மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்
அப்பொழுது நான் என் சொப்பனத்தில் கண்டது என்ன வென்றால், பிரயாணிகள் இருவரும் தங்கள் வழியே நடந்து ஒரு புது நாட்டில் வந்து சேர்ந்தார்கள். அந்த நாட்டுப் பிறவியை அல்லாமல், அந்நிய நாட்டார் யார் வந்தாலும், அந்த தேசத்து காற்று அவர்களை மயக்கி தூக்கம் காட்டிக் கிடத்திவிடும். இவ்விடத்தில் திடநம்பிக்கை மந்தம் பிடித்து தூங்கும்படி ஆசைப்பட்டான். அவன் கிறிஸ்தி யானைக் கூப்பிட்டு: அண்ணா! தூக்கம் கண்ணை மயக்கிவிட்டது, ஆகையால் சற்று நேரம் இவ்விடத்தில் படுத்திருந்து போவோம் என்றான்.
கிறி: கூடவே கூடாது. சற்று தூங்கினால் அப்புறம் எழுந்தி ருக்கவே மாட்டோம்.
திடநம்: என்ன அண்ணா அப்படிச் சொல்லுகிறீர்? கஷ்டவாளி களுக்கு கன நித்திரை இன்பம் அல்லவா? நாம் சற்றே தூங்கிக் கொண்டால் நம் களைப்பு நீங்கிப்போகுமே.
கிறி: ஆனந்தமலைக் கோனார் ஒருவர், மயக்கபூமியே சுகம் என்று தூங்கிவிடல் ஆகாது 1 என்று நமக்குச் சொன்னதை மறந்து போனீரோ? நாம் தூக்கத்திற்கு இடங்கொடுக்கக்கூடாது என்பதே அவர் சொன்னதின் கருத்து “ஆகையால் மற்றவர்கள் தூங்குகிறது போல் நாம் தூங்காமல் விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாய் இருக்கக்கடவோம்” (1 தெச 5 : 6)
திடநம்: நான் சொன்னது தப்பிதம் என்று அறிக்கையிடுகிறேன். நான் தனிமையாய் மாத்திரம் இவ்விடத்திற்கு வந்திருந்தால் நித்திரைசெய்து சாகவேண்டியதாய் இருந்திருக்கும். “ஒன்றியாய் இருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்” (பிரசங்கி 4 : 9) என்று ஞானியார் சொன்னது சரி என்று காண்கின்றேன். இம்மட்டும் உமது துணை எனக்கு அகப்பட்டது பெரிய இரக்கம்தான். உம்முடைய பிரயா சத்துக்குத் தக்க பலன் உமக்கு அகப்படும் என்றான்.
கிறி: அப்பொழுது கிறிஸ்தியான்: நல்லது, இந்த நாட்டின் தூக்கம் மாறும்படியாக, ஒரு நல்ல சம்பாஷணையை துவக்குவோமாக என்றான்.
திடநம்: மெத்த சந்தோசம், அதுவேதான் என் ஆவல்.
கிறி: எந்த விஷயத்திலிருந்து சம்பாஷிக்கத் தொடங்கலாம்?
திடநம்: தேவன் நம்மிடத்தில் ஆரம்பித்த கிருபையில் இருந்து துவக்கிப் பேசுவோமே; ஆனால் தயவுசெய்து நீர்தான் முந்திப்பேச வேண்டும்.
கிறி: இந்தப் பாட்டை முந்திப்பாடுகிறேன் கேளும் என்று கிறிஸ்தியான் சொல்லி:
மோட்சம் போகும் பக்தருக்கு
தூக்கம் உண்டானால்
வந்து இந்த சம்பாஷணை – கேளுங்கள்
தூங்கு முகம் மூடுங்கண்ணும்
மாறிப்போகவே,
எப்படியும் புத்தி கேட்க – வாருங்கள்
சுத்தர் நேசம் தக்கபடி
காப்பாற்றப்பட்டால்,
சாத்தான் வந்து தூங்கென்றாலும் – தூங்காரே
என்று பாடினான். பாடி முடிந்தவுடனே: கிறிஸ்தியான் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் என்று சொல்லி இப்படிப் பிரயாணம் செய்யும்படியான ஆசை முதல் முதல் உனக்கு எப்போ உண்டாயிற்று? என்று கேட்டான்.
திடநம்: என் ஆத்தும வாழ்வைப்பற்றிய கவலை முதலாவது எப்போது எனக்குள் ஆரம்பித்தது என்பதா உம்முடைய கேள்வியின் கருத்து?
கிறி: ஆமாம், அதுதான் என் கருத்து.
திடநம்: வெகுகாலமாய் எங்கள் சந்தை வீதியில் காணப்பட்டதும், விற்கப்பட்டதுமான பொருட்களின் மேல் தாபந்தம் கொண்டி ருந்தேன். அந்த தாபந்தத்தோடே நான் இதுவரையும் இருந்தது மெய்யானால், அவைகள் என்னைக் கேட்டுக்கும் அழிவுக்கும் ஏதுவாக ஆழ்த்திப்போட்டிருக்கும் என்றே நம்புகின்றேன்.
கிறி: எந்தப் பொருட்கள் மேல் அப்படித் தாபந்தம் கொண்டிருந்தீர்?
திடநம்: உலகத்தின் ஐசுவரியங்கள், திரவியங்கள் என்ன உண்டோ அவை எல்லாவற்றின் மேலும் நான் ஆசை கொண்டிருந் தேன். அதுவுமின்றி பெருந்தீனி, உல்லாசம், மதுபானம், சத்தியம் பண்ணுகிறது, அசத்தியம் பேசுகிறது, அசுத்தங்கள், ஓய்வுநாளை மீறுதல், பின்னும் ஆத்தும நாசத்துக்கு ஏற்றவை என்னென்ன உண்டோ அதின்மேல் எல்லாம் ஆசைகொண்டிருந்தேன். ஆனால் கடைசியாக உம்மாலும், மாயாபுரிச் சந்தையிலே விசுவாசத்தின் நிமித்தமும், நல்லொழுக்கத்தின் நிமித்தமும் கொலை செய்யப்பட்ட உத்தம நேசராகிய உண்மை என்பவராலும் கேள்விப்பட்ட ஞான போதனைகளை ஆராய்ந்து கவனித்தபோது, நான் கொண்டிருக்கும் தாபந்தங்களின் முடிவு சாவுதான் என்றும் (ரோமர் 6 : 21-23) இப்படிப்பட்டவைகளின் நிமித்தமாக கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவ கோபாக் கினை வரும் (எபேசியர் 5 : 6) என்றும் திட்டமாய் அறிந்துகொண்டேன்.
கிறி: இந்த அறிவு உமது இருதயத்தில் பலங்கொள்ளும்படியாக உடனேதானே இணங்கிப் போனீரோ?
திடநம்: இல்லை, பாவத்தின் தீமைகளையாவது, அதினால் சம்பவிக்கும் ஆக்கினைகளையாவது அறிந்து கொள்ளும்படி உடனே எனக்கு இஷ்டம் இருக்கவில்லை. என் மனம் முதலாவது தேவ வசனத்தால் அசைக்க பட்டபொழுது அதின் வெளிச்சத்தைப் பார்க்காதபடிக்கு என் கண்களை மூடிக்கொள்ள வெகுவாய் பிரயாசப்பட்டேன்.
கிறி: தேவ ஆவியானவர் உம்மில் நடப்பிக்க ஆரம்பித்த கிரியைகளுக்கு நீர் துவக்கத்தில் இணங்காமல் போனதற்கு காரணம் என்ன?
திடநம்: காரணங்களா? 1. இது தேவனால் எனக்குள் நடக்கும் கிரியைதான் என்று நான் அறியாமற்போனேன். பாவங்களை காணும்படி செய்கிறதினாலேயே முதலாவது தேவன் ஒரு பாவியைக் குணப்படுத்தும்படி துவக்குகிறார் என்று நான் ஒருக்காலும் நினைத்ததில்லை. 2. பாவம் இப்பொழுதும் என் மாமிசத்துக்கு அதிக மதுரமாகவே காணப்பட்டது. அதைவிட்டுவிட எனக்கு மனமே வரவில்லை. 3. என் பழைய தோழருடைய சவகாசமும், அவர்களோடு கூடிச் செய்யும் வேலைகளும் எனக்கு அதிக பிரீதியாய் இருந்ததினால் அவர்களைவிட்டுப் பிரிகிறது எப்படி என்று எனக்கு தெரியாமல் இருந்தது. 4. பாவ உணர்வு என்னுடைய மனதில் வருகிற சமயத்தில் உண்டாகிற வியாகுலமும், பயங்கரமும் எதினால் சகிக்கக்கூடாது; அந்த நினைவே வரவேண்டியதில்லை என்கிற எண்ணம் எனக்குள் இருந்தது.
கிறி: நீர் சொல்லுகிறதைப் பார்த்தால் சில வேளைகளில் உமது மனவருத்தம் எல்லாம் நீங்கிப்போகுமே.
திடநம்: ஆம், நிஜமாகவே நீங்கிப்போகும், ஆனால் மறுபடியும் என் மனதுக்குள் வந்துவிடும். அந்த வேளையில் நான் முன்னிலும் கெட்டவனாக இருப்பேன்.
கிறி: எது பாவங்களை திரும்ப உமது மனதுக்குள் இழுத்துக் கொண்டு வரும்?
திடநம்: ஒன்றா இழுத்துக் கொண்டு வரும், இல்லை; அநேகம் இருக்கின்றன.
1. ஒரு நல்ல மனுஷனை நான் நடுத்தெருவிலே கண்டால், அல்லது
2. யாராவது வேதம் வாசிக்கிறதை கேட்டால், அல்லது
3. எனக்குத் தலைவலி துவக்கினால், அல்லது
4. என் அயலாரில் சிலர் பாயும் படுக்கையுமாக கிடக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால், அல்லது
5. செத்துப்போன யாருக்காவது சாவுமணி தேவ ஆலயத்தில் அடிக்கும் சத்தம் என் காதில் விழுந்தால், அல்லது
6. என் சாவைப்பற்றிய சிந்தையே எனக்கு வந்துவிட்டால், அல்லது
7. யாராவது சடுதியிலே செத்துப்போனார்கள் என்று கேள்விப் பட்டால், அல்லது
8. விசேஷமாய் நான் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்கின்ற கவலை திடீர் என்று என்னைப்பற்றி உண்டானால் அந்த நிமிஷமே என் பாவங்கள் எல்லாம் என் முன்பாக வந்து நின்று எனக்கு வியாகுலத்தையும், பயங்கரத்தையும் வருவிக்கும்.
கிறி: இவைகளால் உமது மனதில் உண்டாகும் பாவத்தின் வியாகுலங்களை நீர் எவ்விதமாயாவது மாற்றிக் கொள்ளக் கூடுமா?
திடநம்: இல்லை, கூடாது. அது என் மனச்சாட்சியை கெட்டியாய் பிடித்துக்கொள்ளுகிறது. அப்புறம் நான் மறுபடியும் பாவஞ் செய்யும்படி ஆசைப்பட்டால் (என் மனம் பாவத்தினின்று திரும்பிப் போனாலும்) அது எனக்கு இரட்டிப்பான மனநோவாகவே இருக்கும்.
கிறி: அந்தச் சமயத்தில் நீர் என்ன செய்வீர்?
திடநம்: நான் என் நடக்கைகளை சீர்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன், அல்லது இனி நமக்கு ஆக்கினைதான் கதி என்று நினைத்துக்கொள்ளுவேன்.
கிறி: நீர் உம்மை சீர்ப்படுத்தும்படி முயற்சி செய்தீரா?
திடநம்: ஆம், முயற்சி செய்து என் பாவங்களில் இருந்து விலகி ஓடினதுமாத்திரம் அல்ல, பாவிகளுடைய கூட்டத்தையும் விட்டு விலகி தனி ஜெபம், வேத வாசிப்பு, பாவத்துக்காக அழுதல், சத்தியத்தையே பேசுதல் முதலிய சன்மார்க்கமான விஷயங்களில் தலையிட்டுக் கொண்டேன். இன்னும் நான் முயற்சிசெய்து வந்த நற்கிரியைகளின் பேரைச் சொன்னால் அதிகமாகும்.
கிறி: அப்பொழுது நீர் உம்மைக்குறித்து திருப்தியாக எண்ணிக் கொண்டீரா?
திடநம்: அந்த திருப்தியான எண்ணமும் கொஞ்ச நாளைக்குத் தான் இருந்தது. என் வியாகுலங்கள் மறுபடியும் என் இருதயத்தின் மேல் விழுந்தது. அது விழவே அது என் சீர்ப்படுதலின் கழுத்தை முறித்துப் போட்டது.
கிறி: நீர் சீர்திருந்திப்போனீரே, அந்த வியாகுலம் மறுபடியும் வந்தது எப்படி?
திடநம்: வேறு அநேக விஷயங்கள் அதை இழுத்துக்கொண்டு வந்தது. அவைகளில் விசேஷமாக “எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல் இருக்கிறது” (ஏசாயா 65 : 6) “நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே” (கலாத்தியர் 2 : 16) “நீங்களும் உங்களுக்கு கட்டளையிடப்பட்ட யாவையும் செய்த பின்பு நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்” (லூக்கா 17 : 10) என்ற வாசகங்களும் இவைபோன்ற வேறு அநேக வாக்கியங்களும்தான். இவ்வாசகங்களை நானே எனக்குள் தியானிக்கையில் பின்வருகிறபடி நான் எண்ணினேன். என்னுடைய நீதியெல்லாம் கந்தையாய் இருக்கிறதினால் நியாயப் பிரமாணத்தின் கிரியைகளால் ஒரு மனுஷனும் நீதிமானாக்கப்படுகிறதில்லையானால், எல்லாவற்றையும் செய்தபின்பும் நாம் அப்பிரயோஜனமான ஊழியக்காரரானால், அப்போது நியாயப்பிரமாணத்தின் மூலமாய் நித்திய மோட்சத்தைப் பெற நினைக்கிறதும் பைத்தியம் அல்லவா என்று எண்ணினேன். பின்னும் நான் மனதில் நினைக்கிறேன்: ஒரு மனுஷன் ஒரு கடையில் வாடிக்கையாய் சரக்கு வாங்கி ஆயிரம் ரூபாய் தொகையாகிவிட்டது என்று வைத்துக்கொள்ளுவோம். கடன் தொகை ஆயிரமானதற்கு அப்புறம் அவன் வாங்கும் சாமான்களுக்கெல்லாம் ரொக்கமாய் பணம் செலுத்தி வந்தாலும், பழைய ஆயிரம் ரூபாய் கடைக்காரனுடைய கணக்குப் புஸ்தகத்தில் இருந்து கிறுக்கப்படாவிட்டால், அவன் இவன்மேல் நீதிமன்றத்தில் பிராது செய்து அதைக் கொடுத்துத் தீர்க்குமளவும் காவலில் அடைக்கலாமே என்று நினைத்தேன்.
கிறி: இந்த உவமானத்தை நீர் உமக்கு எப்படிச் சாட்டிக் கொண்டீர்?
திடநம்: சாட்டிக்கொண்டது இப்படித்தான், நான் என் பாவத்தி னால் தேவனுக்கு பெரிய கடன்காரனாகிவிட்டேன். என் சீர்திருந்தின செய்கைகள், என் பாவங்களின் தொகையை ரத்துப்பண்ணமாட்டாது. ஆதலால் என் தற்கால சீர்திருத்தலோடு அவருக்கு இன்னும் கடன் காரனாகவே இருக்கிறேன். ஆனால் முந்தின என் மீறுதலினால் நான் என்மேல் வருவித்துக்கொண்ட ஆக்கினையில் இருந்து என்னமாய்த் தப்பிக்கொள்ளக்கூடும்? என்பதாக சிந்தித்தேன்.
கிறி: நல்ல உவமானம்தான், அப்புறம் சொல்லும்.
திடநம்: சீர் அடைந்த காலமுதல் என் மனதை வதைத்த வேறொரு எண்ணம் என்னவென்றால், நான் இப்பொழுது நடப்பிக்கும் முதல்தரமான செய்கையை நுட்பமாய் ஆராய்ந்தால் அங்கும் பாவத்தைக் காண்கின்றேன். புதிதான பாவம் என் நலமான நடக்கை களுக்குள் இப்பொழுதும் கலந்து கொள்ளுகிறது.
காரியம் இப்படி இருப்பதால் என்னைக்குறித்தும் என் செய்கைகளைக்குறித்தும் முன் எனக்கு இருந்த வீண் பெருமையை அல்லாமல் என் முந்தின ஜீவியம் குற்றமற்றதாய் இருந்தபோதிலும் நரகத்தில் அமிழ்த்தும்படி போதுமான பாவத்தை ஒரே நாளுக்குள் செய்து விடுகிறேன் என்று உணர்ந்தேன்.
கிறி: இந்த உணர்வு வந்தபோது நீர் என்ன செய்தீர்?
