மரண நிழலின் பள்ளத்தாக்கு
அவர்கள் இதைக்கடந்து தீர்ந்து மரணநிழல் பள்ளத்தாக்கின் கரை சேர்ந்தார்கள். முந்தின பள்ளத்தாக்கைப் பார்க்கிலும் இது மகா விஸ்தாரமாய் இருந்தது. அநேகருடைய அத்தாட்சியின்படி அது தீமைகளால் அடர்ந்திருந்தது. இந்த ஸ்திரீகளும், பிள்ளைகளும் பட்டப்பகலில் அதின் வழியாய் பிரயாணம் செய்ததாலும் தைரிய நெஞ்சன் அவர்களை வழிநடத்தினதினாலும் கூடியமட்டும் இலகுவாய் அதைக் கடந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
அவர்கள் அந்தப் பள்ளத்தாக்கின் வழியே போகையில் சாவோர் சங்கடப்பட்டு அலறுவது போலொத்த சத்தத்தைக் கேட்டதாக அறிந்து கொண்டார்கள். அகோர கஸ்திப்படுவோர் அழுது புலம்பும் கூக்குரலும் அங்கே கேட்கப்பட்டது. இவை எல்லாம் பையன்களை பயப்படுத்திவிட்டது. அந்தப் பெண்களுடைய முகமும் வெளுத்து குறாவிப் போயிற்று. 1 ஆனால் அவர்கள் வழிகாட்டியோ அவர்களைப் பார்த்து, கலங்காதேயுங்கள் என்று தைரியப்படுத்தினார்.
அவர்கள் பின்னும் கொஞ்ச தூரம் போகவே அடியில் பள்ளம் இருக்கிறாற் போல் தரை குலுங்குகிறதைக் கண்டார்கள். சர்ப்பங்கள் இரைந்தாற் போல் இரைச்சலும் கேட்கப்பட்டது. ஆனால் இம் மட்டும் அவர்கள் ஒன்றையும் கண்ணாரக் காணவில்லை.
அதைக் கண்ட பையன்கள் இந்த அவதிகள் நிறைந்த பள்ளம் இன்னும் தொலையவில்லையா? என்று அங்கலாய்த்தார்கள். அவர்கள் வழிகாட்டியோ, பிள்ளைகளே திடமனதாயிருங்கள். கால் பார்த்து வையுங்கள், மற்றப்படி கண்ணிகளில் காலை மாட்டிக் கொள்ளு வீர்கள் என்று எச்சரித்தார்.
இந்தச் சமயத்தில் யாக்கோபு வியாதிப்பட்டான். அது பயங்கர நோயே அன்றி வேறு நோய் அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. உடனே அவன் தாய், வியாக்கியானி அனுப்பியிருந்த திராட்சரசத்தில் கொஞ்சமும் சாமர்த்தியன் வைத்தியர் கொடுத்திருந்த கிறிஸ்தூனுதிரக் குளிகைளில் மூன்றும் கொடுத்தாள். அதினால் அவன்குணமானான். அப்படியே அவர்கள் வழிநடந்து கொஞ்சம் குறைய மரணப் பள்ளத்தாக்கின் மத்தியில் வந்து சேர்ந்தார்கள்.
அப்போது கிறிஸ்தீனாள்: அதோ முன்னே ஏதோ ஒரு ஆவேசம் ராஜபாதையில் எதிர்ப்பட்டு வருகிறாற்போல் இருக்கிறது. அப்படிப்பட்ட ரூபத்தை ஒரு காலா காலத்திலும் நான் கண்டதில்லை என்றாள். அம்மா! அதென்ன? அதென்ன? என்று யோசேப்பு கேட்டான்! அந்தங்கெட்ட ரூபம், அந்தங்கெட்ட ரூபம் அப்பா என்றாள். அது என்ன மாதிரியாய் இருக்கிறது என்று கேட்டான்? என்ன மாதிரி என்றுசொல்ல எனக்கே தெரியவில்லை அப்பா, இப்போது அது கொஞ்ச தூரத்தில்தான் இருக்கிறது என்றாள். சற்று நேரம் பொறுத்து இதோ கிட்ட வந்து நிற்கிறது என்றாள்.
உடனே அவர்கள் வழிகாட்டி: உங்களில் பயங்காளிகள் யாரோ அவர்கள் எல்லாரும் என் கிட்ட நெருங்கி வாருங்கள் என்றார். அந்த துஷ்டதேவதை நெருங்கி வந்தது. தைரிய நெஞ்சன் என்பவர் துணிந்து எதிர்த்துப் போனார். அது அவருக்குக் கிட்ட வந்து அப்படியே காணாமலே மறைந்து போயிற்று. அப்பொழுது அவர்கள் எல்லாரும் “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்” என்று சில காலத்துக்கு முன் சொல்லப்பட்ட திவ்விய வாசகத்தை நினைவு கூர்ந்தார்கள். (யாக்கோபு 4 : 7)
அப்புறம் அவர்கள் மனந்தெளிந்து தங்கள் வழியே போனார்கள். முந்தின காட்சியை கண்டதிலிருந்து கொஞ்ச தூரம் போகவே தயாளி பின்னிட்டுப் பார்த்து, கொஞ்சம் குறைய சிங்கம் போலொத்த சாயலொன்றைக் கண்டாள். 2 அது நாற்கால் பாய்ச்சலோடு பின் தொடர்ந்து வந்தது. அது ஒவ்வொரு தரம் கெர்ச்சித்து முழங்குகையில் அப்பள்ளத்தாக்கின் நான்கு திசையில் இருந்தும் எதிரொலி எழும்பிற்று. அவர்களுடைய வழிகாட்டியின் மனம் தவிர மற்றவர்கள் மனதெல்லாம் கலங்கித் தடுமாறிற்று. உடனே தைரிய நெஞ்சன் பிரயாணிகள் அனைவரையும் முன்னேவிட்டு தான் பின்னே நின்று கொண்டார். அந்த சிங்கம் கெர்ச்சித்து பாய்ந்து வந்தது.
தைரிய நெஞ்சன் அதைப் பார்த்து சண்டைக்கு அழைக்கவே, (1 பேதுரு 5 : 8, 9) ஓகோ எதிர்ப்பாரிடத்தில் நமக்கேது இடம் என்று எண்ணி அது பின் வாங்கிப் போயிற்று. அப்புறம் அது திரும்பி வரவே இல்லை.
அப்பால் தைரிய நெஞ்சன் முன்னும் இவர்கள் பின்னுமாய் வழி நடந்து ராஜ பாதையின் குறுக்காக வெட்டப்பட்டு இருந்த அகன்ற பாதாளம் மட்டும் வந்து சேர்ந்தார்கள். அதைக் கடந்து போகும்படி தங்களைத் தயார் செய்து கொள்ளுவதற்குள்ளாக கரும்புனலும் கார்மேகமும் அவர்கள் அனைவரையும் கவிந்து கொண்டதால் கண் இருண்டு போயிற்று. அப்பொழுது பிரயாணிகள் எல்லாரும் ஐயோ, நாங்கள் என்ன செய்வோம் என்று அலறினார்கள். ஆனால் அவர்கள் வழிகாட்டி: பயப்படாதேயுங்கள், தரித்து நின்று இந்த காரிருள் என்னமாய் முடிகிறது என்று பாருங்கள் என்றார். அவர்களுடைய வழியில் தடுக்கல் இருந்தபடியால் அங்கேயே நின்று கொண்டு இருந்தார்கள். அதோடு சத்துருவின் சேனைத் தளங்கள் நெருங்கி வருகிறாற்போன்ற அமளியும் கேட்டது. அக்குழியில் இருந்து அக்கினியும் புகைக்காடும் குபு குபு என்று எழும்புகிறதையும் கண்டார்கள்.
அத்தருணத்தில் கிறிஸ்தீனாள், தன் தோழியைப் பார்த்து: என் கணவர் பட்டபாடெல்லாம் இப்போது விளங்குகிறது. இந்த இடத்தைக் குறித்து நான் அதிகமாய்க் கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்போதுதான் இந்த இடத்தையும் பார்த்தேன். இதற்குமுன் நான் இங்கே வந்ததில்லை. அர்த்த ராத்திரியில் ஏழை மனுஷன் ஒண்டியாய் இதில் வழி நடந்து போனாரே! கொஞ்சம் குறைய இந்த பள்ளத்தாக்கு முழுவதையும் இரவிலே நடந்து கழித்தார். இந்தவித துஷ்டப் பேய்கள் வந்து அவரை சந்துசந்தாய் கிழத்துப் போடுகிறவைகளைப் போல் கடும் பாடுபடுத்தின. அனந்தம் பேர் இதைப்பற்றி பேசி இருக்கிறார்கள். ஆனால் இதின் வழியாய் நடந்தவர்களுக்கேயன்றி வேறொருவருக்கும் இதன் காரியா பாகங்கள் நுட்பமாய்த் தெரியமாட்டாது. 3
இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும், அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகிறதும் இல்லை. (நீதிமொழிகள் 14 : 10) இங்கே இருப்பது மகா பயங்கரந்தான் என்றாள்.
தைரி: அதற்கு தைரிய நெஞ்சன்: இது திரளான தண்ணீர்கள் மேல் தொழில் செய்கிறது போல், அல்லது ஆழங்களில் இறங்கிப் போகிறது போல் இருக்கிறது. இது சமுத்திர ஜலத்தின் மையத்தில் குடியிருப்பது போலும், பர்வதங்களின் அஸ்திபாரங்களுக்குள் போகிறதுபோலும் இருக்கிறது. இப்பொழுது நம்மை பூமியின் தாழ்ப்பாள்கள் என்றைக்கும் அடைக்கிறது போல் இருக்கிறது. ஆனாலும் இருளுள்ள ஸ்தலங்களில் ஒளியற்று நடக்கிறவர்கள் எவர்களோ அவர்கள் கர்த்தருடைய நாமத்தை நம்பி தங்கள் தேவனை சார்ந்து கொள்ளக்கடவர்கள். (ஏசாயா 50 : 10) என் மட்டும் சொன்னால் நான் முன் சொல்லிய வண்ணம் இந்தப் பள்ளத்தாக்கின் வழியாய் பலமுறை போய் வந்திருக்கிறேன். இப்பொழுது உண்டான சங்கடங்களிலும் அதிகமான சங்கடங்களுக்குள் நான் அகப்பட்டும் இருக்கிறேன். அப்படி இருந்தும் நான் இன்னும் உயிரோடு இருக்கிறதை நீங்கள் காண்கிறீர்களே. நான் என்னை புகழ்ந்து கொள்ளமாட்டேன். ஏனெனில், என்னை நானே இரட்சித்துக் கொள்ளவில்லை. என்றாலும் நமக்கு ஒரு சகாயம் வரும் என்று நம்பி இருக்கிறேன். நாம் நமது இருதயத்தை பிரகாசிக்க வல்லமை உள்ளவரை நோக்கி பிரகாசத் துக்காக பிரார்த்திப்போம் வாருங்கள். அந்த பிரகாசமானது இந்த இருளை விரட்டி அகற்றுவதோடு பாதாள பூத கணங்களையும் துரத்தி அகற்றி விடும் என்றார்.
அப்படியே அவர்கள் அழுது பிரார்த்தித்தார்கள். அந்த க்ஷணமே தேவன் வெளிச்சத்தையும், விடுதலையையும் அனுப்பினார். ஏனெனில், அவர்கள் இம்மட்டும் முன் நடந்துபோகாதபடி பாதை மறைக்கப்பட்டிருந்தது. கார்மேக திரள் அகன்று போன போதினும் தங்களுக்கு எதிரே வெட்டப்பட்டிருந்த பள்ளம் அப்புறம் அவர்களுக்கு தடையாய் இருந்தது. அவர்கள் அந்தப் பள்ளத்தையும் கடந்து போனார்கள். அங்கிருந்து சகிக்கமுடியாத துர்க்கந்தமும், நாற்றமும் அவர்கள் மூக்கில் ஏறி மிகுந்த அருவருப்பை உண்டாக் கினது. அப்பொழுது தயாளி: இந்த இடம் திட்டிவாசல் அரண்மனை போலும், வியாக்கியானியுடைய வீட்டைப் போலும் அலங்கார மாளிகையைப் போலும் விரும்பப்படத்தக்க ஒரு இடம் அல்ல என்று சொன்னாள்.
அதைக்கேட்ட பையன்களில் ஒருவன், எப்போதும் இந்த இடத்தில் தங்கி இருப்பதிலும் இதைக் கடந்து போவது அவ்வளவு கெடுதி இல்லையே.
நமக்கென்று ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற வாசஸ்தலத்துக்கு இப்படிப்பட்ட பாதை வழியாக நம்மை வழிநடத்துவது நியாயம்தான் என்பதற்கு என் மனதில் ஒரு முகாந்தரம்படுகிறது. நமது நித்திய வீடு நமக்கு மட்டற்ற இன்பமுள்ளதாகும்படிக்கு இப்படிப்பட்ட பாதை வழியாய் நாம் போக வேண்டியதுதான் என்றான். 4
அதைக்கேட்ட வழிகாட்டி: சாமுவேலே! நீ நன்றாய்ச் சொன்னாய். மூத்து நரைத்த மனுஷனைப்போல பேசிவிட்டாய் என்று சொன்னார். அதற்கு பையன்: நான் மாத்திரம் இந்த அவதிகளை கடந்து விட்டேனானால் அப்புறம் ஒளியையும், ராஜ பாதையையும் பற்றி இம்மட்டும் என் ஜீவகாலத்தில் இல்லாத அவ்வளவு மதிப்பு எனக்கு இருக்குமே என்றான். அதற்கு அவர்: இன்னும் கொஞ்ச காலத்துக்குள் நாம் இதை கடந்து விடுவோம் என்றார்.
இப்படியே பேசிப் பேசி வழிநடந்து போனார்கள். அப்போது யோசேப்பு: இந்த பள்ளத்தாக்கின் முடிவை எப்போதுதான் பார்ப்போம் என்றான். அப்போது வழிகாட்டி: அப்பா, அடிபார்த்து நட, ஏனெனில் கண்ணிகளுக்கு ஊடே நடக்கப் போகிறோம் என்றார். 5 அதுமுதல் எல்லாரும் கவனமாய் பார்த்து காலெடுத்து வைத்தார்கள். எவ்வளவு கவனமாய் நடந்த போதினும் கண்ணிகளால் கடும்பாடு பட்டார்கள். அவர்கள் கண்ணிகள் நிறைந்த ஓர் இடத்தில் வந்தபோது பாதையின் இடது பக்கத்தில் ஒருவன் கண்ணியிலே மாட்டி விழுந்து தேகம் எல்லாம் படுகாயப்பட்டு கிடக்கிறதை கண்டார்கள். அப்போது அவர்கள் வழிகாட்டி: அதோ கிடக்கிறானே அவன் பேர் பெரும் பராக்கன். இவன் வெகு காலமாய் அங்கேதான் கிடக்கிறான். இவனோடு பிடிபட்ட கவனிப்பு என்பவன் எப்படியோ தப்பி ஓடிவிட்டான். இவனையோ அவர்கள் கொன்றுபோட்டார்கள். இந்த திசைகளில் மாண்ட மனுஷரின் தொகை இவ்வளவென்று கணக்கு எண்ண எங்களால் ஆகாது. அப்படி இருந்தும் பிரயாணிகள் புத்தியீனமாகவும், கவனம் இல்லாமலும் வழிகாட்டி இல்லாமலும் கவலையீனமாய் பயணம்பண்ணி விடுகிறார்கள்.
இந்த இடத்தில் ஐயோ ஏழை கிறிஸ்தியான் தப்பினதைப் போலொத்த அதிசயம் வேறில்லை. ஆனால் அவன் தன் தேவனால் நேசிக்கப்பட்டவனாகவும் தன்னில் நல் மனம் உடையவனாகவும் இருந்தான். மற்றப்படி இந்த மரணப் பள்ளத்தை கடந்து செல்ல அவனால் முடியாது என்றார்.
1. மற்றவர்களுடைய ஆலோசனையும், தோழமையும், ஒத்தாசையும் பெலவீனரும் பயங்காளிகளுமானவர்களை முதலாய் பெரிதும் கொடிதுமான சோதனைகளின் ஊடே பத்திரமாய்க் கடந்து போகப் பெலப்படுத்தும். தைரியசாலிகள்தானும் தனிமையில் விடப்பட்டால் கொடிய இக்கட்டுகளுக்குள்ளாகி வருத்தப்படுகிறார்கள்.
2. சிங்கம்: தேவனுடைய ஜனங்களை பயங்காட்ட சாத்தான் எப்போதும் ஆயத்தமாய் இருக்கிறான். அவர்கள் ஜெபத்தையும், தேவ பக்தியையும் கைசோர விடும்போது அவன் அவர்களை மேற்கொள்ளுவான். ஆனால், கிறிஸ்துவின் பேரிலுள்ள நம்பிக்கையை உறுதியாய் பிடித்திருக்கும்போது அவன் அவர்களை விட்டு ஓடிப்போவான்.
3. நம்முடைய சொந்த அனுபோகத்தினாலேதான் நமக்கு அநேக காரியங்கள் வெளியாகும். மற்றவர்களுடைய போதனைகளினால் ஒருபோதும் நாம் அறிந்து கொள்ளக்கூடாத அநேக சங்கதிகள் உண்டு.
4. பிரயாணத்தில் நேரிடும் கஷ்டங்கள்தான் அதின் முடிவில் உண்டாகும் இளைப்பாறுதலை அதிக அருமையுள்ளதாக்குகிறது. சோதனைகளிலும் துன்பங்களிலும் நம்முடைய ஆவியானது அடைந்து கொள்ளும் தேர்ச்சி பின்னால் உண்டாகும் பாக்கியத்தை அனுபவிக்க நம்மைப் பக்குவப்படுத்துகிறது.
5. வெகு தொலைவுக்கு முன்னாலே நாம் பார்ப்பதனால் நாம் நமது பாதத்திற்கருகில் இருக்கும் தீமைகளை பார்க்காமல் விட்டுவிடுகிறோம். ஆதலால் நாம் ஒவ்வொரு அடியையும் கவனமாய் எடுத்து வைத்துப் போக வேண்டும். எதிர்காலத்தை அல்ல, நிகழ் காலத்தைக் குறித்தே நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.