பிரயாணிகள் மாயாபுரியை விட்டது
அவர்கள் மாயாபுரியிலிருந்து புறப்பட்டார்கள். அவர்களுடைய சிநேகிதர் அவர்களை வழியனுப்பும்படி கொஞ்ச தூரம் போய் பிரயாணிகள் ஒவ்வொருவரையும் தங்கள் அரசரின் அன்புள்ள கிருபை நிறைந்த பாதுகாவலின் கரத்துக்குள் ஒப்புவித்து தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள்.
பிரயாணிகள் எல்லாரும் ஏகமாய் புறப்பட்டு வழிநடந்தார்கள். அவர்களுக்கு முன்னே தைரிய நெஞ்சன் போனார். அந்த ஸ்திரீகளும், பிள்ளைகளும் பெலவீனராய் இருந்ததால் அவர்கள் அலுத்துப் போகாதபடி எவ்வளவு தூரம் போகக்கூடுமோ அவ்வளவு தூரம்தான் நடந்து போனார்கள். அதிக நடை நடக்க அவர்களால் இயலாததை கண்ட நொண்டியும், ஏழைத்தனமும் அவர்கள் மேல் அனுதாபம் கொண்டார்கள்.
அவர்கள் ஊரைக் கடந்து வழிவிட வந்த சிநேகிதரையும் விட்டுத் தனிப்பட்டவுடனே தீவிரமாய் நடந்து உண்மை இரத்த சாட்சியாய் மாண்ட இடத்தண்டை வந்து சேர்ந்தார்கள். அவர்கள் அந்த இடத்தில் சற்று நேரம் தாமதித்து நின்று, அவர் தம்முடைய சிலுவையை பொறுமையோடு சுமந்து சாகும்படி தயை அருளின தயாபரரை துதித்தார்கள். ஏனெனில் அவர் விசுவாசத்தில் வல்வராக விளங்கி அந்த இடத்தில் மாண்டதால் அநேக நன்மைகள் மாயாபுரியில் உண்டானது என்ற உணர்வு அவர் மனதை ஏவி எழுப்பிற்று.
அப்புறம் அவர்கள் கிறிஸ்தியானையும், உண்மையையும் பற்றிப் பேசி, கிறிஸ்தியானோடு திடநம்பிக்கை கூடிக்கொண்ட விபரங்களை குறித்து சம்பாஷித்து வெகுதூரம் நடந்துபோனார்கள்.
அதின்பின்பு அவர்கள்: தேமாஸ் பயணத்தை தடுத்து விட்டதும், உபாயி விழுந்து மாண்டதாக சிலர் அனுமானிக்கிறதுமான வெள்ளிக் கேணியுள்ள திரவியகிரியண்டை வந்து சேர்ந்து, அவன் தன்மையைக் குறித்து மன தியானம் செய்து கொண்டு நின்றார்கள்.
பின்னும் அவர்கள் சற்று எட்டி நடந்து, திரவியகிரிக்கு எதிரே வழியோரமாய்ச் சோதோமின் எல்லைக்குள்ளும் சவக்கடலின் பள்ளத்தாக்குக்குள்ளும் இருந்த பழைய உப்புத்தூணண்டை வந்தவுடனே, அவர்கள் எல்லாரும் கிறிஸ்தியானைப் போல அதிசயப்பட்டு, தேமாஸையும், உபாயியையும் போலொத்த அவ்வளவு அறிவாளிளும், விவேகிகளும் இவ்வண்ணம் மதிகெட்டு மாண்டு போனார்களே என்று உணர்ந்து கொண்டார்கள்.1 அதினோடுகூட இந்தக் காட்சியால் உண்டாகும் போதனையை ஒருவன் தன் மூடாந்த காரமான கண்ணால் பார்க்கும்போது அவனுடைய மாமிச சுபாவம் மற்றவர்களுக்கு உண்டான ஆபத்தை உணர்ந்து கொள்ளுகிறதில்லை என்றும் ஆலோசித்துக் கொண்டார்கள்.
1. எவ்வளவு அறிவும் சாமர்த்தியமும் ஒருவனுக்கு இருந்தாலும் அதைக்கொண்டு அவன் தீமை செய்யாமல் இருக்கவேண்டும். அறிவும், சாமர்த்தியமும் மனதிலே மாத்திரம் இருக்கின்றன. ஆனால் தீமைக்கு விலகவேண்டுமானால் இருதயம் செம்மையாய் இருக்க வேண்டும்.