திடநம்: செய்ததா! நான்என் மனவியாகுலத்தை உண்மை என்பவருக்குச் சொல்லுமட்டும் என்ன செய்கிறது என்று தெரியாமற் போனேன். ஏனெனில் எனக்கும் அவருக்கும் அதிக சிநேகம்உண்டு. அவர் என்னைப் பார்த்து, நீ பாவமே செய்யாத ஒரு மனுஷனுடைய நீதியை சம்பாதித்துக் கொள்ளாத பட்சத்தில் உன் சொந்த நீதியாவது, சர்வலோகத்தின் நீதியாவது உன்னை இரட்சிக்கமாட்டாது என்று சொன்னான்.
கிறி: அவர் சொன்னது சரிதான் என்று நினைத்தீரா?
திடநம்: என் சொந்த மனதின்படியான நல்லொழுக்கங்களில் மனதிருப்தியோடு இருக்கிற காலத்தில் அவர் இப்படி சொல்லி யிருந்தால், அவரைப் பார்த்து உம்மைப் போல மூடன் மூவுலகத்திலும் கிடையாது என்றுதான் சொல்லியிருப்பேன். ஆனால் இப்பொழுது என் சுய பெலவீனத்தையும், என் முதல்தரமான கிரியைகளில் கலந்திருக்கிற பாவத்தையும் நானே காண்கிறபடியால் அவர் சொல்லுவது சரிதான் என்று ஒத்துக்கொள்ள வேண்டியதாய் இருந்தது.
கிறி: ஆனால் அவர் உம்மிடத்தில் அப்படிச் சொன்ன சமயத்தில், ஒருக்காலும் பாவமே செய்யாத ஒருவர் உண்டு என்று நினைத்தீரா?
திடநம்: அந்த வார்த்தைகள் துவக்கத்தில் எனக்கு அதிசயமாய்த் தான் தோன்றினது என்பதை நான் மறையாமல் அறிக்கையிட வேண்டும். ஆனால் அவரோடு இன்னும் அதிகமாய்ச் சம்பாஷித்து சகவாசஞ்செய்த பின்பு அதைக்குறித்து பூரணமாய் அறிந்து கொண்டேன்.
கிறி: நீர் அவரிடத்தில் அந்த மனுஷன் யார்? எப்படி அவர் மூலமாய் நீதிமானாக்கப்பட வேண்டியது என்று கேட்டீரா?
திடநம்: கேட்டேன்; கேட்டதற்கு, உன்னதமானவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறவரே அந்த மனுஷன் என்று சொல்லி (எபிரேயர் 10 : 12, 21) பின்னும் சொல்லுகிறார்: அவர் மாம்சத்தில் இருந்த நாட்களில் தாமே நடப்பித்த கிரியைகளையும், சிலுவையில் தொங்குகையில் பட்ட பாடுகளையும் விசுவாசிப்பதினாலே (ரோமர் 4 : 5 கொலோ 1 : 14 1 பேதுரு 1 : 19) நீ அவரால் நீதிமானாக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அப்பொழுது நான் அந்த மனிதனுடைய நீதி எப்படி மற்றொருவனை தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கத்தக்க சக்தியுள்ளதாய் இருக்கக்கூடும்? என்று கேட்டேன். அதற்கு அவர் அந்த மனுஷன் வல்லமையுள்ள தேவனாய் இருந்தார். அவர் செய்த செய்கைகளும், அவர் அடைந்த மரணமும் அவருக்காக அல்ல எனக் காகவே பட்டார். அவர்மேல் விசுவாசம் வைக்கிறவர்கள் எவர்களோ அவர்களுக்கு அவருடைய செய்கைகளும், அச்செய்கைகளின் புண்ணிய பலன்களும் கிடைக்கின்றது என்று சொன்னார்.
கிறி: அப்புறம் நீர் செய்தது என்ன?
திடநம்: அவர் என்னை இரட்சிக்கும்படி பிரியப்படமாட்டார் என்று நினைத்துக்கொண்டு அவரை விசுவாசிக்கக்கூடாது என்பதற்கு பல ஆட்சேபனைகளை சொன்னேன்.
கிறி: அப்புறம் உண்மை என்ன சொன்னார்?
திடநம்: அவரிடத்தில் போய்த்தான் பாரேன் என்று சொன்னார். அப்படிப்போவது துணிகரம் என்று நான் சொன்னேன். அதற்கு அவர்: அது துணிகரம்அல்ல, ஏனெனில் நான் வரும்படி அழைக்கப் பட்டவனாய் இருக்கிறேன் (மத்தேயு 11 : 28) என்று சொன்னார். அப்புறம் அவர்: இயேசுவினிடத்தில் நான் தாராளமாய் போகும்படியாக என்னை உற்சாகப்படுத்தும்படி அவரைக்குறித்து எழுதப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைக் கொடுத்து: வானத்தையும் பூமியையும் பார்க்கிலும் அந்தப் புஸ்தகத்திலுள்ள சிறு எழுத்தும், எழுத்தின் உறுப்பும் உறுதியுள்ளவைகளாய் இருக்கிறது என்றும் சொன்னார். (மத்தேயு 24 : 35) அப்போது நான் அவரண்டை வந்தவுடனே என்ன செய்ய வேண்டும்என்று கேட்டேன். பிதாவானவர் அவரை உனக்கு வெளிப்படுத்தும்படியாக நீ முழங்காலில் நின்று உன் முழு இருதயத்தோடும், உன் முழு மனதோடும் கெஞ்சி மன்றாடவேண்டும் (சங்கீதம் 95 : 6 தானியேல் 6 : 10 எரேமியா 29 : 12, 13) என்று சொன்னார். அப்புறம் நான்: அவரை எப்படி வேண்டிக்கொள்ளுகிறது என்று கேட்டேன். அதற்கு அவர்: ஒரு கிருபாசனத்தின் மேல் வீற்றிருக்க நீ அவரைக் காண்பாய். வருஷ முழுவதிலும் வந்து கேட்பவர்களுக்கு எல்லாம் பாவ மன்னிப்பை அருளும்படி அவர் அங்கே வீற்றிருக்கிறார். நீ போ என்று சொன்னார். (யாத் 25 : 22 லேவி 16 : 2 எண் 7 : 8, 9 எபிரேயர் 4 : 16) அவருக்குச் சமீபமாய் வந்தவுடனே என்ன சொல்லவேண்டும் என்று எனக்குத் தெரியாது என்று நான் சொன்னேன். அப்போது அவர்: நீ போனவுடனே இந்த மாதிரி சொல்லு என்று எனக்குச் சொல்லித் தந்தார். அதாவது : தேவனே பாவியாகிய என்மேல் இரக்கம் வைத்து, நான் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், அவரை விசுவாசிக்கவும் கிருபைசெய்யும், அவருடைய நீதி எனக்குக் கிடையாவிட்டால், அந்த நீதியின்மேல் நான் விசுவாசம் வைக்கா விட்டால் அடியோடே நாசமடைவேன் என்று அறிகிறேன். ஆண்டவரே, நீர் இரக்கமுள்ள தேவன் என்றும், உம்முடைய திருக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை லோகத்துக்கு இரட்சகராக ஏற்படுத்தி இருக்கிறீர் என்றும் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். நிர்ப்பந்த பாவியாகிய எனக்கும் உமது ஆசீர் வாதங்களை அருளும்படி சித்தமுடையவராய் இருக்கிறீர் என்றும் எனக்கு அறிவிக்கப்படிருக்கிறது. நான் ஒரு பஞ்சமாபாவியாய் இருக்கிறேன். ஆகையால் ஆண்டவரே, இந்தச் சமயத்தில் நீர் உம்முடைய கிருபையை வெளிப்படுத்தி, உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்னுடைய ஆத்தும இரட்சிப்பில் பங்கு பெறும்படியாக கிருபைசெய்யும். ஆமென். என்று சொல்லித் தந்தார்.
கிறி: அவர் உமக்குச் சொன்ன பிரகாரம் செய்தீரா?
திடநம்: ஆம், திரும்பத் திரும்ப கெஞ்சிக்கேட்டேன்.
கிறி: பிதாவானவர் அப்போது தமது குமாரனை உமக்கு வெளிப் படுத்தினாரா?
திடநம்: இல்லை, முதலாந்தரம் வெளிப்படுத்தவில்லை, இரண்டாந்தரமும் இல்லை, மூன்றாந்தரமும் இல்லை, நான்காம் தரமும் இல்லை, ஐந்தாந்தரமும் இல்லை, ஆறாந்தரமும் கூட வெளிப் படுத்தவில்லை.
கிறி: அப்போது நீர் என்ன செய்தீர்?
திடநம்: செய்ததா? என்ன செய்யவென்று சுத்தமாய் தெரியாமல் போயிற்று.
கிறி: ஜெபம்செய்கிறதை நிறுத்திப்போட வேண்டும் என்கிற எண்ணம் வரவில்லையா?
திடநம்: வந்தது, ஒரு தரமா, இரண்டு தரமா? நூறு, இருநூறு தரம் அந்த எண்ணம் வந்தது.
கிறி: அப்படியிருந்தும் நீர் ஜெபத்தை நிறுத்திவிடாத முகாந்தரம் என்ன?
திடநம்: இவ்வுலகம் எல்லாம் கூடினாலும், கிறிஸ்துவின் நீதி இல்லாவிட்டால் என்னை இரட்சிக்கமாட்டாது என்று நான் கேள்விப்பட்டதை உறுதியாய் நம்பினேன். ஆகையால் நான் ஜெபத்தை நிறுத்திவிட்டால் சாவேன், சாவு நேரத்தில் கிருபாசனத் தண்டை கிடந்து செத்தால் நலமாய் இருக்கிறது என்று என் மனதில் தோன்றிற்று. அதோடுகூட “அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு, அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை” (ஆபகூக் 2 : 3) என்கிற சத்தியவாசகமும் என் மனதில் வந்தது. ஆகவே பிதாவானவர் தமது குமாரனை எனக்கு வெளிப்படுத்தும் வரைக்கும், நான் ஜெபம்பண்ணிக் கொண்டே இருந்தேன்.
கிறி: அவர் உமக்கு எப்படி வெளிப்படுத்தப்பட்டார்?
திடநம்: அவரை நான் என் மாம்ச கண்களால் காணவில்லை. ஆனால் மனக்கண்களால் கண்டேன். (எபேசியர் 1 : 18, 19) அதின் விபரம் சொல்லுகிறேன் கேளும்: ஒரு நாள் நான் மிகுந்த துக்கசாகரத்தில் இருந்தேன். என்ஜீவ காலத்தில் ஒரு நாளும் அவ்வளவு துக்கம் எனக்கு உண்டானதில்லை. இந்த துக்கசாகரத்துக்குக் காரணம் என் பாவங்களின் அகோரமும், என் நிர்ப்பந்தத்தின் தன்மையும் முன்னிலும் அதிகத் தெளிவாய் எனக்கு காணப்பட்டதனாலேதான். அந்தச் சமயத்தில் நரகத்தின் வேதனை களையும், என் ஆத்துமாவின் நித்திய ஆக்கினையின் பயங்கரங்களை யுமேயன்றி வேறொன்றையும் நான் பார்க்கவில்லை. காரியம் இப்படி இருக்கையில் திடீரென்று ஆண்டவராகிய இயேசு பரலோகத்தில் இருந்து என்னைக் கண்ணோக்கிப் பார்த்துக்கொண்டு: “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்” (அப்போஸ்தலர் 16 : 31) என்று சொல்லுகிறதாகவும் என் மனதில் நினைத்தேன்.
அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் பாவிகளிலும் பெரும் பாவியாய் இருக்கிறேனே என்றேன். அதற்கு அவர்: “என் கிருபை உனக்குப்போதும்” (2 கொரி 12 : 9) என்று சொன்னார். அப்பொழுது நான் : ஆண்டவரே, விசுவாசிக்கிறதாவது என்ன? என்று கேட்டேன். அப்புறம், “என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் ஒருக்காலும் தாக மடையான்” (யோவான் 6 : 35) என்று சொல்லப்பட்ட வாசகத்தினால், வருகிறதும் விசுவாசிக்கிறதும் இரண்டும் ஒன்றுதான் என்று கண்டு கொண்டேன். தன் முழு இருதயத்தோடும், விருப்பத்தோடும் கிறிஸ்துவினால் இரட்சிப்படையும்படி ஆசைகொண்டு வருகிறவனையே விசுவாசிக் கிறவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்றும் அறிந்து கொண்டேன். அப்பொழுது என் கண் நீராய்ப் பெருகிற்று. பின்னும் நான்: “ஆனால் என்னைப் போலொத்த பெரும்பாவியும் உம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இரட்சிக்கப்படுவானா? என்று கேட்டேன். அதற்கு அவர்: “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6 : 37) என்று சொல்லக் கேட்டேன். அப்புறம் நான்: “ஆண்டவரே, உம்மண்டை நான் வருகையில் உமது மேல் என் விசுவாசத்தை சரியாய் நிலைநிறுத்தும்படி அடியேன் சிந்திக்க வேண்டியது எப்படி? என்று கேட்டேன். அதற்கு அவர்: “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (1 தீமோ 1 : 15) “விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படி கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாய் இருக்கிறார்” (ரோமர் 10 : 4) “அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்கள் ஆக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்” (ரோமர் 4 : 25) “அவர் நம்மில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்மைக் கழுவினார்” (வெளி 1 : 6) “அவர் தேவனுக்கும் நமக்கும் மத்தியஸ்தராய் இருக்கிறார்” (1 தீமோ 2 : 5) “நமக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்போதும் உயிரோடு இருக்கிறார்” (எபிரேயர் 7 : 25) என்று சொன்னார். இவைகள் எல்லாவற்றைக் கொண்டும் அவருடைய மனுஷவதாரத்தில் எனக்கு நீதியையும், அவருடைய இரத்தத்தில் என் பாவத்துக்குப் பரிகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர் தமது பிதாவின் கட்டளைக்கு கீழடங்கி அதின் ஆக்கினையை அனுபவித்தது தமக்காக அல்ல, தமது புண்ணிய பலன்களை விசுவாசித்து, அவருக்கு நன்றி செலுத்துகிறவன் எவனோ அவனுக் காகவே பாடுபட்டு உத்தரித்தார் என்றும் அறிந்து கொண்டேன். இப்பொழுது என் இருதயம் சந்தோசத்தால் பூரித்தது. என் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. என்னுடைய உள்ளந்திரியங்கள் அவருடைய திருநாமத்தின் கனமகிமைக்கும், அவருடைய ஜனங்களுக்கும், அவருடைய வழிகளுக்கும் சார்பாய் ஓடினது.
கிறி: மெய்யாகவே இது கிறிஸ்து உமது இருதயத்துக்கு அருளின காட்சியே அன்றி வேறல்ல, அதினால் உமது இருதயத்துக்கு வந்த பலன்கள் எவை என்று சொல்லமாட்டீரா?
திடநம்: இதினாலே சர்வ லோகமும் அதின் எல்லா நீதிகளோடுங்கூட ஆக்கினைத் தீர்ப்புக்கேற்ற நிலைமையில் இருக்கிறது என்றும் பிதாவாகிய தேவன் எவ்வளவு நீதியுள்ளவராய் இருந்தபோதினும் தமது நீதியின்படியே பாவியை நீதிமானாக்கக்கூடும் என்றும் என் மனதில் விளங்கிற்று. அதுவுமல்லாமல் என் முந்தின இழிவான நடக்கைகளைப்பற்றி வெட்கமும், அறிவீனங்களை உணருகிற கலக்கமும் என் மனதை சூழ்ந்து கொண்டன. ஏனெனில் இதற்குமுன் எப்பொழுதாவது இயேசு கிறிஸ்துவின் மகத்துவம் இவ்வளவு வல்லமையாய் என் மனதிற்கு காட்சியாகவில்லை. அது பரிசுத்தமாய் ஜீவனம் செய்யும்படியான ஆவலையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு கனமும், மகிமையும் உண்டாக ஏதாவது ஒரு அற்ப பிரயத்தனமாவது செய்யவும் என்னை ஏவிற்று. இவ்வளவு மாத்திரமோ? எனக்கு இப்போது பதினாயிரம் படி இரத்தம் என் சரீரத்தில் இருந்தாலும் அவைகள் எல்லாவற்றையும் இயேசுவின் நாமத்துக்காக சிந்தவும் ஆசை உண்டாயிருக்கிறது என்று சொன்னான்.
1. மயக்க பூமி என்பது, துன்பம் இல்லாத சுயாதீன காலத்தையும், லோக வாழ்வுள்ள சமயத்தையும் குறிக்கிறது. இப்படிப்பட்ட சமயத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் கடமைக் கிறிஸ்தவர்களாய் மாறி தங்கள் தேவ பக்தியின் ஜீவியத்தை முற்றிலும் இழந்து போகிறார்கள். உத்தம கிறிஸ்தவர்களுடன் கூடிச்செய்யும் ஆவிக்கடுத்த சம்பாஷணைகள் இந்த மோசத்தில் இருந்து விலகிக்கொள்ள மெத்த அனுகூலமாய் இருக்கும்.