பிரயாணிகள் நதியைக் கடத்தல்
பின்னும் நான் கண்டது என்னவென்றால் அந்த வாசலுக்கும் அவர்களுக்கும் மத்தியிலே ஒரு ஆறு 1 பாய்ந்தது. அந்த ஆற்றைக்கடக்க ஒரு பாலமும் இருந்ததில்லை. அது ஒரு மகா ஆழமான ஆறாகவும் இருந்தது. அந்த ஆற்றைக் கண்டவுடனே இந்த பரதேசிகளின் மனம் தத்தளித்தது. அவர்களோடு கூட வந்த ஒளிமய ரூபிகளோ நீங்கள் நேரே ஆற்றைக்கடக்க வேண்டும், இல்லாவிட்டால் வாசலண்டை சேரக்கூடாது என்றார்கள்.
இந்தப் பிரயாணிகளோ வாசலண்டை சேரும்படி வேறு வழிகள் இல்லையோ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், வேறு வழி உண்டு, ஆனால் ஏனோக்கு, எலியா என்கிற இருவரை அல்லாமல் உலகம் தோன்றின கால முதல் கடைசி எக்காளம் தொனிக்குமட்டும் வேறொருவனும் அதின் வழியாக வரும்படி உத்தரவாகவில்லை என்று சொன்னார்கள். அப்பொழுது அவர்கள் இருவரும் கலங்கினார்கள். கிறிஸ்தியான் மற்றவனைப் பார்க்கிலும் மனஞ்சோர்ந்து இங்கும் அங்கும் திரும்பி ஆற்றைக்கடந்து போக வேறு வழி கிட்டமாட்டாதா என்று தேடியும் அகப்படவில்லை. அப்புறம் பிரயாணிகள் இந்த ஆற்றின் தண்ணீர் ஏற்றத்தாழ்வாய் இருக்குமா அல்லது எல்லா இடத்திலும் ஒரே ஆழமாய் இருக்குமா என்று ஒளிமயரூபிகளை கேட்டார்கள். அதற்கு அவர்கள், இல்லை நீங்கள் உச்சித பட்டணத்து அரசர்மேல் வைக்கும் விசுவாசத்துக்குத் தக்கதாக ஆற்றின் ஜலம் ஏற்றத்தாழ்வாய் இருக்கும். என்றாலும் அப்படிப்பட்ட சமயத்தில் உங்களுக்கு யாதொரு உதவியும் செய்யமாட்டோம் என்றார்கள்.
அதின்பின் ஆற்றைக்கடக்கும்படி இருவரும் இறங்கினார்கள். இறங்கின உடனே கிறிஸ்தியான் அமிழத்தொடங்கி தன் உத்தம சிநேகிதனாகிய திடநம்பிக்கையைக் கூப்பிட்டு “நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டு போகிறது. நிற்க நிலையில்லை” என்று சொன்னான்.
அதைக்கேட்ட திடநம்பிக்கை, என் சகோதரனே திடன் கொள்ளும்! என் காலுக்குத் தரை தட்டுப்படுகிறது, அது அடி எடுத்து வைக்க நன்றாய் இருக்கிறது என்றான். அப்போது கிறிஸ்தியான், ஆ என் சிநேகிதனே! மரண துக்கம் என்னை சூழ்ந்து கொண்டது. பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை நான்காணமாட்டேன் என்றான். இப்படிச் சொல்லவே கார் இருளும் திகிலும் அவனைப் பிடித்ததினாலே தனக்கு முன் ஒன்றையும் பார்க்கக்கூடாமற் போயிற்று. அதுவுமின்றி அவன் இவ்விடத்தில் தன் புத்தியையும் இழந்து போனதால் நிதானமான வார்த்தைகளைப் பேசவாவது தான் பரதேச பிரயாணத்தில் அடைந்த ஆறுதல்களை பற்றி நினைக்கவாவது கூடாமற் போயிற்று. அவன் பேசின வார்த்தைகளால் தான் மோட்ச வாசலில் கால் வைக்கக் கூடாமல் அந்த ஆற்றிலேயே மாண்டு போவேன் என்கின்ற மனத் திகிலும் இருதய பயங்கரமும் கொண்டிருந்ததாகவே வெளிப்பட்டது. அதுவுமின்றி அவன் பக்கத்தில் நின்றவர்கள் அவன் மோட்ச பிரயாணம் செய்வதற்கு முன்னும் பின்னும் செய்த பாவங்களையிட்டு மிகுந்த கலக்கமுடையவனாய் இருந்ததைக் கவனித்தார்கள்.
அதுவும் அல்லாமல் அவன் பேசின வார்த்தைகளால் ஆவேசங் களும் அசுத்த ஆவிகளும் அவனுக்குத் தோன்றினதால் அவன் மிகவும் சஞ்சலப்பட்டான் என்றும் தெரிய வந்தது. 2
ஆதலால் திடநம்பிக்கை, கிறிஸ்தியானுடைய தலையைத் தண்ணீருக்கு மேலாகத் தாங்கி நடத்த வெகு சங்கடப்படவேண்டியதாய் இருந்தது. சில தரம் அவன் தண்ணீருக்குள் தாழ அமிழ்ந்துபோய் வெகு நேரத்துக்கு பிற்பாடு அரை குறை உயிரோடு தலையைக் காட்டுவான். திடநம்பிக்கை அந்தச் சமயத்தில் அவனை ஆறுதல் படுத்தும்படியாக சகோதரனே! அதோ வாசலைப் பார்க்கிறேன், நம்மைக் கூட்டிக் கொண்டு போகும்படி அநேக ஆட்கள் வாசற்படியண்டை காத்து நிற்கிறார்கள் என்று சொல்லுவான். அதற்குக் கிறிஸ்தியான், உனக்காக உனக்கென்றே அவர்கள் காத்திருக்கிறார்கள். நான் உன்னை அறிந்த நாள் முதல் இதுவரையும் நீ திடநம்பிக்கையுள்ளவனாய் இருந்தாய் என்பான். நீரும் என்னைப்போலவே இருந்தீர் என்று திடநம்பிக்கை அவனைத் தேற்றுவான். அப்போது கிறிஸ்தியான் சொல்லுவான்: ஆ சகோதரனே, நான் உத்தமனாய் இருந்தால் அவர் என்னைக் கைத் தூக்கும்படி இப்பொழுது எழுந்தருளி வருவார். ஆனால் என் பாவங் களின் நிமித்தம் அவர் என்னைக் கண்ணிகளுக்கு உட்படுத்தி இப்படிக் கைவிட்டுவிட்டார் என்றான். அதற்கு திடநம்பிக்கை என் பிரியமுள்ள சகோதரனே! துன்மார்க்கரைக்குறித்து “மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண் இல்லை, அவர்களுடைய பெலன் உறுதியாய் இருக்கிறது, நரர்படும் வருத்தத்தில் அகப்படார்கள், மனுஷர் அடையும் உபாதிகளை அடையார்கள்” (சங்கீதம் 73 : 4 – 5) என்று சொல்லப்பட்டிருக்கிற தேவ வசனத்தை மறந்து போனீரோ, இந்த ஆற்றில் நீர் படும் அவஸ்தை களும், சங்கடங்களும் தேவன் உம்மைக் கைவிட்டார் என்பதற்கு அடையாளமாய் இராமல், நீர் முன் காலங்களில் அவருடைய தயையினாலே அனுபவித்த சிலாக்கியங்களை நினைவுகூருகிறீரோ அல்லவோ என்று உம்மைச் சோதிக்கவும், உம்முடைய ஆபத்துக் காலத்தில் அவர் மேலே நம்பிக்கை வைக்கிறீரோ அல்லவோ என்று அறியவும் இதை உமக்கு வரப்பண்ணியிருக்கிறார் என்று சொன்னான்.
அப்புறம் நான் என் சொப்பனத்தில் கிறிஸ்தியான் சில நேரம் தியான சிந்தையாய் இருக்கிறதைக் கண்டேன். அதைக்கண்ட திட நம்பிக்கை பின்னும் சொல்லுகிறான், திடமனதாயிரும். இயேசு கிறிஸ்து உம்மைக் குணமாக்குகிறார் 3 என்றான். இதைக் கேட்ட வுடனே கிறிஸ்தியான் உரத்த சத்தத்தோடு ஆ! நான் அவரை மறுபடியும் காண்கிறேன், அவர் என்னை நோக்கி “நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடிருப்பேன், நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை” (ஏசாயா 43 : 2) என்று திருவாய் மலர்ந் தருளுகிறார் என்றான். அப்பால் அவர்கள் இருவரும் திடமனதாய் இருந்தார்கள். அதுமுதல் முன்னே அவர்களைக் கலங்கப்பண்ணின சத்துருக்கள் எல்லாம் அவர்கள் ஆற்றைக் கடக்குமட்டும் கல்லைப் போல் அசையாதிருந்து விட்டார்கள். உடனே கிறிஸ்தியானுடைய காலுக்குத் தரை தட்டுப்பட்டது. அதுமுதல் ஆறு மேடாய் இருந்தது. அவர்கள் ஆற்றைக் கடந்து கரை சேர்ந்தார்கள்.
ஆற்றுக்கு அக்கரையில் முன் தங்களுக்கு காணப்பட்ட ஒளி மயரூபிகள் 4 இருவரும் அவர்களுக்காக காத்திருக்கிறதைக் கண்டார்கள். பிரயாணிகள் ஆற்றைக்கடந்தவுடனே அந்த இருவரும் இவர்களுக்கு வந்தனம் செய்து நாங்கள் இரட்சிப்பை சுதந்தரிக்கப் போகிறவர்களின் நிமித்தமாக ஊழியஞ்செய்யும்படி அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாய் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு மோட்ச வாசலுக்கு நேராக அவர்களோடு கூடிப் போனார்கள்.
1. ஆறு என்பது இஸ்ரவேலர் கானானில் சேருமுன் யோர்தானைக் கடக்க வேண்டியதிருந்தது போல நாமும் மோட்சம் சேருமுன் கடந்து போகவேண்டிய நமது மரணத்தைக் குறிக்கிறது.
2. மெய் விசுவாசிகள் முதலாய் சிலதரம் மரணப்படுக்கையில் கலக்கமும், பயமும் உடையவர்களாய் இருக்கிறார்கள். சரீரமோ பெலவீனமுள்ளதாகையால் சாத்தான் இந்தச் சமயத்தில் அவர்களை சோதிக்கும்படி பிரயாசப்படுகிறான்.
3. மரணத்தருவாயில் இருக்கிறவர்கள் தங்கள் சிநேகிதரும் போதகரும் நினைப்பூட்டும் விலையேறப்பெற்ற வேதாகம வாக்குத்தத்தங்களினால் அடிக்கடி ஆறுதலடைகிறார்கள்.
4. இரு ஒளிமயரூபிகள் என்பது தேவதூதரைக் குறிக்கிறது. லாசரு மரித்தபோது தேவதூதர்களால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான். எல்லா விசுவாசிகளுக்கும் அவர்கள் இப்படியே ஊழியம் செய்கிறார்கள் என்று நாம் நம்ப ஏதுவிருக்கிறது.