முன்னுரை


"ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்" (மத்தேயு 7 : 14)


கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.

கர்த்தருக்குச் சித்தமானால், அவருடைய அநாதி கிருபை எங்களை அற்புதமாக தாங்கி அரவணைத்து வழிநடத்துமானால், இந்த தேவ எக்காள இதழ் உங்கள் கரங்களை வந்தடைந்த சில தினங்களில் நாங்கள் கர்த்தருடைய பரிசுத்த ஊழியத்தின் பாதையில் இமயமலைகளுக்குக் கடந்து செல்லுவோம்.

நம்முடைய தேவ ஊழியங்களின் ஜெபக்குறிப்புக்கான காரியங்களை இந்த இதழின் மற்றொரு பக்கத்தில் விபரமாக நான் உங்களுக்கு எழுதியிருக்கின்றேன். அன்பாக அவற்றைக் கட்டாயம் வாசித்து, ஜெபிக்கும்படியாகக் கேட்டுக்கொண்ட ஜெபக்குறிப்புகளுக்காக உங்கள் தனி ஜெபங்கள் மற்றும் குடும்ப ஜெபங்களில் மறவாமல் ஜெபித்துக் கொள்ளுங்கள். தேவப் பிள்ளைகளாகிய உங்களுடைய ஊக்கமான ஜெபங்கள் மாத்திரமே எங்களுக்குப் பலத்த அரணும், பாதுகாப்பும் மாத்திரமல்ல, நாங்கள் மக்களுக்குக் கொடுக்கும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளை முப்பது, அறுபது, நூறுமான நித்திய விளைச்சலைக் கொடுப்பதும் உங்கள் ஜெபங்கள்தான் என்பதை மறவாது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கருத்தான ஜெபங்களின் ஆசீர்வாதங்களை கடந்த ஆண்டுகளில் நாங்கள் பிரத்தியட்சமாகக் கண்டு கர்த்தரை ஸ்தோத்திரித்திருக்கின்றோம். இந்த ஆண்டுக்கான ஊழியங்களுக்காகவும் உங்களில் அநேகர் ஏற்கெனவே ஜெபிக்க ஆரம்பித்து உங்கள் ஜெபங்களைத் தொடர்ந்து கொண்டிருப்பதற்காக ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றேன். "எங்கள் ஊர் தேவாலயத்தின் கதவுகள் மக்களின் ஜெபத்திற்காக பகற் காலங்களில் திறந்தே இருக்கும். அன்று, உங்கள் வடமாநில தேவ ஊழியங்களுக்காக ஜெபிக்கும்படியாக நான் தேவாலயத்திற்குச் சென்றேன். ஜெபிக்கும்படியாக முழங்காலூன்றியதும் என் உள்ளத்தில் "ஜெய கிறிஸ்து முன் செல்கிறார், ஜெயமாக நடத்திடுவார்" என்ற பாடலின் அடிகள் என் உள்ளத்தில் தொனிப்பதை நான் ஆச்சரியத்துடன் கவனித்தேன்" என்று ஒரு பரிசுத்த தேவ பிள்ளை என்னிடம் சொன்னார்கள். இந்தவிதமான உங்கள் கருத்தான ஜெபங்களே எங்களை தாங்கி நடத்துகின்றது. உங்கள் ஜெபங்களுக்கான பிரதி பலனை அன்பின் ஆண்டவர் தாமே இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு நிறைபூரணமாகத் தந்தருள்வார்.

தேவனுடைய ஜீவனுள்ள மகிமையின் சுவிசேஷத்தை வடக்கே கொண்டு செல்லுகின்ற தேவ ஊழியர்களாகிய நாங்களும் அதிகமான ஜெபத்தோடும், உபவாசத்தோடும், ஆத்தும பாரத்தோடும் கடந்து செல்லுகின்றோம். "வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும் நான் கர்த்தரைச் சேவித்தேன்" (அப் 20 : 19) என்ற பரிசுத்த அப்போஸ்தலனின் வார்த்தைகளே எங்கள் காதுகளில் தொனித்துக் கொண்டிருக்கின்றது. "அவர் சமீபமாய் வந்த போது நகரத்தைப் பார்த்து, அதற்காக கண்ணீர் விட்டழுதார்" (லூக்கா 19 : 41) என்ற வசனமும் "அவர் மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார், அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது" (லூக்கா 22 : 44) என்ற வசனமும் நஷ்டப்படுகின்ற ஒவ்வொரு ஆத்துமாவும் அவியாத நித்திய அக்கினியில் படப்போகும் பாடுகளை தேவ மைந்தன் முன்கூட்டியே தன் ஆத்துமத்தில் உணர்ந்து கதறியதை நாங்கள் எங்கள் உள்ளத்தில் அதிக வேதனையோடு உணர்ந்தவர்களாக அவருடைய உள்ளக் கதறலை மிகுந்த நடுக்கத்தோடு எடுத்துச் செல்லுகின்றோம்.

இந்த இதழில் "பயங்கரங்களின் ராஜா, ராஜாதி ராஜா" என்ற தலைப்பில் பண்டிதர் ஆர்தர் பெற்ரி என்பவர் எழுதிய ஒரு அருமையான தேவச் செய்தியை நான் உங்களுக்கு மொழிபெயர்ப்புச் செய்து ஜெபத்துடன் தந்திருக்கின்றேன். மேல் நாட்டிலிருந்து வெளியாகும் The Sword of the Lord என்ற ஆங்கில கிறிஸ்தவ பத்திரிக்கையில் 26 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தச் செய்தி வெளி வந்தது. ஜெபத்தோடு வாசியுங்கள். மரணத்தைக் குறித்து பண்டிதர் ஆர்தர் பெற்ரி அவர்கள் எச்சரிப்போடு தனது செய்தியை எழுதியிருக்கின்றார்கள்.

உங்கள் சகோதரனாகிய நான் இப்படிப்பட்ட செய்திகளை தேவ எக்காளம் சந்தாதாரர்களாகிய உங்களுக்கு கொடுப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாகவிருக்கின்றேன். காரணம், நாம் யாவரும் நிச்சயமாக ஒரு நாள் சந்திக்கும் காரியம் அது. அதை நாம் தைரியமாகச் சந்தித்து நமது நேசர் இயேசுவண்டை களிகூருதலோடு போய்ச் சேரவேண்டும். விவசாயி ஒருவன் பக்கத்து ஊரில் நடந்த ஒரு மாட்டுச் சந்தைக்குச் சென்று 2 அழகான காளை மாடுகளை விலைக்கு வாங்கினான். தான் வாங்கிய மாடுகளை தனது வண்டியில் பூட்டி கொஞ்ச தூரம் பயணம் செய்த பின்னர் தனது களைப்பின் மிகுதியால் அவன் நன்கு தூங்கிவிட்டான். அது ஒரு இரவு நேரம். இரவில் சில மணி நேரங்கள் தூங்கிய பின்னர் அவன் கண்விழித்தபோது தனது பிரயாணம் வெகு தூரம் வந்திருக்கும் என்று அவன் திட்டமாக எண்ணினான். ஆனால் ஆச்சரியம், அவனுடைய மாடுகள் முன்னே நகராமல் நின்ற இடத்தில் நின்று அங்கு வட்டம் சுற்றிக் கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தான். அப்பொழுதுதான் தான் வாங்கிய மாடுகள் வண்டியில் பூட்டி ரஸ்தாவில் பிரயாணம் செய்யக்கூடிய மாடுகள் அல்லவென்றும், அவைகள் எண்ணெய் செக்கு இழுக்க பயன்பட்டவைகள் என்றும் துக்கத்துடன் கண்டான். அதின் காரணமாகவேதான் அவைகள் வட்டம் சுற்றி வந்தன என்பதை அறிந்தான்.

