முன்னுரை


"நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமம் தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டு வா என்பேன்" (ஏசாயா 43 : 7)

"அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்கள் என்னப்படுவார்கள்" (ஏசாயா 61 : 3)

"என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம்பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான்" (லேவி 10 : 3)

"பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன், நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்" (யோவான் 17 : 4)


கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், இரக்கமும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.

ஆண்டவருடைய அருமைப் பிள்ளைகளாகிய உங்களை 2008 ஆம் ஆண்டின் இறுதி தேவ எக்காள இதழின் மூலமாக சந்திக்கக் கிருபையின் சிலாக்கியம் தந்த என் அருமை நேச இரட்சகரை நன்றி நிறைந்த உள்ளத்தோடு துதித்து ஸ்தோத்திரிக்கின்றேன். இந்த இதழின் மூலமாக நான் உங்களைச் சந்தித்திருக்கின்றேன் என்றால் அது அநாதி தேவனின் சுத்தக் கிருபையாகும். கடந்த அக்டோபர் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் எங்கள் சுவிசேஷ பிரயாணத்தின் பாதைகள் சா நிழல் பள்ளத்தாக்கிலேயே இருந்தது. நாங்கள் சென்ற எங்கள் வாகனங்கள் அந்தரத்தில் களைக்கூத்தாடி கயிற்றில் மிகுந்த கவனமாக நடந்து செல்லுவது போல அமைந்திருந்தது. ஒரு புறத்தில் சில ஆயிரம் அடிகள் ஆழமான கெடு பாதாள பள்ளத்தாக்கு, அடுத்த புறத்தில் நான்கு சக்கரங்கள் மட்டுமே தொட்டுச்செல்லும் மலை ரஸ்தா, அங்கு சென்று கொண்டிருக்கும் 2 வாகனங்களில் தங்கள் பாதுகாப்புக்காக கர்த்தர் ஒருவரையே நோக்கிச் சென்று கொண்டிருக்கும் 9 நர ஜீவன்கள். ஆம், அநேகமாக ஒவ்வொரு நாட்களிலும் எங்கள் சுவிசேஷ பயணப்பாதை அப்படியேதான் இருந்தது. எனினும், மரண நிழலின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர் என்ற சங்கீதக்காரரின் அனுபவப்படி கர்த்தர் எங்களோடு கூட இருந்தபடியால் நாங்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக எங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தோம். அன்பின் ஆண்டவர் எங்களோடு கூட இருந்தபடியாலும், அவரே எங்களை அங்கு கரம் பிடித்து அழைத்துச் சென்றிருந்தபடியாலும் ஒவ்வொரு நாளும் அவர் எங்களுக்கு அருமையான ஊழிய வாய்ப்புகளை தந்து எங்களை வழிநடத்தினார். அந்த அன்பின் ஆண்டவருக்கு நாம் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்?

இந்த இதழ் உங்கள் கரங்களை வந்தடையும்போது தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் புத்தாண்டான 2009 ஆம் ஆண்டுக்குள் நன்கு கடந்து சென்றிருப்பீர்கள். ஆண்டவருடைய அருமைப் பிள்ளைகளாகிய உங்கள் யாவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். நாம் பாவிகளாக இருக்கையில் நமக்காக மரித்து தமது மாட்சிமையான அன்பை வெளிப்படுத்திய நம் அருமை இரட்சகர் இயேசு தாமே இந்தப் புத்தாண்டின் ஒவ்வொரு நாட்களிலும் உங்களை தமது நித்திய ஜீவ பாதையிலே நீங்கள் வலது இடது புறம் சாய்ந்து விடாமல் உங்களை பாதுகாப்பாக கரம் பிடித்து வழி நடத்துவாராக. புத்தாண்டின் ஒவ்வொரு நாளிலும் ஆண்டவருடைய பிரசன்னத்தின் ஒளியில் நீங்கள் ஜீவிக்க அவர் உங்களுக்குக் கிருபை செய்வாராக. இந்த 2009 ஆம் ஆண்டில் நீங்கள் அநேக மணி நேரங்களை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிடவும், சங்கீதக்காரரைப் போல உங்கள் இருதயங்களை ஆண்டவருடைய சமூகத்தில் உடைத்து ஊற்றவும் அன்பின் தகப்பன் உங்களுக்கு இரக்கம் செய்வாராக. "யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?" என்று தமது அடியானிடம் கேட்ட நம் கருணாகரக் கர்த்தர் அதே கேள்வியை இந்த புத்தாண்டிலும் நம்மிடத்தில் கேட்கின்றார். தேவனுக்குப் பிரியமற்ற எல்லா பாவ வழிகளையும் நம்மைவிட்டு விலக்கி, அவருடைய வசனங்களுக்கு நடுநடுங்கி கீழ்ப்படிந்து (ஏசாயா 66 : 2) நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் அவரில் அன்புகூர்ந்து அவரை நாம் நேசிப்போமாக.

இந்த தடவை நான் ஊழியத்தின் பாதையில் வடக்கே இமயமலைகளுக்குச் சென்றிருந்த சமயம் ஓய்வு நேரத்தில் வாசிப்பதற்காக இரண்டு அருமையான புத்தகங்களை நான் என்னுடன் எடுத்துச் சென்றிருந்தேன். அதில் ஒன்று ஜாண் பன்னியன் என்ற மாபெரும் தேவ பக்தன் எழுதிய "மோட்ச பிரயாணம்" என்பதாகும். அடுத்த புத்தகம் ஜாண் ஃபாக்ஸ் என்ற 15 ஆம் நூற்றாண்டு பரிசுத்தவான் எழுதிய "இரத்தசாட்சிகளின் புத்தகம்" The Book of Martyrs என்பதாகும். இரத்தசாட்சிகளின் புத்தகம் 179 பக்கங்களைக் கொண்ட ஒரு குறுகிய பதிப்பாகும். மோட்ச பிரயாணம் 453 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது. கர்த்தருடைய கிருபையால் மேற்கண்ட இரு புத்தகங்களையும் முழுமையாக வாசித்து முடித்துவிட்டேன். இரத்தசாட்சிகளின் புத்தகத்தை நான் வாசித்தபோது நான் அடைந்த துயரத்திற்கு அளவில்லை. ஆ, சிறியோரும், பெரியோரும் சத்தியத்தினிமித்தம் தங்கள் ஆண்டவருக்காக எத்தனை தைரியமாக தங்கள் ஜீவன் பிரியும் அந்த கடைசி நேரம் வரை எத்தனை வைராக்கியமாக நின்று சாதித்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்! அந்த ஆச்சரிய சாட்சிகளில் சில சாட்சிகளை திரும்ப திரும்ப வாசித்து நான் ஆவிக்குள் அனலானேன். நீங்களும் அந்த இரத்த சாட்சிகளில் சிலவற்றை வாசித்து அறிந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் மூன்று இரத்தசாட்சிகளை கீழே தருகின்றேன். ஜெபத்தோடு வாசித்து உங்கள் ஆவிக்குரிய பரிசுத்த வாழ்க்கைக்கு அனுகூலமாக்கிக் கொள்ளுங்கள்.

 

ஜாண் ரோஜர்ஸ்

ஜாண் ரோஜர்ஸ் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலையில் படித்துப் பட்டம் பெற்ற பின்னர் ஆண்ட்வர்ப் என்ற இடத்தில் வசித்துக் கொண்டிருந்த ஆங்கிலேய வணிகர்கள் நடுவில் குருவானவராக பணி புரிந்து கொண்டிருந்தார். அங்கு அவர் வில்லியம் டிண்டேல் (பின் நாட்களில் இரத்தசாட்சியாக மரித்தவர்) மற்றும் மைல்ஸ் கவர்டேல் என்பவர்களைச் சந்தித்தார். அவர்கள் கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து புராட்டஸ்டண்ட் மார்க்கத்திற்கு மதம் மாறி இங்கிலாந்திற்கு தப்பி ஓடி வந்தவர்களாவர்கள். வேதாகமத்தை ஆங்கில மொழிக்கு மொழி பெயர்க்க வில்லியம் டிண்டேலுக்கும், மைல்ஸ் கவர்டேலுக்கும் ஜாண் ரோஜர்ஸ் உதவி புரிந்தார். அதன் பின்னர் அவர் திருமணம் செய்து கொண்டு ஜெர்மன் தேசத்திலுள்ள விட்டன்பர்க் என்ற இடத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு சுயாதீனமாக தேவ ஊழியம் செய்ய ஒரு சபை கொடுக்கப்பட்டது. அங்கு அவர் அநேக ஆண்டு காலம் குருவானவராக கர்த்தருக்குப் பணி ஆற்றினார். கத்தோலிக்க மார்க்கத்தை இங்கிலாந்து தேசத்திலிருந்து அப்புறப்படுத்தி புராட்டஸ்டண்ட் மார்க்கத்தை தேசத்தின் பொது மார்க்கமாகப் பிரகடனப்படுத்தி ஆரசாட்சி செய்து கொண்டிருந்த 6 ஆம் எட்வர்ட் அரசரின் காலத்தில் ரோஜர்ஸ் மீண்டும் இங்கிலாந்து தேசத்திற்குத் திரும்பி வந்தார். கொடிய இரத்த மேரி என்ற ராணி புராட்டஸ்டண்ட் மார்க்கத்தையும், சுவிசேஷத்தையும் தூக்கி எறிந்து கத்தோலிக்க மார்க்கத்தை இங்கிலாந்து தேசத்திற்குள் திரும்பவும் கொண்டு வந்து தானும் பட்டத்து அரசியாக சிம்மாசனம் ஏறும் வரை ஜாண் ரோஜர்ஸ் லண்டன் பட்டணத்திலுள்ள பரிசுத்த பவுலின் தேவாலயத்தின் குருவானவராக ஊழியம் செய்து வந்தார். தேவனுடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்கக் கூடாது என்ற கத்தோலிக்க மேரி ராணியின் பிரகடனத்தையும் மீறி ரோஜர்ஸ் கர்த்தருடைய ஊழியத்தைத் தொடர்ந்தார். ஆனால், விரைவிலேயே கத்தோலிக்க கவுன்சிலால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஆம், அவருடைய சொந்த வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். அவர் நினைத்திருந்தால் மிகவும் இலகுவாக இங்கிலாந்து தேசத்திலிருந்து தப்பிச் சென்றிருக்க முடியும். இரத்த மேரியின் ஆளுகையில் புராட்டஸ்டண்ட் மார்க்கம் எத்தவிதத்திலும் வளர இயலாது என்பதையும், தனது மனைவி, அருமைக் கண்மணி குழந்தைகள் 11 பேரையும் அழைத்துச் சென்று ஜெர்மன் தேசத்தில் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்து கொண்டே பாதுகாப்பாக இருக்க அவரால் இயலுவதாக இருந்தபோதினும் தன் ஜீவனை இரட்சிக்க அவர் விரும்பாமல் நீண்ட நாட்களாக அவரது சொந்த வீட்டிலேயே சிறைக் கைதியாக இருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக லண்டன் பட்டணத்திலுள்ள கொடிய கத்தோலிக்க பிஷப் போனர் என்பவன் ரோஜர்ஸை நியூகேட் என்ற இடத்திலுள்ள சிறைக் கூடத்தில் கள்ளர்களோடும், கொலைகாரர்களோடும் அவரை காவலில் வைத்தான். பின்னர், உட்ரூஃப் என்னும் மற்றொரு கத்தோலிக்கன் அவரை மரண ஆக்கினைக்கு தீர்ப்பளித்தான்.

