கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,
நம்முடைய பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் உங்களுக்குக் கிருபையும், இரக்கமும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.
இந்த தேவ எக்காள இதழ் உங்கள் கரங்களில் வந்து சேரும்போது, கர்த்தருக்குச் சித்தமானால், நாங்கள் தேவ ஊழியத்தின் பாதையில் வடக்கு நோக்கி பிரயாணப்பட்டு சென்று கொண்டிருப்போம். அன்பின் ஆண்டவர் ஊழியங்களை ஆசீர்வதித்துத் தரவும், ஊழியங்களுக்கு எதிராக சாத்தானால் எங்களுக்கு நேரிடக்கூடிய எல்லா போராட்டங்களையும் நாங்கள் தேவ பெலத்தால் வெற்றியோடு கடந்து முன் செல்லவும், தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளை மக்களுடைய கரங்களில் நாங்கள் சுயாதீனமாக கொடுத்து மகிழ்ச்சியோடு திரும்பவும் வருகிற அக்டோபர் மாதம் முழுமையிலும் நீங்கள் எங்களுக்காக தயவாக ஜெபித்துக் கொள்ளுங்கள். அதற்கான பிரதி பலன் பரலோகில் உங்களுக்கு உண்டு.
பாவியாகிய என்னையும், தேவ எக்காள ஊழியங்களையும் தேவ பிள்ளைகளாகிய நீங்கள் அதிகமாக நேசிக்கின்றீர்கள். விசேஷமாக எனது நல்ல உடல் நலத்தைக் குறித்து நீங்கள் மிகவும் கருத்தாக இருக்கின்றீர்கள், கவலைப்படுகின்றீர்கள். நான் கர்த்தருக்குள் நீண்ட நாட்கள் ஜீவனோடிருந்து தேவனுடைய சுத்த சத்தியத்தை உங்களுக்கு தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விரும்புகின்றீர்கள். அதின் காரணமாக நான் பயன்படுத்தும்படியாக விலையுயர்ந்த மாத்திரங்களையும், உபகரணங்களையும் தேவ அன்பின் பாரத்தோடு வாங்கி அனுப்புகின்றீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இனி நீங்கள் அப்படி அவைகளை வாங்கி அனுப்ப வேண்டாம். அதற்கென்று தனித்து பணமும் தயவுசெய்து அனுப்ப வேண்டாம். உங்கள் ஜெபங்களில் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். அது ஒன்று மட்டுமே எனக்குப் போதுமானது.
நம்முடைய காலங்கள் ஆண்டவருடைய கரங்களில் உள்ளது (சங் 31 : 15) எதுவரைக்கும் நம்மை இந்த உலகத்தில் வைத்துக் கொள்ளவும், அவருடைய பரிசுத்த ஊழியத்தைச் செய்யவும் அன்பின் கருணாகர கர்த்தர் விரும்புவாரோ அதுவரைக்கும் நாம் மிகுந்த பாதுகாப்பாக இருப்போம்.
கடந்த தேவ எக்காள இதழ் உங்களில் அநேகருக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது அறிந்து ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றேன். ஒரு தேவ பிள்ளையிடமிருந்து வந்த கடிதத்தின் வரிகள் "இரத்த சாட்சிகள், சாட்சியுடன் கூடிய தேவ எக்காளம் கண்ணீரை வரவழைத்தது. அழுது கொண்டே வாசித்தேன். மட்டுமல்ல இம்மாத இதழ் "அங்கிள் ஜாண் வாசர்" என்ன அருமை! நான் தேவ எக்காளம் இதழின் முதல் பகுதியை வாசிக்கும்போது அழாத நாட்களே கிடையாது. என் கணவர் வெளியே சென்றதும் தேவ எக்காளம் பத்திரிக்கையை வாசித்து கண்ணீர்விட்டு, சில சமயங்களில் கதறி அழுவதுண்டு. ஏன்? அவர்கள் அப்படி பரிசுத்தமாக வாழ்ந்து பரிசுத்த ஊழியம் செய்தார்களே, நாம் இப்படி வாழ்கிறோமே. இக்கால ஊழியர்கள், கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கை ஒரு கேவலமான வாழ்க்கையாக இருக்கிறதே என்று தேவனை நோக்கி ஜெபிக்கின்றேன். ரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் சாட்சி இல்லாத, கனி இல்லாத ஆடம்பர வாழ்வையே விரும்புகிறார்கள்" என்று எழுதுகின்றார்கள். கர்த்தருக்கே மகிமை.
அடுத்து ஆங்கிலத்தில் வந்த ஒரு கடிதத்தை அப்படியே ஆங்கிலத்தில் தருகின்றேன். ஆங்கிலம் தெரிந்த தேவ பிள்ளைகள் அதைப் படித்து கர்த்தருக்கு துதி செலுத்துங்கள்.
(Beloved Brother in Christ,
Greetings in the great and mighty name of our Lord and Saviour Jesus Christ,
Praying for your good health. May God who put in, the desire in you, to minister to those in far off places, bless you with courage, wisdom and strength to complete that work.
The latest issue of Deva Ekkalam spoke to me in a very special way. I want to write about every blessing it brought in a very detailed way, looking at page by page........but I have given it to one of our church members from Tanjore. It brought in me a desire to pray for those around me to find salvation in Jesus. It reminded me of II Peter 1 :5 - 8.
I just want you to know that 1000 pulpit messages could never have shaken me in this way to run to THRONE OF MERCY when there's still time. I feel my worthlessness before his holiness. Please pray for us to remain in his love and do his will in our lives.
May God bless you and keep you in his strength. May he grant you the grace of finding a good harvest where seeds had been sown already. With prayers, Loving sister, Shanthi)
தேவ எக்காளம் இதழின் செய்திகளை ஜெபத்தோடும், உபவாசத்தோடும், பெரும்பாலும் எனது முழங்கால்களிலேயே ஆயத்தம் செய்கின்றேன். இதை நான் ஏற்கெனவே நமது கடந்த கால தேவ எக்காள இதழ்களில் குறிப்பிட்டிருக்கின்றேன். "அன்பின் தகப்பனே, உம்முடைய ஜனத்திற்கு இந்த தேவ எக்காளத்தில் நீர் என்ன செய்தியை கொடுக்க விரும்புகின்றீரோ அதை கொடும்" என்று கேட்டு அவரிடம் பெற்றுக் கொண்ட தேவ செய்தியை உங்களுக்கு நான் எழுதுகின்றேன்.
பரிசுத்த பக்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கும் வேலைகளை எல்லாம் முழுமையாக ஆண்டவருக்கு கையளித்து விடுகின்றேன். இந்த இதழிலும் தர்ம் பிரகாஷ் ஷர்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவ்வாறே ஆண்டவரின் ஒத்தாசையோடும் அதிகமான ஜெபத்தோடும் மொழிபெயர்த்து உங்களுக்குத் தந்திருக்கின்றேன். ஜெபத்தோடு வாசித்து உங்களுடைய ஆவிக்குரிய வாழ்வுக்கு அனுகூலமாக்கிக் கொள்ளுங்கள். அவருடைய மனந்திரும்புதலின் காரியத்தையும், கர்த்தருடைய குரலை தர்ம் பிரகாஷ் திரும்பத் திரும்பக் கேட்கும் சம்பவங்களையும் நான் உங்களுக்குத் தெளிவாக எழுதியிருக்கின்றேன். அதின் ஒரே காரணம், அவரைப்போல நீங்களும் உங்களுடைய கிறிஸ்தவ வாழ்வில் கட்டாயம் கர்த்தருடைய சத்தத்தை கேட்க வேண்டும் என்பதற்காகத்தான்.
நம்முடைய கடந்த கால பாவங்களுக்காக நாம் கண்ணீர் சிந்தி அழுது பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் நாம் நமது வாழ்க்கையில் பெற்றிருப்போமானால் நிச்சயமாக கர்த்தர் நம்மோடு பேசிக் கொண்டிருப்பார். அவருடைய குரலை நாம் நமது வாழ்க்கையில் பல தடவைகளும் கேட்டிருப்போம். நம்முடைய இரட்சிப்பின் காரியம் முழுமையானதாக இல்லாவிட்டால், பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் நாம் பெற்றிராதபட்சத்தில் ஆண்டவர் நமது உள்ளத்தில் வாசம் செய்யமாட்டார். அவர் குரலை நாம் கேட்கவும் முடியாது.
அநேக தேவ ஊழியர்கள் அடிக்கடி பரலோகம் சென்று வருவதாகவும், அன்பின் ஆண்டவர் இயேசுவையும், அவரது சீடர்களையும், நமது முற்பிதாக்கள், தீர்க்கத்தரிசிகள், இரத்தசாட்சிகள், பரிசுத்தவான்கள் போன்றவர்களை முகமுகமாகத் தரிசித்து வருவதாகவும் செல்லுகின்றார்கள். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆனால், உங்கள் சகோதரனாகிய எனக்கு அப்படிப்பட்ட பரலோக காட்சிகள் எதுவும் இதுவரை கிடைக்காதபோதினும் எனது வாழ்க்கையில் தேவனுடைய பிரத்தியட்சமான குரலை எனது உள்ளத்திலும், அசரீரீயாகவும் பல தடவைகளும் நான் கேட்டுப் பரவசமடைந்திருக்கின்றேன். அவர் என்னிடத்தில் பேசிய வார்த்தைகன் எல்லாம் வேதவசனத்திலிருந்து பேசப்பட்டதே தவிர வேத வசனத்திற்கு புறம்பாக ஆண்டவர் எதையும் என்னிடம் பேசவில்லை.
ஆண்டவரின் நேரடியான குரலை நான் என் வாழ்வில் பல தடவைகளும் கேட்டபடியால் அவரை அதிகமாக நேசிக்கவும், அவருடைய வார்த்தைகளுக்கு சமூலமாக கீழ்ப்படியவும் எனக்கு ஒத்தாசையாக இருந்தது. மனச்சோர்புகள், கவலைகள், ஆண்டவர் நம்மை உண்மையாக நேசிக்கின்றாரா? இல்லையா? என்ற சாத்தானுடைய சந்தேகக் கணைகள் எனக்கு எதிராக வரும்போது ஆண்டவர் கடந்தகால நாட்களில் என்னிடம் பேசிய இடங்களையும், சூழ்நிலைகளையும் சாத்தானுக்கு சுட்டிக்காட்டி அவனை ஓடப்பண்ணுவதுடன் என்னுடைய விசுவாச வாழ்க்கையையும் நான் ஆண்டவருக்குள் தடுமாற்றமின்றி உறுதியாகக் காத்துக் கொள்ளுகின்றேன். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.
உலகம் முழுவதிலுமுள்ள கிறிஸ்தவ மாந்தர் யாவரும் ஆசை ஆவலாக தினமும் மணிக்கணக்காக தொலைக்காட்சியைப் பார்த்து தேவனுடைய பாதங்களில் செலவிட வேண்டிய தங்கள் விலையேறப்பெற்ற காலத்தை பாழாக்குகின்றார்கள் என்றால் அதின் ஒரே திட்டமான காரணம் அவர்கள் தங்கள் வாழ்வில் ஆண்டவருடைய குரல் கேட்காததுதான். அந்த வல்லமையின் பரிசுத்த குரல் அவர்களை ஒருக்காலும் தொலைக்காட்சியைப் பார்க்க அனுமதிக்காது.
உலகம் போற்றும் பரிசுத்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங் அவர்கள் இன்று நம் நடுவே உலகில் உயிரோடிருப்பாரானால் அவர் வாழ்ந்த சிம்லா மலைகளிலுள்ள சுபத்து என்ற இடத்திலுள்ள அவருடைய பங்களாவில் தொலைக்காட்சி பெட்டி வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? ஒருக்காலும் இல்லை. அதைக் கண்ணேறிட்டுக் கூட பார்க்கமாட்டார். அந்த மகாத்துமா பார்க்கும் ஒரே ஒரு தொலைக்காட்சி பெட்டி ஆண்டவருடைய பரிசுத்த பாதங்கள் மட்டுமேதான். அந்தக் காட்சியைத்தான் அவர் வெறிபிடித்தவராக நாளின் பல மணி நேரங்களும் புசிக்கும் ஆகாரத்தையும், குடிக்கும் பானத்தையும் மறந்து தனியனாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். அரச அரண்மனைகளில் ராஜ குடும்பத்தினருடன் பந்தி போஜனத்தில் இருக்கும் வேளைகளில் கூட அதை அப்படியே சற்று நேரம் வைத்து விட்டு பக்கத்து அறையிலிருக்கும் ஆண்டவருடைய பாதங்கள் என்ற அந்த தொலைக்காட்சி பெட்டியில் ஏதோ ஒரு அற்புதக் காட்சியை சற்று நேரம் பார்த்து பரவசமடைந்துவிட்டு மீண்டும் ஆகாரத்தில் வந்து அமருவார். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. |