இரண்டாம் பங்கு
கிறிஸ்தீனாளின் மோட்ச பிரயாணம்
ஆக்கியோன் அறிவிப்பு
என் உத்தம தோழரே!
சில காலத்துக்கு முன் கிறிஸ்தியான் என்ற பரதேசியையும் அவன் மோட்சத்தை நோக்கிச் சென்ற அபாயமுள்ள பயணத்தையும் உங்களுக்குச் சொல்லுவது எனக்குச் சந்தோசமாயும் உங்களுக்குப் பிரயோஜனமாயும் இருந்தது. அவனுடைய மனைவியையும் மக்களையும் குறித்து நான் கண்டவைகளையும் அவர்கள் அவனோடு பிரயாணஞ்செய்யும்படி எவ்வளவாகிலும் பிரியப்படவில்லை என்பதையும் தான் நாசபுரியில் தாமதித்திருந்து அந்தப் பட்டணத்தின் அழிவோடே அழிந்துபோகத் துணியாததினாலே தனிமையாகவே பிரயாணம் செய்யும்படி நேரிட்டது என்பதையும் அப்போது சொன்னேனே அதின்படியே அவன் அவர்களை விட்டுப்போட்டு புறப்பட்டானே.
நான் முன் அவன் போன இடம் எல்லாம் போய் நடந்த காரியங்களை எல்லாம் உங்களுக்கு அறிவித்ததுபோல், அவன் பின்னாலே விட்டுப்போனவர்களை குறித்த காரியங்களையும் உங்களுக்கு அறிவிக்க ஏதுவில்லாதபடி எனக்கு உண்டான பல வேலைகளின் தொல்லையால் நான் இதுவரையும் நாசதேசம் போகவாவது அவர்கள் காரியங்களை இன்னதென்று அறிந்து உங்களுக்குச் சொல்லவாவது கூடாமற் போயிற்று. ஆனால் இப்போது சில நாட்களாய் அந்த திசையில் எனக்குப் பல சோலிகள் நேரிட்டதால் நான் மறுபடியும் அவ்விடத்துக்குப் போனேன். போன சமயத்தில் அந்த ஊருக்கு சுமார் ஒரு நாழிகை வழி தூரத்தில் இருந்த ஒரு சோலைக்குள் தங்கி இருந்தேன். அவ்விடத்தில் படுத்து நித்திரை செய்கையில் நான் மறுபடியும் சொப்பனம் கண்டேன்.