பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்
அவர்கள் சத்திரத்தண்டை வந்தவுடனே கதவைத்தட்டாமலே உள்ளே சென்றார்கள். ஏனெனில் பிரயாணிகள் சத்திரத்தின் வாசலை தட்டுகிறது வழக்கம் இல்லை. அவர்கள் போன உடனே சத்திரத் தலைவரைக் கூப்பிட்டார்கள். அவரும் வந்தார். இன்று இராத்திரி இந்த இடத்தில் தங்கலாமா என்று கேட்டார்கள். (ரோமர் 16 : 23)
பரோபகார காயு: அதற்கு அவர்: துரைகளே! நீங்கள் நிஜஸ்தரானால் என் மடத்தில் தங்கி இருக்கலாம். ஏனெனில் இது மோட்ச பிரயாணிகளுக்கென்றே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றார். அதைக் கேட்ட கிறிஸ்தீனாளும் அவள் கூட்டத்தாரும் இந்த சத்திராதிபர் பிரயாணிகள் மேல் பிரியங்கொண்டு இருக்கிறதை அறிந்து மனச் சந்தோசம் அடைந்தார்கள். அப்புறம் தாங்கள் அமைதலாய் இருக்கும்படி இரண்டொரு அறைகளைக் காட்டினால் பெரிய சகாயமாய் இருக்குமென்று கேட்டுக்கொண்டார்கள். அப்படியே அவர், கிறிஸ்தீனாளும் அவள் பிள்ளைகளும், தயாளியும் தங்கியிருக்க ஒரு அறையையும், தைரிய நெஞ்சனும் அந்தப் பெரியவரும் தங்கியிருக்க வேறொரு அறையையும் காட்டினார்.
தைரி: தைரிய நெஞ்சன் சத்திரத்தானைப் பார்த்து: பரோபகார காயுவே! இன்று இரவு பிரயாணிகளுக்கு என்ன போஜனம் தரப் போகிறீர்? இவர்கள் நெடும் பயணம் பண்ணி வெகு இளைப்படைந்து வந்து இருக்கிறார்கள் என்றார்.
பரோ: இப்போது இருட்டிப்போனதால் கடைக்குப் போகவும் புதுப்பண்ட பதார்த்தங்களைக் கொள்ளவும் சமயம் இல்லை. இராமட்டுக்கும் சத்திரத்தில் இருப்பதைக் கொண்டு பசிஆற்றிக் கொள்ளும்படி மனமானால் மெத்த நலம் என்றார்.
தைரி: உமது வீட்டில் உள்ளதைக் கொண்டே காரியத்தை நடத்தினால் போதும். பிரயாணிகளுக்கு அவசியமான பதார்த்தங்கள் உம்மிடத்தில் இல்லாமல் போகாது என்று நான் அடிக்கடி அறிந்து கொண்டிருக்கிறேன் என்றார்.
உடனே பரோபகார காயு: அந்தச் சத்திரத்து சமையற்காரராகிய தவசிப்பிள்ளை அறுசுவைப்பட்டரைக் கூப்பிட்டு, இத்தனை பேருக்கும் சமையல் ஆகட்டும் என்று உத்தரவு பண்ணினார். அப்புறம் அவர் மறுபடியும் வந்து: வாருங்கள், உட்காருங்கள், என் உத்தம சிநேகிதரே வாருங்கள்! உங்களுக்கு என் வீட்டில் இடம் கொடுக்க நேரிட்ட பாக்கியத்தை என்ன சொல்லுவேன்! சமையல் ஆகுமட்டும் நாம் ஒருவரோடொருவர் பேசி மினவிக் கொள்ளுவது நலம் அல்லவா என்றார். அப்படியேஆகட்டும் ஐயா என்று எல்லாரும் சம்மதித்து கொண்டார்கள்.
பரோ: இந்தப் பெரிய அம்மாள் யாருடைய மனைவி? இந்தக் கன்னிப்பெண் யாருடைய மகள்?
தைரி: இந்த அம்மாள் முன் ஒரு காலத்தில் மோட்ச பிரயாணம் செய்த கிறிஸ்தியான் என்பவருடைய மனைவி. இந்த நால்வரும் அவருடைய பிள்ளைகள்தான். இந்த மாது இவர்களுக்கு அறிமுகமான வர்கள்தான். கிறிஸ்தீனாளுடைய ஏவுதலின்படி இவளும் கூடவே பயணம்பண்ணிக் கொண்டு வருகிறாள். இந்தப் பிள்ளைகள் தங்கள் தகப்பனாரைப் பின் தொடர்ந்து அவருடைய அடிச்சுவடுகளில் நடக்க ஆசைகொண்டு இருக்கிறார்கள். தங்கள் பிதா தமது பிரயாணத்தில் படுத்திருந்த இடத்தை அல்லது அவர் பாதம் பதிந்திருந்த காலடிகளைக் கண்டவுடனே இவர்கள் இருதயம் பூரிக்கிறது. அந்த இடத்திலே படுக்கவும் அந்தக் காலடியிலே தங்கள் பாதங்களை வைத்து நடக்கவும் இவர்கள் வெகுவாக ஆசைப்படுகிறார்கள்.
பரோ: இது கிறிஸ்தியானுடைய மனைவியா? இவர்கள் அவனுடைய மக்களா? நான் உன்னுடைய புருஷனுடைய பிதாவையும் அவனுடைய தகப்பனுடைய தகப்பனையும் அறிவேன். இந்தக் குடும்பத்தில் உள்ள பலர் மெத்த உத்தமராய் இருந்தார்கள். இவர் களுடைய பிதா பிதாக்கள் எல்லாரும் முதலாவது அந்தியோகியா பட்டணத்திலே வசித்துக் கொண்டிருந்தார்கள். (அப்போஸ்தலர் 11 : 26)
கிறிஸ்தியானுடைய சந்ததியார் எல்லாரும் பேர்போன மகாத்துமாக்கள்தான். 1 அதைப்பற்றி உன் புருஷன் சொல்லியும் இருக்கலாம். அவர்கள் எல்லாரும் பரதேசிகளின் ஆண்டவர் மேலும் அவருடைய வழிகள் மேலும் அவரை நேசிக்கிறவர்கள் மேலும் நான் அறிந்த பலரைவிட பூரண நாட்டமுள்ள சற்குணராய் இருந்தார்கள் என்று சொல்லுவேன். உன் புருஷனுடைய பந்துக்கள் பலர் சத்தியத்தின் நிமித்தம் எந்த துன்பங்களுக்கும் அஞ்சா நெஞ்சைக் காண்பித்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உன் கணவனுடைய குடும்பத்தின் முற்பிதாக்களில் முதல்வராகிய ஸ்தேவான் என்பவர் தலையில் கல்லெறியுண்டு இறந்தார். (அப்போஸ்தலர் 7 : 59, 60) அந்தச் சந்ததியைச் சேர்ந்த யாக்கோபு என்றொருவர் பட்டயத்தால் வெட்டப்பட்டார். (அப்போஸ்தலர் 12 : 2) உன் கணவரின் அதிபூர்வ பிதாக்களாகிய பவுலையும், பேதுருவையும் குறித்து ஒன்றும் விவரித்து தெரிவிக்கப்படாவிட்டாலும் சிங்கங்களுக்கு இரையான இக்னாஷியஸ் என்பவரும் எலும்பிலிருந்து வார் வாராய் சதை அறுத்து எடுக்கப்பட்ட ரோமானுசும், அக்கினி ஸ்நானம் பெற்ற போலிகார்ப்பும் அவன் சந்ததியாராய் இருந்தார்கள். ஈக்களுக்கு இரையாக ஒரு கூடையில் வைக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கவைக்கப்பட்டு இருந்தவரும், ஒரு சாக்கிலே பொதியப்பட்டு சமுத்திரத்தின் ஆழத்தில் எறிந்துவிடப்பட்டவரும் அவன் சந்ததியார்தான். மோட்ச பிரயாணிகள் ஆனதினால் உண்டான துன்பங்களையும், உபத்திரவங் களையும் இப்படியே சகித்த அவன் வம்சத்தார் எத்தனை பேர் என்று எண்ணி தொகையிட முடியாது. மேலும் உன் கணவன் தன்னைப் போல் பிரயாணம் போகும் இந்த நான்கு பிள்ளைகளையும் பின் வைத்துப் போனதை நான் பார்க்கும்போது என் மனம் பூரிக்கிறது. இவர்கள் தங்கள் தகப்பனின் பேரைக் கண்ணியப்படுத்தி தங்கள் பிதாவின் அடிச்சுவடுகளில் நடந்து அவன் அடைந்த பேரானந்த பதவியை அடைய வேண்டு மென்பதே என் இருதயத்தின் வாஞ்சை.
தைரி: நிச்சயமாகவே அவர்கள் அப்படிப்பட்ட வாலிபராக இருக்கிறார்கள். தங்கள் பிதாவின் பாதையில் கால் மிதித்து நடக்கவே ஆசையுடையவர்கள் போலக் காணப்படுகின்றது.
பரோ: நான் சொல்லுகிறதும் அதுதான். கிறிஸ்தியானுடைய குடும்பம் அக்கம் பக்கம் பிரபலமாகவும், இப்பூதலத்தில் விருத்தியா கவுமாக இவள் தன் மக்களுக்கு தகுந்த பெண்களைத் தெரிந்தெடுத்து நிச்சய தாம்பூலம் மாற்றி விவாகத்துக்கு ஏற்ற பிரயத்தனங்களை செய்வது உத்தமம். அப்போது இவர்கள் தகப்பனாருடைய பேரும், பிதா பிதாக்களின் பிரபலமும் இந்தப் பூதலத்திலே மங்காதிருக்கும்.
யதா: அந்த உத்தமனுடைய குடும்பம் அடியோடு அற்றுப்போவது எவ்வளவு விசனமான காரியமாய் இருக்கும்.
பரோ: அற்றுப்போகுமா? அப்படி ஆகவே ஆகாது. ஆனால் கிறிஸ்தீனாள் என் ஆலோசனையின்படி செய்யட்டும், அவன் குடும்பம் அற்றுப்போகாதிருப்பதற்கு அதே நல் வழி என்று சொல்லி, கிறிஸ்தீனாளைப் பார்த்து: கிறிஸ்தீனாளே! உனக்கும் உன்னோ டிருக்கும் தயாளிக்கும் நன்றாய் மனம் ஒத்து இருக்கிறதென்று காண்கிறேன். ஆதலால், இந்தக் கன்னிகையை உன் குடும்பத்தின் அவயமாய் இணைத்துக் கொள்ளுகிறது உத்தமமாக என் மனதில் படுகிறது. இவளை உன் மூத்த மகன் மத்தேயுவுக்கு விவாகம் செய்யத் தீர்மானித்தால் கிறிஸ்தியானுடைய சந்ததி இங்கே விருத்தியாகும் என்றார். அவர் சொன்ன யோசனையின்படியே அந்தக் காரியம் தீர்மானிக்கப்பட்டு விவாகமும் நடந்தது. அதைக் குறித்து பின்னாலே விவரமாய்ச் சொல்லுவோம்.
பின்னும் அந்த சத்திரத் தலைவர் சொல்லுவார்: என் நேசரே! ஸ்திரீகளைப் பற்றிய அவதூறு ஒழிந்து போகும்படி நான் அவர்கள் பட்சம் பேசுகிறதை கேளுங்கள். சாவும், சாபமும் ஸ்திரீயின் வழியாய் வந்தது போல, (ஆதியாகமம் 3 ஆம் அதிகாரம்) ஜீவனும், சுகமும் ஸ்திரீயின் வழியாகவே வந்திருக்கிறது. தேவன் தமது குமாரனை ஸ்திரீயினிடத்தில் பிறக்கும் படி செய்தார். (கலாத்தியர் 4 : 5) ஸ்திரீகள் தங்கள் ஆதித்தாயின் செய்கையை எவ்வளவாய் அரோசித்து வந்தார்கள் என்பது பழைய ஏற்பாட்டு ஸ்திரீகள் தங்கள் கர்ப்பக்கனியைக் குறித்துக் கொண்டிருந்த அபேட்சையினால் நன்றாய்த் தெரிய வரும். இந்த ஸ்திரீயாவது, அந்த மனுஷியாவது லோக இரட்சகரின் தாயாகிவிடமாட்டாளா என்று அவர்கள் எல்லாரும் ஆசையோடு எதிர்பார்த்து வந்தார்கள்.
பின்னும் கேளுங்கள்: இரட்சண்யமூர்த்தி திரு அவதாரம் எடுத்தபோது ஆண்களும் பெண்களும், தேவ தூதரும் அதைக் குறித்து சந்தோசம் கொண்டாடுமுன் பெண்களே சந்தோசம் கொண்டாடி னார்கள். (லூக்கா 1 : 42-46) மேலும் நான் வாசித்தமட்டும் ஸ்திரீகள் தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்து வந்தார்கள் என்று அறிந்தேனே அல்லாமல், ஆண் பிள்ளைகள் ஒரு காசாவது கொடுத்து உதவினதாக நான் கண்டதில்லை. (லூக்கா 8: 2, 3) இரட்சகரின் திருப்பாதத்தை தன் கண்ணீரால் கழுவினது ஒரு ஸ்திரீதான். (லூக்கா 7 : 37 -50) அவரை அடக்கம் பண்ணுவதற்கு ஏற்ற அபிஷேகத்தை செய்ததும் ஒரு ஸ்திரீதான். (யோவான் 11 : 12; 12 : 3) அவர் சிலுவை சுமந்து போகும்பொழுது அவருக்குப் பின்னாக அழுது சென்றவர்களும் ஸ்திரீகள்தான். (மத்தேயு 27 : 55, 56, லூக்கா 23 : 55) அவர் அடக்கம் பண்ணப்பட்ட பின்பு கல்லறைக்கு எதிரே உட்கார்ந்து இருந்தவர்களும் ஸ்திரீகள்தான். (லூக்கா 24 : 1) அவர் உயிரோடு எழுந்த அருணோதயத்தில் அவரை முதலாவது தரிசித்ததும் ஸ்திரீகள்தான். (மத்தேயு 27 : 61) அவர் உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியை முதன் முதல் சீஷருக்குச் சொல்லும்படி வந்தவர்களும் ஸ்திரீகள்தான். (லூக்கா 24 : 22, 23) இவை எல்லாம் ஸ்திரீகள் மேலான கிருபையைப் பெற்று இருந்தார்கள் என்பதை தெளிவாய்க் காட்டி நித்திய ஜீவனாகிய கிருபைக்கு அவர்களும் பங்காளிகள் என்பதை நன்றாய் உணர்த்து கிறதாய் இருக்கின்றன என்றார்.
