இடுக்கமான வழிப் பயணம்
கிறிஸ்தீனாளும் அவளுடைய கூட்டாளிகளும் போன பாதையின் இருபுற மதிலுக்கு அப்பாலே முன்னே சொன்னோமே அந்த துஷ்ட நாயின் சொந்தக்காரனுடைய தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தின் பழமரங்களின் கிiளைகள் மதிலின் ஓரமாய்ச் சரிந்து வளர்ந்து பழக்குலைகளால் மடிந்து கிடக்கிறதுண்டு. அந்தப் பழங்கள் கனிந்து பழுத்தவைகளாய்த் தொங்கி கண்ணைப் பகட்டினபடியால் பிரயாணிகள் தங்களுக்கு கேடுண்டாகும்படி அப்பழங்களில் சிலவற்றை பிடுங்கித் தின்கிறதும் உண்டு. கிறிஸ்தீனாளுடைய பிள்ளைகள் சிறு பிள்ளைகள் செய்கிற வழக்கம்போல அந்தப் பழங்களில் சிலவற்றை பிடுங்கித் தின்ன ஆரம்பித்தார்கள். அதைத் தாய் கண்டு தடுத்தபோதினும் அவர்கள் பறித்துத் தின்று கொண்டே போனார்கள். 1
அப்போது தாய் தன் மக்களை நோக்கி: அப்பா, அது நம்முடைய பழங்கள் அல்லவே, அதைப் பிடுங்கித் தின்பது நியாயம் அல்லவே என்று சொன்னாலும் அவை பகைஞனின் பொருள் என்று அறியாதிருந்தாள். அறிந்திருந்தால் அச்சத்தால் அங்கே மாண்டு போயிருப்பாள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லக்கூடும். அந்தப் பழ மரங்களை அவர்கள் தாண்டின பின்பு தங்கள் வழியே போனார்கள். திட்டிவாசலில் இருந்து இரண்டு அம்பு விடு தூரத்துக்கு அப்பால் அவர்கள் போனவுடனே தங்களுக்கு எதிரே அலங்கோல ரூபிகளான இருவர் முக்காடு போட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். பிள்ளைகள் முந்தியும் கிறிஸ்தீனாளும், தயாளியும் பின்னாலும் சென்று கொண்டிருந்தனர். அந்த அலங்கோல ரூபிகள் பிள்ளைகளை கட்டி அணைக்கிறவர்களைப் போல நெருங்கினார்கள். அப்போது கிறிஸ்தீனாள் அப்பாலே நில்லுங்கள், அல்லது உங்கள் வழியே அமைதலாய்ப் போங்கள் என்று சொன்னாள். அவர்களோ செவிடரைப்போல அந்த எச்சரிப்பை கவனியாமல் பிரயாணிகள் மேல் கை போடத் தொடங்கினார்கள். உடனே கிறிஸ்தீனாளுக்கு கோபம் வந்துவிட்டது. அவள் தன் காலால் அவர்களை உதைத்தாள். தயா ளியும் தன்னால் ஆனமட்டும் அவர்களை விலகிப்போகச் செய்ய வேண்டியதை எல்லாம் செய்தாள். அப்பால் கிறிஸ்தீனாள் அவர்களை நோக்கி: அப்பாலே நில்லுங்கள், இனி நெருங்காதேயுங்கள், எங்களி டத்தில் காசும் இல்லை, பணமும் இல்லை, நாங்கள் பரதேசிகள், பிச்சை வாங்கிப் பிரயாணம் பண்ணுகிறோம் என்றாள்.
அப்போது அந்த அவலட்சண ரூபிகளில் ஒருவன் கிறிஸ்தீ னாளைப் பார்த்து: நாங்கள் பணம் காசு கிடைக்கும் என்று உங்களை மடக்கவில்லை. நாங்கள் கேட்க விரும்புகிற ஒரு காரியத்துக்கு நீங்கள் இணங்கினால் வேறென்றும் செய்யாமல் உங்களை சமாதானத்தோடு அனுப்பிவிடுவோம் என்றான்.
அவர்களுடைய நோக்கம் இன்னது என்று ஜாடையாய் அறிந்து கொண்ட கிறிஸ்தீனாள் பிரதியுத்தரமாக: நீங்கள் சொல்லப் போகி றதற்கு நாங்கள் காது கொடுக்கிறதும் இல்லை, அதை சட்டை பண்ணுகிறதும் இல்லை, அதற்கு இணங்கவும் மாட்டோம். நாங்கள் துரிதப்பயணத்தில் இருப்பதால் தாமதிக்கவும் கூடாது, முந்தினால் ஜீவன், பிந்தினால் சாவு என்றே ஓடுகிறோம் என்று சொல்லித் தங்கள் வழியே நடக்க முயன்றார்கள். ஆனால் அந்த அவலட்சண ரூபிகள் அவர்களைப் போகவிடாதபடி முன் எட்டி மறித்தார்கள்.
அவர்கள் பின்னும் இந்த ஸ்திரீகளை நோக்கி: நாங்கள் உங்களை உயிர்ச் சேதம் செய்யப் போகிறோம் என்று நீங்கள் அஞ்சவேண்டாம். எங்கள் நோக்கம் வேறே இருக்கிறது என்றார்கள்.
அதற்கு கிறிஸ்தீனாள்: மெய்யாகவே நீங்கள் எங்கள் சரீரத்தையும் ஆத்துமாவையும் விழுங்கிப்போட வந்திருக்கிறீர்கள் என்று நான் நன்றாக அறிவேன். நாங்கள் இனிமேல் அனுபவிக்கப் போகிற பரம வாழ்வை இழந்துபோகும்படியான கண்ணியில் விழுகிறதைவிட இந்த இடத்திலேயே எங்கள் ஜீவனை இழந்து போவோம் என்று சொல்லிக் கொண்டு கூ-ஓ-கோ-கள்ளன் என்று ஓலமிட்டு ஸ்திரீகளின் பந்தோபஸ்துக்கென்று ஏற்படுத்தப் பட்டிருக்கிற சட்டங்களால் தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். (உபாகமம் 22 : 23 – 27) அவர்கள் என்னமாய்த் தங்களைப் பாதுகாத்துக் கொண்ட போதினும் அந்தப் பாதகர் அவர்களை அணுகி மேற்கொள்ளும்படியாகப் பிரயத்தனம் செய்தார்கள். ஆகையால் அவர்கள் மறுபடியும் அபயம் அபயம் ஐயா! என்று ஓலமிட்டார்கள்.
நான் முன் சொன்னபடி அவர்கள் இன்னும் திட்டிவாசலை விட்டு அதிக தூரம் போகாததால் அந்த அபயக் குரல் அரண்மனைக்கு எட்டினது. ஆதலால் அங்கு இருந்த சிலர் வெளியே வந்து அது கிறிஸ்தீனாளின் அபயக் குரல் என்று அறிந்து உதவிபுரியும்படி ஓடி வந்தார்கள். உதவி செய்ய ஓடின ஆட்கள் கிட்டப் போகுமுன்னே பிரயாணிகளை அவர்கள் கைபோட்டு இருபட்சத் தாரும் இழுப்பும் பறிப்புமாய் இருந்தார்கள். பாலகரும் பயந்து அலறினார்கள். துணை புரிய வந்தவர்கள் தூரத்திலேயே இந்த நிஷ்டூரங்களை கண்டு அந்த பரம சண்டாளர்களை நோக்கி: அடா துரோகிகாள்! துரோகிகாள்! நீங்கள் செய்கிற அக்கிரமம் என்ன? எங்கள் ஆண்டவரின் ஜனங்கள் மீறி நடக்க ஏது பண்ணுவானேன்? என்று சொல்லி கதறி அவர்களைப் பிடிக்கும்படிப் பார்த்தார்கள். அதற்குள்ளாக அந்த படு பாவிகள் சுவர் ஏறி கடிநாய் அதிபதியின் தோட்டத்துக்குள் போய் விழுந்தார்கள். உடனே அவர்களுக்கு உதவி செய்யும்படியாக அந்த நாயும் குரைத்து கும்மாளம் போட்டு வந்தது. துணைபுரியும்படி வந்தவர்களில் ஒருவர் அந்த ஸ்திரீகளை நோக்கி: நடந்த விசேஷம் என்னவென்று விசாரித்தார். அதற்கு அவர்கள்: உங்கள் அதிபதிக்கு நாங்கள் மெத்தவும் நன்றி செலுத்துகிறோம். எங்களைச் சற்று பயப்படுத்திப் போட்டார்களே அல்லாமல் வேறொன்றும் இல்லை. எங்களுக்குச் சகாயமாக நீங்கள் வந்ததற்காக உங்களுக்கும் வந்தனம் சொல்லுகிறோம். நீங்கள் வராவிட்டால் பகைஞர் எங்களை மேற்கொள்ளுவார்கள் என்றார்கள்.
அவர் சில காரியங்களை அவர்களுடனே பேசினபின்பு சொல்லுகிறார்: நீங்கள் திட்டிவாசலுக்குள் சேர்க்கப்பட்ட போதே நான் உங்களைப்பற்றி அதிசயப்பட்டேன். நீங்கள் பெலவீனமான பெண்டுகள் என்று உங்களுக்கே தெரிந்திருக்கிறதால் உங்களை வழிநடத்தும்படியாக ஒரு துணையாள் வேண்டும் என்று ஆண்டவரைக் கேட்க வேண்டியதாய் இருந்தது. அப்படி ஒரு ஆள் வந்திருக்குமானால் இவ்வளவு ஆபத்தும் அங்கலாய்ப்பும் உங்களுக்கு நேரிட்டிருக்கமாட்டாது. நீங்கள் மாத்திரம் கேட்டிருந்தால் ஆண்டவர் நிச்சயமாக ஒரு துணையாளை உங்களுடன்அனுப்பியிருப்பார் என்றார்.
கிறி: அதற்கு கிறிஸ்தீனாள்: ஐயோ, நாங்கள் தற்கால வாழ்வுகளை அனுபவிக்கிற சந்தோசத்தினால் இனி வரும் மோசங்களைப்பற்றிய எண்ணத்தை மறந்தேபோனோம்.
மேலும் ராஜ அரண்மனை இவ்வளவு சமீபமாய் இருக்கையில் இப்படிப்பட்ட சண்டாளர் தென்படுவார்கள் என்று யார்தான் எண்ணுவார்கள்? மெய்யாகவே நமது ஆண்டவரிடத்தில் ஒரு ஆள் உதவி வேண்டும் என்று கேட்டிருந்தால் மெத்த நலமாய் இருந்திருக்கும். என்றாலும் அப்படிப்பட்ட ஒரு ஆள் எங்களுக்கு உதவியாய் இருக்கும் என்று ஆண்டவருக்குத் தெரிந்திருக்க அவரே அந்த ஆளை எங்களோடு அனுப்பாதது எனக்கு மெத்த அதிசயமாய் தோன்றுகிறது என்றாள்.
அதற்கு துணைபுரிய வந்தோர் சொல்லுகிறார்: கேட்டுக்கொள்ளப் படாத சகாயத்தை செய்வது எப்போதும் அவசியம் அல்ல, அவை லேசாய் அவமதிக்கப்படுகிறதுண்டு. ஆனால் ஒன்றின் அவசியத்தை ஒருவன் உணர்ந்து அது வேண்டும் என்று கேட்கும் போது அது அருளப்பட்டால்அதைத்தக்கபடி மதித்து அதினால் உண்டாகும் லாபத்தையும் அனுபவிப்பான். என் ஆண்டவன் மாத்திரம் முந்தியே ஒரு ஆளை அனுப்பக் கேட்டோம் இல்லையே என்ற எங்கள் மறதியைப்பற்றி இப்போது மனங்கசந்து புலம்புவது போல் புலம்பவே மாட்டீர்கள். நீங்கள் தேறின போர் வீரர் ஆகும்படியாக நடப்பவைகள் எல்லாம் நன்மைக்கென்றே நடக்கும் என்று சொன்னார். 2
கிறி: அப்போது கிறிஸ்தீனாள்: ஐயா, நாங்கள் மறுபடியும் திரும்பி நமது ஆண்டவரண்டை போய் எங்கள் புத்தியீனத்தை அறிக்கையிட்டு ஒரு துணையாளுக்காக மன்றாடுவது தகுதி அல்லவா? என்றாள்.
அதற்கு அவர்: அப்படி அவசரம் இல்லை. உங்கள் மதியீனத்தின் பாவ அறிக்கையை நான் அவர் சமூகத்தில் சொல்லுகின்றேன். நீங்கள் திரும்பிப் போக வேண்டாம். நீங்கள் தங்கும் ஸ்தானங்கள் எங்கும் ஒரு குறைச்சலும் உங்களுக்கு உண்டாக மாட்டாது. எங்கள் ஆண்டவர் மோட்ச பிரயாணிகளுக்கு என்று ஸ்தாபித்திருக்கிற பல சத்திரங்கள் தோறும் உங்களுக்கு வேண்டிய சவரட்சணைகள் எல்லாம் செய்து வைத்திருக்கிறார். ஆனால் நான் முன்பு சொல்லியவண்ணம் சகாயம் வேண்டியவர்கள் சகாயத்துக்காக கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதே அவர் விருப்பம். (எசேக்கியேல் 36 : 37) கேட்டு வாங்க அவசரம் இல்லாத பொருள் மதிப்பற்ற பொருளாகத்தானே இருக்கும் என்றார். இவ்வளவு பேசினபின்பு அவர் திரும்ப தமது வீட்டுக்குத் திரும்பினார். பிரயாணி களோ தங்கள் வழியே போனார்கள்.
தயாளி: அப்போது தயாளி: அம்மா, என்ன ஆபத்து வந்தது பார்த்தாயா? துன்பம் எல்லாம் ஓய்ந்தது, துக்கம் எல்லாம் தொலைந்தது என்றல்லவா நான் நினைத்திருந்தேன் என்றாள்.
கிறி: அதற்குள் கிறிஸ்தினாள்: ஏதும் அறியாதிருந்த நீ அப்படி நினைத்தது குற்றம் இல்லை. ஆனால் என் காரியமோ அப்படி அல்ல, நான் என் வீட்டைவிட்டு புறப்படு முன்னே இப்படிப்பட்ட காரியம் சம்பவிக்கும் என்று அறிந்திருந்தேன். அப்படி இருந்தும் நமக்கு வேண்டிய சகாயத்தை தேடிக்கொள்ளாமல் புறப்பட்டது என் பேரில் பெரிய குற்றம்தான் என்றாள்.
தயாளி: அப்போது தயாளி: அம்மா, இப்படி நடக்கும் என்று முன்னமே உனக்கு எப்படி தெரியும்? அந்த இரகசியத்தை எனக்குச் சொல் என்றாள்.
கிறி: அந்த இரகசியத்தை சொல்லுகிறேன் கேள் மாதே! நான் வீட்டைவிட்டுக் காலெடுத்து வைக்கிறதற்கு முந்தின இரவில் நித்திரை செய்கையில் இதைப்பற்றி ஒரு சொப்பனம் கண்டேன். எப்படி என்றால் இப்போது நாம் சந்தித்தோமே அப்படி உலகமெங்கும் போய்த் தேடினாலும் கிடைக்கமாட்டாத அவலட்சண ரூபிகள் இருவர் என் கால்மாட்டில் வந்து நின்றதாகவும் என் இரட்சண்ய எண்ணங்கiளை எப்படித் தாறுமாறாக்கிவிடலாம் என்று பேசிக் கொண்டிருந்ததாகவும் நான் கண்டேன். அவர்கள் பேசின வார்த்தை களையே சொல்லுகிறேன் கேள். அவர்கள் சொல்லுகிறார்கள்: நாம் இந்த மனுஷியை என்ன செய்யலாம்? இவளுக்கு தூக்கம் என்றும் இல்லை, நடை என்றும் இல்லை, இரவும் பகலும் பாவமன்னிப்பு, பாவ மன்னிப்பு என்றே புலம்பிக் கொண்டிருக்கிறாள். இப்படியே செய்து கொண்டு வரும்படி நாம் அவளை விட்டுவிட்டால் இவள் புருஷனை நாம் இழந்து போனது போல இவளையும் இழந்து போக வேண்டிய திருக்குமே என்றார்கள்.
இந்தச் செய்தியை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சகாயம் கிடைக்கக்கூடிய இடத்தில் அதைப் பெற்றுக் கொண்டு வழிப்பயணம் செய்ய வேண்டிதாய் இருந்தது என்று சொன்னாள்.
தயாளி: அதற்குத் தயாளி: இந்த அஜாக்கிரதையானது நாம் நமது குறைவுகளை உணருகிறதற்கு ஏதுவான முகாந்தரமாய் திரும்பி விட்டது. நமது ஆண்டவரும் தமது கிருபையின் ஐசுவரியத்தை நம்மேல் வெளிப்படுத்தச் சமயம் பார்த்தார். ஏனெனில் நாம் அறிந்து கொண்ட பிரகாரம் கேளாதிருந்தும் கிருபை செய்ய பின் தொடர்ந்து தமது காருண்யத்தால் நம்மிலும் பலவான்கள் கையிலிருந்து நம்மைத் தற்காத்து மீட்டார் என்றாள்.
1. தகாத சந்தோசங்கள் பிசாசானவனுடைய தோட்டத்தில் பழுத்துத் தொங்கும் பழங்களுக்கு ஒப்பானவைகள். அவைகள் நாவுக்கு இன்பமும், பறிக்கிறதற்கு இலகுவாயும் இருக்கும். ஆனால் முடிவிலோ மோசமாய் முடியும்.
2. ஆசைப்பட்டுக் கேட்டால் ஒழிய அவசரமான நன்மைகளை தேவன் எப்போதும் கொடுக்கிறதில்லை. அவர் உபகாரம் செய்வார் என்று நாம் நம்புவது சரிதான். ஆகிலும் இன்ன சமயத்தில் நமக்கு உதவி அவசரமாயிருக்கும் என்று நாம் முன்னதாக அறிந்திருந்தால் முன்னதாகத் தானே நாம் அதற்காக கேட்க வேண்டும். நாம் எதிர் பார்த்திராதபடி மோசங்கள் நேரிட்டால் அப்போது நாம் கேட்காவிட்டாலும் அவர் நமக்கு ஒத்தாசை பண்ணுவார். என்றபோதிலும் நாம் எப்போதும் விழிப்பாய் இருந்து நமக்கு வேண்டிய போதெல்லாம் ஒத்தாசை கேட்க வேண்டும்.