வியாக்கியானி வீடு சேருதல்
கிறிஸ்தியான் வழிநடந்து வியாக்கியானி வீடுமட்டும் வந்து கதவைப் பலதரம் தட்டினான். கடைசியாக ஒருவன் கதவண்டை வந்து யார் அது? என்று கேட்டான்.
கிறி: ஐயா, நான் ஒரு வழிபோக்கன்; இந்த வீட்டுப் பிரபுவுக்கு அறிமுகமாயிருந்த ஒரு நல்ல மனுஷன், எனக்கு வேண்டிய ஒரு சகாயத்துக்காகப் போகச் சொன்னார், ஆகையால் நான் வந்தேன்; இந்த வீட்டெஜமானோடே பேச வேண்டிய சில சமாசாரங்கள் உண்டு, தயவு செய்து கதவைத் திறக்கமாட்டீரா? என்று கிறிஸ்தியான் சொன்னான்.
அது கேட்டு அந்த மனுஷன் வீட்டெஜமானைக் கூப்பிட்டான். அவர்வந்து உனக்கு வேண்டியதென்ன? சொல் அப்பா என்று கேட்டார்.
அதற்கு கிறிஸ்தியான்: மா பிரபுவே! அடியேன் நாசபுரியிலிருந்து புறப்பட்டு சீயோன்மலைக்குப் பிரயாணமாய்ப் போகிறேன்; இந்தப் பாதையின் துவக்கத்தில் இருக்கிற வாசலில் உட்கார்ந்திருக்கிறவர், என்னை இவ்விடத்துக்குப் போகச் சொல்லி, நீ போனால் அந்த வீட்டெஜமான் உன் பிரரயாணத்துக்கு அனுகூலமாகப் பல மகத்துவமான விஷயங்களை உனக்குக் காண்பிப்பார் என்று சொன்னார் என்றான்.
உடனே வியாக்கியானி, அப்பா உனக்கு பிரயோஜனமானவை களைக் காட்டுகிறேன்,கூட வா என்று சொல்லி, தமது வேலைக் காரனைக் கூப்பிட்டு, விளக்கைக் கொளுத்திக் கொண்டு வரச் சொல்லி, கிறிஸ்தியானை தமக்குப் பின் தொடரும்படி சொன்னார். வியாக்கியானி தனித்த ஒரு அறைக்கு அவனைக் கூட்டிப் போய், அங்கிருந்த ஒரு கதவைத் திறக்கும்படி தமது மனுஷரிடத்தில் சொன்னார்; அவன் திறந்தான்.
அங்கே ஒரு மகாத்துமாவின்1 படம் சுவரில் தொங்குகிறதைக் கிறிஸ்தியான் கண்டான். அதின் கண்கள் வானத்தை நோக்கிக் கொண்டிருந்தன; மகா விசேஷமான ஒரு புஸ்தகம் அதின் கையில் இருந்தது; சத்தியப் பிரமாணம் அதின் உதடுகளில் எழுதப் பட்டிருந்தது; பூலோகம் அதின் முதுகின் மேல் இருந்தது; அது மனுஷரோடு வழக்காடுகிற பாவனையாய் நிற்கிறதாகக் காணப் பட்டது, அதின் சிரசின் மேல் ஒரு பொற்கிரீடம் தொங்கிற்று, இவைதான் அந்தப் படத்தின் சாயல்.
கிறி: ஐயா, இதன் தாற்பரியம் என்னவென்று கிறிஸ்தியான் கேட்டான்.
வியா: இந்தப்படம் குறிப்பிக்கும் ஆள் பதினாயிரம் பேரிலும் சிறந்தவர். இவர் தம்மைக் குறித்து: கிறிஸ்துவுக்குள்பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தில் நான் உங்களைப் பெற்றேன். “கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகு மளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்ப வேதனைப் படுகிறேன்” (1 கொரிந்தியர் 4 : 15; கலாத்தியர் 4 : 19) என்று அப்போஸ்தலனைப்போல சொல்ல வேண்டுமானால் சொல்லலாம். அவர் கண் வானத்துக்கு ஏறெடுக்கப்பட்டதாகவும், கையில் சிறந்த ஒரு புஸ்தகம் இருக்கிறதாகவும், உதட்டில் சத்தியப்பிரமாணம் எழுதப் பட்டிருக்கிறதாகவும் காண்கிறாயே: மறைவானவைகளைப் பாவிகளுக்கு வெளிப்படுத்தி அந்தரங்க இரகசியங்களை அவர்களுக்கு அறியப்படுத்துவதே தமது வேலை என்பதை அவைகள் காட்டுகின்றன; அந்த ஆளின் சாயல் மனுஷரோடு வழக்காடுகிறதாகக் காணப்படுவதும் மேலே சொல்லிய கருத்தை விளக்குகிறது. உலகம் அவர் முதுகுக்குப் பின்னாலும், கிரீடம் சிரசின் மேலும் தொங்குவது அந்த ஆள் தன் எஜமானின் நிமித்தம் இப்பூலோக இன்பங்களை ஒரு பொருட்டாய் எண்ணாமல், பரலோக பாக்கியங்களையே தன் பலனாக ஆசிப்பதை காட்டுகிறது. இந்தச் சித்திரத்தால் குறிக்கப்பட்டவரையே, நீ நாடிப் போகும் நல்ல தேசத்தின் அதிபதி உன்னுடைய வழிகாட்டியாக ஏற்படுத்தி இருக்கிறார். ஆனதினாலே இதை உனக்கு முதலாவது காண்பித்தேன், பின்னும் கேள்? நீ போகிற வழியில் யாராவது எதிர்ப்பட்டு, உனக்கு நல்ல வழி காட்டுகிறவர்கள் போல் பேசி, ஏமாற்றி, உன்னை மரணத்துக்கு உட்படுத்தாதபடி நான் உனக்குக் காண்பிக்கிறவைகளைக் கூர்மை யாய்க் கவனித்துக்கொண்டு, நீ கண்டவைகளையும் கேட்டவை களையும் மறந்து போகாதே என்று வியாக்கியானி முனிவர் சொன்னார்.
அப்புறம் அவர் கிறிஸ்தியான் கையைப் பிடித்து எத்தனையோ ஆண்டுகளாய் தூசிபடிந்திருந்த ஒரு பெரிய மடத்துக்குள் அவனைக் கொண்டு போய்விட்டார். அந்த மடத்துக்குள் சற்று நேரம் அங்குமிங்கும் சுற்றின பின்பு, ஒரு மனிதனைக் கூப்பிட்டு இதைத் துடைப்பத்தால் சுத்தம் பண்ணு என்று வியாக்கியானி சொன்னார்; அப்படியே பெருக்கினபோது எழும்பின தூசியால் கிறிஸ்தியான் சுவாசம்விட வகையில்லாமல் மூச்சு முட்டிப் போனான். அப்போது வியாக்கியானி, கிட்ட நின்ற ஒரு பெண்ணைப் பார்த்து: பெண்ணே! சற்று தண்ணீர் தெளி அம்மா என்றார். அவள் தண்ணீர் தெளித்த பின்பு யாதொரு வருத்தமுமின்றி சுத்தம் செய்யப்பட்டது.
கிறி: இதின் பொருள் என்ன முனிவரே! என்று கிறிஸ்தியான் கேட்டான்.
வியா: இதின் பொருள் கேட்டாயோ? இந்த மடம் சுவிசேஷத்தின் சுகந்த கிருபையினால் ஒருக்காலும் சுத்திகரிக்கப்படாத மனுஷனுடைய இருதயமாய் இருக்கிறது; இந்த தூசி முழு மனுஷனையும் தீட்டுப் படுத்திவிட்ட ஜென்ம பாவமாகிய உள் குப்பைதான். அதை முதலாவது பெருக்கி மூச்சு முட்டச் செய்தவன் நியாயப்பிரமாணம்; அப்புறம் அதின்மேல் தண்ணீர் தெளித்த பெண் சுவிசேஷமாய் இருக்கிறது. முதலாவது துடைப்பம் எடுத்து சுத்தம்பண்ணினவன் கொஞ்சம் கூட்டு முன்னே, தூசி எழும்பி, அவனைப் பெருக்கவும், உன்னை மூச்சுவிடவும் இடங் கொடாதபடி கவிந்ததைக் கண்டாயே; நியாயப் பிரமாண மானது தன் கிரியைகளால் மனுஷனுடைய இருதயத்திலுள்ள பாவங் களைச் சுத்திகரிப்பதற்குப் பதிலாக, அவைகளுக்கு உயிர் கொடுத்து, (ரோமர் 7 : 9) பலப்படுத்தி (1 கொரிந்தியர் 15 : 56) அவை பெருகும்படி செய்கிறது என்றும், (ரோமர் 5 : 20) பாவத்தை அறிகிற அறிவை அது உணர்த்தி, பாவஞ் செய்யாதே என்று கட்டளையிட்ட போதினும், பாவத்தைக் கீழ்ப்படுத்தத் தக்க பலத்தை மனுஷருக்குக் கொடுக்கிறதில்லை என்றும் உனக்கு அது வெளிப் படுத்துகிறது. அப்பால் ஒரு சிறு பெண் தண்ணீர் தெளிக்கவே தூசியெல்லாம் அடங்கி, லேசாய் பெருக்கப்பட்டு மடம் சுத்தமாயிற்றே; சுவிசேஷத்தின் மதுரமும் மேன்மையுமான உபதேசம் இருதயத்தில் இறங்கும்போது அந்தச் சத்தியங்களை உறுதியாய் விசுவாசிப்பதாலே, அந்தப் பெண் தண்ணீர் தெளிக்க தூசி அமர்ந்தது போல, பாவம் மேற்கொள்ளாமல் அடங்கி, அவளால் மடம் சுத்தமானது போல், பாவம் விலகி, இருதயம் மகிமையின் ராஜா உட்பிரவேசிக்கும்படியான மாளிகை ஆகிறது (யேவான் 15 : 3 எபேசியர் 5 : 26 அப்போஸ்தலர் 15 : 9 ரோமர் 16 : 25, 26, யோவான் 15 : 13.) என்றும் உனக்கு உணர்த்தப்படுகிறது என்று சொன்னார்.
அதுவுமன்றி, நான் என் சொப்பனத்திலே: வியாக்கியானி கிறிஸ்தியான் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு சின்ன அறைக்குள் கூட்டிக்கொண்டு போனதையும் கண்டேன். அங்கே இரண்டு சிறுவர்கள் எதிர்முகமாய் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் மூத்தவனுக்கு பொறாமை என்றும், இளையவனுக்கு பொறுமை என்றும் பேர். இவர்களில் பொறாமை என்பவன் மூர்க்க வெறி கொண்டவனைப் போலவும், பொறுமை என்பவன் அமர்ந்த குணமுள்ளவனைப்போலும் அவரவர் முகச்சாயலில் காணப்பட்டது. அதைக் கண்ட கிறிஸ்தியான்; பொறாமை என்கிற வாலிபன் மூர்க்க வெறி கொண்டவன் போல் இருக்கிறானே, அதின் காரணம் என்ன வென்று கேட்டான். அதற்கு வியாக்கினி சொல்லுகிறார்: அப்பா, இந்த வாலிபர் விரும்பும் பொருள்கள் என்ன உண்டோ அவை அனைத் தையும், அவர்கள் அதிபதி ஒரு வருஷத்துக்குப் பின்புதான் தருவேன் என்று வாக்கு கொடுத்திருக் கின்றார்; பொறாமை அப்படி நான் காத்திருப்பதற்கு நாய் அல்ல, இப்போதே வேண்டும் என்றிருக்கிறான். பொறுமைப் பாலியனோ, குறிக்கப்பட்ட காலம் வரட்டும் என்றிருக் கிறான் என்று சொன்னார்.