இந்தச் சமயத்திலே தவசிப்பிள்ளையாகிய அறுசுவைப்பட்டர் சமையல் வேலை ஏறக்குறைய முடிகிறதென்று காட்டும்படி ஒருவனை அனுப்பி பந்தி மேஜையின்மேல் துப்பட்டி விரிக்கவும் போஜனத் தட்டுகளைப் பரப்பி உப்பும், அப்பமும் ஒழுங்குபண்ணி வைக்கவும் திட்டம்பண்ணினான். அதைக் கண்ட மத்தேயு: ஆள் வந்ததும், துப்பட்டி விரித்ததும், கலங்கள் பரப்பினதும் எல்லாம் இல்லாத பசியை எனக்கு இழுத்துவிட்டது போல் இருக்கிறது என்றான்.
பரோ: அப்போது காயு: உன் ஆத்துமாவுக்குப் பரிமாறப்படும் ஜீவ உபதேசங்கள் எல்லாம் இந்த உலகத்தில் உனக்கு இந்த வண்ணமாகவே பசியை எழுப்பி மகா ராஜாவுடைய ராஜ்யத்தின் இராப்போஜன பந்தியில் உன்னை உட்காரச் செய்வதாக. ஏனெனில் இங்குள்ள பிரசங்கங்களும், பிரபந்தங்களும், நியமநிஷ்டைகளும் எல்லாம் நாம் நமது ஆண்டவருடைய ராஜ்யத்தில் சேரும்போது அனுபவிக்கும் மகா விருந்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கலங்களைப் பரப்பி உப்பை வைக்கிறாற்போலவே இருக்கிறது என்றார்.
இதற்குள்ளாக போஜன பதார்த்தங்கள் கொண்டு வரப்பட்டன. 2 அவர்கள் தங்கள் போஜனத்தை தேவனை நோக்கிச் செய்யும் ஜெபத்தோடும், ஸ்தோத்திரத்தோடும் புசிக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதை குறிப்பிக்கும்படி ஏறெடுத்த முன்னந் தொடையும், அசைவாட்டப்பட்ட மார்க்கண்டமும் முதலாவது மேஜையின் மேல் வைக்கப்பட்டது. தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக தன் இருதயத்தை உயர்த்தி ஏறெடுத்த முன்னந் தொடையும் அவன் கின்னரம் வாசித்த போதெல்லாம் சாய்ந்து கொண்டிருந்த அசைவாட்டின தன் ஆத்துமாவின் நம்பிக்கையாகிய மார்க்கண்டமுமே கொண்டு வந்து வைக்கப்பட்டது. (லேவியராகமம் 7 : 32, 34 சங்கீதம் 25 : 1 எபிரேயர் 13 : 15) இந்த இரண்டு தட்டுகளும் ருசிகரமாக சமைக்கப் பட்டு சுடச்சுட இருந்தன. அவர்கள் எல்லாரும் அவற்றை ஆசை தீரப் புசித்தார்கள்.
அப்புறம் இரத்தம் போன்ற திராட்ச ரசம் கொண்டு வந்து வைக்கப்பட்டது. (உபாகமம் 32 : 14 நியாதி 9 : 13, யோவான் 15 : 5) உடனே மடாதிபதி அவர்களை நோக்கி: இது தேவனுடைய இருதயத்தையும், மனிதனுடைய இருதயத்தையும் மகிழ்ச்சியாக்குகிற சுயம்பான திராட்சரசம். இதில் மனம் கொண்ட மட்டும் குடியுங்கள் என்றார்.
அப்புறம் ஆடை உறைந்த பால் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அப்போது மடாதிபதி பிள்ளைகள் நன்றாய் வளரும்படி அவர்கள் அதை குடிக்கட்டும் என்றார். (1 பேதுரு 2 : 1, 2)
அப்பால் வெண்ணெயும் தேனும் கலந்த ஒரு தட்டு கொண்டு வரப்பட்டது. உடனே காயு: இதில் தாரளமாய்ச் சாப்பிடுங்கள்.
நீங்கள் அறிவையும், வரையறுக்கும் உணர்வையும் அடையும்படி இது உங்களுக்கு உற்சாகத்தையும் பலத்தையும் தரும் போஜனம் ஆனது. நமது ஆண்டவரின் பாலிய வயதின் போஜனம் இதுவே. “தீமையை வெறுத்து நன்மையை தெரிந்துகொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்” என்று உரைக்கப் பட்டிருக்கிறது என்றார்.
அதின் பின்பு ஒரு பாத்திரத்தில் பழவர்க்கங்கள் கொண்டு வரப்பட்டன. அவைகள் மதுர கனிகளாக இருந்தன. அதைக்கண்ட மத்தேயு என்பவன் நமது ஆதித்தாயைப் பாவியாக்கினது ஒரு பழம் அல்லவா? அப்படி இருக்க நாம் இதை தின்னலாமா? என்றான்.
அதற்கு மடாதிபதி:
அம்மானை
பழத்தாலேதான் அப்பா, படுகேடு வந்ததானால்,
பழம் அல்ல, கேடெல்லாம் வந்ததே பாவத்தினால்,
தின்னாக் கனியைத் தின்றால் உதிரம் கெடும்,
அன்னப் புறாவே, அரிய திருச்சபையே!
அன்பால் மயங்கிவிடும், அன்னமே மெய்ச்சபையே,
பண் அப்பா பானம் பருகு: துருத்தி ரசம்
உண் அப்பா உண்ணு உயிர் தருமே இந்தப் பழம்
என்று சொன்னார்.
அதற்கு மத்தேயு: ஐயா! சில காலத்துக்கு முன் சில பழங்களை நான் தின்று போட்டு மெத்தவும் வியாதிப்பட்டேன். அதினாலேதான் இப்படிச் சொன்னேன் என்றான்.
அதற்கு அவர்: விலக்கப்பட்ட கனியால் வியாதி வருவது மெய், ஆனால் அவர் கட்டளையிட்ட கனிகளை தின்றால் நோய் அணுகாது என்றார். (ஏசாயா 7 : 15)
இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு தட்டில் வாதுமைக் கொட்டைகள் கொண்டு வந்து வைக்கப்பட்டது. (உன்னத 6 : 11)
அப்போது விருந்தாளிகளில் சிலர்: இவை போன்ற வலிய கொட்டைகள் மெல்லிய பல்லுடையவர்களுக்கும் விசேஷமாய் பிள்ளைகள் பல்லுக்கும் ஆகாது. பல் உடைந்தே போகும் என்றார்கள். அதைக்கேட்ட பரோபகார காயு:
அரும்பதமே கொட்டையாம்
அது ஏமாற்ற மாட்டாதாம்
அதின் உள்ளேயே பருப்பாம்
ஓட்டைத் தட்டி எடுக்கலாம்
ஓய்வில்லாமல் புசிக்கலாம்
என்றார்.
அப்புறம் அவர்கள் பூரண மகிழ்ச்சியோடே பல காரியங்களையும் குறித்து பந்தி மேஜையில் இருந்தே பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்தச் சமயத்தில் யதார்த்தன் என்னும் பெரியவர் மடாதிபதியைப் பார்த்து: ஐயா! உம்முடைய கொட்டைகளை உடைத்துத் தின்று கொண்டிருக்கும் போதே நான் போடுகிற விடுகதையை விடுவியும் பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டு இந்த விடுகதையைப் போட்டார்.
இருந்தான் ஒருவன்
எண்ணினார் பித்தனாய்
கொடுத்தான் வாரி
எடுத்தான் ஊறி.
இந்த விடுகதையை போட்டவுடனே காயு இதற்கு என்ன மறு மொழி கொடுக்கிறார் பார்ப்போம் என்று எல்லாரும் அவருடைய வாயைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் சற்று நேரம் மௌனமாய் இருந்து ஆலோசித்து விடுகதைக்கு மறுமொழியாக:
ஏழைகளுக்கு இறைத்தோன் – (தான்)
இறைத்த தொகையோடே
பத்துப் பங்கு பெறுவான் – (கதை)
விடுவித்தேனே, அண்ணே!
என்று சொன்னார்.
காயு கதையை விடுவித்த உடனே யோசேப்பு என்றவன் அதிசயப்பட்டு, ஐயா! இந்தக் கதையை இவ்வளவு சீக்கிரத்துக்குள் கண்டு பிடித்துக் கொள்ளுவீர் என்று நான் நினைக்கவே இல்லை என்றான்.
அதற்குப் பரோபகார காயு: ஓ, இம்மாதரிக் கதைகளில் நான் நன்றாக பழகி இருக்கிறேன். நான் பரோபகாரம் உடையவனாக இருக்க என் ஆண்டவரால் படித்துக் கொண்டேன். அதில் எனக்கு அதிக லாபம் உண்டென்று அனுபோகத்தால் அறிந்தும் இருக்கிறேன். வாரி இறைத்தும் விருத்தி அடைவாரும் உண்டு. அதிகமாய் பிசினித்தனம் பண்ணியும் வறுமை அடைவாரும் உண்டு. ஆண்டியாய் இருந்தும் தன்னை அரசனாக பாராட்டுகிறவனும் உண்டு. அரசனாய் இருந்தும் தன்னை ஆண்டியாய்ப் பாராட்டுகிறவனும் உண்டு என்றார். (நீதிமொழிகள் 11 : 24 13 : 24)
அப்போது சாமுவேல் என்பவன் தன் தாயாகிய கிறிஸ்தீனாளின் காதண்டை போய்: அம்மா! இந்த வீட்டு எஜமான் மெத்த நல்லவர் போல் தெரிகின்றார். நாம் இங்கே கொஞ்சகாலம் இருந்தால் நல்லது. அண்ணாச்சி மத்தேயுவுக்கு நாம் இந்த இடத்தைவிட்டு புறப்படு முன்னே தயாளியை கலியாணம் பண்ணிப் போடுவது நல்லது என்று சொன்னான்.
அதை எப்படியோ ஜாடையாய் கேட்டுக்கொண்ட பரோபகார காயு அப்படியே ஆகட்டும் மகனே! உங்கள் மனம் போல் இருந்து மெதுவாய்ப் போங்கள் என்றார். அப்படியே அவர்கள் எல்லாரும் சுமார் ஒரு மாத காலம் அந்த மடத்திலேயே வசித்தார்கள். இதற்குள்ளாக தயாளிக்கும் மத்தேயுவுக்கும் கலியாணம் நிறைவேறிற்று. இந்த இடத்தில் இருக்கும் போதும் அவள் தன் வழக்கம்போல் ஏழைகளுக்கென்று பல உடுப்புகளை தைத்தாள். அதினாலே மோட்ச பிரயாணிகளுக்குள் இவளைப்பற்றி நற்சாட்சி உண்டாயிற்று.
இது நிற்க, நாம் நமது கதையைத் துவக்குவோமாக. இராப் போஜனம் ஆனபின் பாலியர் மெத்தவும் இளைப்பாய் இருந்ததால் அவரவர் படுக்கைக்குப் போகும்படி பிரயத்தனப்பட்டார்கள். உடனே அந்த மடத்துக்கு எஜமான் எழுந்து: வாருங்கள், நான் உங்கள் படுக்கைகளை காட்டுகிறேன் என்றார். அதற்குள்ளாக தயாளி: நான் அவர்களை படுக்கை வைக்கிறேன், நீர் வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லி அவர்களை படுக்க வைத்தாள். அவர்கள் நன்றாய் தூங்கி விட்டார்கள். மற்றவர்களோ இரா முழுவதும் விழித்துக் கொண்டிருந் தார்கள். ஏனெனில் மடாதிபராகிய பரோபகார காயு அவ்வளவு நல்லவராய் அவர்கள் மனதுக்கு ஒத்துப் போனதால் அவரை விட்டு ஒரு நிமிஷமாவது பிரிய அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் வெகு நேரமாய் தங்கள் ஆண்டவரைப்பற்றியும் பிரயாணத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கவே முன் விடுகதை போட்ட யதார்த்தன் என்ற பெரியவர் மெதுவாய் தலை ஆட்டத் தொடங்கினார். உடனே தைரிய நெஞ்சன்: என்ன பெரியவரே! தூக்கம் கண்ணை மருட்டுகிறதோ, கண்ணைத் துடையும், உமக்கு ஒரு கதை போடுகிறேன் என்றார். அவர் மெதுவாய் கண்ணை கசக்கிக் கொண்டு அந்தக் கதையை சொல்லும் பார்ப்போம் என்றார். அப்போது தைரிய நெஞ்சன்:
கொல்ல வல்லோன்(முன்) தோற்க வேண்டும்
வாழ வல்லோன் (தான்) சாகவேண்டும்
என்று சொல்லி ஒரு விடுகதை போட்டார். ஆகா! இது மிகவும் நெருடான ஒரு விடுகதை, இதை விளக்கிச் சொல்லுவதும் கஷ்டம், அப்பியாசிப்பதும் வருத்தம். ஐயா, மடாதிபதியே! என் வேலையை உமக்கு ஒப்புவித்து விடுகிறேன். நீரே அதை விடுவியும், நான் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று அந்தப் பெரியவர் சொன்னார்.
அதற்கு பரோபகார காயு: அப்படி வேண்டாம் ஐயா! உமக்கு போட்ட விடுகதையை நீரே விடுவிக்க வேண்டியது என்றார். அப்புறம் அந்தப் பெரியவர், நல்லது நானே விடுவிக்கிறேன்.
கிருபை கத்தியால் வெட்டுண்டோன் (பாவ)
கிரியை புத்தியைக் கொன்றிடுவான்.
ஆவியின் ஜீவனை உணர்த்துவோன் (பாவ)
மாமிசத்துக்கு மாண்டிருப்பான்.
என்று மறுமொழி சொன்னார்.
அது கேட்ட பரோபகார காயு: இது யதார்த்தமான வார்த்தை. சத்திய உபதேசமும், அனுபோகமும் இதை நமக்கு உணர்த்துகிறது. ஏனெனில், முதலாவது கிருபையானது தனது மகிமையோடு ஆத்துமாவில் பிரசன்னமாகி அதைக் கீழ்ப்படுத்தும் மட்டும் ஆத்துமா பாவத்தை முழுப்பகையாய் எதிர்க்கச் சக்தியற்றிருக்கிறது. மேலும் பாவமானது நமது ஆத்துமாவை கட்டி உருட்டும் கயிறுகளானால், அக்கட்டுகள் அவிழ்க்கப்படுமுன் ஆத்துமா என்னதான் செய்யக்கூடும்? இரண்டாவது, தன் மாமிச இச்சைக்கு அடிமையாய் இருக்கிற ஒருவன் தேவகிருபையை பிறருக்கு உணர்த்தும் ஸ்தம்பம் போல் இருப்பான் என்று எந்த புத்திமானாவது அந்தக் கிருபையைப் பெற்றிருக்கிற வனாவது நம்பவே மாட்டான். இதற்கு இசைவான ஒரு கதை என் ஞாபகத்துக்கு வருகிறது. அதைக் கேட்டால் மெத்த இன்பமாயிருக்கும். இரண்டு பேர் மோட்ச பிரயாணம் போனார்கள். அவர்களில் ஒருவன் தன் இளம் பிராயத்திலும் மற்றவன் தன் விருத்தாப்பியத்திலும் பயணம் பண்ண ஆரம்பித்தார்கள். அந்த வாலிபன் அறுத்து எடுத்து தள்ளிவிட்டு போகவேண்டிய அநேக மாம்ச சிக்குகள் இருந்தன. விருத்தாப்பியனோ கைகால் தள்ளாடி, காலம் கடந்துவிட்ட வயோதிபனாய் இருந்தான். இந்த வாலிபன் விருத்தாப்பியனைப் போலவே தன் பாதையில் லேசாய் நடந்து அவனைப்போலவே தொந்தரவு இல்லாமல் பயணம் செய்தான் என்று வைத்துக் கொள்ளுவோம். இவர்கள் இருவருடைய கிருபையும் ஒன்று போலவே இருந்தாலும் இவர்களில் யாருடைய கிருபையானது பளிச்சென்று பிரகாசிக்கிறது?
யதா: அந்த வாலிபனுடையதே பிரகாசிக்கிறது என்பதற்கு சந்தேகம் இல்லை. சிக்கறுத்து தடை எதிர்த்து செல்லுவது எதுவோ அதுவே வல்லமை உள்ளதென்று தெளிவாகிறது. விசேஷமாய் விருத்தாப்பிய காலப் பயணத்தில், யாதொரு தொந்தரவு அற்றுச் செய்யும் பயணத்தில், எவ்வண்ணம் கால் எடுத்து நடக்கிறானோ, அந்த வண்ணமே சிக்குமுக்குள்ள பாலிய காலத்தில் இவன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறபடியால் அந்த வாலிபனுக்குள் இருக்கும் கிருபையே அதிகப் பிரகாசமாய் இருக்கிறதென்று சொல்ல வேண்டியது. 3
இந்த விஷயத்தில் விருத்தாப்பியர் தங்களை தப்பிதமாய் பெருமைப்படுத்திக் கொள்ளுகிறதை நான் கவனித்திருக்கிறேன். சரீரத்தின் சத்துவங்கள் எல்லாம் அடங்கிப்போன காலத்தில் மோட்ச பிரயாணிகள் ஆகிவிட்டு கிருபையினாலே மாமிச இச்சைகளை ஜெயித்து விட்டோம் என்று சொல்லி தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொள்ளுகிறார்கள். தேவ கிருபைகளை பெற்ற விருத்தாப்பியர் தங்கள் உள்ளத்தில் எவ்வளவு கிருபையற்றிருந்த நிலைமையை அனுபோகத்தால் அறிந்திருக்கிறதால் அந்த கிருபையின் கிரியை களைப் பற்றி வாலிபருக்கு உணர்த்திக் காட்டத் தகுதியுடையவர்களாய் இருக்கிறார்கள் என்பது மெய்தான். என்றாலும் ஒரு வாலிபனும், விருத்தாப்பியனும் ஏக காலத்தில் பயணப்பட்டார்களானால் அந்த விருத்தனின் மாம்ச சத்துவங்கள் பலவீனப்பட்டிருப்பதால் அவன் கிருபையின் கிரியைகளைக் கண்டறிவது லேசானாலும் இந்த வாலிபனும் அவன் அவ்வளவு அந்த கிருபையை தனக்குள் அறிந்து கொள்ள ஏதுவுள்ளவனாய் இருக்கிறான் என்றார். இப்படி இவர்கள் அன்று விடியுமட்டும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதிகாலையில் பிள்ளைகள் எல்லாரும் எழுந்த பின்பு கிறிஸ்தீனாள் தன் மகன் யாக்கோபைக் கூப்பிட்டு: வேதத்தில் ஒரு அதிகாரம் வாசி அப்பா, என்றாள். அவன் ஏசாயாவின் தீர்க்கத்தரிசனம் ஐம்பத்து மூன்றாம் அதிகாரத்தை வாசித்தான். வாசித்து ஆனபின்பு யதார்த்தன் என்னப்பட்ட பெரியவர் நமது இரட்சகர் வறண்ட நிலத்தில் இருந்து துளிர்க்கிற வேரைப்போல் எழும்புவார் என்றும் அவருக்கு அழகும், சௌந்தரியமும் இல்லை என்றும் சொல்லப் படுவானேன் என்று கேட்டார்?
தைரி: அதற்கு தைரிய நெஞ்சன் சொல்லுகிறார்: கிறிஸ்து தோன்றின யூதச்சபையானது அந்தக் காலத்தில் மெய்மார்க்கத்தின் உயிரும் சாரமுமற்று இருந்ததினால் அவர் வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேர் போல் இருப்பார் என்று சொல்லப்பட்டது.
அவரைப்பற்றிய இரண்டாம் குறிப்பு அவிசுவாசிகளுடைய எண்ணத்தை காண்பிக்கின்றது என்று சொல்லுவேன். இரத்தின பரீட்ஷை அறியாதவர்கள் முதல்தரமான சில கற்கள் வெளிக்கு உதவாத காவிக்கல்லுகள் போல் காணப்படுகிறதை மாத்திரம் பார்த்து தூர எறிந்துவிடுவார்களே. அதுபோல இந்த அவிசுவாசிகள் நமது இரட்சண்ய பிரபுவின் உள் காரியங்களை உற்று ஆராயத்தக்க கண் அற்றவர்கள் ஆனதால் அவருடைய வெளிக் காரியங்களை மாத்திரம் கவனித்து அசட்டைப்பண்ணிப் போடுகிறார்கள் என்றார்.
அதன் பின்பு அந்த மடாதிபதி: நீங்கள் எல்லாரும் இந்த இடத்தில் வந்திருக்கிறீர்களே, அதுவுமன்றித் தைரிய நெஞ்சன் என்பவர் வில்வீர பராக்கிரமர் என்றும் நான் அறிவேன். ஆகையால் சாப்பிட்ட பின்பு வயல் வெளிகளில் போய் சற்று உலாவி ஏதாவது நன்மை செய்யலாமா என்று பார்ப்போம். 4 சுமார் ஒரு மைலுக்கு அப்பால் நலங்கொல்லி என்று பேர் வழங்கிய ஒரு அரக்கன் வசிக்கிறான். ராஜ பாதையின் வழி போகும் மோட்ச பிரயாணிகளுக்கு அவனால் உண்டாகிற தொல்லை கொஞ்சம் அல்ல. அவனுடைய போக்குவரத்துப் பாதையை எல்லாம் நான் அறிவேன். திருடர் கூட்டம் ஒன்றுக்கு இவனே தலைவன். இந்த திசைகளிலிருந்து அவனை அடியோடு அகற்றிவிட்டால் அதைப் போலொத்த சகாயம் வேறொன்றும் இல்லை என்றார். அந்தச் செய்தி கேட்ட நிமிஷமே அவர்கள் எல்லாரும் எழுந்து புறப்பட்டார்கள். தைரிய நெஞ்சன் பட்டயம், தலைச்சீரா, கேடயம் இவைகளோடு புறப்பட்டார். மற்றவர்களோ ஈட்டிகளோடும் தடிகளோடும் எழுந்து போனார்கள்.
அவனுடைய குகைக்கு முன் போகவே, தன் கையின் கீழ் இருந்த சேவகரால் வழியில் கொள்ளையாடி பிடிக்கப்பட்ட ஏழைத்தனம் என்பவனை அவன் கைப்பிடியாய் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டார்கள். நலங்கொல்லி அவன் மாமிசத்தை தின்னவேண்டும் என்று கருதி அவன் உடலை முறித்துச் சதையை உரிக்கும்படி ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.
ஏனெனில் அவன் நரமாமிசம் சாப்பிடுவது வழக்கமாய் இருந்தது. 5
தைரிய நெஞ்சனும் அவர் பட்சத்தாரும் ஆயுதபாணிகளாய் தன்கெபியின் வாசலில் வந்து நிற்கிறதை அவன் கண்டு, நீங்கள் இங்கே வந்த காரியம் என்ன? என்று கேட்டான்.
தைரி: நீதான் எங்களுக்கு வேண்டியதாய் இருக்கிறது. ராஜ பாதை வழி போன பல பிரயாணிகளின் பொருளை நீ கொள்ளை அடித்து, அவர்கள் உயிரை நாசமாக்கினதையிட்டு உன்னைப் பழிவாங்கும்படி நாங்கள் வந்திருக்கிறோம். ஆதலால், நீ கெபியிலிருந்து எழுந்துவா என்றார். நல்லது ஆகட்டும் என்று அரக்கன் தன் ஆயுதங்களோடு கெபியிலிருந்து வெளியேறி சண்டைபண்ண இருவரும் சுமார் ஒரு மணி நேரம் அளவு கடும்போர் புரிந்து அப்புறம் இளைப்பாறிக் கொள்ளும்படி சற்று நேரம் சும்மா நின்றார்கள்.
நலங்கொல்லி: அப்புறம் அரக்கன் சொல்லுகிறான்: நம்முடைய பூமியில் நீ அச்சமின்றி நிற்கிற காரணம் ஏது?
தைரி: நான் முன்னே சொன்னபடி மோட்ச பிரயாணிகளின் இரத்தத்துக்காக பழிவாங்கவே இங்கே வந்தேன் என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் அந்த அரக்கனை எதிர்த்துச் சண்டையிட்டார். உடனே அரக்கன் உதைத்த உதையால் தைரிய நெஞ்சன் அப்பால் எட்டி விழுந்தார். மறுபடியும் அவர் எழுந்திருந்து அட்டகாசம் பண்ணிப் பாய்ந்து அரக்கனுடைய தலைமேலும் கழுத்திலும் விலாவிலும் படுகாயப்பட வெட்டினார். அதினால் அவன் தன் ஆயுதங்களை பயன்படுத்த கை வழங்காமல் அபஜெயப்பட்டு விழுந்தான். தைரிய நெஞ்சன் மறுபடியும் வாள் வீசி அவனை அடித்துக் கொன்று அவன் தலையையும் வெட்டித் தமது கையில் தூக்கிக் கொள்ள, எல்லாரும் ஏகமாய் களிகூர்ந்து, ஜெயம், ஜெயம் என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள். அதுவும் அன்றி ஏழைத்தனம் என்ற சிறையையும் விடுதலை பண்ணி தங்களோடு கூட்டிக்கொண்டு சத்திரம் வந்து சேர்ந்தார்கள். அப்பால், அரக்கனுடைய தலையை அவ்விடத்தார் எல்லாருக்கும் காட்டி மோட்ச பிரயாணிகளை மோசம் பண்ணுகிறவர்களுக்கு எச்சரிப்பாகும்படி மற்ற சத்துருக்கள் தலையைப்போல் இவன் தலையையும் ஒரு கழுவில் ஏற்றி வைத்தார்கள்.
ஏழைத்தனம்: அதற்கு அந்த ஏழை மனுஷன் சொல்லுகிறான்: ஐயாமாரே! நீங்கள் பார்க்கிறபிரகாரம் நான் ஒரு நோயாளி. மரணமானது என் மனதின் வாசலை அடிக்கடிவந்து தட்டினதால் நான்இந்த வீட்டில் சுகமாய்க்காலம் கழிப்பது முற்றும் இயலாத காரியம் என்றுகண்டு, மோட்ச பிரயாணம் செய்யும்படி தீர்மானித்து, என் பிறந்தகமும் என் பிதாவின் பூர்வ காணியாட்சியுமாகிய நிர்நிசபுரியிலிருந்து புறப்பட்டேன். நான் சரீர பலமும், மனோ பலமுமற்ற ஒரு நிர்ப்பந்தனாய் இருந்தாலும், கூடுமானால் கொஞ்சம் கொஞ்சமாவது நகர்ந்தாவது உச்சிதபட்டண பயணத்தில் என் ஜீவியத்தை போக்க ஆசைப்பட்டேன். நான் ராஜ பாதையின் ஆரம்பத்தில் இருக்கிற திட்டிவாசலை சேர்ந்தபோது அந்த அரண்மனையின் அதிபதி என்னைத் தடையின்றி சேர்த்துக் கொண்டார். என் சரீர பெலவீனத்தைப் பார்த்தாவது என் மனோ பலத்தையிட்டாவது அவர் என்னை அசட்டை செய்து தள்ளிப் போடவில்லை. அவர் என் பயணத்துக்கு அனுகூலமான வஸ்துக்களை எல்லாம் தாமாகவே வலிய தந்து நீ முடிவுபரியந்தம் போய்ச்சேர விரும்புகிறேன் என்று என்னை வாழ்த்தியும் அனுப்பினார். நான் வியாக்கியானியுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அங்கே எனக்கு நடந்த உபசரணைகள் அருமை அருமையாகும். கஷ்டகிரி மலை ஏற என்னால் கூடாது என்று அவர் கண்டு தமது ஊழியக்காரன் ஒருவனை அனுப்பி என்னைத் தூக்கிச் சுமக்க திட்டம் செய்தார். வழியில் குறுக்கிட்ட மோட்ச பிரயாணிகளால் எனக்கு மிகுந்த சகாயம் கிடைத்தாலும் அவர்களில் எவர்களாவது என் பெலவீனத்துக்கு ஏற்றபடி அடி நடையாய் என்னைக் கூட்டிக்கொண்டு போக சந்தர்ப்பப்படவில்லை. என்றாலும், என்னை வழியில் பார்க்கும் பிரயாணிகள் எல்லாரும் திடமனதாய் இரு அப்பா! திடனற்றவர்களைத் தேற்றுவது தேவனுடைய திருச்சித்தமாய் இருக்கிறது (1 தெச 5 : 14) என்று சொல்லிவிட்டுப் போவார்கள். நான் போர்ச் சந்தில் வருகிற சமயத்தில் இந்த அரக்கன் என்னைக் கண்டு என்னோடு சண்டைபோட வா என்று கூப்பிட்டான். ஆனால், ஐயோ என்னைப்போல பலவீனனால் என்ன ஆகும்? பிணக்கு பண்ணுவதிலும் இணங்கிப்போவதே என்னால் ஆகக்கூடியதாய் இருந்ததால் அந்த அரக்கனுடைய சிறை ஆனேன். அவன் நம்மைக் கொல்லமாட்டான் என்று எண்ணியிருந்தேன். மேலும் நானே அல்ல, அவனே என்னை தன் குகைக்குள் கூட்டிக் கொண்டு போனதால் உயிரோடு திரும்பி வந்து விடுவேன் என்றே நினைத்திருந்தேன்.
ஏனெனில் எந்த ஒரு பரதேசி ஒரு அரசனால் சிறையாக்கப் படுவானோ அந்த பரதேசி அரசனுக்கு அடங்கி ராஜாபிமானம் உள்ளவனாய் விளங்கினால் அவன் சிட்சைக்கு உட்படலாகாதென்ற தெய்வீக கருணைக் கட்டளையை நான் கேள்விப்பட்டிருந்தேன். முதலைப் பறிகொடுத்தவன் போலும், முதலை பறிகொடுத்தவனாயும் நான் காணப்பட்டாலும் இப்பொழுது நீங்கள் பார்க்கிற பிரகாரம் தப்பிக் கரையேறி இதோ உங்கள் முன் நிற்கிறேன். இந்த இரட்சிப்புக்கு ஆதிகாரணராகிய என் ராஜாவையும் துணைக்காரணராய் இருந்த உங்களையும் ஸ்தோத்திரிக்கிறேன். இன்னும் பல பாடுகள் என்னைப் பின் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனாலும், இப்பொழுது நான் பெற்ற விடுதலையினாலே ஒரு தீர்மானம் பண்ணியிருக்கிறேன். அதாவது, என் பிரயாணத்தில் ஓடக்கூடியபோதெல்லாம் ஓடவும், ஓடக்கூடாதபோதெல்லாம் நடக்கவும், நடக்கக்கூடாதபோதெல்லாம் உட்கார்ந்து நகரவுமே தீர்மானம் செய்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக என் ஆத்தும நேசரை அத்தியந்த பணிவுடன் துத்தியம் செய்கிறேன். என் தீர்மானம் தீர்மானமே. நீங்கள் எல்லாரும் பார்க்கின்ற பிரகாரம் நான் தள்ளாடின மனம் உடையவனாய் இருந்தாலும் என் வழி என் முகத்துக்குமுன்பாகவும், என் மனம் பாவமில்லா ஆற்றுக்கு அப்பாலுமே இருக்கிறது என்றான்.
யதா: சில காலத்துக்கு முன் மோட்ச பிரயாணத்தில் இருந்த அச்ச நெஞ்சன் உனக்கு அறிமுகம் இல்லையா?
ஏழை: அறிமுகம் உண்டே: ஆம் ஆம், அவர் நாசபுரிக்கு நாலுபாகத்துக்கு வடக்கே இருக்கிற மூடத்தனம் என்னும் ஊரில் உள்ளவர்தான். எங்கள் ஊருக்கும் அதற்கும் அவ்வளவே தூரம். அவர் என்னுடைய சிறிய தகப்பனார். என் தகப்பனாருடைய சகோதரன்தான். எங்கள் இருவருடைய குணச்சாயல் ஒன்றுபோலவே இருக்கும். அவர் என்னைவிட சற்று குள்ளமாய் இருப்பார். ஆனால் முகச்சாயலில் நாங்கள் ஒன்றுபோலவே இருப்போம்.
யதா: நீர் அவரை அறிவீர் போலவே இருக்கிறது. அவர் உம்முடைய பந்துவாகத்ததான் இருக்கவேண்டும். ஏனெனில், உம்முடைய வெளிறின முக ஜாடையும் கண் ஜாடையும் குரலும் அவரைப் பார்த்தால் போலவே இருக்கிறது.
ஏழை: எங்களைக் கண்டவர்கள் எல்லாரும் அப்படியே சொல்லுகிறார்கள். நான் அவரிடத்தில் கண்ட குணாதிசயங்கள் எவைகளோ அவைகள் எல்லாம் என்னிடத்திலும் இருக்கிறதென்று கண்டுகொண்டேன்.
பரோ: வாரும் ஐயா வாரும். திடமனதாயிரும். என் வீட்டுக்குள் நீர் வரத் தடை இல்லை. உமக்கு என்ன தேவையோ அதை மனம் கூசாமல் என்னிடம் கேட்கலாம். என் வேலைக்காரரைக் கொண்டு உமக்கு ஏதாவது ஆகவேண்டியதிருந்தால் அவர்களைத் தடையின்றிக் கூப்பிட்டு வேலை கொள்ளலாம் என்றும் பரோபகார காயு சொன்னார்.
ஏழை: அதற்கு ஏழைத்தனம்: இது நான் எதிர்பாராத சகாயம். கார்மேகத்துக்குள் இருந்து சூரிய கதிர்கள் பாய்ந்தாற்போல் இந்த வார்த்தைகள் இருக்கின்றன. நலங்கொல்லி என்னைத் தன் குகைக்குள்ளே கொண்டு போனபோது இவ்வளவு சிலாக்கியம் எனக்குத் தரும்படி நினைத்திருந்தேனா? அவன் என் மடியில் கை போட்டபோது நான் பரோபகார காயுவின் மடத்துக்கு விருந்தாடி போக வேண்டும் என்று அவன் எண்ணி இருந்தானா? இப்படி எல்லாம் அவன் நினையாதிருந்தாலும் இந்த சகாயம் எனக்குக் கிடைத்தது என்றான்.
இந்த வண்ணமாக ஏழைத்தனமும், பரோபகார காயுவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கிறபோது ஒரு மனுஷன்ஓடி வந்து: யார் இங்கே? யார் இங்கே என்று கதறி, ஐயா, சுமார் ஒரு நாழிகை வழி தூரத்தில் சரியில்லான் இடி விழுந்து செத்துக்கிடக்கிறான் என்றான்.
ஏழை: அதைக்கேட்ட ஏழைத்தனம்: ஐயோ! அவன் செத்தா போனான்? அவன் எனக்கு முந்தி முந்தி ஓடி இதுவரையும் வந்தானே! இருவரும் கூடி நடந்துபோகலாம் என்று அல்லவோ நான் எண்ணி இருந்தேன். நலங்கொல்லி என்னை வந்து பிடிக்கையில் அவனும் என்னுடனே கூடவே இருந்தான். ஆனால் அவனைக் கண்டவுடனே இவன் ஒரே ஓட்டமாய் ஓடித் தப்பிக்கொண்டான். அவன் சாகத்தான் ஓடினான் ஆக்கும்! நான் பிழைக்கத்தான் பிடிபட்டேன் ஆக்கும்! என்று மெத்தவும் அனுதாபப்பட்டு:
ஒப்பாரி
என் உயிரைக் கொன்றுவிடும் மோசம் இதுதான் அப்பா,
என்றும் கலங்கவைக்கும் மோசமே மீட்கும் அப்பா!
நாசமுங் காட்டி வரும் நாதன் திருச்செயலே
நாசம் விலகி சுக ஜீவன் அளித்திடுமே.
பிடித்தான் அரக்கன்என்னை(தப்பி) பிழைத்தான் அவன் தானும்
பிழைத்தேன் நான் தானும், செத்தான் சரியில்லானும்
ஏகன் திருக்கரங்கள் ஏவல் செய்ய மாறி நின்று
ஏழை என்னை தப்பவிட்டு என் துணையை பட்சித்தது
என்று புலம்பிக் கொண்டான்.
இந்த நாட்களில் மத்தேயுவுக்கும் தயாளிக்கும் விவாகம் நிறைவேறிற்று. பரோபகார காயு தமது சேஷ்ட புதல்வியாகிய பெபேயாளை மத்தேயுவின் சகோதரனாகிய யாக்கோபுக்கு கலியாணம் செய்து கொடுத்தார். பின்னும் அவர்கள் எல்லாரும் பத்து நாட்களுக்கும் அதிகமாய் அந்த காயு வீட்டிலேயே தங்கியிருந்து தங்கள் காலத்தை பிரயாணிகளைப் போல கழித்து வந்தார்கள்.
அவர்கள் அந்த இடத்தைவிட்டு புறப்படுகிற நாளில் பரோபகார காயு ஒரு பெரிய விருந்து வைத்து அவர்கள் எல்லாரும் மனமகிழ்ச்சியோடு புசித்துக் குடிக்கும்படி செய்தார். அவர்கள் பயணம் புறப்படுகிற நேரத்தில் தைரிய நெஞ்சன்: ஐயா சத்திராதிபரே! எங்களுக்குச் சென்ற செலவின் கணக்கைச் சொன்னால் அந்த தொகையை கட்டிவிட நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம் என்றார். அதுகேட்ட மடாதிபதி: இந்தச் சத்திரத்தில் தங்கும் பிரயாணி களிடத்தில் நான் செலவிட்ட பணத்தை வாங்குகிற வழக்கம் இல்லை. வரும் பிரயாணிகளுக்கெல்லாம் வருஷம் முழுவதும் செலவிடப்பட்ட செலவு எவ்வளவோ அது முழுவதையும் வருஷத்துக்கு ஒரு முறை ஒரு நல்ல சமாரியன் திரும்ப வரும்போது கொடுப்பதாய் எனக்கு வாக்களித்திருக்கிறார். அவரிடத்தில் நான் வாங்கிக் கொள்ளுவேன் என்றார். (லூக்கா 10 : 34, 35)
தைரி: அதற்கு தைரிய நெஞ்சன்: காயுவே, நீர் சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறீர். அவர்கள் உம்முடைய அன்பைக் குறித்து சபைக்கு முன்பாக சாட்சி சொன்னார்கள். தேவனுக்குமுன்பாக பாத்திரமானபடி நீர் அவர்களை வழிவிட்டனுப்பினால் நலமாய் இருக்கும் (3 யோவான் 6 ஆம் வசனம்) என்றார். அப்புறம் காயு அவர்கள் எல்லாரோடும் வழி அனுப்பிக்கொண்டு விசேஷமாய் ஏழைத்தனத்தை மெத்தவும் மினவி அவருடைய பலவீனம் தீர்க்கும் படியான ஒரு பானமும் கொடுத்தார்.
1. மனிதர்கள் சிறப்பும் விசேஷமுமான குலத்தைக் குறித்து மேன்மை பாராட்டுகிறார்கள். கிறிஸ்துவின் சீஷருக்குள் கடைசித்தரமானவனுடைய குடும்பம் மற்றெல்லாருடைய குடும்பத்தையும்விட மிகவும் மேலானதும் முக்கியப்பட்டதுமாயிருக்கிறது. நம்முடைய முன்னோர் யோக்கியராய் நடந்து கொண்டது போலவே அவர்களுடைய சந்ததியாராகிய நாமும் நடந்து கொள்ள வேண்டும்.
2. ஏறெடுத்த முன்னந்தொடையும் அசைவாட்டப்பட்ட மார்க்கண்டமும்: இவைகள் அனலுள்ள ஜெபத்துக்கும் நன்றியறிதலுள்ள ஸ்தோத்திரத்துக்கும் அடையாளம். ரசம்: இது கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டாகும் ஆசீர்வாதத்துக்கு முன் அடையாளம். பால்: இது தெளிவும் ஆரோக்கியமுமுள்ள வேத உபதேசத்தைக் குறிக்கிறது. வெண்ணெயும் தேனும்: இவைகள் தேவன் பேரிலுள்ள மெய்யான பற்றுதலினால் உண்டாகும் உணர்ச்சியையும் மறுமையின் மகிமைக்குரிய நம்பிக்கையையும் தெரிவிக்கிறது. வாதுமைக் கொட்டை: இது நன்றாய் அனுபோகப்பட்ட பழங்கிறிஸ்தவர்கள் மாத்திரம் அறிந்து கொள்ளக்கூடிய வருத்தமும் கடினமுமான காரியங்களை காண்பிக்கின்றன.
3. மனிதன் வளர வளர பாவமும் அதிகம் அதிகமாய் பெலன் கொள்ளுகிறது. என்றாலும், தேகம் பெலவீனப்படும்போது அநேக பாவங்களை செய்ய வேண்டும் என்கிற ஆசையும் குறைந்து போகிறது. வாலிபத்தில் ஆசாபாசங்களும் விருப்பங்களும் பெலத்ததாய் இருக்கும்போது அவைகளை அடக்கிக்கொள்ளுவது தேவனுடைய கிருபைதான் என்று வெளிப்படையாய்க் காணப்படுகிறது.
4. நமது பிரயாணத்தில் நமக்குக் கிடைக்கும் திராணியும், இளைப்பாறுலும் நாம் நன்மை செய்து பிரயோஜனம் உள்ளவர்களாய் இருக்கத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் நமக்கு ஒத்தாசையும் ஆறுதலும் கிடைக்கும் ஒவ்வொரு சமயத்திலும் பரோபகார காயு சொன்னது போல் “நான் ஏதாவது நன்மை செய்யலாமா” என்று சொல்லி வெளியே புறப்பட்டுப் போய் பார்க்க வேண்டும்.
5. நலங்கொல்லி என்பதில் பன்னியன் என்பவருடைய கருத்து என்ன என்று தெளிவாய்த் தோன்றவில்லை. ஆத்துமாவுக்கு நேரிடும் எந்த வகையான மோசத்தையும் காண்பிக்கிறதென்று சொல்லலாம்.