ஜாண் பன்னியன்
(1628-1688)
“பன்றியானது எவ்வளவுக்கு எவ்வளவு கொழுப்பாய் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது சேற்றை நாடுகிறது. எருது எவ்வளவுக்குக் கொழுத்திருக்கிறதோ அவ்வளவுக்கு அது கும்மாளம் போட்டுக்கொண்டு கொலைக் களம் போகிறது. சிற்றின்ப பிரியன் எவ்வளவுக்கு சுக ஜீவியாக இருக்கின்றானோ அவ்வளவுக்கு அவன் தீமையின் மேல் நாட்டம் கொள்ளுகின்றான். பட்டு கட்டி பகட்டாய்த் திரிய வேண்டும் என்று பெண்கள் பெரும்பாலும் ஆசைப்படு கின்றார்கள். தேவனுடைய பார்வைக்கு மதிப்பைக் கொடுக்கும் இலட்சணா அலங்காரமே பெண் அலங்காரம். ஒரு வருஷம் முழுவதிலும் ஓய்வில்லாமல் விழித்திருப்பதிலும் ஒரு இரவு கண் விழித்திருப்பது லேசான காரியம். அப்படியே மோட்ச பாக்கியம் பெறும்படி முடிவுபரியந்தம் பக்தியை விடாதிருப்பதிலும் ஆரம்பத்தில் கொஞ்ச காலம் பக்தியாய் இருப்பது இலகுவான காரியம். எந்த மாலுமியும் கடலில் கடும் புயல் அடிக்கையில் அற்ப பிரயோஜன முள்ள பொருட்களை மனதார கடலில் எறிகிறது உண்டு. ஆனால் முதல்தரமான விலையேறப்பெற்ற பொருட்களை முதலில் எவன்தான் கடலில் எறிவான்? தேவனுக்குப் பயப்படுகிறவனே அல்லாமல் வேறொருவனும் அப்படிச் செய்யான். ஒரு சிறிய பொத்தல் (துவாரம்) பெருங்கப்பலையும் ஆழ்த்திப்போடும். ஒரு சிறிய பாவம் பாவியை நிர்மூலமாக்கிவிடும். சிநேகிதனை மறக்கிறவன் நன்றி கேடன். ஆனால் தன் இரட்சகரை மறக்கிறவனோ தன்னை நாசமாக்குகிறான். பாவத்திலே ஜீவித்துக்கொண்டு பரலோக பாக்கியம் பெற்றுக் கொள்ளுவேன் என்று எதிர்பார்க்கிறவன் முட்பூண்டுகளை விதைத்து நவதானியங்களை கழஞ்சியத்தில் சேர்ப்பேன் என்று நினைக்கிற வனுக்கு ஒப்பாய் இருக்கிறான். ஒருவன் மோட்ச பாக்கிய வாழ்வை பெறவேண்டுமானால் அவன் தன் மரண நாளை சதா தன் நினைவில் கொண்டு அதை ஒரு ஊன்று கோலைப்போல பயன்படுத்தி வர வேண்டும்” (மோட்ச பிரயாண புத்தகத்தில் ஜாண் பன்னியன் எழுதிய வரிகள்)
பரிசுத்த வேதாகமத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் “மோட்ச பிரயாணம்” என்ற உலகப்புகழ்பெற்ற கிறிஸ்தவ நூலை எழுதிய ஜாண் பன்னியன் என்ற பரிசுத்த தேவ பக்தன் இங்கிலாந்து தேசத்திலுள்ள பெட்ஃபோர்ட் நகருக்கு ஒரு மைல் தொலைவிலுள்ள எல்ஸ்டவ் என்ற கிராமத்தில் 1628 ஆம் ஆண்டு பிறந்தார். ஒரு காலத்தில் அவரது முந்தைய தலைமுறையினர் நிலச்சுவான்தார்களாக வாழ்ந்தபோதிலும் ஜாண் பன்னியனுடைய நாட்களில் அந்தச் செழுமையும், செல்வாக்கும் பறந்துபோய்விட்டது. ஏழையிலும் ஏழையாக வாழவேண்டிய சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார்.
ஜாண் பன்னியன், தகர டப்பாக்கள், கெட்டில்கள் போன்ற வற்றை செய்யும் தகர வேலைக்காரன் தொழிலையே செய்து வந்தார். அவரது தந்தையும் கூட வெண்கல பாத்திரங்களை உருவாக்கும் ஒரு தொழிலாளிதான். ஜாண் பன்னியன் தனது எல்ஸ்டவ் ஊரில் மிகவும் அற்பமான கல்வியை கற்றுவிட்டு தான் கற்ற அந்த சிறிய படிப்பையும் கூட மறந்துவிட்டு நின்றுவிட்டார். மற்ற ஏழைகளின் குழந்தைகளைப் போன்றே ஏழையான எனது கல்வியும் அமைந்தது என்று பன்னியன் கூறுவதுண்டு. எல்ஸ்டவ் கிராமத்திலிருந்த ஜாண் பன்னியனுடைய வீட்டை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
பன்னியன் தன் இளமைக் காலத்தில் தன்னுடன் தனது இளமை நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு தனது கிராமத்தில் காட்டு மிராண்டித்தனமாக வாழ்ந்தார். அவரைப்போல பொய் புரளி பேசவும், சபிக்கவும், கொடுந்தூஷணம் சொல்லவும், ஆண்டவரை நிந்தனை செய்யவும் அவருக்கு இணையாக எவரும் இருக்க இயலாது. கண்ணிகள் வைத்து பட்சி பறவைகள் போன்றவற்றை வேட்டை யாடுவது, மற்றவர்களின் பழத்தோட்டங்களை கொள்ளையிடுவது போன்றவற்றிலும் அவரது கரம் முதன்மையாக சேர்ந்திருந்தது. தங்கள் ஊர் தீயவர் கூட்டத்தின் கலகத் தலைவன் தலைமைப்பொறுப்பு தன் வசம்தான் இருந்ததாக அவரே சொல்லுவார். எல்ஸ்டவ் ஊரில் அனைவராலும் இழிவாகக் கருதப்பட்ட கற்பு நெறி தவறிய பெண்கள் கூட ஜாண் பன்னியனை காரி உமிழ்ந்து அருவருத்து பேசும் எல்லைக்கு அவரது நடத்தை சென்றது. தனது தீய கூட்டாளிகளுடன் சேர்ந்து நடனம் ஆடுவது அவருக்கு மிகவும் விருப்பமாகும். ஜாண் பன்னியன் படிக்கும் புத்தகங்கள் எப்பொழுதும் காதல் புத்தகங்களாகவேதான் இருக்கும். ஆனால், கர்த்தருடைய கிருபையால், அவர் ஒருக்காலும் விபச்சாரம், வேசித்தன பாவங்களில் விழவில்லை. சலங்கை மணிகளை கால் கரங்களில் கட்டிக்கொண்டு விளையாடுவது போன்ற விளையாட் டுகளை அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவார். கர்த்தருடைய பரிசுத்த ஓய்வுநாட்களில் “டிப்-காட்” என்ற ஒரு விளையாட்டை அவர் ஆர்வமாக விளையாடுவதுண்டு. “டிப்-காட்” என்பது நம் தமிழ் நாட்டில் சிறுவர்கள் விளையாடும் “கிட்டிப்புள்” என்ற “குச்சி-கம்பு” விளையாட்டாகும். இரு பக்கமும் கூர்மையாக சீவப்பட்ட ஒரு சிறிய குச்சியை தரையில் வைத்து கடினமான ஒரு சிறிய கட்டையால் தரையில் கிடக்கும் குச்சியின் ஒரு ஓரத்தை அடித்து எழுப்பி அடுத்த அடியால் அதனை தூரமாக செல்லப்பண்ணுவார்கள். அது மிகவும் சுவையான விளையாட்டாகும். அந்தக் கூர்மையான குச்சி அடிபட்டு எழுந்து செல்லும். அந்தக் குச்சியை பிடித்துவிட்டால் அதை அடித்த நபர் ஆட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அந்த விளையாட்டின் காரணமாக தங்கள் கண் பார்வையை இழந்து குருடரான சிறுவர்கள் பலர் உண்டு.