அடிகள் அவர்களின் உதடுகளில் முணுமுணுக்கின்றது அல்லது ஒரு அருமையான தேவ வசனம் அவர்களை உற்சாகப்படுத்தும் வண்ணமாக அவர்களின் உள்ளத்தில் தொனிக்கின்றது.

மரணத்தைக் குறித்து அந்த தேவ மக்களுக்கு எந்த ஒரு பயமும், திகிலும் இருக்காது. தங்களைச் சுற்றிலும் தங்களுக்கு அருமையானவர்களும், நண்பர்களும், தங்களுக்கு அறிமுகமானவர்கள் பலரும் அடுத்தடுத்து மரணத்தின் மூலம் இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்லுவதை அவர்கள் பார்க்கும் பொழுது தனது வேளையும் எந்த நேரமும் வரலாம் என்றும் அப்பொழுது தான் தனது நேசர் இயேசுவோடு என்றுமாக பரலோகில் வாழ கடந்து சென்று விடுவோம் என்ற ஆனந்த நம்பிக்கையால் அவர்களின் உள்ளம் பூரிக்கின்றது.

தனது பாவங்களுக்காக மனங்கசந்து அழுது, புலம்பி பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்தையும் கர்த்தரிடமிருந்து பெற்று அவருக்குள் புது சிருஷ்டியாக வாழ்கின்ற ஒரு மெய்யான தேவ பிள்ளைக்கு இந்த உலகத்திலேயே மோட்சம் ஆரம்பித்து விடுகின்றது. ஆம், அந்த தேவ பிள்ளை நித்திய ஜீவ வாழ்க்கையை இந்த உலகத்திலேயே நிச்சயமாகப் பெற்றுக் கொண்டு விடுகின்றது. அதின் காரணமாக இந்த உலக வாழ்வின் மாயாபுரி சந்தைச் சரக்குகள் எதிலுமே அதற்குப் பற்றும் பாசமும் அறவே அற்றுப் போய் விடுகின்றது. இந்த உலக மக்கள், ஏன் கிறிஸ்தவ தேவ ஊழியர்கள் என்று தங்களை ஜம்பம் பேசிக்கொள்ளுவோரும் பரலோக நாட்டிற்கு அடிக்கடி போய் வருவதாகவும், ஆண்டவர் இயேசுவை முகமுகமாக தரிசித்துக் கொண்டிருப்பதாகவும் தேவ மக்களிடையே துணிகரமாகப் பொய் பேசும் இந்த தேவ ஊழியர்கள் கூட பணம் காசுகளுக்கு எத்தனை செப்படி வித்தை செய்து, பற்பலவிதமான திட்டங்களைப் போட்டு அவர்களின் பணங்களை தந்திரமாக தங்கள் கைவசப்படுத்திக் கொண்டுவிடுகின்றார்கள் அல்லவா?

ஆனால், நித்திய ஜீவ வாழ்க்கையை இந்த உலகிலேயே பெற்றுக் கொண்டவர்களின் காரியம் வேறு. ஒரு சமயம், பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் ஒரு கிறிஸ்தவ சபையின் ஒரு கூட்டத்தில் செய்தி கொடுத்து முடித்திருந்தார். அந்த சபையினர் அவருக்கு காணிக்கைiயாக கொஞ்சம் பணம் கொடுக்க விரும்பினார்கள். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து தனக்கு பணம் வேண்டாம் என்றும் தான் செல்லும் ஊர் போவதற்கான ஒரு ரயில்வே டிக்கெட் மட்டும் எடுத்துக் கொடுத்துவிட்டால் அதுவே போதுமானது என்றும் திட்டமாகக் கூறிவிட்டார்.

அவருடைய விருப்பப்படி அந்த சபை மக்களும் அவர் விரும்பின ஊர் போவதற்கு ஒரு ரயில்வே டிக்கெட்டை எடுத்துக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் ஒரு பையில் அவருக்குக் கொடுப்பதற்காக கொஞ்ச பணத்தைப் போட்டு மறைவாக வைத்திருந்தார்கள். குறிப்பிட்ட அந்த நாளில் சுந்தர் தான் விரும்பிய ஊர் போவதற்கு ரயில் நிலையத்திற்குச் சென்றார். அவர் செய்தி கொடுத்த சபையின் மக்களில் கொஞ்ச பேரும் அவரை வழி அனுப்புவதற்காக ரயில் நிலையம் வரை சென்றார்கள். ரயில் வந்து சுந்தரும் அதில் ஏறி அமர்ந்தார். ரயில் புறப்பட, புறப்பட சபையின் முக்கிய அங்கத்தினர் ஒருவர் தனது கை வசம் மறைவாக வைத்திருந்த ஆரம்பத்தில் குறிப்பிட்ட பணப் பையை சுந்தர் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு அருகில் நேர்த்தியாக போட்டுவிட்டார். நடந்தது என்ன தெரியுமா? சுந்தர் அந்தப் பணப்பையை தன் கரத்தால் தொட்டே பார்க்கவில்லை. ஓரிரு ரயில் நிலையங்கள் கடந்து சென்றன. ஒரு ரயில் நிலையத்தில் ஒரு ஏழை பிச்சைக்கார மனிதன் சுந்தரிடம் பிச்சைக்கேட்டுக் கொண்டு சுந்தருக்கு முன்பாக கீழே பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தான். சற்று நேரம் அவனது முகத்தைப் பார்த்த அவர் தனக்கருகில் போடப்பட்டிருந்த அந்தப் பணப்பையை அப்படியே தூக்கி அவனது கரங்களில் கொடுத்துவிட்டார். பிச்சைக்காரனுக்கு எவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்ற நியதி, கட்டுப்பாடு எல்லாம் அவருக்குக் கிடையாது. ஆம், உலகச் செல்வத்துக்கு பக்த சிரோன்மணி சுந்தர்சிங் அவர்கள் கொடுத்த மதிப்பு அவ்வளவுதான். இந்த உலக வாழ்க்கையில் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்ட தேவ மக்களின் காரியம் எல்லாம் இப்படித்தான் இருக்கும். மக்கள் தங்களுக்கு காசு பணம் கொடுப்பார்கள் என்று தெரிந்தால் அந்த இடத்திற்கே அவர்கள் போக மாட்டார்கள்.

நீங்கள் அவர்களை உங்கள் சபையின் கன்வென்சன் கூட்டங்களுக்கோ, பேரின்ப பெருவிழாக்களுக்கோ அல்லது கிறிஸ்தவ திருவிழாக்களுக்கோ அழைப்பீர்களானால் கூட்டங்களின் முடிவு நாளில் நீங்கள் அவர்களுக்கு காணிக்கையாகக் கொடுக்கும் பெரிய பணத்தொகை முழுவதையும் பேராசையுடன் அப்படியே வாங்கித் தங்கள் தோளில் போட்டுக் கொண்டு செல்ல மாட்டார்கள். தங்கள் செலவுக்கு ஒரு சிறிய தொகையை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி முழுவதையும் உங்களுக்கே திருப்பிக் கொடுத்து அதை தேவனுடைய மகிமையின் சுவிசேஷ பிரபல்யத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும்படியாக அன்புடன் கேட்டுக் கொண்டு அப்படியே கடந்து சென்றுவிடுவார்கள். அவர்கள் உங்கள் வீடுகளைச் சந்திக்க வந்தாலும் வீட்டிற்கு வரும் முன்னால் தங்களுக்கு எந்த ஒரு காணிக்கையும் தரக்கூடாது என்ற அன்பின் கட்டளையின் பேரிலேயே உங்கள் வீடுகளுக்குள் காலடி எடுத்து வைப்பார்கள்.

உங்கள் ஊர் கன்வென்சன் நாட்களில் அவர்கள் உங்கள் வீடுகளில் வந்து தங்கினால் மிகவும் எளிமையான மரக்கறி ஆகாரத்தை அளவோடு உங்களிடம் வாங்கிப் புசித்து எப்பொழுதும் ஆத்தும பாரம் கொண்டவர்களாக ஜெப நிலையிலேயே காணப்படுவார்கள். காரணம், அந்த மக்கள் இந்த உலகத்திலேயே நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்ட தேவ மக்களாவார்கள். அவர்கள் மறுமைக்குரியவர்கள். உலகம் அவர்களுக்கு பாத்திரமல்ல (எபி 11 : 38)

அதே சமயம் தேவபக்தியை ஆதாயத் தொழிலாகக் கொண்டு தங்கள் தேவச்செய்திகளில் செப்படி வித்தைகளை மக்களுக்குக் காண்பிக்கும் பெயர் சொல்லிக் கூப்பிடும் ஆசீர்வாதப் பிரசங்கிகளை நீங்கள் உங்கள் வீடுகளில் தங்க வைத்தால் அந்த நாட்கள் ஆண்டவர் பாடுபட்ட தபசு கால சரீர ஒடுக்க நாட்களாக இருந்தாலும் அதை அவர்கள் அற்பமும், கேவலமுமாக எண்ணி மட்டன், சிக்கன், சில்லி சிக்கன் போன்றவைகளை எல்லாம் வாய் திறந்து உரிமையுடன் உங்களிடம் கேட்டு கொழுமையாக வாங்கிப் புசித்துச் செல்லுவார்கள். அவர்கள் முழங்காலுன்றி ஜெபிப்பதை நீங்கள் ஒருக்காலும் காணவே முடியாது. காரணம், அவர்களுக்கும், ஆண்டவருக்கும் எந்த ஒரு உறவும் எக்காலத்தும் இருந்ததே கிடையாதே! உறவு இருந்தால்தானே ஆண்டவரோடு உறவாட முடியும் !

அதுமட்டுமல்ல, உங்கள் வீட்டில் தொலை பேசி இருந்தால் அவர்கள் உங்கள் வீட்டில் தங்கிச் சென்ற நாட்களுக்கான தொலை பேசிக் கட்டணம் ரூபாய் 8000 வரை கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு வந்தாலும் வரலாம். ஆம். அவர்கள் உங்கள் வீட்டில் தங்கியிருந்த 3 நாட்களிலும் அவர்கள் வெளிநாட்டிலுள்ள தங்கள் நண்பர்கள், தங்களுக்கு தெரிந்த ஊழியர்கள் போன்றவர்களுடன் மணிக்கணக்காகப் பேசி அவ்வளவு பெரிய செலவை சற்றும் மனச்சாட்சியில்லாமல் உங்களுக்கு இழுத்து வைத்துவிடுவார்கள். இதெல்லாம் உண்மை நிகழ்வுகளாகும். தேவ மக்கள் என்னிடம் நேரில் பகிர்ந்து கொண்ட காரியங்களாகும். நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக் கொண்ட (2 கொரி 11 : 15) மேற்கண்ட மக்கள் இம்மை வாழ்வுக்காக மாத்திரம் வாழும் நித்திய ஜீவனுக்கு புறம்பாக்கப்பட்ட பொல்லாங்கனின் புத்திரர் என்பதை நாம் மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதைக் கருத்தோடு வாசிக்கும் தேவ பிள்ளையே, நித்திய ஜீவ வாழ்க்கையை உங்களில் பெற்றுக் கொண்டீர்களா? உலகம் தரக்கூடாததும், அது எடுத்துக் கொள்ளக் கூடாததுமான சொல்லி முடியாததும், மகிமையால் நிறைந்ததுமான தேவ சமாதானம் உங்கள் இருதயத்தை ஆளுகை செய்து கொண்டிருக்கின்றதா? உங்களுக்கும் உங்கள் ஆத்தும நேசருக்கும் இடையிலான உங்கள் பரலோக உறவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கின்றதா? ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கான நேரத்தை ஆண்டவரோடு ஜெபத்தில் செலவிடுவது என்பது உங்களுக்கு பேரானந்தமாக இருக்கின்றதா? இராக்காலங்களில் அந்த அன்பின் நேசர் தம்மோடு நீங்கள் உறவாடி மகிழ உங்களை உங்கள் படுக்கையிலிருந்து எழுப்பும் விதங்கள் உங்களை மெய்சிலிர்க்கப்பண்ணுகின்றதா? உங்கள் அன்றாடக வாழ்க்கையில் நிமிஷந்தோறும் அவர் உங்களை வழிநடத்திச் செல்லும் விதம் உங்களைப் பரவசம் அடையப்பண்ணுகின்றதா?

அவரை விட்டு கொஞ்ச நேரம் பிரிந்திருப்பது என்பது உங்களுக்குக் கடினமாக இருக்கின்றதா? "எனக்கோ தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம்" (சங் 73 : 28) என்ற சங்கீதக்காரரின் சொந்த அனுபவம் உங்களுடைய அனுபவமாக இருக்கின்றதா? அன்பின் நேசரோடு உறவாடி ஆனந்திப்பதற்காக உலகத்தின் அனைத்து உறவுகளையும் துண்டிக்க உங்களால் முடிகின்றதா? உலகம் முழுவதும் உங்களைக் கைவிட்டபோதினும் அன்பின் நேசர் உங்களை நேசித்து, உங்களோடிருப்பது என்பது உங்களை களிகூரப்பண்ணுகின்றதா?

இந்த பாக்கிய அனுபவங்கள் எல்லாம் உங்களது தற்போதைய வாழ்வில் உங்களுக்கு இல்லாமலிருந்தால் இன்றே ஆண்டவரிடம் வந்து நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடு அவரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த நித்திய ஜீவ வாழ்வு இல்லாமல் மரணத்தை மகிழ்ச்சியோடு சந்திக்க உங்களால் கூடாது. இன்று உங்களைச் சுற்றிலும் குடும்பத்தினர், பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் யாவரும் புடைசூழ இருப்பதாக தெரியலாம். ஆனால் விரைந்து ஒரு நேரம் வருகின்றது. அப்பொழுது நீங்கள் முற்றும் தனிமைக்குத் தள்ளப்படுவீர்கள். அன்பின் ஆண்டவர் மட்டும் உங்களுக்கு இல்லாதிருக்கும்பட்சத்தில், அந்த நித்திய ஜீவ வாழ்வு உங்களுக்குள் இல்லாதிருந்தால் உங்கள் நிலை கொடிய நிர்ப்பந்தமாகிவிடும். உங்கள் ஏழை சகோதரனாகிய நான் எழுதும் இந்தக் காரியங்கள் எல்லாம் எத்தனை உண்மையும், சத்தியமுமாக இருந்தன என்பதை நீங்கள் கண்டு கொள்ளும் நாட்கள் அதிக தொலைவில் இல்லை.

இந்தக் கிருபையின் காலத்தில், தனிமையில் ஆண்டவருடைய பாதங்களில் அமர்ந்து கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து தியானித்து, அவருடைய வசனத்தின் வெளிச்சத்தில் உங்களை கண்ணீரோடும், புலம்பல்களோடும் ஆராய்ந்து பார்த்து உங்களை நித்திய ஜீவ வாழ்வுக்கு சுதந்திரவாளிகளாக்கிக் கொள்ளுங்கள். கால தாமதம் செய்யாதிருங்கள். நித்தியத்தில் உங்கள் கண்களைத் திறக்கும்போது நித்திய அக்கினிக் கடலுக்கு நீங்கள் பங்காளிகளாகியிருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் மிகுந்த வியாகுலத்தடன் கண்டு துடிதுடிக்குமுன்பாக அன்பின் நேசரை முத்தம் செய்து அவருடைய பாதங்களை நமது முற்பிதா யாக்கோபைப் போல பற்றிக் கொள்ளுங்கள் (ஆதி 32 : 26) அதற்கான கிருபைகளை தேவன் தாமே உங்களுக்கும் பாவியாகிய எனக்கும் தந்தருள்வாராக.

 

ஒரு தேவ பக்தியுள்ள தகப்பனார் தனது சின்ன மகளை அழைத்துச் சென்று ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். கலியாண விருந்து வைபவத்தில் பரிமாறப்பட்ட உணவுகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு அவித்த முட்டையும் கிடைத்தது. தனது ஆகாரத்தை சாப்பிட்ட சின்ன மகள் தனக்குக் கிடைத்த அவித்த முட்டையை சாப்பிட முடியாமல் தனது கரத்தில் பத்திரமாக எடுத்துக் கொண்டாள். பந்தி முடிந்த பின்னர் தனது தந்தை தனியாக இருந்தபோது அவரிடம் அதைக் கொடுத்து அதை சாப்பிடும்படியாக கேட்டாள். தனது வயிறு நிரம்பிவிட்டபடியால் முட்டையை தன்னால் சாப்பிட முடியாது என்று கூறி அந்த முட்டையை அப்பொழுது அருகில் நின்று கொண்டிருந்த தங்களின் இனத்தவர் ஒருவருக்கு கொடுத்துவிடும்படியாக கூறவே அந்த சின்ன மகள் அதை அந்த இனத்தவருக்கு கொடுத்தாள். அந்த இனத்தவரும் தன்னால் அதை சாப்பிட முடியாது என்று கூறவே குழந்தையின் தகப்பனார் அவளைப் பார்த்து "மகளே பிளசி, எங்கள் யாருக்கும் அதை சாப்பிட முடியாது. உன்னாலும் அதை சாப்பிட முடியாது. ஒன்று செய், அதோ பார், அந்த எச்சில் இலைகள் எல்லாம் கிடக்கும் குப்பைத் தொட்டியில் உன் முட்டையை மறைவாகப் போட்டுவிடு" என்று சொன்னார். அதைக் கேட்ட அந்த சின்ன மகள் பிளசி துடிதுடித்தவளாக "அம்மாடியோ, நான் அதை அங்கு போடமாட்டேன். இயேசு அப்பா என்னைப் பாப்பாங்களே" என்று கூறிவிட்டு முட்டையை தன் வசம் பத்திரமாக வைத்துக் கொண்டாள்.

அந்த சின்ன பாலகிக்கு அவளது பிஞ்சு உள்ளத்தில் இருந்த கர்த்தரைக் குறித்த பயபக்தியின் சிந்தனையை கவனித்தீர்களா? "கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார்" என்று தங்களுக்குள் எண்ணிக் கொண்டு பெயர் கிறிஸ்தவ மக்களும், அடிக்கடி வானலோகம் ஏறி இறங்கும் தேவ ஊழியர்களும் செய்கின்ற சொல்லொண்ணா வேதனையான காரியங்களின் நடுவில் அன்பின் ஆண்டவர் இப்படிப்பட்ட குட்டி கலங்கரை விளக்கங்களை ஆங்காங்கு நமக்கு வைத்து தமது பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்துவது நமக்கு எத்தனை ஆறுதலாக இருக்கின்றது அல்லவா? கர்த்தருக்கே மகிமை. அல்லேலூயா.


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM