பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்
அப்புறம் அவர்கள் இருவரும் ஆனந்தமலை 1 சேருமட்டும் பேசிக்கொண்டே வழிநடந்தார்கள். இந்த மலை நாடு முழுவதும் முன்னே சொன்ன மலை அதிபரை சேர்ந்தவைதான். அவர்கள் அந்த மலையின் மேல் இருந்த தோட்டங்களையும், நந்தவனங்களையும், கொடி முந்திரிக்கைப் பந்தல்களையும், நீரூற்றுகளையும் பார்க்கும் படியாக ஏறிப்போனார்கள். அவர்கள் போய் நீராடி, குடித்து, அங்குள்ள திராட்ச குலைகளைப் பிடுங்கித் தின்றார்கள். அந்த மலை மேலேயே ராஜ பாதையின் ஓரமாய் இடையர் தங்கள் மந்தைகளை மேய்த்துக் கொண்டு நின்றார்கள். பிரயாணிகள் இருவரும் அவர்க ளண்டை போய், இளைப்படைந்த வழிப்போக்கர் ஆயாசத்தோடு வழியில் வரத்து போக்காய் இருக்கிறவர்களுடன் பேசும்போது, தங்கள் தடியின்மேல் சாய்ந்து கொள்ளுகிறது போல் சாய்ந்து நின்றுகொண்டு, இதின்மேல் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் யாருடையவைகள் என்று கேட்டார்கள்.
இடையர்: இவை அனைத்தும் மனுவேலர் மண்டலத்தைச் சேர்ந்த மலைகள், அவருடைய தேசத்து ஆட்களுடைய பார்வையில்தான் இது இருக்கிறது. ஆடுகளும் அவருடையவைகள்தான். அவைகளுக்காக அவர் தமது ஜீவனையும் கொடுத்திருக்கிறார் என்று மறுமொழி சொன்னார்கள்.
கிறி: உச்சித பட்டணம் போகும் பாதை இதுதானா?
இடையர்: இதுதான், இதுதான். நீங்கள் நேர்பாதையில்தான் இருக்கிறீர்கள்.
கிறி: உச்சித பட்டணம் இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?
இடையர்: அதில் சேரத்தகாதவர்களுக்கு வெகு தூரம்தான்.
கிறி: வழி க்ஷேமமா? மோசமா?
இடையர்: க்ஷேமமாய் நடந்துபோகிறவர்களுக்கு க்ஷேமம்தான், மோசம்பண்ணப் பார்க்கிறவர்களுக்கு மோசம்தான். (ஓசியா 14 : 9)
கிறி: வழியில் இளைப்படைந்து போகிற பிரயாணிகளுக்கு உதவியாக முசிப்பாற்றும் சத்திரம் சாவடி ஏதாவது உண்டா?
இடையர்: இந்த மலை அதிபர் இவ்வழி வரும் பிரயாணிகளை தகுந்தபடி பராமரிக்க வேண்டும் என்று எங்களுக்கு கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கிறார். ஆகையால் இம்மலையின் பாக்கியம் எல்லாம் உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது (எபிரேயர் 13 : 2) என்று சொன்னார்கள்.
பின்னும் நான் என் சொப்பனத்தில் கண்டது என்னவென்றால், மற்ற இடங்களில் உள்ளவர்கள் இவர்களைப் பார்த்து: எங்கேயிருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? இந்த வழியாய் வந்த வகை எப்படி? இம்மட்டும் இந்த வழியாய் வரும்படி செய்த பிரயத்தனங்கள் எவை? என்று கேட்டாற்போலவே இந்த இடையரும் பல கேள்விகளை அவர்களிடத்தில் கேட்டார்கள். அதற்குச் சொல்லவேண்டிய உத்தரவை அவர்கள் முன்போலவே சொன்னார்கள். ஏனெனில், இவ்விதமாய் இந்த மலைக்கு வந்து சேருகிற பிரயாணிகள் மெத்த கொஞ்ச பேராய் மாத்திரம் இருந்தார்கள். ஆனால் அவர்கள் சொன்ன மாறுத்தரங்களைக் கேட்ட இடையர் சந்தோசப்பட்டு, மட்டற்ற அன்பு பாராட்டி: நீங்கள் ஆனந்தமலை வந்து சேர்ந்தது ஆனந்த மலைவாசிகள் அனைவருக்கும் ஆனந்தமே என்று சொன்னார்கள்.
அப்புறம் அறிஞன், ஞானாப்பியாசி, விழிப்பாளி, கபடின்மை என்று பேர் வழங்கப்பட்ட நான்கு இடையரும் 2 பிரயாணிகளை கைபிடித்து கூட்டிக்கொண்டு தங்கள் கூடாரத்துக்குக் கொண்டுபோய் அச்சயமத்தில் தயாராய் இருந்த பண்டபதார்த்தங்களை அவர்கள் உண்டு களிக்கச் செய்தார்கள். மேலும் அந்த இடையர் பிரயாணி களைப் பார்த்து: நாம் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகும் படியாகவும், ஆனந்த மலையின் மகத்துவங்களை நீங்கள் கண்டு களிகூரும்படியாகவும் எங்களுடன் சில காலம் செலவிட்டால் நலமாய் இருக்கும் என்று கேட்டார்கள். பிரயாணிகளும் அதற்கு பூரண மனதோடு சம்மதித்தார்கள். இதற்குள்ளாக இரவில் வெகு நேரம் ஆகிவிட்டதால் அவரவர் தனியே இளைப்பாறும்படி பிரிந்து விட்டார்கள்.
பொழுது விடிந்தவுடனே அந்த இடையர் கிறிஸ்தியானையும், திடநம்பிக்கையையும் கூப்பிட்டு: நீங்கள் எங்களோடு ஆனந்தமலை மேல் ஆனந்தத்தோடு உலாவும்படி வாருங்கள் என்று அழைத்ததை நான் என் சொப்பனத்தில் கண்டேன். அப்படியே அவர்கள் கூடப்போய் அங்கும் இங்கும் உலாவி எங்கும் பாராத காட்சிகளை அம்மலையின் எந்த திசையிலும் கண்டார்கள். அதற்கப்பால் அந்த இடையர்: நாம் இந்தப் பிரயாணிகளுக்கு சில அதிசயங்களை காட்டுவோமா என்று பேசிக் கொண்டார்கள். நல்லது காட்டுவோம் என்று அவர்கள் எல்லாரும் தீர்மானித்த பின்பு அவர்கள் பிரயாணிகளை ஒரு உயர்ந்த பறம்பின் மேல் கூட்டிக்கொண்டு போனார்கள். அதற்கு தப்பறைப் பறம்பு 3 என்று பேர். அது ஒரு பக்கம் செங்குத்தாய் இருந்தது. அதின் அடித்தரையை உற்றுப்பார்க்கும்படி இடையர் சொன்னார்கள். கிறிஸ்தியானும், திடநம்பிக்கையும் எட்டிப்பார்க்கவே அதின் மேல் இருந்து விழுந்த பலர் உடல் வேறு தலை வேறாக சின்னாபின்னப்பட்டுக் கிடக்கிறதைக் கண்டார்கள். இதின் இரகசியம் என்ன என்று கிறிஸ்தியான் கேட்டான். அதற்கு இடையர்: சரீர உயிர்த்தெழுதலைப்பற்றி இமநேயும், பிலேத்தும் போதித்த உபதேசத்துக்கு செவிகொடுத்தவர்களைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டது இல்லையா? என்று கேட்டார்கள். ஆம், ஆம், கேள்விப்பட்டிருக்கிறோம் என்றார்கள். அப்புறம் இடையர் சொல்லு கிறார்கள்: இந்த மலையின் அடியில் சின்னாபின்னப்பட்டு கிடக்கிற வர்கள் அவர்கள்தான். இவ்வளவு செங்குத்தான பறம்பை எப்படித் தொட்டு ஏறலாம்? இவ்வளவு வழுக்கலான மலையை எப்படி நெருங் கலாம் என்று மற்றவர்கள் எச்சரிப்பு அடையும்படி நீங்கள் பார்க்கிற வண்ணம் அவர்கள் இந்நாள் மட்டும் புதைக்கப்படாமல் கிடக் கிறார்கள் என்று சொன்னார்கள்.
அப்புறம் இடையர் அவர்களை வேறொரு மலை மேட்டுக்குக்குக் கூட்டிக்கொண்டு போனதாக என் சொப்பனத்தில் கண்டேன். அதற்குச் சாவதான மலை 4 என்று பேர். அங்கிருந்து வெகு தூரத்துக்கு அப்பால் பார்க்கும்படி சொன்னார்கள். அப்படியே பிரயாணிகள் பார்த்தபோது, அங்கே காணப்பட்ட கல்லறைகளுக்கு ஊடே பலர் இங்கும் அங்கும் உலாவிக் கொண்டு நிற்கிறதாகத் தெரிந்தது. அவர்களில் சிலர் வேளாவேளையில் கல்லறைகள் மேல் இடறி விழுந்து திரிந்தாலும் அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தட்டுக்கெட்டு தடுமாறுகிறதினாலும் அவர்கள் அனைவரும் குருடராய் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தார்கள். இதின் தாற்பரியம் என்னவென்று கிறிஸ்தியான் கேட்டான்.
அதற்கு இடையர் சொல்லுகிறார்கள்: நீங்கள் வழியிலே இம் மலைக்கு வெகு சமீபமாகவே ராஜபாதைக்கு இடதுபுறமாக விலகுகிறதற்கு ஒரு படிக்கட்டு வழி இருக்கிறதே அதைக் கண்டீர்களா? என்று கேட்க, அவர்கள் கண்டோம், கண்டோம் என்றார்கள். அப்புறம் இடையர்: அந்தப்படிக்கட்டுப் பாதை அகோர பயங்கர ராட்சதனுடைய அரண்மனையாகிய சந்தேக துருக்கத்துக்கு போகிறது, அதோ கல்லறைகளுக்குள்உலாவுகிற அவர்கள், உங்களைப்போலவே ஒரு காலத்தில் உத்தம மோட்ச பிரயாணியாகி அந்தப் படிக்கட்டு பாதைமட்டும் வந்தார்கள். அந்த இடத்துக்குச் சமீபமாய் உள்ள ராஜ பாதையானது மகா கரடுமுரடாய் இருந்ததையிட்டு அவர்கள் படிக்கட்டுப் பாதையில் ஏறி, அகோர பயங்கர ராட்சதன் கையில் அகப்பட்டு, சந்தேக துருக்கத்தின் சிறைச்சாலையில் அடை பட்டிருந்தார்கள். சில நாள் பொறுத்து ராட்சதன் அவர்கள் கண்களைப் பிடுங்கிப்போட்டு “விவேகத்தின் வழியை விட்டுத் தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான்” என்று ஒரு ஞானி சொல்லிய வாசகம் நிறைnறும்படியாக இவ்வண்ணம் கல்லறைகளுக்கு ஊடாக கண்ணற்ற கபோதிகளாய் அலையும்படி விட்டுவிட்டான் என்று சொன்னார்கள். அதைக்கேட்ட கிறிஸ்தியானும், திடநம்பிக்கையும் ஒருவரை ஒருவர் கூர்ந்து பார்த்துக் கண்ணீர்விட்டு அழுதார்களே அல்லாமல் வேறொன்றும் இடையருக்குச் சொல்லவில்லை.
அதற்கு அப்பால் நான் என் சொப்பனத்தில் கண்டது என்னவென்றால், அந்த இடையர் பிரயாணிகளை ஒரு பள்ளத் தாக்குக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கே ஒரு மேட்டின் பக்கத்தில் ஒரு கதவு இருந்தது. அந்தக் கதவைத் திறந்து உள்ளே பார்க்கும்படி சொன்னார்கள். பார்க்கவே, காரிருளும் கனத்த புகையுமே அங்கே இருந்ததாக கண்டார்கள். அதுவுமின்றி அதனுள்ளே நெருப்பு எரிகிற இரைச்சலும், வேதனைப் படுகிறவர் களுடைய கூக்குரலையும் கேட்டார்கள். அதோடு கந்தக நாற்றத் தையும் முகர்ந்தார்கள். இதின் பொருள் என்ன? என்று கிறிஸ்தியான் கேட்டான். அதற்கு இடையர்: நரகத்துக்கு இது ஒரு குறுக்கு வழிமாயக்காரர் போகிற வழி இதுதான். ஏசாவைப்போல் தங்கள் முதற்பிறப்பு சுதந்திரத்தை விற்கிறவர்களும், அலெக்சாந்தரோடு கூடிச் சுவிசேஷத்தை தூஷிக்கிறவர்களும், அனனியா, சப்பீராளோடே கூடிப் பொய் பேசி பித்தலாட்டம் செய்கிறவர்களும் போகிற வழி இதுவேதான் என்று சொன்னார்கள்.
திடநம்: அப்போது திடநம்பிக்கை மேய்ப்பரைப் பார்த்து: இவர்கள் ஒவ்வொருவரும் எங்களைப்போல் மோட்ச பிரயாணிகளின் வேஷம் பூண்டிருந்தார்களோ? என்று கேட்டான்.
இடையர்: ஆம், ஆம், வெகு காலமாய் அந்த வேஷம் பூண்டிருந்தார்கள் என்று இடையர் சொன்னார்கள்.
திடநம்: இவர்கள் தள்ளப்படுமுன்னே இந்த வேஷத்தோடு எவ்வளவு தூரம் பிரயாணம் செய்திருந்தார்கள்?
இடையர்: சிலர் இம்மலை மட்டும் வந்ததுண்டு. சிலர் இதுவரையும் வரவில்லை என்றார்கள்.
அதுகேட்ட பிரயாணிகள் இருவரும் வல்லமையுள்ளவர் வல்லமை தரும்படியாக 5 நாம் வேண்டுதல் செய்வது எவ்வளவோ அவசரம் என்று சொல்லிக் கொண்டார்கள்.
இதற்குள்ளாகப் பிரயாணிகள் தாங்கள் பயணம் புறப்பட ஆசைப்பட்டார்கள். இடையரும் அப்படியே செய்யுங்கள் என்று ஆலோசனை சொன்னார்கள். அந்தப்படியே அவர்கள் எல்லாரும் ஏகமாய் கூடி அந்த மலைகளின் கடைசிமட்டும் வந்தார்கள். அப்புறம் இடையர்: நாம் உச்சித பட்டணத்தின் அலங்காரவாசலை இவர்களுக்கு இங்கிருந்து காட்டுவோம்; இவர்கள் அதை நமது தொலை நோக்கு கண்ணாடியினால் 6 கண்டு கொள்ளுகிறார்களா பார்ப்போம் என்று பேசிக் கொண்டார்கள். அது பிரயாணிகளுக்கு மிகுந்த சந்தோசமான செய்தியாயிருந்தபடியால் அவர்களும் அதைக் காட்டும்படி விரும்பிக் கேட்டார்கள். அதற்காக அவர்களை ஒரு உயர்ந்த மலைச்சிகரத்தின் மேல் கூட்டிக்கொண்டு போனார்கள். அதற்கு தெளிவு சிகரம் என்று பேர். அங்கே போய் ஒரு கண்ணாடியைக் கொடுத்து இதின் வழியாய்ப் பாருங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் அப்படியே நோக்கிப் பார்த்தார்கள். என்றாலும், இடையர் சற்றுமுன் அவர்களுக்குக் காட்டின பயங்கரக்காட்சி அப்போதும் அவர்கள் மனதை வாதித்தபடியினாலே கை ஆடினதால், திடமாய் கண்ணாடியைப் பிடித்து அதின் வழியாய் பார்க்கக்கூடாமல் போயிற்று. எப்படியும் அவர்கள் அந்த வாசலையும் அங்குள்ள சில மகத்துவங்களையும் கண்டதாக உணர்ந்து கொண்டு,
அந்தரங்கமானதை
அறிவித்தார் மேய்ப்பர்.
மற்றவர்களுக்கு அதை
மறைவாக வைத்தார்.
ஆழ்ந்து மறைந்ததான
அந்தரங்க மேதோ?
ஆனந்த மலையாளர்
தெரிவிப்பார் நீ போ!
என்று பாடிக்கொண்டு பயணம் போனார்கள்.
அவர்கள் புறப்பட்ட சமயத்தில், மேய்ப்பரில் ஒருவன் இனி அவர்கள் நடக்கும் பாதையைக் குறித்து பல விஷயங்களையும் எழுதிய ஒரு சீட்டைக் கொடுத்தான். வேறொருவன் முகஸ்துதிக்கு இடங் கொடுக்கக் கூடாது என்று எச்சரித்தான். இன்னொருவன் மயக்க பூமியில் சுகம் என்று தூங்கிவிடல் ஆகாது என்று சொன்னான். பின்னொருவன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று வாழ்த்தி வழி அனுப்பினான். உடனே நான் என் சொப்பனத்திலிருந்து கண் விழித்தேன்.
1. ஆனந்தமலை: இது கிறிஸ்தவர்கள் தங்கள் விருத்தாப்பிய வயதில் சில தரம் அனுபவிக்கிற அமைதலையும், களிப்பையும் குறிக்கிறது. அவர்கள் தங்கள் உடன் கிறிஸ்தவர்களோடு தேவ அன்பையும், தங்களுக்கு முன்னே இருக்கும் பேரின்ப மகிமையையும் பற்றிச் சம்பாஷிக்கிறார்கள்.
2. இடையர் என்பது ஆடுகளுக்காகத் தமது ஜீவனைவிட்ட பிரதான மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவின் உத்தம ஊழியக்காரரை குறிக்கிறது. மேய்ப்பரின் நாமங்கள் கிறிஸ்துவின் மந்தையின் மேய்ப்பராகிய குருக்களுக்கு இருக்கவேண்டிய பிரதான இலட்சணங்களை குறிக்கிறது.
3. தப்பறைப் பறம்பு என்பது, கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளும் மோசமான கோட்பாடுகளை அல்லது வேதப்புரட்டல்களைக் குறிக்கிறது. இதின் முடிவு நாசமாய் இருக்கும்.
4. சாவதான மலை என்பது, அவர்கள் மற்றவர்களுக்கு சம்பவித்திருக்கிற காரியங்களை உணர்ந்து கொண்டு எச்சரிப்படைய வேண்டியது என்று உணர்த்துகிறது.
5. ஜெபத்தின் மூலமாய் கிடைக்கக்கூடிய தேவசகாயத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் ஒருவனும் கிறிஸ்துமார்க்க நெறியில் நிலைத்திருக்கக் கூடாது. ஆனதால் “என்னை ஆதரித்தருளும், அப்பொழுது நான் இரட்சிக்கப் படுவேன் என்று சொல்லு”
6. கண்ணாடி இது வேதாகமத்தைக் குறிக்கிறது. விசுவாசம் என்னும் கைகளால் அதை ஏந்திக் கொண்டு ஆத்துமாவின் கண்கள் வழியாய் பார்க்க வேண்டியது. ஆனால் அவிசுவாசத்துக்கு ஏதுவான திகைப்பும் பயமும் கைகளை ஆட்டச்செய்து கண்களை மங்கலாக்குகின்றன.