அதைப் போலவே, உங்கள் சகோதரனாகிய நானும் தேவ ஜனத்திற்கு அவர்கள் நினையாத நேரம் அவர்களை வந்து சந்திக்கும் மரணத்தைக் குறித்தும், உலக வாழ்க்கை முதல்தரமான கானல் நீரின் காட்சி என்றும், உலக வாழ்விலிருந்து ஏதாவது தங்களுக்கு கிடைக்குமா என்று காத்திருப்பவர்களுக்கு இறுதியில் ஒன்று கிடைக்குமானால் அது இலவு காத்த கிளிக்கு கடைசியாக இலவு வெடித்து அதின் பஞ்சுகள் காற்றில் மாயமாக பறந்து மறைந்த காட்சிதான் கிடைக்குமென்றும், மானிட வாழ்வின் அனைத்து ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்கள், ஆடம்பரங்கள் எல்லாம் நீர்மேல் கொஞ்ச நேரத்துக்கு கண் சிமிட்டி மிதந்து மறையும் நீர் மேல் குமிழிகள் என்றும், கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள் என்றும் அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள் என்றும், துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரக அக்கினியிலே தள்ளப்படுவார்கள் என்றும், அன்றியும் ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத் தீர்ப்பு அடைவது மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்றும், முடிவில்லாத நித்தியத்தை கர்த்தரோடு பரலோகத்தில் ஆனந்தக் களிப்போடு செலவிட உங்களை இந்தக் கிருபையின் நாட்களில் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும், உங்கள் வஸ்திரங்களையல்ல உங்கள் இருதயங்களைக் கிழித்துக்கொண்டு உங்கள் கர்த்தரிடத்தில் திரும்புங்கள் என்பது போன்ற காரியங்களைக் குறித்தே நான் திரும்பத் திரும்பக்கூறி வருகின்றேன். கர்த்தருடைய கிருபையால் அந்த வட்டத்துக்குள்ளேயேதான் நான் கடைசி வரை சுற்றி சுற்றி வந்து தேவ ஜனத்தை எச்சரித்துக் கொண்டேயிருப்பேன். இந்தவிதமான உங்கள் சகோதரனாகிய எனது எழுத்துக்கள் உங்களில் பலருக்கும் நான் கடந்த கால நாட்களில் நமது தேவ எக்காள பத்திரிக்கையில் எழுதினது போல சோதோம், கொமோரா பட்டணங்களை தேவன் அக்கினியால் தகனிக்கப் போகின்றார் என்று லோத்து அவன் மருமக்கள்மாரிடம் சொல்லி அவர்களை பட்டணத்தை விட்டு வெளியேறும்படி சொன்ன வார்த்தைகள் அவர்களை பரியாசம் செய்வதாக இருந்ததைப் போல உங்களுக்கும் இந்த நாட்களில் எனது எழுத்துக்கள் உங்களை பரியாசம் செய்வதைப் போல நிச்சயமாகக் காணப்படலாம். ஆனால், ஒரு நாள் வரும். அப்பொழுது உங்கள் சகோதரனாகிய நான் தேவனுடைய பாதங்களில் காத்திருந்து அவரது திட்டமான ஏவுதலால் தேவ எக்காளத்தில் எழுதிய செய்திகள் அனைத்தும் எத்தனை உண்மையும், சத்தியமுமானவைகள் என்பதை நீங்கள் கண்டு கொள்ளுவீர்கள். தேவனுக்கு முன்பாக உங்கள் விலையேறப்பெற்ற ஆத்துமாக்களை நஷ்டப்படுத்தியவர்களாக அந்த சத்தியத்தைக் காணாதபடி கர்த்தர் தாமே உங்களைக் கிருபையாக காத்துக் கொள்ளுவாராக.

மோட்ச பிரயாண யாத்திரையில் பாதுகாப்பாகச் சென்று கொண்டிருந்த கிறிஸ்தியானையும், திடநம்பிக்கைiயையும் இடைமறித்து அவர்கள் தங்கள் மோட்ச வழியை விட்டு விட்டு திரவியகிரி என்ற இடத்தில் வெள்ளிச் சுரங்கத்தை காட்டி அதில் புதையல் எடுக்க வரும்படியாகவும், அப்படி தோண்டினால் கோடீஸ்வரர்களாகிவிடலாம் என்றும் தேமாஸ் கூவி அழைத்ததுபோல இந்த உலகத்தில் ஆண்டவர் தங்களை அழைத்த உன்னத அன்பின் அழைப்பிலிருந்து பணம் காசுக்காக வழிவிலகி தேவ ஜனத்திற்கு கோடிகளையும், நோய் நொடியற்ற 100 ஆண்டு கால சுகபோக வாழ்க்கையையும், பட்டங்கள், பதவிகள், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், தொட்டதெல்லாம் பொன்னாகும் மாயா ஜால மந்திர தந்திரங்களைக் காண்பித்து, தேவ ஜனத்தை பத்திரமாக எரிநரகத்திற்கு கரம் பிடித்து வழிநடத்திச் செல்லும் செழிப்பின் உபதேச ஆசீர்வாத பிரசங்கிமார்கள் நிரம்பி வழியும் இந்தக் கடைசி கால நாட்களில் உங்கள் ஏழை சகோதரனாகிய நான் உங்களுக்கு ஜீவனுக்குப்போகிற இடுக்கமானவழியையே காண்பிக்கின்றேன்.

ஒரு கர்த்தருடைய பிள்ளை சமீபத்தில் ஒரு சகோதரியின் அனுபவத்தைக் குறித்து இப்படிச் சொன்னார்கள். அந்த சகோதரி ஒரு சொப்பனம் கண்டார்களாம். அதில் ஒரு பெருங்கூட்டம் ஜனத்திரள் மக்களுடன் விசாலமான பாதையில் அவர்கள் சென்று கொண்டிருப்பதாகவும், அவர்கள் சென்ற வழியின் பக்கவாட்டில் ஒரு இடுக்கமான வழி செல்லுவதாகவும், அதைப் பார்க்க அவர்கள் உள்ளே சென்றபோது அங்கிருந்த ஒரு மனிதன் "அம்மா, நீங்கள் அந்தப் பெரும் பாதையின் மக்கள் கூட்டத்தோடேயே செல்லுங்கள். அதுதான் உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இங்கே உள்ள இடுக்கமான பாதையின் வழியாக உங்களால் செல்ல முடியாது" என்று சொல்லவே அந்த அம்மா அங்குள்ள இடத்தைப் பார்த்தபோது அங்கு வானத்திற்கும் பூமிக்கும் நடுவாகத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு நூல் ஏணியில் ஒன்றிரண்டு மக்கள் மாத்திரம் மிகவும் கஷ்டத்தோடு ஏறிப் பரலோகத்திற்குச் சென்று கொண்டிருந்ததை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தார்களாம். உண்மைதான், மோட்சத்திற்கு நாம் செல்லும் பாதை மிகவும் இடுக்கமான நூல் ஏணிப் பாதை தான். யாவரும் அதைத் தெரிந்து கொண்டு மோட்ச மகிமைக்குள் பிரவேசிக்க முடியாது.

இன்று நம்மிடையேயுள்ள நூதனமான கள்ளப் போதகர்கள் தேவ ஜனத்திற்கு இந்த உலகத்திலேயே செழிப்பும் செல்வமுமான வாழ்க்கையையும், இந்த உலக வாழ்க்கைக்குப் பின்னர் அவர்களுக்கு மோட்சானந்த வாழ்க்கைiயையும் காண்பிக்கின்றனர். அவர்கள் பிரசிங்கிக்கின்ற ஆண்டவர் இந்த உலகத்தில் செல்வந்தனின் வீட்டில் பிறந்து சீரும் செழிப்புடன் சிங்காரமாக வாழ்ந்து தன்னுடைய பிதாவண்டை அந்தச் சொகுசு வாழ்க்கையோடேயே கடந்து சென்றார் என்று இந்தக் கள்ளப் போதகர்கள் நினைக்கின்றனர் போலும்!

அன்பின் ஆண்டவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாக (ஏசாயா 53 : 3) இந்த உலகத்தைக் கடந்து சென்றார். "வானம் எனக்கு சிங்காசனம், பூமி எனக்கு பாதபடி" (ஏசாயா 66 : 1) என்று சொன்ன தேவன் "நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு, மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை" (மத் 8 : 20) என்ற வாக்கின்படி இந்த உலகத்தில் தலைசாய்க்க இடமில்லாதவராக இந்த உலகத்தைக் கடந்து சென்றார். கோடி, கோடி, கோடி என்று கோடிகளையே குறிக்கோளாக வைத்து கோடிகளை குவித்துக் கொண்டிருக்கும் செழுமையின் உபதேச பிரசங்கிகள் நிறைந்த இந்த இறுதி நாட்களில் பணத்தை தமது கையால் கூடத் தொடாமல் (மத்தேயு 22 : 19) பணத்தைச் சுமப்பதற்கு யூதாஸ் என்ற ஒரு பிசாசை அல்லவா அன்பின் இரட்சகர் நியமித்திருந்தார் (யோவான் 12 : 6, 6 : 70)

வாசிக்கும் அன்பான தேவ பிள்ளையே, உலக மக்களைப் போல நீங்கள் இந்த உலகத்தில் விசாலமான பாதையில் செல்லாதேயுங்கள். விசாலமான அந்த அழிவின் பாதையில் மகிழ்ச்சி, ஆனந்தம், குதூகலம், ஆரவாரம், ஆர்ப்பரிப்பின் நடனம் எல்லாம் உண்டு. இன்று உலக மக்களும், பெயர்க் கிறிஸ்தவர்களும் "மோட்ச பிரயாணம்" புத்தகத்தின் ஆக்கியோன் ஜாண் பன்னியன் என்பவர் தமது புத்தகத்தில் எழுதிய பிரகாரமாக "காட்டிலுள்ள 2 குருவிகளைக் காட்டிலும் கையிலிருக்கும் ஒரு குருவியே நல்லது" என்ற எண்ணத்தில் வரப்போகிற பரலோக வீட்டில் அனுபவிக்கும் பாக்கிய சிலாக்கியங்களை நீண்ட நாட்கள் காத்திருந்து அனுபவிப்பதைக் காட்டிலும் இந்த உலகத்தில் நமது கண்களுக்கு முன்பாக இப்பொழுதே கிடைக்கக்கூடிய உலகத்தின் இன்பங்களை அனுபவித்து ஆனந்தம் கொண்டாடிவிடலாம் என்ற துணிச்சலில் "காய்ந்த மாடு கம்பம் கொல்லையில் விழுந்தது போல" என்ற தமிழ் பழமொழிப்படி (பசி பட்டினியால் வாடிய மாட்டிற்கு நல்ல பச்சை பசேர் என்ற கம்பம் கதிர் தோட்டம் தீனிக்கு கிடைத்தது போல) இந்த உலகம் தரும் நிலையில்லா இன்பத்தை மனங்கொண்டமட்டும் சுவைத்துப் புசித்து அனுபவிக்கின்றனர்.

 

உலக வாழ்க்கை என்ற புஷ்வாணம்

மனிதன் என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் "நீர் மேல் குமிழி" என்பதே உவமானச் சொல் என்று சொல்லப்படுகின்றது. நெய்கிறவன் எறிகிற நாடா, இரையின் மேல் பாய்கின்ற கழுகு, அஞ்சற்காரர் ஓட்டம், வேகமாய் ஓடுகிற கப்பல், மேகம், சாய்ந்து போகின்ற நிழல், வாடிப் போகும் புல், வெளியின் புஷ்பம், மறைந்து போகின்ற புகை இப்படி பல காரியங்களுக்கு மனிதனின் நிலையில்லா உலக வாழ்வை தேவனுடைய பரிசுத்த வேதாகமம் அருமையாக ஒப்பிட்டுப் பேசுகின்றது. நம்முடைய தமிழ் நாட்டின் கடந்த கால சித்தர்கள், ஞானிகள், புலவர்கள் பலர் மனித வாழ்வின் நிலையில்லாமையையும், அதின் குறுகிய தன்மையையும் வெகுவாக தங்கள் பாடல்களில் அழகாக விளக்கியிருக்கின்றனர். அத்துடன், அந்த நிலையில்லா குறுகிய கால வாழ்வை தங்கள் தங்கள் தெய்வங்களை தரிசனை செய்து எப்படியாவது முக்தி அடைந்துவிட வேண்டுமென்ற தாகத்தில் பெற்ற வீடு, தாய் தந்தையர், உடன் பிறந்தோர் யாவரையும் விட்டு விட்டு, காடு மேடு பனி மலைகள் சுற்றியலைந்து, இறுதியில் பரிதாபத்துடன் நம்பிக்கையின்றி தங்கள் வாழ்க்கையை முடித்திருப்பதையும் நாம் துயரத்துடன் காண்கின்றோம்.

இந்த உலக வாழ்க்கையை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். மனிதனின் இளம் பருவ காலத்தில் வேலை, உத்தியோகம், குடும்பம், பிள்ளைகள், மனமகிழ்ச்சி, ஆரவாரம், கலகலப்பு எல்லாம் நிரம்பி வழிகின்றது. பெற்ற பிள்ளைகள் தங்கள் தங்கள் வேலைகளுக்குச் சென்று அவர்கள் தங்கள் குடும்பங்களை தனித்தனியே அமைத்துக் கொள்ளும் போது பெற்றோர் தனியே விடப்படுகின்றனர். ஒரு காலத்தில் தங்களுக்கும் பிள்ளைகளுக்குமாக தாங்கள் கட்டிய பெரிய வீட்டில் வயதான கணவனும், மனைவியுமாக இரண்டு விருத்தாப்பியர்கள் நோய்கள் நிறைந்த சரீரத்தோடு தனிமைப்படுத்தப் படுகின்றனர். ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் பிள்ளைகள் அவர்களை வந்து பார்க்க வருகின்றனர். சில தினங்கள் அந்த பெரிய வீட்டில் சந்தோசம், சிரிப்பொலிகள், குழந்தைகளின் ஓட்டமும், சாட்டமுமாக இருக்கின்றது. பொங்கிச் சாப்பிட்டும் சாப்பிடாமலும் இருந்த அந்த கணவனுக்கும், மனைவிக்கும் வீட்டிற்கு வந்த அவர்கள் பிள்ளைகள் நேரத்திற்கு நேரம் சுவையான ஆகாரம் கொடுத்து அரவணைக்கின்றார்கள். அந்த மகிழ்ச்சி எல்லாம் அப்படியே சில தினங்களில் பகலவனைக் கண்ட பனிபோல மறைந்து விடுகின்றது. காரணம், வீட்டிற்கு வந்த பிள்ளைகள் எல்லாரும் தங்கள் இல்லிடங்களுக்குப் போய்விட்டனர். மீண்டும் ஏகாந்த தனிமை. விருத்தாப்பியர்கள் இருவரும் தனிமைக்குத் தள்ளப்படுகின்றனர். இருவரும் அவ்வப்போது ஏதேதோ பேசிக் கொள்ளுகின்றனர். நேரத்திற்கு நேரம் உணவு செய்து அருந்தக்கூட விருப்பமில்லாமல் காலங்கள் ஓடுகின்றன. சரீர பெலன் எல்லாம் ஒடுங்கிவிட்டபடியால் உலகத்தில் வாழ்வதைக் காட்டிலும் அதைவிட்டுத் துரிதமாக மற்றவர்களுக்கு பாரமில்லாமல் மரணத்தின் மூலமாகக் கடந்து செல்லுவதை அவர்கள் ஆவலாக எதிர்பார்க்கின்றார்கள். வாழ்க்கையின் ஆனந்தமான காலங்கள் எல்லாம் எத்தனை துரிதம் துரிதமாக பண்டிகை நாட்களில் சிறுவர் கொழுத்தும் புஷ்வாணம், பூவாணமாக எரிந்து மறைந்துவிட்டதை அவர்கள் துக்கத்துடன் காண்கின்றனர். ஆம், உலக வாழ்வு ஒரு அப்பட்டமான பூவாணம், புஷ்வாணம், கம்பி மத்தாப்பு மட்டுமே என்பதை அவர்கள் துயரத்துடன் உணருகின்றனர்.

"பந்தய ஓட்டம் ஓடி முடிவு பெற்றது. பந்தயத்தில் யார் வெற்றி பெற்றது, யார் தோல்வி அடைந்தது என்ற கேள்வி எல்லாம் கிடையாது. காலம் என்ற வட்டத்தின் கடைசி எல்லைக்கோட்டைத் தாண்டி நித்தியம் என்ற முடிவில்லாத யுகாயுகத்துக்குள் உனது பாதங்களை வைக்கப் போகின்றாய். உனது உலக வாழ்வில் நீ மெச்சிக் கொண்ட காரியங்களும், ஆ, நாம் இதை இதை எல்லாம் சாதித்து முடித்து வெற்றிக் கொடி ஏற்றிவிட்டோம் என்று ஜம்பம் பேசிக்கொண்டவைகளும் ஒரு நெருப்புக்கு முன்பாக அகப்பட்ட முட்புதர்களும், வைக்கோலும் சாம்பலாகிக் கிடப்பதைப்போன்று உனது உலக வாழ்வின் சாதனைகள் யாவும் இறுதியில் சாம்பலாகிக் கிடப்பதைக் காண்பாய்" என்று மாபெரும் தேவ மனிதர் சாமுவேல் ரூத்தர்போர்ட் என்ற பரிசுத்தவான் கூறுகின்றார்.

தங்கள் வழிகளுக்கெல்லாம் அதிபதியும், தங்கள் ஜீவ சுவாசத்தை தங்கள் கரங்களில் வைத்திருப்பவருமான தங்கள் அன்பின் ஆண்டவரை (தானி 5 : 23) ஓரங்கட்டி ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு இந்த உலக வாழ்வில் தங்கள் மனதும் மாம்சமும் விரும்பிய வழிகளில், ஆண்டவரை நினையாமல், அவரைத் தேடாமல், அவரில் அன்புகூராமல் தாங்கள் சாதித்த காரியங்கள் யாவும் இறுதியில் ஒரு பிடி சாம்பலாக இருப்பதையே அந்த மக்கள் மிகுந்த துக்கத்துடன் காண நேரிடும்.

ஆனால், தேவ மக்களுக்கு அவர்களின் இறுதி கால நாட்கள் மகா களிகூருதலின் காலமாகும். காரணம், தங்களுடைய பரம தகப்பனுடைய வீட்டிற்கு இப்பொழுது அவர்கள் நெருங்கி வந்து விட்டார்கள். எந்த நேரமும் அவர்களுக்கு உன்னத வீட்டு அழைப்பு வரலாம். மோட்சத்தில் தங்கள் அருமை இரட்சகர் தங்களுக்காக என்ன என்ன ஆனந்த பாக்கியங்களை எல்லாம் ஆயத்தம் செய்து வைத்திருப்பார் என்று அவர்கள் நாள்தோறும் தங்கள் உள்ளத்தில் கற்பனை செய்து, கற்பனை செய்து உள்ளம் பூரிக்கின்றனர். 6 நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த உலகமே எத்தனை அழகானதும், எத்தனை சிங்காரமுமாக இருக்கின்றது. வானத்தையே தொட்டு நிற்பது போன்ற கெம்பீரமான பனி மலைகள், பரவிப் பாயும் நதிகள், ஆறுகள், ஏரிகள், பச்சைப் பசேரென்ற புல் வெளிகள், விரிந்து வியாபித்துக் கிடக்கும் செழிப்பான பள்ளத்தாக்குகள், மரங்கள், செடிகொடிகள், வண்ண வண்ண நறுமணம் வீசும் மலர்கள், ஆழ் கடல்கள், கரை காண முடியா சமுத்திரங்கள், அவைகளிலுள்ள எண்ணற்கரிய சிறிதும், பிரமாண்டமுமான ஜீவராசிகள், பூமியில் நடமாடும் விலங்கினங்கள், பறப்பன, ஊர்வன போன்றவைகளை எல்லாம் தேவன் எத்தனை அழகாகப் படைத்து விட்டார்.

அவைகளை எல்லாம் அத்தனை மாட்சியாகப் படைத்த தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்காக இன்னும் மகா பிரமிப்பான விதத்தில் உலகம் உண்டானது முதல் ஆயத்தம் செய்து வரும் பரம வாசஸ்தலங்களின் மாட்சியை என்னவென்று சொல்லுவது! அவைகளை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று அப்போஸ்தலன் தமது நிருபத்தில் நமக்கு எழுதுகின்றார். "தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளை கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை" (1 கொரி 2 : 9)

 

எரி நரகத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் தொலைக்காட்சி பெட்டி

இன்று உலகத்தின் கோடா கோடி மக்களை சாத்தான் மிகுந்த வெற்றியுடன் எரி நரகத்திற்கு கொண்டு சேர்க்க அவனுக்கு கை கொடுத்து உதவியது தொலைக் காட்சி பெட்டித்தான். இதை எவரும் மறுக்கவியலாது. வருகிற நாட்களிலும் அது அவனுக்கு மகத்தான வெற்றியை அளிக்கவேதான் போகின்றது. உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் வாழ்க்கைகள் கூட தங்கள் வீடுகளில் உள்ள தொலைக்காட்சியின் அருவருப்பான காட்சிகளைப் பார்த்த காரணத்தால் நஷ்டப்பட்டுப் போவதை நாம் வேதனையுடன் கண்டு வருகின்றோம். காலை, மாலை நேரங்களில் தங்கள் பள்ளிகளுக்குப் போகும், மற்றும் பள்ளிகளிலிருந்து வீடு திரும்பும் பிள்ளைகள் பெரும்பாலானோரின் வாயின் பேச்சுக்களை கவனியுங்கள். கல்லூரிகளில் பயிலுவோரின் காரியங்களை சொல்ல அவசியமில்லை. அவர்கள் பேச்சுக்களெல்லாம் பாலுறவு பற்றியதாகவே இருக்கும். எல்லாம் தொலைக்காட்சி பார்த்த ஒரே காரணம்தான்.

உலக மக்களை வெற்றிகரமாக சிறை பிடித்த சாத்தான் கிறிஸ்தவ மக்களை இப்பொழுது அவர்கள் பார்க்கும் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளைக் கொண்டே நரக பாதாளத்திற்கு வழிநடத்திச் சென்று கொண்டிருக்கின்றான். நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பவர்களானால் அழிவின் விசாலமான பாதையில் ஆர்ப்பரிப்போடு சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நிச்சயம் பண்ணிக் கொள்ளுங்கள். அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது.

அன்பின் ஆண்டவருடைய பாதங்களில் அமர்ந்து அவருடைய அமர்ந்த மெல்லிய குரல் கேட்டு ஆனந்திக்கும் பேரானந்தத்தைக் காட்டிலும் நீங்கள் பார்க்கும் தொலைக் காட்சிகள் (கிறிஸ்தவ நிகழ்ச்சிகளையும் சேர்த்துத்தான்) அதிகமான பரவசத்தைத் தருமானால் உங்களுக்கும், உங்கள் ஆண்டவருக்கும் இடையிலான ஐக்கிய உறவு நிச்சயமாக சரியில்லை என்பதுதான்.

நமது ஆதித் தாய் தந்தையர் தேவனுடைய கட்டளையை மீறி விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசித்ததன் பின்னர் பகலின் குளிர்ச்சியான வேளையில் தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை கேட்டு கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக் கொண்டார்கள் என்று நாம் வேதாகமத்தில் பார்க்கின்றோம். இன்று நீங்கள் ஆண்டவருடைய சத்தத்தை அவருடைய பாதங்களில் அமர்ந்து கேட்டு ஆனந்திக்க மனமற்று தொலைக்காட்சி என்ற விருட்சத்தின் இருண்ட நிழலில் ஒளிக்கின்றீர்கள். காரணம், ஆண்டவருடைய பாதங்களை விட தொலைக் காட்சி உங்களுக்கு இன்பம் தரும் பொருளாயிற்று.

கெட்ட குமாரனுடைய சரித்திரத்தை நாம் லூக்கா 15 ஆம் அதிகாரத்தில் வாசிக்கும் போது அவனுடைய அண்ணன் தனது தந்தையிடத்தில் முறுமுறுக்கும் ஒரு காரியத்தை நாம் பார்க்கின்றோம். வேசிகளிடத்தில் உமது ஆஸ்தியை அழித்துப்போட்ட உமது இளைய மகன் வந்தபோது கொழுத்த கன்றை அடிப்பித்தீரே, எனக்கோ என் சிநேகிதரோடு சந்தோசமாயிருக்கும்படி ஒரு ஆட்டுக்குட்டியை கூட அடிக்கவில்லை என்கின்றான். அதற்கு அந்த அன்பான தகப்பன் கொடுக்கும் பதிலை நீங்கள் தியானித்திருக்கின்றீர்களா? "மகனே நீ எப்பொழுதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது" (லூக்கா 15 : 31) என்று அவன் சொல்லுகின்றான். சிநேகிதர்கள், நட்பு, சுவையான இளம் ஆட்டுக்குட்டியின் மாம்சம், இன்னும் என்ன என்ன உலக இன்பங்கள் உண்டுமோ அவை யாவையும் காட்டிலும் நீ எப்பொழுதும் என்னோடிருப்பதே எல்லையற்ற ஆனந்தம், அதற்கு நிகர் உலகின் பொருள் எதுவும் இல்லை என்று அந்த அன்பான தகப்பன் தனது குமாரனிடம் சொல்லுகின்றான். இன்று கிறிஸ்தவ மக்களுக்கு ஆண்டவரோடு எப்போதும் இருக்க விருப்பம் இல்லாமல் தொலைக்காட்சி என்ற ஆட்டுக்குட்டி மட்டும் எங்களுக்கு இருந்தால் போதும் என்று அதையே பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். மிகவும் ஆபத்தான காரியம். அன்பின் ஆண்டவரோடு எப்போதும் செடியும் கொடியுமாக நீங்காது நிலைத்து இருப்பதே (யோவான் 15 : 5) உன்னதமானவரின் நிழலில் இருப்பதே (சங்கீதம் 91 : 1) நித்திய பாதுகாப்பும், மிகுந்த தேவ சமாதானமும் நிறைந்த வாழ்வாகும்.

"எனது மனைவி காலை முதல் மாலை வரை தொலைக்காட்சியில் வரும் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்" என்று ஒரு கிறிஸ்தவ சகோதரன் சமீபத்தில் மிகவும் துக்கத்துடன் என்னிடம் சொன்னார்கள். எல்லாம் சாத்தானுடைய கை வண்ணம்தான். எப்படியாவது தனது ஆட்களை ஆண்டவருடைய பாதங்களுக்குச் சென்றுவிடாதபடி, அவருடைய அமர்ந்த மெல்லிய குரலை அவருடைய பாதங்களில் அமர்ந்து கேட்டு பரலோகம் சென்று விடாதபடி மனுஷ கொலை பாதகனான தந்திர சாத்தான் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுகின்றான்.

பெரும்பாலான கிறிஸ்தவ விருத்தாப்பியர்களின் முழு பொழுது போக்கும் தொலைக்காட்சி பெட்டிதான். அவர்களுடைய விலையேறப்பெற்ற காலங்கள் எல்லாம் அதைப் பார்த்தே பாழாகின்றது. தங்களுடைய முடிவில்லாத நித்தியத்தை ஆண்டவரோடு பரலோகில் செலவழிக்க தங்களுக்குள்ள சொற்பமான இறுதி வாழ்நாட் காலத்தை தங்கள் மார்பில் அடித்துக் கண்ணீரோடு மனந்திரும்பி தங்கள் நித்திய வீட்டிற்குச் செல்ல ஆயத்தப்படுவதற்குப் பதிலாக கரும் பெட்டியாம் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாக தெண்டனிட்டு விழுந்து கிடக்கின்றார்கள். கொஞ்ச நேரம் கூட ஆண்டவருடைய பாதங்களுக்குச் செல்ல சாத்தான் அவர்களை அனுமதிப்பதில்லை. "நாங்கள் பார்ப்பதெல்லாம் கிறிஸ்தவ நிகழ்ச்சிகள்தானே, எத்தனை எழுப்புதலான அருமையான பிரசங்கங்கள், இருதயத்தை கெம்பீரிக்கப்பண்ணும் எத்தனை இனிமையான பக்தி பாடல்கள், எத்தனை பரவசமான கிறிஸ்தவ வாலிபர் கொண்டாட்டங்கள், கண்ணைக் கவரும் சிறுமியரின் கோலாட்டங்கள், குயிலாட்டங்கள், எத்தனை கருத்தான குறு நாடகங்கள்" என்று அவர்கள் கிறிஸ்தவ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மெச்சிப் பேசுகின்றார்கள். நாள் முழுவதும் தங்களுக்கும் தங்கள் ஆண்டவருக்கும் இடையே எந்த ஒரு ஐக்கிய சகவாசமும், ஜெப தபமும் இல்லாமல் நடந்து கொள்ளுகின்றார்கள். அவர்கள் பார்க்கின்ற கிறிஸ்தவ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போதும் என்று அதில் பூரண திருப்தி கொள்ளுகின்றார்கள். ஆ, எத்தனை பயங்கரம்!

எனது வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத ஒரு துயர காட்சி உண்டு. ஒரு கிறிஸ்தவ ஐயா கொடிய புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டு "உலகில் இனி இத்தனை நாட்கள்தான் உயிர் வாழ்வு" என்று முத்திரை குத்தப்பட்டு படுக்கையில் இருக்கின்றார்கள். அவர்களின் குடும்பத்தினர் அவர்கள் மரித்தால் கல்லறைத் தோட்டத்தில் எந்த இடத்தில் புதைப்பது என்று கல்லறைத் தோட்டம் சென்று இடம் எல்லாம் பார்த்து வந்துவிட்டார்கள். அப்படி இடம் பார்த்து வந்த அந்த ஐயாவின் மனைவி அதை என்னிடமும் சொன்னார்கள்.

இப்பொழுது அந்த ஐயா செய்ய வேண்டியது எல்லாம் "தேவனே பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்" "ஆண்டவரே, உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்" என்று மார்பில் அடித்து அழுது கண்ணீர் சிந்தி ஆண்டவரை சந்திக்க தன்னை ஆயத்தமாக்க வேண்டியது. ஆனால் பரிதாபம், மனந்திரும்பாத அவர்கள் அப்பொழுது நடந்து கொண்டிருந்த உலகக் கோப்பை கால் பந்து போட்டியை மிகுந்த ஆசை ஆவலோடு தங்களுடைய தொலைக் காட்சி பெட்டியில் படுக்கையில் படுத்தவாறே அவர்கள் பார்த்து ஆனந்தித்துக் கொண்டிருப்பதை நான் துயரத்துடன் கவனித்தேன். அவர்கள் ஆண்டவரைச் சந்திக்க வேண்டியதன் உடனடி அவசியத்தைக் கூறி பாடல்கள் பாடி அவர்களுக்காக ஜெபித்து வந்தேன். எனது தேவ ஆலோசனைகள், பாடல்கள், ஜெபம் எல்லாம் எந்த அளவில் அவர்களில் கிரியை செய்ததோ கர்த்தர் ஒருவரே அறிவார். தான் பார்த்துக் கொண்டிருந்த பொன்னான கால் பந்து ஆட்ட நிகழ்ச்சியை நான் இடையில் வந்து தடைசெய்துவிட்டேனே என்று அவர்கள் தனது உள்ளத்தில் எண்ணி நிச்சயமாக வேதனை அடைந்திருக்கலாம். சாத்தான் எந்த அளவில் மனுமக்களின் வாழ்க்கையில் தொலைக்காட்சியின் மூலம் வேர் ஊன்றியிருக்கின்றான் பாருங்கள்.

இதைக் கருத்தோடு வாசிக்கும் தேவ பிள்ளையே, உலகத்தின் பெரும் திரள் கூட்டம் செல்லும் விசாலமான பாதையாம் தொலைக்காட்சி பார்க்கும் கூட்டத்தில் நீங்கள் இருக்கின்றீர்களா? மனம் திரும்புங்கள். உங்கள் சகோதரனாகிய என்னை என் வாழ்நாள் முழுவதும் தொலைக்காட்சி பெட்டி இல்லாமல் எனது காலங்களை தமது பரிசுத்த பாதங்களில் மட்டும் செலவிட்டு மகிழும் கிருபையின் சிலாக்கியம் தந்த பரிசுத்த தேவன் உங்களையும் அந்த பரிசுத்த பாதையில் வழிநடத்திச் செல்ல வல்ல கர்த்தராயிருக்கின்றார். "ஒரு மெய்யான பரிசுத்த தேவப் பிள்ளையின் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இருக்கவே இருக்காது" என்று ஒரு ஆவிக்குரிய பத்திரிக்கையில் நான் வாசித்தேன். அதை நான் அப்படியே தேவ வாக்காக ஏற்றுக் கொள்ளுகின்றேன்.

"உம்முடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு" (சங் 16 : 11) என்றும் "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை" (சங் 73 : 25) என்றும் "எனக்கோ தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம்" (73 : 28) என்றும் "ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்" (சங் 73 : 23) என்றும் "எனது ஆத்துமா உம்மை தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்கிறது" (சங் 63 : 8) என்றும் தன் கர்த்தரோடுள்ள இடைவிடாத பரலோக ஐக்கிய உறவை தாவீது ராஜா கூறுவது போல நமது விருப்பமும், வாஞ்சையும், கதறுதலும் (சங் 42 : 1) ஆண்டவருடைய பாதங்களாக இருப்பதாக. "தேவையானது ஒன்றே" ஆம், மரியாள் தெரிந்து கொண்ட ஆண்டவருடைய பரிசுத்த பாதங்கள் மட்டும்தான் நமது தேவை (லூக்கா 10 : 42) என்பதை ஆண்டவரே திட்டமும் தெளிவுமாக சொல்லி வைத்திருக்கின்றார். ஒரு மெய்யான பரிசுத்த தேவ பிள்ளை சர்வ வல்லவரில் மனமகிழ்ச்சியாயிருந்து எப்பொழுதும் தேவனைத் தொழுது கொண்டிருப்பான் என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது (யோபு 27 : 10) ஆனால் அந்தக் காரியத்தை இந்த உலகத்தின்ஆசை கொண்ட ஒரு மாயக்காரனால் செய்ய முடியாது என்பதை அதே வசனத்தின் முற்பகுதி வசனங்கள் தெரிவிக்கின்றது.

"மனித வாழ்வின் பிரதான நோக்கம் கர்த்தரை மகிமைப்படுத்துவதும், அவருடைய அன்பை ருசித்து அவரில் என்றும் ஆனந்தம் கொள்ளுவதுமேயாகும்" (Man's chief end is to glorify God and enjoy Him forever) என்று பூர்வ காலத்து பக்தர்கள் சொல்லியிருப்பது போன்று நமது விருப்பமும், வாஞ்சையும் கர்த்தர் ஒருவராக மாத்திரம் இருப்பாராக. நாம் சென்றடையப் போகும் அருமை இரட்சகரின் உன்னத வீட்டில் தொலைக்காட்சி பெட்டிகள் கிடையாது என்பதை உங்கள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுவதுடன் இந்த உலகத்தில் ஆண்டவருடைய பாதங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும், களிகூருதலையும் தரவில்லையானால் மோட்சத்திலும் அவருடைய பாதங்கள் உங்களுக்கு நிச்சயமாக அதைத் தரப்போவதில்லை. இது விசயத்தில் நான் உங்களைக் கண்ணீரோடு கெஞ்சிக் கேட்கின்றேன். தொலைக்காட்சிக்கு விலகியோடுங்கள். அந்த விசாலமான அழிவின் வழி நமக்கு வேண்டாம். தொலைக்காட்சி பார்ப்பதிலிருந்து நீங்கள் உங்களை முழுமையாக விடுவித்துக் கொள்ளுவது ஆரம்பத்தில் உங்களுக்கு மிகவும் கஷ்டமாக தெரியலாம். ஆனால், தேவ பெலத்தோடு கொஞ்சம், கொஞ்சமாக அதைப் பார்க்கும் நேரத்தைக் குறைத்து இறுதியில் முழுமையாக அதை விட்டு விலகுங்கள். உங்கள் பொன்னான காலங்களை ஆண்டவருடைய பாதங்களில் அமர்ந்து அவரைப் பாடித் துதிப்பதிலும், ஆண்டவருடைய வசனங்களை வாசித்து தியானிப்பதிலும், ஜெப தியானங்களிலும் செலவிடுங்கள். இந்த ஒரு பரலோக ருசி உங்களுக்கு கிடைத்துவிட்டால் அதற்கப்பால் தொலைக்காட்சி பக்கம் போகவே மாட்டீர்கள்.

வெறுத்திடுவேன் எந்தன் ஜீவனை லோகத்தில்
செல்லுவேன் கஷ்டத்தின் பாதையில்
மாயை மாயையே லோகத்தின் இன்பமே
வாடா முடி சூட ஏகுவேன்!

"ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" (லூக்கா 9 : 23) என்றார் நம் அருமை இரட்சகர். ஆண்டவரைப் பின்பற்றும் அவருடைய பிள்ளைகள் யாவரும் இந்த உலகத்தில் தங்களை வெறுத்து அவருக்குப் பின் செல்ல வேண்டும். இதுதான் நித்திய ஜீவனுக்கு நம்மைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் இடுக்கமும், வழி நெருக்கமுமான பாதையாகும். இந்த உலகத்தில் நாம் அநுபவித்து ஆனந்திக்க அனைத்து வசதிகளும், வாய்ப்புகளும் இருந்தபோதினும் அவைகளை அருமை இரட்சகரை அறிகிற அறிவின் மேன்மைக்காக நஷ்டமும் குப்பையுமாக எண்ணி அவைகளை வெறுத்து ஒதுக்குவதே ஜீவனுக்குப் போகிற வழியாகும். "எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது" (1 கொரி 6 : 12) என்று அப்போஸ்தலன் எழுதுவதும் இதைக் கவனத்தில் கொண்டுதான் குறிப்பிடுகின்றார்.

நாம் இந்த உலகத்தில் இருந்தாலும் உலகத்து மக்களைப் போல மனதும், மாம்சமும் விரும்பும் வழியில் வாழக்கூடாது என்று ஆண்டவர் விரும்புகின்றார். "நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல" (யோவான் 17 : 16) என்று அவர் சொன்னார். "இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" (யோவான் 14 : 30) என்றார் அவர். ஆனால், இன்று நிலைமை வேறு. உலகத்தின் அதிபதி, மனுஷ கொலை பாதகன் பாதுகாப்பாக வாழும் இடம் (safe haven) பெயர்க் கிறிஸ்தவர்களும், அவர்களுடைய இச்சைக்கேற்றபடி அவர்கள் தெரிந்து கொண்ட தேவ ஊழியர்களும்தான். ஒரு இந்து வாலிபன் ஒரு தடவை என்னைப் பார்த்து "கோடானு கோடிகளுக்கு அதிபதியாக இருந்த போதினும் எங்கள் மார்க்கத் தலைவர் வாழும் இடம் ஒரு ஓலைக் குடிசைதான். ஆனால் உங்கள் ஊழியக்காரர் எத்தனை ஆடம்பரமாக, சுகபோகமாக வாழ்கின்றனர்" என்றான். அந்த வாலிபனுக்குப் பதில் சொல்ல நமக்கு வார்த்தைகளில்லையே!

ஜீவனுள்ள தேவனை அறியாத புறமதஸ்தர் எத்தனை எளிமையாக இந்த உலகத்தில் நமக்கு முன்பாக வாழ்ந்து இந்த உலகத்தைக் கடந்து சென்றிருக்கின்றார்கள். நமது தேசத் தந்தை காந்தியடிகள் நம்முடைய தமிழ்நாட்டின் மதுரை பட்டணம் வந்த இடத்தில் அங்குள்ள வைகை நதியில் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்த வேளையில் தனக்கு முன்னால் அப்பால் குளித்துக் கொண்டிருந்த ஒரு ஏழைப் பெண் தனது சரீரத்தை மறைக்க போதிய வஸ்திரமில்லாதிருப்பது கண்டு மனம் கசிந்து தனது மேல் வஸ்திரத்தை அந்தப் பெண்ணுக்கு கொடுத்துவிட்டு அந்த நாளிலிருந்து தனது உடம்பை மூடாமல் ஒரு பக்கிரியாக எளியவனுக்கும் எளியவனாக வாழ்ந்து கடந்து சென்றாரே. தலை சாய்க்க இடமில்லாதவராக இந்த உலகத்தில் வாழ்ந்து அடுத்த மனிதனின் இரவல் கல்லறையில் தனது பூவுலக வாழ்வை முடித்த நம் அன்பின் ஆண்டவருடைய வாரீசான மெய் அடியார்கள் நாங்கள்தான் என்று பறைசாற்றும் தேவ ஊழியர்களுடைய ஆடம்பரமான வாழ்வையும், அவர்களுடைய நடை உடை பாவனைகளையும் கவனித்தீர்களா? எத்தனை துயரமான கண்ணீரின் நிலை பாருங்கள். அன்று மகாத்துமா சாதுசுந்தர்சிங் அவர்கள் கேரளா மாநிலம் வந்திருந்த போது வைராக்கியமான மலையாள இந்து மக்கள் அவருடைய முகத்தில் ஜொலித்த தேவ மகிமையைக் கண்டு கூட்டம் கூட்டமாக ஆண்டவருடைய மெய் அடியார்கள் ஆனார்களே! இன்று நமது தேவ ஊழியர்களை அந்த இந்து மக்கள் அந்தவிதமாக அடையாளம் கண்டு கொள்ள முடியுமா? எத்தனை எளிமையான வஸ்திரத்துடனும், எத்தனை எளிமையான செருப்பை அணிந்தவர்களாகவும் தங்கள் ஊழியங்களை தமிழ் நாட்டில் ஆரம்பித்தவர்கள் இன்று எத்தனை விலை உயர்ந்த பகட்டான வஸ்திரங்களுடனும், எத்தனை விலை மதிப்புள்ள நவநாகரீக சொகுசு கார்களுடனும், யாரும் நெருங்க முடியாத நிலையில் பெரிய பங்களாக்களில் படோபமாக அனைத்து வசதிகளுடனும், பெருமையுடனும் பழங்கால சமஸ்தான மன்னர்களைப் போல வாழ்கின்றார்கள். அரசியல்வாதிகள் யாவரும் அவர்களின் அன்புத் தோழர்கள். அவர்களுடைய வாயிலிருந்து எத்தனையான பெருமையான வார்த்தைகள் புறப்பட்டு வருகின்றன. ஆயினும், அவர்களின் பிரசங்கங்களைக் கேட்க மக்கள் திரள் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றது.

சென்னையில் கடந்த ஆண்டில் நான் ஒரு கர்த்தருடைய பிள்ளையைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் "தேவ ஊழியர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லும்போது அவர்களுடன் ஒரு டிரக் வாகனம் அவர்களுடைய துணிமணிகளை எடுத்துக் கொண்டு செல்லும். ஆம், அவர்கள் பங்குகொள்ளும் கிறிஸ்தவ நிகழ்ச்சியில் இடத்திற்கு தக்கவாறு அவர்கள் தங்களது உடைகளை மாற்றிக்கொள்ள வசதியாக அவ்வளவு துணிகள் அவர்களுக்கு தேவைப்படுகின்றது" என்று கூறினார்கள். மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டவருடைய அடியார்கள் நிர்வாணிகளாக காணப்பட்டு (1 கொரி 4 : 11) இந்த உலகத்தைக் கலக்கினார்கள் (அப் 17 : 6) ஆனால், இன்றுள்ள தேவ ஊழியர்கள் லாரி நிறைய வஸ்திரங்களை அணிந்து, தொலைக்காட்சியில் தோன்றி தேவனுடைய மகத்துவமுள்ள நாமத்திற்கு துஷணையாக, புறமதஸ்தர் தேவனுடைய நாமத்தை நிந்திக்கத்தக்க விதத்தில் சாட்சியற்றவர்களாக நடக்கின்றார்கள். அவர்கள் பேச்சு ஒன்றாகவும், அவர்கள் வாழ்க்கை மற்றொன்றாகவும் உள்ளது. சிலுவையைப் பிரசங்கிக்கின்றோம் என்று அவர்கள் சொல்லுகின்றார்கள், ஆனால், தங்கள் ஜீவனை இரட்சிக்க விரும்புகின்றார்கள். தங்களுடைய காரியங்களை எல்லாம் மிகவும் மறைவாக வைத்து ஆஸ்தி ஐசுவரியங்களை தந்திரமாக சேர்த்துக் குவிக்கின்றார்கள். "வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்" (2 கொரி 4 : 4) என்று அன்று நமது அப்போஸ்தலர் தங்களை யாவருக்கும் முன்பாக வெளியரங்கமாக்கினார்கள். அதுமட்டுமல்ல நாங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது நீங்களும் எங்களைப் பின்பற்றுங்கள் (1 கொரி 11 : 1) என்று அவர்களைப் பின்பற்றும்படியாக அறைகூவல் விடுத்தார்கள். ஆனால், இன்றுள்ள தேவ ஊழியர்களின் காரியங்கள் வேறு. தேவனுடைய உன்னதமான ஊழியத்தை முதல் தரமான வியாபாரங்களாக்கிவிட்டார்கள். சமீபத்தில் ஒரு பரிசுத்த தேவப் பிள்ளை என்னிடம் சொன்னது போல "தேவ ஊழியங்களை லிமிடெட் கம்பெனிகளாக மாற்றிவிட்டார்கள்".

அவர்கள் காரியம் அப்படியிருக்கட்டும். அந்தக் காரியத்தைச் செய்வதற்காகவே அவர்கள் இந்த உலகத்தில் பிறந்திருக்கின்றார்கள். தங்களுடைய காரியங்களை தீவிரமாக நடத்தட்டும். கோடானு கோடிகளை ஆசை தீர சேர்த்துக் குவிக்கட்டும். ஆனால், நமது காரியம் வேறு.

"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும் படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1 பேதுரு 2 : 9) என்று அன்பின் தேவன் நம்மைப் பார்த்துக் கூறுகின்றார். "அன்றியும் மனந்திரும்புதலும், பாவ மன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்கு சாட்சிகளா யிருக்கிறீர்கள்" (லூக்கா 24 : 47, 48) என்ற கர்த்தருக்கு "இந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம்" (அப் 5 : 32) என்ற அவருடைய அன்பின் அடியார்களைப் போன்று நாமும் நம்முடைய பரிசுத்தமான, மனத்தாழ்மையுள்ள வாழ்வின் மூலமாக நமது இரட்சா பெருமானை மகிமைப்படுத்துவோம். நமது அன்பின் ஆண்டவரும், அவருடைய பரிசுத்த அப்போஸ்தலரும், இந்த உலகத்தைக் கடந்து சென்ற பக்த சிரோன்மணிகளும், இரத்த சாட்சியாகிய தைரிய சேனைகளும், பரிசுத்தவான்களின் சங்கமும், அனைத்து தேவ மக்களும் பாடுகளோடும், கண்ணீரோடும் கடந்து சென்ற இடுக்கமும் வழி நெருக்கமுமான சிலுவைப் பாதை வழியாக நமது சிலுவையை தோளில் சுமந்தவர்களாக தேவ பெலத்தோடு நாம் கடந்து செல்லுவோம். நம்மால் முடிந்த அளவு நம்முடைய விலையேறப்பெற்ற பொன்னான காலங்களை தினமும் ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிடுவோம். அந்த ஜெப வாழ்வே நம்மைப் பாதுகாப்பாக ஆண்டவருடைய பரிசுத்த சமூகத்திற்கு வழிநடத்திச் செல்லும். முடிவில்லாத நித்தியத்தை நித்திய அக்கினியில் செலவிட தீவிரித்துக் கொண்டிருக்கும் திரளான ஆத்துமாக்களை எப்படியாவது அழிவிலிருந்து பாதுகாக்க நம்மால் இயன்றதனைத்தையும் ஆத்தும பாரத்தோடும், கண்ணீரோடும் செய்வோம். அதற்காக நாம் ஊக்கமாக ஜெபிப்போம். அதற்கான தேவ கிருபைகளை அன்பின் ஆண்டவர் தாமே உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வாராக. ஆமென்.

 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM