கிறிஸ்தீனாளின் பிரயாண ஆயத்தம்
கூரியபுத்தி என்னும் விருத்தர் இந்தக் கதையை எனக்குச் சொல்லும் போதே பரிதாபங்கொண்டதாக நான் என் சொப்பனத்திலே கண்டேன். அவர் பின்னும் சொல்லுகிறார்: அந்தரங்கன் இவ்வளவு சொன்ன பின்பு, கிறிஸ்தீனாள் தன் மக்களை வரவழைத்து அவர்களை நோக்கி ஆ! என் கருவேலங் கன்றுகளே! நான் இப்பொழுது சில நாட்களாய் உங்கள் தகப்பனாருடைய மரணத்தை யிட்டு மாறாத கவலை கொண்டு வாதைப்படுகிறதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அவர் பாக்கியத்தை அனுபவிக்கிறாரோ அல்லவோ என்ற சந்தேகத்தினால் மனவேதனைப்படுகிறேன் என்று நீங்கள் கிஞ்சித்தும் அஞ்சவேண்டாம். அவர் பெரும் வாழ்வை அனுபவிக்கிறார் என்று எனக்கு இப்பொழுது பூரணமாய் தெரிந்திருக்கிறது. என் விசனம் எல்லாம் என்னுடைய நிலைமை யையும் உங்களுடைய நிலைமையையும் குறித்துத்தான். சுபாவத்தின் படி நாம் மகா நிர்ப்பந்தமான நிலையில்இருக்கிறோம் என்ற செய்தி என் உள்ளத்தை கிள்ளி வதைக்கிறது. உங்கள் அருமைத் தகப்பனார் ஆத்தும கவலையால் அவதிப்பட்ட காலங்களில் அவருக்கு நான் செய்த நிஷ்டூரங்கள் என் மனச்சாட்சியை பாரச்சுமை போல் இருத்துகிறது. எனெனில் நான் என் இருதயத்தையும் உங்களுடைய இருதயத்தையும் அவருக்கு விரோதமாய் கடினப்படுத்தி அவருடன் கூடி மோட்ச பிரயாணம் போகாமல் இருந்துவிட்டேன்.
ஆனால் எனக்கு நற்காலம் இருந்தது என்று சொல்ல வேண்டியது: நேற்று இரவு எனக்கு ஒரு சொப்பனம் கண்டதும் இன்றுகாலையில் இந்தப் புண்ணியவான் வந்து சொன்னதுமான விஷயங்களால் நான் இம்மட்டும் உயிரோடிருக்கிறேன். மற்றப்படி இந்த எண்ணங்களால் நான் செத்தே போவேன். ஆ, என் மக்களே வாருங்கள்! நாம் நமது தட்டுமுட்டுகளை மூட்டை கட்டிக்கொண்டு உச்சிதபட்டணத்துக்குப் போகும் பாதையின் ஆரம்பமாயிருக்கிற திட்டிவாசலுக்கு நடப்போம் வாருங்கள். நாம் அங்கே சேர்ந்து உங்கள் தகப்பனாரை சந்தித்து அவரோடும் அவருடைய தோழரோடும் கூடி அந்த தேசத்துச் சட்டங்களுக்கேற்றபடி சமாதானமாய் வாழலாம் வாருங்கள் என்று சொன்னாள்.
தங்கள் தாயின் மனம் இவ்வளவாய் திரும்பிவிட்டதை அவள் மக்கள் கண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள். அதின் பின்பு அந்தரங்கன் என்பவர் அவர்களை வாழ்த்தி விடைபெற்றுப் போனார். உடனே அவர்கள் பிரயாணப்படும்படி ஆயத்தப்பட்டார்கள்.
அவர்கள் புறப்படும்படி மூட்டையும் கையுமாய் நிற்கையில் கிறிஸ்தீனாள் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்த இரண்டு பெண்கள் வந்து கதவைத் தட்டினார்கள். அவள் முன்போலவே “நீங்கள் கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர்களானால் உள்ளே வாருங்கள்” என்று சொல்லிக் கதவைத் திறந்தாள். அதைக் கேட்ட வுடனே அவர்கள் அசந்து போனார்கள். ஏனெனில், இப்படிப்பட்ட பாஷையை அவர்கள் தங்கள் பிறந்த நாள் முதல் கேள்விப் பட்டிருந்ததும் இல்லை, கிறிஸ்தீனாள் வாயிலிருந்து வந்ததை அவர்கள் கேட்டதும் இல்லை. என்றாலும் அவர்கள் உள்ளே போனார்கள். போனவுடனே கிறிஸ்தீனாளும் அவள் மக்களும் வீடு விடும்படி பயணப்பட்டு மூட்டையும் கையுமாய் நிற்கக் கண்டார்கள்.
அப்போது அவர்கள், இப்படிப் பயணம் புறப்பட்டு நிற்கிறீர்களே ஏது விசேஷம்? என்று கேட்டார்கள்.
அப்போது கிறிஸ்தீனாள் அவர்கள் இருவரில் மூத்தவளாகிய கோழையைப் பார்த்து, நான் பயணம் போகத் தயார் பண்ணுகிறேன் அம்மா என்றாள். இந்தக் கோழை 1 என்பவள் கஷ்டகிரியின்மேல் சிங்கத்துக்குப் பயந்து தலை தெறிக்கும்படி ஓடி, கிறிஸ்தியானைச் சந்தித்து அவனும் பின்வாங்கிப்போகும்படி பிரயாசப்பட்ட பயங்காளியின் உத்தம புத்திரியாய் இருந்தாள்.
கோழை: எவ்விடத்துக்குப் பயணம்?
கிறிஸ்தீனாள்: என் புருஷன் போன பயணமாய்த்தான் என்று சொல்லி அப்படியே அழுதுவிட்டாள்.
கோழை: அம்மணி, அம்மணி! அப்படி மாத்திரம் சொல்லாதே, இந்தப் பிள்ளைகளுடைய முகத்தையாவது பார்த்து அந்தப் பயணத்தை நிறுத்திவிடு. ஆண் பிள்ளைகளைப்போல திடும் பிரவேசமாய் ஒன்றையும் செய்யாதே அம்மணி!
கிறிஸ்தீனாள்: அல்ல, அல்ல. நானும் என் பிள்ளைகளும் ஏகமாய்த்தான் புறப்படுகிறோம். அவர்களில் ஒருவருக்கும் இவ் விடத்தில் இருக்கப் பிரியம் இல்லை.
கோழை: இந்தப் புத்தி உனக்கு எப்படித்தான் வந்ததோ! யார்தான் உனக்குச் சொன்னார்களோ! எனக்கு மெத்த அதிசமாய் இருக்கிறதே.
கிறி: என் அருமைச் சிநேகிதியே! என் மனதில் இருக்கிற துயரம் உனக்கு இருக்குமானால், அரை நிமிஷ நேரம் இங்கே தாமதியாமல் நீயும் என்னோடு கூட வந்துவிடுவாய்.
கோழை: அம்மணி! இப்படி இனபந்துக்களை மறக்கவும் நாட்டையும் நகரத்தையும் விடவும் ஒருவரும் அறியாத தேசத்துக்குப் போகவும் புறப்பட்டு நிற்கிறாயே, நீ கேள்விப்பட்ட நூதனமான விசேஷம் ஏதாவது உண்டோ?
கிறி: அப்புறம் கிறிஸ்தீனாள் சொல்லுகிறாள்: அம்மா, என் கணவன் என்னைவிட்டு பிரிந்த காலமுதல் எனக்கு உண்டான மனச்சஞ்சலம் அதிகம். அவர் ஆற்றைக்கடந்த பின்பு அது முன்னிலும் அதிகப்பட்டது. ஆனால் எல்லாவற்றிலும் என் மனதைப் புண்ணாக்குவது என்னவென்றால், அவர் ஆத்தும விசாரம் கொண்டிருந்த காலத்தில் நான் அவருக்குச் செய்த நிஷ்டூரங்கள்தான். அதுவுமன்றி, என் கணவர் எப்படி ஆத்தும விசாரம் பிடித்திருந்தாரோ அப்படியே நானும் இப்போது இருக்கிறேன். மோட்ச பிரயாணம் செய்வதே அன்றி வேறொன்றும் என்னை ஆறுதல்படுத்தமாட்டாது. நேற்று இரவில் என் கணவனைப் பார்த்ததுபோல ஒரு சொப்பனம் கண்டேன். அந்தச் சமயத்தில் எனக்கு இருந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்லுவேன்! ஆ, என் ஆத்துமா அவரோடிருந்து வாழும் பாக்கியத்தைத்தான் பெற்றிருந்ததா? என் புருஷனுக்கு கிடைத்திருக்கிற பாக்கியங்களை நான் என்ன சொல்ல! அந்த தேசத்து அரசர் சமூகத்தில் அவர் வாசஞ்செய்கிறார், அவருடன் கூட உட்காருகிறார், பந்தியிலிருந்து புசிக்கிறார், சிரஞ்சீவி சேனையுடன் இவரும் கூடிக்கொண்டு உலாவித் திரிகிறார். இப்பொழுது அவருக்கு ஒரு சிங்கார மாளிகை கொடுக்கப் பட்டிருக்கிறது. அதின் அழகை விவரிக்க எனக்கு நாவு எழும்புகிறதில்லை. இந்த உலகத்து அரசருடைய அரண்மனைகளும், மன்னரின் கொலு மண்டபங்களும் அதினுடன் ஒப்பிடப்பட்டால் இவைகளை குப்பை மேடு என்றுதான் சொல்ல வேண்டும். (2 கொரிந்தியர் 5 : 1 – 4) அந்த நாட்டு ராஜபிரபு எனக்குச் செய்தி அனுப்பி “நீயும் வந்தால் உன்னையும் ஏற்றுக்கொண்டு, உன் புருஷனுக்கு கிடைத்திருக்கிற பாக்கியங்களைப் போல உனக்கும் தருவோம்” என்று வாக்களித்திருக்கிறார். அவருடைய சேனாபதி சற்றுமுன் இங்கேதான் இருந்தார். என்னை அழைக்கும் கடிதத்தை அவர்தான் கொண்டு வந்து தந்தார் என்று சொல்லிக் கொண்டே மடியில் இருந்த அந்தக் கடிதத்தை சட்டென்று எடுத்து அவர்களுக்கு வாசித்துக் காட்டி இனி இதற்கு என்ன தடை சொல்ல உங்களால் ஆகும்? என்று கேட்டாள்.
கோழை: ஐயோ, உன்னையும் உன் புருஷனையும் இப்படியா பைத்தியம் பிடிக்கவேண்டும்! சம்பவிக்கிற மோசங்களையும் இருக்கிற அபாயங்களையும், துன்பங்களையும் சற்றாகிலும் யோசியாமல் சாடுகிறாயே. இதென்ன புத்தி! உன் புருஷனோடு கூடப்போன பிடிவாதனும், இணங்கு நெஞ்சனும் சொன்ன சமாச்சாரங்களை எல்லாம் மறந்தா போனாய்? உன் புருஷன் கால் எடுத்து வைக்குமுன் பட்ட பாடுகள் மெத்த உண்டாமே. நீ திரும்ப அவர்களிடத்தில் போய் கேட்டுப்பாரேன்! அப்பேர்ப்பட்ட ஞானிகள் புத்தியோடு திரும்பிவிட்டார்களே; அப்புறம் உன் புருஷன் போகப் போக பட்ட அவஸ்தைகளுக்கு ஒரு கணக்கில்லையாமே. சிங்கங்கள் எதிர்ப்பட்டு கர்ச்சித்ததாம், அப்பொல்லியோன் அட்டகாசம்பண்ணி அர்த்தநாசம் செய்யப் பார்த்தானாம், மரண நிழலின் பள்ளத்தாக்கு வழியில் வந்த அவதிகள் ஏராளமாம். இன்னும் என்னென்னவோ எல்லாம் சொல்லுகிறார்கள். உன் புருஷனைக் குறித்த எல்லாச் செய்திகளையும் மறந்து போனாலும் மாயாபுரிச் சந்தை வீதியில் பட்ட பாடாவது உன் மனதில் இராதா? இராட்சத புருஷனாகிய அவனே அந்தப் பாடு பட்டால் அறியாப் பெண்ணாகிய நீ என்ன பாடுபடமாட்டாய்? எல்லாப் புத்தியையும் எடுத்து எறிந்து போட்டாலும் இதோ கருவேலங்கன்று போல் நிற்கிற உன் நாலு பிள்ளைகளுடைய முகத்தையாவது பார்த்து ஒன்றைச் செய்தல் ஆகாதா? இவர்கள் உன் எலும்பில் எலும்பும் உன் மாமிசத்தில் மாமிசமும் அல்லவா? என்னதான் செய்யவேண்டும் என்று துணிகரமாய் தீர்மானித்த போதிலும் உன் கர்ப்பத்தின் கனிகளின் நிமித்தம் பயணத்தை நிறுத்தி, வீடுமட்டாய் இருந்து காலங்கழிக்கிறது நல்லது, அம்மணி என்றாள்.
அதற்கு கிறிஸ்தீனாள்: ஆ, என் அயலாளே! நீ எனக்குச் சோதனையாக இருக்க வேண்டாம். மேலான பாக்கியத்தை நான் ஆதாயமாக்கிக் கொள்ளத் தக்கதான சமயம் எனக்கு இப்போ வாய்த்து இருக்கிறது. இந்தச் சமயத்தை நான் விட்டுவிட்டால் என்னைப் போலொத்த முட்டாள் இவ்வுலகம் எங்கும் இருக்கமாட்டாள் என்றே சொல்ல வேண்டும். என் பயணத்தில் நேரிடுவதாக நீ சொல்லுகிற துன்பங்கள், இடையூறுகள் எல்லாம் என் மனதை அதைரியப் படுத்தாமல் நான் நேர் வழியில் இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தி, என்னை உற்சாகப்படுத்தும் ஏதுக்களாய் இருக்கின்றன என்றே எண்ணிக் கொள்ளுகிறேன். தித்திப்புக்கு முன் கசப்பு 2 வரவேண்டும், கசப்பு முந்தி வருவதே தித்திப்பை அதிக தித்திப்பாக்கும். நீ பேசுகிற வார்த்தைகளால் கர்த்தருடைய நாமத்தினாலே நீ வீட்டுக்குள் வந்து நுழைந்தவள் அல்லவென்று விளங்குகின்றது. ஆதலால் கோழையே! எழுந்திருந்து போய்விடு, உன் சங்காத்தமும் சம்பாஷணையும் இனி எனக்கு வேண்டியதில்லை என்று சொன்னாள்.
இவ்வளவும் கேட்கவே கோழைக்கு கோபம் வந்துவிட்டது. அவள் கோணிக் கோணிப் பார்த்துக்கொண்டு கிறிஸ்தீனாளை பலவாறாகத் திட்டி, தன்னுடன் கூடிவந்த தயாளி என்னும் தோழிப் பெண்ணைப் பார்த்து: அம்மணி தயாளி, அவள் எப்படியேனும் நாசமாய் போகட்டும், நாமும் ஆகாதாம், நமது ஆலோசனையும் ஆகாதாம், எழுந்திரு, நட போகலாம் வா என்று சொன்னாள். ஆனால் தயாளி அதற்கு இணங்காமல் சற்று நேரம் மௌனமாய் நின்று கொண்டு இருந்தாள். அப்படி அவள் நின்று கொண்டி ருந்ததற்கு இரண்டு முகாந்தரங்கள் இருந்தன. முதலாவது கிறிஸ்தீனாள் மேல் அவள் உள்ளம் உருகிவிட்டது. ஆதலால் கூடவந்த கோழை எழுந்து போய்விட்டால், நாம் கிறிஸ்தீனாளோடு கூடக் கொஞ்ச தூரமாவது போய் வழி விட்டனுப்பி விட்டுத் திரும்பி வரலாமே என்று தனக்குள்ளே நினைத்தாள். இரண்டாவது தன் ஆத்தும நிலைமையை நினைத்தும் அவள் உள்ளம் அவளுக்குள் உருகிவிட்டது. கிறிஸ்தீனாள் சொன்னதில் சில வார்த்தைகள் 3 அவள் மனதில் ஆழமாய்ப்பட்டது. ஆதலால் அவள், இந்த கோழை அம்மாள் தொலைந்து போய் விட்டால், கிறிஸ்தீனாளிடத்தில் இன்னும் பல காரியங்களைக் கேட்டு அறியலாமே, அவள் சொல்லுவதில் சத்தியமும் ஜீவனும் உண்டென்பது மெய்யானால் நாமும் அவளோடுகூடப் புறப்பட்டுப் போய்விடலாமே என்றும் தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டு கோழையைப் பார்த்து பின்வருகிறபடி சொல்லுகிறாள்:
தயாளி: அக்கா, கோழையே! கிறிஸ்தீனாளை பார்க்கும்படியாக நான் இன்று காலையில் உன்னுடன் கூட வந்தது உள்ளதுதான். ஆனால் நாம் பார்க்கிறபடி அவள் ஊரையும், உறவினரையும், நாட்டையும், நகரத்தையும் விட்டுப் பயணம் புறப்படும்படி ஆயத்தப்பட்டு நிற்கிறாளே, இந்த இள வெயில் நேரத்தில் நானும் அவளோடு கொஞ்ச தூரம் பேசிப் போய் வழி அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன் என்று சொன்னாள். ஆனால் அவள் தன் மனதில் இருந்த இரண்டாவது எண்ணத்தை அவள் வெளியிடவே இல்லை.
கோழை: சரி, உனக்கும் பைத்தியம் பிடிக்க வேண்டுமாக்கும். காலம் அறிந்து ஞானமாய் நடந்து கொள். ஆபத்துக்கு அப்பால் இருந்தால் ஆபத்தே இல்லை. ஆபத்துக்குள் இருந்தாலோ ஆபத்தே வந்து நேரிடும் என்று சொல்லிவிட்டு கோழை காலெடுத்து வைத்துக் கைவீசிக் கொண்டு வெளியே போய்விட்டாள்.
கோழை தன் வீட்டுக்குப் போனவுடனே தன் உத்தம சிநேகிதர்களில் சிலராகிய இருட்கண்ணி, நிர்ச்சிந்தனை, களிமயங்கி, மூடமங்கை, ஆகிய நாலு பேரையும் அழைத்தனுப்பினாள். உடனே அவர்களும் வந்து கூடினார்கள். அவர்களுக்கு கிறிஸ்தீனாளுடைய கதையையும் அவள் தன் புருஷன் போன வழியே போகும்படி பிரயாணப்பட்டு நிற்கிறதையும் குறித்து பின் வருகிற பிரகாரம் சொல்லுகிறாள்:
ஆ என் அயலகத்து அம்மணிகளே கேளுங்கள்! இன்று காலையில் எனக்கு அதிக சோலி இல்லாமையால் கிறிஸ்தீனாளைப் பார்த்துவிட்டு வரலாம் என்று எண்ணி அவள் வீட்டுக்குப் போயிருந்தேன். வாசல்படியில் போனவுடன் நம்முடைய வழக்கத்தின் படி கதவைத் தட்டினேன். தட்டவே, “நீ கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவளானால் உள்ளே வா” என்று அவள் சொன்னாள். நான் எல்லாம் வழக்கப்படித்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு உள்ளே போனேன். போகவே அவள் ஊரைவிட்டு பயணம் போக ஆயத்தப்படுகிறதை கண்டேன். அவளும் அவள் நான்கு பிள்ளை குட்டிகளும் போகிறார்களாம். ஏது அம்மா இந்த யோசனை பண்ணுகிறாய் என்று கேட்டேன். அப்போது அவள்: நான் என் புருஷன் செய்ததுபோல மோட்ச பிரயாணம் செய்யப் போகிறேன் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டாள். தான் என்னவோ ஒரு சொப்பனம் கண்டேன் என்று அந்தச் சொப்பனத்தையும் சொல்லி அவள் புருஷன் வசிக்கும் தேசத்து ராஜா தன்னையும் அவ்விடம் வரும்படி எழுதி அனுப்பினதாக ஒரு கடிதத்தையும் எனக்கு காட்டினாள் என்று சொன்னாள்.
அது கேட்டு மூடமங்கை என்பவள்: என்ன, என்ன? அவள் போவாள் என்று நீ நினைக்கிறாயா? என்றாள்.
கோழை: என்னதான் சம்பவித்தாலும் அவள் போகிறது போவாள். எப்படியென்றால் அவள் பயணம் போவது மெய்யானால் வழியில் உண்டாகும் கஷ்ட நஷ்டங்கள் பல உண்டென்று விபரமாய்ச் சொல்லி அதின் மூலமாவது அவள் மனதை மாற்றலாம் என்று என்னால் ஆனமட்டும் பார்த்தேன். அதற்கு அவள் அந்த கஷ்ட நஷ்டங்களே நான் என் பயணத்தை உற்சாகமாய்ச் செய்ய வேண்டும் என்பதற்குப் பலத்த முகாந்தரங்களாய் இருக்கிறது என்கின்றாள். மேலும் அவள் தித்திப்புக்கு முன் கசப்பு என்ற சுலோகத்தை பலவிதமாய் திருஷ்டாந்தப்படுத்திக் காட்டி, கசப்பு எவ்வளவு மிஞ்சிக் காணுதோ அவ்வளவுக்கு தித்திப்பு அதிகத் தித்திப்பாக ருசிக்கும் என்கிறாள். ஆகையால் எனக்குத் தோன்றுகிறபடி அவள் இனிமேல் தாமதிக்கப் போவதில்லை என்று கோழை சொன்னாள்.
இருட்கண்ணி: ஐயோ, அந்த கிறிஸ்தினாள் கண்ணுங்கெட்டு மதியுங்கெட்டுப்போனாளே. முன்னே அவள் புருஷன் பட்ட பாடு தெரியாதா? அதை நினைத்தாவது அவள் எச்சரிப்படையக்கூடாதா? என் மனதின் தீர்மானத்தை சொல்ல வேண்டுமானால் அவள் புருஷன் மறுபடி மாத்திரம் இவ்விடம் வருவானானால் முன்போல யாதொரு லாபத்தையும் தரமாட்டாத சங்கடங்களில் தலையிட்டுக் கொள்ளத் துணியாமல் தன் தேகம் வடுப்படாதபடி பார்த்துக் கொண்டு அக்கடா என்று கிடந்துவிடுவான் என்று இருட்கண்ணி அம்மாள் சொன்னாள்.
அப்பால் நிர்ச்சிந்தனை பேச வாயெடுத்துச் சொல்லுகிறாள்: இப்படிப் பித்தம் பிடித்த பிடிவாத முண்டைகள் தொலைந்து போகட்டும்! அவள் தொலைந்து போக வேண்டுமென்பதே என் தீர்ப்பு. அவள் இந்த ஊரில் குடியிருந்து கொண்டு இந்தவித மனமுடை யவளாய் இருந்தால் அவளண்டை யார்தான் சுகமாய் குடியிருந்து காலங்கழிப்பார்கள்? அவள் பேசாமடந்தையாய் அல்லது மந்தம் பிடித்தவளாய் இருப்பாள்; அல்லது, புத்தியும் சுணையுமுள்ள ஆட்களுக்குப் பிடியாத பைத்தியங்களை எல்லாம் பிதற்றி அவர்கள் அண்டையில் வாசம் பண்ணாமல் ஓட்டம் பிடிக்கச் செய்வாள். ஆகையால் அவள் பயணம் புறப்படுகிறதால் எனக்கு எவ்வளவு துக்கமும் இல்லை. அவள் போகட்டும், அவளைவிட யோக்கிய முள்ளவள் வந்து குடியிருக்கட்டும். இந்த வெறி பிடித்த ஜனங்கள் இருக்கிற வரைக்கும் இவ்வுலகம் சிறப்பாய் இருக்கப் போகிறதில்லை என்று சொன்னாள்.
அப்பால் களிமயங்கி எழும்பிச் சொல்லுகிறாள்: அது கெட்டது 4 அந்தப் பேச்சை விடுங்கள். நேற்று நடந்த விசேஷத்தை கேளுங்கள். நேற்று நான் காமாதுரி வீட்டுக்குப் போனேன். அங்கே இருந்த நாங்கள் எல்லாரும் மங்கையரைப் போல மனங்கழித்தோம். அங்கே யாரெல்லாம் வந்து கூடினார்கள் என்று எண்ணுகிறீர்கள்? நான் ஒன்று, மோகினி ஒன்று, மாம்ச இச்சை ஒன்று, பின்னும் நாலைந்து தோழிப்பெண்கள், காமாதுரன், அசுத்தம் முதலிய பலரும் கூடினோம். அங்கே ஆட்டங்களும், பாட்டுகளும் ஆனந்தத்துக்கேற்ற மற்றக் கேளிக்கைகளும் இருந்தன. எங்களை அழைத்த காமாதூரி இருக்கிறாளே அவள் மகா உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவள். காமாதுரன் என்னப்படுகிற அவள் கணவனோ சகல கலாவல்லோனும் சபை அலங்காரனுமாய் இருக்கிறார் என்று சொன்னாள்.
1. கோழை: சிலர் அற்பமான இடையூறுகளுக்குப் பயந்து மற்றவர் களையும் பயங்காட்டுகிறார்கள். தைரியமுள்ளவன் தான் செய்வது நியாயம் என்று கண்டால் அதைப் பயப்படாமல் செய்வான். கோழைத்தனமுள்ளவன் கொஞ்சம் வருத்தம் இருக்கிறதென்று அறிந்தால் அது நியாயமான காரியமாய் இருந்தாலும் பின்வாங்கி விடுவான். நாமோ, நீதியின் பாதையில் ஒன்றுக்கும் அஞ்சாமலும், அநீதியான வழியில் எல்லாவற்றிற்கும் அஞ்சியும் நடக்க வேண்டும்.
2. அந்தரங்கன் கிறிஸ்தீனாளுடைய மனதில் இந்தச் சத்தியத்தை உணர்த்தினவுடன் அவள் அதை தாமதமில்லாமல் அங்கீகரித்துக்கொண்டாள் என்று தோன்றுகிறது. வலது கையை வெட்டிப்போடுவதும் வலது கண்ணைப் பிடுங்கிப்போடுவதும் கசப்பான காரியம்தான். என்றாலும் அப்படிச் செய்யாவிட்டால் மோட்சம் கிடையாது (மாற்கு 9 : 43-47. 2 கொரி 4 : 17, 18 )
3. ஏற்ற தருணம் பார்த்துப் பேசும் இதமான வார்த்தைகளால் நாம் மற்றவர்களுக்கு எம்மாத்திரம் நன்மைசெய்யக்கூடும் என்று நமக்குத் தெரியாது. நாம் பார்க்கிறபடி கிறிஸ்தீனாள் சொன்ன அருமையான வார்த்தைகள் தயாளி தன் கேடான நிலைமையை உணரவும் மோட்ச பிரயாணத்தை துவக்கவும் பண்ணினதே. ஆதலால் சுத்தப் பேதைதானும் இம்மாதிரியாய் நன்மை செய்யலாம்.
4. இந்த சம்பாஷணையினால் சிலர் பரிசுத்த ஜீவியம் செய்ய ஆவல்கொள்ளும் மற்றவர்களை தூஷித்து குற்றப்படுத்துவார்கள் என்றும் வேறு சிலரோ அப்பேர்க்கொத்த நற்காரியங்களை பேசக் கேட்கத் தானும் விரும்பமாட்டார்கள் என்றும் விளங்குகின்றது. களிமயங்கி என்பவளுக்கு இப்படிப்பட்டவைகளைப் பேசுதல் நேரப்போக்கு பண்ணுவதாகவும் லௌகீக விஷயங்கள் நல்லவைகளாகவும் காணப்பட்டது. களிமயங்கியைப் போன்றவர்களுக்கு ஆவிக்குரிய காரியங்களை கேட்க வெறுப்பாய் இருக்கும். அவைகளைப் புகழவோ இகழவோ மனமும் இராது.