அறிவீனனை மறுபடியும் சந்தித்தல்
அப்புறம் நான் என் சொப்பனத்திலே கண்டதாவது: திட நம்பிக்கை தன் பேச்சோடு பேச்சாய் பின்னாலே திரும்பிப் பார்த்து தாங்கள் முன்னே விட்டுப்பிரிந்த அறிவீனன் தூரத்தில் வருகிறதைக் கண்டு: அதோ வருகிறவனைப்பாரும், அவன் எவ்வளவு தூரத்தில் ஆடி ஆடி வருகிறான்? என்று கிறிஸ்தியானைக் கூப்பிட்டுச் சொன்னான்?
கிறி: ஆம், ஆம், நானும் பார்க்கிறேன்: நம்மோடு கூடிவருகிறதற்கு அவனுக்குப் பிரியம் இல்லைபோல் இருக்கிறது.
திடநம்: அவன் நம்மைக் கண்டதுமுதல் இதுவரையும் கூடி வந்திருந்தால் அவனுக்கு அதினாலே ஒரு நஷ்டமும் உண்டாகி இருக்கமாட்டாது என்று நினைக்கிறேன்.
கிறி: அது மெய். அவன் போங்கு வேறே, நம்முடைய போங்கு வேறே.
திடநம்: அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. என்றாலும் அவன் கிட்ட வரட்டும், நாம் சற்று நிற்போம் என்று சொல்லி நின்றார்கள்.
அவன் கிட்ட வருமுன்னே கிறிஸ்தியான் அவனைப் பார்த்து ஏன் இப்படி பிந்தி வருகிறாய், எட்டி நடந்துவா என்று சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
அறிவீனன்: கூட்டமாய் போகிறதைவிட ஒண்டியாய் நடந்து போவது என் மனதுக்குப் பிரியமாய் இருக்கிறது என்று அறிவீனன் சொன்னான்.
அப்போது கிறிஸ்தியான், தன் தோழனாகிய திடநம்பிக்கையை நோக்கி: நம்மோடு கூட வர அவனுக்குப் பிரியம் இல்லை என்று நான் உனக்கு சொல்லவில்லையா? எப்படியும் அவன் வந்து சேரட்டும், இந்த ஏகாந்த வெளியில் பேசிப் பேசிப் போகலாம் என்று மெதுவாய்ச் சொல்லிவிட்டு, அறிவீனன் இதற்குள் கிட்ட வந்துவிட்டதால் அவனைப்பார்த்து: வா அப்பா! சுகமா? உன் ஆத்துமாவுக்கும், தேவனுக்கும் உள்ள ஐக்கியம் இப்பொழுது எப்படி இருக்கிறது?
அறி: எல்லாம் நன்றாய் இருக்கிறது என்று நம்புகிறேன். ஏனெனில், என் பிரயாணத்தில் எனக்கு ஆறுதலை அளிக்கும்படியாக என்னுடைய மனதில் எப்போதும் கடந்துபோகிற நல்லசைவுகளுக்கு ஒரு கணக்கில்லை.
கிறி: அந்த நல்லசைவுகளைப்பற்றி தயவுசெய்து கொஞ்சம் சொல்லுமேன்?
அறி: தேவனைக் குறித்தும் மோட்சத்தைக் குறித்தும் நான் அடிக்கடி நினைக்கிறேன்.
கிறி: பிசாசுகளும் சபிக்கப்பட்ட ஆத்துமாக்களும் உன்னைப் போலவே நினைக்கிறதுண்டு.
அறி: நான் அவைகளைக் குறித்து நினைக்கிறது மாத்திரமல்ல, அவைகளின் பேரில் ஆசைகொண்டும் இருக்கிறேன்.
கிறி: அங்கே சேர அபாத்திரராய் இருக்கிற அநேகரும் உன்னைப் போலவே ஆசைகொள்ளுகிறதும் உண்டு. “சோம்பேறியின் ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது” (நீதிமொழிகள் 13 : 4)
அறி: ஆனால், நான் அவைகளை நினைத்து, அவைகளின் நிமித்தம் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறேனே.
கிறி: அதெப்படியோ அதைப்பற்றி எனக்குச் சந்தேகம்தான். எல்லாவற்றையும் விட்டுவிடுவது லேசான காரியம் அல்ல. மெய்யாகவே அது அநேகர் நினைக்கிறதைப் பார்க்கிலும் மிகவும் வருத்தமான வேலை. ஆனால் நீ தேவனுக்காகவும், மோட்சத்துக்காகவும் எல்லா வற்றையும் வெறுத்துவிட்டேன் என்கிறாயே அப்படிச் சொல்லு கிறதற்கு முகாந்தரம் என்ன? அப்படிச் சொல்லும்படி உன்னை ஏவுகிறது என்ன?
அறி: என் இருதயம் அப்படி எனக்குச் சொல்லுகிறது.
கிறி: அப்படியா செய்தி? “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்” (நீதிமொழிகள் 28 : 26) என்று ஞானி சொல்லியிருக்கிறாரே.
அறி: ஒரு கெட்ட இருதயத்தைக் குறித்து அப்படிச் சொல்லி யிருக்கிறது. என் இருதயம் நல்லதாய் இருக்கிறதே.
கிறி: அதை எப்படி ரூபிப்பாய்?
அறி: மோட்ச நம்பிக்கையால், அது என் இருதயத்தை ஆறுதல் அடையச் செய்கிறது.
கிறி: அது வஞ்சகத்தினாலே அப்படிச் செய்தாலும் செய்யும். ஏனெனில் ஒருவன் தன் ஆத்துமாவுக்கு கிடைக்கமாட்டாத பாக்கியம் கிடைக்கும் என்பதாக மனதில் ஆறுதலை அருளினாலும் அருளும்.
அறி: ஆனால் என்இருதயமும் நடக்கையும் ஒத்திருக்கிறது. ஆதலால் என் நம்பிக்கைக்குத் தகுந்த ஆதாரம் உண்டு என்று உறுதியாகிறது.
கிறி: உன் இருதயமும் நடக்கையும் ஒத்திருக்கிறது என்று உனக்குச் சொன்னது யார்?
அறி: என்இருதயம் அப்படி எனக்குச் சொல்லுகிறது.
கிறி: உன் இருதயமா அப்படி உனக்குச்சொல்லுகிறது? நீ சொல்லுகிறதைப் பார்த்தால் “நான் கள்ளனானால் என் தோழனைக் கேள்” என்கிறாற்போல் இருக்கிறதே. இந்த விஷயத்தில் தேவனுடைய வசனம் சாட்சி சொல்லாதபட்சத்தில், வேறு சாட்சிகளால் பிரயோஜனம் இல்லை.
அறி: ஆனால் நல்ல நினைவுகளுள்ள இருதயம் நல்ல இருதயம் அல்லவா? தேவனுடைய பிரமாணங்களுக்கு ஒத்த நடக்கை நல் நடக்கை அல்லவா?
கிறி: நல்ல நினைவுகளுள்ள இருதயம் நல்ல இருதயம்தான். தேவனுடைய பிரமாணங்களுக்கு ஒத்த நடக்கை நல் நடக்கைதான், ஆனால் இவைகளை மெய்யாகவே உடையவனாய் இருக்கிறது வேறு, இவைகள் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுகிறது வேறே.
அறி: உம்முடைய கருத்தின்படி நல்ல இருதயம் எது? தேவனுடைய பிரமாணத்துக்கு ஏற்ற நல் நடக்கை எது? தயவுசெய்து சொல்லும் பார்ப்போம்.
கிறி: வெவ்வேறுவிதமான நல்நடக்கைகள் உண்டு. அவைகளில் சில நம்மைப்பற்றினதாய் இருக்கும். வேறு சில தேவனைப்பற்றினதாய் இருக்கும். பின்னும் சில கிறிஸ்துவைப் பற்றினதாய் இருக்கும். மற்றும் சில வேறு விஷயங்களைக் குறித்தாக இருக்கும்.
அறி: எப்படிப்பட்டவைகளை நம்மைப் பற்றிய நல் நினைவுகள் என்று சொல்லலாம்?
கிறி: தேவனுடைய வசனத்துக்கு ஒத்தபடியுள்ள நினைவுகள்தான்.
அறி: நம்மைப்பற்றிய நம்முடைய நினைவுகள் தேவ வசனத்துக்கு இசைவாக இருக்கிறபொழுதுதானே?
கிறி: தேவ வசனம் நம்மைப்பற்றி எப்படித் தீர்ப்பு சொல்லுகிறதோ அந்த தீர்ப்பை நாம் நமது மேலுள்ள தீர்ப்பாகச் சொல்லும் போதுதான். இதைச் சற்று விஸ்தரிக்கிறேன் கேள். மனுஷருடைய சுபாவ நிலைமையைக் குறித்து வேத வசனமானது “நீதிமான் ஒருவனும் இல்லை, நன்மை செய்கிறவனும் இல்லை” என்றும் “மனுஷனுடைய இருதயத்தின் தோற்றம் எல்லாம் நித்தம் பொல்லாதது” என்றும் “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறு வயது தொடங்கி பொல்லாததாய் இருக்கிறது” (ரோமர் 3 : 10, 12 ஆதியாகமம் 6 : 5, 8, 21) என்றும் அறிவிக்கிறது. நாமும் நம்மைக் குறித்து இப்படியே நினைத்து அதின் கருத்தை உணர்ந்து கொள்ளும்போதுதான் நமது நினைவுகள் தேவனுடைய வசனத்துக்கு இசைவாகஇருப்பதால் நல்ல நினைவுகளாய் இருக்கிறது.
அறி: என் இருதயம் அவ்வளவு கெட்டதாய் இருக்கிறது என்று நான் ஒருக்காலும் நம்பமாட்டேன்.
கிறி: அப்படியானால் உன் ஜீவ காலத்தில் ஒருக்காலும் நீ உன்னைக் குறித்து நல்ல நினைவுடையவனாய் இருக்கவில்லை என்பது மெய். அது அப்படி இருக்கட்டும். இன்னும் கேள், தேவ வசனம் நமது நினைவுகளைக் குறித்து தீர்ப்புச் சொல்லுகிறது. நம்முடைய இருதயத்தின் நினைவு, ஜீவியத்தின் நடபடிகள் ஆகிய இரண்டும் அதற்கு ஒத்திருக்கிறபோது அவை இரண்டும் நல்லதாய் இருக்கிறது.
அறி: உம்முடைய கருத்தை விளக்கிக்காட்டும்?
கிறி: இன்னும் விளக்க வேண்டுமா? மனுஷனுடைய வழிகள் கோணலான வழிகள் என்றும் நேரானதாய் இராமல் மாறுபாடா னதாய் இருக்கிறது என்றும், அவர்கள் நல் வழியை அறியாமல் இருக்கிறதினாலே சுபாவத்தின்படி நல் வழியில் இருந்து வெகு தூரம் விலகி இருக்கிறார்கள் என்றும் தேவனுடைய வசனம் அறிவிக்கிறது. (சங்கீதம் 125 : 5 நீதிமொழிகள் 2 : 15 ரோமர் 3 : 12) ஒரு மனுஷன் தன் வழிகளைக் குறித்து இவ்விதமாய் நினைவு கூருவானானால் அதாவது இந்த வேத வசனங்களுக்கு ஏற்றபடி உணர்ந்த சிந்தையோடும், தாழ்ந்த மனதோடும் இவ்வண்ணம் நினைப்பானானால் அப்பொழுது அவன் தன் சொந்த வழிகளைப்பற்றி நல் நினைவுள்ளவனாய் இருக்கிறான் என்று சொல்ல வேண்டியது. ஏனெனில் அப்போதுதான் வேதவசனத்தில் சொல்லப்படுகிற தேவ தீர்ப்புகளுக்கு அவன் நினைவு இசைவாக இருக்கிறது.
அறி: தேவனைப்பற்றிய நல்ல எண்ணங்கள் எவை?
கிறி: நம்மைப்பற்றிய எண்ணங்களைக்குறித்து நான் சொன்னது எப்படியோ, அப்படியேதான் இதுவும் இருக்கிறது. தேவனைக் குறித்து அவருடைய வசனம் அறிவிக்கிற பிரகாரம் நாமும் எண்ணினால் அதுதான் தேவனைக் குறித்த நல்ல எண்ணம் என்று சொல்ல வேண்டியது. அதாவது: தேவன் உண்டு என்பதைப்பற்றியும், அவருடைய இலட்சணங்கள் இவை என்பதைக் குறித்தும் தேவ வசனம் எப்படிச்சொல்லுகிறதோ அப்படியே நாமும் அவரைக் குறித்து நினைப்போமானால் அதுதான் தேவனைப்பற்றிய நல்லெண்ணம். அதை விபரமாய்ச் சொல்ல இப்பொழுது சமயம் இல்லை. ஆனால் நம்முடைய விஷயத்தில் அவரைக்குறித்து நாம் எண்ண வேண்டியதைப் பற்றி சொல்ல வேண்டுமானால் நாம் நம்மை அறிந்திருக்கிறதைப் பார்க்கிலும் அவர் நம்மை அறிந்திருக்கிறார் என்று எப்போது எண்ணு வோமோ, நமக்குள் இருக்கிற பாவங்களை நாம் காணக்கூடா திருக்கையிலும் அவைகள் தேவனுக்கு நம்மைவிட நன்றாகத்தெரியும் என்றும், நமது மனதின் நினைவுகளும், இருதயத்தின் இரகசியங்களும், உள்ளந்திரியங்களின் ஆழங்களும் எல்லாம் அவருடைய கண்களுக்கு முன்பாக வெளியரங்கமாய் இருக்கிறது என்றும், நம்முடைய நீதிகள் எல்லாம் அவர் நாசியில் துர்க்கந்தமாய் வீசுகிறது என்றும், ஆதலால் நமது கிரியைகளின் தன்மை முதல்தரமாய் இருந்தபோதிலும், அந்த நம்பிக்கையால் நாம் அவருடைய சமூகத்தில் நிற்கும்படி துணிகிறதை அவர் சகிக்கமாட்டார் என்றும் எப்போது எண்ணுவோமோ அப்போது தேவனைக்குறித்த விஷயங்களில் நம்முடைய எண்ணங்கள் நல்லெண்ணங்களாய் இருக்கின்றன என்று சொல்ல வேண்டியது.
அறி: நான் பார்க்கிறதற்கு மிஞ்சி தேவன் பார்க்கிறதில்லை என்று சொல்ல அல்லது நற்கிரியைகளைக் கொண்டு தேவனுடைய சமூகத்தை தரிசிக்கலாம் என்று எண்ண நான் அவ்வளவு மூடனென்றா நினைத்துக் கொள்ளுகிறீர்?
கிறி: இந்தக் காரியங்களைக் குறித்து நீதான் எப்படி நினைக்கிறாய்?
அறி: சுருக்கிச் சொன்னால், நான் நீதிமானாக்கப்படும்படியாக இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
கிறி: அது எப்படி என்றுதானே நானும் கேட்கிறேன்? அவரைப்பற்றிய தாபந்தத்தை நீஅறியாமல் இருக்கிறபொழுது அவரை விசுவாசிக்கவேண்டும் என்று நீ எப்படி நினைப்பாய்? உன் ஜென்ம சுபாவத்தையாவது நீ செய்யும் பாவங்களையாவது அறியா திருக்கிறாயே! உன்னைப்பற்றி நீ நினைக்கிற நினைவுகளையும், உன் கிரியைகளைப் பற்றி நீ எண்ணுகிற எண்ணத்தையும் பார்த்தால் நீ தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படும்படி கிறிஸ்து அவசியம் என்பதை முற்றிலும் அறியாதவன்போல் இருக்கிறதே, அப்படியிருக்க கிறிஸ்துநாதர்பேரில் விசுவாசமாய் இருக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுவாய்?
அறி: அதைப்பற்றி எல்லாம் வெகு பூரணமான விசுவாசம் எனக்கு உண்டு.
கிறி: நீ எப்படி விசுவாசிக்கிறாய்?
அறி: கிறிஸ்து பாவிகளுக்காக மரணமடைந்தார் என்றும், நான் அவருடைய கட்டளைகளுக்கு அடங்கி நடப்பதை அவர் கிருபையாய் அங்கீகரித்துக்கொள்ளுகிறதின் மூலமாய், தேவனுக்கு முன்பாக சாபத்துக்கு நீங்கலாகி நீதிமானாக்கப்படுவேன் என்றும் நான் விசுவாசிக்கிறேன். அல்லது வேறுவிதமாய்ச் சொல்லுகிறேன்: பிதா வாகிய தேவன் என் பக்திவிநயமான ஊழியங்களை அங்கீகரிக்கும் படியாக கிறிஸ்துவானவர் தமது புண்ணியங்களினாலே அவைகளை அங்கீகாரமாக்குகிறார் என்று விசுவாசிக்கிறேன்.
கிறி: இந்த விசுவாச அறிக்கையைப்பற்றி நான் மறுமொழியாகச் சொல்லுகிறதைக் கேள்.
1. இது உன் சுயதோற்றமான விசுவாசமே அல்லாமல் வேறல்ல, ஏனெனில் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் குறித்து வேதத்தில் எங்கும் எழுதப்பட்டிருக்கக் காணோம்.
2. இது கள்ள விசுவாசமே அல்லாமல் வேறல்ல. ஏனெனில் இது கிறிஸ்துநாதர் சம்பாதித்த புண்ணியங்களில் இருந்து நீதிமானாக்கப் படுதலை அறுத்துவிட்டு உன் சுய கிரியையில் நிலைநிறுத்துகிறதாய் இருக்கிறது.
3. இந்த விசுவாசம் கிறிஸ்து உன்னையல்ல உன் கிரியைகளை நீதியுள்ளதாக்குகிறார் என்றும் உன் கிரியைகளின் நிமித்தமே நீ நீதிமானாக எண்ணப்படுகிறாய் என்றும் காட்டுகிறது. இது சுத்த அபத்தம்.
4. இது சர்வவல்லவருடைய கோபாக்கினைக்கு உன்னை உட்படுத்திவிடுகிறதற்கு ஏதுவான அவ்வளவு மோசமுள்ள விசுவாசமாய் இருக்கிறது. ஏனெனில், மெய்யாகவே நீதியை உண்டாக்குகிற விசுவாசமானது நாம் இழந்துபோன நிலைமையை நியாயப் பிரமாணத்தைக் கொண்டு நமது ஆத்துமாவில் உணர்த்துவித்து ஆத்துமாவானது கிறிஸ்துவின் நீதிக்குள் அடைக்கலம் புகுந்து கொள்ளும்படியாக அதை ஏவிவிடுகிறது. இந்த அவருடைய நீதியானது உன் கீழ்படிதலுள்ள கிரியைகளை தேவனுக்கு அங்கீகார மாக்கும் கிருபையின் கிரியையாய் இராமல் நாம் நமது சரீரத்தில் நிறைவேற்றவேண்டியவைகளை அவர்தாமே தமது சரீரத்தில் நமக்காக நிறைவேற்றும்படி நியாயப்பிரமாணத்துக்கு கீழடங்கி உத்தரித்து சம்பாதித்த நீதியாக இருக்கிறது. இந்த நீதியைத்தான் மெய் விசுவாசமுள்ள இருதயம் ஏற்றுக்கொள்ளுகிறது என்று நான் சொல்லுகிறேன். இந்த நீதியின் அங்கியால் ஆத்துமா மூடப்பட்டு பிதாவாகிய தேவனுக்கு முன்பாக குற்றமற்றதாய் ஒப்புவிக்கப் படுகிறதனாலேதான் அது அங்கீகரிக்கப்பட்டு ஆக்கினைத் தீர்ப்பில் இருந்து விடுதலையாகிறது.
அறி: என்ன? நம்மை அல்லாதபடி கிறிஸ்து தமது சரீரத்தில் உத்தரித்து சம்பாதித்த புண்ணியத்தில் நம்பிக்கை வைக்கவா சொல்லுகிறீர்? இந்த கள்ள நினைவு நமது இச்சையின் கடிவாளத்தை தளர்த்தி நமது மனங்கொண்டபடி எல்லாம் செய்யும்படி இடங்கொடுக்கப்பண்ணுகிறதாய் இருக்கிறதே. இயேசு கிறிஸ்து தமது சரீரத்திலே சம்பாதித்த நீதியினாலேதான் நீதிமான்களாக்கப்படுகிறோம் என்று விசுவாசித்தால் நாம் எப்படி நடந்தாலும் என்ன?
கிறி: உனக்கு அறிவீனன் என்று பேர் இருக்கிறதே, உன் பேர் எப்படியோ அப்படியே நீயும் இருக்கிறாய். நான் உன்னைப் பற்றி முன் சொன்னது சரி என்று நீ இப்போது சொல்லிய வார்த்தைகளும் உறுதிப்படுத்துகின்றன. நீதிமானாக்கும் நீதி இன்னது என்ற அறிவும் உனக்கு இல்லை. அதை விசுவாசிப்பதினால் தேவனுடைய உக்கிர கோபத்தினின்று உன் ஆத்துமாவைத் தப்புவித்துக் கொள்ளுகிறவகை இன்னது என்ற அறிவும் உனக்கு இல்லை. அது மாத்திரமோ, கிறிஸ்துவின் நீதியின்மேல் வைக்கும் இரட்சண்ய விசுவாசத்தின் பலன்களாகிய இருதயத்தைக் கீழ்ப்படுத்தல், அதை கிறிஸ்துவின் மூலமாய் தேவனிடத்தில் திருப்புதல், அவருடைய நாமத்தையும் வசனத்தையும் அவருடைய மார்க்கத்தையும் பக்தரையும் நேசித்தல் ஆகிய இவைகளைப் பற்றியும் உனக்கு அறிவில்லை. இவை எல்லாம் உன் எண்ணத்தின்படி இருக்கிறது என்று கனவிலும் நினைக்க வேண்டாம்.
திடநம்: எப்போதாவது கிறிஸ்து வானத்தில் இருந்து அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டாரா? என்று கேளும் என்று திடநம்பிக்கை கிறிஸ்தியானிடத்தில் சொன்னான்.
அறி: ஓகோ! நீர் வெளிப்படுத்தலை நாடுகிறவர்களில் ஒருவரோ? நீங்கள் இருவரும் உங்களைப்போலொத்த இன்னும் அநேகரும் அந்தக் காரியத்தை விசேஷித்துப் பேசுவதெல்லாம் புத்திமயக்கத்தினாலே அல்லாமல் வேறு ஒன்றாலும் இல்லை என்று நான் நம்புகின்றேன்.
திடநம்: என்ன மனுஷனே அப்படிப் பேசுகிறாய்? பிதாவாகிய தேவன் கிறிஸ்துவை ஒருவனுக்கு வெளிப்படுத்தினாலன்றி மற்றபடி அவன் அவரை இலேசாய்க் கண்டுகொள்ள ஏதுவில்லாதபடிக்கு அவர் மனுஷருடைய மாம்ச தன்மைக்குரிய சுபாவ எண்ணங்களின் பிடிக்கு எட்டாமல் தேவனுக்குள் அப்படி மறைக்கப்பட்டிருக்கிறார் அல்லவா?
அறி: உம்முடைய விசுவாசம் அதுதான், என்னுடைய விசுவாசம் அப்படி அல்ல. நான் உங்களைப்போல என் மண்டையில் பல விபரீதமான கோரணிகளை உடையவனாய் இராவிட்டாலும் என் விசுவாசம் உங்கள் விசுவாசத்துக்கு தாழ்ந்தது அல்ல என்பது நிஜம்.
கிறி: நான் ஒரு பேச்சுப் பேச இடங்கொடு. இந்தக் காரியத்தைக் குறித்து நீ அவ்வளவு அற்பமாகப் பேசலாகாது. இது விஷயங்களைக் குறித்து நான் என் தோழனைப்போல் தைரியமாய்ச் சொல்லுகிறது என்னவென்றால்: பிதாவானவர் வெளிப்படுத்தினாலன்றி ஒருவனும் இயேசு கிறிஸ்துவைக் காணக்கூடாது. கிறிஸ்துவைப் பற்றிப் பிடிக்கும் மெய் விசுவாசம்கூட அவருடைய மட்டற்ற வல்லமையினாலே உண்டானதாகவே இருக்கும். (மத்தேயு 11 : 27, 1 கொரிந்தியர் 12 : 3 எபேசியர் 1 : 17-19) அந்த விசுவாசத்தின் கிரியை, ஐயோ அறிவீனனே! நீ அறியாதிருக்கிறாய் என்று எனக்கு தோன்றுகிறது. ஆகையால் விழித்துக்கொண்டு உன் நிர்ப்பாக்கியத்தை கண்டறிந்து கர்த்தராகிய இயேசுவண்டை ஓடு. அவரே தேவனாய் இருக்கிற படியால் தேவ நீதியாய் இருக்கிற அவருடைய நீதியினால் நீ ஆக்கினைத் தீர்ப்பில் இருந்து விடுதலையாவாய் என்றான்.
அறி: அப்போது அறிவீனன்: ஐயாமாரே, நீங்கள் துரிதமாய் நடந்து போகிறீர்கள். உங்களோடு எட்டி நடந்துவர என்னால்கூடாது. நீங்கள் முந்திப்போங்கள், நான் பிந்தி வருகிறேன் என்று சொன்னான்.
அப்போது அவர்கள்:
(அம்மானை)
அறிவீனனே உனக்கு அறிவீனமோ இன்னும்?
அறிவுள்ளோர் புத்திமதி பத்துவிசை சொன்னபின்பும்
இன்னும் அதை தள்ளிவிட்டுன் இஷ்டப்படியே நடந்தால்
உன்னுடைய நஷ்டம் எல்லாம் உள்ளபடி நீ காண்பாய்.
சொன்ன புத்தியை நினைத்து அஞ்சாதடங்கி நட
என்ன புத்தி நீ படித்தாய் எல்லாம் அசட்டை செய்ய
இன்னும் அதை முன்போல தள்ளுவது மெய்யானால்
விண்ணிழந்தாய் சொன்னேன், கேள், கேள் அறிவீனா!
என்று சொல்லிப்போட்டு அவனை விட்டுப் பிரிந்தார்கள்.
அப்புறம் கிறிஸ்தியான் தன் தோழனைப் பார்த்து: என் தோழனாகிய திடநம்பிக்கையே, இனி நீயும் நானுந்தான் போக வேண்டியதிருக்கிறது. வா, வா, எட்டி நட என்றான்.
அப்படியே அவர்கள் இருவரும் கூடி விரைவாய் நடந்து போகிறதையும், அறிவீனன் மெதுவாய் பிந்தி நடந்து போகிறதையும் நான் என் சொப்பனத்தில் கண்டேன். அப்போது கிறிஸ்தியான் தன் தோழனைப் பார்த்துச் சொல்லுகிறான்: நான் அந்த ஏழை மனுஷனைப் பற்றி மெத்தவும் பரிதாபப்படுகிறேன். இவன் முடிவு க்ஷேமமாய் இராது என்பதற்குச் சந்தேகம் இல்லை.
திடநம்: ஐயோ! இவனுடைய நிலைமைக்கொத்த அனந்தம் பேர் என் பட்டணத்தில் இருக்கிறார்கள். மோட்ச பிரயாணிகள் கூட அநேகர் குடும்பம் குடும்பமாகவும், தெரு முழுமையாகவும் இவனைப் போலொத்த நிலைமையில் தான் இருக்கிறார்கள்.
எங்கள் நாட்டிலேயே இப்படியானால், அவன் பிறந்து வளர்ந்த நாட்டில் எத்தனையோ பேர் இருக்கமாட்டார்களோ என்று நீரே ஆலோசித்துக் கொள்ளும்.
கிறி: “அவர்கள் பார்க்கக்கூடாதபடிக்கு அவன் அவர்கள் கண்களைக் குருடாக்கினான்” என்று சத்திய வசனம் சொல்லுகிறது மெய்தான். அது நிற்க இப்போது நாம் இருவருந்தானே இருக்கிறோம். இப்படிப்பட்ட மனுஷரைக்குறித்து நீ என்ன நினைக்கிறாய்? ஒரு காலத்திலாவது அவர்களுக்கு பாவ உணர்வு உண்டாகி அதினால் தங்கள் நிலைமை அபாயத்தில் இருக்கிறது என்று பயந்திருக்க மாட்டார்களா?
திடநம்: நீர் என்னைவிட வயதுக்கு மூத்தவர், ஆனதால் அதற்கு நீர்தானே உத்தரவு சொல்லும்.
கிறி: அப்படியானால் நானே உத்தரவு சொல்லுகிறேன். சில வேளைகளில் அவர்களுக்கு பாவம் உண்டு என்கிற உணர்வும் அதற்காகத் தண்டனை வரும் என்ற பயமும் வருமென்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் சுபாவத்தின்படி அறிவீனராய் இருக்கிறதால் இப்படிப்பட்ட உணர்வுகளும், பயங்கரங்களும் தங்களுடைய நன்மைக்கென்றே உண்டாகிறது என்று அறியா திருக்கலாம். அதினாலேதான் அவர்கள் தங்களுக்குள் எழும்பும் அனலை அடக்கிப்போட்டு தங்கள் சுய இச்சையின்படியான எண்ணங்களை புகழ்ந்துகொண்டு துணிகரத்தில் நிலைத்திருக்கிறார்கள்.
திடநம்: பயமானது மனுஷருக்கு அதிக நன்மையை உண்டாக்கு கிறது என்றும், அவர்கள் மோட்ச பிரயாணம் செய்யத் துவக்குகையில் அவர்களை நேரே நடத்துகிறது என்றும் நீர் சொல்லுகிறதை நான் நம்புகிறேன்.
கிறி: அது மெய். அந்த பயம் உத்தம பயமாய் மாத்திரம் இருந்தால் மிகுந்த நன்மை செய்யும் என்பதற்கு சந்தேகம் இல்லை. “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (யோபு 28 : 28 சங்கீதம் 111 : 10 நீதிமொழிகள் 1 : 7, 9 : 10) என்று சத்திய வசனமும் அறிவிக்கிறது.
திடநம்: உத்தம பயத்தின் லட்சணம் இன்னது என்று சொல்லும் பார்ப்போம்.
கிறி: உத்தம பயம் அல்லது மெய்யான பயம் இன்னதென்று அறிய மூன்று அடையாளங்கள் உண்டு.
1. அதின் ஆரம்பத்தால் விளங்கும், ஏனெனில் அது இரட்சிப்புக் கேற்ற பாவ உணர்ச்சியில் ஆரம்பிக்கும்.
2. அதின் ஏவுதலால் விளங்கும், அது இரட்சிப்பைப் பெறும் படியாக கிறிஸ்துவை உறுதியாய் பிடிக்கும்படி ஆத்துமாவை ஏவி விடும்.
3. அதின் கனபக்தியால் விளங்கும். அது தேவனையும் அவருடைய வசனத்தையும், அவருடைய வழிகளையும் குறித்து ஆழமான எண்ணத்தை ஆத்துமாவில் உண்டாக்கி, அதை மெதுவாக்கி தேவனைக் கனவீனப்படுத்துகிறதற்காகிலும், அவரோடிருக்கும் சமாதானத்தை சீர் குலைக்கிறதற்காகிலும், தேவாவியானவரை துக்கப்படுத்துகிறதற்காகிலும், சத்துருக்கள் தூஷிக்கிறதற்காகிலும் ஆத்துமாவானது வலது இடது புறம் விலாகாதபடிக்கு அதை நடத்திக் காத்துக் கொள்ளும்.
திடநம்: நீர் நன்றாகச் சொன்னீர். நீர் சொன்னதை எல்லாம் சத்தியம் என்று நான் நம்புகிறேன். நாம் மயக்க பூமியை கொஞ்சம் குறைய கடந்திருப்போமா?
கிறி: ஏது, இந்த சம்பாஷணை இளைப்பாய் இருக்கிறதோ?
திடநம்: இல்லை, இல்லை. மயக்க பூமியில் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று அறியும்படியாகத்தான் அப்படிக் கேட்டேன்.
கிறி: மயக்க பூமியை கடக்க இன்னும் இரண்டு நாழிகை வழி கூட இல்லை. ஆனால் நாம் நமது சம்பாஷணைகளைத் துவக்குவோமாக.
அறிவீனர், பாவ உணர்வால் உண்டாகிற இப்படிப்பட்ட பயங்கரங்களை தங்களுடைய நன்மைக்காக உண்டாகிறது என்று அறியாததினாலே அவைகளை அடக்கிவிடப் பார்க்கிறார்கள்.
திடநம்: எப்படி அவர்கள் அதை அடக்கப் பார்க்கிறார்கள்?
கிறி: 1. அவைகள் தேவனாலே உண்டாகிறதாய் இருந்தாலும், அவர்கள் பிசாசினால் உண்டாகிறவைகள் என்று எண்ணுகிறார்கள். அப்படி எண்ணிக்கொண்டு அந்த பயங்கரங்கள் தங்களைக் கீழது மேலதாகப் புரட்டுவிடுகிறவைகளைப்போல உத்தேசித்து அதற்கு எதிர்த்து நிற்கிறார்கள்.
2. அவர்களுக்குள் விசுவாசம் இல்லாதிருந்தாலும் இந்தப் பயங் கரங்கள் அவர்கள் விசுவாசத்தைக் கெடுத்துப் போடுகிறது என்று அவர்கள் எண்ணிக் கொண்டு தங்கள் இருதயத்தை அதற்கு விரோத மாய் கடினப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.
3. தாங்கள் பயப்படக்கூடாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டு உத்தம பயத்தை அசட்டை செய்து கவலையற்றவிதமாய் துணிந்து நடக்கிறார்கள்.
4. அந்த பயங்கரங்கள் தங்களுடைய பழைய சுயசுத்தாங்க நிலைமையை எடுத்துப் போடுகிறது என்று எண்ணுகிறதனால் அதை தங்களால் ஆனமட்டும் தடுக்கப் பார்க்கிறார்கள்.
திடநம்: இதைக் குறித்து நானும் கொஞ்சம் அறிந்திருக்கிறேன். நான் என்னை அறிந்து கொள்ளுமுன் எனக்கும் இப்படியே இருந்தது.
கிறி: நல்லது, அறிவீனன் சங்கதியை இம்மட்டில் நிறுத்திவிட்டு வேறொரு பிரயோஜனமான விஷயத்தைப் பற்றி சம்பாஷிப்போமாக.
திடநம்: மெத்த சந்தோசம், ஆனால் நீர்தான் அதை துவக்க வேண்டும்.