“என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”
1688 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலை வேளையானது நல்ல அமைதியாக விடிந்து வந்த வேளையில் இடி முழக்கத்துடன் கூடிய திடீரென்று கொட்டிய பலத்த மழை ஒன்று அந்த அமைதியைக் குலைத்துவிட்ட போதினும் அது சீக்கிரமாகக் கடந்து மறைந்து சென்றுவிட்டது.
வெப்பம் காரணமாக கடந்து சென்ற இரவு மிதமிஞ்சிய புழுக்கமாக இருந்தபடியால் படுக்கையிலிருந்த ஜாண் பன்னியன் மூச்சுவிடுவதற்காகத் தவித்துக்கொண்டிருந்தார். அவர் படுத்திருந்த அறையின் கதவும், ஜன்னல்களும் முழுமையாக திறந்து வைக்கப் பட்டன. அவர் மிகவும் சோர்போடு இருந்தபடியால் அவரது கரங்கள் பெலனிழந்து தானாக அவ்வப்போது அவரது கட்டுப்பாட்டை மீறி படுக்கைத் துணிகளில் விழுந்து கொண்டிருந்தன. அவருடைய படுக்கைக்கு அருகில் பலசரக்கு வியாபாரி ஜாண் ஸ்ட்ரவிக், தேவ ஊழியர் ஜியார்ஜ் கோக்கின், சீப்புகள் செய்யும் சகோதரன் சார்லஸ்டோ ஆகிய மூவரும் இரவு முழுவதும் நின்று அவரைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
ஜாண் பன்னியன் படுத்திருந்த ஜாண் ஸ்ட்ரவிக் என்பவரின் வீட்டின் அறையில் மரண தூதனின் பிரசன்னம் நிச்சயமாக உணரப்பட்டபோதினும் பரலோக மகிமையின் காட்சி அந்த அறையில் கூடியிருந்த சிறிய குழுவின் மேல் செட்டைகளை விரித்து அமர்ந்திருந்தது. அவர்களுடைய இருதயங்கள் எல்லாம் பரிசுத்த சந்தோசத்தால் முழுமையாக நிரம்பியிருந்தது. அதின் காரணமாக அந்த பரிசுத்த தேவ மக்கள் மரணத்தின் கூரை உணராமல் மரணத்தை தமது மரணத்தால் ஜெயித்து வெற்றி கொண்ட கிறிஸ்து இரட்சகரின் நிறைவான பிரசன்னத்தை கண்டு கொள்ள முடிந்தது.
ஜாண் பன்னியன் “போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார்” என்ற பரம அழைப்பின் குரலுக்காக மிகவும் பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தார். ஆயினும் அந்த வேளை இன்னும் வரவில்லை. அவர் தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த தனது சிநேகிதன் ஜியார்ஜ் கோக்கின் என்பவரைப் பார்த்து தான் கடைசியாக எழுதின “தேவனுக்கு உகந்த ஜீவ பலி” என்ற புத்தகத்திற்கு தலையங்கம் எழுதிவிடும்படியாக கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். நித்திய அக்கினியாம் நரகத்தை நோக்கி நாசத்தின் வழியில் சென்று கொண்டிருக்கும் அழியும் ஆத்துமாக்களைக் குறித்த எண்ணம் அந்த இறுதி நேரத்திலும் அவரது கண்களை கண்ணீரால் நிரப்புவதாக இருந்தது. அதைக் குறித்து அவர் தனது பரிசுத்த நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். இந்த வேளையில் அவர் அருகில் நின்ற அவரது நண்பன் சார்லஸ் டோ அவரது படுக்கையருகில் அவரண்டை வந்து அவரது முகத்துக்கு நேராகக் குனிந்து அவரது கரத்தைத் தூக்கி எடுத்து அன்பொழுக அதைத் தட்டிக் கொடுத்து ஏங்கி ஏங்கி அழுதவராக “சகோதரன் பன்னியன், சகோதரன் பன்னியன், நீங்கள் கடைசியாக எழுதிய உங்கள் புத்தகத்தை ஆவலோடு வாசித்தேன். “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய உங்கள் புத்தகத்தை நான் வேதாகமத்துக்கு அடுத்தபடியாக வாசித்து மகிழ்ந்தேன். அதுதான் உங்கள் புத்தகங்கள் யாவற்றிலும் முதன்மையானது என்றும் எண்ணினேன். ஆனால் உண்மையில் உங்கள் புத்தகங்கள் அனைத்தும் அருமையானவைகள். அவைகளிலிருந்து பெருமளவிற்கு நான் தேவ சமாதானத்தையும், ஆறுதலையும் பெற்று ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றேன்” என்று கூறினார்.
தனது முடிவை மிகவும் துரிதமாக நெருங்கிக் கொண்டிருக்கும் ஜாண் பன்னியனுக்கு சார்லஸ் டோ அவர்களின் சற்று நீளமான வார்த்தைகள் சோர்பை அளிப்பதாகவே இருந்திருக்கும். இந்த வேளையில் ஜாண் ஸ்ட்ரவிக் அவர்கள் ஜாண் பன்னியனின் ஒரு கரத்தையும், ஜியார்ஜ் கோக்கின் பன்னியனின் அடுத்த கரத்தையும் அன்பொழுகப் பற்றிப் பிடித்தவர்களாக அவரது படுக்கைக்கு அருகில் முழங்காலில் நின்றனர். அடுத்து சில நிமிடங்களுக்குள்ளாக தங்களுடைய அருமை சகோதரனுக்கு தவிர்க்க முடியாதது நடக்கப் போவதை அவர்கள் எதிர்பார்த்தவர்களாக காணப்பட்டனர்.
சீதோஷ்ண நிலை வர வர தெளிவாகத் தொடங்கியது. இப்பொழுது அது திரும்பவும் நேர்த்தியாகக் காணப்பட்டது. பிரகாசமான சூரிய ஒளிக்கதிர்கள் மரித்துக் கொண்டிருந்த தேவ மனிதரின் அறைக்குள் வெள்ளம் போல பாய்ந்து கொண்டிருந்தது. அந்த சூரிய ஒளி ஜாண் பன்னியனின் முகத்திலும் சூடாகப் பட்டுக்கொண்டிருந்தது. அந்தக் காலை வேளை சூரிய ஒளிக்கதிர்கள் அல்ல, தான் விரைந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் உச்சிதப் பட்டணத்திலிருந்து வரக்கூடிய மகிமையின் பேரொளிக் கிரணங்களையும் அங்கு வாசம் செய்யும் ஒளி மயரூபிகளின் சாயல்களையும், தங்கள் கின்னரங்களைக் கரங்களில் ஏந்தி மா இன்பமாக, இசைக்கின்ற கீதவாத்தியக்காரர்களின் மங்கள கீதங்களையும், அவர்கள் பாடும் பாட்டோசையால் பரலோகமே எதிர் ஒலி கொடுப்பதையும் அவர் கவனித்தார். பரலோகத்தின் ஜொலித் திலங்கும் பெரிய தங்க கதவுகள் அவர் உள்ளே வருவதற்காக திறப்பதையும், உச்சிதப்பட்டணத்தின் திரள் சேனையான பாடகர் குழு “சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று ஆரவாரித்துப் பாடித் துதிப்பதையும், அந்த பரிசுத்தர்களின் கூட்டத்தில் தானும் ஒருவனாகச் சேர்ந்து கொண்டு தன் நேச இரட்சகரை பாடிப்போற்ற வேண்டும் என்ற ஆவல் அவரைப் பலமாக ஏவுவதையும் அவர் உணர்ந்தார்.
இந்த வேளை ஜாண் பன்னியன் தனது இன்பமான குறுகிய நேர நல்ல தூக்கத்திலிருந்து கண் விழித்துக் கொண்டார். தன்னைச் சுற்றி நின்ற தனது பரிசுத்த நண்பர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே நன்றாகப் பார்த்தார். அவர்கள் அவருடைய படுக்கையைச் சுற்றிலும் அவருக்கு மிகவும் சமீபமாக முழங்காலூன்றியிருந்தனர். தாங்கள் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் அவரைப் பார்த்துக் கேட்டனர். “சகோதரர்களே” என்ற மிகவும் கனிந்த குரலில் “எனக்கு ஒன்றும் தேவையில்லை. கிறிஸ்து இரட்சகரோடு நான் சேர்ந்து கொள்ளுவதே எனக்குப் பேரானந்த பாக்கியம்” என்றார் பன்னியன்.
தனது கரங்களை அன்பொழுகப் பற்றிப் பிடித்திருந்த தனது நண்பர்களின் கரங்களை இப்பொழுது மெதுவாகத் தளர்த்திக் கொண்டார். துறைமுகத்திலுள்ள கப்பல் பூமியோடு தன்னை கட்டி வைத்திருந்த தனது கடைசி நங்கூரத்தை தளர்த்திக்கொள்ளும் வண்ணமாக அவர் தன்னைப்பற்றியிருந்த பூமியின் கடைசிப் பிணைப்பையும் விலக்கிக் கொண்டார். தான் தலை வைத்துப் படுத்திருந்த தலையணையிலிருந்து தனது தலையை சற்று உயர்த்திய பொழுது அவரது நரைத்த தலை முடி சுருள்கள் அவரது தலையைச் சுற்றிலும் அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அவரது பிரகாசமான நீல நிறக்கண்கள் சூரிய ஒளியில் பட்டுப் பிரகாசிப்பதாக இருந்தது. அவரது கன்னங்கள் வழக்கமான செந்நிற வண்ணத்துடன் காணப்படுவதாக இருந்தது. தனது பந்தயத்தில் ஜெயத்தை சுதந்தரித்துக் கொண்ட வெற்றி வீரன் வீர முழக்கமிடுபவனைப் போன்று ஜாண் பன்னியன் தனது கரங்கள் இரண்டையும் வானத்திற்கு நேராக உயர்த்தி சற்று சப்தமான குரலில் “என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்” என்று ஆரவாரித்தார்.
ஆம், பரிசுத்த பக்த சிரோன்மணி ஜாண் பன்னியனின் ஆத்துமா இவ்வண்ணமாக ஜெய கெம்பீர தொனியுடன் தனது ஆண்டவருடைய சமூகத்துக்குப் பாடி பறந்து சென்றது. ஜாண் பன்னியன் மரிக்கும்போது அவரது வயது 60 மாத்திரமேதான் ஆகும். அவர் மரணம் அடைந்த லண்டன் பட்டணத்திற்கு அருகிலிருந்த பன்ஹில் ஃபீல்ட்ஸ் என்ற இடத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறையை நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
அரசர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான (Westminister Abbey) “வெஸ்ட் மினிஸ்டர் அபி” உள்ள லண்டனில் ஜாண் பன்னியனுக்கு ஒரு ஞாபகார்த்த பலகணி நிறுவப்பட்டுள்ளது. அவர் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததும், மோட்ச பிரயாணம் என்ற பரிசுத்த நூலை எழுதியதுமான பெட்போர்ட் நகரத்தில் பன்னியனுடைய உருவச் சிலை எழுப்பப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகத்தில் அவரது பொருட்கள் பலவும் வைக்கப்பட்டுள்ளன. பன்னியன் தனது மோட்ச பிரயாண புத்தகத்தில் வியாக்கியானி முனிவர் வீட்டில் மோட்ச பிரயாணி கிறிஸ்தியான் கண்டதான ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த காட்சியில் வரும் மனித உருவத்தை பெட்போர்டில் செதுக்கி வைத்துள்ளனர். அந்த மனிதன் பரலோகத்தை அண்ணாந்து பார்த்த வண்ணமாக இருப்பதையும், உலகத்தையும், அதின் மேன்மைகளையும் அற்பமும் குப்பையுமாக எண்ணி தன் கால்களுக்கு கீழாக அவைகளை மிதித்துத் தள்ளிப் புறக்கணித்திருப்பதையும், மனந்திரும்பி தேவனை அண்டிக்கொள்ள பூலோக மாந்தரிடம் அந்த உருவம் உள்ளம் கனிந்து பரிந்து மன்றாடுவதைப் போன்ற பாவனையில் அந்தச் சிலையை செதுக்கியிருக்கின்றனர்.