சங்கார ராட்சதனை சந்தித்தல்
அவர்கள் அந்தப் பள்ளத்தாக்கின் அந்தத்தில் போகையில் கிறிஸ்தியான் தன் பிரயாணத்தில் கடந்துபோன குகையின் வழியாகவே போனார்கள். போகையில் அந்தக் குகைக்குள் இருந்து சங்காரன்1 என்று பேர் வழங்கிய ஒரு அரக்கன் எழுந்திருந்து வந்தான். இந்த ராட்சதன் பெரும்பாலும் பாலிய பிரயாணிகளை சொற் சாதுரிய நியாயங்களினாலே விழத்தட்டிக் கெடுக்கிறது வழக்கமாய் இருந்தது. மோட்ச பிரயாணமாய் செல்லும் கூட்டத்தை அவன் கண்ட உடன் அவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டு போனவரைப் பார்த்து: அடா தைரியா! இந்த தொழில் வேண்டாம் என்று உன்னை நான் பலமுறை எச்சரித்ததில்லையா? என்றான். அது எந்த தொழில் என்று தைரிய நெஞ்சன் கேட்டார். அதற்கு ராட்சதன்: அது எந்த தொழில் என்று என்னைத்தானா கேட்கிறாய்! அது எந்த தொழில் என்று உனக்கே தெரியும். அதற்கு எல்லாம் முடிவு உண்டு பண்ணிப்போடுகிறேன் பார் என்று சொல்லிக் கொண்டு சண்டைபோட வந்தான்.
அப்போது தைரிய நெஞ்சன்: சண்டை செய்யுமுன் ஏன்தான் சண்டைபோடுகிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? என்றார். இந்தச்சமயத்தில் அந்தப்பெண்களும் பிள்ளைகளும் என்ன செய்வது என்று தெரியாமல் நடுநடுங்கினார்கள். அப்போது சங்கார ராட்சதன் சொல்லுகிறான்: நீ நாட்டைக் கொள்ளையடிக்கிறாய். உன் பிழைப்பைப்போல நாணங்கெட்ட பிழைப்பு வேறொன்றும் இல்லை என்று சொன்னான்.
அதற்கு தைரிய நெஞ்சன்: அப்படிப் பொதுவாய் பேசினால் ஆகுமா? அதை சற்று விபரமாய் சொல்லு மனுஷனே என்றான்.
அப்புறம் ராட்சதன்: நீ நரஜீவ திருட்டுத் தொழிலை செய்கிறாய். என் எஜமானுடைய ராஜ்யபாரத்தை பலவீனப்படுத்தும் பொருட்டு நீ பெண்களையும், பிள்ளைகளையும் அந்நிய தேசத்துக்கு சேர்த்துக் கொண்டு போகிறாய் என்றான். அதற்கு தைரிய நெஞ்சன்: நானோ உன்னதமான தேவனுடைய ஊழியக்காரன். பாவிகளை மனந் திரும்பும்படி ஏவுகிறதே என் தொழில். ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் இருளிலிருந்து ஒளியினிடத் திற்கும், சாத்தானின் வல்லமையிலிருந்து தேவனிடத் திற்கும் திருப்பும்படி என்னால் ஆன பிரயத்தனம் எல்லாம் செய்ய வேண்டும் என்று கட்டளை இடப்பட்டிருக்கிறது. இந்த முகாந்திரத்தையிட்டு நீ சண்டைக்கு வருகிறதானால் வா ஒரு கை பார்க்கலாம் என்றான்.
அப்பொழுது ராட்சதன் சண்டைக்கு வந்தான். தைரிய நெஞ்சன் தன் வாளை உருவி அவனுக்கு எதிரே போனார். அந்த ராட்சதன் கையில் ஒரு பெரிய தடி இருந்தது. வேறொன்றும் பேசாமலேயே சண்டையை ஆரம்பித்தார்கள். சங்கார ராட்சதன் தடியால் தைரிய நெஞ்சனின் முழங்காலில் ஒரு பலத்த அடி போட்டான். அதைக்கண்டு அந்த பெண்களும், பிள்ளைகளும் கோவென்று அழுது விட்டார்கள். தைரிய நெஞ்சன் சற்றே திடம் அடைந்துகொண்டு அவனைச் சுற்றி சுற்றி வீரியமாய் எதிர்த்து சமயம் பார்த்து அவன் புயத்தில் படுகாயம் உண்டாக வெட்டினார். அவர்கள் இருவரும் சுமார் ஒரு மணி நேரமளவும் தாங்கள் படித்த வித்தை எல்லாம் காண்பித்து சங்கார ராட்சதனுடைய மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் கொதிக்கிற கொப்பரையிலிருந்து நீராவி கொப்பளித்து எழும்புவது போல் சுவாசம் எழும்பத்தக்கதாக கொடிய போர் புரிந்தார்கள்.
அப்பால் அவர்கள் இருவரும் இளைப்பாறிக் கொள்ளும்படி சற்று நேரம் உட்கார்ந்து கொண்டார்கள். அந்த வேளையில் தைரிய நெஞ்சன் ஜெப தியானம் செய்து கொண்டார். அந்த ஸ்திரீகளும், பிள்ளைகளும் சண்டை முடியும்பரியந்தம் புலம்புகிறதும், பெருமூச்சு விடுகிறதும், அழுகிறதும், அங்கலாய்க்கிறதுமாய் இருந்தார்களே அன்றி வேறொன்றும் செய்யவில்லை.
அவர்கள் இளைப்பாறி மூச்சு எடுத்துக்கொண்ட பின்பு மறுபடியும் சண்டைக்கு எழுந்தார்கள். தைரிய நெஞ்சன் ஒரே குத்தோடு அவனை கீழே தள்ளிவிட்டார். அந்த அரக்கன் உடனே பொறு,பொறு நான் எழுந்து நின்று கொள்ளட்டும் என்றான்.
நல்லது, அவன் எழுந்திருக்கட்டும் என்று சற்று நேரம் தைரிய நெஞ்சன் சும்மா நின்றார். அவன் எழுந்தபின் மறுபடியும் சண்டையை ஆரம்பித்தார்கள். இந்தச் சண்டையில் ஒரு தரம் அரக்கன் ஓங்கின தடிக்கு தைரிய நெஞ்சன் அவ்வளவு சாமர்த்தியமாய் விலகிக் கொள்ளாத பட்சத்தில் அவர் மண்டை சிதறிப் போயிருக்கும்.
அதை தைரிய நெஞ்சன் அறிந்து கொண்டு ஆவியிலே மட்டுக்கு மிஞ்சின அனல் மூண்டு சங்கார ராட்சதனுடைய ஈரல்குலை உருவ ஒரே குத்தாய் குத்தினார். சங்காhர ராட்சதன் உடனே அசந்து சாய்ந்து விழுந்தான். அப்புறம் அவன் தன் தடியை எடுக்க சக்தி இருக்கவில்லை. தைரிய நெஞ்சன் மறுபடியும் ஒரு பலத்த குத்துப்போட்டு அவனை முற்றிலும் கீழ்ப்படுத்தி அவன் சிரசையும் வாங்கிப் போட்டார்.
தை கண்ட ஸ்திரீகளும் பிள்ளைகளும் சந்தோசப்பட்டார்கள். ஜெயம் அடைந்த தைரிய நெஞ்சன் இவ்வளவு பெரிய இரட்சிப்பை தன் கையால் நிறைவேறச் செய்த ஆண்டவரின் அன்பை நினைத்து தேவனுக்கு ஆனந்த உதடுகளோடு ஸ்தோத்திரம் செலுத்தினார்.
அதின் பின்பு அவர்கள் எல்லாரும் கூடி அந்த இடத்தில் ஒரு தூணை நிறுத்தி அதின்மேல் அந்த அரக்கனுடைய தலையைக் கழுவில் ஏற்றி வைத்து: அதின் அடியில்:-
தைரிய நெஞ்சனாகிய
நான் எழும்பும் மட்டும்
வழிகாட்டுவோனாகிய
நான் எதிர்க்குமட்டும்
இந்த தலையை உடையோன்
பிரயாணிகளை
வழிமடக்கிக் கொல்லுவான்
அழித்தேன் அவனை
என்ற வாசகத்தை எழுதி வைத்தார்கள்.
அப்புறம் நான் என் சொப்பனத்தில் கண்டது என்னவென்றால், அவர்கள் மரண பள்ளத்தாக்கை கடந்து பிரயாணிகள் முன்னே நடந்து போவோரை எட்டிப் பார்த்துக் கொள்ளும்படியாக செய்யப் பட்டிருந்த மண்மேட்டில் ஏறினார்கள். இந்த மேட்டில் இருந்துதான் கிறிஸ்தியான் தன் தோழனாகிய உண்மையை தனக்கு முன் விரைந்து நடந்துபோகக் கண்டான். இவர்கள் இங்கே சற்று நேரம் உட்கார்ந்து இளைப்பாறி தங்களுடைய பெரிய சத்துருவாகிய சங்கார ராட்சதன் நிர்மூலமானான் என்ற சந்தோசத்தால் அந்த இடத்தில் புசித்துக் குடித்து மகிழ் கொண்டாடினார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு புசித்துக் குடித்துக் கொண்டிருக்கையில் கிறிஸ்தீனாள் தைரிய நெஞ்சனைப் பார்த்து: ஐயா, உமக்கு சண்டையில் ஏதாவது காயம் உண்டானதோ என்று கேட்டாள். அதற்கு அவர்: சதையில் சற்று காயம் உண்டானதே தவிர வேறு விசேஷம் இல்லை, அதினால் எனக்கு யாதொரு நஷ்டமும் இல்லை. நான் என் எஜமான் மேலும் உங்கள் மேலும்கொண்டிருந்த அன்புக்கு அந்தக் காயம் இந்த உலகத்தில் அத்தாட்சியாயும், என் எஜமானுடைய கிருபையினால் மறு உலகத்தில் என் பலனைக் கூட்ட ஏதுவாயும் இருக்கும் என்றார்.
கிறி: ஐயா! அவன் தடியைத் தூக்கிக் கொண்டு வந்தானே, அப்போது நீர் பயப்படவில்லையா?
தைரி: என் பெலத்தில் நான் நம்பிக்கை வைக்காதிருப்பதும் சர்வ வல்லவர் மேல் என் நம்பிக்கையை வைப்பதும் என் கடமையாய் இருக்கிறதே! அப்படி இருக்க எனக்கு பயம் ஏன்?
கிறி: முதல் அடியினால் உமது முழங்காலை மடக்கினானே அப்போது நீர் என்ன நினைத்தீர்?
தைரி: நினைத்ததா? நமது எஜமானும் இந்தப் பாடுதானே பட்டார், அப்படியிருந்தும் அவர்தானே ஜெயங்கொண்டார் என்று தான் எண்ணிக்கொண்டேன். (2 கொரிந்தியர் 4 : 10, 11 ரோமர் 8 : 37)
மத்தேயு: நீங்கள் எல்லாரும் அவரவர் மனதின்படி பலவகையாய் நினைக்கிறபொழுது நானும் என் நினைவைச் சொல்லுகிறேன். மரணப் பள்ளத்தாக்கைக் கடந்ததிலும் ராட்சதன் கையிலிருந்து இரட்சித்ததிலும் தேவன் நமக்குச் செய்த கிருபைகளுக்கு ஒரு கணக்கில்லை என்றே நான் எண்ணுகிறேன். இந்தச் சமயத்திலும் இந்த இடத்திலும் தேவன் நமது பேரிலுள்ள தமது நேசத்தை இப்படி வெளிப்படுத்தி இருக்க இனிமேல் அவரைப்பற்றி அவநம்பிக்கை கொள்ளுவதற்கு யாதொரு காரணமும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது என்று மத்தேயு சொன்னான். அப்புறம் அவர்கள் எல்லாரும் எழுந்திருந்து தங்கள் வழியே போனார்கள்.
1. சங்கார ராட்சதன்: முதல் பங்கில் காண்பித்த பாப்பு வாசம் செய்த அதே கெபியிலிருந்துதான் இவன் வெளிப்பட்டான். இங்கிலாந்து தேசத்திலுள்ள ரோமை குருக்களுக்கு பின் வந்த அனலற்ற அவநம்பிக்கையுள்ள வெளிவேஷக்கார குருக்களுக்கு இவன் உபமானமாய் இருக்கிறான். மனந்திரும்புதலுக்கும், பாவ மன்னிப்புக்கும் ஏற்ற உபதேசம் இல்லாமல் போதிக்கப்படும் தத்துவ நூல்களும் சன்மார்க்க போதனைகளும் ரோமன் மார்க்கத்தை போலவே மோசமானதாய் இருக்கிறது.