முன்னுரை


"வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது
உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர்
சொல்லுகிறார், அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கின்றார்கள்" (எரேமியா 6 : 16)


கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.

கர்த்தருக்குச் சித்தமானால், அவருடைய அநாதி கிருபை எங்களை அற்புதமாகத் தாங்கி அரவணைத்து வழிநடத்துமானால், இந்த தேவ எக்காள இதழ் உங்கள் கரங்களை வந்தடையும்போது நாங்கள் கர்த்தருடைய பரிசுத்த ஊழியத்தின் பாதையில் இமயமலைகளுக்கு கடந்து சென்று கொண்டிருப்போம்.

இந்த தேவ ஊழியத்தின் ஆசீர்வாதத்திற்காகவும், தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளை எங்களுடைய கரங்களிலிருந்து பெற்றுக் கொள்ளும் மக்களின் இருதயங்களில் கர்த்தர் தம்முடைய வசனங்களின் மூலமாக பேசவும், அந்த மக்கள் ஒன்றான மெய் தெய்வமாகிய ஆண்டவரை தங்கள் ஆத்துமாவின் நேசராக ஏற்று நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். கடந்த இதழில் நான் எழுதியதுபோல நாங்கள் இந்த தடவை செல்லுகின்ற கட்வால் மலைப் பிராந்தியங்கள் நாங்கள் தங்கி ஊழியம் செய்ய அத்தனை சிறப்பாக இருக்காது. நாங்கள் தங்கும் இடங்களிலிருந்து, நாங்கள் சாப்பிடுகின்ற ஆகாரம் மற்றும் ஊழியம் செய்வதற்கான திறந்த வாசல்கள் அனைத்திலும் நாங்கள் அநேகமாக பல சவால்களை ஆண்டவருக்குள் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்தவர்களாக புறப்பட்டுச் செல்லுகின்றோம். எனினும், யாவுக்கும் மேலாக இந்த ஊழியத்திற்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் அற்புதம், அதிசயமாக பரத்திலிருந்து சந்தித்து எங்களை கரம் பிடித்து அழைத்துச் செல்லுகின்ற நம் சர்வ வல்ல தேவன் எங்களைக் கொண்டு எந்தெந்த ஊழியங்களை கட்வால் மலைப்பகுதியில் நிறைவேற்ற வேண்டுமோ, யார் யார் கரங்களில் தம்முடைய ஜீவனுள்ள வார்த்தைகளைக் கொடுக்க வேண்டுமோ அந்த மக்களண்டை எங்களை அருமையாக வழிநடத்திச் சென்று எங்களைக் கொண்டு தம்முடைய பரிசுத்த நாமத்தை நிச்சயமாக மகிமைப்படுத்தியே தீருவார் என்பதை நாம் துளிதானும் சந்தேகத்துக்கு இடமின்றி விசுவாசிக்கலாம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

கடந்த தேவ எக்காள இதழ் உங்களில் அநேகருக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்ததாகக் கடிதங்கள் எழுதியிருந்தீர்கள், தொலை பேசி மூலமாகவும் தெரிவித்தீர்கள். எல்லா துதி கனம் மகிமை நம் ஆண்டவருக்கே உண்டாவதாக. "மோட்ச பிரயாணத்தை" எழுதிய பரிசுத்தவான் ஜாண் பன்னியன் என்பவரைக் குறித்து அதே சரித்திரத்தை பல ஆண்டுகளுக்கு முன்பாக நமது தேவ எக்காளத்தில் நாம் வெளியிட்டிருக்கின்றோம். எனினும், இந்த தடவை அநேக கூடுதல் தகவல்களை சேகரித்து சற்று விரிவாக அவருடைய சரித்திரத்தை எழுதி வெளியிட்டிருக்கின்றேன். குறிப்பாக அவருடைய சிறைக்கூட வாழ்க்கை, அவரது ஊழியங்களைக் குறித்த விபரமான குறிப்புகள் மற்றும் அவரது மாட்சியான மரணம் போன்றவைகளை நான் இதில் சேர்த்திருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இவைகள் எல்லாம் உங்கள் ஆவிக்குரிய பரிசுத்த வாழ்க்கைக்கு மிகவும் ஆசீர்வாதமாக அமைந்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது. எல்லா துதிக்கும் பாத்திரர் நம் ஆண்டவர் இயேசு ஒருவரே.

இந்த தேவ எக்காள இதழிலும் "ஜாண் சார்லஸ் ரைல்" என்ற பரிசுத்தவானுடைய வாழ்க்கைச் சரித்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த பரிசுத்த பக்தனின் வாழ்க்கைச் சரித்திரமும் 2006 ஆம் ஆண்டு நமது தேவ எக்காளத்தில் வெளியிடப்பட்ட ஒரு செய்திதான். ஆனால், அப்பொழுது அவருடைய சரித்திரம் மிகவும் சுருக்கமாக வெளியிடப்பட்டது. அந்த நாட்களில் இணைய தளங்களை ஆராய்ந்து அறியும் அறிவு எனக்கு பூஜ்யமாக இருந்ததால் அவருடைய வாழ்க்கை சரித்திரத்தை விரிவாக என்னால் எழுத இயலவில்லை. எனது இயலாமையை அப்பொழுதே நான் தேவ எக்காளத்தில் எழுதியிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். கர்த்தருடைய பேரன்பால் இந்த நாட்களில் என்னை என் தாயில் உருவாக்கு முன்னே இந்த மகத்தான ஊழியத்திற்காகத் தெரிந்து கொண்ட கர்த்தருடைய கிருபையால் சம்பந்தப்பட்ட இணைய தளங்களை கம்பியூட்டரில் ஓரளவு திறந்து பார்த்து தேவையான அளவிற்கு செய்திகளை சேகரித்துக் கொள்ள முடிகின்றது. கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாகட்டும்.

இந்த தேவ எக்காளத்தில் காணப்படுகின்ற பரிசுத்தவான் ஜாண் சார்லஸ் ரைலின் வாழ்க்கைச் சரித்திரத்தை மூன்று விதங்களில் இணைய தளத்தில் எடுத்து அதற்கான படங்களையும் சேகரித்து அனுப்பிய சென்னையைச் சேர்ந்த கர்த்தருடைய பிள்ளை பெலின் லிவிங்ஸ்டன் அவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. இதே தேவ பிள்ளைதான் கடந்த ஆண்டில் நமது தேவ எக்காளத்தில் வெளி வந்த "அங்கிள் ஜாண் வாசர்" என்ற பரிசுத்தவானுடைய வாழ்க்கைச் சரித்திரம் மற்றும் அவருடைய படங்களை மிகவும் சிரமம் எடுத்து சேகரித்து அனுப்பியவர்களாவார்கள். பரலோகத்தில் அவர்களுடைய பலன் மிகுதியாக இருப்பதற்காக ஆண்டவருக்கு துதி செலுத்துவோம்.

தேவ எக்காளத்தில் வெளி வரும் பக்த சுரோன்மணிகளின் வாழ்க்கைச் சரித்திரங்களை நான் உங்களுக்கு தரும்போது அவர்களுடைய ஆரம்ப கால அதாவது மனந்திரும்புதலுக்கு முன்னான கிறிஸ்து இரட்சகருக்கு அப்பாற்பட்ட உலக வாழ்க்கை, அவர்களுடைய அற்புதமான மனந்திரும்புதல் அதாவது கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியான வாழ்க்கை மற்றும் தேவ ஊழியங்கள் இறுதியில் அவர்களின் மாட்சியான நல் மரணங்களை ஜெபத்தோடு தருகின்றேன். நமது வாழ்க்கையின் முடிவு ஆசீர்வாதமாக அமைய வேண்டும். "ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது" (பிரசங்கி 7 : 8) என்று பிரசங்கி கூறினார். "நீ உத்தமனை நோக்கி செம்மையானவனைப் பார்த்திரு, அந்த மனிதனுடைய முடிவு சமாதானம்" (சங் 37 : 37) என்றார் தாவீது இராஜா.

பரிசுத்தவான் ஜாண் ரைலின் சரித்திரத்தை ஜெபத்தோடு வாசித்து உங்கள் ஆத்துமாவுக்கு ஆசீர்வாதமாக்கிக் கொள்ளுவதுடன், இந்த இதழில் இடம்பெற்ற அவர் எழுதிய "நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?" என்ற தேவச் செய்தியை நீங்கள் கட்டாயம் கர்த்தருக்குள் பொறுமையோடு வாசித்து உங்கள் தனிப்பட்ட ஜெப வாழ்க்கையை ஊன்றக் கட்டிக் கொள்ளுங்கள். "ஜெப ஆவி, பொன் வெள்ளி இரத்தினங்களைக் காட்டிலும் மிகவும் விலையேறப்பெற்றது" (The Spirit of Prayer is more precious than treasures of gold and silver) என்று சொன்ன தேவ மனிதர் ஜாண் பன்னியனின் வார்த்தைகள் உங்கள் உள்ளங்களில் எப்பொழுதும் தொனித்துக் கொண்டே இருக்கட்டும். நரகத்தை குறித்த இரண்டு செய்திகள் இந்த இதழில் இடம் பெற்றிருக்கின்றன. நரகம் என்று ஒன்று உண்டு என்பதை தேவ ஜனத்துக்கு பிரசங்கிக்கவும், அதைக் குறித்து மக்களை எச்சரிக்கவும் மனமற்ற சிலுவைப்பகைஞரான பொல்லாத ஊழியர்கள் நிறைந்த இந்தக் கடைசி கால நாட்களில் "தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் மறைத்து வைக்காமல் எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப் பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றைய தினம் சாட்சிகளாக வைக்கிறேன்" (அப் 20 : 26-27) என்ற பவுல் அப்போஸ்தலனைப்போல தேவனுடைய நிலைமாறாத தேவ ஆலோசனையை உங்களுக்கு அவ்வப்போது எழுதி தெரிவித்து வருகின்றேன்.

 

தேவ ஊழியங்கள் பணத்திற்காக
பெருகிப்போன கொடிய காலம்

ஏதேன் பூங்காவில் தங்கள் சிருஷ்டிகராம் தேவனாகிய கர்த்தரோடு பகலின் குளிர்ச்சியான வேளைகளில் அளவளாவி மகிழ்ந்த நம் ஆதி தாய் தந்தையரை தனது தந்திர சூழ்ச்சியால் ஆண்டவரோடுள்ள அவர்களுடைய பரலோக உறவை துண்டித்துப் போட்ட தந்திர சாத்தான் அவர்களை ஏதேனிலிருந்து துரத்தியடித்தான். இழந்து போன பரலோக உறவை தேவ மைந்தன் தனது பரிசுத்த இரத்தத்தை கல்வாரிச் சிலுவையில் சிந்தி மனுக்குலத்திற்கு பாவ மன்னிப்பையும், இரட்சிப்பையும் சம்பாதித்த அந்த மாட்சிமையான மீட்பை மனுமக்கள் ஏற்றுக்கொள்ளவிடாமல் ஒட்டு மொத்தமாக சாத்தான் அவர்களை நரகத்திற்கு நேராக வழிநடத்திக் கொண்டிருப்பதை நாம் துயரத்தோடு காண்கின்றோம். உலகிலுள்ள கோடிக்கணக்கான முகமதியர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் இதர கோடானுகோடி புறமதஸ்தர்களை சாத்தான் அவரவர்களுடைய மார்க்கங்களிலேயே திருப்தி கொள்ள வைத்து அப்படியே அடிமாடுகளைப் போல கொலைக்களம் கொண்டு சென்று கொண்டிருக்கின்றான்.

கிறிஸ்தவர்களிலும் கோடிக்கணக்கான கத்தோலிக்கர்கள், யேகோவாவின் சாட்சிகள், ஏழாம் நாள் ஓய்வுக்காரர்கள் போன்றவர்களை தங்கள் தப்பரையான உபதேசங்களில் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணி சாத்தான் அவர்களை அழிவுக்கு நேராக அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றான். தங்கள் பாவங்களுக்காக மனங்கசந்து அழுது பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்தையும் பெற்ற கிறிஸ்தவ மக்களையும் தந்திர சாத்தான் இன்று பற்பலவிதமான சபைப் பிரிவுகள் மூலமாக அவர்களை சிதறி சின்னா பின்னமாக்கி பணத்திற்காக தேவ ஊழியங்கள் என்ற தாழ்வு நிலையில் கொண்டு வந்து வைத்திருக்கின்றான்.

கடந்த தேவ எக்காளத்தில் எங்கள் கோத்தகரியில் 75 சபைப்பிரிவுகள் இருப்பதாக நான் எழுதினேன். அதை வாசித்த தேவ எக்காள சந்தாதாரரான ஒரு தேவப்பிள்ளை மதுரையிலிருந்து "உங்கள் ஊரில் 75 சபை பிரிவுகள் உள்ளன. ஆனால் எங்கள் மதுரையில் திறந்த வெளி மொட்டைமாடிகளில் எல்லாம் சால்மினா படுதா பந்தல்கள் போட்டு எத்தனையோ சபைகள் ஆரவாரமாக நடந்து கொண்டிருக்கின்றன" என்று கூறினார்கள். மதுரையில் அப்படி என்றால் சென்னையின் காரியத்தை சொல்ல அவசியமே இல்லை. யாரோ ஒரு கர்த்தருடைய பிள்ளை என்னிடம் சொன்னது போல கர்த்தருடைய ஊழியங்கள் இன்று குடிசைத் தொழிலாக நல்ல ஆதாயத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது. உண்மைதான், சர்வ வல்ல தேவனின் திட்டங்களை எல்லாம் உடைத்து நொறுக்குவதே மனுஷ கொலைபாதகனின் ஒரே குறிக்கோளாகும்.

 

தேவ ஊழியத்தில் சாதனை படைத்த
தமிழ் கிறிஸ்த ஊழியர்கள்

தமிழர்கள் மகா ஞானவான்கள். நாம் சிறுவர்களாக நமது சரித்திரப் புத்தகங்களைப் படித்த போது தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து பொன்னையும், வெள்ளியையும், இதர விலையேறப்பெற்ற பொருட்களையும் நம் தமிழ்நாட்டுக்கு அள்ளிக் கொண்டு வந்தார்கள் என்று நாம் படித்தோம். வட இந்திய மன்னர்களோடு போரிட்டு அவர்களை யுத்தத்தில் தோற்கடித்து அவர்களை இங்கு சிறைக்கைதிகளாக சிறைபிடித்து வந்ததை எல்லாம் நாம் ஆச்சரியத்துடன் வாசித்தோம். இன்றும் விண்வெளி ஓடங்களை செலுத்தும் அமெரிக்க தேசத்தின் நாசா ஏவுகணைத் தளத்தில் தமிழ் விஞ்ஞானிகள் பலர் உள்ளனர். இத்தனை ஞானமும், வலிமையும் அறிவும் உள்ள தமிழர்களில் தமிழ் கிறிஸ்தவ ஊழியர்கள் பலர் இன்று தங்கள் ஞானத்தையும், திறமையையும், புத்திசாலித்தனத்தையும் வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவனின் ஊழியத்தில் காண்பித்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். கர்த்தருக்கு மகிமையாக அல்ல, வேறு விதத்தில்.

உலக திருச்சபை வரலாற்றிலேயே மக்களின் பெயர்களை ஜெபத்தில் சொல்லி அழைத்து தங்கள் ஊழியங்களை ஒரு புது திருப்பு முனையோடு செய்து ஜெய ஸ்தம்பம் நாட்டிய பெருமை நமது தமிழ் கிறிஸ்தவ ஊழியர்களையே சாரும். உலகத்தின் பல்வேறு நாடுகளில் தங்கள் அன்பின் ஆண்டவருக்காக விடிவெள்ளி நட்சத்திரங்களாக ஜொலித்த ராட்சத தேவ பக்தர்கள், எழுப்புதலின் நாயகர்கள், இரத்தசாட்சிகள் எவராவது இப்படி தங்கள் பிரசங்க வேளைகளில் மக்கள் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு வியாதியிலிருந்து சுகம், உலக ஆசீர்வாதங்கள் போன்றவற்றை வாக்களித்து ஊழியம் செய்ததை நீங்கள் வாசித்திருக்கின்றீர்களா? மேல் நாட்டு பரிசுத்தவான்கள் பிரசங்கித்தபோது அவர்களைக் கேட்ட மக்கள் தங்களில் பாவ உணர்வடைந்து கதறி தரையிலே விழுந்து கிடந்து புரண்டு உருண்டு அழுதார்கள். அமெரிக்கா தேசத்து மாபெரும் தேவ பக்தன் யோனத்தான் எட்வர்ட்ஸ் என்பவர் "கோபங்கொண்ட தேவனின் கரத்தில் பாவிகள்" என்ற தமது மாட்சியான பிரசங்கத்தை எழுதி தனக்கு முன்பாக இருந்த மங்கலான வெளிச்சத்தில் வாசித்தபோதுதானே மக்கள் பாவ உணர்வடைந்து தேவாலயத்தின் தூண்களை கட்டிப் பிடித்து "ஐயோ, எங்கள் கால்கள் இப்பொழுதே நரகத் தீயில் இறங்கிக் கொண்டிருக்கின்றதே, நாங்கள் என்ன செய்வோம்?" என்று கதறி அழுதார்கள். அப்பொழுதுதானே எழுப்புதல் தீ பற்றி எரிந்தது. கடந்த கால நாட்களில், உலகின் எந்த ஒரு தேவ ஊழியரும் இந்த புதுமை வழியை கைக்கொள்ளவே இல்லை. இந்த தொத்து வியாதி இன்று தமிழ் நாட்டில் எண்ணடங்கா ஊழியர்களை பிடித்திருக்கின்றது. அதை அவர்கள் தேவ ஊழியமாக பயத்தோடும் நடுக்கத்தோடும் செய்யாமல் ஒரு உலக வியாபாரமாக செய்கின்றனர்.

பல்லாண்டு காலத்திற்கு முன்னர் நான் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நான் பிறந்த எங்கள் சிறிய கிராமத்திற்குச் சென்றிருந்தேன். எங்கள் ஊர் சிறிய தேவாலயத்திற்கு முன்பு ஒரு நாள் இரவு ஒரு வாலிப தேவ ஊழியன் மக்களின் பெயர்களை சொல்லி கவர்ச்சியான வார்த்தைகளால் தனது கூட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதை நான் வேதனையோடு கவனித்தேன். அதே தேவாலயத்தில் நீண்ட நாட்களுக்கு முன்னர் உபதேசியாராக ஊழியம் செய்த எனது தாத்தா கோவில்பிள்ளை உபதேசியார் அவர்கள் ஓய்வு நாள் ஆராதனையில் கலந்து கொள்ள வந்திருக்கும் தனது சபை மக்களின் பாவங்களை சம்பந்தப்பட்ட நபரின் பெயரை சபை நடுவே கூறி அப்படிப்பட்ட மக்களை தேவ நாம மகிமைக்காக ஆலயத்திலேயே அவர்கள் வெட்கப்படும்படியாக கடுமையாக எச்சரித்த பொற் கால நாட்களை கண்ணீரோடு நினைவு கூர்ந்தேன்.

இந்த நாட்களில், தேவ ஊழியர்கள் தங்கள் ஊழியங்களுக்குக் காணிக்கை கொடுத்தவர்கள் பெற்ற ஆசீர்வாதங்களின் பட்டியலை தங்கள் பத்திரிக்கைகளில் போட்டு விளம்பரப்படுத்தி அதை வாசிக்கும் அப்பாவி மக்களின் உள்ளங்களில் ஒரு வித போதையை உண்டாக்கி அவர்களின் காணிக்கைகளை தந்திரமாகப் பறித்துவிடுகின்றனர். கடந்த கால பரிசுத்த பக்த சிரோன்மணிகள் ஹட்சன் டெயிலர், ஜியார்ஜ் முல்லர் போன்றவர்கள் தங்கள் தேவ ஊழியங்களின் தேவைகளை எல்லாம் கர்த்தர் ஒருவருக்கே மட்டும் தங்கள் ஜெபங்களில் தெரியப்படுத்தி தங்கள் அனைத்து தேவைகளையும் கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆச்சரிய வரலாறுகளை நாம் அவர்களுடைய சரித்திரங்களில் படித்து பரவசம் அடைகின்றோம். ஆனால் நம்மிடையே உள்ள தேவ ஊழியர்கள் தேவ ஊழியங்களை தங்கள் மாம்ச சிந்தையினாலும், சுயபெலத்தினாலும், தந்திரத்தினாலும் செய்கின்றனர். கர்த்தருடைய கிருபைக்கும், அவருடைய இரக்கத்துக்கும், அவருடைய வழிநடத்துதலுக்கும், அவருடைய வேளைக்கும் காத்திராமல் உலக மக்களின் புகழ்ச்சிக்காவும், தங்களின் பெருமைக்காவும் செய்கின்றனர். இந்த தேவ ஊழியர்கள் தேவ ஜனத்திடம் துணிகரமான பொய்களை சற்றும் தெய்வ பயமில்லாமல் பேசுகின்றனர். கர்த்தர் தங்களிடம் நேரிடையாக வானத்திலிருந்து இறங்கி வந்ததாகவும், தங்களண்டை வந்து நின்று அவர்களிடம் அதைக் கேட்டதாகவும், இதைக் கேட்டதாகவும் பச்சைப் பொய்களை அவர்கள் அள்ளி விடுகின்றனர். தாம் உருவாக்கிய களிமண்ணிடத்தில் பரம குயவன் வானத்திலிருந்து இறங்கி வந்து அந்த களிமண்ணிடத்தில் கைகட்டி நின்று கேட்பதற்கு என்ன இருக்கின்றது? "மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார், நியாயம் செய்து, இரக்கத்தை சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்" (மீகா 6 : 8) கர்த்தருடைய வார்த்தை எத்தனை தெளிவாக இருக்கின்றது என்று பாருங்கள். ஆனால் அதைக் கேட்கும் மக்கள் தேவ வார்த்தைகளின் அடிப்படையில் அவர்களின் அபாண்டமான பொய்களை ஆராயத் தெரியாமல் அவர்களின் வார்த்தைகளை அப்படியே தேவ வாக்காக ஏற்றுக் கொண்டு அந்த பொய் ஊழியர்களை இன்னும் கனப்படுத்துகின்றனர். இன்னும் அதிகமாக அவர்களுக்கு காணிக்கைகளை அள்ளிக் கொடுக்கின்றனர். இப்படி மூடத்தனமாக பொய் ஊழியர்களின் வார்த்தைகளை கண்மூடித்தனமாக நம்பும் மக்களை தேவன் தமது உக்கிரக கோபத்தில் அதை கடைசி வரை நம்பி அப்படியே அவர்கள்அழிந்து நாசமாகப் போக விட்டுவிடுவதாக ஒரு பயங்கரமான தேவ வசனம் உறுதிப்படுத்தி நிற்கின்றது. வசனத்தை நடுக்கத்தோடு கவனியுங்கள். "ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்" (2 தெச 2 : 11-12) என்பதே அந்த தேவ வசனம்.

எளிய தேவ ஊழியர்களாக, எளிமையான செருப்போடு, எளிமையான வஸ்திரத்தோடு, ஏழைக்கு ஏழையாக கர்த்தருடைய ஊழியத்தைச் செய்ய களம் இறங்கிய தமிழ் கிறிஸ்தவ ஊழியர்கள் நாளடைவில் பெருஞ் செல்வந்தர்களாகி இன்று உலக மக்களின் கண்களுக்கு உலகக் கோடீஸ்வரர்களான பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு சமமாக வைத்து மதிக்கப்படுகின்றனர். "வெள்ளியும், பொன்னும் என்னிடத்தில் இல்லை" (அப் 3 : 6) என்று அன்று அப்போஸ்தலர்கள் தங்கள் ஒன்றுமில்லாமையையும், தரித்திரத்தையும் கூறினார்கள். மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் எருசலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும் கர்த்தருடைய நாமத்தினாலே பிரசங்கிக்க களம் இறங்கிய தமிழ் கிறிஸ்தவ தேவ ஊழியர்கள் அழிந்து போகும் உலகக் கல்விச்சாலைகளையும், சர்வ கலாசாலைகளையும் கட்டி எழுப்பி நானா தேசத்தாருக்கும் உலகக் கல்வி கற்றுக் கொடுத்து உலகப்பட்டங்களை அந்த மக்களுக்கு சூட்டி மகிழ்ந்து ஆனந்தித்துக் கொண்டு தங்கள் தாழ்வில் தங்களை நினைத்து உயர்த்திய அன்பின் இரட்சகரின் மாட்சிமையான இரட்சிப்பின் சுவிசேஷத்தை ஓரம் கட்டி விட்டார்கள்.

 

தேவ ஜனமே, பிள்ளையைப் போட்டு
பலாப்பழம் எடுத்துவிடாதீர்கள்

"பிள்ளையைப் போட்டுப் பலாப் பழம் எடுத்தான் ஓடை" என்ற ஒரு ஓடை நெல்லை மாவட்டத்தில் உண்டு. தனது குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு ஒரு ஓடையைக் கடக்க வந்த ஒரு பெண் அந்த ஓடை தண்ணீரில் ஒரு பலாப் பழம் மிதந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டு பலாப்பழத்தின் மேல் ஆசைப்பட்டு குழந்தையை ஓடைக்கரையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு நீரில் இறங்கிச் சென்று கஷ்டப்பட்டு பலாப்பழத்தை எடுத்துக் கொண்டு கரைக்கு வந்து பார்த்த போது தனது அருமைக் குழந்தை ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதை கண்டு சொல்லொண்ணா துயரம் அடைந்தாள் என்று கூறப்படுகின்றது. அந்த நாளிலிருந்து அந்த ஒடையின் பெயர் "பிள்ளையைப் போட்டு பலாப்பழம் எடுத்தான் ஓடை" என்று வழங்கி வருகின்றது.

மேற்கண்ட துயர சம்பவத்தைப் போன்றே இன்று தேவ ஊழியங்களிலும் காரியங்கள் நடந்து வருவதை நாம் வேதனையோடு காண்கின்றோம். கவர்ச்சியான, மனதை மயக்கும், நித்திய ஜீவனுக்கு எந்த ஒரு பயனுமற்ற தேவச் செய்திகள், ஜெபங்கள், ஆடல்கள், பாடல்கள், நடனங்கள் எல்லாம் ஆராதனைகளிலே இடம் பெற்று ஆராதனை வேளையே ஆனந்த பரவச வேளையாகிப் போய்விடுகின்றது. ஆனால், கொடுக்கப்பட்ட தேவச் செய்தியில் ஆழம் கிடையாது. பாவத்தைக் குறித்து கண்டிப்பு பிரசங்கம் கிடையாது, பரிசுத்தத்தின் மேன்மையைக் குறித்த செய்தி இல்லை, சரீர ஒடுக்கத்தைப் பற்றிய செய்தி இல்லை, உலக மாயையைக் குறித்து பேசினால் ஜனங்கள் முறுமுறுப்பார்கள், நினையாத நேரம் சந்திக்கும் மரணத்தைக் குறித்துப் பேசி சபை மக்களை துக்கப்படுத்த முடியாது, நரக அக்கினி குறித்து சபையில் பேச எவருக்கும் உரிமையே கிடையாது, முடிவில்லா நித்தியம், அது நமக்குத் தேவையே இல்லாத காரியம். ஆவிக்குரிய சபைகள் பலவற்றின் உண்மை நிலை இதுவேதான். காரணம், அநியாய வட்டி வாங்குவோர், அடுத்தவரின் மனைவியை வைத்திருப்போர், விபச்சாரக்காரர், வேசிக்கள்ளர், வாங்கின கடனை திருப்பிக் கொடுக்காதவர்கள், கலப்படம் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் வியாபாரிகள், பொய் நாவினால் பொருளைச் சம்பாதிக்கும் தரகர்கள், இடைத்தரகர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்கள் எல்லாம் ஆராதனையில் வந்து கலந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாரும் மாதம் பிறந்தால் ஆயிரக்கணக்கான பணத்தை தசமபாகம், பொருத்தனை காணிக்கை என்று பாஸ்டர் கரங்களில் கவர்களில் போட்டுக் கொடுத்துச் செல்லும் பக்தர்களாவார்கள். இந்த பக்தர்களை கண்டித்தால் அவர்களுக்கு வரவேண்டிய காணிக்கை வரவு போய்விடுமே! சபை மக்கள் நரகம் போனாலும் பரவாயில்லை, நித்திய அக்கினிக்கடலில் வெந்து துடிதுடித்தாலும் கவலையில்லை, தங்களுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தை செலுத்திவிட்டு அவர்கள் தாராளமாக நரகம் செல்லலாம் என்ற நிலை உறுதியாகிவிட்டது.

இப்படிப்பட்ட சபைகளை நாடித்தான் திரளான மக்கள் இன்று ஓடிக்கொண்டிருக்கின்றனர். வாத்திய இசைகளோடு கூடிய பாடல்கள், ஆரவாரம், ஆர்ப்பரிப்பு, தாவீதைப்போன்ற நடனங்கள் எல்லாம் நிரம்பி வழியும் ஆராதனை. தங்கள் பாவங்களுக்காக மார்பில் அடித்து அழுகை, கண்ணீர், புலம்பல்கள், ஏக்கங்கள், கதறல்கள், வியாகுலங்கள் கேட்க வேண்டிய இடத்தில் நடனங்களோடு கூடிய ஆனந்தப் பாடல்கள் கேட்கின்றன. ஆனால், தங்களுடைய விலையேறப்பெற்ற ஆத்துமாவுக்கு ஆகாரமாக அவர்களுக்கு அங்கு ஒன்றுமே கிடையாது. ஆவியில் நிரம்பி ஆரவாரித்து ஆராதனை முடித்து வீடு திரும்பிய மனைவிக்கு கணவனால் தூஷணவார்த்தை வசைமாரியும், கன்னத்தில் அடிகளும் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கணவரும் தாவீதைப்போல ஆலயத்தில் நடனம் பண்ணியவர்தான். காரணம், ஜென்ம சுபாவத்தோடு ஆராதனைக்குச் சென்றவர்கள், ஜென்ம சுபாவத்தோடு வீடு திரும்பியிருக்கின்றார்கள். அவ்வளவேதான். இனி அடுத்த வாரம் தாவீதைப்போல ஆலயம் சென்று இவர்கள் நடனம் ஆடும் வரை வீட்டில் சாத்தானுடைய நடனத்தை இந்த மக்கள் பார்த்து ஆனந்தித்துக் கொண்டிருக்கலாம். எத்தனை வேதைனையான காரியம் பாருங்கள்! தேவ ஜனமே, உங்கள் விலையேறப்பெற்ற ஆத்துமாவை பணயம் வைத்து இப்படிப்பட்ட சபைகளுக்கோ, ஆராதனைகளுக்கோ ஒருக்காலும் போய்விடாதீர்கள். இப்படிப்பட்ட கவர்ச்சி ஆராதனைகளை நடத்தியவர்கள், தங்கள் கைகளில் மைக்கை பிடித்துக் கொண்டு, தேவ ஜனத்திற்கு முன்பாக ஆராதனை மேடையில் சினிமாவில் தோன்றும் நடிகர்களைப் போன்று அங்கும் இங்கும் பாய்ந்து ஓடி, மனதை மயக்கும் வார்த்தைகளோடும், சினிமா மெட்டுகளுடன் கூடிய கிறிஸ்தவ பாடல்களோடும், கூடி வந்த ஜனத்தை பரவசப்படுத்திய, இந்தப் பெருமைக்கார பேர்வழிகள் பயங்கரமான விபச்சார வேசித்தன பாவங்களில் வீழ்ந்து எத்தனை பெருத்த அவமானங்களை தங்களுக்கு வருவித்துக்கொண்டதுடன் தங்களைத் தாங்களே உருவக் குத்திக் கொண்டார்களே! பெருங்கூட்டம் செல்லுகின்ற சபை அது. அதுவேதான் கட்டாயம் பரலோகம் செல்லும் சபை என்று பகற் கனவு கண்டு கொண்டு இருக்காதீர்கள். உங்கள் பகற் கனவு இலவு காத்த கிளியின் கதையாக ஓர் நாள் முடிவு பெறும் என்பதை இரும்பு எழுத்தாணியால் உங்கள் இருதய பலகையில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஏழை சகோதரன் எழுதிய எழுத்து எத்தனை உண்மையானவை என்பதை நீங்கள் கண்டு கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 

மோட்சத்தின் பாதையில் இருக்கின்றீர்களா
என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

"தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே" (லூக்கா 17 : 21) என்று நம் அருமை இரட்சகர் கூறினார். நமது பாவ அக்கிரமங்களுக்காக நமது மார்பில் அடித்து அழுது புலம்பி தேவ சமூகத்தில் கண்ணீர் சொரிந்து, நமது பாவங்களை உண்மையான மனதோடும், உத்தமமான இருதயத்தோடும், கர்த்தரிடம் அறிக்கையிடும்போது அவர் நமது பாவங்களை எல்லாம் மன்னித்து நமக்கு பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் தந்து உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தை நமக்குக் கொடுத்து தமது ராஜரீக ஆளுகையையும் நமது இருதயத்தில் ஸ்தாபிக்கின்றார். அன்றைக்கு நம் உள்ளத்தில் பிரவேசித்த கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள்ளே வாசம் செய்கின்றார் (கொலோ 1 : 27) நமது பூலோக யாத்திரை முழுவதிலும் நம்மைக் காப்பதற்கும், அவர் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு நம்மைப் பத்திரமாகக் கொண்டு போய் சேர்க்கிற வரைக்கும் அவர் நம்முடனே கூடவே இருப்பார் (யாத் 23 : 20)

ஆனால் ஒரே ஒரு காரியம், நாம் நம்மில் வாசம் செய்து கொண்டிருக்கின்ற ஆண்டவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய பரிசுத்த வழிகளில் நாம் பயத்தோடும், நடுக்கத்தோடும் நடந்து கொண்டிருக்க வேண்டும். எந்தவிதத்திலும் நாம் நமது பாவச் செயல்களால் அவரை துக்கப்படுத்திவிடக்கூடாது. ஒரு ஆச்சரியமான காரியம் என்னவெனில், நம்மை எதிர்கொள்ளவிருக்கும் பாவச் சோதனைகளை பரிசுத்த ஆவியானவர் முன்கூட்டியே கண்டு அதை மேற்கொள்ள வேண்டிய பெலனை நாம் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள அவர் நம்மை வழிநடத்துவார். பல வருடங்களுக்கு முன்பாக நான் தனியனாக காசி பட்டணத்தில் தேவ ஊழியம் செய்து கொண்டிருக்கையில் ஒரு வேசி பெண்ணால் நான் பிடியுண்டு அழியப்போகும் காரியத்தை முன்கூட்டியே தேவன் அறிந்து அந்த தடவை நான் எனது வட இந்திய ஊழியத்தை செய்ய புறப்படுவதற்கு முன்பாக ஒரு மாத காலம் உபவாசம் எடுத்து ஜெபிக்க தூண்டிய ஆவியானவரின் தூண்டுதலுக்கு நான் முற்றும் கீழ்ப்படிந்து உபவாசம் இருந்ததால் அந்த பலத்த பாவச் சோதனையை வெற்றியுடன் மேற்கொண்டது மாத்திரமல்ல, என்னைப் பாவத்தில் வீழ்த்த வந்த பெண்ணே பாவ உணர்வடைந்து அழுது கொண்டே என்னைவிட்டு கடந்து செல்ல கர்த்தர் கிரியை செய்தார்.

நேப்பாள தேசத்தில் என்னை பாவத்தில் பிரவேசிக்கப் பண்ண முயன்ற பிரான்ஸ் தேச இளம் பெண்ணிடமிருந்தும் கர்த்தரால் நான் அதிசயமாகப் பாதுகாக்கப்பட்டேன். ஒரு இரா முழுவதும் ஒரு நேப்பாள கிராமத்தின் ஒரு சிறிய வீட்டில் மேற்கண்ட பெண்ணும் நானும் ஒரு அறையில் ஒருவருக்கொருவர் அருகில் படுத்திருந்தாலும் தானியேலுக்காக சிங்கங்களின் வாயைக் கட்டின தேவன் அந்தப் பெண் என்மேல் பலவந்தமாக போத்திப்பாரின் மனைவியைப் போல கைபோட்டு எதுவும் தொந்தரவு செய்யாதபடி அற்புதமாகக் காத்துக் கொண்டார். எனது உடன் பிறந்த தங்கை என் அருகில் படுத்திருக்கின்றார்கள் என்ற ஒரே எண்ணத்தை தவிர வேறு எந்த ஒரு எண்ணமும், எந்த ஒரு மாம்ச சிந்தையும் என்னில் எழும்பாதவாறு உலகத் தோற்றத்துக்கு முன்பாக என்னை தமது சுதந்திரவீதமாக தெரிந்து கொண்ட தேவன் பாதுகாத்தார்.

அதின் ஒரே காரணம், கர்த்தருடைய சுத்த கிருபைக்கு அடுத்தபடியாக பாவியாகிய எனது உறுதியான ஜெப வாழ்க்கையாகும். தினமும் என்னால் முடிந்த அளவு அதிகமான நேரத்தை நான் ஜெபத்தில் செலவிடுவது என்னோடு ஒட்டிய ஒரு பரிசுத்த வழக்கமாகிவிட்டது. நான் கடந்த நாட்களில் எழுதியது போல காலையில் நான் எனது படுக்கையிலிருந்து எழுந்து எனது அறையைவிட்டு வெளியே வரும்போது தேவ பெலத்தால் இரண்டு மணி நேரங்கள் ஜெபமில்லாமல் வருவதில்லை. கர்த்தருடைய சுத்தக் கிருபையால் வெகு நீண்ட காலமாக நான் இந்தப் பரிசுத்த பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றேன். அதின் பின்னர் பகலின் இடை நேரங்களிலும் கூடுமானவரை அவ்வப்போது ஜெபிக்க தவறுவதில்லை.

ஆண்டவரோடுள்ள எனது பரிசுத்த ஐக்கியம் கறைப்படாமல் இருப்பதற்காக தொலைக்காட்சி, மற்றும் செய்தித்தாட்களுக்கு என்னை விலக்கிக் காத்து வருகின்றேன். தொலைக்காட்சி பெட்டி இதுவரை உள்ள என் வாழ் நாள் காலத்தில் என்றுமே என் வசம் இருந்ததில்லை. செய்தி தாளுக்கு வெறியனாக ஒரு காலத்தில் இருந்த நான் சமீப ஆண்டுகளில் அதையும் கர்த்தருக்காக துண்டித்தேன். தொலைக்காட்சி, செய்தி தாள் இந்த இரண்டும் ஆண்டவரோடுள்ள நமது ஐக்கியத்தை களங்கப்படுத்தக் கூடியதாகும். தொலைக்காட்சி பார்த்து செய்திதாட்கள் வாசித்து விட்டு ஜெபித்துப் பாருங்கள். உங்கள் ஜெப வேளை கர்த்தருடைய பிரசன்னம் நிறைந்ததாக இருக்காது. நமது காலங்கள் விலையேறப்பெற்றவைகள். நமது காலங்கள் ஆண்டவருடைய பரித்த பாதங்களிலேயே முடிந்த அளவு செலவுபண்ணப்பட வேண்டும். (Time spent with God, Time well spent) தேவனோடு செலவிடப்பட்ட மணி நேரங்களே, நன்றாக செலவிடப்பட்ட மணி நேரங்களாகும் என்று ஒரு தேவ பக்தன் கூறினார்.

நமது ஜெப மணி நேரங்கள் ஒவ்வொரு நாளிலும் அதிகரிக்க, அதிகரிக்க நமது கிறிஸ்தவ வாழ்க்கையே நமக்கு இந்த உலகத்தில் மோட்சமாகத் தெரியும். தனியனாக இந்த மலை நாட்டில் பெரியதோர் வீட்டில் தனித்து வாழும் என்னைப் பார்த்து கர்த்தருடைய பிள்ளைகளில் பலரும் கேட்கும் ஒரு கேள்வி "நீங்கள் தனிமையாக எப்படி இந்த வீட்டில் இருக்கின்றீர்கள்?" என்பதுதான். "உங்களைப் போல நான் இந்த வீட்டில் தனிமையாக இருந்தால் எனக்குக் கட்டாயம் பைத்தியமே பிடித்துவிடும்" என்று ஒரு சகோதரி ஒரு தடவை என்னிடம் சொன்னார்கள். அவர்களுக்கு நான் சொன்ன பதில் "இந்த வீட்டில் நான் மட்டும் தனிமையாக இருக்கவில்லை, நானும் என் ஆண்டவரும் இருக்கின்றோம். இந்த வீட்டில் எனது மோட்சம் இருக்கின்றது" என்று கூறினேன்.

இந்த உலகத்தில் நமது ஒரே தேவை, ஆண்டவருடைய பாதங்கள் மாத்திரமே. ஆத்திரம், அவசரமாக, துரிதம் துரிதமாக காணப்பட்ட மார்த்தாளைப் பார்த்து அன்பின் ஆண்டவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தை "தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள்" (லூக்கா 10 : 42) என்பதுதான். "எனது பாதங்கள் மட்டுமேதான் உனது தேவை" என்றார் அன்பின் ஆண்டவர். வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவன், நம்மை சிருஷ்டித்த சிருஷ்டி கர்த்தாவாகிய தேவன் இதைச் சொல்லும்போது நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதினால் நமக்கு மிகுந்த நித்திய நன்மை உண்டு. பகலின் குளிர்ச்சியான வேளையில், ஏதேன் பூங்காவில் நமது ஆதி தாய் தந்தையரிடத்தில் தேவன் எதிர்பார்த்ததும் அதுவேதான்.

இங்கே பூலோகத்தில் நாம் ஆண்டவரோடு கொள்ளும் நமது செடியும் கொடியுமான நமது ஐக்கிய உறவே முடிவில்லா யுகாயுகமாக பரலோகிலும் தொடருகின்றது. இங்கே இந்த உலகில் ஆண்டவருடைய பாதங்களில் உட்கார்ந்து அவரது சமூகப்பிரசன்னத்தை வாஞ்சித்துக் கதற மனமற்று நம்முடைய காலங்களையும், நேரங்களையும் தொலைக்காட்சியிலும் (கிறிஸ்தவ தொலைக்காட்சியையும் சேர்த்துத்தான்) செய்தி தாட்களிலும், அண்டை அயலகத்தார், நண்பர்கள், உற்றார் உறவினர்களுடன் பேசி செலவிட்டு பாழாக்கும் நமக்கு பரலோகம் சென்றதும் அவரது பாதங்களில் என்றுமாக உட்கார ஆசையும் ஆவலும் திடீரென்று எங்கிருந்து வரும் என்று நான் உங்களைப் பார்த்துக் கேட்கின்றேன்.

தேவ ஜனமே ஏமாந்து போகாதீர்கள். ஆண்டவரோடு மோட்சத்தில் ஆனந்தித்துக் களிகூரப்போகும் மோட்சானந்த பாக்கியம் உங்கள் முழங்கால்களில் பூலோகத்திலேயே ஆரம்பமாகட்டும். சிம்லா மலைகளிலுள்ள சுபத்துவில் உள்ள தனது பெரிய பங்களாவில் வாழ்ந்த பரிசுத்த மகாத்துமா சாதுசுந்தர்சிங் அவர்கள் தனது பகற்காலம், இராக்கால மணி நேரங்களை ஆண்டவருடைய பாதங்களில் செலவிட்ட அறைகளை நான் பல்லாண்டு காலங்களுக்கு முன்பாகப் போய்ப் பார்த்து வந்தேன். தேவனுடன் பரலோகில் வாழும் மோட்சானந்த பாக்கியம் அவருக்கு பூலோகத்திலேயே ஆரம்பமாகியிருந்தது. அந்த அறைகளில் அவர் ஜெபித்துவிட்டு அறையின் கதவைத் திறந்து வெளியே வரும்போது அவரது முகத்தில் தேவனுடைய பிரசன்னத்தின் ஒளியை அங்கு அவருடன் இருந்த தேவ மக்கள் கண்டதாகச் சொல்லுகின்றனர்.

ஒரு நாளில் எத்தனை மணி நேரங்கள் வேண்டுமானாலும் ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் உங்கள் முழங்கால்களை முடக்க முடியுமா? "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" என்ற கர்த்தருடைய தாசனாகிய தாவீது ராஜாவின் அனுபவம் உங்களுக்கு உண்டுமா? சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரோடு தனித்து உறவாட உங்கள் மனம் வாஞ்சிக்கின்றதா? "எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்" (சங் 73 : 28) என்பது உங்கள் அனுபவமா? மோட்சத்தின் பாதையில் நீங்கள் இருக்கின்றீர்களா? தேவனுடைய சமூகத்தில் உங்களை தரைமட்டாகத் தாழ்த்தி உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள்.

 

நமக்கு முன்னாலுள்ள கொடிய காலங்கள்

"எங்கள் ஆயுசு நாட்கள் சீக்கிரமாகக் கடந்து போகிறது, நாங்களும் பறந்து போகிறோம்" (சங் 90 : 10) என்றார் தாவீது பக்தன். நமது ஜீவ நாட்கள் எத்தனை வேகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் கவனிக்கின்றீர்களா? நம்மோடு வாழ்க்கையை ஆரம்பித்த, நம்மோடு உண்டு உறங்கிய, நம்மை நேசித்த, நம்முடன் ஒன்றாகப் பணிபுரிந்த எத்தனை எத்தனை பேர் இந்த உலகத்தை விட்டு கடந்து சென்று விட்டனர். நமக்கான வேளை வர இன்னும் எத்தனை யுகங்கள் தேவை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

கோத்தகிரியில் நான் இருக்கும் வீட்டிற்கு கீழாக பச்சைப் பசேரென்ற அழகான ஒரு பள்ளத்தாக்குண்டு. அதிகாலையில், நானாவித பறவைகளின் குரலால் அந்தப் பள்ளத்தாக்கு நிறைந்திருக்கும். பகற் காலங்களிலும் ஆங்காங்கு பறவைகள் மரங்கள், புதர்களிலிருந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கும். திடீரென அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் எதிரொலிக்கும் வண்ணம் ஆங்காங்கு மரங்கள், புதர்களிலிருந்த பறவைகள் எல்லாம் ஏகோபித்து அபயக் குரல் எழுப்பும். அப்பொழுது நாம் வெளியே வந்து பார்த்தால் பறவைகளை அடித்து உண்ணும் வல்லூறு பறவை ஒன்று ஏதாவது ஒரு பறவையை அடித்துத் தன் கால்களில் வைத்துக் கொண்டு பறந்து செல்லுவதை நாம் காணலாம். அது ஒரு அடைக்கலானோ அல்லது ஒரு புறாவோ அல்லது அது ஒரு பூணியல் பறவையாகவோ இருக்கும். பறவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து துயரக் குரல் எழுப்பிவிட்டால் நிச்சயமாக ஒரு பறவை வல்லூரால் வேட்டையாடப்பட்டுவிட்டது என்பதை நாம் நிச்சயித்துக் கொள்ளலாம்.

அவ்வாறே மரணமும் நமக்கு அருமையானவர்களையும், நமது அண்டை அயலகத்தாரையும் இடைவெளிவிட்டு, விட்டு சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், நாம் அதை சிந்தித்துப் பார்ப்பதில்லை. விழிப்படைவதில்லை. ஆண்டவரைச் சந்திக்க நாம் ஆயத்தமாவதில்லை. கட்டில் கிடையாக்கும் கொடிய வியாதிகள் மக்களை விருத்தாப்பியத்தில் சந்திக்கின்றது. அந்த விருத்தாப்பிய மக்கள் கட்டிலில் பகல் இரவெல்லாம் தனித்தே படுத்திருக்க வேண்டும். அவர்களை கவனிக்கும் குடும்பத்தின் பிள்ளைகளுக்கும் போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது. இரவில் எந்த நேரம் எழுப்பினாலும் பிள்ளைகள் தூக்கத்திலிருந்து எழுந்து அவர்களைப் பார்க்க வேண்டும். தாங்களாகவே பாத்ரூம் சென்று தங்கள் காரியங்களை கவனித்துக் கொள்ள இயலாத பெற்றோரின் பிள்ளைகளின் பாடுகளை இங்கு விவரிக்க வார்த்தைகளிலில்லை. எத்தனை பணம் கொடுத்தாலும் அந்தவித பணிகளைச் செய்ய எவரும் கிடைப்பதுமில்லை. பிள்ளைகள் மாத்திரம்தான் அந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும். பிள்ளைகள் படும் ஆறா துயரங்களைக் கண்டு கட்டிலில் படுத்திருக்கும் தாய் அல்லது தந்தை துடிதுடிக்கின்றனர். தங்கள் மரணத்திற்காக ஏங்கித் தவிக்கின்றனர். தங்கள் ஆண்டவரிடம் தங்கள் துரிதமான மரணத்திற்காக மருகி மன்றாடி கதறுகின்றனர்.

குடும்பங்களில் விருத்தாப்பிய பெற்றோர்களின் கொடிய நோய் பிணி காரணமாக பெற்ற பிள்ளைகள் படும் வியாகுலங்களை யாரே அளவிட முடியும்? கர்த்தருடைய கிருபையால், நாம் நல்ல சுகதேகிகளாக இருக்கின்றோம், நமது வேலைகளைச் செய்கின்றோம், நன்றாகப் புசிக்கின்றோம், தூங்குகின்றோம், எழும்புகின்றோம், பிரயாணங்கள் செய்கின்றோம். அதற்காக ஆண்டவருக்கு நாம் எத்தனை துதிகள் ஏறெடுக்க வேண்டும்? எத்தனை தடவை ஆண்டவருடைய பாதங்களில் விழுந்து அவரை நாம் முத்தம் செய்ய வேண்டும்? எத்தனை நன்றியால் நாம் நிறைந்திருக்க வேண்டும்? நன்றி கெட்ட நாம் அப்படிச் செய்வதில்லையே! கர்த்தர் கிருபையாக நமக்கு மன்னிப்பாராக.

ஆனால், நாம் இன்னும் மனம் திரும்பவே இல்லையே. நாள் ஒன்றுக்கு 10 நிமிடம், 20 நிமிடம் ஜெபத்துடன் நமது ஜீவ சுவாசத்தை தமது கரங்களில் வைத்திருக்கும் ஆண்டவருடனான நமது அன்றைய நாளின் உறவை முடித்துக் கொள்ளுகின்றோம். நாளின் அதிகமான நேரத்தை தொலைக்காட்சியில் வரும் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளான பிரசங்கங்கள், பாடல்கள், கோலாட்டம், குயிலாட்டம், வாலிபர் கொண்டாட்டம், குறு நாடகங்கள், நகைச் சுவை நிகழ்ச்சிகள், போன்றவைகளைப் பார்த்துப் பாழாக்குகின்றோம். செய்தித்தாளை எடுத்தால் அதிலுள்ள அத்தனை செய்திகளையும் குறைந்தது ஒரு மணி நேரமாவது முழுமையாக செலவிட்டு வாசித்து முடிக்கின்றோம். நமது வாழ்வின் முடிவு நீதிமானின் முடிவாக இருக்க வேண்டுமே, அவன் மரிப்பது போல நான் மரிக்க வேண்டுமே (எண் 23 : 10) என்று நாம் அழுது, புலம்பி, ஆண்டவரோடு நாம் ஒப்புரவாகி நாம் நினையாத நேரம் திடீரென்று சந்திக்கப்போகும் முடிவில்லாத நித்தியத்தை அன்பின் ஆண்டவரோடு பரலோகில் செலவிட கண்ணீரோடு ஆயத்தமாக வேண்டிய நாம் எந்த ஒரு பயத்தின் உணர்வின்றி நமது பொன்னான காலங்களை நிர்விசாரமாக வீணடிக்கின்றோமே!

தேவ ஜனமே, விழித்துக் கொள்ளுங்கள். உனக்குக் கிடைத்த இந்த கிருபையின் நாட்களில் உனது சமாதானத்துக்கானவைகளை நீ அறிந்து கொள். உனது மார்பில் அடித்து "தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" "ஆண்டவரே, உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்" என்று கதறிக் கூப்பிடு. காகத்தின் வாயிலுள்ள வடையைப் பறிக்க தந்திர நரி "காக்கா, காக்கா நீ எவ்வளவு அழகாக இருக்கின்றாய், ஒரு பாட்டுப்பாட மாட்டாயா?" என்ற தனது கவர்ச்சியான வார்த்தைகளைக்கூறி காகம் பாட்டுப்பாட தனது வாயை திறந்ததும் கீழே விழுந்த வடையை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்த தந்திர நரியைப் போன்று நமது தமிழ் நாட்டுக் கிறிஸ்தவ ஊழியர்கள் பலரும் உங்கள் விலையேறப்பெற்ற ஆத்துமாவை மோட்சம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற அன்பின் பாரத்தினால் அல்ல, உங்கள் காணிக்கை, உங்கள் தசமபாகம் போன்றவைகளை எப்படியாவது உங்களிடமிருந்து கைப்பற்றி தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள தந்திரமாக உங்கள் மனதை மயக்கி உங்களை மேற்கொள்ளவிடாமல் உங்களை தேவபெலத்தால் பாதுகாத்துக் கொண்டு, வழிகளிலே நின்று பூர்வப்பாதைகளாகிய மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும், உலகம் தரக்கூடாத இரட்சிப்பின் சந்தோசத்தையும், மறுபடியும் பிறந்த பரலோக பாக்கிய அனுபவத்தையும் பெற்று ஆண்டவரும், நீங்களும் செடியும், கொடியுமாக ஒவ்வொரு நாளும் முடிந்த அளவு அதிகமான நேரத்தை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிட்டு தேவ பெலத்தால் மோட்ச பாக்கியத்தின் முன் ருசியை உங்கள் முழங்கால்களுக்கு கொண்டு வாருங்கள். அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்துவிட்டால் உலகில் உங்களுக்கு வேறு என்ன தேவை? வாழ்க்கையை சந்திக்கும் எந்த ஒரு கடின சூழ்நிலையையும் நீங்கள் மிகுந்த தேவ சமாதானத்தோடு கடந்து செல்லலாம். தனிமையா, கட்டில் கிடையான வியாதியா, நேசித்தோர் யாவரும் கைவிட்டுவிட்டார்களா, பிள்ளைகளின் பாசம் போய்விட்டதா எதுவானாலும் பவுல் அப்போஸ்தலனைப்போல "நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாக இருக்கக் கற்றுக்கொண்டேன்" என்ற மன நிறைவோடு "தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்" என்ற தாவீது இராஜாவின் பரலோக நம்பிக்கையோடு இந்த உலக யாத்திரையை மிகுந்த களிகூருதலோடு கடந்து செல்லலாம். அதற்கான கிருபைகளை தேவன் தாமே உங்களுக்கும், பாவியாகிய எனக்கும் தந்தருள்வாராக. ஆமென்.

 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM