பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்
இந்தப்படி அவர்கள் பேசிக்கொண்டு போகவே வழிப்பாதையில் பிரயாணிகளுக்கு என்று கட்டப்பட்ட ஒரு வீட்டில் வந்து சேர்ந்தார்கள். இந்த வீட்டைப்பற்றி முதலாம் பங்கில் விபரமாய்ச் சொல்லப்பட்டவைகள் உன் ஞாபகத்தில் இருக்கலாம் (வியாக்கியானி வீட்டைப்பற்றித்தான் இப்பொழுது பேசுகிறேன்) அவர்கள் அந்த வீட்டின் வாசற்படியண்டை வந்த உடனே உள்ளே இருந்தவர்கள் உரத்துப் பேசிக்கொண்டிருந்த சத்தம் கேட்கப்பட்டது. அவர்கள் சற்று நின்று அதென்ன சம்பாஷணை என்று கவனிக்கையில் கிறிஸ்தீனாள் என்ற பேர் வந்தாற்போல் இருந்தது. ஏனெனில் கிறிஸ்தீனாளும் அவள் பிள்ளைகளும் மோட்சம் பயணப்பட்ட செய்தி முன்னமே அந்த இடங்களில் பிரபலப்பட்டிருந்தது என்று நீ அறிந்து கொள்ள வேண்டியது. முன் மோட்ச பிரயாணத்தை முழுப்பகையாய் பகைத்த கிறிஸ்தியானுடைய மனைவியாகிய கிறிஸ்தீனாளே இப்பொழுது மோட்ச பிரயாணி ஆகிவிட்டாள் என்ற செய்தி அந்த திசையில் உள்ளவர்களுக்கு அதிக சந்தோசமாய் இருந்தது. கிறிஸ்தீனாள் வாசலண்டை வந்து நிற்பதை அறியாத அவர்கள் உள்ளே இருந்து அவளைப் புகழ்ந்து பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டாள். கடைசியாக கிறிஸ்தீனாள் திட்டிவாசலை தட்டினது போல வியாக்கியானி வீட்டின் கதவையும் தட்டினாள். அவள் தட்டினவுடனே ஒரு கன்னிமா பெண் ஓடி வந்து கதவைத் திறந்து இரண்டு ஸ்திரீகள் வாசற்படியண்டை வந்து நிற்கக் கண்டாள்.
கன்னி: கன்னிமா பெண் அவர்களை நோக்கி: இவ்விடத்தில் உள்ள யாரைக் கண்டு பேச விரும்புகிறீர்கள்? என்று கேட்டாள்.
கிறி: அதற்கு கிறிஸ்தீனாள் எங்களைப் போலொத்த பிரயாணி களுடைய ஆதரவுக்கென்று இந்த வீடு கட்டப்பட்டிருக்கிறதாக கேள்விப்பட்டோம். ஆதலால் பிரயாணி களாகிய எங்களுக்கு இவ்விடத்தில் கிடைக்க வேண்டிய பங்கை வாங்கிக் கொள்ளும் படியாக வந்தோம். பெண்ணே நீ அறிந்திருக்கிறபடி பொழுதும் போயிற்று, இருட்டில் பயணம் செய்யவும் எங்களால் கூடாது என்றாள்.
கன்னி: என் ஆண்டவருக்குப் போய் நான் சொல்லும்படி உன் பேர் இன்னதென்று சொல்லமாட்டாயா? என்று அந்தக் கன்னிமாப் பெண் கேட்டாள்.
கிறி: என் பேர் கிறிஸ்தீனாள். நான் சில வருஷங்களுக்கு முன்னர் இவ்வழியாய் மோட்ச பிரயாணம் போன கிறிஸ்தியானுடைய மனைவி. இவர்கள்தான் அவருடைய நான்கு பிள்ளைகள். இந்த மாது என்னுடன் மோட்ச பயணம் செய்கிற ஒரு தோழி என்று கிறிஸ்தீனாள் சொன்னாள்.
உடனே மாசில்லாள் என்று பேர் வழங்கப்பட்ட அந்த கன்னிமா பெண் உள்ளே ஓடி, வாசலண்டை வந்து நிற்கிறது யார் என்று தெரியுமா? அங்கே கிறிஸ்தீனாளும் அவள் மக்களும், அவள் தோழியும் உள்ளே வரவேண்டும் என்று காத்து நிற்கிறார்கள் என்றாள். அது கேட்டவுடனே அவர்கள் எல்லாரும் ஆனந்தக் கூத்தாடிக்கொண்டு அந்தச்செய்தியை தங்கள் ஆண்டவனிடத்தில் போய் அறிவித்தார்கள். அவர் உடனே வாசலண்டை வந்து அவளைப் பார்த்து அந்த நல்ல கிறிஸ்தியான் மோட்ச பிரயாணம் செய்ய துவக்கினபோது பின்விட்டுப்போன அவன் மனைவியாகிய கிறிஸ்தீனாள் நீ தானா? என்று கேட்டார்.
கிறி: அதற்கு அவள், நான்தான் ஐயா! என் கணவனுடைய ஆத்தும வியாகுலங்களை அசட்டை செய்தவளும் அவர் தனிமையாய் பயணம் புறப்படும்படி விட்டுவிட்டவளும் நான்தான் ஐயா. இவர்கள்தான் அவருடைய நான்கு பிள்ளைகள். அவர் போன வழியைவிட உத்தமமான வழி வேறொன்றும் இல்லை என்று கண்டதால் நானும் அந்த வழி நடக்கத் தீர்மானித்துப் புறப்பட்டேன் ஐயா என்றாள்.
வியாக்கியானி: அப்படியானால் ஒரு மனுஷன் தன் மக்களில் ஒருவனைப்பார்த்து “மகனே நீ போய் இன்றைக்கு என் திராட்சத் தோட்டத்தில் வேலை செய்” என்றான். அதற்கு அவன் “மாட்டேன் என்றான், ஆகிலும் அவன் பின்பு மனஸ்தாபப்பட்டுப் போனான்” (மத்தேயு 21 : 28, 29) என்று எழுதப்பட்டிருக்கிற வாசகம் உன்னில் நிறைவேறுகிறது போல் இருக்கிறதே என்றார்.
கிறி: அதற்கு அவள் அப்படியே நிறைவேறுவதாக – ஆமென். என் தேவன் அந்த வாசகத்தை என்னில் மெய்ப்பித்து கடைசியிலே நான் மாசற்றவளும் குற்றமற்றவளுமாய் அவருடைய சந்தோசத்திற்கு உட்படும்படி கிருபை செய்வாராக என்றாள்.
வியா: நீ இப்படி வெளியே நிற்பானேன்? ஆபிரகாமின் குமாரத்தியே, உள்ளே வா, உன்னைப் பற்றி இப்போதான் பேசிக் கொண்டிருந்தோம். நீ பிரயாணம் செய்ய ஆரம்பித்த செய்தியைப் பற்றி நாங்கள் முன்னமே கேள்விப்பட்டோம். வாருங்கள், மக்காள் வாருங்கள், வா மாதே, வா உள்ளே என்று எல்லாரையும் வீட்டுக்குள் ஏற்றுக்கொண்டார்.
அவர்கள் உள்ளே போன பின்பு சற்று நேரம் உட்கார்ந்து இளைப்பாறினார்கள். இதற்குள்ளாக பிரயாணிகளுக்கு சவரட்சணை செய்யும்படியாக நியமிக்கப்பட்டிருக்கிற ஆட்களும் வந்து கூடினார்கள். பிரயாணிகளைப் பார்த்து ஒருவர் சிரிக்க, அப்புறம் அடுத்தவர் சிரிக்க, கடைசியாக எல்லாரும் சிரித்து கிறிஸ்தீனாளும் மோட்ச பிரயாணி ஆகிவிட்டாளே என்று அகமகிழ்ந்தார்கள். அவர்கள் பாலியரின் தலையைத் தடவி அன்புடன் கன்னத்தையும் தட்டி ஆனந்தம் கொண்டார்கள். தயாளியையும் அவர்கள் கனிவோடு அணைத்து விருந்தாளிகளுக்கு செய்கிற மரியாதை எல்லாம் செய்தார்கள்.
இராச் சாப்பாடு இன்னும் தயாராகாதிருந்தபடியால் வியாக்கியானி அவர்களை தமது ஒப்பனை மடங்களுக்கு அழைத்துக் கொண்டு போய் சில காலத்துக்கு முன் கிறிஸ்தியானுக்கு காட்டின காட்சிகளை எல்லாம் அவர்களுக்குக் காட்டினார். இங்கே அவர்கள் இரும்புக்கூட்டுக்குள் இருந்த கைதியையும், பயங்கர சொப்பனங்கண்டு பதறி விழித்தவனையும், அநேகரைக் கொன்று அரண்மனைக்குள் பிரவேசித்த அதிவீர பராக்கிரமனையும், பராக்கிரமரில் சிரேஷ்ட மானவரின் படத்தையும் இன்னும் கிறிஸ்தியானுக்கு பிரயோஜனமாகக் காண்பிக்கப்பட்ட மற்றெல்லா உபமான சித்திரங்களையும் காட்டினார்.
அவை அனைத்தையும் காட்டி அவைகளின் பொருளை கிறிஸ்தீனாளும் மற்றவர்களும் கிரகித்து அறிந்து கொண்ட பிற்பாடு வியாக்கியானி அவர்களை மறுபடியும் வேறொரு அறைக்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கே ஒரு மனுஷன் மண்ணைத் தவிர மற்றெதையும் நோக்காமல் துடைப்பமும் கையுமாய் நின்றான். அவனுக்கு மேலே ஒருவர் வாடாமுடி ஒன்றை ஏந்திக்கொண்டு அப்பா, துடைப்பத்தை எறிந்துபோட்டு இந்தக் கிரீடத்தை தரித்துக் கொள் என்று சொல்லி நீட்டினார். ஆனால் அவன் அந்த சத்தத்தை மதிக்கவும் இல்லை, நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. பழையபடி வைக்கோலையும் குப்பையையும் செத்தைகளையும் வாரிக்கொண்டே இருந்தான்.
அதைக் கண்ட கிறிஸ்தீனாள், இதின் தாற்பரியம் கொஞ்சம் எனக்கு தெரிகிறாற்போல் இருக்கிறது. ஐயா இது மாய உலகத்தின் வாழ்வில் மனதை வைத்திருக்கிற ஒருவனைக் குறிக்கிறதல்லவா என்றாள்.
வியா: அதற்கு வியாக்கியானி: கிறிஸ்தீனாளே, நீ சரியாய்ச் சொன்னாய். அந்த துடைப்பம் அவனுடைய மாம்ச சிந்தையைக் காட்டுகிறது. உன்னதத்தில் இருந்து அருளப்படுவதாய் விளம்பும் வாடா முடியின் பாக்கியத்தையும் வாழ்வையும் அவன் மதியாமல் வைக்கோலையும், குப்பைகளையும், செத்தைகளையுமே நோக்கு கிறானே, அது மோட்சம் உண்டென்பது கட்டுக்கதை என்றும் இவ்வுலகத்தில் உள்ளவைகளே அழியாப் பொருட்கள் என்றும் சிலருடைய எண்ணத்தில் இருப்பதைக் காட்டுகிறது. அவன் தரையை தவிர வேறெங்கும் பார்க்க பிரியமற்றிருப்பதை பார்த்தாயே அது இந்த உலகத்துப் பொருட்கள் மனுஷருடைய இருதயத்தை பலமாய்க் கவர்ந்து கொள்ளுகிற பொழுது அவைகள் தேவனைவிட்டு அவன் இருதயத்தை வெகு தூரம் விலக்கிப் போடுகிறது என்பதை காண்பிக்கின்றது என்று சொன்னார்.
கிறி: உடனே கிறிஸ்தீனாள்: இந்த துடைப்ப வேலையில் இருந்து என்னை விடுதலையாக்கியருளும் என்று சொன்னாள். (நீதிமொழிகள் 30 : 8)
வியா: அதற்கு வியாக்கியானி: இந்த விண்ணப்பம் துருப் பிடித்துப் போகும்படியாக தூர வைக்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் பேரிலும் ஒருவன்முதலாய் எனக்கு ஐசுவரியத்தை தராதேயும் என்ற விண்ணப்பத்தை செய்யக் காண்பது அபூர்வமாய் இருக்கிறது. வைக்கோலையும் குப்பையையும் செத்தைகளையும் தான் இப் பொழுதுள்ள அநேகர் நாடித் திரிகிறார்கள் என்றார்.
இந்த வார்த்தைகளைக் கிறிஸ்தீனாளும் தயாளியும் கேட்டு அழுது கொண்டு, அது மெய்தான் ஐயா, காரியம் அப்படித்தான் இருக்கிறது என்று புலம்பினார்கள்.
இந்தக் காட்சி ஆனபின்பு வியாக்கியானி, அவர்களை வேறொரு அறைக்கு கூட்டிப் போனார். அவர் வீட்டின் அறை வீடுகளில் அதுதான் சிறப்பும் சிங்காரமும் விசாலமுமாய் இருந்தது. இந்த அறையில் உங்கள் போதனைக்கு ஏற்ற காட்சி ஏதாவது உண்டா பாருங்கள் என்று வியாக்கியானி சொன்னார். அவர்கள் அந்த அறையை சுற்று முற்றும் பார்த்தும் ஒரு சிலந்திப் பூச்சியைத் தவிர வேறொன்றையும் காணவில்லை. அந்தப் பூச்சியையும் அவர்கள் கவனிக்கவும் இல்லை. 1
தயாளி: சற்று நேரத்துக்குப் பின்பு, தயாளி: இங்கே ஒன்றையும் காணோம் ஐயா என்றாள். ஆனால் கிறிஸ்தீனாள் யாதொரு தீர்மானமும் சொல்லாமல் சும்மா இருந்தாள்.
வியா: மறுபடியும் பாருங்கள், நன்றாய்ப் பாருங்கள் என்று வியாக்கியானி சொன்னார். அப்புறம் அவள் திரும்பவும் சுற்று முற்றும் பார்த்து, இங்கே அவலட்சணம் உள்ள ஒரு சிலந்தி பூச்சியைத் தவிர வேறொன்றையும் காணோம். அது தன் கால்களால் தொத்திக் கொண்டு சுவர் ஏறப் பார்க்கிறது என்று தயாளி சொன்னாள். அதற்கு வியாக்கியானி இந்த விஸ்தாரமான அறையில் ஒரே ஒரு சிலந்திப்பூச்சிதானா இருக்கிறது! என்று கேட்டார். உடனே கிறிஸ்தீனாளின் கண்களில் கண்ணீர் ததும்பிற்று. ஏனெனில் அவள் தீவிர யோசனைக்காரியாய் இருந்தாள். அவள் உடனே என் ஆண்டவனே! இங்கு ஒன்றல்ல அநேக சிலந்திப்பூச்சிகள் இருக்கின்றன. அவைகளின் விஷம் இதினுடைய விஷத்திலும் பதின் மடங்கு மோசம் நிறைந்ததாக இருக்கின்றது என்று சொன்னாள். அப்போது வியாக்கியானி அவளை அன்போடு கண்ணோக்கி நீ உள்ளபடி சொன்னாய் என்றார். இதின் கருத்தை சகலரும் அறிந்து கொண்ட படியால் தயாளி வெட்கம் அடைந்தாள். அந்தப் பிள்ளைகளும் தங்கள் முகத்தை மூடிக் கொண்டார்கள்.
பின்னும் வியாக்கியானி சொல்லுகிறார்: நீங்கள் பார்க்கிற இந்தச் சிலந்திப் பூச்சி “தன் கைகளினால் வலையைப் பின்னி அரசர் அரண்மனைகளில் வசிக்கிறது” (நீதிமொழிகள் 30 : 28) இதுவும் எழுதப்பட்டிருப்பானேன்? நீங்கள் எவ்வளவு பாவ விஷம் நிறைந்தவர்களாய் இருந்தபோதினும் விசுவாசக் கரத்தால் பற்றிப் பிடித்து உன்னத லோகத்தில் இருக்கும் பரம ராஜனின் அரண்மனையைச் சேர்ந்து என்றென்றைக்கும் அங்கே வாழலாம் என்பதை உங்களுக்கு உணர்த்தும்படியாகவே எழுதப் பட்டிருக்கிறது என்றார்.
கிறி: அப்போது கிறிஸ்தீனாள்: முனிவரே, நானும் இதைப்பற்றி கொஞ்சம் கருத்து கொண்டேன். ஆனால் அதை பூரணமாய் கிரகித்துக் கொள்ள சக்தி இருக்கவில்லை. நாம் எவ்வளவு அலங்கார மாடங்களில் வசித்த போதினும் அவலட்சணமுள்ள இந்த சிலந்திப் பூச்சியைப்போலவே தாழ்வானவர்களாய் இருக்கிறோம் என்று நான் தியானித்தேன். ஆனால் இந்த விஷப் பூச்சியைக் கொண்டு விசுவாசத்தை முயற்சிப்பதைப் பற்றிய சிறந்த கருத்து என் மனதில் எழும்பவில்லை. அதின் விஷம் உள்ளே இருந்தாலும் அது அரசர் அரணமனையில் வசிக்கும்படியாக தன் கைகளால் பிரயாசப்படுகிறதை நான் பார்க்கிறேன். தேவன் ஒன்றையும் வீணாக உண்டாக்கவில்லை என்றாள்.
அப்பொழுது அவர்கள் எல்லாரும் மனச்சந்தோசமாய் இருந்தார்கள். ஆனால் அவர்கள் கண்களிலோ கண்ணீர் பொங்கிற்று. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்று பின்பு வியாக்கியானியைப் பணிந்து வணங்கினார்கள்.
அப்புறம் வியாக்கியானி, கோழியும் குஞ்சுகளும் இருந்த ஒரு அறையில் அவர்களை அழைத்துக்கொண்டு போய் இந்தக் காட்சியைப் பாருங்கள் என்றார். அந்தக் குஞ்சுகளில் ஒன்று பக்கத்தில் இருந்த சட்டியில் போய்த் தண்ணீர் குடித்தது. அது தண்ணீர் குடித்த ஒவ்வொரு தடவையும் வானத்துக்கு நேராக தன் தலையையும் கண்ணையும் ஏறெடுத்தது. அப்போது வியாக்கியானி, இந்த அற்ப குஞ்சு செய்கிறதை கவனித்துப் பாருங்கள். நீங்கள் பெற்றுக் கொள்ளுகிற ஒவ்வொரு கிருபையும் உன்னதத்தில் இருந்து வருகிறது என்று உணர்ந்து கொண்டு உங்கள் இருதயத்தை உயர்த்தி ஸ்தோத்திரத்தோடு அவைகளை அனுபவியுங்கள் என்றார்.
பின்னும் அவர் அவர்களை நோக்கி: இன்னும் பாருங்கள், கவனியுங்கள் என்றார். அவர்கள் ஒவ்வொருவரும் கூர்மையாய் கவனித்தபோது அந்த தாய் கோழி நான்கு விதமான குரலோடு தன் குஞ்சுகளண்டை போகிறதும் வருகிறதுமாய் இருக்கக் கண்டார்கள். முதலாவது அதற்கு ஒரு பொதுக் குரல் இருந்தது. பகல் முழுவதும் அந்தச் சத்தத்தைக் கேட்கலாம். இரண்டாவது ஒரு விசேஷ குரல் இருந்தது. அது ஒரு வேளா வேளை மாத்திரம் கேட்கப்பட்டது. மூன்றாவது அணைக்கும் குரல் ஒன்று இருந்தது. (மத்தேயு 23 : 37) நான்காவது அலறும் குரல் ஒன்றிருந்தது.
வியாக்கியானி அவர்களை நோக்கி: இந்த தாய்க் கோழியை உங்கள் அரசருக்கும் இதின் குஞ்சுகளை அவருடைய கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளுக்கும் ஒப்பிட்டு கவனியுங்கள். இந்தப் பெட்டைக் கோழி தன் குஞ்சுகளோடு நடந்து கொள்ளுகிற பிரகாரம் அவரும் தமது பிள்ளைகளுடன் நடமாடுகிறார் என்று சொல்லலாம். அவரிடத்தில் பொதுவான ஒரு குரல் உண்டு. அதின் மூலமாய் அவர் ஒன்றையும் அருளுகிறதில்லை. அவருக்கு விசேஷ அழைப்பின் குரல் ஒன்று உண்டு. அதின் மூலமாய் அவர் எப்போதும் ஏதாவது ஒரு சகாயத்தை செய்து வருகிறார். தமது செட்டைகளின் கீழ் இருப்பவர்களை அணைக்கும் குரலும் அவருக்கு உண்டு. சத்துரு வருகிறதை தமது தாசருக்கு உணர்த்தி எச்சரிக்கும்படியான அலறும் குரலும் அவருக்கு உண்டு.
நீங்கள் பெண் பிள்ளைகளானபடியால் இலேசாய் விளங்கத்தக்க காட்சிகளுள்ள இந்த அறைக்கு உங்களை கூட்டி வந்து காட்டினேன் என்றார்.
கிறி: ஐயா முனிவரே! இன்னும் சில காட்சிகளை காட்டும்படி மன்றாடுகிறோம் என்று கிறிஸ்தீனாள் கேட்டாள். 2 அப்படியே அவர், ஆடுகளை அறுக்கிற ஒரு ஜாகைக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே ஒருவன் ஒரு ஆட்டை அறுத்தான். அவன் அறுக்கையில் அந்த ஆடு ஒன்றும் செய்யாமல் வெகு பொறுமையாய் இருந்தது. அப்பொழுது வியாக்கியானி இந்த ஆட்டை நீங்கள் பார்க்கிறீர்களே! பாடுகளையும், பொல்லாப்புகளையும் முறுமுறுப் பில்லாமலும், தர்க்கிப்பில்லாமலும் சகித்துக் கொள்ள வேண்டும் என்று இதினால் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். இதோ, அது எவ்வளவு அமைதலாய் தன் கழுத்தை கத்திக்கு நீட்டி, தன் தோலை தலை கீழாய் உரித்துக் கொள்ள சம்மதித்து நிற்கிறது. உங்கள் அரசரும் உங்களை தமது மந்தையின் ஆடுகள் 3 என்று அழைத்திருக்கிறார் அல்லவா என்றார்.
அதின்பின் அவர் அவர்களை தமது நந்தவனத்துக்கு அழைத்துக்கொண்டு போனார். அங்கே விதவிதமான புஷ்பஜாதிகள் எல்லாம் தங்கள் அழகிய மொக்குகளை விரித்து மலர்ந்திருந்தன. அப்போது வியாக்கியானி: இந்தப் புஷ்பங்களை எல்லாம் கண்டீர்களா? என்றார். ஆம், ஆம் காண்கிறோம் ஐயா, என்று கிறிஸ்தீனாள் சொன்னாள். அப்புறம் அவர்: இதோ அவைகள் அளவிலும், அழகிலும், நிறத்திலும், வாசனையிலும் அதின் பிரயோஜனத்திலும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டிருக்கின்றன. சில மற்றவையிலும் சிறப்பாய்த் தோன்றுகின்றன. அவை ஒன்றோ டொன்று சச்சரவு பண்ணாமல் தங்கள் தோட்டக்காரன் எந்த இடத்தில் நட்டானோ அந்த இடத்தைவிட்டு நிலைபெயராமல் அப்படியே நிற்கின்றன என்றார். 4
அப்பால் அவர் கோதுமை முதலிய நவதானியங்களை விதைத் திருந்த தமது வயல் நிலங்களுக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போனார். அந்தப் பயிர்களின் கதிர்கள் அறுக்கப்பட்டு, தாளடிகள் மாத்திரம் மீதியாக விடப்பட்டிருந்தன. அப்போது அவர்: இந்த நிலத்துக்கு எருவிட்டோம், விதைத்தோம், அதின் விளைச்சலை என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு கிறிஸ்தீனாள்: சிலவற்றை சுட்டெரித்து மற்றதை எருவுக்குப் போடுகிறது உத்தமம் என்றாள். அப்போது வியாக்கியானி: நீங்கள் பலனைத்தவிர மற்றொன்றையும் விரும்பமாட்டீர்கள். பலன் இல்லாத தனால் அல்லவா சிலவற்றை சுட்டெரித்து மற்றது எருவுக்குப் போடும்படி சொல்லுகிறீர்கள். இந்த உவமானத்தைக் கொண்டு நீங்களே உங்களுக்கு ஆக்கினைத் தீர்ப்புச் செய்து கொள்ளாதபடி எச்சரிக்கையாய் இருங்கள் 5 என்றார்.
அவர்கள் வயல் வெளியிலிருந்து வருகிற வழியில் ஒரு சிட்டுக் குருவியானது விட்டில் பூச்சி ஒன்றை கொத்திக் கொண்டு பறந்து போகிறதை வியாக்கியானி கண்டு அவர்களைக் கூப்பிட்டு, அதோ பறந்துபோகிற அந்தக் குருவியைப் பாருங்கள் என்றார். அப்படியே பார்த்தார்கள். அதைப் பார்க்கவே தயாளி அதிசயப்பட்டாள். கிறிஸ்தீனாளோ, ஐயோ சிவந்த நெஞ்சும் சிங்காரச் சிறகுமுள்ள இந்தச் சிட்டு மற்ற அநேகம் குருவிகளிலும் மேன்மையானதாச்சுதே. மனுஷ சஞ்சாரம் இந்தப் பறவைக்கு அதிகப் பிரீதி அல்லவோ? இந்த ஜாதிப் பட்சிகள் ரொட்டித் துண்டுகளையும், தானிய மணிகளையும் தின்று காலங்கழிக்கின்றதென்றல்லோ நான் எண்ணியிருந்தேன். இது இவ்வளவு கேவலமுள்ள ஜாதி என்று முன் அறியாதிருந்தேன். இன்று முதல் இதைப்பற்றி எனக்கு இருந்த மதிப்பை எல்லாம் மறந்து போவேன் என்றாள்.
அதற்கு வியாக்கியானி சொல்லுகிறார்: இந்தச் சிட்டு பேர் கிறிஸ்தவர்களை வெட்கப்படுத்தும்படியான தகுந்த ஒரு அடையா ளமாய் இருக்கிறது. வெளித்தோற்றத்தின்படி அவர்கள் இந்தச் சிட்டைப்போல் சொல்லழகும், முன்னழகும், நடையழகும் உள்ளவர் களைப்போல் இருக்கிறார்கள்.
மெய்க் கிறிஸ்தவர்களைப் பற்றி அவர்களுக்கு மட்டற்ற மதிப்பு உண்டு. பக்தர் புசிக்கும் போஜனத்தைத் தவிர வேறே போஜனம் அவர்களுக்கு பிடியாததுபோல் மற்றவர்கள் அறியட்டும் என்று அவர்கள் பாராட்டுகிறார்கள். மற்றவர்களைவிட அவர்களோடு சகவாசம் செய்யவும், காலங்களிக்கவும் விருப்பம் உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள். தங்களை உத்தமர் என்று காண்பிக்க வேண்டும் என்றே அப்படிப்பட்டவர்கள் விசுவாசிகளின் வீடுகளுக்கு அடிக்கடி போய் வந்து தேவ நியமங்களை கிரமமாய் அனுசரித்து வருகிறார்கள். அவர்கள் தனித்திருந்தாலோ அப்போது தெரியும் அவர்கள் வண்டோலம்! அவர்களும் இந்த சிட்டுக் குருவியைப் போல புழுக்களையும், விட்டில் பூச்சிகளையும் பிடித்து விழுங்கிப் போடுவார்கள். அவர்கள் தங்கள் உணவை மாற்றிக் கொண்டு ஆகாமி யத்தை பால் போலும், பாவத்தை ஜலம் போலும் பானம் பண்ணுவார்கள். 6 என்றார்.
அவர்கள் திரும்பவும் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது இராச் சாப்பாடு இன்னும் ஆயத்தமாகவில்லை என்று கேள்விப்பட்ட படியால் கிறிஸ்தீனாள் வியாக்கியானியை நோக்கி: ஐயா வியாக்கி யானியே, வேறே பிரயோஜனமுள்ள காட்சிகள் உண்டானால் காட்டும் அல்லது போதனை உண்டானால் சொல்லும் என்று மன்றாடினாள்.
அதின் பின்பு வியாக்கியானி பின்வரும் ஞானபோதனைகளைச் சொல்லுகிறார்: பன்றியானது எவ்வளவுக்கு கொழுப்பாய் இருக் கிறதோ அவ்வளவுக்கு அது சேற்றை நாடுகிறது. எருது எவ்வளவுக்கு கொழுத்திருக்கிறதோ அவ்வளவுக்கு அது கும்மாளம் போட்டுக் கொண்டு கொலைக் களம் போகிறது. சிற்றின்ப பிரியன் எவ்வளவுக்கு சுகஜீவியாய் இருக்கிறானோ அவ்வளவுக்கு அவன் தீமையின்மேல் நாட்டம் கொள்ளுகிறான். பட்டு கட்டி பகட்டாய்த் திரிய வேண்டும் என்று பெண்கள் பெரும்பாலும் ஆசைப்படுகிறார்கள். தேவனுடைய பார்வையில் மதிப்பைக்கொடுக்கும் இலட்சணா அலங்காரமே பெண்ணலங்காரம்.
ஒரு வருஷம் முழுவதிலும் ஓய்வில்லாமல் விழித்திருப்பதிலும் ஒரு இரவு விழித்திருப்பது சுலபம். அப்படியே மோட்சம் பெறும்படி முடிவுபரியந்தம் பக்தியை விடாதிருப்பதிலும் ஆரம்பத்தில் சிலகாலம் பக்தியாய் இருப்பது லேசு. எந்த மாலுமியும் புயல் அடிக்கையில் அற்ப பிரயோஜனமுள்ள பொருட்களை மனதார கடலில் எறிகிறதுண்டு. ஆனால், முதல்தரமான பொருட்களை முதலாவது எவன்தான் எறிவான்? தேவனுக்குப் பயப்படுகிறவனேயல்லாமல் வேறொருவனும் அப்படிச் செய்யான். ஒரு பொத்தல் ஒரு பெரிய கப்பலையும் ஆழ்த்திப் போடும். ஒரு பாவம் அந்தப் பாவியை நிர்மூலமாக்கிவிடும். 7 சிநேகிதனை மறக்கிறவன் நன்றி கேடன். ஆனால், தன்இரட்சகரை மறக்கிறவனோ தன்னை நாசமாக்குகிறான். பாவத்திலே ஜீவித்துக் கொண்டு மோட்ச லோக பாக்கியம் தனக்கு கிடைக்கும் என்று எதிர் நோக்குகிறவன் முட்பூண்டுகளை விதைத்து நவதானியங்களை களத்தில் சேர்ப்பேன் என்று நினைக்கிறவனுக்கு ஒப்பாய் இருக்கிறான். ஒருவன் நல் வாழ்வு வாழ வேண்டுமானால் அவன் தன் மரண நாளை எப்போதும் தன் மனதின் முன்னே வைத்து அதை ஒரு தடிக் கொம்பை போல பிரயோகிப்பானாக.
காது ஒட்டிப் பேசும் பேச்சும், கருத்துகளின் மாறுதலும் பாவம் உலகத்தில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. 8 தேவனால் ஒளி மாறி இருளாகும் உலகமே மனுஷருக்கு சதமாகத் தோன்றினால் அவரால் மேன்மைப் படுத்தப்பட்டிருக்கிற பரமண்டலம் என்னமாய் இராது! நோய் நொடிகளோடு கழிக்கும் இந்த ஜீவனை விட்டு விட மனம் அற்று அதைப் பற்றிப் பிடிப்போமேயானால் இனிவரும் ஜீவன் எப்படிப்பட்டதாய் இராது! மனுஷரின் தயாளங்களை எல்லாரும் மதித்துப் போற்றுகிறார்களே, ஆனால் தேவனுடைய தயாளங்களை தக்கபடி மதித்துப் போற்றுவார் எவராவது உண்டா? நாம் சாப்பிடும் போது நமக்கு முன் வைக்கப்பட்ட போஜனம் முழுவதையும் சாப்பிடுவது அபூர்வம். எப்படியும் ஏதாவது மிஞ்சி இருக்கும். அதுபோல, இயேசுகிறிஸ்துவின் புண்ணியமும் நீதியும் உலகம் முழுவதுக்கும் போதுமானபடி மாத்திரம் அல்ல, மிஞ்சினதாய்த்தான் இருக்கிறது.
மேலே சொல்லிய ஞானாகார போதனைகளை வியாக்கியானி சொன்ன பின்பு அவர்களை மறுபடியும் தமது தோட்டத்துக்குக் கூட்டிப்போனார். அங்கே பட்டை தவிர எல்லாம் மட்கிப்போயிருந்த ஒரு மரம் இருந்தது.
அதில் பசுமையான சில கிளைகளும் இலைகளும் இருந்தன. அதைக் கண்ட தயாளி இதின் தாற்பரியம் என்ன என்று கேட்டாள். அதற்கு அவர்: வெளிக்குப் பசுமையாயும் உள்ளுக்கு உளுத்துப்போயும் இருக்கிற இந்த மரத்துக்கு கிறிஸ்து சபையிலுள்ள பலரை ஒப்பிடலாம். இவர்கள் தெய்வீக விஷயங்களுக்கு அடுத்த பல காரியங்களை எல்லாம் செய்வதுபோலத் தங்கள் வாயால் பேசுவார்கள். ஆனால் உள்ளபடி ஒன்றும் செய்யவே மாட்டார்கள். அவர்களில் இலை அழகேயன்றி உள் அழகு இராது. அவர்கள் சாத்தானின் சக்கிமுக்கிக் கல்லுக்கு ஏற்ற கரும் பஞ்சாகவே அல்லாமல் வேறொன்றுக்கும் உதவ மாட்டார்கள் என்றார்.
இதற்குள்ளாக இராச் சாப்பாடு ஆயத்தம் ஆயிற்று. அவர்கள் எல்லாரும் பந்தியில் உட்கார்ந்து ஆகாரத்திற்கான ஸ்தோத்திர ஜெபம் ஏறெடுத்த பின்னர் புசித்து திருப்தி அடைந்தார்கள். விருந்தாளிகள் வந்திருந்தால் வியாக்கியானி கீதவாத்தியத் தொனியோடு பந்தியை நடத்துவது வழக்கமாய் இருந்தது. அப்படியே பாடகர் குழு வீணை வாசித்தார்கள். அவர்களில் ஒருவன் மாத்திரம் பாடினான். அவன் குரல் குயிலின் குரல்போல் அவ்வளவு இன்பமாய் இருந்தது. அவன் பாடின பாட்டாவது:
கர்த்தர் என் மேய்ப்பராய்
போஷிக்கிறார்
நான் தாழ்ச்சியை
அடையேனே
என்பதே. கீதசத்தமும் கீதவாத்தியத்தின் தொனியும் ஓய்ந்த பின்பு வியாக்கியானி கிறிஸ்தீனாளை நோக்கி: நீ மோட்ச பிரயாணி ஆகும்படி உன்னை ஏவின முதல் முகாந்தரங்கள் என்ன என்று கேட்டார். அதற்கு அவள் ஐயா! முதலாவது, நமது புருஷனை இழந்தோமே என்ற ஆறாக் கவலை அடியாள் மனதில் உண்டானது. ஆனால் அதெல்லாம் லோக முறையான துயரமாகவே இருந்தது. அப்புறம் என் கணவரின் பிரயாண வருத்தங்களும் அவர் பட்ட சங்கடங்களும் அதோடுகூட நான் அவருக்குக் கொடுத்த தொந்தரவுகளும் என் மனதை அடிக்கடி வதைத்தது. ஆகவே, என் பாதகம் என்மேல் சுமத்தப்பட்டு என்னை ஒரு குளத்தில் ஆழ்த்திவிடுவதுபோல் ஆயிற்று.
இப்படியிருக்கிற சமயத்தில் என் கணவரின் நல் வாழ்வை விரும்புகிறவரைப் பற்றி எனக்கு ஒரு சொப்பனம் உண்டானதோடு அந்த அரசர் என்னையும் தமது தேசத்துக்கு வந்துவிடும்படியாக எழுதி அனுப்பிய ஒரு கடிதமும் எனக்கு கிடைத்தது. கண்ட சொப்பனமும் கரங்களுக்கு கிடைத்த கடிதமும் என் மனதில் அவ்வளவு பலமாய் கிரியை செய்ததால் அடியாள் இப்படிப் பயணம் செய்யத் துணிந்தேன் என்றாள்.
வியா: நீ உன் வாசலை விட்டு வெளியேறுமுன் உன்னைத் தடுப்போர் ஒருவரும் இருந்ததில்லையோ?
கிறி: அப்படியும் நேரிட்டது ஐயா! என் அயல்வீட்டுக்காரிகளில் ஒருத்தியாகிய கோழை அம்மாள் என்னைத் தடுத்தாள். அவள் என் புருஷனை சிங்கங்கள் இருக்கிறது என்று பயங்காட்டி பயணத்தை தடுத்துவிடும்படி முயன்ற பயங்காளியினுடைய இனத்தாள்தான். நான் ஆரம்பித்த பயணத்தை பைத்தியம் என்று சொல்லி என்னையும் பைத்தியக்காரி ஆக்கினாள். அவள் என் கணவருடைய பிரயாணத்தில் சம்பவித்த பல சங்கடங்களையும், இடறல்களையும் எடுத்துக் காட்டி என் மன உறுதியை மாற்றிவிடப் பார்த்தாள். ஆனால் அதை எல்லாம் நான் தட்டிப்போட்டேன். அப்புறம் விசுவாசத்தைக் குலைத்துப் போடும்படியாக வந்த இரண்டு அவலட்சண ரூபிகளைப்பற்றிய சொப்பனம் எனக்கு வெகு மனத்தாங்கலை கொடுத்தது. அந்த பயம் இன்னும் என் மனதில் இருப்பதால் எவரைக் கண்டாலும் நமக்கு அபாயம் செய்யும்படி ஆலோசனை பண்ணின அவலட்சண ரூபிகள் இவர்களோ என்று அஞ்சவேண்டியதாய் இருக்கிறது. எல்லாருக்கும் நான் சொல்லக் கூச்சப்பட்டு மறைத்தாலும் என் ஆண்டவனுக்கு மறையாமல் சொல்ல வேண்டிய ஒரு சங்கதி இருக்கிறது. திட்டிவாசலுக்கும் இதற்கும் மத்தியில் நாங்கள் வரும்போது நான் கனாவில் கண்ட அவலட்சண ரூபிகளைப் போலொத்த இருவர் எங்களுக்கு எதிர்ப்பட்டு எங்களை மடக்கினார்கள். நாங்கள் பயந்து கள்ளரோ கள்ளர் என்று கூக்குரலிட்டோம் என்றாள்.
வியா: அப்பொழுது வியாக்கியானி, அம்மா! உன் துவக்கம் நன்றாய் இருக்கிறது. உன் கடைசி முடிவும் அப்படியே மென்மேலும் வாழ்வுள்ளதாக இருக்கும் என்று அவளை வாழ்த்தினார். அப்புறம் அவர் தயாளியை நோக்கி: பெண்ணே, நீ பயணம் புறப்பட உன்னை ஏவின முகாந்தரம் என்ன என்று கேட்டார்.
தயாளி: உடனே தயாளி பயந்து வெட்கப்பட்டு சில நேரம் ஒன்றும் பேசாமல் தலையை கீழே போட்டுக் கொண்டு நின்றாள்.
வியா: அப்போது அவர்: பெண்ணே மலையாதே, விசுவாசமாய் இருந்து உன் மனதை வெளியிடு என்றார்.
தயாளி: அப்புறம் அவள் தைரியம் அடைந்து சொல்லுகிறாள்: இதோ இருக்கிற நமது சிநேகிதி ஊரைவிட்டுப் புறப்படும்படி தன் தட்டு முட்டுகளை எல்லாம் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாய் நானும் மற்றொருத்தியும் அவளைப் பார்க்கும்படி அவள் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டி உள்ளே சேர்ந்தோம். நாங்கள் போன சமயத்தில் இவள் செய்து கொண்டிருந்த ஆயத்தங்களை எல்லாம் பார்த்து, ஏது விசேஷம் என்று விசாரித்தோம். விசாரிக்கவே, தன் புருஷன் இருக்கிற இடத்துக்குத் தானும் வரும்படி ஒரு செய்தி வந்திருக்கிறது, அங்கேதான் புறப்பட ஆயத்தப்படுகிறேன் என்று சொல்லி அதோடு இவள் தன் புருஷனைச் சொப்பனத்தில் கண்டதாகவும் அவர் ஒரு சித்திர மாளிகையில் தேவதூதர்களோடு வாசஞ் செய்கிறார் என்றும் கிரீடம் அணிந்து கீத வாத்தியமும் கையுமாயிருக்கிறார் என்றும் ராஜ பந்தியில் உட்கார்ந்து ராஜ போஜனம் உண்டு ராஜரைப் போற்றித் துதிக்கிறார் என்றும் இன்னும் இப்படிப் பலவாறாக தான் சொப்பனத்தில் கண்டதாகவும் சொன்னாள். இந்தச் செய்திகளை கேட்க கேட்க என் மனதில் அக்கினி பற்றி எரிந்தாற் போல் இருந்தது. அப்போது நான் இவை எல்லாம் நிஜமானால் நாம் நமது தகப்பனையும், தாயையும், நமது ஊரையும் விட்டு இந்தக் கிறிஸ்தீனாளோடே போகலாம் அல்லவா என்று என் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
ஆதலால் நான் இந்த விஷயங்களைப் பற்றி பின்னும் விபரமாய்க் கேட்டுக் கொண்டு எங்கள் ஊரில் வாசஞ்செய்தால் அழிவும் நாசமுமே அல்லாமல் வேறே வாழ்வு ஒன்றும் இல்லை என்று அறிந்து நானும் உன்னோடு வரலாமா என்று கேட்டேன். நான் புறப்பட்டபோது என் மனதில் உண்டான வியாகுலத்துக்கு ஒரு அளவில்லை. ஐயோ! நமது நாட்டைவிட்டுப் போகிறோமே என்கின்ற கவலை அல்ல நமது இனஜன பெந்துக்கள் எல்லாரும் பின்னாலே இருக்கிறார்களே என்கின்ற விசனம்தான் என்னை வாட்டினதே அன்றி வேறல்ல. நான் என் முழு மனதோடும் புறப்பட்டேன். இன்னும் எனக்கு கிருபை அளிக்கப்பட்டால் கிறிஸ்தீனாள் கூடவே போய் அவள் புருஷனையும் அவருடைய அரசரையும் கண்டு தரிசிக்கலாம் என்றிருக்கிறேன் என்றாள்.
வியா: உன் புறப்படுதல் நலமாகவே இருக்கிறது. ஏனெனில், சத்தியத்தை நீ ஏற்றுக் கொண்டிருக்கிறாய். பழைய ரூத் என்பவள் நகோமியின் மேல் இருந்த பட்சத்தினாலும் அவளுடைய ஆண்டவராகிய கடவுள் மேல் உண்டான பக்தி வைராக்கியத்தினாலும் தன் தகப்பன் வீட்டையும், தாயின் மடியையும், ஜென்ம தேசத்தையும் விட்டு தன் முகம் அறியாத தேசத்துக்கும், ஜனத்துக்கும் மத்தியில் வாசஞ்செய்ய தீர்மானித்தாள். நீயும் அவளுக்குச் சமமான ஒரு ரூத்து தான். உன் செய்கைக்குத் தக்க பலனை கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக (ரூத் 2 : 11, 12) என்றார்.
இராச்சாப்பாடு முடிந்தபின்பு அவரவர் படுத்துத் தூங்கும்படியான ஒழுங்குகள் தீர்மானிக்கப்பட்டன. அந்த தீர்மானத்தின்படியே ஸ்திரீகள் தனித்தனியாகவும் பிள்ளைகள் ஒரு பக்கத்திலும் படுத்திருந்தார்கள். தயாளி தன் கட்டிலில் படுத்திருந்தாலும் அவள் கண்கள் தூங்கவில்லை. தன்னைப் பற்றித்தானே கொண்டிருந்த சந்தேகங்கள் எல்லாம் ஒருவாரு நீங்கிப் போனபடியால் அவள் தனக்குள்ளே அகமகிழ்ந்து கண் அயராதிருந்தாள். ஆதலால் தனக்கு இவ்வளவு பெரிய தயவுகளை தந்தருளிய ஆண்டவரை பலவாறாய் ஸ்தோத்திரித்து அந்த இரவைக் கழித்தாள்.
மறுநாள் சூரியோதய காலத்தில் அவர்கள் தங்கள் படுக்கையில் இருந்து எழுந்து, தங்கள் வழியே பயணம் போக எத்தனித்தார்கள். ஆனால், வியாக்கியானி அவர்களை தடுத்து, இவ்விடத்தில் உங்களுக்கு நடப்பிக்க வேண்டிய உபசரணைகள் எல்லாம் ஒழுங்காய் நிறைவேற்றிய பின்புதான் நீங்கள் புறப்பட வேண்டியது என்று சொல்லி, அவர்களுக்கு முதல் முதல் கதவைத் திறந்த கன்னிமா பெண்ணை கூப்பிட்டு: பெண்ணே! இவர்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு நமது கொல்லைப் புறத்தில் இருக்கும் பொய்கையில் நீராடச் செய்து வழிநடையில் படிந்த தூசியையும், ஒட்டிய சேற்றையும் கழுவி சுத்தமாக்கச் சொல் என்றார். உடனே அந்தக் கன்னிமா பெண் அவர்களை வியாக்கியானியின் பொய்கைக்கு 9 அழைத்துப் போய் இவ்விடத்திலே நீங்கள் நீராடி உங்களைக் கழுவிக்கொள்ள வேண்டியது. ஏனெனில், எங்கள் எஜமான் பரலோக பிரயாணமாய் புறப்பட்டு வருவோர் எல்லாரையும் இப்படியே தமது தடாகத்தில் நீராடச் செய்வது வழக்கமாய் இருக்கிறது என்றாள். அப்படியே ஸ்திரீகளும் பிள்ளைகளுமாகிய அவர்கள் எல்லாரும் அந்தப் பொய்கையில் இறங்கி நீராடினார்கள். நீராடி வெளியேறி னவுடனே அவர்கள் அழகிய ரூபமும் சுத்த மேனிகளும் ஆனதும் அல்லாமல் பூரண சுகமும் சரீர முழிகளில் பலமும் உடையவர்களாய் விளங்கினார்கள். ஆதலால் அவர்கள் நீராடி திரும்பி வருகையில் முன்னிலும் யௌவன ரூபிகளாய்க் காணப்பட்டார்கள்.
அவர்கள் நீராடித் திரும்பி வந்த பின்பு வியாக்கியானி அவர்களை அழைத்துக் கொண்டு போய் அவர்களை நோக்கி, சந்திரபிம்பம் போல் சுந்தர ரூபிகளாக நீங்கள் இலங்குகிறீர்கள் என்று சொல்லி அகமகிழ்ந்தார். அப்பால் வியாக்கியானியுடைய தடாகத்தில் தீர்த்தம் ஆடினோரை அடையாளமிடும் முத்திரைக் கோலை கொண்டு வரச் சொன்னார். முத்திரைக்கோல் கொண்டு வரப்பட்ட உடனே மோட்ச பயண பாதையில் இருப்போர் இவர்களை இனம் அறிந்து கொள்ளும்படியாக முத்திரை போட்டார். இவர்களுக்கு போடப் பட்ட முத்திரையானது இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாளில் ஆசரித்ததும், புசித்ததுமான பஸ்காவின் பொருள் அடக்கமும், சாரமுமாகவே இருந்தது. (யாத்திராகமம் 13 : 8 – 10) அந்த அடையாளம் அவர்கள் இரண்டு கண்களுக்கும் மத்தியில் போடப்பட்டது. இந்த முத்திரை அடையாளமானது அவர்களுடைய முக ஆபரணங்களில் ஒன்று போல் இருந்ததால் அது அவர்கள் அழகோடு அழகைக் கூட்டினது. அவர்களுக்கு இது மிகுந்த கண்ணியத்தையும் உண்டாக்கினதால் அவர்கள் சாயல் தேவதூதர்களின் சாயலுக்கு ஒத்திருந்தது.
அப்பால் வியாக்கியானி, மாசில்லாள் மாதைக் கூப்பிட்டு, நீ நமது வஸ்திராபரண மாடம் போய், இவர்கள் எல்லாருக்கும் வேண்டிய மாற்று வஸ்திரங்களை எடுத்து வா என்றார். அந்த நிமிடமே அவள் ஓடி பல வெண் வஸ்திரங்களை எடுத்துக் கொண்டு வந்து அவருடைய பாதத்தில் வைத்தாள். இந்த வஸ்திரங்களைத் தரித்துக் கொள்ளுங்கள் என்று வியாக்கியானி அவர்களுக்குச் சொன்னார். அந்த வஸ்திரங்கள் மெல்லிய நூலால் நெய்யப்பட்டு வெண்மையும் சுத்தமுமாய் இருந்தன. அந்த ஸ்திரீகள் வஸ்திரா அலங்காரிகள் ஆனபின் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தே பயந்து கொண்டார்கள். ஏனெனில் ஒருவருக்கு இருந்த மகிமையை மற்றவள் பார்த்து பிரமிக்கக்கூடியதாய் இருந்ததே அன்றி அவரவர் தங்கள் தங்களுக்கு இருந்த மகிமையை அறிந்து கொள்ள ஏதுவிருந்ததில்லை. ஆதலால் அவர்கள் ஒருவரை ஒருவர் அதிகமாய் மதிக்க ஏவப்பட்டார்கள். நீ என்னிலும் அழகாய் இருக்கிறாய் என்று ஒருத்தி சொல்லுவாள். அல்ல, அல்ல நீ என்னிலும் ரூபவதி என்று வேறொருத்தி சொல்லுவாள். 10 அந்தப் பிள்ளைகளும் தங்களுடைய அலங்காரத்iதை பார்த்து பார்த்து பிரமித்துக் கொண்டார்கள்.
கடைசியாக, வியாக்கியானி தமது சேவகரில் ஒருவனாகிய தைரிய நெஞ்சனை 11 அழைத்து: இந்த க்ஷணமே நீ போராயுத கோலம் பூண்டு பட்டயத்தை கட்டி தலைச் சீராவை அணிந்து கேடகம் பிடித்துக் கொண்டு இந்த நமது குமாரத்திகளுக்கு முன்னே நடந்துபோய் அவர்கள் இனித் தங்கவேண்டிய அலங்கார மாளிகை மட்டும் வழித் துணையாய் போய் வா என்று கட்டளையிட்டார். அப்படியே ஆகட்டும் ஐயா, என்று தைரிய நெஞ்சன் சொல்லி, போராயுதம் தரித்தவனாய் புறப்பட்டு அவர்களுக்கு முன்னே நடந்தான்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்கள் பயணத்தை வாய்க்கச் செய்வாராக என்று வியாக்கியானி வாழ்த்தினார். அவர் வீட்டில் இருந்த மற்றெல்லாரும் அவர்களுக்கு வந்தனங்கள் செய்து மங்களங்கள் கூறினார்கள். ஆகவே அவர்கள் எல்லாரும் சந்தோசத் தோடு காலடி எடுத்து வைத்து:-
குப்பை வாரும் காட்சி கண்டேன்
குஞ்சுக் கோழியின் காட்சி கண்டேன்.
சிலந்திப் பூச்சியின் காட்சியிலே
விசுவாசிக்கவும் காட்சி கண்டேன்.
சிட்டுக் குருவியின் காட்சியிலே
விட்டில் பூச்சியும் இருக்கக் கண்டேன்.
ஆடறுப்போனின் காட்சி கண்டேன்
கதிரற்ற வயலின் காட்சி கண்டேன்.
இந்தக் காட்சிகள் எல்லாமே
என்னை உணர்த்தினதை மறவேன்.
இரண்டாம் தங்கலின் காட்சி எல்லாம்,
மங்காதெனது மனதையிட்டு.
உளுத்த மரத்தின் காட்சியையும்
ஒரு நாளும் நான் மறவேனே.
எல்லாக் காட்சியும் மெய்யாக
என்னை உணர்த்தின நன்றாக.
அடியேன் இவைகளை மறவேனே
அனுதினம் சிலுவையைச் சுமப்பேனே.
அசையேன், விழிப்பேன், ஜெபிப்பேனே,
பணிவேன் பரனைப் பயத்தோடே.
என்று பாடிக்கொண்டே நடந்தார்கள்.
1. சாதாரணமானவைகளை எல்லாம் கண் ஜாடையாய் விட்டுவிட்டு விநோதமானவைகளை மாத்திரம் கவனிப்பது நமது வழக்கம். நம்மைச் சூழ்ந்திருக்கும் அற்பமான காரியங்களிலிருந்தும் மிகுந்த ஞானத்தைக் கற்றுக் கொள்ளலாம்.
2. கிறிஸ்தீனாள் தன் புருஷனைவிட வித்தியாசமான காட்சிகளைக் கண்டாள். இதினால் தேவன் பற்பல ஜனங்களையும் பல பல வழிகளில் நடத்துகிறார் என்று காணப்படுகிறது. ஒவ்வொருவருடைய அனுபோகமும் அவரவர் குணத்துக்கு தக்கடி பேதப்படும்.
3. கிறிஸ்துவானவர் அநீதியையும் மரணத்தையும் யாதொரு முறுமுறுப்பில்லாமல் சகித்தது போலவே அவருடைய தாசர்களும் நடந்துகொள்ள வேண்டும்.
4. நமது நற்குணங்களைக் குறித்து நாமே பெருமை பாரராட்டவோ, மற்றவர்களைவிட நாம் யோக்கியர் என்று நாமே புகழ்ந்து கொள்ளவோ கூடாது. நாம் வைக்கப்பட்டிருக்கிற நிலைமையிலேயே நாம் ரம்மியம் உள்ளவர்களாய் இருந்து நமக்கு அளிக்கப்பட்ட கிருபையின்படி வாசனை அளிக்க வேண்டும்.
5. மெய்க் கிறிஸ்தவர்கள் தாளடிக்கும், பதருக்கும் ஒப்பான உபதேசங்களையும் அறிவையும் மாத்திரம் காண்பித்தால் போதாது. தானிய மணிகளுக்கு ஒப்பாகிய பரிசுத்த நடக்கையும், பிரயோஜனமும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். தானியம் விளையாத தாளடி பிரயோஜனம் அற்றது. கனி இல்லாத இலைகளும், கொடிகளும் அப்படியே.
6. வெளித்தோற்றத்தினால் ஏமாந்து போகக்கூடாது என்பது இதின் போதனை. குருவியானது விட்டில் பிடிக்கிற தன் இயற்கையின்படியே பிடித்தது. இதில் அது யாதொரு தப்பிதமும் நடப்பிக்கவில்லை. விட்டிலானது அதின் சாதாரண இரை. ஆனால் அது இப்படிச் செய்யும் என்று நினைக்காதபடியால் கிறிஸ்தீனாள் துக்கப்பட்டாள். பறவையின் நிறத்தையும் அழகையும் பார்த்து தீர்மானித்துக் கொண்டாளே அல்லாமல் அதின் உள்ளான சுபாவ லட்சணம் என்னவென்று அறியவே இல்லை.
7. ஒரு பாவம்: அதாவது, மனஸ்தாபப்படாமலும் நித்தம் நித்தம் பழக்கமாய் செய்து கொண்டு வரும் பாவம். மனஸ்தாபமும் விசுவாசமும் உண்டாயிருந்தால் சகல பாவங்களும் நிவிர்த்தியாகிப்போகும்.
8. ஏன் என்றால், பாவம் உலகத்தில் இல்லையானால் ஒருவனும் தன் அயலானிடத்தில் செவிக்குள் பேசவோ ரகசியங்கள் சொல்லிக் கொள்ளவோ அவசியம் இராது.
9. பொய்கை: இது யோவான் 13 : 10 ஆம் வாக்கியத்தை விளக்குகிறது. சுத்தமாக வேண்டுமானால் உடம்பு முழுவதும் கழுவப்பட வேண்டும். இது ஆவியின் மூலமாய் கிறிஸ்துவின் இரத்தத்தைக் கொண்டு சுத்திகரிக்கப் படுவதற்கு அறிகுறியாய் இருக்கிறது. இதினால் கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் புது சிருஷ்டியாக்கப்படுகிறோம். தீத்து 3 : 5 “நாம் செய்த நீதியின் கிரியைகளின் நிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.” தூசிபடிந்த பாதையில் நடப்பதனால் பாதம் அழுக்காவது போல் நாள்தோறும் நாம் செய்யும் பாவங்களால் நமது இருதயமும் அசுசிப்படுகிறபடியால் ஒவ்வொரு நாளின் பாவங்களையும் கழுவிப்போட நித்தமும் ஸ்நானம் செய்வது அவசியம். ஒவ்வொரு நாளின் பிரயாணத்தையும் ஆரம்பிக்கு முன் இயேசு கிறிஸ்துவினிடமிருந்து பாவ மன்னிப்பையும் சுத்திகரிப்பையும் தேடிக் கொள்ள வேண்டியது.
10. இந்த வெண்மையான வஸ்திரம் தரித்த ஸ்திரீகளிடத்தில் விளைந்த நன்மையை கவனிக்கும்போது இந்த வஸ்திரம் 1 பேதுரு 3 : 4 இல் சொல்லப்பட்டிருக்கிற வஸ்திரம் என்று தோன்றுகின்றது. அப்படியே 1 பேதுரு 5 : 5 இல் “மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்” என்று வாசிக்கிறோம். இந்த வஸ்திரங்களை தரித்துக் கொள்ளுவதால் வரும் பலாபலன்களை பிலிப்பியர் 2 : 3 இல் சொல்லியிருக்கிறது. அதாவது “மனத்தாழ்மையினாலே ஒருவரை யொருவர் தங்களிலும் மேன்மை யானவர்களாக எண்ணக்கடவீர்கள்”
11. மோட்ச பாதையில் மற்றவர்களை வழிநடத்தி ஒத்தாசை பண்ணுகிறவன் மிகுந்த பலசாலியும், தைரியசாலியுமாய் இருக்க வேண்டும்.