முன்னுரை


"என் ஓட்டத்தை சந்தோசத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்" (அப் 20 : 24)

"தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன்.............." (அப் 20 : 26-27)

"என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்று எண்ணி இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால் அவரை ஸ்தோத்திரிக்கின்றேன்" (1 தீமோ 1 : 12)

"நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்" (யோசுவா 14 : 8)

"சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்று எண்ணினார்" (1 தெச 2 : 4)


கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.

2007 ஆம் ஆண்டின் முதல் தேவ எக்காள இதழின் மூலமாக ஆண்டவருடைய அருமைப் பிள்ளைகளாகிய உங்களைச் சந்திக்கும் கிருபையின் சிலாக்கியம் தந்த நம் நேச இரட்கருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றேன். தேவ எக்காளம் தனது 39 வருட தேவ சேவையை முடித்து 40 ஆம் ஆண்டிற்குள் பிரவேசித்துள்ளது. இது என் கண்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. நான் நம் அன்பின் ஆண்டவருடைய வெகு திட்டமான ஆலோசனையின் பேரில் ஆரம்பித்த இந்த பத்திரிக்கையை ஒரு சில மாதங்களாவது நம்மால் அச்சிட்டு வெளியிட முடியுமா என்று நான் ஆரம்பத்தில் வெகுவாக எண்ணினதுண்டு. ஆனால் அதிசயம், அற்புதம், கடந்த 39 ஆண்டு காலமாக இந்த பத்திரிக்கையை தேவ ஒத்தாசையோடு, அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக எழுதி வந்திருக்கின்றேன். இந்த 40 ஆம் ஆண்டில் "என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது, என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது" என்று சொன்ன நம்முடைய ஆண்டவருடைய தாயாரைப் போல என் உள்ளமும் நன்றியால் நிரம்புகின்றது. அத்துடன், இந்த 40 ஆம் ஆண்டில் "நல்லது, உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையாயிருந்தாய்" (லூக்கா 19 : 17) என்ற நம் ஆண்டவரின் மகிழ்ச்சியின் குரல் கேட்டுகர்த்தரில் களிகூரும் பாக்கியத்தையும் நான் பெற்றவனாக இருக்கின்றேன். "நோவா நீதியைப் பிரசிங்கித்தவர்" (2 பேதுரு 2 : 5) என்று வேதாகமத்தில் நாம் வாசிக்கின்றோம். அதைப் போல நம்முடைய தேவ எக்காளமும் தேவ ஜனத்திற்கு தேவ நீதியை மட்டும் பிரசங்கிக்கும் ஒரு உயிர் மீட்சியின் பத்திரிக்கையாக இருந்து வந்ததற்காக அவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றேன். அல்லேலூயா.

இந்த 40 ஆம் ஆண்டின் ஆரம்ப இதழை ஒரு சிறப்பு மலராக வெளியிட கர்த்தருக்குள் தீர்மானித்தேன். இதழின் முகப்பு அட்டையில் பரிசுத்த வேதாகமத்துக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றப்படும் ஜாண் பன்னியன் என்ற மாபெரும் தேவ பக்தன் எழுதிய "மோட்ச பிரயாணம்" என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை உங்களுக்குத் தந்திருக்கின்றேன். முகப்பு அட்டையின் படத்தை கவனித்தீர்களா? நாசபுரி கிறிஸ்தியானை உச்சித மோட்ச பட்டணத்துக்கு சரியான பாதையில் வழிநடத்திய சுவிசேஷர் அவனது பிரயாணத்தை திட்டிவாசலைச் சுட்டிக் காண்பித்து அங்கிருந்து ஆரம்பிக்கச் சொல்லும் ஒரு அற்புத காட்சியை நீங்கள் காண்கின்றீர்கள். கிறிஸ்தியான் தனது மோட்ச பிரயாண யாத்திரையில் தனது சரியான ஜீவ வழியை விட்டு வழிவிலகிச் செல்லும் ஒவ்வொரு சமயங்களிலும் சுவிசேஷர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனை எச்சரித்து கடிந்து கொண்டு மீண்டும் அவனது பாதங்களை பரலோகப் பாதையில் ஊன்றச் செய்யும் காட்சியை மோட்ச பிரயாணம் புத்தகத்தை வாசித்த தேவ மக்கள் நன்கு அறிவார்கள். சுவிசேஷகரை ஒரு உண்மையும், உத்தமமுமான தேவ ஊழியருக்கு ஜாண் பன்னியன் ஒப்பிடுகின்றார்.

அதைப்போலவே, தேவ எக்காளமும் தேவ ஜனத்தை கடந்த 40 ஆண்டு காலமாக அவர்களின் மோட்ச பிரயாண யாத்திரையில் நித்திய ஜீவ வழியைக் காண்பிக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்து வந்திருக்கின்றது என்பதை கர்த்தரை நேசிக்கும் தேவ மக்கள் யாவரும் நன்கு அறிகின்றவர்களாக இருக்கின்றார்கள். எல்லா கனமும், மகிமையும், துதியும் ஆண்டவர் இயேசு ஒருவருக்கே உண்டாவதாக.

ஒரு தனி மனிதனை ஆண்டவர் தமது ஜனத்தின் ஆசீர்வாதத்திற்காக கடந்த 40 ஆண்டு காலமாக அற்புதமாக எடுத்துப் பயன்படுத்தி வந்திருக்கிறார் என்றால் அந்த தனி மனிதனை அவர் தமக்குகந்த சரியான பாத்திரம் என்று திட்டமாக கண்டு கொண்டார் என்று நாம் திட்டமாக யூகிக்கலாம். அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் அடிகளார் இதைக் குறித்து "சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமர் என்று எண்ணினார்" (1 தெச 2 : 4) என்று நிருபத்தில் எழுதுகின்றார். அவ்விதமாகவே, உங்கள் சகோதரனாகிய என்னையும் தகுதி உள்ளவனேன்று தேவன் எண்ணி தமது ராஜரீக ஊழியத்தை எனது கரங்களில் ஒப்புவித்தார். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.

டி.எல்.மூடி. என்ற அமெரிக்கநாட்டின் பிரசித்தி பெற்ற சுவிசேஷகர் ஒரு மாலை நேரம் தனது பரிசுத்த சிநேகிதன் ஹென்றி வார்லி என்பவருடன் ஒரு நதிக்கரை வழியாக உலாவிக் கொண்டு சென்றனர். இறுதியாக அவர்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து செல்லும் வேளை வந்த போது அவருடைய பரிசுத்த நண்பர் அவரைப் பார்த்து "மூடி அவர்களே, தன்னை முற்றுமாக தேவனுக்கு ஒப்புவித்த ஒரு மனிதனை அவர் பயன்படுத்தும் அற்புதத்தை இந்த உலகம் இன்னும் காணவில்லை" என்று சொன்னார். (The world is yet to see what God can do to a man whose life is wholly consecrated to Him) அதைக்கேட்ட மூடி என்ற அந்த தேவ மனிதர் "அந்த மனிதன் நானாகவே இருப்பேன்" என்று சவால்விட்டுச் சென்றார். அப்படியே மூடி தன்னை முற்றுமாக ஆண்டவருக்கு ஒப்புவித்தார். பின் நாட்களில், தேவன் அவரை 2 கண்டங்களில் உள்ள மக்களை அசைக்கும் வண்ணமாக மகா வல்லமையாக அநேக ஆயிரம், பதினாயிரங்களின் மனந்திரும்புதலுக்கேதுவாக எடுத்து பயன்படுத்தினார்.

தன்னை முற்றுமாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கும் எந்த ஒரு தனி மனிதனையும் தேவன் தமது நாமத்திற்கு மகிமையாக இன்றும் எடுத்து பயன்படுத்த வல்லவராயிருக்கின்றார் என்பதற்கு உங்கள் ஏழை சகோதரனாகிய நான் சாட்சியாக இருக்கின்றேன். தேவன் என்னை ஏன் தமது நாமத்திற்கு மகிமையாக எடுத்துப் பயன்படுத்தினார் என்பதற்கான சில காரணங்களை தேவ பிள்ளைகளாகிய உங்களுக்கு முன்பாக இந்த நாற்பதாம் ஆண்டு உங்களுடைய ஆசீர்வாதத்திற்காக வைக்க விரும்புகின்றேன்.

உலகப் பிரகரமாக நான் ஒரு தேயிலைத் தோட்டத்தில் குமஸ்தாவாக வேலை செய்து கொண்டிருந்த நாட்கள் அவை. என்னுடைய உலகப் பிரகாரமான வேலையை விட்டுவிட்டு தம்முடைய ஊழியத்தை முழு நேரப் பணியாளனாக செய்ய வரும்படியாக பல தடவைகளும் ஆண்டவர் என்னை அழைத்து வந்ததுண்டு. ஆனால் நான் அவருக்கு கீழ்ப்படியாதவனாக சாக்குப்போக்குகளைக் கூறி வந்து கொண்டிருந்தேன். அந்த தேயிலைத் தோட்டத்தில் 1957 ஆம் ஆண்டு முதல் 19 ஆண்டுகளும் 8 மாதங்களும் நான் வேலை செய்து முடித்திருந்தேன். 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்று நினைக்கிறேன். அந்த மாதத்தின் ஒரு நாள் நள்ளிரவு எனது அயர்ந்த தூக்கத்தில் தேவன் எனது உலகப்பிரகாரமான வேலையை விட்டுவிட்டு முழுமையாக தமக்கு ஊழியம் செய்யும்படியாக திட்டமும் தெளிவுமாக பேசினார். நான் உடனே ஆண்டவரிடம் "அப்பா, உம்முடைய வார்த்தையின்படி நான் எனது உலக அலுவலை விட்டு விட்டு உமது ஊழியத்தைச் செய்ய ஆயத்தமாக இருக்கின்றேன். ஆனால், நான் வேலையை விட்ட பின்னர் வறுமை, பாடுகள், கஷ்டங்கள் என்னைச்சூழ்ந்தால் உம்முடன் போராடி ஜெபிக்க உம்முடைய திட்டமான வாக்குத்தத்தை எனக்கு தாரும். நீர் அப்படி வாக்குத்தத்தம் தரும் பட்சத்தில் எனது வேலையை உடனே நான் விட்டுவிடுகின்றேன்" என்று என் உள்ளத்தில் பேசினேன். அவ்வளவுதான், உனது வேதாகமத்தை திறந்து பார், அங்கே நான் உனக்கு வாக்குத்தத்தம் தருகின்றேன் என்றார். நான் படுக்கையிலிருந்து எழுந்து எனது தலையணையின் அடியிலிருந்த டார்ச் விளக்கை எடுத்து வேதாகமத்தை திறந்து டார்ச் லைட்டை அதில் போட்டேன். அதின் ஒளி ஏசாயா 60 ஆம் அதிகாரம் 19, 20 ஆம் வசனங்களில் விழுந்தது. "இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை, கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார், உன் துக்க நாட்கள் முடிந்து போம்" என்பதே அவர் எனக்குக் கொடுத்த வாக்குத்தத்தமாகும். தேவன் கொடுத்த மேற்கண்ட வாக்குத்தத்தை நான் அவருக்கு காண்பித்து பின் வந்த நாட்களில் அவருடன் போராட எனக்கு அவசியமில்லாதிருந்தது. காரணம், அவரே தம்முடைய வாக்குத்தத்தத்தை தேவையான நேரங்களில் எனக்கு நினைவுபடுத்தி அற்புதமாக என்னை வழி நடத்திச் சென்றார்.

எனது மூத்த மகன் சுந்தர்சிங்கை பாளையங்கோட்டையிலுள்ள புனித யோவான் பள்ளியில் பி.ஏ., வகுப்பில் சேர்க்க அங்கு அழைத்துச் சென்றிருந்தேன். மகனுக்கு அங்கு இடம் கிடைக்கவில்லை. நானும் மகனும் மிகுந்த துக்கத்தோடு வழி நடந்து வந்து கொண்டிருந்தோம். நாங்கள் பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள சமாதானபுரம் என்ற இடத்திற்கு வரவும் அங்குள்ள சிறிய தேவாலயத்தின் அருகிலுள்ள ஒரு வீட்டின் தலை வாசல் நிலைக்கால் சட்டத்தில் அன்பின் ஆண்டவர் எனக்கு வாக்குத்தத்தமாகத் தந்த வசனங்கள் பச்சை போர்டில் வெள்ளை எழுத்தில் அழகாக எழுதி வைக்கப்பட்டிருப்பதை நான் ஆச்சரியத்துடன் கவனித்தேன். உடனே என் உள்ளத்தில் "மகனே கலங்காதே, நான் எனது வாக்கின்படி உன்னை வழிநடத்துவேன்" என்று கூறினார். அந்தப்படியே அதே நாளில் நாகர்கோவிலிலுள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மகனுக்கு இடம் கிடைத்தது. அங்கேதான் மகன் எம்.ஏ., வரை படித்து முடித்தார்கள். கர்த்தருக்கு துதி உண்டாவதாக. இப்படி எனது வாழ்வின் ஒவ்வொரு இக்கட்டு சமயங்களிலும் கர்த்தரே தமது வாக்குத்தத்ததை எனக்கு நினைப்பூட்டி நினைப்பூட்டி என்னைக் கரம் பிடித்து வழிநடத்திச் சென்றார். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.

 

சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்தி வைராக்கியமாயிருந்தேன்

இந்தத் தலையங்கச் செய்தியை எழுதிக் கொண்டிருந்த நாட்கள் ஒன்றின் அதி காலை வேளையில் நான் எனது படுக்கையிலிருந்து எழுந்தபோது எலியா தீர்க்கன் சொன்ன "சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்தி வைராக்கியமாயிருந்தேன்" என்ற வார்த்தைகளை என் உதடுகள் உச்சரித்துக் கொண்டிருப்பதை நான் ஆச்சரியத்துடன் கவனித்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் "நீயும் எனக்காக அத்தனை வைராக்கியம் உள்ளவனாய் இருந்திருக்கின்றாய்" என்று என் உள்ளத்தில் திடீரென ஒலிப்பதைக் கேட்டு கர்த்தரில் நான் அகமகிழ்ந்தேன்.

உண்மைதான், நான் மிகவும் சிறுவனாக இருந்த காலம் முதல் கர்த்தருக்காக மிகவும் வைராக்கியம் பாராட்டியவன்தான். அந்த வைராக்கியம்தான் அந்த நாட்களில் முரட்டுத்தனமாக எங்கள் ஊர் இந்து மக்கள் வழிபடும் மண் விக்கிரகச் சிலைகள் மூன்றில் சிலுவை அடையாளங்களைப் போட வைத்தது. என்னில் காணப்பட்ட அந்த பக்தி வைராக்கியமானது பின் வந்த காலங்களில் எல்லா மக்களும் இயேசு இரட்சகரை தங்கள் சொந்த பரம தகப்பனாக அறிந்து இரட்சண்யத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் திரும்பினது. அந்த வைராக்கியம்தான் என்னை தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்துடன் இந்தியாவின் பற்பல இடங்களுக்கும், நேப்பாளம், சிக்கிம், பூட்டான் நாடுகளுக்கும் என்னை அழைத்துச் சென்றது. கர்த்தர் என்னை எங்கெங்கெல்லாம் தமது மகிமையின் சுவிசேஷத்தினிமித்தமாக அழைத்துச் சென்றார் என்ற நடபடிகள் எல்லாம் அவருடைய ஞாபக புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் எந்த ஒரு சுவிசேஷகனும் இதுவரை சென்றிராத இடங்களுக்கெல்லாம் நம் அன்பின் ஆண்டவர் என்னைக் கூட்டிச் சென்று எனது பாதங்களைப் பதியச் செய்தார். காஷ்மீரத்திலிருந்து 2 முழுமையான நாட்கள் பிரயாண தூரத்திலுள்ள ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கு என்ற தீபெத்திய மக்கள் வாழ்கின்ற கிராமங்களுக்கெல்லாம் என்னைக் கூட்டிச் சென்று தமது சுவிசேஷத்தை திபெத்திய மொழியில் அந்த மக்களுக்குக் கொடுக்க கிருபை செய்தார். அந்தப் பனிப்பள்ளத்தாக்கில் பிராணவாயு குறைவானதால் புதிதாக அங்கு செல்லுவோர் தாராளமாக மூச்சு விடுவது சற்று கஷ்டமாகவிருக்கும். அந்த இடத்தில் ஓர் கிராமத்தில் ஒரு தீபெத்திய மனிதருக்கு நான் கொடுத்த தீபெத் மொழி சுவிசேஷ பிரதி ஒன்றை ஆவலாக படித்துக் கொண்டிருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

தங்கள் இடத்தில் நான் வந்து கிறிஸ்தவ மார்க்கத்தைப் பரப்புகின்றேன் என்ற கடுங்கோபத்தில் அங்கிருந்த தீபெத்தியர்கள் அங்குள்ள குறும்புக்கார பையன்களை ஏவிவிட்டு அங்குள்ள நதியில் நான் ஒரு நாள் குளித்துக் கொண்டிருந்தபோது என் மேல் கல் எறிய வைத்தார்கள். மிகவும் பள்ளத்தில் குளித்துக் கொண்டிருந்த எனக்கு அருகில் அந்தக் கற்கள் விழுந்தவண்ணமாக இருந்தன. எனினும், அன்பின் ஆண்டவர் ஒரு கல்லாவது என்மேல் விழாதவாறு என்னைக் கிருபையாகப் பாதுகாத்துக் கொண்டார். நானும் துரிதம் துரிதமாக குளித்துவிட்டு பள்ளத்திலிருந்து மேலே ஏறி வந்துவிட்டேன். அப்பொழுது அந்தக் குறும்புக்கார பையன்கள் எனக்கு முன்பாக ஓடுவதைக் கண்டேன்.

நான் அந்த ஸன்ஸ்கார் பனிப் பள்ளத்தாக்கிலிருந்து இருள் சூழ்ந்த ஒரு நாள் அதிகாலை நேரம் ஜம்மு காஷ்மீர் அரசுக்குச் சொந்தமான ஒரு திறந்த டிரக்கில் ஏறி கார்க்கில் என்ற இடத்திற்கு அந்த நாளின் மாலையில் வந்து சேர்ந்தேன். அந்த இடத்தின் அந்த அதிகாலைக் கடுங்குளிர் காரணமாக எனது நாசியிலிருந்து அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டது. நான் ஏறிவந்த வாகனம் இடையில் ஓரிடத்தில் பிரயாணிகள் நண்பகல் ஆகாரம் சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. கொஞ்ச நேரம் சென்ற பின்னர் ஒரு கூட்டம் தீபெத்தியர்கள் தங்கள் லாமாவைக் கூட்டிக்கொண்டு என்னண்டை வந்து எனக்கு விரோதமாக அவரிடம் ஏதோ புகார் கொடுத்தார்கள். தங்களுடைய கிராமங்களுக்கெல்லாம் நான் சென்று கிறிஸ்தவ மார்க்கத்தைப் பரப்பினேன் என்று அவர்கள் அந்த லாமாவிடம் புகார் சொல்லியிருப்பார்கள். அவர்களுக்கு ஆதரவாக அங்கு வந்திருந்த ஒரு மேல்நாட்டு கிறிஸ்தவ சுற்றுலா பயணியும் சேர்ந்து கொண்டான். வரவர கூட்டம் அதிகரித்தது. அவர்கள் என்மேல் கைபோட நெருங்கும் வேளையில் நான் பிரயாணம் செய்து வந்த வாகனத்தின் முகமதிய டிரைவர் குறுக்கிட்டு உடனே வாகனத்தை கிளப்பத் தொடங்கினார். அதின் காரணமாக அந்த இடத்தில் அன்று நான் தேவகிருபையால் பாதுகாக்கப்பட்டேன்.

நான் இரண்டாம் முறையாக காஷ்மீரிலிருந்து லே லடாக் என்ற மேற்கு தீபெத் செல்லும்போது கார்க்கில் என்ற ஒரு சிறிய முகமதிய பட்டணத்தில் சிமெண்ட் போன்ற புழுதி மண்ணுக்குள் தெருவிலுள்ள ஒரு கடையின் கடைசிப்படிக்கட்டில் எங்கள் தலைகளை வைத்து நானும், காலஞ்சென்ற பரிசுத்தவானான சாது கந்தையானந்து ஐயா அவர்களும் ஒரு இரா முழுவதும் படுத்திருந்தோம். எங்களுக்கு இராத்தங்க அங்குள்ள முகமதியர்கள் எவரும் இடம் தர மறுத்துவிட்டார்கள். கடுங்குளிரான அந்த இடத்தில் நாங்கள் கர்த்தருக்குத் துதி செலுத்திக் கொண்டு நடுநடுங்கிக்கொண்டு படுத்திருந்தோம்.

பூட்டான் தேசத்தில் பாரு என்ற ஒரு கடையாந்திர கிராமத்திற்கு நான் சென்று ஒரு மாலை மயங்கும் நேரத்தில் எந்த ஒரு வீட்டிலும் இராத்தங்க என்னை அனுமதிக்காத காரணத்தால் கடைசியாக அங்குள்ள ஓரிடத்தில் நாய்கள் படுத்திருந்த ஒரு தகரக் கொட்டகையில் அன்றைய இரவைக் களிப்பதற்காக நான் எனது பொருட்களை எடுத்துக்கொண்டு செல்லவிருந்த கடைசி நேரத்தில் நான் ஆரம்பத்தில் இராத்தங்க இடம் கேட்ட பூட்டானிய மனிதன் இரக்கம் கொண்டு தனது வீட்டில் என்னைப் படுக்க அனுமதித்தான். கர்த்தர் அந்த மனிதனை ஆசீர்வதிப்பாராக. அந்த வீட்டினுள்ளேயே கடுங்குளிர் காரணமாக நான் ஒரு கண்ணுக்கும் தூக்கமில்லாமல் இரா முழுவதும் நடுநடுங்கிக் கொண்டிருந்தேன். அந்த வீட்டின் உட்பகுதி கூரையில் எருமை மாட்டின் பெரிய பெரிய இறைச்சி துண்டங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதின் நாற்றம் வேறு வீசிக் கொண்டிருந்தது. காலை எழுந்து கதவைத் திறந்து வெளியே தெருவைப் பார்த்தால் தெரு முழுவதும் வெண்பனியால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு திகைப்படைந்தேன். ஒருக்கால் நான் அந்த தகரக் கொட்டகையில் படுத்திருந்தால் நிச்சயமாக பனியால் உறைந்து மாண்டு போயிருப்பேன். நிச்சயமாக அன்பின் தேவன் என்னை அந்த இடத்தில் அதி அற்புதமாக அந்த பூட்டானிய மனிதனுடைய இருதயத்தில் கடைசி நிமிடத்தில் இரக்கத்தைக் கட்டளையிட்டு என்னைக் காத்து கொண்டார். "தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்" (2 சாமு 8 : 14) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது.

நேப்பாள எல்லையில் கிறிஸ்தவப் பிரசுரங்களுடன் நான் பிடிபட்டு அரசாங்க அதிகாரிகளின் முன் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றேன். நேப்பாள கிராமங்களின் வீடுகளின் திண்ணைகளில் நான் இராக்காலங்களில் படுத்திருக்கின்றேன். இரவில் தெள்ளுப்பூச்சி கடிகளிலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள என் உடம்பெல்லாம் D.D.T. என்ற ரசாயான பவுடரைப் பூசிக்கொண்டு குப்பை மேட்டில் புரண்டு எழும்பிய கழுதையைப்போலப் படுத்திருக்கின்றேன். ஓடோமஸ் கிரீம் போன்றவை வாங்க பண வசதில்லாததால் அந்த நாட்களில் அப்படிச் செய்தேன். நேப்பாள நாட்டின் கிராமங்கள் எப்படியிருக்கும் என்பதை இந்தச் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள ஒரு படத்தின் மூலமாக நீங்கள் காணலாம்.

நேப்பாள தேசத்தில் அப்படி நான் ஒரு வீட்டின் திண்ணையில் நான் என் பொருட்ளை எனது தலைக்கு அடியில் வைத்துப் படுத்திருந்தபோது நள்ளிரவு நேரம் ஒரு அழகான சின்னப் பெண் பிள்ளை என்னை எழுப்பி நான் எனது பொருட்களை வீட்டுக்காரரிடத்தில் கொடுத்துவிட்டுப் படுக்கும்படியாகக் கேட்டது. நல்ல அயர்ந்த தூக்கத்தில் நான் அந்தக் குழந்தையைப் பார்த்தபோது அதின் உருவம் பிரகாசமாக இருந்தது. அந்தக் குழந்தை நல்ல தெளிவான ஹிந்தியில் அந்த வார்த்தைகளைப் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் குழந்தையின் சொற்படியே நான் என் பொருட்களை நான் படுத்திருந்த திண்ணையின் வீட்டுக்காரரின் கதவைத் தட்டி அவர்களிடம் கொடுத்துவிட்டு எனது டார்ச் லைட்டை மாத்திரம் என்னுடைய தலைக்கு அருகில் வைத்துக் கொண்டு திரும்பவும் படுத்துக்கொண்டேன். இரவில் நான் கண் விழித்துப் பார்த்தபோது அந்த எனது டார்ச் லைட்டை திருடர்கள் திருடிக்கொண்டு சென்றுவிட்டார்கள். ஒரு வேளை அந்தக்குழந்தை என்னைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்காத பட்சத்தில் எனது பொருட்களையும், பணங்களையும் இழந்து சொல்லொண்ணா துயரங்களுக்கு நான் ஆளாகி இருப்பேன். அந்த நள்ளிரவு நேரம் வந்து சுத்தமான ஹிந்தி மொழியில் பேசிய அந்தக் குழந்தை யார்? அந்தக் கிராமத்திலுள்ள குழந்தைகள் எல்லாம் நேப்பாள மொழியில்தானே பேசும். அப்படியானால் அந்தக் குழந்தை நான் என் முழு இருதயத்தால் நேசிக்கும் என் அன்பின் கன்மலை பரத்திலிருந்து அனுப்பிய ஒரு தேவதூதனாக இருக்குமோ! நான் அப்படியேதான் இந்நாள் வரை விசுவாசித்து வருகின்றேன். முடிவில்லாத நித்தியம் அதை நமக்கு வெளிப்படுத்தும். கர்த்தருக்கே மகிமை.

ஆரம்ப நாட்களில் எனது இரு ஆண் மக்களும் சின்னஞ்சிறாராக இருந்தார்கள். மூத்த மகனுக்கு 13 வயதும் அடுத்த மகனுக்கு 12 வயதாகவுமிருந்தது. எனது மனைவி முற்றிலும் பெலவீனமானவர்கள். அந்தச் சூழ்நிலையில் அவர்களை விட்டுவிட்டு கர்த்தருடைய ஊழியத்தின் பாதையில் நான் வடக்கே கடந்து செல்லுவேன். அந்த நாளில் கோத்தகிரியில் இருந்த சின்னஞ்சிறிய பேருந்து நிலையத்தில் என்னை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு பிள்ளைகள் இருவரும் தங்கள் கண்களில் கண்ணீர் வடிய வடிய அழுது கொண்டே வீட்டிற்குச் செல்லுவார்கள். நானும் கண்களில் கண்ணீரை வடித்துக் கொண்டே வடக்கே தேவ ஊழியத்துக்காக கடந்து செல்லுவேன்.

ஆரம்ப கால வட இந்திய ஊழிய நாட்களில் பண வசதிகள் மிகவும் குறைவாக இருந்தபடியால் பசி பட்டினியோடு ஊழியம் செய்த நாட்கள் பல உண்டு. ராஜஸ்தான் மாநிலத்தில் மத்தியான வேளையில் ஆகாரம் வாங்கிச் சாப்பிட பணமின்றி ஹூட் என்ற வெல்லத்தை வாங்கிச் சாப்பிட்டு வயிறு நிறைய தண்ணீர் குடித்து ஊழியம் செய்த நாட்களை நான் மறவேன். ஒரு சமயம் டில்லி ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்திலேயே 2 நாட்கள் பசி பட்டினியோடு செலவிட வேண்டிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. ரிசர்வேஷன் செய்யும்படியாக நான் பணம் கொடுத்த சகோதரன் பணத்தை வாங்கிச் செலவு செய்துவிட்டு அந்தவிதமான ஒரு இன்னலுக்குள் என்னை தள்ளிவிட்டார்கள்.

எப்படியாவது ஜீவனுள்ள தேவனின் மகிமையின் சுவிசேஷத்தை அதை அறியாத மக்களுக்கு அறிவித்துவிட வேண்டும், தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகள் அதை அறியாத மக்களுடைய கரங்களில் போய்க்கிடைத்துவிட வேண்டும் என்ற ஒரே வைராக்கியத்தின் காரணமாக நான் கடந்து சென்ற பாதைகளும், பட்ட பாடுகளும், துயரங்களும் கர்த்தர் ஒருவரே அறிகின்றவராக இருக்கின்றார்.

ஆம், கர்த்தருக்காக வைராக்கியம் காண்பிக்கும் மக்கள் ஆண்டவருக்குத் தேவை. என் அருமை மனைவி இறந்த ஆண்டான 1996 ஆம் ஆண்டைத் தவிர அநேகமாக ஒவ்வொரு ஆண்டும் தேவ ஊழியத்தின் பாதையில் வடக்கே நான் சென்று வந்திருக்கின்றேன். அங்கு செய்த ஊழியங்களை எல்லாம் தேவ கிருபையால் நமது தேவ எக்காள பத்திரிக்கையில் கடந்த காலங்களில் நான் விபரமாக எழுதியிருக்கின்றேன். தேவ எக்காளத்தின் பழைய சந்தாதாரர்களுக்கெல்லாம் அந்த விபரணங்கள் நன்கு தெரியும். புதிய சந்தாதாரர்களுக்கு இரத்தினச் சுருக்கமாக அந்த விபரங்களை இங்கே எழுதுகின்றேன்.

 

ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை
(நெகேமியா 5 : 16)

தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை அறிவிக்கும் காரியத்தில் மட்டுமல்ல, அவருடைய பரிசுத்த நாமத்தின் பேரிலும் நான் மிகுந்த வைராக்கியம் உடையவனாக இருக்கின்றேன். எந்தவிதத்திலும் கர்த்தருடைய பரிசுத்த நாமம் நம் மூலமாக தூஷிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றேன். நான் எனது உலகப் பிரகாரமான வேலையை விட்டுவிட்டு 1976 ஆம் ஆண்டு கோத்தகிரி வந்தபோது கோத்தகிரியில் நிலத்தின் விலை ஒரு செண்டுக்கு ரூபாய் 300 மாத்திரமே. என்னை நேசித்த சிலர் சில செண்டுகள் நிலத்தை வாங்கிப் போடும்படியாகவும் பின் நாட்களில் அதற்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் எனக்கு ஆலோசனை சொன்னார்கள். அவர்களின் அந்த யோசனைக்கு நான் இணங்கவில்லை. அவர்கள் சொன்ன ஆலோசனை உலகப் பிரகாரமாக நூற்றுக்கு நூறு உண்மைதான். இன்று கோத்தகிரியில் ஒரு செண்ட் நிலத்தின் விலை 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இருப்பதாகச் சொல்லுகின்றனர். நான் அப்படி அன்று நிலம் வாங்கிப் போட்டிருந்தால், கர்த்தருடைய பணத்தில் எத்தனை இலட்சம் கொடுத்து நிலம் வாங்கிக் கொண்டான் என்று மக்கள் இன்று பேசுவார்கள். அத்துடன் கர்த்தருடைய பரிசுத்த நாமமும் என் மூலமாக வெகுவாக தூஷிக்கப்படும்.

இந்த உலகத்தில் சொந்தமான ஒரு வீடு கட்டாயம் நமக்கு அவசியமானது. வாடகை வீட்டில் வாழ்வது எத்தனை துயரமானது என்பதை வாடகை வீட்டில் குடி இருந்த, குடி இருக்கின்ற மக்களுக்கே நன்கு தெரியும். வாடகை வீட்டு வாழ்க்கை முதல்தரமான எகிப்திய அல்லது பாபிலோனிய அடிமைத்தனமாகும். கோத்தகிரியில் நான் இப்பொழுது இருப்பது எனது நான்காம் வாடகை வீடாகும். கடந்த மூன்று வீடுகளிலும் நாங்கள் அனுபவித்த கசப்பான அனுபவங்களை கர்த்தர் அறிகின்றவராக இருக்கின்றார். அந்த துயர அனுபவங்களை இங்கு விவரிக்க நான் விரும்பவில்லை. இத்தனை இருப்பினும் ஒரு வாடகை வீட்டில் குடி இருப்பதையே நான் அதிகமாக விரும்புகின்றேன். நான் குடியிருக்க சொந்தமான ஒரு வீட்டைக் கட்டித் தரக்கூட முன் வந்த ஒரு தேவப்பிள்ளை உண்டு. அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. தலைசாய்க்க இடமில்லை என்று அன்பின் கருணாகரன் சொன்னாரே (மத் 8 :20) இப்பொழுது நான் இருக்கும் வீட்டிற்கு வந்து சுமார் 20 ஆண்டு காலம் ஆகிவிட்டது. கடைசி வரை வீட்டுக்கார மக்கள் இந்த வீட்டை விட்டு என்னைக் காலிபண்ணிப் போகச் சொல்லாமல் இருக்க தேவப்பிள்ளைகளாகிய நீங்களும் அன்பாக, ஊக்கமாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

 

மேல்நாட்டு தேவ ஊழிய அழைப்புகளை எல்லாம் நிராகரித்தேன்

தேவ ஊழியத்தைச் செய்ய வரும்படியாக இங்கிலாந்து, அரபு நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற தேசங்களுக்கெல்லாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்னை அன்பாக அழைத்தனர். இந்தக் கடைசி நாட்களில் தேவ ஊழியர்கள் (எல்லாரும் அல்ல) துரிதமாக நிறைய பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு வெளி நாடுகளுக்கு அடிக்கடி போய் வருவதை நாம் நன்கறிவோம் அல்லவா? மேல் நாட்டு தேவ ஊழியத்திற்குச் சென்ற தமிழ் நாட்டு தேவ ஊழியர் ஒருவர் ஒரு பெரிய தங்கச் சங்கிலியை வாங்கி தனது கழுத்தில் மறைவாகப் போட்டவராக மும்பை சர்வதேச விமான தளத்தில் வந்து இறங்கிய அற்புத காட்சியை அந்த விமான நிலையத்தில் உயர் அதிகாரியாக பணி புரியும் ஒரு பரிசுத்த தேவப் பிள்ளை தன் கண்களால் கண்டு என்னிடம் துக்கத்தோடு அது குறித்துச் சொன்னார்கள். கழுத்தில் தாலிக்கொடி, தேவ ஊழியரது பெட்டிகளுக்குள் தேவனுக்குப் பிரியமில்லாத என்னென்ன பொருட்கள் எல்லாம் இருந்ததோ கர்த்தர் ஒருவரே அறிவார். இப்படிப்பட்ட தேவ தூஷணையான காரியங்கள் மேல் நாட்டு ஊழியங்களில் நடப்பதால் அந்த மேல் நாட்டு ஊழியங்களை முற்றுமாக நான் அரோசித்தேன்.

ஒரு அருமையான பரிசுத்த மகன் இஸ்ரவேல் தேசத்திற்கு நான் கட்டாயம் சென்று பார்த்து வரும்படியாக என்னை விரும்பிக் கேட்டு அதற்கான அனைத்து செலவினங்களையும் தான் ஏற்றுக் கொள்ள முன் வந்தார்கள். அந்த தேவப் பிள்ளையிடம் "பூலோகத்திலுள்ள எருசலேமுக்கு அல்ல பரம எருசலேம் செல்லுவதற்காகவே நான் இப்பொழுது ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றேன்" என்று அன்பாகச் சொன்னேன்.

 

ஒருவனுடைய வெள்ளியையாகிலும்,
பொன்னையாகிலும் நான் இச்சிக்கவில்லை
(அப் 20:33)

"பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்" என்ற ஒரு முது மொழி நம் தமிழ் நாட்டில் உண்டு. பணத்தின் மேல் மக்கள் கொண்டிருக்கும் வெறியான ஆசையை நாம் இந்த உலகத்தில் கண்கூடாகக் காண்கின்றோம். "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது, சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்" (1 தீமோ 6 : 10) என்று அப்போஸ்தலன் நிருபத்தில் தேவ ஜனத்தை அருமையாக எச்சரித்து எழுதுகின்றார். பண ஆசை வந்த காரணத்தால் நம் தமிழ் நாட்டு தேவ ஊழியர்கள் பலர் தங்களைத் தாங்களே உருவக் குத்திக் கொண்டு நித்திய ஜீவனுக்கென்று உயிர் பிழைக்க வழியில்லாமல் குளுவனுடைய ஈட்டியால் குத்துண்ட பூனை ஈட்டி முனையில் கிடந்து துடிதுடித்துக் கொண்டிருப்பதைப் போல இன்று துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்தகோ! உருவக் குத்தப்பட்ட பின்னர் உயிர் பிழைப்பு ஏது! கர்த்தருடைய வேதாகமத்தை கரத்தில் எடுத்து தேவ ஜனத்திற்கு பிரசிங்கிக்கும் தேவ ஊழியரே, உங்கள் விலையேறப்பெற்ற ஆத்துமாவை பண ஆசை என்ற மாயைக்குக் கையளித்து விடாதீர்கள்.

பண ஆசை என்பது எவருக்கும் அநேகமாக பிறப்பிலிருந்தே வரும் காரியமாகும். என்னைத் தம்முடைய உண்மையும், உத்தமமுமான ஊழியனாக உலகத் தோற்றத்திற்கு முன்பே தெரிந்து கொண்ட (எபேசியர் 1 : 4) நம் அன்பின் பரம தகப்பன் அந்த பண ஆசை என்ற நச்சு வேரை குழந்தை பிராயத்திலேயே என் உள்ளத்திலிருந்து கிள்ளி எறிந்துவிட்டார். சிறு பிராயத்திலேயே இரக்கம், ஈகை, அன்பு, கருணையை அவர் எனக்குத் தந்தார். அதற்காக நான் அவரது பொற் பாதங்களை இன்றும் முத்தமிட்டுப் பணிந்து வருகின்றேன். எனது தகப்பனார் இரத்தப்பாடு பட்டு சம்பாதிக்கும் பலசரக்கு கடையின் பணத்தை நான் களவாடி ஊரிலுள்ள ஏழை எளியோருக்கு அந்நாட்களில் கொடுத்திருக்கின்றேன். நான் கல்வி பயின்ற உயர்நிலை பள்ளிக்கூடம் எங்கள் ஊரிலிருந்து சுமார் மூன்று மைல்கள் தூரத்திலிருந்தது. மத்தியானம் எனது ஆகாரத்திற்காக எனது தாயார் அலுமினிய பாத்திரத்தில் வைத்துக் கொடுக்கும் போஜனத்தை வழிப்பாதையில் பசியோடு நான் காண்கின்ற ஏழை யாருக்காவது கொடுத்துவிட்டு நான் பட்டினியாய் கிடந்திருக்கின்றேன்.

சிறு பிராயத்திலேயே உருவான அந்தப் பண ஆசையின்மை தேவ ஊழியத்தின் பாதையில் நான் நம் அன்பின் ஆண்டவருக்கு முன்பாக மிகுந்த உண்மையோடும் உத்தமத்தோடும் வழிநடக்க எனக்கு உதவி செய்தது. தேவ பிள்ளைகள், "உங்கள் சொந்த செலவிற்காக", "உங்கள் நல்ல ஆகாரங்களுக்காக", "நீங்கள் புதிய வஸ்திரங்களை வாங்கிக் கொள்ள" "உங்கள் பிள்ளைகளின் செலவுகளுக்காக" என்பது போன்ற பல்வேறு விருப்பங்களோடு அனுப்பிய பணங்களை எல்லாம் நான் தனிமைப் படுத்தியிருந்தாலே உலகப்பிரகாரமாக நான் என்ன என்னவெல்லாமோ செய்திருக்கலாம். அது தேவனுக்கு முன்பாக ஒரு தவறும் இல்லை. எனினும், "நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை" (நெகே 5 : 15) என்ற தேவ மனிதரின் வார்த்தையின்படி நான் அதைக் கூட செய்யவில்லை.

தேவப் பிள்ளைகள் ஊழியங்களுக்காக எனக்கு அனுப்பும் காணிக்கைகளை ஒரு கரத்தில் வாங்கி மறு கரத்தால் மிஷனரி ஊழியப் பணிகள் போன்றவைகளுக்காக கொடுத்துவிடுகின்றேன். வடக்கே வாகன ஊழியங்கள் போன்றவற்றிற்காக அனுப்பும் காணிக்கை டிராப்ட்டுகளை தேவ சமூகத்தில் வைத்து கர்த்தர் தமது பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்படியாக முழங்கலூன்றி ஜெபித்து ஊழியத்தின் தேவைக்கான அடுத்த டிராப்ட்டுகளாக எடுத்து அனுப்பிவிடுகின்றேன். உதவி செய்ய முன் வரும் தேவ மக்களிடம் பணத்தை எனக்கு அனுப்பாமல் அது யாருக்கு அனுப்பப்பட வேண்டுமோ அந்த இடங்களுக்கு (குறிப்பாக இந்திய வேதாகம சங்கம்) போன்றவற்றிற்கு டிராப்ட் எடுத்து அனுப்பச் சொல்லி கேட்கின்றேன். நான் எடுக்கும் டிராப்ட்டுகளின் ஜெராக்ஸ் காப்பிகளை காணிக்கை அனுப்பிய தேவ மக்களுக்கு அனுப்பி பணம் எந்த வகைக்காக செலவிடப்பட்டது என்பதை தெரிவிக்கின்றேன். இதின் காரணமாக அநேக சமயங்களில் நான் முற்றும் வெறுமையாகி எனது அத்தியாவசியமான சிறு சிறு தேவைகளுக்குக் கூட பணமின்றி தேவ சமூகத்தை நோக்கி கெஞ்சி நிற்கின்றேன் என்றால் நீங்கள் நம்ப மறுப்பீர்கள். ஆனால் அப்படித்தான் நடக்கின்றது. அன்பின் ஆண்டவர் அந்த தேவைகளைச் சந்திக்கும் அதிசயமான வழி நடத்துதல்களைக் கண்டு ஆவியில் களிகூர்ந்து ஆனந்திக்கின்றேன். பண ஆசையின் வாசனையே எனக்கு இல்லாத காரணத்தால் தேவன் தமது ஊழியத்தை தம்முடைய ஜனத்தின் மெய்யான மனந்திரும்புதலுக்கும், உயிர் மீட்சிக்கும் ஏதுவாக அற்புதமாகப் பயன்படுத்தி வருகின்றார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

 

ஏழைப் பரதேசியின் ஜெப, உபவாச வாழ்க்கை

ஒரு தனி மனிதனை தேவன் தமது ஊழியத்தின் பாதையில் விசேஷமாக, தேவ எக்காளம் பத்திரிக்கையின் மூலமாக கடந்த 40 ஆண்டு காலம் அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாகவும், அவர்களுடைய மனந்திரும்புதல், பரிசுத்த ஜீவியம், நித்திய இளைப்பாறுதலுக்கு ஆயத்தம் செய்து வந்திருக்கின்றார் என்றால் அந்த தனி மனிதனை அவர் தமது இருதயத்துக்கு உகந்த பாத்திரமாக கண்டு கொண்டிருந்தார் என்று நாம் சந்தேகத்துக்கு இடமின்றி நிச்சயமாக நம்பலாம்.

அந்த பரிசுத்த கர்த்தரின் இருதயக் கதறலான ஜெப உபவாச வாழ்க்கை எனது வாழ்வில் முதல் இடம் பிடித்து நிற்கின்றது. அந்த அன்பரின் பாதங்களில் நான் எத்தனை ஆயிரம் மணி நேரங்களை இது நாள் வரை ஜெபத்தில் செலவிட்டேன் என்பதை முடிவில்லா நித்தியம் மட்டுமே நமக்கு வெளிப்படுத்தும். கடந்த கால ஆண்டுகளைப் போலவில்லாமல் இந்த நாட்களில் நான் இன்னும் அதிகம் அதிகமாக ஜெபித்து வருகின்றேன். சில நாட்களில் தேவ ஊழியப் பணிகள் எதுவும் செய்ய மனம் இல்லாமல் பகல் முழுவதும் இடைவெளி விட்டுவிட்டு முழங்கால்களிலேயே நான் நிற்கின்றேன். ஆம், ஆண்டவருடைய சமூகப் பிரசன்னம் அப்படிப்பட்ட நாட்களில் அத்தனை இனிமையாக எனக்கு ஆகிவிடுகின்றது. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்குத் துதி உண்டாவதாக. இரவில் நேரத்திலேயே நான் எனது படுக்கைக்குச் சென்றுவிட்டு இராக்கால ஜாமங்களிலும் தேவ சமூகத்தில் ஜெபத்தில் தரித்திருக்கின்றேன். எனது ஜெப வேளை எனக்கு ஆனந்த களிகூருதலின் நேரமாகவிருக்கும். தேவனுடைய வசனங்களை மனதில் தியானித்துக் கொண்ட ஜெபிப்பேன். ஜெபமும், வேத வசனதியானமும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து இருக்கும். ஜெப வேளைகளில் பாடல்களும் பாடி மகிழ்வேன். பக்தன் பாடியது போல எனது ஜெப வேளைகள் ஆனந்த காலமாக இருக்கும்.

ஆ! இன்ப காலமல்லோ- ஜெப வேளை?
ஆனந்த காலமல்லோ?
பூவின் கவலைகள் போக்கி என் ஆசையை
பொன்னுலகாதிபன் முன்னே கொண்டேகிடும்-

கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையால் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டவருடைய சிலுவைப் பாடுகளை தியானிக்கும் லெந்து கால நாட்களில் நான் எனது நீண்ட உபவாச ஜெபத்தை தேவ பெலத்தைக் கொண்டு இந்நாள் வரை ஒழுங்காக எடுத்து வந்திருக்கின்றேன். என்னுடைய விருத்தாப்பிய வயதில் உள்ள, ஏன் ஜவானான கிறிஸ்தவ வாலிபர்கள் கூட என்னுடைய உபாவாச திட்டத்தை கரங்களில் எடுப்பது மிகவும் கடினமான காரியமாகும். இருப்பினும், மெய் தேவ பக்தர்கள் என்னைவிட கடுமையான உபவாசங்களை இன்றும் மேற்கொள்ளுகின்றனர். நான் இரவில் மட்டும் ஒரு ஆகாரம் எடுத்து பகற்காலத்தில் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். தேவனுடைய பூரண கிருபையையும், அவருடைய உன்னத பெலத்தையும் கொண்டு நான் இந்த உபவாசங்களை அதிசயமாக எடுத்து முடித்து வருகின்றேன். கர்த்தருக்கே மகிமை. சரீரத்தில் சர்க்கரை நோயின் கடுமையின் மத்தியில் நான் இந்த உபவாசங்களை மேற்கொள்ளுகின்றேன் என்றால் நீங்கள் கட்டாயம் ஆச்சரியப்படுவீர்கள். எல்லாம் தேவ கிருபையே.

அசிசி பட்டணத்து பரிசுத்த துறவியான பிரான்சிஸ் மகாத்துமா அவர்கள் தான் மரிப்பதற்கு முன்பாகத் தனது சொந்த சரீரத்திடம் மன்னிப்புக் கேட்டாராம். ஆம், அவர் தனது சரீரத்தை தனது வாழ்நாள் காலத்தில் நன்கு வதைத்து சித்திரவதை செய்து விட்டார். சரீரம் விரும்பிய எதனையும் அவர் அதற்குக் கொடுக்க மறுத்துவிட்டார். சரீரம் ஆசை ஆவலாக மீன் சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டால் அதின் விருப்பப்படி மீன் வாங்கிக் கொண்டு வந்து நல்ல சுவையாக அதை தயார் செய்து அரை கில்லோ மீனுக்கு அரைக் கில்லோ உப்பைக் கலந்து அதைத் தனக்கு முன்பாக வைத்து தனது சரீரத்தை சாப்பிடும்படியாகச் சொல்லுவார். ஆம், அந்தவிதமாக அந்த பரிசுத்தவான் தனது சரீரத்தை வாட்டி வதைத்திருக்கின்றார்.

அந்த அளவிற்கு நான் என் சரீரத்தை வதைக்காவிட்டாலும் எனது வாழ்நாட் காலத்தில் எனது சரீரத்தை உபவாசத்தால் நன்கு ஒடுக்கியிருக்கின்றேன். கர்த்தருக்குள் நான் திட்டமிட்டு உபவாசித்த நாட்கள் எத்தனையோ இருந்தபோதினும், நானாகவே எனது சமையல் வேலையைக் கவனித்து ஆகாரம் பொங்கிச் சாப்பிட்டு வருவதால் எனது சோம்பல், அசதி மற்றும் அதிகமான தேவப் பணிகள் காரணமாக ஆகாரம் சாப்பிடாமல் சும்மா இருந்த நாட்கள் ஏராளமுண்டு. சமையல் அறைக்குச் சென்று அங்கு சமையல் பாத்திரங்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதைக் கண்டு சோம்பல்பட்டு சமையல் செய்யாமல் பட்டினியாக இருந்த நாட்கள் பலவுண்டு. அந்த நாட்களை எல்லாம் உபவாச நாட்களாக்கிக் கொண்டேன். ஒரு தேவப் பிள்ளை சொன்னது போல எனது முழு வாழ்க்கையுமே உபவாச ஜெபம்தான் என்ற அளவுக்கு எனது உபவாச ஜெபம் அமைந்தது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக.

மிகுந்த பணச்செலவுகள் நிறைந்த இமயமலை வாகன தேவ ஊழியங்களை எல்லாம் தேவ பெலத்தால் எனது நீண்ட உபவாச ஜெபங்களின் மூலமாக கர்த்தருடைய ஒத்தாசையோடு செய்து முடிக்க தேவ கிருபை பெற்றேன். தேவ ஊழியங்களைச் செய்ய முடியாதபடி சத்துரு தடைகளைக் கொண்டு வரும்போதும், ஆவியில் உற்சாகமிழந்து காணப்படும்போதும் உபாவாச ஜெபத்தையே நான் என் கரங்களில் எடுப்பேன்.

 

என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன் (சங் 18 : 23)

"ஸ்திரீயுடனே விபச்சாரம் பண்ணுகிறவன் மதி கெட்டவன், அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவை கெடுத்துப்போடுகிறான்" (நீதி 6 : 32) என்றும் "பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும் ஆக்கினைக்குத் தப்பான்" (நீதி 6 : 29) என்றும் "வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்" (1 கொரி 6 : 18) என்றும் தேவனுடைய வார்த்தை வெகு திட்டமும் தெளிவுமாக எச்சரிக்கின்றது.

ஒரு தேவ ஊழியன் விபச்சார வேசித்தன பாவத்தில் வீழ்ச்சியடை வானானால் அத்துடன் அவனுடைய சகாப்தம் முடிவடைந்தது என்பதை நாம் நிச்சயமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ராஜ அரண்மனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதின அந்தக் கையுறுப்பை ராஜாவாகிய பெல்ஷாத்சார் கண்ட மாத்திரத்தில் அவன் முகம் வேறுபட்டது, அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப் பண்ணினது, அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது (தானி 5 : 5, 6) என்ற தேவ வசனத்தின்படி விபச்சாரம் செய்த ஒரு தேவ ஊழியனின் கிறிஸ்தவ வாழ்க்கை உடனே அஸ்தமித்து அவனுடைய முகநாடி வேறுபட்டு அவனுடைய கிறிஸ்தவ வாழ்வின் உறுதியான இடுப்பின் கட்டுகள் உடனே தளர்ந்துவிடும். மும்தாஜ் மஹால் என்ற தனது அழகிய மனைவி இறந்துவிட்டாள் என்ற செய்தியைக் கேட்ட நேரத்திலேயே தனது கடும் துயரத்தின் காரணமாக மன்னர் ஜாஜஹானின் தாடி முடி முழுமையும் உடனே அப்படியே வெண் பஞ்சாக நரைத்துவிட்டதாக சரித்திரம் கூறுகின்றது. அப்படியே ஒரு பரிசுத்த தேவ ஊழியன் தேவ கோபாக்கினைக்கு ஏதுவான விபச்சாரப் பாவத்தில் விழும்போது அவன் நீண்ட காலமாகத் தன் அன்பின் ஆண்டவருக்காகச் செய்த அருமையான தேவ ஊழியங்கள் அனைத்தும் யாவரும் வெறுத்துத் தள்ளக்கூடிய கிழப்பருவத்தின் வெண்மை ரோமங்களாக உடனே மாற்றம் அடைந்துவிடும்.

கர்த்தரால் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தேவ ஊழியனுக்கு எதிராக சாத்தான் விரிக்கக்கூடிய மகா கொடிய தந்திர வலை இந்த விபச்சார, வேசித்தன பாவம்தான். கிழவனான ஒரு பரிசுத்தவானை விபச்சாரப் பாவத்தில் வீழ்ச்சியடையப் பண்ண தந்திர சாத்தான் தனது பண்டகசாலையிலிருந்து ஒரு இளம் வயதான அழகுப் பெண்ணை அனுப்பி அந்த தேவ ஊழியன் மேல் பலவந்தமாக கை போட்டு இழுக்கச் செய்து அவனைத் தனது தேவனுக்கு துரோகம் செய்யச் செய்து அந்த பரிசுத்த தேவனுடைய முகத்தில் காரி உமிழச் செய்வான்.

இந்தக் கொடிய பாவத்தில் உங்கள் சகோதரனாகிய என்னை வீழ்ச்சியடையப் பண்ண வலுசர்ப்பமாகிய பிசாசு கடந்த நாட்களில் எனக்கு எதிராக மேற்கொண்ட தந்திரச் செயல்கள் பலவாகும். அவன் எனது கால்களுக்கு எதிராக விரித்த அத்தனை வலைகளுக்கும் நான் எப்படி தப்பித்து வந்தேன் என்பதை இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியமாகவிருக்கின்றது. வட இந்தியாவிலுள்ள காசி பட்டணத்திலும், நேப்பாள தேசத்திலுள்ள தான்சேன் என்ற இடத்திலும் அழகான பெண்களைக் கொண்டு என்னை அவன் நேருக்கு நேராக மோதவிட்டான். யோசேப்பின் மேல் பலவந்தமாக கைபோட்ட போத்திப்பாரின் மனைவியைப்போல என் மேல் கைபோட்ட ஒரு குடும்ப ஸ்திரீயும் உண்டு. அந்த ஸ்திரீக்கு முன்பாக நான் என்னைக் கருங்கல்லாக்கிக் கொண்டேன். கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்ட ஒரு செத்த சவத்தின் மேல் கைபோட்டு என்ன பிரயோஜனம்! ஓ, அந்த இடங்களில் எல்லாம் என்னை ஆட்கொண்ட என் அன்பின் ஆண்டவர் என்னைக் கண்மணி போலப் பாதுகாத்துக் கொண்டார். அந்த இடங்களில் எல்லாம் கர்த்தர் எனக்காக யுத்தம் பண்ணினார் (யாத் 14 : 14) என்றே நான் திட்டமாகச் சொல்லுவேன். அந்தக் குறிப்பிட்ட பாவச் சோதனை (காசி பட்டணத்துச் சம்பவம்) எனக்கு வரப்போவதை முன் அறிந்த நம் அன்பின் தேவன் அந்த தடவை நான் தேவ ஊழியத்திற்காக வட இந்தியா புறப்படு முன்னர் ஒரு மாத காலம் புசியாமலும் குடியாமலும் உபவாசம் எடுத்துக் கொள்ள என்னை ஏவினார். உடனே அந்தப் பரலோகக் கட்டளைக்கு அப்படியே கீழ்ப்படிந்தேன். அந்த உபவாசத்தின் வலிமையாலும், யாவுக்கும் மேலாக தேவனுடைய அளவிடற்கரிய கிருபையாலும் சத்துருவின் அக்கினியாஸ்திரத்தை நான் அவிப்பது எனக்கு சுலபமாகவிருந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

காசிப்பட்டணத்தில் என்னைப் பாவத்தில் வீழ்ச்சியடையப்பண்ண என் அறைக்கு வந்த வேசிப் பெண் எனது அறையிலிருந்து கண்களில் கண்ணீருடன் புறப்பட்டுச் செல்லும் வரை "தேவனுக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்வது எப்படி?" (ஆதி 39 : 9) என்ற தேவ வார்த்தையைத் திரும்பத்திரும்ப என் உள்ளத்திலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கச் செய்து என்னை ஆட்கொண்ட என் அன்பின் கன்மலை என்னைச் சுத்தப் பொன்னாக அந்த இடத்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். அல்லேலூயா.

பிரான்ஸ் தேசத்திலுள்ள பாரீஸ் பட்டணத்துக்கு என்னை அழைத்துச் செல்லுவதாக நயம் காட்டிய பெண்ணிடமிருந்தும் நேப்பாள தேசத்தில் தேவன் என்னை அற்புதமாகப் பாதுகாத்தார். இந்தக் காரியங்களை எல்லாம் நான் எனது சுயபெலத்தாலோ அல்லது எனது சாமர்த்தியத்தினாலோ செய்து வெற்றி சிறக்கவில்லை. கர்த்தருடைய ஆவியானவர் எனக்காக யுத்தம் செய்து என்னைக் கறைதிரையற்ற பரிசுத்த பாத்திரமாகக் காத்துக் கொண்டார். கடந்த காலங்களில் என்னைக் கடந்து சென்ற கொடிய விபச்சார வேசித்தன பாவங்களிலிருந்தெல்லாம் நான் எப்படி தப்பிப் பிழைத்தேன் என்பதை நான் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் மெய்யாகவே தேவ கரம் என்னோடிருந்தது என்பதை நான் திட்டமாக உணர்ந்து அவருடைய பொற் பாதங்களை இன்று வரை முத்தமிட்டு வருகின்றேன்.

 

என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட
இருக்கிறார் (ஆதி 31 : 5)

"தேவன் உங்களோடு கூட இருக்கிறார், எந்த ஒரு மனிதனாலும் மறுக்க முடியாத உண்மை இது" என்று ஒரு பரிசுத்த வாலிப தம்பி ஒரு தடவை எனக்கு எழுதிய தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். அதில் துளிதானும் சந்தேகமே இல்லை. நமது தேவ எக்காள பத்திரிக்கையை அழகாக அச்சிட்டுத் தரும் அச்சகத்தின் உரிமையாளரான நமது சகோதரன் ஆறுமுகம் அவர்கள் இந்து பக்தனாக இருந்தாலும் கிறிஸ்தவ பள்ளியில் கல்வி பயின்ற காரணத்தால் கர்த்தர் இயேசுவை நன்கு அறிந்தவர்கள், கிறிஸ்தவர்களை நேசிப்பவர்கள். கர்த்தர் என்னோடு கூட நிச்சயமாக இருப்பதாகவும், அதின் காரணமாகத்தான் இந்த விருத்தாப்பிய வயதிலும் சிறப்பான விதத்தில் தேவ எக்காளச் செய்திகளை கம்பியூட்டரில் டைப் செய்து கொடுக்க முடிகின்றது என்றும் கூறுகின்றார்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஒருவனோடு தேவன் இல்லாத பட்சத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக ஒரு கிறிஸ்தவ பத்திரிக்கையை எழுதி வெளியிடுவது எப்படி? ஒவ்வொரு ஆண்டும் தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை சுமந்து கொண்டு வட மாநிலங்களுக்கும், இமயமலை நாடுகளுக்கும் செல்லுவது எங்ஙனம்? குறிப்பாக சமீபகால ஆண்டுகளில் ஒரு குழுவாக இரண்டு வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு சுவிசேஷ நற்செய்தியை இமயத்தின் கடையாந்திரங்களில் அறிவிப்பது எப்படி? உண்மையோ உண்மைதான், வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவன் என்னோடு கூட இருந்தபடியால் மேற்கண்ட காரியங்கள் எல்லாம் சாத்தியமாயிற்று. அந்த ஜீவனுள்ள கர்த்தர் இன்றும் நிறைந்த ஜோதியாய் என்னோடிருக்கின்றார், அனுதினமும் தம்முடைய வார்த்தைகளின் மூலமாக என்னோடு பேசுகின்றார், முற்றும் தனிமையான என் வாழ்வில் அவரே எனக்குப் பரம தகப்பனாகவும், எனது துன்ப துக்கங்களில், நோய் பிணிகளில் என்னை அரவணைக்கும், என்னை ஆற்றித் தேற்றி ஆறுதல் சொல்லும் அன்புத் தாயாக இருந்து என்னைக் கரம் பிடித்து வழிநடத்திச் செல்லுகின்றார்.

கர்த்தருக்கு நான் உண்மையற்றவனாகவும், தேவ மக்கள் தேவ ஊழியங்களுக்காக எனக்குத் தரும் பணங்களை தந்திரமாக வங்கிகளில் பதுக்கி வைத்து எனது பிள்ளைகளுக்கும், எனது வருங்கால சந்ததிக்கும் நான் அதைத் தனிமைப்படுத்துவேனாகில் எனது ஊழியம் என்றைக்கோ அஸ்தமித்து, தகடுபொடியாகி, நொறுங்கி மண்ணோடு மண்ணாக ஒன்றரக் கலந்திருக்கும். அத்துடன் நானும் எப்பொழுதோ நிர்ப்பந்தமான முடிவை அடைந்து மண்ணாகியிருப்பேன். ஆனால், தேவனுக்கு முன்பாக நான் என்னை இன்றுவரை உத்தமமாகக் காத்துக் கொண்டபடியால் தேவ எக்காள ஊழியத்தை தேவன் கனப்படுத்தி ஆசீர்வதித்து வருகின்றார். கர்த்தருடைய கிருபையால் எனது மனச்சாட்சி தேவனுக்கு முன்பாக சுத்தமும், பிரகாசமுமாக இருப்பதால் எனது இருதயம் எப்பொழுதும் தேவ சமாதானத்தால் நிறைந்ததாகவும், எனது இராக்கால இளைப்பாறுதல்கள் பரலோக தரிசனங்களுடன் கூடிய இன்பமான இளைப்பாறுதல்களாக இருப்பதுடன் "வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்" (மத் 25 : 34) என்ற ஆண்டவரின் ஆனந்தக் குரலை ஆவலாக எதிர் நோக்கிக் காத்திருக்கவும் என்னைத் தகுதிப்படுத்தி இருக்கின்றது. அந்த அன்பின் ஆண்டவருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்!

இதை ஆசை ஆவலாகக் கருத்தோடு வாசிக்கும் அன்பான தேவப்பிள்ளையே, பாவியாகிய என்னைத் தமது பரிசுத்த ஊழியத்தின் பாதையிலே அநேகருக்கு ஆசீர்வாதமாகப் பயன்படுத்திய நம் அன்பின் நேச தகப்பன் உங்களையும் பயன்படுத்த ஆசை ஆவலாக இருக்கின்றார். "தன்னை முற்றிலும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்த ஒரு மனிதனை தேவன் பயன்படுத்தும் விதத்தை உலகம் இன்னும் காணவில்லை" என்று டி.எல்.மூடி பிரசிங்கியாரிடம் ஒரு பரிசுத்த மனிதர் ஆரம்பத்தில் சொன்னவண்ணமாக யார் யார் தங்களை முற்றுமாகக் கர்த்தருக்கு ஒப்புவித்து ஆண்டவருடைய பரிசுத்த ஊழியத்தை பொருளாசையற்றவர்களாகவும், பெயர், புகழ் விரும்பாதவர்களாகவும், மிகுந்த ஜெபத்தோடும், உபவாசத்தோடும், ஆத்தும பாரத்தோடும், விபச்சாரம் வேசித்தனமற்ற கர்த்தர் விரும்பும் மிகுந்த பரிசுத்தத்தோடும், தங்களுக்காக கல்வாரிச் சிலுவையில் இரத்தம் சிந்தி தமது இரத்தக் கிரயத்தால் நம்மை மீட்டுக் கொண்ட அன்பின் ஆண்டவருக்காக வைராக்கித்தோடும், மிகுந்த மனத் தாழ்மையோடும் கர்த்தரை மாத்திரம் உலகுக்கு உயர்த்திக் காண்பித்து ஊழியம் செய்வார்களோ அவர்களுடைய தேவ ஊழியங்களை தேவன் நிச்சயமாக ஆசீர்வதிப்பார். அவர்களை அவர் ஒருக்காலும் வெட்கப்படுத்தமாட்டார் (யோவேல் 2 : 26)

தேவ எக்காளத்தின் 40 ஆம் ஆண்டு சிறப்பு மலரின் தலையங்கச் செய்தியிலே பாவியாகிய என்னுடைய வாழ்வின் தாழ்மையான அனுபவங்கள், ஊழியப் பாதையின் பாடுகள் போன்ற காரியங்களையே மிகுதியாக நான் எழுதியிருக்கின்றேன். அதின் ஒரே காரணம், நீங்கள் என்னைப் பெருமைப்படுத்தி, நீங்கள் எனக்குப் புகழ் ஆரங்களைச் சூட்டி என்னைச் சிம்மாசனத்தில் ஏற்றி ராஜ கிரீடத்தை எனக்குச் சூட்டி ஆர்ப்பரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் எழுதவில்லை. கர்த்தர் என்னை இத்தனை நீண்ட ஆண்டு காலங்களாக தமது பரிசுத்த நாமத்திற்கு மகிமையாக பயன்படுத்த என்னில் காணப்பட்ட முழுமையான அர்ப்பணிப்பு, துளிதானும் பொருளாசையற்ற உத்தம இருதயம், எனது ஜெப உபவாச வாழ்க்கை, கர்த்தருக்காக நான் காண்பித்த பலத்த வைராக்கியம், பெயர் புகழை கொஞ்சமும் விரும்பாத எளிய வாழ்க்கை, மனைவி பெலவீன பாண்டமாக இருந்தபோதினும், எங்களுக்கிடையில் குடும்ப வாழ்வின் மகிழ்ச்சி இல்லாத போதினும், சாத்தானாம் பிசாசு சந்தர்ப்பத்தை தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்தி என்னைப் பாவத்தில் வீழ்த்த எவ்வளவோ முயற்சித்த போதினும் கர்த்தருடைய பெலத்தால் நான் அவைகளை எல்லாம் மேற்கொண்டு தேவனை மகிமைப்படுத்திய எனது பரிசுத்த வாழ்க்கையும், அழிந்து போகும் ஆத்துமாக்களைக் குறித்த எனது ஆத்தும பாரம் போன்ற பரிசுத்த பண்புகளை தேவப் பிள்ளைகளாகிய நீங்களும் உங்கள் நடைமுறை வாழ்க்கையில் அப்பியாசித்து நம் அன்பின் ஆண்டவர் இயேசுவுக்காக நீங்கள் உங்கள் குறுகிய கால வாழ்வில் ஒரு பெரிய தேவ ஆசீர்வாதத்தை தேவ ஜனங்களுக்கு பின் வைத்துச் செல்ல வேண்டுமென்பதே என்னுடைய ஆத்துமாவின் கதறுதலாகும். அதற்கான தேவ கிருபைகளை ஆண்டவர் தாமே உங்களுக்குத் தந்தருள்வாராக.

 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM