நாஸ்திக சாஸ்திரி சந்தித்தல்
அவர்கள் இப்படிப் பாடி சற்று தூரம் வழிபோகவே அன்ன நடையும், ஆசாரக் கைவீச்சுமாய் தங்களுக்கு எதிராகத் தனிமையாய் வருகிற ஒருவனைத் தூரத்திலே கண்டார்கள். பிரயாணிகளைச் சந்திக்க வேண்டும் என்றே அவன் வந்தான். அவனைக் கண்டவுடனே கிறிஸ்தியான் தன் தோழனைக் கூப்பிட்டு: அதோ சீயோனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நம்மை சந்திக்கும்படி எதிரே வருகிற மனுஷனைப் பார் என்றான். ஆமாம், அவன் வருகிறது அதோ தெரிகிறது. அவனும் நமக்கு ஆசை வார்த்தை சொல்லி நாம் மோசம் போகாதபடி சற்று எச்சரிக்கையாய் இருப்போமாக என்று திடநம்பிக்கை சொன்னான்.
இதற்குள்ளாக அவனும் மெதுவாய் நடந்து நடந்து கிட்டவந்து விட்டான். அவனுக்கு நாஸ்திகன் 1 என்று பேர் வழங்கப்பட்டது. நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று அவன் அவர்களைக் கேட்டான்.
கிறி: சீயோன் மலைக்குப் போகிறோம்.
இந்த உத்தரவை கேட்டவுடனே நாஸ்திகன் விழுந்து விழுந்து சிரித்தான்.
கிறி: அதென்ன அப்படிச் சிரிக்கிறீர்?
நாஸ்திகன்: இவ்வளவு சங்கடமான பயணத்தில் தலையிட்டுக் கொண்ட உங்களுடைய மதியீனத்தை நினைத்துத்தான் சிரிக்கிறேன். நீங்கள் படுகிற கஷ்டத்துக்கு இந்த வழி லாபமே தவிர வேறு லாபத்தை நீங்கள் காணப் போகிறதில்லை. இதினாலேயே எனக்கு சிரிப்பு வருகிறது.
கிறி: அதென்ன அப்படிப் பேசுகிறீர்? நாங்கள் உச்சிதப் பட்டணத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டோம் என்று நினைக் கிறீரோ?
நாஸ்திகன்: ஏற்றுக்கொள்ளப்படுகிறதேது? கீற்றுக்கொள்ளப் படுகிறதேது? நீங்கள் சொப்பனம் கண்டு சொல்லும் அந்த இடம் இந்த வையகம் முழுவதிலும் போய்த் தேடினாலும் கிட்டாதே.
கிறி: ஆகிலும் மறுலோகத்தில் அது இருக்கிறது.
நாஸ்திகன்: நான் என் வீடு மட்டாய் என் சுயதேசத்தில் இருந்தபோது நீங்கள் இப்போது சொல்லுகிறீர்களே அந்த இடத்தைப்பற்றி கேள்விப்பட்டேன். கேள்விப்பட்டபடியே அதைப் பார்க்கும்படி புறப்பட்டேன். நான் மூட்டைக்கட்டி புறப்பட்டு இதோ இருபது வருஷமாயிற்று. இருபது வருஷமாய் அந்தப் பட்டணத்தை தேடியும் புறப்பட்ட அன்று கண்டதைவிட அதிகம் ஒன்றும் காணவில்லை. (பிரசங்கி 10 : 15 ஏரேமியா 17 : 25)
கிறி: அப்படிப்பட்ட ஒரு நகரத்தை கண்டுபிடிக்கலாம் என்று நாங்கள் கேட்டும் இருக்கிறோம், நம்பியும் இருக்கிறோம்.
நாஸ்திகன்: நானும் வீட்டில் இருக்கும்போது அப்படி நம்பாவிட்டால் இவ்வளவு தூரம் அலைந்து வந்து தேடியிருக்க மாட்டேன். அப்படிப்பட்ட ஒரு இடம் உண்டு என்பது மெய்யானால் நான் கண்டு பிடித்திருப்பேன். ஏனெனில், உங்களைவிட அதிகத் தொலைதூரம் போய்த்திரும்பி வருகிறேன். ஒரு இடத்தையும் காணோம், ஒரு குடிசையையும் காணோம். முன் அகப்படும் என்று தேடிப்போன பொருள் இபோது இல்லை என்று கண்டு பிடித்ததினால் முன்னே அருவருத்து தள்ளினவைகளை மறுபடியும் அனுபவித்து மனமகிழப்போகிறேன் என்றான்.
கிறி: அப்போது கிறிஸ்தியான்: தன் தோழனாகிய திடநம்பிக்கை யண்டை போய் இந்த மனுஷன் சொல்லுகிறது மெய்யாய் இருக்குமா? என்று கேட்டான்.
திடநம்: உடனே திடநம்பிக்கை சொல்லுகிறான்: பத்திரம், இவனைப்போல இதமான வார்த்தைகளைப் பேசுகிற ஒருவரையும் நாம் சட்டைபண்ணக்கூடாது. இப்படி ஆசைபதம் பேசின ஒருவன் பேச்சைக் கேட்டு பட்டபாட்டை நினைத்துக்கொள்ளும். என்ன!
சீயோன்மலை இல்லையா? ஆனந்தமலை சிகரத்தில் இருந்து நாம் அதின் அலங்கார வாசலைக் காணவில்லையா? மேலும் இப்போது நாம் விசுவாசித்து நடக்கவேண்டாமா? (2 கொரி 5 : 6) நாம் நடந்து போவோம், சவுக்கு பிடித்திருக்கிற சம்மனசு வந்து நம்மைப் பிடித்து திரும்பவும் அடித்தாலும் அடிப்பார். நியாயமானபடி நீர் எனக்கு புத்தி சொல்ல வேண்டியது; ஆனால் இப்போது நான் அதை உமது காதுக்கு உரக்கச் சொல்லுகிறேன் கேளும்: “என் மகனே அறிவைத்தரும் வார்த்தைகளை விட்டு விலகச் செய்யும் போதகங்களை நீ கேளாதே” (நீதி 19 : 27) என் சகோதரனே, என் பேச்சைக் கேளும், அவனுக்குச் செவிகொடுக்க வேண்டாம். நாமோ ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாய் இருப்போமாக (எபிரேயர் 10 :39) என்றான்.
கிறி: என் சகோதரனே! நான் சத்தியத்தைக் குறித்து சந்தேகப் பட்டதினாலே அந்தப்படி உம்மிடத்தில் கேள்வி கேட்காமல் உம்மை சோதித்து உமது உத்தம இருதயத்தின் கனி ஒன்றை உம்மிடத்தில் இருந்து வெளிப்படுத்துவதற்காகவே அப்படிக் கேட்டேன். இந்த மனிதன் இவ்வுலகத்தின் தேவனால் குருடாக்கப்பட்டதை நான் அறிவேன். சத்தியத்தைப் பற்றிய விசுவாசிகளும், சத்தியத்தினால் ஒரு பொய்யும் உண்டாயிராதென்று அறிந்திருக்கிறவர் களுமாகிய நாம் இருவரும் நடந்து போவோம் வாரும் என்றான். (1யோவான் 2 : 21)
திடநம்: அதற்குத் திடநம்பிக்கை: நான் தேவனுடைய மகிமையை அடைவேன் என்கிற நம்பிக்கையினால் இப்பொழுது களிகூருகிறேன் என்று சொன்னான். அப்பால் இவர்கள்இருவரும் நாஸ்திகனை சட்டைபண்ணாமல் தங்கள் பாதையில் நடந்து போனார்கள். அவனோ குலுங்க குலங்கச் சிரித்துக்கொண்டு தன் வழியே போனான்.
1. நாஸ்திகன் என்பது, தேவன் இல்லை என்று சொல்லி எல்லா மார்க்கங்களையும் குறித்து நகைப்போரைக் குறிக்கிறது. இவர்களில் சிலர் துவக்கத்தில் பேர்க்கிறிஸ்தவர்களாய் இருந்து பாவத்தில் விழுந்து அதில் நிலைபெற்ற பின்பு வரும் நியாயத்தீர்ப்பைப்பற்றிய பயத்திலிருந்து தங்கள் மனதை தேற்றிக்கொள்ளும்படியாக எல்லா மார்க்கமும் பித்தலாட்டம்தான் என்று சொல்லுகிறார்கள்.