வலுசர்ப்பத் தொல்லை
இவர்கள் மாயாபுரியில் இருந்த காலத்தில் பக்கத்தில் இருந்த காட்டிலிருந்து ஒரு துஷ்ட மிருகம்1 எழும்பி வந்து அந்த ஊராரில் அநேகரை சங்காரம் செய்தது. அது சில தரம் சிறு பிள்ளைகளை கௌவிக் கொண்டு போய் தன் குட்டிகள் சூப்பிக் குடிக்கும் பாலையே சூப்பிக்குடிக்கும்படி பழக்குவித்தது. இந்த மிருகத்தை எதிர்த்து விரோதிக்கும்படி ஒருவனாலும் கூடாது போயிற்று. அது முக்காரம் போட்டுக் கொண்டு வருகிறதை கண்டவுடனே எல்லாரும் ஓட்டம் பிடிப்பார்கள்.
அதற்கு இணையான மிருகம் இந்த வையகத்தில் வேறொன்றும் இல்லை. அதற்கு வலுசர்ப்பத்தின் உடலும், ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன. அது பிள்ளைகுட்டிகளை நாசமாக்கினாலும் ஒரு ஸ்திரீயின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. (வெளி 17 : 3) இந்த மிருகம் மனுஷர் நடக்கவேண்டிய கட்டளைகளையும் விதித்து வந்தது. ஆத்துமாக்களைப் பார்க்கிலும் தங்கள் சரீரங்களை யார் யார் விசேஷித்து வந்தார்களோ அவர்கள் அதின் விதிகளைக் கைக் கொண்டார்கள். அப்படிக் கைக்கொண்டவர்கள் அதின் ஆளுகைக்கு உட்பட்டார்கள்.
இந்த வல்ல சர்ப்பத்தின் வாயில் இருந்தும், இதின் நிஷ்டூரங்களில் இருந்தும் மாயாபுரி ஜனத்தை விடுதலை செய்யும்படியாக என்ன பிரயத்தனம் செய்யலாம் என்று தைரிய நெஞ்சனும் அவனைச் சேர்ந்தவர்களும் பிரயாணிகளைச் சந்திக்கும்படி வந்த மற்ற உத்தமரும் மினாசோனுடைய வீட்டில் இருந்து ஆலோசித்து உடன்படிக்கை பண்ணிக் கொண்டார்கள்.
அந்த உடன்படிக்கையின் பிரகாரம்: தைரிய நெஞ்சன், நொறுங்கிய நெஞ்சன், பரிசுத்தன், சுத்தர்நேசன், பொய்சொல்லத் துணியான், மனஸ்தாபன் ஆகிய இவர்கள் தங்கள் அம்பறாத் துணிகளோடு புறப்பட்டுப்போனார்கள்.
அவர்கள் போன உடன் அந்த மிருகம் உக்கிர கோபத்தால் உப்பிக் கொண்டு அவர்களை வெகு அலட்சியமாய்ப் பார்த்தது. ஆனால், அவர்கள் தங்கள் அம்பறாத் துணிகளைத் திறந்து அம்புகளை சரமாரியாக அதின்மேல் ஓயாமல் எய்யவே அது படுகாயப்பட்டு, தன் குகைக்குள் போய் பதுங்கிக் கொண்டது. அப்போது அவர்கள் எல்லாரும் திரும்பி மினாசோனுடைய வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
இந்த வல்ல சர்ப்பம் வெளிப்பட்டு பிள்ளைகளை தூக்கிக் கொண்டு போகிற காலம் உண்டு. அந்த காலம் அறிந்து அந்த ஊர் பராக்கிரமர் விழிப்பாய் இருந்து அதின் பலத்தை குறைக்கும்படி பல பிரயத்தனங்களையும் செய்வார்கள். இப்படி அநேக வருஷங்களாய் செய்ததால் அதின் பலம் வர வர குறைக்கப்பட்டதால் அது பலவீனப் பட்டதோடு முடமாயும் போயிற்று. அது முடமானது முதல் மாயாபுரி பாலகரை தூக்கிக்கொண்டு போகவும் கூடாதிருந்தது. அதற்கு உண்டான படுகாயங்களால் அது சீக்கிரத்தில் செத்துப் போகும் என்று அந்த ஊருக்குள் ஒரு பேச்சும் நடந்தது.
இதனாலே தைரிய நெஞ்சனுக்கும் அவருடைய சிநேகிதர்களுக்கும் வெகு கீர்த்தி உண்டாயிற்று. அந்த ஊராரில் பலர் தங்கள் மனப் போங்கையே மாற்றும்படி பிரியப்படாவிட்டாலும் இவர்களை நேசித்து கனப்படுத்தி வந்தார்கள். 2 இந்த முகாந்திரத்தை முன்னிட்டு பிரயாணிகளுக்கு இந்த இடத்தில் அவ்வளவாய் துன்பங்கள் உண்டாகவில்லை. அவர்களில் இழிகுலத்தோரான சிலர் கண்ணற்ற கட்டை, மண் போலவும், அறிவற்ற மிருகம் போலவுமே இருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் மோட்ச பிரயாணிகளை எவ்வளவேனும் மதிக்கவே இல்லை. அந்தப் பிரயாணிகளால் உண்டான பாக்கியத்தை அவர்கள் உணரவும் இல்லை, அவர்களின் வல்லமையை குறித்து ஆச்சரியம் கொள்ளவுமில்லை.
மினாசோன் வீட்டில் சில காலம் தங்கியிருந்த மோட்ச பிரயாணிகள் புறப்படும் காலம் நெருங்கினபோது தங்கள் தட்டுமுட்டுகளை ஒழுங்கு செய்துகொண்டு, சிநேகிதர் எல்லாருக்கும் செய்தி அனுப்பி, அவர்களோடு சம்பாஷித்துக் கொண்டு, தங்கள் அரசரின் பாது காப்புக்குள் தங்களை ஒப்புக்கொடுக்கும்படி ஜெபதியானம் செய்தார்கள்.
அதோடு பெலவீனருக்கும், பலவான்களுக்கும், ஸ்திரீகளுக்கும், புருஷருக்கும் பயண ஆதரவுக்கேற்ற பல பதார்த்தங்களும் கொண்டு வந்து கொடுத்தார்கள். (அப்போஸ்தலர் 28 : 10)
1. இதினால் 1688 ஆம் வருஷத்திற்கு முன்பு இங்கிலாந்து தேசத்தில் இருந்த பாப்பு மார்க்க பிரபல்லியமும் அதின் அதிகாரமும் விளங்குகிறது. புராட்டஸ்டண்ட் மார்க்கத்தினராய் இருந்த பலர் பாப்பு மார்க்கத்தைத் தழுவிக்கொண்டார்கள். அதிகாரஸ்தர் பாப்பு மார்க்கத்தை சேர்ந்திருந்த படியால் ஒருவரும் அதை எதிர்க்கத் துணியவில்லை. பாப்பு மார்க்கத்தை இங்கிலாந்து தேசத்தில் பிரபலப்படுத்த திரும்பவும் முயற்சித்த பொழுது தைரிய நெஞ்சனைப் போன்றவர்களின் துணிச்சலான எதிர்ப்பால் அது முறியடிக்கப்பட்டது.
2. நல் ஒழுக்கமும், பரிசுத்தமும் உள்ள கிறிஸ்தவனைப்போல் அஞ்ஞானிகளும், துன்மார்க்கரும் இசைந்து நடக்காவிட்டாலும் அவன் அவர்களால் எப்போதும் கனம்பண்ணப்படுவான்.