பிரயாணிகள் ஆனந்தமலை சேருதல்
பிரயாணிகளைக் கண்ட உடனே ஆனந்தமலையைச் சேர்ந்த இடையர் அனைவரும் ஏகமாய் வந்து கிறிஸ்தியானையும், திட நம்பிக்கையையும் பட்சமுடன் விசாரித்ததுபோல இவர்கள் ஒவ்வொரு வரையும் அன்புடன் விசாரித்தார்கள்.
இந்த இடையருக்கும் தைரிய நெஞ்சனுக்கும் அதிகப் பழக்கம் இருந்ததினால் அவரோடு கூட வந்த கூட்டமான பிரயாணிகளை அவர்கள் கண்டு அதிசயப்பட்டு இத்தனை பேரோடு வரும் வீர பராக்கிரமரே! இவர்களை எங்கே கண்டு பிடித்தீர் என்றுகேட்டார்கள்.
அதற்கு தைரிய நெஞ்சன் சொல்லுவார்:
கிறிஸ்தீனாள், அவள் பந்து ஜனங்களுமாம்,
மக்கள் நால்வரும் அவர்கள் பாரியும் ஆக ஒன்பது பேர்.
திசைக் கருவி போல் திசைமாறாமலே இவர் எல்லாரும்,
பாவ வழி விட்டுக் கிருபை வழி போறார்.
மற்றபடி இவர் ஆனந்த மலை காணார்,
இவர்களோடு கிழ யதார்த்தனும் வருகின்றார்,
நொண்டியாரும், ஏழைத்தனமும், ஏக்கமும்
அவர் புதல்வியாம் திகிலுற்றாளுமே.
கோனாரே! இங்கு இடம் உண்டோ சொல்லும்
இல்லாவிட்டால் ஏகும் இடம் எங்கே என்று சொல்லும்.
என்றார். அதற்கு அந்த இடையர்: இது எங்களுக்கு ஏற்ற ஆட்கள் தான். நீங்கள் வந்தது எங்களுக்குச் சந்தோசம்தான். இந்த இடத்தில் பலவீனருக்கு ஏற்றதும், பலவான்களுக்குஏற்றதுமான சகல சவ ரட்சணையும் உண்டு.1 இவர்களில் சிறியவரானவர்கள் மேலும் எங்கள் ராஜா கண்ணோக்குகிறார்.
ஆதலால் ஒருவனுடைய பலவீனம் அவன் இங்கே அங்கீகரிக்கப் படுவதற்கு தடையாய் இருக்கமாட்டாது என்றார்கள். (மத்தேயு 25 : 40) அப்புறம் அவர்களை ஆனந்தமலையின் அரண்மனைக்கு கூட்டிப் போய், ஏழைத்தனமே! மனத்திடனாய் வாரும், நொண்டியே! துடுக்காய் வாரும்! ஏக்கமே பாங்காய் வாரும், திகிலுற்றாளே! குலுங்கி நகைத்து வா என்று வருந்தி அழைத்து, இவர்கள் எல்லாரும் பின் வாங்கிப் போகாதபடிக்கு இப்படிப் பேர் பேராய் கூப்பிட்டோம். இனி மீதியான பராக்கிரம வீரரே! நீங்கள் அனைவரும் உங்கள் தைரியத்தோடும், தாராளத்தோடும் உட்பிரவேசியுங்கள் என்று சொன்னார்கள். அதை தைரிய நெஞ்சன் கேட்டு: உங்கள் நெற்றிகளில் கிருபையின் ஜோதி ஜொலிப்பதையும், நீங்கள் என் ஆண்டவரின் உத்தம மேய்ப்பர் என்பதையும் இன்று நான் அறிந்து கொண்டேன். ஏனெனில் நீங்கள் பலவீனரைப் புறக்கணியாமலும், அவர்கள் சிதறிப் போகும்படி பக்கத்தினாலும், முன்னந் தொடையினாலும் நீங்கள் அவர்களைத் தள்ளிப் போடாமலும் புஷ்பமாரி பொழிந்து புன்னகையோடு அவர்களை அரண்மனைக்குள் சேர்த்துக் கொண்டீர்கள். (எசேக் 34 : 21)
அப்படியே பலவீனரும், தள்ளாடிகளும் படிக்கட்டேறி அரண்மனைக்குள் பிரவேசித்தார்கள். தைரிய நெஞ்சனும் மற்றவர் களும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் எல்லாரும் உள்ளே போய் உட்கார்ந்த உடனே முதலாவது பலவீனம் உள்ளவர் களுக்கு வேண்டியது என்ன என்று கேட்டனுப்பினார்கள். ஏனெனில், இந்த இடத்தில் பலவீனரைப் பலப்படுத்தவும், ஒழுங்கில்லாதவர்களை சீர்ப்படுத்தவும் செய்யத்தக்க பிரயத்தனங்கள் என்ன உண்டோ அவை எல்லாம் செய்யப்பட வேண்டிய வழக்கம் இருந்தது. அவர்களுடைய சுகத்துக்கு ஏதுவாக லேசாய் ஜீரணிக்கத்தக்கதும், நாவுக்கு ருசியுள்ளதும், பலத்துக்கு ஏதுவானதுமான பல பதார்த்தங்கள் கொண்டு வந்து கொடுக்கப் பட்டன. அவரவர் தம்தம் போஜனத்தை உண்டு முடித்தபின்பு தங்கள் தங்கள் பள்ளியறைகளில் படுத்து இளைப்பாறும்படி போனார்கள்.
மறுநாள் அதிகாலையில் அவர்கள் எழுந்திருந்தவுடனே அந்த மலை மா உயரமாய் இருந்தாலும் அன்றைய தினம் நல்ல பகலாய் இருந்ததினாலும் வந்த பிரயாணிகளுக்கு அந்த மலையின் காட்சிகளை காண்பிப்பது அவர்கள் வழக்கமாய் இருந்தபடியினாலும் அவர்கள் கொஞ்சம் போஜனம் சாப்பிட்டுக்கொண்டு புறப்பட்டார்கள். இடையர் முதலாவது கிறிஸ்தியானுக்கு காட்டின காட்சிகள் எல்லாவற்றையும் இவர்களுக்கும் காட்டினார்கள்.
அதின் பின்பு வேறு சில நூதன காட்சிகளையும் அவர்களுக்கு காண்பித்தார்கள். முதலாவது பிரயாணிகளை அதிசயகிரிக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அங்கே இருந்து அவர்கள் கண்ணோக்குகையில் இதோ ஒரு மனிதன் தான் போட்ட சத்தத்தால் பர்வதங்களின் சிகரங்களை கீழது மேலதாக்கப் போகிறது போல் பேசுகிறதை கண்டார்கள். இதின் தாற்பரியம் என்னவென்று பிரயாணிகள் இடையரைக் கேட்டார்கள். அதற்கு அவர்கள்: இந்த மனுஷன் நீங்கள் மோட்ச பிரயாண பிரபந்தத்தின் முதலாம் பங்கில் வாசித்து அறிந்த அருளாதிக்கருடைய மக்களில் ஒருவன். ஒருவன் விசுவாசத்தில் தாழ்ந்து போகிறதும் அல்லது வழி தவறி இடறி விழுவதும் எப்படி என்றும், விசுவாசத்தினாலே எவ்வளவு பிரமாண்டமான தடைகளையும் நிவிர்த்தி செய்து விடலாம் என்றும் பிரயாணிகளுக்கு உணர்த்தும்படி அவன் அங்கே ஏற்படுத்தப்பட்டு இருக்கிறான் என்றார்கள். (மாற்கு 11 : 23, 24) அதைக் கேட்ட தைரிய நெஞ்சன் நான் அவரை அறிவேன், அவர் அநேகரைவிட மேலானவர்தான் என்று சொன்னார்.
அதற்கப்பால் இடையர் அவர்களை நிமலமலை என்னப்பட்ட பர்வதத்தின் மேல் கொண்டு போனார்கள். அந்த இடத்தில் ஒரு மனுஷன் வெள்ளுடை தரித்து நின்றதையும் அவன் மேல் எதிரி, துர்மனசு என்னும் இருவர் சேற்றையும், அழுக்கையும் வாரி வாரி எறிவதையும் கண்டார்கள்.அவர்கள் எவ்வளவு சேற்றைத்தான் அவன்மேல் வாரி எறிந்த போதினும் இதோ அவை எல்லாம் வெகு சீக்கிரத்துக்குள்ளாக விழுந்துபோய் அவன் வஸ்திரம் முன் போல வெண்மையாயும், சுத்தமாயும் இருந்ததென்று கண்டார்கள். இதின் அர்த்தம் என்ன என்று பிரயாணிகள் கேட்க, இடையர் சொல்லுவார்: இவருக்கு மாசில்லாமணி என்று பேர். இந்த வஸ்திரம் அவருடைய பழுதில்லாத ஜீவியத்தைக் காட்டுகிறது. அவர்மேல் சேற்றை வாரி எறிகிறவர்கள் அவர் நன்றாய் இருப்பதை விரும்பாத துர்மனசாய் இருக்கிறார்கள். என்றாலும் அவர்மேல் அந்த அழுக்குகள் படியாமல் விழுந்து விடுகிறதை நீங்கள் பார்க்கிறீர்களே, அதுபோலவே பரிசுத்தமாய் ஜீவனம் செய்கிறவர்கள் காரியமும் இருக்கும். அப்படிப்பட்டவர்களை அழுக்காக்கிப் போட வேண்டும் என்று அல்லும் பகலும் முயற்சி செய்கிறவர்கள் பிரயோஜனமற்ற வீண் வேலையிலே தங்கள் பிரயாசத்தை செலவிடுகிறார்கள்.
ஏனெனில் கொஞ்ச காலத்துக்குள்ளாக தேவன் அவர் நீதியை வெளிச்சத்தைப் போலவும், அவர்கள் நியாயத்தை பட்டப்பகலைப் போலவும் பிரகாசிக்கச் செய்வார் என்றார்கள்.
அப்புறம் இடையர் அவர்களை தரும மலைக்கு அழைத்துக் கொண்டு போய், ஒரு மனுஷனின் முன்பாக ஒரு மூட்டை துணிகள் இருப்பதையும், அதை அவன் சூழ நின்றவர்களுக்கு சட்டை முதலிய உடுப்புகளுக்கென்று கிழித்துக்கொடுக்கிறதையும், கிழித்துக் கொடுக்க கொடுக்க அந்த துணி மூட்டை குறையாமல் அப்படியே இருக்கிறதையும் அங்கிருந்து காட்டினார்கள். இதின் தாற்பரியம் என்னவென்று பிரயாணிகள் கேட்டதற்கு தன் சம்பாத்தியத்தில் இருந்து ஏழைகளுக்கு கொடுக்கும்படியான மனதை உடையவன் எவ்வளவுதான் கொடுத்த போதிலும் குறைவு அடையமாட்டான். எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும். ஒரு தீர்க்கத்தரிசிக்கு அந்த விதவை ஒரு அப்பம் கொடுத்ததினாலே அவள் பானையின் மாவு குறைவாய் போனதில்லை என்று விவரித்தார்கள்.
அப்பால் அவர்களை வேறொரு இடத்துக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கே பித்தன், பைத்தியன் என்ற இருவரும் கூடி ஒரு கருமையான எத்தியோப்பியனை வெண்மையாக்கும்படி தேய்த்து கழுவிக்கொண்டு இருந்தார்கள். இதின் கருத்து என்னவென்று பிரயாணிகள் கேட்டார்கள். அதற்கு அவர்கள்: சீர்கெட்ட பாவிகளின் நிலைமை இப்படி இருக்கிறது, அவன் நல்லவனாக பேர் எடுக்க வேண்டும் என்று செய்யப்படும் பிரயத்தனம் எல்லாம் அவன் முன்னிலும் கெட்டவன் ஆகவே ஏதுவாய் இருக்கிறது. பரிசேயர் காரியம் எல்லாம் இப்படியே இருந்தது. எல்லா மாயாதாரிகளின் காரியமும் இவ்வண்ணமாகவே முடியும் என்றார்கள்.
