நம்பிக்கையிழவின் அவதி
அவர்கள் தங்கள் சம்பாஷணையை முடித்துத் தீவிரமாய் நடந்தவுடனே, கவலையீனத்தால் இருவரும் ஒரு உளையில் விழுந்ததை நான் என் சொப்பனத்தில் கண்டேன். அதற்கு நம்பிக்கையிழவு1 என்று பேர். இந்த உளையில் அவர்கள் பட்ட வருத்தங்கள் கொஞ்சமல்ல. உருண்டு புரண்டு நகர்ந்தாவது தப்பிப் பிழைக்க வேண்டும் என்று அவர்கள் பட்ட பிரயாசத்தால் தேகம் எல்லாம் சேறாய்ப் போயிற்று. கிறிஸ்தியான் முதுகில் ஒரு பழுவான சுமை இருந்ததால், அவன் அந்த உளையில் ஆழமாய் இறங்கிப்போனான், இணங்குநெஞ்சன் அவனைக் கூப்பிட்டு: ஐயா கிறிஸ்தியானே! எங்கே இருக்கிறீர் என்று கேட்டான். அதற்குக் கிறிஸ்தியான்: நான் இருக்கிற இடம் எனக்கே தெரியவில்லை தம்பி என்றான்.
அதைக் கேட்டவுடனே இணங்குநெஞ்சனுக்கு கோபம் வந்து விட்டது. அவன் கிறிஸ்தியானைப் பார்த்து; இதுதானா ஐயா நீர் இம்மட்டும் சொன்ன வாழ்வு? கால் எடுத்து வைக்கு முன்னே இப் பாடுண்டானால், காரியம் கிட்டுமட்டும் எப்படி இராது? எனக்கு இந்தச் சங்கடம் என்னத்துக்கு? நான் என் ஊரை நோக்கி ஓடிப் போகிறேன்; என் பங்கை எல்லாம் நீரே அனுபவித்தால் போதுமானது என்று மனங்கொண்ட மட்டும் திட்டி, தன்னாலான பலத்தோடு சேற்றிலிருந்து தன் வீட்டுக்கடுத்த திசையாய்த் தத்தித்தத்தி வெளியேறி ஓட்டம் பிடித்தான்.2 அவனை அப்புறம் கிறிஸ்தியான் கண்டதே இல்லை.
இணங்குநெஞ்சன் ஓட்டம் பிடித்ததால் கிறிஸ்தியான் ஒண்டியாய் அந்த உளையில் கிடந்து அவதிப்பட்டான்; என்றாலும் தன் வீட்டுக்குச் சமீபமான திசையாய் அல்ல, திட்டிவாசலுக்கு கிட்டவிருந்த பக்கமாய் அந்த உளையிலிருந்து கரையேறப் பிரயாசப்பட்டான்.3 அவன் எவ்வளவாய் பிரயாசப்பட்டாலும், அவனுடைய முதுகிலுள்ள பாரத்தால் தானாக உளையிலிருந்து கரை ஏறி விடக்கூடாமல் போயிற்று. அவன் அவதியில் உதவி செய்து அவனைக் கரையேற்றும் படி ஒரு மனுஷன் வந்ததை நான் என் சொப்பனத்தில் கண்டேன். அவருக்குச் சகாயர்4 என்று பெயர். சகாயர் கிறிஸ்தியானைப் பார்த்து: என்ன செய்கிறாய் அப்பா? என்று கேட்டார்.
கிறி:- அதற்குக் கிறிஸ்தியான்: ஐயா! சுவிசேஷகன் என்ற பெயருடைய ஒருவர், இந்த வழியாய்ப் போனால் அப்பால் இருக்கும் ஒரு திட்டிவாசலைக் காண்பாய்; அங்கே சேர்ந்தால், வரும் கோபாக்கினைக்குத் தப்பும்படி வழி சொல்லப்படும் என்று சொன்னார்; அந்தப்படியே நான் புறப்பட்டு வழியே வருகையில் இந்த உளையில் விழுந்து, எழுந்திருக்க இயலாமல் அவதிப்படுகிறேன் என்று சொன்னான்.
சகாயர்:- அதெல்லாம் சரிதான்; ஆனால் படிகள்5 எங்கே என்று பார்த்தாயில்லையே?
கிறி:- பயமானது பலமாய் என்னைச் சூழ்ந்து கொண்டதால் நான் படிகளைப் பாராமல் பக்க வழியாய் ஓடி, விழுந்து கிடக்கிறேன் ஐயா!
சகா:- அப்படியானால் கையை நீட்டு என்று சகாயர் சொன்னார், கிறிஸ்தியான் கையை நீட்டினான், உடனே சகாயர் அவனைக் கை பிடித்து இழுத்து உளையிலிருந்து கரையேற்றி, (சங்கீதம் 51 : 1) நல்ல வழியில் அவனை நிறுத்தி, இனி நடந்துபோ என்று சொல்லி அனுப்பினார்.
அப்பொழுது நான் கிறிஸ்தியானை உளையிலிருந்து கரையேற்றி விட்ட சகாயரைப் பார்த்து: ஐயா, நாசபுரியிலிருந்து அந்த வாசலுக்குப் போகிறதற்கு இந்த வழிதானா இருக்கிறது? ஏழைப் பிரயாணிகள் அவஸ்தைப்படாமல் போய் விடுவார்கள் என்றா இது இன்னும் செப்பனிடப்படாமல் இருக்கிறது? என்று கேட்டேன்.
அதற்கு அவர்: இது செப்பனிடக் கூடாததான ஒரு இடம். பாவ உணர்ச்சியால் வெளியாகிற களிம்பும் அழுக்கும் இதில் ஓயாமல் வடிந்து இறங்கிக் கொண்டிருக்கிறது; அதினாலேதான் இது நம்பிக்கையிழவு என்று பேர் பெற்றிருக்கிறது. ஏனெனில் ஒரு பாவி தன் நிர்ப்பந்த நிலைமையை அறிந்து உணருகிறபோது அவன் ஆத்துமாவில்
மகா பயங்கரங்களும், சந்தேகங்களும், தளர்ச்சிகளும் உண்டாகி அவனை அதைரியப்படுத்துகின்றன. பல சிற்றோடைகளாகிய இவை அனைத்தும் கூடி ஒரு பெரிய ஆறாகி, இந்த இடத்தில் வந்து சேர்ந்து உறைந்து போகின்றன. அதனாலேதான் இந்த இடம் இவ்வளவு கேடாய் இருக்கிறது.
இந்த இடம் இப்படியே கேவலமாய் இருக்க வேண்டும் என்பது எங்கள் மகாராஜாவின் பிரியம் அல்ல (ஏசாயா 35 : 3, 4) இராஜாவின் ஆட்கள் இராஜாங்க சிற்பாசாரிகளுடைய ஆலோசனையின் பிரகாரம் இந்த உளையைச் சீர்ப்படுத்தி, நல் வழியாக்கும்படி தங்களால் ஆனமட்டும், கடந்த ஆயிரத்து அறுநூறு வருஷ காலமாய்ப் பல பிரயத்தனங் களையும் செய்ததுண்டு. நானே அறிந்தமட்டும் இந்த இடத்தில் இருபதாயிரம் வண்டிப் பாரமா? அல்ல, அல்ல, இலட்சாதிலட்சமும், கோடானு கோடியுமான வண்டிப்பாரம் என்று சொல்லத்தக்க ஆரோக்கியமான உபதேசங்களை, இவ்வையகத்தின் நாலா சீமை களிலுமிருந்து கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்கள். அந்த உபதேசங்களின் தன்மைகளை அறிந்தவர்கள் இந்த உளை நல்ல வழியாக, இதைப்போலொத்த சமமான வழி இல்லை என்று சொல்லுவார்கள். அப்படியெல்லாம் செய்திருந்தும் இந்த இடம் பழையபடி நம்பிக்கையிழவாகவே இருக்கிறது. இன்னும் என்ன பிரயத்தனம் செய்தாலும் இது எப்போதும் உளையாகவே இருக்கும்.
ஆனால் ராஜாவின் சட்ட நிரூபண அதிகாரியால் கட்டப் பட்டிருக்கிற சில உறுதியான படிகள் உளையின் நடுவில் உண் டென்பது மெய். பருவகால பேதங்களால் சில வேளை இந்த உளை பொங்கி அழுக்குகளைக் கக்குவதால் படிகள் மூடப்பட்டுத் தெளிவாய் தெரியாமல் போகிறது. தெரிந்தாலும் இதின் வழியே வருவோர் சிலர், தலை மயக்கத்தால் படிகளைக் கூர்மையாய் கவனியாமல், பக்கத்தில் மிதித்து உளையில் விழுந்து, சேறுபட்டு அழுக்காவார்கள்; ஆனால் வாசலில் கால் மிதித்துவிட்டால் அப்புறம் நல்ல பாதைதான் என்று சொன்னார். (1 சாமுவேல் 12 : 23)
இப்பொழுது நான் என் சொப்பனத்தில் நம்பிக்கையிழவிலிருந்து கிறிஸ்தியானை விட்டுப் பிரிந்தோடிப் போனானே, அந்த இணங்கு நெஞ்சன் தன் ஊர்ப்போய்ச் சேர்ந்து வீட்டுக்குள் நுழைந்ததை நான் கண்டேன். அவனுடைய இனபெந்துக்களும் வேறு சிலரும் அவனைப் பார்க்க வந்தார்கள். அவர்களில் சிலர்: நீ புத்திசாலி அப்பா, திரும்பிட்டாயே, அது நற்புத்தி என்றார்கள்; வேறுசிலர்; அந்தப் பித்தம் பிடித்த கிறிஸ்தியானோடு கூடப்போனாயே, உன்னைவிடப் பெரும் பித்தன் உண்டோ என்றார்கள்: வேறு சிலர்: போனது போனாயே! உளையைக் கண்டு ஓடி வந்துவிட்டாயே, உன்னைவிட தெம்மாடி உண்டோ? என்று சொன்னார்கள். ஆகவே, அவன் பதுங்கித் தலை கவிழ்ந்திருந்தான். சற்று நேரமானபின். தலை கவிழ்ந்து கொண்டிருக் கிறதால் இவர்கள் நம்மைக் குரங்காட்டம் பார்க்கிறார்கள் என்று அவன் தைரியங்கொண்டு, அதற்கு எதிர் உத்தரவு சொல்லவே, எல்லாரும் அடங்கித் தங்கள் பேச்சைத் திருப்பி, ஏழைக் கிறிஸ்தி யானைக் கண்டபடி எல்லாம் பேசினார்கள். இணங்குநெஞ்சனைப் பற்றிய காரியம் இம்மட்டோடே முடிந்தது.
1. நம்பிக்கையிழவு என்பது, புதிதாய் மனந்திரும்புகிறவர்களுக்கு உண்டாகும் பலவித பயங்கரங்களைக் குறிக்கிறது. அவர்கள் தங்கள் நீச நிலைமையைத் திட்டமாய் அறிந்து, நமக்கேது நம்பிக்கை இருக்கிறது? என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். அவர்கள் எவ்வளவுக்கு முயற்சி செய்கிறார்களோ அவ்வளவுக்கு நம்பிக்கையில்லாதவர்கள் ஆகிறார்கள்.
2. இணங்குநெஞ்சன் தன் வீட்டுக்கடுத்த திசையாய் உளையிலிருந்து கரை ஏறினான். அவனுக்குண்டான உபத்திரவங்கள், அவன் தன் பழைய தோழரோடு போய்ச் சேர்ந்து கொள்ளச் செய்தன.
3. கிறிஸ்தியான் எவ்வளவுதான் உபத்திரவப்பட்டபோதினும் பின் வாங்க மாட்டான்.
4. சகாயர் என்பது, ஆத்தும ஆபத்துக்களினால் வருந்துகிறவர்களை ஆறுதல் படுத்துகிற இயேசு கிறிஸ்துவை அல்லது அவர் பிரயோகிக்கும் பல ஏதுக்களைக் குறிக்கிறது.
5. படிகள் என்பது, மனந்திரும்புகிற பாவிகளுக்கு தேவன் தமது வசனத்தில் சொல்லியிருக்கிற வாக்குத்தத்தங்களைக் குறிக்கிறது.