பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது
பிரயாணிகள் கஷ்டகிரி அடிவாரம் வந்து சேர்ந்த உடனே இம்மலையில் கிறிஸ்தியான் பட்ட அவஸ்தைகளை எல்லாம் தைரிய நெஞ்சன் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னான். அவர்களுக்கு வழித்துணையாக வந்த அவர் முதலாவது ஒரு நீரூற்றண்டை அவர்களை அழைத்துக் கொண்டு போய், கிறிஸ்தியான் மலை ஏறுமுன் தண்ணீர் குடித்த சுனை இதோ இருக்கிறது. அக்காலத்தில் இந்த ஜலம் பளிங்கு போல் துலக்கமாய் இருந்தது.
யாரோ இந்த ஜலத்தை காலால் கலக்கியிருக்கிறார்கள் என்றார். (எசேக்கியேல் 34 : 18, 19) அப்போது தயாளி: அவ்வளவு பொறாமை ஏன் அவர்களுக்கு இருக்கிறது? என்று கேட்டாள். அதற்கு வழிகாட்டி: இந்த தண்ணீரை மொண்டு தித்திப்பும் நலமுமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்தால் இதின் அழுக்குகள் எல்லாம் அடியில் உறைந்து போய் ஜலம் தெளிவாக இருக்கும். அப்போது குடிக்கலாம் என்றார். ஆதலால் கிறிஸ்தீனாளும், தயாளியும் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளும்படியாக வழிகாட்டியாய் வந்தவர் சொன்ன யோசனையின்படியே செய்ய வேண்டியதாயிற்று. அவர்கள் தண்ணீரை மொண்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதின் வண்டல் எல்லாம் அடியில் உறையும்படி வைத்திருந்து அப்புறம் தெளிந்த ஜலத்தைப் பானம் பண்ணினார்கள். 1
அப்புறம் அவர்: அடிவாரத்தில் மாயக்காரனும், வேஷக்காரனும் போய் மாண்டுபோன பக்க வழிகள் இரண்டையும் அவர்களுக்குக் காட்டி இவ்வழிகளைப் போல மோசமும் நாசமுமான பாதைகள் வேறொன்றும் இல்லை என்று சொன்னார். பின்னும் அவர்: கிறிஸ்தியான் இந்த இடத்தில் வந்தபோது இரண்டு பேர் இந்த வழியே போய் நாசமானார்கள். இப்பொழுது இந்த வழிகள் நீங்கள் பார்க்கிறபடி சங்கிலிகள் கட்டி தடைக்கட்டை போட்டு பள்ளம் வெட்டி ஒருவரும் இவ்வழி நடவாதபடி அடைக்கப்பட்டிருந்தாலும், அநேக பிரயாணிகள் மலை ஏற மனமில்லாமல் இந்த வழி நடக்க தாண்டி விழுகிறார்கள் என்றார்.
கிறி: அப்போது கிறிஸ்தீனாள்: “துரோகிகளுடைய வழியோ கரடு முரடானது” (நீதிமொழிகள் 13 : 15) இப்படி வேலி தாண்டுகிறவர்கள் பிடரி முறியாமல் எப்படித்தான் தப்பிக் கொள்ளுகிறார்களோ தெரியவில்லை என்றாள்.
தைரி: அதற்கு அவர்: அவர்கள் துணிந்துதான் தாண்டுகிறார்கள். அந்தச் சமயத்தில் அரசருடைய ஆட்கள் யாராவது வந்து அவர்களைக் கூப்பிட்டு அது சரியான வழி அல்ல, ஆபத்து வருமுன் ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்னால் அவர்களைக் கண்டபடி பேசி “நீங்கள் கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின் படியே நாங்கள் உங்களுக்குச் செவிகொடாமல் எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியும் செய்வோம்” (எரேமியா 44 : 16, 17) என்று மறுமொழி கொடுக்கிறார்கள். நீ இன்னும் சற்றே எட்டிப்போனால் இந்த வழிகள் சங்கிலிகளாலும், கட்டைகளாலும், குழிகளாலும் மாத்திரம் அல்ல, முள்வேலியாலும் அடைக்கப் பட்டிருப்பதை காண்பாய். அப்படி இருந்தும் அவர்கள் அந்த வழியைத்தான் நாடித் தேடுகிறார்கள் என்றார்.
கிறி: அதற்கு கிறிஸ்தீனாள்: அவர்கள் மகா சோம்பேறிகள், கஷ்டப்பட அவர்கள் முயலுகிறதே இல்லை. ஆகையால் “சோம்பேறி யின் வழி முள் வேலிக்குச் சமானம்” (நீதிமொழிகள் 15 : 19) என்று சொல்லப்பட்டிருக்கிற நீதிவாசகத்தின்படியே அவர்கள் காரியமும் இருக்கிறது. இந்த மலை ஏறி அப்பால் உள்ள பட்டணத்துக்குப் போவதைவிட அவர்கள் கண்ணிகளால் நிறைந்த பாதையாய்ப் போகவே விரும்புகிறவர்கள் போலத் தோன்றுகின்றது என்றாள்.
அப்புறம் அவர்கள் காலெடுத்து வைத்து மலை மேல் ஏறி ஏறிப் போனார்கள். அவர்கள் மலையின் உச்சிக்குப் போகிறதற்குள்ளாக கிறிஸ்தீனாள் களைப்பாகி அப்பாடா இந்த ஏற்றம் எப்பேர்ப் பட்டவனையும் மூச்சிளைக்கச் செய்துவிடும். தங்கள் ஆத்தும லாபத்திலும் சரீர க்ஷேமத்தை விரும்புகிறவர்கள் லேசான வழியைத் தெரிந்து கொண்டு அதின் வழி நடக்கிறது அதிசயம் அல்ல அப்பா என்றாள். தயாளியோ, ஓகோ என்னாலே அடுத்த அடி வைக்க இயலாது. நான் சற்று உட்கார்ந்துதான் எழுந்திருக்க வேண்டும் என்றாள். சின்னப் பாலகரும் அழத் தொடங்கினார்கள். அப்போது தைரிய நெஞ்சன் அவர்களை உற்சாகப்படுத்தி நடவுங்கள், நடவுங்கள் இங்கே உட்கார வேண்டாம். அரசரின் நந்தவனம் அதோ தெரிகிறது, அங்கே போய் சற்று இளைப்பாறலாம் என்று சொல்லி சிறுவரைக் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நந்தவனம் போய்ச் சேர்ந்தார்.
நந்தவனம் சேர்ந்த உடன் எல்லாரும் சற்று உட்கார்ந்து இளைப்பாறும்படி ஆவலாய் இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் தேகம் எல்லாம் வேர்வையாய் வடிந்தது. அப்போது தயாளி: வருத்தப்பட்டவர்களுக்கு இளைப்பாறுதல் எவ்வளவு இன்பமாய் இருக்கிறது. (மத்தேயு 11 : 28) மோட்ச பிரயாணிகளின் அதிபதி இவ்வளவு சுகத்தை இடை வழியில் வைத்திருக்கிறது எவ்வளவு தயாளம்! இந்த நந்தவனத்தைக் குறித்து நான் முன்பு அடிக்கடி கேள்விப்பட்டேன். ஆனால் இப்போது தான் முதலாவது அதைக் கண்டேன். என்றாலும், இவ்விடத்தில் நாம் தூங்காதபடி எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது. இந்த இடத்தில் கிறிஸ்தியான் என்பவர் தூங்கியதால் பட்ட பாடுகள் மெத்தவென்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் என்றாள்.
அப்புறம் தைரிய நெஞ்சன் என்பவர் பிள்ளைகளைப் பார்த்து: பாலியரே வாருங்கள், வாருங்கள், இப்போது எப்படி இருக்கிறது? மோட்ச பிரயாணம் உங்களுக்கு எப்படி இருக்கின்றது? என்று கேட்டார். அதற்கு அவர்கள் எல்லாரிலும் சிறுவன் சொல்லுகிறான்: ஐயா, எனக்குப் போதும் போதும் என்று ஆயிற்று. நீர் எனக்கு கைத்தாங்கல் கொடுத்து நடத்தினதற்காக உமக்கு அனந்த வந்தனம் செய்கிறேன். இப்போது என் அருமைத் தாயார் ஒரு தரம் சொன்ன சங்கதி என் ஞாபகத்தில் வருகிறது. அதாவது, மோட்ச பாதை ஏணி ஏற்றம் போலவும், நரகப்பாதை மலை இறக்கத்தைப் போலவும் இருக்குமாம். நான் மலை இறக்கம் போன்ற மரண பாதையில் நடப்பதைவிட ஏணி ஏற்றம் போன்ற ஜீவ பாதையில் நடக்கவே தெரிந்து கொள்ளுகிறேன் என்று சொன்னான்.
அப்பொழுது தயாளி: “மலை இறங்குதல் மகா இலேசு” என்ற ஒரு பழமொழி இருக்கிறது என்றாள். அதற்கு யாக்கோபு என்ற பேருடைய அந்தச் சிறுவன், மலை இறக்கமே மா வருத்தம் என்று புலம்பும் காலமும் சீக்கிரம் வரும் என்று என் மனதில் தோன்றுகின்றது என்றான். அது சரி நீ கெட்டிக்காரன், அவளுக்குத் தகுந்த மறுமொழி கொடுத்தாய் என்று வழிகாட்டி சொல்லிப் பையனை தட்டிக் கொடுத்தார். அதைக் கேட்டவுடனே தயாளி புன்னகை புரிந்தாள். அந்தப் பையனோ கூச்சப்பட்டான்.
கிறி: அப்போது கிறிஸ்தீனாள்: கால் ஆற உட்கார்ந்து இளைப் பாறும்போதே களைப்பாற கொஞ்சம் பலகாரம் பண்ணுகிறீர்களா? நான் வியாக்கியானி வீட்டைவிட்டு காலெடுத்து வைத்த சமயத்தில் அவர் எனக்குத் தந்த மாதளம் பழம் கொஞ்சம் இருக்கிறது.
அதோடு அவர் கொஞ்சம் தேன் தட்டும், திராட்சரசமும் தந்தார் என்றாள். 2 ஓகோ! அவர் உன்னைத் தனித்துக் கூப்பிட்டாரே அப்போது அவர் ஏதாவது உனக்குக் கொடுத்திருப்பார் என்றுதான் நானும் உத்தேசித்தேன் என்று தயாளி சொன்னாள். ஆம், ஆம், நானும் அப்படியேதான் நினைத்தேன் என்று வேறொருவனும் சொன்னான். அப்போது கிறிஸ்தீனாள்: மாதே, நான் உனக்குச் சொன்னது எப்படியோ அப்படியே செய்வேன். நீ என்னுடன் கூடிப் பயணப் பட்டதினால் எனக்கு என்ன என்ன பாக்கியங்கள் கிடைக்குமோ அதில் எல்லாம் உனக்கும் ஒரு பங்கு உண்டென்று நான் சொன்னேன் அல்லவா? அந்தப் பிரகாரம் பயணம் முடியுமட்டும் நடக்கும் என்று சொல்லி தன் பண்டங்களை பங்கிட்டுத் தயாளிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்தாள். அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் தைரிய நெஞ்சனைப் பார்த்து: நீரும் கொஞ்சம் பசியாறுகிறீரா? என்று கேட்டாள். அதற்கு அவர் நீங்கள் பயணமாய் போகிறீர்கள், நானோ இன்னும் கொஞ்ச நேரத்தில் திரும்பி விடுவேன். அவைகளை நீங்களே புசித்தால் அதிக நன்மை உங்களுக்கு உண்டாகும். நான் நாள்தோறும் இந்தப் பலகாரங்களை என் தொண்டை மட்டும் சாப்பிடுகின்றேன். நீங்களே சாப்பிட்டு திருப்தி அடையுங்கள் என்றார்.
அவர்கள் எல்லாரும் புசித்துக் குடித்து பண்டைய பரிசுத்த கதைகள் பலவற்றைப் பேசினதின் பின்பு வழிகாட்டி அவர்களைப் பார்த்து: பொழுது போகின்றது, இப்போது நாம் எழுந்து புறப் பட்டால் நல்லது, எழுந்து நடவுங்களேன் என்றார். அப்படியே ஆகட்டும் என்று அவர்கள் எழுந்து நடந்தார்கள். பாலகர் முன்னும் மற்றவர்கள் பின்னுமாகப் போனார்கள். ஆனால் கிறிஸ்தீனாள் தன் திராட்ச ரச குப்பியை மறந்து வைத்துவிட்டு தன் மக்களில் ஒருவனை மறுபடியும் அனுப்பினாள். அப்போது தயாளி: இது எப்போதும் களவு போகிற இடம்போல்தான் இருக்கிறது. கிறிஸ்தியானும் இந்த இடத்தில்தான் தமது சுருளை மறந்துவிட்டுப் போனார். இப்போது கிறிஸ்தீனாளும் திராட்ச ரசக் குப்பியை வைத்துவிட்டாள். ஐயா, இதின் காரணம் என்ன? என்று கேட்டாள். அதற்கு வழிகாட்டி: அதின் காரணம் தூக்கம் அல்லது மறதிதான். சிலர் தாங்கள் விழித்திருந்து இருக்க வேண்டிய சமயத்தில்தான் தூங்குகிறார்கள். வேறு சிலர் தாங்கள் ஞாபகசக்தியில் இருக்க வேண்டியபோதுதான் மறந்து போகிறார்கள்.
இந்த முகாந்திரங்களினாலேதான் சில பிரயாணிகள் இந்த இடத்தில் சில பொருட்களை சிலதரம் இழந்துபோய் இருக்கிறார்கள். பிரயாணிகள் தங்கள் மனமகிழ்ச்சியின் காலங்களில் தங்களிடம் இருக்கிற பொருட்களைப் பற்றி எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டியது. அந்த விழிப்பு இல்லாததினாலே தான் அடிக்கடி அவர்கள் களிப்பு கண்ணீராயும் அவர்கள் பிரகாசம் மந்தாரமாயும் மாறிவிடுகிறது. இவ்விடத்தில் கிறிஸ்தியானுடைய காரியம் எப்படி இருந்தது என்று நீங்களே தியானித்துப் பாருங்கள் என்று சொன்னார்.
அப்புறம் அவர்கள் வழிநடந்து சந்தேகியும், அச்சனும் கிறிஸ்தியானைச் சந்தித்து சிங்கங்களைப் பற்றி பயங்காட்டின இடத்திற்கு வந்தபோது அங்கே வழியோரத்தில் ஒரு ஞாபகப்படிக்கட்டு கட்டப்பட்டிருப்பதையும் அதின்மேல் வாசகம் தீட்டப்பட்டிருக்கிற ஒரு செப்புத்தகடு பதிக்கப்பட்டிருப்பதையும் அந்த தகட்டின் அடியில் அந்த படிக்கட்டு கட்டப்பட்டதற்கு முகாந்தரம் இன்னதென்றும் எழுதப் பட்டிருப்பதையும் கண்டார்கள். அந்த வாசகமாவது:
இந்தப் படிக்கட்டை பார்ப்போனே!
உன் நெஞ்சையும் நாவையும் காத்துக்கொள்,
காக்காவிட்டால் நாசமாவாய்
நாசமானார் பலர் இங்கே.
என்பதே.
இந்தக் கவியின் கீழ் வரையப்பட்டிருந்த வாசகமாவது:
“இந்தப்படிக்கட்டு
பயத்தினால் அல்லது சந்தேகத்தினால்
பிரயாணம் செய்ய அஞ்சுவோரை
தண்டிப்பதற்காகக் கட்டப்பட்டது.
மேலும்
இந்த படிக்கட்டின் மேலே
அச்சனும் சந்தேகியும்
கிறிஸ்தியானுடைய யாத்திரையை
தடுக்கும்படி முயன்றதினால்
பழுக்கக் காய்ச்சின இரும்பு கழுவில்
நாவிலே குத்தப்பட்டார்கள்” 3
என்பதே.
இந்த வாசகத்தைப் படித்தவுடனே தயாளி வழிகாட்டியைப் பார்த்து: ஐயா, இந்த வாசகமும் “கபட நாவே உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்? பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச் செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்” (சங்கீதம் 120 : 3, 4) என்று ஒரு உத்தமன் சொல்லிய வாசகமும் ஒன்று போலவே இருக்கிறது என்றாள்.
அப்புறம் அவர்கள் எல்லாரும் வழிநடந்து சிங்கங்கள் இருந்த இடம் மட்டும் வந்து சேர்ந்ததை நான் என் சொப்பனத்தில் கண்டேன். தைரிய நெஞ்சன் மகா பராக்கிரமன் ஆனதால் அந்த சிங்கங்களை குறித்து அணுவளவேனும் அஞ்சவில்லை. சிங்கங்களைக் கண்ட வுடனே முன் ஓடி நடந்த பிள்ளைகள் பயந்து மெதுவாக நகர்ந்து பின்னுக்குப் போனார்கள். அதைக் கண்ட வழிகாட்டி புன்னகை கொண்டு அந்தப் பிள்ளைகளை பார்த்து: என்ன அப்பா, ஆபத்து ஒன்றும் இல்லாத பொழுது நீங்கள் எல்லாரும் முந்தி ஓடிப்போனீர்கள், சிங்கங்களை கண்ட உடனே மெதுவாய் நகர்ந்து பின்னுக்குப் போய்விட்டீர்களே அதெப்படி? என்று கேட்டார்.
அவர்கள் சிங்கங்களுக்குச் சமீபமாகவே தைரிய நெஞ்சன் தமது பட்டயத்தை உறையிலிருந்து உருவி அவைகளுக்கு ஊடே பிரயாணிகளை நடத்திக் கொண்டு போக ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் அங்கே ஒருவன் வந்தான். அவன் சிங்கங்களை உசுப்பிவிட்டு பிரயாணிகளை துரத்திவிடும்படியான நோக்கத்தோடுதான் அங்கே வந்தான் போல் இருக்கிறது. இவன் மோட்ச பிரயாணிகளைக் கொல்லுகிறவன் ஆனபடியாலும் இராட்சத அரக்கர் குலத்தை சேர்ந்தவன் ஆனபடியாலும் இவனுக்கு இரத்தப்பிரியன் 4 என்ற பேர் வழங்கப்பட்டது. அவன் தைரிய நெஞ்சனை நோக்கி: இங்கே வந்த காரணம் என்ன? என்று கேட்டான்.
தைரி: அவர் இராட்சதனைப் பார்த்து: இந்த ஸ்திரீகளும் பிள்ளைகளும் மோட்ச யாத்திரை போகிறார்கள். அவர்கள் போக வேண்டிய பாதை இதுதான். நீ தடுத்தாலும் சரி, சிங்கங்கள் கெர்ச்சித்தாலும் சரி, இந்த வழியேதான் அவர்கள் போவார்கள் என்றார்.
இரத்தப்பிரியன்: இது அவர்கள் பாதையும் அல்ல, இந்தப் பாதை வழியாக அவர்கள் போகவும் கூடாது. அவர்களைத் தடுக்கும் படியாகவே நான் வந்தேன். இந்தச் சிங்கங்களை உசுப்பி அவர்கள் இவ்வழி நடவாதபடி தடுக்கவே தடுப்பேன் என்று இரத்தப் பிரியன் சொன்னான்.
உள்ளபடி சொல்ல வேண்டுமானால், இந்தச் சிங்கங்களின் கெர்ச்சிப்பையிட்டும் இவைகளை உசுப்பி ஏவிக்கொண்டு இருக்கிற இரத்தப் பிரியனுடைய மூர்க்கத்தையிட்டும் இந்த வழி நீண்ட நாட்களாக பிரயாணிகளால் கைவிடப்பட்டு புல்லும், புதரும் வளர்ந்த காடுபோலவே இருந்தது.
கிறி: இரத்தப் பிரியன் ஆட்சேபித்து தடுப்பதை கிறிஸ்தீனாள் கவனித்து, ராஜ பாதை இம்மட்டும் கையாட்சி செய்யப்படாமல் போனாலும் இதுவரையும் அவர்கள் பக்கவழியாய் நடந்து போய் இருந்தபோதினும் இப்போது நாங்களும் அப்படித்தான் போக வேண்டும் என்பது கூடாது. கிறிஸ்தீனாளாகிய நான் இப்போது இந்த வழி போக எழும்பினேன். இஸ்ரவேலிலே நான் தாயாக இப்போது எழும்பி இந்த வழியைத் திறக்கிறேன் என்றாள். (நியாயாதிபதிகள் 5 : 6, 7)
இரத்த: உடனே இரத்தப் பிரியன் தன் சிங்கங்களின்மேல் ஆணையிட்டுக்கொண்டு: இவைகள் உங்களை பீறிப்போடுவது நிச்சயம். ஆதலால் நீங்கள் பக்க வழியாய்ப் போய்விட்டால் உத்தமம். இந்த வழியாய் உங்களை போகவிடமாட்டேன் என்றான்.
உடனே தைரிய நெஞ்சன் தீவிரித்து முன் எட்டி நடந்து இரத்தப் பிரியனை நெருக்கி தன் ஈட்டியால் பலமாய்த் தாக்கினார். அவன் பின்னுக்கு விலகினான்.
இரத்த: என் பூமியில் இருந்துகொண்டு என்னைக் கொல்லப் பார்க்கிறாயா என்று இரத்தப்பிரியன் கேட்டான்.
தைரி: நாங்கள் இராஜ பாதையில் இருக்கிறோம். அரசருடைய பாதையில் நீ இந்த சிங்கங்களைக் கொண்டு வந்து வைத்திருக்கிறாய். நீ என்னதான் செய்தபோதிலும் இந்தப் பெண்டுகளும், பிள்ளைகளும் இந்த வழி போவது நிச்சயம். உன் சிங்கங்களுக்கு இவர்கள் அஞ்சுவார்கள் என்று நீ கிஞ்சித்தும் எண்ணாதே! என்று சொல்லிக் கொண்டே இரத்தப்பிரியன் தொப்பென்று விழும்படி ஒரு பலத்த வெட்டுப் போட்டார். அவன் அப்பாடா என்று அலறி விழுந்தான்.
இந்த வெட்டோடு அவன் தலைச் சீராவும் சின்னாபின்னமாகி விட்டது. அடுத்த வெட்டில் அவன் புயம் ஒன்று துண்டாய் விழுந்து விட்டது. அப்போது இரத்தபிரியன் பேரிடி முழக்கம் போல் முழங்கினான். அது அந்த ஸ்திரீகளையும், பிள்ளைகளையும் நடுநடுங்கப் பண்ணிற்று. என்றாலும், அவன் குற்றுயிராய் கீழே கிடந்து புரளுவதைக் கண்டு சந்தோசப்பட்டார்கள். அந்தச் சிங்கங்கள் சங்கிலி மாட்டப்பட்டு இருந்ததால் ஒன்றும் செய்ய ஏதுவில்லா திருந்தன. அவைகளை உசுப்பிவிட்ட இரத்தப்பிரியன் மாண்டு போனவுடனே தைரிய நெஞ்சன் மற்றவர்களை நோக்கி: இப்போது வாருங்கள், என் பின்னாலே நடவுங்கள், சிங்கங்களால் இனி ஒரு சேதமும் சம்பவிக்கமாட்டாது என்றார். அவர் பேசினபடியே அவர்கள் கடந்து போனார்கள். ஆனால் அந்த ஸ்திரீகளுக்கு உள்ளுக்குள் பயம் பயந்தான்.
அந்தப் பாலியர் எங்கே செத்துப் போகிறோமோ என்று எட்டி எட்டிப் பார்த்து பயந்து நடந்து போனார்கள். ஆனால் யாதொரு தொந்தரவும் சேதமும் இன்றி எல்லாரும் சுகமே நடந்து போய் விட்டதை நான் என் சொப்பனத்தில் கண்டேன்.
1. இந்தத் தண்ணீரானது சுவிசேஷ போதனையைக் குறிக்கிறது. பன்னியன் என்பவர் இந்தப் புஸ்தகத்தின் முதல் பாகத்தை எழுதினபோது இங்கிலாந்து தேசத்தில் சுவிசேஷ போதனை சுத்தமுள்ளதாய் இருந்தது. இப்போது அப்படி அல்ல என்கிறார். என்றாலும் அதைக் கேட்கிறவர்கள் தாங்கள் கேட்பதைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாய் இருந்தால் சுத்த சத்தியத்திலிருந்து தப்பறைகளையும், அசுத்தங்களையும் பிரித்துவிட்டு சுத்த ஜலமாகிய தேவனுடைய சுத்த சுவிசேஷத்தை மாத்திரம் உட்கொள்ளுவார்கள். நமக்குக் கொடுக்கப்படும் எவ்வகைத் தண்ணீரையும் நாம் குடிக்கவும் எவ்வித போதனையையும் அங்கீகரித்துக் கொள்ளவும் கூடாது. அசுத்தமானதை நீக்கி சுத்தமானதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2. தேவனுடைய ஜனங்களுக்கு உபத்திரவமும் பெலவீனமும் உண்டாகிற போது அவர் அவர்களை ஆற்றிப் பெலப்படுத்துகிறார்.
3. மோட்ச பிரயாணம் பண்ணுகிற தமது பிள்ளைகளை வார்த்தையாலோ செய்கையாலோ தடங்கல் பண்ணுகிறவர்களை தேவன் எவ்வளவு கடுமையாய்த் தண்டிக்கிறார் என்றும் அருவருக்கிறார் என்றும் இதில் நாம் கண்டு கொள்ளலாம்.
4. பரிசுத்தமாய் ஜீவனம்பண்ண தீர்மானம் செய்து கொண்டவர்களின் இரத்தத்தைச் சிந்தின நிஷ்டூரர்களை பன்னியன் என்பவர் இந்த ராட்சதனுக்கு ஒப்பிட்டுப் பேசினார் என்று நாம் எண்ணலாம். பூர்வத்தில் இங்கிலாந்து தேசத்திலும் பின்னர் மடகாஸ்கர் தீவிலும் இப்படிப்பட்ட குரூரங்கள் நடந்தன.