அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்
அப்பால் அவர்கள் பயணம் புறப்பட்டார்கள். அவர்களோடு விவேகி, பயபக்தி ஆகிய இரண்டு கன்னிமாப்பெண்களும் சற்று தூரம் வழிவிட்டனுப்பும்படி போனார்கள். அவர்கள் வாசலண்டை வந்தபோது கிறிஸ்தீனாள் சேவகனைப் பார்த்து: இந்த வழியாய் யாராவது சற்று முந்திப் போகிறார்களா என்று கேட்டாள். அதற்கு அவன்: அப்படிப் போவோர் ஒருவரையும் காணோம். ஒரே ஒருவன் மாத்திரம் வெகு நாளைக்கு முன் இந்த வழியாகப் போனான். அவன் நீங்கள் போக வேண்டிய ராஜ பாதையில் சில காலத்துக்கு முன் ஒரு பெருங் கொள்ளை நடந்தது என்றும், அந்த திருடர் பிடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஊருக்குள் ஒரு பேச்சு இருக்கிறதாம் என்றான். அதைக் கேட்கவே கிறிஸ்தீனாளுக்கும், தயாளிக்கும் கை கால் ஆட்டம் கொடுத்தது. அதைக் கண்ட மத்தேயு என்ற பிள்ளையாண்டான் தாயை நோக்கி: அம்மா! வீரதீர பராக்கிரமராகிய தைரிய நெஞ்சன் என்பவர் நம்மோடுகூட வந்து வழிகாட்டும் மட்டும் நாம் ஏன் அஞ்சவேண்டும் என்றான்.
அப்புறம் கிறிஸ்தீனாள் வாசல் சேவகனைப் பார்த்து: ஐயா, நான் இவ்விடம் வந்தது முதல் இதுவரையும் நீர் எனக்குச் செய்த உதவிகளுக் காகவும், என் மக்களுக்குப் பாராட்டின பட்சத்துக்காகவும் உமக்கு மிகுந்த நன்றியறிதலுள்ளவளாக இருக்கிறேன்.
நீர் செய்த உபகாரங்களுக்கு தகுந்த பிரதியுபகாரம் என்ன செய்யலாம் என்று எனக்கே தெரியவில்லை. உம்மைப் பற்றிய எங்களுக்குள்ள மதிப்புக்கு அத்தாட்சியாக இந்த சின்னக் காசை வாங்கிக்கொள்ளும்படி மன்றாடுகிறேன் என்று சொல்லி, ஒரு பொன்காசை அவர் கையில் கொடுத்தாள். அவர் அதை ஆசாரத்தோடு தலைகுனிந்து வாங்கிக்கொண்டு “உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக” (பிரசங்கி 9 : 8) என்று வாழ்த்தினார். அப்புறம் அவர்: தயாளி சாவாமல் பிழைப்பாளாக, அவள் கிரியைகள் கொஞ்சமாய் இராதிருப்பதாக (உபாகமம் 33 : 9) என்றார். அவர் பிள்ளைகளைப் பார்த்து: நீங்கள் பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோடி முதியோரும் ஞானிகளுமானவர்களுடன் கூடி மெய் தேவபக்தியை பின் தொடருங்கள். (2 தீமோ 2 : 22) அப்படிச் செய்வீர்களானால் நீங்கள் உங்கள் மாதாவின் மனதுக்கு மகிழ்ச்சியாயிருந்து தெளிந்த புத்தியுள்ளவர் களால் புகழ்ச்சியைப் பெறுவீர்கள் என்றார். அப்புறம் அவர்கள் வாசல் சேவகனுக்கு வந்தனம் செய்து வழிநடக்கத் தொடங்கினார்கள்.
அப்படியே அவர்கள் எல்லாரும் வழிநடந்து ஒரு மலைச் சரிவு மட்டும் வந்ததை நான் என் சொப்பனத்தில் கண்டேன். அவ்விடத்தில் பயபக்தி நின்று கொண்டு திடீரென்று ஐயோ! கிறிஸ்தீனாளுக்கும் அவளுடன் கூடப் போகும் பிரயாணிகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருளைக் கொடாமல் மறந்து போய் விட்டேன். திரும்பிப் போய் அதை எடுத்து வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடினாள். அவள் அதை எடுக்கப் போய் இருந்த சமயத்தில் பாதையின் வலது பக்கமாய் சற்று அப்பால் இருந்த தோப்புக்குள் ஒரு சங்கீத சத்தம் கேட்கிறாப்போல் கிறிஸ்தீனாள் காதில் விழுந்தது. அச்சங்கீத வார்த்தைகள் பின் வருகிற விதம் போல் இருந்தது.
கர்த்தாதி கர்த்தரே!
உமது வீட்டிலே
என்றென்றைக்கும்
நான் வாசஞ் செய்யவே
உமது அன்பையே
அனுதினமுமே
அளித்தீரே!
அவள் சற்று நேரம் அந்தப் பாட்டுக்கு செவி சாய்த்துக் கொண்டிருக்கையில் முந்தின பாட்டுக்கு மறுமொழி சொல்லுகிறாற் போல் ஒரு கீர்த்தனையும் கேட்டது. அதாவது:-
ஏனெனில் தேவன் நல்லவர்,
இரக்கத்தில் பெருக்கமுள்ளவர்,
உண்மையில் பிசகில்லாதவர்
சதாகாலமாய் தேவன் நல்லவர்
தேவன் நல்லவர் என்று அறிந்து கொள்
என்பதே.
அந்த இரண்டு பாட்டுகளையும் கேட்ட கிறிஸ்தீனாள்: இதென்ன விநோத கீதமாய் இருக்கிறதே! என்று கேட்டாள். (உன்னதப்பாட்டு 2 : 11, 12) அதற்கு விவேகி சொல்லுகிறாள்: இவைதான் எங்கள் நாட்டுப் பறவைகள். இவ்வித கீதங்களை அடிக்கடி கேளாவிட்டாலும் வசந்த காலம் 1 ஆரம்பித்து வெயில் காய்ந்து புஷ்பங்கள் மலரும்போது நாளெல்லாம் இந்தக் கீதங்களைக் கேட்கலாம். இந்தப் பட்சிகளின் மங்கள கீதங்களை கேட்கும்படி நான் அடிக்கடி அந்த தோப்புகளுக்குள்ளும் போகிற துண்டு. இந்தப் பறவைகளில் சிலவற்றை நாங்கள் பிடித்து வளர்த்துப் பழக்கியும் இருக்கிறோம். துக்கசாகரத்தில் இருக்கையில் அதின் இங்கித கீதம் ஆறுதலைத் தருகிறது. மேலும் அது காட்டையும் வனத்தையும் தோப்பையும் சோலையையும் நமது வீடென்று நாம் தேடிப்போக பண்ணி விடுகின்றது என்றாள்.
இதற்குள்ளாக பயபக்தி தான் மறந்து வைத்துவிட்டு வந்த சாமானை எடுத்து வந்து சேர்ந்தாள். அவள் கிறிஸ்தீனாளைப் பார்த்து: இதோ பார், நீங்கள் எங்கள் வீட்டில் கண்ட காட்சிகளெல்லாம் இதில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
அந்த காட்சிகள் ஏதாவது ஞாபகத்தில் வரவில்லையானால் இதைப் பார்த்த உடனே தெரிந்து போம். இதினால் உனக்கு ஆறுதலும் தேறுதலும் உண்டாகும் என்று சொல்லி அதைக் கொடுத்தாள்.
1. இருதயம் உறுதியான நம்பிக்கையால் நிறைந்திருக்கையில்தான் ஆனந்தமான கீதங்கள் அதிலிருந்து எழும்பும். பயங்கரமான குளிர் காலத்தில் சில பறவைகள் மாத்திரம் பாடுவது போல, சந்தேகத்துடன் மயங்கி இருக்கும் ஆத்துமாவும் பாட முடியாமலிருக்கலாம்.