1555 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் தேதி திங்கட் கிழமை அதிகாலை சிறைச்சாலை காவல் அதிகாரியின் மனைவி ஜாண் ரோஜர்ஸை தூக்கத்திலிருந்து எழுப்பி துரிதமாக அவர் தனது உடைகளை மாற்றிக் கொள்ளும்படியாகவும், அந்த நாளில் அவர் அக்கினியால் கொழுத்தப்படப் போவதாகவும் கூறினாள். அப்படியே ஸ்மித்ஃபீல்ட் என்ற இடத்தில் அவரை தீக்கிரையாக்கும்படி அழைத்துச் சென்றார்கள். வழியில், அவருடைய அன்பான மனைவியும், அவருடைய 11 கண்மணி குழந்தைச் செல்வங்களும் அவரைச் சந்தித்தனர். மனைவியும், பிள்ளைகளும் அவருடைய முகத்தை நோக்கிப் பார்த்தனர். ஆனால், அவர் தேவனுடைய சத்திய மார்க்கத்தை மறுதலிக்க மறுத்துவிட்டார். தீக்கிரையாக்கப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தவுடன் கடைசியாக அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது.

"நான் எந்த ஒரு சத்தியத்தை எனது காலமெல்லாம் மக்களுக்கு பிரசங்கித்தேனோ அதை இந்த நாளில் எனது இரத்தத்தால் முத்திரையிடுகின்றேன்" என்று அவர் தனக்கு மரணாக்கினை விதித்த உட்ரூஃப் என்பவனிடம் சொன்னார்.

"அப்படியானால், நீ ஒரு வேதப்புரட்டன்" என்று அறிக்கையிடுகின்றாய் என்றான் அவன்.

"அது நியாயத்தீர்ப்பு நாளில் தெரிய வரும்" என்றார் ரோஜர்ஸ்.

"அப்படியானால், நான் உனக்காக ஒருக்காலும் ஜெபிக்க மாட்டேன்" என்று அவன் கூறினான்.

"ஆனால், நான் உங்களுக்காக ஜெபிப்பேன்" என்று ரோஜர்ஸ் பதில் அளித்தார்.

ஜாண் ரோஜர்ஸ் தீக்கிரையாக்கப்படுவதற்கு சற்று முன்பு கூட ஒரு மன்னிப்பு அவருக்கு முன்பாக வந்தது. சத்தியத்தை மறுதலித்து தனது ஜீவனை காத்துக் கொள்ள விரும்பாமல் அதை ஏற்க மறுத்து ரோஜர்ஸ் மிகுந்த தைரியத்தோடு தீயின் உக்கிரகத்தை சகித்து எரிந்து சாம்பலானார். கத்தோலிக்க ராணி இரத்த மேரியின் காலத்தில் முதன் முதலாவதாக இரத்த சாட்சியாக மரித்தவர் இந்த பரிசுத்த பக்தன் ஜாண் ரோஜர்ஸ் என்பவர்தான்.

 

ரோலண்ட் டெய்லர்

இங்கிலாந்து தேசத்தின் சஃபோக் ஜில்லாவிலுள்ள ஆட்லி பட்டணம் பரிசுத்தவான் தாமஸ் பில்னி மூலமாக தேவனுடைய வார்த்தைகளைக் கேட்ட முதன்மையான பட்டணங்களில் ஒன்றாகும். அவருடைய தேவ ஊழியத்தின் மூலமாக ஒரு பெருங்கூட்டம் ஆண்களும், பெண்களும் அந்த திருச்சபையில் தேவனுடைய வார்த்தைகளை நன்கு கற்று அறிந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் அநேகர் வேதாகமம் முழுவதையும் வாசித்து முடித்திருந்தார்கள். அவர்களில் அநேகர் அப்போஸ்தலானாகிய பரிசுத்த பவுல் அடிகளாரின் நிருபங்களை மனப்பாடமாகப் படித்தும் வைத்திருந்தார்கள். எந்த ஒரு குழப்பமான காரியமானாலும் தேவ பக்திக்கேதுவான நியாயத்தை மக்களுக்கு வெளிப்படுத்துவதில் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். அந்தப் பட்டணத்தின் பிள்ளைகளும், வேலைக்காரரும் தேவனுடைய வசனத்தின் வெளிச்சத்தில் போதிக்கப்பட்டும், பழக்குவிக்கப்பட்டும் இருந்தனர். எனவே, ஆட்லி பட்டணம் வெறுமனே கூலி வேலை செய்பவர்களும், ஒழுங்கற்றுத் திரிகிறவர்களுமாக இல்லாமல் படிப்பறிவுள்ள சர்வ கலாசாலைப் பட்டணத்து மக்களைப் போன்றிருந்தார்கள். யாவுக்கும் மேலாக முக்கியமான காரியம் என்னவெனில், அந்தப் பட்டணத்தில் வாழ்ந்த மக்கள் ஜீவனுள்ள தேவனின் வார்த்தைகளுக்கு தங்கள் அன்றாடக வாழ்வில் கீழ்ப்படிந்து நடக்கும் அவருடைய உண்மை அடியார்களாக இருந்தார்கள்.

ஆட்லி பட்டணத்தின் போதகர் பண்டிதர் ரோலண்ட் டெய்லர் என்பவர் உலகப்பிரகாரமான கல்வியிலும், இறையியல் கல்வியிலும் டாக்டர் பட்டங்கள் பெற்ற சிறந்த கல்விமானும், ஞானவானும், பரிசுத்தனுமாவார். அந்த நாட்களில் திருச்சபையில் குருவானவர்களாக பணி செய்யும் தேவ ஊழியர்களுக்கு ஒரு வீடும், குடும்ப செலவுகளை ஈடுகட்ட கொஞ்சம் நிலமும் கொடுப்பார்கள். ஆனால், பெரும்பாலான குருவானவர்கள் தங்களுக்குக் கிடைத்த நிலத்தை யாருக்காவது நல்ல லாபத்திற்கு குத்தகைக்குக் கொடுத்துவிட்டு, அவர்களுடைய ஸ்தானத்தில் போதுமான படிப்பறிவில்லாத ஒரு ஊழியரை நியமித்துவிட்டு அவர்கள் எங்கோ ஓரிடத்தில் நல்ல ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால், ரோலண்ட் டெய்லர், தனக்குக் கொடுக்கப்பட்ட ஆட்லி பட்டணத்து திருச்சபையின் மக்களோடு அவருக்குக் கொடுக்கப்பட்ட குருமனையில் தமது அடியான் பேதுருவினிடத்தில் "நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? என் ஆடுகளை மேய்ப்பாயாக" என்ற ஆண்டவருடைய வார்த்தையை சிரம் மேல் கொண்டு வாழ்ந்து வந்தார். தமக்குச் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தம்முடைய ஜனங்களை தமக்கு முன்பாக ஒன்றாகக் கூடி வரச் செய்து இரட்சிப்பின் சத்தியத்தை அவர்களுக்குப் பிரசங்கித்தார்.

ரோலண்ட் டெய்லர் அவர்களின் முழுமையான வாழ்க்கையும் அந்தப் பட்டணத்து மக்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தது. அவர் மிகவும் மனத்தாழ்மையுடையோனாக இருந்தார். அவரிடத்தில் உதவி கேட்டு வரும் ஏழை எளிய மக்கள் இலகுவாக அவரை அணுகி உதவி பெற்றுக் கொள்ள வசதியாக அவர் எப்பொழுதும் அவர்களுக்கு அனுசாரியாக இருந்தார். அதே சமயம், தவறாகத் தான் காண்கின்ற தனது சபையின் ஐசுவரியவானை கண்டிக்க நல்ல குருவானவரான அவர் ஒருக்காலும் தயக்கம் காண்பிக்கவில்லை. அவர் எப்பொழுதும் ஒரு கனவானாக நடந்து கொண்டார். எவரிடமும் அவர் பகைமை உணர்வோ அல்லது கெட்ட எண்ணமோ கொண்டதில்லை. தனது சத்துருக்களை மன்னிப்பவராகவும், யாவருக்கும் நன்மை செய்பவராகவும், எந்த ஒரு மனிதனுக்கும் தீமை செய்யாதவருமாக அவர் நடந்து கொண்டார். ஏழைகள், குருடர்கள், முடவர்கள், வியாதியஸ்தர், பல குழந்தைகளைப் பெற்றுக் காப்பாற்ற முடியாமல் அவதிப்படும் ஏழைப் பெற்றோர் யாவருக்கும் ஒரு தகப்பனைப் போல அவர் உண்மையுள்ள போஷகனாக உதவி செய்தார். அவரது சபை மக்களும் இந்தக் காரியங்களுக்கு தாராளமாகக் காணிக்கைகள் கொடுத்தார்கள். அவரும் ஒரு காணிக்கைப் பெட்டியை தனக்கென்று வைத்து பணங்களை அதில் போட்டு ஆண்டுதோறும் அதை தனது சபையின் காணிக்கையுடன் சேர்ப்பார்.

ஆறாவது எட்வர்ட் அரசர் இங்கிலாந்து தேசத்தை அரசாட்சி செய்த நாட்கள் முழுவதிலும் குருவானவர் ரோலண்ட் டெய்லர் ஆட்லி பட்டணத்திலுள்ள தனது திருச்சபையை கர்த்தருக்கு மகிமையாக வழி நடத்தினார். ஆனால் எட்வர்ட் மன்னரின் மரணத்திற்குப் பின்னர் கத்ததோலிக்கர்கள், ஆறாவது எட்வர்ட் மற்றும் எட்டாம் ஹென்றி மன்னர்கள் நிலை நாட்டிய இரட்சிப்பின் சுவிசேஷத்தைப் புறக்கணிக்கவும், சீர்திருத்த பரிசுத்த கட்டளைகளை விட்டு விலகி போப் ஆண்டவரை இங்கிலாந்து தேச திருச்சபையின் தலைவராக அங்கீகரிக்கவும் மக்களை கட்டாயப்படுத்தியதுடன், மறுப்பவர்களைக் கொடுமைப்படுத்தவும் ஆரம்பித்தார்கள்.

விரைவாகவே அந்தப் பட்டணத்திலுள்ள ஃபாஸ்டர் என்ற ஒரு வழக்கறிஞனும், நியாயா ஸ்தலத்திலுள்ள ஒருவனும் ஒன்றாகச் சேர்ந்து ஜாண் கிளர்க் என்பவனுடன் ஒன்றாகச் சதி ஆலோசனை செய்து ஆட்லி பட்டணத்துக்கு கத்தோலிக்கத்தை கொண்டு வர முடிவு செய்தார்கள். மேற்கண்ட துஷ்ட மாந்தர்கள் ஜாண் ஏவொர்த் என்ற ஒரு பொருளாசைக்காரனும், வேசிக்கள்ளனுமான ஒரு துன்மார்க்கனுக்குப் பணம் கொடுத்து அவனை துரிதமாக ஆட்லி பட்டணத்துக்கு வந்து தேவாலயத்தில் ஒரு பலி பீடத்தை அமைத்து கத்தோலிக்க முறைப்படி நற்கருணை வழங்க ஏற்பாடு செய்தனர். ஆனால், அவர்கள் அமைத்த பலி பீடம் மறு நாளிலேயே இடித்துத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்ட அவர்கள் திரும்பவும் அதை காவலாட்கள் உதவியோடு கட்டி இரா முழுவதும் அதைப் பாதுகாத்துக் கொண்டார்கள். பின்னர் பூஜை பலிக்கான மினுக்கான வஸ்திரங்கள், உபகரணங்கள் யாவையும் கொண்டு வந்து ஆராதனையை யாரும் தடை செய்யாமல் இருக்க தங்களுடைய பாதுகாவலர்களின் உதவியுடன் ஆட்லி தேவாலயத்தின் மணிகளை அடித்தனர்.

தேவாலய மணிகளின் ஓசை கேட்கவே குருவானவர் ஜாண் டெய்லர் தன்னை தேவாலய அலுவலகத்துக்கு அழைக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார். அவர் அங்கு சென்றபோது தேவாலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தார். தேவாலயத்தின் கிராதிக்கு அருகாமையிலுள்ள திறந்த கதவின் வழியாக அவர் உள்ளே சென்ற போது மேலே குறிப்பிட்ட ஜாண் வொர்த் என்ற துன்மார்க்கன் உருவின பட்டயங்களோடு நின்று கொண்டிருந்த காவலாளர்களின் உதவியுடன் திருப் பலி பூஜையை ஆசரித்துக் கொண்டிருந்தான்.

"ஓ பிசாசே" குருவானவர் டெய்லர் சத்தமிட்டார். "கிறிஸ்துவின் ஆலயமாகிய இந்த தேவாலயத்தை தீட்டுப்படுத்தவும், அருவருக்கப் படத்தக்கதான காரியங்களைச் செய்யவும் நீ இந்த ஆலயத்துக்குள் நுழைய எத்தனை துணிகரம் கொண்டாய்?" என்றார் அவர்.

அதைக்கேட்ட ஃபாஸ்டர் என்பவன் எழுந்து நின்று "ஓ, ராஜ துரோகியே, மகா ராணியின் நடபடிகளுக்கு இடையூறு செய்யாதே" என்றான்.

"நான் ராஜ துரோகி அல்ல" டெய்லர் எதிர் குரல் கொடுத்தார். "இந்த தேவாலயத்தின் ஆடுகளுக்கு நான் மேய்ப்பன். நான் இங்கிருப்பதற்கு எல்லா உரிமைகளும் எனக்கு உண்டு. ஓ, பாப்பரசனின் ஓநாயே, நீ இந்த இடத்திலிருந்து புறப்பட்டுப் போ என்று தேவனுடைய நாமத்தில் நான் உனக்கு கட்டளையிடுகின்றேன். தேவனுடைய மந்தையை உனது விக்கிரக வணக்கத்தால் விஷம் ஏற்றாதே" என்றார் டெய்லர்.

"நீ ஒரு பெரிய கிளர்ச்சியை இங்கு உண்டாக்கி மகா ராணியின் நடபடிகளை பலாத்காரத்தால் தடுத்து நிறுத்தப் பார்க்கின்றாயோ?" என்று ஃபாஸ்டர் திருப்பிக் கேட்டான்.

"நான் எந்த ஒரு கிளர்ச்சியும் செய்யவில்லை. பாப்பரசனின் மக்களாகிய நீங்கள்தான் அதைச் செய்கின்றீர்கள். தேவனுடைய வார்த்தைகளுக்கும், தேசத்தின் ஆசீர்வாதத்திற்கும் எதிரான உங்களுடைய விக்கிரக வணக்கத்திற்குத்தான் நான் எதிர்த்து நிற்கின்றேன்" என்றார் டெய்லர்.

அதைக் கேட்டதும் திருப் பலி பூஜையை நிறைவேற்றிக்கொண்டிருந்த ஜாண் வொர்த் அங்கிருந்து நகரத் தொடங்கினான். அதை அறிந்த ஃபாஸ்டர் அவனைத் தொடர்ந்து பூஜை நடத்தும்படியாகக் கூறினான். அதைக் கேட்ட காவலர்கள் நமது ஜாண் டெய்லரை பலவந்தமாக தேவாலயத்திலிருந்து வெளியே தள்ளிக் கொண்டு வந்தனர். ஜாண் டெய்லரின் மனைவி அதைக் காணவே முழங்கால்களில் விழுந்து உரத்த சப்தமாக "நீதியுள்ள நியாதிபதியாகிய தேவனே, கிறிஸ்துவின் இரத்தத்திற்கு இந்த விக்கிரகாராதனைக்காரரான பாப்பரசனின் மக்கள் செய்கின்ற கொடுமைக்கு நீர் பழி வாங்கமாட்டீரா?" என்று குரல் எழுப்பினார்கள். அதைக் கேட்ட அங்கிருந்த காலர்கள் அந்த அம்மையாரையும் பிடித்துத் தள்ளி தேவாலயத்தின் கதவுகளை மூடிவிட்டார்கள்.

இந்த சம்பவம் நடந்து ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள்ளாக ஃபாஸ்டரும், ஜாண் கிளர்க்கும் தேவாலயத்தில் நடந்த சம்பவத்தை வின்செஷ்டர் என்ற இடத்திலுள்ள கத்தோலிக்க பிஷப் ஸ்டீபன் கார்டினர் என்பவனிடம் முறையிட்டார்கள். அதைத் தொடர்ந்து டெய்லரை பிஷப் கார்டினர் என்பவனுக்கு முன்பாக வந்து ஆஜராகும்படி கட்டளையிட்டனர். அதை அறிந்த சபையின் மக்கள் எந்த ஒரு நிலையிலும் டெய்லரை கார்டினருக்கு முன்பாகப் போகாமல் இருக்கும்படியாக கெஞ்சி மன்றாடினார்கள். அப்படிச் சென்றால் அதுவே அவரது இறுதி முடிவாக இருக்கும் என்று எச்சரித்தார்கள். ஆனால், டெய்லர் அவர்களுடைய வார்த்தைகளுக்கு இணங்காமல் தனது வேலைக்காரனை அழைத்துக்கொண்டு கார்டினர் முன்பாக வந்து நின்றார்.

டெய்லரைக் கண்ட கார்டினர் அவரை வேதப் புரட்டன், வஞ்சகன், தேசத்துரோகி மற்றும் பல அவதூறான பெயர்களைச் சொல்லி வாழ்த்தினான்.

"மேன்மை தங்கிய பிஷப் அவர்களே, நான் ஒரு வேதப் புரட்டனோ, வஞ்சகனோ அல்லது தேசத் துரோகியோ அல்ல, நான் ஒரு உண்மைக் குடிமகன், நான் ஒரு கிறிஸ்தவன். நீங்கள் என்னை அழைத்தனுப்பினபடியால் இங்கு வந்தேன்" என்று டெய்லர் பதிலளித்தார்.

"அயோக்கியனே வந்தாயோ, எனது முகத்தைப் பார்க்க உன்னால் எப்படி முடிந்தது? நான் யார் தெரியுமா?" என்று கார்டினர் கூறினான்.

"ஆம், நீர் யார் என்று எனக்குத் தெரியும். நீர் வின்செஷ்டர் பட்டணத்தின் கத்தோலிக்க பிஷப் பண்டிதர் ஸ்டீபன் கார்டினர், பல்கலைக் கழக வேந்தர். இவை யாவுக்கும் மத்தியில் நீர் ஒரு மண்ணான மனிதன். உம்முடைய அதிகாரமுள்ள பார்வைக்கு நான் பயப்பட வேண்டும் என்று விரும்புகின்ற நீர் தேவனுக்கு ஏன் பயப்படக் கூடாது? எந்த ஒரு கிறிஸ்தவனுடைய முகத்தைப் பார்க்க உமக்குத் தைரியம் உண்டா? தேவனுடைய சத்தியத்தை நீர் மீறி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அவரது வார்த்தையையும் மறுதலித்து நீர் எடுத்துக் கொண்ட பிரமாணங்களை மீறி விட்டீரே? கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நீர் நிற்கும்போது எட்டாம் ஹென்றி அரசர், ஆறாவது எட்வர்ட் மன்னருக்கு முன்பாக நீர் எடுத்துக் கொண்ட பிரமாணங்களை மீறி நீர் நடந்து கொண்ட செயல்களுக்கு என்ன பதில் அளிக்கப் போகின்றீர்?" என்றார் டெய்லர்.

"அந்தப் பிரமாணங்களை எல்லாம் உடைத்து திரும்பவும் தாய் சபையாகிய கத்தோலிக்க ரோமச் சபைக்கு வந்ததை நான் எண்ணி பெருமிதம் கொள்ளுகின்றேன். நீயும் கூட என்னைப்போல வரவேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றான் கார்டினர்.

அடுத்து வந்த 2 வருடங்களை டெய்லர் சிறைக்கூடத்தில் செலவளிக்க வேண்டியதானது. அவரைப் போல சிறைக்கூடத்தில் அநேக தேவ பக்தியுள்ள குருவானவர்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் மாஸ்டர் பிராட்ஃபோர்ட் (பின் நாட்களில் இவரும் இரத்தசாட்சியாக மரித்தவர்) என்பவராவர். தன்னோடு சிறையில் அடைப்பட்டுக் கிடந்த ஏராளமான தேவ மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் போதிப்பதிலும், பிரசங்கிப்பதிலும், தன்னளவில் வேதத்தை வாசித்து தியானிப்பதிலும் டெய்லர் தனது நாட்களை செலவிட்டார். ஞானவான்களான தேவ பக்தர்கள் சிறைச்சாலையை நிரப்பியிருந்ததினால் அவர் அடையுண்டு கிடந்த சிறைக்கூடம் ஒரு சர்வ கலாசாலையைப் போல காணப்பட்டது.

1555 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் இறுதியில் டெய்லர், மாஸ்டர் பிராட்ஃபோர்ட், சாண்டர்ஸ் ஆகிய மூவரும் வேதப்புரட்டுகளுக்காக குற்றம் சாட்டப்பட்டு வின்சேஷ்டர், நார்விச், லண்டன், சாலீஸ்பரி, துர்ஹாம் பட்டணங்களின் கத்தோலிக்க பிஷப்புகளுக்கு முன்னிலையில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். தங்களுடைய தவறுகளை ஒத்துக் கொண்டு போப் ஆண்டவருக்கு மன்னிப்பு கடிதங்கள் கொடுக்கும்படியாக அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். ஆனால், அவர்கள் மூவரும் அதை மறுத்துவிட்டனர். 1555 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் தேதி லண்டன் பிஷப் எட்மண்ட் போனர் சிறைக்கூடத்திற்கு வந்து அவருடைய குருத்துவ அதிகாரங்களை எல்லாம் உரிந்து கொண்டான். அந்த வைபவத்திற்கு முன்பாக டெய்லரை வலுக்கட்டாயமாக அவரது குருத்துவ அங்கிகளை உடுத்த வைத்து பின்னர் அவைகளை உரிந்து கொண்டனர்.

அடுத்த நாள் இரவில் டெய்லரின் மனைவியும் அவருடைய மகனும் அவருடன் இரவு போஜனம் அருந்தும்படியாக அனுமதிக்கப்பட்டனர். தேவ பக்தியுள்ள காலஞ் சென்ற எட்வர்ட் அரசரின் சிறைக்காவலரின் அன்பின் காரணமாக இந்த தயவு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்த இரவிலேயே டெய்லர் கொண்டு செல்லப்பட்டுவிடுவார் என்று அவருடைய மனைவி சந்தேகப்பட்டார்கள். எனவே, அவர்கள் சிறைக்கூடத்தை இரா முழுவதும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே இரவு 2 மணிக்கு டெய்லரும் அவருடைய காவலாளர்களும் காணப்பட்டனர். பட்டணத்தின் ஆட்சியாளர்கள் அவர்களை டெய்லரை சந்திக்கவும் தங்கள் இறுதி விடையை ஒருவருக்கொருவர்பகிர்ந்து கொள்ளவும் அனுமதித்தனர். டெய்லர், தனது மனைவியையும் மற்றவர்களையும் உற்சாகப்படுத்தி தங்கள் விசுவாசத்தில் இறுதிவரை உறுதியாக நிலைத்து நிற்கும்படியாக அவர்களை வேண்டிக்கொண்டார். அதின் பின்னர் அவர் உல்பெக் என்ற சத்திரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டெய்லர் அடுத்த நாள் காலை 11 மணி வரைக்கும் இருந்தார். எஸ்ஸக்ஸ் பட்டணத்திலிருந்து அதின் ஆட்சியாளர்கள் வந்து டெய்லரை ஒரு குதிரையின் மேல் ஏற்றி அழைத்துச் சென்றனர். டெய்லரின் வேலையாள் ஜாண் ஹால் மற்றும் அவருடைய மகன் அவரை அங்கு சந்தித்தனர். டெய்லர் தனது மகனை அரவணைத்து முத்தமிடவும், தனது வேலையாளைச் சந்தித்து சில வார்த்தைகளைப் பேசவும் அனுமதிக்கப்பட்டார். அவர்களை ஆசீர்வதித்து அவர்களிடம் இறுதி விடை பெற்றுக் கொண்டு டெய்லர் பிரயாணப்பட்டார்.

வழி நெடுகிலும் பரிசுத்த பக்தன் டெய்லர் மிகவும் களிப்புடன் காணப்பட்டார். தேவனுடைய சுவிசேஷத்தை தன்னுடன் வந்து கொண்டிருந்த பாதுகாவலர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கூறிக் கொண்டு வந்ததுடன் அவர்களையும் இரட்சிப்பின் பாத்திரங்களாக மாற்றிவிட அவர் பிரயாசப்பட்டுக் கொண்டிருந்தார். சில நாட்களில் அவர்கள் ஆட்லி பட்டணம் வந்து சேர்ந்தார்கள். ஆம், அந்தப் பட்டணத்தில்தான் டெய்லர் தனது ஆண்டவருக்கு குருத்துவ பணி ஆற்றினார். அந்தப் பட்டணத்தில்தான் அவர் இப்பொழுது தீக்கிரையாக்கப்படப் போகின்றார். பட்டணத்தின் தெருக்களின் இருபுறங்களிலும் மக்கள் வரிசையாக நின்ற வண்ணமாக தங்கள் போதகருக்கு ஏற்படப்போகும் ஆக்கினையை நினைத்து அழுது கொண்டும், புலம்பிக் கொண்டும் நின்று கொண்டிருந்தனர். டெய்லரின் முகம் மூடப்பட்டிருந்ததால் மக்கள் அவருடைய முகத்தை காண இயலவில்லை. அவர் அக்கினிக்கு இரையாக்கப்படும் இடம் வந்ததை ஒரு காவலன் அவருக்கு காண்பித்தான். "கர்த்தருக்கே துதி உண்டாவதாக. நான் எனது பரலோக வீட்டிற்கு வந்துவிட்டேன்" என்றார் டெய்லர். அவரது முகத்தை மூடியிருந்த துணி அகற்றப்பட்டவுடன் மக்கள் அவருடைய முகத்தையும், அவருடைய வெண்மை நிறத் தாடியையும் கண்டதும் அவரை உற்சாகத்துடன் இருக்குமாறு கூறினார்கள். அதற்கு டெய்லர் எந்த ஒரு மறுமொழியையும் கூறவில்லை. எந்த ஒரு வார்த்தையையும் மக்களிடம் சொல்லக் கூடாது. மீறினால் நாக்கைத் துண்டித்து விடுவோம் என்று காவலர்கள் சொன்ன வார்த்தைக்காக அவர் அப்படி அமைதியாக இருந்தார். தன்னுடைய வஸ்திரங்களை கழற்றிக் கொடுத்த பின்னர் ஜனங்களைப் பார்த்து இரண்டு வார்த்தைகளைக் கூறினார். "நல்ல ஜனங்களே, தேவனுடைய பரிசுத்த வார்த்தைகளைத் தவிர பிறிதொன்றையும் நான் உங்களுக்குப் போதிக்கவில்லை. அந்தப் பாடங்களை பரிசுத்த வேதாகமத்திலிருந்து நான் தெரிந்து கொண்டேன். அதை என் இரத்தத்தால் முத்திரையிட இன்று வந்திருக்கின்றேன்" என்றார். அந்த வார்த்தைகளை சொன்னதற்காக அருகிலிருந்த காவலன் ஒருவன் அவரை தலையில் அடித்தான்.

தனது ஜெபங்களைக் கூறியதும், டெய்லர் தனது கரங்களைக் குவித்தவராக தனக்கு முன்னாலிருந்த தார் நிரப்பப்பட்ட பீப்பாய்க்குள் காலடி எடுத்து வைத்தார். அதற்கு முன்பாகத்தான் அவரைக் கட்டி எரிக்கக் கூடிய மரம் இருந்தது. அந்த வேளையில் பார்த்து ஒரு கயவன் ஒரு மரக்கட்டைத் துண்டை அவருக்கு நேராக வீசினான். அது சரியாக அவரது மண்டையில் பட்டு இரத்தம் தாராளமாக அவருடைய முகத்தில் வடிந்தது. "நண்பனே, நானே வேதனைகளில் நிறைந்துள்ளேன். இதுவும் அவசியம்தானா?" என்று அவர் சொன்னார். அதற்கப்பால் அவர் 51 ஆம் சங்கீதத்தைச் சொன்னார். அப்பொழுது அருகிலிருந்த ஜாண் ஷெல்டன் என்ற குரூரன் அவரது வாயில் அடித்து "ஜனங்கள் புரிந்து கொள்ளக் கூடிய ஆங்கிலத்தில் பேசாமல் லத்தீன் மொழியில் பேசு" என்று சொன்னான்.

ரோலண்ட் டெய்லர் தனது கரங்களை வானத்திற்கு நேராக ஏறெடுத்து "இரக்கமும், தயவும் நிறைந்த பரலோகப் பிதாவே, எனது அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் எனது ஆவியை உம்முடைய கரங்களில் ஒப்புவிக்கின்றேன்" என்று சொல்லி அழாமலும், கூக்குரலிடாமலும், அசையாமலும் நின்று கொண்டிருந்த வேளையில்தானே சோயிஸ் என்ற பெயரையுடைய காவலன் ஒருவன் அவரை தனது கரத்திலிருந்த ஈட்டியும், வெட்டுக் கோடரியும் ஒன்றிணைந்த கூரிய ஆயுதத்தால் அவரது சிரசை வெட்டவே அவரது மூளை எல்லாம் சிதறி செத்த பிணமாக ரோலண்ட் டெய்லர் என்ற அந்த பரிசுத்த பக்தன் சாய்ந்தார். அதைத் தொடர்ந்து அக்கினி அவரது ஜீவனற்ற சரீரத்தை எரித்து சாம்பலாக்கியது.

 

ஜாண் ஹூப்பர்

புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த இங்கிலாந்து தேச மன்னர் எட்வர்ட் அவர்களின் காலத்தில் ஜாண் ஹூப்பர் என்ற பரிசுத்தவான் இரண்டு திரு மண்டலங்களுக்குப் பிஷப்பாக தேவப் பணி புரிந்தார். அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் அடிகளார் கண்காணிகளைக் குறித்து (பிஷப்மார்களைக் குறித்து) தீமோத்தேயு நிருபத்தில் எழுதிய பிரகாரம் அவர் தனது ஊழியத்தைச் செய்தார். தன்னுடைய சுய ஆதாயத்தை அவர் ஒருக்காலும் தேடவில்லை. தனது திருச்சபையின் மக்களுக்கான சரீர நலனுக்காகவும், இரட்சிப்பின் காரியத்துக்காகவும் தனக்கு வந்த பணங்கள் எல்லாவற்றையும் அவர் செலவிட்டார். "இரத்தசாட்சிகளின் புத்தகத்தை" எழுதிய ஜாண் ஃபாக்ஸ் என்ற பரிசுத்தவானே பிஷப் ஜாண் ஹூப்பரின் வீடு பிச்சைக்காரர்களாலும், ஏழை ஜனங்களாலும் நிறைந்திருந்ததை இரண்டு தடவைகள் தனது சொந்தக் கண்களால் கண்டதாக எழுதியிருக்கின்றார். ஏழை எளிய மக்கள் சாப்பிட்ட மேஜையிலேயே ஒவ்வொரு இரவும் ஜாண் ஹூப்பர் சாப்பிடுவார் என்று ஒரு வேலையாள் சொன்னதை மக்கள் கேட்டிருக்கின்றார்கள். அத்தனையான ஏழைப் பங்காளன் அவர்.

எட்வர்ட் அரசனின் நாட்களில் 2 ஆண்டு காலம் ஹூப்பர் தேவனுடைய ஊழியத்தைச் மிகுந்த தேவ சமாதானத்தோடு செய்து வந்தார். அவர் இறந்ததும் இரத்த மேரி பட்டத்தரசியாக சிம்மாசனம் ஏறினாள். அவள் அரசியானதும் முதலாவது பிஷப் ஜாண் ஹூப்பரை லண்டனுக்கு அழைத்து அவரை சிறையில் அடைத்தாள். அங்கு அவர் 18 மாதங்கள் சிறையில் இருந்தார். அவர் சிறையில் இருந்த நாட்களின் பெரும்பாலான நாட்கள் மோசமான நோயாளியாகவே இருந்தார். தனது சொந்த செலவிலேயே ஆகாரங்களை அவர் வெளியிலிருந்து வாங்கிச் சாப்பிட்டார். 1554 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் நாள் வின்செஷ்டர், லண்டன், துர்ஹாம் பட்டணங்களின் கத்தோலிக்க பிஷப்மார்களுக்கு முன்பாக ஹூப்பர் வரவழைக்கப்பட்டு அவருடைய பிஷப் பட்டத்தை உரிந்து கொண்டார்கள். 1555 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 28 ஆம் நாள் ஹூப்பர் கத்தோலிக்க பிஷப் வின்செஷ்டர் மற்றும் சிலருக்கு முன்பாக வரவழைக்கப்பட்டு போப் ஆண்டவரை இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக ஏற்றுக் கத்தோலிக்க மார்க்கத்திற்குத் திரும்பும்படியாக வற்புறுத்தினார்கள். ஆனால் ஹூப்பர் அதை முழுமையாக மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை கிளவ்செஷ்டர் என்ற இடத்திற்குக் கொண்டு சென்று அங்கு அவரை தீக்கிரையாக்கத் தீர்மானித்தார்கள்.

1555 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் தேதி அவரை தீயிட்டுக் கொழுத்தும் கம்பத்திற்குக் கொண்டு வந்தார்கள். அதிகமான பாடுகள், வேதனைகள் இல்லாமல் துரிதமாக அவர் மரணமடைய வசதியாக பாதுகாவலர் அவருக்கு ஜூவாலித்து எரியக்கூடிய கந்தகப் பவுடர் (Gun Powder) நிரப்பப்பட்ட சில பைகளை அவருக்குக் கொடுத்தார்கள். அவற்றை அவர் தனது இரு கைகளின் இடுக்குகளிலும், தனது கால்களுக்குள்ளும் வைத்துப் பிடித்துக் கொண்டார். அதற்கப்பால் மூன்று சங்கிலிகள் கொண்டு வரப்பட்டு ஒரு சங்கிலியால் அவரது கழுத்தையும், ஒன்றினால் அவரது இடுப்பையும், மற்றொன்றினால் அவரது கால்களையும் கழு மரக்கம்பத்துடன் அழுத்திப் பிடித்துக் கட்ட முயன்றனர். அவை அவசியம் இல்லை என்றும் ஒரே ஒரு சங்கிலியால் தனது இடுப்பை மாத்திரம் கட்டினால் போதும் என்று அவர் சொல்லவே அப்படியே ஒரு சங்கிலியால் கட்டினார்கள்.

தன்மேல் நெருப்பை மூட்டப் போகும் மனிதனை ஹூப்பர் கர்த்தருக்குள் மன்னித்த பின்னர் அக்கினி மூட்டப்பட்டது. எரிக்கும் விறகுகளை ஆயத்தம் செய்த மனிதன் பச்சை விறகுகளை கொண்டு வந்து அடுக்கியிருந்தபடியால் விறகுகள் தீப்பற்றிக் கொள்ள சற்று நேரம் எடுத்துக் கொண்டது. இறுதியாக பச்சை விறகுகளில் நெருப்பு பற்றிக் கொண்டபோதினும் அப்பொழுது வீசிய காற்று நெருப்பை சீராக ஹூப்பர் மேல் எரிய விடவில்லை. அடுத்தபடியாக ஒரு நெருப்பு மூட்டப்பட்டது. அதுவும் அத்தனை உக்கிரமாக எரியவில்லையாதலால் மூன்றாம் முறையாக ஒரு நெருப்பு மூட்டப்பட்டது. அது கந்தகப் பவுடரில் பற்றி எரியத் தொடங்கிய போதும் தொடர்ந்து காற்று அதையும் வீசி தீயின் உக்கிரகத்தைக் குறைத்தது. ஹூப்பரின் வாய் எரிந்து அவருடைய நாக்கு வெந்து தொங்கியது. எரிந்து கொண்டிருந்த தனது கரங்களை ஹூப்பர் தனது மார்பில் அடிக்கவே அவைகளில் ஒன்று துண்டாகி அக்கினியில் விழுந்தது. பின்னர் அவர் அடுத்த கரத்தையும் தனது மார்பில் அடித்தார். அப்பொழுது அவருடைய கை விரல்களிலிருந்து கொழுப்பு, தண்ணீர், இரத்தம் வடியத் தொடங்கியது. அந்தக் கரம் அவருடைய இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த சங்கிலியுடன் மாட்டிக் கொண்டது.

பரிசுத்தவான் ஹூப்பர் சுமார் 45 நிமிடங்கள் அக்கினியின் உக்கிரகத்தை மிகவும் பொறுமையுடன் சகித்தார். சற்று நேரத்திற்கெல்லாம் அவரது வயிற்றுப் பகுதி எரிந்து குடல் வெளியே சரிந்தது. பரிசுத்த பக்தன் ஜாண் ஹூப்பர் இப்பொழுது ஆசீர்வதிக்கப்பட்ட இரத்த சாட்சியாக கிறிஸ்துவின் உண்மையுள்ள தேவ மக்களுக்காக ஆயத்தம் பண்ணி வைத்துள்ள பரலோக பாக்கியங்களை அனுபவித்தவராக தான் அதிகமாக நேசித்த ஆண்டவரோடு பரலோகில் வாழ்கின்றார்.

 

தேவ கோபாக்கினை ஊற்றப்பட்டது

தேவ ஜனங்களுக்கு விரோதமாக மேலே நாம் கண்டவிதமாக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்களுக்கு எதிராக தேவன் தாமே தக்க பதிலளித்தார் என்பதை நாம் காண முடியும். கொடூரங்களில் ஈடுபட்ட யாவரின் முடிவுகளைக் குறித்தும் நமக்குத் தகவல்கள் கிடைக்காதபோதினும் ஒரு சிலரைக் குறித்து நமக்குச் செய்திகள் உண்டு.

 

பண்டிதன் விட்டிங்டனின் கோர முடிவு

"இரத்த சாட்சிகளின் புத்தகத்தை" எழுதிய ஜாண் ஃபாக்ஸ் என்ற பரிசுத்தவான் கீழ்க்கண்டவாறு எழுதுகின்றார். "கிறிஸ்து இரட்சகருக்காக தங்கள் அருமையான ஜீவனைக் கொடுத்த மக்களில் இங்கிலாந்திலுள்ள சிப்பிங் என்ற இடத்தின் சோட்பரியில் தலை துண்டிக்கப்பட்ட ஒரு பரிசுத்த பெண்மணி சிறப்பு வாய்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களின் முகம் பரிசுத்தத்தால் பிரகாசித்தது.

கத்தோலிக்க மார்க்கத்திற்கு இணக்கம் தெரிவிக்காததால் "வேதப் புரட்டு" என்ற பெயரில் அவர்களுக்கு விரோதமாகக் குற்றஞ் சாட்டப்பட்டு சிரச்சேதம் பண்ணப்படுவதற்காகப் பொது இடத்திற்குக் கொண்டு வரப்பட்டார்கள். ஒரு பெரிய கூட்டம் மக்கள் கொலைக் களத்தில் கூடி விட்டார்கள். அந்த உண்மையுள்ள தேவ மகள் கடைசி வரை சத்தியத்தை விட்டுக் கொடுக்காமல் துணிச்சலாக தன் ஆண்டவருக்கு நின்று சாதித்து விட்டார்கள். அவர்கள் சிரச்சேதம் பண்ணப்படப்போகும் போது அவர்களை ஆக்கினைக்குட்படுத்திய கொடியவன் விட்டிங்டனும் கூட்டத்தினருடன் இருந்தான். பட்டணத்திற்கு வெளியே அந்தப் பரிசுத்தவாட்டியை சிரச்சேதம் பண்ணி முடித்த பின்னர் கூட்டத்தினர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கொலைகாரன் விட்டிங்டனும் கூட்டத்தினருடன் வந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது, பட்டணத்தில் ஓரிடத்தில் ஒரு கசாப்புக் கடைக்காரன் ஒரு மாட்டை வெட்டுவதற்காக அதைக் கயிற்றால் கட்டி அதின் தலையை கோடரியால் வெட்டினான். ஆனால் அந்தக் கோடரி சரியாக தலையை வெட்டுவதற்குத் தவறிவிட்டது. படுகாயம் அடைந்த அந்தக் காளை மாடு கசாப்புக் கடைக்காரனின் கயிற்றை எல்லாம் அறுத்துக் கொண்டு தெரு வழியாக விரைந்து ஓடி வந்து கொண்டிருந்தது. அது வந்து கொண்டிருந்த பாதையில்தான் மேலே கண்ட பரிசுத்தவாட்டியை சிரச்சேதம் செய்த கொடூரத்தை மக்கள் துயரத்துடன் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் அந்த பரிசுத்தவாட்டிக்கு மரணாக்கினை விதித்த கொடிய பண்டிதன் விட்டிங்டனும் வந்து கொண்டிருந்தான்.

தலையில் இரத்தக் களறியுடன் விரைந்து ஓடி வந்து கொண்டிருந்த அந்தக் கோபம் கொண்ட காளை மாடு கூட்டத்தில் எவரையும் முட்டாமல் ஒரே பாய்ச்சலாக பண்டிதன் விட்டிங்டன் மேல் பாய்ந்து தனது கொம்புகளால் அவனைக் குத்தி அவனது குடல் எல்லாம் வெளியே சரிந்து விழும்படியாகச் செய்து அதே இடத்தில் அவனைக் கொன்று போட்டது"

 

பிஷப் போனரின் முடிவு

எட்மண்ட் போனர் என்பவன் லண்டன் பட்டணத்தின் பிஷப் ஆவான். இரத்த மேரியின் நாட்களில் புராட்டஸ்டண்ட் மக்களை சித்திரவதை செய்ததில் இவனுக்கு பெரும் பங்கு உண்டு. ஹென்றி அரசனின் நாட்களில் இவன் தன்னை போப் ஆண்டவருக்கு எதிரானவன் போலக் காண்பித்துக் கொண்டான். ஆனால், கத்தோலிக்க ராணி மேரி சிம்மாசனம் ஏறியபோது அவன் அவளுடன் சேர்ந்து கொண்டு தன்னுடைய முழு பெலத்தோடும் அப்பாவி புராட்டஸ்டண்டு மக்களை அழிப்பதில் ஈடுபட்டான்.

இந்தக் கொடியவன் மட்டும் 200 பரிசுத்த தேவ மக்களை தீக்கிரையாக்க ஒப்புக் கொடுத்தான் என்று சொல்லப்படுகின்றது. தனக்கு முன்பாகக் கொண்டு வரப்படும் தங்களுடைய விசுவாசத்தில் ஊறுதியாக இருக்கும் புராட்டஸ்டண்ட் மக்களை இவன் பல தடவைகளிலும் இரும்பு கம்பியால் பலமாக அடித்தான் என்று சொல்லப்படுகின்றது. ஈவு, இரக்கம் அற்ற இந்தக் கொடிய பாதகனுடைய காரியம் இரத்த மேரியின் காலமெல்லாம் ஜெயமாக இருந்தது.

ஆனால், அவள் மரித்து அவளுடைய சகோதரி எலிசபெத் பட்டத்து ராணியானபோது முதல் வேலையாக இந்தக் கொடியவனை சிறையில் போட்டார்கள். புராட்டஸ்டண்ட் அரசியான எலிசபெத்தை, போனர் இங்கிலாந்து தேச திருச்சபையின் அக்கிராசனபதியாக அங்கீகரிக்க மறுத்தபடியால் அவனை அப்படியே சிறைக்கூடத்திலேயே வைத்து விட்டார்கள். அடுத்து வந்த நீண்ட 10 ஆண்டு காலத்தை அவன் மிகவும் நிர்ப்பந்தமான நிலையில் சிறைக்கூடத்தில் பரிதாபமாகக் களித்தான். தனித்த சிறைக்கூட அறையில் இருந்த நாட்களில் தனது காலத்தில் கொன்று குவித்த மக்கள் தங்கள் மரண நேரத்தில் எழுப்பிய கதறுதல்களும், அலறல்களும், அங்கலாய்ப்புகளும், புலம்பல்களும் அவனது காதுகளில் இரவும் பகலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்திருக்கும் என்பதை நாம் நிச்சயமாக நம்பலாம். அந்த பத்து ஆண்டு காலத்தில் அந்தக் கொடியவனை ஒருவரும் சிறைக்கூடத்தில் வந்து சந்திக்கவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க காரியமாகும். ஒருவரும் அவனை பத்து வருடங்கள் சந்திக்காதபோதினும் அவன் மக்களுக்குச் செய்த கொடுமைகள் அவர்களுடைய உள்ளங்களில் பசுமையாகவே இருந்து வந்தது. அவர்கள் அவனை உக்கிரமமாகப் பகைத்தார்கள்.

அந்த நிர்ப்பந்தமான கோலத்தில் அவன் தனது 70 ஆம் வயதில் மரித்தான். மரித்த அவன் பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கும் நித்திய அக்கினிக்கு (மத் 25 : 41) உடன்தானே சென்றிருப்பான். அவனுடைய செத்த சவத்தைப் பார்த்தாலும் பொது மக்கள் கோபத்தால் வெகுண்டெழுந்து நாட்டில் கலகம் உண்டாக்கிவிடுவார்கள் என்ற பயத்தினால் அவனது உடலை நடு இராத்திரியில் ஆள் அரவமின்றி எடுத்துச் சென்று யாரும் அறியா எங்கோ ஓரிடத்தில் புதைத்துவிட்டார்கள்.

 

ராணி இரத்த மேரியின் துயர முடிவு

மிகுந்த தேவ பக்தியுள்ள பரிசுத்த தாயாரான காதரினுக்கும் தனது தந்தையாகிய எட்டாம் ஹென்றி மன்னனுக்கும் மகளாகப் பிறந்த இவள் புராட்டஸ்டண்ட் மக்களின் ஆதரவோடு சிம்மாசனம் ஏறினாள். ஸ்பெயின் நாட்டின் பிலிப் என்ற கத்தோலிக்க அரசனை மணந்து கத்தோலிக்கத்தை இங்கிலாந்து தேசத்துக்குள் கொண்டு வந்தாள். அத்துடன், போப் ஆண்டவர், திருப்பலி பூஜைகள், கத்தோலிக்க துறவியர், கன்னியாஸ்திரிகள் போன்றவர்கள் வந்தனர். அதற்கப்பால் தன்னை அரசியாக சிம்மாசனம் ஏற்றிய புராட்டஸ்டண்ட் மக்களை அவள் அதல பாதாளத்தில் வீசி எறிந்தாள்.

இங்கிலாந்து தேசத்தின் எந்த ஒரு அரசனும், அரசியும் சமாதான காலத்தில் இரத்த மேரியைப் போன்று மேன்மையான பரிசுத்த ஆங்கிலேய மக்களின் இரத்தத்தை சிந்தியது, அவர்களை குரூரமாக சித்திர வதை செய்தது வேறு எவரும் இல்லை. நான்கு ஆண்டு காலத்தில் புராட்டஸ்டண்ட் மக்களை தூக்கிலிட்டும், சிரச்சேதம் பண்ணியும், தீயிலிட்டுக் கொழுத்தியும் திரளான மக்களைக் கொன்று குவித்துவிட்டாள். ஒவ்வொரு நாளும் அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஆடுகளைப் போல நிரபராதியான புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ மக்கள் கொலைக்களம் சென்றனர்.

ஆண்டவரும் இந்தக் கொடியவளைச் சும்மா விடவில்லை. எந்த ஒரு பெண்ணும் அடையாத ஏமாற்றத்தை இந்த இரத்த மேரி அடைந்தாள். ஆம், ஆண்டவர் அவளுக்குக் குழந்தைச் செல்வத்தைக் கொடுக்கவில்லை. அவளால் கொண்டு வரப்பட்ட போப் ஆண்டவரும், கத்தோலிக்கத் துறவியரும், திருப்பலி பூஜைகளும், கன்னியாஸ்திரீகளும், கத்தோலிக்கர்களால் அவளுக்காக ஏறெடுக்கப்பட்ட அனைத்து ஜெபங்களும் முற்றும் பயனளிக்காமல் போய்விட்டது. அவள் கர்ப்பம் தரிக்காததைக் கண்ட அவளுடைய கணவன் பிலிப் அவளை வெறுத்தான். அவளுடன் அவன் அதிகமான நேரம் செலவிட விரும்பவுமில்லை. அவனுடைய அன்பு அதற்கப்பால் அவளுக்குக் கிடைக்கவில்லை.

நீண்ட நாட்கள் (சுமார் 17 மாதங்கள்) அவள் கர்ப்பப் பை புற்று நோயால் கடும் நோய்வாய்ப்பட்டுக் கொடும் அவஸ்தை அனுபவித்தாள். அவள் இங்கிலாந்து தேசத்தை ஐந்து வருடம், ஐந்து மாதங்கள் அரசாண்டாள். அவள் மரிக்கும் வேளையில் மிகவும் ஆறாத் துயரமாக பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தாளாம். அதைக் கவனித்த அவளுடைய ஆலோசகர்களில் ஒருவர் "மரித்துப்போன உங்கள் கணவனை நினைத்து பெரு மூச்சு விடுகின்றீர்களா?" என்று கேட்டதற்கு "அதுவும் ஒரு காரணம்தான். ஆனால் யாவுக்கும் மேலாக என் இருதயத்தை கூரான பட்டயம் போல ஊடுறுவிச் செல்லும் ஒரு மாபெரும் காரணம் உண்டு" என்று சொன்னாளாம். ஆம், தனது காலம் எல்லாம் சித்திரவதை செய்து கொன்று குவித்த திரளான, நிரபராதிகளான புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ மக்களைக் குறித்து அவள் அப்படிச் சொன்னாள்.

1558 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் நாள் அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு அவள் தேவனாலும், தனது நாட்டின் குடி மக்களாலும் வெறுத்துத் தள்ளப்பட்ட நிலையில் மிகவும் நிர்ப்பந்தமாக புற்று நோயின் வேதனையின் துயரத்தோடு மரித்து நித்திய அக்கினிக்கடலுக்குச் சென்றாள். அப்பொழுது அவளுடைய வயது 42 மாத்திரமே. அந்தக் கொடிய இரத்த மேரி ராணியின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

 

தேவன் நமக்குத் தந்த பொற்காலம்

இங்கிலாந்தை அரசாண்ட கொடிய இரத்த மேரியின் காலத்தில் நாம் அவளது குடிமக்களாக இல்லாதபடி நம்மைப் பாதுகாத்த ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். அந்த நாட்கள் ஒன்றில் ஒரு கத்தோலிக்க சாமியாருக்கு அருகில் அவருடைய வஸ்திரத்தில் தவறுதலாக உட்கார்ந்து விட்ட ஒரு இங்கிலாந்து தேச புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ குடிமகனைக்கூட தீக்கிரையாக்கினார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. ஏன்னே கொடுமை!

ஆனால், நம்முடைய தமிழ் நாட்டில் நாம் விரும்பும் எந்த ஒரு சபைப் பிரிவுகளில் இருந்து கொண்டு நமது விசுவாசத்தை தைரியமாக அறிக்கையிட்டு சுதந்திரமாக நாம் கர்த்தரை ஆராதிக்க அவர் கொடுத்த மட்டில்லாத தயவுக்காக நாம் அவருக்கு எத்தனை கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தாலும் அது முழுமையாக இருக்காது.

தேவன் நம்மை அவருக்கு இரத்தசாட்சிகளாக மரிக்கக் கேட்கவில்லை. தார் நிரப்பப்பட்ட பீப்பாயில் நாம் இறங்கி தீக்கிரையாகும்படி அவர் நம்மை விரும்பவில்லை. ஆனால், நமது பரிசுத்த வாழ்க்கையின் மூலமாக அவருடைய நாமத்தை நாம் மகிமைப்படுத்த அவர் கட்டாயம் விரும்புகின்றார். இந்தக் கடைசி காலத்தில் கிறிஸ்தவ மக்களின் சாட்சியற்ற வாழ்க்கைகளினால் தேவனுடைய பரிசுத்த நாமம் நன்கு தூஷிக்கப்படுகின்றது. கிறிஸ்தவ மக்கள் என்றால் புறமதஸ்தர் நம்மை இகழிப்பாகப் பேசுகின்றனர். நம்மை அற்பமாக எண்ணுகின்றனர். நம்முடைய சாட்சியற்ற வாழ்க்கையின் காரணமாக நம்முடைய அன்பின் இரட்சகரையும் தங்கள் ஆண்டவராக ஏற்றுக் கொள்ள மிகவும் தயங்குகின்றனர்.

இந்த தடவை நாங்கள் தேவ ஊழியத்தின் பாதையில் வடக்கே சென்றிருந்த சமயம் சென்னையிலிருந்து நாங்கள் டேராடூன் சென்ற ரயில் பெட்டியில் எங்களுடன் ஒரு வைராக்கியமான இந்துப் பண்டிதர் பிரயாணம் செய்தார். கங்கை நதியில் நீராட ஹரித்துவாரம் பட்டணத்துக்கு அவர் எங்களுடன் வந்து கொண்டிருந்தார். நாங்கள் தேவனுடைய வேதாகமத்தை வாசித்துக் கொண்டு வந்தோம். அவர் ஒரு ஆங்கில இந்துப் புத்தகத்தை வாசித்துக் கொண்டு வந்தார். நான் எனது வேதாகமத்தை கரத்தில் எடுத்து வாசிக்கும் ஒவ்வொரு சமயமும் அதை முத்தமிட்டுத் திறப்பதை அவர் கவனித்தார்.

எங்களுடைய பேச்சுவாக்கில் கிறிஸ்தவ மார்க்கம்தான் மெய்யான சத்திய மார்க்கம் என்று நான் அவரிடம் பேசியபோது அதைத் தவறு என்று சுட்டிக்காண்பிக்க அவர் எங்களுக்கு காண்பித்த ஒரு உதாரணம் அவர் தனது வாழ்க்கையில் தன் வீட்டண்டை வசித்துக்கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவக் குடும்பம்தான். "அவர்கள் தாலி போடமாட்டார்கள். வெள்ளைச் சேலைதான் எப்பொழுதும் கட்டுவார்கள். ஆனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏதாவது வந்துவிட்டால் ஒருவரையொருவர் அடிக்க உருட்டுக்கட்டையைத்தான் எடுத்துக் கொண்டு ஓடுவார்கள். அவர்களுடைய சண்டையைக் கண்டு தெருவே பயந்து நடு நடுங்கி நிற்கும். அந்த நேரம் நான்தான் தைரியமாய்ப் போய் அவர்களை சமாதானம் பண்ணுவேன்" என்றார்.

நமது கிறிஸ்தவ வாழ்க்கையை புறமதஸ்தர் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். நமது பிரசங்கம், நமது பாடல்கள், நமது ஆராதனைகளை அல்ல நமது வாழ்க்கையைத்தான் அவர்கள் பார்க்கின்றனர். "நீ யார் என்பதை உனது வாழ்க்கை உரத்த சத்தமாகப் பேசுவதால், நீ உன்னைக் குறித்துச் சொல்லும் வார்த்தைகள் எனக்குக் கேட்பதில்லை" (What you are talks so loud, I cant hear what you say) என்று ஒரு முதுமொழி கூறுகின்றது. "அன்றியும் மனந்திரும்புதலும், பாவ மன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்" (லூக்கா 24 : 47-48) என்ற ஆண்டவருக்கு நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்" (அப் 5 : 32) நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம் (2 கொரி 2 : 15) என்ற அவர்களுடைய அடியார்களைப் போன்று நாமும் நமது இரட்சகராம் தேவனுக்கு நமது பரிசுத்த வாழ்க்கையின் மூலம் சாட்சிகளாயிருப்போம், மணம் வீசும் நற்கந்தமாக இருப்போம்.

நாம் பிரவேசித்துள்ள இந்த 2009 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் நம்மால் முடிந்த அளவு அதிகமான நேரத்தை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிடுவோம். பகற் காலங்களில் நாம் அதிகமான நேரத்தை ஆண்டவருடன் செலவிட முடியாமல் இருக்கலாம். அப்படியானால் கட்டாயம், இரவில் ஓரிரு மணி நேரங்களாவது செலவிட்டே ஆக வேண்டும். இந்த நமது ஜெப வாழ்க்கையே நம்மைப் பாதுகாப்பாக நம்முடைய ஆண்டவருடைய நித்திய இளைப்பாறுதலுக்குள் (எபி 4 : 9) அழைத்துச் செல்லும். அத்துடன் இந்த உலகத்தில் நாம் ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை நடத்த அது நமக்கு அனுகூலமாக இருக்கும். அதிகமாக நாம் ஆண்டவருடன் ஜெபத்தில் தனித்திருக்கும்போது நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எந்த ஒரு கடினமான, கலக்கமான, இருளான, தடுமாற்றமான சூழ்நிலைகளையும் நாம் மிகுந்த தேவ சமாதானத்தோடு கடந்து செல்ல முடியும். "உம்மை உறுதியாகப்பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்ளுவீர்" (ஏசாயா 26 : 3) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது.

நமது ஆவிக்குரிய பரிசுத்த வாழ்வில் நாம் திடமாக முன்னேறிச் செல்லுவதற்கு நமக்கு கைகொடுத்து உதவுவது நமது ஒழுங்கான உபவாச ஜெப வாழ்க்கையாகும் என்பதை நாம் மறப்பதற்கில்லை. ஜெபத்தின் மூலமாக நாம் வெற்றி கொள்ள முடியாத காரியங்களை, குறிப்பாக நமது மாம்சத்தின் கிரியைகளை நமது உபவாச ஜெபங்களின் மூலமாக நாம் தேவ கிருபையால் மேற்கொண்டு விடலாம். எனவே, கர்த்தருடைய பெலத்தால் ஒவ்வொரு வாரமும் ஒரு நாளில் உபவாசத்தை தவறாது மேற்கொள்ளுங்கள். அந்த நாள் முழுவதும் புசியாமலும் குடியாமலும் இருந்து உபவாசியுங்கள். இல்லையெனில், சூரிய அஸ்தனம் வரைக்குமாவது உபவாசித்து விடுங்கள். இடையில் காப்பி, டீ, நீர் ஆகாரங்கள், தண்ணீர் எதுவும் குடிக்க வேண்டாம். அது உபவாசமாகாது. புசியாமலும், குடியாமலுமிருந்து உபவாசியுங்கள். உங்கள் தேக சுகத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் தேவன் உங்களைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுவார். மிகவும் தேவ ஆசீர்வாதம் காண்பீர்கள்.

தேவப் பிள்ளைகளாகிய உங்களுக்கு இப்படிப்பட்ட தேவ ஆலோசனைகளை எழுதுகின்ற கடுமையான சர்க்கரை நோயாளியாகிய, உங்கள் மூத்த சகோதரனாகிய நான் உங்களுக்கு எவைகளை எழுதுகின்றேனோ அவைகளை முதலாவது நான் எனது வாழ்க்கையில் தேவ பெலத்தால் அப்பியாசித்து அவைகளை உங்களுக்கு எழுதுவதை அன்பின் ஆண்டவர் அறிகின்றவராக இருக்கின்றார். அப்படி நான் மாய்மாலம் செய்து உங்களுக்கு ஒன்றை தேவ எக்காளத்தில் எழுதி எனது வாழ்க்கையில் அதற்கு எதிர்மறையாக வாழ்ந்து இந்த தேவ ஊழியத்தை செய்து வந்திருந்தால் இந்த ஊழியம் எப்பொழுதோ அழிந்து நொறுங்கிப் போயிருக்கும். அத்துடன் தேவ எக்காளத்தை வாசிக்கின்ற மக்களுக்கு அதினால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடைத்திருக்காது. அதை வாசிக்கின்ற மக்கள் ஆவிக்குள் ஆசீர்வதிக்கப்படுகின்றார்கள் என்றால், அது அநேகருக்கு ஆறுதலையும், தேவ சமாதானத்தையும் கொண்டு வருகிறதென்றால், அதைப் படிக்கின்றவர்கள் கர்த்தருக்காகத் தங்கள் வாழ்க்கையில் ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ புது தீர்மானங்கள் எடுக்கின்றார்கள் என்றால் அதின் ஒரே இரகசியம் தேவ கிருபையால் நான் எனது சரீர பாண்டத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துவதுதான் (1 கொரி 9 : 27) கர்த்தருக்கே துதி உண்டாவதாக.

உலகம் உண்டானது முதல் தேவன் தமது ஜனத்துக்காக ஆயத்தம் பண்ணியுள்ள ராஜ்யத்தை (மத்தேயு 25 : 34) சுதந்தரிக்கக் கூடிய மக்கள் சிலர் (மத்தேயு 7 : 14) மட்டுமே என்று அன்பின் இரட்சகர் திட்டமாகக் கூறிவிட்டபடியால் (லூக்கா 13 : 24) அந்தச் சிலரில் நாமும் ஒருவராகக் காணப்படுவதற்கு நாம் பெருங்கிரயம் செலுத்தியாக வேண்டும். "யோவான் ஸ்நானகன் காலம் முதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது. பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்ளுகிறார்கள்" (மத் 11 : 12) என்ற தேவ வாக்கின்படி நாம் பலவந்தம் பண்ணித்தான் தேவனுடைய நித்திய விண் வாசஸ்தலங்களுக்குள் பிரவேசிக்க வேண்டியதாக உள்ளது.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முடிவில்லாத நித்தியம், எந்த வயது, எந்த நேரம், எந்த வேளையிலும் நம்மைச் சடுதியாகச் சந்திக்கும் நமது மரணம், உலகத்தோற்ற முதல் தேவன் தமது ஜனத்திற்காக ஆயத்தம் பண்ணி வைத்துள்ள நித்தியானந்த மோட்சானந்த பாக்கியம், பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டுள்ள நித்திய அக்கினி, நமது ஆத்துமாவை எந்த விதத்திலும் நரக அக்கினிக்குக் கொண்டு செல்ல இராப்பகலாகக் கெர்ச்சித்து சுற்றியலையும் சிங்கமாகிய தந்திர சாத்தான். ஆம், இந்த ஐந்து காரியங்களும் எப்பொழுதும் உங்கள் நினைவில் இருப்பதாக.

நமது ஆத்துமாவுக்கு நாமேதான் உத்திரவாதி. கடைசி நேரத்தில் நமது ஆத்தும நஷ்டத்துக்கு நாம் எவரையும் குற்றப்படுத்த முடியாது. சர்வலோக நியாதிபதிக்கு முன்பாக நாம் எந்த ஒரு சாக்குப் போக்கும் கூறவும் முடியாது. நாம் நம் மட்டாகத் தனித்தே நமது ஆவிக்குரிய போராட்டத்தில் போராடி ஜீவ கிரீடத்தைப் பெற வேண்டும். அதற்கான அனைத்துக் கிருபைகளையும் நமக்குள்ளே வாசம் பண்ணும் சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் (யோவான் 14 : 17) நமக்குத் தந்து நம்மைப் பாதுகாப்பாக ஜீவ கரை கொண்டு போய்ச் சேர்ப்பார். "வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்"


 
 

பரிசுத்த தேவ மனிதர் சாது சுந்தர் சிங் அவர்கள் ஒரு முறை மேல் நாட்டில் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டின் எஜமானர் சுந்தருக்குத் தெரிந்தவர். வீட்டின் தலைவாசல் படிகளில் நின்று கொண்டிருந்த அவரை அந்த வீட்டில் வேலை செய்யும் ஒரு பணியாள் வந்து என்னவென்று விசாரித்தான். சுந்தர் தமது பெயரை அவனிடம் கூறி இந்தப் பெயரை உடைய நபர் உங்களை பார்க்க வந்துள்ளார் என்று கூறும்படி கேட்டுக் கொண்டார். சுந்தருடைய பெயரைக் கேட்டுக் கொண்டு வீட்டிற்குள் சென்ற பணியாளன் சில நொடிகளுக்குள்ளாக அவரது பெயரை மறந்து போனான். நேராக அவன் தனது எஜமானரிடம் சென்று "ஐயா, உங்களைத் தேடி ஒரு மனிதர் நமது வீட்டிற்கு வந்திருக்கின்றார். அவர் தனது பெயரை என்னிடம் கூறினார். நான் அந்தப் பெயரை நினைவுபடுத்திக் கொள்ள இயலவில்லை. ஆனால், அவருடைய முகம் பிரகாசித்துக் கொண்டிருப்பதை மட்டும் நான் காண்கின்றேன்" என்று சொன்னான்.

தேவப்பிள்ளையே, இப்படிப்பட்ட ஒரு பிரகாசமான பரிசுத்த வாழ்வை நாம் வாஞ்சிப்போமா? அதற்காக நாம் தேவ சமூகத்தில் கண்ணீரோடு கதறுவோமா? இது ஒன்றே இன்றைய உலகின் தேவை.


 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM