அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது
அப்புறம் அவர்கள்: தங்களுக்கு எதிரே தெரிந்த வாசல் சேவகனுடைய வீட்டுக்குப் போனார்கள். அந்த வழி இராக்காலத்தில் நடப்பதற்கு சங்கடமானதால் அவர்கள் அதி தீவிரமாய் நடந்து இருட்டிப்போகுமுன் அவனுடைய வீட்டில் சேர்ந்தார்கள். அவர்கள் வெளி வாசலண்டை வந்தவுடனே தைரிய நெஞ்சன் கதவைத் தட்டினார். யார் அங்கே? என்று சேவகன் கேட்டான். நான்தான் என்று அவர் சொன்ன உடனே, சேவகன் கதவைத் திறக்க வந்தான். ஏனெனில் இவர் அடிக்கடி பிரயாணிகளை வழிநடத்திக் கொண்டு இவ் விடத்திற்கு வருகிறவர் ஆனதால் இவருடைய சத்தத்தை அறிந்து கொண்டான். அவன் வந்து கதவைத் திறந்தவுடனே, ஏது தைரிய நெஞ்சன் என்பவரே! இவ்வளவு இருட்டில் வந்த காரியம் ஏது என்று கேட்டான். வழிகாட்டிக்குப் பின்னாலே நின்று கொண்டிருந்த பிரயாணிகளை அவன் காணவில்லை. அதற்கு அவர்: இந்த அரண் மனையில் கொண்டு வந்து சேர்க்கும்படியாக நான் சில பிரயாணிகளை கூட்டிக் கொண்டு நமது ஆண்டவருடைய கட்டளைப்படி புறப்பட்டு வந்தேன். வழியில் சிங்கங்களை உசுப்பி பிரயாணிகளை துரத்துகிற அந்த இரத்தப் பிரியன் இன்று வந்து குறுக்கிடாவிட்டால் வெகு நேரத்துக்கு முன்னே வந்திருப்போம். இன்று அவனை அதோகதியாக்கி விட்டேன் வெகு நேரம் அவனோடு வீரியமாய் போராடி அவனைச் சங்கரித்துப் போட்டு பிரயாணிகளை சுகத்தோடு கூட்டி வந்தேன் என்றான்.
வாசல் சேவகன்: பின்னே உள்ளே வாருமேன்; பொழுது உதிக்கும் மட்டும் இருந்து போமேன்?
தைரி: இல்லை, நான் இந்த இராத்திரியே என் ஆண்டவனின் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடுகிறேன் என்றார்.
கிறி: அப்போது கிறிஸ்தீனாள்: ஐயா, ஐயா இப்படி பத்திரமாயும் அன்பாயும் இவ்வளவு தூரம் எங்களை வழி நடத்திக் கொண்டு வந்துவிட்டு இப்போது இடை வெளியில் விட்டுப் போட்டு திரும்பி விடவேண்டும் என்கிறீரே! இதைக்கேட்ட எங்கள் மனம் சகிக்குமா?
எங்களுக்காக எவ்வளவு வீரத்துவமாய் போராடினீர்! எவ்வளவு அன்போடு ஆலோசனை சொன்னீர்! நீர் எங்களுக்குச் செய்த சகாயங்களை நாங்கள் ஒருக்காலும் மறக்கவேமாட்டோம் என்றாள்.
தயாளி: ஐயா, எங்கள் பயணத்தின் முடிவுமட்டும் நீர் வந்து சகாயம் செய்யலாகாதா? எங்களைப் போலொத்த பேதமையுள்ள பெண்டுகள் ஒரு சிநேகிதனும், சகாயனும் இல்லாமல் தனிமையாய் மோசம் நிறைந்த இந்த வழிகளில் என்னமாய் பிரயாணம் செய்யக்கூடும் ஐயா! என்று தயாளி சொன்னாள்.
யாக்கோபு: பிள்ளைகள் எல்லாரிலும் சிறியவனாகிய யாக்கோபும், ஐயா! உமக்கு மெத்தவும் வந்தனம் செய்கிறேன். எங்களோடு வந்து எங்களுக்கு ஆக வேண்டிய உதவிகளைச் செய்யும் படி உமது மனதை திருப்பும் ஐயா, நாங்களோ சக்தியற்றவர்களாகவும் எங்கள் வழியோ சங்கடம் நிறைந்ததாகவும் இருக்கிறதே என்றான்.
தைரி: அப்போது தைரிய நெஞ்சன் சொல்லுகிறார்: நான் என் ஆண்டவரின் கட்டளைக்கு அமைந்து நடக்கிறேன். உங்கள் வழி நெடுக வந்து நான் வழிகாட்ட வேண்டும் என்று அவர் கட்டளை யிட்டிருந்தால் அதின்படியே செய்ய தயாராய் இருப்பேன். ஆனால்அது தப்பிப்போயிற்று. அவர் என்னை உங்களுடன் இம் மட்டும் வரும்படி திட்டம்பண்ணினாரே. ஆரம்பத்திலேயே நீங்கள் அவரிடத்தில் என்னைப் பிரயாண முடியுமட்டும் அனுப்ப வேண்டும் ஐயா என்று கேட்டிருப்பீர்களானால் 1 அப்படியே ஆகட்டும் என்று எனக்கும் உத்தரவு கொடுத்திருப்பார். எப்படியும் இப்போது நான் போக வேண்டியதுதான். ஆகையால் கிறிஸ்தீனாளே, தயாளியே, வீரசூரபாலகரே, சுகமாக பயணம் செய்யுங்கள். நான் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனார்.
அப்பால் வாசல் காப்போன்: கிறிஸ்தீனாளுடைய தேசம் எதுவென்றும், இன ஜனங்கள் யார் என்றும் கேட்டார். அதற்கு அவள்: நான் நாசபுரியில் இருந்து வருகிறேன். நான் ஒரு கைம் பெண். என் புருஷன் இறந்து போனார். அவருக்கு கிறிஸ்தியான் பரதேசி என்று பேர் என்றாள். அப்படியா சமாச்சாரம்? அவன் உன்புருஷனா? என்று சேவகன் கேட்டான்.
ஆம், ஆம் அவர்கள்தான் என் கணவர். இவர்கள்தான் அவருடைய பிள்ளைகள். இதோ நிற்கிற இந்தப் பெண் எங்கள் ஊரில் உள்ளவள்தான் என்றாள். உடனே அவன் தன் வழக்கப்பிரகாரம் மணியை அடித்தான். மணிச் சத்தம் கேட்டவுடனே அரண்மனைக் கன்னிமாப்பெண்களில் ஒருத்தியாகிய மனத்தாழ்மை என்பவள் வந்தாள். சேவகன் அவளை நோக்கி: நீ இந்த க்ஷணமே உள்ளே போய் கிறிஸ்தியானுடைய மனைவியாகிய கிறிஸ்தீனாளும், அவள் பிள்ளைகளும் மோட்ச பிரயாணிகளாய் இவ்விடம் வந்திருக்கிறார்கள் என்று அறிவி என்றான். அவள் அப்படியே போய்த் தெரியப் படுத்தினாள். அந்தச் செய்தி அவள் வாயிலிருந்து பிறக்கவே அங்குள்ளவர்கள் காட்டிய அகமகிழ்ச்சிக்கும், ஆனந்த சத்தத்துக்கும் ஒரு அளவு உண்டா?
கிறிஸ்தீனாளும் மற்றவர்களும் இன்னும் வெளியேதான் இருந்ததால் அவர்கள் உடனே வந்தார்கள். அவர்களுக்குள் மூத்தவர் களாகக் காணப்பட்ட சிலர் அவளை நோக்கி:
உள்ளே வா கிறிஸ்தீனாளே உள்ளே வா!
உள்ளே வா பக்தன் பாரியாளே உள்ளே வா!
உள்ளே வா பாக்கியவதியே உள்ளே வா!
உள்ளே வா உன் பவுஞ்சோடு உள்ளே வா!
என்று மெத்த அன்போடு அவர்கள் அனைவரையும் அரண் மனைக்குள் அழைத்துக் கொண்டு போனார்கள். 2 அப்புறம் அவர்கள் எல்லாரும் அழகும், அலங்காரமும், விஸ்தாரமுமான ஒரு சாலை அறையில் உட்கார வைக்கப்பட்டார்கள். விருந்தாளிகள் வந்திருக்கிற செய்தி அரண்மனை அதிபருக்கு அறிவிக்கப்பட்டது. அவரும் வந்து அவர்களை முத்தமிட்டு விசாரித்து தேவனுடைய கிருபா பாத்திரங்களே நீங்கள் வாழ்க. உங்களைக் காண்பது உங்கள் சிநேகிதராகிய எங்களுக்கும் வாழ்வைத் தருகிறது என்று வாழ்த்தினார்.
இதற்குள்ளாக பொழுது அஸ்தமித்து அதிக நேரம் ஆகிவிட்ட தாலும் விருந்தாட்கள் பிரயாணத்தினால் இளைப்படைந்து இருந்ததாலும், வழியில் நடந்த போரும், சிங்கங்களின் காட்சியும் அவர்கள் மனதில் களைப்பை உண்டாக்கினதாலும் கூடிய சீக்கிரத்தில் படுத்துக் கொண்டு இளைப்பாறும்படி அவர்கள்ஆசைப்பட்டார்கள்.
அந்த சத்திரத்தில் இருந்தவர்களோ, நீங்கள் இளைப்பாறப் போகுமுன் இராப் போஜனம் பண்ணிக்கொள்ள வேண்டியது என்று சொன்னார்கள். ஏனெனில், பிரயாணிகள் அன்று சத்திரத்தில் தங்குவதைப்பற்றி வாசல் சேவகன் முந்தியே கேள்விப்பட்டு அவர்களுக்குத் தெரியப்படுத்தினபடியால் அவர்கள் இவர்களுக்காக ஒரு ஆட்டுக்குட்டியை பொரித்து அதற்கேற்ற சாற்றையும் சமைத்து வைத்து இருந்தார்கள். அவர்கள் இராப்போஜனம் 3 உண்டு ஒரு ஸ்தோத்திரப் பாட்டோடே தங்கள் பிரார்த்தனையை முடித்தபின்பு இனி அடியார் இளைப்பாற 4 உத்தரவு கொடுங்கள் என்றார்கள். அதோடு கிறிஸ்தீனாள் கேட்கிறாள் மங்கையரே! என் கணவர் இங்கு வந்திருந்தபோது அவருக்கு நீங்கள் கொடுத்த அறையிலே அடியாரும் படுத்து இளைப்பாறும்படி தந்தால் எங்களுக்கு மெத்த சந்தோசமாய் இருக்கும் என்று கேட்டாள். அவள் விருப்பம் போலச் செய்யப் பட்டது. அவர்கள் எல்லாரும் அந்த அறையில் படுத்துக்கொண்டார்கள். படுக்கையில் இருந்து கொண்ட கிறிஸ்தீனாளும், தயாளியும் பிரயோஜனமான சில விஷயங்களைக் குறித்து சம்பாஷிக்கத் தொடங்கினார்கள்.
கிறி: என் கணவர் மோட்ச பயணமாகப் புறப்பட்ட சமயத்தில் நானும் இப்படி ஒரு காலத்தில் மோட்ச பிரயாணி ஆவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.
தயாளி: அது மெய். இப்படி இந்த இடத்துக்கு வந்து அவர் படுத்திருந்த பஞ்சு மெத்தையில் படுத்து அவர் தூங்கின அறையில் தூங்குவேன் என்று நீ நினைத்திருக்கவே மாட்டாய்.
கிறி: அதுமாத்திரமா? அவருடைய முகத்தை மறுபடியும் சந்தோசத்தோடு காண்பேன் என்றாவது ஆண்டவராகிய ராஜாவை அவரோடு நின்று பணிவேன் என்றாவது நான் கிஞ்சித்தும் நினைக்க வில்லை; ஆனால்அந்த பாக்கியங்களில் பங்கடைவேன் என்று இப்போது நம்புகிறேன். (யாத்திராகமம் 12 : 21 யோவான் 1 : 29)
தயாளி: பொறு, பொறு! ஏதோ ஒரு இன்பத் தொனி கேட்கிறது அல்லவா?
கிறி: ஆம், ஆம். அது கீத வாத்திய தொனி போலக் கேட்கிறது. நாம் இங்கே வந்து சேர்ந்த சந்தோசத்திற்காக கீத வாத்தியம் முழக்குகிறார்கள் என்றே நினைக்கிறேன்.
தயாளி: என்ன அதிசயம்! நாம் இங்கே வந்து சேர்ந்ததற்காக வீட்டிலும் கீதம், மனதிலும் கீதம், பரலோகத்திலும் கீதம்! என்று இப்படி சில நேரம் பேசிக்கொண்டு இருந்து அப்படியே அயர்ந்து நித்திரை செய்தார்கள்.
மறு நாள் காலையில் அவர்கள் இருவரும் கண் விழித்தவுடனே கிறிஸ்தீனாள் தன் தோழியைப் பார்த்து: மாதே, கடந்த இரவில் நீ நித்திரை செய்கையில் கொல்லென்று சிரித்த காரணம் ஏது? ஏதாவது சொப்பனம் கண்டாயோ என்று கேட்டாள்.
தயாளி: ஆம், அம்மா! நல்ல ஒரு சொப்பனம்தான் கண்டேன் அம்மா; ஆனால் நான் நகைத்தது நிஜம்தானா?
கிறி: நீதான் குலுங்க குலுங்க சிரித்தாயே, அந்தச் சொப்பனத்தைச் சொல் பார்ப்போம்.
தயாளி: யாரும் இல்லா வனம்போன்ற ஓர் இடத்தில் நான் தனிமையாக உட்கார்ந்து கொண்டு என் இருதயக்கடினத்தை குறித்து மனவியாகுலப்படுகிறது போல் இருந்தது. அங்கே உட்கார்ந்த கொஞ்ச நேரத்திற்குள்ளாக என்னைப் பார்க்கவும், என் வியாகுலம் என்ன என்று விசாரிக்கவும் அனந்தம் பேர் வந்து கூடினதுபோலவும் இருந்தது. அவர்கள் கேட்க, கேட்க நான் என் வியாகுலத்தை விபரமாய்ச் சொல்லிக் கொண்டே இருந்தேன். அதைக் கேட்ட சிலர் சிரித்தார்கள், சிலர் பித்தங்கொண்டவள் என்று திட்டினார்கள். வேறு சிலர் என்னைக் கண்டபடி இழுத்துத் தள்ளி குரங்காட்டம் பண்ணினார்கள். அப்போது நான் வானத்துக்கு நேராக என் கண்களை ஏறெடுத்தாற் போல் இருந்தது. அங்கிருந்து ஒருவர் சிறகடித்துப் பறந்து வருகிறதை நான் கண்டேன். அவர் நேராய் என்னண்டை இறங்கி வந்து என்னைப் பார்த்து: தயாளியே! உன் மிகுந்த துக்கம் என்ன என்று கேட்டார். நான் என் மனவியாகுலங்கள் ஒன்றையும் மறைத்து வைக்காமல் எல்லா வற்றையும் அவர் மடியில் கொட்டினேன்.
அவரோ, அம்மணி உனக்குச் சமாதானம் உண்டாவதாக என்று சொல்லி தமது கைக்குட்டையினால் என் கண்ணீரைத் துடைத்து வெள்ளி, பொன் உடுப்புகளால் என்னை உடுத்தினார். (எசேக்கியேல் 16 : 8 – 11) அவர் என் கழுத்திலே சரப்பணியையும், காதுகளிலே நகைகளையும் போட்டு என் சிரசிலே சிங்காரக் கிரீடம் ஒன்றையும் சூட்டினார். அப்புறம் அவர் என்கையைப் பிடித்து நடந்து கொண்டு, தயாளியே, என் பிறகே துரிதமாக நடந்து வா மாதே என்று சொல்லிக் கொண்டு வான வழியாக பறந்து போனார். நானும் அவர் பின்னாலே போனேன். கடைசியாக நாங்கள் இருவரும் ஒரு பொன் வாசலண்டை சேர்ந்தோம். அவர் கதவைத் தட்டினார், உடனே உள்ளே இருந்தவர்கள் வந்து கதவைத் திறந்தார்கள். அவர் உள்ளே போனார், நானும் அவர் பின்னாலே நடந்து ஒரு சிறந்த சிம்மாசனம் மட்டும் போனேன். அதின் மேல் ஒருவர் வீற்றிருந்தார். சிம்மாசனத்தில் வீற்றிருந்தவர் என்னைக் கண்டு: மகளே, நீ வாழ்க என்றார். அந்த லோகம் சூரிய சந்திர நட்சத்திராதிகளைபோல ஜோதி மயமாயும் கண்ணைப் பகட்டும் காந்தி உள்ளதாயும் காணப்பட்டது. அந்த இடத்திலே நான் உன் கணவர் கிறிஸ்தி யானையும் கண்டாற்போல இருந்தது. அப்புறம் நான் திடுக்கென்று கண் விழித்துக் கொண்டேன். அவ்வளவுதான், நான் சிரித்ததாக எனக்கு நினைவே இல்லை.
கிறி: நீ சிரித்தது நிச்சயம்தான். இத்தனை ஆனந்த கனவு கண்டவள் சிரிக்கமாட்டாளா என்று நீயே நிச்சயித்துக் கொள். என் மனதில் தோன்றுகிறபடி நீ கண்டது மகா நல்ல கனவு. உன் சொப்பனத்தின் முன்பங்கு நிஜம் 5 என்று அறிந்து கொள்ளுகிற நீ அதின் பின்பங்கின் படியும் நிறைவேறும் என்பதை கடைசியில் அறிந்து கொள்ளுவாய். “தேவன் ஒரு விசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம் விசை பார்த்து திருத்துகிறவர் அல்லவே. கன நித்திரை மனுஷர் மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்து தூங்குகையில் அவர் இராக்காலத்து தரிசனையான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்கு தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்துகிறார்” (யோபு 33 : 14 – 16) நாம் இரவில் தேவனோடு சம்பாஷிக்க வேண்டும் என்று விழித்திருக்க வேண்டியதில்லை. அவர் நமது நித்திரையில் நம்மைச் சந்தித்து தமது சத்தத்தை நாம் கேட்கும்படி செய்யலாம். நமது தூக்கத்தில் முதலாய் அடிக்கடி நமது இருதயம் விழித்துக் கொள்ளுகிறது.
ஒருவன் விழித்திருக்கையில் பேசுவதுபோல், இப்போதும் தேவன் வார்த்தைகள் அல்லது பழமொழிகள் அல்லது அடையாளங்கள் அல்லது ஒப்பனைகளால் நம்முடன் பேசக்கூடும்.
தயாளி: நான் கண்ட சொப்பனத்துக்காக சந்தோசப்படுகிறேன். மறுபடியும் நான் சிரித்து மகிழும்படியாக அந்தச் சொப்பனம் போல் வேறே சொப்பனங்கள் எனக்கு காணப்பட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.
கிறி: பொழுது விடிந்து வெகு நேரம் ஆயிற்றே, நாம் எழுந்துபோய் இன்று நாம் இங்கே செய்ய வேண்டிய காரியங்கள் எவை என்று விசாரித்து அறிந்து கொண்டால் நமக்கு நலமாய் இருக்கும் அல்லவா?
தயாளி: அம்மா! இந்தச் சத்திரத்தார் நம்மை இவ்விடத்தில் சில காலம் தங்கிச் செல்லும்படி நம்மைக் கேட்டால் நல்லது என்று சம்மதித்துக் கொள்ளுகிறது நலம். இந்தக் கன்னிமாப் பெண்களுடன் பழகிக்கொள்ளும்படி இன்னும் சில காலம் இங்கே தங்கி இருக்க எனக்கு மட்டற்ற ஆசையாய் இருக்கிறது. விவேகி, பயபக்தி, நேசமணி ஆகிய கன்னிமாப் பெண்கள் சௌந்திர ரூபிகளும், நற்குணசாலிகளுமாய் இருக்கிறதாக என் மனதில் தெரிந்திருக்கிறது.
கிறி: அவர்கள் என்ன சொல்லுகிறார்களோ பார்ப்போம் என்று சொல்லிக் கொண்டு, கீழ் மாடிக்கு இறங்கி வந்து அங்கே இருந்தவர் களுடன் கடந்த இரவை கழித்த வகையைக் குறித்து கலந்து பேசிக் கொண்டார்கள்.
தயாளி: அப்போது தயாளி: நல்ல தூக்கம், இன்று இரவில் நான் அனுபவித்த சந்தோசம் போல் என் ஆயுசில் ஒரு நாளும் நான் அனுபவித்ததில்லை என்றாள்.
இந்த இடத்தில் இன்னும் சில காலம் உங்களுக்கு தங்கிச் செல்லப் பிரியம் இருந்தால் இந்த வீட்டின் பாக்கியங்கள் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும் என்று விவேகியும், பயபக்தியும் என்னிடம் சொன்னார்கள். ஆம், ஆம், அந்த வாழ்வுகள் எல்லாம் மனப்பூர்வமாய் உங்களுக்கு அருளப்படும் என்று நேசமணியும் சொன்னாள்.
அப்படியே அவர்கள் ஒரு மாதத்திற்கும் அதிகமாய் அங்கே தங்கியிருந்து ஒருவருக்கொருவர் அதிக பிரயோஜனம் உள்ளவர்கள் ஆனார்கள்.
கிறிஸ்தீனாள் தன் பிள்ளைகளை எவ்விதமாய் வளர்த்து இருக்கிறாள் என்று அறியும்படி விவேகி ஆசைப்பட்டதால், நான் உன் பிள்ளைகளை சில கேள்விகள் கேட்கலாமா 6 என்று தாயைக் கேட்டாள்.
அப்படியே ஆகட்டும், அதுவே எனக்குச் சந்தோசம் என்று கிறிஸ்தீனாள் சம்மதித்ததின் பேரில் விவேகி அவர்கள் எல்லாரிலும் இளையவனாகிய யாக்கோபை முதலாவது கூப்பிட்டு பின்வருகிறபடி கேள்வி கேட்டாள்.
விவேகி: யாக்கோபே, என் அருகில் வா அப்பா! உன்னை உண்டாக்கியது யார் என்று உனக்குத் தெரியுமா?
யாக்கோபு: தேவனாகிய பிதா, தேவனாகிய குமாரன், தேவனாகிய பரிசுத்த ஆவி என்னை உண்டாக்கினார்.
விவேகி: கெட்டிக்காரன்; உன்னை இரட்சிக்கிறவர் யார் என்று சொல்லுவாயா?
யாக்: தேவனாகிய பிதா, தேவனாகிய குமாரன், தேவனாகிய பரிசுத்த ஆவி என்னை இரட்சிக்கிறவர்.
விவேகி: மெத்த நல்ல பிள்ளை! நல்லது, தேவனாகிய பிதா உன்னை எப்படி இரட்சிக்கிறார்?
யாக்: தம்முடைய கிருபையினால் என்னை இரட்சிக்கிறார்.
விவேகி: தேவனாகிய குமாரன் உன்னை எப்படி இரட்சிக்கிறார்?
யாக்: தம்முடைய நீதியினாலும், மரணத்தினாலும், உதிரத்தி னாலும், ஜீவனினாலும் இரட்சிக்கிறார்.
விவேகி: தேவனாகிய பரிசுத்த ஆவி உன்னை எப்படி இரட்சிக் கிறார்?
யாக்: தம்முடைய பிரகாசிப்பித்தலாலும், புதுப்பித்தலாலும், பரிபாலித்தலாலும் இரட்சிக்கிறார்.
இந்த உத்தரவுகளை யாக்கோபு சொல்லக் கேட்ட விவேகி சந்தோசப்பட்டு கிறிஸ்தீனாளை நோக்கி இவ்விதமாய் உன் பிள்ளைகளை வளர்த்ததற்காக உன்னை புகழ வேண்டியதாய் இருக்கிறது என்று சொல்லிப் போட்டு, எல்லாரிலும் இளையவனே, இவ்வளவு நன்றாய் உத்தரவு சொல்லுகிறபடியினாலே இந்தக் கேள்விகளையே மற்ற பிள்ளைகளிடத்திலும் கேட்க அவசரம் இல்லை என்று நினைக்கிறன். இவனுக்கு நேரே மூத்தவனை கேள்வி கேட்போம் என்றாள்.
விவேகி: அப்படியே விவேகி: முந்தினவனுக்கு மூத்தவனாகிய யோசேப்பைக் கூப்பிட்டு உன்னிடத்தில் நான் சில nள்விகளைக் கேட்கட்டுமா? என்றாள்.
யோசேப்பு: நீங்கள் கேள்வி கேட்பது எனக்கு மெத்த சந்தோசம்தான் அம்மா!
விவேகி: மனுஷன் எப்படிப்பட்டவன்?
யோசே: என் தம்பி சொன்னதுபோல் தேவனால் சிருஷ்டிக்கப் பட்ட ஒரு புத்தியுள்ள சிருஷ்டி.
விவேகி: “இரட்சிக்கப்பட்ட” என்ற வார்த்தையின் பொருள் என்ன?
யோசே: மனிதன் பாவத்தினாலே சிறை அல்லது நிர்ப்பந்த ஸ்திதிக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டு இருக்கிறான் என்று காட்டுகிறது.
விவேகி: திரித்துவ தேவனால் இரட்சிக்கப்படுகிறான் என்பதின் கருத்து என்ன?
யோசே: பாவமானது வல்லமையும், பராக்கிரமும் உள்ள ஒரு கொடுங்கோல் மன்னனைப் போல இருக்கிறது என்றும் தேவன் ஒருவரேயன்றி வேறொருவரும் அதின் ஆக்கினையின் வல்லமை யிலிருந்து நம்மை விடுதலை செய்யக்கூடாது என்றும், இந்த நிர்ப்பந்த நிலைமையில் இருந்து நம்மைப் பிடித்து இழுத்து இரட்சிக்க தேவன் அன்பும், தயாளமும் உடையவராயிருக்கிறார் என்றும் காட்டுகிறது.
விவேகி: ஏழை மனுஷரை இரட்சிப்பதில் தேவனுடைய நோக்கம் என்ன?
யோசே: அவருடைய நாமத்துக்கும் அவருடைய கிருபைக்கும் அவருடைய நீதிக்கும் மகிமை உண்டாகவும் அவருடைய சிருஷ்டிக்கு நித்திய பாக்கியங்கள் கிடைக்கவுமே.
விவேகி: இரட்சிக்கப்பட வேண்டியவர்கள் யார்?
யோசே: அவருடைய இரட்சிப்பை அங்கீகரிக்கிறவர்கள் எவர்களோ அவர்கள் எல்லாருமே 7
விவேகி: யோசேப்பு, நீ நல்ல பையன்; உன் தாயார் உனக்கு நன்றாய் படிப்பித்திருக்கிறாள். அவள் சொன்ன போதனைகளுக்கு நீ நன்றாய் செவி கொடுத்திருக்கிறாய். நீ போ என்று சொல்லி அனுப்பினாள்.
அப்புறம் அவள் அவனுக்கு மூத்தவனாகிய சாமுவேலைக் கூப்பிட்டாள். அவன் வந்தான். அப்பா! உன்னை நான் கேள்வி கேட்கட்டுமா? என்றாள்.
சாமுவேல்: நல்லது அம்மா, கேளுங்கள்.
விவேகி: மோட்சமாவது என்ன?
சாமு: மட்டற்ற பாக்கியங்கள் உள்ள ஒரு இடமும், ஒரு நிலைமையுமே மோட்சம். ஏனெனில், தேவன் அங்கே வாசமாய் இருக்கிறார்.
விவேகி: நரகமாவது என்ன?
சாமு: மட்டற்ற புலம்பலும், கூக்குரலும் உள்ள ஒரு இடமும், ஒரு ஸ்தலமுமே நரகம். ஏனெனில் அங்கே பாவமும், பிசாசும், மரணமும் வாசமாய் இருக்கிறது.
விவேகி: நீ ஏன் மோட்சம் போக வேண்டும் என்கிறாய்?
சாமு: தேவனை முகமுகமாய் தரிசிக்கவும், நித்தியமாய் அவரை சேவிக்கவும், கிறிஸ்துவைக் காணவும், நீடூழி காலமாய் அவரை நேசிக்கவும், எந்தப் பிரயத்தனத்தினாலும் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடாத ஆவியின் பரிபூரணத்தை உடையவனாய் இருக்கவுமே நான் மோட்சம் போக விரும்புகிறேன்.
விவேகி: நீ மெத்த நல்ல பையன்; நன்றாய்ப் படித்தும் இருக்கிறாய் என்றாள். அப்பால் அவள் எல்லாருக்கும் மூத்த பையனாகிய மத்தேயுவைக் கூப்பிட்டு, உனக்கும் சில கேள்விகள் போடட்டுமா அப்பா? என்றுகேட்டாள்.
மத்தேயு: நீங்கள் கேள்வி போடுவது எனக்கு மெத்த பிரியம்தான்.
விவேகி: நல்லது அப்பா, கேட்கிறேன். தேவனுக்கும் முந்தினதான ஒரு வஸ்து ஒரு வேளை இருந்தாலோ?
மத்தேயு: அது எப்படி இருக்கக்கூடும்? ஏனெனில் தேவன் அநாதி ஆயிற்றே, அதுவும் அன்றி முதலாம் நாள் ஆரம்பம் மட்டும் அவரைத் தவிர வேறெந்த வஸ்துவும் இருந்தது இல்லையே. ஏனெனில், கர்த்தர் ஆறு நாளைக்குள்ளே வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் அவைகளில் உள்ள யாவற்றையும் உண்டாக்கினார் அல்லவா?
விவேகி: வேதாகமத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
மத்தேயு: அது தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது.
விவேகி: உன் புத்திக்கு விளங்குகிறவைகள் அல்லாமல் வேறொன்றும் எழுதப்பட்டு இருக்கவில்லையா?
மத்: புத்திக்கு விளங்காத அநேக சங்கதிகளும் அதில் எழுதப்பட்டு இருக்கின்றன.
விவேகி: புத்திக்கு விளங்காத விஷயங்களை நீ காணும்போது என்ன செய்கிறாய்?
மத்: தேவன் என்னைப் பார்க்கிலும் அதிக ஞானமுடையவர் என்றே நான் நினைத்துக் கொள்ளுகின்றேன். அதோடு என்னுடைய நன்மைக்கு ஏதுவான விஷயங்கள் எவைகள் அதில் உண்டோ, அவைகளை அவரே எனக்கு விளக்கிக் காட்ட வேண்டும் என்று ஜெபம் செய்கின்றேன் 8
விவேகி: மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து உன்னுடைய விசுவாசம் என்ன?
மத்: அவர்கள் எப்படி அடக்கம் பண்ணப்பட்டார்களோ அப்படியே திரும்பவும் எழுந்திருப்பார்கள் என்று விசுவாசிக்கின்றேன். விதைக்கப்பட்ட அதே மேனி இருக்கும், ஆனால் அது அழிவுள்ளதாய் மாத்திரம் இராது. இப்படியே நான் விசுவாசிக்கிறதற்கு இரண்டு முகாந்தரங்கள் உண்டு. முதலாவது தேவன் அப்படியே வாக்குக் கொடுத்திருக்கிறார். இரண்டாவது அவர் தமது வாக்கின்படியே செய்ய வல்லவராயும் இருக்கிறார்.
விவேகி: நல்லது பிள்ளைகளே! நீங்கள் இன்னும் உங்கள் தாயின் போதனைகளுக்கு செவிகொடுக்க வேண்டும். அவள் இன்னும் அநேக விஷயங்களை உங்களுக்குப் போதிக்கக்கூடும். அதோடு நீங்கள் மற்றவர்களிடமிருந்து புறப்படுகிற நல் வார்த்தைகளுக்கும் உங்கள் செவிகளை சாய்க்க வேண்டும். அதுவும் அன்றி வானமும், பூமியும் உங்களுக்கு போதிப்பதை எல்லாம் வெகு நுட்பமாய் நீங்கள் கவனித்து அறிந்து கொள்ள வேண்டியது. எல்லாவற்றிலும் விசேஷமாய் உங்கள் தகப்பனார் மோட்ச பிரயாணம் செய்யும்படியாக அவரை ஏவி எழுப்பிவிட்ட அந்தப் புஸ்தகத்தை அதிகமாய் வாசித்து தியானித்து வர வேண்டும். என் பிள்ளைகளே! நீங்கள் இந்த இடத்தில் இருக்குமட்டும் என்னால் கூடியவரையும் உங்களுக்கு படிப்பிக்கும்படி ஜாக்கிரதையாய் இருப்பேன். உங்களை தேவ பக்திக்கு ஏதுவாய் ஊன்றக்கட்டும்படியான கேள்விகள் ஏதாவது நீங்கள் என்னிடத்தில் கேட்கப் பிரியப்பட்டால் எனக்கு மட்டற்ற சந்தோசம் உண்டாகும் என்றாள்.
பிரயாணிகள் இந்த இடத்தில் தாமதித்த ஒரு வாரத்திற்குள்ளாக தயாளியின் மேல் ஆசை கொண்டவனைப் போல் காணப்பட்ட ஒரு சிநேகிதன் அவளைச் சந்திக்கும்படி வந்தான். அவனுக்கு சுறுக்கன் என்று பேர் வழங்கப்பட்டது. அவன் உயர் குலத்தில் பிறந்து பக்தியின் வேஷம் பூண்டு லோகத்தோடு ஒத்து வாழ்கிற குணமுடையவனாக இருந்தான். இவன் ஒரு தரம், இரண்டு தரம் அல்ல அநேக தடவைகள் தயாளியிடத்தில் வந்து தான் அவள் மேல் நேசம் கொண்டிருக்கிறதாக வெளியிட்டான். தயாளி மகா ரூபவதியாய் இருந்தபடியால் அவள் மேல் வாஞ்சை கொள்ளும்படியாக அவன் மனம் அதிகமாய் ஏவப்பட்டது. 9
தயாளியின் உள்ளமும், கரங்களும் எப்போதும் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்றே கருத்து கொண்டிருந்தது. தன் விஷயத்தில் யாதொரு வேலையும் இல்லையானால் மற்றவர்களுக்கு ஏற்ற கால் சட்டை, மேல் சட்டை முதலிய உடுப்புகளை தைத்துக் கொண்டு ஏழை பரதேசிகளுக்கு இலவசமாக கொடுத்து ஆனந்திப்பாள். அவள் மேல் ஆசை கொண்டிருந்த சுறுக்கன் இந்த மங்கை நாளெல்லாம் வேலை செய்து பொழுதெல்லாம் தைக்கிற உடுப்புகளை யாருக்கு விற்கிறாள் அல்லது என்ன செய்கிறாள் என்று அறியாமல் இருந்ததினாலே மெத்தவும் ஆச்சரியப்பட்டு, ஆகா, இந்தப் பெண் குடித்தனத்திற்கு ஏற்ற குலமகள் என்பதற்கு சந்தேகம் இல்லை என்று தனக்குள்ளே நிச்சயித்துக் கொண்டான்.
ஒரு நாள் தயாளி தன்மேல் நேசம் கொண்டிருக்கும் சுறுக்கனின் அந்தரங்கத்தை அந்த இடத்தில் வசித்த மற்றவர்களிடம் அறிவித்து அவனை அவர்கள் நன்றாய் அறிந்தவர்களானதால் அவனுடைய வாழ்வின் நடபடிகள் என்னவென்று அவர்களிடம் ஜாடையாய் விசாரித்தாள். அதற்கு அவர்கள்: அந்த வாலிபன் ஜாக்கிரதை உள்ளவனும், பக்தியின் வேஷத்தை தரித்தவனுமாக இருக்கிறான். ஆனால், நற்கிரியைகளின் பலனை அறியாத பக்தியற்றவன் என்று சொன்னார்கள்.
அப்போது தயாளி: அப்படியா சங்கதி, இனி நான் அவனை கண்ணேறிட்டுக்கூட பார்க்க மாட்டேன் என்றாள்.
ஏனெனில், என்ஆத்துமாவில் ஒரு தடைக்கட்டை மாட்டிக் கொள்ளுவது எனக்கு பிரியமே இல்லை என்றாள். 10
அப்போது விவேகி சொல்லுவாள்: சுறுக்கன் உன்னிடம் வந்து போய் இருப்பதை நிறுத்தி விடும்படியாக நீ யாதொரு விசேஷித்த பிரயத்தனமும் செய்ய வேண்டும் என்று நீ கவலைப்பட வேண்டிய தில்லை. நீ இம்மட்டும் செய்து வருகிற பிரகாரம் ஏழை எளியோருக்கு அடுத்த வேலைகளை ஜாக்கிரதையாய்ச் செய்ய செய்ய உன்மேல் அவன் கொண்டிருக்கும் நேசமும் ஆiசையும் “சில்” எனக் குளிர்ந்து ஒன்றுமில்லாமல் போய்விடும் என்றாள்.
சுறுக்கன் அடுத்த தடவை வந்தபோது அவள் பழையபடி ஏழைகளுக்கு உடுப்பு தைக்கிற வேலையும் கையுமாய் இருந்தாள். அப்போது அவன், என்ன பெண்ணே! எந்த நேரமும், எந்த வேளையும் இதுதானா உன் வேலை? என்றான். ஆம், பின்னை என்ன? ஒன்று எனக்குத் தைப்பேன் அல்லாவிட்டால் மற்றவர்களுக்காக தைப்பேன் என்றாள். அது சரிதான்; ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பாய்? என்று கேட்டான். “நற்கிரியைகளில் ஐசுவரியவாட்டியாகவும், நித்திய ஜீவனை பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்துக்காக எனக்கு நல்ல ஆதாயத்தைப் பொக்கிஷமாக வைக்கவுமே” இப்படிச் செய்கிறேன் என்றாள். (1 தீமோ 6 : 17 -19) ஆ, என் நேசமே! நீ தைக்கிற உடுப்புகளை என்ன செய்கிறாய்? என்று கேட்டான். நிர்வாணிகளை உடுத்துவிக்கிறேன் என்றாள். அதோடு அவன் முகம் வெளுத்துப் போயிற்று. அதுமுதல் சுறுக்கன் அசந்துபோய் தன் போக்குவரத்தை நிறுத்திக் கொண்டான். அவன் முன்பு போய்வந்து இருந்ததைக் கண்டிருந்தவர்கள் ஏதப்பா! இப்போது வருகிறதில்லை? என்று கேட்டபோது “அந்தப் பெண் நல்ல பெண்தான், ஆனால் அவ்வளவு சிக்கனக்காரி அல்ல, கண்டவர் களுக்கெல்லாம் பையைத் திறந்து கொடுக்கிற கொடையாளி” என்று சொல்லி விட்டான்.
சுறுக்கன் தனது போக்குவரத்தை நிறுத்திப்போட்டதைக் கண்ட விவேகி, தயாளிiயைப் பார்த்து: மாதே, நீ கண்டாயா? அவன் மெதுவாக நழுவிவிடுவான் என்று நான் சொன்னது சரி ஆயிற்றா? இனிமேல் அவன் உன்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிக்கொண்டு திரிவான் என்பது நிஜம்.
பக்தி வேஷம் பூண்டவனாகிய அவன் உன்மேல் நேசம் கொண்ட போதினும், மாதே ! உன் குணமும் அவன்குணமும் விரோதப் பட்டிருக்கிறது. அந்த குணங்கள் ஒன்றுபடுவது ஒருக்காலும் கூடாத காரியம் என்றாள்.
தயாளி: நான் வெகு காலத்துக்கு முன்னே கலியாணக்காரி ஆகியிருப்பேன். அநேக மாப்பிள்ளைகள் வந்து என்னைக் கேட்டார் கள். அதை நான் இதுவரைக்கும் ஒருவரிடமும் சொல்லவில்லை. அவர்களில் ஒருவரும் என் அழகைப் பழிக்கா விட்டாலும் என் வாழ்க்கைப் பாங்கு அவர்களுக்கு ஒத்துவராது என்று கண்டு கொண்டார்கள். ஆகவே நானும் அவர்களும் பிரிந்து விட்டோம்.
விவேகி: இந்தக் காலத்தில் தயாளம் நலம், தயாளம் நலம் என்று சொல்லிக் கொள்ளுகிறதே அல்லாமல் அந்த தயாளத்தை காட்டுகிற வழக்கமே இல்லை. உன்னைப் போல எப்போதும் தயாள குணத்தில் நிலைத்திருக்கிறவர்கள் மெத்தக் கொஞ்சப் பேர் என்றே சொல்ல வேண்டியது.
தயாளி: என்னோடு ஒத்த சிந்தையுள்ளவர்கள் இல்லையானால் நான்கன்னியாய் இருந்தே கல்லறை காண்பேன். அல்லது என் குணமே நான் கட்டிக்கொண்ட என் கணவர் என்று நான் எண்ணிக் கொள்ளுவேன். ஏனெனில், நான் என் சுபாவத்தை மாற்றக்கூடாது. என் குணத்துக்கு எதிராக வரும் ஒருவனை நான் என் ஆயுள்பரியந்தம் நாடவே மாட்டேன். எனக்கு சுதாரி என்று பேருடைய ஒரு சகோதரி இருந்தாள். அவள் சுறுக்கனைப் போன்ற பிசினி ஒருவனுக்குத்தான் வாழ்க்கைப்பட்டாள். அவனுக்கும் இவளுக்கும் ஒரு நாளும் ஒத்துப் போகாது. என் சகோதரி அவனைக்கட்டு முன் செய்து வந்ததுபோல கட்டின பின்பும் ஏழைகளுக்கு தான தர்மம், தயை தாட்சண்யம் பாராட்டி வந்தாள். அது அவன் மனதுக்குப் பிடிக்காததினாலே வீட்டில் அடிக்கடி வாக்குவாதங்களும், சண்டைகளும் நடந்து கொண்டே இருக்கும். கடைசியாக உன் சகவாசம் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று என் சகோதரியை வீட்டைவிட்டுத் துரத்திப் போட்டான்.
விவேகி: இவ்வளவெல்லாம் செய்த அவன் பேருக்குக் கிறிஸ்த வனாய் இருந்தான் அல்லவா?
தயாளி: ஆம், அவன் மகா உத்தமன் போல் இருந்தான். அவனைப் போலொத்த பேர் கிறிஸ்தவர்களால்தான் இப்போது உலகம் நிறைந்து போய் இருக்கிறது. ஆனால் நான் அப்படிப்பட்டவர்கள் ஒருவரையும் சட்டை பண்ணவே மாட்டேன் என்றாள்.
இக்காலத்தில் கிறிஸ்தீனாளுடைய மூத்த மகனாகிய மத்தேயு வியாதிப்பட்டான். 11 அவனுடைய வியாதி ஒருவித உள் நோவை உண்டாக்கினதால் அந்த ஏழைப் பையன் மிகவும் வருத்தப்பட்டான். அவர்கள் வாசஞ்செய்த வீட்டுக்குச் சமீபமாக எல்லாராலும் பிரபலமாய் பேசிக் கொள்ளப்பட்ட ஒரு தேறின வைத்தியர் இருந்தார். அவருக்குப்பெயர் சாமர்த்தியன் என்று பேர் வழங்கப்பட்டது. அவரைக் கொண்டு தன் பிள்ளைக்கு வைத்தியம் செய்ய வேண்டும் என்று கிறிஸ்தீனாள் விரும்பினதினால் அவருக்கு செய்தி அனுப்பி னார்கள். அவரும் வந்து சேர்ந்தார். அவர் வியாதியாய் இருந்த பையனண்டை வந்து அவன் கையைப் பிடித்துப் பார்த்து அவனைக் கவனித்தவுடனே, பையன் வயிற்று நோவினால் வருத்தப்படுகிறான் என்று அறிந்து கொண்டு அவனுடைய தாயை நோக்கி: நேற்றும், முந்தின நாளும் இவனுக்கு என்ன ஆகாரம் கொடுத்தீர்கள் என்று கேட்டார். கொடுத்ததா? எல்லாம் சுகத்துக்கு ஏற்ற உணவுதான் கொடுத்தோம் ஐயா! என்றாள். அதற்கு அந்த வைத்தியர்: ஜீரணமாகாத படி ஏதோ கசடு வயிற்றுக்குள் கிடந்து பையனை வேதனைப் படுத்துகிறது. அதற்கு ஏதாவது ஒரு பக்குவம் செய்யாவிடில் அது வெளியாகமாட்டாது. இவனுக்கு பேதிக்கு கொடுத்தால் ஆச்சுது, இல்லாவிட்டால் பிள்ளை செத்துப் போவான் என்றார்.
சாமு: அதைக் கேட்டுக்கொண்டிருந்த அவன் சகோதரனாகிய சாமுவேல் தன் தாயைத் தட்டிக் கூப்பிட்டு: அம்மா, நாம் எல்லாரும் ராஜ பாதையின் ஆரம்பத்தில் இருக்கிறதே அந்த அரண்மனையை விட்டு சற்று தூரம் வரும்போது அண்ணா ஓடி ஓடிப் பறித்து தின்றாரே அதென்ன அம்மா? நாம் வந்த வழிக்கு இடது பக்கத்தில் ஒரு தோப்பு இருந்ததும், அதின் கிளைகள் சில நமது பாதைமட்டும் வளைந்து சரிந்து கிடந்ததும் உங்களுக்கு ஞாபகம் இருக்குமே, அந்தக் கிளைகளில் தொங்கின பழங்களில் சிலவற்றை அண்ணன் பறித்து தின்றதுண்டு என்றான்.
கிறி: அப்போது கிறிஸ்தீனாள்: அப்பா மகனே! நீ சொல்லுவது சரிதான். அவன் அந்தப் பழங்களை பறித்து தின்றது மெய்தான். நான் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லச் சொல்ல அவன் தின்றானே என்றாள்.
சாமர்: அதைக் கேட்ட பண்டிதர்: ஆகாத போஜனம் ஏதோ இவன் வயிற்றுக்குள் போய் இருக்கிறதென்று எனக்கு திட்டமாய்த் தெரிந்தது. அவன் தின்ற பழங்களைப்போல் சுகயீனத்துக்கேற்ற உணவு வேறொன்றும் இல்லை. அவை பெயல்செபூலுடைய தோப்பின் பழங்கள். அதைப்பற்றி ஒருவரும் உங்களை எச்சரிக்காததையிட்டு நான் அதிசயப்படுகிறேன். அதைத் தின்று மாண்டோர் அனந்தம் பேர் என்றார்.
கிறி: அதைக்கேட்ட உடனே தாய் அழுது கொண்டு, ஐயோ துஷ்டப் பிள்ளாய், ஐயோ, நானும் கவலையற்ற தாயாய் இருந்து விட்டேனே! என் மகனுக்கு நான் என்ன செய்வேன் அப்பா என்று புலம்பி கதறினாள்!
சாமர்: அம்மணி, மெத்த விசனம் கொள்ளாதே. பையன் தேறிக்கொள்ளுவான். ஆனால் எப்படியும் அவனுக்கு பேதியும் ஆகவேண்டும், அவன் வாந்தியும் பண்ணவேண்டும் என்றார்.
கிறி: தரும துரையே! உம்முடைய குணபரிகார சாமர்த்தியத்தைக் கொண்டு பையனுக்கு செய்ய வேண்டிய பிரயத்தனத்தை எல்லாம் செய்யும்படி உம்மை கும்பிடுகிறேன். என்ன செலவானாலும் ஆகட்டும் என்றாள்.
சாமர்: மாதே, மலையாதே நான் செய்யும் பிரயோகத்தை சீரோடு செய்வேன் என்று பண்டிதர் சொல்லிப் பையனுக்கு பேதிக்குக் கொடுத்தார். ஆனால் அந்த மருந்தால் போதுமான பேதி ஆகவில்லை. அம்மருந்து வெள்ளாட்டுக்குட்டியின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் கலந்த குளிகையாய் இருந்தது என்றும் அதை ஈசோப்புத் தண்டின் சாறு என்னும் அனுபானத்தில் கலக்கிக்கொடுத்தார் என்றும் நான் கேள்விப்பட்டேன். (எபிரேயர் 9 : 13 – 19, 10: 1 – 4) பையனுக்கு இன்னும் கசடற பேதி ஆகவில்லை என்று கண்ட சாமர்த்தியப் பண்டிதர் மறுபடியும் பலமான ஒரு மருந்தை 12 கொடுத்தார்.
அது கிறிஸ்துவின் சரீரமும் இரத்தமும் கலந்த ஒரு குளிகையாய் இருந்தது. அதற்கு கிறிஸ்தூனுதிரக் குளிகை (யோவான் 6 : 54 – 57 எபி 9 : 14) என்று பேர் வழங்கப்பட்டது. (வைத்தியன்மார் நோயாளிகளுக்கு விரோதமான மருந்துகள் சொல்லுகிறதை நாம் அடிக்கடி கேட்கிறதுண்டே) மேலே சொல்லிய இரண்டு சரக்குகளும் அவற்றோடு இரண்டொரு வாக்குத்தத்தங்களும் அதற்குத் தகுமான எடையுள்ள கொஞ்சம் உப்பும் ஒன்றாக சேர்க்கப்பட்டு மாத்திரைகளாக உருட்டப்பட்டிருந்தது. (மத்தேயு 9 : 49) ஒவ்வொரு தடவையிலும் இந்த மாத்திரைகளில் மூன்றை உபவாச மிருந்து மனந்திரும்புதலின் கண்ணீரோடு கலந்து பையன் குடிக்க வேண்டியதாய் இருந்தது. (சகரியா 12 : 10)
இந்த அவிழ்தத்தை பண்டிதர் கூட்டி பையனுடைய வாயிலே குடிக்கும்படி நீட்டினபோது அவன் மாட்டேன் என்றான். அவன் தன் வயிற்று நோவினால் உருண்டு புரண்டு உடலை முறித்துக் கொள்ளு கிறவனைப் போல அவஸ்தைப்பட்டாலும் இந்த அவிழ்தத்தை அருந்த ஆசை இருக்கவில்லை. வாயை திற, திற இதை நீ குடித்துத்தான் ஆக வேண்டும் என்று பண்டிதர் சொன்னார். அது என் குடலைப் புரட்டும் ஐயா, வேண்டவே வேண்டாம் என்று பையன் கெஞ்சினான். நீ குடிக்கத்தான் வேண்டும் என்று தாயும் சொன்னாள். அது வாந்தி பண்ணிவிடும் தாயே, வேண்டாம் என்று பையன் சொன்னான். இது எப்படிப்பட்ட மருந்து ஐயா, ஒரு வேளை குமட்டுமா? என்று கிறிஸ்தீனாள் பண்டிதரைக் கேட்டாள். அப்படி அரோசிப்பான வாசனை அதற்கு இல்லை என்று பண்டிதர் சொன்னார். அப்போது கிறிஸ்தீனாள்: தன் விரலை விட்டுத் தொட்டு அம்மருந்தில் ஒரு துளி போல் நாவில் வைத்து பார்த்து, அப்பா மகனே! இது தெளிதேனிலும் மதுரமாய் இருக்கிறது. நீ உன் தாயை நேசித்தால், உன் சகோதரரை நேசித்தால், தயாளியை நேசித்தால் உன் ஜீவனையும் நேசித்தால் இதைக் குடித்துவிடு மகனே! குடித்துவிடு என்று சொன்னாள். அவன் பல தடவைகள் மாட்டேன் என்று மல்லுக்கு நின்று கடைசியாக கடவுள் அந்த அவிழ்தத்தை ஆசீர்வதிக்கும்படி மன்றாடி ஜெபித்துவிட்டு அருந்தினான். அது அவனுக்கு குமட்டலைக் கொடாமல் இறங்கி விட்டது. அது அவன் நோவையும் நன்றாய் கேட்டதும் அன்றி அமைதலாய் தூங்கவும் செய்தது.
அது அவன் தேகத்துக்கு நல்ல சூட்டையும், தெளிந்த சுவாசத்தையும் கொடுத்தது. அவனுடைய வயிற்று நோவை அடியோடே எடுத்துப் போட்டது. ஆகவே சில மணி நேரத்திற்குப் பின் அவன் சுகத்தோடு எழுந்து தடி பிடித்துக் கொண்டு விவேகி, பயபக்தி, நேசமணி என்ற கன்னிமாப் பெண்களின் அறைகளுக்குப் போய், தன் வியாதியில் தான் பட்ட அவஸ்தைகளையும், சுகம்பெற்ற விபரங்களையும் குறித்துப் பேசிக் கொண்டிருந்தான்.
பையன் நோய் நீங்கி சுகமானபின்பு கிறிஸ்தீனாள் பண்டிதரைப் பார்த்து: நீர் எனக்கும் என் மகனுக்கும் செய்த சகாயத்திற்காக நான் கொடுக்க வேண்டிய தொகை என்ன ஐயா! என்று கேட்டாள். அதற்கு அவர்: இப்படிப்பட்ட வைத்திய சிகிட்சைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று வைத்தியாதிபச் சங்கத்தார் தீர்மானித்து இருக்கிறார்களோ அந்த தொகையை வைத்தியாதிபருக்கு நீ செலுத்திப் போட வேண்டியது என்றார். (எபிரேயர் 13 : 11, 15)
கிறி: அப்படியே செய்கிறேன் ஐயா! இந்த மாத்திரைகள் வேறெந்த நோய்களுக்கெல்லாம் உதவும்?
சாமர்: இது சர்வலோக சஞ்சீவி. மோட்ச பிரயாணிகளுக்கு உண்டாகும் சகல ரோகங்களுக்கும் இது உதவும் நிவாரணி. இதை சரியான முறைப்படி மாத்திரம் செய்து சாப்பிட்டால் வெகு காலத்துக்கு அவன் மனதில் நோய் அணுகாது.
கிறி: ஐயா! தயவு செய்து பன்னிரண்டு சிமிள் நிறைய இந்த மாத்திரைகள் தாரும். இந்த மாத்திரைகள் அகப்படுமானால் வேறே மருந்தைப்பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை.
சாமர்: இந்த மருந்து வந்த வியாதியை தீர்த்துவிடுகிறதும் அன்றி வரும் வியாதியைத் தடுக்கவும் வல்லமை உள்ளது. இந்த மாத்திரையை ஒருவன் சாஸ்திர முறைப்படி மாத்திரம் பேதிக்கு எடுத்துக் கொள்ளுவானானால் அது வரும் நோயைத் தடுத்து வந்த நோயை நீக்கி அவன் என்றென்றைக்கும் உயிரோடு இருக்கும்படி செய்யும் என்பது நிஜமே நிஜம். (யோவான் 6 : 58) ஆனால் கிறிஸ்தீனாளே! ஒரு சமாச்சாரம் கேள். நான் சொன்ன முறையை அல்லாமல் வேறு முறையாய் நீ இந்த மருந்தை பயன்படுத்தவே கூடாது. 13
ஏனெனில் முறை தப்பி இதைப் பயன்படுத்தினால் இந்த மருந்தினால் ஒரு பலனும் உண்டாகமாட்டாது என்று சொல்லி, கிறிஸ்தீனாளுக்கும், அவள் பிள்ளைகளுக்கும், தயாளிக்கும் அந்த மாத்திரைகளில் சிலவற்றை உட்கொள்ளும்படி கொடுத்தார். அதுவும் அன்றி அவர் மத்தேயுவை கூப்பிட்டு, இனி நீ அப்படி அஜீரணத்தை உண்டாக்கும் காய்கனிகளை தொடாதபடி எச்சரிக்கையாய் இரு என்று சொல்லி, அவர்கள் எல்லாரையும் முத்தமிட்டு ஆசீர்வதித்து விட்டு தமது ஆச்சிரமம் போய்ச் சேர்ந்தார்.
நாம் முன்னே ஒரு நாள் விவேகி பையன்களிடத்தில் நீங்கள் தேவதாபக்தியின் வளர்ச்சிக்கு ஏதுவான கேள்விகள் ஏதாவது கேட்க வேண்டுமானால் கேட்கலாம், நான் அதற்கு சந்தோசமாய் மறுமொழி கொடுப்பேன் என்பதாய் கற்பித்து இருந்தாள் என்று சொன்னோமே அதின்படி ஒரு நாள் வியாதிப்பட்டு இருந்த மத்தேயு பின் வரும் கேள்விகளைக் கேட்டான்.
மத்தேயு: பேதி மருந்தெல்லாம் பெரும்பாலும் நமது அண்ணாக்குக்கு அரோசிகரமாய் இருக்கிறதே, அது ஏன் அம்மா?
விவேகி: மாமிசத்துக்கேற்ற மனதுக்கு தேவனுடைய வசனமும் அதின் கிரியைகளும் எவ்வளவும் பொருந்தாததாயிருக்கும் என்பதை காண்பிக்கும்படிக்கே.
மத்: இந்த மருந்து நமக்கு நன்மை செய்ய வேண்டுமானால் பேதி காணவும், வாந்தி பண்ணவும் செய்கிறதே அது எதற்காக?
விவேகி: தேவனுடைய வசனமானது வல்லமையாய் கிரியை செய்கிற பொழுது இருதயத்தையும், மனதையும் சுத்தமாக்குகிறது என்று உணர்த்தும்படிக்கே. இந்த இரண்டில் ஒன்று சரீர சுத்தியையும் மற்றொன்று ஆத்தும சுத்தியையும் தருகிறதென்று நீ கவனிக்க வேண்டியது.
மத்: தீபச்சுடர் மேல் நோக்கியும், சூரியக் கதிர் கீழ் நோக்கியும் பிரகாசிக்கிறதினாலே நாம் என்ன படித்துக் கொள்ளலாம்?
விவேகி: மேல் நோக்கிப் பிரகாசிக்கும் தீபச்சுடராலே நாம் நமது ஆசைகளை மேல் உலகத்துக்கு அனல் மூட்டி எழுப்பிவிட வேண்டும் என்று உணர்த்தப்படுகிறோம். கீழ் நோக்கிப் பிரகாசிக்கும் சூரிய வெளிச்சத்தினாலே லோக இரட்சகர் உன்னதத்தில் இருந்தாலும் ஏழைகள் இருக்கும் நம்மிடமட்டும் தமது கிருபையினாலும், அன்பினாலும் தன்னை தாழ்த்தி இறங்குகிறார் என்று உணர்த்துகிறது.
மத்: மேகங்களுக்கு எங்கேயிருந்து ஜலம் கிடைக்கிறது?
விவேகி: சமுத்திரத்தில் இருந்து.
மத்: இதினால் நாம் எதைக் கற்றுக் கொள்ளுகிறோம்?
விவேகி: தேவ ஊழியர்கள் தங்கள் உபதேசங்களை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று படித்துக் கொள்ளுகிறோம்.
மத்: மேகங்கள் தங்கள் ஜலத்தை எல்லாம் சரமாரியாய் பூமியில் பொழிந்துவிடுகிறதே அது எதற்காக?
விவேகி: தேவ ஊழியக்காரர் தாங்கள் தேவனைக் குறித்து அறிந்தவைகளை எல்லாம் உலகத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக.
மத்: சூரியகிரணங்களால் வானவில் உண்டாகிறது ஏன்?
விவேகி: தேவனுடைய கிருபையுள்ள உடன்படிக்கையானது நமக்கு இயேசு கிறிஸ்துவில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று உணர்த்தும்படிக்கே.
மத்: நீர் ஊற்றுகள் எல்லாம் கடலில் இருந்து தரையின் வழியாய் ஊறி வருவானேன்?
விவேகி: தேவகிருபையானது, கிறிஸ்துவின் திருச்சரீரத்தின் மூலமாய் நமக்கு கிடைக்கிறது என்பதை உணர்த்தவே.
மத்: உச்சி மலைமேலும் சில நீறூற்றுகளை சுரக்கப் பார்க்கி றோமே, அது ஏன்?
விவேகி: கிருபையின் ஆவியானது ஏழை பரதேசிகளுக்குள் இருந்து ஊறுகிறதுபோலவே, கர்த்தத்துவமும் மேன்மை பொருந்தின வர்களுக்குள்ளும் இருந்து சுரக்கும் என்பதை காட்டவே.
மத்: தீபமானது திரியோடு ஒன்றாக இணைந்து எரிவதேன்?
விவேகி: கிருபையானது இருதயத்தில் கொளுத்தப்படாத பட்சத்தில் மெய்யான ஜீவ ஒளி நமக்குள் இராது என்று உணர்த்தவே.
மத்: விளக்கின் ஒளியைப் பேணும்படி எண்ணெயும் திரியும் ஏகமாய் அழிவதேன்?
விவேகி: நமக்குள் இருக்கும் தேவ கிருபையானது சேதம் இல்லாமல் செழித்தோங்கும்படி நமது சரீரத்தையும் அதின் அவயவங்களையும், ஆத்துமாவையும் அதின் அந்த கரணங்களையும் சமூலமாய் அதின் நடத்துதலுக்கு ஒப்புவித்துவிடவேண்டும் என்று போதிக்கவே.
மத்: நாரைப்பட்சி தனது நெஞ்சை தன் அலகால் கிழித்துக் கொள்ளுகிறதே. அது எதற்காக?
விவேகி: தன் இரத்தத்தால் தன் குஞ்சுகளைப் போஷிக்கவே நாரை அப்படிச் செய்கிறது. இதினாலே துதிக்குப் பாத்திரரான கிறிஸ்தேசு நாதர் தமது இரத்தத்தினாலே தமது ஜனங்களை மரணத்தில் இருந்து இரட்சித்து இவ்வளவாய் தமது பிள்ளைகளை நேசிக்கிறார் என்ற சத்தியம் காட்டப்படுகிறது.
மத்: சேவல் கூவுகிறதினால் ஒருவன் எதைப் படித்துக் கொள்ளலாம்?
விவேகி: பேதுருவின் பாவத்தையும், அவனுடைய மனந் திரும்புதலையும் அறிந்து கொள்ளலாம். அதுவும் அன்றி, சேவலின் குரல், “இதோ பகல் வருகிறது” என்று சொல்லுகிறாற்போல இருக்கிறது. ஆதலால் சேவலின் சத்தம் பெரிதும் பயங்கரமுமான கடைசி நியாயத்தீர்ப்பு நாளை உனக்கு உணர்த்துவதாக இருப்பதாக என்று சொன்னாள்.
இதற்குள்ளாகப் பிரயாணிகள் அலங்கார மாளிகை வந்து சேர்ந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆதலால் அவர்கள் அவ்விடம் விட்டுத் தங்கள் வழியே போக மனதுடையவர்கள் போல் அந்த வீட்டாரிடத்தில் தெரிவித்தார்கள். இந்தச் சமயத்தில் யோசேப்பு என்ற சிறுவன் தன் தாயண்டைபோய்: அம்மா, நாம் வியாக்கியானிக்கு கடிதம் அனுப்பி அவர் முன்போல நமக்குத் துணையாக வீரசூரமுள்ள தைரிய நெஞ்சனை நமது பயணம் முடியுமட்டும் தயவாய் அனுப்பும்படி மன்றாட மறந்துவிடலாகாது என்று சொன்னான். உடனே கிறிஸ்தினாள் சந்தோசப்பட்டு, நீ நல்ல பிள்ளை! அதைப்பற்றி நான் மறந்தே போனேன் என்று சொல்லி, உடனே உட்கார்ந்து ஒரு கடிதம் எழுதி விழிப்பாளி என்னப்பட்ட சேவகனிடத்தில் கொடுத்து இதை உண்மையுள்ள ஒரு ஆள் மூலமாய் வியாக்கியானிக்கு அனுப்பும் படியாக கேட்டாள். அந்தப் படியே அதை ஒரு கூலிக்காரன் கொண்டு போய்க் கொடுத்தான். வியாக்கியானி கடிதத்தின் செய்திகளை வாசித்துக் கொண்டு: நல்லது, அப்படியே அனுப்புவோம் என்று போய்ச் சொல்லு என்று பதில் அனுப்பினார்.
கிறிஸ்தீனாள் பயணம் புறப்பட்டுப் போகிறாள் என்ற செய்தியை அந்த வீட்டார் அறிந்தபோது இப்படிப்பட்ட பரிசுத்த தேவ மக்களை அரசர் தங்கள் நடுவில் கொண்டு வந்து சேர்த்ததற்காக அவருக்கு அத்தியந்த துத்தியம் செலுத்த வேண்டும் என்று எண்ணி அந்த வீட்டில் இருந்த அனைவரையும் ஒன்றுகூட வரவழைத்தார்கள்.
அது முடிந்த பிற்பாடு அவர்கள் கிறிஸ்தீனாளைநோக்கி: இவ்விடம் வந்து போகும் பிரயாணிகள் எல்லாருக்கும் நாங்கள் செய்கிற வழக்கத்தின்படி நீங்கள் உங்கள் பயணத்தில் தியானிப்பதற்கு அனுகூலமான சில நூதன காட்சிகளை காட்ட வேண்டாமா? என்று சொல்லி அவர்கள் எல்லாரையும் கொல்லைப் புறத்துக்கு கூட்டிப் போய் ஆதி ஏவாள் தானும் தின்று தன் புருஷனுக்கும் கொடுத்ததினால் ஏதேனை விட்டு துரத்தப்பட்டாளே, அந்தப் பழங்களில் சிலவற்றை காண்பித்து: இது என்ன பழம் தெரியுமா? என்று கிறிஸ்தீனாளைக் கேட்டார்கள். 14 அதற்கு அவள்: இதைத் தின்னலாமோ, நஞ்சோ, யாருக்குத் தெரியும்? என்று சொல்லி விட்டாள். அப்புறம் அவர்கள் பழத்தின் பூர்வோத்திரத்தை சொன்னவுடனே அவள், அப்படியா! என்று அதிசயப்பட்டாள். (ஆதியாகமம் 3 : 6, ரோமர் 7 : 24)
அப்புறம் அவர்கள் பிரயாணிகளை வேறொரு இடத்துக்கு கூட்டிப்போய் யாக்கோபின் ஏணியைக் 15 காண்பித்தார்கள். (ஆதியாகமம் 28 : 12 யோவான் 1 : 51) அந்தச் சமயத்தில் சில தேவ தூதர்கள் அதின் வழியாய் ஏறிப்போனார்கள். கிறிஸ்தீனாளும் மற்றவர்களும் தூதர் ஏறிப்போகும் காட்சியை பார்த்து பூரித்தார்கள். அப்புறம் வேறொரு இடத்தில் ஒரு காட்சி இருக்கிறது, அதைக் காட்டுகிறோம் வாருங்கள் என்று கூட்டிப்போனார்கள். அப்போது யாக்கோபு என்ற பிள்ளையாண்டான், அம்மா! இன்னும் கொஞ்சம் பார்க்கலாம், இது மெத்த விநோதக் காட்சி, அவர்களை சற்று நிற்கச்சொல் என்று கெஞ்சினான். அப்படியே அவர்கள் மறுபடியும் திரும்பி வந்து கண் குளிர பார்த்துக் களிகூர்ந்தார்கள்.
அதன்பின்பு அவர்கள் நங்கூரம் தொங்க வைக்கப்பட்டிருந்த ஒரு இடத்திற்கு பிரயாணிகளை கூட்டிப்போய் கிறிஸ்தீனாளே! இந்த நங்கூரத்தை அவிழ்த்து நீயே அதை உன் மடிக்குள் வைத்துக் கொள்.
ஏனெனில், திரைக்குள்ளாகப் போகிறதான இந்த நங்கூரத்தை நீ பற்றிப்பிடித்துக் கொண்டு (எபிரேயர் 6 : 19) உனக்கு விரோதமாய் எழும்பும் புயலுக்கும், கொந்தளித்துப் பொங்கும் அலைகளுக்கும் அசையாமல் உறுதியாய் நிற்கும்படி இது இன்றியமையாத அவசியம் என்றார்கள். (யோவேல் 3 : 16)
அப்பால் அவர்கள்: நமது பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்கை தகனபலியிடும்படி போன மோரியா மலைக்கு பிரயாணிகளை அழைத்துக் கொண்டு போய், அவர் கட்டின பலிபீடத்தையும், சுமந்து போன விறகுகளையும், தூக்கிப்போன நெருப்பையும், ஓங்கின கத்தியையும் அவர்களுக்குக் காட்டினார்கள். ஏனெனில், அவைகள் எல்லாரும் காணும்படி இந்நாள்மட்டும் வைக்கப் பட்டிருக்கின்றன. (ஆதியாகமம் 22 : 9) அதைக் கண்ட உடனே அவர்கள் தங்கள் கைகளை வானத்துக்கு நேராக உயர்த்தி, ஆ! எங்கள் பிதாவாகிய ஆபிரகாம் தன் ஆண்டவரை நேசித்ததற்கும் தன்னை முற்றிலும் வெறுத்ததற்கும் ஒரு அளவுண்டோ! என்று சொல்லி தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டார்கள்.
அந்த வீட்டுப் பெண்கள் இவைகள் எல்லாவற்றையும் மோட்ச பிரயாணிகளுக்கு காண்பித்த பின்பு விவேகி அவர்கள் எல்லாரையும் பந்தி போஜன சாலை அறைக்குள் கூட்டிக் கொண்டு போனாள். அங்கே கன்னிமாப் பெண்கள் வாசிக்கும் இரண்டு கீதவாத்தியங்கள் இருந்தன. விவேகி அதின் முன் உட்கார்ந்து கொண்டு இம்மட்டும் தங்கள் பிரயாணிகளுக்கு காண்பித்த காட்சிகளை எல்லாம் ஒரு கீர்த்தனையாக்கி இங்கித இராகத்தோடும், இனிய குரலோடும் பாடினாள். அந்தப் பாட்டை கவனியுங்கள்:-
ஏவாளின் கனி காட்டினோம்
தீண்டீர், தீண்டீர் என எச்சரித்தோம்
யாக்கோபு ஏணி மேல் தூதரும்
பாங்கோடு ஏறவுங் கண்டீர்கள்
தங்கத்தால் ஒரு நங்கூரம்
தந்தோமே இவை போதாதே
ஆபிரகாம் இட்ட யாகம் போல்
அரும்பலியைச் செலுத்துங்கள்.
கீத வாத்தியத் தொனியும் ஓய்ந்தது. கதவையும் யாரோ வந்து தட்டினார்கள். சேவகன் கதவைத் திறந்து பார்க்கவே இதோ வீர தீர தைரிய நெஞ்சன் என்பவர் பட்டயமும் கையுமாய் வந்து நின்றார். அவர் உட்பிரவேசித்தவுடனே பிரயாணிகளுக்கு உண்டான சந்தோஷத்தை என்ன என்று சொல்ல! அவரைக் கண்டவுடனே இரத்தப் பிரியனோடு பண்ணின கடும்போரின் ஞாபகமும் அவர் அவன் தலையை வெட்டி வீசிப்போட்டு சிங்கத்தின் சேதம் இன்றி வழிநடத்தி வந்த ஞாபகமும் அவர்கள் மனதில் மறுபடியும் வந்தது.
அவர் கிறிஸ்தீனாளையும், தயாளியையும் நோக்கி: உங்களுக்கு வழிக்கு பாதுகாவலாக என் ஆண்டவர் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துருத்தி திராட்ச பழ ரசமும் கொஞ்சம் வறுத்த தானியமும் இரண்டு மாதளம் பழங்களும் வற்றலாக்கப்பட்ட திராட்சப் பழங்களும் கொடுத்திருக்கிறார் என்று சொன்னார்.
1. இன்னின்ன ஆசீர்வாதங்கள் நமக்குத் தேவை என்று முன்னதாய் அறிந்திருந்தும் அவைகளுக்காக வேண்டிக் கொள்ளா விட்டால் தேவன் அவைகளைக் கொடுக்கமாட்டார் என்று பிரயாணிகளுக்கு மறுபடியும் ஞாபகப்படுத்துகிறார்.
2. பிரயாணம் பண்ணத் துவக்கினவர்களுக்கு மற்றவர்கள் சொன்ன உபச்சார வார்த்தைகள் மிகுந்த தைரியத்தையும், பிரயோஜனத்தையும் கொடுக்கத்தக்கவை.
3. இராப்போஜனம்: இந்த விருந்தை அனுசரிப்பது கிறிஸ்து வினிடத்தில் காண்பிக்கும் நன்றியறிதலுக்கு அறிகுறியாக மாத்திரம் அல்ல, நாம் சந்தோசமும், பெலனும் அடைய ஏதுகரமாயும், மேலும் மற்றப் பிரயாணிகளுடன் தோழமை பண்ண அது ஒரு கருவியாகவும் இருக்கிறது.
4. இயேசு கிறிஸ்துவின் மார்பு எல்லாருக்கும் பொதுவான இளைப்பாறுதளிக்கும் இடம்.
5. தயாளி தன் இருதயக் கடினத்தை குறித்துப் புலம்பினதே சொப்பனத்தின் முதல் பாகம். இந்த காரியம் சத்தியம்தான். அப்படியே மற்றதும் சத்தியமாய்த் தீரும். நமது சொந்த பாவ நிலைமையை உணர்வதே மோட்ச பாக்கியத்தை அடையும் வழி.
6. குழந்தைகளுக்கு கேள்வி கேட்டு வருவது நன்மையும் அத்தியாவசிய முமானது. அப்படியே வளர்ந்தவர்களுக்கும் அது பிரயோஜனமாய் இருக்கும்.
7. இரட்சிக்கப்படுகிறவர்கள் அநேகம் பேர்களோ அல்லது கொஞ்சம் பேர்களோ என்பது ஜனங்கள் பேரில் விழுந்த காரியம். ஏனென்றால் இரட்சிப்பு எல்லாருக்கும் தகுதியானதும், போதுமானதுமாயும், அத்தியாவசியமுமாயும் இருக்கிறது. ஆனால் அதை அங்கீகரித்துக் கொள்ளுகிறவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள்.
8. தேவன் அறிகிறதை எல்லாம் நாம் அறிகிறது கூடாத காரியம். நாம் அறியக்கூடாத அநேக காரியங்களை தேவன் சொல்லுகிறார். நாம் ஒவ்வொரு நாளும் அதிகம் அதிகமாய்க் கற்றுக்கொள்ளலாம். ஆதலால் நம்மை நாள்தோறும் கற்பிக்கும்படி நாம் அவரிடத்தில் கேட்டுக்கொள்ள வேண்டும்.
9. கலியாண விஷயத்தைக் குறித்து நாம் மிகுந்த கரிசனையாய் இருக்க வேண்டும். அநேகர் ஒரு பக்தியுள்ள பெண்ணை கலியாணம் பண்ணிக் கொள்ள, தாங்களும் பக்திமான்கள் போல பாசாங்கு பண்ணி நடிக்கின்றார்கள். ஆனால் பின் நாட்களில் அவர்களின் முகமூடி கிழிக்கப்பட்டு அவர்களின் சுய தோற்றம் வெளியாகும்.
10. ஆகாத புருஷனுடன் வாழ்வதைவிட புருஷனே இல்லாதிருப்பது நலம். இந்தச் சங்கதியை இந்த தேசத்தார் முக்கியமாய் கவனிக்க வேண்டியது. ஒரு பெண்ணுக்கு நல்ல புருஷன் கிடைக்காவிட்டால் அவள் தன் ஜீவகாலம் முழுவதும் வாழ்க்கைப்படாமல் தனித்து இருந்துவிடுவதே உத்தமம்.
11. விலக்கப்பட்டவைகளில் பற்றுதலாய் இருப்பது எப்போதும் ஆத்துமாவுக்கு தீங்கைப் பிறப்பிக்கும். நியாய விரோதமான செய்கைகள் வியாதியையும், கஷ்டத்தையும் கொண்டு வரும். நீதி நேர்மையாய் நடக்குமட்டும் பாக்கியம் கூடவே இருக்கும்.
12. ஆத்துமாவைப் பாவத்தினின்று சுத்திகரிப்பதற்கு நியாயப்பிரமாணம், பலிகள் போந்தவைகள் அல்ல என்பதை பன்னியன் வெகு சமர்த்தாய் விவரிக்கின்றார். அதற்கு இதைவிட நேர்த்தியான ஒரு ஒளஷதம் தேவை. அது கிறிஸ்துவின் இரத்தம்தான்.
13. கிறிஸ்துவின் பாவ மன்னிப்பு தப்பிதமாய் எண்ணப்படலாம். ஒருவன் மெய் மனஸ்தாபமும் இருதயத்தில் மாறுதலும் இல்லாமல் கிறிஸ்துவின் இரத்தம் தன்னை இரட்சிக்கும் என்று எண்ணினால் அது தப்பிதம். ஒளஷதத்தை செம்மையாய்ச் சாப்பிட வேண்டும். அப்படியே கிறிஸ்துவின் இரத்தம் மனஸ்தாபப்பட்டு, பாவத்தை அறிக்கை செய்து, விசுவாசிக்கிறவர்களை மாத்திரம் இரட்சிக்கும்.
14. ஏவாளுக்கு நேர்ந்தது போல எண்ணங்களும், சோதனைகளும் சாத்தானிடமிருந்து இப்போதும் நம் எல்லாருக்கும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆதலால் நாமும் அவளைப் போல விழுந்து போகாதபடி எப்போதும் ஏவாளையும், அவளுக்கு நேரிட்ட தண்டனையையும் கருத்தில் வைத்துக் கொண்டு நடக்க வேண்டும்.
15. வானத்துக்கும் பூமிக்கும், தேவனுக்கும் மனிதருக்கும், நடுவே கிறிஸ்துதான் மெய்யான ஏணியாய் இருக்கிறார். வானத்தில் இருந்து பூமிக்கு வரும் ஆசீர்வாதங்கள் அவராலேதான் வருகிறது. பூமியில் இருந்து வானத்துக்குப் போகும் துதிகளும், ஸ்தோத்திரங்களும் அவராலேயே போகிறது.