முன்னுரை


"பந்தயசாலையில் ஓடுகிறவர்கள் எல்லாரும் ஓடுவார்கள், ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்" (1 கொரிந்தியர் 9 : 24)

கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், இரக்கமும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.

ஆண்டவருடைய அருமைப் பிள்ளைகளாகிய உங்களை தேவ எக்காளத்தின் இந்த இதழின் மூலமாக சந்திக்க கிருபையின் சிலாக்கியம் தந்த என் அருமை நேசரை நன்றி நிறைந்த உள்ளத்தோடு துதித்து ஸ்தோத்திரிக்கின்றேன். நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரங்களில் இருக்கின்றது (சங் 31 : 15) "நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்" (1 கொரி 15 : 10) என்ற தேவனுடைய வார்த்தையின்படி நாம் இம்மட்டாக இந்த உலகத்தில் உயிர் வாழ்வது கர்த்தாவின் அநாதி கிருபை மட்டுமே.

இந்த தலையங்கச் செய்தியை ஆண்டுதோறும் நான் தேவ பெலத்தையும், அவருடைய சுத்த கிருபையையும் அஸ்திபாரமாகக் கொண்டு மேற்கொள்ளும் எனது லெந்து கால உபவாச ஜெப நாட்களில் உங்களுக்கு எழுதுவதில் மிகுந்த சந்தோசம் அடைகின்றேன். பொதுவாக தேவ எக்காள செய்திகள் யாவுமே எனது முழங்கால்களில் தேவனுடைய ஆலோசனையைக் கேட்டு எழுதப்படும் செய்திகளாகும். ஒருக்காலும் மேஜையின் அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்து யோசித்து நான் செய்திகளை எழுதுவதில்லை. அதைப்போலவே தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தையும் நான் எப்பொழுதும் எனது முழங்கால்களில் நின்றே இது வரை வாசித்து வந்திருக்கிறேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

தேவ எக்காளம் பத்திரிக்கை உங்கள் ஆவிக்குரிய வாழ்வுக்கு சொல்லொண்ணா பரலோக ஆசீர்வாதங்களை கொண்டு வந்தது என்றால், அதைத் திரும்ப திரும்ப வாசிக்க உங்கள் உள்ளத்தைத் தூண்டிவிடுகின்றது என்றால் அதின் இரகசியம் அது தேவ சமூகத்தில் முழங்கால்களில் நின்று தயாரிக்கப்படுவதாகும்.

நம் அருமை ஆண்டவரிடத்தில் நான் கெஞ்சி மன்றாடி கேட்கும் ஒரு உள்ளமுருகிய மன்றாட்டு என்னவெனில் "ஆண்டவரே, எந்த ஒரு நிலையிலும் உமது சமூகத்தில் மேற்கொள்ளும் எனது உபவாச ஜெபங்களுக்கு எனது சரீர நோய் பிணி ஒரு தடையாக அமைந்து அந்த உபவாசம் எந்த ஒரு நிலையிலும் தடைபட்டுப் போய்விடக் கூடாது. உபவாச வாழ்வு இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது" என்பதுதான்.

இந்த உபவாச ஜெப வாழ்க்கைதான் தேவ எக்காள ஊழியத்தை கடந்த 40 ஆண்டு காலமாக அநேகருக்கு ஆசீர்வாதமாக்கிக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த உபவாசத்தின் மாட்சியை விவரிக்க வார்த்தைகளில்லை. கடந்த கால நாட்களில் காசிப்பட்டணத்திலே எனக்கு நேரிட்ட மிகவும் பலத்த பாவச் சோதனையில் நான் சுத்தப் பொன்னாக வெளி வந்ததும் இந்த உபவாச ஜெபமேதான். அப்பொழுது நான் எனது வடமாநில தேவ ஊழியத்திற்காக ஆயத்தமானபோது ஆண்டவர் என்னை ஒரு மாத காலம் உபவாசம் எடுத்து ஜெபிக்க என் உள்ளத்தை மிகவும் பலமாக ஏவினார். அவருடைய வார்த்தைகளுக்கு நான் முழுமையாக ஒப்புக் கொடுத்து அவருடைய கிருபையால் நான் மேற்கொண்ட எனது ஒரு மாத கால உபவாச ஜெபம் என்னைப் பாவத்தில் வீழ்த்த வந்த இளம் பெண்ணை கண்களில் கண்ணீர் சிந்தி அழுது கொண்டே என் அறையிலிருந்து வெளியே செல்ல வைத்தது. அது மட்டுமல்ல, அந்தப் பெண் என் அருகிலிருந்த நேரம் முழுவதும் "தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?" (ஆதி 39 : 9) என்ற கர்த்தருடைய வசனம் என் உள்ளத்திலிருந்து இடைவெளியின்றி திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது. விபச்சாரப் பாவம் தேவ சமூகத்தில் எத்தனை கொடியது (நீதி 6 : 32) என்றும், பரிசுத்த தேவன் அதை எவ்வண்ணமாக அரோசிக்கின்றார் என்பதையும் நாம் இதன் மூலமாக நிச்சயமாகக் கண்டு கொள்ளலாம்.

சரீரத்தில் கொடிய சர்க்கரை நோய் இருந்தபோதினும், உங்கள் சகோதரனாகிய நான் ஏன் இந்த நீண்ட உபவாச ஜெபங்களை மேற்கொள்ளுகின்றேன்? கர்த்தர் என்னுடைய கரங்களில் கொடுத்துள்ள அவரது பரிசுத்த ஊழியங்களின் ஆசீர்வதங்களுக்காக உபவாசங்கள் எடுப்பது ஒரு புறம் இருந்தாலும், எனது உள்ளத்தின் அடித்தளத்தின் ஆவல் என்னவெனில் "மறறவர்களுக்குப்பிரசங்கம் பண்ணுகிற நான் தானே ஆகாதவனாகப் போய்விடக்கூடாது" (1 கொரி 9 : 27) என்பதுதான். நீங்கள் என்னை உண்மையும், உத்தமமுமான தேவ ஊழியன் என்று புகழ்ந்து பேசலாம். எனது கிரீடத்தில் நிறைய முத்துக்கள் உள்ளன என்றும் நான் ஆண்டவருடைய செல்லப் பிள்ளை என்றும் நீங்கள் பலவாறாக என்னை வாழ்த்தலாம். ஆனால், நான் அந்தப் புகழ்ச்சியை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். தேவ சமூகத்தில் நான் எனது நிலையை நொறுங்குண்ட இருதயத்தோடு ஆராய்ந்து பார்க்கின்றேன். "தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" (லூக்கா 18 : 13) என்று தன் மார்பில் அடித்து புலம்பிய அந்த ஆயக்காரனுடைய தகுதியும் "ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்" (லூக்கா 23 : 43) என்ற அந்த சிலுவைக் கள்ளனின் தகுதி மட்டுமே என்னில் உண்டு என்பதை கண்ணீரோடு உணர்ந்து நான் என்னைத் தரை மட்டாக முகம் குப்புற விழுந்து தாழ்த்துகின்றேன். "நீர் என்னைப் பாதுகாப்பாக உம்முடைய நித்திய விண் வீட்டிற்கு கொண்டு போய்ச் சேரும்" என்று கதறுகின்றேன்.

நம்முடைய சரீர ஒடுக்கத்திற்கும், நாம் பாதுகாப்பாக ஆண்டவர் தமது ஜனத்திற்காக ஆயத்தம்பண்ணி வைத்துள்ள நித்திய இளைப்பாறுதலுக்குள் (எபி 4 : 9) பிரவேசிப்பதற்கும் உபவாசம் இன்றியமையாததாகும்.

 

எல்லாரும் பரலோகம் செல்ல முடியாது

தேவனுடைய பரம கானானுக்குள் கிறிஸ்தவர்கள் யாவரும் பிரவேசித்துவிட முடியாது. அவர்கள் அந்த மாட்சிமிகும் மோட்ச நகருக்குள் எப்படியாவது பிரவேசித்து விடலாம் என்று ஆசைப்பட்டாலும், முயற்சித்தாலும் அவர்களால் கூடாமற் போகும். "ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்" (மத்தேயு 7 : 14) என்றும் "இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற் போகும்" (லூக்கா 13 : 24) என்றும் "அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்" (மத் 20 : 16) என்றும் அன்பின் ஆண்டவர் திட்டமும் தெளிவுமாகக் கூறிவிட்டார். "பந்தயச் சாலையில் ஓடுகிறவர்கள் எல்லாரும் ஓடுவார்கள், ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவான்" (1 கொரி 9 : 24) என்ற தேவ வாக்கின்படி கொஞ்ச பேர் மட்டுமே மோட்ச பாக்கியத்தைக் கண்டடைவார்கள்.

ஆண்டவர் குறிப்பிடும் "சிலரில்" நாமும் சேர்ந்து கொள்ள வேண்டுமானால் அதற்கான கிரயமும் பெரியதாகும். நேரத்திற்கு நேரம் உணவருந்தி, சரீரத்திற்கு ஒரு குறைவும் வராதபடி கண்ணும் கருத்துமாக அதைப் பேணி பாதுகாத்து அதற்கு ஒரு காப்பியைக் கூட வேண்டாமென்று விலக்காமல் அதின் ஆசை ஆவல்களை எல்லாம் அப்படியே நிறைவேற்றி, நன்றாக உண்டு உறங்கி சுகபோகமாக வாழ்ந்து கொண்டு அதே சமயம் நான் இங்கு கண்களை மூடினால் பரலோகில் கண் திறப்பேன் என்று சொல்லுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகும்.

நமது ஆவிக்குரிய வாழ்வின் இந்த ஜீவ நாடியான உபவாச ஜெபம் இன்று கிறிஸ்தவ மக்களால் புறக்கணிக்கப்பட்டிருப்பதுடன் சாத்தானால் அது கேலிக்கூத்தாகவும் ஆக்கிவிடப்பட்டிருக்கின்றது. பொதுவான உபவாச ஜெபங்கள் நேரத்திற்கு நேரம் வழக்கமாக உட்கொள்ளும் ஆகாரத்திற்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் ஒழுங்கு செய்யப்படுகின்றது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை உபவாசம் என்று அறிவிக்கப்பட்டு உபவாசம் நடைபெறுகின்றது. இதில் காலை மற்றும் நண்பகல் ஆகாரங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதபடி தந்திர சாத்தான் கவனித்துக் கொள்ளுகின்றான். புசியாமலும், குடியாமலும் இருக்கும் உபவாச ஜெபமே மிகுந்த தேவ ஆசீர்வாதங்களை நமக்குக் கொண்டு வரும்.

தேவ எக்காளத்தை கருத்தோடு வாசிக்கும் தேவ பிள்ளைகள் சிலர் கர்த்தருடைய பெலத்தைக் கொண்டு இப்பொழுது நீண்ட உபவாச ஜெபங்களை மேற் கொள்ளுகின்றீர்கள். "நீங்களே, உங்கள் வியாதி பெலவீனங்கள் மத்தியில் வயது மூப்பின் மத்தியில் உபவாசம் இருக்கும்போது நாங்கள் எங்கள் இளமைகளில் நீண்ட உபவாசங்கள் இருக்க தடை ஒன்றுமில்லை" என்று கூறி உபவாசம் இருக்கின்றீர்கள். கர்த்தரில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதற்கான ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுக் கொள்ளுவதையும் அறிந்து அன்பின் கர்த்தருக்கு துதி ஏறெடுக்கின்றேன்.

 

தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு
ஆயத்தம் பண்ணினவைகள்

"தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளை கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை" (1 கொரி 2 : 9) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது. வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் படைத்த தேவன் மகா ஞானமுள்ள தேவன். அவருடைய படைப்புகளிலெல்லாம் அவருடைய எல்லையற்ற ஞானம் கரைபுரண்டு ஓடுவதை நாம் பிரமிப்புடன் காண்கின்றோம். நாம் வாழ்கின்ற கால் பகுதி பூமியானது முக்கால் பகுதி சமுத்திர ஜலங்களால் சூழப்பட்டிருந்தபோதினும் அது நம்மை சேதப்படுத்தாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு கட்டளையிட்டு "இம்மட்டும் வா, மிஞ்சி வராதே, உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது" என்று தேவன் அவைகளை நிலைவரப்படுத்தியிருக்கின்றார்.

உலகத்தின் அழகு அழகான நாடுகள், அந்த நாடுகளின் வானளாவிய உயர்ந்த பனி மலைகள், பசுமைப் பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள், நீர் வீழ்ச்சிகள், சூரியனுடைய ஒளியை பூமியின் மேல் விழ ஒட்டாமல் தடுத்து நிறுத்தி பின்னிப் பிணைந்து நிற்கும் அடர்ந்த கருங்கானகங்கள், பூங்காவனங்கள், பழத் தோட்டங்கள், மாபெரும் பாலை வனங்கள், பாடும் வண்ணப் பறவைகள், விலங்கினங்கள், பிரமாண்டமான சமுத்திரங்கள், அவைகளில் வாழ்கின்ற திரள் திரளான பெரிதும், சிறிதுமான மச்சங்கள், பிற ஆச்சரியமான உயிரினங்கள்! ஆ, தேவனுடைய அளவற்ற ஞானத்தை என்ன வென்று சொல்லுவது! யாரோ ஒரு ஞானவான் சொன்னது போல ஆண்டவருடைய எண்ணிக்கைக்கடங்காத திரள் திரளான படைப்பில் ஒரு ஜீவராசியைக் கூட முழுமையாக ஆராய்ந்து இந்தப் படைப்பின் காரியம் இவ்வளவுதான் என்று உறுதியிட்டுச் சொல்ல மண்ணான மனிதன் முற்றும் இயலாதவனாக இருக்கின்றான் என்றார்! எத்தனை உண்மையான வார்த்தை!!

இராக் காலங்களில் உங்கள் கண்களை வானத்திற்கு நேராக ஏறெடுத்துப் பாருங்கள். வானமண்டலங்களில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன? நமக்கு வெகு அருகாமையிலுள்ள நட்சத்திரம் 4 புள்ளி 24 ஒளி ஆண்டுகள் (அதவாவது நாலே கால் ஒளி ஆண்டுகள்) தூரத்தில் இருக்கின்றதாம். ஒரு ஒளி ஆண்டு என்பது 5,873,327,712,000 மைல்கள் தூரமாகும். இதை நீங்கள் 4.24 ஆண்டுகளால் பெருக்கினால் வரும் மாபெரும் எண்ணிக்கையான 24,902,909,498,880 மைல்கள் ஆகும். பூமிக்கு வெகு அருகாமையிலுள்ள நட்சத்திரத்தின் தூரம் மேலே குறிப்பிட்ட மைல்களாகும். ஆனால் பூமிக்கு வெகு தொலைவில், கடைசி அற்றத்தில் இருக்கும் நட்சத்திரத்தின் தூரம் 13,230,000,000 ஒளி ஆண்டுகளாகும். ஆம், பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும் நட்சத்தின் தூரம் 77,704,125,629,760,000,000,000 மைல்களாகும். நம்முடைய தலைகள் சுழல்கின்றது அல்லவா?

கோடானு கோடி நட்சத்திரங்கள் அடங்கிய நட்சத்திரக் கொத்து Milky Way Galaxy என்று அழைக்கப்படுகின்றது. நமக்கு அருகிலுள்ள நமது சூரிய மண்டலம் (Solar System) எல்லாம் அடங்கிய நட்சத்திரக் கொத்தின் குறுக்களவு தூரம் 70,000 ஒளி ஆண்டுகள் என்று சொல்லப்படுகின்றது. அதாவது ஒரு மனிதன் தனது வாழ் நாட் காலம் முழுவதும் (அதாவது 70 ஆண்டுகள்) நொடிக்கு 1,86,000 மைல்கள் வீதம் பிரயாணம் செய்யும் பட்சத்தில் அவன் 1000 வாழ்வு கால நாட்கள் காலத்தில் நமக்கு அருகாமையிலுள்ள நட்சத்திரக் கொத்தின் குறுக்கு விட்டத்தை கடக்க முடியுமாம். 125 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடியாகும்) முதல் 230 பில்லியன் வரை நட்சத்திரக் கொத்துகள் அகண்ட விண்வெளியில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதெல்லாம் மனிதனுடைய அற்ப அறிவின் முழுமையற்ற ஆராய்ச்சியின் வெறும் கணிப்பு மாத்திரமே. வான மண்டலங்களில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை அவைகளின் படைப்பாளியான சர்வ வல்ல தேவன் ஒருவருக்கே தெரியும். அவர் சிருஷ்டித்த அத்தனை நட்சத்திரங்களையும் அவர் ஒன்று கூட விடாமல் எண்ணி, அவைகள் அனைத்தையும் அவர் பெயர் சொல்லி அழைக்கின்றார் (சங் 147 : 4)

இப்படியான சர்வ வல்ல தேவன் தம்மில் அன்புகூருகிற மக்களுக்காக உலகம் உண்டானது முதல் ஆயத்தம் செய்து வைத்துள்ள (மத் 25 : 34) மாட்சிமையான காரியங்களை மனுஷீக ஞானத்தால் ஆராய்ந்து அறிய முடியாது. 70 ஆண்டுகள் என்று ஆயுட் காலம் வரையரை செய்யப்பட்டுள்ள (சங் 90 : 10) தாம் படைத்த மனிதன் கண்டு ஆனந்திப்பதற்கு உலகத்தில் எத்தனை, எத்தனையோ கண்கொள்ளாக் காட்சிகளை எல்லாம் படைத்து வைத்துள்ள தேவன், முடிவில்லாத யுகாயுகங்களாக, நீடுழி காலமாக நிலைத்திருக்கும் நித்தியத்தில் தமது பரிசுத்த ஜனம் தம்மோடு கூட ஆனந்தித்து மகிழ எத்தனையான பரலோக பாக்கியங்களை எல்லாம் ஆயத்தம் செய்து வைத்திருப்பார் என்பதை நம்மால் யூகிக்க முடியாது. நாம் அங்கு சென்ற பின்னர்தான் நமது கண்களால் அதைக் காண்போம். கர்த்தரில் ஆரவாரிப்போம். அல்லேலூயா.

 

இரட்சிப்பு முற்றும் இலவசம், ஆனால், நித்திய
ஜீவனுக்கு கிரயம் செலுத்த வேண்டும்.

"கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபே 2 : 8, 9) ஆம், இரட்சிப்பு முற்றும் இலவசம்தான். ஆனால், நித்திய ஜீவனுக்கு நாம் கிரயம் செலுத்தியாக வேண்டும். நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளும்படியாக ஆண்டவரண்டை வந்த அந்த மிகுந்த ஆஸ்திக்காரனாகிய மனிதன் அதைப் பெற்றுக் கொள்ளாமல் வெறுமையாகத் துக்கத்துடன் திரும்புகின்றான். காரணம், அதற்காக அவன் செலுத்த வேண்டிய விலைக் கிரயம் மிகவும் பெரியதாக இருந்தது. முதலாவது அவன் தனக்குள்ள அனைத்து ஆஸ்திகளையும் விற்று தரித்திரருக்கு கொடுக்க வேண்டும். இரண்டாவது, பாடுகள், கண்ணீர்கள், கிலேசங்கள் நிறைந்த சிலுவையை எடுத்துக் கொண்டு ஆண்டவரைப் பின்பற்ற வேண்டும் (மாற்கு 10 : 17 - 21) எத்தனை பெரிய விலைக் கிரயம் பார்த்தீர்களா? இந்த விலைக் கிரயத்தை யாவராலும் செலுத்த இயலாது. இதைப் போராடியே நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நம் ஆண்டவர் விரும்புகின்றார். "யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது, பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்ளுகிறார்கள்" (மத் 11 : 12) "மோட்ச பிரயாணம்" என்ற பரிசுத்த பிரபந்தத்தில் வியாக்கினி முனிவர் வீட்டில் கிறிஸ்தியான் காணும் ஒரு காட்சியை ஜாண் பன்னியன் கீழ்க்கண்டவாறு எழுதுகின்றார்:-

"அப்பால் நான் என் சொப்பனத்தில், வியாக்கியானி முனிவர் கிறிஸ்தியான் கையைப் பிடித்துக் கொண்டு, இன்பமான தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மகா விநோதமும், உன்னதமுமான ஒரு ராஜ அரண்மனையை (அரண்மனை:- இது மோட்சத்தைக் குறிக்கிறது. அதின் மேலுள்ள பொதுவான நாட்டம், அதனுள் பிரவேசிக்கப் போதுமானதல்ல. அதனுள் சேர ஆசைப்பட்டால் விசுவாசத்தின் நல்ல போராட்டம் பண்ண ஆசையாய் இருக்க வேண்டும். "ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு மோட்சம்" என்றும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறது) அவனுக்குக் காண்பிக்கக் கண்டேன். அதைப் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும். அதைக் கண்டவுடன் கிறிஸ்தியானுக்கு உண்டான ஆனந்தத்தை என்ன சொல்லுவேன்! அந்த அரண்மனையின் மேல் மெத்தையில் பொற்சரிகை உடுப்புகளைத் தரித்த சிலர் உலாவிக் கொண்டிருக்கிறதையும் அவன் கண்டான்.

அப்போது கிறிஸ்தியான் இதற்குள்ளே நாம் போகலாமா? என்று கேட்டான். வியாக்கியானி அவனை வழிநடத்தி அந்த மாளிகையின் வாசல் மட்டும் கொண்டு போனார். இதோ, அந்த வாசலருகே எண்ணிறந்த ஜனங்கள் ஆசையோடு உள்ளே பிரவேசிக்க காத்திருந்தும், போகத் துணியாமல் நின்று கொண்டிருந்தார்கள். கதவுக்குச் சற்று அப்பால் உட்பிரவேசிக்க விரும்புகிறவர்களின் நாமங்களை எழுதும்படியாக, மேஜை போட்டு கடுதாசி வைத்துக் கொண்டு பேனாவும் கையுமாய் ஒருவர் உட்கார்ந்திருந்தார். மேலும் அந்த வாசலின் நிலையருகே, ஒருவரையும் உள்ளே விடாதபடிக்கும், துணிந்து போகிறவர்களைத் தங்களால் ஆனமட்டும் வதைத்து வேதனைப் படுத்தும்படிக்கும் அநேகர் ஆயுதம் தரித்துக் கொண்டு நிற்கிறதையும் கிறிஸ்தியான் கண்டான். இது கிறிஸ்தியானுக்கு கலக்கத்தையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது. வாசலண்டை போனவர்கள் ஒவ்வொருவராய் விலகி, மெதுவாய் பின் வாங்கித் திரும்பினார்கள். ஆயுதந்தரித்து நின்ற சேவகரைக் கண்ட பலர் பயந்து, விலகிப் பின்வாங்கினாலும், கடைசியாகப் புஷ்டியுள்ள ஒரு மனுஷன் பேர் எழுத உட்கார்ந்திருக்கிறவருடைய மேஜையண்டை போய் என் பேரை எழுதும் ஐயா என்று கேட்டதைக் கிறிஸ்தியான் கண்டான். அப்படியே அவன் பேர் எழுதப்பட்டது. உடனே அவன் தன் சிரசின் மேல் ஒரு தலைச் சீராவைத் தரித்து, பட்டயத்தையும் உருவிக் கொண்டு, ஆயுதபாணிகளாய் நின்ற சேவகரை நெருக்கி, விலக்கிக் கொண்டு துணிந்து உள்ளே பிரவேசித்தான். அந்தச் சேவகரோ தங்கள் பலத்தோடுங்கூடி அவனைப் புறம்பாக்கும்படி முயன்று அவன் மேல் விழுந்தார்கள். அவனோ அணுவளவும் அஞ்சாமலும், தைரியத்தை விடாமலும் தன் வாளை இருபுறமும் வீசி, எதிர்பட்டவர்களைக் கண்ட துண்டமும் சின்னாபின்னமும் ஆக்கி தனக்கு தடையில்லாத வழியை உண்டாக்கிக் கொண்டு அரண்மனைக்குள் பிரவேசித்ததை கிறிஸ்தியான் கண்டான். அவன் உள்ளே சேரவே, அரண்மனைக்குள் இருந்தவர்களும், அதன் மெத்தையின்மேல் உலாவிக் கொண்டிருந்தவர்களும் ஒன்றாய்க் கூடி:-

வா, வா உள்ளே
வா, வா அப்பா
நித்திய கனம் சம்பாதித்தாய்!

என்று பாடும் இன்ப கீதம் எக்காளம் போல தொனித்தது. அவன் உள்ளே போனான். அவர்கள் அணிந்திருந்தது போல பொற்சரிகையுள்ள ஒரு உடுப்பு இவனுக்கும் உடுத்தப்பட்டது. கிறிஸ்தியான் இதைக் கண்டவுடனே, புன்னகை பூத்தவனாக இதன் பொருள் எனக்கு நிச்சயமாய்த் தெரியும் என்று நினைக்கின்றேன் என்றான்."

 

நித்திய ஜீவனை சுதந்தரிக்க வனாந்திர வாழ்வை
தெரிந்து கொண்ட தேவ மக்கள்

ஆண்டவர், தமது பிள்ளைகளுக்காக முடிவில்லாத நித்திய காலத்திற்காக பரலோகில் ஆயத்தம் செய்து வைத்துள்ள சொல்லொண்ணா பேரானந்த பாக்கியங்களை எந்த விதத்திலும் தப்பவிடாமல் சுதந்தரித்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுக்கடங்கா வாஞ்சையின் காரணமாக மூன்றாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்களில் ஒரு கூட்டம் பேர் எந்த ஒரு கறை திரையுமின்றி முற்றிலும் பரிசுத்தமாக வாழும் பொருட்டாக தங்கள் இனஜனபெந்துக்கள், உற்றார் உறவினர் யாவரையும் விட்டு விட்டு எகிப்தின் அவாந்தரமான பாலைவனப் பகுதிக்குள் சென்று தங்களை ஒடுக்கி, இரவும் பகலும் கர்த்தருடைய வருகைக்காக ஆவலோடு காத்திருந்தார்கள். அவர்கள், பசி பட்டினி தாகத்தோடு போதுமான இளைப்பாறுதலின்றி எப்பொழுதும் ஜெபம் பண்ணி மிகுந்த விழிப்பாக இருந்தார்கள்.

அந்த அவாந்திரமான பாலைவனத்திலும் சாத்தான் அவர்களை சும்மா விட்டு வைக்கவில்லை. அங்கு சென்றவர்களில் அன்றோனி என்ற கிறிஸ்தவ வாலிப துறவியை சாத்தானாம் பிசாசு அழகான ஒரு வாலிப பெண்ணாக வந்து சோதித்ததையும், அதற்கு இணங்காத அவரை சில பிசாசுகள் ஒன்று சேர்ந்து ஒரு இரவு முழுவதும் அவரை தடிகளால் அடித்தும், அவரது தலை முடியை பிடித்து தரையில் போட்டு இழுத்துக் கொண்டும் சென்று வெகு பாடுகள்படுத்தின.

அந்த சோதனைகள் பாடுகள் மத்தியில் அன்பின் தேவனும் அவரது அடியார்களை கைவிடாமல் பாதுகாத்து வழிநடத்தினார். தீப்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்த பால் என்ற துறவி அந்த பாலைவனத்தின் ஓரிடத்திலுள்ள குகை ஒன்றில் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்தார். ஒரு சரித்திரம் அவரைக் குறித்து இவ்விதமாகச் சொல்லுகின்றது "அந்த குகைக்கு அருகாமையிலுள்ள ஒரு பேரீச்சை மரம் அவருக்கு 20 வருட காலங்கள் பேரீந்து பழங்கள் கொடுத்தும், அவர் உடுத்திக் கொள்ள பேரீந்து பாய் கொடுத்தும் வந்ததாம். அந்த குகைக்கு அருகாமையிலுள்ள ஒரு நீரோடையின் தண்ணீரால் அவர் தனது தாகத்தை தீர்த்துக் கொண்டாராம். தினமும் ஒரு காகம் பறந்து வந்து அரை ரொட்டியை கொடுத்து அவரை போஷித்ததாம். 90 ஆண்டு காலம் பால் அந்த குகையில் வாழ்ந்து இரவும் பகலும் தன் தேவனைத் துதித்துத் தியானித்து வந்தாராம்.

இந்த நிலையில் முதலில் குறிப்பிட்ட அன்றோனி என்ற துறவி பரிசுத்தவான் பாலைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரை வனாந்திரத்தில் நீண்ட காலமாகத் தேடி இறுதியில் அவரை அவரது குகையில் கண்டு பிடித்தார். அவர்கள் ஒருவர் மற்றொருவருடைய பெயர்களை ஆவியானவருடைய வெளிப்படுத்துதலால் புரிந்து கொண்டனர். அன்றோனி, பாலை சந்திக்கும்போது பாலுடைய வயது 113 ஆக இருந்தது. அன்றோனி, பாலுடைய குகைக்கு வந்தபோது ஒவ்வொரு நாளும் அரை ரொட்டி மட்டும் கொண்டு வரும் காகம் அன்று முதல் முழு ரொட்டியை எடுத்து வந்தது. எலும்பும், தோலுமாக காணப்பட்ட பரிசுத்த துறவி பால் தனது மரணத்தை முன் அறிந்து அன்றோனியை தனது சரீரத்தை மூடிப் புதைக்க ஒரு துணியைப் போய்க் கொண்டு வர கேட்டுக் கொண்டார். அன்றோனி என்ற அந்த துறவி போய்த் திரும்புவதற்குள்ளாகவே பால் மரித்துவிட்டார். அன்றோனி குகைக்கு நேராக வந்து கொண்டிருந்தபோது பாலுடைய ஆவி பரலோகத்திற்குச் சென்று கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தார். தேவ தூதர்களும், அப்போஸ்தலர்களும், தீர்க்கத்தரிசிகளும் அவரை புடை சூழ ஆண்டவருடைய பேரின்ப வீட்டுக்கு அழைத்துச் செல்லுவதை அன்றோனி கண்டார்.

அந்த வேளையில் தானே இரண்டு சிங்கங்கள் அங்கே காணப்பட்டு பாலுடைய சரீரத்தை புதைப்பதற்கான ஒரு பெரிய குழியை தோண்டிவிட்டன. அன்றோனி தனது ஜீவ காலம் முழுவதும் பால் அணிந்திருந்த பேரீந்து ஓலைகளால் பின்னப்பட்ட பாய் ஆடை ஒன்றை தன் வசம் வைத்திருந்து ஆண்டுக்கு 2 தடவைகள் அதாவது ஈஸ்டர் மற்றும் பெந்தேகோஸ்தே நாட்களில் அதை அணிந்து உள்ளம் பூரித்தாராம். பாலும், அன்றோனியும் வனாந்திரத்தில் உறையாடிக் கொண்டிருப்பதை சித்திரக்காரர் வரைந்திருக்கும் காட்சியை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பதுடன், எகிப்து வனாந்திரத்துக்குச் சென்று தங்களை பரிசுத்தமாகக் காத்துக் கொள்ள தேவ மக்கள் வாழ்ந்த மலைகளிலுள்ள பலகணி துவாரம் போன்ற குடியிருப்பு அமைப்புகளையும் நீங்கள் காணலாம்.

இப்படி எல்லாம் தேவ மக்கள் அந்த நாட்களில் வனாந்திரங்களுக்கும், கன்மலைகளுக்கும், குகைகளுக்கும் ஓடிச்சென்று தங்களை ஒடுக்கி வாழ்ந்து எப்படியாகிலும் ஆண்டவர் தமது ஜனத்திற்காக ஆயத்தம் செய்து வைத்துள்ள நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள வேண்டும் என்றும் தேவனற்ற நித்தியமான எரி மலை குழம்பான நரக அக்கினி வேதனையை தங்களால் ஒருக்காலும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் கண்ணீரோடு உணர்ந்து அனலிலிட்ட புழுவாகத் துடித்துப் போராடினார்கள். நாம் அவர்களைப்போல வனாந்திரங்களுக்கு ஓட அவசியம் இல்லாவிட்டாலும் "பாவத்திற்கு விரோதமாய் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நாம் எதிர்த்து நிற்க" (எபி 12 : 4) தேவன் நம்மை கேட்கின்றார். நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்தைக் கண்ட மனிதன் மறைத்து அதைப் பற்றிய சந்தோசத்தால் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான் (மத் 13 : 44) என்ற ஆண்டவருடைய வார்த்தையின்படி நித்திய ஜீவனை சுதந்தரிக்க நமக்கு அருமையாகத் தெரிகின்ற உலகக் காரியங்கள் எல்லாவற்றையும் நாம் விற்றே ஆக வேண்டும். அது ஒருக்கால் நமது மனதும் மாம்சமும் விரும்பும் நல்ல ஆகாரங்களாக இருக்கலாம். நேரத்திற்கு நேரம் உடுத்தி மகிழும் அழகான வஸ்திரங்களாகவோ அல்லது தங்க நகை ஆபரணங்களாகவோ அல்லது சரீர இன்பங்களாகவோ அது இருக்கலாம். நம்மை நமது கட்டிலோடு இறுகக் கட்டி வைத்திருக்கும் நமது நள்ளிரவு, மற்றும் அதிகாலை நேர அருமையான தூக்கங்களாக இருக்கலாம். தேவனுடைய உள்ளம் விரும்பாத உலக நட்புறவுகளாக அது இருக்கலாம். அழகு, கல்வி, மாதந்தோறும் ஏராளமான சம்பளத்தை அள்ளிக் கொடுக்கும் உத்தியோகம், நமது உடமைகள், ஐசுவரியம் போன்றவைகளிலிருந்து உண்டாகக் கூடிய பெருமை வகைகளாக அது இருக்கலாம். நித்திய ஜீவனை நாம் சுதந்தரிக்கவிடாமல் நம்மை தடுத்து நிறுத்தக்கூடியதனைத்தையும் நாம் நம்மைவிட்டு அப்புறப்படுத்தியே ஆக வேண்டும். நித்திய ஜீவனை நாம் சுதந்தரிக்க நல்ல விலைக்கிரயம் கொடுத்தே ஆகவேண்டும்.

 

இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்

"வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டு போய் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமூகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்கு செவி கொடு, அவரைக் கோபப்படுத்தாதே, உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை, என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு......." (யாத் 23 : 20-22)

P.T.சாந்த பிள்ளை என்ற தேவ பக்தன் தம்முடைய புத்தகம் ஒன்றில் நம்முடைய ஆண்டவரை "பயிற்சியாளர்களின் எஜமானர்" (Master Trainer) என்று எழுதுகின்றார். எத்தனை உண்மையான வார்த்தைகள்! தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவி சுத்திகரித்து தம்முடைய சொந்தப் பிள்ளைகளாகத் தெரிந்து கொண்ட தம்முடைய அடியார்களை அன்பின் ஆண்டவர் இந்த உலகத்தில் பரலோக வாழ்வுக்காக பயிற்சி கொடுக்கின்றார். இந்த உலகத்தின் ஆசாபாசங்கள், உலக நேசங்கள், மாயாபுரிச் சந்தைச் சரக்குகளின் கவர்ச்சிகள் யாவினின்றும் தமது தொடர்ச்சியான பயிற்சிகளினால் அவர்களை அற்புதம் அவசியமாக விடுவித்து பரலோக வாழ்வினைக் குறித்த நாட்டத்தை அவர்கள் உள்ளங்களில் கொழுந்து விட்டு எரியச் செய்கின்றார்.

யார், யார் ஆண்டவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்களோ அந்த மக்களை தமது பயிற்சிகளில் இன்னும் மேலான நிலைக்கு அவர் அழைத்துக் கொண்டு செல்லுவார். கீழ்ப்படியாதவர்களை ஒரு சில எச்சரிப்புகளைக் கொடுத்தபின்னர் அவர் என்றுமாக கைவிட்டு விடுவார். தம்முடைய ஜனத்தை ஆள்கின்ற முதல் அரசனாக தாம் தெரிந்து கொண்ட சவுலுக்கு இரண்டு தருணங்களைக் கொடுத்து அதன் பின்னர் அவனை புறக்கணித்து தள்ளிவிடுவதை நாம் கவனிக்கின்றோம். அப்படியே இந்த உலகத்தில் தோன்றிய ஈடு இணையற்ற மகா ஞானவானும், திரண்ட ஐசுவரியவானும், மாமன்னனுமான சாலொமோனுக்கு இரண்டு விசை சந்தர்ப்பங்களைக் கொடுத்து (1 இரா 11 : 9) அவனை உதறிப் போடுவதை நாம் பார்க்கின்றோம். பிலேயாமுக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் மட்டும் கொடுத்து அவனை பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பதை (எண் 31 : 8) நாம் வாசிக்கின்றோம்.

ஆண்டவருடைய பரலோக பயிற்சிகளுக்கு நாம் நம்மை சரணாகதியாக ஒப்புவிக்க வேண்டும். தம்முடைய பிள்ளைகள் பலருக்கும் தேவன் கொடுக்கின்ற முதல் பயிற்சி ஆகாரக்கட்டுப்பாடுதான். ராட்சத தேவ பக்தர்கள் பலரையும் வீழ்த்த சாத்தான் தெரிந்து கொண்ட குறி தவறாத கவண் கல் பெருந்தீனிதான். நமது ஆதி தாய் தந்தையரை பாவத்தில் வீழ்த்தி உலகத்தில் பாவத்தையும், சாபத்தையும், கண்ணீரையும், புலம்பலையும், வியாகுலத்தையும், இரத்தக் களிறியையும் சாத்தான் கொண்டு வந்தது சுவையான ஆகாரம் சம்பந்தப்பட்ட ஒரு கனிதான்.

"நீ போஜன பிரியனாயிருந்தால் உன் தொண்டையிலே கத்தியை வை" (நீதி 23 : 2) என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. கத்தியை வெறுமனே தொண்டையில் வைத்து எடுப்பது அதின் பொருள் அல்ல. கத்தியால் தொண்டையை குத்தி செத்து மடிந்து போ என்பதே அதின் அர்த்தமாகும். ஆகாரத்துக்கும், ஆவிக்குரிய பரிசுத்த வாழ்க்கைக்கும் மிகவும் நெறுக்கமான தொடர்பு உண்டு. ஒரு தேவனுடைய பிள்ளையை ஆகாரம் கட்டுப் படுத்திக் கொண்டிருக்குமானால் அவன் தேவனுடைய பிள்ளையாக இருக்க முடியவே முடியாது. அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் கொரிந்து சபையாருக்கு எழுதும் போது "எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது, எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்" (1 கொரி 6 : 12) என்ற வார்த்தையிலிருந்தும் "அநேக முறை உபவாசங்களிலும்" (2 கொரி 11 : 27) என்ற அவருடைய வார்த்தையிலிருந்தும் அவர் தனது சரீரத்தை ஆகார விசயங்களில் எவ்வண்ணமாக அடக்கி ஒடுக்கி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார் என்பதை நம்மால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. உங்கள் சகோதரனாகிய நான் ஒரு காலத்தில் ஆகாரத்திற்கு குறிப்பாக மாமிச உணவுகளுக்கு அதிகமாக அடிமையாகிக் கிடந்தேன். பரலோக பயிற்சியாளனாகிய நம் ஆண்டவர் கட்டம் கட்டமாக எனது ஆகார மோகங்களை எல்லாம் என்னிலிருந்து முற்றுமாக சுட்டெரித்து இந்த நாட்களில் பெரும்பாலும் எனது ஆகாரம் கோதுமை தோசை மற்றும் கஞ்சி சாதம் என்ற நிலைக்கு கொண்டு வந்து வைத்திருக்கின்றார். சாதத்தைப் பொங்கி சுடச் சுட அதில் நிறைய தண்ணீர் ஊற்றி உப்பைப் போட்டு ஊறுகாய் கூட்டி சாப்பிடுவதே எனக்கு விருப்பமான ஆகாரமாக இருக்கின்றது. அதற்காக நான் என் ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றேன். "நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன்" (பிலி 4 : 11 ) என்ற பரிசுத்த பவுல் அடிகளாரின் வார்த்தைகளை அதிகமாக நினைவு கூருகின்றேன்.

அநேக தேவ மக்கள் ஏசாவைப் போல ஆகாரம் என்ற சிவப்பான பயிற்றங்கூளுக்காக தங்கள் விலைமதிப்பிட முடியாத ஆவிக்குரிய பரிசுத்த வாழ்வு என்ற சேஷ்ட்ட புத்திர பாகத்தை பண்டமாற்று செய்து விட்டார்கள். அவர்களுடைய ஆகார மோகம் ஆண்டவரோடுள்ள அவர்களது ஐக்கிய சகவாசத்தை வெகு தொலைவுக்குத் தள்ளி வைத்து விட்டது. எந்த ஒரு நிலையிலும் அவர்கள் தங்கள் ஆகாரத்தை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் மூக்கு முட்ட சாப்பிட்டு தங்கள் சரீரத்தை சீராட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகார மிகுதியின் காரணமாக அவர்களால் நீண்ட நேரம் முழங்கால்களில் நின்று ஜெபிக்க முடிவதில்லை. முகம் குப்புற விழுந்து ஆண்டவர் சமூகத்தில் தங்களை தாழ்த்த முடிவதில்லை. உபவாசம் என்றால் அவர்களுக்கு எட்டிக்காயான கசப்பான அனுபவம்தான். "நானும் உபவாசம் எடுத்துத்தான் உங்களுக்கு தேவச் செய்தி கொடுக்கின்றேன்" என்று தனது சபை மக்களுக்கு வெளி வேஷமாக காண்பிப்பதற்காக ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் உபவாசம் எடுக்கின்றார்கள். சபை ஆராதனை முடிந்ததுதான் தாமதம், பாஸ்டருடைய மனைவி முதல் வேலையாக கோழிக்கடையில் ஓடோடி வந்து நிற்பார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் மாமிச உணவுக்கு முன்னால் பாஸ்டர் அமர்ந்து நமது தமிழ் நாட்டு வழக்கச் சொல்லின்படி ஒரு பிடி பிடித்து விடுகின்றார். "வயிற்றை நினைத்தவன் வாழமாட்டான்" என்ற தமிழ் பழமொழிப்படி வயிற்றையும், ஆகாரத்தையும் நினைத்த ஒரு தேவ ஊழியன் தன்னளவில் நித்திய வாழ்வு வாழவும் மாட்டான், தனது மந்தையை நித்திய வாழ்வுக்கு நேராக வழிநடத்தவும் மாட்டான். அது அவனால் கூடவும் கூடாது.

நம்மில் பலருக்கும், ஏன்? நம் யாவருக்கும் கூட தூக்கம் என்றால் அத்தனை பிரியம். எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் படுக்கையிலேயே நாம் அங்கும் இங்கும் புரண்டு கொண்டிருப்போம். அதிகாலை ஆனந்தமான குளிரோடு கூடிய நமது தூக்கம் எத்தனை இன்பமானது! யாரே அந்த இன்பமான தூக்கத்தை உதறித் தள்ள முடியும்? ஆனால், நாம் நம் பரலோக பயிற்சியாளனாகிய ஆண்டவருக்கு நம்மை ஒப்புவிக்கும் போது நமது இன்பமான நித்திரைகள் எல்லாம் தாங்களாகவே சிறகடித்து பறந்து போய்விடும். இராக்காலங்களில் 12, 1, 2, 3, 4 மணி நேரங்களில் எல்லாம் கர்த்தர் தமது பிள்ளைகளை படுக்கையிலிருந்து எழுப்பி அவர் சமூகத்தில் முகம் குப்புற விழுந்து தங்களது பரிசுத்த வாழ்வுக்காகவும், நரக பாதாளத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் பாவ மாந்தரின் மீட்புக்காகவும் மன்றாடி ஜெபிக்க கிருபை தந்து வழிநடத்துகின்றார். உலகத்தின் மற்ற மக்களைப் போல அந்த தேவ பிள்ளைகளால் இராக்காலங்களில் உணர்வற்ற விதத்தில் நித்திரை செய்ய இயலாது. ஆண்டவரோடு உறவாடி மகிழும் இரா ஜாம ஜெப மணி நேரங்களுக்காக அந்த தேவ மக்களின் இருதயம் வாஞ்சித்து கதறுகின்றது.

மகாத்துமா சாது சுந்தர்சிங் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை நீங்கள் வாசித்துப் பார்த்தால் அவர் இராக்காலங்களில் எவ்வளவாக ஜெபித்தார் என்பதை நாம் ஆச்சரியத்துடன் கண்டு கொள்ள முடியும். கர்நாடகா மாநிலத்திலுள்ள ஒரு பட்டணத்துக்கு ஒரு சமயம் அவரை பிரசங்கிக்கும்படியாக அழைத்திருந்தார்கள். அவரும், அவரது மொழிபெயர்ப்பாளனும் தங்குவதற்காக அவரை அழைத்த திருச்சபையினர் ஒரு வீட்டை ஒழுங்கு செய்திருந்தார்கள். எந்த ஒரு நிலையிலும் தரையில் முழங்காலூன்றி ஜெபிக்க வேண்டாமென்றும் கட்டிலிலேயே அமர்ந்து ஜெபிக்கும்படியாக சுந்தர் சிங்கை அவர்கள் கேட்டிருந்தார்கள். அந்த வீட்டைச் சுற்றிலும் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அப்படிச் சொல்லியிருந்தார்கள்.

இந்த நிலையில் நள்ளிரவு நேரம் தரையில் பாம்பு ஊர்ந்து செல்லும் ஒலி கேட்டு சுந்தரின் மொழிபெயர்ப்பாளன் தனது கட்டிலிலிருந்து எழுந்து தனது டார்ச் விளக்கை போட்டுப் பார்த்த போது, இதோ சுந்தர் சிங் தரையில் முழங்காலூன்றி ஜெபித்துக் கொண்டிருப்பதையும், அவர் முகம் பிரகாசிப்பதையும், அவர் அருகில் ஒரு பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருப்பதையும் ஆச்சரியத்துடன் கவனித்தார். "எனக்கு கட்டிலில் முழங்காலூன்றி ஜெபிக்கும் பழக்கம் இல்லை, ஆகவேதான் தரையில் இருந்து முழங்காலூன்றி ஜெபித்தேன்" என்று மிகவும் சாந்தமாக சுந்தர்சிங் தனது மொழிபெயர்ப்பாளனிடம் சொன்னார்.

ஒரு காலத்தில் தூக்கத்தை அதிகமாக விரும்பி ஆண்டவருக்கு கீழ்ப்படியாமல் தூங்கிய என்னை ஆஸ்துமா என்னும் கொடிய வியாதியை என்னில் அனுமதித்து இராக்காலம் முழுவதும் தூக்கமில்லாமல் தவிக்க வைத்து அந்த மணி நேரங்களை எல்லாம் ஜெபமணி நேரங்களாக மாற்றிக் கொள்ள அன்பின் ஆண்டவர் எனக்கு உதவி செய்தார். அந்த கொடிய ஆஸ்துமா நோயின் மூலமாக எனது இராக்கால ஜெப வேளையை ஒழுங்கு செய்து தந்த பின்னர் அந்த பொல்லாத நோயை கர்த்தர் என்னிலிருந்து முற்றும் அகற்றிவிட்டார். அவருக்கு நான் என்ன ஈட்டை செலுத்த முடியும்? இப்பொழுது இராக்காலங்களில் எந்த மணி நேரம் ஜெபிக்கும்படியாக ஆண்டவர் என்னை எழுப்பினாலும் உடனே எழுந்து ஜெபிக்க அன்பின் நேசர் எனக்கு கிருபை செய்திருக்கின்றார். அந்த பரலோக பயிற்சியாளருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்? இதைக் கருத்தோடு வாசிக்கும் தேவப் பிள்ளையே, உலகத்து மக்கள் தங்கள் அயர்ந்த ஆழமான நித்திரையில் இருக்கும் இரா ஜாமங்களில் நீங்கள் உங்கள் படுக்கையிலிருந்து எழுந்து உங்களை தமக்கென தெரிந்து கொண்ட ஆண்டவரின் சமூகத்தில் உங்கள் கரங்களை பரலோகத்திற்கு நேராக உயர்த்தி ஜெபித்து வருகின்றீர்களா? உங்கள் முடிவில்லாத நித்தியத்தை ஆண்டவர் இயேசுவோடும், நமது முற்பிதாக்கள், தீர்க்கத்தரிசிகள், அப்போஸ்தலர்கள், பரிசுத்த பக்தர்கள், இரத்தசாட்சிகள், தேவ தூதர்களோடும் மோட்ச இன்ப வீட்டில் செலவிட உங்கள் இராக்கால மணி நேரங்களை ஜெபங்களில் ஆயத்தம் செய்து வருகின்றீர்களா? அநித்தியமான சில ஆண்டு கால பூவுலக வாழ்வின் மகிழ்ச்சிக்காக நீங்கள் எத்தனை இராக்காலங்களை வேண்டுமானாலும் நித்திரையின்றி செலவிட ஆயத்தமாயிருக்கின்றீர்கள் அல்லவா? அப்படியானால், முடிவே இல்லாத நித்திய மோட்சானந்த வாழ்வுக்காக நீங்கள் உங்கள் இராக்கால மணி நேரங்களை எப்படி தேவ சமூகத்தில் செலவிட்டு அதற்கு உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நித்தியம்! முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியம்!!

நித்தியம் எவ்வளவு நீளமானது என்பதைக் குறித்து ஒரு பரிசுத்தவான் இவ்வண்ணமாகக் கூறுகின்றார். இந்தப் பூவுலகத்தின் அனைத்துப் பாலைவனங்கள், நீண்ட கடற்கரைகள், ஆற்றங்கரைகள் மற்றும் பூமியின் அனைத்து மணல்களையும் ஒவ்வொன்றாக எண்ணித் தொகையிட வேண்டும். ஒரு மணல் எண்ணப்பட்டதும் 100 ஆண்டுகள் இடைவெளி கொடுத்து அடுத்த மணலை எண்ண வேண்டும். இப்படியாக இந்த உலகத்தின் அனைத்து மணல்களையும் மணல் ஒன்றுக்கு 100 வருடங்கள் கால அவகாசம் கொடுத்து எண்ணி முடித்ததும் திரும்பவும் அதே விதமாக பூமியின் மணல்களை இரண்டாம் முறையாக எண்ணித் தொகையிட்டு வரும் வருடங்களே நீண்ட நித்தியமாகும் என்று கூறுகின்றார். ஆம், நித்தியத்திற்கு முடிவில்லை என்பதுதான் அதின் பொருளாகும். இந்த முடிவில்லாத நித்தியத்தை நீங்கள் எங்கே செலவிடப் போகின்றீர்கள். ஆண்டவர் இயேசுவோடு கூட பரலோகத்திலா? அல்லது பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டுள்ள எரி நரகத்திலா?

 

மகனே நீ எப்போதும் என்னோடிருக்கிறாய்!

மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய் (லூக்கா 15 : 31) தன்னுடைய பாவ அக்கிரமங்களுக்காக நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடு, மனங்கசந்து அழுது, பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், மெய்ச்சமாதானத்தையும், சொல்லி முடியாததும், மகிமையால் நிறைந்ததுமான சந்தோசத்தைப் பெற்றுக் கொண்ட மறுபடியும் பிறந்த (யோ 3 : 3) ஒரு தேவ பிள்ளை பாக்கியவான் ஆவான். "இஸ்ரவேலே, நீ பாக்கியவான், கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்?................." (உபா 33 : 29) என்று தேவ வார்த்தை அவனை சிலாகித்துப் பேசுகின்றது.

சாமுவேல் தீர்க்கன் தாவீதை அவனுடைய சகோதரர் நடுவில் அபிஷேகம் பண்ணின நாள் முதற்கொண்டு கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின் மேல் இறங்கியிருந்தார் (1 சாமு 16 : 14) என்று நாம் வாசிக்கின்றோம். அதைப்போலவே, மறுபடியும் பிறந்த, ஒரு தேவ பிள்ளையோடு ஆண்டவர் எப்பொழுதும் வாசம் செய்கின்றார். எனது பாவங்கள் எழுதப்பட்ட தாட்களுடன் எங்கள் ஊர் வயல் வெளிகளில் எனது பாவங்களுக்காக மனங்கசந்து அழுது, கண்ணீர் சிந்தி ஒவ்வொரு பாவத்தையும் 51 ஆம் சங்கீதத்தை வாசித்து தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு ஆண்டவருடைய மன்னிப்புக்காகவும், இரட்சிப்பின் சந்தோசத்துக்காகவும் அழுது கெஞ்சிய எனது 18 ஆம் வயதில் தேவன் என் பாவங்களை எனக்கு மன்னித்து உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தால் என்னை நிரப்பி தம்முடைய பிள்ளையாக என்னை மாற்றினார். அந்த நாளில் என் உள்ளத்தில் பிரவேசித்த பரிசுத்த ஆவியானவராம் தேவன் இன்றும் அப்படியே என்னில் வாசம் செய்து, என்னோடு பேசி, என்னைத் தமது ஜீவ பாதையில் கரம் பிடித்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லுவதை நான் காண்கின்றேன். அல்லேலூயா! "அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள்" (யோ 14 : 17) என்று இரட்சகர் தமது சீடர்களிடம் கூறுவதை நாம் பார்க்கின்றோம். "நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கின்றோம் என்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூட சாட்சி கொடுக்கிறார்" (ரோ 8 : 16) என்றும் "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்" (கொலோ 1 : 27) என்றும் பவுல் அப்போஸ்தலன் நிருபத்தில் எழுதுகின்றார்.

அன்பின் ஆண்டவர் நம்மோடு வாசம்பண்ணுவதினால் தான் நாம் அவருடைய பாதங்களை நோக்கி அடிக்கடி ஓடுகின்றோம். இராக்காலங்களில், நள்ளிரவு ஜாமங்களில் நமது ஜெப மணி நேரங்கள் மிகவும் ஆனந்தமாக இருக்கின்றன. சங்கீதக்காரரைப் போல நமது ஆத்துமா தேவனை வாஞ்சித்துக் கதறுகின்றது (சங் 42 : 1) பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பம் இல்லை (சங் 73 : 25) என்ற அவருடைய வார்த்தையின்படி நமது வாஞ்சையும், விருப்பங்களும் ஆண்டவராகவே இருக்கின்றது. "அவன் சர்வ வல்லவரில் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுது கொண்டிருப்பானோ?" (யோபு 27 : 10) என்ற ஒரு கேள்வியை யோபு பக்தன் எழுப்புகின்றார். யோபு பக்தன் குறிப்பிடும் அந்த மனிதனால் சர்வ வல்லவரில் மனமகிழ்ச்சியாக இருக்க முடியாது. அத்துடன் அவனால் எப்பொழுதும் தேவனைத் தொழுது கொண்டிருக்க முடியாது. அந்த மனிதன் யார்? ஆம், அவன்தான் மாயக்காரன் என்று அந்த அதிகாரத்தின் 8 ஆம் வசனத்தில் அவர் குறிப்பிடுகின்றார். மாயக்காரன் என்ற பதத்தை அவன் "தேவனற்றவன்" "உலகத்தால் தன்னைக் கறைப்படுத்திக் கொண்டவன்" என்று (Amplified) ஆங்கில திருப்புதலில் அந்த எட்டாம் வசனம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அன்பின் ஆண்டவர் தங்கள் இருதயங்களில் இல்லாதவர்கள், மறுபடியும் பிறவாதவர்கள், பாவ மன்னிப்பின் நிச்சயமில்லாதவர்கள், உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்து உலகத்தை ஆதாயம் பண்ணிக்கொள்ள துடிதுடிக்கும் மக்களால் தேவனில் மனமகிழ்ச்சியாக இருக்க இயலாது. அவருடைய பாதங்களை அடிக்கடித் தேடி ஓடி அவரைத் தொழுது கொள்ளவும் அவர்களால் முடியாது. அவர்களுக்கும், தேவனுக்கும் வெகு தூரமாகும். எத்தனையான வேதனையான காரியம் பாருங்கள்!

அன்பின் இரட்சகரை தன் உள்ளத்தில் தன் பரலோகத் தகப்பனாகக் கொண்ட ஒரு மனிதனுக்கு அவன் உள்ளத்திலேயே மோட்சம் ஆரம்பமாகிவிடுகின்றது. "இதோ தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே" (லூக்கா 17 : 21) என்று ஆண்டவர் சொன்னார். ஒரு மெய்யான தேவனுடைய பிள்ளைக்கு 2 மோட்சங்கள் உண்டு. "உனக்கு இரண்டு மோட்சங்கள் இல்லையேல் ஒரு மோட்சமும் இல்லை. இந்த உலகத்தில் உனக்கு மோட்சம் இல்லையேல் பரலோகத்திலும் உனக்கு மோட்சம் இல்லை" என்று ஆண்ட்ரு போனர் என்ற பரிசுத்தவான் கூறினார். எத்தனை உண்மையான வார்த்தைகள்!

கர்த்தருக்கு மகிமையாக நான் உங்களுடன் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். இங்கு கோத்தகிரிக்கு என்னை பார்க்க வரும் தேவப்பிள்ளைகளில் சிலர் நான் எப்படி தனியனாக எனது பெரிய வீட்டில் வசிக்கின்றேன் என்று என்னைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்கின்றார்கள். ஒரு சமயம் ஒரு சகோதரி என்னைப் பார்த்து "உங்களால் எப்படி இந்தப் பெரிய வீட்டில் தனிமையாக இருக்க முடிகின்றது? என்னைப் போலொத்தவளானால் நிச்சயமாக பைத்தியமே பிடித்து விடும்" என்று என்னிடம் சொன்னார்கள். நான் அவர்களிடம் "நீங்கள் நினைப்பது போல நான் மாத்திரம் தனிமையாக இந்த வீட்டில் இருக்கவில்லை. நானும், என் ஆண்டவருமாக இந்த வீட்டில் இருக்கின்றோம். இந்த வீட்டிலேயே நான் மோட்சானந்த சந்தோசத்தை அனுபவிக்கின்றேன்" என்று பதில் அளித்தேன். உண்மைதான், நமது முற்பிதா யாக்கோபு சொன்னது போல "என் தகப்பனுடைய தேவன் என்னோடே கூட இருக்கிறார்" (ஆதி 31 : 5) தாவீது ராஜா சொன்னது போல "தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்" (சங் 23 : 4) எரேமியா தீர்க்கன் கூறினது போல "கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்" (எரே 20 : 11) அநேக கிறிஸ்தவ மக்களுக்கு இந்த மாட்சியான அனுபவம் கிடையாது. தங்கள் உள்ளத்தில் அந்த மோட்சானந்த அனுபவம் இல்லாமல் தங்கள் விருத்தாப்பியத்தை சந்திப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாகும். தங்கள் பிள்ளைகள், உற்றார், உறவினர், தங்களுக்கு அருமையானவர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் காலங்கள் வரைக்கும் அவர்கள் தங்கள் தனிமையை அதிகமாக உணரமாட்டார்கள். ஆனால், பிள்ளைகள் எல்லாரும் தங்களை விட்டு விட்டு தனிக் குடித்தனம் நடத்த வெளியிடங்களுக்குச் சென்றதும், தங்களை அதிகமாக நேசித்த உற்றார் உறவினர் அனைவரும் விருத்தாப்பியம், மரணம், போன்ற காரணமாக விலகிச் சென்று முற்றும் தனிமைக்கு தள்ளப்படும் நாட்களில் இயேசு இரட்சகர் இல்லாத தனிமையை அவர்களால் சந்திக்க முடியாது. தேவனற்ற சவுல் அரசனின் இருதயம் கலங்கிக் கொண்டிருந்தது போல (1 சாமு 16 : 14) அவர்களுடைய இருதயமும் கலங்கிக் கொண்டிருக்கும். அவர்களால் சமாதானமாக தூங்க முடியாது. வருங்காலத்தைப் பற்றிய பயத்தின் எண்ணங்கள் கடல் அலை போல மறுபடியும், மறுபடியும் அவர்கள் உள்ளத்தை மோதி தாக்கிக் கொண்டிருக்கும். அந்த மக்களால் தனிமையாக கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது. தனிமையாக இருக்கும்போதும், நடந்து கொண்டிருக்கும் போதும் அவர்கள் தங்களை அறியாமல் எதை எதையோ பேசிக்கொண்டே இருப்பார்கள். பகற் காலம் முழுவதும் அங்குமிங்குமாக போய் வீண் பேச்சுகள் பேசி தங்கள் காலத்தைக் கடத்துவார்கள். வசதியுள்ளவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து பொன்னான நேரத்தை பாழாக்குவார்கள். கொஞ்ச நேரம் கூட அவர்கள் தங்கள் முழங்கால்களை தேவ சமூகத்தில் முடக்க இயலாது.

ஆனால், ஆண்டவருடைய பரிசுத்த இரத்தத்தால் தன் பாவங்களற கழுவி சுத்திகரிக்கப்பட்ட ஒரு மறுபடியும் பிறந்த தேவபிள்ளையின் காரியம் முற்றும் வேறாகும். விருத்தாப்பியம் அந்த தேவப்பிள்ளையை சந்திக்கும் போதும், தன்னை ஒட்டி வாழ்ந்த தன் கர்ப்பத்தின் கனிகள், இனஜனபெந்துக்கள், தனக்கு அருமையானவர்கள் அனைவரும் தன்னைவிட்டு கடந்து சென்றுவிட்டபோதினும், தான் முற்றுமாக தனிமைப்படுத்தப்பட்ட போதினும் தன் அன்பின் ஆண்டவர் தனக்கு ஆயத்தம் செய்து வைத்துள்ள தனது நித்திய மோட்சானந்த பாக்கியங்களையும், தனக்கு முன்னாலுள்ள தனது நித்திய இளைப்பாறுதலையும் அந்த தேவ பிள்ளை கற்பனை பண்ணி, கற்பனை பண்ணி தன்னை தமது இரக்கப் புண்ணியத்தால் மீட்டு இரட்சித்த தன் அருமை இரட்சகரை முகமுகமாக சந்திக்கப்போகும் பாக்கிய நாளுக்காக ஆசை ஆவலோடு காத்திருக்கின்றது. தனது ஒவ்வொரு நாளையும் அது பூரணமாக கர்த்தருடைய பாதங்களில் ஜெபத்திலும், கர்த்தரைப் பாடித் துதிப்பதிலும், ஆண்டவருடைய வசனங்களை தியானிப்பதிலும் செலவிடுகின்றது.

காலம் சென்ற எனது பரிசுத்த தகப்பனார் தனது இறுதி நாட்களை எவ்வண்ணமாக தேவனோடு செலவிட்டார்கள் என்பதை நான் அறிவேன். அவர்களுடைய ஒவ்வொரு மணி நேரமும் முழங்கால்களில் கடந்து சென்றது. அவர்கள் எந்த ஒரு வீட்டிற்கும் சென்று தனது நேரத்தை வீண் பேச்சுகள் பேசி களித்ததை நான் காணவே இல்லை. விருத்தாப்பியத்தில் மட்டுமல்ல, அவர்கள் ஆண்டவரை தன் சொந்த இரட்சகராக அறிந்து கொண்ட நாட்களிலிருந்தே அந்தவிதமாகவேதான் நடந்து கொண்டார்கள். தனது அன்பின் ஆண்டவரை அவர்கள் தன்னைப் 10 மாதங்கள் வயிற்றில் சுமந்து பெற்ற தனது அருமைத் தாயாராக வைத்து அவருடைய உள்ளம் எந்த விதத்திலும் துக்கமடையாதபடி தன்னைக் காத்துக் கொண்டார்கள். அந்த அன்பின் ஆண்டவரும் எனது பரிசுத்த தகப்பனாரோடு விசேஷித்த பிரகாரமாக இடைபட்டுக் கொண்டிருந்தார். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.

இதைக் கருத்தோடு வாசிக்கும் தேவ பிள்ளையே, உங்களுடைய காரியம் என்ன? "மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய்" (லூக்கா 15 : 31) என்று அன்பின் ஆண்டவர் உங்களைப் பார்த்துச் சொல்லக் கூடுமா? இந்த உலகத்திலேயே உங்களுடைய உள்ளத்தில் மோட்சம் ஆரம்பித்து விட்டதா? அதின் காரணமாக, நீங்கள் ஆண்டவருடைய பாதங்களில் எத்தனை மணி நேரங்கள் வேண்டுமானாலும் ஜெப நிலையில் தனித்திருக்கக் கூடுமா? அப்படி மோட்சம் தன்னுடைய உள்ளத்தில் இருந்த காரணத்தால் சீன தேசத்துப் பரிசுத்தவான் "வாச்மன் நீ" (Watchman Nee) என்பவர் 20 ஆண்டு நீண்ட காலம் தன் ஆண்டவர் இயேசுவுக்காக கம்மியூனிச சிறைக்கூடத்தில் மிகுந்த தேவ சமாதானத்தோடு அடைபட்டுக் கிடந்து அப்படியே மரிக்க முடிந்தது. "மோட்ச பிரயாணம்" என்ற பரிசுத்த பிரபந்தத்தை எழுதிய ஜாண் பன்னியன் என்ற தேவ பக்தன் தேவனுடைய சுவிசேஷ சத்தியத்தைப் பிரசிங்கித்த காரணத்திற்காக இங்கிலாந்து தேசத்திலுள்ள பெட்ஃபோர்ட் சிறைக்கூடத்தில் 12 ஆண்டு காலம் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் தேவ சமாதானத்தோடு வாழ முடிந்தது. அப்படி மோட்சம் தன்னுடைய உள்ளத்தில் இருந்த காரணத்தால்தான் பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்கள் இரவும் பகலும் ஜெப நிலையிலேயே இருந்தார். அதின் காரணமாக இராக்காலங்களில் கொடிய சிறுத்தை புலிகள் வாழ்கின்ற இமயமலைக் கானகங்களுக்குச் சென்று தனிமையாக ஜெப நிலையில் தனித்திருந்தார்.

பூவுலக மோட்சத்தின் தொடர்ச்சியே பரலோகத்திற்கும் தொடருகின்றது. 10 நிமிடம், கால் மணி, அரை மணி நேர ஜெபங்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாது. மணிக்கணக்கான நேரம் கர்த்தாவின் பாதங்களில் நாம் அமர வேண்டும். உலகப் பிரகாரமான அலுவல்களில் இருக்கும் தேவ மக்கள் பகற் காலங்களில் ஜெபிக்க முடியாதாகையால் இராக் காலங்களில் ஆண்டவருடைய பாதங்களில் தங்கள் உள்ளத்தை உடைத்து ஊற்றியே ஆக வேண்டும். முடிவில்லாத நித்தியத்தை ஆண்டவர் இயேசுவோடு மோட்சத்தில் செலவிட நாம் எப்படியாகிலும் ஆயத்தப்பட்டே ஆகவேண்டும். "எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம்" (சங் 90 : 10) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது. இந்த 70 ஆண்டுகளில் குழந்தை மற்றும் வாலிபத்திற்கான 20 ஆண்டுகளை நாம் நீக்கிப் பார்த்தாலும் முழுமையான 50 ஆண்டுகளை முடிவில்லாத நித்தியத்தை ஆண்டவர் இயேசுவோடு பரலோகில் செலவிட நாம் நன்கு ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது ஆத்துமாவுக்கு நாமே உத்திரவாதி. நமது விலையேறப்பெற்ற ஆத்துமாவின் நஷ்டத்திற்கு நாம் எவரையும் குற்றப்படுத்த இயலாது. நமது ஆத்துமாவை நாம் நஷ்டப்படுத்திக் கொள்ளுவதைப் போன்ற கொடிய செயல் வேறு எதுவுமாக இருக்கவே முடியாது. உங்கள் சகோதரனாகிய எனது எழுத்துக்கள் இந்த நாட்களில் உங்களை ஏதோ பயமுறுத்தும் பூச்சாண்டி கதைகளைப் போலத் தெரியலாம். ஆனால், நாட்கள் வரும், அப்பொழுது இந்த வரிகள் எல்லாம் முற்றும் ஜீவனுள்ள தேவனுடைய ஏவுதலால் எழுதப்பட்டவைகளாக இருந்தன என்பதை நீங்கள் கண்டு கொள்ளுவீர்கள். உங்கள் ஆத்துமா நஷ்டப்பட்ட நிலையில் நீங்கள் அதைக் கண்டு கொள்ளாதபடி இரக்கமுள்ள தேவன் உங்களைப் பாதாளத்தின் வல்லடிக்கு விலக்கிக் காத்துக் கொள்ளுவாராக.

இந்தக் கிருபையின் காலத்தில் நமது ஆத்துமாவின் நித்திய வாழ்வை மனதில் கொண்டு நமது சரீரத்தை அடக்கி ஒடுக்கி, உதறித்தள்ள வேண்டியதை உதறித் தள்ளி, துண்டிக்க வேண்டிய காரியங்களை துண்டித்து பரம அழைப்பின் பந்தயப் பொருளை மனதில் கொண்டு இலக்கை நோக்கி நாம் தொடர வேண்டும். நீங்கள் இதுவரை மனந்திரும்பாமல், மறுபடியும் பிறந்த நிச்சயமான அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால் இந்த நிமிடத்தில் தானே உங்களை ஆண்டவருக்கு சமூலமாக ஒப்புவித்து, உங்களை தரைமட்டாகத் தாழ்த்தி உங்களுடைய பாவங்களுக்காக நொறுங்குண்ட இருதயத்தின் பெரு மூச்சுகளோடும், கண்ணீரோடும், மனங்கசந்து அழுது (சங் 51 : 17) பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். கடந்த கால நாட்களில் உங்கள் நிமித்தம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈடு செலுத்தி அவர்களுடன் ஒப்புரவாகிக் கொள்ளுங்கள் (லூக்கா 19 : 8)

தேவனற்றவர்களாக நீங்கள் இருந்த நாட்களில் உங்கள் மனதும், மாம்சமும் விரும்பிய வழிகளில் நடந்து, உலகத்தை உங்கள் முழு இருதயத்தோடு அனுபவித்து ஆனந்தித்தீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகள். இப்பொழுது நீங்கள் இரவுக்கும், இருளுக்கும் உள்ளானவர்கள் அல்ல. பரம கானானின் சுதந்திரவாளிகள். நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நம்முடைய அன்பின் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

நித்திய ஜீவ வாழ்வை சிலர் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் என்று தேவனுடைய வார்த்தை திட்டமும் தெளிவுமாக கூறியுள்ளதால் (மத் 7 : 14) (லூக்கா 13 : 24) (யூதா 22) அந்த சிலரில் நாமும் ஒருவராக காணப்பட அதற்கான கிரயம் செலுத்தி, பரலோக ராஜ்யத்தைப் பலவந்தம் பண்ணிப் பிடித்துக் கொள்ள (மத் 11 : 12) தேவன் தாமே உங்களுக்கும் எனக்கும் கிருபையும், இரக்கமும் செய்வாராக. ஆமென்.

 
 

ஒரு மெய்யான பரிசுத்த தேவ மனிதன் மற்ற மக்களையும் பரிசுத்தமுள்ளவர்களாக்குவதற்கு வெகுவாகப் பிரயாசப்பட்டு பாடுபடுவான். ஒரு பரிசுத்த இருதயம், தான் மாத்திரம் பரலோகம் போக வேண்டும் என்பதையோ அல்லது தான் மாத்திரம் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்பதையோ அல்லது தான் மாத்திரம் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதையோ ஒருக்காலும் விரும்பாது. தேவனுடைய வல்லமையையும் அவருடைய மாட்சி மகத்துவத்தையும் பரிசுத்தத்தின் இனிமையையும் ருசி கண்ட மனிதன் எந்த வழிகளில் மற்றவர்களையும் அவற்றை அடையச் செய்யலாம் என்று கடுமையாக முயற்சிப்பான். தேனைக் கண்ட சிம்சோன் தன் தாய் தந்தையருக்கும் தன்னோடிருந்த மற்றவர்களுக்கும் கொடுத்தான் அல்லவா? பரிசுத்தம் என்ற மதுரத் தேனைப் பெற்ற மெய் தேவ பிள்ளையின் காரியமும் அதுவேதான். பரிசுத்த தாசனாம் மோசேயை எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணாகமம் 11 ஆம் அதிகாரம் 29 ஆம் வசனத்தில் அவர் பேசும் வார்த்தைகளைக் கவனித்தீர்களா? "நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கத்தரிசனம் சொல்லத்தக்கதாக கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள் மேல் இறங்கப் பண்ணினால் நலமாயிருக்குமே" என்று சொன்னார். ஒரு பரிசுத்த ஆத்துமா, தான் பெற்ற பரிசுத்தத்தை தனக்குத்தானே சொந்தமான ஏகபோக உடமையாக்கிக் கொள்ள எக்காலத்தும் விரும்பாது.

(பரிசுத்தவான் தாமஸ் புரூக்ஸ்)


 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM