மற்ற பிரயாணிகளின் முடிவு
இது நடந்து கொஞ்ச காலமான பின்பு அந்த பட்டணத்துக்குள் ஒரு அஞ்சல்காரன் வந்தான். அவன் நொண்டியருக்கு செய்தி சொல்ல வந்தவன். அந்த அஞ்சல்காரன் நொண்டியரை தேடிக் கண்டு பிடித்து அவரை நோக்கி: நீர் தாங்குதடியோடு நொண்டி நொண்டி நடந்து வந்தவரும் நேசித்தவருமான ஆண்டவரிடத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன். உமக்கு நான் சொல்ல வந்த செய்தி என்னவென்றால் வருகிற உயிர்த்தெழுந்த திருநாளுக்கு அடுத்த தினத்தில் நீர் அவருடைய ராஜ்யத்தில் அவரோடு கூட இராப்போஜனம் பண்ண அவர் விரும்புகிறார். ஆதலால் இதற்கென்று உம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் என்று சொன்னான். பின்னும் அவன்: நான் என் ஆண்டவரின் உத்தம அஞ்சலாள்தான் என்பதற்கு அத்தாட்சியாக உன் பொன் கிண்ணியை நசுக்கி, உன் வெள்ளி கயிற்றின் கட்டை அவிழ்த்து விட்டேன் என்று சொல்லி ஒரு அடையாளமும் கொடுத்தான். (பிரசங்கி 12 : 6)
இந்த சமாச்சாரம் வந்தவுடனே, நொண்டியர் தமது உடன் பிரயாணிகள் அனைவரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: எனக்கு உத்தரவு வந்துவிட்டது, தேவன் மெய்யாகவே உங்களையும் சந்திப்பார் என்று சொல்லிவிட்டு, சத்திய வீரதீரனைப் பார்த்து தன்னுடைய மரணசாசனத்தை எழுதும்படி கேட்டார். தமது பின்னடியாருக்கு வைத்துப் போகும்படியாக அவருடைய தடி களையும், நல் விருப்பங்களையும் தவிர மற்றொரு அவகாசமும் அவருக்கு இல்லாதிருந்தபடியால் அவர் செய்த மரணசாசனம் என்னவென்றால்:
என் அடிச்சுவடுகளில் நடந்துவரும் என் குமாரனுக்கு சகல வரங்களையும் கோரி, நான் இந்த தடிகளை தத்தம் செய்கிறேன். அவன் என்னிலும் உத்தமனாய் நடக்க வேண்டும் என்பதே என்ஆசை என்று கண்டிருந்தது. அப்பால் அவர் தைரியநெஞ்சன் தன்னை வழி நடத்தினதற்காகவும், தனக்குச் செய்த பல சகாயங்களுக்காகவும் அவருக்கு நன்றியறிதல் சொல்லி பயணம் புறப்பட்டார். அவர் ஆற்றின் கரையோரத்தில் மிதித்தவுடனே அதோ அக்கரையில் இரதங்களும், குதிரைகளும் எனக்கென்று காத்திருக்கையில் இந்த தடிகள் எனக்கு என்னத்துக்கென்று அவைகளை தூர எறிந்துவிட்டார். கடைசியாக அவர்: வாழ்க ஜீவனே வாழ்க! என்றுசொல்லிக் கொண்டு ஆற்றைக் கடந்து அக்கரை சேர்ந்தார்.
அதின் பின் ஏழைத்தனத்தின் வீட்டு வாசலுக்கு முன் ஒரு தபால்காரன் வந்து கொம்பூதிக்கொண்டு நிற்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. அந்த தூதன் வீட்டுக்கு உள்ளே போய் உன் எஜமான் உன்மேல் தாபந்தப்படுகிறார், நீ இன்னும் கொஞ்ச காலத்துக்குள் அவருடைய திருமுக பிரகாசத்தை தரிசிக்க வேண்டும் என்று சொல்லச் சொன்னார். என் வார்த்தைகள் மெய் என்பதற்கு அத்தாட்சியாக “பலகணி வழியாய் பார்க்கிறவைகள் இருண்டு போகும்” என்றான். அப்பொழுது ஏழைத்தனம் தமது சிநேகிதரை வரவழைத்து தமக்கு வந்த கட்டளையையும், அது மெய் என்பதற்கு கொடுக்கப்பட்ட அடையாளத்தையும் சொன்னான். பின்னும் ஏழைத்தனம் சொல்லுகிறான்: எனக்கு யாதொரு சொத்தும் இல்லையே, நான் மரண சாசனம் எழுதுவதினால் என்ன லாபம்? நான் விட்டுப்போகும் ஆஸ்தி தள்ளாடின என் மனமே தவிர வேறொன்றும் இல்லை. நான் போகிற இடத்திற்கு அந்தப் பொருள் அவசியமும் இல்லை. ஏழைப் பரதேசிகளுக்கு அதை சாசனம் பண்ணுவதினால் எவ்வளவேனும் பயனும் இல்லை. ஆதலால் என் உத்தம நேசராகிய சத்திய வீர தீரரே! நான் இந்த உலகத்தைவிட்டுப் போனவுடனே அதைக் குப்பை மேட்டில் புதைத்துவிடவேண்டும் என்று விரும்புகிறேன் என்றான். இவ்வளவு சொல்லியான பின்பு அவன் புறப்படும் நேரமும் நெருங்கிற்று. அவன் மற்றவர்களைப் போல் ஆற்றில் இறங்கி விசுவாசத்திலும், பொறுமையிலும் உறுதியாய் நிலைத்திருங்கள் என்று கடைசியாகச் சொல்லி ஆற்றின் அக்கரை சேர்ந்தான். (பிரசங்கி 12 : 3)
அவர்கள் போய் வெகு நாளான பின்பு, ஏக்கம் வரும்படி செய்தி வந்தது. அவரண்டை ஒரு தபால்காரன் வந்து, ஓய், ஏக்க ஏக்க இளைப்போனே! உன் சந்தேகங்களிலிருந்து விடுதலையானதின் நிமித்தம் சந்தோசத்தோடு ஆர்ப்பரிக்கும்படியாக வருகிற ஓய்வு நாளில் நீ கர்த்தருடன் இருக்க வேண்டும் என்று உனக்கு கட்டளையிட வந்தேன் என்று சொல்லி, என் சமாச்சாரம் சத்தியம் என்பதற்கு அத்தாட்சியாக, இதோ வெட்டுக்கிளியும் உனக்கு பாரமாய் இருக்கும் என்று ஒரு வெட்டுக் கிளியை அவனுக்கு அடையாளமாகக் கொடுத்தான். (பிரசங்கி 12 : 5)
ஏக்கத்தின் குமாரத்தியாகிய திகிலுற்றாள் இந்த செய்தியை கேட்டவுடனே தானும் தன் தகப்பனுடன் வருவாள் என்று சொன்னாள். அதுகேட்ட தகப்பன், தன் சிநேகிதரை வரவழைத்து : அண்ணரே! நானும், என் மகளும் எப்படி நடந்தோம் என்றும், எங்கள் தோழருக்கு எவ்வளவு தொந்தரவுகள் கொடுத்தோம் என்றும் நீங்கள் நன்றாய் அறிவீர்கள். ஆதலால் என்னுடையதும் என் மகளுடையதுமான மரணசாசனம் என்னவென்றால்: எங்களுடைய ஏக்கமும், திகிலுற் றாளும் நாங்கள் இவ்விடம் விட்டு பிரிகிற நாள் முதல் என்றென்றைக்கும் எவனொருவனாலும் எடுத்துக் கொள்ளப் படலாகாதென்று தீர்மானிக்கிறோம். ஏனெனில் அதின் இரகசியத்தை நான் உங்களுக்கு இருதயம் திறந்து சொல்லுகிறேன் கேளுங்கள்: நாங்கள் முதலாவது மோட்ச பிரயாணிகளான சமயத்தில் இந்த ஆவேசங்கள் எங்களைப் பிடித்துக் கொண்டன. அப்பால் அவைகளை நீக்கித் துரத்திவிடும்படி நாங்கள் என்ன, என்ன பிரயத்தனங்கள் செய்தபோதினும் அவைகள் நீங்கவில்லை. நாங்கள் போன பின்பு இவைகள் அங்கும்இங்கும் அலைந்து யாருக்குள்நுழையலாம் என்று வகை பார்க்கும். ஆனால் எங்கள் நிமித்தம் அவைகளுக்கு கதவை அடைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி தாங்கள் புறப்படும் நேரம் வந்த உடனே ஆற்றங்கரை சேர்ந்தார்கள். அவர்கள் ஆற்றைக் கடக்கிற சமயத்தில், இரவே ஒழிந்து போ, பகலே உதித்து வா! என்று ஏக்கம் சொல்லிக் கொண்டு அக்கரை சேர்ந்தார். அவளுடைய குமாரத்தி யாகிய திகிலுற்றாளோ இன்ப கவி ஒன்று பாடிக்கொண்டே அக்கரை சேர்ந்தாள். ஆனால் அவள் பாடின பாட்டின் வார்த்தைகள் இன்னதென்று எவரும் அறிந்து கொள்ளக் கூடாதிருந்தது.
இவைகளுக்குப் பிற்பாடு சம்பவித்தது என்னவென்றால், கிழட்டு யதார்த்தனை தேடித் திரிகிற ஒரு சேவகன் பட்டணத்துக்குள் வந்தான். அவன் அவருடைய வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து ஒரு கடிதத்தை அவரிடம் கொடுத்தான். அதில், நீ இன்றைக்கு ஏழாம் நாள் இரவில் தமது பிதாவின் வாசஸ்தலத்தில் வீற்றிருக்கும் நமது ஆண்டவர் சமூகம் வரவேண்டும் என்று உனக்கு இதினால் கட்டளையிடப்பட்டிருக்கிறது. நான் கொண்டு வந்த இந்தச் செய்தி சத்தியம் என்பதற்கு அத்தாட்சியாக “கீதவாத்திய கன்னிகைகள் எல்லாம் அடங்கிப் போகும்” என்று கண்டிருந்தது. (பிரசங்கி 12 : 4)
அந்த செய்தி வந்த நிமிஷமே கிழட்டு யதார்த்தன் தமது சிநேகிதர் முதலானவர்களை வரவழைத்து: என் தோழரே! இதோ நான் மரிக்கிறேன், ஆனால் நான் மரணசாசனம் எழுதவே மாட்டேன். என் உண்மை என்னோடு கூடவே இருக்கும் என்று எனக்கு பின்னே வருகிறவனிடத்தில் சொல்லிப் போடுங்கள் என்றார். அவர் போய்விடும் நாள் வந்தபோது ஆற்றைத் தாண்டும்படி ஆயத்தப் பட்டார். அன்றைய தினம் ஆறு சில இடங்களில் கரைபுரண்டோடிற்று. ஆனால் இவர் தமக்கு உதவி செய்ய நல்மனச்சாட்சி என்னும் ஒருவரை நடு ஆற்றில் வந்து இருக்கும்படியாக தமது ஜீவ காலத்தில் ஒரு தரம் கேட்டிருந்தார். அவரும் அப்படியே வந்திருந்து யதார்த்தனுக்கு கை கொடுத்து நடத்தி ஆற்றைக் கடத்தி அவரை அக்கரைப் படுத்தினார். அவர் ஆற்றைக் கடந்து போகிற போது “கிருபை பெருகி ஆளுகிறது” என்று கடைசியாகச் சொல்லி அக்கரை சேர்ந்தார்.
அதன்பின்பு சத்திய வீரதீரன் புறப்பட்டு வரும்படியாக செய்தி வந்திருக்கிறதென்றும், அந்தச் சமாச்சாரம் உண்மை என்பதற்கு அத்தாட்சியாக “ஊற்றின் அருகே சால் உடைந்துபோம்” என்று சொல்லப்பட்டதென்றும் பட்டணத்தில் ஒரு சத்தம் பிறந்தது. (பிரசங்கி 12 : 6) அவர் அதின் கருத்தை அறிந்து கொண்ட பின்பு தமது சிநேகிதர் அனை வரையும் வரவழைத்து தனக்கு வந்த கட்டளை இன்னதென்று தெரியப்படுத்தினார்.
பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் என் பிதாவினிடம் போகிறேன், வெகு வருத்தத்தோடு இம்மட்டும் வந்து சேர்ந்த போதினும் அந்த வருத்தங்களை எல்லாம் நினைவுகூர்ந்து மனஸ்தாபப் படுகிறதில்லை. மோட்ச பிரயாணத்தில் என்னை பின் செல்லுகிறவன் எவனோ, அவனுக்கு என் பட்டயத்தை சாசனம் செய்கிறேன், என் வீரதீரத்தையும், இராட்சத சமர்த்தையும் எடுத்துக் கொள்ள இயன் றவன் எவனோ அவனுக்கு விட்டுவிடுகிறேன். என் காயங்களையும், வடுக்களையும் இனி எனக்கு பலன் அளிப்போரின் நிமித்தம் நான் பண்ணின போருக்கு அத்தாட்சியாக என்னோடு கொண்டு போகிறேன் என்றார். அவர் மேலோகம் போகும் நேரம் வந்தபோது அநேகர் அவரோடு மரண நதியின் ஓரம் மட்டும் போனார்கள். அவர் ஆற்றில் இறங்கும்போதே “மரணமே உன் கூர் எங்கே?” என்றார். அவர் பின்னும் ஆழத்தில் போகையில் “பாதாளமே உன் ஜெயம் எங்கே?” (1 கொரி 15 : 55) என்று சொல்லிக் கொண்டே அக்கரை சேர்ந்தார். உடனே அங்கிருந்த எக்காளங்கள் எல்லாம் அவரை வாழ்த்தும்படி முழங்கின.
அதின் பின்பு நிலைநிற்போனுக்கு ஒரு கட்டளை வந்தது. பிரயாணிகள் மயக்க பூமி வரும்போது முழங்காலில் நிற்கக் கண்ட ஆள் இவர்தான். அந்தச் சேவகன் அந்தக் கட்டளை அடங்கிய கடிதத்தை விரித்துக் கொண்டே வந்தான். அதில், இவர் தமது எஜமானைவிட்டு இனிமேல் இவ்வளவு தூரத்தில் இருக்கிறது எஜமானுக்கு பிரியம் இல்லை என்றும், தமது ஜீவியத்தையும், குடியிருப்பையும் மாற்றிக்கொள்ளும்படி அவர் விரும்புகிறார் என்றும் கண்டிருந்தது. இந்தச் செய்தியை வாசித்தவுடனே நிலைநிற்போன் அசந்துபோனார். அப்போது அந்தச் சேவகன்: ஓய் நிலைநிற்போனே! என் சமாச்சாரம் நிஜமோ, அல்லவோ என்று நீர் சமுசயப்பட வேண்டியதில்லை. அவை அனைத்தும் சத்தியம் என்பதற்கு அத் தாட்சியாக “துரவண்டையில் உருளை நொறுங்கிப் போகும்” (பிரசங்கி 12 : 6) என்று சொன்னான். அப்போது வழிகாட்டியாக வந்த தைரிய நெஞ்சனைக் கூப்பிட்டு, அவரைப் பார்த்து சொல்லுவார்: ஐயாவே! என் பிரயாணத்தின் மிச்சமான பாகத்தில் நான் உமது நடத்துதலுக்குள் இருக்கும் பாக்கியத்தை பெறாதே போனாலும் உம்மோடு கூடிக் கொண்ட காலம் முதல் உம்மால் எனக்கு உண்டான பிரயோஜனங்கள் மெத்த உண்டு. நான் என் வீட்டை விட்டுப் புறப்பட்ட சமயத்தில் என் மனைவியையும் ஐந்து பிள்ளைகளையும் விட்டுவந்தேன்.
இன்னும் அநேக பரிசுத்த பிரயாணிகள் உமக்கு அகப்படுவார்கள். அவர்களையும் எங்களைப் போல வழிநடத்தலாம் என்ற நம்பிக்கை யினால் நீர் மறுபடியும் உமது எஜமானுடைய அரண்மனைக்குத் திரும்பிப் போவீர் என்று நான் அறிவேன். ஆதலால் நீர் அவ்விடம் திரும்பிப் போனபின்பு என் குடும்பத்தாரை வரவழைத்து, இம்மட்டும் எனக்கு சம்பவித்தவைகளையும் இனிமேல் எனக்கு சம்பவிக்க போகிறவைகளையும் அவர்களுக்கு விபரமாய் சொல்லும்படி மன்றாடுகிறேன். அதோடு இப்பொழுதிருக்கிற என் பாக்கியமான நிலைமையையும் நான் உச்சித பட்டணத்தில் போய் அனுபவிக்கும் பாக்கிய வாழ்வுகளையும் அவர்களுக்குச் சொல்லும்படி மன்றாடு கிறேன். அதுவும்அன்றி கிறிஸ்தியானையும், கிறிஸ்தீனா ளையும் பற்றிய செய்திகளையும் அவளும் அவள் மக்களும் அவனைப் பின் தொடர்ந்தார்கள் என்பதையும் அவளுக்குக் கிடைத்த கடைசி வாழ்வு இன்னதென்றும், எந்த இடத்தில் அவள் வசிக்கிறாள் என்றும் தெளிவாய் சொல்லும்படி மன்றாடுகிறேன். நான் அவர்களுக்கு அனுப்பும்படியாக என் கண்ணீரையும், என் ஜெபத்தையும் அல்லாமல் வேறொரு பொருளும் என்னிடத்தில் இல்லை என்று சொன்னால் போதும். ஒரு வேளை அவர்கள் மனந்திரும்பி மோட்ச பிரயாணிக ளானாலும் ஆவார்கள் என்றான். நிலைநிற்போன் இவ்வளவும் சொல்லி, இவ்வண்ணம் தனது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தி விட்டு மேலோகம் போகும் நேரம் வந்தபோது ஆற்றில் இறங்கினார். அந்தச் சமயத்தில் எவரும் அதிசயப்படும்படியாக அந்த ஆறு அமைதலாய் இருந்தது. அவர் நடு ஆறுமட்டும் நடந்துபோன பின்பு அங்கே நின்றுகொண்டு, ஆற்றுக்கு இக்கரையில் தமக்காக காத்துக்கொண்டு நின்ற சிநேகிதரை நோக்கி: இந்த ஆறு அநேகருடைய பயங்கரமாய் இருக்கிறது. இதை நினைத்த மாத்திரத்தில் அநேகர் நடுங்குகிறார்கள். நானோ இதில் சாங்கோ பாங்கமாய் நின்று கொண்டிருக்கிறதாக எனக்குத் தோன்றுகிறது. இப்பொழுது என் பாதங்கள் முன்ஒரு காலத்தில் இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்தபோது, உடன்படிக்கை பெட்டியைச் சுமந்து போன ஆசாரியன் கால்கள் நின்ற இடத்திலே பதிந்திருக்கிறது. (யோசுவா 3 : 17) இதின் ஜலம் நாவுக்கு கசப்பானாலும் வயிற்றுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது. நான் ஏன் இதைக் கடந்து போகிறேன் என்ற நினைவும், அதோ அக்கரையில் என்னைக் கூட்டிக் கொண்டு போகும்படி வந்து காத்திருக்கிற பரிசுத்தர் கூட்டத்தின் காட்சியும் என் இருதயத்துக்குள் அக்கினி தழல்போல் தகதகவென இருக்கிறது.
இப்பொழுது நான் என் மோட்ச பிரயாணத்தின் முடிவைக் காண்கின்றேன், என் கஷ்டகாலம் எல்லாம் கழிந்துவிட்டது. நான் இப்போது எனக்காக முள்முடி சூட்டப்பட்டிருந்ததே அந்த சிரசையும், உமிழப்பட்டிருந்ததே அந்த முகத்தையும் பார்க்கப் போகிறேன். இம்மட்டும் நான் கேள்வியினாலும் விசுவாசத்தினாலும் ஜீவித்து வந்தேன். ஆனால் இப்பொழுதோ தரிசித்து ஜீவிக்கும் இடத்துக்குப் போய் என் ஆத்துமா நாடுகிறவரோடே வாசம் பண்ணப் போகிறேன். என் ஆண்டவரைப் பற்றிய புகழ்ச்சி என் காதுக்கு எப்போதும் பிரியமாய் இருந்தது. அவருடைய பரிசுத்த பாதங்களின் அடிச் சுவடுகளை நான் எங்கெங்கே கண்டாலும் அங்கே என் பாதங்களை வைக்கும்படி ஆசைகொண்டேன். அவருடைய திருநாமம் எனக்கு ஒரு ஜவ்வாது டப்பி போலும், ஆ! சகல பரிமளங்களிலும் பரிமளமாயும் இருந்தது. சூரியப் பிரகாசத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பும் கண் பார்வையற்ற கபோதிகளின் ஆசையிலும் எனக்கு அவருடைய திருமுகப் பிரகாசத்தின் மேல் அதிக ஆசையாய் இருந்தது. அவருடைய வசனங்களை எனக்கு போஜனமாகவும், என் இளைப்பை மாற்றும் அருமருந்தாகவும் நான் பொறுக்கி சேர்த்துக் கொண்டதுண்டு. அவர் என் அக்கிரமங்களில் இருந்து என்னை விடுவித்து, எந்த ஆகாமி யங்களும் என்னை ஆளவொட்டாதபடி காப்பாற்றினார். அவருடைய பிரமாணங்களின் வழியில் என் பாதங்கள் உறுதிப்படுத்தப்பட்டன என்றார்.
இப்படி அவர் பேசிக்கொண்டு வரும்போதே அவருடைய முக ரூபம் வேறுபட்டது. அவருடைய பலசாலி அவருக்குள் தாழ்ந்தான். (பிரசங்கி 12 : 3) கடைசியாக “என்னை எடுத்துக் கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகிறேன்!” என்று சொன்னதின் பின்பு அவர்களுடைய கண்கள் அவரை கண்டதில்லை.1
அந்தச் சமயத்தில் அந்தரங்கத்தில் விளங்கிய காட்சியின் மகிமையை என்னவென்று சொல்ல! மேக மண்டலங்கள் எல்லாம் குதிரைகளாலும், இரதங்களாலும், எக்காளக்காரராலும், நாதசுரம் ஊதுவோராலும், கீதவாத்தியங்களை வாசித்து பாடுவோராலும், சுரமண்டலங்களை தட்டி பாடுவோராலும் நிறைந்திருந்தது. பரதேச பிரயாணிகள் மோட்ச பட்டணம் போகும்போது இவர்கள் அணியணியாய் அவர்கள் பின்னாலே சென்று உச்சித பட்டணத்தின் அலங்கார வாசலின் வழியாய் உட்பிரவேசித்தார்கள்.
கிறிஸ்தீனாளுடன் புறப்பட்டு வந்த அவளுடைய நான்கு பிள்ளைகளும் அவர்களுடைய மனைவிகள் மக்களுமானவர்கள் ஆற்றைக் கடந்து அக்கரை போகும் மட்டும் நான் அந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கவில்லை. மேலும் நான் அந்த இடத்திலிருந்து திரும்பி வந்த பிற்பாடு அவர்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்கள் என்றும், ஆனதால் அவர்கள் சிலகாலம் தாமதித்திருந்த அந்த இடத்தில் சபை பெருகும்படி ஒரு ஏதுகரமாக இருப்பார்கள் என்றும் ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டேன்.
அந்த திசைக்கு போகும்படியான சந்தர்ப்பம் எனக்கு மறுபடியும் ஒருதரம் நேரிட்டால்,இப்பொழுது சொல்லாமல் விட்டிருக்கிற சங்கதிகளைப்பற்றி அறிய விரும்புவோருக்கு தெரியப்படுத்த ஆயத்தமாக இருப்பேன். அது மட்டும் இதை வாசிக்கிறவனே! உனக்கு வந்தனம் சொல்லி விடைபெற்று நிற்கின்றேன்.
(இரண்டாம் பங்கு முற்றிற்று)
1. நாம் இப்படி பற்பல பேர்களின் மரணப் படுக்கையின் விபரங்களை வாசிக்கிறதினால் நமது இருதயம் நமக்குள் எழுப்புதல் அடைந்து பிலேயாமைப் போல “நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக, என்முடிவு அவன்முடிவுபோல இருப்பதாக” என்று ஜெபம் பண்ணுகிறோம் (எண் 23 : 10 ) ஆனால் இவர்களைப் போல் மோட்ச பிரயாணிகளாய் இருப்பவர்களுக்கு மாத்திரம் இந்த பாக்கியம் கிடைக்கும். நீதிமான்களைப் போல் ஜீவித்து போராட்டம் பண்ணுகிறவர்களுக்கு மாத்திரம் இந்த மகிமையான மரணம் அளிக்கப்படும்.