தாழ்மை என்னும் பள்ளத்தாக்கு
இப்பொழுது அவர்கள் தாழ்மை என்னும் பள்ளத்தாக்குக்குப் போகும்படியாக மலையில் இருந்து இறங்கினார்கள். அந்த மலையின் இறக்கம் செங்குத்தும் சறுக்கலுமாய் இருந்தது. அவர்கள் மகா கவனத்துடன் மெதுவாய் இறங்கிவிட்டார்கள். அவர்கள் பள்ளத் தாக்கு போய்ச் சேர்ந்தவுடனே பயபக்தி கிறிஸ்தீனாளைப் பார்த்து: உன் கணவராகிய கிறிஸ்தியான் அப்பொல்லியோன் என்னும் அழிம்பனை சந்தித்ததும் இருவரும் கொடிய போர்புரிந்ததும் இந்த இடம்தான். அதைப்பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய் என்று நினைக்கின்றேன். ஆனால் திடமனதாய் மாத்திரம் இரு. தைரிய நெஞ்சன் உங்களுக்கு வழித்துணையாக வருகிறமட்டும் உங்களுக்கு அபாயம் ஒன்றும் நேரிடாது என்று சொல்லி அவர்களை தைரிய நெஞ்சனின் காபந்துக்குள் ஒப்புவித்துவிட்டு அந்த இரண்டு கன்னிமாப் பெண்களும் தங்கள் இடத்துக்கு திரும்பினார்கள். பிரயாணிகளோ தங்கள் வழிகாட்டியின் பின்னாலே நடந்து போனார்கள்.
தைரி: அப்பொழுது தைரிய நெஞ்சன் பிரயாணிகளைப் பார்த்து: நாம் இந்த பள்ளத்தாக்கைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், நாமே நமக்கு சேதத்தை உண்டுபண்ணிக் கொண்டால் அன்றி மற்றப்படி நம்மைச் சேதப்படுத்துவது ஒன்றும் இங்கே இல்லை. இந்த இடத்தில் கிறிஸ்தியான் அப்பொல்லியோனை சந்தித்து அவனுடன் கடும் போர் புரிந்தது மெய்தான். அவன் இந்த மலை இறங்கி வருகையில் இரண்டொருதரம் சறுக்கி விழுந்ததினாலேதான் 1 அந்த ஆபத்து அவனுக்கு நேரிட்டது. மேட்டில் சறுக்கினால் பள்ளத்தில் சண்டை செய்ய வேண்டியது உண்டு. அதினாலே இந்தப் பள்ளத்தாக்கை எல்லாரும் பழித்துப் பேசுகிறார்கள்.
சாதாரண ஜனங்கள் கேள்விப்பட்டால் அந்த இடத்தில் ஏதோ ஒரு துஷ்டப் பேய் வட்டம் போட்டுத் திரிகிறது என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் ஐயோ, அவரவர் செய்கையின் பலன் அங்கே நேரிடுகிறதினாலே அப்படிப்பட்ட ஆபத்துக்களுக்கு உட் படுகிறார்களே அன்றி வேறல்ல. பட்சிகள் பறந்து உலாவும் மற்ற மைதானங்கள் போலவே இந்த தாழ்மையின் பள்ளத்தாக்கும் செழிப்புள்ள பூமியாய்த்தான் இருக்கிறது. நாம் மாத்திரம் பக்கத்தில் சற்று கவனமாய் பார்த்துப் போனால் இந்த இடத்தில் கிறிஸ்தியான் அவ்வளவாய் அவதிப்பட்டதின் அந்தரங்கம் இன்னது என்பதை விளக்கும் அறிகுறியைக் கண்டாலும் காண்போம் என்றார்.
அப்பொழுது யாக்கோபு என்ற பிள்ளையாண்டான் தன் தாயைக்கூப்பிட்டு: அம்மா! அதோ பார் ஒரு ஸ்தம்பம்! அதில் ஏதோ எழுத்துக்கள் வரையப்பட்டிருக்கிறது போலத் தெரிகிறது. அது என்ன வாசகம் என்று நாம் போய்ப் பார்ப்போம் என்றான். நல்லதப்பா போவோம் என்று போனார்கள். அவர்கள் போய் பின் வரும் வாசகம் அதில் எழுதப்பட்டிருப்பதை கண்டார்கள்.
“இவ்விடம் வந்து சேருமுன்
கிறிஸ்தியான் அடைந்த சறுக்கலும்
இவ்விடம் வந்து சேர்ந்தபின்
அவன் புரிந்த கடும்போரும்
இனி வருவோருக்கு
எச்சரிப்பாய் இருப்பதாக”
என்று எழுதப்பட்டிருந்தது. உடனே அவர்கள் வழிகாட்டி: பார்த்தீர்களா? கிறிஸ்தியான் இவ்விடத்தில் பட்ட பாடுகளுக்கு முகாந்தரம் இன்னதென்று காட்டும் அறிகுறி ஸ்தம்பம் ஏதாவது இங்கே இருக்கும் என்று நான் சொன்னது சரி ஆயிற்றா? என்று சொல்லி, கிறிஸ்தீனாளைப் பார்த்து: அநேகர் அனுபவித்த கஷ்ட நஷ்டங்களின் பங்கே அன்றி அதிகமானதொன்றும் கிறிஸ்தியானுக்கு உண்டாகவில்லை. இந்த மலை இறங்குவதிலும் ஏறுவதே சுலபம். இப்படிச் சொல்லத்தக்க மலைகள் இந்த உலகத்தில் அநேகம் இல்லை. நாம் அவனைப்பற்றி அனுதாபப்பட அவசரம் இல்லை. அவன் தன் சத்துருவை ஜெயங்கொண்டு இளைப்பாறுகிறான். நாமும் சோதிக்கப் படுகிற சமயத்தில் அவனிலும் தாழ்வானவர்களாய் விளங்காதபடிக்கு ஆண்டவர் நமக்கு ஒத்தாசை புரிவாராக என்றார்.
மறுபடியும் அவர்: நாம் இனி இந்த தாழ்மையின் பள்ளத்தாக்கை குறித்த பேச்சுக்கு வருவோமாக. இந்த திசையிலுள்ள பூமியிலெல்லாம் இதைப்போல நலமும், பலன் தரும் பூமியும் இல்லவே இல்லை. இது மகா செழிப்பான பூமி. நீங்களே பாருங்கள், இந்த மைதானம் எவ்வளவு பச்சை பசேரென்று இருக்கிறது. இந்தப் பள்ளத்தாக்கைப் பற்றி ஒன்றும் கேள்விப்படாத ஒரு பிரயாணி இப்படிப்பட்ட வசந்த காலத்தில் நம்மைப் போல வருகிறதாக இருந்தால் அவன் அங்குமிங்கும் சுற்றிப் பார்த்து தன் மனதுக்கேற்ற கண்காட்சிகளைக் கண்டு களிகூரமாட்டானா? ஆ, இந்தப் பள்ளத்தாக்கு பசுமையாய் இருக்கிறதே! அந்தமான லீலி புஷ்பங்களால் 2 அடர்ந்திலங்குதே! (உன்னத 2 : 1) நான் அறிந்தமட்டும் அநேக கஷ்டவாளிகளுக்கு இந்தத் தாழ்மையின் மைதானத்தில் சொத்து இருக்கிறது. ஏனெனில், தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ள வர்களுக்கு கிருபை அளிக்கிறார். (யாக்கோபு 4 : 6) (1 பேதுரு 5 : 5) மெய்யாகவே இது செழிப்புள்ள பலனைக் கொடுக்கிற பூமி! கைநிறைய வாரி, களம் நிறைய குவிக்கத் தக்க பலன் இங்கே விளைகிறது. தங்கள் பிதாவின் வீடு சேர விரும்பும் மோட்ச பிரயாணிகள் சிலர் இனிப் போக வேண்டிய பாதை முழுவதும் ஏறும் மலைகளாயாவது இறங்கும் சரிவுகளாயாவது இராமல் இப்படி மைதானமாகவே இருந்துவிட்டால் நல்லதே என்று ஆசைப் படுகிறார்கள். ஆனால் அவர் விதித்த வழியே வழி. அதை மாற்ற யாரால் ஆகும்? அதற்கு அப்பால் முடிவு உண்டு என்றார். 3
இவ்வண்ணம் அவர்கள் பலவாறாய் பேசிக்கொண்டு வழிநடந்து போகையில் சற்று அப்பால் தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பையனைக் அவர்கள் கண்டார்கள். அவன் கிழிந்த வஸ்திரம் தரித்து பிச்சைக்காரனைப் போல் இருந்தாலும் மலர்ந்த முகமும் மகிழ்ந்த பார்வையும் உடையவனாய் இருந்தான்.
அவன் ஒரு கல்லின் மேல் இருந்து கொண்டே களிகூர்ந்து பாடினான். கேள், கேள்! அதோ அந்த இடைப் பையன் பாடுகிறதைக் கேள்! என்று தைரிய நெஞ்சன் சொன்னார். உடனே எல்லாரும் நின்று அந்தப் பாட்டைக் கேட்டார்கள். அந்தப் பையன்:
தரையில் இருப்பவன் தவறிவிழான்,
தாழ்மையுள்ளோன் பெருமை கொள்ளான்
தாழ்ந்தோருக்கு தயவருளும்படி
தற்பரன் வருவார் எப்பொழுதும்,
கூடவே குறையவே இருந்தாலும்,
உள்ளதெதுவோ அதே போதும்.
போதும் என்பதென் ஜெபமாம்,
புண்ணியநாதரே நமஸ்காரம்.
போதும் என்போர்க்கே அருளாம்
போதாதென்போருக்கு அருளேது
நிறைந்த வாழ்வே அனுதினமே
நித்தப் பயணக்காரருக்கே,
பளுதானே அது பளுதானே,
பாக்கியம் இங்கே போதுங் கொஞ்சம்
அங்கே தருவீர் வாழ்வை எல்லாம்
ஐயாவே, கிறிஸ்தையாவே!
என்று பாடினான். அப்போது அவர்கள் வழிகாட்டி: கேட்டீர்களா பாட்டை? இந்தப் பிள்ளையாண்டான் மனச் சந்தோசத்தோடு தன் காலத்தை கழித்து வருகிறான் என்று நான் திட்டமாய் சொல்லக்கூடும். பீதாம்பரம் கட்டி பிரபலமாய்த் திரிவோருடைய மடிக்குள் இல்லாத மன திருப்தி என்னும் திவ்விய மூலிகை இவன் மடிக்குள் இருந்து மணக்கிறது. அவன் காரியத்தை நிறுத்திப் போட்டு நம்முடைய பேச்சை பேசுவோமாக. இந்தப் பள்ளத்தாக்கில்தான் நமது ஆண்டவருடைய நாட்டுப்புறத்து மாளிகை 4 கட்டப்பட்டிருந்தது. இங்கே வசிக்கவே அவர் மெத்தவும் பிரியங் கொண்டிருந்தார். இந்த மைதானத்தில் உலாவித் திரியவே அவருக்கு அவ்வளவு ஆசை இருந்தது. இதின் தேச சுவாத்தியம் தேக சௌக்கியத்திற்கு மிகவும் ஏற்றதென்று அவர் அறிந்திருந்தார். மேலும் ஒரு மனுஷன் தன் ஜீவகால சச்சரவுகளுக்கும், சந்தடிகளுக்கும் விலகி, இந்த இடத்தில் அக்கடாவென்று அமைதலாய் இருக்கலாம். இதை அல்லாத மற்ற நிலைமைகள் எல்லாம் காபராவும் காலாகோலமுமாய் இருக்கும். இந்தத் தாழ்iயின் பள்ளத்தாக்கு ஒன்றில் மாத்திரம் அப்படிப்பட்டது ஒன்றும் இல்லாமல், இது தனி வாசவனமாய் இருக்கிறது. மற்ற இடங்களில் உண்டாகிற மனமுறிவும் தடைகளும் போல் ஒருவனுடைய தியான சிந்தைக்கு நேரிடமாட்டாது. மோட்ச பிரயாணிகளே அன்றி வேறொருவரும் இந்த வன வழி நடக்கிறதில்லை. கிறிஸ்தியான் இந்த இடத்தில் அப்பொல்லியோனை சந்திக்கவும் அவனுடன் கை கலந்து போர் புரியவும் நேரிட்ட போதிலும் முற்காலங்களில் இவ்விடத்தில் பல ஜனங்கள் தேவதூதர்களை சந்தித்ததும் உண்டு. (ஓசியா 12 : 4, 5) இங்கே முத்துக்கள் கண்டு எடுக்கப்பட்டதும் உண்டு. (மத்தேயு 13 : 46) ஜீவ வார்த்தைகளை கண்டு பிடித்ததும் உண்டு. (நீதிமொழிகள் 8 : 35)
நமது ஆண்டவர் முற்காலத்தில் தமது நாட்டுப்புற வீட்டை இங்குதான் கட்டியிருந்தார் என்றும் இந்த வனத்தில் உலாவித் திரிய அவ்வளவு பிரியப்பட்டார் என்றும் சொன்னேனே! இன்னும் கேளுங்கள். இந்த வனத்தை நாடி இந்தப் பூமியின் போங்கையும், தாரதம்மியத்தையும் உற்று ஆராய்ந்து பரிசோதிக்கப் பிரியப்படுகிறவர் களுக்காக அவர் வருஷ மானியப் பொக்கிஷம் ஒன்றை ஏற்படுத்தி குறிக்கப்பட்ட காலங்களில் அந்தப் பொக்கிஷத்தில் இருந்து எடுத்துப் மோட்ச பிரயாணிகளின் வழிச் செலவுக்காகவும் அவர்களை மோட்ச பிரயாணத்தில் உற்சாகப் படுத்தும்படியாகவும் உண்மையோடு பகிர்ந்து கொடுக்கும்படி திட்டம் பண்ணி இருக்கிறார் என்றார்.
சாமு: இவ்வண்மாக அவர்கள் பேசிப் பேசிப் போகையில் சாமுவேல் என்ற பிள்ளையாண்டான் தைரிய நெஞ்சனைப் பார்த்து: ஐயா, இந்தப் பள்ளத்தாக்கில் என் தகப்பனாருக்கும், அப்பொல் லியோனுக்கும் யுத்தம் நடந்ததே. இந்த வனத்தில் அந்த யுத்தம் நடந்த இடம் எது? என்று கேட்டான்.
தைரி: அதற்கு தைரிய நெஞ்சன் நமக்கு இன்னும் சற்று முன்னே அது இருக்கிறது. மறதி வனம் 5 என்னும் பசும்புல் மைதானத்துக்கப் பால் ஒரு இடுக்கமான வழி உண்டு. அதில்தான் உன் பிதாவுக்கும், பாதாள அப்பொல்லியோனுக்கும் போர் நடந்தது. இந்த வன வழியில் அந்த இடமே மகா ஆபத்தானது. மோட்ச பிரயாணிகளுக்கு இந்த வனத்தில் எப்போதாவது ஆபத்து நேரிடுகிறதானால் அவர்கள் எவ்வளவோ அபாத்திரராய் இருந்தும் தேவனால் பெற்றுக்கொண்ட சகாயங்களை ஞாபகம் பண்ணாமல் எப்போது மறக்கிறார்களோ, அப்போதுதான் அந்த ஆபத்துக்கள் வந்து நேரிடும். இந்த இடத்தில் தான் வேறு அநேகருக்கும் இப்படிப்பட்ட சங்கடங்கள் சம்பவித்தன. நாம் அந்த இடம் மட்டும் போனபின்பு அந்த இடத்தில் நடந்த போர்களை உணர்த்தும் பல குறிப்புகளை நாம் எப்படியும் காண்போம் என்று நான் உறுதியாய் நம்புகிறேன் என்று சொன்னான்.
தயாளி: அப்பொழுது தயாளி: நான் இம்மட்டும் பயணம் பண்ணின பாதைகளில் அனுபவித்த சுகம் எவ்வளவோ, அவ்வளவு சுகம் எனக்கு இந்த வன வழியிலும் இருக்கிறது என்று நான் என் மட்டில் சொல்லக்கூடும். இது என் ஆவிக்கு ஒத்திருக்கிறது. ரதங்களின் இரைச்சலும், சக்கரங்களின் சந்தடியும் இல்லாத இப்படிப்பட்ட இடத்தில் இருப்பதுதான் எனக்கு பிரியம். இந்த இடத்தில் இருந்து கொண்டு ஒரு மனுஷன் தான் யார் என்றும் எங்கிருந்து வந்தவன் என்றும் தான் செய்தது என்னவென்றும் அரசன் தன்னை அழைத்த காரணம் என்னவென்றும் யாதொரு தடுமாற்றமின்றி தியானித்துக் கொள்ளலாம் என்று என் மனதுக்கு தோன்றுகிறது. இந்த இடத்தில் ஒருவன் ஆழ்ந்து யோசித்து தன் இருதயத்தை நொறுக்கி, ஆவியை உருக்கி, தன் கண்கள் எஸ்போனின் மீன் குளத்தைப் போல் கலங்கிப் போகுமட்டும் (உன்னதப்பாட்டு 7 : 4) தியான சிந்தையில் இருக்கலாம். அழுகையின் பள்ளத்தாக்காகிய இந்த வனத்தின் வழியாய் சீராய் நடந்து போகிறவர்கள் இதைத் தங்களுக்கு நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். இவ்விடத்தில் உள்ளவர்கள் மேல் தேவன் வானத்திலிருந்து வருஷிக்கும் மழையானது அந்த நீரூற்றுகளை நிரப்பும். (சங்கீதம் 34 : 5, 7) இந்த இடத்தில் இருந்தே அரசர் தமது தாசருக்கு அவர்களுடைய திராட்ச தோட்டங்களை தத்தம் செய்வார். அந்த தோட்டங்களின் வழியாய் நடந்து போகிறவர்கள் அப்பொல்லியோனால் அவஸ்தைப்பட்டும் கீதம் பாடின கிறிஸ்தியானைப் போல் பாடிக் கொண்டே போவார்கள் (ஓசியா 2 : 15) என்றாள்.
தைரி: அப்போது அவர்கள் வழிகாட்டி: இந்தப் பள்ளத்தாக்கின் வழியாய் நான் பல தடவை போய் வந்ததுண்டு. இதைப்போல எனக்கு நலமான பாதை எங்கும் இல்லை. அனந்தம் பிரயாணிகளோடு நான் அவர்களுக்கு வழிகாட்டும்படி வந்திருக்கின்றேன். அவர்களும் இப்படியே என்னிடத்தில் அறிக்கையிட்டு இருக்கிறார்கள். நமது அரசரும் “சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவர்களையே நோக்கிப் பாhர்ப்பேன்” (ஏசாயா 66 : 2) என்று சொல்லு கிறார் என்றார்.
முன் சொன்ன போர் நடந்த இடத்துக்கு அவர்கள் வந்தவுடனே தைரிய நெஞ்சன் கிறிஸ்தீனாளையும் அவள் பிள்ளைகளையும் தயாளியையும் பார்த்து: அந்தப் போர்க்களம் இதுதான்.
போர் நடந்தபோது கிறிஸ்தியான் நின்ற இடமும் இதுதான். 6 அதோ அந்த இடத்தில் இருந்துதான் அப்பொல்லியோன் அவன்மேல் பாய்ந்தான். யுத்தத்தின் அடையாளம் ஏதாவது நாம் காணலாம் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா? கிறிஸ்தீனாளே இதோ பார், உன் புருஷனுடைய இரத்தம் இந்தக் கல்லுகளின் மேல் இந்நாள் மட்டும் இருக்கிறது. ஒடிந்து போன அப்பொல்லியோனின் அக்கினியாஸ்தி ரங்களின் துண்டுகள் அதோ கண்ட இடமெல்லாம் கிடக்கின்றன. இதோ கீழே தரையைப் பார். ஒருவரையொருவர் மடக்கும்படி அவர்கள் கால் வைத்து மிதித்து நின்ற இடங்களில் மண் பதிந்து அப்படியே காய்ந்துபோய் இருக்கிறது. அவர்கள் ஒருவரையொருவர் தள்ளி விழத்தட்டி மல்லுக்கட்டிக் கொண்டு கிடந்ததில் கல்லுகள் எப்படி நொறுங்கிப் போய் இருக்கிறது பார்! மெய்யாகவே கிறிஸ்தியான் நல்ல போடு போட்டான். யுத்த ராட்சதனாகிய ஏர்குல மன்னன் இந்தச் சமயத்தில் எவ்வளவு வீரத்துவம் காட்டி இருப்பானோ அவ்வளவும் அதற்கு மிஞ்சியும் கிறிஸ்தியான் தன் வீரதீர பராக்கிரமத்தோடு போர்புரிந்து அப்பொல்லியோனை அதோகதி யாக்கிப் போட்டான். அப்பொல்லியோன் தோற்றுப் போன உடனே மரண நிழலின் பள்ளத்தாக்கு என்னப்படுகிற நமக்கு அடுத்த பள்ளத்தாக்குக்குள் ஓடிப்போய் பதுங்கிக் கொண்டான். இன்னும் கொஞ்ச நேரத்துக்குள் நாம் அந்த பள்ளத்தாக்கையும் கடக்க வேண்டியதிருக்கும். அதோ தெரிகிறதே அந்த ஸ்தம்பத்தின் மேல் தலைமுறை தலைமுறைக்கும் கீர்த்தியாய் இருக்கும்படி இந்த யுத்தத்தின் செய்தியையும் அதில் கிறிஸ்தியான் அடைந்த ஜெயத்தையும் தீட்டியிருக்கிறது என்றார்.
அந்த ஞாபகஸ்தம்பம் தங்களுக்கு சற்று முன்னே வழி ஓரமாய் இருந்ததினால், அவர்கள் உடனே நடந்து போய் அந்த வாசகத்தை வாசித்துப் பார்த்தார்கள். அதிலே:-
பல்லவி
இந்த, இந்த, இந்த இடத்தில் ஓர்
விந்தை, விந்தை சண்டை ஆனது,
இந்த, இந்த ஸ்தம்பமுமே
ஜெயஸ்தல குறியாமே.
பக்தன் கிறிஸ்தியானுடனே – படு
பாதகன் அப்பொல்லியோன் எதிர்த்தான்
நான் விடேன், நான் விடேன் என்றெவரும்
நடுங்கப் போர் புரிந்தார் – இந்த, இந்த
பக்தன் அவனை வீரியமாய் – வெட்டி
குத்தித்தள்ளிக் கிடத்திவிட்டான்
பிழைத்தோம், பிழைத்தோம் என்றவனே
பிடித்தானே ஓட்டம் – இந்த, இந்த
என்று எழுதப்பட்டிருந்தது.
1. கிறிஸ்தவனுக்கு நேரிடும் கொடிய போர்கள் அவன் சொந்த நடத்தைகளால்தான் உண்டாகின்றன. பாவம் எப்போதும் கலகம் எழுப்புகிறது. நன்மையான பாதையில் நேராய் நடக்காதவர்களை பிசாசு எதிர்க்கிறான். நாம் குற்றம் செய்த பின் பெலமாய் யுத்தம் செய்யாதபட்சத்தில் மறுபடியும் செம்மையான வழிக்கு வர இயலாது. நாம் செய்யும் ஒவ்வொரு பாவமும் நாம் முன்னிருந்த நேர் வழிக்கு வரும் முன் ஒவ்வொரு சண்டையை பிறப்பிக்கும்.
2. லீலி புஷ்பம்: இந்த புஷ்பமானது பரிசுத்தத்துக்கும் பொறுமைக்கும் குறிப்பாய் இருப்பதால், சாந்தமான சீஷர்களுக்கு இது ஒரு தகுந்த ஆபரணமாய் இருக்கிறது.
3. சகலமும் சமாதானமும் அமைதலுமாய் இருக்கிறது விரும்பப் படத்தக்க காரியம். எப்போதும் அப்படியே இருக்கத்தான் நமக்கும் ஆசை. ஆனால் அது கூடிக்கொள்ளாது. இலகுவான பாதைகளில் போலவே கரடுமுரடான பாதைகளிலும் நடந்து செல்ல நாம் ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்.
4. பூமியானது இயேசு கிறிஸ்துவினுடைய நாட்டுப் புறத்து மாளிகை போல இருக்கிறது. அவர் பூலோகத்தில் இருந்தபோது வேடிக்கை, டம்பம், உல்லாசம் இவற்றை நாடாமல் சாந்தமும், மனத்தாழ்மையும் உள்ளவராய் மனிதரை விட்டுப் பிரிந்திருந்தார். இப்படிப்பட்ட ஜீவியம் யாவிலும் நல்லதென்று அவர் தெரிந்து கொண்டார்.
5. மறதி வனம்: யுத்தம் நடந்தது இந்த வனத்துக்கு அப்பால்தான். நமது அயோக்கியதையையும், கடவுளின் தயாளகுணத்தையும் நாம் மறந்துவிடும் போது சாத்தானுடைய கைக்குள் அகப்பட்டுக் கொள்ளுகிறோம். அப்போது அவன் நம்மை நாசம் செய்யப் பார்க்கிறான்.
6. மற்றவர்களுடைய சரித்திரத்தையும் அனுபவங்களையும் நாம் நன்றாய் அறிந்து ஞாபகம்பண்ணி வரவேண்டும். நாம் துன்பங்களுக்கு எப்படி விலகலாம், சோதனைகளை எப்படி ஜெயிக்கலாம் என்று மற்றவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் நன்றாய் அறிந்து கொள்ளலாம்.