தன்னிஷ்டத்தைப் பற்றிய சம்பாஷணை
அப்புறம் நான் என் சொப்பனத்தில் கண்டதென்னவென்றால், தைரிய நெஞ்சன் அச்சநெஞ்சனைப்பற்றிய சம்பாஷணையை முடித்தவுடனே யதார்த்தன் என்ற அந்த விருத்தாப்பியர் வேறொருவனைப்பற்றிய சங்கதியைச் சொல்லத் துவக்கினார். அவனுக்கு தன்னிஷ்டம் என்று பேர். அவன் மோட்ச பிரயாணியைப் போல் தன்னைப் பாராட்டின போதினும் ராஜபாதையின் ஆரம்பத்தில் இருந்த திட்டிவாசலுக்குள் பிரவேசித்ததே இல்லை என்று யதார்த்தன் சொன்னார்.
தைரி: அதைக் குறித்து நீர் எப்போதாவது அவனோடு பேசினது உண்டா?
யதா: இரண்டொருதரம் பேசினது உண்டு. ஆனால், அவன் எப்போதும் தன் பேரின்படியே தன் இஷ்டப்படி நடக்க மனம் உடையவனாகவே காணப்பட்டான். 1 ஆளையும் கவனியான், ஆட்சேபனையையும் மதியான், திருஷ்டாந்தத்தையும் உணரான். அவன் மனம் எப்படிச் சொல்லுமோ அதே சரி என்று செய்வான். அதற்கு விரோதமான ஒன்றைச் செய்யும்படி அவனை உணர்த்த எவராலும் முடியாது.
தைரி: அவன் கொண்டிருந்த கோட்பாடுதான் என்ன? சற்றுச் சொல்லும்.
யதா: ஒரு மனுஷன் மோட்ச பிரயாணிகளின் சன்மார்க்க நெறியைப் போலவே துன்மார்க்க நெறியையும் பின்பற்றி நடக்கலாம். இந்த இரண்டின்படி நடந்தாலும் அவனுக்கு இரட்சிப்பு உண்டு என்பதே அவனுடைய கோட்பாடு.
தைரி: அதெப்படி? ஒரு பக்தன் முதலாய் மோட்ச பிரயாணியின் சன்மார்க்க நடக்கையோடு துன்மார்க்கன் என்னும் குற்றம் சாட்டப்படலாம் என்று அவன்சொல்லியிருந்தால் அவனை அவ்வளவாய் பழுது கூறக்கூடாது. ஏனெனில் நாம் ஆகாமியத்தி லிருந்து அடியோடு நீக்கப்படவில்லை. விழிப்போடும் முயற்சியோடும் சன்மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய ஸ்திதியில் இருக்கிறோம்.
அவன் சொல்லுவது இந்தக் கருத்து இல்லை போல் இருக்கிறதே. நீர் சொல்லுகிறதைப்பார்த்தால் மோட்ச பிரயாணி துன்மார்க்கத்தையும் தாராளமாய் செய்யலாம் என்று அவன் சொல்லுகிறாற்போல் அல்லவா என் மனதில் படுகிறது.
யதா: ஆம், ஆம், நான் சொன்ன கருத்தும் அதுதான். அந்த தன்னிஷ்டம் இப்படியே சொல்லியும், செய்தும் வந்தான்.
தைரி: எந்த முகாந்தரத்தையிட்டு அவன் இப்படிச் சொல்லுகிறான்.
யதா: வேதமே தன் கோட்பாட்டுக்கு ஆதாரம் என்கிறான்.
தைரி: அப்படியா செய்தி? அந்த வேத ஆதாரங்களில் சிலவற்றை சொல்ல மாட்டீரா?
யதா: சொல்லுகிறேன் கேளும். தேவனுடைய திருவுளத்திற்கு ஏற்ற தாவீது அரசன் அந்நியனுடைய மனைவியை எடுத்துக்கொண்ட முகாந்தரத்தையிட்டுத் தானும் அப்படியே செய்வேன் என்கிறான். சாலொமோன் என்பவர் பல மனைவிகளை படைத்துக்கொண்ட முகாந்தரத்தை முன்னிட்டு தானும் அப்படியே பல மனைவிகளை வைத்துக் கொள்ளுவேன் என்கிறான். சாராளும், பக்தியுள்ள எகிப்திய மருத்துவச்சிகளும், ராகாப் என்ற வேசியும் பொய் பேசினது போல் தானும் பொய் பேசலாம் என்கிறான். கிறிஸ்துவின் சீஷர் அவருடைய உத்தரவுப்படியே அந்நியனுடைய கழுதையை அவிழ்த்து வந்தது போல தானும் பிறர் பொருளை அபகரித்துக் கொள்ளுவேன் என்கிறான். யாக்கோபு தன் தகப்பனுடைய ஆசீர்வாதத்தை தந்திரமாய் பெற்றுக்கொண்டது போல் தானும் செய்வேன் என்கிறான்.
