திட்டிவாசல் பயணம்
அப்புறம் நான் என் சொப்பனத்திலே அவன் திட்டிவாசல் திசையாய் ஓடிப்போகக் கண்டேன். அவன் சற்று தூரம் ஓடவே, அவன் மனைவியும், மக்களும் பின்னாலே ஓடி: அப்பா! அரசே! வாரும், வாரும், திரும்பி வாரும் என்று அழுது கூப்பிட்டார்கள். அவனோ அந்த சத்தத்தைக் கேட்டும் பின்னிட்டுப் பாராமல் (ஆதியாகமம் 19 : 17) தன் காதுக்குள் விரலை இட்டுக் கொண்டு ஜீவனே, ஜீவனே! நித்திய ஜீவனே!1 என்று கதறிக் கொண்டு அந்த மைதானத்தின் மத்தி வரையும் அதி தீவிரமாய் ஓடினான் (லூக்கா 14 : 26)
அயல் வீட்டுக்காரரும், ஊராரில் அநேகரும் (எரேமியா 20 : 10) அவன் ஓடுகிறதைப் பார்த்து இதென்ன பைத்தியம்! இப்படியும் செய்வார் உண்டா? என்று பேசிக் கொண்டார்கள். சிலரோ அவன் ஓட்டத்தைப் பார்த்து பகடி பண்ணினார்கள். வேறு சிலர் அவனைத் திட்டிப் பயப்படுத்தினார்கள். வேறு சிலர் நய வசனங்களைச் சொல்லி திருப்பிவிடச் சொன்னார்கள். அப்படிப்பட்டவர்களில் இரண்டு பேர் அவனைப் பலவந்தப் படுத்தியாவது திருப்பிக் கொண்டு வரும்படிக்கு கச்சை கட்டிப் புறப்பட்டார்கள். அவர்களில் ஒருவனுக்கு பிடிவாதன்2 என்றும் மற்றவனுக்கு இணங்கு நெஞ்சன்3 என்றும் பெயர். காரியங்கள் இப்படி ஒழுங்காகுமுன் அவன் வெகு தூரம் போய்விட்டான். அந்த இருவரும், எவ்வளவு தூரமானாலும் போய் அவனை திருப்பிக் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானித்திருந்ததால், மான் வேகமாய் ஓடி, அவனை முன்னெட்டி மறித்தார்கள். அப்போது அவன் அவ்விருவரையும் பார்த்து: ஏதையா இவ்வளவு தூரம் வந்தீர்கள்! என்று கேட்டான். அதற்கு அவர்கள் உன்னைத் தொடர்ந்து பிடித்துத் திரும்ப ஊருக்கு அழைத்துக் கொண்டு போகத்தான் வந்தோம், வா வா திரும்பி நட என்றார்கள். அதற்கு அவன் அந்த எண்ணம் பலியா தென்று சொல்லிவிட்டு, அண்ணா பிடிவாதனே! தம்பி இணங்கு நெஞ்சனே! கேளுங்கள். நீங்கள் நாசபுரியில் குடியிருக்கிறீர்கள். அது நான் பிறந்து வளர்ந்த ஊர்தான். அதிலிருந்து செத்தால் மண்ணறையைப் பார்க்கிலும் மகா ஆழத்தில் இருக்கிற நரக பாதாளத்தில் இறங்கிவிடுவீர்கள். அங்கே அக்கினியும், கந்தகமும் கலந்து எரிகிறது. அப்படியே சம்பவிக்கும் என்பது மெய். ஆகையால் என் சிநேகிதரே! நாம் மூவரும் நாசபுரிக்கு அல்ல, இதோ தெரிகிற திட்டிவாசலை நோக்கி நடந்து அழிவினின்று தப்பிக் கொள்ளுவோமாக என்றான்.
பிடிவாதன்:- என்ன சொல்லுகிறாய்? பந்துக்களையும், பவிசுகளையும், மக்களையும், மகிழ்ச்சிகளையும் விட்டுப் போட்டா வரச் சொல்லுகின்றாய்? என்று பிடிவாதன் கேட்டான்.
அதற்குக் கிறிஸ்தியான் என்னும் பெயரையுடைய அவன், ஆம், ஆம், எல்லாவற்றையும் தான். நான் அனுபவிக்கும்படி ஓடுகிற பாக்கியத்திற்கு அவைகள் கடுகளவும் இணை ஆகுமா? (2 கொரிந்தியர் 4 : 18) நீங்கள் என்னோடு கூடவே வந்து, பின் வாங்காமல் இருந்தால், எனக்குக் கிடைக்கும் பாக்கியங்களெல்லாம் உங்களுக்கும் அகப்படும். நாம் போகிற இடத்திலுள்ள பாக்கியங்கள் நமக்கும் போதும், இனி வருவோர் எல்லாருக்கும் போதுமானது. நீங்கள் என்னோடு வந்து நான் சொல்லுவது நிஜமோ, பொய்யோ என்றுதான் கண்டு கொள்ளுங்களேன் என்றான்.
பிடிவாதன்: – ஏதோ பாக்கியங்களுக்கென்று இப்பூலோக வாழ்வுகளை எல்லாம் தள்ளிவிடுகிறாயே, அவ்வளவு உயர்ந்த பாக்கியங்கள் தான் என்ன?
கிறிஸ்தியான்:- அழியாததும், மாசற்றதும், வாடாததுமான ஒரு சுதந்திரத்தையே நான் நாடுகிறேன். (1 பேதுரு 1 : 4) அதை ஜாக்கிரதையாய்த் தேடுகிறவர்கள் எவர்களோ அவர்களுக்கு அளிக்கும்படி அது பரலோகத்தில் பத்திரம் பண்ணப்பட்டிருக்கிறது (எபிரேயர் 11:16) அதைப்பற்றிய விபரம் எல்லாம் என் புஸ்தகத்தில் இருக்கிறது. பிரியமானால் படித்துப் பாரும்.
பிடிவாதன்:- நீயும் கெட்டாய், உன் புஸ்தகமும் கெட்டது. உன் புஸ்தகத்தை அதோ அந்தப் புதரில் போடு. அதிகப் பேச்சு வேண்டாம். இப்போது எங்களோடு ஊருக்குத் திரும்புகிறாயா இல்லையா?
கிறிஸ்தியான்:- திரும்புகிறதா? அந்தப் பேச்சை விடும், நான் கலப்பையைப் பிடித்தாயிற்று. புரட்டி உருட்டி அடித்தாலும் பிடித்த பிடி விடேன்.
பிடிவாதன்:- தம்பி இணங்கு நெஞ்சனே! நாம் திரும்புவோம் வா! இந்த தறுதலைப்பயல்கள் கூட்டம் ஒன்றுண்டு. அவர்கள் ஒன்றைச் சாதித்தால் கலைக்கியானிகளுடைய நியாயங்களும் அவர்கள் பிடித்த பிடியை விலக்கமாட்டாது. அவன் கெட்டான், நீ வா, நாம் வீட்டுக்குத் திரும்புவோம்.
இணங்கு நெஞ்சன்:- மாமா, அப்படித் திட்ட வேண்டாம்! இந்த நல்ல கிறிஸ்தியான்சொல்லுவது எல்லாம் நிஜமாயும் அவன் தேடிப்போகும் பரம வாழ்வு நாம் அனுபவிக்கிற பூமியின் வாழ்வுக்கு உயர்ந்ததாயும் இருக்கிறதால் அவனோடே கூடப் போகத்தான் எனக்கு மனம் இருக்கிறது.
பிடிவாதன்:- என்ன, என்ன இணங்கனே! என்ன சொன்னாய் உனக்கும் பித்தம் பிடித்துவிட்டதோ? என் புத்தியைக் கேட்டு ஊருக்குத் திரும்பு. இந்தப் பைத்தியக்காரன் கூட நீயும் போகிறேன் என்கிறாயே, இது என்ன கெடு மதி? இவனை நம்பலாமா? படு குழியிலும், பாழ்ங் கிணற்றிலும் கொண்டு போய் தள்ளிவிடுவானே, திரும்பு அப்பா திரும்பி வா!
கிறிஸ்தியான்:- அப்போது கிறிஸ்தியான்: தம்பி இணங்கனே! நீ பயப்படாமல் என்னோடு வா, நான் போகும் இடத்து பாக்கியங்களைப் பற்றிச் சொன்னவை கொஞ்சம், இருக்கிறவைகளோ அனந்தம், என் பேச்சை நம்பாவிட்டாலும் இந்தப் புத்தகத்தை வாசித்துப் பார். இதில் காட்டியதெல்லாம் நிஜம் என்பதற்கு அத்தாட்சியாக அவைகளை உண்டுபண்ணினவருடைய இரத்தத்தால் அவை அனைத்தும் முத்திரை யிடப்பட்டிருக்கின்றன என்றான். (எபிரேயர் 9: 17-21)
இணங்கு:- மாமா பிடிவாதரே! என் தீர்மானத்தைக் கேளும். நான் அந்த நல்ல மனுஷனோடு கூடப் போகிறேன். என்ன நேரிட் டாலும் நேரிடட்டும், இதே என் கடைசி பேச்சு என்று சொல்லிவிட்டு, கிறிஸ்தியானைப் பார்த்து: என் நேச தோழரே, நாம் நாடும் ஊருக்கு நேர் வழி உமக்குத் தெரியுமா? என்று கேட்டான்.
கிறி:- அப்போது கிறிஸ்தியான் சொல்லுகிறார்: தம்பி, வழி அறிய நான் பட்டபாடு கடும்பாடு, சுவிசேஷகன் என்ற மகானுபாவர் ஒருவர் ஒரு நாள், நான் வழியறியப்படும் பாட்டைப் பார்த்து, நமக்கு முன்னே ஒரு திட்டிவாசல் இருக்கிறதென்றும், அங்கே போய் விசாரித்தால் எல்லாம் அறிந்து கொள்ளுவாய் என்றும் சொன்னார். அங்கே நாம் இருவரும் போய்க் கேட்டுக் கொள்ளலாம் வா என்றான்.
இணங்கு:- ஆம், ஆம், அங்கே போய்க் கேட்டுக் கொள்ளலாம், நடவும் ஐயா என்று சொல்லி, கிறிஸ்தியானும் இணங்குநெஞ்சனும் வழிநடந்து போனார்கள்.
பிடி:- அவ்விருவரும் ஒரே மனமாய் வழிநடக்கத் துணிந்ததைப் பிடிவாதன் கண்டு, உன்னைப் போல நான் புத்திக் கெட்டவன் என்று எண்ணாதே; நான் என் தாய் பிள்ளைகளோடு சேர்ந்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு திரும்பிவிட்டான்.
1. இரட்சண்ய விசாரணையில் இருப்பவன், அதின் மேல் நீங்காத ஆசை கொள்ளுகிறதைப் பார்க்கிற அவனுடைய இன ஜன பெந்துக்களும், மற்ற இஷ்டர்களும், அவன் மனதைக் கெடுத்து, முன் போல இரட்சண்யத்தைப் பற்றி ஏனோதானோ என்றிருக்கும்படி செய்ய முயலுகிறார்கள், சிலர் பயமுறுத்துகிறார்கள்.
2. பிடிவாதன் என்பது, தேவனுடைய வசனமானது தன் பாவ எண்ணங்களைக் கண்டிக்கிற பொழுது அதை அசட்டை செய்கிற கர்வமும் இழிவுமான ஒருவனைக் குறிக்கிறது.
3. இணங்கு நெஞ்சன் என்பது, மற்றவர்களுடைய போதனைக்கு இலேசாய் மனதை சாய்க்கிறவனைக் குறிக்கிறது. அவனை இரட்சண்ய விசாரணையின் வழிக்குக் கொண்டு வருவது லேசாய் இருந்தாலும், மெய்யான கிருபை அவன் இருதயத்தில் இல்லை. எந்தவிதமான துன்பமும் இரட்சண்ய விசாரணையை விட்டு அவனை விலக்கிப் போடலாம்.