அப்புறம் தயாளி தன் மாமியாரண்டை போய், அம்மா! ஒரு மலைச் சரிவில் ஏதோ ஒரு கெபி இருக்கிறதாமே. அதை நரக ஒற்றையடிப் பாதை என்று சொல்லுவார்களாமே, அதைப் பார்க்க எனக்கு மெத்த ஆசையாய் இருக்கிறது என்று சொன்னாள். அந்தச் செய்தியை கிறிஸ்தீனாள் இடையருக்கு தெரியப்படுத்தினாள். அப்படியே மலைச் சரிவில் இருந்த அந்த கெபிக்கு அவர்களை கூட்டிக்கொண்டு போய், அதின் கதவைத் திறந்துவிட்டு, தயாளியைப் பார்த்து: அம்மா! உன் ஆசை தீருமட்டும் பார்த்துக் காது அடைக்கும் மட்டும் கவனித்துக் கேள் என்று சொன்னார்கள். அப்படியே அவள் அந்த கெபிக்குள் இருந்து வரும் சப்தத்தை வெகு கவனமாய் கேட்டாள்.
கேட்டபோது என் காலை ஜீவ வழியையும், சமாதானத்தின் பாதையையும் விலகச் செய்த என் தகப்பன் சபிக்கப்பட்டவன் ஆவானாக என்று புலம்பும் ஒரு குரலையும், ஐயோ என் ஜீவனை இரட்சித்துக்கொள்ளும்படி என் மாம்சம் வார்வாராய் கிழிக்கப்பட்டு இருந்தாலும் நன்றாய் இருக்குமே, இப்போது என் ஆத்துமாவை இழந்துவிட்டேனே! என்று அலறும் குரலையும், இன்னொருவன் நாம் திரும்பவும் பூலோகத்தில் ஜீவித்து இருக்க மாத்திரம் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால் இந்த இடத்துக்கு வரும்படி விரும்புவதிலும் என்னை முற்றிலும் வெறுத்து ஜீவ பாதையில் நடப்பேனே என்று பிரலாபிப்பதையும் அவள் கேட்டாள். இவை எல்லாம் அவள் காதுகளில் விழவே அவள் மிகவும் பயந்தாள். அவள் நின்ற இடமும் அக்கம் பக்கமும் குமுறி அதிர்ந்தாற் போல் அவளுக்கு காணப்பட்டன. அவள் முகம் வெளுத்துப் போயிற்று, கால் கைகளும் ஆட்டம் கொடுத்தன. அவள் பரவசமூண்டு இந்த இடத்தின் உபாதிகளுக்கு தப்பிப் பிழைத்தவனும், பிழைத்தவளும் பாக்கியசாலிகள், பாக்கியசாலிகள் என்று சொல்லிக்கொண்டு வந்தாள்.
இவ்வளவு காட்சிகளையும் இடையர் அவர்களுக்கு காட்டியபின்பு அவர்களை அழைத்துக் கொண்டு மறுபடியும் அரண்மனைக்கு வந்து அரண்மனையின் ஆசீர்வாதங்களை எல்லாம் அவர்களுக்கு அளித்தார்கள். தயாளி வாலிபமும் கொஞ்ச காலத்துக்கு முன்னேதான் கலியாணம் பண்ணப்பட்டவளும் ஆனதால் அரண்மனையில் உள்ள ஒரு பொருளின்மேல் அவளுக்கு அதிக நாட்டம் இருந்தது. ஆனால் நாம் அதை எப்படி கேட்கிறது என்று சற்று கூச்சப்பட்டாள். அவளுடைய முகம் குறாவி இருக்கிறதைக் கண்ட மாமி அவளைப் பார்த்து: உன் மனக் கவலை என்ன, சொல் அம்மா! என்று கேட்டாள். அதற்கு அவள்: அம்மா, இந்த அரண்மனை போஜன மண்டபத்தில் ஒரு மாதிரிக் கண்ணாடி தொங்க வைக்கப்பட்டிருக்கிறது, அதைப் பாராமல் இருக்க என்னால் முடியாது. அதைப் பார்க்கும் சகாயம் எனக்கு கிடையாவிட்டால் என் மனம் உடைந்தே போகும் என்றாள். அதற்கு கிறிஸ்தீனாள்: பெண்ணே! உன் விருப்பம் இன்னது என்று நான் மேய்ப்பருக்குச் சொல்லி அது ஆகும்படி செய்வேன். அவர்கள் காட்டமாட்டோம் என்று சொல்ல மாட்டார்கள் என்றாள். அதற்கு அவள்: இதின்பேரில் எல்லாம் ஆசை காட்டுகிறாளே என்று அவர்கள் என்னைப் பற்றி ஏதாவது எண்ணிக் கொள்ளுவார்களே என்று நான் வெட்கப்படுகிறேன் என்றாள். அதற்குமாமி: மகளே! இது வெட்கமாய் இராமல் வியந்து கொள்ளப்படத்தக்க விஷயமாய் இருக்கிறது, இதைப் போல நல்ல நோக்கம் உண்டா என்றாள். அப்படியானால், அதை விற்பார்களா என்று கேட்டுப் பாருங்கள் என்று தயாளி சொன்னாள்.
இந்தக் கண்ணாடி 2 ஆயிரம் பொருளிலும் அரிய பொருள் என்று சொல்லவேண்டியது. அதை ஒரு பக்கம் திருப்பினால் அதைப்பார்க்கிற ஆளுடைய சுபாவ முகம் திட்டமாய் தெரியும். இன்னொரு பக்கம் திருப்பினால் பரதேசியின் முகச்சாயலும் ஜீவியமும் அவனில் இருக்கிறது என்று காட்டிவிடும். அதைப் பார்த்து இருக்கிற பலரும் எனக்குச் சொன்ன பிரகாரம் அந்தக் கண்ணாடி வழியாகப் பார்த்தால் அவருடைய தலையின்மேல் இருந்த முட்கிரீடத்தையே காணலாம். மேலும் அதின் வழியாக அவருடைய கைகள், கால்கள், விலாவில் உண்டான ஆணித்துவாரங்களையும், ஈட்டி துவாரங்களையும் அவர்கள் பார்த்து இருக்கிறார்களாம். அதின் வழியாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறவர்ளுக்கு அவர்கள் அரசர் உயிரோடு இருக்கிறாரோ, மரித்துப் போனாரோ, அவர் பூமியில் இருக்கிறாரோ, வானத்தில் இருக்கிறாரோ, அவர் தமது தாழ்மையில் இருக்கிறாரோ, மேன்மையில் இருக்கிறாரோ, அவதிப்பட வருகிறாரோ, ஆளுகை செய்ய வருகிறாரோ என்று இப்படிப்பட்ட மேலான காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொள்ளலாம். (யாக்கோபு 1 : 23, 1 கொரி 13 : 12 2 கொரி 3 : 18)
அப்பொழுது கிறிஸ்தீனாள் அந்த மேய்ப்பர் இடத்தில் கேட்கப் போனாள். அவர்களுக்கு அறிஞன், ஞானப்பியாசி, விழிப்பாளி, கபடின்மை என்று பேர் வழங்கப்பட்டது. கிறிஸ்தீனாள் அவர்கள் இருந்த மடத்துக்குப் போய், மேன்மை பொருந்திய மேய்ப்பரே! என் மருமக்கள்மாரில் ஒருத்தி இந்த அரண்மனையில் உள்ள ஒரு பொருளின் மேல் நீங்காத ஆசை கொண்டிருக்கின்றாள். கண்ணுக்கு எட்டின அந்த பொருள் கைக்கு எட்டாது என்று நீங்கள் திருவாய் மலர்ந்தருளிவிட்டால் என் மகள் திகைப்பாள், ஏமாற்றமடைந்து உயிரை கூட விட்டுவிடுவாள் போல் இருக்கிறது என்றாள்.
அந்தச் செய்தி கேட்ட உடனே ஞானாப்பியாசி என்பவர், கூப்பிடு, கூப்பிடு, அவளை வரச்சொல்லு, நாங்கள் செய்யத்தக்க சகாயம் என்ன உண்டோ அதை எல்லாம் செய்யக் காத்திருக்கிறோம் என்றார். அப்படியே அவளைக் கூப்பிட்டு, மாதே மயங்காதே, உன் மனக் கவலையை மறைக்காதே, உனக்கு வேண்டியது எதுவோ அதைச் சொல்லு என்று கேட்டார்கள். உடனே அவள் மெத்தக் கலங்கி அடியாளுக்கு போஜன அறையில் தொங்க வைக்கப்பட்டு இருக்கிற கண்ணாடி வேண்டும் என்ற ஆவலே அன்றி வேறு ஆசை இல்லை என்றாள்.
கபடின்மை உடனே ஓடி பூரண சந்தோசத்தோடு அதை எடுத்து வந்து அவளுக்குக் கொடுத்தார். உடனே அவள் தலை குனிந்து பணிந்து அதை வாங்கிக் கொண்டு, உங்கள் கண்களில் அடியாளுக்கு தயவு கிடைத்தது என்பதை நான் இதனாலே அறிந்துகொண்டேன் என்றாள்.
அதுவும் அன்றி அந்த மேய்ப்பர் மற்ற பெண்கள் விரும்பிய பொருட்களையும் கொடுத்து, அவர்கள் புருஷன்மார் தைரிய நெஞ்சனோடுகூடச் சேர்ந்து கொண்டு, அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்து, அவனுடைய சந்தேக துருக்கத்தையும் தரை மட்டமாக்கிவிட்ட வீரத்துவத்துக்காக அவர்களை வெகுவாய் புகழ்ந்து பேசினார்கள்.
அதுவும் அன்றி அந்த மேய்ப்பர் கிறிஸ்தீனாளுடைய கழுத்திலும் அவளுடைய நான்கு மருமக்கள்மார் கழுத்திலும் பொற் சரப் பணியையும் காதுகளில் நகைகளையும் போட்டு தலைக்கு நெற்றிப் பட்டம் கட்டினார்கள்.
அவர்கள் அந்த இடத்திலிருந்து புறப்பட்டுப் போகும்படியான வேளை வந்த போது முன்பு கிறிஸ்தியானுக்கும், திட நம்பிக்கைக்கும் சொன்னதுபோல பல எச்சரிப்புகள் ஒன்றும் சொல்லாமல் சமாதானத்தோடே புறப்படுங்கள் என்று மாத்திரம் சொன்னார்கள். இதற்கு முகாந்தரம் என்னவென்றால், இவர்களுக்கு வழித்துணையாக தைரிய நெஞ்சன் கூடப்போகிறதினாலே 3 அவருக்கு எல்லா காரியங்களும் நன்றாய்த் தெரியும் என்றும், ஆபத்து கிட்டியிருந்த போதிலும் அந்தச் சமயத்திற்கு ஏற்ற புத்திமதிகளை சொல்லி யாதொரு சேதம் இல்லாமல் வழிநடத்திக் கொண்டு போவாhர் என்றும் அவர்கள் அறிந்து கொண்டிருந்தபடியினாலும் இந்த மேய்ப்பர் முன் கிறிஸ்தியானுக்கும் அவன் தோழனுக்கும் சொன்ன எச்சரிப்புகளை அவர்கள் சோதனை உண்டான காலத்தில் நினைவுகூர்ந்து அதின்படி செய்யாமல் மறந்து போனபடியாலும் இந்தச் சமயத்தில் அவர்கள் பிரயாணிகளுக்கு யாதொரு எச்சரிப்பும் கொடுக்கவில்லை.
ஆதலால் முந்தின பிரயாணிகளைவிட இவர்கள் விஷயத்தில் பாக்கியசாலிகளாயிருந்தார்கள் என்றே சொல்ல வேண்டியது.
அப்புறம் அவர்கள்
(அம்மானை)
மோட்ச பிரயாணிகளுக்கு ஆறுதலை உண்டாக்க,
வழிப்போக்கரான நாமும் வாழ்ந்து களித்திருக்க,
அஞ்சல் அஞ்சலாய் இருக்கும் அரண்மனைகள் கண்டாயோ?
தங்களுக்கு தங்கள் தடுப்பார் எவரும் உண்டோ?
அல்ல, அல்ல கண்டவுடன் கதவைத் திறக்கிறார்கள்,
அந்தந்த வீட்டில் உள்ள அரும்பொருளைத் தருகிறார்கள்
இந்த உபசரணை பரலோக வாழ்வை எல்லாம்
இங்கேயே காட்டி, எதிர்நோக்கச் செய்யுதப்பா,
சத்திரங்கள் தோறும் தந்த பொருள் அனைத்தும்
தங்குவோர் அல்ல, நாம் பிரயாணி என்று உணர்த்தும்
என்று சொல்லி பாடிக்கொண்டே ஆனந்தமலை அரண்மனையை விட்டுத் தங்கள் வழியே போனார்கள்.
அவர்கள் ஆனந்த மலைத் தொடரை விட்டுக் கடந்தவுடனே கிறிஸ்தியான் பாதித்திய பட்டணத்தில் இருந்து வந்த மறுதலிப்பு என்பவனைச் சந்தித்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது திட நம்பிக்கை அவனைக் குறித்த சங்கதிகளை எல்லாம் பிரயாணிகளுக்குச் சொல்லத் தொடங்கி இந்த இடத்தில்தான் மறுதலிப்பு என்பவன் தன் செய்கையை முதுகின்மேல் போட்டுக் கொண்டு போகிறதாக கிறிஸ்தியான் கண்டான். அவன் காரியத்தைக்குறித்துச் சொல்லுகிறேன் கேளுங்கள்:- அவன் எவர்களுடைய ஆலோசனையையும் கேட்க மாட்டான். ஒரு தரம் பட்டால் ஒதுங்கி வாழும் புத்தி அவனுக்கு இல்லை. அவன் சிலுவை மரமும் கல்லறையும் இருக்கிறதே அந்த இடத்துக்கு வந்தபோது ஒரு ஆள் வந்து இதை நோக்கிப்பார் என்று சொல்லவே, அவன் பாராமல் தன் பல்லைக் கடித்து, காலால் தரையில் உதைத்து கொண்டு, தான் திரும்பவும் தன் ஊருக்கே போய்விடும்படி தீர்மானித்து இருக்கிறதாகச் சொன்னான். திட்டிவாசலுக்கு கிட்ட அவன் வந்தபோது சுவிசேஷகர் தமது கையை நீட்டி, இங்கே வா, சரியான பாதையில் உன்னை வைக்கிறேன் என்று கூப்பிட்டார். அவனோ அவருடன் எதிர்த்துப் பேசி அவரை வெகுவாய் அவமானப் படுத்திப் போட்டு சுவர் ஏறி விழுந்து ஓடிப்போனான் என்று சொன்னார்.
1. பலசாலிகளுக்கும் பலவீனருக்கும் ஒன்றுபோலவே ஒத்தாசையும் ஆறுதலும் அவசியம். ஒரே வகையான குறைச்சல் இரு வகுப்பாருக்கும் நேரிடாது. ஒவ்வொருவருக்கும் ஓரோர் குறைவு உண்டு. அவரவருக்கு ஏற்ற சவரட்சணையை தேவன் ஏற்படுத்தி இருக்கிறார். உதவி அவசியப்படாதபடி இருவரும் பூரண பலசாலிகளாய் இருப்பதும் இல்லை. தேவ பெலத்தால் ஸ்திரப்படுத்தக்கூடாதபடி அவ்வளவு பலவீனரும் இல்லை.
2. கண்ணாடி என்பது தேவ வசனம். அது தேவ பரிபூரணத்தையும் அவருடைய குணாதிசயங்களையும், நமது சொந்த லட்சணத்தையும் நிலைமையையுங்கூட வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1 : 22 – 25 வாசித்துப் பார்க்கவும்.
3. உண்மையும், ஜாக்கிரதையும் உள்ள போதகன்மாருடைய விசாரணை யின் கீழ் இருக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் நித்தமும் அவர்களுடைய எச்சரிப் பையும், ஒத்தாசையையும் பெற்றுக் கொள்ளுவார்கள். ஆனால் கிறிஸ்தி யானைப் போல் அஞ்ஞானிகள் நடுவில் ஒண்டியாய் குடியிருப்பவர்களுக்கு விசேஷித்த ஒத்தாசையும், போதனையும் தேவனிடத்தில் இருந்து நேரே வரவேண்டியது. போதகன்மாரின் கடமை பிரசங்கிப்பது மட்டும் அல்ல, சபையாரை நாள்தோறும் கரிசனையாய் விசாரணைபண்ணி எச்சரித்து தைரியப்படுத்துவதும் கூடத்தான்.