தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்
ஜாண் பன்னியன் சிறு வயதிலிருந்தே பயங்கரமான கனவுகளைக் கண்டு வந்தார். ஆண்டவருடைய இரண்டாம் வருகை வருவதைப் போலவும், ஆயத்தமானோர் அவரால் மத்திய ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதையும், பாவத்தில் ஜீவிக்கும் அவர் தேவனால் கைவிடப்படுவதையும் கண்டு படுக்கையில் அலறுவார். அவரது பாவச் செயல்கள் அதிகரிக்க, அதிகரிக்க அவர் காண்கின்ற சொப்பனங்களும் அவரை கதி கலங்கப்பண்ணுவதாக இருந்தன. சாத்தானாம் பிசாசு அவரை சங்கிலிகளால் கட்டி நரக பாதாளத்தில் தள்ள அவனது கரங்களில் கொண்டு வந்த இரும்பு சங்கிலிகளின் சலசலக்கும் ஓசையைக் கேட்டு ஒரு சொப்பனத்தில் அவர் வேர்த்து வியர்த்து நடுநடுங்கி திகைத்து எழும்பினார். தனது மற்றொரு சொப்பனத்தில் அடித்தளமே காணப்படாததான நரக தீச்சூளை தனக்கு முன்பாக திறந்திருப்பதைப் பார்த்து ஓலமிட்டுப் புலம்பினார்.
தான் மனந்திரும்ப வழி வகுத்துக்கொடுத்த ஒரு சம்பவத்தை ஜாண் பன்னியனே தமது சொந்த வார்த்தைகளால் நமக்கு விளக்குகின்றார்:- “கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டியதன் அவசியத்தை அன்று குருவானவர் ஆலயத்தில் அத்தனை கண்டிப்பாகப் பேசினார். அந்த நாளில் வேலை செய்வதோ, விளையாடுவதோ மற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் பொழுதைப் போக்குவதோ கண்டிப்பாகக் கூடாது என்று திட்டமும் தெளிவுமாக அவர் பேசினார். “அவரது தேவச்செய்தி என் உள்ளத்தைத் தொட்டது. எனது பாவக்குற்றங்களை உணர்ந்து இனிமேல் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு வீட்டுக்கு வந்த நான் நன்றாக சாப்பிட்டுவிட்டு உணர்வற்ற மிருகம் போல “டிப்-காட்” விளையாட்டு விளையாட தெருவுக்குச் சென்று தீவிரமாக எனது ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். எனக்கு முன்னால் தரையில் கீழே கிடந்த இருபுறமும் கூர்மையான குச்சியை எனது கரத்திலிருந்த கடினமான சிறிய கட்டை கம்பால் ஒரு தடவை அடித்து, மேலே எழும்பிய அந்தக் குச்சியை அடுத்த அடியால் வெகு தொலைவுக்கு செலுத்த முயன்றபோது “உன்னுடைய பாவங்களை விட்டுவிட்டு மோட்சம் செல்லுவாயா? அல்லது பாவங்களைச் செய்து நரக பாதாளம் செல்லப்போகின்றாயா?” என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் கூர்மையான அம்பைப்போல எனது இருதயத்தை ஊடுருவிச் சென்றது. என்னோடு பேசிய ஆண்டவரின் பரலோக வார்த்தையால் நான் தாக்குண்டு இனி பாவத்தில் நீடித்தால் அழிவே நமது பங்காகிவிடும் என்ற பயத்தால் நான் இரட்சிப்பைத் தேட ஆரம்பித்தேன்” என்கின்றார் ஜாண் பன்னியன்.