தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தில் தேவனுடைய பரிசுத்த ஜனத்தை ஆச்சரியத்தால் புல்லரிக்கப்பண்ணக்கூடிய ஒரு வேத வசனம் உண்டு. வசனத்தைக் கவனியுங்கள்:- "வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமூகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவி கொடு, அவரைக் கோபப்படுத்தாதே, உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை, என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது" (யாத் 23 : 20-21)
மேற்கண்ட வசனத்தில் "அவர் வாக்குக்குச் செவி கொடு, அவரைக் கோபப்படுத்தாதே" என்ற தேவனுடைய எச்சரிப்பை நாம் பிரதானமாகக் கவனிக்க வேண்டும். ஒரு கர்த்தருடைய பிள்ளை இந்தப் பூவுலக வனாந்திர வாழ்வில் பாதுகாப்பாக நடந்து சென்று பரலோகத்தை அடைவதற்கு அதினுடைய வாழ்க்கையில் முழுமையான கீழ்ப்படிதல் மிகவும் அவசியமாகும்.
தேவனுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடாமல் விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியை நமது ஆதித்தாய் தந்தையர் புசித்த ஒரே காரணத்திற்காக தேவனுடைய அழகிய உலகம் இன்று சாத்தானுடைய கரங்களில் சிக்கி "குரங்கு கை பூமாலை" போலச் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதை நாம் துயரத்துடன் காண்கின்றோம்.
"என்னிடத்தில் வந்து என் வார்த்தைகளைக் கேட்டு அவைகளின்படி செய்கிறவன் ஆழமாய்த்தோண்டி கற்பாறையின் மேல் அஸ்திபாரம் போட்டு வீடு கட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்" (லூக் 6 : 47-48) என்றும், "என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான்" (யோவான் 14 : 15) என்றும் நம் அருமை இரட்சகர் அவருக்கு கீழ்ப்படிதலின் அவசியத்தை மிகவும் தெளிவாகக் கோடிட்டுக் காண்பித்தார்.
அமெரிக்க தேசத்தின் மாபெரும் சுவிசேஷகர் டி.எல்.மூடி என்ற பரிசுத்தவானின் 280 பவுண்டுகள் எடை கொண்ட அவர் சரீரத்தின் ஒவ்வொரு அவுன்சும், அவருக்குள்ளதனைத்தும் அன்பின் ஆண்டவருக்கு சமூலமாக சொந்தமாக இருந்தது. ஒரு சமயம் சிக்காக்கோ பட்டணத்தில் ஒரு மாத காலம் அவர் தேவ ஊழியத்தின் பாதையில் இருக்கும்போது தனது சக ஊழியர் ஆர்.ஏ.டோரி என்ற தேவ பக்தனிடம் "என் ஆண்டவர் என்னை இந்த அறையின் கட்டிடத்தின் ஜன்னலிலிருந்து மறு கட்டிடத்தின் ஜன்னலுக்கு என்னைக் குதிக்கச் சொல்லும் பட்சத்தில் எந்த ஒரு கால தாமதம் இல்லாமல் உடனே நான் குதித்துவிடுவேன்" என்று கூறினார். ஆம், தனது அன்பின் தேவனுக்கு அவர் முற்றுமாக கீழ்ப்படிந்து நடந்து கொண்டார். அதின் காரணமாக தேவன் அவரை மிகவும் வல்லமையாக பயன்படுத்தினார். உலகம் முழுவதிலும் அவருடைய ஊழியங்களின் காரணமாக இலட்சாதி லட்சம் மக்கள் தேவனுடைய இரட்சிப்புக்கு நேராக வழிநடத்தப்பட்டனர்.
சீன தேசத்தில் மிகவும் வல்லமையாக கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட மாபெரும் மிஷனரி தேவ பக்தன் ஹட்சன் டெயிலர் என்பவராவார். கர்த்தர் அவரை அத்தனை வல்லமையாக பயன்படுத்தியதின் இரகசியம் என்னவென்று அவரிடம் கேட்ட போது "நான் ஆண்டவருக்கு எந்த ஒரு காரியத்திலும் "இல்லை" என்று மறுப்புச் சொன்னதே கிடையாது" என்று சொன்னார்.
நாம் மனந்திரும்பி இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்று கர்த்தரில் வளர்ந்து வரும்போது ஆண்டவர் பல காரியங்களிலும் தமக்கு நாம் கீழ்ப்படியும்படியாக நம்மைக் கேட்பார். சரீரம் செத்துப்போனஅந்த விருத்தாப்பிய காலத்தில் தனக்குக் கர்த்தர் கொடுத்த தனது ஏக புதல்வனை தகன பலியாக செலுத்தும்படியாக கர்த்தர் நமது முற்பிதா ஆபிரகாமைக் கேட்பதை (ஆதி 22 : 2) நாம் ஆச்சரியத்துடன் வாசிக்கின்றோம்.
நமது முற்பிதா ஆபிரகாமுக்கு நேச புத்திரனும், ஏக சுதனுமாக ஈசாக்கு இருந்தது போல நமது கிறிஸ்தவ வாழ்விலும் நமது உள்ளத்திற்கு மிகவும் பிடிப்பான காரியங்கள் இருக்கும். சிலருக்கு ஆகார மோகம் குறிப்பாக மாமிச உணவுகள் மேல் இருக்கும். "என் கணவருக்கு கவிச்சை இல்லாமல் சாப்பாடு இறங்காது" என்று தாய்மார் சொல்லுவதை நாம் கேட்கின்றோம். கவிச்சை என்றால் மாமிச உணவாகும்.
உங்கள் சகோதரனாகிய நானும் மேற் கண்ட கவிச்சை ஆகாரத்தில் ஒரு காலத்தில் மிகவும் மோகம் கொண்டவனாக இருந்தேன். நான் எனது உலகப்பிரகாரமான வேலையை ஒரு தேயிலைத் தோட்டத்தில் சுமார் 20 ஆண்டுகள் செய்தேன். எங்கள் தேயிலைத் தோட்டத்தை சுற்றிலும் அடர்ந்த கானக சோலைகள் இருந்தபடியால் மான், காட்டுப்பன்றியின் இறைச்சி அடிக்கடி எங்களுக்கு கிடைப்பதுண்டு. அந்தவித உணவுக்கு நான் அடிமைப்பட்டுக் கிடந்த என்னை ஆண்டவர் அதைவிட்டுவிட பலமாக ஏவினார். ஆண்டவருடைய வார்த்தைக்கு முற்றுமாக கீழ்ப்படிந்தவனாக அந்த மாமிச உணவை என்னைவிட்டு அப்புறப்படுத்தினேன். அதின் பின்னர் மீன், கருவாடு போன்ற பதார்த்தங்களில் எனது ஆசை பலமாக இருந்தது. அந்த ஆசையையும் நான் விட்டுவிட கர்த்தர் என்னை ஏவினார். உடனே, அந்த ஆசையையும் நான் விட்டுவிட்டேன். அநேக கிறிஸ்தவ மக்கள் தங்கள் பற்கள் எல்லாம் போனபோதிலும் மாமிச உணவிலுள்ள தணிக்க முடியாத ஆசையின் காரணமாக இறைச்சியை மென்மையாக அரைத்து விடக்கூடிய ஒரு சிறிய உபகரணத்தில் வைத்து அரைத்து சமைத்துச் சாப்பிடுவதை நான் கவனித்திருக்கின்றேன். எனது பற்கள் எல்லாம் நல்ல உறுதியாக இருந்த நாட்களிலேயே அன்பின் ஆண்டவர் மாமிச உணவுகளின் மேல் இருந்த எனது ஆசையை துண்டித்துப் போட்டார். நானும் அவருக்கு சமூலமாகக் கீழ்ப்படிந்தேன்.
எனது வாழ்நாட்காலம் முழுவதும் எனக்கென்று நான் தெரிந்து கொண்ட ஒரு வகை எளிமையான செருப்பையே நான் அணிந்து வந்திருக்கின்றேன். குளிரோ, நடுக்கும் பனியோ நான் ஒருக்காலும் என் கால்களில் தோல் சப்பாத்துக்களை அணிந்ததில்லை. அப்படியே, நான் எனக்கென்று ஒரு கோட்டைக் கூட வைத்திருந்ததில்லை. எனது கலியாணம் முடிந்ததும் எனது அருமை மனைவி முதல் வேலையாக எனக்கு ஒரு கோட்டை தைத்துக் கொள்ளும்படியாக பணம் கொடுத்து உதவினார்கள். அவர்கள் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து ஒரு கோட்டுக்கான துணியை வாங்கி தைத்துப் போட்டுக் கொண்டேன். அந்தக் கோட்டிற்கப்பால் நான் திரும்பவும் மற்றொரு கோட்டை எனது வாழ்வில் எனக்கென்று கொள்ளவுமில்லை, அதை அணியவுமில்லை. அவைகளை அணிவதினால் எந்த ஒரு குற்றமோ, பாவமோ எதுவுமில்லை. "மற்றவர்கள் அதைச் செய்யலாம், ஆனால் நீ அதைச் செய்யக் கூடாது" (Others can, But you cannot) என்பதே என்னைக் குறித்த தேவ தீர்மானமாக இருந்தது.
மேல் நாட்டுப் பக்த சுரோன்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளை நீங்கள் எடுத்து வாசித்துப் பார்ப்பீர்களானால் பலருடைய வாழ்விலும் அவர்கள் 2 அல்லது மூன்று தடவைகள் கூட தங்கள் மனைவி இறந்துவிட்டால் அடுத்தடுத்து திருமணம் செய்து கொள்ளுவதை நாம் மிகுந்த ஆச்சரியத்துடன் கவனிக்கலாம். தங்களுடைய மாம்ச இச்சையை தணிப்பதற்காக அல்லாமல் தங்களுடைய வாழ்வின் கடைசி வரை ஒரு உத்தம கூட்டாளியாக தங்களோடு இருந்து தங்களுக்குப் பணிவிடை செய்யும் வகையில் அவர்கள் அப்படிச் செய்ததாகக் கூறப்படுகின்றது.
ஜிப்ஸி ஸ்மித் என்ற மாபெரும் இங்கிலாந்து தேச பரிசுத்த சுவிசேஷகர் தனது மனைவி இறந்ததும் மற்றொரு பெண்ணை மணந்து கொண்டார். அவர் தனது அந்த இரண்டாம் திருமணத்தை செய்யும் போது அவருடைய வயது 78 ம் அவரது மனைவி மேரி அலீஸ் அம்மையாருக்கு வெறும் 27 வயது மாத்திரமே ஆகியிருந்தது. அவர்களது திருமண வயதின் பெருத்த வித்தியாசத்தை அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் Winter Old, Spring young "குளிர் கால முதுமை, வசந்த கால இளமை" என்று எழுதியிருக்கின்றனர்.
எனது அருமை மனைவி இறந்ததும், நான் திரும்பவும் ஒரு வாழ்க்கைத் துணையை நாடக்கூடாது என்று அன்பின் ஆண்டவர் என்னிடம் திட்டமும் தெளிவுமாக பேசினபடியால் அவருடைய வார்த்தைகளுக்கு நான் அப்படியே கீழ்ப்படிந்து நடந்து கொண்டேன். திரும்பவுமாக ஒரு குடும்ப வாழ்க்கையைத் தேட மிகவும் மனதுருக்கமாகச் சொன்ன தந்திர சாத்தானின் ஆலோசனைக்கு நான் செவி சாய்க்கவில்லை. அப்படி நான் அவனுக்கு இணக்கம் தெரிவித்திருந்தால் கடந்த 13 ஆண்டுகளாக நான் இரண்டாம் மனைவியுடன் குடும்ப வாழ்க்கை நடத்தியிருக்கலாம். ஆனால், அந்தோ, தமக்குக் கீழ்ப்படியாத என்னைத் தேவன் அத்துடன் கைவிட்டுவிட்டு ஒதுங்கியிருப்பார். சவுலைப் போல தேவன் தமது சமூகத்தின் பிரசன்னத்தை என்னை விட்டு விலக்கி தமது பரிசுத்த ஆவியை என்னிலிருந்து எடுத்துப் போட்டிருப்பார். அத்துடன், அநேகருக்கு ஆசீர்வாதமான தேவ எக்காள ஊழியமும் தனது அஸ்தமனத்தை எப்பொழுதோ நிர்ப்பந்தமாக அடைந்திருக்கும்.
எனது ஆகாரங்களை வேளா வேளைக்கு எனக்கு சமைத்துத் தர எந்த ஒரு வேலைக்கார பெண்ணையும் கூட நான் என் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. தந்திர சாத்தான் எனது பரிசுத்த வாழ்வை அவர்கள் மூலமாக கறைப்படுத்திவிடக் கூடாது என்று நான் பெரிதும் அஞ்சினேன். நானே எனது ஆகாரங்களை என் மட்டாக சமைத்துக் கொண்டேன். சமையல் வேலையில் அதிக நேரம் செலவிட்டால் கர்த்தருடைய பணி பாதிக்கப்படும் என்று பயந்து ருசியுள்ள ஆகாரத்தை வெறுத்துத் தள்ளி மிக எளிமையான ஆகாரத்தையே நான் தெரிந்து கொண்டேன். பல தடவைகளிலும் எனது காலை ஆகாரம் ஹோட்டலில் வாங்கின கொஞ்சம் மிக்சரும், ஒரு டம்ப்ளர் காப்பியாகவும், எனது மதிய உணவு தண்ணீர் நிறைய ஊற்றப்பட்ட கஞ்சும், ஊறுகாயாகவுமே இருந்தது. அந்த எளிமையான ஆகாரத்தில் நான் கர்த்தருக்குள் களிகூர்ந்தேன். "நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாக இருக்கக் கற்றுக் கொண்டேன்" (பிலி 4 : 11) என்ற பரிசுத்த பவுல் அப்போஸ்தலனின் அனுபவத்தை எண்ணி ஆனந்தித்தேன்.
ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து இந்த 2009 ஆம் ஆண்டு வரை நான் எனது நீண்ட உபவாச ஜெப நாட்களை தேவ பெலத்தால் ஒவ்வொரு ஆண்டு லெந்து காலத்திலும் கடைப்பிடித்து வந்திருக்கின்றேன். ஒவ்வொரு வாரம் வெள்ளியன்றும் அன்னம், தண்ணீர் இல்லாமல் முழு நாளும் உபவாசிக்க அன்பின் ஆண்டவர் எனக்கு உதவி செய்து வருகின்றார். வியாழன் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் சனி கிழமை காலையில் ஜெபத்திற்குப் பின்னர் ஆகாரம் எடுக்கின்றேன். அத்துடன், ஊழியத்தின் ஆசீர்வாதங்களுக்காகவும், ஊழியத்தின் தேவைகளுக்காகவும் கர்த்தர் என்னை உணர்த்தும் வேளைகளிலும் உபவாசம் எடுத்து ஜெபிப்பேன். அதின் காரணமாக கடந்த கால ராட்சத தேவ மனிதர்களான ஹட்சன் டெயிலர், ஜியார்ஜ் முல்லர் போன்ற பரிசுத்த தேவ மக்களைப் போல தேவ ஊழியத்தின் எல்லாத் தேவைகளுக்கும் கர்த்தர் ஒருவரையே சார்ந்து, அவர் ஒருவருடைய முகத்தை மட்டும் நோக்கிப் பார்த்து தேவைகளைச் சந்தித்துக் கொள்ளும் மகத்தான இரகசியத்தை நான் கற்றுக் கொண்டேன். அல்லேலூயா.
இராக்காலங்களில் தேவ ஆவியானவர் எந்த நேரம் என்னை ஜெபிக்க ஏவினாலும் எனது இன்பமான இராத் தூக்கத்தை நொடிப் பொழுதில் உதறித்தள்ளி விட்டு படுக்கையிலிருந்து எழுந்து தேவ சமூகத்தில் முழங்காலூன்றுகின்றேன். தேவ எக்காளம் உங்களில் பலருக்கும் மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கிறதென்றால், ஒரு தடவைக்கும் கூடுதலாக அதை நீங்கள் வாசிக்க விரும்புகின்றீர்கள் என்றால் அதின் ஒரே இரகசியம் அந்த நள்ளிரவு ஜாமங்களில் தேவ சமூகத்தில் நான் என் முழங்கால்களில் நின்று ஆண்டவரிடமிருந்து பெற்றுக் கொண்ட தேவ செய்திகள்தான். கர்த்தருக்கே மகிமை.
ஆண்டவருடைய வார்த்தைக்கு சமூலமாகக் கீழ்ப்படிந்து எனது வாழ்க்கை முழுமையிலும் ஒரு தொலைக்காட்சி பெட்டியை கூட நான் எனக்கென்று வாங்கி வைத்துப் பார்க்கவில்லை. என்னிடத்தில் ரேடியோவும் கிடையாது. நீண்ட ஆண்டுகளாக செய்தி தாட்களுக்கு கொடிய வெறியனாகவும், அடிமையாகவும் கிடந்த என்னை செய்தி தாட்களை வாங்கக்கூடாது என்று ஆவியானவர் என் உள்ளத்தில் ஏவி உணர்த்தவே அதற்கும் நான் முற்றுப் புள்ளி வைத்து சமீப கால ஆண்டுகளில் அதையும் நான் வாங்கி வாசிப்பதில்லை. செய்தி தாட்களை வாங்கி வாசித்து பழைய பேப்பர்களை ஏராளமாக கடையில் விற்ற ஒரு காலம் உண்டு. ஆனால், இப்பொழுது எனது மற்ற தேவைகளுக்காக பழைய பேப்பர்களை மளிகைக் கடையில் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றேன். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.
நிலைக்கண்ணாடியில் நான் எனது முகத்தைப் பார்த்து எத்தனையோ ஆண்டுகள் கடந்து சென்றுவிட்டன. வாசனைப் பொருட்கள், பவுடர் போன்றவைகளையும் நான் எக்காலத்தும் பயன்படுத்துவதே இல்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன், குப்பையுமாக எண்ணுகிறேன் (பிலி 3 : 7-8) என்ற தேவ வாக்கின்படி எல்லாவற்றையும் குப்பையாக உதறித் தள்ளினேன்.
இதை வாசிக்கின்ற தேவ மக்களாகிய நீங்களும் பாவியாகிய என்னைப் பின்பற்ற வேண்டும் என்று நான் இங்கு ஒருக்காலும் எழுதவே எழுதவில்லை. அதை நான் உங்களிடம் நிச்சயமாக விரும்பவுமில்லை. தேவன் தமது பிள்ளைகளை வித்தியாசமான விதத்தில் ஒருவருக்கொருவர் வேறுபட்ட நிலையில் தெரிந்து கொண்டு நம்மால் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் அவர்களை வழி நடத்துகின்றார்.
மெய்தான், உலகத் தோற்றத்திற்கு முன்னால் தேவன் தெரிந்து கொண்ட அவருடைய பிள்ளைகள் நிச்சயமாகவே அவருக்கு கீழ்ப் படிதலுள்ளவர்களாக இருப்பார்கள். இதைக் கருத்தோடு வாசிக்கும் அன்பான தேவ பிள்ளையே, ஆண்டவர் உங்களை உணர்த்தும் போதெல்லாம் அவருக்கு கீழ்ப்படிந்து வருகின்றீர்களா? உலக மக்கள் இராக்காலங்களில் தங்கள் ஆழ்ந்த தூக்கங்களில் இருக்கும் போது தேவன் உங்களை ஜெபிக்க எழுப்பும் போது தேவனுக்குக் கீழ்ப்படிந்து எழுந்து அவர் சமூகத்தில் அழியும் ஆத்துமாக்களுக்காக முகம் குப்புற விழுந்து கிடக்கின்றீர்களா? உலகத்து மக்களைப் போலில்லாமல் வேறு பிரிக்கப்பட்ட பரிசுத்த ஜீவியம் செய்து வருகின்றீர்களா? பரிசுத்த அப்போஸ்தலனைப்போல "எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது, எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்" (1கொரி 6 : 12) என்ற வாக்கின்படி உங்களை உங்கள் ஆண்டவர் இயேசுவுக்காக வெறுமையாக்கிக் கொண்டு வருகின்றீர்களா?
தேவனுக்குக் கீழ்ப்படிந்து ஒழுங்காக உபவாசிக்கின்றீர்களா? அதிகமாக ஜெபிக்கின்றீர்களா? உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருக்கின்றீர்களா?
".................................பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்" (1 சாமு 15 : 22) "ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்" (ஏசாயா 66 : 2) என்ற தேவனுடைய வார்த்தைகள் எப்பொழுதும் உங்கள் கண்களுக்கு முன்பாக நிழலாடிக் கொண்டிருப்பதாக.
"ஆண்டவருக்குக் கீழ்ப்படிவதன் மூலமே நாம் அவரில் ஆனந்தம் கொண்டு அகமகிழ முடியுமே தவிர மற்ற எவ்விதத்திலும் நாம் அவருடைய அன்பை அனுபவித்து ஆனந்திக்க இயலாது" ("God is not otherwise to be enjoyed than as he is obeyed") என்று ஒரு பரிசுத்தவான் எழுதியிருக்கின்றார்.
தேவனால் முன் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் தங்கள் ஆண்டவர் இயேசுவை தங்கள் பரிசுத்த வாழ்வின் மூலம் உலகுக்குக் காண்பிக்க தீவிரம் காட்டுவார்கள்.
"பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை, ஆகிலும், அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரை தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்போம் என்று அறிந்திருக்கிறோம்" (1 யோவான் 3 : 2)
ஒரு கிறிஸ்தவன் தனது கடந்த கால பாவங்களுக்காக என்று தேவ சமூகத்தில் அழுது புலம்பி பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் ஆண்டவரிடமிருந்து பெற்று மறுபிறப்பின் நிச்சயமான பரிசுத்த அனுபவத்தோடிருப்பானோ அந்த தேவ பிள்ளையின் ஒரே வாஞ்சையும், ஒரே கதறுதலும் தன்னைப் பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இரட்சித்துத் தனக்கு நித்திய ஜீவனைத் தந்த தன் அருமை இரட்சகர் மேலேயே இருக்கும். "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங் 42 : 1) என்று தாவீது ராஜா கூறுவதும் அதே பரிசுத்த அனுபவம்தான்.
அந்த தேவப் பிள்ளையின் கட்டுக்கடங்காத அடுத்த பரிசுத்த வாஞ்சை என்னவெனில் தன் ஆண்டவர் இயேசுவை தனது வாழ்வில் மற்றவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்பதாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பதாக நான் மஹாராஷ்டிர மாநிலத்தில் கெட்காம் என்ற இடத்திலுள்ள பண்டிதை ராமாபாய் அம்மையார் தோற்றுவித்த முக்தி மிஷனைக் காணச் சென்றிருந்தேன். அம்மையார் வாழ்ந்த அறை, அவர்கள் படுத்திருந்த கட்டில், அவர்கள் மொழிபெயர்த்த மராத்தி மொழி வேதாகமம் போன்றவற்றையும், ஏழை அநாதைப் பெண் பிள்ளைகளுடைய உபயோகத்துக்காக தோண்டப்பட்ட விசாலமான பெரிய கிணறு தண்ணீரில்லாததைக் கண்ட பரிசுத்த ராமாபாய் அம்மையார் ஒரு இரவு முழுவதும் அந்தக் கிணற்றண்டை தேவ சமூகத்தில் போராடி ஜெபித்து அந்த இரவிலேயே தண்ணீரைப் பெற்றுக் கொண்ட அதிசயக் கிணற்றையும் நான் பார்த்துவிட்டு மும்பை நகருக்கு புறப்பட ஆயத்தமானபோது அந்த முக்தி மிஷனில் தங்கி இருக்கும் டாக்டர் ஷீலா குப்தா என்ற பரிசுத்தவாட்டியை சந்தித்து கொஞ்ச நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாதவர்கள். கடந்த நாட்களில் அவர்களது வாழ்க்கை வரலாற்றை நமது தேவ எக்காளத்தில் நான் எழுதி வெளியிட்டிருப்பதையும், பின்பு அதை ("என் உள்ளம் கொள்ளை கொண்ட இன்ப ஜோதி") கைப்பிரதி ரூபமாக அச்சிட்டு அநேக ஆயிரங்களுக்கு விநியோகித்ததையும் நான் அவர்களிடம் சொன்ன போது அவர்கள் கர்த்தருக்குள் மிகவும் சந்தோசம் அடைந்தார்கள். நான் அவர்களை விட்டுப் பிரியும் நேரம் வந்தபோது தனக்காக நான் ஜெபித்துக் கொள்ளும்படியாக கேட்டுக் கொண்டார்கள். நான் அவர்களுக்கு சம்மதம் தெரிவித்தபோது நான் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்ற காரியத்தை என்னிடம் விளக்கிச் சொன்னார்கள்.
"என்னைப் பார்க்கின்றவர்கள், என் ஆண்டவர் இயேசு இரட்சகரை என் வாழ்வில் காண வேண்டும்" இந்த ஒரு காரியத்துக்கு மாத்திரமே நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்றார்கள். அந்தப் பரிசுத்த தாயாரின் அந்த பரிசுத்தமான வார்த்தைகளை நான் எனது வாழ் நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன். ஒரு மெய்யான பரிசுத்த தேவ பிள்ளையின் கதறுதல் அது ஒன்றாகவே தான் இருக்கும்.
பக்த சுரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்களைப் பார்த்த அனைவரும் அவருடைய பரிசுத்த முகம் பிரகாசிப்பதைக் கண்டனர். அவருடைய பிரசங்கத்தை கேட்டு ஆண்டவரண்டை வந்தவர்களைவிட அவரது பரிசுத்த முகச்சாயலைப் பார்த்து கர்த்தரிடம் வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அவருடைய ஒளி நிறைந்த முகத்தைப் பார்த்த வாலிபர், வயோதிபர்கள் மட்டுமின்றி சின்னஞ் சிறார்கள் கூட ஆண்டவர் இயேசுவை சுலபமாகக் காண முடிந்தது. ஒரு தடவை இங்கிலாந்து தேசத்தில் சுந்தர் சிங் ஒரு கிறிஸ்தவ வீட்டின் கதவைத் தட்டி நின்றபோது ஒரு சிறுமி வீட்டின் உள்ளிருந்து ஓடி வந்து சுந்தருடைய ஒளி நிறைந்த முகத்தை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து விட்டு வீட்டிற்குள்ளிருந்த தனது தாயிடம் ஒடிச் சென்று "அம்மா, இயேசு நமது வீட்டின் கதவைத் தட்டிக் கொண்டு நிற்கின்றார்" (Mummy, Jesus is knocking at the door) என்றாளாம்.
தேவனை அறியாத ஒரு கடையாந்திர தீவிற்கு தன்னை ஒரு மிஷனரியாக அனுப்பும்படியாக ஒரு பரிசுத்த சகோதரி தனது கிறிஸ்தவ மிஷன் ஸ்தாபனத்திடம் கேட்டுக்கொண்டார்களாம். ஒரு ஆண்டு காலத்திற்குள்ளாக தேவ பெலத்தால் முழுத் தீவையும் கர்த்தருடைய ஒளிக்குள் கொண்டு வந்துவிடுவதாகவும், அதற்காக எந்த ஒரு பிரசங்கமும், போதனையும் அந்த மக்களிடம் செய்யாமல் தனது பரிசுத்த வாழ்க்கையின் மூலமாக மாத்திரமே அந்தக் காரியத்தை செய்யப் போவதாகச் கூறிச் சென்ற அவர்கள் அப்படியே தனது பிரகாசமான கிறிஸ்தவ வாழ்வின் மூலமாக முழு தீவையும் ஆண்டவரண்டை கொண்டு வந்தார்கள். தனது இரட்சகரைப் பற்றி அந்த அம்மையாரின் உதடுகள் அல்ல, அவர்களது பரிசுத்தமான வாழ்க்கையே சாட்சி பகர்ந்தது. அல்லேலூயா.
உலகத்தோற்றத்திற்கு முன்னால் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அவருடைய பிள்ளைகள் யாவரும் தங்கள் பரிசுத்த வாழ்க்கையின் மூலமாக தங்கள் பரிசுத்த கர்த்தருக்குச் சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அந்த தேவ மக்களைப் பார்க்கின்றவர்கள் மெய்யாகவே இவர்கள் இயேசு இரட்சகரின் பிள்ளைகள் என்பதை மிகவும் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளுவார்கள். அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுருவை அவரது பேச்சை வைத்தே அவர் ஆண்டவராகிய இயேசுவுடன் கூட இருந்தவர் என்று கண்டு கொண்டு விட்டார்களே! "மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன், உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது" (மத் 26 : 73) என்றார்களே!
தேவனால் முன் குறிக்கப்பட்ட அந்த தேவ மக்கள் பரலோகத்தில் தங்கள் ஆண்டவருடன் அநுபவிக்கப் போகும் மோட்சானந்த பாக்கியங்களை இந்த உலக வாழ்க்கையிலேயே தங்கள் தனிப்பட்ட வாழ்வில் தங்கள் நேச இரட்சகருடனான செடியும், கொடியுமான இடைவிடாத அந்தரங்க ஜெப வாழ்வின் மூலமாக பெற்றானந்தித்து களிகூர்ந்து கொண்டிருப்பார்கள்.
மேற் கண்ட பரிசுத்த குண நலன்கள் உங்கள் வாழ்வில் பரிமளிக்குமானால் நிச்சயமாகவே நீங்கள் தேவனால் முன் குறிக்கப்பட்ட அவருடைய சுதந்திரவீதம் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். "வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்" (மத் 25 : 34) என்ற உங்கள் ஆத்தும மணவாளரின் பரலோக குரலை நீங்கள் நினையாத எந்த நேரத்திலும், எந்த வேளையிலும் உங்கள் காதுகளால் கேட்கலாம். அந்த பரலோக குரல் வரும் வேளைக்காக நீங்கள் ஆசை ஆவலோடு காத்திருக்கலாம். அல்லேலூயா. |