முன்னுரை


"கர்த்தருடைய வழிகளைக் காத்துக் கொண்டு வந்தேன், நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை" (2 சாமுவேல் 22 : 22)

கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.

கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையால் ஆண்டவருடைய பரிசுத்த பிள்ளைகளாகிய உங்களை திரும்பவும் இந்த தேவ எக்காள இதழின் மூலமாக சந்திக்க இரக்கம் செய்த கர்த்தாவுக்கு என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றேன். உங்கள் கரங்களில் இருப்பது தேவ எக்காளத்தின் 40 ஆம் ஆண்டின் இறுதி இதழாகும். ஆ, தேவனுக்கு உண்மையும், உத்தமமாக ஊழியம் செய்யும் அவரது அடியாருக்கு அந்த அன்பின் தேவன் எத்தனையாக கரம் நீட்டி உதவி அவர்களை கைவிடாது அரவணைக்கும் அன்பின் கன்மலை என்பதை இந்த இதழ் மெய்ப்பிப்பதாக இருக்கின்றது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக.

இந்த தேவ எக்காள இதழ் உங்கள் கரங்களை வந்தடையும்போது நீங்கள் புதிய வருடமான 2008 ஆம் ஆண்டிற்குள் பிரவேசித்திருப்பீர்களாதலால் உங்களுக்கு எனது அன்பான புது வருட வாழ்த்துக்களையும், ஸ்தோத்திரங்களையும் கூறுகின்றேன். இந்த புதிய வருடமானது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின் அன்பான மக்கள் யாவருக்கும் அனைத்துப் பரலோக தேவாசீர்வாதங்களும், தேவ சமாதானமும், ஆண்டவரின் பரிசுத்த பிரசன்னமும் நிறைந்த பாக்கிய ஆண்டாக இருக்க அன்பின் தயாபர கர்த்தர் தயைபுரிவாராக.

இந்தப் புத்தாண்டில், தேவப்பிள்ளைகளாகிய உங்களுக்கு நான் கொடுக்கக்கூடிய தேவ ஆலோசனை என்னவெனில் நீங்கள் எப்பொழுதும் ஏனோக்கைப் போல தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருக்க வேண்டும் (ஆதி 5 : 24) என்பதுதான். புத்தாண்டின் ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்த அளவு அதிக நேரத்தை ஆண்டவருடைய பரிசுத்த பாதங்களில் ஜெபத்தில் செலவிட்டு மகிழுங்கள். உலகப்பிரகாரமான அலுவல்களில் பகற்காலம் முழுவதும் ஈடுபட்டிருக்கும் தேவ மக்கள் இராக்காலங்களில் ஓரிரு மணி நேரங்களை கர்த்தாவுடன் ஐக்கியம் கொள்ளுவதில் கட்டாயம் செலவிடுங்கள். பகற் காலங்களில் உங்கள் நெருக்கமான உலகப் பணிகளின் மத்தியிலும் உங்கள் இருதயத்திலிருந்து ஜெப தூபத்தை கர்த்தாவுக்கு ஏறெடுத்துக் கொண்டே இருங்கள். இந்த இடைவிடாத பரலோக ஐக்கியம் மட்டுமே உங்களைப் பாதுகாப்பாக தேவன் தமது ஜனத்திற்கு ஆயத்தம் செய்து வைத்துள்ள நித்திய இளைப்பாறுதலுக்கு (எபி 4 : 9) வழிநடத்திச் செல்லும். உலகத்தில் நம்முடைய நாட்களும், காலங்களும் நகர்ந்து கொண்டிராமல் பறந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. "அது சீக்கிரமாகக் கடந்து போகிறது, நாங்களும் பறந்து போகிறோம் (சங் 90 : 10) என்றார் கர்த்தருடைய தாசனாகிய மோசே. நாட்களும், காலங்களும் நாம் நினைப்பதற்கும் மேலாக ஓட்டம் பிடித்துக் கொண்டிருக்கின்றது. இந்தக் காரியம் பெரியவர்களாகிய நமக்கு மாத்திரமல்ல ஒரு சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும். "நேற்றுத்தான் வெள்ளிக் கிழமை வந்தது, அதற்குள்ளாக அடுத்த வெள்ளிக்கிழமை வந்துவிட்டது" என்று அந்தக் குழந்தை தனது சிநேகிதியிடம் தெருவில் பேசிக் கொண்டு செல்லுகின்றது. நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், நமக்கும் எவ்வளவோ இளவயதானவர்கள், நம்மைவிட எவ்வளவோ பெலசாலிகள் எல்லாரும் இந்த உலகத்தைவிட்டு கடந்து போய்விட்டனர். நாம் மட்டும் இந்த உலகத்தில் என்றும் வாழப்போகின்ற சிரஞ்சீவிகளாக நம்மை எண்ணிக் கொண்டிருக்கின்றோம். எத்தனை ஞானமில்லாத சிந்தனை. முடிவில்லாத நித்தியத்தில் நாம் எந்த நேரம் வேண்டுமானாலும் கண் விழிக்கலாம். நமது காலங்கள் ஆண்டவருடைய கரங்களில் இருக்கின்றது (சங் 31 : 15) நஷ்டப்பட்ட பாவிகளாக எரி நரகத்துக்குப் பாத்திரமான மக்களாக நாம் கண் விழிப்போமானால் நம்மைவிட பரிதபிக்கப்படத்தக்கவர்கள் யாராக இருக்கக்கூடும்?

"மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்" (லூக்கா 21 : 36) என்றார் நம் அருமை இரட்சகர். "எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்" என்று தேவனே நமக்குச் சொல்லும்போது நாம் அவருடைய வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதின்படி ஜீவிப்பது நமக்கு நித்திய நன்மையைக் கொண்டு வரும். பரிசுத்த பக்த சிரோன்மணி சாது சுந்தர் சிங் அவர்கள் எப்பொழுதும் ஜெபித்துக் கொண்டிருந்ததை நாம் அவரைக் குறித்து எழுதின புத்தகங்களில் வாசிக்கின்றோம். பெரிய மேன்மக்கள், துரைத்தனங்களிலுள்ள ஆளுகை செய்வோர் தன்னைச் சுற்றிலும் பந்தியில் இருக்கும்போது தனது ராஜ போஜனத்தை அப்படியே சற்று நேரம் வைத்துவிட்டு தன் கர்த்தாவுடன் சில நிமிட நேரங்கள் உறவாடி மகிழ்ந்துவிட்டு வருவதற்காக பக்கத்து அறைக்குச் சென்று முழங்காலூன்றும் அவரது ஜெபத்தின் தாகத்தை நாம் மிகுந்த ஆச்சரியத்துடன் கவனிக்கின்றோம். J.Montgomery என்ற பரிசுத்தவான் ஜெபத்தைக் குறித்து கீழே குறிப்பிட்டிருக்கும் வரிகளை அப்படியே மனப்பாடம் செய்து உங்கள் வாழ்க்கையின் அனுபவமாக்கிக் கொள்ளுங்கள்.

ஜெபம், கிறிஸ்தவனின் உயிர் மூச்சு,
ஜெபம், கிறிஸ்தவனின் சொந்த நாடாம் பரலோகத்தின் சுகந்த ஆகாயம்
ஜெபம், மரண நிழலின் பள்ளத்தாக்கில் அவன் எழுப்பும் வெற்றி முழக்கக் குரல்,
ஜெபத்துடனேயே கிறிஸ்தவன் மோட்ச வீட்டிற்குள் பிரவேசிக்கின்றான்.

இரட்சகரின் அளவற்ற அன்பின் தயவால் வடக்கே இமயமலை தேவ ஊழியங்களை கர்த்தருக்கு மகிமையாக முடித்து 50 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் ஜீவ சுக பெலத்தோடு 14/11/2007 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 12 மணிக்கு எனது இல்லிடம் வந்து சேர்ந்தேன். ஊழிய நாட்கள் முழுமையிலும், எங்கள் நீண்ட பிரயாணங்களிலும், ஆண்டவருடைய அளவில்லாத கிருபை பொங்கி வழிவதாக இருந்தது. அவருடைய இரக்க கிருபைகளை ஒவ்வொன்றாக வர்ணிக்க இயலாத பாவியாக இருக்கின்றேன். கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாகவும், உங்களுடைய ஆசீர்வாதத்திற்கு அனுகூலமாகவும் ஒன்றை மாத்திரம் நான் இந்த இடத்தில் குறிப்பிட ஆசைப்படுகின்றேன்.

ஒரு மாத கால வாகன தேவ ஊழியத்தை நாங்கள் குழுவாக முடித்து விட்டு சகோதரன் நார்ட்டன் அவர்களும், நானும் இமயமலைகளின் அடிவாரத்திலுள்ள இந்து மக்களின் புண்ணிய ஸ்தலமான ரிசிகேசம் என்ற இடம் வந்து வழக்கம்போல அங்குள்ள ஒரு இந்து ஆச்சிரமத்தில் தங்கியிருந்து தேவனுடைய ஊழியங்களை இரகசியமாக செய்து வந்தோம். 10 நாட்கள் அந்த இடத்திலிருந்த நாட்களில் நான் எனது அழுக்கான வஸ்திரங்களை ஒரு நாள் நீண்ட நேரம் குனிந்து உட்கார்ந்து துவைத்து சுத்தம் செய்ததால் எனது இடுப்பில் நன்கு பிடித்துக் கொண்டது. அதின் காரணமாக முழங்காலூன்றி ஜெபிக்கவோ, பொருட்களை குனிந்து தூக்கவோ, படுக்கையில் அங்குமிங்கும் தாராளமாகப் புரண்டு படுக்கவோ முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். சகோதரன் நார்ட்டன் அவர்கள் என்னுடன் இருந்தபடியால் சென்னை வரை எனது பொருட்களுடன் ரயிலில் ஓரளவு கஷ்டமின்றி நான் வந்து சேர்ந்தேன். இருப்பினும் இடுப்பின் பிடியின் வேதனை நன்றாகவே இருக்கத்தான் செய்தது.

சென்னையிலிருந்து நான் மாத்திரம் தனியாக எனது பெட்டி, படுக்கையுடன் நண்பகல் 11:30 மணிக்குப் புறப்படும் "வெஸ்ட் கோஸ்ட்" துரித ரயிலில் கோவை வந்து கொண்டிருந்தேன். கோவை வந்ததும் எனது பெட்டி, படுக்கையை எடுத்துக் கொண்டு கூட்டத்தில் எப்படி இறங்குவது என்பது எனக்கு ஒரு பெரிய கேள்வி குறியாக இருந்தது. ஏற்கெனவே, நான் எனது மூத்த மகன் சுந்தர்சிங்கை என்னை ரயில் நிலையத்தில் வந்து சந்திக்கும்படியாக கேட்டிருந்தேன். அவர்களும் சரியான நேரம் கோவை ரயில் நிலையம் வந்திருந்தார்கள். இருப்பினும் பெட்டி, படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியே செல்லுவது என்பது என்னால் கூடாத காரியமாக இருந்தது. எனது இக்கட்டான நிலையை உள்ளத்தின் ஆழத்திலிருந்து அன்பின் ஆண்டவருக்கு தெரிவித்து வந்து கொண்டிருந்தேன்.

இந்த வேளை ரயில் திருப்பூர் ரயில் நிலையம் வந்ததும் வாலிபனான ஒரு தம்பியும், ஒரு வாலிப மகளும் என்னண்டை வந்து எனது அருகில் உட்காரலாமா என்று என்னிடம் அனுமதி கேட்டார்கள். அப்பொழுது இரவு மணி 7 ஆகியிருந்தது. அவர்கள் இருவரும் திருப்பூரில் வேலை செய்துவிட்டு சீசன் டிக்கெட்டில் கோவை திரும்பிக் கொண்டிருந்தார்கள். நான் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் அமர்ந்திருப்பதாகவும், அதில் உட்கார்ந்தால் டிக்கெட் பரிசோதகர் வந்து கேட்டால் அவர்கள் அபராதம் கட்ட வேண்டியதாகும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள் தங்களுக்கு அப்படிப்பட்ட தொந்தரவு வராது என்றும், எனது அருகில் உட்கார நான் அவர்களுக்கு அனுமதி மட்டும் கொடுத்தால் போதும் என்றார்கள். நானும் சம்மதம் தெரிவிக்கவே அவர்கள் என்னண்டைதான் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பெட்டியில் நாங்கள் மூவர்தான் அமர்ந்திருந்தோம்.

ரயில் கோவையை நெருங்க நெருங்க அவர்கள் என்னிடம் "நீங்கள் தனியாக இந்த பெட்டி படுக்கையை எல்லாம் எடுத்துக் கொண்டு எப்படி கீழே இறங்கப் போகின்றீர்கள். இந்த விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் மாத்திரமே நிற்கும். அதிலும் இன்று அது 30 நிமிடங்கள் கால தாமதத்துடன் வந்து கொண்டிருக்கின்றது. வெளியிலிருந்து மக்கள் கூட்டம் வண்டிக்குள் ஏறி வரும். எப்படி சமாளிக்கப் போகின்றீர்கள்? நாங்கள் உங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு உங்களுக்கு உதவி செய்கின்றோம்" என்று சொல்லி அந்த அன்பான மக்கள் கோவை ரயில் நிலையம் வந்ததும் எனக்கு உதவி செய்து எனது பெட்டி, படுக்கையை வெளியே எடுத்துச் சென்று வைத்தார்கள். அதற்குள்ளாக எனது மூத்த மகனும் அங்கு வந்துவிட்டான். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. அந்த இடத்தில் அந்த அன்பான மக்களின் உதவி எனக்கு மிகவும் தேவையாக இருந்தது. என்னால் குனிந்து அந்தப் பொருட்களை எடுக்கவே முடியாது. எனக்கு உதவி செய்ய தேவன் தமது பிள்ளைகளை ஆயத்தப்படுத்தி அவர்கள் என்னைத் தேடி வந்து என்னிடம் அனுமதி கேட்டு என்னண்டை முன்கூட்டியே வந்து அமர்ந்து கொள்ள அவர்கள் உள்ளத்தை ஏவி விட்டிருந்தார். ஆ, ஆண்டவருடைய அன்பை நாம் என்னவென்று சொல்லுவது!

இந்த வண்ணமாகவே இமயமலைகளின் அடிவாரத்தில் உள்ள ரிசிகேசத்தில் நாங்கள் பிரயாணப்பட்டது முதல் நாங்கள் எங்கள் இருப்பிடங்களுக்கு வந்து சேரும் வரை ஆண்டவரின் அளவற்ற கிருபை எங்கள் மேல் பொழிந்தவண்ணமாக இருந்தது. அவைகள் ஒவ்வொன்றையும் வர்ணிக்க இங்கு இடம் போதாது. இந்தச் சம்பவத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் எதிர்பாராதவிதமாக எனது கரங்களுக்கு கிடைத்த ஒரு அருமையான புத்தகத்தில் தேவன் தம்மை நேசித்த, தமக்குப் பயந்த, தம்முடைய பரிசுத்த வழிகளில் நடந்த அவருடைய பரிசுத்த அடியார்களுக்கு கடந்த கால நாட்களில் பாராட்டிய அதிசய அற்புத சம்பவங்கள் பல அதில் விவரிக்கப்பட்டிருந்தது. எனது உள்ளத்தை வெகு ஆழமாக ஊடுறுவிச் சென்ற ஒரே ஒரு உண்மைச் சம்பவத்தை மாத்திரம் அந்த ஆங்கில புத்தகத்திலிருந்து மொழி பெயர்த்து உங்களுடைய ஆவிக்குரிய வாழ்வுக்கு ஆசீர்வாதமாக கீழே நான் தருகின்றேன்:-

 

கர்த்தாவின் ஆச்சரிய பாதுகாவலும்
அவரின் அதிசய பராமரிப்பும்

பஞ்ச காலத்தில் தேவன் எவ்வண்ணமாகக் காகங்களைக் கொண்டு தமது தாசனாம் எலியாவைப் போஷித்துப் பாதுகாத்தாரோ அந்தவிதமான ஆச்சரிய போஷிப்பை ஜோஹன் பிரன்ட்ஸ் என்ற தமது தேவ ஊழியனுக்கும் பகிர்ந்தளித்தார். ஜோஹன் பிரன்ட்ஸ் 1499 ஆம் ஆண்டு பிறந்து 1570 ஆம் ஆண்டு மரித்தார். திருச்சபையின் சீர்திருத்தக் காலத்தில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். ஜோஹன் சிறந்த தேவ பக்தனும், மகா வேத விற்பனனும், பெரிய கல்விமானும், ஆழ்ந்த பக்தி அனுபவமும் உடையவராகவுமிருந்தார். ஜெர்மனியிலுள்ள உட்டம்பர்க் மாநிலத்தில் உள்ள திருச்சபைகளில் ஜோஹன் பிரன்ட்ஸ் என்பவரின் பக்தி எழுச்சி அந்த நாட்களில் மேலான ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. 1546 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் ஒரு குறிப்பிட்ட பட்டணத்தின் மக்கள் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருந்தனர். காரணம், வைராக்கியமான கத்தோலிக்க ஐந்தாம் சார்லஸ் சக்கரவத்தி தனது படைத் தளபதியாகிய ஆல்வா பட்டணத்தைச் சேர்ந்த இளவரசனை ஒரு படையுடன் அனுப்பி அங்குள்ள புராட்டஸ்டண்டு சபையைச் சேர்ந்த மக்களை பிடித்து சித்திர வதை செய்ய அனுப்பியிருந்தான். எனினும் ஆல்வா இளவரசனுக்கு அந்தப் பட்டணத்திலுள்ள ஒரே ஒரு நபரை மட்டும் பிடிப்பதே அவனுடைய குறிக்கோளாக இருந்தது. பட்டணம் கைவசப்படுத்தப்பட்டதும் ஆல்வா இளவரசன் தனது படையினருக்கு ஜோஹன் பிரன்ட்ஸ் வீட்டை சூரையாடி வேதப் புரட்டனான ஜோஹனை உயிரோடேயாவது அல்லது கொன்று செத்த சவமாகவாவது தன்னிடம் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டான். அவனது கொடூரமான படை வீரர்கள் தங்களது கட்டளையை ஏற்று துரிதம் துரிதமாக ஜோஹன் குருவானவருடைய வீட்டிற்கு வந்து அவரது வீட்டின் முன் கதவை பலமாக அடித்து உடைத்து வீட்டிற்குள் நுழைந்தனர். வீடு முழுவதையும் படை வீரர்கள் அலசி ஆராய்ந்து தேடியும் குருவானவர் ஜோஹன் எங்கும் கிடைக்கவில்லை. அவருக்கு நடந்தது என்ன? படைவீரர்கள் தனது வீட்டின் முன் கதவை அடித்து உடைக்க ஆரம்பித்த உடனேயே ஜோஹன் தனது வீட்டின் பின் கதவைத் திறந்து கொண்டு வெளியே தப்பி ஓடிவிட்டார். ஆல்வா இளவரசனும், அவனது படையினரும் போய்விட்ட பின்னர் ஜோஹன் குருவானவர் ஹாலி என்ற பட்டணத்திற்கு வந்து அங்கே சிலுவையில் அறையுண்ட தமது அன்பின் இரட்சகரைக் குறித்து மிகவும் வைராக்கியமாகப் பிரசிங்கித்தார்.

குருவானவர் ஜோஹன் பிரண்ட்ஸ் ஹாலி பட்டணத்திற்கு வந்து தேவனுடைய சுவிசேத்தை மிகவும் பக்தி வைராக்கியத்தோடு பிரசங்கித்துவிட்டுச் சென்ற செய்தியை ஐந்தாம் சார்லஸ் சக்கரவர்த்தி கேள்விப்பட்டதும் வேதப்புரட்டனான அவரை சிறைக் கைதியாக எப்படியாவது பிடிக்கத் தீர்மானித்தான்.

அது ஒரு ஜூன் மாதம் 14 ஆம் தேதி, ஆம் ஜோஹன் பிரன்ட்ஸ் உடைய பிறந்த நாள் அது. கொடிய கொலை பாதகனும், தந்திரசாலியுமான தனது பிரதிநிதி கிரன்வல் என்பவனை ஹாலி பட்டணத்திற்கு சார்லஸ் சக்ரவர்த்தி அனுப்பினான். அவன் ஹாலி பட்டண பிரதான வாசல்களுக்கு வந்து பட்டணத்தின் அனைத்து கவுன்சலர்களையும் பட்டணத்தின் குறிப்பிட்ட ஒரு மணிமண்டபத்திற்கு கூடி வரச் செய்து தான் ஒரு முக்கியமான நோக்கத்தோடு பட்டணத்துக்கு அவர்களைப் பார்க்க வந்திருப்பதாகவும், தான் அவர்களுக்குச் சொல்லப் போவதை அவர்கள் எவருக்கும் சொல்லக்கூடாது என்றும் கூறி அவர்களிடம் ஆணையிட்டுச் சத்திய பிரமாணமும் வாங்கிக் கொண்டான்.

இப்பொழுது அவன் சார்லஸ் சக்கரவர்த்தி கொடுத்தனுப்பியிருந்த தாக்கீதை தனக்கு முன் அமர்ந்திருந்த பட்டணத்து கவுன்சலர்களுக்குக் கொடுத்தான். அதில் பரிசுத்த குருவானவர் ஜோஹன் பிரன்ட்ஸை சிறைக் கைதியாகப் பிடித்து தாம் அனுப்பிய தனது தூதுவனிடத்தில் ஒப்புக் கொடுக்கும்படியாகவும், அப்படிச்செய்தால் அவன் அவர்களுக்கு அநேக தயவுகள் செய்வதாகவும், அப்படி ஒத்துழைக்காவிட்டால் அவர்களுடைய ஹாலி பட்டணம் முழுவதுமே அதின் எதிர்விளைவுகளைச் சந்தித்தாக வேண்டுமென்றும் மிரட்டி எழுதியிருந்தான்.

இந்தச் சம்பவம் ஹாலி பட்டணத்தின் மணி மண்டபத்தில் நடந்து கொண்டிருக்கும்போது குருவானவர் ஜோஹன் தனது பிறந்த நாள் வைபவத்தில் தனது அருமைக் குடும்பத்தினருடன் அமர்ந்து மிகவும் மகிழ்ச்சியாகவும், தேவ சமாதானத்தோடும் மத்தியானச் சாப்பாட்டை அருந்திக் கொண்டிருந்தார்.

தேவ மனிதனாகிய ஜோஹன் பிரன்ட்ஸ் குருவானவரை மிகவும் அதிகமாக நேசிக்கும் மேற்கண்ட ஹாலி பட்டணத்தின் கவுன்சலர்கள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றனர். தங்களுடைய ஆணைக்குப் புறம்பாக குருவானவரை தப்புவிக்கும் மாற்று காரியங்களில் அவர்கள் ஈடுபட்டால் அதின் எதிர்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இறுதியாக அவர்கள் சக்கரவர்த்தி அனுப்பிய கொடிய வஞ்சகன் கிரன்வல்லின் கரங்களில் தங்கள் பரிசுத்த குருவானரை கையளித்துவிட முன் வந்தார்கள். இதற்கிடையில் சக்கரவர்த்தி அனுப்பிய மற்றொரு பிரதிநிதி ஜோஹன் பிரன்ட்ஸை பிடிப்பதற்காக உடனே விரைந்து சென்றான். பரலோக தந்தையின் பாதுகாக்கும் கண்கள் தமது அருமை ஊழியனின் மேல் இருக்கின்றது என்பதை கிரன்வல் உணராதிருந்தான். என்ன ஆச்சரியம், குருவானவர் ஜோஹன் பிரன்ட்ஸ் மரணத்தின் நிச்சயமான பிடியிலிருந்து தப்பிப் போய்விட்டார்.

நடந்தது என்ன? கிரன்வல் கூட்டிய கவுன்சலர்களின் கூட்டத்தில் ஒரே ஒரு கவுன்சலர் மட்டும் ஆணையிட்டுக் கொடுக்கவில்லை. காரணம், அவர் அந்தக் கூட்டத்தில் பின்னர்தான் வந்து கலந்து கொண்டார். அவர் நமது பரிசுத்த குருவானவரின் மிகவும் அன்பான நண்பன் ஆவார். நடந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அவர் உடன்தானே ஒரு உருக்கமான கடிதத்தை ஜோஹனுக்கு எழுதி அனுப்பி வைத்துவிட்டார். ஜோஹன் இன்னும் தனது பிறந்த நாள் சாப்பாட்டு மேஜையில் இருக்கும்போதுதானே அந்தக் கடிதம் அவருக்கு வந்து கிடைத்தது. "ஜீவன் தப்ப ஓடுங்கள், ஜீவன் தப்ப ஓடுங்கள், ஜீவன் தப்ப ஓடுங்கள்" என்ற வரிகளைக் கண்டதும் குருவானவர் ஜோஹன் தனது குருத்துவ அங்கியை கழற்றிவிட்டு மாற்று உடையில் வீட்டை விட்டு வெளியே ஓடினார்.

அவர் தெருவுக்கு ஓடி வந்தபோது அவரைப் பிடித்து விலங்கிடுவதற்காக கையில் விலங்குகளுடன் வந்த சார்ல்ஸ் சக்கரவர்த்தியின் பிரதிநிதி அவரைச் சந்தித்தான். தான் தேடி வரும் குருவானவர் அவரேதான் என்பதை கொஞ்சமும் அறியாமல் ஓடிக்கொண்டிருக்கும் அவரைப் பார்த்து குருவானவர் ஜோஹன் பிரன்ட்ஸ் வீட்டைத் தனக்கு காண்பிக்கும்படியாகக் கேட்டான். ஓடிக்கொண்டிருந்த அவர் சற்று பின்னால் வந்து மிகுந்த அன்பான வார்த்தைகளுடன் குருவானவருடைய வீட்டை அவனுக்குக் காண்பித்துக் கொடுத்துவிட்டு தனது வழியே போனார். அவர் பட்டணத்தின் பிரதான வாசல்கள் வழியாக ஸ்டட்கார்ட் என்ற இடத்தில் வசிக்கும் தேவ பக்தியுள்ள இளவரசன் உல்ரிச் என்பவரின் கோட்டைக்கு வந்து சேர்ந்தார். தான் அதிகமாக நேசிக்கும் தனது பரிசுத்த குருவானவரைக் கண்டதும் அவரை அன்புடன் அரவணைத்துத் தனது கோட்டையிலேயே அந்த அன்புள்ளம் கொண்டோன் மிகவும் மறைவாக வைத்துக் கொண்டான்.

இளவரசன் உல்ரிச் என்பவரின் கோட்டையிலும் குருவானவர் ஜோஹன் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. ஒரு துரோகி அவர் இருக்கும் உல்ரிச் என்பவரின் கோட்டையை சக்கரவர்த்தி ஐந்தாம் சார்லஸ்க்கு காட்டிக் கொடுத்துவிட்டான். உடனே அந்த சக்கரவர்த்தி ஸ்பானிய குதிரைப்பட்டாளம் ஒன்றை உல்ரிச் கோட்டைக்கு அனுப்பி ஜோஹன் பிரன்ட்ஸை உயிரோடேயாவது அல்லது கொன்றாவது கொண்டு வரும்படியாகக் கட்டளையிட்டான். அந்த ஸ்பானிய குதிரைப் படை தங்கள் ஓட்டத்தில் இருக்கும் போது பர்வாரியா என்ற இடத்திலுள்ள ஒரு பெரிய கனவான் அந்தக் குதிரைப் படையின் தளபதிக்கு ஒரு விருந்தளித்தான். அந்த தளபதி தனது சாப்பாட்டு மேஜையில் இருக்கும்போது ஸ்டட்கார்ட் என்ற இடத்திலுள்ள இளவரசன் உல்ரிச் என்பவரின் கோட்டையில் பதுங்கியிருக்கும் குருவானவர் ஜோஹன் பிரண்ட்ஸ் என்பவனைத் தான் பிடிக்கப் போவதாகக் கூறினான்.

குதிரைப்படை வீரர்கள் ஸ்டட்கார்ட் என்ற இடத்திலுள்ள உல்ரிச்சின் கோட்டைக்கு வந்ததும் அதின் தளபதி உடனடியாக கோட்டைக்குள் நுழைந்து இளவரசன் உல்ரிச்சை அவர் கோட்டைக்குள் மறைந்து பதுங்கியிருக்கும் ஜோஹன் பிரண்ட்ஸ் என்ற புகழ்பெற்ற வேதப் புரட்டனை தன்னுடைய கரங்களில் ஒப்புவிக்கும்படியாகக் கேட்டான். ஜோஹன் பிரன்ட்ஸ் தன்னுடைய கோட்டையில் இல்லை என்று உல்ரிச் பதிளித்தார். அப்படியானால் அவன் எங்கே என்று தளபதி கேட்டான். அவர் எங்கு மறைந்திருந்தார் என்று தனக்குத் தெரியாது என்று ஆணையிட்டுக் கொடுத்து தளபதியை இளவரசன் அனுப்பி வைத்துவிட்டார்.

முந்தின நாள் இரவில் அந்த இளவரசனுக்கு ஒரு இரகசிய கடிதம் ஒன்று வந்திருந்தது. அதை ஒரு பெண் எழுதியிருந்தாள். அவள் ஜோஹன் பிரன்ட்ஸ் பரிசுத்த குருவானவரை அதிகமாக நேசிப்பவள். ஸ்பானிய குதிரைப் படையின் தளபதி கனவானுடைய வீட்டில் அமர்ந்து விருந்துண்ணும்போது தான் ஜோஹன் பிரன்ட்ஸ் என்ற வேதப்புரட்டனை பிடிக்கும்படியாக ஸ்டட்கார்ட் என்ற இடத்திலுள்ள உல்ரிச் கோட்டைக்குச் செல்லுவதாகச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும். அவள் அந்த தகவலை உடனே உல்ரிச் இளவரசனுக்கு தெரிவித்துவிட்டாள்.

இளவரசன் உல்ரிச் உடனடியாக குருவானவரை தம்மண்டை வரவழைத்து கடிதத்தின் செய்திகளை அவருக்கு எடுத்துக்கூறி சீக்கிரமாக அவரை அரண்மனையிலிருந்து வெளியில் ஓடித் தப்பிக்கொள்ளக் கேட்டுக்கொண்டதுடன், தான் அதுவரை எங்கு மறைந்திருந்தேன் என்ற உண்மையை எவருக்கும் சொல்ல வேண்டாமென்றும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். இருதயம் நிறைந்த ஒரு பலத்த அன்பின் கரம் குலுக்குதலோடு பரிசுத்த குருவானவர் ஜோஹன் பிரன்ட்ஸ் உல்ரிச் இளவரசனிடம் விடைபெற்று இரவின் இருளுக்குள் மறைந்து விட்டார். அவரது கரத்தில் அப்பொழுது ஒரு ரொட்டித் துண்டு மாத்திரம் இருந்தது. தாங்கொண்ணா துக்கத்திலும், துயரத்திலும் தாக்குண்ட ஜோஹன், ஆம், கிறிஸ்து இரட்சகரின் உண்மையான ஸ்தானாபதியாகிய அந்த சிலுவை வீரர் இளவரசனின் அரண்மனையைத் தாண்டி ஓரிடத்தில் தன்னை சமூலமாக தன்னுடைய ஆண்டவருக்கு கையளித்தவராக முழங்காலூன்றி கண்ணீரோடு ஜெபித்துவிட்டு தனக்கு முன்பாக உள்ள அடர்ந்த பீச் என்ற காட்டு மரங்களின் சோலை வழியாக நடந்து சென்றார். அங்கொன்றும், இங்கொன்றுமாக அந்தக் காட்டுக்குள் சிறிய வீடுகள் இருந்தன. அந்த வீட்டின் கதவுகள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. கடைசியாக ஒரு வீடு மட்டும் திறந்திருந்தது. அந்தச் சமயம் "அந்த வீட்டிற்குள் போ" என்ற குரல் அவருடைய காதுகளில் விழுவதை அவர் கவனித்தார். எந்த ஒரு கால தாமதமும் செய்யாமல் துரிதமாக அந்த வீட்டின் மேல் மாடியின் படிகளில் ஏறி திறந்து கிடந்த காலியான சிறிய அறை ஒன்றுக்குள் அவர் பதுங்கிக் கொண்டார்.

அடுத்த நாள் காலை விடிந்ததும் ஜோஹன் எழுந்து தன்னைச் சுற்றிலும் கவனமாகப் பார்த்தார். தனக்கு முன்பாக மரக்கிளைகளான ஏராளமான காய்ந்த குச்சிகள் நிறைந்த ஒரு பெரிய குவியலைக் கண்டார். அவ்வளவுதான், அந்த பெரிய குவியலுக்குள் பாம்பு போல ஊர்ந்து நகர்ந்து ஆழமாக உட் பகுதிக்குச் சென்று அங்கு பூமியில் விழுந்து கிடந்த ஒரு பெரிய மரத்தின் அடியில் தன்னை மறைத்துப் படுத்துக் கொண்டு வெளி உலகில் என்ன நடக்கின்றது என்பதை மிகவும் உன்னிப்பாகக் கவனித்தவராக தனது காதுகளை கூர்மையான நிலையில் வைத்திருந்தார். சற்று நேரத்திற்கெல்லாம் ஸ்பானிய காலாட்படையின் குதிரைகள் தான் பதுங்கியிருந்த மரக்கிளைகளின் குவியலுக்கு அருகில் சத்தம் எழுப்பிச் செல்லுவதை அவர் கவனித்தார். பட்டணத்தின் பிரதான கதவுகள் மூடப்பட்டு பட்டணத்தின் ஒவ்வொரு வீடும் ஜோஹன் பிரன்ட்ஸ் என்ற வேதப் புரட்டன் இருக்கின்றானா என்று கவனமாக தேடி ஆராயப்படுகின்றன என்ற வார்த்தைகளை மக்கள் அருகில் நின்று பேசுவதை மறைந்து படுத்திருக்கும் குருவானவரின் காதுகள் கேட்பதாக இருந்தன.

மத்தியானம் வந்ததும் அவருக்கு அருகில் கிடந்த மரக்கிளைகளின் சலசலப்பு இன்னும் சற்று அதிகமாகக் கேட்கவே அவர் பயத்தால் தாக்குண்டு தான் இன்னும் உட்புறமாகச் சென்று தன்னை மறைத்துக் கொள்ள முயன்றார். அந்த சலசலப்பு இன்னும் அதிகமாக தன்னண்டை கேட்பதை அறிந்த அவர் பார்த்தபோது ஒரு கோழி தன்னருகில் முட்டையிட்டிருப்பதை அவர் கவனித்தார். அந்த முட்டையைக் கண்டதும் அந்த தேவ மனிதருக்கு மிகுந்த பயமும், நடுக்கமும் மேலிட்டது. காரணம், முட்டையிட்ட கோழி நிச்சயமாக கொக்கரித்துச் சத்தமிடும். அப்பொழுது கோழியின் சொந்தக்காரர் முட்டையை எடுப்பதற்காகத் தேடிக் கொண்டு தான் படுத்திருக்கும் மரக் கிளைகளின் குவியலுக்கு வந்து தேடுவார்கள், அப்பொழுது தன்னை சுலபமாக கண்டு பிடித்துவிடுவார்கள் என்று அதிகமாக அஞ்சி நடுங்கினார். ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்கள், அந்த முட்டையையிட்ட கோழியானது எந்த ஒரு சிறிய குரலும் எழுப்பாமல் அது எப்படி வந்ததோ அப்படியே மிகுந்த அமைதியுடன் சென்றுவிட்டது.

வேதாகம நாட்களில் தம்முடைய தாசனாம் எலியாவை காகங்களின் மூலமாக அப்பமும், இறைச்சியும் கொடுத்து அற்புதமாக போஷித்த தேவன் ஒரு கோழியை அனுப்பி முட்டையிடச் செய்த அவரது தயவுக்காக அவருக்கு நன்றி துதி ஏறெடுத்து விட்டு தான் தனது கரத்தில் முந்தின இரவில் கொண்டு வந்த சிறிய ரொட்டியுடன் அந்த முட்டையையும் சாப்பிட்டார். வருகிற நாட்களிலும் தன்னுடைய நல்ல ஆண்டவர் தனக்காக கவலைப்பட்டு ஆகாரத்தை அனுப்புவார் என்று அவர் நிச்சயமாக விசுவாசித்தார். மெய்தான், தேவன் தம்முடைய அடியானுக்காக பரிதபித்து அதிசயத்தை செய்தார். அந்த கோழி ஒவ்வொரு நாளும் அவரண்டை சென்று முட்டையிட்டு எந்த ஒரு சந்தடியும் இல்லாமல் வெளியே போய்விட்டது. இப்பொழுது அவரைப் பிடிக்க வந்த அந்த ஸ்பானிய வீரர்கள் ஒவ்வொரு வீடாகத் தேடி தேடி தான் முதல் நாள் இரவு முழுவதும் அவர் பதுங்கியிருந்த மேல் வீட்டையும், அதற்கு அருகிலிருந்த வீடுகளையும் கவனமாக சோதனையிட்டனர். அவர் அந்த வீட்டின் கூரைக்குள் பதுங்கியிருப்பார் என்று நினைத்து ஒரு போர் வீரன் தனது வாளால் மேற்கூரையை சில தடவைகள் குத்திப் பார்த்தான். அந்தப் படை வீரரின் கண்கள் எல்லா இடங்களையும் கூர்ந்து நோக்கிப் பார்த்தன. சில போர் வீரர்கள் ஜோஹன் பிரன்ட்ஸ் குருவானவர் பதுங்கியிருந்த காய்ந்த மரக்குச்சிகளின் பெரிய குவியலில் ஏறி தங்கள் நீண்ட ஈட்டிகளால் அந்தக் குவியலைப் பல இடங்களிலும் குத்தினார்கள். ஆனால், நமது தேவ மனிதர் பூமியில் அவருக்கென்று கர்த்தரால் விழத்தள்ளப்பட்டிருந்த பெரிய மரத்தின் அடியில் இன்னும் நகர்ந்து போய் பதுங்கிக் கொண்டார்.

"வேதப் புரட்டன் இங்கே எங்கும் இல்லை, புறப்படுங்கள்" என்று ஒரு குரூர போர் வீரன் கூறவே அனைத்து ஸ்பானிய படை வீரர்களும் புறப்படத் தொடங்கினார்கள். ஜோஹன் பிரன்ட்ஸ் குருவானவர் மரச்சுள்ளிகளுக்குள் பதுங்கியிருந்த 15 நாட்களும் அந்தக் கோழி வந்து 15 முட்டைகளை அவருக்கு இட்டுச் சென்றது. 16 ஆம் நாள் கோழி முட்டையிட வரவில்லை. அந்த நாளில்தானே ஸ்பானிய படை வீரர்களும் பட்டணத்தை விட்டு கிளம்பி விட்டனர். அல்லேலூயா.

அந்த 16 ஆம் நாள் முழுவதும் ஜோஹன் பொறுமையோடு பதுங்கிக் காத்திருந்து அந்த நாளின் இருள் சூழும் மாலை வேளையில் தன்னை அதிகமாக நேசிக்கின்றவரும், தான் கடைசியாகத் தங்கியிருந்து தப்பி வந்த இளவரசன் உல்ரிச் என்பவருடைய கோட்டைக்குச் சென்று தான் தன் கர்த்தரால் 15 நாட்கள் அதிசயமாகப் பாதுகாக்கப்பட்ட விதத்தையும், 15 நாட்களும் ஒரு கோழியை அனுப்பி அந்தக் கோழி முட்டைகளால் தன்னைப் போஷித்த வகையையும் கூறி கர்த்தரை மகிமைப்படுத்தினார். அதைக் கேட்ட தேவ பக்தனான உல்ரிச் இளவரசன் ஆச்சரியத்தால் பிரமிப்படைந்தார்.

 

நம்மைப் பாதுகாத்து, நம்மை
நன்மையால் முடிசூட்டும் தேவன்

தேவ மனிதர் ஜோஹன் பிரன்ட்ஸ் குருவானவரை கத்தோலிக்க கொடிய சக்கரவர்த்தி ஐந்தாம் சார்லஸ்க்கும் அவனது குரூர படைகளுக்கும் விலக்கிக் கண்மணி போலப் பாதுகாத்து அவரை அற்புதம் அதிசயமாக போஷித்து, அவருக்கு மரண ஆபத்து வரும் ஒவ்வொரு சமயத்திலும் அதை முன்கூட்டி அறிவிக்க தம்முடைய இரகசிய உளவாளிகளை வைத்துப் பாதுகாத்த அன்பின் ஆண்டவர் நம்மையும் அதேவிதமாக இந்த வனாந்திர பாழுலகில் தந்திர சாத்தானுக்கும் வான மண்டலங்களிலுள்ள அவனது பொல்லாத ஆவிகளின் சேனைக்கும் பாதுகாத்து ஜீவனுள்ளோர் தேசத்திலே நம்மை இதுவரை கிருபையாக அரவணைத்து ஆதரித்து வரும் நம் ஆண்டவருக்கு நாம் என்ன ஈட்டை செலுத்த முடியும்? மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்து வாருங்கள். எத்தனையோ மக்கள், நம்மிலும் இள வயதினர் எத்தனை கொடிய நோய்களால் பீடிக்கப்பட்டு வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இராக்காலங்களில் நித்திரையின்றி படுக்கையில் அங்குமிங்கும் புரண்டு உருண்டு கொண்டிருக்கின்றார்கள். பல லட்சங்களை தங்களது நோய்களுக்காக மருத்துவமனைகளுக்கு அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

நம்மில் பலர் ஒரு காலத்தில் பொருளாதார நிலையில் எவ்வளவோ கஷ்டங்களின் ஊடாகக் கடந்து வந்தோம். நம்முடைய பிள்ளைகளுக்கு ஏற்ற கல்வி வசதிகளைக் கொடுத்து அவர்களை வாழ்வில் முன்னுக்குக் கொண்டு வர எவ்வளவோ துயரங்களை அனுபவித்தோம். எத்தனை ஆச்சரியம், தேவன் நம்முடைய பிள்ளைகளுடைய காரியங்களை எல்லாம் பொறுப்பெடுத்து நடத்தி அவர்களுக்கு சிறப்பான கல்வியையும், நல்ல வேலை வாய்ப்புகளையும் கொடுத்து ஆசீர்வதித்தார். நம்மில் அநேகருடைய பிள்ளைகள் இப்பொழுது வெளி நாடுகளில் பணி செய்து ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பணங்களை சம்பாதிக்கின்றனர். உலகிலேயே அதிகமாக வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பது நமது இந்திய கிறிஸ்தவர்கள் மாத்திரமே என்று பம்பாயிலிருந்து வெளி வரும் ஒரு ஆங்கில கிறிஸ்தவ பத்திரிக்கை கூறுகின்றது. உண்மைதான். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.

உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களைக் காட்டிலும் தேவன் நம்மில் அநேகரை தமது சொந்தப் பிள்ளைகளாகத் தெரிந்து கொண்டு நம்மைத் தமது சொந்த ஜனமாக நிலைப்படுத்தினார். இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்ததின் உடன்படிக்கைக்கு அந்நியரும், தேவனற்றவர்களுமாக இருந்த நம்மை தம்முடைய விலையேறப்பெற்ற பரிசுத்த இரத்தத்தினால் கழுவி சுத்திகரித்து சித்திரத்தையலாடையை நமக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை நமக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ள பட்டுச் சால்வையையும் நமக்குக் கொடுத்து, ஆபரணங்களால் நம்மை அலங்கரித்து, கைகளிலே கடகங்களையும், கழுத்திலே சரப்பணியையும் போட்டு, நெற்றியிலே நெற்றிப்பட்டத்தையும், காதுகளில் காதணியையும், தலையின் மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தார். நம்மைத் தமது பரிசுத்தத்தினால் அலங்கரித்து இந்த உலக வாழ்வின் ஓட்டத்திற்குப் பின்னர் நாம் ஆண்டவருடைய பரம வாசஸ்தலங்களை சுதந்தரிக் கொள்ளும்படியான மாபெரும் சிலாக்கியத்தையும் நமக்கு அளித்தார். அந்த அன்பின் ஆண்டவருக்கு நாம் இந்த உலகத்தில் சாட்சிகளாக வாழ்கின்றோமோ?

 

தேவனுக்குத் துரோகம் செய்யும் கிறிஸ்தவர்கள்

ஜீவனுள்ள தேவனாம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவண்டை புற மதஸ்தர் வருவதற்கு இன்று அஞ்சி நடுநடுங்குகின்றனர். அதின் ஒரே காரணம், கிறிஸ்தவ மக்களின் சாட்சியற்ற சீர்கெட்ட வாழ்க்கையாகும். ஒரு கிறிஸ்தவ மிஷன் ஆஸ்பத்திரியில் பணி செய்து கொண்டிருந்த ஒரு இந்து டாக்டரிடம் ஒரு சுவிசேஷகர் வந்து ஆண்டவர் இயேசுவைப் பற்றிச் சொன்னபோது அந்த பெண் மருத்துவர் சொன்ன வார்த்தை இதுதான் "நீங்கள் சொல்லுகின்ற இயேசுவை நான் நேசிக்கின்றேன். அவருடைய நல்ல போதனைகள், பாவிகளை இரட்சிக்க அவர் மானிட அவதாரம் எடுத்து தன்னுடைய ஜீவனையே சிலுவையில் கொடுத்து அவர்களில் அன்புகூர்ந்த செயல் எல்லாம் என் உள்ளத்தை அதிகமாகத் தொட்டிருக்கின்றது. ஆனால், எனது வீட்டிற்கு அருகில் என்னுடன் வேலை பார்க்கும் கிறிஸ்தவ டாக்டர் ஒருத்தி இருக்கின்றாள். அவளும் ஒரு இயேசுவை கும்பிடுவதாகச் சொல்லுகின்றாள், கோவிலுக்கு எல்லாம் போகின்றாள். ஆனால், அவள் வணங்கும் இயேசு மட்டும் எனக்கு வேண்டவே வேண்டாம்" என்று சொன்னார்களாம். அந்த கிறிஸ்தவ பெண் டாக்டரின் வாழ்க்கையைக் கவனித்த அந்த இந்து மருத்துவர் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்ற அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டது. கிறிஸ்தவ மக்களின் சாட்சியற்ற வாழ்வைப் பாருங்கள்!

ஒரு இடத்தில் உயர் பட்டாதாரி ஆசிரியர்களின் மேல் படிப்புக்கான ஒரு அரசாங்க தேர்வு நடந்து கொண்டிருந்திருக்கின்றது. அவர்களை மேற்பார்வையிட வந்த அரசு மேலாளர் அவர்களை கண்காணிக்க கவனம் செலுத்தாததால் தேர்வு எழுதியவர்கள் எல்லாரும் தங்கள் புத்தகங்களைத் திறந்து வைத்து ஒட்டு மொத்தமாக காப்பி அடித்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லாரும் புறமதஸ்தர். அவர்கள் நடுவே ஒரு கிறிஸ்தவரும் மற்றவர்களைப் போல தன்னுடைய புத்தகத்தை திறந்து வைத்து பார்த்து எழுதியிருக்கின்றார். அவர் ஒரு கிறிஸ்தவ மிஷன் பாடசாலையின் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். ஒவ்வொரு நாளும் காலையில் தனது பள்ளியின் அசெம்பளியில் மாணவ மாணவியருக்கு கிறிஸ்தவ போதனை கொடுக்கும் ஆசான் அவர். அவருடைய வாழ்வின் முன் மாதிரியைக் கவனித்தீர்களா? அரசாங்கம் அளிக்கும் சம்பள உயர்வுக்காக இந்தவித சாட்சியற்ற காரியத்தை அவர் செய்திருக்கின்றார். அவருடன் தேர்வு எழுதிய புறமதஸ்தரான மற்ற ஆசிரியர்கள் அவர் வழிபடும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எந்த ஸ்தானத்தைக் கொடுப்பார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

மேற்கண்ட காரியத்தைவிட மிகவும் கொடிய காரியத்தை மற்றொரு கிறிஸ்தவ மிஷன் பாடசாலையின் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செய்திருக்கின்றார். தனது கரத்தின் கீழ் கல்வி பயிலும் ஒரு மாணவியுடன் தவறாக நடந்து அவளைக் களங்கப்படுத்திய காரணத்திற்காக அந்த கிறிஸ்தவ தலைமை ஆசிரியரை பொது மக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றார்கள். அத்துடன் அவரைக் குறித்து அருவருப்பாக நோட்டீஸ்கள் அச்சிட்டு யாவரும் வாசிக்கும் வண்ணமாக பட்டணத்துச் சுவர்களில் ஒட்டியிருக்கின்றார்கள். இவையெல்லாம் உண்மைச் சம்பவங்கள். இந்தக் காரியங்களை எல்லாம் பார்க்கின்ற புறமதஸ்தர் கிறிஸ்தவ மக்களையும் அவர்கள் வழிபடுகின்ற ஜீவனுள்ள தேவனையும் எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்கின்றீர்கள்! எத்தனை கொடிய வேதனையான காரியம் பாருங்கள்.

ஒரு சமயம் எனக்குத் தெரிந்த ஒரு இந்து மனிதர் "நான் எனது கிளை அலுவலகத்தில் வேலை பார்க்கும்போதே எனது பணி ஓய்வு கிடைத்து அப்படியே நான் ஓய்வு பெற்று மகிழ்ச்சியோடு வெளியே வந்து விட்டேன். ஆண்டவனே, அந்த நாற்றம் பிடித்த தலைமை இடத்திலிருந்து நான் ஒருக்காலும் ஓய்வுபெறக்கூடாது என்று நான் ஏறெடுத்த என்னுடைய பிரார்த்தனையை என்னுடைய பகவான் அப்படியே கேட்டான்" என்று சொன்னார்கள். தலைமை அலுவலகத்திலிருந்து தான் ஓய்வு பெற விரும்பாத காரணம் என்னவெனில், அவருடைய மேல் அதிகாரி ஒரு கிறிஸ்தவர். அந்தக் கிறிஸ்தவர் தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு கிறிஸ்தவ மனிதரின் மனைவியை தன்னுடைய மனைவி போல வைத்து ஊரும், உலகமும் அறிய விபச்சார வாழ்வில் இருக்கும் ஒரு மனிதனாவான். அந்த அசுத்தமான பாவம் நிறைந்த இடத்திலிருந்து அந்த இந்து மனிதர் பணி ஓய்வுபெற முழுமையாக வெறுத்தார். இந்தவிதமான கேடான ஜீவியத்தில் கிறிஸ்தவர்கள் இருக்கும்போது அவர்கள் வழிபடும் தேவனண்டை புறமதஸ்தர் எப்படி வருவார்கள்?

கணவன் இல்லாத நேரம் பார்த்து கிறிஸ்தவ குடும்ப ஸ்திரீயுடன் வேசித்தனம் பண்ண குடும்பஸ்தனாகிய மற்றொரு கிறிஸ்தவன் அவளின் வீடு நோக்கிப் பதுங்கிச் செல்லுகின்றான். அவளும் இவனை அங்கீகரித்துத் தன் கணவனுக்குத் துரோகம் செய்கின்றாள். இந்த மக்களைப் பார்க்கும் புறமதஸ்தர் இந்த மக்கள் ஆராதிக்கும் கர்த்தரை ஜீவனுள்ள பரிசுத்த கர்த்தராக எப்படி காண முடியும்? அவரை தங்கள் இரட்சகராக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ஒரு கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் ஏராளமான மக்கள் கூடியிருக்கின்றனர். அவர்களில் அநேக புறமதஸ்தர்களும் உண்டு. அந்த நாளில் அங்கு அடக்கம் செய்யப்பட்ட ஒரு கிறிஸ்தவ ஸ்திரீயைக் குறித்து அவர்களில் பலர் பேசிக்கொண்ட ஒரு காரியம் அந்த ஸ்திரீ தான் உயிரோடிருந்து அரசாங்க வேலையிலிருந்த நாட்களில் பொது மக்களிடம் தாராளம், ஏராளமாக வாங்கிக் குவித்த லஞ்சத்தைக் குறித்துத்தான். அந்த ஸ்திரீ கொடிய நோயால் பாதிக்கப்பட்டு மரணக் கட்டிலில் இருந்த நாட்களில் தன்னை வந்து பார்க்க வந்த தன்னுடன் வேலை பார்த்த அரசு ஊழியர்களிடம் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்கள் மக்களிடம் இலஞ்சம் வாங்க வேண்டாம் என்றும், தனக்கு நேர்ந்த கதி அவர்களில் ஒருவருக்கும் வரக்கூடாது என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாகவும் கல்லறைத் தோட்டத்தில் பேசிக் கொள்ளப்பட்டது. ஆ, இன்று கிறிஸ்தவ அரசு அதிகாரிகள் தங்களுடைய பணி காலங்களில் எத்தனையாக மக்களிடம் லஞ்சம் வாங்கிக் குவித்து நிலபுலங்களை வாங்கி, பல அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி சாட்சியற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மக்களின் வாழ்க்கையைப் பார்க்கின்றவர்கள் எப்படி கிறிஸ்தவர்களாகத் துணிவார்கள்?

ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் ஒரு பெண் மகளின் கண் பார்வை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மகளை தந்திரமாக அவளின் பெற்றோர் மற்றொரு கிறிஸ்தவக் குடும்பத்தில் உள்ள ஒரு மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். அங்கு சென்ற இடத்தில் பிள்ளையின் கண் பார்வை மிகவும் மோசமாக இருப்பதைக் கண்ணுற்ற மாப்பிளைப் பையனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து மகளை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் அவளுடைய கண்களுக்கு மிகவும் சிறந்த வைத்திய சிகிட்சை மேற்கொண்டார்கள். ஆனால், ஒன்றும் பயன் அளிக்காத காரணத்தாலும், மருத்துவர்கள் கைவிட்ட காரணத்தாலும் அந்தப் பெண்ணை பெற்றோரின் வீட்டிற்கே திரும்ப அனுப்பி வைத்து நீதிமன்றத்தில் விவாக ரத்து கேட்டார்கள்.

தன்னுடைய மகளுக்காக நீதிமன்றம் வந்த அந்த கிறிஸ்தவ தகப்பனார் வரதட்சணை கொடுமை காரணமாக தன்னுடைய மகளின் கண்களில் மாப்பிளை வீட்டார் விஷமான பச்சிலையை பலவந்தமாக அரைத்து ஊற்றிக் கண்களை வேண்டுமென்றே குருடாக்கிவிட்டார்கள் என்பது போன்ற அபாண்டமான பொய் வார்த்தைகளை நீதிபதியிடம் கூறி வந்திருக்கின்றார். அப்படி ஒரு நாள் நீதிமன்றத்தில் மாப்பிளை வீட்டார் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக ஆஜராகி நீதிபதிக்கு முன்பாக நின்று கொண்டிருக்க அந்தப் பெண்ணின் தகப்பனார் வழக்கம்போல குற்றவாளிக்கூண்டில் ஏறி நின்று கொண்டு தேவனுக்கு விரோதமான அபாண்டமான பொய் குற்றங்களை மாப்பிளை வீட்டார் மேல் சாட்டிக்கொண்டிருக்கும் வேளையில்தானே அந்த இடத்திலேயே நீதி மன்றத்தில் திடீரென்று சுருண்டு விழுந்து மரித்துவிட்டார். இந்த உண்மைச் சம்பவம் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சமீப நாட்களில் நடந்த ஒரு அதிர்ச்சியான ஒரு சம்பவமாகும். கிறிஸ்தவ மக்களின் மனச்சாட்சியற்ற நடபடிகளைக் கவனித்தீர்களா?

ஒரு நாள் மாலை நேரம் வீட்டிலிருந்து புறப்பட்டு நான் கடைவீதிக்குச் சென்று கொண்டிருந்தேன். மேலே மேட்டின் உச்சியில் ஆண்டவருடைய தேவாலயம். அதை ஒட்டி அமைந்திருந்த தேவாலயத்தின் சபா மண்டபத்தில் அன்று ஒரு ஆவிக்குரிய கூட்டம் அங்கு நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் எழுப்பப்பட்ட ஸ்தோத்திர தொனிகள் மற்றும் அல்லேலூயா ஆர்ப்பரிப்புகள் பலமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. எனக்கு எதிரே ரஸ்தாவில் இரண்டு மனிதர்கள் வந்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன். அந்த மனிதர்களில் ஒருவர் மற்றவரைப் பார்த்து "மேலே பார், குதிப்பான், கூத்தாடுவான், சத்தம் போடுவான். பின்னர் இல்லாத அக்கிரமங்களை எல்லாம் செய்வான். அக்கிரமங்களைச் செய்துவிட்டு அவனுடைய ஆண்டவனிடத்தில் போய் ஒரு மன்னிப்பும் கேட்டுவிடுவான். அவன் ஆண்டவனும் அதை உடனே மன்னித்துவிடுவான். திரும்பவும் அக்கிரமம் செய்வான். மறுபடியும் ஆண்டவனிடத்தில் வந்து மன்னிப்பு கேட்பான். இவன்களும், இவன்களுடைய ஆண்டவனும்" என்று பரிகாசம் செய்து கொண்டு செல்லும் வார்த்தைகள் என் காதுகளில் தெளிவாக விழுந்தன. கிறிஸ்தவர்களையும், அவர்கள் வழிபடும் ஜீவனுள்ள தேவனையும் புறமதஸ்தர் எந்தக் கண்ணோட்டத்தில் வைத்துப் பார்க்கின்றார்கள், எந்த ஸ்தானத்தில் அவர்களை வைத்திருக்கின்றார்கள் பார்த்தீர்களா?

கிறிஸ்தவ குடும்பத்தில் மாமனுக்கு விரோதமான கசப்புணர்ச்சியின் காரணமாக அவருக்கான ஆகாரங்களை அடுத்த வீட்டில் வசிக்கும் மாமனாருக்கு கிறிஸ்தவ மறுமகள் இரு வீடுகளுக்கும் இடையே நிற்கும் கோட்டைச் சுவரில் வைக்கின்றாள். மனைவி இல்லாத அந்த மனிதர் அந்தச் சாப்பாட்டை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு காலிச் சாப்பாட்டுத் தட்டை கோட்டைச் சுவரில் வைத்துவிடுகின்றார். காலை, மாலை, இரவுச் சாப்பாடுகள் எல்லாம் கோட்டைச் சுவருக்கே வந்துவிடும். அந்தந்த நேரத்தில் அந்த மனிதர் அவைகளை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு காலித் தட்டை கழுவி கோட்டைச் சுவரில் வைத்துவிட வேண்டும். கல்லை, மண்ணைக் கும்பிடுகின்றார்கள் என்று நாம் சொல்லும் மக்கள் மத்தியில் கூட இப்படிப்பட்ட அநியாயங்களை நாம் காணவியலாது! மகா பயங்கரம்!!

கிறிஸ்தவ குடும்பங்களில் உடன் பிறந்த அக்காவுக்கு விரோதமாக தங்கை பில்லி சூனியம் வைத்து அக்காளின் கை கால்களை வேலை செய்ய முடியாதபடி முடமாக்குகின்றாள். கிறிஸ்தவக் குடும்பங்களில் பாகப் பிரிவினைகளின் காரணமாக உடன் பிறந்த சகோதரி சொந்த தம்பியை ஆள் வைத்து ஓட ஓட வெட்டி கொலை செய்து ஆஸ்தியை அபகரிக்கின்றாள். ஆ, எத்தனை எத்தனையான கொடிய காரியங்கள் எல்லாம் இன்று கிறிஸ்தவ மக்கள் மத்தியில் தாராளமாக நடந்து கொண்டிருக்கின்றன. கடலில் காயம் உரசுவது போன்று ஓரிரு நிகழ்வுகளை நான் உங்களுக்குத் தந்திருக்கின்றேன். கிறிஸ்தவ மக்களின் இப்படிப்பட்ட நடபடிகளைக் கவனிக்கும் புறமதஸ்தர் அன்பின் ஆண்டவர் இயேசுவையும், அவருடைய அன்பின் மார்க்கத்தையும் வெறுத்து தூஷிக்கின்றனர். அந்த ஆண்டவர் இயேசு தங்களுக்குத் தேவையே இல்லை என்ற அளவுக்கு அவர்களுடைய வெறுப்பு வளர்ந்திருக்கின்றது.

நெல்லை மாவட்டத்தின் தென் பகுதிகளில் கிறிஸ்தவ மக்கள் சுவிசேஷ ஊழியங்களுக்காக இந்து மக்கள் நிறைந்த கிராமங்களுக்குச் சென்றால் "மிகவும் சீர்கெட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் கிறிஸ்தவர்களிடத்தில் நீங்கள் போய் பிரசங்கம் பண்ணி அவர்களை முதலில் நல்வழிப்படுத்துங்கள். அவர்களைவிட நாங்கள் எவ்வளவோ மேலான, முன் மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்" என்று சொல்லி அவர்களை தடுத்து நிறுத்தி அனுப்புகின்றார்களாம். எத்தனை துயரமான காரியம் பாருங்கள்!

கோவை மாவட்டத்தில் ஏதோ ஒரு இடத்தின் சுவரில் யாரோ ஒரு தேவ ஊழியர் "இயேசு சீக்கிரம் வரப்போகின்றார்" என்று அழகாக எழுதி வைத்திருக்கின்றார். அந்த வார்த்தைக்கு அடுத்து கீழாகவே ஆண்டவர் இயேசுவைப் பகைக்கின்ற புறமதஸ்தரான மனிதர் ஒருவர் "அவரைச் சிலுவையில் அறையக் காத்துக் கொண்டிருக்கின்றோம்" என்று எழுதி வைத்திருக்கின்றாராம். கிறிஸ்தவர்கள் மேல் தேவனை அறியாத மக்கள் கொண்டுள்ள வெறுப்பையும், வேதனையையும் பாருங்கள்! "தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே" (ரோமர் 2 : 24) என்ற ஆண்டவருடைய வாக்கின்படி முதல் நூற்றாண்டிலேயே அந்த துயரப்படலம் ஆரம்பித்து இன்று அது கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது.

 

தேவனுக்கு துரோகம் செய்யும் கிறிஸ்தவ ஊழியக்காரர்

"நீங்களோ, சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவ தூதர்களிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேரானவர்களின் சர்வ சங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலின் இரத்தம் பேசினதைப் பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்" (எபிரேயர் 12 : 22-24)

மேலே தேவனுடைய வசனத்தில் காணப்பட்ட மகா மகத்துவமும், உன்னதமுமான நிலைக்கு வந்து சேர்ந்த கர்த்தருடைய ஊழியக்காரர் பலர் அந்த உன்னத நிலையை உதறித் தள்ளிவிட்டு இன்று உலகம் கொடுக்கக் கூடிய அநித்தியமானஆஸ்தி, ஐசுவரியம், செல்வம், பெயர், புகழ், சொகுசு வாழ்க்கை மற்றும் உலக மேன்மையை நாடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மக்களுடைய ஒரே குறிக்கோளெல்லாம் இந்த உலகத்தில் கோடிகளைக் குவிப்பதுதான். இந்த ஊழியக்காரர் இன்று உலக மக்களின் பார்வையில் "இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்" (அப் 16 : 17) என்ற ஸ்தானத்தில் இல்லாமல் உலக கோடீஸ்வரர்களின் வரிசையில் வைத்து அடையாளம் காணப்படுகின்றனர். ஒரு சமயம் ஒரு இந்து வாலிபன் என்னைப் பார்த்து "உங்கள் தேவ ஊழியர்கள் பில் கேட்ஸ் (உலகின் முதன்மை ஸ்தானத்திலுள்ள மிகப் பெரிய ஐசுவரியவான்) போன்ற கோடீஸ்வரர்களின் கோடிகளுக்கு வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்" என்று என்னிடம் கூறினான். எத்தனை வேதனையான காரியம்!

"உலகம் என் பின்னே, சிலுவை என் முன்னே, பின் நோக்கேன் நான்" என்ற முழுமையான அர்ப்பணிப்போடு தேவனுக்கு ஊழியம் செய்ய களம் இறங்கிய தேவஊழியன் உலக மாயை என்ற சிவப்பான பயற்றங்கூழை (ஆதி 25 : 32) கண்டதும் தனது உன்னதமான அழைப்பை அசட்டை செய்து காற்றில் பறக்கவிட்டு விட்டு "பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும், ஒலிவத் தோப்புகளையும் திராட்சத் தோட்டங்களையும், ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் திரும்பிவிட்டான்" (2 இரா 5 : 26) "நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல" (யோவான் 17 : 16) என்று ஆண்டவர் தமது அடியார்களைக் குறித்து எத்தனை அருமை பெருமையாக தமது பிதாவிடம் கூறினார். ஆனால், இன்று தேவ ஊழியன் முதல்தரமான உலகத்தானாக, உலக மனிதன் அனுபவிப்பதைக் காட்டிலும் உலகத்தை அத்தனை அதிகமாகவும், முழுமையாகவும் ருசித்துப் புசித்து ஆனந்தித்து வருகின்றான். தேவ ஊழியனுக்கு எத்தனை ஆடம்பரமான வாழ்க்கை வசதிகள், எத்தனை ஆடம்பரமான பிரயாணங்கள், உலக ஐசுவரியவான்கள், ஆளுகையில் உள்ள உயர்மட்ட உலக அரசியல்வாதிகள் போன்றவர்களோடு இவர்களுடைய நெருக்கமான ஐக்கிய சிநேகங்கள், சமுதாயத்தில் மினுக்கான வஸ்திரம் தரித்திருப்போருக்கு இவர்கள் கொடுக்கும் முதலிடங்கள், இவர்கள் வாயிலிருந்து புறப்படும் பெருமையான வார்த்தைகள், இவர்கள் பார்க்கும் மேட்டிமையான பார்வைகள். யார் இவர்களை தேவ ஊழியராக அடையாளம் காண முடியும்?

இவர்கள் பிரசங்கிக்கும் ஆண்டவர் பரம ஏழையாக இருந்து இந்த உலகத்தைக் கடந்து சென்றார். அவர் சிசுவாக இருந்தபோது அவருடைய பெற்றோர் அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க எருசலேம் தேவாலயத்திற்குக் கொண்டு சென்றபோது ஒரு சிறிய ஆட்டுக்குட்டியை வாங்கி பலி செலுத்த பண வசதி இல்லாத அத்தனை ஏழ்மை நிலையில் ஒரு ஜோடு காட்டுப் புறாவையாவது இரண்டு புறாக் குஞ்சுகளையாவது பலியாக செலுத்தியதாக நாம் காண்கின்றோம். தம்முடைய அடியார்களை ஊழியங்களுக்கு அனுப்பிய சமயத்தில் "பணப்பை, சாமான்பை, பாதரட்சைகள் இல்லாமல்" அனுப்பிய (லூக்கா 22 : 35) அத்தனையான தரித்திர நிலை. வரிப்பணம் செலுத்தக்கூட கையில் பணம் இல்லாமல் அன்பின் ஆண்டவர் பேதுருவினிடத்தில் கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்து அதன் வாயைத் திறந்து பார்த்து அங்கிருக்கும் பணத்தைக் கொண்டு தனக்கு வரி செலுத்தும்படியாக கூறுகின்றார். "நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு, மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை" (மத் 8 : 20) என்ற வசனத்திலிருந்து அவர் எத்தனை ஏழையாக உலகத்தில் வாழ்ந்தார் என்று நாம் பார்க்கின்றோம். ஏசாயா 53 ஆம் அதிகாரம் 9 ஆம் வசனத்தில் நாம் பார்க்கும்போது "ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்" என்ற வசனத்திலிருந்து அவர் தமது பூவுலக நாட்கள் முழுமையிலும் தரித்திரனாக வாழ்ந்ததாகவும் மரித்த போதுதான் ஐசுவரியவானோடு அவர் இருந்ததாகவும் நாம் கவனிக்க முடியும்.

ஆண்டவருடைய அன்பின் அடியார்கள் அனைவரும் தங்கள் போதகரைப் போல இந்த உலகத்தில் தரித்திரராக வாழ்ந்து கடந்து சென்றார்கள். "வெள்ளியும், பொன்னும் என்னிடத்தில் இல்லை" (அப் 3 : 6) என்று அலங்கார வாசலண்டை அமர்ந்திருந்த பிச்சைக் காரனிடத்தில் பேதுரு அப்போஸ்தலன் சொல்லுவதை நாம் பார்க்கின்றோம். "தரித்திரர்கள்" "ஒன்றுமில்லாதவர்கள்" என்று அவர்கள் அறியப்பட்டிருந்தார்கள் என்பதை தேவனுடைய வார்த்தையில் நாம் வாசிக்கின்றோம் (2 கொரி 6 : 10) "இந்நேரம் வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாக இருக்கின்றோம்" (1 கொரி 4 : 11) என்ற தேவ வார்த்தை அப்போஸ்தலர்களின் மிகவும் நிர்ப்பந்தமான ஏழ்மை நிலையை நமக்குத் தெளிவாகக் காண்பிப்பதாக இருக்கின்றது.

ஆனால் இன்றைய தேவ ஊழியர்களின் நிலை முற்றும் நேர்மாறானது. உலகம் அவர்களை கோடீஸ்வரர்களாக மாத்திரமல்ல "கிறிஸ்தவ வியாபாரிகள்" "தொழிலதிபர்கள்" என்றும் அடையாளம் கண்டு கொண்டிருக்கின்றது. மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும், மறு பிறப்பையும், மனிதனை நினையாமல் சடுதியாக சந்திக்கும் மரணத்தையும், தேவனுடைய நியாயத் தீர்ப்பையும், எரி நரகத்தையும், நித்திய ஜீவனையும், பரிசுத்தத்தையும், இயேசுவைப்போல மாற வேண்டியதன் அத்தியந்த அவசியத்தையும், முடிவில்லாத நித்தியத்தையும் தேவ ஜனத்திற்கு பிரசங்கிக்க வேண்டிய ஊழியக்காரன் நிலையில்லா சரீர சுகத்தையும், 100 ஆண்டு காலம் நோய் நொடியின்றி வாழும் வகையையும், இந்த உலகத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும் இரகசியத்தையும் மக்களுக்குப் பிரசங்கிக்கின்றான். இந்தச் செழுமையின் உபதேசத்தை (Prosperity Gospel of Health and wealth) கடந்த கால பரிசுத்த பக்த சிரோன்மணிகள் தங்கள் கரங்களினால் தொடக்கூட அஞ்சி நடுங்கினார்கள். மருத்துவ மனையில் மிகவும் சுகயீனமாக படுத்திருந்த தங்கள் பையனுக்காக ஜெபிக்க வரும்படியாக மிகவும் வருந்தி அழைத்த ஒரு அன்பான பெற்றோருடைய வேண்டுகோளைக்கூட பரிசுத்த பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்கள் மிகவும் நடுக்கத்தோடும், தயக்கத்தோடும் ஏற்றுக் கொண்டதுடன், இனி தன்னை அப்படிப்பட்ட காரியங்களுக்கு திட்டமாக அழைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டதாகவும் நாம் வாசிக்கின்றோம். காரணம், சரீர சுகத்தை நாம் பிரசங்கித்தால் அவர்களின் விலையேறப்பெற்ற ஆத்துமாவின் இரட்சிப்பைக் குறித்த காரியத்தில் மக்கள் கவனமும், கவலையும், முக்கியத்துவமும் கொடுக்கத் தவறிவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள்.

இந்த உலகத்தைக் கடந்து சென்ற பூர்வ காலத்து பரிசுத்த பக்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை நீங்கள் உங்கள் கரங்களால் எடுத்துப் படித்துப் பாருங்கள். ஆ, அவர்கள் எல்லாரும் நஷ்டப்பட்ட பாவிகள் சென்றடையப்போகும் முடிவில்லாத நித்திய எரி நரகத்தைக் குறித்தே பிரசங்கித்தார்கள். எந்த ஒரு நிலையிலும் மக்கள் அந்த தேவ கோபாக்கினையின் தீச்சூழைக்குச் செல்லாமல் விழிப்போடு தங்களைக் காத்துக் கொள்ள கண்ணீரோடும், அழுகையோடும் தேவ ஜனத்தை மன்றாடி எச்சரித்தார்கள். 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த ராட்சத தேவ பக்தரான யோனத்தான் எட்வர்ட்ஸ் என்பவர் "கோபமுள்ள தேவனுடைய கரத்தில் பாவிகள்" (Sinners in the hands of an angry God) என்ற தமது பிரசங்கத்தை உபாகமம் 32 : 35 ஆம் தேவ வசனத்தின் பேரில் தாட்களில் எழுதி மங்கலான மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தமக்கு முன்பாக அமர்ந்திருந்த மக்களுக்கு வாசித்தார். உடன்தானே, எழுப்புதலின் தீ பற்றி எரிந்தது. மக்கள் தேவாலயத்தின் தூண்களை கட்டிப்பிடித்தவர்களாக தங்கள் கால்கள் இப்பொழுதே நரக அக்கினிக்குள் இருப்பதாகக் கூறி கதறி அழுதார்கள். நரக அக்கினியிலிருந்து தாங்கள் காக்கப்படும் பொருட்டாக தேவனுடைய இரக்கத்துக்காகவும், பாவ மன்னிப்புக்காகவும் அவர்கள் கெஞ்சி கதறினார்கள்.

பரிசுத்த பக்தன் ஹட்சன் டெயிலருடன் சேர்ந்து மிஷனரியாக சீனா தேசத்திற்குச் சென்ற மற்றொரு பெரிய தேவ மனிதர் வில்லியம் சால்மர்ஸ் என்பவர் சிறுவனாக இருந்தபோதே தெருக்களில் மக்கள் நடந்து செல்லுவதைக் காண்கையில் அவர்களின் கால்கள் எரி நரகத்துக்கு நேராகச் சென்று கொண்டிருக்கின்றதே என்று அழுது கண்ணீர் சிந்தினதாக அவரைக் குறித்து எழுதப்பட்டிருக்கும் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

மேல் நாட்டுப் பரிசுத்த பக்தர்களின் காரியங்கள் அப்படியிருக்க தமிழ் நாட்டின் ஒரு பிரபலமான தேவ ஊழியரை ஒரு சமயம் மக்கள் அணுகி "தேவனுடைய அன்பை மட்டும் மக்களுக்குப் பிரசங்கிக்காமல், மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு, தேவனுடைய நியாயத்தீர்ப்பு, நித்திய எரி நரகம், நித்திய ஜீவன் போன்ற காரியங்களையும் தன்னுடைய பிரசங்கத்தில் குறிப்பிடும்படியாகக் கேட்டுக்கொண்டபோது , அந்த மக்களிடம் அவர் "தேவனுடைய அன்பைப் பற்றிச் சொல்லவே தனது வாழ்நாட் காலம் போதாது என்றும் மற்ற காரியங்களைக் குறித்துப் பேச தனக்கு காலம் இல்லை" என்றும் சொன்னதாக நான் கேள்விப்பட்டேன். உண்மைதான், மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு, மரணம், தேவனுடைய நியாயத்தீர்ப்பு போன்றவற்றைப் பேசினால் மக்கள் அதை ஒருக்காலும் விரும்பவேமாட்டார்கள் என்றும், அந்தச் செய்திகளுக்கு மக்கள் கூட்டம் நிச்சயமாக வரவே வராது என்றும் தங்களுக்குக் காணிக்கைகள் கட்டாயம் கிடையாது என்றும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

அதுமட்டுமல்ல, மேய்ப்பனாயிராதவனுக்கு ஆடுகள் மேல் கவலையும், அக்கறையும், அன்பும் எங்கிருந்து வரும்? அவனுக்கு வேண்டியதெல்லாம் மந்தையைக் கொண்டு கூலி மாத்திரமே. எப்படியோ தங்களுக்கு காணிக்கை கிடைத்தால் போதுமானது. மந்தை நித்திய அக்கினிக்குச் சென்றால் என்ன? அல்லது அது எரி நரகத்துக்குச் சென்று அக்கினியும், கந்தகமும் கலந்து எரியும் எரி மலைக் குழம்பான அக்கினி கடலில் யுகாயுகமாக துடிதுடித்து வெந்து கொண்டிருந்தால் என்ன? தேவ மைந்தன் தனது மானிடாவதார காலம் முழுமையிலும் எரி நரகத்துக்குச் செல்லும் தமது ஆடுகளுக்காக கண்ணீரையே வடித்துக் கொண்டிருந்தாரே (லூக்கா 19 : 41) ஆடுகளையும் தங்கள் ஆத்துமாக்களுக்காக அழுது நரக அக்கினிக்கு தப்பிக்கொள்ள கேட்டுக் கொண்டாரே (லூக்கா 23 : 28) தேவ மைந்தன் தனது வாழ்வில் சிரித்ததை யாருமே பார்க்கவில்லை என்றும் அவர் அழுததையே பலரும் பல சந்தர்ப்பங்களிலும் பார்த்ததாக ஒரு ரோமன் எழுதியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஒரு தேவ ஊழியர் சமீபத்தில் கர்த்தருடைய செய்தியை கொடுப்பதற்காக ஒரு சபைக்குச் சென்றதாகவும், அந்த சபையின் பாஸ்டர் அந்தப் பிரசங்கியாரைப் பார்த்து "எனது சபை மக்கள் வாரம் முழுவதும் பாடுபட்டு உழைத்து களைத்து சோர்ந்து போய் உற்சாகமான ஒரு பிரசங்கத்தை வாரக் கடைசியில் கேட்க எதிர்நோக்கி இங்கு வந்து கூடியிருக்கின்றார்கள். எந்த ஒரு நிலையிலும் பாவம், மனந்திரும்புதல், மரணம், நியாயத் தீர்ப்பு, நரகம் போன்ற எதைக் குறித்தும் நீங்கள் அவர்களுக்குப் பேசாமல் மக்கள் சிரித்து மகிழும்படியான ஒரு உற்சாகமான பிரசங்கத்தை மட்டும் செய்துவிட்டுச் செல்லுங்கள்" என்று கூறினதாக அந்த தேவ ஊழியர் மிகவும் வேதனையுடன் என்னிடம் சொன்னார்கள். இதில் நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மக்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல் செவித்தினவுள்ளவர்களாகி தங்கள் சுய இச்சைக்கேற்ற போதகர்களை தங்களுக்கு திரளாகச் சேர்த்துக் கொண்டு சத்தியத்தை விட்டு விலகி கட்டுக் கதைகளுக்கு சாய்ந்து போவார்கள் என்பதை பரிசுத்த ஆவியானவர் முதலாம் நூற்றாண்டிலேயே நமக்கு தெரிவித்துவிட்டார் (2 தீமோ 4 : 3 - 4) அதுமட்டுமல்ல, தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க மனதில்லாத மக்கள் பொய்யை விசுவாசித்து அழிந்து போகும்படியாக கொடிய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார் என்ற பயங்கர வார்த்தையும் கர்த்தருடைய வசனத்தில் உண்டு (2 தெசலோ 2 : 10 - 12) அந்தக் காட்சியைக் காணத்தான் இன்று பெருங்கூட்டம் மக்கள் ஆசீர்வாதப் பிரசங்கிமார்களின் மனதை மயக்கும் வார்த்தைகளைக் கேட்க (தீத்து 1 : 10) அவர்களின் பின்னால் பட்டணங்கள் தோறும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

தேவ ஊழியர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் பொய்யான வெளிப்பாடுகளையும், பொய்யான தீர்க்கத்தரிசனங்களையும் மக்களுக்குக் கூறி வெகு துரிதமாகவே பெருஞ் செல்வந்தர்களாக மாறிவிடுகின்றனர். ஒரு தேவ ஊழியர் தனது ஊழியத்தை மிகவும் எளிமையாக ஒரு கிறிஸ்தவ கிராமத்தில் ஆரம்பித்தவர், நாளடைவில் ஒரு குறிப்பிட்ட பட்டணத்திலுள்ள ஐசுவரியமுள்ள கிறிஸ்தவ வியாபாரிகள் பலரிடம் போக்குவரத்துமாக இருந்து அவர்களுக்கு தீர்க்கத்தரிசனங்கள், வெளிப்பாடுகளை கூறி சீக்கிரமாகவே பணக்காரனாகி இப்பொழுது தனது சொந்த ஊரில் மாடி வீடு கட்டி வீட்டுக்கு முன்பாக சில லட்சங்கள் மதிப்புள்ள ஒரு காரை வாங்கி நிறுத்தி, தனது பணத்தை திருடர்கள் திருடிக் கொண்டு போய்விடாதபடி இருக்க வீட்டுக் காவலுக்குக் கடித்துக் குதறக்கூடிய ஒரு பெரிய அல்சேஷன் நாய் ஒன்றை தனது வீட்டின் பிரதான நுழை வாயிலில் கட்டிப் போட்டிருக்கின்றார் என்று அந்த தேவ ஊழியரின் ஊருக்கு வெகு அருகாமையில் வசிக்கும் ஒரு சகோதரன் சமீபத்தில் என்னிடம் விசனத்துடன் சொன்னார்கள்.

"செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து குறைவையும், உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள். உலகம் அவர்களுக்குப் பாத்திரமாக இருக்கவில்லை" (எபிரேயர் 11 : 27 - 28) அன்று தேவ மக்களுக்கு உலகம் பாத்திரமாக இருக்கவில்லை. ஆனால் இன்றுள்ள நிலை வேறு. தேவ ஊழியன் முழு உலகத்தானாக வாழ்ந்து உலகத்தை முழுமையாக ருசித்து ஆனந்திக்கின்றான். தன் ஜீவனை இரட்சிக்க தன் முழு பெலத்தோடும் போராடி உலக வாழ்வில் சவுலைப்போல ஜெயஸ்தம்பம் நாட்டுகின்றான். சுவிசேஷத்தினிமித்தம் ஜீவனை இழந்து போகும்படியாக (மாற்கு 8 : 35) ஆண்டவர் அவர்களுக்கு கட்டளையிட்டார். ஆனால், ஊழியக்காரன் தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை உலகப் பொருளுக்காக பண்டமாற்று செய்து அவனை அழைத்த அன்பின் ஆண்டவர் முகத்தில் உமிழ்ந்து, கரியைப் பூசி அனுப்பி விட்டான்.

இன்று தேவ ஊழியம் முதல்தரமான வியாபாரமாக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் அந்த வியாபாரம் செழித்தோங்கி வளர்ந்து கொண்டிருக்கின்றது. பணம் சம்பாதிக்க மிகவும் சுலபமான வழி, வெகு துரிதமாக ஐசுவரியவானாக உயர்வதற்கு வெகு நிச்சயமான பாதை தேவ ஊழியமாகும். ஆனால் அதைப் போன்ற ஆபத்து வேறு எதுவும் கிடையாது என்று ரிச்சர்ட் பாக்ஸ்டர் என்ற பூர்வ காலத்து பரிசுத்தவான் மக்களை கடும் வன்மையாக எச்சரிக்கின்றார். "தேவ ஊழியத்தை நீ ஒரு உலகப்பிரகாரமான தொழிலாக உனது கரங்களில் எடுப்பாயானால் நீ தொலைந்தாய்" என்று அவர் கொதித்தெழுந்து குமுறுகின்றார். ஆனால், அவருடைய தேவ ஆலோசனைகளை எல்லாம் இன்றைய மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

ஏராளமான கூட்டமும், பெரும் காணிக்கையும் எந்த ஊழியர்கள் கூட்டங்களில் சேருகிறதோ அந்த ஊழியர்களின் நடபடிகளை புதிதாக ஊழிய வியாபாரம் ஆரம்பித்திருக்கும் இளைய தலை முறையினர் அப்படியே காப்பி அடித்து அவர்களைப் போல பிரசங்கித்து, அவர்களைப் போல ஜெபித்து, அவர்களைப்போல சைகைகளைக் காட்டி, அவர்களைப்போல தீர்க்கத்தரிசனம் உரைத்து அவர்களைப் போலவே பிரசங்க மேடைகளில் நடிக்கின்றனர். ஆ, எத்தனை பயங்கரமான காரியம் பாருங்கள். "கண்ணை உருவாக்கினவர் காணமாட்டார் என்றும் மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியார்" (சங் 94 : 9, 10) என்றும் இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பொல்லாத ஊழியர்களின் தந்திரங்களிலேயே தேவன் அவர்களைப் பிடிப்பார். தேவன் எப்படிப்பட்டவர் என்பதைக் காலப்போக்கில் இந்த மக்கள் இரத்தக் கண்ணீர் வடித்து கண்டு கொள்ளுவார்கள். கர்த்தர்தான் இந்த மக்களுக்கு இரங்கவேண்டும், இவர்களுடைய கண்களைத் திறக்க வேண்டும்.

கடந்த கால பூர்வீக கர்த்தருடைய பரிசுத்த பக்தர்கள் நஷ்டப்பட்ட ஒரு ஆத்துமா முடிவில்லாத நித்திய காலமாக நரக அக்கினியில் அனுபவிக்கக் கூடிய சொல்லொண்ணா அகோர வேதனைகளை எண்ணி தேவ சமூகத்தில் கண்ணீர்விட்டு கதறி அழுது மக்கள் எப்படியாவது ஆண்டவர் இயேசுவை அண்டிக்கொள்ள வேண்டுமென்று ஜெபித்தார்கள். "ஸ்காட்லாந்து தேசத்தை எனக்குத் தாரும், அல்லது நான் சாகிறேன்" என்று ஜாண் நாக்ஸ் என்ற மாபெரும் தேவ பக்தன் தனது நாட்டின் மக்களுக்காக மனதுருகி மன்றாடினார். ஆத்துமாக்களின் மனந்திரும்புதலுக்காக வாரக்கணக்கில் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்து மற்றொரு மாபெரும் தேவ மனிதரான ஜியார்ஜ் விட்ஃபீல்ட் என்பவர் அழுது புரண்டதாக நாம் வாசிக்கின்றோம். இப்படி ஆத்தும பாரத்தோடு தேவ ஊழியர்கள் கர்த்தருக்காக கடந்த காலங்களில் ஊழியம் செய்திருக்க இந்த நாட்களில் பெரும்பாலான தேவ ஊழியர்கள் பணத்தை மட்டுமே தங்கள் குறிக்கோளாக வைத்து கர்த்தருடைய உன்னதமான தேவ ஊழியங்களை முதல் தரமான வியாபாரமாக்கி கர்த்தருக்கு துரோகம் செய்து அவருடைய பரிசுத்த நாமத்தை புறமதஸ்தர் தூஷிக்கும்படியாக வகை செய்து வைத்திருக்கின்றனர்.

"பரலோகத்தில் அதிக மேன்மையும், நிலையுள்ளதுமான சுதந்திரம் தங்களுக்கு உண்டென்று அறிந்து பூர்வத்தில் தங்கள் ஆஸ்திகளை எல்லாம் தேவ மக்கள் சந்தோசமாகக் கொள்ளையிடக் கொடுத்தார்கள்" (எபி 10 : 34) என்று வேதாகமத்தில் நாம் பார்க்கின்றோம். ஆனால், இன்று தேவ ஊழியன் தந்திரமான தனது சுய ஆதாயத்துக்கான திட்டங்களைப் போட்டு தேவ ஜனத்தை அதிசய அற்புதமாகக் கொள்ளையிடுகின்றான். "எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும், நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன்" (லூக்கா 1 : 71) என்ற உன்னத தேவனின் எதிர்பார்ப்பு, பரிசுத்த வாஞ்சை எல்லாம் பணத்தை நாடிய பொல்லாத தேவ ஊழியனால் நொறுங்கித் தகடு பொடியாயிற்று.

 

தேவ ஜனமே, தேவ ஊழியரே,
ஆண்டவருக்கு துரோகம் செய்யாதீர்கள்

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கின நமது அன்பின் ஆண்டவரை உங்கள் பரிசுத்தமான வாழ்க்கையின் மூலமாகக் கனம் பண்ணுங்கள். உங்கள் கிறிஸ்தவ வாழ்வில் நீங்கள் இன்னும் மனந்திரும்பி ஆண்டவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் உங்கள் பாவங்களுக்காக மனங்கசந்து அழுது கண்ணீர் சிந்தி மறு பிறப்பின் நிச்சயமான அனுபவத்துக்குள் உடனே வாருங்கள். இந்த பரிசுத்த மாற்றம் இல்லாமல் நீங்கள் ஒருக்காலும் ஆண்டவருடைய பரம ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க முடியாது (யோவான் 3 : 3) (2 கொரி 5 : 17) என்பதை திட்டமாக உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் (1 பேதுரு 1 : 15) உங்கள் உலகப்பிரகாரமான பணி இடங்களில் துப்புரவுள்ளவர்களாக இருங்கள். பணி செய்யும் காலங்களில் பரிதானம், லஞ்சங்களை வாங்கிக் குவித்து பணி ஓய்வு காலங்களில் அதைக் கொண்டு நிம்மதி, சமாதானத்தோடு வாழலாம் என்று கனவில் கூட நினைத்து விடாதீர்கள். அது உங்களுக்கு சமாதானத்துக்குப் பதிலாக வேதனைகளையும், சாபத்தையும், கொடிய நோய் பிணிகளையும் கொண்டு வரும். வெறும் கஞ்சை மாதத்திரம் குடிக்கும் வறுமையில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை, பரிதானத்துக்கு உங்கள் கரங்களை நீட்டிவிடாதீர்கள். தேசாதிபதிகளும், பிரதானிகளும் தானியேல் தீர்க்கனிடத்தில் எந்த ஒரு முகாந்தரத்தையும், குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதோ அதேவிதமாக தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாயிருங்கள். தேவன் அருளிய வேத வசனங்களின் வெளிச்சத்தில் நடந்து ஆண்டவருடைய வசனங்களுக்கு கீழ்ப்படிந்து நடவுங்கள். மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால் தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாக இருந்த பெரேயா பட்டணவாசிகளைப் போல தினந்தோறும் வேதவாக்கியங்களை முழங்கால்களில் நின்று ஆராய்ந்து தியானித்து வாருங்கள். கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். "இந்த நியாயப் பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக, இதில் எழுதியிருக்கிறவைகளின்படி யெல்லாம் நீ செய்ய கவனமாயிருப்பாயாக, அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய்" (யோசுவா 1 : 8)

"நீங்களே என் சாட்சிகள்" (ஏசாயா 44 : 8) என்று நம்மைத் தமக்கு சாட்சிகளாக வைத்த ஆண்டவருக்கு பரிசுத்த அப்போஸ்தலரைப் போல "நாங்கள் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம்" (அப் 5 : 27) என்று குரல் கொடுப்போம். நமது பரிசுத்தமான வாழ்வின் மூலமாக அதை நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களுக்கு உறுதிப்படுத்திக் காண்பிப்போம்.

கர்த்தருக்கு ஊழியம் செய்வோரே, ஆத்தும பாரத்தோடும், கண்ணீரோடும் உங்களைத் தம்முடைய பரிசுத்தமான ஊழியத்திற்குத் தகுதியுள்ளவர்கள், உண்மையுள்ளவர்கள் (1 தீமா 1 : 12) என்று எண்ணி அழைத்த கர்த்தருக்கு உண்மையோடும், உத்தமத்தோடும் ஊழியம் செய்யுங்கள். "வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும் கர்த்தரைச் சேவித்தேன்" (அப் 20 : 19) என்ற பரிசுத்த பவுல் அடிகளாரின் வார்த்தைகளே உங்கள் ஊழியத்தின் நிலைக்கால் சட்டமாயிருப்பதாக. மிகுதியான ஜெபம், உபவாசம் உங்கள் ஊழியங்களுக்கு அலங்காரமாயிருப்பதாக. எந்த ஒரு சூழ்நிலையிலும் மனுஷ புகழ்ச்சிக்காக மாம்சத்தின்படி ஊழியம் செய்யாமல், மற்ற தேவ ஊழியர்கள் எப்படி ஊழியஞ் செய்கின்றார்களோ அப்படியே நானும் ஊழியம் செய்வேன், அவர்கள் எப்படி கோடிகளைக் குவிக்கின்றார்களோ அப்படியே நானும் கோடிகளைக் குவிப்பேன் என்று எண்ணி அவர்களைப் பின்பற்றாமல் "ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? " (அப் 9 : 6) என்ற பரிசுத்த பவுல் அப்போஸ்தனைப் போல ஆண்டவர் உங்களுக்காக வைத்திருக்கும் ஊழியத்தை அவரிடம் கேட்டு அடையாளம் கண்டு அதையே செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையும், உங்கள் ஊழியமும் உங்களை தமது இரத்தக் கிரயத்துக்காகக் கொண்ட உங்கள் அருமை இரட்சகர் இயேசுவை கனப்படுத்தி, மகிமைப்படுத்துவதாக இருப்பதாக.

பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் தேவ ஜனத்தைக் கண்டித்து உணர்த்துங்கள். உங்கள் ஆண்டவரும், போதகருமாகிய கர்த்தரைப் போல உங்களுடைய பிரசங்கங்களில் எல்லாம் எரி நரகத்தைப் பிரசங்கியுங்கள். நித்திய எரி நரகத்துக்குச் செல்லும் ஆத்துமாக்களை எப்படியாவது தேவன் கிருபையாகச் சந்திக்கும்படியாக உபவாசித்து ஜெபியுங்கள். ஆத்தும பாரத்தோடும், வியாகுலப் புலம்பலோடும் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். "தினந்தோறும் சில லட்சம் பேர் ஒருபோதும் வெளியேற முடியாத நித்திய நரக அக்கினியில் விழுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நீ அழாதிருப்பாயானால் உன் மனச்சாட்சி எப்பேர்ப்பட்டது?" என்று ஒரு தேவ பக்தன் நம்மைப் பார்த்துக் கேட்கின்றார். உங்களுடைய உண்மையும், உத்தமமுமான தேவ ஊழியத்தின் மூலமாக கர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமம் மகிமைப்படட்டும். "இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்" (அப் 16 : 17) என்று மக்கள் நம்மை அடையாளம் கண்டு கொள்ளட்டும். "லித்தாவிலும், சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் பேதுருவைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்" (அப் 9 : 35) என்ற தேவனுடைய வசனத்தின்படி நம்முடைய பரிசுத்தமான வாழ்க்கை, நமது ஆத்தும பாரம் நிறைந்த தேவ ஊழியத்தினைக் கண்டு மக்கள் ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் திரும்பட்டும்.

"வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்" (மத்தேயு 25 : 34) என்ற நம் அருமை ஆண்டவரின் குரல் கேட்கும் ஆனந்த நாளை எதிர் நோக்கியவர்களாக நமது அழைப்பின் பாதையிலே பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக நாம் உண்மையோடும், உத்தமத்தோடும் ஓடுவோம். அதற்கான கிருபைகளை ஆண்டவர்தாமே உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வாராக. ஆமென்.

 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM