அந்தக் கண்ணீரின் காட்சியைக் கண்ட நான் அந்த மனிதர் தேவ சமூகத்தில் வானத்திற்கும், பூமிக்கும் நடுவாக குதித்த காரியத்தையும், தனது கரத்தில் எப்பொழுதும் ஆண்டவருடைய வார்த்தைகளை சுமந்து திரிந்ததையும், கிறிஸ்தவ சபை நடுவே கர்த்தரைக் குறித்து வைராக்கியமாக சாட்சி கொடுத்து பிரசிங்கித்த காரியங்களையும் நான் அதிகமாக நினைத்துப் பார்த்தேன். அப்பொழுது அன்பின் ஆண்டவருடைய வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தது. "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள், முட்செடிகளில் திராட்சப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்க மாட்டாது, கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். ஆதலால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்" (மத்தேயு 7 : 16 - 20)
நான் எனது உலகப்பிரகாரமான அலுவலில் தேயிலைத் தோட்ட குமஸ்தாவாக பணிக்குச் சேர்ந்த ஆரம்ப நாட்களில் எங்கள் தேயிலைத் தோட்டத்துக்கு சில கி.மீ. தொலைவில் உள்ள ஒரு இடத்தில் ஓய்வு நாள் தோறும் நடந்து கொண்டிருந்த ஆரவாரம், ஆர்ப்பரிப்பு, அல்லேலூயா முழக்கங்கள் நிறைந்த ஆவிக்குரிய சபைக்குச் சென்று கொண்டிருந்தேன். அங்கு நடக்கும் காரியங்கள் எல்லாம் எனக்குப் பரவசமாக இருந்தது. குறிப்பாக ஒரு கிறிஸ்தவ சகோதரி தனது முழங்கால்களில் நின்றவாறே தனது இரு கரங்களையும் தனது நெஞ்சில் வைத்து கரம் கூப்பியவர்களாக ஆவியில் நிறைந்து, அந்நிய பாஷைகளைப் பேசி குதித்து குதித்துக் கொண்டே அந்த அறை முழுவதையும் சுற்றி வந்து விடுவார்கள். அவர்கள் ஆண்டவருடைய அன்புக்குள் மிகவும் நெருங்கி ஜீவிப்பவர்கள், கர்த்தர் அவர்களுக்கு விசேஷித்த கிருபை வரங்களைக் கொடுத்திருக்கின்றார் என்று நான் அவர்களைக் குறித்து ஒவ்வொரு தடவையும் உயர்வாக எண்ணிக் கொண்டு வருவேன்.
சில மாதங்கள் கடந்து சென்றிருக்கும். ஒரு நாள் நான் எனது அலுவலக வேலையை முடித்துவிட்டு நண்பகல் ஆகாரத்துக்காக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தேன். நான் வேலை செய்த தேயிலைத் தோட்ட தொழிற்சாலையும், அலுவலகமும் மேட்டின் மேல் இருந்தது. அங்கிருந்து நான் கீழே இறங்கி வந்து பேருந்து செல்லும் ரஸ்தாவை நான் வந்தடைந்தபோது சற்று தொலைவில் சில மனிதர்கள் ஒரு பிரேதத்தை தோளில் சுமந்து கொண்டு அமைதியாகச் செல்லுவதை திடீரென்று நான் கவனித்தேன். அதைக் குறித்து நான் மக்களிடம் விசாரித்தபோது பக்கத்து தேயிலைத் தோட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட ஒரு வாலிபனின் சடலத்தை பிரேத விசாரணைக்காக கோத்தகிரியிலுள்ள அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு செல்லுவதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.
அந்த வாலிபன் யார்? அவனின் அகால மரணத்திற்கு காரணம் என்ன? என்ற விபரத்தை எல்லாம் நான் சில வாரங்களுக்குப் பின்னர் நான் வழக்கமாகச் சென்ற ஆவிக்குரிய சபை ஆராதனைக்குச் சென்றபோது கேள்விப்பட்டேன். அந்த வாலிபன் அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளிகளுக்கு கண்காணியாக இருந்தவன். அங்குள்ள ஒரு பெண்ணோடு எப்படியோ நட்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரின் நெருக்கமான உறவுக்கும் திருமணத்துக்கும் அந்த வாலிபனின் பெற்றோர் வன்மையாக ஆட்சேபம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் வாழ்க்கையில் வெறுப்புற்று தற்கொலை செய்ய தீர்மானித்தார்கள். அந்த வாலிபன் தனிமையாக வாழ்ந்த வீட்டின் மோட்டிலே இரண்டு பலமான கயிறுகள் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தன. இருவரும் மேஜை, அல்லது உயரமான ஒரு நாற்காலியின் உதவியால் கயிறுகளுக்கு முன்பாக வந்து நின்று கொண்டிருந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் குதித்துச் சாக வேண்டும் என்று அவர்கள் நிச்சயத்திருந்தனர். இருவரும் ஒன்றாக ஒரே சமயத்தில் தங்கள் கழுத்தை தூக்கு கயிற்றுக்குள் வைத்துக் கொண்டனர். இப்பொழுது அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் குதிக்க வேண்டும். அந்தப் பெண்ணின் மேல் சற்று அவநம்பிக்கை கொண்ட அந்த வாலிபன் எந்த நிலையிலும் அவள் தப்பி விடாதபடியிருக்க அவளது தலை முடியை நன்கு பிடித்துக் கொண்டான். அவன் முதலில் குதித்தான், ஆனால், அவளோ தன்னைச் சுதாகரித்துக் கஷ்டத்துடன் தப்பிக் கொண்டாள். அந்த நிர்ப்பந்தமான வாலிபன், தான், காதலித்த அந்தப் பெண்ணின் ஒரு குத்து தலை மயிரோடு பிணமாகத் தூக்குக் கயிற்றில் தொங்கினான். அந்தப் பேதை வாலிபனின் பிணத்தைத்தான் மக்கள் சில வாரங்களுக்கு முன்னர் ரஸ்தா வழியாகத் தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்திருக்கின்றனர்.
தன் தலையின் ஒரு குத்து ரோமத்தை மாத்திரம் இழந்து தன் உயிரைப் பாதுகாத்துக் கொண்டு அதே நேரத்தில் ஒரு அருமையான வாலிபனின் உயிரை வேட்டையாடிவிட்ட வீராங்கனை யார் என்று கேட்கின்றீர்களா? ஆம், அவள்தான் அந்நிய பாஷை, அல்லேலூயா ஆரவாரத்துடன் தனது முழங்கால்களிலேயே இரு கரம் கூப்பி ஆவியில் நிரம்பி குதித்து, குதித்து வாரம் தோறும் ஜெப அறையைச் சுற்றி வந்தவள். அந்த வாலிபனுடைய தற்கொலைக்கு முன்னால்தான் அவள் ஜெப வீட்டில் இவ்விதமாக ஆவியில் நிறைந்தவளாக தேவ மக்களுக்கு முன்பாகப் பரிசுத்தவாட்டியாக காணப்பட்டாள். தனது வாழ்வில் அந்தரங்க பாவத்தையும், காம விகாரத்தையும், அசுத்தத்தையும் வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணால் எப்படி இவ்விதமாக ஆரவாரித்து, ஆர்ப்பரிக்க முடிந்தது? அவள் பேசிய அந்நிய பாஷைகள் அவளுக்கு எங்கிருந்து கிடைத்தது? ஆம், இவை எல்லாம் ஒளியின் தூதனுடைய கிரியைகள்! (2 கொரி 11 : 14) அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்! (வெளி 16 : 14)
ஆவிக்குரிய துதி ஆராதனைகள், வாரந்தோறும் ஓய்வு நாட்களில் நடைபெறும் ஆரவார, உணர்ச்சிப் பெருக்கான ஆராதனைகள் பலவற்றிலும் மக்கள் தங்கள் பாவங்களிலும், அசுத்தங்களிலும் வாழ்ந்து கொண்டே அதே நேரத்தில் தாங்கள் பெரிய பரிசுத்தவான்கள் என்று தாவீதைப் போல நடனமாடி தங்களைச் சபை மக்களுக்குக் காண்பிக்கின்றனர். அவைகளிலே அவர்கள் பூரணமாக திருப்தியடைந்தும் விடுகின்றனர். ஆம், தந்திர சாத்தான் அந்த ஆராதனைகளில் கலந்து கொள்ளும் மக்களை அதிலேயே திருப்தியடையப்பண்ணிவிடுகின்றான். அந்த ஆராதனைகளில் கலந்து கொள்ளும் அனைத்து தேவ மக்களையும் நான் குற்றப்படுத்தி குறை சொல்லி இங்கே எழுதவில்லை. தேவனுடைய இருதயத்துக்கேற்ற அவருடைய பரிசுத்த சித்தம் ஒன்றே செய்யும் அவருடைய மெய் அடியார்கள் பலர் அங்கு இல்லாமலில்லை. எனினும், அநேகருடைய வாழ்க்கைகள் ஆண்டவராகிய இயேசுவோடு எந்த ஒரு சம்பந்தமுமில்லாமல், மறுபிறப்பின் நிச்சயமில்லாமல், தனிப்பட்ட வாழ்வில் எந்த ஒரு பரிசுத்தமுமில்லாமல், எந்த ஒரு ஜெப தியானங்களும் இல்லாமல் இருக்கும் அதே நேரத்தில் ஓய்வு நாள் ஆராதனையில் தங்களைப் பெரிய பரிசுத்தவான்களாக தங்கள் ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகள், நடனங்களின் மூலமாக நிரூபித்து விடுகின்றனர். இந்த மாய்மாலமான நடிப்பு ஆராதனைகள் எல்லாம் ஆண்டவருக்குத் தேவை இல்லை என்றும், தேவன் எதிர்பார்ப்பது எல்லாம் நமது கனி நிறைந்த, பிரகாசமான பரிசுத்த பக்தி வாழ்க்கை மாத்திரமே என்பதை இவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி சபைகளிலே தங்களை நீதிமான்கள் என்று காட்டிக் கொள்ளும் மக்களுடைய வாழ்க்கையின் நடபடிகளை வாராந்திர நாட்களில் நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். அநியாய வட்டி வாங்கும் கந்து வட்டிக்காரர்கள் இவர்களில் உண்டு. உடன் வேலை செய்யும் சக ஆசிரியைக்கு விரோதமாக மந்திரவாதியிடம் சென்று செய்வினை செய்து அவன் கொடுத்த கொடிய தீங்கு செய்யும் மையை "அக்கா நல்ல சுகமாக இருக்கின்றீர்களா?" என்ற பாசமுள்ள அன்பின் வார்த்தைகளுடன் தனது கரத்தாலேயே அந்த சகோதரியின் தலையில் தேய்த்துவிடும் பஞ்சமா பாதகிகளான மக்களும் துதி ஆராதனைகளில் பலத்த சத்தத்துடன் கர்த்தரைப் போற்றிப் புகழ்பவர்கள்தான். தனது சொந்த சரீரமான தாலி கட்டிய தன் அன்பு மனைவியை தெரு நாயைப் போல அடித்துக் கொல்லும் மனிதனும் ஓய்வுநாள் ஆராதனையில் சபை நடுவே நடனம்பண்ணிக் கொண்டே சபை மக்களுக்கு பிரசங்கம் பண்ணுகின்றார். கட்டின பாஸ்டர் அம்மாவும், வாலிப மகனும் மலைபோல இருக்கத்தக்க சபையிலுள்ள பெண்ணுடன் விபச்சாரம் வேசித்தனம் செய்து கொண்டே தேவ ஊழியத்தை துணிச்சலாக செய்து ஞாயிறு ஆராதனைகளை துதிகளாலும், ஸ்தோத்திரங்களாலும் நிரப்பிவிடும் பாஸ்டர்கள் உண்டே! எத்தனை எத்தனையோ உண்மை உதாரணங்களை நான் உங்களுக்கு எழுதிக் கொண்டு செல்ல முடியும். இது விசயத்தில் என்னைவிட உங்களுக்கு அதிகமான அனுபவ சம்பவங்கள் தெரியும் என்று நினைக்கின்றேன்.
ஓரிடத்தில் செத்த சபையைச் சேர்ந்த (மிஷனரிகள் தங்கள் இரத்தத்தைச் சிந்தி இரத்த சாட்சிகளாக மரித்து தோற்றுவித்து மெய் தேவ பக்தர்களும், பரிசுத்தவான்களும், நீதிமான்களும் நிறைந்த தென் இந்திய திருச்சபைக்குத் தங்களை பெரிய பரிசுத்தவான்களாக எண்ணிக் கொண்டு, தங்களுடைய சபைதான் பரலோகத்திற்குச் செல்லும் ஆவிக்குரிய மேலான சபை என்ற பரிசேயனின் எண்ணத்தில் வைத்திருக்கும் பெயர்) ஒரு விசுவாசி தனக்கென்று நிலம் வாங்கி வீட்டைக்கட்டினார். அந்த மனிதருடைய நிலத்துக்கருகில் ஆவிக்குரிய மேலான சபையைச் சேர்ந்தவரும், தாங்கள் மாத்திரம்தான் பரலோகம் செல்லுபவர்கள் என்று தங்களை எண்ணிக் கொண்ட ஒருவர் வீடு கட்ட நிலம் வாங்கினார். அந்த மனிதர் தனது வீட்டைக்கட்டுவதற்கு முன்பாக ஒரு நாள் ஒரு பசு மாட்டைக் கொண்டு வந்து ஒரு நாள் இரவு முழுவதும் தனது நிலத்தில் அதைக் கட்டிப்போட்டு அதைச் சாணம், மூத்திரம் பெய்ய வைத்து தனது நிலத்தில் அஸ்திபாரம் போடும் முன்பாக ஒரு சேவல் கோழியை பலியிட்டு, அதின் இரத்தத்தைச் சிந்தி வீட்டைக்கட்டி முடிப்பதை செத்த சபை விசுவாசி மிகுந்த ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருக்கின்றார். இந்து மக்கள் மட்டுமே மேற்கண்ட காரியங்களைச் செய்வார்கள். ஆம், அவர்கள் பசுவை கோ மாதா என்றழைத்து அதின் சாணம், மூத்திரத்தை புனிதமாகக் கருதுகின்றார்கள். அவர்கள்தான் பலியிட்டு வீடுகளையும், கட்டிடங்களையும் கட்டுவார்கள்.
ஆனால் இங்கே ஆவிக்குரிய மேலான பரலோக சபைக்காரர் அந்தக் காரியங்களைச் செய்கின்றார். ஜீவனுள்ள தேவன் அருவெருத்து பகைக்கின்ற இந்தக் காரியங்களை அவர் மிகவும் சாவதானமாகச் செய்துவிட்டு ஓய்வு நாள் ஆராதனைக்குச் சென்று தாவீதைப் போல நடனம் பண்ணிக் கர்த்தரை ஆவியில் ஆராதிக்கின்றார். அந்த திருப்தியில் அவர் நிம்மதியாக வாழ்கின்றார்.
ஆவிக்குரிய மேலான சபையினர் தங்கள் கவர்ச்சியான ஓய்வு நாள் ஆராதனையின் மூலமாக மக்களைத் தங்களண்டை கவர்ந்திழுப்பதைக் கண்ட ஒரு குருவானவர் தனது தேவாலயத்தில் ஓய்வு நாள் ஆராதனை ஒன்றில் ஒரு வாலிபப் பெண்ணை அழைத்து வந்து சபையினர் முன்னிலையில் பரத நாட்டியம் ஆடச்செய்து தனது சபையினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றார். இந்த உண்மைச் சம்பவம் கோவை திருமண்டலத்தில் ஒரு சபையில் நடைபெற்ற காரியமாகும். எத்தனை பயங்கரம் பாருங்கள்! இந்து கடவுளர்களுக்கு முன்னால் அவர்களைப் பிரியப்படுத்த இளம் பெண்கள் தங்கள் உடலை பற்பலவித கோணங்களில் வளைத்து அபிநயங்களுடன் ஆடும் நடனங்களை இங்கே ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக குருவானவர் ஆட வைத்திருக்கின்றார். கர்த்தர் எப்படிப்பட்ட பரிசுத்தமுள்ள தேவன் என்பதையும், பரலோகத்தில், சேராபீன்கள் இரண்டு செட்டைகளால் தங்கள் முகத்தையும், இரண்டு செட்டைகளால் தங்கள் கால்களையும் மூடி இரண்டு செட்டைகளால் பறந்து சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று மிகுந்த பயத்தோடும், நடுக்கத்தோடும் பரிசுத்தத்தில் பயங்கரமானவருக்கு துதி ஏறெடுத்துக் கொண்டிருக்கும்போது (ஏசாயா 6 : 2-3) குருவானவர் தேவனுக்குக் கொடுத்த கனத்தையும், மகிமையையும் நீங்கள் பார்த்தீர்களா! இந்த குருவானவர் மறுபடியும் பிறந்தவரா? மெய் தேவனை தன் வாழ்வில் அறிந்தவரா? இப்படிப்பட்ட அரசரடி திருமறைக் கல்லூரி பயிற்சி பெற்ற கிறிஸ்தற்ற மேய்ப்பர்களால் தேவனுடைய ஆடுகள் சிதறடிக்கப்பட்டு மிகவும் இலகுவாக சாத்தானாம் ஓநாய்களுக்கு இரையாகிவிடுகின்றன.
இந்தக் காரியங்களுக்கெல்லாம் பின்னணியத்தில் இருப்பவன் மனுஷ கொலை பாதகனான தந்திர சாத்தான் என்பதை நாம் திட்டமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தங்களைத் தமது இரத்தக் கிரயத்தால் கொண்ட தங்கள் அன்பின் இரட்சகரோடு எந்த ஒரு ஒட்டும், உறவும் இல்லாமல், செடியும் கொடியுமான ஜெப ஐக்கியமில்லாமல் எந்த ஒரு நிலையிலும் அவர்களை ஆண்டவரோடு நெருங்கவிடாமல், அவருடைய முகத்தைத் தேடவிடாமல் வாரத்தின் நாட்கள் முழுமையிலும் துரத்தி விரட்டிவிட்டு விட்டு ஓய்வு நாளில் மட்டும் ஆராதனை ஸ்தலத்துக்கு வந்து வாத்திய இசைகளின் இன்னிசையில் சில மணி நேரங்கள் கர்த்தரைப் பாடித் துதித்து ஆராதனை செய்துவிட்டு ஆராதனை முடிந்ததும் அப்படியே தனது பாவ நிலையோடு சென்று தங்கள் பழைய பாவங்களைத் தொடர்ந்து செய்து, நரகத்தின் மக்களாக வாழ்ந்து முடிவில் நரகத்துக்கே செல்ல சாத்தான் வகை செய்து வைத்திருக்கின்றான்.
தேவ ஜனமே, உங்களை அழைத்த பரிசுத்தமுள்ள தேவன் உங்களில் கனியை மாத்திரமே எதிர்பார்க்கின்றார். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் மறுபிறப்பின் நிச்சயமான அனுபவமும், தேவனுக்கேற்ற பரிசுத்தமும், அன்பும், உண்மையும், மிகுந்த மனத்தாழ்மையும் இல்லாமல் நீங்கள் எப்படிப் பாடினாலும், ஆடினாலும் அவைகளினால் உங்களுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் நீங்கள் உங்கள் கடந்த கால பாவ அக்கிரமங்களுக்காக நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடு (சங் 51 : 17) அழுது அங்கலாய்த்து உங்கள் பாவங்களை தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும், இரட்சிப்பின் பூரண நிச்சயத்தையும் பெற்றுக் கொண்டீர்களா? அந்த இரட்சிப்பின் காரியம் உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாளையும் நாளிகையையும் நீங்கள் அடிக்கடி நினைவுகூர்ந்து களிகூர்ந்து மகிழ்ந்து வருகின்றீர்களா? அன்று உங்கள் இருதயத்தில் வாசம்பண்ண வந்த தேவ ஆவியானவர் இன்றும் அந்தவிதமாகவே உங்களில் வாசம் பண்ணிக் கொண்டிருப்பதையும், நிமிஷந்தோறும் அவரால் நீங்கள் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருப்பதையும், "நீங்கள் வலது புறமாய்ச் சாயும்போதும், இடது புறமாய்ச் சாயும்போதும் : வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் தேவ ஆவியானவரின் குரலையும் உங்கள் காதுகள் கேட்க முடிகின்றதா? (ஏசாயா 30: 21) உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே தேவன் உங்களை கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொண்டு விட்டார் (எபே 1 : 4) என்ற ஆனந்த நம்பிக்கை உங்களை பிரமிக்கச் செய்வதுடன் அதற்காக நீங்கள் அவருக்கு நன்றி துதி ஏறெடுத்துக் கொண்டே இருக்கின்றீர்களா?
இந்த உலகம் நீங்கள் சொற்ப காலத்துக்கு மட்டும் தங்கிக் கடந்து செல்லும் கூடாரமாகவும், இந்த உலகத்திலுள்ள எந்த ஒரு கவர்ச்சிகளும் உங்களுடைய பரிசுத்த இருதயத்தில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தக் கூடாதவைகளாக இருப்பதை நீங்கள் கவனிக்க முடிகின்றதா? இந்த உலகத்தின் மாயைகளை நீங்கள் பார்க்கும்போது, மாந்தர் தங்களுக்கு வீடு வாசல்களைக் கட்டி, சுகபோகமாக எல்லா வசதி வாய்ப்புகளோடு, இந்த உலகமே சதம் என்று ஆடம்பரமாக வாழுவதை நீங்கள் பார்க்கும் போது சங்கீதக்காரரைப் போல "மாயைப் பாராதபடிக்கு நீர் என் கண்களை விலக்கி உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்" (சங் 119 : 37) என்று உங்கள் இருதயத்தில் ஒரு குட்டி ஜெபத்தை ஏறெடுத்துக் கொண்டு "ஜீவனே, நித்திய ஜீவனே" என்று கூவிக்கொண்டு பரம அழைப்பின் பந்தயப் பொருளை நோக்கி உங்களால் தொடர முடிகின்றதா?
உங்கள் இராக்கால இளைப்பாறுதல்கள் தேவ சமாதானம் நிறைந்ததாக இருக்கின்றதா? "சமாதானத்தோடு படுத்துக் கொண்டு நித்திரை செய்கின்றீர்களா?" (சங் 4 : 8) அல்லது கடந்த கால நாட்களில் நீங்கள் செய்த பாவங்கள், தாலி கட்டிய மற்றொரு மனிதனின் அன்பான மனைவியை துணிகரமாகத் தீண்டிய அக்கிரமங்களின் நினைவுகள் உங்களை வாதித்து, கலங்கப்பண்ணி, அதின் காரணமாக பயங்கரமான சொப்பனங்களை நீங்கள் கண்டு உங்கள் படுக்கையில் நீங்கள் உங்களை அறியாமல் சத்தமிட்டு அலறுவதும், கட்டிலிலிருந்து கீழே விழுவதும் இருக்கின்றதா? அப்படியானால், நீங்கள் உங்கள் மார்பில் அடித்துப் பிரலாபித்து அழுது புலம்பி ஆண்டவரோடும், உங்களால் கறைப்படுத்தப்பட்ட, நஷ்டப்படுத்தப்பட்ட ஆத்துமாக்களோடும் காரியங்களை சரி செய்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாள் காலையிலும் நீங்கள் கண் விழிக்கும்போது காலஞ் சென்ற கேரளத்து பரிசுத்த பக்தன் சாது கொச்சி குஞ்சு அவர்கள் பாடியது போல "காலையில் நான் விழிக்கையில் இன்பமாம் என் நம்பிக்கை - இயேசுவையே கண்டிடுவேன் என்பதாலே ஸ்தோத்திரம்" என்ற பாடல் அடிகளை உங்களால் ஆனந்தமாகப் பாட முடியுமா?
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல உங்கள் ஆத்துமா தேவனை வாஞ்சித்துக் கதறுகின்றதா?" (சங் 42 : 1) நாளின் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் ஆண்டவருடைய பரிசுத்த பாதங்களில் ஜெப நிலையில், ஆண்டவருடைய அன்பையும், தேவனுடைய வார்த்தைகளையும் தியானித்துக் கொண்டே அப்படியே இருக்க முடிகின்றதா? உங்கள் முழங்கால்களில் மோட்சம் ஆரம்பித்துவிட்டதா? உங்களால் கூடுதலான நேரம் தினமும் ஆண்டவரோடு ஜெபத்தில் ஐக்கியம் கொள்ள முடியவில்லை என்றால் உங்கள் இரட்சிப்பு சரியானதொன்றல்ல. தேவ சமூகத்தில் உங்களைத் தாழ்த்தி இருதய தற்பரிசோதனை செய்யுங்கள்.
"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்" (பிலி 2 : 6-7) என்ற தேவ வாக்கின்படி உங்களில் காணப்படும் பற்பலவிதமான பெருமை வகைகள், சுயம், நான் என்ற கர்வம், விக்கிரகாராதனை என்ற கொடிய பொருளாசை, உலக நேசம் எல்லாம் சுட்டெரிக்கப் பட்டுவிட்டனவா?
"உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோசப்படுங்கள்" (லூக்கா 10 : 20) என்ற அருமை இரட்சகரின் வார்த்தைகளை அடிக்கடி எண்ணி தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணிய பேரின்ப (1 கொரி 2 : 9) பரலோக வாழ்வைக் குறித்த ஏக்கத்தால் சோகமடைந்திருக்கின்றீர்களா?
உங்கள் இருதயத்தை தேவ சமூகத்தில் வைத்து சங்கீதக்காரரைப் போல தற்பரிசோதனை செய்யுங்கள் (சங் 139 : 23-24) அன்பின் ஆண்டவரோடுள்ள உங்கள் பரிசுத்த ஐக்கியம் என்றும் நீங்காத செடியும், கொடியுமான (யோ 15 : 4) ஐக்கியமாக இருப்பதாக. அதின் காரணமாக தினமும் அதிகமான நேரத்தை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிட்டு ஏனோக்கைப் போல தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருங்கள் (ஆதி 5 : 24) உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையைப் பிரகாசமாக தேவ பெலத்தால் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படுங்கள் (எபே 3 : 16) |