அறிவீனனுடைய முடிவு
இவைகளை எல்லாம் நான் சிறிது நேரம் நினைத்து தியானித்துக் கொண்டு திரும்பிப் பார்க்கவே அறிவீனன் என்பவன் ஆற்றோரம் வந்து சேர்ந்ததைக் கண்டேன். அவன் வெகு லேசாய் ஆற்றைக் கடந்துவிட்டான். அந்த இரண்டு பிரயாணிகளும் பட்ட வருத்தத்தில் பாதி முதலாய் இவனுக்கு நேரிடவில்லை. ஏனென்றால் வீண் நம்பிக்கை1 என்கிற தோணிக்காரன் ஆற்றோரம் இருந்தான். அவன் அறிவீனனைத் தன் தோணியில் ஏற்றிக் கொண்டு அக்கரை சேர்த்து விட்டான். இந்த அறிவீனனும் முந்தின இருவரைப்போல் மோட்ச வாசலண்டை சேரும்படி ஏறிப்போனான். அவன் ஒன்றியாகவே போனான். வழியில் அவனைச் சந்திப்பாரும் இல்லை, சந்தோச வார்த்தைகளைச் சொல்லுவாரும் இல்லை. வாசற்படியில் அவன் வந்தவுடனே அதின் மேல் எழுதப்பட்டிருக்கிற எழுத்துக்களை வாசித்துப் பார்த்து, தனக்கும் வாசல் தடையில்லாமல் திறக்கப்படும் என்று நினைத்துக் கொண்டு கதவைத் தட்டினான். தட்டவே, வாசலுக்கு மேல் சிலர் வந்து எட்டிப் பார்த்து, நீ எங்nயிருந்து வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நான் அரசர் சமூகத்தில் போஜனம் பண்ணியிருக்கிறேன். அவர் எங்கள் வீதியில் வந்து உபதேசம்பண்ணியிருக்கிறார் என்று சொன்னான். உன்னுடைய நற்சாட்சி பத்திரத்தைக் கொடு, அரசரண்டை போய்க் காட்டுகிறோம் என்று கேட்டார்கள். உடனே அவன் விதி மறந்தவன்போல் தன் மடியைத் தடவி ஒன்றும் இல்லை என்று கண்டான். அப்போது அவர்கள் பத்திரம் இல்லையோ என்று கேட்டார்கள். அவனோ அதற்கு ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொன்னதில்லை. இந்தச் சமாச்சாரங்களை எல்லாம் அவர்கள் அரசருக்குப் போய் அறிவித்தார்கள். அரசர் அவனைப் பார்க்க மனமில்லாமல், கிறிஸ்தியானையும், திடநம்பிக்கையையும் வழிநடத்திக் கொண்டு வந்த ஒளிமய ரூபிகள் இருவரையும் அழைத்து நீங்கள் வெளியே போய் அறிவீனனுடைய கையையும், காலையும் கட்டி அப்பாலே தள்ளுங்கள் என்று கட்டளை கொடுத்தார். அந்த நிமிஷமே அவர்கள் வெளியே வந்து அவனைப் பிடித்துக் கட்டி ஆகாய மார்க்கமாய் கொண்டு போய் ஒரு மலைச்சரிவில் நான் முன்னே கண்டதாகச் சொன்ன கதவைத் திறந்து அதினுள் அவனைத் தள்ளி விட்டார்கள். அப்பொழுது நான் நரலோகத்துக்குப் போகும்படி நாசபுரியிலிருந்து மாத்திரம் அல்ல, மோட்ச வாசலிலிருந்தும் ஒரு வழி இருக்கிறது என்று கண்டு திடுக்கென்று கண் விழித்தேன். விழிக்கவே இதோ இவை எல்லாம் சொப்பனம் என்று அறிந்து கொண்டேன்.
முதலாம் பங்கு முற்றிற்று.
1. வீண் நம்பிக்கை: கள்ள நம்பிக்கையை பிடித்துக்கொண்டு அறிவீனனும் மரணமடைந்தான். அவர்களுடைய எண்ணத்தின் மூடத்தனத்தை மறுலோகத்தில் கண்டு பிடிப்பது மகா பயங்கரமாய் இருக்கும்.