தைரி: இதற்கு மிஞ்சின இழிவான கோட்பாடுகள் உண்டா? இந்த அபிப்பிராயமே அவன் மனதில் இருந்தது உண்மையா?
யதா: இந்த அநியாயங்களையே அவன் சொல்லி வழக்காடவும் வேத நியாயங்களைக் கொண்டு ரூபிக்கவும், ஆக்ஷேபிக்கவும் நான் பலமுறை என் காதால் கேட்டிருக்கிறேன்.
தைரி: இவை எல்லாம் உலகத்துக்கு எவ்வளவேனும் ஒவ்வாத கோட்பாடுகளாய் அல்லவா இருக்கின்றன.
யதா: என் கருத்து உமக்கு நன்றாய் விளங்குகிறது என்று நினைக்கிறேன். எந்தச் சன்மார்க்கனும் இப்படிப்பட்டவைகளைச் செய்தாலும் செய்வான் என்று அவன் சொல்லாமல் இப்படிப்பட்ட துன்மார்க்கங்களைச் செய்தவர்களிடத்தில் இருந்த சன்மார்க்கம் ஒருவனுக்கு உண்டென்பது பொய்யானால் அவன் இந்த துன்மார்க்கங் களையும் சும்மா செய்யலாம் என்றே அவன் சொன்னான்.
தைரி: இதைவிட அபத்தமான தீர்மானம் வேறு ஒன்று உண்டா? இப்படிச் சொல்லுகிறது எப்படி இருக்கிறது என்றால், இதுவரையும் பக்தர் சிலர் பலவீனத்தால் பாவம் செய்து இருக்கிறார்கள். ஆகையால் பாவங்களை துணிந்து செய்யலாம் என்று சொன்னாற்போலவே இருக்கிறது. வேறுவிதமாய் சொன்னால் ஒரு பிள்ளை காற்றடித்து அல்லது கால் தட்டி விழுந்து அதின் உடம்பெல்லாம் சேறாகிப் போய்விட்டதானால் தானும் ஒரு பன்றியைப்போல் சேற்றில் புரண்டு உருண்டு தன்னை அழுக்காக்கிக் கொள்ளலாம் என்று சொன்னது போலவே இருக்கிறதே. இந்த வண்ணம் ஒருவன் மாமிச இச்சையின் வல்லமையால் குருடராய் போவான் என்று யார்தான் எண்ணுவார்கள்? ஆனால் இப்படிப்பட்டவர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிற வாசகம் யதார்த்தமாய் இருக்க வேண்டியது. “அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாய் இருந்து இடறுகிறார்கள், அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்” (1 பேதுரு 2 : 8) அதுவும் அன்றி இப்பேர்ப்பட்ட துன்மார்க்கரிடத்தில் சன்மார்க்கருடைய குணங் களும் இருக்கும் என்று அவன் எண்ணுவதும் சுத்த அபத்தமான கோட்பாடாகவே இருக்கிறது. நாயானது நரகலை நக்கித் தின்பது போல தேவனுடைய ஜனங்கள் பாவங்களைத் தின்பது (ஓசியா 4 : 8) அவர் களுடைய சன்மார்க்கத்தில் பங்கு பெற்று இருக்கிறவனுடைய அடையாளம் அல்லவே. இப்படிப்பட்ட அபிப்பிராயம் உள்ளவ னிடத்தில் அற்ப விசுவாசமாவாது அன்பாவது உண்டென்று நான் எள்ளளவேனும் நம்பமாட்டேன். ஆனால் இதற்கெல்லாம் நீர் பலமான முகாந்தரங்களைச் சொல்லி அதை மறுத்திருப்பீர் என்றே நினைக் கின்றேன். இதைத் தவிர வேறு என்னவாவது அவன் சொல்லுகிறானா?
யதா: இப்படிப்பட்ட கோட்பாட்டை மனதில் நிர்ணயம் பண்ணிக் கொண்டு இந்தவித துன்மார்க்கங்களைச் செய்கிறவன் இந்தக் கோட்பாட்டிற்கு விரோதமான நிர்ணயம் உடையவனாய் இருந்தும் அந்த துன்மார்க்கங்களை செய்கிறவனிலும் யோக்கியன் என்று தோன்றுகிறது என்றான்.
தைரி: இது எவ்வளவு அக்கிரமமான உத்தரவு. ஏனெனில், மாமிச இச்சையின்படி செய்யக்கூடாதென்ற தீர்மானம் உடையவர்களாய் இருந்தும் அந்த இச்சையின் கடிவாளத்தை தளரவிடுவதே கெட்டது.
ஆனால் பாவத்தைச் செய்துபோட்டு அப்படிச் செய்வதற்கு நியாயம் உண்டென்று சாதிப்பதோ மகா கெட்டது. இதில் ஒன்று அந்த பாவங்களைப்பார்ப்போர் தற்செயலாய் இடறிவிழவும் மற்றொன்று அவர்களை நேராய் வலையில் மாட்ட வழிநடத்தவும் செய்கிறதுபோல் இருக்கிறது.
யதா: இவனைப் போலொத்த வாய் உடையவர்கள் அநேகர் இல்லாவிட்டாலும் இவனைப் போலொத்த மனது உடையவர்களோ அனந்தம் பேர் இருக்கிறார்கள். அதனாலேதான் மோட்ச பிரயாணம் செய்தல் அவ்வளவு மதிப்பாய் எண்ணப்படுவதில்லை.
தைரி: நீர் சொல்லுவது வாஸ்தவம்தான். அதற்காக நாம் துக்கப்ட வேண்டியதுதான். ஆனால் பரதீசை ஆளும் அரசனுக்கு பயப் படுகிறவன் அவைகள் எல்லாவற்றிற்கும் விலகிக்கொள்ள வேண்டும்.
கிறி: விபரீத அபிப்பிராயங்கள் எல்லாம் இந்த உலகத்தில் இருக்கின்றன. நாம் மனந்திரும்பும்படியாக நமது மரண நேரத்தில் போதுமான சமயம் இருக்கிறது. இப்போது நாம் அதற்காக ஏன் தலையை உடைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒருவன் என்னிடத்தில் சொன்னது உண்டு.
தைரி: அவன் சரியான புத்திசாலி அல்ல. அப்படிப்பட்டவன் படு சோம்பேறியாய் இருக்க வேண்டியது. அவன் ஒரு வாரத்தில் தன் ஜீவகால ஓட்டத்தில் இருபது மைல் போகவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தால் வாரம் எல்லாம் சும்மா இருந்துவிட்டு அந்த வாரத்தின் கடைசி நாழிகையில் தன் ஓட்டத்தை நிறைவேற்ற ஆரம்பிப்பான் போல் இருக்கிறது.
யதா: நீர் சொல்லுவது சரி. ஆனால் தங்களை மோட்ச பிரயாணிகள் என்று எண்ணிக் கொள்ளுகிறவர்கள் பெரும்பாலும் இப்படியே செய்கிறார்கள். நீர் பார்க்கிறபடி என் தலையும் நரைத்து, தடி பிடிக்கிற கிழவனும் ஆகிவிட்டேன். வெகு வருஷங்களாக இந்த மோட்ச பிரயாணத்திலும் இருக்கிறேன். இப்படிப்பட்ட அநேக காரியங்களை பிரயாணிகளிடத்தில் கவனித்தும் இருக்கிறேன்.
அந்த பிரயாணிகளில் சிலர் தாங்கள் புறப்படும்போதே உலகம் முழுவதையும் திரட்டி தங்களுக்கு முன்னே விட்டுத் துரத்தப் போகிறவர்களைப் போல் காணப்பட்டு சில நாட்களுக்குள்ளாக வனாந்திரத்தில் மாண்டோரைப் போல் வாக்குத்தத்த தேசத்தை காணாதே போனார்கள். வேறு சிலர் தங்கள் பிரயாண ஆரம்பத்தில் முடிவுபரியந்தம் போகிறவர்களைப் போலக் காணப்பட்டாலும் அன்றைக்கே செத்துப்போவார்கள் என்று சொல்லத்தக்கது போல் இருந்தாலும் முதல்தரமான மோட்ச பிரயாணிகள் ஆகிவிட்டதையும் நான் கண்டு இருக்கிறேன்.
பின்னும் சிலர் நாற்கால் பாய்ச்சலில் முன்னுக்கு விரைவாய் ஓடினதையும், சில நாளுக்குள்ளாக திரும்பி அதேமாதிரி பின்னுக்கு பாய்ந்து ஓடுகிறதையும் கண்டிருக்கிறேன். மற்றும் சிலர் மோட்ச பிரயாணத்தைப் பற்றி ஆரம்பத்தில் வெகு மேன்மையாகப் பேசி பின்னும் சில நாட்களுக்குள் வெறுப்பாய் பேசவும் கண்டிருக்கின்றேன். இன்னும் சிலர் தங்கள் பயண ஆரம்பத்தில் மோட்ச பரதீசு என்னும் இடம் நிச்சயமாகவே உண்டென்று சொல்லி அதற்குக் கொஞ்சங் குறைய சமீபத்தில் வந்த பிற்பாடு திரும்பி வந்து, முக்தி ஏது, மோட்சம் ஏது, ஒன்றும் இல்லை என்று சொல்லுகிறதையும் நான் கேட்டிருக்கின்றேன். எங்கள் வழியில் ஆபத்துக்கள், தடைகள் ஏதாவது உண்டாகுமானால் இப்படி எதிர்ப்போம், அப்படி எதிர்ப்போம் என்று சவால் பேசினவர்கள் சிலர் மாயா பயங்களைக் கண்டவுடனே விசுவாசத்தையும் இழந்து பாதையைவிட்டு ஓடிச் சமூலமாய் கெட்டுப்போனதையும் நான் அறிந்து இருக்கிறேன். என்றார்.
இப்படி அவர்கள் எல்லாரும் சம்பாஷித்துக்கொண்டு போகும் போது அவர்களுக்கு எதிரே ஒருவன் தலைவிரி கோலமாய் ஓடி வந்து ஐயா துரைமாரே! அம்மா பெண்களே! உங்கள் உயிர் தப்ப வேண்டுமானால் திரும்பி ஓடுங்கள். அதோ திருடர் உங்களுக்கு எதிரே வருகிறார்கள் என்றான்.
தைரி: அதைக்கேட்ட தைரிய நெஞ்சன்: திருடர் வந்தால் அந்தத் திருடர் அற்ப விசுவாசியைக் கொள்ளையிட்டவர்களாய்த்தான் இருக்க வேண்டும். வந்தால் வரட்டும், நாங்கள் ஆயத்தமாகத்தான் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் வழியே போனார்கள். போகப் போக நாலா பக்கமும் இவர்கள் பார்த்துக் கொண்டே நடந்தார்கள். ஆனால் அந்த திருடர் தைரிய நெஞ்சனுடைய சத்தம் கேட்டுத்தான் மறைந்து கொண்டார்களோ அல்லது வேறொரு கொள்ளைதான் இடையில் அவர்களுக்கு அகப்பட்டதோ, பிரயாணி கள் அவர்களை கண்டுபிடிக்கவே இல்லை.
அப்புறம் கிறிஸ்தீனாள்: இந்த இடத்தில் ஏதாவது ஒரு சத்திரம் 2 இருந்தால் நல்லதாச்சுதே, சற்று தாமதித்து இளைப்பாறிக் கொள்ளலாமே என்றாள். ஏனெனில் அவளும், பிள்ளைகளும் பிரயாணத்தால் மிகவும் இளைப்படைந்து இருந்தார்கள்.
அப்போது தைரிய நெஞ்சன் இன்னும் சற்று முன்னே பரோபகார காயு என்று பேர் வழங்கும் ஒரு மகாத்துமாவின் மடம் இருக்கிறது. அங்கே போய்த் தங்கலாம் என்றார். அப்படியே செய்வோம் என்று எல்லாரும் தீர்மானித்தார்கள். அவரைக் குறித்து யதார்த்தன் என்ற பெரியவரும் அதிகமாய் புகழ்ந்து பேசினதால் அந்தச் சத்திரத்தில் தங்குவதே உத்தமம் என்று போனார்கள். (ரோமர் 16 : 23)
1. தன்னிஷ்டம்: நாம் நமது சொந்த இஷ்டம்போல் நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டால் அதற்கேற்ற திருஷ்டாந்தங்கள் வேத புஸ்தகத்திலும் மற்றும் இடங்களிலும் கண்டு கொள்ளலாம். ஆனால் தேவனோ நமது நடக்கைகள் எல்லாம் பாவ மனிதரின் நடக்கைகளுக்கு ஒத்ததாக அல்ல, தமது பிரமாணத்துக்கும், இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரிக்கும் இசைந்ததாக இருக்க வேண்டும் என்று நமக்கு கற்பித்திருக்கிறார். நமது இஷ்டம் அல்ல, தேவனுடைய சித்தமே செய்யப்பட வேண்டும்.
2. சத்திரம் இது விசுவாசிகள் ஒருவருக்கொருவர் காண்பிக்க வேண்டிய ஆவிக்குரிய ஒற்றுமையையும், சகோதர சிநேகத்தையும் காண்பிக்கின்றது. அந்நியரை உபசரிப்பதினாலும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் மாறிமாறிப் போய் சந்தித்து வருவதானாலும் இந்த நற்கிரியையை நிறைவேற்றி வரலாம்.