அப்பால் நான் என் சொப்பனத்தில்: ஒரு மனுஷன் நிறைந்த திரவியமுள்ள ஒரு சாக்கைத் தூக்கி வந்து, பொறாமை என்பவனுடைய பாதத்திலே கொட்டுகிறதைக் கண்டேன். அவன் அவை அனைத் தையும் வாரி வைத்துக் கொண்டு, பொறுமை என்பவனைக் கேலி பண்ணினான்; சற்று நேரம் பொறுத்து நான் பார்க்கவே, பொறாமை அவ்வளவு பொருளையும் ஆராதூரியாய்ச் செலவழித்துவிட்டு, கந்தையன்றி வேறொன்றும் இல்லாமல் உட்கார்ந்திருக்கக் கண்டேன்.
கிறி: அதைக் கண்ட கிறிஸ்தியான்: மா முனிவரே! அடியேனுக்கு இந்த இரகசியம் விளங்குவதில்லையே என்று கேட்டான்.
வியா: முனிவர் சொல்லுகிறார்: இந்த இரண்டு வாலிபரும் இரண்டு அடையாளங்களாய் இருக்கிறார்கள். இவர்களில் பொறாமை இவ்வுலக மக்களையும் பொறுமை என்பவன் மறு உலக மக்களையும் குறித்துக் காட்டுகிறார்கள்; பொறாமை என்பவனைப் போல் இப்பொழுதே எல்லாம் வேண்டும், இந்த வருஷமே அதாவது இந்த உலகத்திலேயே எங்களுடைய பங்கு பாக்கியங்களை எல்லாம் தந்துவிடவேண்டும் என்று இவர்கள்விரும்புகிறார்கள். மறு உலகத்து பாக்கியங்கள் எல்லாவற்றிலும், இவ்வுலக வாழ்வே பதின் மடங்கு சிரேஷ்டம் போல் அவர்கள் எண்ணிக் கொண்டு, மறுலோக வாழ்வு களைப்பற்றிய தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் “கையில் இருக்கும் ஒரு குருவி, காட்டில் இருக்கும் இரண்டு குருவிகளுக்குச் சமம்” என்கிற பழமொழிக்கு இணை அல்ல என்கிறார்கள். ஆனால் பொறாமையின் பாதத்தில் வைக்கப்பட்ட பொருளெல்லாம் சிறகு தட்டிப் பறந்தாற்போல, சீக்கிரம் தொலைந்து போய் கந்தையோடு அவனை விட்டதே, அது போல உலக வாழ்வெல்லாம் சீக்கிரம் கடந்து போய், தங்களை வெறுமையாய் விட்டுவிட்டதென்று, கடைசிக் காலத்தில் அவர்கள் உணர்ந்து கொள்ளுவார்கள் என்று விளக்கிச் சொன்னார்.
கிறி: கிறிஸ்தியான் அதைக் கவனமாய்க் கேட்டபின், ஐயா, பொறுமை என்பவனைப்போல சிரேஷ்ட புத்திமான் ஒருவனும் இல்லை என்பதைப் பல முகாந்தரங்களினாலே அறிந்து கொள்ளு கிறேன். எப்படியெனில், (1) அவன் காலஞ்சென்றாலும் நல்ல பொருள் அகப்படட்டும் என்று எண்ணிக் காத்திருக்கிறான் (2) அதோடு அவன் தன் அயலான், தனக்கு கிடைத்த வாழ்வுகளை எல்லாம் இழந்து, கந்தைகட்டிய ஆண்டியாய் உட்கார்ந்திருக்கையில், இவன் தன் பங்குக்குரிய வாழ்வுகளைப் பெற்றுக் கொள்ளும்படி இருக்கிறான் என்று சொன்னான்.
வியா: அவை மாத்திரமோ? அவற்றோடு இசைவாகிற வேறொன் றையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். பொறாமையின் வாழ்வெல்லாம் எவ்வளவு சீக்கிரம் மறைந்து போயின; மறு உலக வாழ்வுகளோ ஒருக்காலும் மறைந்து போகாத நித்திய வாழ்வுகளாய் இருக்கின்றன. ஆதலால் பொறாமை, தன் வாழ்வு முந்திக் கிடைத்துவிட்டது என்று பொறுமை தன்னுடைய முதல்தரமான மகிமை பிந்திக் கிடைக்கிற போது அவனைப் பார்த்துச் சிரிப்பானே, அது அவனுக்கு என்னமாய் இராது! எப்படியும் இகலோக வாழ்வு போய் பரலோக வாழ்வுக்கு இடங்கொடுக்க வேண்டியது; ஏனெனில் பரலோக வாழ்வு இனிமேல் வரவேண்டிய ஒரு வாழ்வாய் இருக்கிறது; அது வந்தபின் வேறொன் றுக்கும்இடம் இல்லை; ஆனதால் நன்மையை முதலாவது பெற்றுக் கொண்டவனுக்கு அதைச் செலவழிக்கும்படி குறிக்கப்பட்ட ஒரு காலம் இருக்க வேண்டியது. ஆனால் நன்மையைக் கடைசியாகப் பெற்றவனோ என்றென்றைக்கும் அதை அனுபவிப்பான்.
அந்த முகாந்தரத்தினாலேதான், ஐசுவரியவானைப் பார்த்து: “நீ பூமியிலே உயிரோடிருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசரு அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக் கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்” என்று ஆபிரகாம் சொன்னதாக எழுதப் பட்டிருக்கிறது (லூக்கா 16 : 25) என்று வியாக்கியானி விளம்பினார்.
கிறி: அப்பொழுது கிறிஸ்தியான்: அப்படியானால் தற்கால பாக்கியங்களை விரும்பாமல், வருங்கால வாழ்வுகளை விரும்பிக் காத்திருப்பது தான் புத்தி என்று தோன்றுகிறது என்றான்.
வியா: அது மெய்யான வார்த்தை; “ஏனெனில் காணப்படு கிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்திய மானவைகள்” (2 கொரிந்தியர் 4 : 18) அப்படியிருந்த போதினும் இகலோக வாழ்வும், நமது மாமிசதாபமும் ஒன்றுக்கொன்று அயல் வீட்டு உறவினரைப் போல் இருப்பதாலும், பரலோக வாழ்வும் நமது மாமிசதாபமும் ஒன்றுக் கொன்று தூர தேசத்து அந்நியரைப்போல் இருப்பதாலும், இந்த மண் வாழ்வை வேண்டாம் என்று வெறுத்துப் போடுவதும், விண் வாழ்வு வருமட்டும் காத்திருப்பதும் வெகு சங்கடமாய் இருக்கிறது என்று சொன்னார். (ரோமர் 8 : 15 – 25)
அப்புறம் நான் என் சொப்பனத்தில் கண்டதாவது: வியாக்கியானி கிறிஸ்தியானுடைய கையைப் பிடித்துக்கொண்டு அக்கினி பற்றி எரிந்து கொண்டிருந்த ஒரு சுவரண்டை கொண்டு போய்க் காட்டினார். ஒரு மனுஷன் அதின் பக்கத்தில் நின்று கொண்டு அந்த அக்கினியை அவிக்கும்படியாக, குடம் குடமாய்த் தண்ணீர் ஊற்றினாலும் அது அவியாமலும், தணியாமலும், அதிக காந்தியாயும் சுடராயும் எரிந்து கொண்டிருந்தது.
கிறிஸ்தியான் அதைக் கண்டு இதின் அந்தரங்கம் என்ன? என்று கேட்டான்.
அதற்கு முனிவர் உரைக்கிறார்; இந்த அக்கினிதான் இருதயத் துக்குள் நடந்தேறுகிற கிருபையின் கிரியை; அதை அவித்துப் போடவும், தணித்துப் போடவும் தண்ணீர் வார்க்கிறவன்தான் சாத்தான். அவன் எவ்வளவாய்த் தண்ணீர் வார்த்தாலும் அது அதிக உக்கிரமாய் எரிந்து, மட்டுக்கு மிஞ்சி அனல் வீசுகிறதே; அதற்கும் ஒரு முகாந்தரம் உண்டு என்று இன்னும் கொஞ்ச நேரத்தில் காண்பாய் என்று சொல்லி, அந்தச் சுவரின் மறுபக்கத்துக்கு அவனை அழைத்துக் கொண்டு போனார். அங்கே ஒரு மனுஷன் தலை மறைவாய் இருந்து கொண்டு, எண்ணெயைக் குடம் குடமாய் அந்த நெருப்பில் ஊற்றிக் கொண்டிருந்தான்.
அப்போது கிறிஸ்தியான்: முனிவரே, இதின் பொருள் என்ன? என்று கேட்டான்.
அதற்கு வியாக்கியானி முனிவர்: எண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்கிறவர்தான் இயேசு கிறிஸ்து அப்பா! இருதயத்தில் ஆரம்பமான கிருபையின் கிரியை ஒழிந்து போகாதபடி அவர் பிரயாசப்படுகிறார். அவர் அப்படி ஓயாமல் கிரியை செய்கிறதினாலே தான், சாத்தான் அதை அவித்துவிடும்படி எவ்வளவு முயன்றாலும் அவியாமல் அவருடைய தாசரின் இருதயம் இன்னும் கிருபை நிறைந்ததாய் இருக்கிறது (2 கொரிந்தியர் 12 : 8) அவர் சுவரின் பிறகே நிற்பதற்கும் ஒரு காரணம் உண்டு; அதாவது, இருதயத்தில் தேவ கிருபையின் கிரியை எந்த விதமாகக் காக்கப்படுகிறது என்று மனுஷர் அறிய முயன்றாலும் அறியவேமாட்டார்கள் என்கிற சத்தியத்தை உனக்கு விளக்கும்படி செய்யத்தான் என்று சொன்னார்.
அப்பால் நான் என் சொப்பனத்தில், வியாக்கியானி, கிறிஸ்தியான் கையைப்பிடித்துக் கொண்டு, இன்பமான தோட்டத்தில் கட்டப் பட்டிருந்த மகாவினோதமும், உன்னதமுமான ஒரு ராஜ அரண்மனையை2 அவனுக்குக் காட்டக் கண்டேன். அதைப் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்; அதைக் கண்டவுடன் கிறிஸ்தியா னுக்கு உண்டான ஆனந்தத்தை என்ன சொல்வேன்! அந்த அரண் மனையின் மேல் மெத்தையில் பொற் சரிகை உடுப்புகளைத் தரித்த சிலர் உலாவிக் கொண்டிருக்கிறதையும் அவன் கண்டான்.
அப்போது கிறிஸ்தியான் இதற்குள்ளே நாம் போகலாமா? என்று கேட்டான். வியாக்கியானி அவனை வழிநடத்தி அந்த மாளிகையின் வாசல்மட்டும் கொண்டு போனார். இதோ அந்த வாசல் அருகே எண்ணிறந்த ஜனங்கள் ஆசையோடு உள்ளே பிரவேசிக்க காத்திருந்தும், போகத் துணியாமல் நின்று கொண்டிருந்தார்கள். கதவுக்குச் சற்று அப்பால் உட்பிரவேசிக்க மனமானவர்களின் நாமங்களை எழுதும் படியாக, மேஜை போட்டுக் கடுதாசி வைத்துக் கொண்டு பேனாவும் கையுமாய் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
மேலும் அந்த வாசலின் நிலையருகே, ஒருவரையும் உள்ளே விடாதபடிக்கும், துணிந்து போகிறவர்களை தங்களால் ஆனமட்டும் வதைத்து வேதனைப்படுத்தும் படிக்கும் அநேகர் ஆயுதம் தரித்துக் கொண்டு நிற்கிறதையும் கிறிஸ்தியான் கண்டான். இது கிறிஸ்தியா னுக்கு கலக்கத்தையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது. வாசலண்டை போனவர்கள் ஒவ்வொருவராய் விலகி, மெதுவாய் பின் வாங்கித் திரும்பினார்கள். ஆயுதந்தரித்து நின்ற சேவகரைக் கண்ட பலர் பயந்து, விலகிப் பின்வாங்கினாலும், கடைசியாகப் புஷ்டியுள்ள ஒரு மனுஷன் பெயர் எழுத உட்கார்ந்திருக்கிறவருடைய மேஜையண்டை போய் என் பெயரை எழுதும் ஐயா, என்று கேட்டதை கிறிஸ்தியான் கண்டான். அப்படியே அவன் பெயர் எழுதப்பட்டது; உடனே அவன் தன் சிரசின்மேல் ஒரு தலைச் சீராவைத் தரித்து, பட்டயத்தையும் உருவிக் கொண்டு, ஆயுதபாணிகளாய் நின்ற சேவகரை நெருக்கி விலக்கிக் கொண்டு துணிந்து உள்ளே பிரவேசித்தான். அந்தச் சேவகரோ தங்கள் பலத்தோடுங்கூடி அவனைப் புறம்பாக்கும்படி முயன்று அவன் மேல் விழுந்தார்கள். அவனோ அணுவளவும் அஞ்சாமலும், தைரியத்தை விடாமலும் தன் வாளை இருபுறமும் வீசி, எதிர்ப்பட்டவர்களைக் கண்டதுண்டமும் சின்னாபின்னமும் ஆக்கி, (மத்தேயு 11 : 12 அப்போஸ்தலர் 14 : 22) தனக்குத் தடையில்லாத வழியை உண்டாக்கிக் கொண்டு அரண்மனைக்குள் பிரவேசித்ததை கிறிஸ்தியான் கண்டான். அவன் உள்ளே சேரவே அரண்மனைக்குள் இருந்தவர்களும் அதன் மெத்தையின் மேல் உலாவிக் கொண்டிருந்த வர்களும் ஒன்றாய்க் கூடி:
வா, வா உள்ளே! வா, வாஅப்பா!
நித்திய கனம் சம்பாதித்தாய்
என்று பாடும் இன்ப கீதம் எக்காளம் போல தொனித்தது. அவன் உள்ளே போனான்; அவர்கள் அணிந்திருந்தது போல பொற்சரிகையுள்ள ஒரு உடுப்பு இவனுக்கும் உடுத்தப் பட்டது. கிறிஸ்தியான் இதைக் கண்டவுடனே, புன்னகை பூத்துக் கொண்டு இதின் பொருள் எனக்கு நிச்சயமாய்த் தெரியும் என்று நினைக்கின்றேன் என்றான்.
அப்புறம் கிறிஸ்தியான் சற்று உள்ளே போவோம் வாரும் என்றான்; முனிவரோ; ஆத்திரப்படாதே அப்பா, இன்னும் சிலவற்றை நான் உனக்குக் காட்டுகிறேன்; அதற்கு அப்புறம் நீ போகலாம் என்று சொல்லி, அவன் கையைப் பிடித்துக் கொண்டு மிகவும் இருட்டாய் இருந்த ஒரு அறைக்கு கூட்டிக் கொண்டு போய்க் காட்டினார்; அங்கே ஒரு மனுஷன் இருப்புக்கூட்டுக்குள் இருக்கிறதை கிறிஸ்தியான் கண்டான்.
அவனைப் பார்த்தால் துக்கசாகரத்தில் மூழ்கினவனைப் போல் காணப்பட்டது. தன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு தலை கவிழ்ந்து, கீழே பார்த்தவனாக இருந்தான். அவன் குலை வெடித்துப் போகிறாப் போலவே பெருமூச்சு விட்டான் (அவனை மனிதன் என்று பொதுவாய்ச் சொல்லிக் கொண்டு போகாமல், இருப்புக்கூட்டுக்குள் இருக்கிறதால் கைதி என்ற பெயரால் அழைத்துக் கொள்ளுவோம்) இதைக்கண்ட கிறிஸ்தியான்: ஐயா, இதின் கருத்து எனக்கு விளங்க வில்லையே என்றான்; அதற்கு முனிவர்: கைதிபோல் இருக்கிற இந்த மனுஷனோடு நீயே பேச்சுக் கொடு என்றார்.
அப்பொழுது கிறிஸ்தியான்: அவன் முகம் மட்டும் குனிந்து கொண்டு நீர் யார் ஐயா என்று கேட்டான். அதற்கு அந்தக் கைதி சொல்லுகிறான்:
முன் இருந்த சீரை எல்லாம்
பின் இழந்த பாவி அப்பா!
கிறி: உம்முடைய முன் சீர் என்ன?
கைதி: ஒரு காலத்தில் நான் மதிப்பிலும் பிறர் மதிப்பிலும் என்னைப் போல கிறிஸ்தவன் இல்லை என்று நினைத்ததும் உண்டு, பேரெடுத்ததும் உண்டு. (லூக்கா 8 : 13) மோட்ச லோகத்தில் எனக்கு இடம் இல்லை யானால் வேறு யாருக்குத்தான் அங்கே இடம் அகப்படும் என்று முதலாய் ஒரு காலத்தில் நான் எண்ணிக் கொண்டதும் உண்டு; அங்கேயே சேர்வேன் என்று சொன்னதும் உண்டு.
கிறி: உம்முடைய பின் சீர் என்ன?
கைதி: பின் சீரா? இந்த இருப்புக்கூடுதான் என் வீடு, வியாகுலமே என் பானம், பெருமூச்சுவிடுவதே என் வேலை, அவ நம்பிக்கையே என் போஜனம். இதில் இருந்து வெளியேற என்னால் இயலாது, ஐயோ, இயலாதவனாகக் கிடக்கிறேன்!
கிறி: உம்முடைய முன்சீர் போய் இந்தச் சங்கடங்களுக்குள் எப்படிஅகப்பட்டீர்?
கைதி: விழிப்பையும், தெளிந்த புத்தியையும் கைவிட்டேன்; லோக தீபமாகிய தேவ வாக்குக்கும், அவருடைய கிருபைக்கும் விரோதமாய்ப் பாவம் செய்தேன்; ஆவியானவரைத் துக்கப்படுத்தினதினாலே அவர் பறந்து போய்விட்டார்; பேயை இரக்கம்பண்ணிக் கூப்பிட்டேன், அவன் உடனே வந்து என்னோடு வாசம்பண்ண ஆரம்பித்தான்.
நான் தேவனைக் கோபம் மூட்டினேன், அவரும் என்னைவிட்டு விலகிவிட்டார்; நான் ஒருக்காலும் மனந்திரும்பாதபடிக்கு என் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு இந்தக் கதி ஆனேன் என்றான்.
அப்போது கிறிஸ்தியான் முனிவரை நோக்கி: இப்படிப்பட்ட மனுஷர் தப்பிப் பிழைக்கத்தக்கதான நம்பிக்கை இல்லையா என்று மெதுவாய்க் கேட்டான். அதற்கு வியாக்கியானி: அதைப்பற்றியும் நீ அவனையே கேள் என்றார்.
கிறி: அதின்பின் கிறிஸ்தியான் அவனைப் பார்த்து: இந்த இரும்புக்கூடுதானா உமது முடிவு; நீர் இதைவிட்டு வெளியேற வேறு வகை இல்லையோ என்று கேட்டான்.
கைதி: இல்லவே இல்லை; இல்லவே இல்லை.
கிறி: ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரன் மிகவும் தயவுள்ளவர், அன்புள்ளவர் அல்லவா?
கைதி: என் ஆகாமியத்தின் பங்குக்கு நானே அவரை மறுபடியும் சிலுவையில் அறைந்தேன். (எபிரேயர் 6 : 6) அவரையே புறக்கணித்தேன் (லூக்கா 19 : 14) அவருடைய நீதியை அவமதித்தேன், அவருடைய இரத்தத்தை அசுத்தம் என்று எண்ணினேன், கிருபையின் ஆவியை நிந்தித்தேன்; (எபிரேயர் 10 : 28, 29) ஆனதால் அவருடைய வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றிற்கும் என்னை நானே புறம்பாக்கிக் கொண்டேன். இனி தேவ துரோகியாகிய என்னை விழுங்கிப் பட்சிக்கும் ஒரு நியாயத்தீர்ப்பையும், கோபாக்கினியையும் பற்றிய பயங்கரங்களும், கலக்கங்களும், அதிர்ச்சிகளுமே அல்லாமல் வேறொன்றும் எனக்கு இல்லையென்று அறிகிறேன்.
கிறி: எதின் நிமித்தம் இந்தக் கஷ்டங்களை எல்லாம் நீ உனக்கு வருவித்துக் கொண்டாய்?
கைதி: என் இச்சைகள், சிற்றின்பங்கள், லோக ஆதாயங்கள் இவைகளின் நிமித்தமே இந்தக் கஷ்டங்கள் எனக்கு வந்தன; அவைகளை நான் அனுபவித்த காலங்களில், அவை அனைத்தும் எனக்குப் பேரானந்த வாழ்வுகளைக் குவிக்கப் போகிறவைகளைப் போல காணப்பட்டன. இப்பொழுது அவைகள் ஒவ்வொன்றும் சர்ப்பங்களைப் போல என்னைக் கடித்து, தேள்களைப்போல என்னைக் கொட்டி, புழுக்களைப்போல என்னை அரிக்கின்றன.
கிறி: நீ இப்பொழுது மனந்திரும்பி குணப்படலாகாதா?
கைதி: அப்படிப்பட்ட குணப்படுதலுக்கு தேவன் இடம் பண்ணவே இல்லை; இந்த நிலையில் இருக்கிற நான் விசுவாசித்து ஒன்றைப் பிரயத்தனம் செய்யும்படி வழி ஒன்றையும் அவருடைய வசனம் எனக்கு காட்டுகிறதில்லை; அவரே என்னை இந்த இருப்புக் கூட்டுக்குள் அடைத்தார். இவ்வுலகத்திலுள்ள மனுஷர் எல்லாரும் ஒன்று கூடி இதிலிருந்து என்னை விடுதலையாக்க முயன்றாலும் பலிக்கமாட்டாது; நித்தியமே! ஐயோ நித்தியமே! ஐயையோ நித்தியமே! என் வேதனை. அந்த நித்திய வேதனையை நான் எவ்வள வாய்த்தான் சகிப்பேன்! ஐயோ! எனக்கு ஐயோ என்று அலறினான்.
வியா: இந்த மனுஷன் அனுபவிக்கிற அவதிகள் உன்னை என்றென்றைக்கும் எச்சரிக்கும்படியாக, இதை நீ எப்போதும் ஞாபகம் பண்ணிக் கொள் என்று வியாக்கியானி கிறிஸ்தியானுக்குச் சொன்னார்.
கிறி: அப்படியே ஆகட்டும் ஐயா! மெய்யாகவே இது மகா பயங்கரமாய் இருக்கிறது; இவனுடைய நிர்ப்பந்தத்துக்கு காரண மானதை நானும் செய்து, இப்படி வேதனையை அனுபவியாதபடிக்கு விழிப்பும், தெளிந்த புத்தியுமாய் நடந்து கொள்ளும்படி ஆண்டவரை வேண்டுகிறேன். ஐயா முனிவரே! நான் என் பயணத்தை நடத்த இன்னும் நேரமாகவில்லையா? நேரம் ஆகிவிட்டது போல் இருக்கிறதே!
வியா: நான் இன்னும் ஒரு காரியத்தை காண்பிக்கும் மட்டும் புறப்பட வேண்டாம்; அதன் பின்பு போ.
இப்படிச் சொல்லிக்கொண்டு வியாக்கியானி கிறிஸ்தியானுடைய கையைப் பிடித்து அவனை வேறொரு அறைக்கு அழைத்துப் போகிறதை நான் என் சொப்பனத்திலே கண்டேன். அங்கே ஒரு மனுஷன் அப்போதுதான் தூங்கி எழுந்து வஸ்திரங்களைக் கட்டிக் கொண்டிருந்தான். துணிகளை உடுத்தினபோது அவன் கால் கைகளெல்லாம் ஆட்டங்கொடுத்தது. ஐயா, இவன் இவ்வளவு நடுக்கங்கொள்ளுவதற்குக் காரணம் என்னவென்று கிறிஸ்தியான் வியாக்கியானியை கேட்டான். அப்போது முனிவர் தூங்கி எழுந்து வஸ்திரங்கட்டினவனைப் பார்த்து: நீ நடுங்குகிற காரணத்தை நீயே இவனுக்குச் சொல்லு என்று உத்தரவு கொடுத்தார். உடனே அவன் சொல்லத் தொடங்குகிறான்.
இன்றிரவு நான் அயர்ந்து நித்திரை செய்கையில், அதிர்ந்து கலங்கும் படியான ஒரு சொப்பனங் கண்டேன்; இதோ வானங்கள் கார் மேகங்களால் மூடப்பட்டன, இடிகள் முழங்கின, மின்னல்கள் பிரகாசித்தன, அதைக் கண்டு நான் கலங்கி வியாகுலப்பட்டேன்,
பின்னும் நான் என் சொப்பனத்தில் மேகங்கள் வேகமாய் விலகி ஓடினதையும், அவைகளின்மேல் எக்காள சத்தம் தொனிப்பதையும் கண்டேன். அந்த மேகத்தின் மேல் ஒருவர் உட்கார்ந்திருக்கவும், அவரைச் சுற்றிலும் ஆயிரம் பதினாயிரமான வான சேனைகள் சூழ்ந்து நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் எல்லாரும் அக்கினி சுடரைப் போல் இருந்தார்கள், வானங்களோ எரிகிற அக்கினிமயமாய்ப் பிரகாசிக்கக் கண்டேன். அப்புறம் நான்: மரித்தோரே எழும்புங்கள், நியாயந்தீர்க்கப்பட வாருங்கள் என்று இடிமுழக்கம்போல் தொனிக்கிற ஒரு சத்தத்தையும் கேட்டேன். அந்தச் சத்தம் உண்டான உடனே மலைகள் பிளந்தன, கல்லறைகள் திறந்தன, அதினுள் அடக்கம் பண்ணப்பட்டவர்கள் எழுந்து புறப்பட்டார்கள். அவர்களில் சிலர் முகமலர்ச்சியாய் இருந்து தலை நிமிர்ந்து திரிந்தார்கள்; மற்றவர்கள் எங்கே ஓடி ஒளிக்கலாம் என்று திசை முட்டினவர்களைப் போலக் காணப்பட்டார்கள். அப்பால் மேக வாகனத்தில் வீற்றிருந்தவர், புஸ்தகத்தைத் திறந்து, சர்வலோகத்தையும் தமது சமூகத்துக்கு முன் வரும்படி கட்டளையிட்டார். அக்கினி அவர் முகத்துக்கு முன்பாக வீசிக் கொண்டிருந்ததால், நியாயாதிபதிக்கும் குற்றவாளிக்கும் எவ்வளவு தூரம் இருக்குமோ, அவ்வளவு தூரத்தில் சர்வ ஜனங்களும் நின்றார்கள்.
மேகத்தில் வீற்றிருந்தவர் தம்மைச் சுற்றிலும் நின்றவர்களை நோக்கி: “களைகளையும், பதரையும், தாளடிகளையும் ஒன்றாகச் சேகரித்து, (1 கொரிந்தியர் 15 ஆம் அதிகாரம், 1 தெச 4 : 16, 1, மீகா 7 : 16,17) அக்கினிக் கடலில் தள்ளுங்கள்” என்று முழக்கமிட்டுச் சொன்னதையும் நான் கண்டேன். (மத்தேயு 3 : 12, 13, 30, 24 : 30 மல்கியா 4 : 1) அச்சத்தம் உண்டானவுடனே, நான் நின்ற இடத்திற்குச் சமீபமாக அந்தப் பாதாளம் விரிவாகத் திறக்கப்பட்டது; அங்கிருந்து அக்கினியும் நெருப்புத்தழலும் குமுறி எழும்பின. அப்புறம் மேகவாகனர் தனது ஆட்களைப் பார்த்து, “கோதுமையை என் கழஞ்சியத்திலே சேருங்கள்” என்றார். (லூக்கா 3 : 17) அவர்கள் உடனே அங்கும் இங்கும் பறந்துபோய், அநேகரைப் பிடித்து மேகத்துக்குள் கொண்டு போனார்கள். ஆனால் நான் கொண்டு போகப் படவில்லை. (1 தெசலோ 4 : 16, 17) நான் எங்கேயாவது ஓடி ஒளித்துக் கொள்ளலாம் என்று பிரயாசப்பட்டும், காரியம் வாய்க்கவில்லை. ஏனெனில் மேகத்தில் வீற்றிருந்தவருடைய கண்கள் என்மேல் தான் நோக்கமாய் இருந்தது; நான் செய்த பாவங்கள் எல்லாம் என் ஞாபகத்தில் வந்தன; என் மனச்சாட்சி என்னை வேதனைப்படுத்திக் குத்தினதற்கு ஒரு அளவில்லை. (ரோமர் 2 : 14, 15) இந்தப் பயங்கரமான சொப்பனத்தைக் கண்டு இப்போதுதான் கண் விழித்தேன் என்றான்.
அப்போது கிறிஸ்தியான் இந்தக் கனாக் கண்டாலும் இப்படியும் கிடுகிடு கலக்கம் அடைவார் உண்டா? என்று கேட்டான். அதற்கு அவன்: கலங்காமல் என்ன? நியாயத்தீர்ப்பு நாள் வந்து விட்டதென்றும், நான் அதற்கு இன்னும் ஆயத்தமாகவில்லை என்றும் என் மனதில் உடனே பட்டது; தேவதூதர், அநேகரைத் தெரிந்தெடுத்து மேகத்துக்கு கொண்டு போனாலும், என்னைத் தனியே விட்டுப் போனார்கள் என்கிற விஷயமே என் மனதில் அதிக பயங்கரத்தைக் கொடுத்தது, அதோடு நான் நின்ற இடத்திற்கு சமீபமாகவே நரக பாதாளம் தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்ததும், என் மனச்சாட்சியின் வேதனையும், நியாயாதிபதி பார்த்த கண் தட்டி விழியாமல் என்னையே நோக்கினதும் எல்லாம் கூடி என்னை இவ்விதமாய் நடுங்கச் செய்கின் றது என்றான்.
இதன் பின்பு வியாக்கியானி: அப்பா கிறிஸ்தியானே! நீ கண்டவை களை எல்லாம்உணர்ந்து கொண்டாயா என்று கேட்டார். ஆம் ஐயா உணர்ந்து கொண்டேன்,உணருகிறேன்; இந்தக் காட்சிகள் எனக் குள்ளே நடுக்கத்தையும் நம்பிக்கையையும் வருவிக்கின்றன என்று சொன்னான்.
அப்பொழுது முனிவர்: நீ கண்ட காட்சிகளெல்லாம் உன் வழியில் நீ ஜாக்கிரதையாய் முன்னுக்குச் செல்லும்படியாக உன்னை வழி நடத்தும் தாற்றுக்கோல் போல இருப்பதாக என்று சொல்லி முடித்தார். அப்பால் கிறிஸ்தியான் தன் இடுப்பின் கச்சைகளை இறுக்கிக் கட்டிக் கொண்டு புறப்படத் தயாரானான். கடைசியாக முனிவர்: நல்ல கிறிஸ்தியானே! தேற்றுகிறவர் உன்னோடு எப்போதும் இருந்து, நீ சீயோனுக்குப் போகும் பாதையில் உன்னை வழி நடத்துவராக என்று வாழ்த்தி வழிவிட்டனுப்பினார். அவன் அந்த வாழ்த்துதலைத் தன் சிரசின்மேல் ஏற்றுக் கொண்டு:
களிக்கும் காட்சி இங்கு கண்டேன்;
கலங்கும் காட்சியும் இங்கு கண்டேன்;
பாடும் காட்சி இங்கு கண்டேன்;
கூடும் காட்சியும் இங்கு கண்டேன்
சுடரொளிக்காட்சி இங்கு கண்டேன்;
காரிருள் காட்சியும் இங்கு கண்டேன்;
மோட்ச காட்சி இங்கு கண்டேன்;
நரகக்காட்சியும் இங்கு கண்டேன்;
இந்தக் காட்சிகள் அனைத்துமே
என்னை நிலைவரப்படுத்துமே.
இன்பக்காட்சி இங்கு கண்டேன்;
துன்பக்காட்சியும் இங்கு கண்டேன்;
உயரும் காட்சி இங்குகண்டேன்;
ஒளிக்கும் காட்சியும் இங்கு கண்டேன்;
துதிக்கும் காட்சி இங்கு கண்டேன்;
புலம்பும் காட்சியும் இங்கு கண்டேன்;
எல்லாக் காட்சியும் ஏகமாக
என்னை உணர்த்தின நன்றாக!
அனைத்தும் விளக்கின ஐயாவே!
அனந்த வந்தனம் முனிவரே!
என்று சொல்லிப் பாடிக் கொண்டே வழி நடந்து போனான்.
கிறிஸ்தியான் நடந்து போன பெரும் பாதையானது, இருபுறம் சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்தச் சுவருக்கு ஈடேற்றம் என்று பேர் வழங்கப்பட்டது. (ஏசாயா 26 : 1) இதின் வழியாகவே கிறிஸ்தியான் ஓடிப்போனான்; ஆனாலும் அவன் முதுகின் மேல்இருந்த பாரத்தினாலே அவன் பட்ட வருத்தம் அதிகமாய் இருந்ததென்று நான் என் சொப்பனத்திலே கண்டேன்.
1. ஒரு மகாத்துமா என்பது, இயேசு கிறிஸ்துவின் மெய்யான ஊழியக் காரனைக் குறிக்கிறது. மகா விசேஷமான ஒரு புஸ்தகம் என்பது, வேதா கமத்தை குறிக்கிறது. அதின் போதனையைப் பின்பற்ற வேண்டியது.
2. அரண்மனை. இது மோட்சத்தைக் குறிக்கிறது. அதின் மேலுள்ள பொதுவான நாட்டம், அதினுள் பிரவேசிக்கப் போதுமானதல்ல. அதினுள் சேர ஆசைப்பட்டால் விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராட ஆசையாய் இருக்க வேண்டும். “ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு மோட்சம்” என்ற வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறது.